(2)
இதங்கனைக்கு அன்று காலை எழுந்தபோதே சகுனம் சரியில்லை. படுக்கையை விட்டு எழுந்தபோது கட்டில் காலில் தன் காலைப் பலமாக முட்டிக்கொண்டாள். வலியில் உயிர் போக, அடிபட்ட காலைத் தூக்கியவாறு கொஞ்ச நேரம் நடராஜர் நடனம் ஆடி விட்டுத்தான் குளிக்கப் போனாள். குளித்து விட்டு வெளியே வரும்போதே, கால் வழுக்கி விழப் பார்த்தாள். எப்படியோ சுவரைப் பற்றி நிலைப்படுத்திக் கொண்டதால் மண்டை பிளக்காது தப்பிக் கொண்டாள். இப்போது தயாரான பின்னாடி கொண்டுபோக வேண்டிய அந்த முக்கிய கடிதத்தைக் காணவில்லை.
எங்கே வைத்துத் தொலைத்தாள்…? முடிந்தவரைத் தேடியாயிற்று. மூளையைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து யோசித்தாயிற்று. ம்கூம் எங்கே வைத்தோம் என்று நினைவு வரவேயில்லை. அறையைத் தலைகீழாகக் கொட்டியும் பார்த்தாயிற்று… மகிந்தன் கொடுத்த அந்த அரவனைச் சந்திப்பதற்கான அனுமதிக் கடிதத்தைக் காணவில்லை. எங்கே வைத்துத் தொலைத்தாள். அது முக்கியமான கடிதம் என்பதால் நிச்சயமாக அலட்சியமாகப் போட்டிருக்க மாட்டாள். மீண்டும் ஒரு முறை அடுக்கிவைத்த பெட்டியை அக்குவேறு ஆணிவேராகப் பரிசோதித்துப் பார்த்தாள். அங்கும் இல்லை. ஐயோ எங்கே வைத்தேன்… விமானச் சீட்டு வேறு அதோடுதானே இருக்கிறது. இவை இரண்டும் இல்லாமல் அந்த அரவனை எப்படிச் சந்திப்பது? மகிந்தன் கேட்டுக் கொண்டதை எப்படி நிறைவேற்றுவது? போதாதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் விமானநிலையத்தில் நிற்கவேண்டுமே…
எங்கே வைத்தாள்? எரிச்சலோடு வெளியே வந்தபோது, அவளுடைய தம்பி பாலேந்திரன் சாவகாசமாகத் தேநீர் குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டதும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது இதங்கனைக்கு.
இங்கே ஒருத்தி முக்கியமான கடிதத்தைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறாள். இந்த எருமை சுகமாகத் தேநீர் குடிக்கிறதா? பற்களைக் கடித்தவள்,
“கடாமாடுமாதிரி வளந்திருக்கிறாயே தவிரக் கொஞ்சமாவது புத்தியிருக்கிறதா பார்… எருமை” என்று மூச்சிறைக்கக் கத்த, அவளுடைய தம்பியோ, ஏதோ பக்கத்து வீட்டுக்காரனோடு தன் சகோதரி கத்துகிறாள் என்பதுபோலத் தன் தேநீரில் கவனமாக இருந்தான்.
அதைக் கண்டதும் இன்னும் ஆத்திரம் பெருக்கெடுத்து ஓட, விரைந்து அவனை நெருங்கியவள், நங்கென்று அவனுடைய மண்டையில் எக்கிக் கொட்டி விட்டு,
“இங்கே ஒருத்திக் காட்டுக் கத்தலாகக் கத்திக்கொண்டிருக்கிறேன். கொஞ்சமாவது காதில் கேட்கிறதா இல்லையா? முட்டாள்… முட்டாள்…!” என்று திட்டியவாறு சற்றுத் தள்ளிச் சென்று அங்கிருந்த மேசையில் அவள் தேடும் கடிதம் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்க, இவனோ தன் சகோதரி கொட்டிய இடத்தைத் தடவிக் கொடுத்தவாறு,
“உனக்குத் தம்பிதானே நான். என்னிடம்… புத்தியை எதிர்பார்த்தால் நான் என்ன செய்வது…?” என்றான் பதிலுக்கு.
“என்ன சொன்னாய்…? உன்னை…” என்றவள் அந்த மேசையிலிருந்த புத்தகம் ஒன்றை எடுத்து அவனை நோக்கி விட்டெறிய, சரியாக அதை ஒற்றைக் கரத்தால் கைப்பற்றிக் கொண்டான் பாலேந்திரன்.
“நல்ல வேளை… நீ துடுப்பாட்டத்தில் இல்லை… இருந்திருந்தால்… நீ அடித்த பந்து சரியாக எதிராளியின் கையில் நச் என்று ஏறி உட்கார்ந்திருக்கும்…” என்று கிண்டலுடன் கூறியவாறு சகோதரி எறிந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தான். பின் ஆச்சரியம் போல முகத்தை வைத்துக்கொண்டு,
“அட…! அக்காச்சி… இங்கே பாரேன்…! உனக்குப் பொருத்தமாக ஒரு வசனமே போட்டிருக்கிறது… கோபத்தை அடக்காத பெண்களும், காச் மூச் என்று கத்துகிற பெண்களும் நன்றாக வாழ்ந்ததாகச் சரித்திரமே கிடையாது…! உனக்காகவே எழுதியிருக்கிறது.” என்றவாறு இதங்கனையைப் பார்க்க இவளோ தம்பியைக் கொல்லும் வெறியுடன் முறைத்தாள்.
“என்னடா? கிண்டலா…?”
“என்னது கிண்டலா…? இல்லையே… அம்மா சுண்டல்தானே காலையில் வைத்தார்கள்..” என்று அவன் நக்கலாகக் கூற, இதங்கனைக்கு தலை முடியைப் பிய்த்தெறியும் வேகம் பிறந்தது. அவளுடையதை அல்ல. அவனுடையதை. ஆத்திரத்தோடு,
“இருடா சாம்பு மவனே…. உன்னை…” என்றவாறு தம்பியை நெருங்கத் தொடங்க,
“ஐயையையையே… இங்கே என்னடா சத்தம்…? பெரிய சந்தைக் கடையே பரவாயில்லை…” என்றவாறு ஒரு கையில் தேநீரும், மறு கையால் ஒற்றைக் காதைப் பொத்தியவாறும் சமையலறையிலிருந்து வெளியே வந்தார் அன்னை பார்வதி.
தாயைக் கண்டதும் தம்பியை முறைத்து விட்டு,
“பாரம்மா… இந்த… தடியனை… என்னை வம்புக்கு இழுக்கிறான்… இன்று வேலை விடயமாக வன்கூவருக்குப் போகவேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்தானே…? அதற்கான முக்கிய கடிதம் அதைக் காணவில்லை. அது இல்லாமல் அங்கே போய் எந்தப் பயனும் இல்லை…. அது எங்கே போயிருக்கும் என்று தெரியாமல் நான் தவித்துக்கொண்டு இருக்கிறேன். இவன் என்னவென்றால், அடக்கம் புத்தி என்று பாடம் நடத்துகிறான்…” என்று எகிறத் தன் சகோதரியை முறைத்த பாலேந்திரன்,
“அம்மா… உன்னுடைய மகளின் வாயை அடக்கச் சொல்லு… நுளம்பு தானாக வந்து கையைக் கடித்தால் பார்த்துக்கொண்டா இருப்பார்கள். அப்படித்தான் இவளும்… என் பாட்டுக்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். இவளாக வந்து காச் மூச் என்று கத்தி என் காதில் இரத்தத்தையே வரவழைத்து விட்டாள். ஒரு பொருளைப் பத்திரமாக வைக்கத் தெரியவில்லை… இதில் தா தை என்று குதிக்கவேண்டியது…” என்றவன் சற்றுப் பூசியது போன்ற அவளுடைய அழகிய தேகத்தைக் கிண்டலுடன் பார்த்து விட்டுப் பின் சுவரைத் தட்டிப் பார்த்து,
“நல்ல வேளை… இவள் குதித்ததில் எங்கள் வீடு உடைந்து போகாமல் தப்பிவிட்டது. கொத்தனார் நல்ல இறுக்கமாகத்தான் வீட்டைக் கட்டியிருக்கிறார்…” என்று கிண்டலுடன் கூறு, “ர்ர்ர்ர்” என்றவள் தன் தாயைப் பார்த்து,
“அம்மா…! நேற்று என் மேசையை அடுக்கியது இந்தக் குரங்குதான். இவனைத் தவிர வேறு யாரும் அதைத் தொட்டிருக்க மாட்டார்கள். மரியாதையாக அதைத் தேடி எடுத்துத் தரச் சொல்லுங்கள்…” என்று அவள் முடிக்கவில்லை, பாலேந்தரோ திரும்பி சுவரோடு நங்கென்று தன் தலையை முட்டி விட்டுத் தாயைப் பார்த்து,
“மேசையா அது? கறுமம்…! அதை மேசை என்று சொல்லாதே. குப்பைத் தொட்டி என்று சொல்லு…! என்ன என்ன இருக்கவேண்டுமோ அவை தவிரத் தேவை இல்லாத அத்தனை கருமாந்தரமும் அங்கேதான் இருக்கின்றன. ஒரு மனுஷன் உட்கார்ந்து அதில் வேலை பார்க்க முடிகிறதா? இவள் பத்திரிகைத் துறையில் வேலை பார்ப்பதும் போதும், நாம் படும் பாடும் போதும். ஒரு ஸ்டிக்கி நோட் எடுப்பதற்குள் என் பிராணனே பரலோகம் போய்விட்டது… சரி குப்பையாக இருக்கிறதே, அடுக்கி வைக்கலாம் என்று நினைத்தால், அதிகம்தான் பேசுகிறாள்… இவள் எல்லாம் திருமணம் முடித்து அந்த மகிந்தனோடு எப்படிக் குப்பை கொட்டப் போகிறாளோ. பாவம் அந்த மனுஷன்! அவர் பாடு. அதோ கதிதான்…!” என்றதும் தம்பியின் முகத்தில் ஓங்கிக் குத்தும் வேகத்தை அடக்கியவளாக,
“சரிதான் போடா…! இவர் மட்டும் பெரிய யோக்கியனாக்கும்? பல்கலைக் கழகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் சப்பாத்து ஒவ்வொரு திசையாகப் பறப்பது எங்களுக்குத் தெரியாததாக்கும்…? அந்த நாற்றம் பிடித்த சாக்ஸ்… உவ்வே…!” என்று தன் தம்பியின் காலை வார,
“நான் சுத்த வாதியோ இல்லையோ… என்னுடைய வேலையை நான் செய்கிறேன் அல்லவா? சப்பாத்தைத் தூக்கி எறிந்தாலும் சற்று ஓய்வான பிறகு அடுக்கி வைக்கிறேன் தானே… நான் யாருடைய உதவியையும் எதிர்பார்த்து நிற்கவில்லையே. நீ அப்படியா? காலையில் எழுந்து வார்த்த தேநீரை உன் கையில் கொண்டுவந்து கொடுப்பது முதல், இரவு சாப்பிடும் சாப்பாட்டுக் கோப்பையைக் கழுவி வைப்பது வரை அம்மாதானே செய்கிறார்கள். இதில் வாய் கிழியப் பேச்சு வேறு. கேட்டால் ஃபாதர்ஸ் லிட்டில் பிரின்ஸஸ். மண்ணாங்கட்டி…! எல்லாம் அப்பாவைச் சொல்ல வேண்டும், பெண் குழந்தை பெண் குழந்தை என்று ஏக செல்லம் உனக்கு… அதுதான் இப்படி இருக்கிறாய்… முதலில் எங்களைத் திருத்த முதல் நீயாக உன் வேலையைச் செய்யப் பழகு…” என்று தம்பி சூடாகக் கொடுக்க, அதைக் கேட்டதும் இதங்கனையின் விழிகள் சட்டென்று கண்ணீரால் நிறைந்து போனது.
“பாரம்மா இந்த விசரனை… என்ன என்ன எல்லாம் சொல்கிறான் என்று…” என்றவளின் உதடுகள் மெல்லியதாகத் துடிக்கத் தொடங்க, அதைக் கண்டதும் உடனேயே பாலேந்தர் கனிந்து போனான். பெண்ணென்றால் பேயே இரங்கும் போது சொந்தத் தம்பி கொஞ்சமாவது கீழே இறங்கமாட்டானா என்ன? தன் சகோதரியின் கண்ணீரைக் காணச் சகிக்காதவனாக,
“இப்போது என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி கண்ணைக் கசக்குகிறாய்? அழுது அழுதே காரியத்தைச் சாதித்துத் தொலை… இப்போது என்ன? அந்தக் கடிதம்தானே வேண்டும். எப்படியாவது தேடித் தொலைக்கிறேன்… முதலில் கண்ணைத் துடை… ஒன்றென்றதும் உடனே மடையைத் திறந்துவிடவேண்டியது. எங்கேதான் இத்தனை கண்ணீரையும் சேர்த்து வைக்கிறாயோ…” என்றவன் திரும்பி அன்னையைப் பார்த்து,
“இந்த திருமணத் திகதியை இத்தனை நாள் தள்ளியா வைக்கவேண்டும்? நாளை இல்லை நாளை மறு நாள் கட்டித் துரத்திவிட முடியாதா…? கொஞ்சமாவது நிம்மதியாக இருக்க முடிகிறதா இந்த வீட்டில்?” என்றவன் பின் சகோதரியைப் பார்த்து முறைத்து,
“அது எப்படி இருக்கும் என்றாவது சொல்லித் தொலை” என்றான் ஆத்திரத்துடன். இவளோ மூக்கை இழுத்தவாறு “அது ஒரு நீல உறை…” என்று அடையாளத்தைக் கூறி விட்டு அங்கிருந்த நீளிருக்கைியில் சப்பாணி கட்டியவாறு அமர்ந்துகொள்ள, தன் மகளுக்கு எடுத்து வந்த தேநீரை அவளிடம் நீட்டியவாறு,
“ஒரு பொருளைப் பத்திரமாக வைக்கப் பழகமாட்டாயா இதங்கனை… எப்போது பார்த்தாலும் எங்காவது வைக்கவேண்டியது. பிறகு பாலுவோடு மல்லுக்கு நிற்கவேண்டியது. அது முக்கியமான கடிதம் என்று தெரிகிறது தானே… கைப்பையிலாவது வைத்திருக்கலாம்?” என்றார் கோபமாக. தாய் நீட்டிய தேநீரை வாங்கியவாறு அன்னையை எரிச்சலுடன் பார்த்த இதங்கனை,
“அம்மா பத்திரமாக அங்கேதான் வைத்தேன்… அது எப்படிக் காணாமல் போனதென்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை…” என்று விட்டுப் பாணத்தைக் குடிக்கத் தொடங்க,
“கைப்பையிலும் இல்லை, வீட்டிலும் இல்லை… அப்படியானால் எங்கே போயிருக்கும்?” என்று யோசித்தவருக்குப் பளிச்சென்று அது நினைவுக்கு வந்தது.
“டேய் பாலு… முதலில் அக்காவின் வாகனத்திற்குள் பார்… அங்கேதான் இருக்கும்?” என்றார் அன்னை பரபரப்பாக. இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“இல்லைமா… வாகனத்திற்குள் வைக்கவில்லை… என் கைப்பையில்தான் வைத்தேன்… எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது…” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே, குளோசட்டை நோக்கிச் சென்ற பாலேந்திரன், சகோதரியின் தடித்த மேலாடையின் பாக்கட்டிற்குள் கை விட்டு அவளுடைய வண்டித் திறப்பை எடுத்துக்கொண்டு வெளியேற.
“இவ்வளவு சொல்கிறேன் உனக்கு நம்பிக்கையில்லையா? இதற்குள் இருக்க வாய்ப்பே இல்லை… வீணாக அலையப் போகிறாய்…” என்ற சகோதரியை பாலேந்திரன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
தன் சப்பாத்தைப் போட,
“சொன்னால் கேளுடா… இங்கே எங்கேயோதான் இருக்கவேண்டும்…அதற்குள் இருக்காது… வேண்டுமானால் பார்த்து விட்டு வா…” என்று அலட்சியமாகக் கூறி விட்டு அங்கிருந்த நாளிதழை இழுத்து எடுத்துத் தான் எழுதிய கட்டுரை வந்திருக்கிறதா என்று பார்த்துப் படிக்கத் தொடங்கினாள்.
ஐந்து நிமிடங்களில் நீல உறையுடன் உள்ளே வந்தான் பாலேந்தர். அரவம் கேட்டு நிமிர்ந்தவள், அவன் கரங்களிலிரந்த உறையைக் கண்டதும் முதலில் வியந்து பின் நிமிர்ந்து பார்க்க, அங்கே அவளுடைய தம்பி, தன் முகத்தில் திகுதிகு என்று கோபம் தாண்டவமாட அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். அதைக் கண்டவள் அசடு வழிந்து,
“டேய்… வாகனத்திற்குள்ளேயா இருந்தது…? அம்மா சத்தியமாக…!” என்று திரும்பியவள் தாயின் முகம் கிடந்த கிடப்பைக் கண்டு பக்கென்று சொல்லவந்ததை நிறுத்திப் பின் தம்பியைத் திரும்பிப் பார்த்து,
“உன் மேல் சத்தியமா…” இப்போது பாலேந்திரனின் முகத்தில் கொலைவெறி தெரிந்தது. உடனே தன் கையைத் தன் தலையில் வைத்து,
“சரி என் மேல் சத்தியமாக என் கைப்பையில் வைத்திருந்தேன்டா…” என்றாள் பரிதாபமாக. பாலேந்திரனோ மலையிறங்காமல்,
“நீ கைப்பையில்தான் வைத்தாய்… ஆனால் பார் நேற்று இரவு வேறு செம குளிரா… அதுதான் சூடு தேடி உன் கைப்பையை விட்டு இறங்கி குடுகுடு என்று ஓடிச்சென்று வாகனத்திற்குள் ஏறி அமர்ந்திருக்கிறது…. அது தெரியாமல் பாவம் நீ வேறு தேடி அலைகிறாய்..” என்றதும்,
“ஹி… ஹி… சாரிடா… நான்… ஏதோ…” முடிக்க முதல்,
“எப்படி எப்படி… எருமை… கடாமாடு… குரங்கு… வேற என்ன சொன்னாய்? விசர்… நீங்கள் எப்படி? பெரிய அரிச்சந்திரினி… பெரிய நியாயவாதி… ஞாபக சக்தி என்றால் கடல்… நான் மட்டும் உன் அண்ணாவாக இருந்திருந்தால்… உன் தலையில் குட்டியே இரண்டு கொம்பு வர வைத்திருப்பேன்… பொல்லாத கடிதம், அப்படி இதில் என்னதான் இருக்கிறது…” என்று அவன் சினத்துடன் கேட்க, ஈ என்று முப்பத்திரண்டையும் காட்டியவள்,
“அது பரம ரகசியம்… மை டாம் பாய்… யாருக்கும் சொல்லக் கூடாது…” என்றவளைச் சற்று யோசனையுடன் பார்த்தான் பாலேந்தர்.
“அப்படி சொல்லக் கூடாத ரகசியம் இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்க, இவளோ உதடுகளைச் சுழித்தவாறு இருக்கையை விட்டு எழுந்து அவனை நெருங்கி அவன் கரத்திலிருந்த கடிதத்தைப் பறித்து அதைக் கொண்டு அவன் தலையில் ஒரு தட்டுத் தட்டி,
“ம்கூம்… அடித்துக் கேட்டாலும் சொல்லமாட்டேன்…” என்றதும், பார்வதி, அவள் குடித்து விட்டு மேசையில் வைத்த குவளையை எடுத்துக்கொண்டு,
“அப்படி என்ன அவசரம் வன்கூவருக்குப் போக… ஏன் உன் அலுவலகத்தில் வேறு யாரும் கிடைக்கவில்லையா… திருமணத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இத்தனை தொலைதூரப் பயணம் தேவையா…” என்றார் மெல்லிய கவலையோடு.
“வேலை என்று வந்தால், மறுக்க முடியாதேமா… என்னிடம் கொடுக்கிறார்கள் என்றால், அதை நான் திறம்படச் செய்கிறேன் என்பதற்காகத்தானே…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே குளியலறையிலிருந்து தலையைத் துவட்டியவாறு வெளியே வந்தார் இந்திரகுமார். வந்தவர், உடலில் உள்ள ஈரத்தையும் துடைத்துவிட்டவாறு,
“என்னடா சண்டை இங்கே… குளியலறை வரை கேட்கிறது…” என்று கடிந்தவராத் திரும்பித் தன் மகளைப் பார்த்து,
“தங்கம்… எல்லாம் தயாராக எடுத்துவைத்துவிட்டாயா? இன்னும் பத்து நிமிடங்கள் கொடு…. உன்னை விமானநிலையம் அழைத்துச் செல்லத் தயாராகி வருகிறேன்…” என்று கூற, சற்றுக் கோபத்துடன் தன் கணவரைப் பார்த்தார் பார்வதி,
“என்ன சத்தமா…? உங்கள் மகளையே கேளுங்கள். இந்த வீட்டை உண்டு இல்லையென்றாக்கிவிட்டாள்…” என்றார்.
தந்தையோ, தன் மகளின் அருகே வந்து அவளுடைய தோள்களின் மீது கரத்தைப் போட்டுத் தன்னோடு அணைத்தவாறு,
“இவள் துருதுருடி… அப்படித்தான் இருப்பாள்… என்ன குட்டி நான் சொல்வது…” என்று தன் மகளின் தலை உச்சியில் முத்தமிட்டு விலக, உடனே தன் தந்தையை அணைத்து அவர் தோளில் தலையைச் சாய்த்து,
“அப்படிச் சொல்லுங்கள்பா… இந்த பாலு… என்னை நிறையத் திட்டுகிறான்பா… ஏன் என்று கேளுங்கள்…” என்று அழகாகவே தம்பியைப் போட்டுக் கொடுக்க, இந்திரகுமார் தன் மகனைப் பார்த்து முறைத்தார். பாலுவோ தன் தலையிலேயே அடித்து விட்டுத் தந்தையைப் பார்த்து, ஓங்கி அடித்துக் கும்பிட்டு,
“ஆளை விடுங்கள்பா… உங்கள் மகள் நல்லவள் வல்லவள் நாலும் தெரிந்தவள் புத்திசாலி… இந்த வயதில் நல்ல வேலைக்குப் போகிறாள்… இப்போது கூட வன்கூவரில் முக்கிய பருப்பு சீ பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவளுடைய திறமை… அவள் இல்லையென்றால் வீடு வீடாக இருக்காது. அவள் நடந்து திரிந்தாலே வீட்டிற்குள் மகாலக்ஷ்மி இருப்பது போல. அவள் இருந்தால்தான் குதுகலம்… அவள் தேவதை… ப்ளா ப்ளா ப்ளா… இதுதானே…? நீங்கள் சொல்லவே வேண்டாம்…! நீங்கள் சொல்வதைக் கேட்டு எனக்கு நல்ல மனப்பாடம் அகிவிட்டது… இதற்கு மேல் உங்கள் மகளின் திறமையைப் பற்றி விரிவுரை கொடுத்தால் சத்தியமாகத் தாங்கமாட்டேன். இப்போதுதான் உங்கள் மகள் ஆடிய சதிராட்டத்தில் என் இரத்த அழுத்தம் எகிறிப்போய் இருக்கிறது. நீங்கள் வேறு ஏற்றித் தொலையாதீர்கள்… ஆளை விடுங்கள்…” என்று கூற, பார்வதியோ தெறித்துவிழும் அளவுக்குப் பொங்கிய நகைப்பை அடக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தார்.
இந்திரகுமார் அப்படித்தான். அவர் எதையும் தாங்குவார். ஆனால் மகளைப் பற்றி சிறிய கடிய செய்தி யாரும் சொன்னால் அவரால் தாங்கவே முடியாது. அதுவும் யாராவது அவளைத் தப்பாகத் திட்டினாலே பொங்கி எழுந்துவிடுவார். அதனால் இதங்கனைக்கு வீட்டுப் பொறுப்பு என்பது குறைவுதான். சில வேளைகளில் சற்றும் யோசிக்காமல் துடுக்குத் தனமாக எதையாவது செய்வதும் உண்டுதான். அதில் பெருமை வேறு.
தன் மகளைக் கனிவுடன் பார்த்த இந்திரகுமார்,
“அவன் கிடக்கிறான் வெட்டிப்பயல்… நீ சொல்லுடா தங்கம்… எல்லாம் தயாராடா…?” என்று கேட்க,
“யெஸ் பா…! எல்லாம் எடுத்துவைத்தாகிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் இங்கிருந்து புறப்பட்டால் சரியாக இருக்கும்…” என்றதும் தன் மகளைத் தட்டிக்கொடுத்தவர்,
“ஐ ஆம் சோ ப்ரௌட் ஆஃப் யு மா…!” என்று கூற, மீண்டும் தன் தந்தையை இறுக அணைத்து விடுவித்த இதங்கனை,
“நன்றிபா நன்றி…!” என்று முடிக்கவில்லை,
“அப்பாடி… இன்னும் இரண்டு நாட்கள் இவளுடைய தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்… அம்மா… இவள் வன்கூவர் போவதைக் கொண்டாடும் விதமாக இன்று நாங்கள் இரவு இட்டாலியன் உணவகத்திற்குப் போகிறோம் சரியா… செலவு என்னுடையது…” என்றதும் தரையைக் காலால் உதைத்த இதங்கனை.
“பாருங்கள் அப்பா… இவனை… நானில்லாமல் உணவகத்திற்குப் போய்விடுவீர்களா…” என்றாள் ஆத்திரமாக.
“அவன் சும்மா சொல்கிறான்டா…! நீ இல்லாமல் நாங்கள் எப்போது போயிருக்கிறோம்? நீ திரும்பி வந்ததும், நாங்கள் எல்லோரும் போகலாம் சரியா…?” என்று கூற, மலர்ந்தவள்,
“சரிப்பா… நான் பெட்டியை எடுத்து வைக்கிறேன். நீங்கள் தயாராகுங்கள்…” என்று விட்டுத் தன் அறையை நோக்கி ஓடப் பார்வதியோ, தன் கணவனை எரிச்சலுடன் பார்த்து,
“இத்தனை செல்லம் கொடுப்பது அத்தனை நல்லதில்லை இந்தர் சொல்லிவிட்டேன். இருபத்தொரு வயதாகிவிட்டது… இன்னம் இவளைக் குழந்தையாகப் பாவிப்பது சரியில்லை. அவளுக்கென்றொரு வாழ்க்கையைத் தனியாக நடத்தும் திடத்தையும் வல்லமையையும் இப்போது கொடுக்காவிட்டால் எப்போது கொடுக்கப்போகிறீர்கள்…?” என்று எரிச்சலுடன் கேட்கத் தன் மனைவியை நிதானமாகப் பார்த்த இந்திரகுமார்,
“பாரு… குழந்தைகளுக்கு வீடு என்பது சிறையாக இருக்கக் கூடாது. அது அழகிய நந்தவனமாக இருக்கவேண்டும்… அப்போதுதான் வீடு என்பது அழகானது என்கிற எண்ணம் தோன்றும்..” என்றவர் முகம் கசங்கத் தன் மனைவியைப் பார்த்து,
“கொஞ்ச நாட்களில் தனக்கான அழகிய பூஞ்சோலையை அமைத்துக்கொள்வாள் பாரு. அதற்குப் பிறகு நம்மைப் பற்றி எண்ணும் போது அவளுக்கு நிறைவுதான் தெரியவேண்டும். குறை தெரியக் கூடாது… அவள் மணமான பின், நம்மோடு இருக்கும் இந்த சுதந்திரம் இருக்குமா இருக்காதா என்றும் தெரியாது… நம்மோடு இருக்கும் வரைக்கும்தானே அவள் தன் விருப்பப்படி இருக்க முடியும்…” என்று கூற, சற்று நேரம் அமைதி காத்தார் பார்வதி. பின் கணவனை யோசனையாகப் பார்த்து,
“தெரியவில்லை இந்தர்… எல்லாமே மகிழ்ச்சிதான் தெரியவேண்டும் என்றால், வலிகளைக் குழந்தைகள் எப்போது கற்றுக் கொள்வது. அதுவும் சேர்ந்துதானே வாழ்க்கை. குழந்தைகளுக்கு நாலும் கற்றுக்கொடுப்பதுதான் குடும்பம். அவர்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியவேண்டும். அதுதான் அவர்களைப் பக்குவப்படுத்தும்… வாழ்க்கையில் சிரமம் தெரியாது வளரும் பிள்ளைகள், பிற்காலத்தில் நிறைய வலிகளைச் சந்தித்து நான் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் ஏமாற்றங்களைக் கற்றுக்கொண்ட பிள்ளைக்குப் பிற்காலத்தில் ஏற்படும் ஏமாற்றங்கள் ஒரு பொருட்டாகவே தெரியாது…” என்று சென்றவர், பின் சலிப்புடன்
“இதைச் சொன்னால் எங்கே புரிந்து கொள்கிறீர்கள்…?” என்று விட்டுத் தன் வேலையைச் செய்வதற்காக சமைலறைக்குச் செல்ல, இந்திரகுமாரோ செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போலத் தன் மகளை அழைத்துச் செல்வதற்காகத் தயாராகத் தொடங்கினார்.
நயணிம்மா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ப்பா 💕❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️🎇🎇🎇🎇🎇🎇 . இந்த புதிய வருடம் உங்கள் வாழ்வில் நிறைய நற்பலன்களையும் ஆரோக்கியத்தையும் வளத்தையும் வழங்க வேண்டும். நிறைய ஸ்டோரிஸ் நீங்க எங்களுக்காக தர வேண்டும்
ரொம்ப ரொம்ப நன்றி தங்கம். எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளாச்சில்ல சண்ட புடிச்சு. அடிக்கடி உங்களையும் நருமுவையும் யோசிப்பேன். எனிவே உங்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள். எல்லா சிறப்பும், உங்களுக்கு நிறைவாய் கிடைக்கட்டும்.