Fri. Nov 22nd, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-3

3

உத்தியுக்தனால் இன்னும் இது நிஜம் என்று நம்பவே முடியவில்லை. ஏழு மாதங்கள், ஏழு மாதங்களின் பின்னர் அவளை அதுவும் இந்தக் கோலத்தில் காண்கிறான்.

நம்ப மாட்டாதவனாகக் கரங்களில் மயங்கிக் கிடந்தவளை வெறித்தவனுக்கு உள்ளம் அவன் கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கின. புத்தி செயலிழந்து மருகியது. அவனுக்கும் கால்கள் நடுங்கின. தொண்டை வறண்டது. பெரும் பயப்பந்து தொண்டையில் வந்து விக்கியது.

எதற்காக மயங்கினாள்? ஏன் மயங்கினாள்? அவனைப் பார்த்ததால் மயங்கினாளா? இல்லை சூல் கொண்ட களைப்பினால் மயங்கினாளா? தெரியவில்லை, ஆனால் அவளுடைய அந்தச் சுயநினைவற்ற கோலம் அவனுடைய நெஞ்சை வலியுறப் பிசையவே உயிர் கசங்கிப் போனான். கூடவே தொலைந்து போன அந்தச் சதைப் பற்றற்ற தேகத்தைக் கண்டும் ஆடிப்போனான் அந்த ஆண்மகன்.

அவனையும் மீறி விழிகளில் நீர்ப்படலம் மிதக்க, ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவன், பக்குவமாக அவளை வாகனத்தின் இருக்கையில் அமரவைத்து இருக்கை வாரையும் போட்டுவிட்டு விழிகள் மூடிக் கிடந்த அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

ஒரு பக்கம் கடும் ஆத்திரம் வந்தாலும் மறு பக்கம் அவளை இழுத்து அணைக்கச் சொன்னது மனசு.

அவளுடைய தலையை வருட எழுந்த கரங்களை அடக்கியவன் கசங்கிப் போன மனதோடு, ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்தான். அவனையும் மீறி ஏற்பட்ட பதட்டத்தால் உடலில் சூடு ஏறியிருந்தது.

அந்தக் குளிரையும் மீறி வியர்வை நெற்றியில் பூத்திருந்தது. ஸ்டியரிங் வீலில் கை வைத்தபோதுதான் கவனித்தான், அவனுடைய கரங்கள் நடுங்குவதை. நம்ப மாட்டாமல் கரங்களைத் தூக்கிப் பார்த்தான். ஆம் நடுங்கின.

விரல்களை மடக்கி முஷ்டியாக்கியவன் திரும்பி மயங்கிக்கிடந்த சமர்த்தியை ஏறிட்டான். பதட்டம் பயத்தையும் மீறி வெளிப்பட்டது. அதையும் மீறிக் கோபம் நெஞ்சம் எரிமலையாய் வெடித்துச் சிதறத் தயாராகியது.

கடந்த ஏழு மாதங்களாக இனம்புரியாத அழுத்தத்தை இதயத்தில் சுமந்துகொண்டிருப்பவன் தான். ஆனால் இந்தக் கணம் எழுந்த அழுத்தத்தின் அளவைத் தாங்க முடியாதவாறு இதயம் பயங்கரமாகத் துடித்தது. அதன் ஓசை இவன் காதுகளுக்கே கேட்க அதற்கு மேல் கொஞ்சம் கூட அசைய முடியாதவனாக ஸ்டியரிங் வீலில் தலைகவிழ்ந்து சற்று நேரம் அப்படியே இருந்தான்.

இப்போது இருக்கும் பதட்டத்தில் நிச்சயமாக வண்டியை ஓட்ட முடியாது. எங்காவது போய் முட்டிக்கொண்டால்? அவன் தனியே என்றால் சந்தோஷமாகவே சென்று முட்டிக்கொள்வான். ஆனால் அவனோடு சேர்ந்து இப்போது அவனுடைய உயிர் தேவதையும் அல்லவா இருக்கிறாள். அவளுடைய நகத்திற்குக் கூட ஊறு விளைவிக்காமல் பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமே.

விழிகளை மூடிக் கிடந்தவனுக்கு அத்தனை சக்தியும் வடிந்து சேன்றது போலத் தோன்றியது.

கடந்த ஏழு மாதங்களாக அவன் பட்ட வலி அவனுக்கு மட்டும்தானே தெரியும்.

உத்தியுக்தன் அவன் தம்பி அவ்வியுக்தன் போல அத்தனை சுலபத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடியவனில்லை.

அதே வேளை மற்றவர்களைப் போல சின்னச் சின்ன சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பவன்தான்.

அவன் படிக்கும் காலத்திலேயே நிறைய விருதுகள் பெற்றிருக்கிறான். அந்த நேரத்தில் அதை வாழ்த்திப் பாராட்டிக் குதுகலிக்கத் தந்தைக்கும் நேரம் கிடைத்ததில்லை, தாய்க்கும் கிடைத்ததில்லை.

அவனை அணைத்துத் தன் மகிழ்ச்சியைக் கூறும் ஒரே ஒரு ஜீவன் என்றால், அது ஜான்சி மட்டுமே.

ஆனால் என்னதான் ஜான்சி அன்பைக் கொட்டி வளர்த்தாலும், அவனுக்கு உரிமையில்லாதவர் தானே. அதனால் எப்போதும் ஓரடி தள்ளித்தான் நின்றுகொள்வான்.

ஆனால் வாழ்வில் முதன் முறையாகப் பெருமையோடு தான் விருது வாங்கும் அழகைக் காட்ட அழைத்துச் சென்றது சமர்த்தியை மட்டும்தான்.

அவனுக்கே அவனுக்கென்று கிடைத்த உறவு அல்லவா அவள். உன்னால் இழந்த வெற்றி மீளக் கிடைத்துவிட்டது என்பதைக் காட்டும் வேகம் ஒரு பக்கம் இருந்தாலும், தனக்குரியவளிடம் தன் திறமையைக் காட்டும் அற்ப சந்தோஷமும் அதில் அடங்கியிருந்தது.

ஆனால் அத்தனையும் தலைகீழாக மாறிப் போகும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அதுவும் ஜூலியட்டின் வருகையால்.

ஜூலியட்டுக்கும் இவனுக்குமான உறவு முறிவடைந்த பின் தொழில் ரீதியாகச் சந்திப்பது அவ்வப்போது நடப்பதுதான். அதனால் ஜூலியட்டின் வருகை ஒன்றும் அவனைப் பாதிக்கவில்லை. ஆனால் அவளுடைய வருகை சமர்த்தியை பாதிக்கும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

பழிவெறியோடு இருந்திருந்த உத்தியுக்தனாக இருந்திருந்தால், சமர்த்தியை ஒரு பொருட்டாகவே மதித்திருக்க மாட்டான். ஆனால் இந்த உத்தியுக்தன் அவனுக்கே புரியாத புதிரானவன். சாமர்தியின் மனதை முன்னிறுத்தி யோசிக்கும் விந்தையானவன். மெல்ல மெல்ல அவளை உள்ளத்தில் வைத்துப் பூஜிக்க ஆரம்பித்த புதுமையானவன்.

புதிதாகப் பிறந்த அந்த உத்தியுக்தனால், தன்னவள் மனம் கசங்கும்படி நடந்துகொள்ள முடிந்திருக்கவில்லை. அதனால்தான் ஜூலியட்டைத் தனியாக அழைத்துச் சென்றதே.

அழைத்துச் சென்ற பின்னும் அவனால் முழுதாக ஜூலியட்டின் பேச்சில் ஒன்ற முடியவில்லை. அறையில் தனியாக விட்டுவிட்டு வந்தவளிடம்தான் எண்ணமும் புத்தியும் சதா நிலைத்திருந்தது.

ஜுலியட் கூட, அவனுடைய கவனம் வேறு எங்கோ இருப்பதைப் புரிந்துகொண்டு அதை வாய் விட்டும் சொல்ல, அப்படியில்லை என்று கூறி எப்படியோ சமாளித்தாலும், சிந்தனை முழுவதும் அறையில் முடங்கிக்கிடந்தவளிடமே.

அப்போது கூட, யாரோ ஒருவர் அவனிடம் மதுவை நீட்ட, வேண்டாம் என்று மறுத்த உத்தியுக்தனை வினோதமாகப் பார்த்தாள் ஜூலியட்.

“ஹே… உனக்குப் பிடித்த பிரான்ட்தான்… ஏன் தயங்குகிறாய்?” ஜூலியட் அவனை ஊக்கப்படுத்திய பிறகும் அவன் தொட்டானில்லை. காரணம் சமர்த்தி.

அன்று அவன் மது அருந்திவிட்டு அவளைத் தொட விளைந்த போது, அவளுடைய ஒவ்வாமையைக் கண்டு கொண்டவன், அதன் பின் மதுவைத் தொடுவதை நிறுத்திவிட்டிருந்தான்.

இதுவரை யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாதவன், வெறும் ஒரு சில மாதங்களே உறவாக வந்தவளுக்காக அவனுக்கும் தெரியாமல் மாறினான்.

இன்னொருத்தர் அவன் உண்பதற்காக, உணவுத் தட்டை ஏந்திவந்து அவனிடம் நீட்ட, அவனால் ஒரு பருக்கை கூட அதிலிருந்து சாப்பிட முடியவில்லை. உணவைக் கண்டதுமே, சமர்த்தி சாப்பிட்டாளா இல்லையா என்கிற கேள்விதான் எழுந்தது.

முடிந்த வரைக்கும் முள்ளின்மீது அமர்ந்திருப்பது போலத் திணறிக்கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், புறப்பட்டு சமர்த்தியைத் தேடி அறைக்கு வந்துவிட்டான்.

ஆனால் வந்தவனின் நிலைபற்றிக் கொஞ்சம் கூடத் தெரிந்த கொள்ளாமல், தன் பாட்டுக்கு காச் மூச் என்று சமர்த்தி கத்த, ஏற்கெனவே தன் இயலாமையின் மீது எரிச்சலில் இருந்தவன், அவளோடு சேர்ந்து பொங்கி விட்டான்.

இதுவரை யாரும் அவனைக் கேள்வி கேட்டது கிடையாது. கேள்வி கேட்க அனுமதித்ததும் கிடையாது. அப்படியிருக்கையில், அவனுடைய வாழ்க்கையையே அதள பாதாளத்திற்குள் தள்ளிவிட்டவள் கேள்வி கேட்பதா என்கிற கோபமும், போயும் போயும் இவளுக்காக எதிலும் மனத்தை செலுத்த முடியாமல், இப்படி இடையில் வந்துவிட்டோமே என்கிற எரிச்சலும் அவனுடைய பொறுமையை முற்றாக அழித்து விட்டிருந்தது.

அந்த ஆத்திரத்தில் சற்று அதிகமாகத்தான் வார்த்தைகளை விட்டான். அதற்காக இந்தக் கணம் வரைக்கும்வருந்தித் தவிப்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

மறுநாள் விருது வாங்குவதைப் பார்க்க அவள் வருவாள் என்று மிக ஆவலாகத்தான் எதிர்பார்த்தான். ஆனால் அதற்கு எதிர்மாறாக அவள் முறுக்கிக் கொள்ள, மீண்டும் பழைய வேதாளம் முருங்கைமரம் ஏறிக்கொண்டது.

ஆனாலும் தெலைக்காட்சியிலாவது பார்க்கட்டும் என்கிற அற்ப ஆசையில் அதைப் போட்டுவிட்டுப் போனவனுக்கு அதுவே அவளுடைய கோபத்திற்குத் தூபம் போடும் என்று சற்றும் யோசிக்கவில்லை.

அங்கே சென்ற பின்னும் மனம் பரிதவித்துக் கொண்டுதான் இருந்தது.

அவன் விருதைக் கை நீட்டி வாங்கியபோது கூட, மனம் சமர்த்தியைத்தான் நினைத்தது.

இந்தக் கணத்தை அவள் பார்ப்பாளா. இரசிப்பாளா? வாழ்த்துவாளா? என்றுதான் மனம் அடித்துக்கொண்டது.

அவன் விருதை வாங்கிவிட்டு வெளியே வந்த போது, ஜூலியட் பக்கத்தில் நிற்பதோ, அவள் முத்தமிட்டதோ எதுவுமே அவனுடைய கருத்தில் கவரவில்லை.

அவள் வந்திருக்கலாம், வந்து அவன் பெறும் விருதைக் கண்டு பெருமைபட்டிருக்கலாம் என்கிற சிறுபிள்ளைத் தனமாக ஆசைதான் அவனை ஆக்கிரமித்திருந்தது.

விருந்து முடிந்த பின்னும் நடந்த விருந்து உபசாரத்தில் முகம் முறித்துவிட்டு வர முடியாத நிலையில் கலந்து கொண்டான்.

நடன மேடையில் பெயருக்காக ஒரு சிலரோடு ஆடினான். அவன் ஆடிய பெண்களுள் ஜூலியட்டும் ஒருத்தி என்பதுதான் அவனுக்கு எதிராக போனது. அப்போதும் அவன் அதை ஒரு பிரச்னையாக எடுக்கவில்லை. இந்தக் கணம் வரைக்கும் அதைத் தவறாகக் கருதவில்லை. அவனுக்குத்தான் மடியில் கனமில்லையே. தவிர, ஜூலியட்டோடு ஆடுவது ஒன்றும் அவனுக்கு புதிதல்லவே.

கடைசியில் அவனுக்கு சமர்த்தி தேவைப்பட, விருந்துபசாரத்தின் நடுவிலேயே புறப்பட்டுவிட்டான் உத்தியுக்தன். ஆனால், ஜூலியட்டும் அப்போததான் கிளம்பிக்கொண்டிருந்தாள்.

ஏதோ முக்கியப் படப்பிடிப்பு இருப்பதால் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தவளை, அழைத்துச் சென்று அவள் குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு விடுதிக்கு வந்தபோது, அவனுடைய அந்த நல்ல எண்ணமே புரளிப்பேசும் செய்தியாக மாறி, மறுநாள் சஞ்சிகையில் வரும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், மறு நாள் வாழ்க்கையை மொத்தமாகச் சுனாமிப் பேரலை கொண்டுபோகப் போவது கூடத் தெரியாமல், அவள் மீது வைத்த காதலை உணர்ந்து கொண்டதும் அன்றுதானே.

அதுதான் காதல் என்று அவன் புரிந்துகொண்ட போது, அவன் அனுபவித்த உணர்வை எப்படி வர்ணிப்பான். பெரும் மின்சாரம் ஒன்று இதயத்தைத் தட்டி சுவரம் மீட்டிச் சென்று அதுபுத்தியை இன்பச் சிலிர்ப்புக்கு உள்ளாக்கியது.

அவனைத் தாக்கிய அந்தக் காதல் மின்சாரம், வலிக்கவில்லை. கலக்கத்தை கொடுக்கவில்லை. அவஸ்தையை ஏற்படுத்தவில்லை. மாறாக உள்ளே குளிருடன் கூடிய ஒரு கிளுகிளுப்பு. எதுவோ பட்டென்று மலர்ந்த உணர்வு. அதிக குளிரில் இருக்கும்போது, சூரிய கதிர்கள் தேகத்தில் படர்ந்த தித்திப்பு.

இதோ… இதுதான். இதைத்தான் இதனை நாட்களாக அவன் தேடித் தேடிக் களைத்துப்போன உணர்வு. ஜூலியட்டிடம் கூடத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது தவித்த உணர்வு.

பாலைவனத்தில் தொலைந்தவன், நடந்து நடந்து தன் வீட்டைக் கண்டுபிடித்து சொந்த கட்டிலில் விழுந்து படுத்ததுபோல, காதலை உணர்ந்த போது அத்தனை இலேசாக உணர்ந்தான் உத்தியுக்தன். நீண்டநாள் தேடி தேடி கிடைக்காதோ என்று பரிதவித்த போது, கண்முன்னால் அதுவும் காலடியில் விழுந்திருப்பது போன்ற நிம்மதியில் மகிழ்ச்சியில் மயங்கிப்போனான்.

தனக்குள் தோன்றிய அந்த மாற்றத்தை, உண்ணத உணர்வை உடனே அவளுக்குச் சொல்லி விடவேண்டும் என்கிற அவசரம் அவனுக்கு.

ஏற்கெனவே தன் மீது காதல் கொண்டிருப்பவள் தானே, தன் காதலைச் சொன்னதும் மகிழ்வாக ஏற்றுக்கொள்வாள் என்றுதான் அவனும் நினைத்தான்.

பாவம் தனக்கு சூழ்நிலையே சதி செய்து இருக்கிறது என்பதை அவன் அப்போது எண்ணி இருக்கவில்லை. மறுநாள் தன் வாழ்க்கையே தொலையப் போகிறது என்பது கூடத் தெரியாமல் திட்டமெல்லாம் போட்டான். அவளுக்குப் பிடித்தது உணவு. தன் உணர்வுகளை வெளிப்படுத்த உணவகமே சிறந்த இடம் என்று எண்ணினான். அப்போதுதான் அவளுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று நினைத்தான்.

தன் காதலைச் சொன்னதும், அவள் வியப்பாள், குதூகலிப்பாள், மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பாள் என்று எத்தனை விதமான கற்பனைகள் அவனுக்குள்.

சமர்த்தியின் வருகைக்காக, உள்ளே எழுந்த பல கற்பனையின் உணற்சித் தீண்டலில் இரத்த ஓட்டம் அதிகரித்துப் படபடக்க, அந்த இனிய நேரத்திற்காக மிகப் பெரும் ஆவலுடன் காத்திருந்தவனுக்கு அந்தக் கணம் கானல் நீராகும் என்று சத்தியமாக நினைத்திருக்கவில்லை.

சத்தியமாக அத்தகைய எதிர்வினையை கொஞ்சம் கூட அவன் எதிர்பார்க்கவில்லை.

சமர்த்தியின் தடாலடியால், பெரிதும் அடிபட்டுப் போனவன் அவன்தான்.

ஏமாற்றம், வலி வேதனை அவமானம் இதெல்லாம் அவனுக்குப் புதிததல்லதான். ஏன் என்றால் அதைக் கொடுத்தது மனதுக்கு நெருக்கமற்றவர்கள். ஆனால் இந்த முறை கொடுத்தது.. அவனுடைய சமர்த்தி ஆயிற்றே. அவனால் அவள் கொடுத்த ஏமாற்றத்தைக் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.

மொத்தமாக நொறுங்கிப்போனவன், எதிர்பாராத அந்த அடியில் எழமுடியாது போனான் என்பது தான் நிஜம்.

அதன் பின், அவளுக்கும் அவனுக்குமான உறவு முற்றாகச் சிதைந்துவிட்டது என்றுதான் நினைத்தான். உடைந்த கண்ணாடி ஒரு போதும் ஒட்டாது என்பது போல, அவர்களின் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிட்டது என்றுதான் முடிவு செய்து இருந்தான். அதனால்தான் அவளை, அவளுடைய அண்ணன் வீட்டில் விட்டுவிட்டு வந்தான்.

அவளை தயாளன் வீட்டில் விட்டு வர இன்னொரு காரணமும் உண்டு.

இவனுடைய நாக்கு கூர் வாளைப் போல. தயவு தாட்சண்யம் இல்லாமல், சொற்களால் அறுத்து எறிந்து விடும். தீயினால் சுட்ட வடு உள்ளாறும், நாவினால் சுட்டவடு ஆறாது என்பதற்கு இணங்க, அவள் தன்னோடு இருந்தால், வார்த்தைகளாலேயே அவளைத் தீக்குளிக்க வைத்துவிடுவோமோ என்று அஞ்சி அவளை விட்டு ஒதுங்கிக் கொண்டான்.

தவிர, எப்போது அவன் சொல்வதை மதிக்காமல், யாரோ ஒருத்தன் எழுதிய மூன்றாம் தரப்பத்திரிகையை நம்பினாளோ, அப்போதே அவனுடைய உறுதி ஆட்டம் கண்டுவிட்டது. இறுகிப் போனான் உத்தியுக்தன்.

இதற்கிடையில் அவன் தலையில் ஆயிரம் சிக்கல்கள் மின்னாமல் முழங்காமல் வந்து அமர்ந்து கொண்டது. திரும்பவும் முதலில் இருந்து புள்ளி வரையவேண்டிய கட்டாயம் அவனுக்கு.

இதையெல்லாம் சமாளித்து நிமிர்ந்தபோது, சமர்த்தி டொரண்டோவை விட்டு நாலாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் சென்றுவிட்டாள் என்கிற செய்திதான் அவன் காதில் வந்து விழுந்தது. மொத்தமாய் வெறுத்துப்போனான் உத்தியுக்தன்.

ஒரு வார்த்தை கூடவா அவனுக்கு அறிவித்து இருக்கக் கூடாது?

இதுவரை இந்தளவுக்கு யாருக்காகவும் துடித்து இல்லை. வருந்தியதில்லை, வேதனைப்பட்டதில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைத்ததில்லை. ஆனால் ஒட்டு மொத்தமாய் இவளால் அனுபவித்தான் உத்தியுக்தன்.

மாயமாக மறைந்து போனதை எண்ணி ஆத்திரம் கொண்ட அதே வேளை அவளை எண்ணிப் பரிதவிக்கவும் செய்தான்.

போகும் இடத்தில் நலமாக இருக்கிறாளா? பணம் போதியளவு இருக்கிறதா? தனியாக இவள் சென்றது தெரிந்தால், ஊடகவியலாளர்கள் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பார்களோ…? என்று தனக்குள் வருந்தித் தவித்தான்.

யாருக்கும் தெரியாமல் அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவள் பாதுகாப்பாக இருக்கிறாளா என்று அறிய முயன்றான்.

அவள் இருக்கும் இடம் மிகுந்த பாதுகாப்பு நிறைந்தது என்றும், ஊடகவியலாளர்களின் பார்வை அவள் மீது விழவில்லை என்பதை அறிந்த பின்பும் தான் உத்தியுக்தன் அழுத்தம் குறைந்து சாதாரண நிலைக்கு வந்தான்.

அவளுக்கு இனி சிக்கல் எதுவும் இல்லை என்பதை அறிந்த பின், இனி எக்காரணம் கொண்டும் அவளைத் தேடித் செல்வதில்லை என்கிற முடிவோடு, இங்கே நிம்மதியாக இருக்க முயன்றான். முடிந்ததா அவனால்?

இதுவரை தனியாக வாழ்ந்து பழக்கப்படாதவள். அங்கே எப்படித் தவிக்கிறாளோ… ஒரு வேளை சமையல் கூடச் செய்யத் தெரியாதவள். உடல் உபாதை வந்தால் எப்படிச் சமாளிப்பாள்? அதுவும் ஒருமுறை மாதாந்திரப் பிரச்சனையின் போது படுக்கையில் சுருண்டு படுத்திருந்தது நினைவுக்கு வந்து இவனை இம்சித்தது.

அன்று வேலையில் கவனம் செலுத்த முடியாமல், ஏதோ போக்கு காட்டி வீட்டில் தங்கியிருந்து அவளைக் கண்காணித்தது நினைவுக்கு வந்தது. அப்படியான சந்தர்ப்பத்தில் என்ன செய்வாள் என்கிற கேள்வி அவனைக் கூடைந்தது. கூடவே அவள் மீது கோபமும் வந்தது.

அப்படி அவ்வளவு தூரம் போகவேண்டும் என்று என்ன அவசரம். அவள் அண்ணியோடு இருந்தால் குறைந்தா போவாள். குறைந்தது அவனாவது நிம்மதியாக இருப்பானே.

தொலைவில் அனுப்பிவிட்டு மகனின் உடல் நலனை எண்ணித் தவிக்கும் தாய் போல, உள்ளுக்குள்ளேயே அவளை நினைத்து மருகித் தவித்தான் உத்தியுக்தன்.

இதில் இரவு வேளைதான் அவனைப் பாடாகப் படுத்தியது.

கடந்த ஏழு மாதங்களாக அவன் தூக்க மாத்திரை இன்றித் தூங்கியதே இல்லை. அப்போது கூடக் கனவில் அவள் வந்துதான் அவனை அரவணைத்தாள். அதுவும் அவளோடு சுகித்த படுக்கை வேறு இவனைப் பெரிதும் இம்சித்தது. அந்தக் கொழுக் மொழுக் தேகத்திற்காக அவனுடைய ஆண் தேகம் ஏங்கித் தவித்தது.

அவள் அணைப்பிற்காக, அவள் உடல் கொடுக்கும் சூட்டிற்காக, அவளின் சிறுபிள்ளைத் தனமாக நடத்தைக்காக, யோசிக்காது பேசும் பேச்சுக்காக, அர்த்தமின்றி உளறும் உளறலுக்காகப் பெரிதும் ஏங்கித் தவித்தான்.

இந்த நிலையில் உத்தியுக்தன் கிட்டத்தட்டப் பைத்தியக்காரன் போலவே நடக்கத் தொடங்கி விட்டிருந்தான்.

அவளுக்குப் பிடித்த கார உணவைக் கண்களில் கண்ணீர் வர வர உண்டு பார்த்தான். நீச்சல் குளத்தினருகே நின்று அவன் கவனத்தைக் கவரவேண்டி, தண்ணீருக்குள் மூழ்கி உயிரே போனதுபோல நடந்துகொண்டவளை எண்ணித் தன்னை மறந்து சிரித்தான். கூடவே வேதனையும் பட்டான். தோட்டத்து இருக்கையில் அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்தான். அவள் உறங்கும் படுக்கையில் விழுந்து கண்களை மூடி உறங்க முயன்றான். ஆனால் ஒரு செயல் கூட அவளருகே இருக்கும்போது ஏற்படும் இன்பத்தை எள் அளவும் கொடுக்கவில்லை.

நீச்சல் குளத்தில் பலமணி நேரங்கள் நீந்தியும், உடலை உருக்கும் குளிர் நீரில் உடல் சூடு தணிந்து நடுங்கும்வரை குளித்தும், அவள் நினைவு கொஞ்சம் கூட அவனை விட்டு நீங்கவில்லை.

உறங்க முடியாமல், சாப்பிடப் பிடிக்காமல், வேலையில் கவனம் செலுத்த முடியாமல், வேலை ஆட்களின் சிறு தவற்றையும் தாங்க முடியாமல் அப்பப்பா கொஞ்சமா சிதைந்தான்? மொத்தமாகவே நெருப்பிலல்லவா எரிந்தான்.

இத்தனை வேதனைகளையும் அவன் மறக்க வேண்டும் என்றால், அவள் அருகே வேண்டும். அதற்கும் அவன் தயாராக இல்லை. அவளால் சிதைக்கப் பட்ட நம்பிக்கையை அவன் கட்டி எழுப்பும் வரை, நேர்கொண்டு அவளை எதிர் நோக்குவதில்லை என்று சபதமே செய்திருந்தான்.

எப்படியோ ஏழு மாதங்களைக் கடந்துவிட்ட நேரத்தில்தான் ஜூலியட் இவனை அழைத்தாள். ஏதாவது வியாபார விடயமாக இருக்கும் என்றுதான் நினைத்தான். ஜூலியட்டைத் தன் வாழ்விலிருந்து மொத்தமாக நீக்கியபின், வியாபாரம் சார்ந்த விடயங்கள் தவிர்த்து, அவளிடம் வேறு எதுவும் பேசியதில்லை. அதை உணர்ந்து ஜூலியட்டும் பாதை மாறி நடந்ததுமில்லை பேசியதுமில்லை.

இவன் கைப்பேசியை எடுத்ததும்,

“சமர்த்தி அல்பேர்ட்டாவில்தான் இருக்கிறாள் உத்…” என்ற ஜூலியட் பரபரப்பாகக் கூற, இவனோ,

“தெரியும் ஜூலியட்.. என்றவனுக்குத் திக்கென்று ஆனது. இவளுக்குத் தெரிந்தால் இன்னும் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ…” எதுவோ நெஞ்சைப் பிசைய,

“அவள் அங்கே இருக்கிறாள் என்று உன்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?” என்று மெல்லிய அச்சம் இளையோடக் கேட்டான்.

“டோன்ட் பானிக் உத்… என்னைத் தவிர யாருக்கும் தெரியாது. என் மூலம் யாருக்கும் தெரியப் போவதுமில்லை. ஐ ப்ராமிஸ் யு…” என்றதும்தான் பெரும் நிம்மதியாக ஆசுவாச மூச்செடுத்தான்.

“தாங் காட்?” என்று உடல் தளர,

“அவள் பற்றித் தெரிந்துமா அவளை அழைத்து வராமல் இருக்கிறாய்?” என்றபோது ஜூலியட்டின் குரலில் சற்றுக் கோபம் தொணித்திருந்தது.

“அவளை எதற்கு அழைத்து வரவேண்டும்? அவள் அங்கே நன்றாகத்தானே இருக்கிறாள்” என்றவனுக்கு எதுவோ தொண்டையில் அடைத்தது. அதை விழுங்கியவனாக,

“அவள். அவள் நன்றாகத்தானே இருக்கிறாள்..” என்று சற்றுத் திணறலாகக் கேட்டபோதே இதயம் தாறுமாறாகத் துடித்தது.

“யெஸ் ஷி இஸ். ஷி இஸ் கோர்ஜியஸ் உத்…” என்று முகம் மலரக் கூறியவள், பின்

“ஆனால் எப்படி உத்… உன்னால் இந்த நிலைமையிலும் அவளைத் தள்ளிவைக்க முடிகிறது?” என்றாள் நம்ப முடியாத கோபத்தோடு.

இவனோ பல்லைக் கடித்தவாறு மௌனம் காத்தான். அவள் செய்த வேலைக்கு, அவளை மன்னிப்பதா? பேசப்பிடிக்காமல் அமைதி காக்க, உடனே அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்டவளாக,

“எனக்குத் தெரியும், உனக்கு உன்னையும், உன்னைச் சார்ந்தவர்களைப் பற்றியும் பிறர் கூறுவது பிடிக்காது என்று. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை… உத் உனக்கு ஒருத்தரைப் பிடிக்கவில்லை என்றால், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களைத் தேடிப் போகமாட்டாய் என்றும் எனக்குத் தெரியும்… ஆனால் இந்த நிலையில் கூட அவளை நீ தள்ளி வைப்பது, மிகப் பெரும் தவறு… அவள் உன் குழந்தையைத் தானே சுமக்கிறாள்… கொஞ்சம் கூடவா உன் மனது இரங்கவில்லை…” என்று ஜூலியட் குரலைச் சற்று உயர்த்த, இவனோ மின்சாரத்தால் தாக்கப்பட்டவன் போல அதிர்ந்தவனாகப் பேசும் சக்தியற்றுச் சில கணங்கள் கிடந்தான். பின்,

“வட்…! வட் டிட் யு சே… ரிப்பீட் எகெய்ன்” என்றான். இல்லை இல்லை கத்தினான். அவனுக்கு ஏனோ காதுகள் இரண்டும் அடைத்தன.

“அவள் உன் குழந்தையைத்தானே சுமக்கிறாள், கொஞ்சம் கூடவா உன் மனது இரங்கவில்லை என்று கேட்டேன் உத்…” என்றாள் ஜூலியட் மிகத் தெளிவாய்.

அதிர்ந்துபோனான் உத்தியுக்தன். அந்த அதிர்ச்சி அவன் உடலிலும் தெரிந்ததோ, கால்கள் வலுவிழந்து போனவை போல வெடவெடத்தன. முகம் வெளிறியது. அடிவயிற்றிலிருந்து ஒரு பயப்பந்தொன்றை யாரோ பலமாக ஓங்கி உதைந்தது போல, மேலே எழும்பி நெஞ்சையும், புத்தியையும் பலமாகத் தாக்கியது. உடல் சூடேறி எரிந்தது. நிற்பதே பெரும் சோதனை போலத் தோன்ற, அங்கிருந்த சுவரில் சடார் என்று சாய்ந்தவனுக்கு இன்னும் ஜூலியட் சொன்னதைக் கிரகிக்கவே முடியவில்லை. விழிகளிலோ கண்ணீர் கோடிட்டன.

ஓ காட் இதை அவன் எதிர்பார்க்கவில்லையே. அவனுடைய சதி குழந்தையை சுமக்கிறாளா மீண்டும் நம்ப மாட்டாதவனாக,

“ஆர்… ஆர் யு ஷ்யூர்?” என்று திணற,

“யெஸ் ஐ ஆம் டாம் ஷுர் ஷி இஸ் யுவர் வைஃப் சமர்த்தி…” என்றாள் ஜூலியட் மெல்லிய எரிச்சலுடன்.

“இல்லை… நான் கேட்பது… நான் கேட்பது… அவள்… அவள்… குழந்தை…” என்றவனுக்கு வார்த்தைகள் முடிக்க முடியாமல் காற்றாகத்தான் வந்தது.

ஜூலியட்டோ,

“யெஸ் ஷீ இஸ் எக்ஸ்பெக்டிங் எ பேபி” என்று அழுத்தமாகக் கூற, உத்தியுக்தனின் கரம் தாமாகக் கைப்பேசியை அணைத்தது. இன்னும் அவனால் ஜூலியட் கூறியதை நம்பவே முடியவில்லை.

அவனுக்கென்று ஒரு குழந்தையா? அவன் தந்தையாகப் போகிறானா? இது எப்படிச் சாத்தியம். சமர்த்தியைத் தொடும்போதெல்லாம் குழந்தை வேண்டாம் என்கிற உறுதியோடுதானே இருந்தான். எங்கே தவறு நடந்தது? அப்போதுதான் மின்னலாய் ஒன்று நினைவுக்கு வந்தது.

அன்று நீச்சல் குளத்தில் அவளை அணைத்த போது, உலகையே மறந்திருந்தானே… எந்தப் பாதுகாப்பும் நினைவுக்கு வரவில்லையே. அந்த மறதி, அவனை அடுத்த படிநிலைக்கு அழைத்துச் சென்றுவிட்டதோ…

இப்போது அதுவரை இருந்த பதட்டமும் பரிதவிப்பும் மாயமாகிப் போக, அங்கே தாங்க முடியாத ஆத்திரம் வந்தது. எல்லாவற்றிலும் அவசரம், எதையும் யோசிப்பதில்லை, அந்த நேரத்திற்கான தீர்வை மட்டும் எண்ணுவாளே தவிரப் பின்னால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி ஒரு போதும் சிந்திப்பதில்லை.

இத்தனை பெரிய செய்தியை அவனிடம் மறைக்க எத்தனை தைரியம் இருக்க வேண்டும்… இவளுடைய தற்போதைய நிலை, அவளுடைய அண்ணன் அண்ணிக்குத் தெரியுமா? தெரிந்துமா என்னிடம் சொல்லவில்லை…? இல்லை இல்லை நிச்சயமாக அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் இவனுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு வேளை எனக்குத் தெரிந்துவிடும் என்பதற்காக அவர்களுக்குச் சொல்லாது மறைத்தாளோ? இது தெரிந்தால் புஷ்பா எப்படிக் கலங்கிப்போவார். அவனுடைய அன்னையைப் போலவா புஷ்பா அவளை வளர்த்தார். பெற்ற குழந்தைக்கும் ஒரு படி மேலாக அல்லவா வளர்த்தார். ஆனால் இவள்…” நினைக்க நினைக்கச் சீற்றம் பொங்கிக்கொண்டு வந்ததேயன்றி இம்மியளவு கூட மட்டுப்படவில்லை.

குழந்தையை உருவாக்கிய மூல உறவுக்கே செய்தி சொல்லப்படவில்லை என்றால், அதை விட அவமானம் வலி என்னவாக இருந்துவிடப் போகிறது? எத்தகைய பாரதூரமான ஒரு காரியத்தைச் செய்து விட்டாள். எத்தனை கல்நெஞ்சக்காரி.

அவனால் அவளுடைய செயலை இம்மி கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், செய்யவேண்டிய அவசர வேலைகளை அப்படியே போட்டுவிட்டு மறுநாள் காலையே விமானம் ஏறிவிட்டான்.

அவளைத் தேடி அவளுடைய குடித்தனத்தை நோக்கிச் சென்றபோதுதான் சமர்த்தித் தொலைவில் நடந்து செல்வதைக் கண்டான். உடல் பாதியாக மெலிந்திருந்தாலும், மறக்கக் கூடிய உடலா அவளுடையது?

அந்தக் கணமே அவள் முகத்தைப் பார்த்துவிடும் வேகத்தில் வாகனத்தைப் பாயவிட்டவன், அதை நிறுத்தி அவளை நெருங்குவதற்குள்ளாக, இவனைக் கண்டதும், மயங்கிச் சரிந்து விட்டாள்.

அவள் மயங்கி விழுந்த தோற்றத்தை நினைத்த போது இப்போம் நெஞ்சம் ஆட்டம் கண்டது.

அவனை எத்தகைய நிலையில் தள்ளிவிட்டாள். எதை மன்னித்தாலும் இதை மன்னிக்கவே முடியாதே. சீற்றமாக எண்ணியவனுக்கு இன்னும் மண்ணில் பிறக்காத குழந்தையின் மீது கவனம் சென்றது.

தந்தையிருந்தும் இல்லாமல் வளரும் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்று அறியாதவனா அவன்? அவன் குழந்தை என்ன பாவம் செய்தது தந்தை பெயர் தெரியாது வளர்வதற்கு? நினைக்க நினைக்கத் தாளவில்லை அவனுக்கு.

உடலோடு நெஞ்சமும் கொதிக்க, ஓரளவு மனம் நிதானம் அடைந்ததும் தன் வண்டியை உசுப்பிச் சீறவிட்டான் உத்தியுக்தன்.

What’s your Reaction?
+1
35
+1
17
+1
6
+1
3
+1
8
+1
2

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-3”
  1. அருமையான பதிவு 😍😍😍😍😍.
    அடேங்கப்பா இப்பதான் புரியுதா? தெரியுதா டா மடச்சாம்பிரானி 😬😬😬😬😬😬😬😬.
    இவுனுக்கு புள்ளை இருக்குன்னு தெரிஞ்சதும் ஆலாப் பறக்கறியே.
    அப்படி தான் சத்தி இன்னொருத்தருக்கும் புள்ளை .
    முக்கியமா தயா புஷ்பாக்கு.
    இம்பூட்டு நாளா கண்டுக்காம இருந்துட்டு. இப்ப வந்துட்டான்.🫤🫤🫤🫤🫤🫤
    போடா டேய் உன்னையப் பாத்துட்டு மயக்கம் போட்டு வுழுந்துட்டா சத்தி 😐😐😐😐

    1. எலே என்னல சவுன்டு அதிகமா இருக்கு. உங்க ஆளு மட்டும் பெரிய அப்பாடக்கரோ. பெத்த குழந்தையா வளத்தவங்களையே வேணாம்ன ஓடிவந்து கோழை மாதிரி ஒளிஞ்சுகிட்டிருக்கா. அது கண்ணில தெரியலையோ. உத்தமன் உத்திய பத்தி தப்பா பேசினா.. அருவா வரும்யா அருவா வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!