Wed. Jan 22nd, 2025

புயலோடு மோதும் பூவை – 13

(13)

அந்த அரவன், அவளை நோக்கித் துப்பாக்கியை நீட்டியதும், தன்னைக் கொன்று    அங்கேயே புதைக்கப் போகிறான் என்று இதங்கனைக்குப் புரிந்து போனது. அவ்வளவுதானா அவளுடைய வாழ்க்கை? அச்சத்தில் காதுகள் அடைத்துக்கொண்டு வர, முகம் வெளுறிப் போக, விழிகளை இறுக மூடி, துப்பாக்கித் தோட்டாவைத் தன் நெற்றியில் ஏந்தும் அந்த விநாடிக்காகக் காத்திருக்க, அவனோ துப்பாக்கியை நீட்டியவாறு தலையைச் சரித்து அவளைப் பார்த்தான்.

இரத்தப் பசையைத் துறந்த முகம். பயத்தில் மூடிய விழிகள்… அதிலிருந்து பொட்டென வழிந்த கண்ணீர்த் துளிகள். அச்சத்தில் நடுங்கிய உதடுகள். அதைக் கண்டதும் அவனுடைய உதடுகள் மெல்லிய புன்முறுவலைச் சிந்த, துப்பாக்கியைக் கீழே இறக்கிய நேரம், இன்னும் தோட்டா பாயவில்லையே என்கிற சந்தேகத்துடன், மெதுவாக விழிகளைத் திறந்தாள் இதங்கனை.

அங்கே அவன், அவளுடைய பயத்தை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தான். அதைக் கண்டதும், ஆத்திரம் வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள். அவர்களிடம் இருப்பது லாலிபப் இல்லை. துப்பாக்கி. இவள் தன் உணர்ச்சிகளை அவர்களிடம் காட்டப்போய், கடைசியில் இவள்தான் ஜீவசமாதி ஆகும் நிலைக்குத் தள்ளப்படுவாள். ம்கூம்… கட்டுப்படியாகாது. பற்களைக் கடித்துத் தன் கோபத்தை அடக்க முயல,

“பயப்படாதே… சும்மா விளையாடிப் பார்த்தேன். இப்போதைக்கு உன்னைக் கொல்லும் எண்ணம் எனக்கில்லை.” என்று  விட்டுத் துப்பாக்கியை அங்கிருந்த ஒருவனை நோக்கி எறிய, அவன் அதை சுலபமாகப் பற்றிப் பையில் போட்டு பேட்டியில் வைத்துப் பூட்டினான்.

தொடர்ந்து மற்றப் பைகளும் வண்டியில் ஏற்றப்பட்டன.  அனைத்தும் ஏற்றி முடிந்ததும், இதங்கனையைப் பார்த்த அரவன்,

“சரி… வண்டியில் ஏறு…” என்றான். வேறு வழி? இவள் மறுத்ததும்  விட்டுவிடவா போகிறார்கள். ஏறியவள் இருக்கையில் அமர, அதுவரை உறுத்தாத குளிர் இப்போது உறைத்தது. சற்றும் தயங்காமல் தரையில் கிடந்த அந்த தடித்த போர்வையை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போர்த்திக் கொள்ள, குளிர் ஓரளவு மட்டுப்பட்டது. போர்வைக்குள் தன்னைப் புதைத்தவாறு அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதட்டத்துடன் காத்திருக்க, அந்த அரவன் அவளுக்கு அருகாமையில் அமர்ந்தான். அதுவும் உரசும் நெருக்கத்தில்.

திரும்பி அவனைப் பார்த்து முறைத்தவள், இப்போது தள்ளி அமர்ந்துகொள்ள, அதை அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தொடர்ந்து மற்றவர்களும் ஏறி அமர்ந்த கொள்ள. மீண்டும் வண்டி புறப்பட்டது.

கொஞ்ச நேரப் பயணம். ஆனாலும் யாரும் யாருடனும் எதுவும் பேசவில்லை. அந்த அமைதி, பயணத்தை மேலும் கடுமையாக்க, அந்த இராட்சதனைத் திரும்பிப் பார்த்தாள் இதங்கனை.

‘என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்…” என்றாள். இவனோ இவளைத் திரும்பிப் பார்த்து விட்டுத் தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூடி,

“எதற்குக் கேட்கிறாய், போனதும் தெரிந்துவிடப் போகிறது…” என்றான் பட்டென்று. மேலும் சற்று நேர அமைதி. ஆனாலும் நிறையக் கேள்விகள் இவளைக் குடைந்துகொண்டிருக்க,

“இந்த ஆயுதங்கள் எதற்காக…” என்றாள் அடுத்து. இப்போது எதையோ நினைத்துச் சிரித்தவனாக,

“எதற்காகவா… அம்மா அப்பா விளையாட்டு விளையாட…” என்றான் கிண்டலுடன். அதைக் கேட்டதும் எரிச்சலோடு அவனைப் பார்த்துவிட்டு,

“எதற்காக நீ சட்டத்திற்குப் புறம்பான தொழில்களைச் செய்கிறாய்… இது பாவமில்லையா…” கேட்டவளின் குரலில் நிஜமான வேதனை தெரிந்தது. அதை அவனும் உணர்ந்துகொண்டான் போல, கொஞ்சமாக அவள் பக்கம் தலையைச் சரித்து,

“இது என்ன கேள்வி… பின்னே குறுகிய வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி…” என்றான் அலட்சியமாக.

“அதற்கு இதுவா வழி…? எத்தனை சுலபமாகக் கொலை செய்கிறாய். உனக்குக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா… இப்படி அடித்துக் கொல்ல உன்னால் எப்படி முடிகிறது…?” என்று பெரும் வலியுடன் கேட்க, இப்போது விழிகளைத் திறந்து இவளைத் திரும்பிப் பார்த்தான் அரவன்.

“நீ நடக்கும் போது பல்லாயிரக் கணக்கான உயிர்கள் செத்துப் போகின்றன… அதற்காக நடக்காமலா இருக்கிறாய்?”

“அதுவும் இதுவும் ஒன்றா? நான் ஒன்றும் தெரிந்து உயிரினங்களைக் கொல்வதில்லை…”

“ஓ… தெரியாமல் கொன்றால் அது கொலையில்லயா… அது உயிரில்லையா… அட இந்த கன்சப்ட் நன்றாக இருக்கிறதே…” என்று கிண்டலுடன் சிரித்தவன் பின் தலையை நேராக்கி விழிகளை மூடியவாறு,

“உனக்குப் பட்டுச் சேலை கட்டும் வழக்கம் உண்டா?” என்றான்.

இவளோ பதில் சொல்லாமல் அவனை வெறிக்க,

“அந்த சேலைக்காக எத்தனை பட்டுப் புழுக்கள் சாகின்றன…  அவற்றிற்காக பரிதாபப்பட்டுக்கொண்டா இருக்கிறாய்?” அவன் கேட்க பதில் சொல்ல முடியாமல் உதடுகளைக் கடிக்க, இப்போது திரும்பி அவளைப் பார்த்தவனின் விழிகள் கடிபட்ட உதடுகளில் தங்கி நின்றனை. அதை உணர்ந்து சட்டென்று தன் உதடுகளை விடுவித்து விட்டு அவனை முறைத்தாள்.

மெல்லிய சிரிப்போடு அவள் பக்கமாகத் திரும்பி அமர்ந்தவன்,

“நீ மாமிசம் சாப்பிடுவாயா” என்று கேட்டான்.

“ம்…”

“அப்போ அது என்ன தாவர போசனமா…  மகிழ்ச்சியாகக் குதுகலமாக இருந்ததைக் கொன்றுதானே சாப்பிடுகிறாய். மீன், கடலிலிருந்து எடுக்கும் போது, பிராணவாயு இல்லாமல் துடித்துச் சாகும். அதைக் கடல் புஷ்பம் என்கிற பெயரில் சாப்பிடுவதில்லை? அப்போதெல்லாம் இந்தப் பரிதாபம் எங்கே போயிற்று? எப்போதாவது மிருகங்கள் வளர்க்கும் பண்ணையில், அதை எப்படிக் கொன்று உணவாக்குகிறார்கள் என்று பார்த்திருக்கிறாயா… மனிதன் மிருகங்களுக்குச் செய்யும் கொடூரத்தை விட, நான் பெரிதாக எந்த கொடுமையும் செய்யவில்லை…” என்று சொல்ல, ஒரு கணம் பதில் சொல்ல முடியாது வாயடைத்து நின்றாள் அவள்.

ஒரு வகையில் அவன் சொல்வதும் உண்மைதானே. உயிர்க் கொலை என்பது மனிதனுக்கு ஒரு நியாயம் மிருகங்களுக்கு ஒரு நியாயமா… என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் அவனோடு ஒத்துச் சிந்திப்பதே உறைத்தது.

சீ என்ன இது… நானே அவன் பக்கமாகச் சாய்கிறேன். தன்னையே திட்டியவாறு,

“கொலையை விடு… போதைப்பொருள் வேறு கடத்துகிறாயே… படிக்கிற பிள்ளைகள் பாவமில்லையா… இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அல்லவா நாசமாக்கிறார்கள்…” என்றாள் பெரும் வருத்தத்தோடு.

இப்போது அவளை நிதானமாகப் பார்த்தான் அரவன்.

“வாங்குகிறவன் இருக்கும் வரைக்கும் விற்பவனும் இருந்துகொண்டுதான் இருப்பான்… எல்லா இடங்களிலும் போதைப்பொருட்களால் ஏற்படுகிற தீமை பற்றிப் பந்தி பந்தியாகச் சொல்லப்பட்டுத்தான் வருகின்றன. யாராவது கேட்கிறார்களா? புகைபிடித்தால் புற்று நோய் வரும்… அதை  அட்டைப் பெட்டியில் வேறு போடுகிறார்கள். அப்படியிருந்தும் கேட்கிறார்களா?  பெட்டி பெட்டியாக வாங்கிப் பிடிக்கத்தானே செய்கிறார்கள் எச்சரிக்கைகளைக் கவனிக்க மாட்டேன், பின்பற்ற மாட்டேன் என்று கண்களைத் திறந்துகொண்டே ஆழமான கிணற்றில் விழுந்து மூழ்குவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பவனைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும். அவன் அவன் தன் தன் உடலைத் தான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். போதைப் பொருள் விற்பது குற்றம் என்றால், அதை ஊக்குவிக்கும் வகையில் வாங்கிக் குடிப்பவனும் குற்றவாளிதான். இதை வாங்குபவன் நிறுத்திக்கொண்டால், நான் ஏன் இந்த வியாபாரத்தில் இறங்கப்போகிறேன்…” என்று தலைகீழாக நியாயம் பேச இவளுக்குத்தான் தன் தலையைச் சுவரில் முட்டும் வேகம் பிறந்தது.

“இப்படிக் குறுக்கு வழியில் சம்பாதித்த என்ன சாதிக்கப்போகிறாய்?”

“இது என்ன கேள்வி… பணம்தான்… பணமிருந்தால் இந்த உலகத்தையே வாங்கலாம் தெரியுமா…”

“உலகத்தை வாங்கலாம் நிம்மதியை வாங்க முடியுமா உனக்கு….”

“அந்தப் பணமே நிம்மதி என்றால்…”

“சரி ஒருத்தரின் உயிரை…”

“யாருக்கு வேண்டும் உயிர்… இந்த உலகத்தில் நிரந்தரமில்லாதது எது தெரியுமா? இந்த உயிர்ததான். அது எப்போது போகும், எப்போது தங்கும் என்று நமக்கே தெரியாது. இருக்கும் வரைக்கும் பிடித்த வேலையைச் செய்தோமா, அனுபவித்தோமா… உன்னைப் போன்ற அழகிய பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்தோமா, போகும்போது சந்தோஷமாகப் போனோமா…  இதுதானே வாழ்க்கை…” என்று அவன் ரசனையுடன் கூற,

“சீ…! நீயெல்லாம்…! சத்தியமாகச் சொல்கிறேன் அரவன்…! உனக்கு நிம்மதியான சாவே வராது…! இருந்து பார்…! அழுந்தித் துடித்துத்தான் சாவாய்! எத்தனை பேரின் சாபம் உன்னைத் துரத்தும் தெரியுமா…” என்று அவள் ஆத்திரத்துடன் கூற.

“நிஜமாவா…” என்றவாறு சற்று நிமிர்ந்து, அங்கும் இங்கும் சுத்தவரப் பார்த்தான். பின் அவளை ஏறிட்டு,

“எங்கே… ஒரு சாபத்தையும் காணோம்…” என்றான் கிண்டலுடன். அவனைக் கொல்லும் வெறியுடன் பார்த்த இதங்கனை,

“அறிவிலிக்கு உரைப்பவன் அவனிலும் மடையன் என்பதை மெய்ப்பிக்கிறாய் அரவன்… ஆனால் ஒன்று சொல்கிறேன் கேள், நிச்சயமாக நீ நினைப்பது எதுவும் நடக்காது… உன்னுடையதும் அந்த ஆளியுரவனுடையதும் திட்டங்கள் பலிக்கவே பலிக்காது. வேண்டுமானால் இருந்து பார்… நிச்சயமாக நீ என் மகிந்தனின் கையால் பிடிபடுவாய்…” என்று உறுதியாகக் கூற, அவளைக் கிண்டலுடன் பார்த்தான் அரவன். பின்,

“உன் விருப்பம் நிறைவேற என் வாழ்த்துக்கள் அங்கனை…” என்றான்.

“என் பெயர் அங்கனையில்லை… இதங்கனை…” என்றாள் இவள் சுள் என்று.

“எனக்கு நீ அங்கனைதான் இதங்கனை… என்றவன் அவளை ரசனையுடன் பார்த்து,

“அங்கனை என்றால் பெண் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… ஆனால் நீ…” என்றவன் அவள் உடலை விழிகளால் ரசனையுடன் பார்த்தவாறெ. “உன் அங்கங்களைச் செறிவாகக் கொண்டவள்… அங்கங்களைக் கணையாக்கி என்னை வீழ்த்த முயல்பவள்..” என்று புது இலக்கணம் கற்பிக்க, இவளுக்கு ஏன்டா இவனிடம் வாய் கொடுத்தோம் என்றானது.

அதற்கு மேல் அவனோடு பேச்சுக் கொடுக்காமல் திரும்பிக்கொண்டாள் அவள். வேறு வழி? அவனோடு பேசினால் இவளுடைய இரத்த அழுத்தம் அல்லவா எகிறிப் போகிறது. நிச்சயமாக இவனோடு ஒரு நாள் நின்று பிடித்தாலும் இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும். முக்கியமாக இவனைப் பிடித்துக் காவல்துறையிடம் அதுவும் மகிந்தனிடம் ஒப்படைக்க முடியவில்லையே என்கிற எண்ணமே இவளை மேலும் அழுத்திக் கொல்லும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவள் முயற்சி செய்வாள். சிறிய வாய்ப்புக் கிடைத்தாலும், நிச்சயமாக இவனைக் கழுவேற்றி விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாள். அவளுக்கு வேண்டியதெல்லாம் வாய்ப்பு. சின்னதாய் ஒரு வாய்ப்பு. கிடைக்குமா? சோர்வுடன் அமர்ந்திருக்கும் போது, வண்டி இன்னொரு இடத்தில் நின்றது.

இப்போது எதை இந்த வண்டிக்குள் ஏற்றப் போகிறானோ. பீதியில் நின்றிருக்க, அந்த அரவன், தன் முன்னால் நின்றிருந்த சகாக்களைப் பார்த்தான். இருவரும் தலையை ஆட்டி விட்டு இறங்க,

“இது என்ன இடம்?” கேட்டவளிடம் மெல்லிய பரபரப்பு. அவளை ஒரு கணம் அழுத்தமாகப் பார்த்தவன், பின் கதவை மூடியவாறு,

“தெரிந்து என்ன செய்யப்போகிறாய்?” என்றான் அலட்சியமாக.

அவன் கதவைப் பூட்டியதும் இவளுக்குப் பயம் அப்பிக்கொண்டது. யாருமில்லாமல் அவனோடு தனியாக  இருக்க இருண்ட அந்த வாகனத்தில் இருக்கப் பயப்பந்து கிளம்பி இதயத்தைப் பலமாகத் துடிக்க வைத்தது.

அது கொடுத்த அச்சத்தில் ஒடுங்கி அமர்ந்தவாறு அவனைக் கிலியுடன் பார்க்க, இவனோ அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான். அவனுடைய விழிகளில் காமம் அப்பட்டமாக வழிந்தது. அதைக் கண்டதும் இவளுடைய உயிரே ஒரு கணம் விண்டுபோனது. நடுக்கத்தோடு மேலும் ஒடுங்கி அமர, இப்போது அவளை நோக்கி அவன் நகர்ந்து வரத் தொடங்கினான்.

“எ… என்ன செய்கிறாய்…?” திக்கித் திணற,

“பார்த்தால் தெரியவில்லை. இங்கே நீயும் நானும் மட்டும்தான் இருக்கிறோம்… அதனால்…” என்றவன் அவளை நோக்கிக் குனிந்தான். தன் கரங்களால் அவளுடைய உடலைத் தொடப் போக, பதறிப்போனாள் இதங்கனை.

“நோ… நோ… விடு என்னை…” துடித்துப் பதைத்தவாறு எழந்தவள் தொப்பென்று தரையில் விழ, குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் இதங்கைன.

அங்கே அந்த இராட்சதன், இருந்த இடம் மாறாமல் அதே இடத்தில் அமர்ந்தவாறு அவளை ஒரு மாதிரிப் பார்த்துக்கொண்டிருக்க, இவளோ பதட்டத்தோடு சுத்தவரப் பார்த்தாள்.

கடவுளே, அவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா? வெறும் நினைவு இத்தனை நிஜம்போல அவளை அலறடித்து விட்டதே. நம்ப முடியாமல் நிமிர்ந்து அவனைப் பார்க்க   அவன், பார்வை மாறாமல் அவளைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

உடனே எழுந்தவள் மீண்டும் பழையது போல அமர்ந்தவாறு அவனைத் திரும்பிப் பார்த்தாள். இப்போது அவன் நீட்டி நிமிர்ந்து மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு சாய்வாக அமர்ந்து விழிகளை மூடியிருந்தான்.

இதங்கனைதான் கொஞ்சம் குழம்பிப் போனாள். இவன் பெண்பித்தன் என்றார்களே. ஆனால் கிடைத்த இந்தத் தனிமையை அவன் கொஞ்சம் கூடத் தனக்கு சாதகமாகப் பாவிக்கவில்லையே.  குழம்பி நிற்கையில் அடுத்த ஐந்தாவது நிமிடம், வண்டியின் பின்கதவு தட்டுப்பட்டது.

உடனே விழித்துக் கொண்டவன் கதவைத் திறக்க, அந்த அரவனின் சகாக்கள்தான் கரங்களில் ஒரு பையோடு நின்றிருந்தார்கள். வந்தவர்கள் அதைத் திறந்து எதையோ பரிசோதித்து  விட்டு, ஒரு பொதியை அவனை நோக்கி நீட்டி,

“இது உங்களுக்கு மாமிசம் அற்ற உணவு…” என்றதும் உடனே வாங்கிக்கொண்டான் அந்த அரவன்.

அவளிடமும் இரண்டு பொதிகளை நீட்ட, சுத்தமாகப் பசிக்காவிட்டாலும் மறுக்காது வாங்கிக்கொண்டாள் இதங்கைன. அவள் வாங்கியதும், மீண்டும் அவர்கள் அந்த இடத்தை  விட்டு விலக, இவளோ, நம்ப முடியாதவளாக அரவனை  ஏறிட்டாள்.

அவனோ தன் உணவைச் சுற்றியிருந்த ‘மிஸ்டர் சப்’ இன் தாளைப் பிரித்து எடுத்து விட்டு, ஒரு அடி நீளமான அந்த சான்ட்விச்சின் முனையைப் பெரிதாக ஒரு கடி கடிக்க,

“ஏன் மாமிசமற்ற உணவு உனக்கு?” என்றாள் வியப்போடு. இவனோ வாய்க்குள் எடுத்ததை ரசித்து உண்டு விட்டு,

“நான் மாமிசம் உண்பதில்லை…” என்றவாறு, இன்னொரு வாய் கடித்து ருசிக்க, அதிர்ந்து போனாள் இதங்கனை.

“மாமிசம் சாப்பிடமாட்டாயா… அப்படியானால் நேற்று மூக்கு முட்டச் சாப்பிட்டாயே… இறால் வேறு உருசித்தாயே…”  திகைக்க, திரும்பி இவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான் அவன்.

“நான் இறால்தான் சாப்பிட்டேன் என்று கண்டாயா?” கேட்கத் தன்னை மறந்து விழிகளை விரித்தவள், அவனுக்கு ஊட்டியது நினைவுக்கு வர,

“நான்… நான் உனக்கு ஊட்டினேனே… நீ சாப்பிட்டாயே….” என்றதும் இப்போது வெளிப்படையாகவே குலுங்கி நகைத்தான் அரவன்.

“நீ ஊட்டினாய்தான்… ஆனால் நீ திரும்பும்போது அதை துப்பி விட்டேன். நீ மீண்டும் எனக்கு ஊட்டவேண்டுமே என்கிற பதட்டத்தில் கவனிக்கவில்லை…” என்று அழகாய் புன்னகைக்க அந்தப் புன்னகையையே எரிச்சலுடன் பார்த்தவள்,

“இப்படி சிரிக்காதே…. எரிச்சல் வருகிறது…” என்றாள் சுள்ளென்று. அவனோ ‘அப்படியா?’ என்பது போலப் பார்க்கத் தலையைக் குலுக்கியவள்,

“அதை விடு, மாமிசம் தின்னாத நீ எப்படி மாமிச மலையாக நிற்கிறாய்? உன்னால் எப்படி இரக்கமில்லாமல் கொலை செய்ய முடிகிறது… மாமிசம் சாப்பிடாதவன் சாத்விக குணத்தோடு இருப்பான் என்பார்களே…” இன்னும் அவளால் அவன் மாமிசம் உண்ண மாட்டான் என்பதை நம்பவே முடியவில்லை.

இவனோ மெதுவாக அதிலிருந்த வெங்காயத்தை மென்றவாறு அவளை ஏறிட்டுப் பார்த்தான். பின் ஒரு நிமிடத்தில் மிச்ச ‘சப்பை’ வயிற்றுக்குள் நுழைத்து விட்டு, அதைச் சுற்றியிருந்த தாளைச் சுருட்டி அங்கிருந்த பையில் போட்டவாறு, மெல்லிய ஏப்பம் ஒன்றையும்  விட்டு, சாப்பாட்டோடு வந்த தண்ணீர் போத்தலை எடுத்து அதன் மூடியைத் திறந்தவாறு,

“யார் சொன்னார்கள் மாமிசம் தின்னாதவர்கள் சாத்விக குணத்தோடு இருப்பார்கள் என்று. உனக்கு ஹிட்லரைத் தெரியும்தானே. அவர் சுத்தமாக மாமிசம் சாப்பிட மாட்டார். ஆனால் கொடூரமானவர்கள் என்று யோசிக்கும் போது அவர்தான் மனசில் வந்து நிற்பார்…” என்றான் நிதானமாக.

“அப்படியானால் நீ கொடூரமானவன் என்பதை ஒத்துக் கொள்கிறாயா?”

“நான் எப்போது நல்லவன் என்று சொன்னேன்… நான் மட்டுமில்லை. நிறையைப் பேர் கொடூரமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். என்ன… நான் வெளிப்படையாக உண்மையைச் சொலெ்கிறேன். நிறையப் பேரால் அது முடிவதில்லை…” என்றவனின் பேச்சை அலட்சியம் செய்து விட்டு,

“நீ ஏன் மாமிசம் உண்பதில்லை…”

“ஏன் என்றால், மிருக வதை எனக்குப் பிடிக்காது… அதனால்…” என்றதும் அதைக் கேட்ட இதங்கனைக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது.

“ஆனால் மனித வதை பிடிக்குமாக்கும்…” என்ற சிரிப்பை மீறிய எரிச்சலுடன் கேட்க,

“மிக மிகப் பிடிக்கும் அங்கனை. அதுவும் உன்னைப் போன்ற பெண்களை வதைப்பதென்றால் அதை விடப் பிடிக்கும் தெரியுமா?” என்றதும் கப்பென்று தன் வாயை மூடிக்கொண்டாள்.

இதற்கு மேல் பேசினால், அடுத்து வதை நீதான் என்று மறைமுகமாகச் சொன்ன பின்னும் பேச இவளுக்குப் பைத்தியமா என்ன? எரிச்சலோடு தன் கையிலிருந்த மிஸ்டர் சப்பை வெறிக்க,

“நீ சாப்பிடவில்லை?” என்றான் இவன் அக்கறையாக. சாப்பிடுவதா? அதுவும் இந்த அரக்கனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு. மறுப்பாகத் தலையை அசைத்தவள்,

“நீ பக்கத்தில் இருக்கும் போது எப்படிச் சாப்பிடுவது? பயத்தில் பசி மரத்துவிட்டது…” என்றாள் எரிச்சலுடன்.

அப்போதும் அசைந்தானா அவன்! தன் தோள்களைக் குலுக்கி விட்டு,

“அப்படியானால் இன்னும் நல்ல பசி உனக்கு வரவில்லை. பசி வந்தால் பத்தும் பறக்கும்… இந்தக் கோபம் தாபம் எல்லாம் ஓடிவிடும்…” என்று அக்கறையற்றுக் கூறி விட்டுத் தலையைப் பின்னே சரித்து விழிகளை மூட, எரிச்சலுடன் வெறிக்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில், கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு உருவம் குப்பிற, அவளுடைய காலடியில் வந்து  விழுந்தது.

What’s your Reaction?
+1
10
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!