(19)
மறுநாள் மீநன்னயா எழுந்தபோது இரண்டு மூக்கும் முற்றாக அடைத்திருந்தது. அவளால் மூச்சே எடுக்க முடியவில்லை. நேற்று அந்தக் குளிரில் அதிக நேரம் நின்றதாலும், தூசியோடு மல்லுக்கட்டியதாலும், வந்த வில்லங்கமாக இருக்கலாம். கூடவே தொண்டையும் எரிந்தது. போதாததற்கு கழுத்தின் பின்புறம் அரிக்க, எரிச்சலுடன் அதைச் சொரியப் போனபோதுதான் அங்கே தடித்திருப்பது தெரிந்தது.
சுத்தம், இன்று அரிப்பு அவளை ஒரு வழி செய்யப்போகிறது. எரிச்சலுடன், குளியலறை சென்று ஆடைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாள். ஆங்காங்கே தடித்து வீங்கியிருந்தது. போர்வையிலும் தூசி இருந்திருக்கவேண்டும்.
மீநன்னயாவிற்குத் தூசி ஒன்றும் ஒத்துக்கொள்ளாது என்பதல்ல. எப்போதாவது இப்படி ஒவ்வாமை வருவது உண்டுதான். ஆனாலும் அது வந்தவேகத்தில் போய்விடும். ஊரில் இல்லாத தூசியா? ஆனால் நேற்று சற்று அதிகமாகத்தான் தூசியோடு குடும்பம் நடத்திவிட்டாள் போல.
அரித்த இடத்தைச் சொரிந்தவாறே, குளியல் தொட்டிக்குள் இறங்கியவள், சவர்க்காரம் கொண்டு நன்றாகக் கழுவிக் குளித்தபின் அரிப்பு ஓரளவு குறைந்திருந்தது. ஆனாலும் மூக்கடைப்பு மட்டும் நிற்கவில்லை.
வாயால் சுவாசித்தவாறே, ஆடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வர, சமையலறையில் சத்தம் கேட்டது. அரித்த மேல் கரத்தை சொரிந்தவாறே, அத்திசை நோக்கிச் செல்ல, அதகனாகரன்தான், சமையலறையில் ஏதோ செய்துகொண்டிருந்தான்.
இவளைக் கண்டதும், புன்னகைத்தவன்,
“ஹாய்… ஏஞ்சல்… குட் மார்ணிங்…” என்று கூறிவிட்டுத் தன் வேலையில் கவனமாகக் குனிந்தவனுக்கு அப்போதுதான் உறைத்ததோ. தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். பின், தன் கரத்திலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, அவளை நோக்கிச் சென்றவன்,
“வட் டிட் யு டு டு யுவர் செல்ஃப்?” என்று கடிந்தவனாக, அவள் சொரிந்துகொண்டிருந்த கரத்தைப் பற்றித் தூக்கிப் பார்த்தான். அவள் சொரிந்ததால் வேறு அந்த வெண்ணிறக் கரம் மேலும் சிவந்துபோயிருந்தது. அதைக் கண்டு ஆழ மூச்செடுத்து விட்டவன், கோபத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான். கன்னங்களிலும் கழுத்து வளைவிலும் கண்டிச் சிவந்திருப்பதைக் கண்டவன்,
“மை காட்… என்ன இது?” என்றவாறு அவளுடைய கன்னத்தைப் பெருவிரலால் வருடிப் பார்த்துவிட்டுப் பின், உள்ளங்கையை அவளுடைய கன்னத்தில் வைத்துத் தலையைச் சரிக்கவைத்துக் கழுத்து வளைவைப் பார்த்தான். பின் விரல்கள் கொண்டு அந்தச் சிவந்த இடத்தை வருடிக் கொடுக்க, அந்த வருடலில் எழுந்த கூச்சத்தில் அத்தனை மயிர்க்கால்களும் குத்திட்டு நின்றன.
ஒரு ஆணின் கரம் தீண்டினால் இப்படித்தான் சிலிர்க்குமோ…? இல்லை இவன் தீண்டியதால் மட்டும்தான் சிலிர்க்கிறதா. அப்பப்பா… இதயம் எத்தனை படுவேகமாகப் பாய்ந்து ஓடுகிறது. அவனுடைய வருடலில் தன்னிலை இழந்தவளாக விழிகளை அழுந்த மூடி ரசித்தவாறே,
“ஒ… ஒன்றுமில்லை… தூசி… ஒ… ஒத்துக்கொள்ளவில்லை போல…” என்று ஙஞணநமன பாடினாள். அந்தக் குரலைக் கேட்டவன், அவளை விட்டு விலகி,
“நன்னயா… உனக்குத் தூசி ஒத்துக்கொள்ளாது என்று ஏன் எனக்குச் சொல்லவில்லை…” என்று அவன் கடிய, இவளோ தன் தோள்களைக் குலுக்கி,
“இங்கிலாந்து தூசி எனக்கு ஒத்துக்கொள்ளாது என்று நேற்றுவரை தெரியாதே…” என்றாள் சிரித்தவாறு.
“ப்ச்… என்ன பெண் நீ…? முடியவில்லை என்றால் என்னை வந்து எழுப்பியிருக்கலாமே… அறையைச் சுத்தம்செய்ய உதவியிருப்பேன் அல்லவா…” என்று கூறும்போதே இவளுக்குத் தும்மல் வந்தது.
“ஆச்… நீங்கள் மட்டும்… ஆச்… போன உடனே… ஆச்…” என்று தும்மத் தொடங்க, உடனே அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவன், விரைந்து சென்று ஒரு எண்ணைப் போத்தலை எடுத்து வந்தான்.
இவள் என்ன என்பது போலப் பார்க்க, அவனோ அந்த எண்ணைப் போத்தலின் மூடியைத் திறந்து அதில் சிறிதளவு தன் உள்ளங்கையில் ஊற்றிக் கரங்களால் சூடு பறக்கத் தேய்த்து விட்டவாறு, தடித்து வீங்கியிருந்த கரத்தில் இதமாகப் பூசிவிடத் தொடங்க, மீண்டும் இவளுடைய இதயத்தில் சுதி தப்பியது.
அவனோ, மீண்டும் அதே போல எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றித் தேய்த்து அவளுக்குப் பின்னால் வந்து நின்றவன்,
“உன்னுடைய கூந்தலை மேலே தூக்கிக் கொண்டையாகக் கட்டு…” என்று உத்தரவு கொடுக்க மறுக்காமல் உயரக் கட்ட, எண்ணை கொண்ட கரத்தை அவளுடைய கழுத்து வளைவில் பொத்தினால் போலப் பிடிக்க, ‘ஆ…. சொர்க்கம் அல்லவா அது.’
கரத்திலிருந்த எண்ணெயை மெதுவாகக் கழுத்துக்குப் பூசியவன் அப்படியே கீழிறக்கித் தோள்களிலும் பூசி அழுத்திவிடத் தன்னைத் தொலைந்தவளாகத் தன்னை மறந்து,
“ஆ…” என்கிற ரசிக்கும் சுகக் குரலை எழுப்ப, அவனோ மேலும் மெதுவாக அழுத்திக் கொடுத்தவாறு, அவளுடைய காதுகளை நோக்கிக் குனிந்து,
“டு யு லைக் இட்…” என்றான் கிசுகிசுப்பாய். என்ன பதிலைச் சொல்வாள். அவள் இப்போது இருப்பது சொர்க்கமில்லையா. எப்படிக் கீழே இறங்கி வருவாள். பதில் சொல்ல முடியாமல் அழகாய் புன்னகைக்க, இப்போது கழுத்து வளைவினை அழுத்திக்கொடுத்துக்கொண்டிருந்த கரங்கள், சற்றுக் கீழிறங்கி, மேல் நெஞ்சுவரை எண்ணெய்யைப் பூச, அவன் கரங்கள் கொடுத்த மாயாஜால வித்தையில் பெண்மை மலர, உடல் முழுவதும் மத்தாப்பூக்கள் வெடிக்க, அவன் தீண்டல் மேலும் மேலும் வேண்டும் என்று தேகம் துடிக்க, அவனிடமிருந்து விலகக் கூட முடியாதவளாக, வேறு உலகம் சஞ்சரித்த வேளையில், இதைக் கண்டு காமனுக்கும் ரதிமீது ஆசை வந்ததோ, அவர்களை அம்போ என்று அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதன் விளைவு, வேளை கேட்ட நேரத்தில், வில்லனாய் அந்தத் தும்மல் அவளிடமிருந்து பிறக்கத் தன்னை மறந்து
“ஆச்சு…” என்றாள் மீநன்னயா.
அதகனாகரனும் அவள் மேனியில் தன் கரங்களை வைத்த நேரம் உலகையே மறந்துவிட்டான் தான். ஆரம்பத்தில் அவளைத் தன் வசம் இழுக்க அவன் பல முயற்சிகள் செய்தான்தான். இப்படித் தொட்டுக் கிறங்கவைப்பதும் அந்த முயற்சியில் ஒன்றுதான். ஆனால் அவள் கிறங்கினாளோ இல்லையோ, இவன்தான் தொலைந்துபோகிறான். ஒவ்வொரு முறையும் அவளை மயக்கச் செய்வதாக நினைத்து இவன் மயங்கிப்போனதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.
அவளுக்கு ஒன்றென்றால் மார்பு தூடிக்கிறதே. அது ஏன்? இதுவரை எந்தப் பெண்ணிடமும் இத்தனை அக்கறையாகக் கரிசனையோடு நடந்துகொண்டதில்லையே. ஆனால் இவளிடம் மட்டும் எல்லாம் தொலைந்து போகிறது. சபதம் உட்பட. அவள் தும்மியதும் தன்நிலை பெற்றவனாக உடனே விலகி நின்றவன், அவளுக்கு முன்புறம் வந்து நின்று,
“யு… ஓக்கே…?” என்று கேட்க, அவளோ சரியாக அவனுடைய முகத்திற்கு முன்னால் தும்மினாள். தும்மியபிறகுதான் அவன் முகத்திற்கு முன்பாகத் தும்மியதே உறைத்தது. அதிர்ச்சியில் விழிகள் விரிய,
“சா… சாரி… ஆச்சு… என்னை… ஆச்சு… கன்ட்ரோல் பண்ணுவதற்குள் ஆச்சு…. தும்மிவிட்டேன்…” என்று தும்மலோடும் அடைத்த மூக்கோடும் சண்டித்தனம் புரிந்தவாறு, கூற,
அவனோ, “இட்ஸ் ஓக்கே…” என்றவாறு மீண்டும் தும்மத் தொடங்கியவளின் முதுகைத் தட்டிக் கொடுத்து, “அதுதான் உன்னால் முடியவில்லையே… பிறகு எதற்கு எழுந்து வந்தாய்… இன்னும் கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கலாம் தானே…” என்று கடிய, அவளோ தும்மலோடு சிரித்தவாறு,
அறையில் மட்டும் சுகமாக ஓய்வெடுப்பேன் என்று நினைத்தீர்களா? இங்கே உங்களுக்கு முன்னால் செய்வதை, அங்கே செய்திருப்பேன்… ஆச்… சாரி…” என்றவாறு மூக்கை வருடிக் கொடுக்க, அவனோ இப்போது அவளை விட்டு விலகி அடுப்படி நோக்கிச் சென்றான். இவளோ தும்மி முடித்த களைப்போடு, அவனைப் பார்க்க, அப்போதுதான் அவன் வெளியே செல்வதற்கு ஏற்பத் தயாரான நிற்பதே உறைத்தது.
“வெளியே புறப்பட்டு விட்டீர்களா“ என்று கேட்டபோது மூக்கு இன்னும் அடைத்திருந்தது.
அவனோ இஞ்சியின் தோல்களைச் சீவியவாறு,
“வாகனத்தைச் சரிபார்க்க வேண்டுமே… அது இல்லையென்றால் எங்கும் போக முடியாது…” என்றதும், சற்று நேரம் அமைதி காத்தவள்,
“எதற்குத்தான் இப்படி ஒதுக்குப் புறமான இடத்தில் இந்தக் கோட்டையைக் கட்டினார்களோ. அவசர அந்தரத்திற்குக் கடைக்குக் கூடப் போக முடியாது…” என்றாள், மூக்கிலிருந்து வழிந்த நீரைப் புறங்கையால் துடைத்தவாறு.
அதைக் கண்டவன், விரைந்து சென்று ஒரு ட்ஷ்யூ பெட்டியை எடுத்து அவளுக்கு முன்னால் வைத்துவிட்டுத் தன் வேலையில் கண்ணாக,
“அதுதான் சொன்னேனே ஓய்வுக்காகக் கட்டிய கோட்டை என்று. இங்கே முன்பு வேட்டையாட வரும்போது இந்தக் கோட்டையைப் பயன்படுத்துவார்கள். தவிரத் தனிமையில் நேரத்தைக் கழிக்க இந்தக் கோட்டைதான் வசதி…” என்றதும்,
“என்னவோ, இரவில் படுக்கும்போது மிகப் பயமாக இருந்தது தெரியுமா. அதுவும் நரிகள் ஊளையிடும்போது… அம்மாடி… இதயம் வாய்க்குள் வந்து துடித்தது. நேற்று மட்டும் களைப்பில்லாமல் இருந்திருந்தால், உறங்கியே இருந்திருக்கமாட்டேன்…” என்று அவள் சிலிர்க்க, அவனோ சிரித்தவாறு,
“எப்படியோ, இங்கிலாந்து குடியுரிமையை ஆணையத்தில் இருந்து தப்ப, இந்த இடம்தானே உனக்குப் பயன்படுகிறது. யாரும் யூகிக்க மாட்டார்கள் நீ எங்கே இருக்கிறாய் என்று…” என்று கூற, அவளோ,
“அது நிஜம்தான்… ஆனால் எத்தனை நாளைக்கு…” என்றாள் பெரும் சலிப்புடன். இவனோ அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் காரியத்தில் கவனமாய்,
“ஜெயராம் உன்னைக் கைகழுவும் வரைக்கும்…” என்றான் பட்டென்று. நல்லவேளை காதுகளும் சற்று அடைத்திருந்ததால் அவன் கூறியது அவளுக்குத் தெளிவாகக் கேட்கவில்லை போல, சுட்டுவிரலைக் காதுக்குள் நுழைத்து அசைத்தவாறே.
“என்ன சொன்னீர்கள்?” என்றாள் அவன் கூறியது புரியாமல். உடனே தன்னைச் சமாளித்தவனாக,
“விரைவில்… விரைவில் எல்லாம் சீராகிவிடும் என்று சொன்னேன். இந்த நிலைமையிலிருந்து தப்ப, என்ன வழி என்று கண்டுபிடிக்கும் வரை…” என்றவன், அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த இஞ்சித் தண்ணீருக்குள், கொஞ்சமாகத் தேயிலை போட்டு, அதை வடித்து, அதற்குள் தேன் விட்டு மீநன்னயாவின் முன்னால் வைத்து,
“இஞ்சித் தேநீர்… நல்லது… குடி…” என்றான்.
மறுக்காமல் வாங்கியவள், ஒரு உறிஞ்சு உறுஞ்ச, சுடு தேநீர் தொண்டையை எரித்துக்கொண்டு கீழே சென்றாலும் அந்த நிலைக்கு அந்தத் தேநீர் சொர்க்கமாகவே இருந்தது மீநன்னயாவிற்கு.
“நன்றி ரஞ்சன்… நிஜமாகவே நன்றாக இருக்கிறது…” என்றவள் மீண்டும் ஒரு மிடறு விழுங்கிவிட்டு,
“இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே…” என்றாள் ஆச்சரியமாக.
“ஏன் தெரிவதில் என்ன?” என்று இவன் கேட்க,
“இல்லை… பொதுவாக ஆண்களுக்கு இதுபற்றிய பரிட்சயம் இருந்ததில்லை. பொதுவாக அவர்கள் இஞ்சி என்றாலே கிலோ என்ன விலை என்றுதான் கேட்பார்கள். ஆனால் நீங்கள் சமைக்கிறீர்கள், இப்படிக் கைவைத்தியம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்… உங்கள் சந்ததிக்கு இது தெரிவது ஆச்சரியம்தான் இல்லையா…” என்று வியக்க, அதகனாகரனின் முகம் உடனே கனிந்து போயிற்று.
“சிறு வயதில் என் அம்மா நமக்குக் காய்ச்சல் தடிமன் என்றால், மிளகு கொத்தமல்லி இஞ்சி, வேர்க்கொம்பு, குப்பைமேனிக் கீரை என்று எல்லாவற்றையும் அவித்துத் தேன்விட்டுக் குடிக்கத் தருவார்கள். அவர்கள் இறந்த பின், என் அக்காதான் எனக்கு எல்லாம். அவர்களும் இப்படித்தான், மருத்துவரிடம் போக விடமாட்டார்கள். எல்லாம் கைவைத்தியம்தான்…” என்று கூற மீநன்னயாவோ அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“உங்களுக்க அக்கா இருக்கிறதா? நீங்கள் சொல்லவேயில்லையே… தவிர அம்மா இறந்துவிட்டார்களா…? அன்று உங்களைப் பற்றிக் கூறும்போது அம்மா உயிரோடு இருப்பதாகத்தானே சொன்னீர்கள்…” என்று வியக்க, அதகனாகரனுக்குத் தான் வாய்விட்டது அப்போதுதான் புரிந்தது.
தன்னையே திட்டியவன், பின் சமாளிப்பது போல அவளைத் திரும்பிப் பார்த்து அழகாய் சிரித்து,
“நான் அம்மா என்றது என்னை வளர்த்தவர்களை பற்றிச் சொல்கிறேன். என்னைப் பெற்ற பின், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னைக் கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் நனிதான் என்னை வளர்த்தார்கள்… அவரின் மகளை நான் அக்கா என்றுதான் சொல்வேன்… அக்கா என் நனியை அம்மா என்று அழைத்ததால் நானும் அம்மா என்று அழைத்தேன்…” என்று கூறத், தெளிந்தவளாக,
“ஓ…” என்றதும், அதற்கு மேல் அவளைச் சிந்திக்க விடாதவனாக,
“சமையல் தயார்… வா சாப்பிட” என்றான். அத்தோடு அவன் வளர்ப்புத் தாய் சகோதரியை மறந்தவளாக இருக்கையை மேசைக்கு அருகே இழுத்துப்போட்டுவிட்டு, உணவைப் பார்க்கப் பசி மரத்துப்போயிருந்தது.
பசிக்காமல் எப்படிப் புசிப்பது? அவனைப் பரிதாபமாகப் பார்க்க,
“சத்தம் போடாமல் சாப்பிடுகிறாய்…” என்றான் கறாராய். இப்படி மருட்டினால் என்ன செய்வது? பரிதாபமாக அவன் செய்துவைத்த சான்ட்விச்சைப்ப பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள் அரிப்பு ஓரளவு குறைந்திருப்பதை. வியப்புடன் அதகனாகரனை ஏறிட்டவள்,
“அம்மாடி… அரிப்பு குறைந்துவிட்டதே… என்ன எண்ணெய் போட்டீர்கள்…?” என்று வியந்தவளாகக் கரத்தைத் தூக்கி மணந்து பார்த்தாள். அந்த எண்ணெய்யின் மணம் அத்தனை ஏற்புடையதாக இருக்கவில்லை. முகத்தைச் சுழித்தவாறு அவனைப் பார்க்க, அவனோ மெல்லிய நகைப்புடன் ஏறிட்டு,
“ஆலிவ் எண்ணெய்… இது நம்முடைய இலுப்பெண்ணெய்யின் குடும்பத்தைச் சேர்ந்தது… ஆலிவ் எண்ணெய்யில் நிறைய மருத்துவக் குணம் உண்டு. அதில் ஒன்று இது.” என்றவன், சற்றுத் தள்ளியிருந்த தன் தடித்த மேல்சட்டையை இழுத்து எடுத்தவாறு,
“சரி… நன்னயா… நான் போய்விட்டு வரும் வரைக்கும் எங்கும் போகாதே… ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா… இங்கே நரிகள், கரடிகள் உண்டு என்று… சிலவேளைகளில் அவை வரலாம்… தவிர… இங்கே மற்றைய இடங்களைப்போல, சாலை வசதிகள் இருக்காது. எக்குத் தப்பாக இந்தக் காட்டிற்குள் நீ சிக்கிக் கொண்டால், உன்னைக் கண்டுபிடிப்பது மிகச் சிரமம்… சரியா…” என்றவன், புறப்படத் தயாராக, இவளும் அவன் கூடவே வெளியே வந்தாள்.
அவன் சொன்னது சரிதான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையும், மரங்களும், செடிகளும், கொடிகளுமே காட்சியளித்தன. அந்த அடர்ந்த மரங்களுக்குள், அந்தக் கோட்டை மட்டும் தனித்திருப்பது, அந்தப் பகலிலும் ஒருவிதக் கிலியை ஏற்படுத்தியது நிஜம்.
அவளுடைய விழிகளில் தெரிந்த அச்சத்தைக் கண்டுகொண்டவனாக அவளை நோக்கித் திரும்பியவன், அவளுடைய தோள்களில் கரங்களைப் பதித்து அழுத்திக் கொடுத்து,
“ஹே… பயப்பட ஒன்றுமில்லை… நான் தாமதிக்காமல் விரைவாகவே வந்துவிடுவேன்…” என்றவன் இன்னும் அவள் தெளியவில்லை என்றதும்,
“”என்னம்மா… பயமாக இருக்கிறதா… உனக்கு இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் தயங்காமல் சொல்லவிடு… மீண்டும் நகரத்திற்கே அழைத்துச் செல்கிறேன். ஆனால் குடியுரிமை ஆணையம் எந்த நேரமும் உன்னைக் கைதி செய்யலாம்….” என்று கூறி எச்சரிக்க, அவன் சொன்ன பாவனையில் அந்த ஆணையத்தை விட, இந்தக் காடே பரவாயில்லை என்பது போலத் தோன்றியது இவளுக்கு.
“இல்லை.. இல்லை… நான் இங்கேயே இருக்கிறேன்…” என்றாள் அவசரமாக..
“குட் கேர்ள்… என்ன தேவையென்றாலும் என்னை அழை…” என்றவன்,
“சரி… நான் கிளம்புகிறேன். மறக்காமல் சாப்பிடு…. சாப்பிட்டுவிட்டுத் தூங்கு… எதற்கும் வரும்போது, ஒவ்வாமைக்கு ஏற்ற மருந்து வாங்கி வருகிறேன்… சரி…. கிளம்பட்டுமா?” என்றவன், அவளிடமிருந்து விடைபெற்று நடக்கத் தொடங்க, கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்த மீநன்னயா, வேகமாகச் சென்று தன் கைப்பேசியை எடுத்து ஜெயராமை அழைக்க முயன்றாள்.
“த நம்பர் யு டயல் இட்ஸ் லாங் டிஸ்டன்ட். யு கான்ட் கால் த நம்பர்…” என்றுவிட்டுக் கைப்பேசி தானாகவே அணைந்துகொண்டது.
(20)
மீநன்னயாவிற்கு அப்போதுதான் தன்னால் தொலைதூரத்தில் உள்ளவரை அழைத்துப் பேச முடியாது என்று புரிந்தது. சரி வட்ஸ் ஆப், இன்ஸ்டக்ராம் எதையாவது தரவிறக்கம் செய்து ஜெயராமோடு பேசலாம் என்று நினைத்தால், வைஃபை இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
சுத்தம்… எரிச்சலோடு நினைத்தவள், கைப்பேசியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அந்தக் கோட்டையைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினாள்.
முற்றிலும் மாறுபட்ட கட்டமைப்பு. ஆறு அறைகள் இருந்தாலும் நான்கு அறைகள் மூடப்பட்டிருந்தன. அதில் ஒரு அறையில் பழைய பொருட்கள் போடப்பட்டிருந்தன. எஞ்சிய அதகனாகரனின் அறையைத் திறந்து பார்த்தாள். அவளுடையதைப் போலவே இருந்தது அந்த அறை.
அவன் தங்கும் அறையும் சாதாரணமானதாக இருக்கிறதே… வியந்தவாறு திரும்பியவளின் பார்வையில் ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த துணிகள் கண்ணில் பட்டன. அந்தக் கோட்டையைச் சுற்றி வந்தபோது துவைக்கும் இயந்திரம் இருந்தது நினைவுக்கு வர, உடனே தரையில் கிடந்த அந்தப் பழைய விரிப்புகளைக் கூட்டி அள்ளியவள் மீண்டும் தும்மத் தொடங்கினாள்.
அப்பாடி, தும்மும் அளவுக்கு அத்தனை தூசி படிந்திருக்கிறது. இந்த இடத்தை வாங்கிவிட்டு மருந்துக்கும் கூடப் பாவிக்கவில்லை போல இருக்கிறதே.
அவனுடையவை மட்டுமன்றி, முன்னிரவு ஒரு மூலையில் போட்ட தன் படுக்கைத் துணிகளையும் வாரி அள்ளிக்கொண்டு கீழே வந்தவள், துவைக்கும் இயந்திரத்திற்குள் அவற்றைப் போட்டுவிட்டு, மீண்டும் தன் அறைக்கு வந்தாள். மூக்கில் தூசி புகாதவாறு துண்டொன்றைக் கட்டிக்கொண்டு கீழே வந்தவள் அடுத்து மின்னல் விரைவுதான்.
மூச்சு முட்டும் அளவிற்குப் பரவிய தூசை விரட்ட ஜன்னல்களைத் திறக்கக் குளிர்காற்று பயங்கரமாக உள்ளே நுழைந்தது. ஏற்கெனவே அந்தக் கோட்டையில் குளிர் பரவியிருந்தது. ஜன்னலைத் திறந்ததும் இன்னும் பயங்கரமாகக் குளிரத் தொடங்க, ஓடிப்போய்ச் சுவட்டர் அணிந்துகொண்டு கீழே வந்தாள். தொடர்ந்து தூசிகளைத் தட்டி, தளபாடங்களுக்கு மேல் போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துத் துவைக்கப்போட்டு நிமிர்வதற்குள் மீநன்னயாவிற்கு மீண்டும் மூச்சடைக்கத் தொடங்கியது. கண் முதல் கொணெ்டு நாசி தொண்டை என்று அரிக்கத் தொடங்கியது. கூடவே கண்களிலும், மூக்கிலும் தண்ணிர் வடியத் தொடங்கியது.
நெஞ்சம் இறுகியது. மூச்செடுக்கச் சிரமமாக இருந்ததோடு, மூச்செடுத்து விடும்போது ஒருவித சத்தமும் பிறந்தது.
இது என்ன மூச்சிழுப்பு நோய் போல, இப்படி இழுக்கிறது? அதற்கு மேல், வேலை செய்ய முடியாமல், எழுந்தவள், ஓடிப்போய், முகம் கழுவிவிட்டு வெளியே வந்து சுத்தமான காற்றை இழுத்து இழுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றாள். என்னதான் முயன்றும் பிராணவாயு போதாது போல மார்பில் அழுத்தம் கூடியது. அதற்கு மேல் முடியாதவளாகத் தட்டுத் தடுமாறி, தன் அறைக்குள் வந்தவள், இயலாமையில் படுக்கையில் விழுந்தாள்.
அதே நேரம், நடுவழியில் நின்றிருந்த தன் வாகனத்தை, ஒரு திருத்துனர் மூலம் சரியாக்கிவிட்டு, கோட்டைக்குள்ளே வந்தான் அதகனாகரன்.
அவன் சொன்னதுபோல அறையில் ஓய்வெடுக்கிறாள் போல. எண்ணியவனாக, அவளை ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என்று அவளுடைய அறை நோக்கிச் சென்றவன் கதவைத் தட்டினான்.
அது திறக்கப்படாமலே இருக்க, மீண்டும் தட்டினான். இப்போதும் உள்ளே எந்த அசைவுமில்லை. ஒரு வேளை குளிக்கிறாளோ? யோசனையுடன் கதவைத் தள்ள அது தானாகத் திறந்து கொண்டது.
புருவங்கள் முடிச்சிடக் கதவைத் திறந்தவனின் செவிகளில் பலமாக வந்து விழுந்தது ‘ஊசிங்’ சத்தம்.
முதலில் அலட்சியமாக நினைத்துத்தான் கதவைத் திறந்தான். ஆனால், அங்கே படுக்கையில் மல்லாக்காக விழுந்திருந்த மீநன்னயா, மூச்செடுக்கச் சிரமப்படுவதைக் கண்டவன், மறுகணம் பதறியவனாக அவளை நோக்கிப் பாய்ந்தான்.
“நன்னயா… என்னாச்சு…?” என்று கேட்டவன், அவளைத் தூக்கி அமர்த்த முயல, அவளோ வேரறுந்த கொடியாக அவனுடைய மார்பு சாய, அவளை இறுக அணைத்துக் கொண்டவனுக்கு முதன் முறையாக உடல் நடுங்கி அடங்கியது.
“ந… நன்னயா…” என்று அவன் அழைக்க, அந்த அழைப்பு அவளைச் சென்று அடைந்ததா என்று கூடத் தெரியவில்லை. அவளுடைய உடல் சோர்ந்து விழவும், மறுகணம் அவளைத் தன் கரங்களில் ஏந்தியவாறு தன் வாகனத்தை நோக்கிப் பாய்ந்தான். அடுத்த முப்பது நிமிடங்களில் மருத்துவமனையை வந்து அடைந்திருந்தான் அதகனாகரன்.
அடுத்துக் காரியங்கள் கடகடவென்று நடந்தேறின.
அவளைத் தள்ளுவண்டியில் வைத்து உள்ளே எடுத்துச் செல்ல முதல், அவளை அவசரமாகப் பரிசோதிக்க வந்த தாதி முதல் வேலையாக மூக்கில் பிராணவாயுக் குழாயைப் பொருத்திவிட்டு, உடனே அந்த இழுப்பு நிற்க மருந்தொன்றைப் போட்டுவிட்டு உள்ளே அழைத்துச் செல்ல, இருப்புக் கொள்ளாமல் தவிப்புடன் வெளியே நின்றிருந்தான்.
ஏனோ அவளை அந்த நிலையில் அவனால் பார்க்கவே முடியவில்லை. உள்ளே என்னவோ செய்தது. வலித்தது. பிசைந்தது. புத்தியும், இதயமும் சேர்ந்து அடித்துக் கொண்டது.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவனைத் தவிக்கவைத்த பின்னர், வைத்தியர் அவனைத் தேடி வந்தார்.
அவரைக் கண்டதும் வாயில் வந்து துடிக்க முயன்ற இதயத்தை அடக்கியவனாக,
“அவ… அவளுக்கு என்னவாயிற்று…” என்று கலக்கத்துடன் கேட்க,
“இப்போது பரவாயில்லை மிஸ்டர், அதகனாகரன்… மூச்சுத் திணறல் நிற்பதற்காகப் போட்ட மருந்து வேலை செய்கிறது… அவர்களுக்கு முன்பு இப்படித் திணறல் வந்திருக்கிறதா? அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இந்தச் சிக்கல் உண்டா…?” என்று கேட்க, அதற்கு என்ன பதிலைச் சொல்வான். அவள் பற்றி அடியும் தெரியாது, நுனியும் தெரியாதே அவனுக்கு.
இவன் பதில் தெரியாமல் தடுமாற,
“இட்ஸ் ஓக்கே… அவர்கள் விழித்ததும் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்… இப்போதைக்குப் பயப்பட எதுவுமில்லை. இனி இப்படி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்…” என்றதும், அதகனாகரனுக்குப் பெரும் பாரம் இறங்கிய நிம்மதி.
அவன் மீநன்னயாவின் அறைக்குள் நுழைந்தபோது, இன்னும் மயக்கநிலையில்தான் இருந்தாள். இன்னும் சுவாசிப்பதற்கான குழாய் எடுக்கப்படவில்லை. தன்னை மறந்து அவளை நெருங்கியவனுக்கு ஏனோ நெஞ்சம் பதைத்துப் போனது.
அவள் அவனுடைய சகோதரியின் வாழ்க்கையை நாசமாக்க வந்தவள் ஆயிற்றே. அவள் மீது இரக்கப்படுவது எத்தனை அசிங்கம். ஆனாலும் அவள்போல் துடித்துச் செல்லும் மனத்தைக் கட்டுப்படுத்த அவனால் இம்மியும் முடிந்திருக்கவில்லை.
அவனைக் கண்டதும் மலர்ந்த சிரிக்கும் அந்த மலர் முகம் இவனை வதைக்கத் தன்னை மறந்து அவளுடைய தலை முடியை வருடுவதற்காகக் கரத்தைத் தூக்கியவன், என்ன நினைத்தானோ, விரல்களை மடக்கிச் சுருட்டி இழுத்துக்கொண்டான்.