(29)
முதலில் அவன் கூறியது இவளுக்குப் புரியவில்லை. குழப்பத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்து, இறுகிப்போயிருந்த தாடையைச் சுட்டுவிரலால் வருடிக் கொடுத்தவாறு,
“புரியவில்லை ரஞ்சன்…” என்றாள். அதைக் கேட்டதும் ஏதோ ஒரு அழுத்தம் நெஞ்சத்தை அழுத்த, கன்னத்தில் கோடுவரைந்த அவளுடைய கரத்தைப் பற்றித் தன் உள்ளங்கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொடுத்தவாறு,
“நீ… நீ நினைப்பது போல… நான் ரஞ்சனில்லை நன்னயா…” என்றவனை நம்ப முடியாமல் பார்த்தாள் மீநன்னயா.
இவன் என்ன சொல்கிறான். இவன் ரஞ்சன் இல்லையா. இவன் ரஞ்சன் இல்லையென்றால் வேறு யார்? குழப்பமும், அதிர்ச்சியும், பயமும் போட்டிபோட அவனுடைய கரத்திலிருந்த தன் கரத்தை விடுவித்த மீநன்னயா, அவனை விட்டு விலகித் தள்ளி அமர்ந்தவாறு அவனை ஏறிட்டாள்.
இறுகிய முகம், அழுத்தமான உதடுகள், சுழித்த புருவங்கள்… அவன் சொல்லவருவதன் தாற்பரியம் புரிய, நடுங்கும் கரங்கள் கொண்டு தள்ளியிருந்த போர்வையை இழுத்தெடுத்துத் தன் மேனியை மறைத்தவாறு அவனை வெறித்தாள். ஏனோ இதயம் பலமாக அடித்துக்கொண்டது. கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்கப் போவதாக உள்ளுணர்வு சொன்னது. அது எத்தகையதாக இருக்கப்போகிறது? தெரியவில்லை.
அவள் விலகியதும் எழுந்தமர்ந்தவனின் முதுகை வெறித்தவள்,
“புரியவில்லை…” என்றாள் கலக்கத்துடன். இப்போது அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“நான்… ரஞ்சனில்லை… என் பெயர் அதகனாகரன்…” என்றதும் நம்பமுடியாத குழப்பத்துடன் அவனை வெறித்தாள் மீநன்னயா. ஏனோ தேகம் நடுங்கியது.
அதகனாகரன்… இது மாதவியின் தம்பிபெயர்… அப்படியானால் இவன், அதிர்ச்சியுடன் அவனை வெறித்தவளுக்கு அப்போதுதான் அது உறுத்தியது. ஆரம்பத்தில் அவனைப் பார்த்தபோது எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நினைத்தாளே. ஆனால் எங்கே என்று தெரியாமல் அதை அப்படியே விட்டுவிட்டாள்… அது ஜெயராம் காட்டிய புகைப்படத்தில்தான் பார்த்திருக்கிறோம் என்று இப்போதல்லவா தெரிகிறத.. அந்த நேரத்தில் இவன்தான் அவன் என்று இணைத்து யோசிக்க முடியவில்லையே… பேச்சற்றவளாக அவனை வெறிக்க, அவனோ, கட்டிலை விட்டு எழுந்து, களைந்த தன் ஆடைகளை அணிந்தவாறு, அவளைத் திரும்பிப் பார்த்தான். வெளிறிப்போன அவள் முகத்தை ஏறிட்டவன்,
“யெஸ்… த சேம் பேர்சன்… மாதவியின் தம்பி…” என்றதும் பெரும் குழப்பத்துடன் அவனைத்தான் வெறித்தாள். இவன் அதகனாகரன் என்றால், ஏன் ரஞ்சன் என்கிற பெயரில் இவளுடன் அறிமுகமானான்… தன் பெயரை ரஞ்சன் என்று சொல்லவேண்டியதன் அவசியம் என்ன? ஜெயராமுக்குக் கூட இவனை அடையாளம் தெரியாமல் போனதா…? அடியும் புரியாமல் நுனியும் புரியாமல் இன்னும் அவனை வெறித்தவள், திக்கிய குரலை நேர்ப்படுத்தியவாறு,
“ஏன்…” என்றாள் ஒற்றைக் சொல்லாக. இப்போது குரல் கூடப் பேரதிர்ச்சியில் நடுங்கத் தொடங்கியது. அவனோ அவளுடைய ஏன் என்கிற கேள்வியில் ஆத்திரம் கொண்டவனாக அதுவரையிருந்த பொறுமையைத் தொலைத்தவனாகத் தன்னருகே அமர்ந்திருந்தவளை ஏளனத்துடன் பார்த்து,
“ஏனா…? உன் மகிழ்ச்சிக்காக, உன் சுயநலத்திற்காக ஜெயராமை வளைத்துப்போட்டால் அதைக் கைகட்டி வேடிக்கைபார்த்துக்கொண்டிருப்பேன் என்று நினைத்தாயா? உன் மகிழ்ச்சிகாகக நாசமாக்க முயன்றது என் அக்காவின் வாழ்க்கையை… எப்படிச் சும்மா இருப்பேன் என்று நினைத்தாய்? என்று கேட்டவனை என்ன உளறல் என்பதுபோலப் பார்த்தாள் மீநன்னயா. ஆனாலும் பேச வார்த்தைகள் வரவில்லை. ஏனோ நெஞ்சமே வெடித்துவிடும் போன்ற அதிர்ச்சியுடன் அதகனாகரனை வெறிக்க அவனோ,
“என்ன… எங்களுக்கு எப்படி உண்மை தெரிந்ததென்று உனக்கு அதிர்ச்சியாக இரக்கிறதா… பூனை விழிகளை மூடினால் இருண்டுவிடும் என்று நினைத்தாயா… பார்த்தேன்… என் இரண்டு கண்களாலும் பார்த்தேன். அவரை அணைப்பதென்ன வருடுவதென்ன… அவருடைய பணத்தைச் செலவழிப்பதென்ன… பொருட்களை வாங்குவதும் கொடுப்பதுமாக ஒருவரை ஒருவர் தழுவியது என்ன… பெரிய காதல்தான்… ஏன் தெரியாமல்தான் கேட்கிறேன்… உனக்கு உன் வயதுக்கு ஏற்றவராகப் பார்த்துக் காதலிக்கவே தெரியாதா… அது எப்படி அந்தப் புரியா வயதிலும் உன்னைவிட இரண்டு மடங்கு அதிகமானவனைக் காதலித்தாய். இப்போதும் அப்படித்தான் ஒருத்தனோடு சுற்றினாய்… ஒரு வேளை உனக்கு மிக்க அனுபவமானவன் மீதுதான் ஈர்ப்பு வருமோ…?” என்று கிண்டலாய் கேட்க, பதில் கூற முடியாத அதிர்ச்சியுடன் அவனை வெறித்தாள் மீநன்னயா. தேகமோ அதீத ஆத்திரத்தில் நடுங்கின.
என்ன பேச்சுப் பேசுகிறான்… கடும் சீற்றத்துடன் அவனைப் பார்த்தவள்,
“எல்லை மீறிப் பேசுகிறீர்கள் ரஞ்சன்…” என்றாள் கடுமையாக. அதைக் கேட்டுக் கிண்டலுடன் நகைத்தவன்,
“என்னது… நான் எல்லை மீறிப் பேசுகிறேனா… நீ எல்லை மீறி நடந்ததால்தான் நான் எல்லைமீறிப் பேசுகிறேன்… அது எப்படி… திருமணம் ஆனவர்கள் என்று தெரிந்தும் இப்படி… சீ…. நினைக்கவே அருவெறுக்கவில்லை… உன் உடலில் அந்தக் காயங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்… நீ… பணத்திற்காக அவர் குழந்தையை…” மறு கணம் அதகனாகரனின் கன்னங்கள் பயங்கரமாக எரிந்தன.
எப்படி எழுந்தாள், எப்படி அவனை நெருங்கினாள்… எப்படி அறைந்தாள் என்று கேட்டால் அதற்குப் பதில்லை. மின்னல் விரைவுடன் எழுந்தவள், அதற்கு மேல் அவனுடைய பேச்கைக் கேட்கும் சக்தியற்றவளாக ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்துவிட்டிருந்தாள் மீநன்னயா.
அந்த ஒரு அறை போதாது என்று நினைத்தாளோ. மீண்டும் அவனை அறைவதற்காகக் கரத்தை ஓங்க, மறு கணம் அவளுடைய தளிர் கரம் அவனுடைய இறுகிய பிடியில் சிக்கிக் கொண்டது.
“என்னையா அறைந்தாய்… என்னையா அறைந்தாய்… எத்தனை தைரியம் உனக்கு. பணத்துக்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்காத நீ என்னை அறைவதா… பாவம் நிறையப் பாதிக்கப்பட்டிருக்கிறாய், கொஞ்சம் இரக்கம் காட்டலாம் என்று நினைத்தால்… உன் கைவரிசையை என்னிடமே காட்டுகிறாயா… என்ன… உன்மை தெரிந்துவிட்டது என்றதும் கோபம் அடக்க முடியாமல் வருகிறதோ…” என்றவன், அவளைச் சுவரோடு தள்ளி, சங்குக் கழுத்தில் கரத்தைப் பதித்து அழுத்த, அதுவரை அவளுடைய உடலைப் பாதுகாத்த போர்வை விடைபெற்றுச் செல்ல, மீண்டும் காயம்பட்ட அவள் மேனி அவனைப் போதைகொள்ளச் செய்தது. அதைக் கண்டதும் ஆத்திரத்தோடு அவளைத் தள்ளிவிட்டு விலகியவன்,
“பணத்துக்காகக் குருவிக் கூட்டைக் குலைக்க நினைக்கும் உனக்கு என்னடி மரியாதை… என்றைக்கு உன்னை ஜெராமோடு பார்த்தேனோ அன்றே திட்டம்போட்டேன் உன்னை அவர் வாழ்க்கையிலிருந்து முற்றாகத் தூக்குவதென்று… ஆனாலும் நீ எனக்கு அதிகச் சிக்கல் வைக்கவில்லை நன்னயா… என் பணத்தைக் கண்டதும் நான் அசைந்த திசைக்கெல்லாம் நீயும் அசைந்தாய் அல்லவா…” என்று எகதாளமாகக் கேட்டவன் பின் எதையோ நினைத்துச் சிரித்தவாறு,
“நீ என்னை உன் வலையில் விழவைக்க நினைத்தாய்… பாவம்… நான் உன்னை ஏமாற்றுகிறேன் என்று உன்னால் யூகிக்கவே முடியவில்லை இல்லையா…” என்றவனைப் பெரும் வலியுடன் பார்த்தாள் மீநன்னயா. அவளுக்கு இதற்கு மேல் எந்த அதிர்ச்சியையும் கேட்கும் தைரியம் இருக்கவில்லை. பெரும் வலியோடு அவனை ஏறிட்டவள்,
“அப்படியானால் எல்லாம் ஏமாற்றுதானா ரஞ்சன்… அந்த… இங்கிலாந்துக் குடியுரிமை ஆணையம் என்னைத் தேடுவதாகச் சொன்னது…” என்று நடுங்கும் குரலில் கேட்க, அவனோ அவளை ஏளனத்துடன் பார்த்து, தன் தோள்களைக் குலுக்கியவன்,
“முட்டாள்… எங்காவது குடியுரிமை ஆணையத்திலிருந்து வந்தால் சமரசமாகப் பேசிக்கொண்டிருப்பார்களா. முதல் வேலையாக உன்னைக் கையோடு அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றியிருப்பார்கள். எல்லாம் என்னுடைய திட்டம்தான்.” என்றதும் இவளுக்குப் பேச வாய் வரவில்லை.
“அப்படியானால், அந்த ரஞ்சன் யார்…? ஜெயராம் கூட ரஞ்சன் நல்லவன் என்றாரே…” என்று திக்கித் திணற, இப்போது கடகடவென்று சிரித்தவன்,
“நீ அந்தளவுக்கு அப்பாவியா… ஆனால் செய்கை அப்படித் தெரியவில்லையே…” என்று கிண்டலுடன் கேட்டவன், பின் தோள்களைக் குலுக்கி,
“ரஞ்சன் என் நண்பன்… நம் திருமணத்திற்குச் சாட்சிக் கையெழுத்துப் போட்டதில் ஒருத்தன்தான் உண்மையான ரஞ்சன்… நான் உன்னை ஏமாற்ற அவனுடைய பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கினேன். ஜெயராம் பார்த்தது உண்மையான ரஞ்சனின் இணையதளப் பகுதியை…” என்று கூற, மீநன்னயா வாயடைத்துப் போனாள்.
எப்படித் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறான். பெரும் தவிப்புடன் அவனைப் பார்த்தவள்,
“என்னைக் காதலித்தது… என் மீது பரிதாபப்பட்டது…. நம்… நம் திருமணம்…” என்று திக்கித் திணற, இவனுக்கும் கொஞ்ச நேரம் பேச்சு வராமல் தடுமாறத்தான் செய்தது.
விழிகளை மூடி மனதிடம் கேட்டால் அது கூறும் உண்மை இவனுக்கு உவப்பானதாக இருக்காது என்று தெரிந்ததால்,
“எல்லாமே பொய்… ஆனால் நம் திருமணம் மட்டும் நிஜம்… உன்னைத் திருமணம் முடித்தால், நீ விலகாவிட்டாலும் ஜெயராம் உன்னை விட்டு விலகிவிடுவார் என்பதால்தான், உன்னை மணம் முடித்தேன்…. அதனால் சட்டப்படி நீ என் மனைவிதான்… நம் திருமணம் இங்கிலாந்து குடியுரிமையை எதுவும் செய்யாது. ஏன் என்றால் நான் கனடியன்… நம் திருமணம் இங்கே செல்லாது…” என்றவன் குனிந்து தரையில் விழுந்திருந்த போர்வையை எடுத்து அதிர்ந்து நின்றிருந்தவளைச் சுற்றிப் போர்த்திவிட்டுக் கைவிடாமலே அவளைத் தன்னை நோக்கி இழுக்க, அவளோ அழக்கூட மறந்தவளாய் அவனை வெறித்தாள். இவனோ அவளுடைய முகத்தை அணு அணுவாக ரசித்துப் பார்த்தவாறு,
“ஆனாலும் உன்னிடம் ஏதோ இருக்கிறது நன்னயா… என்னைக் கூடக் கவிழ வைத்துவிட்டாயே… இப்போது கூட உன் தேகம் வேண்டும் என்று என் உடல் கேட்கிறது தெரியுமா…” என்றவன் அவளுடைய முகத்தை நோக்கிக் குனிய, சடார் என்று தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மீநன்னயா. அதைக் கண்டு நகைத்தவன்,
“பிடிக்காத பெண்ணைத் தொடும் பழக்கம் எனக்கில்லை…” என்றவாறு அவளை விடுவித்தவன், கிண்டலாக அவளைப் பார்த்து,
“இரவில் என் தேவை வரும் போது நீயாக என்னைத் தேடிவருவாய் நன்னயா…” என்றவன், பின் “உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… நீதான் என் மனைவி. இந்த ஜென்மம் முழுவதற்கும்…. அப்புறம் முக்கியமானது… உன்னைக் காணவில்லை என்று தெருத் தெருவாக அலைகிறாராம்… அலையட்டும்… இறுதியில் உன்னைக் கண்டுபிடிக்கும் போது, நீ எந்த நிலையில் இருக்கிறாய் என்பதை அவர் அறியும் போது, அந்த முகத்தில் தெரியும் அதிர்ச்சியையும் பயத்தையும் காண ஆவலாகக் காத்திருக்கிறேன். அதுதான் நான் அவருக்குக் கொடுக்கும் தண்டனை…” என்று ஆத்திரத்துடன் கூறியவன் அவளை அம்போ என்று அங்கேயே விட்டுவிட்டு விலகிச் செல்ல, நன்னயாவோ நிற்கக் கூடச் சக்தியற்றவளாக அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தாள்.
எத்தனை பெரிய ஏமாற்று. எப்படி ஏமாந்தாள்…? அவனைச் சந்தித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனக்கண்ணில் வந்து போக, இப்போது புரிந்தது அத்தனையும் அவன் திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறான் என்று. ஒரு சில இடங்களில் தன்னை மறந்து வாய்விட்டும் இருக்கிறான். இவள்தான் முட்டாள் போல அதைக் கருத்தில் எடுக்காமல் இப்போது…’ என்று கலங்கியவளுக்கு ஜெயராமின் நினைவு வந்து துடிக்க வைத்தது.
‘கடவுளே… ராம் இவளைக் காணவில்லை என்று எப்படித் துடிக்கிறாரோ தவிக்கிறாரோ… எங்கே எல்லாம் தேடி அலைகிறாரோ…’ அவரோடு தொடர்பு கொள்ளாதவகையில் இணைய வசதிகூட இல்லாமல் செய்திருக்கிறானே… பாதகன்…
வேதனையும் அவமானமும் போட்டிப்போட, களைந்திருந்த ஆடைகளை அணிந்தவளுக்கு விம்மல் வெடித்துக் கொண்டு வந்தது.
களைந்த ஆடைகளை அணிந்தாயிற்று, ஆனால் கலைந்த மனதை எப்படிச் சமப்படுத்துவது… இன்னொரு சிறையிலிருந்து தப்பி இங்கு வந்தால், இப்படி ஒரு சிலந்தி வலையில் அகப்பட்டுக் கொண்டாளே.
சும்மாவே அன்புக்கு ஏங்கியவளுக்கு அதகனாகரனின் நெருக்கம் கிடைத்ததும் பற்றிக்கொள்ளத் தோன்றியதே அன்றி, சந்தேகப்படத் தோன்றவில்லையே. தவிர ஜெயராம் கூட ரஞ்சன் நல்லவன் என்று சொன்னதால்தானே நம்பி அவன் கூடப் பயணித்தாள். ஆனால் அதைக் கூட எத்தனை தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறான். கடைசிவரை ஜெயராமனை வந்து இவன் சந்திக்கவேயில்லையே. அப்போத கூட அவன் மீது சந்தேகப்படவில்லையே. கடவுளே ஏற்கெனவே தப்பான காதலால் அவள் வருந்தித் துடிப்பது இதுவரை குறைந்ததில்லை. இப்போது மீண்டும் அதே போலப் பெரும் ஏமாற்றத்தைச் சந்திக்க நேர்ந்துவிட்டதே… தாள முடியாத வேதனையில் மூச்சை அடைத்துக்கொண்டு வந்தது மீநன்னயாவிற்கு. அங்கேயே இருந்தால், தீயாய் பற்றி எரியும் நெருப்பில் விழுந்து கருகிவிடுவோம் என்று அஞ்சியவள் போல எழுந்தவள், சற்றும் யோசிக்காமல் அந்தக் கோட்டையை விட்டு விறுவிறு என்று வெளியேறத் தொடங்கினாள்.
(30)
இரவு நேரம் என்பதால் தலைவிரித்தாடும் இருட்டு. பயங்கர மரங்களுக்கு மத்தியில் இனம் தெரியாத மிருகங்கள்… பயமூட்டும் பறவைகளின் ஓசை, இது எதைப் பற்றியும் கவலைகொள்ளும் நிலையில் மீநன்னயா இருக்கவில்லை. மனித மிருகங்களை விடவா அவை கொடியனவாக இருந்துவிடப் போகின்றன. நடந்தவளுக்கு எங்கே போகிறோம், யாரிடம் போகிறோம், போய் என்ன சாதிக்கப்போகிறோம் எதுவுமே கருத்தில் பதியவில்லை. போய்விட வேண்டும். மிக மிகத் தொலை தூரத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் அவனுடைய கரங்கள் நீளாத தொலைவுக்குப் போய்விட வேண்டும். ஆனால் எங்கே எப்படி? நினைத்தபோதே வேகம் தடைப்பட்டது போல நின்றாள் மீநன்னயா.
அதுதானே… இப்போது அவள் எங்கே போவாள். எப்படிப் போவாள்? ஆழ மூச்செடுத்தவள் சுத்தவரப் பார்த்தாள். இருட்டில் பயங்காட்டும் மரங்கள்தான் நின்றன. கூடவே நரிகளின் ஊளை இவள் செவிகளை வந்தடைய, இப்போது இதயம் பயத்தில் எம்பிக் குதிக்க முயன்றது.
இது காடு… அத்தனை சுலபத்தில் அங்கிருந்து வெளியேற முடியாதே… எந்தத் திசையில் போனால், பாதையைக் கண்டுபிடிக்கலாம் என்று கூட அவளுக்குத் தெரியாதே… இப்போதுதான் தெரிந்தது, அவள் யாரையும், அணுகக் கூடாது என்பதற்காகத்தான், இப்படியான, ஒரு ஒதுக்குப் புறத்திற்கு அழைத்து வந்தான் என்று. இவள்தான் முட்டாள் போல, தன்னைப் பாதுகாக்க அழைத்து வந்தான் என்று நினைத்துக் கொண்டாள். அது சரி… அவள் முட்டாள்தானே… அன்றும் முட்டாளாகத்தான் இருந்திருக்கிறாள். இன்றும் முட்டாளாகத்தான் இருக்கிறாள்.
. மீண்டும் அழுகை கண்களை முட்டிக்கொண்டு வந்தது. அதுவரை சற்றுப் பயத்துடன் தடுமாறி நின்றவள், அந்த நரிகளிடம் சிக்கிக்கொண்டாலும் சிக்கிக்கொள்வாளே தவிர, இனி அவன் இருக்கும் திசைக்குச் செல்லப்போவதில்லை என்று உறுதியாக எண்ணியவளாக, இயன்றமட்டும் தன் வேகத்தைத் துரிதப்படுத்தினாள்.
எந்தப் பாதையில் போகிறோம் என்பது தெரியாமலே, வெறிகொண்டவளாக நடக்கத்தொடங்கினாள். அவளுடைய உள்ளத்தை, அதகனாகரனின் வார்த்தைகள்தான் கொன்றுவிட்டனவே. இப்போது இருப்பது, மீநன்னயா என்பவளின் உடல் மட்டுமே. உள்ளம் அல்ல.
நடக்கத்தொடங்கியவள், நடந்துகொண்டே இருந்தாள். அதற்கு ஒரு முற்று இருப்பதாகவே தெரியவில்லை. கால்கள் சோர்ந்த போயின. ஈழத்தில் ஓடாத ஓட்டத்தையா இங்கே ஓடப் போகிறாள்… மீண்டும் கால்கள் வேகத்தைக் கூட்ட, உள்ளமோ ஜெயராமை ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டது.
எங்கே இருக்கிறீர்கள்… இனி நான் உங்களைப் பார்ப்பேனா? என் வாழ்வில் தோன்றிய சொற்ப, அமைதி… நிம்மதி அதுகூடக் காணல் நீராக மறைந்துபோகுமா? என்று அவள் கலங்கிய அந்த நேரத்தில், கோட்டைக்கு வெளியே அந்தப் பரந்த காட்டையே மலைத்துப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் அதகனாகரன்.
குளியல் அறையில், மீநன்னயாவின் வாசனை தண்ணீரில் கரைந்து போகும் அளவுக்குத் தேய்த்துக் குளித்துக்கொண்டிருந்த அதகனாகரனின் செவியில், கோட்டையின் கதவு திறந்து மூடும் சப்தம் கேட்க வேகமாக உடலிலிருந்த சவர்க்காரத்தைக் கழுவி விட்டுப் பாய்ந்து வெளியேறியவன், கிடைத்த ஆடையைப் போட்டுக்கொண்டு மீநன்னயாவின் அறைக்குள் சென்று பார்த்தான்.
அவன் நினைத்தது சரிதான், அவளைக் காணவில்லை. ஏனோ பயத்தில் நெஞ்சம் தடதடக்கப் பாய்ந்து கோட்டையை விட்டு வெளியே வந்தான். அவள் சென்றதற்கான அடையாளமே இல்லை. இது சும்மா தெரு என்றால் இத்தனை அஞ்சியிருக்க மாட்டான். ஆனால் அது காடு. தொலைந்தால் அத்தனை சுலபத்தில் தேட முடியாது. தவிர நரிகள் உண்டு. அவை இரையைக் கண்டால் சற்றும் யோசிக்காது.
“நன்னயா…” என்று குரல் கொடுத்துப் பார்த்தான். நரிகளின் ஊளையிடும் சத்தம்தான் வந்ததே தவிர, வேறு எந்தச் சத்தமும் அவனுடைய காதுகளுக்கு எட்டவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தான். மீண்டும், மீண்டும். ஏனோ அடிவயிறு சுருங்கிக் கொண்டது.
அவன் அவசரப்பட்டுவிட்டானோ… உண்மையைச் சொல்லாமல் சற்றுத் தாமதித்திருக்கலாமோ. கண்கெட்டபின் சூரிய வழிபாடு. கலக்கத்துடன் கிடைத்த திசை நோக்கி ஓடினான் அதகனாகரன்.
வாழ்வில் முதன் முறையாக அந்தப் பயங்கர மரங்கள் அச்சத்தைக் கொடுத்தன. இந்தக் காடுகளில் தொலைவது சுலபம். எந்தத் திசையென்று தேடுவது.
“நன்னயா… நன்னயா…” என்று அவளைப் பலமுறை அழைத்தும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை. நிச்சயமாக அவளால் அதிகத் தூரம் போய் இருக்கமுடியாது. அது நிச்சயம்.
மீண்டும் அவனுடைய குரல், நாலா பக்கமும் அதிர்ந்தது. ஆனால் அவன் குரலைக் கேட்டு மீநன்னயா வருவதாக இல்லை. திடீர் என்று எங்கோ யாரோ விசும்பும் ஓசை கேட்கத் தன் வேகத்தைக் குறைத்துத் தன் செவிப் புலன்களைக் கூர்மையாக்கியவனாக உற்றுக் கேட்டான். நிச்சயமாக யாரோ விசும்பி அழும் சத்தம்தான் அது. அடுத்துப் புயலென அத்திசை நோக்கிப் பாய்ந்தான் அதகனாகரன்.
ஒரு வேகத்தில் நடக்கத் தொடங்கிய மீநன்னயாவின் ஆத்திரமும் ஏமாற்றமும் மெல்ல மெல்ல வடிந்து போக, அங்கே இயலாமை அவளை ஆட்சிசெய்யத் தொடங்கியது.
அதற்கு மேல் நடக்கும் சக்தியற்றவளாகக் கால்களை மடித்துத் தரையில் அமர்ந்தவளுக்கு அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது. தன் அத்தனை ஏமாற்றமும் வடியும் அளவுக்கு வாய் விட்டழத் தொடங்க, எங்கோ நன்னயா என்று யாரோ அழைக்கும் சத்தம் அவளுடைய காதுகளை வந்து அடைந்தது.
வேறு யார், அந்தக் குரலுக்கு உரியவன் அந்த அதகனாகரன் ஒருவனாக மட்டும்தானே இருக்கமுடியும். மீண்டும் ஏமாற்றப்பட்ட வலி, பலமாகத் தாக்க, அது கொடுத்த ஆத்திரத்தில் கன்னத்தை நனைத்த கண்ணீரை அழுந்த துடைத்தவள், எழுந்து மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்க, “நன்னயா என்கிற அழைப்பு இப்போது நெருக்கத்தில் கேட்டது.
திரும்பிப் பார்க்கக் கூடாது என்கிற கட்டுப்பாட்டோடு மீண்டும் தன் வேகத்தைக் கூட்ட, இப்போது விரைந்து அவளை நெருங்கிய அதகனாகரன்,
“நன்னயா…” என்றவாறு அவளுடைய தோள்களின் மீது கரத்தைப் பதிக்க, தீப்பட்டது போல அவனை உதறிவிட்டுத் தள்ளி நின்றவள் அவனை எரிப்பது போலப் பார்த்தாள். பின் தன் சுட்டுவிரலை நீட்டி அவனைப் பார்த்து முறைத்து,
“தொடாதீர்கள்…” என்றாள் சீற்றமாக.
உடனே தன் கரங்களைத் தூக்கியவன்,
“ஓக்கே… சரி… தொடவில்லை… இப்போது எங்கே போகிறாய்… வா வீட்டிற்கு…” என்று கூற, இப்போது அவனை ஏளனமாகப் பார்த்தாள் மீநனன்யா.
“வீட்டுக்கா… யார் வீட்டுக்கு… உங்கள் வீட்டிற்கா… அதை விட எரியும் சிதையில் போய் விழுவேன் நான்…” என்றவளைச் சமாதானம் செய்வது போலப் பார்த்தவன்,
“அது என் வீடில்லை நன்னயா… என் நண்பன் ரஞ்சனுடையது…” என்றதும் இப்போது மீநன்னயாவின் உதடுகளில் ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது.
“ஓ… அது கூடப் பொய்தானா… அது எப்படி மிஸ்டர் அதிகனாகரன்… என்னை அடிக்கவில்லை, உடலால் துன்புறுத்தவில்லை… ஆனால் உயிர் மரிக்கும் அளவுக்குத் துன்புறுத்தி விட்டீர்களே… இந்த வித்தையை எங்கே கற்றீர்கள்…” என்றவளுக்கு இப்போது கோபம் மறந்து அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
“துரோகம்… அதுவும் நம்பிக்கைத் துரோகம் எத்தனை அசிங்கமானது என்று உங்களுக்குத் தெரியுமா… இப்படி நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டீர்களே… அப்படி உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்?” என்று வேதனையும் வலியும் ஒன்று சேரக் கேட்க, இப்போது ஏளனமாகச் சிரிப்பது அவனுடைய முறையாயிற்று.
“என்ன தவறு செய்தாயா… விடிய விடிய ராமன் கதை, விடிந்த பின் ராமன் சீதைக்கு அப்பன் முறை என்பது போல அல்லவா பேசுகிறாய். இத்தனையும் எதற்காகச் செய்தேன் என்று உனக்கு ஏற்கெனவே சொல்லிவிட்டேன்… என் அக்காவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதற்கு உன்னை ஜெயராமின் வாழ்க்கையிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும்…. அதற்கு எந்த எல்லைக்கும் போக நான் தயாராகத்தான் இருந்தேன். இருக்கிறேன். இனியும் நீ ஜெயராமின் வாழ்க்கையில் நுழைந்தால், இதற்கு மேலும் செய்வேன்…” என்றவனைக் கிண்டலுடன் பார்த்தாள் மீநன்னயா.
“அப்படியா…” என்றவள் எதையோ நினைத்துச் சிரித்தாள். பின் அவனை ஆத்திரமாகப் பார்த்து,
“நீங்கள் யார் என்னையும் ஜெயராமையும் பிரிக்க… ஓ… எனக்குக் கணவர் என்று ஒரு கையொப்பம் போட்டுவிட்டால், நான் ஜெயராமின் வாழ்வை விட்டுப் போய்விடுவேன் என்று நினைத்தீர்களா… ஹா ஹா ஹா… ஐயோ பாவம்…” என்றவள் அவனுடைய விழிகளை விட இவளுடைய விழிகள் அதிகம் பளபளக்க, அந்தப் பளபளப்புடன் அவனை உற்றுப் பார்த்து,
“நீங்கள் ஆறடி என்ன இருபதடி உயரமான சுவர் ஒன்றை எனக்கும் ஜெயராமுக்கும் இடையில் கட்டினாலும் கூட, என்னையும் அவரையும் பிரிக்க முடியாது… எத்தனை திடமான சுவராக இருந்தாலும், அதைத் தகர்த்தெறிந்துவிட்டு அவரிடம் போவேன்… என்னைத் தடுக்க உங்களால் என்ன… அந்தக் கடவுளால் கூட முடியாது. எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள பந்தத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது… நீங்கள் உட்பட…” என்று சீறியவள், அவனை விட்டுத் தள்ளிப் போக முயல, அவளுடைய தளிர் கரம் இப்போது அதகனாகரனின் அழுத்தமான கரத்திற்குள் சிக்கிக் கொண்டது.
சிக்கிக் கொண்ட கரத்தைத் திரும்பிப் பார்க்காமலே விடுவிக்க முயன்றவள், முடியாமல் போக, அவன் பக்கமாகத் திரும்பி,
“மரியாதையாக என் கரத்தை விடுங்கள்…” என்றாள் சீற்றமாக.
“விடுகிறேன்… முதலில் வீட்டிற்கு வா…” என்றான் இவன். இவளோ, மீண்டும் தன் கரத்தை விடுபிக்க முயன்றவளாக,
“வீட்டிற்கா… அதுவும் நீங்கள் இருக்கும் இடத்திற்கு… அதை விட அந்த நரியோடு குடும்பம் நடத்திவிடுவேன்… அம்மாடி உலகத்தில் தந்திரம் மிக்கது நரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… ஆனால் உங்களுக்கு முன்னாடி, அவையெல்லாம் தோற்றுப் போகும் தெரியுமா…” என்று கூறியவளை நிதானமாகப் பார்த்தவன்,
“உன்னை விடவா…? ஜெயராம் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் அவரை மயக்க நினைத்த நீ இதைப் பற்றிச் சொல்வது ஆச்சரியமாக இல்லை…” என்று ஏளனமாகக் கேட்டவனை வெறித்தாள் மீநன்னயா.
“போதும் அதகன்… இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினீர்கள்… நான் சும்மா இருக்க மாட்டேன்… ஜெயராமுக்கும் எனக்கும் உள்ள உறவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்…? அதை விமிர்ச்சிக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது, தகுதியும் கிடையாது…” என்ற சீறியவளைக் கிண்டலுடன் பார்த்தான் அதகனாகரன்.
“ரியலி… செய்வது மொல்லை மாரித்தனம், இதில் திமிர் பேச்சு வேறு… சரி சரி… நம் வாக்குவாதத்தைப் பிறகு வைத்துக் கொள்ளலாம்… இப்போது வா… போகலாம்… இதற்கு மேல் அதிக நேரம் இங்கே நிக்க முடியாது…” என்றவனை வெறித்தவள்,
“இல்லை… வரமாட்டேன்… நிச்சயமாக வரமாட்டேன்… அதுவும் உங்களோடு…” என்றவள், தலையை மறுப்பாக ஆட்டி,
“உங்கள் நிழல் பட்டாலே கோடிப் பாவம் வந்து தொற்றிக் கொள்ளும்…” என்றுவிட்டு வேகமாகத் தன் கரத்தை உதறிக்கொண்டு அவனை விட்டு விலக முயல, வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவனாக நன்னயாவை நெருங்கியவன் மறு கணம் அவளைத் தன் தோள்களில் பொதி மூட்டையாகப் போட்டுக்கொண்டான்.
முதலில் அதிர்ந்து பின் திகைத்து இறுதியில் துடித்து,
“விடுங்கள் என்னை…” என்று திமிறத் தொடங்குவதற்குள் அதகனாகரன் வேகமாகக் கோட்டையை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டான்.
paavam nannaayaa
ரொம்ப பாவம்தான்பா