Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-23

23

 

உறக்கத்தில் தன் மனதில் எழுந்த காதலை வெளிப்படுத்தியது கூடத் தெரியாமல், எதற்காக இவன் இப்படி மிளகாயைக் கடித்தவன் போல இப்படிக் காய்ந்துவிட்டுச் செல்கிறான்? அப்படி என்ன நடந்ததென்று இந்தக் கோபம்? என்று குழம்பியவளுக்கு அப்போதுதான் தான் படுக்கையில் இருப்பதே உறுத்தியது.

அறைக்கு எப்போது வந்தாள்? ஒரு வேளை உத்தியுக்தன்தான் தூக்கி வந்தானா? அவளைத் தூக்கி வந்ததற்காகத்தான் இப்படி ஆத்திரப்பட்டானோ? அடப்பாவி… இதற்கெல்லாம் ஆத்திரப்படுவார்கள்? குழம்பினாள் சமர்த்தி.

அதன் பின், நாட்கள் வழமைபோல் அல்லாது நகர மறுத்தே நகர்ந்தன.

அதற்குக் காரணமில்லாமல் போகவில்லை. உத்தியுக்தன் இரவுகளில் அவளைத் தேடி வருவதைச் சுத்தமாக நிறுத்தியிருந்தான். என்ன கோபம்? எதற்கு இந்த ஒதுக்கம்? சத்தியமாக அவளுக்குத் தெரியவில்லை. இதைப் பற்றி விசாரிக்க முயல அதற்கு இடம் கொடுக்கவும் மறுத்துவிட்டான்.

சமர்த்திதான் பெரிதும் திணறித் தவித்துப் போனாள். அதுவும் அவனுடைய அந்த ஒற்றை முத்தத்திற்காகப் பெரிதும் தவமிருக்கத் தொடங்கிய அவளுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது.

எப்படியோ ஒரு கிழமையைக் கடத்தியவளுக்கு அவனுடைய அருகாமை இல்லாமல் தூக்கம் சுத்தமாகத் தொலைந்து போனது. அவளால் அவனுடைய பராமுகத்தைத் தாங்கவே முடிய வில்லை. அவனிடம் சென்று விசாரிக்கலாம் என்றால், மனதைப் போலவே கதவுகளையும் இறுகத் தாழ் போட்டு வைத்திருந்தான்.

அன்று மாலை நீச்சல் குளத்தின் கரையோரமாக அமர்ந்து கால்களைத் தண்ணீருக்குள் நனைத்தவாறு, அருள்தாஸ் செய்து கொடுத்த சிற்றுண்டியை ஒரு கை பார்த்தவாறு, அண்ணியோடு செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, திடீர் என்று இவளுடைய இதயம் படபடக்கத் தொடங்கியது.

நெஞ்சின் வேகம் அதிகரிக்கும்போதே தெரிந்து போனது அது உத்தியுக்தன்தான் என்று.

கடந்த ஒரு கிழமையாக அவனுடைய பராமுகம் நினைவுக்கு வர, அவனைப் பார்க்கவேண்டும் என்று எழுந்த ஆவலைச் சிரமப்பட்டு அடக்கியவளாக, அண்ணியிடம் விடைபெற்றுக் கைப்பேசியை ஓரமாக வைத்தவள், இரண்டு கரங்களையும் தரையில் ஊன்றியவாறு தண்ணீருக்குள் மிதப்பது போலத் தெரிந்த தன் பாதங்களைப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேக நடையோடு வந்த காலடிச் சத்தம் இப்போது நின்றது.

உள்ளம் குறுகுறுக்க அண்ணாந்து பார்த்தாள். அவனோ பளிங்கெனத் தண்ணீரில் ஆடிக்கொண்டு இருந்த அந்த வாழைத்தண்டு கால்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

எப்போதும் அவன் ரசித்துப் பார்க்கும் அங்கங்களில் அந்தப் பாதங்களுக்குத்தான் முதல் இடம். சதைப்பற்றுக் கொண்ட, பட்டையொத்த வெண் மென் பாதங்கள். இப்போது அவை நீந்தித் திரியும் மீன்களெனத் தண்ணீருக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் அழகைக் கண்டவனுக்குத் தன் விழிகளை விலக்கவே முடியவில்லை.

தன் கணவன், எப்போதும் போலப் பாதங்களில் தன்னிலை கெட்டிருப்பதைக் கண்ட சமர்த்திக்கு, அதுவரையிருந்த வாட்டம் தொலைந்து போக, கோபம் எழுந்தது.

ஒரு கிழமையாகக் கண்டும் காணாதவருமாக இருந்தவருக்கு இப்போது என்ன பார்வை வேண்டிக் கிடக்கிறது? ஆத்திரத்தோடு முழங்கால் வரை மடித்திருந்த பாவாடையைக் கீழே இறக்கிவிட்டவள், அவனை அலட்சியம் செய்து, இன்னும் வேகமாகத் தண்ணீரில் கால்களை அசைக்க, அவள் அசைத்த வேகத்தில் சிதறிய நீர்த் துளிகள் அவள் முகத்திலும் உடலிலும் தெறித்தது.

அந்தத் துளிகள் பட்டதும் ஏற்பட்ட குளிர்ச்சியில் ஒரு கணம் உடல் சிலிர்த்து நின்றாள் சமர்த்தி. அந்தக் காட்சியைக் கண்ட உத்தியுக்தன்தான் நிலை தடுமாறி நின்றாள்.

அதுவும் சரிந்து அமர்ந்த போது மேலேறிய மேலாடை சதைப்பற்றான அவள் வயிற்றைச் சற்று அழகாகவே அவன் கண்களுக்கு விருந்தாக்க, இவனுடைய இரத்த அழுத்தம்தான் சற்று அதிகரித்துப் போனது.

கடந்த ஒரு கிழமையாக அவளை விட்டு விலகியிருந்தவனுக்கு அது பதில் எழுத முடியாத, மிகப்பெரும் பரீட்சைதான். அவள் மட்டுமா, அவனும் தான் கடந்த ஒரு கிழமையாக தூக்கத்தைத் தொலைத்துப் படுக்கையில் மொட்டு மொட்டென்று விழித்திருந்தான்.

அவளைக் கண்டதும் கிளர்ந்தெழும் காமம் எப்போதும் போல அப்போதும் ஆட்டிப்படைக்கத் உமிழ் நீர் கூட்டி விழுங்கித் தன்னை நிலைப்படுத்த முயன்றவனுக்குத் தன் மீது கோபம்தான் வந்தது.

அவனுடைய மன அடக்கம் எங்கே போய்த் தொலைந்தது. ஏன் இப்படிக் காணாததைக் கண்டவன் போலத் தவிக்கிறான்? கடுப்போடு எண்ணும்போதே, சமர்த்தித் அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.

எத்தனை நேரம்தான் அவனைப் பார்க்காதது போலவே நடிப்பது. எழுந்தவளுக்குச் சட்டென்று அது தோன்றியது.

‘தள்ளியா நிற்கிறாய்? பொறு என்னைத் தூக்க வைக்கிறேன்…’ என்று மனதிற்குள் சபதம் செய்தவளாய், அப்படியே சுழன்று நீச்சல் குளத்தில் விழுந்தாள்.

விழுந்த வேகத்தில், தண்ணீருக்குள் மூழ்கி எழுந்த நேரம், மூக்கிற்குள் சென்ற தண்ணீர் சுவாசத்தைத் தடுக்க, இவளோ சுவாசம் வேண்டி ஆழமாகத் தண்ணீரை உள் இழுத்த வேளை, அந்த நீர் மூளையைப் பலமாகத் தாக்கச் சுள்ளென்ற வலியில் துடித்துப்போனாள்.

அடக்கடவுளே… அவசரப்பட்டு நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டாளோ. நீச்சல் குளம் எத்தனை ஆழ்ப்பம் என்று கூடத் தெரியவில்லையே… போதாததற்கு இவளுக்கு நீச்சல் வேறு தெரியாது… அவனைத் தூக்க வைக்கிறேன் என்று கடைசியில் பாடையில் போதற்கு அவளே வழி வகுத்துவிட்டாள் போலவே… இன்னுமா அவன் தண்ணீருக்குள் பாய்ந்து வந்து இவளைக் காப்பாற்றவில்லை…. எங்கே போய்த் தொலைந்தான்?” என்று இருமியவாறு துடித்துப் பதைத்து மேலே வந்தவள், அவன் நின்ற இடம் நோக்கித் திரும்ப, அவனோ இவளைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் பிடித்துவைத்த சிலை போல மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அசையாமல் அதே இடத்தில் நின்றிருந்தான்.

ஒருத்தி நீச்சல் குளத்தில் விழுந்திருக்கிறாளே… வந்து காப்பாற்றத் தோன்றுகிறதா பார்… ஐயோ இவளைச் சாக விட்டுவிடுவான் போல இருக்கிறதே… டேய் கிராதகா, பழிவாங்க இதுவா நேரம்… வந்து காப்பாற்றித் தெலையடா… இப்போது போய்ப் படத்துக்குப் போஸ் கொடுப்பதுபோல நிற்கிறாயே…” என்று திணறியவளுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது.

அட அவள் மூழ்கவேயில்லை. பாதங்கள் இரண்டும் நீச்சல் குளத்தின் தரையில் அழுத்தமாகப் பதிந்தவாறுதானே நிற்கிறது. தண்ணீர் வேறு அவளுடைய கழுத்து வரைதான் இருக்கிறது. ஓ… நீச்சல் குளம் அத்தனை ஆழ்ப்பம் இல்லையா… ஆனால் படங்களில் எல்லாம் அப்படிக் காட்டுவது இல்லையே…” என்று குழம்பியவளுக்கு பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்த உத்தியுக்தன் மீது ஆத்திரம் திரும்பியது.

அவள் தண்ணீருக்குள் விழுந்ததும், படங்களில் வரும் நாயகர்கள் போலக் காப்பாற்றவேண்டும் என்று தோன்றுகிறதா பார்… இவன் பாய்ந்து வருவான் என்று நம்பித் தண்ணீரில் குதித்து, கடைசியில் தண்ணீரை நுரையீரலுக்கு அனுப்பியதுதான் மிச்சம்…

எரிச்சலுடன் அவன் இருந்த திசை நோக்கித் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு நடக்கத் தொடங்கியவள், மேலே ஏறும் வழி தெரியாது சுண்டிப்போன முகத்துடன் அவனை நோக்கித் தன் கரத்தை நீட்ட, அவனோ அவள் கைபற்றி மேலே இழுத்தானில்லை. மாறாக,

“விழத் தெரிந்த உனக்கு ஏறத் தெரியாதா என்ன?” என்று கிண்டலாகக் கேட்க, மெல்லிய தடுமாற்றத்துடன் அவனைப் பார்த்தாள் சமர்த்தி. அவள் வேண்டும் என்றுதான் விழுந்தாள் என்று அவனுக்குத் தெரியுமா என்ன? இப்படி என்று தெரிந்திருந்தால் எதற்கு விழுகிறாள்… எல்லாம் அவள் தலையெழுத்து… வீணாக உடலை நனைத்ததுதான் மிச்சம்.

அதற்கு மேல் அவனிடம் உதவி கேட்கப் பிடிக்காது நீச்சல் குளத்தின் அணையில் கரங்களைப் பதித்து, ஒரு எக்கு எக்கி, ஒற்றைக் காலை மேலே போட்டு வெளியே வந்தவள், எழ முயல, பாழாய்ப் போன நீண்ட பாவாடை அவளுடைய காலைத் தடுக்கி விட, இப்போது மெய்யாகவே வழுக்கிப் பின்புறமாய்ச் சரியத் தொடங்கியவள் பிடிமானம் தேடிக் கரத்தை அலைய விட, அந்தக் கணம் அவனுடைய கரம் அவளுடைய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டது.

திகைப்பும், ஆர்வமுமாக அவனைப் பார்க்க, அடுத்து அவளைத் தன்னை நோக்கிப் பலமாக இழுத்தான் உத்தியுக்தன்.

அவன் இழுத்த வேகத்தில் அவனுடைய திண்ணிய மார்பில் மோதி நின்றாள் சமர்த்தி.

நீண்ட நாளைக்குப் பிறகு அவனுடைய இதய ஓசையைக் கேட்ட சமர்த்தியின் எரிச்சல் ஏனோ அந்தக் கணமே மாயமாகிப்போன உணர்வு. அந்தக் கணம் அனைத்தையும் மறந்தவளாய் ஆழ மூச்செடுத்து அவன் வாசனையை நுரையீரலுக்குள் நிரப்பிக் கொண்டவாறு அண்ணாந்து அவனைப் பார்த்தாள்.

இவனோ ஈரம் கூந்தலில் இருந்து துளித் துளியாய் ஈரம் செட்டப் சொட்ட நனைந்திருந்த அந்தப் பாவையை விலக்கும் திராணியற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

ஈரத்தால் படபடபத்த விழிகள் அவனைக் குறுகுறு என்று பார்க்க, முடியில் ஒட்டியிருந்த அந்தப் பொல்லாத நீர்த்துளிகளோ, அவளுடைய உச்சிமுடியில் தங்கியிருந்த காலம் போதுமென்று நினைத்தனவாய், வடிந்து அவளுடைய நாசியூடாகப் பயணித்து அவள் உதடுகளுக்குள் நுழைந்து நிரந்தரமாய் குடியிருக்கச் செல்ல, இவனுடைய இதயம் தாறுமாறாகத் துடித்தது.

அந்தக் கணமே உதடுகளுக்குள் அடைக்கலமாக நீர்துளிகளைத் தன் உதடுகளால் வெளியே எடுத்துவிட வேண்டும் என்கிற வேகம் கொண்டவனாய், அனைத்தும் கெட்டவனாய் அவளுடைய உதடுகள் நோக்கிக் குனிந்தான் உத்தியுக்தன்.

அந்தோ பரிதாபம் எப்போதும் அவளுடைய உதடுகளுக்கு காவலிருக்கும் மெல்லிய நாசிக்கு அத்துமீறி நுழைய முயன்ற அந்த கூறிய நாசியின் மீது என்ன கோபமோ, அவனுடைய கூரான வேல் போன்ற நாசியுடன் பலமாக மூட்டித் தன் எதிர்ப்பைத் தெரிவிக்க, இவனோ நாசிகளின் உரசலில் கிறங்கிப் போனவனாய் உதடுகளைத் தொடும் வேகத்தில் மேலும் நெருங்கினான்.

இரு உதடுகளும் நெருங்கும் தூரம் மயிரிழை அளவுதான். இதோ மெல்லியதாக குவித்தாலும் பலமாக முட்டிக்கொள்ளும். ஆனாலும் நாசிகளின் உரசல் அதைவிடத் தீ மூட்ட, ஈரத்தில் சற்றுக் குளிர்ந்திருந்த சமர்த்திக்கு அவனுடைய உடலின் வெம்மையும் தேவைப்பட, அவன் சட்டயைப் பற்றியவாறு அவனைப் பலமாக முட்டி நிற்க அந்த மென் தேகம் மேலும் அவனுடைய கட்டுப்பாட்டைத் தகர்த்தெறியப் போதுமானதாக இருந்தது.

இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பதுதானே முறை. எங்கே நெருங்க முயன்ற உதடுகள், பிரிந்துவிடுமோ என்று அஞ்சியவள் போல, அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டவள், அவன் உதடுகளை நோக்கி நெருங்க, குளிர்ந்த அவளுடைய உதடுகளுக்கு, அவனுடைய வெம்மை கொண்ட உதடுகள் மிக இதமாகத்தான் இருந்தன. அதற்க்கு மேலும் அவனால், அந்த உதடுகளைக் காக்கவைக்க முடியவில்லை.

தன் முயற்சி அனைத்தையும் கைவிட்டவனாகத் தன்னை நிலையிழக்கச் செத்த உதடுகளை வன்மையாகத் தண்டிக்கும் பொருட்டுப் பலமாகப் பற்றிக்கொள்ள, ஐயோ பாவம், அந்தத் தண்டைனை அவளுக்கு வரமாகிப் போயிற்று.

அவன் உதடுகள் பட்டதுதான் தாமதம், அவள் உடலில் தீப்பற்றிக் கொண்டது. எங்கே உதடுகளைப் பிரித்து எடுத்துச் சென்றுவிடுவானோ என்று அஞ்சியவள் போல, மேலும் அவனைத் தன்னை நோக்கி இழுக்க, அவள் உயரத்துக்கு அதிகநேரம் குனிந்திருக்க முடியாதவனாக அவளைத் தன் கரங்களில் ஏந்தியவன், கடந்த ஒரு கிழமையாக இழந்த இன்பத்தை, அந்தக் கணமே பெற்றுவிடும் துடிப்போடு, இடம்பொருள் ஏவல் எதைப்பற்றியும் அக்கறை கொள்ளாது உதடுகளை விடாமல், அவர்களின் பொது அறைக்கு ஏந்தி வந்தான் உத்தியுக்தன்.

அடுத்தது நடந்தவை அனைத்தும் தித்திக்கும் சொர்க்கத்தின் அரசாட்சியானது. இறுதியில் அவள் நெற்றியில் தன் நெற்றியை மோதி நின்ற உத்தியுக்தனுக்கு நீண்ட நேரம் எடுத்தது நிஜம் புரிய.

இவளோ தன் விழிகளை மூடியவாறு, சற்று முன் அனுபவித்த இன்பத்தைச் சுவைபட நினைத்தவாறு, அது முகத்தில் பொங்கித் தெரிய,

“உதிதன்.. ஐ மிஸ் யு..” என்றாள் மென்மையாக.

அதுவரை எங்கோ சங்கமித்திருந்தவனுக்கு, அந்தக் குரலில் உடல் ஒரு கணம் குளிர்ந்து பின் சூடாகிப் போனது.

அடுத்த கணம், அவளை விட்டு விலகி எழுந்தவனுக்குத் தன்னை ஒரு கட்டுக்குக் கொண்டு வர மிகச் சிரமப்படவேண்டித்தான் இருந்தது.

அவனுடைய மன உறுதிக்கு என்னவாயிற்று. இவன் இதுபோன்று எப்போதும் இருந்ததில்லையே. ஒரே ஒரு இதழ் முத்தம்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டானே. ஆத்திரத்தோடு பற்களைக் கடித்துத் தன்னைச் சமாளித்தவனாக, அவள் முகம் பார்க்காது,

“நாளை மறுநாள் ஒட்டாவாவிற்குக் கிளம்ப வேண்டும் தயாராக இரு…” என்று கூறிவிட்டு அவளுடைய பதிலையும் எதிர்பார்க்காது தன் அறை நோக்கிச் செல்ல, இவளுடைய முகம் பளிச்சிட்டது.

முதன் முறையாக இவளை நீண்ட தூரம் அழைத்துச் செல்கிறான். நினைக்கும்போது நெஞ்சம் குதூகலித்தது. வேகமாக எழுந்து சப்பாணி கட்டி அமர்ந்தவள்,

“ஐ.. எத்தனை நாட்களுக்கு நிற்கப் போகிறோம்? என்ன என்ன உடை எடுத்து வைக்கட்டும்? என் மருமக்களையும் அழைத்துச் செல்லலாமா… நந்துவும் வசந்துவும் ஒட்டாவா பார்க்கவேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களையாவது அழைத்துச் செல்லலாமா?” என்று ஆர்வமாகக் கேட்க, ஏனோ உத்தியுக்தனின் முகம் ஒரு கணம் கனிந்து பின் இறுகியது.

“இல்லை… அவர்களை இந்த முறை அழைத்துச் செல்ல முடியாது… அங்கே குறைந்தது மூன்று நாட்கள்தான் தங்கவேண்டியிருக்கும்… அதற்கேற்றால் போல ஆடைகள் எடுத்து வை, போதும்…” என்று விட்டுத் திரும்ப,

“எதற்குத் அங்கே போகிறோம்?” என்றாள் அடுத்து. நின்று திரும்பியவன்,

“அங்கே வந்ததும் தெரிந்துபோகும்…” என்று விட்டு உள்ளே சென்றவனை இடையில் கரங்களைப் பதித்து முறைத்தாள் சமர்த்தி.

‘எதற்காகப் போகிறோம் என்று இப்போது சொன்னால் இவனுடைய சொத்து குறைந்தா போகும்…” எரிச்சலுடன் எண்ணினாலும் சந்தோஷமாகவே உத்தியுக்தனுடன் பணிக்கத் தயாரானாள் சமர்த்தி.

உத்தியுக்தனுக்கு எப்போதும் அதிகத் தூரம் வண்டியோட்டம் பிடிக்கும் என்பதால், ஒட்டொவாவை நோக்கிப் போஷேயில் கிளம்பிவிட்டான். டொரன்டோவிற்கும், ஒட்டாவாவிற்குமான தூரம் கிட்டத்தட்ட ஐந்து மணி நேர ஓட்டம்.

என்ன சொன்னாலும் மனம் கவர்ந்தவனோடு தொலைதூரம் பயணிப்பது கூட, பரமசுகம்தானே. அதுவும் காற்று வீசும்போது சுழன்றாடும் அவனுடைய சுருள் குழல்கூட அவளுக்குக் கவிதையாய்த் தெரிய, காற்றோடு கலந்து வந்த அவனுடைய சுவாசக் காற்று அவளைக் கிறங்கவைத்துக்கொண்டிருக்க அந்த ஐந்து மணிநேரப் பயணம் கூடச் சொர்க்கமாகிப் போனது அவளுக்கு.

அதுவும் இடையில் நிறுத்தி உணவு வாங்கிக் கொடுப்பதிலிருந்து, அவள் ஏதாவது இயற்கைக் காட்சிகளைக் கண்டு மலரும் போது வாகனத்தின் ஓட்டத்தை மட்டுப்படுத்தி அவள் ரசிப்பதற்காக நேரம் ஒதுக்கிக் கொடுப்பது வரை, குறையில்லாத பயணம்தான். ஒரு கட்டத்தில் நீண்ட பயணத்தில் சமர்த்தியின் விழிகள் அவளையும் மீறி மெதுவாக மூடத் தொடங்க, அந்த ஒதுக்கத்திலும் தலை சரிந்தவளைத் தன் தோள்மீதும் தாங்கிக்கொண்டான் உத்தியுக்தன்.

அவளுடைய உறக்கம் கலையாது வாகனத்தைச் சீராக ஓட்டியவன், குறிப்பிட்ட விடுதியை வந்து சேர மாலையாகிவிட்டிருந்தது. இன்னும் உறக்கம் கலையாது கிடந்தவளின் பக்கமாகச் சரிந்து, அவளுடைய கன்னத்தைத் தட்டியவன்,

“சதி.. வேக்கப்..” என்ற மெல்லியதாக அழைக்க, மெதுவாக விழிகளைத் திறந்தாள் சமர்த்தி.

தான் அவனுடைய தோளில் சாய்ந்திருப்பது தெரிய, அவசரமாக அவனை விட்டு விலகி,

“சா…ரி…” என்றுவிட்டு, விழிகளைக் கசக்க, அவனோ கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து ஆடைகள் அடங்கிய பெட்டிகளை வெளியே எடுக்கச் சமர்த்தியும் கீழே இறங்கித் தன் கரங்களை மேலே தூக்கிச் சோம்பல் முறித்தாள்.அவள் கரத்தை மேலே தூக்கிய வேளையில் மேலாடை சற்று மேலேற, அவளுடைய பட்டு வயிறு மின்னலாய் வெட்டவெளியில் காட்சிப்படுத்த திரும்பிய உத்தியுக்தனின் விழிகளுக்கு அது விருந்தாகிப் போனது.

வேறு யாராவது பார்க்கிறார்களா என்று சுத்தவரப் பார்த்தவன், இல்லை என்றதும், சற்று சமாதானம் அடைந்தவனாக அவளுடைய பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு நடக்கத் தொடங்க, இவளும் தன் பெட்டியை இழுத்துக்கொண்டு அவன் பின்னே ஓடத் தொடங்கினாள்.

அடிக்கடி அங்கே வருவான் போலும். வரவேற்பு மிகப் பிரமாதமாக இருந்தது.

“அதே அறைதானே…” என்று உறுதிப்படுத்தி விட்டு அதற்குரிய திறப்பைக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு திரும்பியவனிடம், தன்னுடைய உடுப்புப் பெட்டியை இழுத்தவாறே,

“அடிக்கடி இங்கே வருவீர்களா என்ன?” என்று அந்தப் பிரமாண்டமான விடுதியைக் கண்டு ரசித்தவாறு.

தன் நடையின் வேகத்தைக் கூட்டியவன், அவளைத் திரும்பிப் பார்க்காமலே,

“வட் டு யு திங்க்…” என்றான் நறுக்குத் தொனித்தாற்போல்.

கொஞ்சமே கொஞ்சமாய் மூக்கு உடை பட்டாலும், அதை வெளிக்காட்டாமல் நாய்க்குட்டி போல அவனைப் பின் தொடர, திறந்திருந்த மின்தூக்கிக்குள் நுழைந்தான் உத்தியுக்தன்.

இவளும் பின்தொடர்ந்து உள்ளே நுழையக் கதவு பூட்டியது.

அந்த மின்தூக்கி முழுக்க முழுக்க கண்ணாடியால் செய்யப்பட்டிருந்ததால், வெளியுலகம் மின்தூக்கிக்குள் அப்பட்டமாகத் தெரிந்தது.

சற்றுத் தூரம் மேலேறக் கனடிய பாராளுமன்றம் கூடத் தெரிந்தது. அதைக் கண்டு ஆர்ப்பணித்தவளாக, கண்ணாடியில் மூக்கு உரச ஆவென்று பாராளுமன்றத்தையே பார்த்தாள்.

“உதி பார்தீர்களா பாராளுமன்றம்… முடிந்தால் அங்கு போகலாமா? பெரும் ஆர்வத்துடன் கேட்க, அவள் பக்கமாகத் திரும்பியவன் அவள் நின்றிருந்த விதத்தைக் கண்டு தன்னை மறந்து உதடுகள் பிளந்து சிரித்தான்.

விட்டால் கண்ணாடியை உடைத்துக்கொண்டே போய்விடுவாள் போலத் தோன்றியது. அந்தளவுக்கு கண்ணாடித் தடுப்போடு பசைபோட்டு ஒட்டியதுபோல நின்றிருந்தாள் சமர்த்தி. இவன் பதில் கூற முதலே, மின்தூக்கி ஆறாவது தளத்தை வந்தடைந்தது.

கதவு திறக்க, வெளியேறியவன் சற்றுத் தூரம் சென்று அவனுக்குரிய அறைக் கதவைத் திறக்க, உள்ளே நுழைந்த சமர்த்தி அந்த அறையைக் கண்டு திகைத்துதான் போனாள். இவனுக்கு சாதாரணமான இடமே பிடிக்காதா. எல்லாமே ஆடம்பரமாகத்தான் இருக்கவேண்டுமா? என்று எண்ணாமல் இருக்கவே முடியவில்லை.

சிறிய வீடொன்றை அந்த அறைக்குள் வைக்கலாம் போல. அங்கேயும் இரண்டரைகள்தான். கிழிஞ்சுது… இங்கேயுமா? என்று தன்னை மறந்து வாய்விட்ட அவனோ புரியாமல் இவளை ஏறிட்டான்.

அப்போதுதான் வாய்விட்டு உளறியது புரிய,

“ஹீ ஹீ இல்லை… இந்த அறை இத்தனை பெரிதாக இருக்கிறதே தனி ஒருத்தனுக்கு இத்தனை பெரிய அறை தேவையா என்று கேட்டேன்…” என்று கூறி சமாளிக்க, இவனோ, இவளை ஒரு மாதிரிப் பார்த்தான்.

“தனி ஒருத்தனுக்கா? யார் சொன்னார்கள் நான் தனியாக வந்து தங்கினேன் என்று?” என்று கேட்டவாறு, தன் பெட்டியைக் கட்டிலில் எறிய இவளுக்குப் புரிந்து போயிற்று. இவனுடன் அந்த ஜூலியட்டும் வந்திருக்கிறாள் என்று.

அது புரிந்ததும் அதுவரை இருந்த மகிழ்ச்சி வடிந்து போக, இவளுடைய முகம்தான் சுண்டிப் போயிற்று. இவனும் அந்த ஜூலியட்டும் ஒன்றாகத் தங்கிய அறைக்கா இவளையும் அழைத்து வந்திருக்கிறான்? ஆத்திரத்துடன் நினைக்கும்போதே அந்த அறையின் அழகு மொத்தமாய் வடிந்து போயிற்று.

அவனோ, அவளைப் பற்றிய அக்கறை கொள்ளாது, குளியலறைக்குள் நுழைய, இவள் எரிச்சலுடன் படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். ஏனோ கண்கள் கலங்கிப் போயிற்று. கலங்கிய கண்களை கோபத்துடன் துடைத்து விட்டவள்,

“சோ வட்… என்ன சொன்னாலும் அவள் தற்காலிகமானவள். இவள்தானே நிரந்தரமானவள். அப்படியிருக்கையில் எதற்காகக் கலங்கவேண்டும்? முடிவு செய்தவளாக, எழுந்தவள் அந்த அறையை ஒட்டியிருந்த சமையலறையை நோக்கி நடந்தாள்.

நீண்ட பயணத்தில் வறண்டிருந்த நாவிற்குத் தேநீர் தேவைப்பட்டது. கூடவே ஏதாவது கொறிக்க இருந்தால் நன்றாக இருக்கும். ஆவலுடன் சென்று குளிர்சாதனப் பெட்டியைத் திறக்க, அங்கே அவளுக்குப் பிடித்த இனிப்பு வகையறாக்கள் அடுக்கப்பட்டிருந்தன.

அவற்றைக் கண்டதுமே, நாவில் நீர் ஊறியது.

அதிலிருந்து ஒரு கேக்கை எடுத்தவள், ஒரு வாய் வைக்கப் போக, அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இந்த நேரத்தில் யார்? புருவங்கள் சுருங்க நின்றவள் அப்போதும் கரத்திலிருந்த கேக்கை ஒரு கடி கடித்துச் சுவைத்து உண்டவாறு கதவைத் திறந்தவள் மறுகணம் தீயை மிதித்தது போல, அதிர்ந்துபோய் நின்றாள்.

தொண்டைக்குள் இறங்கிய கேக் துண்டு முழுதாக இறங்காமல் இடையில் நிற்க, இவளுக்குப் பலமாக விக்கியது.

“ஊப்ஸ்” என்றவாறு தன் வாயைப் பொத்தியவள், மீண்டும் விக்கியவாறு, அதிர்ச்சியில் விழிகள் விரிய முன்னால் நின்றிருந்தவளைப் பேச்சற்றுப் பார்த்தாள் சமர்த்தி.

அவளால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. தன்னை மறந்து, வாயில் அதக்கிய கேக்கோடு,

“ஜூலி” என்று முணுமுணுக்க, அந்த ஜூலியோ, சமர்த்தியைக் கண்டு சற்றுத் தடுமாறியவளாக,

“ஹாய்… ஐ… ஐ ஆம் ஜூலி… ஜூலியட்” என்றவள் சற்றுத் திணறிவிட்டு, “நான் உள்ளே வரலாமா?” என்றாள் ஆங்கிலத்தில்.

இவளுக்கோ ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது. முதலில் உள்ளே விடுவதா மறுப்பதா என்று தடுமாறியவள், ஏனோ தயங்கி நின்றவளிடம் தன் கோபத்தைக் காட்ட முடியாமல், மறுக்காது இடம் விட்டு ஒதுங்கி நிற்க, உள்ளே வந்த ஜூலி அந்த அறையையே ஒரு வித எக்கத்துடன் பார்த்தாள்.

ஒரு வேளை அவளும் அவனுமாகத் தங்கிய நாட்களை எண்ணிக் கொண்டாளோ? அதை நினைத்ததும் ஏனோ சமர்த்தியின் உடல் எல்லாம் தீப்பற்றியதுபோல எரியத் தொடங்க, அதை வெளியே தெரியாமல் காத்துக்கொள்ள மிகச் சிரமப்பட்டாள் சமர்த்தி.

வந்தவள் திரும்பி இவளைப் பார்த்தாள். உதடுகள் சிரிப்பதா, மறுப்பதா என்று தயங்கி நிற்க,

“என்னை உனக்குத் தெரியுமா?” என்றாள் மென்மையாக.

‘உன்னைத் தெரியாமல் இருக்குமா? பாவி… உன்னால்தானே இன்று நான் சிறை வாழ்க்கை வாழ்கிறேன்…’ மனதிற்குள் கறுவியவள், பின் ஆம் என்பது போலத் தலையை ஆட்டினாள்.

அதைக் கேட்டதும் ஜூலியட்டின் விழிகளில் மெல்லிய சலனம்.

“எ… எப்படித் தெரியும்?” அந்த படபடப்பிலும் கூட அவளடைய கூடக் குரல் மிக நாகரீகமாக மென்மையாகத்தான் வெளியே வந்தது.

“எனக்கு மட்டுமல்ல, இந்த ஊர் உலகத்திற்கே நீ யார் என்று தெரியும்… தவிர…” என்றசமர்த்தி தன் முன்னால் நின்றிருந்தவளை நெருங்கி,

“அவருடைய மார்பில் உன்னுடைய உருவம் தான் பச்சையாகக் குத்தப்பட்டிருக்கிறது..” என்றாள் தெளிவாக.

அதைக் கேட்டதும், ஜூலியட்டின் முகம் வாடி வதங்கிப் போயிற்று. அந்த நிலையிலும், அழகாகவே உதட்டைக் கடித்து விடுவித்தவள்,

“உதி மகிழ்ச்சியாக இருக்கிறாரா?” என்றாள் அடுத்து. இவளுக்கோ சுருசுரு என்று எதுவோ எகிறத் தொடங்கியது.

‘அவருக்கென்ன… நினைத்த நேரத்திற்குப் பெண் சுகம் கிடைக்கிறது. மகிழ்ச்சிக்குக் குறையா இருக்கப்போகிறது?’ என்று எரிச்சலுடன் நினைத்தவள்

“அதை நீ அவரிடம்தான் கேட்கவேண்டும்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, குளியலறைக் கதவு திறந்தது.

இரு பெண்களுமே ஒருவிதத் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்க்க இடையில் வெறும் தூவாய் கட்டியிருக்கத் தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்த உத்தியுக்தன், துவாயைக் கட்டிலில் வீசிவிட்டுத் தலை முடியைக் கரங்களால் மேவி இழுத்தவாறு திரும்பிப் பார்க்க, அங்கே நின்றிருந்த ஜூலியட்டைக் கண்டதும் ஒரு கணம் விழிகள் சுருங்கி நின்றான்.

ஜூலியட்டோ, இன்னும் தன் உருவத்தைப் பதித்திருந்த அவனுடைய மார்பையே வெறித்துக் கொண்டிருக்க, சமர்த்திக்கோ அந்த இடத்தில் தான் ஏதோ அதிகப்படிபோலத் தோன்றக் குன்றிப் போனாள்.

ஆனால் உத்தியுக்தனோ, “ஜூலியட்… நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்றான் சர்வ சாதாரணமாக. அதுவரை தன்னை மறந்து அவன் மார்பையே வெறித்துக்கொண்டிருந்தவள், நிமிர்ந்து உத்தியுக்தனைப் பார்த்துச் செருமித் தொண்டையில் அடைத்ததைச் சமப்படுத்தியவள்,

“அது.. வந்து… உனக்கு விருது கிடைத்ததைப் பற்றி அறிந்தேன்… அதுதான் நேராக வாழ்த்தி விட்டுப் போக வந்தேன்…” என்றதும் சமர்த்தியோ குழப்பத்துடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

விருதா? என்ன விருது? குழப்பத்துடன் அவனை ஏறிட, அவனோ, ஜூலியட்டைப் பார்த்து,

“தாங்க் யூ.” என்றான் அலட்சியமாக. தொடர்ந்து

“ஏதாவது குடிக்கப்போகிறாயா? கஃபி… டீ… வைன்… ஆர் விஸ்கி…” என்று கேட்க,

“எனிதிங்…” என்றாள் தன் தோள்களைக் குலுக்கி. இவனோ திரும்பி சமர்த்தியைப் பார்த்தான். என்ன நினைத்தானோ,

“ஜூலியட்… ஐந்து நிமிடங்கள் கொடு.. தயாராகி வருகிறேன்… கீழே மதுக் கூடம் இருக்கிறது… அங்கே போகலாம்…” என்றவன் கடகடவென்று உள்ளே சென்று ஆடை மாற்றிவிட்டு வெளியே வந்தவன், ஜூலியட்டைப் பார்த்து,

“கம்..” என்று அழைத்துக்கொண்டு வெளியேற, இவளுக்குத்தான் அவன் தன், முகத்தில் பலமாக அறைந்ததுபோலத் விதிர் விதிர்த்து நின்றாள்.

அவன் சும்மா கூட அவளிடம் அனுமதியும் வேண்டவில்லை, நாகரிகமாக நீயும் வருகிறாயா என்றும் கேட்கவில்லை.

ஏதோ வேலைக்காரி போல, அவளை அம்போ என்று விட்டுவிட்டுச் சென்றுவிட்டானே. எத்தனை திண்ணகம் இருக்கவேண்டும் அவனுக்கு. அதுவும் அந்த ஜூலியட்டோடு.

நினைக்க நினைக்க இவளுக்கு ஆத்திரம் தாங்க முடியாமல் வந்தது. மனமோ கண்ட மேனிக்குக் கற்பனையில் திளைத்தது.

மெய்யாகக் காதலித்தவன், இவளோடு கூடும் காலத்தில் கூட அந்த ஜூலியட்டின் பெயரை உச்சரித்தவன்… சொல்லப்பொனால் அவளாக நினைத்துத்தான் இவளை அனுபவிப்பவனும் கூட, அப்படியிருக்கையில் கைகாலை வைத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுவானா என்ன?

போறாமைத் தீ ஆழமாய் பற்றிக்கொள்ள, இருப்புக் கொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக அறைக்குள் நடந்தாள் சமர்த்தி. நேரம் செல்லச் செல்ல, பொறுமை மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. வயிற்றிற்குள் உருவமில்லா பல உருண்டைகள் அங்கும் இங்கும் ஓடித் திரிந்தன.

அவள் வேறு அவனுக்கு வாழ்த்துக் கூறினாளே. எதற்கு வாழ்த்தினாள். அப்படி என்ன சாதனை செய்தான்?

ஓடிப்போய்த் தன் கைப்பேசியை எடுத்தவள், அந்த விடுதியின் அருகலை மூலம் இணையத்தோடு தொடர்புகொண்டவள் அவனுடைய பெயரைப் பதிய, அவனைப் பற்றிய அண்மைய செய்திகள் அனைத்தும் வெளி வந்திருந்தன.

அதில் ஒரு கட்டுரை இவளைக் கவர, அதைத் திறந்து பார்த்தாள். அதில் அவனைப் பற்றிய விபரங்களைக் கூறியதோடு இறுதியில், கனடாவின் சிறந்த தொழிலதிபர் என்கிற விருதும், கனடா மற்றும் அமெரிக்காவின் வணிகச் சாதனையாளர் விருதோடு, அவனுடைய நிறுவனத்தைத் தேர்வுசெய்து அதிக வருமானத்தை ஈட்டித்தந்த தொழில் என்கிற ரீதியில் அதற்கான விருதும் கனடியப் பிரதமரின் கரங்களால் கொடுக்கப்பட இருக்கிறது.

அந்தச் செய்தியைக் கண்டதும் இவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கூடவே மகிழ்ச்சியில் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்க வேண்டும் போலத் தோன்றியது.

இது அவனுடைய கடும் முயற்சியால் அல்லவா கிடைத்திருக்கிறது, என்று எண்ணும்போதே நெஞ்சை வேதனை அடைத்தது.

இத்தனை மகிழ்ச்சியான செய்தியைக்கூடவா அவளிடம் கூறக் கூடாது? அவள் தவறுசெய்தாள்தான். மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தாள்தான். அதற்காக இப்படியா அவளைத் தண்டிக்கவேண்டும்? யார் யாருக்கோவெல்லாம் தெரிகிறது.. ஆனால் அவளுக்கு மட்டும் தெரியவில்லையே…

தாங்க முடியாத வேதனையுடன் கன்னத்தில் கண்ணீர் வடிய, அடிக்கடி நேரத்தைப் பார்ப்பதும், பின் அங்கும் இங்கும் நடப்பதுமாக இரண்டு மணி நேரங்களைக் கடந்துவிட்டாள். இன்னும் அவனைக் காணாது மனம் தவித்தது.

அந்த ஜூலியட்டோடு சென்றானே… இன்னுமா அவளோடு பேசி முடியவில்லை. இந்த இரண்டு மணி நேரங்களில் என்னென்னவெல்லாம் நடந்து இருக்கும். ஒரு வேளை அழிந்ததாக நினைத்த காதல் மீண்டும் துளிர்விடத் தொடங்குமோ? அப்படி ஆனால் அவளுடைய நிலை என்ன?

அவளா இவளா என்று வந்தால் உத்தியுக்தன் நிச்சயமாக ஜூலியட்டைத்தான் தேர்வு செய்வான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அப்படியானால் அவனுக்கு இவளுடைய தேவை இனி இல்லையா? இவளைக் கைகழுவிவிடுவானா என்ன?அத்தனை பேரையும் கூட்டி நடத்திய திருமணத்திற்குப் பதில் என்ன? கழுத்தில் கட்டிய தாலிக்கு அர்த்தம் என்ன? எல்லாவற்றிட்கும் மேலாக அவனை எப்படி இழப்பாள், நினைக்க நினைக்கத் தாங்க முடியவில்லை சமர்த்திக்கு. ஏனோ அவனைப் பிரிந்து செல்வதைக் கற்பனையில் கூட எண்ண முடியவில்லை அவளால். பொறுமை அயற்றவளாகப் படுக்கையில் தொப்பென்று அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது, கதவு திறந்தது.

நிமிர்ந்து பார்த்தால், அவன்தான். நிதானமாக உள்ளே வந்துகொண்டிருந்தான். கையில் உணவுப் பொதி.

அதை மேசையில் வைத்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியை நோக்கிச் செல்ல, ஏதாவது சொல்வானா என்று பார்த்தாள். ம்கூம் வாயே திறக்கவில்லை. தன் போக்கிற்குக் குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்து, தண்ணீர் போத்தலை எடுத்து வாய்க்குள் கவிழ்க்க, இவளுக்குத்தான் வேதனையில் நெஞ்சம் விம்மியது.

உரிமையாகச் சண்டை பிடிக்கக் கூட முடியாதே. ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று அவன் சட்டையைப் பற்றிக் கேட்கமுடியாது. எதற்காக என்னைத் தனியாக விட்டுவிட்டு, அந்த ஜூலியட்டோடு போனாய் என்று பொறாமையில் சாடமுடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னுடைய தொலைந்த காதல் மீண்டு வந்ததென்று என்னைத் தொலைத்து விடுவாயா என்று கேட்டு வாயே திறக்க முடியாது. பெரும் வலி எழ, அந்த எல்லையில்லா வலி விழிகளில் வழிய,

“எங்கே போனீர்கள்…” என்றாள் கமற முயன்ற குரலை அடக்க முயன்றவாறு. இவனோ தண்ணீர் போத்தலை மீண்டும் அதனிடத்தே வைத்துவிட்டுக் கதவை மூடி,

“சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன?” என்றான் தன் மேல் சட்டையைக் கழற்றியவாறு. மீண்டும் நெஞ்சடைத்தது.

“ஏன் என்னிடம் சொல்லவில்லை…” என்றபோது அவளையும் மீறிக் குரல் சற்று வதங்கத்தான் செய்தது. அவனோ இரவாடைக்கு மாறியவாறு,

“எதைப்பற்றிக் கேட்கிறாய்?” என்றான்.

“உங்களுக்கு விருது கிடைத்தது பற்றி…” என்று நெஞ்சம் கனக்கக் கேட்க, அவனோ பழைய ஆடைகளை அங்கிருக்கும் துவைக்கும் கூடையில் எறிந்துவிட்டு, நிதானமாக இவளைத் திரும்பிப் பார்த்து,

“நான் எதற்கு உன்னிடம் சொல்லவேண்டும் வீட்டில் கதிரை மேசை இருக்கிறது… அதனிடம் எல்லாமா எனக்கு விருது கிடைக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்…” என்று அவன் ஏகதாளமாகக் கேட்க இவளுக்கோ ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்துக் கொடுக்கவேண்டும் போலத் தோன்றியது. இதை நினைக்கத்தான் முடியும். செயல்படுத்த முடியாதே. சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவள்,

“ஏன் உதிதன்… நானும் அவையும் ஒன்றா உங்களுக்கு?” என்று அடக்கி அத்திரத்துடன் கேட்க, இப்போது தலையைச் சரித்து இவளை வெறித்தவன்,

“என்னைப் பொறுத்தவரைக்கும் நீயும் அவையும் ஒன்றுதான்…” என்றான் சளைக்காமல்.

“ஓ… அப்படியானால் எதற்கு இரவு ஒன்பது மணியானதும் என்னிடம் வருகிறீர்கள்… அதனிடம் போகவேண்டியதுதானே…” என்றாள் சுள்ளென்று. இவனோ ஏளனத்துடன் சிரித்துவிட்டு,

“நம் தேவைக்காகத்தானே பொருட்களை வாங்குகிறோம். நான் கட்டியிருக்கிறேனே ரொலக்ஸ் கடிகாரம்… இதைக் கையில் மட்டும்தானே கட்ட முடியும்? இதன் பெறுமதி அதிகம் என்பதால் தலையில் வைத்துக்கொண்டா உறங்க முடியும்? நான் தினமும் அணியும் சப்பாத்தின் பெறுமதி உனக்குத் தெரியுமா? அதன் விலை அதிகம் என்பதற்காக வீட்டிற்குள்தான் போட முடியுமா, இல்லை கட்டிலில் அதை வைத்துக்கொண்டு  உறங்கத்தான் முடியுமா? அது அதற்கு ஏற்ற இடம் எதுவோ அங்கே தானே அவற்றை வைக்க முடியும்? உனக்கேற்ற இடம் படுக்கை.. அத்தோடு உனக்கான உரிமை முடிந்தது. அதற்கு மேல் எந்த உரிமையையும் எதிர்பார்க்காதே..” என்று அவன் கூற சமர்த்தியின் இதயத்தில் எதுவோ நொறுங்கிப் போன உணர்வு.

இதற்குமேல் அவளைக் கேவலப்படுத்த எவராலும் முடியாது. அவளும் அவனுடைய சப்பாத்தும் ஒன்றா?

“ஐ கான்ட் பிலீவ் திஸ்…” என்று கூறும்போதே இவளுடைய உதடுகள் நடுங்கத் தொடங்கின. அவனோ,

“நம்பு… இதுதான் நிஜம். என்னைப் பொறுத்த வரைக்கும் நீ என்னுடைய உடல் சுகத்திற்கு மட்டும்தான். அதற்குமேல் உனக்கும் எனக்கும் எதுவும் கிடையாது… இதை விடுத்து உன்னிடம் எதையும் எதிர்பார்த்ததும் இல்லை. எதிர்பார்க்கப் போவதும் இல்லை…” என்று அவன் நிதானமாகக் கூற மேலும் உடைந்து போனாள் சமர்த்தி.

“உதிதன்… நான் ஒன்றும் உணர்வற்ற ஜடமல்ல. எனக்கும் உணர்ச்சிகள், ஆசாபாசங்கள் எல்லாம் இருக்கின்றன… அதற்குக் கொஞ்சமாவது மதிப்புக் கொடுக்கக் கூடாதா?” என்று பெரும் ஏக்கத்துடன் கேட்டவளை உணர்ச்சியற்று பார்த்தான் உத்தியுக்தன். மேசையைச் சுட்டிக் காட்டி,

“உணவு வாங்கி வந்திருக்கிறேன்… சாப்பிடு…” என்றுவிட்டு உள்ளே இருந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்த, இவள்தான் மலைத்து நிற்க வேண்டியதாயிற்று. முதன் முறையாக வாழ்வில் பசி மரத்துப்போய் நின்றாள் சமர்த்தி.

What’s your Reaction?
+1
24
+1
6
+1
2
+1
0
+1
13
+1
1

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-23”
  1. 😬😬😬😬😬😬😬😬😬😬😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
    அடிங்கொய்யாலே😤😤😤😤😤😤😤😤😤😤
    இவுரு பெரிய பிரிட்டிஷ் மகாராசா வாய்க்கொழுப்பைப் பாரேன்.
    டேய் தடித்தாண்டவராயா உன்னை யெல்லாம் சுண்ணாம்பு காளவாயில வச்சு பொதைக்கோனும்.
    டேபிளு சேராமே சத்தி😐😐😐😐😐😐. 🙀🙀🙀🙀🌋🌋🌋🌋🌋🔥🔥🔥🔥🔥🔥🔥🥊🥊🥊🥊🥊 கைல கிடைச்ச கும்மிருவேன் கும்மி மடையா.
    ஜூலியோ கோலியோ வந்ததும் கிளப்பிகிட்டு போயிட்டானே🫤🫤🫤🫤🫤🫤

    1. அஸ்கு புஸ்கு அப்பளம் வடை. அப்ப உங்க ஆள எதில முக்கி எடுக்கிறதாம். தப்பு பண்ணினதே அவதான். இதில அவன திட்டுறது.. ர்ர்ர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!