Tue. Oct 21st, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)

 

அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த முறைப்பைக் கண்டு அசடு வழிந்தவன், சற்று முன் மிளிர்மிருதை தவறவிட்ட சேலையைக் குனிந்து எடுத்து அவளிடம் கொடுத்தவாறு,

“அவனை விடு மிருதா… நீ சொல்லு இந்தச் சேலை எப்படி?” என்றான். அவனுடைய குறும்புத் தனத்தை எண்ணி மெல்லியதாக நகைத்தவள், அதே நகைப்புடன்

“இந்தச் சேலை ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறது… எனக்குப் பிடித்திருக்கிறது…” என்றாள் மனப்பூர்வமாக.

மீண்டும் அவன் சேலைகளைத் தேர்வு செய்ய முயல,

“அதுதான் தேர்ந்தெடுத்து விட்டீர்களே…! இனி என்ன? பாவம் சித்தார்த்… ஏற்கெனவே ஏக கடுப்பிலிருக்கிறார்… வாருங்கள் போகலாம்?” என்று கூறியவாறு சித்தார்த் சென்ற பக்கம் போக முயல, அவள் கரத்தைப் பற்றித் தடுத்தவன்,

“அவன் இப்போது ஆராதனாவோடு கடலை போட்டுக்கொண்டிருப்பான்… நீ இன்னும் திருமணத்திற்குச் சேலை எடுக்கவில்லையே… இது நிச்சயதார்த்தத்திற்கு,…” என்று பரபரப்புடன் சேலையைத் தேட அவனுடைய நிலை மிளிர்மிருதைக்கு நன்கு புரிந்துபோனது.

அவளுடனான கிடைத்த இந்த மகிழ்வான தருணத்தை அவன் இழக்கத் தயாராக இல்லை. சொல்லப்போனால் ஆராதனாவின் திருமணத்தில் அவன் இழந்ததை மீளப் பெற முயல்கிறான். அன்று அவன் தவறவிட்டதை இன்று நிறைவேற்றப் பார்க்கிறான். அவர்களுடைய திருமணத்தின் போது, அவளோடு சேலை எடுக்கக் கூட அவன் வரவில்லை. அந்த ஏக்கத்தை இப்போது நிறைவேற்ற முயல்கிறான். அதைப் புரிந்துகொண்ட போது மிளிர்மிருதையின் உள்ளம் உருகிப்போயிற்று. இழந்த காலம் திரும்பி வரப்போவதில்லைதான்… ஆனால் இழந்த சம்பவத்தை மீட்டெடுக்கலாம் தானே… அதை உணர்ந்து கொண்டதும் அவனுடைய விருப்பத்தை மறுக்காது இசைந்து கொடுத்தவளுக்கு ஏனோ அவனை விட்டு விழிகளை விலக்கவே முடியவில்லை.

அதுவும் ஒவ்வொரு சேலையையும் கனவுடனும், ஏக்கத்துடனும் பரபரப்புடனும் அவன் தேடி எடுத்தபோது, அந்த இடத்திலேயே அவனை இழுத்து அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து உங்களைப் புரிந்துகொண்டேன் விதுலா என்று சொல்லவேண்டும் என்கிற ஏக்கம் பிறந்தது. ஆனால் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அது அல்லவே.

அதனால் அவன் சேலையெடுக்கும் அழகைத் தன்னை மறந்து ரசிக்கத் தொடங்கினாள்.

ஒவ்வொரு சேலையாக ரசனையுடன் பார்த்துக்கொண்டு வந்தவனின் விழிகள் குறிப்பிட்ட ஒரு சேலையில் நிலை குத்தி நின்றன. ‘அந்தச் சேலை…’ என்று வியப்புடன் அதைக் காட்டி எடுக்குமாறு பனிக்க, அதை இழுத்து எடுத்துப் பிரித்துக் காட்டினார் அந்த வேலையாள்.

அந்தச் சேலையைப் பார்த்தவனுக்கு, ஏனோ தன் விழிகளை விட்டு விலக்க முடியவில்லை. அபயவிதுலன் மட்டுமல்ல மிளிர்மிருதையும் கூட ஒரு கணம் அதிர்ந்துதான் போனாள்.

அந்தச் சேலையை வருடிக் கொடுக்க முயன்ற அபயவிதுலனுக்குக் கரங்கள் மெல்லியதாக நடுங்கின. அதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தால் அபயவிதுலனின் முகம் கசங்கிப்போயிருந்தது. அதை உணர்ந்தவளாக, தன்னை மறந்து அபயவிதுலனின் நடுங்கிய கரத்தின் மீது தன் கரத்தை வைக்க, மிளிர்மிருதையை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் தெரிந்த வலியைக் கண்டு மிளிர்மிருதை துடித்துப் போனாள். கூடவே அவனுடைய விழிகள் கலங்கியதற்கான சின்ன அறிகுறியாக மெல்லிய நீர்ப் படலத்தைக் கண்டதும்,

“வி… விதுலா…!” என்று எதையோ கூற முயன்றவளுக்குப் பேச்சுக்குப் பதில் வெறும் காற்றுதான் வந்தது.

இருக்காதா… அவள் திருமணக் கோலத்தில் அதே நிற சேலை, கிட்டத்தட்ட அதே கரை, அதே பூக்கள்… ஆனால் வடிவம்தான் சற்று மாறுபட்டிருந்தது. அவனுக்கு மனைவியாகி, புது வாழ்க்கை கொடுக்கப் போகும் மரண அடி தெரியாது, முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க நாணத்தில் முகம் சிவக்க, பெரும் எதிர்பார்ப்புடன், அவனிடத்தே தன்னை முழுதாக ஒப்படைக்க வந்திருந்தாள். ஆனால் அவன்… அந்தச் சேலையை மட்டுமல்ல, அவளையுமல்லவா உருத்தெரியாமல் ஆக்கியிருந்தான்.

நெஞ்சம் கனக்க, உள்ளம் துடிக்க, தன்னவளைப் பார்த்து, உதடுகள் துடிக்க,

“சா…” என்று அவன் எதையோ சொல்ல வர, அவசரமாகச் சுற்றிவரப் பார்வையை ஓட்டியவள், பின் திரும்பி அந்த வேலையாளிடம்,

“இதையும் எடுத்து வையுங்கள் சார்…” என்று விட்டு அவனை நோக்கித் திரும்ப, அவனோ அவளைப் பார்த்து வலியுடன் சிரித்து

“கிவ் மி எச் செக்..” என்றவாறு அவசரமாக ரெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றவனுக்கு… இல்லை… கிட்டத்தட்ட ஓடியவனுக்குத் தன்னைச் சமப்படுத்த சற்று நேரம் எடுத்தது.

உள்ளே நுழைந்து கதவை அறைந்து சாற்றியவனுக்கு யாரோ இதயத்தைப் பிசைவது போலத் தோன்றத் தன் மார்பைப் பிடித்தவாறு அப்படியே நின்றிருந்தான். மீண்டும் மீண்டும் உயிர் கொல்லும் வலி அவனை உருக்குலைக்கச் செய்ய, ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றவனுக்குக் கிட்டியது என்னவோ தோல்விதான்.

“கடவுளே… எப்போது இதிலிருந்து மீண்டெழப் போகிறான்… இல்லை எழவே மாட்டானோ… மறந்திருந்த அந்த நினைவுகளை வெறும் சேலை இப்படிக் கர்ணகடூரமாய் நினைவு படுத்தி வேடிக்கை பார்க்கிறதே… அன்றைய அழகான நாள், ஒரு கணப் பொழுதில் ஒன்றுமே இல்லையென்றாகிவிட்டதே…” வலியுடன் எண்ணியவனுக்கு என்னதான் முயன்றும் அன்று நடந்த சம்பவத்தை எண்ணாமல் இருக்க முடியவில்லை.

இதுதான் அவன் பெற்று வந்த சாபமோ… எப்போதுமே அவன் நிம்மதியாக இருக்க முடியாதோ… எப்போது இவனுக்குச் சாப விமோசனம் கிட்டும்… ஒரு வேளை கிட்டவே கிட்டாதோ?’ பெரும் ஏக்கத்துடன் எண்ணியவனுக்கு அதிக நேரம் எடுத்தது சுயநிலைக்கு வருவதற்கு.

என்னதான் முயன்றும் மறக்க முடியாது ஆழ் மனதில் படிந்து போன ரணங்கள் அவை. அவற்றிலிருந்து தப்ப முயன்றால், சின்னச் சின்னச் செய்கைகள், சின்னச் சின்னச் சம்பவங்கள், சின்னச் சின்னப் பொருட்கள், அவன் ஆற முயன்றுகொண்டிருந்த காயத்தைக் கிண்டி மீண்டும் ரணப்படுத்திகிகன்றனவே… எப்படியோ ஒருவாறு தன்னை நிலைப் படுத்தியவன், தன் கலங்கிய விழிகளையும் கசங்கிய முகத்தையும் சரிப்படுத்தும் நோக்கில், முகம் கழுவுவதற்காகக் கைகழுவும் தொட்டியருகே வந்தான்.

கரங்களைக் கழுவி, முகத்திலே குளிர் நீரை அடித்துக் கழுவியபோதும் மனம் ரணமாய் வலிக்கத்தான் செய்தது. ஆழ மூச்செடுத்து விட்டவன், முகத்தைச் சிரித்தால் போல வைத்துக்கொண்டு, தன்னவளை நோக்கிச் சென்றான்.

அவன் வெளியே வந்தபோது, வாசலில் இவனுக்காகக் காத்திருந்தாள் மிளிர்மிருதை. இவனைக் கண்டதும்,

“பரவாயில்லையா…” என்று மென் குரலில் கேட்க, மெதுவாகத் தலையாட்டியவன்,

‘யெஸ் மா…’ என்று மெல்லியதாக நகைக்க, அந்த நகைப்பில் தெரிந்த வலியைக் கண்டுகொண்டாள் மிளிர்மிருதை.

சில நேரங்களில் வார்த்தைகள் கொடுக்கும் அமைதியை விட மௌனங்கள் கொடுக்கும் அமைதி அழகானது. அர்த்தமானது. அவன் கரத்தில் தன் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்தவள், அவன் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தாள்.

“எல்லாம் சரியாகிவிடும் விதுலா…!” என்று மென்மையாகக் கூற, அவளை ஆழமாகப் பார்த்தவன், அவள் தலையில் தன் கரத்தைப் பதித்து, வருடிக் கொடுத்தவன்,

“சரியாகிவிட வேண்டும் என்றுதான் கடவுளையும் வேண்டுகிறேன் கண்ணம்மா…” என்றவன், அந்தச் சேலை இருந்த பக்கம் திரும்பியும் பார்க்காமல்,

“கிளம்பலாமா…” என்றான் சோர்வுடன். அவன் கரத்தைப் பற்றித் தடுத்தவள்,

“நமக்கு மட்டும் சேலை எடுத்தால் போதுமா… அம்மாக்கு எடுக்க வேண்டாமா…?” என்றவாறு அவர்களின் வயதுக்குரிய சேலை எடுக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றாள் மிளிர்மிருதை.

அவளுடைய முயற்சி சற்றுப் பயனளிக்க, அபயவிதுலனின் வாடிய முகம் பின் சற்று மலரத் தொடங்கியது. காந்திமதிக்கும், சித்தார்த்தின் அன்னைக்குமாகச் சேலைகளை எடுப்பதில் சற்று நேரத்தைச் செலவழித்த பின்பு, ஆண்கள் பகுதிக்குச் சென்றனர்.

ஆண்களுக்கு வாங்க என்ன இருக்கிறது. பட்டு வேட்டியும் சட்டையும்தானே.

வேலையாள் எடுத்துப் போட்ட, வேட்டியே போதும் என்று நினைத்தவன் போல அதைச் சித்தார்த் கையில் எடுக்க, அதைக் கண்டு அவன் கரத்தில் ஒரு போடு போட்ட ஆராதனா, அத்தனை பட்டு வேட்டிகளையும் கடை பரப்பிய பின்புதான் நிம்மதியானாள்.

இந்தப் பார்டர் சின்னதா இருக்கிறது. இது மாமாவுக்குத்தான் நன்றாக இருக்கும்… உங்களுக்கு ம்ஹூம்… இது ஈ என்ற வெள்ளையாக இரக்கிறது… இது அழகாக இருக்கிறது… ஆனால் தங்க வண்ணம்… மங்கலாகத் தெரிகிறது…’ என்று அரை மணி நேரத்தை விழுங்க, மிளிர்மிருதையோ அபயவிதுலனுக்காக ஆவலாக வேட்டி தேடத் தொடங்கினாள். அவள் காதுக்குள்ளாகக் குனிந்தவன்,

“என்னிடம் நிறைய வேட்டி இருக்கிறதே கண்ணம்மா…” என்று அறிவுறுத்த,

“என்னிடமும்தான் நிறையச் சேலைகள் இருக்கின்றன… ஆனால் நீங்கள் வாங்கியபோது ஏதாவது சொன்னேனா… இல்லையல்லவா…” என்று கடிந்தவள். அவனுக்காகத் தானே பொருத்தமான வேட்டியையும் அதற்குத் தோதாக மேல் சட்டையையும் வாங்கினாள் மிளிர்மிருதை.

திருப்தியாக எல்லாம் வாங்கி முடிந்து வெளியே வந்தபோது, இரண்டு மணியையும் தாண்டியிருந்தது.

இத்தனை நேரமாகவா உடுப்புக் கடைக்குள் மினக்கெட்டோம்….?’ என்று வியந்தவர்களின் ஒட்டு மொத்த பார்வையும் ஆராதனாவிடம் நிலைக்க, சித்தார்த்தின் விழிகளோ அபயவிதுலனை எரிப்பது போல முறைத்தன. இருவரும் ஆளுக்கொருவராய் அசடு வழிந்தாலும் அபயவிதுலன் உடனே சுதாரித்துக் கொண்டான்.

“எல்லாம்… உன்னால் வந்தது அம்முக்குட்டி… வந்தோமா சேலை எடுத்தோமா என்று இல்லாமல்… இத்தனை மணி நேரம் கடையிலேயே எங்களை இருத்திவைத்துவிட்டாய்… கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு…” என்று சித்தார்த்தைக் கடைக்கண்ணால் பார்த்தவாறு ஆராதனாவைக் கடிய, சித்தார்த்தின் முறைப்போ அதிகரித்தது. ஆனால் ஆராதனா,

“என்ன எல்லோரும் என்னையே பார்க்கிறீர்கள்… வாழ்க்கையில் ஒரு முறை திருமணம் செய்யப்போகிறோம்… நமக்குப் பிடித்தது வாங்க வேண்டாமா…” என்று விளக்கம் கூறியவாறு, கெத்தாக முன்னால் செல்ல, எட்டித் தன் மருமகளின் மண்டையில் நங்கென்று கொட்டிய அபயவிதுலன்,

“உன்னால் இத்தனை நேரமாகச் சாப்பிடாமல் இருந்திருக்கிறோம்… நீ என்னவென்றால் விளக்கம் கொடுக்கிறாயா?” என்று கேட்டவன், முறைத்துக் கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்து,

“சரி சரி முறைத்தது போதும்… பசிக்கிறது… வா முதலில் சாப்பிடலாம்… சற்றுத் தள்ளி சாப்பாட்டுக் கடையொன்று இருக்கிறது.. அங்கே போகலாம்…” என்றவாறு காரை நோக்கிச் செல்ல, அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் சித்தார்த்தும் அபயவிதுலனை வாய்க்குள் திட்டியவாறு காரை நோக்கிச் சென்றான்.

 

 

 

(18)

 

சித்தார்த் பொதிகளைத் தன் இடது கரத்தில் ஏந்தியவாறு ஆராதனாவின் கையைப் பற்றிக்கொண்டு காரை நோக்கி முன்னே செல்ல அபயவிதுலனும் அதே போலப் பொட்டலங்களை ஏந்தி மிளிர்மிருதையுடன் வாகனத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.

வாகனத்தின் ட்ரங்கைத் திறந்து பொருட்களை வைத்துக்கொண்டிருந்தபோது அபயவிதுலனும் ஆராதனாவிற்காக வாகனத்தின் பின் கதவைத் திறந்துவைத்துப் பார்வையால் உட்கார் என்று பணிக்க, அவளும் மாமன் திறந்துவைத்த பக்கமாக ஏறி உட்கார்ந்துவிட, இவன் காரை சாற்றிவிட்டுத் தன் கரத்திலிருந்த பொதிகளைச் சித்தார்த்தை நோக்கி நீட்டியவாறு திரும்ப, எதேட்சையாக அவனுடைய பார்வை வாகனத்தின் பக்கக் கண்ணாடியில் பதிந்து மீண்டது. சித்தார்த் நீட்டிய கரத்தில் பொட்டல்களைக் கொடுக்க அவன் முயன்றபோதுதான் அவன் புத்திக்குள் எதுவோ உறுத்தியது.

தன் புருவத்தைச் சுருக்கியவன், சடார் என்று திரும்பி மீண்டும் கண்ணாடியைப் பார்த்தவனுக்குச் சர்வமும் நடுங்கியது. நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தான். அங்கே மிளிர்மிருதை யாருடனோ எதையோ பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றுத் தள்ளி, ஒருவன் அவளை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தான் .

அவனைக் கண்டதும் அபயவிதுலனுக்குப் பொறித் தட்டியது.

இவனைக் கண்டிருக்கிறோம்… எங்கே எங்கே… யோசித்தவனுக்கு உடனே புரிந்து போயிற்று. இவர்கள் சேலை வாங்கச் சென்ற இடத்தில் மிளிரோடு மோத வந்தவன். அதன் பின் ஹூடி அணிந்தவாறு அங்கும் இங்கும் என்று நின்றிருந்தான்… அப்போது பலதரப் பட்ட மக்கள் இந்தக் கடைக்கு வருவதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது,

அதுவும் இரையைத் தேடும் நரி போல, அவன் நடந்த வேகம், இவனுக்குள் எதையோ உணர்த்த, தன் கரத்திலிருந்த பொட்டலங்களைச் சித்தார்த் வாங்கினானா இல்லையா என்பதைக் கூட உணர முடியாதவனாகத் தூக்கி எறிந்தவன், சற்றும் தாமதிக்காமல், பத்தடி தள்ளி நின்ற தன் மனையாளை நோக்கி வேகமாகப் பாய்ந்தான்.

அதே நேரம், அந்த எதிரி கண்ணிமைக்கும் நொடியில் மிளிர்மிருதையை நெருங்கி சற்றும் தாமதிக்காது, தன் இடையிலிருந்த குறுங்கத்தியை எடுத்து, மிளிர்மிருதையின் வயிற்றை நோக்கி மின்னலெனச் இறக்கத் தொடங்கினான்.

ஒரு விநாடிப்பொழுதில் நடந்துவிட்டிருந்தது அந்தச் சம்பவம்.

மிளிர்மிருதையை நோக்கிக் கத்தியைச் செலுத்தியவனின் முகத்தில் விகாரமான புன்னகை ஒன்று மலர, தன் முன்னால் நின்றிருந்தவளை மேலும் ஒரு முறை குத்தும் யோசனையுடன் கத்தியை அவள் வயிற்றிலிருந்து இழுத்துப் பார்த்தான். அது எங்கோ சிக்கியிருந்தது போல வர மறுத்தது. மீண்டும் இழுத்துப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்கு ஒன்று உறைத்தது. செலுத்திய கத்தியை அவனால் இழுத்தெடுக்க முடியவில்லை.

குழப்பத்துடன் குனிந்து பார்த்தவனுக்குத் தன் மணிக்கட்டை ஒரு பெரிய கரம் இறுகப் பற்றியிருப்பது புரிய அதிர்ந்து போனான். குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தவனுக்குச் சூழ்நிலை உறைக்கவில்லையோ? விழிகளை இறுக மூடித் திறந்து பார்த்தான். அவன் முன்னே மங்கலாய் ஒரு உருவம் நின்றிருக்க மீண்டும் விழிகளை மூடி மூடித் திறந்து பார்த்தான்.

சற்று முன், காலில் ஏற்பட்ட வலியால் சற்றுப் பின்தங்கி விந்தியவாறு நடந்து வந்துகொண்டிருந்த மிளிர்மிருதையை ஆசியப் பெண்மணி ஒருவர் தடுத்து ஏதோ தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஒரு இடம் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்க, அவர் கேட்டதற்குப் பதில் கூறும் முகமாகத் தன் கவனத்தை அப்பெண்மணி மீது வைத்துக்கொண்டிருந்தவளுக்குத் தன்னை நோக்கி ஒருவன் வேகமாக வருவான் என்றோ, தன்னைக் கத்தியால் குத்துவான் என்றோ சற்றும் எதிர்பார்க்கவில்லை.

திடீர் என்று ஒரு கரிய உருவம் அவள் முன்னால் விகாரமாகச் சிரித்தவாறு கத்தியை ஓங்கவும், அதைப் புரிந்துகொள்வதற்கான நேர அவகாசம் அவளுக்குக் கொடுக்கப்படவில்லை. அதற்கிடையில், புயலாய் ஒரு உருவம் அவளருகே பாய்ந்து, வந்தது மட்டும்தான் அவளுக்குத் தெரியும்.

கத்தியை ஓங்கி அவள் வயிற்றை நோக்கி இறக்கிய பின்னும் அவள் வலியை உணர்ந்தாளில்லை. அதிர்ச்சியுடன் அவள் என்ன நடந்தது என்பதைக் குனிந்து பார்ப்பதற்குள்ளாக, அவள் பின்னால் வந்திருந்த அபயவிதுலன், அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துத் தள்ளிவிட, அவன் தள்ளிய வேகத்தில் சற்றுத் தூரம் போய் விழுந்தாள் மிளிர்மிருதை. அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தால், அங்கே ராட்சஷனாக, உருத்திர தாண்டவம் ஆடும் சிவனாகத் திகு திகு என்று பற்றி எரியும் உடலுடன் நின்றிருந்தான் அவள் கணவன்.

தன் மனைவிக்கு ஆபத்து என்பதை அறிந்ததும், எங்கே அந்தக் கத்தி தன் மனையாளின் உடலைப் பதப்படுத்திவிடுமோ என்று அஞ்சியவனுக்கு அத்தனையும் மறந்து போனது. என்ன செய்யவேண்டும் என்று புத்தி அவனுக்கு அறிவுறுத்த முதலே, கத்தியை ஏந்திய கரத்தை, தன் இடது கரத்தால் தாங்க முயன்ற விநாடி, மிளிர்மிருதையை நோக்கி இறக்கிய கத்தி அவனுடைய உள்ளங்கையைக் குத்தி சிதைத்தவாறு வெளியே வந்துவிட்டிருந்தது.

அயவிதுலனுக்கோ, அந்த நேரத்தில், மிளிர்மிருதைக்கு ஏதாவது நடந்துவிட்டிருக்குமோ என்கிற அச்சமும் அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்கிற எண்ணமும் மட்டும் வியாபித்திருந்ததால் வேறு எதையுமே அவனால் யோசிக்க முடியவில்லை. எது சரி எது பிழை எதையும் அவனால் உணர முடியவில்லை. தன்னவளைக் காத்துவிடவேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோளாக இருந்ததன்றித் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இம்மியும் தோன்றவில்லை.

அதனால் அவன் கத்தியை ஓங்கும்போதே, அக்கரத்தைத் தட்ட நேரமில்லாதவனாகத் தன் உள்ளங்கையால் தடுக்க முயன்ற விநாடி, அது மிளிர்மிருதையின் வயிற்றில் ஏறுவதற்குப் பதில், அவன் உள்ளங்கையில் ஏறிவிட்டிருந்தது.

அந்த நிலையிலும் தன் மனைவியை இழுத்துத் தள்ளிவிட்டு, எங்கே அவன் தப்பிவிடுவானோ என்கிற எண்ணத்தில், அவன் கைமூட்டை மறு கரத்தால் இறுகப் பற்றிக்கொள்ள, அவன் திமிறினான்.

அவன் திமிறல் அதிகமாகச் சற்றும் யோசிக்காமல், கண்ணிமைக்கும் நொடியில் தன் பலம் பொருந்திய வலது கரத்தை முஷ்டியாக்கி, அவன் கழுத்தின் நடுப் பகுதியில் பலமாக இறக்கினான்.

இப்படி ஒருவனிடம் சிக்கிவிட்டதாலும் அதிர்ச்சியிலிருந்த எதிரி, மின்னல் விரைவுடன் இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கவில்லை. தன்னை மீட்டெடுப்பதற்குள்ளாகக் கழுத்தில் விழுந்த அடியில், மூச்சுக் குழாய் நசுங்கிப்போக, எதையும் உணர கூட முடியாமல், ஹக் என்கிற சத்தத்துடன் தரையில் விழ, அது கூட அபயவிதுலனுக்குப் போதுமாக இருக்கவில்லை.

மறு கணம் எதிரியின் மீது ஏறி அமர்ந்தவன், மீண்டும் ஓங்கி அவன் இடது கன்னத்தில் குத்த, தாடை எலும்புகள் விலகியது கூட உறைக்காது மயங்கிக்கிடந்தான் எதிரி.

இது நடந்தது வெறும் ஒரு சில விநாடிகளே. அனைத்தும் மின்னல் விரைவுதான். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்றவே அங்கிருந்தவர்களுக்குச் சற்று நேரம் எடுத்தது.

எதற்காக மாமா இத்தனை வேகமாக ஓடுகிறார் என்று ஆராதனாவும், ஏன் இப்படிப் பாய்கிறான் என்று சித்தார்த்தும் குழம்பிப்போயிருந்த விநாடிகளில் உண்மை நிலை தெரிய, பதறியடித்தவளாகப் படு வேகமாக அவர்களை நோக்கி இருவருமே ஓடினர்.

ஆராதனா தரையில் கிடந்த மிளிர்மிருதையை நெருங்க மிளிர்மிருதையோ என்ன நடந்தது என்பதுகூடப் புரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்.

அபயவிதுலன் அவளைத் தள்ளிவிட்டதோ, தரையில் தான் விழுந்ததோ எதுவுமே அவளுக்கு உறைக்கவில்லை. அவளுக்கு இன்னும் எதுவும் புரியவில்லை. விழிகளை மூடி என்ன நடந்தது என்பதை உணர முயன்றாள். ம்கூம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. விகாரமாகச் சிரித்த அந்த உருவம்… திடீர் என்று பாய்ந்து வந்த அபயவிதுலன், அது மட்டும்தான் நினைவுக்கு வந்தது. அதன் பின் நடந்தவை, கண்ணிமைக்கும் நொடிக்குள் நடந்ததால், அவள் மூளையால் அத் தகவல்களை அத்தனை விரைவில் பதிவுசெய்ய முடியவில்லை.

அதிர்ச்சியிலிருந்த தன் சகோதரியை அணைத்துக் கொண்டவள்,

“அக்கா… ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை…” என்று அவளைத் தேற்றும் போதே குழப்பத்துடன் ஆராதனாவைப் பார்த்தவள்,

“என்னாச்சு ஆராதனா… எதற்கு விதுலன் அவனை அடிக்கிறார்…” என்று கேட்க, அதிர, சித்தார்த் உடனேயே உண்மை நிலையைப் புரிந்துகொண்டான். இன்னும் விட்டால் அந்த எதிரியைக் கொன்றுவிடுவான் என்பதை உணர்ந்தவனாக, உடனே அவர்களை நெருங்கி, அபயவிதுலனின் கரத்தைப் பற்ற முயன்றவாறு,

“அபயா… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்… ப்ளீஸ்… அவனை விடு…” என்று பிரிக்க முயல, அடுத்த அடி சித்தார்த்தின் தாடையில் விழுந்தது. சித்தார்த்திற்குக் கண்ணுக்கு முன்னால் நட்சத்திரங்கள் மின்ன, சற்று நேரம் எடுத்தது சுய நிலைக்கு வர. அதற்கிடையில் அபயவிதுலன் அந்த எதிரியைப் பந்தாடிவிட்டான்.

ஒருவாறு தன்னைச் சமாளித்த சித்தார்த் வேகமாக அபயவிதுலனை நெருங்கி அவன் கரத்தைப் பற்றி,

“பளீஸ்… அபயன்… அவனை விட்டுவிடு… உன் வேகத்தை அவன் தாங்கமாட்டான்…” என்று சமாதானப் படுத்த முயல,

“லீவ் மீ…” என்று கத்தியவாறு ஒரு உதறு உதற, சித்தார்த் இரண்டடி தள்ளிப்போய் விழுந்தான். அவன் விழுந்த வேகத்திலேயே, அவனுக்குள் இருப்பது மனிதன் அல்ல… ராட்சஷன் என்பதைச் சித்தார் த் புரிந்துகொண்டான்.

மீண்டும் அபயவிதுலனின் அருகே வருவதற்குள், தரையில் உணர்வற்று விழுந்தவனின் நெஞ்சின் மீது முழங்கால் மடித்து அமர்ந்தவாறு,

“xxxxx xxxxx… யார் மீது கையை வைக்கிறாய்… என் மனைவிடா… அவளையா கொல்லப் பார்க்கிறாய்… சொல்… யார் நீ… உன்னை யார் அனுப்பினார்கள்…. சொல்…” என்று கத்தியவாறு அவனுடைய சட்டையைப் பற்றி மேலே தூக்கி உலுப்பியவாறு கேட்க, அவனுடைய தலை பின்னால் சரிந்திருந்ததே அன்றிப் பதில் வரவில்லை.

அபயவிதுலனைத் தன்னால் அடக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட, சித்தார்த்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“ப்ளீஸ்… அவனை விடு அபய்..” என்று தடுக்கமுயன்று தோற்றுக்கொண்டிருந்த விநாடி, ஓரளவுக்கு நடந்ததைப் புரிந்துகொண்ட மிளிர்மிருதை, தன் கணவனின் சூரசம்காரத்தைப் பார்த்து அதிர்ந்துபோனவளாக எழுந்தாள். அவனை இத்தனை ஆக்ரோஷத்தோடு அவள் இது வரை பார்த்ததில்லை. தன் கணவன் ஒருவனை இப்படிப் போட்டுத் தாக்கிறானே என்கிற எண்ணமும் சேர, அவனை நோக்கிப் பாய்ந்தாள்.

ஓங்கி இன்னொரு குத்து குத்த போனவனின் கரத்தைத் தன் நடுங்கிய கரங்களால் பற்றிக்கொண்ட மிளிர்மிருதையைக் கடும் சீற்றத்துடன் பார்த்தவன், அங்கே முகம் வெளிற, எந்த நேரமும் மயங்கிவிடுவோம் என்கிற நிலையிலிருந்த மனைவியைக் கண்டதும், தன் பிடியிலிருந்தவனை மறந்தவனாக, அவனை விட்டுச் சடார் என்று எழுந்து,

“ஓ… பேபி…” என்றவாறு பெரும் அச்சத்துடன், தன் வலக்கரத்தால் அவளை இழுத்துக் காற்றுக் கூடப் புக முடியா அளவுக்கு இறுக அணைத்துக் கொண்டான்.

அதே நேரம், சித்தார்த், தங்களுக்குப் பழக்கமான காவல்துறை அதிகாரி விக்டருக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க,

இரண்டாவது அழைப்பிலேயே விக்டர் எடுத்தார்.

“விக்டர்… வி ஹாவ் எ ப்ராப்ளம்…” என்றவாறு நடந்ததைச் சுருக்கமாகக் கூறி, அவர்கள் நின்ற இடத்தையும் குறிப்பிட,

“டோன்ட் வொரி… இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே நிற்பேன்…” என்கிற உறுதியுடன் தொலைப்பேசி அணைக்க, மீண்டும் கைப்பேசியைப் பான்ட் பாக்கட்டில் வைத்துவிட்டுத் தரையில் சுயநினைவின்றி இருந்தவனைத் திரும்பிப் பார்த்தான். அச்சத்தில் நெஞ்சம் படபடக்க, அவன் நினைத்ததுபோல இருக்கக் கூடாது என்கிற வேண்டுதலுடன் அவனை நெருங்கி, கழுத்தில் நடுங்கும் விரல்கள் கொண்டு இதயத் துடிப்பை அவதானித்தான்.

பதட்டத்தில் மெல்லியதாகத் துடித்த இதயத்துடிப்பு கூட அவனுக்குத் தெரியவில்லை.

“நோ… நோ.. நோ.. கோட் சேவ் ஹிம்…’ என்கிற வேண்டுதலுடன் மீண்டும் விரல்களை வைத்துப் பார்த்தான்.

மிக மெல்லியதாக இதயம் துடிப்பது தெரிய, அதுவரையிருந்த அச்சம் விடைபெற்றுச் செல்லப் பெரும் நிம்மதியுடன், “தாங் காட்…” என்றவாறு தொப்பெனத் தரையில் அமர்ந்தான் சித்தார்த்.

இதற்கே அபயவிதுலன் எத்தனை பிரச்சனைகளைச் சந்திக்கப்போகிறானோ தெரியாது. இதில் அவன் இறந்திருந்தால், அவன் நிலை அவ்வளவும்தான். கனடிய காவல்துறை நிச்சயமாக அவனைச் சும்மா விடாது… ஆனாலும் வர இருக்கும் சிக்கலை நினைக்கும் போதே சித்தார்த்திற்கு ஆயாசமானது.

அதே நேரம் தன் கை வளைவில் கிடந்த மனைவியின் முகத்தைப் பற்றித் தூக்கிப் பார்த்தவனுக்கு உள்ளம் துடித்துப் போனது. அவள் முகத்தில் தெரிந்த அச்சம், குழப்பம், தவிப்பு… இதைக் கண்டதும், தாங்க முடியாத வலியுடன் அவளுடைய தலையை வருடுவதற்காக, இடது கரத்தைத் தூக்கியவன் அப்போதுதான் கரத்தில் குத்தியவாறு இருந்த கத்தியைக் கண்டான்.

புருவம் சுருங்கச் சற்றும் தாமதிக்காது அதை இழுத்து எடுத்துத் தூற எறிந்தவன், இரத்தம் வடிந்த கரத்தாலேயே அவளை இறுக அணைத்து அவள் தலை உச்சியில் தன் உதடுகளைப் பொருத்தி, அவளுடைய முதுகையும், தலையையும் காயம்படாத கரத்தால் வருடிக் கொடுத்தவாறு,

“ஒன்றுமில்லை கண்ணம்மா… ஒன்றுமில்லை…” என்று கூறியவாறு மீண்டும் அவளைத் தன்னிடமிருந்து பிரித்துத் தலை முதல் கால் வரை பார்த்தான். எங்கும் இரத்தக் கறையில்லை என்ற பின்புதான் அவன் சுவாசமே சீரானது.

பெரும் நிம்மதியுடன்

“ஓ மை காட்… ஐ தோட்… ஐ ஆம் கோய்ங் டு லொஸ்ட் யு…” கண்களில் மெல்லியதாக நிறையத் தொடங்கிய கண்ணீரைக் கூடப் பொருட்படுத்தாது, குரல் கம்மக் கூறியவன், பின் அவளுடைய தோள்களின் இரு பக்கமும் கரங்களைப் பதித்துத் தன்னிடமிருந்து விலக்கி,

“ஆர் யு ஓக்கே கண்ணம்மா…” என்றவாறு இடக் கரத்தைத் தூக்கி அவள் கன்னத்தில் வைக்க முயன்றபோதுதான், அவன் கரத்திலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருப்பதை மிளிர்மிருதை கண்டாள்.

குத்தி வெட்டிய காயத்தின் பிளவும், அதிலிருந்த வழிந்த இரத்தமும், பயங்கரமாகக் காட்சிகொடுக்க, அதைக் கண்ட, மிளிர்மிருதைக்குச் சர்வமும் நடுங்கிப் போனது. பதறித் துடித்தவளாக, அவனுடைய கரத்தைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டவள்,

“விதுலா…! என்ன இது…” என்று கதற, அலட்சியமாகத் தன் காயத்தைப் பார்த்தான்.

“நத்திங்…” என்றவன், அவள் கலங்குவது பிடிக்காமல், தன் கரத்தை எடுத்துச் சென்று அவளுடைய முதுகுக்குப் பின்னால் மறைத்தவன், வலது கரத்தை அவள் கழுத்தின் கரையோரத்தில் பதித்துப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,

“ஹே… ஒன்றுமில்லைம்மா… கத்தி குத்திவிட்டது…” என்றான் சாதாரணம் என்பது போல. அவளோ, அவன் கரத்தை இழுத்து எடுத்து மீண்டும் அதைப் பரிசோதிக்க, அதன் ஆழம் எத்தகையது என்று உடனே புரிந்துபோனது.

“ஓ… விதுலா…!” என்று நடுங்கியவாறு, இரத்தம் மேலும் வடியாதிருக்க இரு கரங்கள் கொண்டும் அவன் காயத்தை அழுந்த பற்றி இரத்தப் போக்கைத் தடுக்க முயன்றாள். ஆனால் அவளுடைய கரங்களையும் மீறி இரத்தம் வழிய, அதைக் கண்டதும் மிளிர்மிருதைக்குக் காதை அடைத்துக் கொண்டு வந்தது. முகத்தில் இரத்தப் பசையில்லாது வடிந்து போகப் பரிதாபத்துடன் நிமிர்ந்து அபயவிதுலனைப் பார்த்தாள். எதையோ சொல்ல வர, புத்தியோ அவள் சிந்தனைக்கு ஏற்பச் செயற்பட மடுத்தது. எப்போதோ விட்டுச் சென்ற பனிக் அட்டாக் அப்போது வந்துவிடும் போல, தள்ளாடியவள், அடுத்து மயங்கப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டவளாக,

“விதுலா…! ஐ திங்க் ஐ ஆம் கோய்ங் டு…” சொல்லி முடிப்பதற்குள்ளாகவே விழிகள் மேலே சொருக, உடல் சரியத் தொடங்கியது.

அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை வைத்தே அவள் நிலையைப் புரிந்துகொண்டவனாக அவள் தரையில் விழ முதல், இறுக பற்றிக் கொண்டவனுக்கு உலகமே இருண்டுகொண்டு வந்தது. உடல் நடுங்க அவளோடு தரையில் அமர்ந்தவன், அவளைத் தன் மடியில் தாங்கியவாறு,

“மிருதா… மிருதா…” என்று அவள் கன்னத்தைத் தட்டி விழிப்படையச் செய்ய முயன்றுகொண்டிருந்த நேரம், பெரும் சத்தத்துடன் அம்புலன்சும், தீயணைப்பு வாகனமும் வந்து சேர்ந்தது.

தொடர்ந்து ஒரு கார் படு வேகமாக அவர்களின் முன்னால் வந்து நின்றது. அது நிற்பதற்குள்ளாகக் கதவைத் திறந்து கீழே இறங்கினார் RCMP(Royal Canadian Mounted Police ) மேலதிகாரியான விக்டர்.

அங்கே நடந்த சம்பவத்தைக் கண்டதும் அவரால் என்ன நடந்திருக்கும் என்பதை உடனே ஊகிக்க முடிந்திருந்தது.

அடுத்துச் செய்யவேண்டிய காரியங்கள் படு வேகமாக நடக்கத் தொடங்க, இன்னும் தரையில் அமர்ந்தவாறு தன் மனைவியை அணைத்தவாறிருந்த அபயவிதுலனைக் கண்டு அவனை நெருங்கி அவன் தோளில் கை வைக்கத் தன் தலையை நிமிர்த்திப் பார்த்தான் அபயவிதுலன்.

அங்கே விக்டரைக் கண்டதும்,

“யார் அவன்… எதற்காக என் மனைவியைக் கொல்ல முயன்றான்?” என்று அழுத்தமாகக் கேட்க, அவன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தவர்

“வி டோன்ட் நோ அபயன்… அதைத்தான் இனி ஆராயவேண்டும்… முதலில் உன் கைக் காயத்திற்கு மருந்து போடவேண்டும். உன் மனைவியைப் பரிசோதிக்க வேண்டும்… எழுந்திரு…” என ஆங்கிலத்தில் கூற, இன்னும் தன் மனைவியை இறுகப் பற்றியவன், குனிந்து பார்த்தான். அவளுடைய விழிகள் மூடியிருந்தன.

சற்றும் தாமதிக்காது, அவளைத் தன் கரங்களில் ஏந்தியவாறு எழ முயன்றவனைத் தடுத்த விக்டர்,

“டோன்ட் வொரி அபயன்… அவர்களைத் தூக்கிச் செல்ல ஸ்ரெச்சரைக் கொண்டு வருவார்கள்…” என்றதும், மறுப்பாகத் தலையசைத்தவன்,

“இ… இல்லை விக்டர்… நானே தூக்கி வருகிறேன்…” என்று கூறி, அவளைத் தன் கரங்களில் ஏந்தியவாறு எழுந்தான். கூடவே திரும்பி சித்தார்த்தைப் பார்த்து,

“சித்தார்த், நீ ஆராதனாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்… நாளைக்கு நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று அக்காவிடம் சொல்லிவிடு… நான் அப்படியே மிருதையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறேன்…” என்று உத்தரவிட, சித்தார்த்தோ மறுப்பாகத் தலையசைத்து,

“இல்லை அபயா… நானும் உங்கள் கூடவே வருகிறேன்… நிச்சயதார்த்தம் பற்றிப் பிறகு பேசலாம்…” என்று கூறியவாறு அவனை நெருக்க,

“நோ… சித்தார்த்… நீ எங்களுடன் வந்து எந்தப் பயனும் இல்லை… ப்ளீஸ்… ஆராதனாவை அழைத்துக் கொண்டு செல்… நம்மைக் காணவில்லை என்று இப்போதே பதறத் தொடங்கியிருப்பார்கள்…” என்றவன் சற்று நிதானித்துப் பின்,

“சித்தார்த், சொல்ல வேண்டியதைக் கொஞ்சம் இலகுவாகக் கூறு… அக்கா பதறிப்போவார்கள்…” என்றான் தயக்கத்துடன்.

“பட் நீ எப்படித் தனியாக…” என்று சித்தார் தடுமாற,

“கவளைப் படாதே சித்தார்த்… அதுதான் நாங்கள் இருக்கிறோமே… பார்த்துக்கொள்கிறோம்… நீ போய் உன் திருமண வேலைகளைக் கவனி…” என்று விக்டர் சொன்ன பின்தான் நிம்மதியுடன் சித்தார்த் வீடு நோக்கிக் கிளம்பினான்.

 

 

What’s your Reaction?
+1
4
+1
4
+1
1
+1
1
+1
1
+1
3

Related Post

error: Content is protected !!