Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15

மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய வெட்கப் புன்னகை ஒன்று மலர்ந்தது.

முன்னம் எப்படியோ. இப்போது தாய்மையின் பூரிப்பில் அவள் தேகம் அவனுக்கு அருவெறுப்பைக் கொடுத்திருக்குமோ? எண்ணியவள் தன்னையும் மீறி உதடுகளைக் கடித்து அடக்கினாள். கூடவே உத்தியுக்தனைத் தேடியது மனது.

என்ன இன்னும் ஆளைக் காணவில்லை… கடந்த இரண்டு கிழமைகளாகப் படுக்கைக்கே உணவை எடுத்து வந்துவிடுவான் உத்தியுக்தன். அதுவும் தன் கரங்களால் உணவைத் தயாரித்து, அவளிடம் நீட்டுவான். ஆனால் இன்னும் அவனைக் காணவில்லையே? யோசனையில் புருவங்கள் சுருங்க எழுந்தவள், கழிவறை சென்றுவிட்டு வந்தாள்.

ஆனால் இன்னும் அவன் வரவில்லை. அங்கே அவள் வந்த நாட்களிலிருந்து அதிகாலையில் அவன் முகத்தைப் பார்த்துப் பழகியவளுக்கு, அன்று அவன் முகத்தின் தரிசனம் கிடைக்காதது ஏதோ ஒரு வித குறையாகப் பட, படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். அலங்காரம் இன்னும் அப்படியேதான் இருந்தன.

அண்ணாவும் அண்ணியும் அங்கேதான் தங்கினார்களா? இல்லை கிளம்பி விட்டார்களா? உறவினர்கள் எல்லோரும் எப்போது சென்றார்கள்? அவர்களைக் கூட வழியனுப்பாமல் அப்படி என்ன சோம்பேறித்தனம் அவளுக்கு.

இதுவே அவர்களின் வீடென்றால் சமர்த்திக்கு எது நடந்தாலும் உடனே தெரியும். உத்தியுக்தனின் வீட்டில் அதற்கு வழியே இல்லை. எல்லாமே தொலை தூரத்தில் இருப்பதுபோல, தள்ளித் தள்ளித்தான்.

கீழே இறங்கி வந்தவள், அங்கிருந்த கைப்பேசியை எடுத்து, அண்ணன் வீட்டிற்கு எடுக்க, புஷ்பாதான் அவளுடைய அழைப்பை எடுத்தார்.

“என்னடா… எப்படி இருக்கிறாய்… நன்றாக இருக்கிறாயா? நேற்று சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கினாயாய?” என்று கனிவாகக் கேட்க, அண்ணியின் அன்பில் கரைந்துபோனாள் சமர்த்தி.

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன் அண்ணி… அன்ட் ஐ ஆம் சாரி… நேற்று உங்களை வழியனுப்ப என்னால் முடியவில்லை…” என்று மென்மையாகக் கூற,

“ப்ச்.. இதுக்கெல்லாமா மன்னிப்புக் கேட்பார்கள். தம்பி உத்தியுக்தன் வந்து நம் எல்லாரையும் சந்தோஷமாகவே வழியனுப்பி வைத்தார்…” என்ற அண்ணியோடு, சற்று நேரம் பேசிவிட்டுக் கைப்பேசியை வைத்தவளுக்குக் குழந்தை துடிக்கத் தொடங்கியது.

உடனே பசி என்பது தெரிய, உத்தியுக்தன் கொடுக்கும் உணவுக்காக மனது ஏங்கியது.

எங்கே போய்த் தொலைந்தான்? எரிச்சல் வரச் சமையலறைக்குள் நுழைந்தாள். அவசரத்திற்கு ஒரு முட்டையைப் பொரித்துப் பானோடு சாப்பிட்ட பின்தான் வயிற்றின் அசைவு ஓரளவு குறைந்தது.

‘தனக்குப் பசி என்றதும், என்னமாகச் சண்டித்தனம் செய்கிறது…’ மனதிற்குள் கடிந்தவள், உத்தியுக்தனைத் தேடி வீடு முழுவதும் சுற்றினாள். ஆளைக் காணவில்லை. எங்கே போனான்? வெளியே வந்தபோது, ரதியும், புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அவருடைய தனிமை ஏனோ இவளைச் சங்கடப் படுத்தியது. அவர் நல்ல தாயாக இருக்கவில்லை தான். அதற்காக அவனுடைய அன்னை என்று மறுத்துவிட முடியுமா என்ன?

இவளைக் கண்டதும், “ஹெள ஆர் யு…” என்றார் பட்டும் படாமலும்.

‘குட் அத்தை…’ என்றுவிட்டு அவர் கரத்திலிருந்த பெட்டியைப் பார்க்க, அதைப் புரிந்துகொண்டவராக,

“சாரி… ஐ ஹாவ் டு கோ….” என்றவரின் முகத்தில் மெல்லிய வலியைக் கண்டுகொண்டாள் சமர்த்தி. அது பெற்ற குழந்தைகளின் பாராமுகத்தால் வந்த வலி என்பதைப் புரிந்துகொண்டாலும், ஆதற்கு யார் என்ன செய்ய முடியும்?

விதைத்தால் மட்டும்போதுமா. பயிர்கள் நன்றாக வளர்கிறதா என்று அருகே இருந்து பார்க்க வேண்டாமா. இவருடைய அஜாக்கிரதையால்தானே அவ்வியக்தனுக்கு அந்த நிலை வந்தது. பணம் இருந்து என்ன பயன்? பெற்ற குழந்தைகளை விடப் பணம் பெரிதென்று செல்பவர்கள் பிற்காலத்தில் இப்படித்தான் தனிமையிலிருந்து வாடவேண்டும்.

மறுக்காது தலையசைக்க விடைபெற்றார் ரதி.

அவர் சென்ற பின் வீடே மயான அமைதியாகக் காட்சியளித்தது.

பொழுது போகாமல் அங்கும் இங்கும் நடந்தவள், எரிச்சல் வர, நடந்து சென்று அங்கிருந்த தொலைக்காட்சியைப் போட்டுவிட்டுச் சாய்வாக அமர்ந்து பழைய திரைப்படம் ஒன்றைப் பார்க்கத் தொடங்கினாள்.

சமர்த்திக்கு எப்போதும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இருந்ததில்லை. அப்படியே பார்த்தாலும் ஒரு சானலைப் போட்டுப் பார்க்க மாட்டாள். நிமிடத்திற்கு நிமிடம் சனலை மாற்றிக் கொண்டே இருப்பாள். இப்போதும் பொறுமையாகத் தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வமில்லாமல், ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டு வர, செய்திகள் ஒலிபரப்பும் சானலுக்கு வந்தாள்.

அங்கே ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று முக்கியச் செய்தி போய்க்கொண்டிருக்க, அப்படி என்ன பிரேக்கிங் நியூஸ் என்று பார்த்தாள்.

தற்போதைய ஒன்டாரியோ முதல்வர் வில்லியம் நேக்கரின் வாகனம் விபத்துக்குள்ளாகி மிகக் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தற்போதைய அவருடைய உடல் நிலை பற்றி, மருத்துவமனையில் உள்ள நம் நிருபர்…” என்று நேர்காணல் மூலம் மருத்துவமனையிலிருந்த நிருபருடன் விசாரித்துக் கொண்டிருக்க. அடுத்த சானலில், வில்லியம் நேக்கரின் மனைவியைப் பேட்டி கண்டுகொண்டிருந்தனர். அவரும் தன் வலியை அடக்கியவராகத் தன் நிலை பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

செய்தியறிந்த சமர்த்தி ஆடிப்போனாள்.

‘அடப் பாவமே இப்படியாகிவிட்டதே…’ என்று அவருக்கா வருந்தியவள் அடுத்த கணம்,

‘என் உத்தியை என்ன பாடு படுத்தினார். இவரால்தானே எல்லாம்… நல்லா படட்டும் செய்த வினை திரும்பி வரத்தானே வேண்டும்…” என்று முணுமுணுத்துவிட்டுச் செய்தியை அணைத்தபோது, இது உத்தியுக்தனுக்குத் தெரியுமா என்கிற கேள்வி எழுந்தது.

மீண்டும் அவனைத் தொலைபெசியில் அழைத்துப் பார்த்தாள். இணைப்புக் கிடைக்கவில்லை. எரிச்சல் வரக் கைப்பேசியைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு, எழுந்தவள் கடைக்குச் சென்று வரலாம் என்கிற முடிவோடு தயாராகி வெளியே வந்தபோது லீ வந்துவிட்டிருந்தாள்.

அவளிடம் கடைக்குச் சென்றுவருவதாகக் கூறி விட்டு வெளியே வந்தாள். அவளைக் கண்டதும், அவளுக்குரிய பாதுகாவலர் எழுந்து நின்றார். அவரைப் பார்த்துத் தலையசைத்தவள்,

“கடைக்குப் போகவேண்டும்…” என்றதும் மறு கணம் வண்டியை எடுத்துக்கொண்டு அவள் முன்னால் வந்து நின்றர். பின் கதவைத் திறந்து ஏறி அமர வாகனம் புறப்பட்டது.

அவள் எப்போதும் விரும்பிப் போகும் கடை சற்றுத் தூரம் என்பதால், அந்தக் கடையின் பெயரைக் கூற, உடனே வாகனம் வேகம் எடுத்தது. அடுத்த நாற்பத்தைந்தாவது நிமிடத்தில் அந்த அங்காடியை நெருங்க, அப்போதுதான் சமர்த்திக் கவனித்தாள், உத்தியுக்தனின் போஷே போன்று ஒரு வாகனம் அவர்களின் வாகனத்தைத் தாண்டிச் செல்வதை.

உடனே உத்தியுக்தன் மனதில் தோன்ற உதடுகள் புன்னகையில் விரிந்தன. எதேச்சையாக அந்த வாகனத்தின் இலக்கத்தைப் பார்த்தவள், நம்ப மாட்டாமல் மீண்டும் உற்றுப் பார்த்தாள். சந்தேகமேயில்லை. அது உத்தியுக்தனுடையதுதான்.

அவன் இங்கே என்ன செய்கிறான்? குழப்பத்துடன், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவரிடம்,

“அந்த வண்டியைப் பின்தொடருங்கள்…” என்று பரபரப்புடன் சொல்ல, மறுக்காது அந்தப் போஷேயைப் பின்தொடர்ந்தது வண்டி.

மீண்டும் இருபது நிமிட ஓட்டம். வாகனம் அங்கிருந்த ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பை நெருங்கியது. அது மிகுந்த செல்வந்தர்கள் மட்டும் வசிக்கக் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் பாதுகாப்பு மிக மிக அதிகம்.

அவனின் போஷே அங்கிருந்த பாதுகாப்புத் தடைக்கு முன்னால் நிற்க, அங்கிருந்த பூத்திலிருந்து பாதுகாவலர் கதவைத் திறக்க, வாகனத்தின் கண்ணாடி கீழே சென்று அதனூடாக, மானிறக் கையொன்று வெளியே நீண்டது. பார்க்கும்போதே தெரிந்தது அது உத்தியுக்தன்தான் என்று.

அடுத்து அந்த வாகனம் உள்ளே செல்லத் தடுப்பு விலகியது. தொடர்ந்து சமர்த்தியின் வாகனமும் உள்ளே நுழையத் தொடங்க, தடுப்பு அவர்களை நிறுத்தியது. அந்தக் காவலர், எங்கே போகவேண்டும் என்று கேட்க, ஜன்னலுக்கு வெளியே தலைநீட்டிய சமர்த்தி,

“நான் அவர்களோடு வந்தேன்… உத்தியுக்தன் என் கணவர்…” என்றதும் உடனே நட்பாகப் புன்னகைத்த காவலர் கதவைத் திறக்க, இவர்களின் வண்டியும் பின்னே சென்றது.

சற்றுத் தூரத்தில் உத்தியுக்தனின் வாகனம் நின்றிருக்க, வாகனத்தின் முன்னாலிருந்த வலப்பக்கக் கதவு திறந்து, அதிலிருந்து, தன் நீண்ட கால்களை வெளியே வைத்து இறங்கினாள் ஜூலியட்.

இதைக் கண்டதும் சமர்த்தியின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறத் தொடங்கியது.

ஜூலியட் இறங்கிய அடுத்த கணம் ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய உத்தியுக்தன் ஜூலியட்டை நெருங்கி, அவளுடைய இடைபற்றி அந்தக் குடியிருப்பை நோக்கி அழைத்துச் செல்லத் தொடங்கினான்.

அதைக் கண்டதும் சமர்த்தியின் இதயமே இரண்டாகப் பிளந்தது போலத் துடித்துப்போனாள். நம்ப முடியாமல் அவர்களின் முதுகையே வெறித்தவளுக்கு, தாங்கமுடியாத சீற்றமும் வந்தது.

அங்கே நல்லவன் போல வேடம் போட்டுவிட்டு இங்கே பழைய காதலியோடு கூத்தாடுகிறானா…? ஆத்திரமும் அவமானமும் பாடாய்ப் படுத்த, வேகமாக வண்டியை விட்டு வெளியேறியவள் அவர்களுக்குப் பின்னால் ஓடினாள். அவர்களுடைய வேகத்திற்கு இவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவள் உள்ளே செல்வதற்குள்ளும், அவர்கள் எலிவேட்டருக்குள் நுழைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

சமர்த்தியோடு வந்த பாதுகாவலரோ, என்ன ஏது என்று புரியாமல், தன் கடமையைச் செவ்வனவே செய்பவர் போல அவள் பின்னால் நடந்து சென்றார்.

சமர்த்தி, அண்ணாந்து மின்தூக்கி எங்கே சென்று நிற்கிறது என்று பார்த்தாள். அது ஆறாவது மாடியில் நிற்க, இன்னொரு மின்தூக்கி அவளை வரவேற்றது. பாய்ந்து ஏறியவள், ஆறாவது தளத்தை அழுத்த, இப்படித் மின்தூக்கியில் ஏறுவாள் என்று எதிர்பாராத காவலரும் பாய்ந்து மின்தூக்கியில் ஏறி ஆசுவாசப் படுத்திவிட்டு உள்ளே கோபம் கணன்றாலும், அதை வெளிக்காட்ட முடியாமல் புன்னகைத்து, தலையை ஆட்டிவிட்டு, அவள் அறியாமலே நிம்மதி மூச்சு விட, ஆறாவது தளத்தில் வாயைப் பிளந்தது மின்தூக்கி.

வெளியேறியவள், அவர்கள் எந்தப் பக்கம் போயிருப்பார்கள் என்று குழம்பவே தேவை இல்லாமல், சற்றுத் தள்ளியிருந்த கதவுக்கு முன்பாக ஜூலியட்டை அணைத்துக்கொண்டு நின்றிருந்தான் உத்தியுக்தன்.

போதாததற்கு அவளுடைய முதுகை வருடிக் கொடுத்தவாறு, அவள் காதுகளுக்குள் எதையோ சொல்லிக் கொண்டிருந்தவன், அவளுடைய கைப்பையிலிருந்து திறப்பை எடுத்துக் கதவைத் திறந்து அவளோடு உள்ளே செல்ல, வேகமாக அவர்களை நோக்கிச் செல்லவும், உத்தியுக்தன் கதவைச் சாத்தவும் நேரம் சரியாக இருந்தது.

கண்களில் கண்ணீர் மறைக்க அதைத் துடைக்கும் வழிதெரியாமல் அவர்களின் கதவுக்கு முன்னால் நன்று படபடவென்று தட்ட, திறந்தது உத்தியுக்தன்தான். இன்னும் அந்த வீணாய்ப் போன ஜூலியட் அவன் கரங்களில்தான் தொங்கிக் கொண்டிருந்தாள்.

உத்தியுக்தனும் சமர்த்தியை எதிர்பார்க்கவில்லை போலும். புருவங்கள் சுருங்க,

“சதி… வட் த ஹெல் ஆர் யு டூயிங் ஹியர்…” என்று கேட்டானேயன்றி இன்னும் ஜூலியட்டைக் கைவிடவில்லை.

ஆத்திரத்துடன் அவனையும் அவளையும் பார்த்தவள், “சீ…” என்றவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. கடவுளே எத்தனை பெரிய ஏமாற்று… எத்தனை பெரிய நம்பிக்கைத் துரோகம்… அவள் மீது கரிசனை காட்டியது, அன்பாக இருந்தது எல்லாமே பொய்தானா..? யாரை ஏய்ப்பதற்காக இந்த நாடகம். ஜூலியட்டின் குழந்தை வேறு தன்னதில்லை என்றானே… பாவி…’ சமர்த்தியால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. தாங்க முடியாத வலியோடு,

“ஐ ஹேட் யு மிஸ்டர் உத்தியுக்தன் ஐ ஜ்ஜ்ஜ்ஜ்ஜ் ஹேட் யு…” என்று சீற அப்போதுதான் அவள் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதே உத்தியுக்தனுக்குத் தெரிந்தது.

மெதுவாக ஜூலியட்டை விடுவித்தவன்,

“வன் செக்… ஜூலியட்… ஐ டீல் வித் திஸ்… அதுவரை நீ உன் அறையிலிரு…” என்று அவளை அனுப்பிவிட்டுத் திரும்பி சமர்த்தியைப் பார்த்தபோது அவனுடைய முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.

அதைக் கண்டதும் இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இத்தனை பெரிய தவற்றைச் செய்து விட்டு எப்படி எதுவுமே நடக்காததுபோல நடந்து கொள்கிறான்… இவனெல்லாம் மனிதன்தானா? ஆத்திரத்துடன் எண்ணும்போதே,

“சதி… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்ற போது அவனுடைய குரலிலிருந்த அழுத்தத்தைக் கண்டவனுக்குக் கண் மண் தெரியாத ஆத்திரம் பீரிட்டுக் கொண்டு வந்தது.

“வட் என்னைக் கட்டுப்படுத்த வேண்டுமா… ஜ்ஜ்ஜ்ஜ் ஜ்ஜ்ஜ்ஜ் ஜ்ஜ்ஜ்ஜ்..” என்று வாயில் வந்த அத்தனை ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளாலும் அவனைத் திட்டியவள்,

“டு யு நோ வட்… ஐ டன் வித் யு… இனிமேல் என் முகத்திலேயே விழிக்காதீர்கள்” என்றவள் வேகமாக நடந்து செல்ல முயல, பதட்டத்தோடு அவளை நோக்கி வந்தவன்,

“சதி… ஸ்டப்… என்ன நடந்தது என்று தெரியாமல் வார்த்தைகளை விடாதே… கொஞ்சம் பொறு நான் வருகிறேன்…” என்று அவன் முடிக்க முதல், ஆத்திரத்துடன் அவனை நோக்கித் திரும்பியவள்,

“ஹ.. அதைத்தான் நான் பார்த்தேனே.. இதற்கு மேலும் ஒரு விளக்கம் சொல்லப் போகிறீர்களா… அதைக் கேட்டு நம்பும் அளவுக்கு நான் முட்டாள் என்று நினைத்தீர்களா… உங்களுக்கு ஒன்று தெரியுமா? இன்று வரை, உங்களுக்கு எதிராகப் பொதுவெளியில் வைத்துத் திட்டினேன் என்று வருந்தியிருந்தேன் ஆனால் இனிமேல் வருந்த மாட்டேன். நீங்கள் அதற்குத் தகுதியானவர்தான்…” என்று சீற,

“சதி… நான் சொல்வதை…”

“கோ… கோ… டு ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ் ஹெல்… உங்களுக்கும் எனக்கும் இனி எந்த உறவும் இல்லை. இந்தக் குழந்தை உஙக்ளதும் இல்லை… அதோ… அறையில் கிடக்கிறாளே… அவளையும், அவள் குழந்தையையும் கட்டிப்பிடித்துக் கொஞ்சுங்கள்… இனி என் நிழலின் அருகே கூட வந்தீர்கள்… உங்களைக் கொன்றுவிட்டு சிறைக்குச் சென்றுவிடுவேன் ஜாக்கிரதை…” என்று விட்டு ஓட்டமும் நடையுமாக நடந்தவளை மறைத்தாற் போல நின்றான் அந்தக் காவலாளி.

அவன் கரத்திலிருந்த வாகனத் திறப்பை அவன் எதிர்பார்க்க முதலே பறித்து எடுத்தவள்,

“இனி உன் உதவி எனக்குத் தேவைப்படாது… போ… போய் அந்த ஜூலியட்டைக் கவனித்துக் கொள்…” என்றுவிட்டுத் திறந்த மின்தூக்கியில் ஏறித் தரைக்கு வர, அங்கே உத்தியுக்தனோ,

“கோ… கோ கச் ஹேர்…” என்று விடுட்டு மின்தூக்கியை நோக்கிப் பாய்ந்தான்.

அதற்கிடையில் தரையை வந்தடைந்தவளுக்கு எங்கிருந்து அத்தனை வேகம் வந்ததோ அது கடவுளுக்குத்தான் தெரியும். மின்னல் விரைவில் வாகனத்திற்குள் ஏறியவள், அதை உசுப்பிவிட்டவாறு, வெளியேற, உத்தியுக்தன் தன் போஷேயில் பாய்ந்து ஏறியிருந்தான்.

சமர்த்தியின் மனநிலையில் அந்த வண்டியோட்டம் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டவனாக அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்துத் தன் வண்டியை ஓட்டினான். நாற்பது கி.மீட்டர் வேகத்தில் போகவேண்டிய அவளுடைய வாகனம் நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்துடன் போவதைக் கண்டவனின் நெஞ்சமும் வயிறும் கலங்கியது.

இங்கே கண்ணீர் பார்வையை மறைக்க, அழுகையில் உடல் குலுங்க தன் வண்டியின் வேகம் இன்னது என்று உணராமலே வேகமாக ஓடியவளுக்கு மீண்டும் மீண்டும் உத்தியுக்தனின் துரோகம்தான் நெஞ்சை நிறைத்திருந்தது.

ஏதோ உயிரே தன்னை விட்டு விலகுவதுபோலத் துடித்துப்போனாள் சமர்த்தி.

நேற்றுக்கூட அவளுக்காய் பார்த்துப் பார்த்து நடந்துகொண்டானே… அதெல்லாமா பொய்? இது எல்லாம் வயிற்றில் வளரும் அவனுடைய குழந்தைக்காகத்தானா… இந்தக் குழந்தை இல்லை என்றால், நிச்சயமாக அவளைத் திரும்பியும் பார்த்திருக்க மாட்டான்தானே. நெஞ்சம் நடுங்கியவளுக்குப் பாதையை மறைத்துக் கண்ணீர் பொங்கியது. ஆனாலும் வேகத்தை இம்மியும் குறைத்தாளில்லை.

இருந்த ஆவேசத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அவளுடைய புத்திக்குப் புரியவேயில்லை.

அப்போதிருந்த மன நிலையில், தன்னை மட்டுமில்லாமல் குழந்தையையும் மிகப் பெரும் ஆபத்தில் தள்ள முயல்கிறோம், என்கிற அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் மேலும் வேகத்தைக் கூட்ட, கண்ணீரோ கண்களை மறைக்க, சிந்தையோ புத்திகெட்டு மயங்க, செயலோ அவள் அறிவை மிஞ்சி செயல்பட, வேகமாகப் பயணித்துக்கொண்டு இருந்தவள் அப்போதுதான் கவனித்தாள், சிவப்பு விளக்குக்கு முன்னால் ஒரு வாகம் நின்றிருப்பதை.

கண்ணிமைக்கும் நொடியில் புத்தி செயற்பட, அந்த வாகனத்திடமிருந்து தப்பவேண்டி ஸ்டியரிங் வீலை உடைத்துத் திருப்பிய கணம், பின்னாலிருந்து வந்த ஒரு வாகனம் அதை எதிர்பார்க்காது இவள் வண்டியின் பின் பக்கத்தைப் பலமாக ஒரு மோது மோத, ஏற்கெனவே வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தெருக்களைப் பிரிக்கும் இரும்புத் தடுப்பில் மோதி அதைப் பிளந்து எதிர்த்திசைக்கான தெருவில் சுழன்று உருண்டு இழுபட்டுச் சென்று மறுபக்க இரும்புத் தடையைப் பலமாக மோதி நின்றது.

உலகமே சுற்றுவதை உணரும் தறுவாயில், வாகனம் மோதுப்பட்ட நிலையில், அவளைச் சுற்றிக் காற்றுப் பைகள் பாதுகாப்பாகப் பற்றிக்கொண்டாலும் மோதுப்பட்ட வேகத்தில் வயிற்றில் பெரும் வலியோடு, ஏதோ திரவம் கால்களுக்கூடாக ஊர்ந்து செல்வதை உணர்ந்தும் உணராத நிலையிலும், “மை பேபி…” என்கிற முனங்கலோடு விழிகளை மூட, அவளுடைய உலகம் அந்தக் கணம் இருண்டு போனது.

சமர்த்தியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்றுப் பின்தங்கி வந்துகொண்டிருந்த உத்தியுக்தன், தன் மனைவிக்கு நடந்து கொண்டிருக்கும் கோர விபத்தைக் கண்டதும், அவனுடைய உடல் முழுவதும் தன் செயற்பாட்டை நிறுத்திக்கொண்டது.

முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்குப் புத்தி வேலை செய்ய மறுத்தது. உடலிலிருந்த இரத்தம் முழுவதுமாக வடிந்து செல்ல, அந்த நேரத்தில் தடையை அழுத்துகிறோம் என்று நினைத்து அக்சிலேட்டரை முடிந்தவரை பலமாக அழுத்த அதை உணராமலே மயங்கிப்போனவனின் வாகனம், கண்ணிமைக்கும் நொடியில் பாய்ந்து ஏதனோடோ மோதிப் பக்கென்று தீப்பிடிக்கத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
21
+1
2
+1
1
+1
1
+1
13
+1
5

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!