அன்று முக்கிய வியாபார நண்பரைச் சந்திப்பதற்காக இங்கிலாந்து வந்திருந்த நேரம், அவரைச் சந்திப்பதற்காகச் சென்றவன், அரைவழியில் அவருக்குத் திடீர் என்று தவிர்க்க முடியாத வேலை வந்துவிட, இவனிடம் மன்னிப்பு வேண்டியவர் மாலை தானே வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்.
போன காரியம் நிறைவேறாத எரிச்சலோடு மீண்டும் விடுதிக்கு வந்தான் உத்தியுக்தன்.
அன்றைய நாள் இப்படி வீணாகப் போயிற்றே என்று எரிச்சல் பட்டவாறு, அறையைத் திறக்க, யாரோ ஒருத்தி முக்காடு அணிந்தவாறு கட்டிலை விரிப்பதுபோல நிற்பதைக் கண்டு முதலில் குழம்பினான்.
அதுவும் அந்தப் பெண்ணிடமிருந்த மெல்லிய பதட்டம், இவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த, முதலில் திருட வந்தவள் என்றுதான் நினைத்தான். ஆனால் அந்த விழிகள்… அது திருடும் விழிகள் அல்ல. அதையும் மீறி ஆராயும் விழிகள். அப்போதுதான் அவனுக்குப் பொறி தட்டியது, அது எங்கிருந்தோ அனுப்பப்பட்ட அம்பென்று. ஆனால் சுதாரிப்பதற்குள் மேசை விளக்கால் அடித்துவிட்டு ஓடிவிட்டாள்.
அந்தச் சின்ன உருவம் அத்தகையே வேகத்தோடு நடந்துகொள்ளும் என்று அவன் எண்ணவேயில்லை. அவள் அடித்துவிட்டுத் தப்பிய பின் நெற்றியிலிருந்து கொடகொட என்று இரத்தம் வடியத் தொடங்க அவளைத் தொடர்ந்து போக முடியாமல் வைத்தியரை அழைக்க வேண்டியதாயிற்று.
வந்தவர் இரண்டு தையலைப் போட்டுவிட்டுச் சென்றார். அப்போது கூட அவன் பாரதூரமாக எதையும் நினைக்கவில்லை. இதுவரை எந்தப் பிரச்சனைக்குள்ளும் சிக்காதவன்… அன்றுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்து கொண்டான். வாழ்க்கையிலும் முதன் முறையாக சறுக்கிப்போய் செய்வதறியாது நின்றான். அதுவும் எத்தனைப் பெரிய சறுக்கல் அவனுக்கு.
அந்த நேரத்திலும், இங்கிலாந்தில் தன் பெண் தோழியோடு வந்திருந்த அவனுடைய தம்பி அவ்வியக்தன் இவனைப் பார்க்க வந்தபோது கூட, இவனையும் அவனையும் கோர்த்துப் பத்திரிகையில் இத்தகைய கீழ்த்தரமான செய்தி வரும் என்று கனவிலும் என்னவில்லையே.
அவனும் அவனுடைய தம்பியும் இப்படி சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. இவன் செல்லும் நாடுகளுக்கு அருகாமையில் அவ்வியக்தன் நின்றிருந்தால், இவனைக் காண வந்துவிடுவான். நேரம் கிடைக்கும் வேளைகளில் ஒன்றாக உணவு அருந்தச் செல்வதும் உண்டு. சிலவேளைகளில் அவ்வியக்தனின் பெண் தோழிகளும் வருவதுண்டு. உத்தியுக்தன் அரசியலில் இறங்கியபின் முன்னையதைப் போல அடிக்கடி தம்பியை சந்திப்பதில்லை என்றாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து அளவளாவுவார்கள்.
அப்படிதான் இவன் லண்டனுக்கு சென்றபோது அவ்வியக்தனும் அங்கே இருந்ததால் எப்போதும் போல இவனை பார்க்க வந்தான். அதை இவன் என்று நினைத்து நன்கு ஆராயாமல் கட்டுரையை எழுதி பிரசுரிக்க, பிறகு என்ன…! அவன் செய்யாத தவற்றைச் செய்ததாக எதிர்க்கட்சியாளர்கள் அவனை நாறடிக்க, அந்தக் கணம் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விலகினான்.
அவன் அரசியலுக்குள் புகுந்ததற்குக் காரணமே வில்லியம் நேக்கரை வீழ்த்தி ஒழிக்கத் தான். கடைசியில் இவன் மூக்குடைபட்டு விலகவேண்டியது ஆயிற்று. ஆனாலும் அந்த ஏமாற்றத்தை இந்தக் கணம்வரை அவனால் மறக்க முடியவில்லை.
அதுவும் அவனைப் போற்றிய மக்கள், கண் சிமிட்டும் விநாடியில் எதிரியாகப் பார்த்தபோது இவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. இவ்வளவு ஏன், அவனைக் காதலித்த ஜுலியட் கூட அவனை நம்பவில்லையே. அவன் முகத்தில் செய்திப் பத்திரிகையை விட்டெறிந்துவிட்டு, நீ எப்படி என்னை ஏமாற்றலாம்… நம்பிக்கைத் துரோகி” என்றுவிட்டு வெளியேறியபோது அவன் பட்ட அவமானம். வலி… இப்போது நினைத்தாலும் உடல் திகு திகு என்று எரியும்.
இனி அவளிடம் சென்று இந்த பத்திரிகையில் குறிப்பிடும் நபர் நான் அல்ல என் தம்பி என்று கத்தவா முடியும். அது அவனுடைய தம்பியின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விடாதா.. கூடப்பிறந்த தம்பியாகவே இருந்தாலும், அவனுடைய வாழ்கையை விமர்சிக்க இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. தன்னை நிரூபிக்க வேண்டி தம்பியின் வாழ்க்கையை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டுவருவது. அத்தனை சுயநலவாதியா அவன்?
தன் நிலைக்குக் காரணமான அந்த நபர் மீது இவனுடைய மொத்தக் கோபமும் திரும்பியது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் நீண்ட பெரிய இரு விழிகள்தான். என்று அந்த விழிகளைக் கண்டானோ, அன்று தொலைத்த தூக்கம் இதுவரை வந்ததில்லை.
அந்த விழிகளை வைத்து எப்படிக் கண்டு பிடிப்பது? தேடினான். விசாரித்தான். ஆறு மாதங்களின் பின்தான் அந்த நபர் யார் என்றே தெரிந்தது.
உடனே பதிலடி கொடுக்க முடியாமல் காலம் அவனை சோதிக்க, அவனை சூழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு, நொடிந்த வியாபாரத்தை மீண்டும் நிலைப்படுத்தி நிமிர்ந்த போது இரண்டு வருடங்கள் ஓடிவிட்டிருந்தன.
அந்த இரண்டு வருடங்களும் எத்தனை பெரிய நரகத்துக்குள் இருந்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அதற்குக் காரணம் இவள்தானே. ஆத்திரம் சற்றும் மாறாமல் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் காட்டியவாறு விழிகளில் எரிதணலைக் கக்கியவாறு வெறித்துப் பார்க்க, அவளோ, அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
இதற்கு என்ன பதிலைக் கூறுவது என்றும் தெரியவில்லை. அவள் செய்தது ஒன்றும் சாதாரன தவறில்லையே மன்னித்து விட்டுவிட. இது மாபெரும் குற்றமாயிற்றே. திக்கித் திணறியவளாக.
“ஐ… ஐ ஆம் சாரி… ரியலி.. ரியலி சாரி… நான் செய்தது தவறுதான்… நிஜமாகவே நான் வருந்துகிறேன்… நம்புங்கள்…” என்று செய்வதறியாது கெஞ்சியவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன். விழிகள் மேலும் கூர்மையாகி அவளைத் துளைத்தன.
“அப்படியானால் என் மீது தவறில்லை என்று உனக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அப்படித் தானே…” என்று பற்களைக் கடித்தவாறு கேட்க, இவளோ மீண்டும் தலை குனிந்தாள்.
அதைக் கண்டதும் முகம் கறுக்க,
“எப்போது தெரியும்…?” என்று கேட்டபோது அந்த கேள்வியில் பிறந்த சூடு இவளை எரிக்கப் பதில் கூற முடியாமல் கண்கள் கலங்க நின்றாள் சமர்த்தி. அவளை ஆக்ரோஷமாகப் பார்த்தவன்,
“கேட்டேன்… எப்போது தெரியும்…” என்றபோது அதற்கு பதில் கொடுக்கவில்லை என்றால், நிச்சயமாக அவள் பற்களை உடைப்பான் என்கிற அச்சம் தோன்ற
“ஒரு… ஒரு சில மாதங்களில்…” என்றதும் இவனுடைய உடல் மேலும் இறுகியது.
“காட்… ஐ… காண்ட் பிலீவ் திஸ்…” என்றவன் ஆத்திரத்தோடு அவளை நெருங்கியவாறு,
“தெரிந்திருந்துமா அதற்கு மறுப்பாக ஒரு கட்டுரை கூட உன்னால் எழுதிப்போட முடியல்லை?” என்றபோது ஆத்திரத்தில் இவன் உடல் கூட நடுங்கியது.
“சாரி… நான்… என்னால்… மறுப்பாக…” என்று திக்கித் திணறியவளுக்கு வார்த்தைகள் வந்தால் அல்லவோ. எப்படி சொல்வாள்?
உண்மையைச் சொன்னால் என் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்துபோகும், எதிர்க்கட்சி கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும், அவர்களால் என் குடும்பத்துக்கே ஆபத்து ஏற்படும்… இந்த அச்சத்தால் கண்டும் காணாதவளுமாக அப்படியே விட்டுவிட்டேன் என்று எப்படித் துணிந்து சொல்லுவாள்? மீன்டும் கண்ணீர் பொழிய பதில் சொல்ல முடியாது தவித்தவளை வெறுப்போடு பார்த்தான்.
“எதிர்க்கட்சி உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தது…” என்று முக்கிய புள்ளியைப் பிடித்துக் கேட்க அதற்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினாள் சமர்த்தி.
அவள் பக்கம் நியாயமிருந்தால் அந்த நியாயத்தைக் கூறி நவீன கண்ணகியாக மாறி இருக்கலாம். ஆனால் அவள் கிரகம் இந்தப் பக்கம் திரும்பினாலும் இவளுக்கு எதிராக அல்லவா இருக்கிறது. ஒரு சதவிகிதம் கூட இவளுக்குச் சார்பாக இல்லையே. அவன் எந்தக் கேள்வி கேட்டாலும் துணிந்து பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லையே. திணறிப்போக,
“என் கேள்விக்கான பதில் இன்னும் எனக்கு வரவில்லை…” என்றான் காட்டுத் தீயாக. அது இவளையும் எரிக்க, உதடுகள் நடுங்க,
“ஒரு…” என்றவள் சொல்ல முடியாமல் எச்சியைக் கூட்டி விழுங்கிவிட்டு,
“ஒரு… மில்லியன்…” என்றபோது வெறும் காற்று தான் வந்தது. அதைக் கேட்டதும், கடகவென்று சிரிக்கத் தொடங்கினான் உத்தியுக்தன்.
“வட்… ஜெஸ்ட் வன் மில்லியன்… ஹா ஹா ஹா… மை காட்… வெறும் ஒரு மில்லியன் டாலர்கள் தானா அந்த நிகழ்பதிவுக்கான பணம்… ஹா ஹா ஹா…” என்று நகைத்தவன், பின் ஆத்திரத்துடன் அவளைப் பார்த்து,
“முட்டாள்… அந்த நிகழ்பதிவின் பெறுமதி என்னவென்று உனக்குத் தெரியுமா? என்னைப் பதவியிலிருந்து தூக்க வைத்தது மட்டுமல்லாமல், என் வியாபார சாம்ராஜ்யத்தையும் அழிக்கக் காரணமாக இருந்த அந்த நிகழ்பதிவு வெறும் ஒரு மில்லியன் டாலர் தானா… இதை விடக் கேவலம் எனக்கு எதுவும் இருந்துவிட முடியாது…” என்று சீறியவனுக்கு ஆத்திரம் கட்டுப்பட மறுத்தது.
உடம்பெல்லாம் யாரோ அமிலம் ஊற்றியது போல எரிந்தது. சற்று நேரம் அங்கும் இங்கும் நடந்தவன், என்ன நினைத்தானோ, நின்று நிதானமாகச் சமர்த்தியை ஏறிட்டான்.
அடுத்து, நிதானமாகத் தன் மேல் சட்டையின் பொத்தான்கள் ஒவ்வொன்றாகக் கழற்றத் தொடங்கினான். அவனுடைய முடியடர்ந்த மார்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய இவளுக்கு ஐந்தும் கேட்டு அறிவும் கேட்டது.
பதறியவளாகப் படுக்கையிலிருந்து எழ, அவனோ அவளை அலட்சியமாகப் பார்த்து,
“ஏன் எழுந்துவிட்டாய்… உட்கார்…? தூரத்தில் இருந்து பார்த்துதானே அந்தக் கட்டுரையை எழுதினாய்… இப்போது நேரடியாகவே அதை அனுபவித்துவிட்டுக் கட்டுரையை எழுது… உனக்கு எதிர்க்கட்சி ஒரு மில்லியன் தானே கொடுத்தது… நான் பத்து மில்லியன் டாலர்கள் தருகிறேன். சாகும்வரைக்கும் பணத்துக்கு சிரமமில்லாமல் வாழலாம்…” என்று கூற அவமானத்தில் கூனிக் குறுக்கிப் போனாள் சமர்த்தி.
தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று வாதாடக் கூட முடியாத நிலையில் அல்லவா அவள் இருக்கிறாள். அவனோ அடங்கா சீற்றத்துடன்,
“கட்டுரையில் என்ன எழுதியிருந்தாய்? ஒன்டாரியோ முதல்வராகப் போட்டியிட இருக்கும் உத்தியுக்தன் ஆதித்தனின் இரட்டை வாழ்க்கை அம்பலம். காதலி ஒருத்தியிருக்க வேற்றுப் பெண்ணுடன் கும்மாளம்… மக்களின் முன்னால் காதலியை நிச்சயித்தது வெறும் கண்துடைப்பு தானா… யாரை ஏமாற்ற இந்த நாடகம்…” என்று அவள் எழுதிய கட்டுரையின் முக்கிய வசனங்களைக் கோடிட்டுக் காட்டியவன், மீண்டும் முகத்தில் புன்னகையைத் தேக்கி,
“அதை நிரூபிக்க வேண்டாமா… பொய்யாகப் போட்ட கட்டுரையை மெய்யாகப் போட்டுவிட்டால் போயிற்று. தலைப்பை வேண்டுமானால் இப்படிப் போடலாமா? பெண் பித்தனான உத்தியுக்தன் மீது காமவயப்பட்ட பிரபலப் பத்திரிகை நிருபர்… நன்றாக இருக்கிறதா? ப்ச்.. எனக்கு என்னவோ மொக்கையாகத் தெரிகிறதே.. வேறு எப்படி எழுதலாம்… ம்… ஆ… உத்தியுக்தனின் விட்டுச் சென்ற காதலியின் இடத்தை நிரப்பிக்கொண்டார் பிரபலிய பத்திரிகை நிருபர்… படுக்கையில் அவரோடு உல்லாசம்… இது அருமையாக இருக்கிறது…?” என்று அவன் முடிக்கவில்லை, பதறித் துடித்தவளாகப் படுக்கையிலிருந்து இறங்கியவள், நடுக்கத்துடன் ஓட முயல, இவனோ பாதையை மறைத்து நின்று,
“எதற்கு இந்த நாடகம். அதுதான் பத்து மில்லியன் தருகிறேன் என்றுவிட்டேனே. பிறகு என்ன. உனக்கும் விளம்பரம். எனக்கும் விளம்பரம்…” என்றவன் அவளை விடுத்து அங்கிருந்த மேசையை நோக்கி நடந்தான். மேசையின் இன்னொரு இழுப்பறையைத் திறந்து அதிலிருந்து நிழல்பதிவுக் கருவியை வெளியே எடுத்து அதைத் தூக்கிக் காட்டினான்.
“ஹை டெஃபினிஷன் பிக்ஷர்… இரண்டு வருடங்களுக்கு முன்பு நீ எடுத்துப் போட்டாயே படங்கள்… அது எந்தக் கமராவிலிருந்து எடுத்தாய். படங்கள் நன்றாகவேயில்லை?” என்றவன் அந்த நிகழ் பதிவை உயிர்ப்பித்துச் சுலபமாகப் பதிவு செய்யும் வகையில் மேசையில் வைத்துவிட்டு, படுக்கையை அது சரியாக ஒளிப்பதிவு செய்கிறதா என்று பார்த்தான். திருப்தியுற்றவனாக இவளை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தவன்,
“பேர்ஃபெக்ட்…” என்றான் புன்னகையுடன்.

