(11)
கரங்களில் இரத்தம் வடிய, பற்களைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டு அவனோடு இழுபட்டுச் சென்ற இதங்கனைக்கு போராடத் தோன்றவில்லை. போராடிப் பயனிருக்குமா என்றும் தெரியவில்லை. தலைக்கு மேலே வெள்ளம் போயாயிற்று. இனி சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்கிற நிலையில் கண்களில் கண்ணீர் வழிய அவனோடு இழுபட்டுச் சென்றாள்.
அடுத்து காலில் எதுவோ தட்டுப்படக் குனிந்து பார்த்தாள். மங்கிய வெளிச்சத்தில் படிகள் தெரிந்தன. அவன் கடகடவென்று மேலே ஏற, இவளும் ஏறினாள். அடுத்து ஒரு கதவு தட்டுப்பட, அதைச் சடார் என்று திறந்தான் அவன்.
சட்டென்று பயங்கர வெளிச்சம் இவள் கண்களைக் கூசச் செய்ய, விழிகளை மூடியவள் மறு கரம் கொண்டு வெளிச்சத்திலிருந்து தன் விழிகளைக் காத்துக்கொள்ள முயல, அவனோ, தன் கைப்பேசியை எடுத்து யாருடனோ தொடர்பு கொண்டு,
“என்னாயிற்று…” என்றான். மறுபக்கம் சொன்னதை அவதானமாகக் கேட்டவன்,
“இன்னும் எவ்வளவு நேரம்…” அடுத்த பக்கம் சொன்னதைக் கேட்டவன்,
“எல்லாம் வண்டியில் ஏற்றியாயிற்றா…”
“குட்…” என்றவன் கைப்பேசியை அணைத்து பான்ட் பாக்கட்டிற்குள் வைத்து விட்டு, இவளைத் திரும்பிப் பார்த்தான். கண்களுக்குப் பழக்கமற்றுப் போன வெளிச்சத்திற்கு ஓரளவு பழக்கமாகி சுத்தவர மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் இதங்கனை.
வெளுறிய முகமும், வலி நிறைந்த கண்களும், கன்னத்தில் வடிந்த அந்தக் கண்ணீரும் இவனைச் சற்று உறுத்தியதோ, வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன், மீண்டும் அவளை இழுத்துச் சென்றான்.
சமையலறை போல ஒரு இடம். இவளோ குழப்பத்தோடு சுத்தவரப் பார்த்தாள். அது வீடு போலவும் இல்லை. வீடு போலவும் இருந்தது. பதினைந்தடிக்கு எட்டடி நீள அகலத்தில் ஆங்காங்கே சிறிய ஜன்னல்களுடன் இருந்தது அந்த சாவடி வீடு. ஜன்னலுக்கு அப்பால் எல்லாம் வெட்டவெளியாகத்தான் தெரிந்தது.
மீண்டும் திக் திக் நிமிடங்கள்தான். நிமிர்ந்து அந்த இராட்சதனைப் பார்த்தாள் இதங்கனை. இறுகியிருந்த முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.
அடுத்து என்ன செய்யப் போகிறான். கொல்லப் போகிறானா? கொல்வதென்றால் எப்படிக் கொல்வான். அன்று ஒருத்தனைக் கொன்றானே. அப்படிக் கொல்வானா? ஐயோ வலிக்குமே… அவன் குத்தவே தேவையில்லை, கரத்தை தூக்கினாலே போதும் இதயம் வெடித்து செத்துப் போவாள். நினைக்கும் போதே உதறியது.
மரண பயம்…! உலகத்தில் மிகப் பயங்கரமானது எது என்றால் அது மரணபயம் மட்டும்தான். அதைக் கண்கூடாகக் காணாதவர்களுக்கும் உணராதவர்களுக்கும் தெரியாது. ஆனால் அந்த பயத்தை சுவைத்தவனுக்குத்தான் அது எப்படி இருக்கும் என்று புரியும். சும்மா அடிவயிற்றை முறுக்கி மேலெழுந்து இதயத்தை ஒரு புரட்டு புரட்டி அப்படியே கிர் என்று எழுந்து உச்சியில் சென்று அடிக்கும். அப்போது இதயம் துடிக்கும் வேகம் இருக்கிறதே. அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதைக் கண் முன்னால் கண்டுவிட்டால், அத்தனையும் துச்சமாகிப் போகும். இப்போது அந்த நிலையில்தான் இருந்தாள் இதங்கனை.
அவனோ அங்கிருந்த கபேர்ட் ஒன்றைத் திறந்து அதிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்துப் பல்லால் அதன் மூடியைக் கடித்துத் திறந்தான். அதை அலட்சியமாக அங்கிருந்த மேடையில் போட்டு விட்டு அதிலிருந்து அகலமான பிளாஸ்தரையும், வெண்ணிறச் சுருள் துண்டையும் எடுத்தான். தொடர்ந்து அவளுடைய கரத்தைத் திருப்பிப் பார்க்க இவளோ தன் கரத்தை இழுக்க முயன்றாள். முடியவில்லை. எரிச்சலுடன் அவனைப் பார்த்தவள்,
“எப்படியும் என்னைக் கொல்லத்தானே போகிறாய்… எதற்குக் காயத்திற்கு மருந்திடுகிறாய்?” என்றாள் எழுந்த அழுகையை அடக்க முயன்றவாறு.
அந்த இராட்சசன் அவளை ஒரு பார்வை பார்த்தானன்றி எதுவும் பேசவில்லை. சற்றும் இரக்கமில்லாமல் துண்டொன்றில் ஏதோ மருந்தைப் பூசிக் காயத்தில் வைத்து அழுத்தித் துடைக்க, வலித்தது. ஆனாலும் கத்தவில்லை. கத்தாமல் பிடிவாதமாக இறுகிப்போய் நின்றிருந்தாள் இதங்கனை.
அவளுடைய காயத்தைத் துடைத்து விட்டு, இரத்தம் தோய்ந்த துண்டை ஒரு பக்கமாக வீசியவன், எடுத்த பிளாஸ்தரை காயத்தின் மீது ஒட்டி மேலும் இரத்தம் வராதிருக்கத் துண்டுச் சுருள் கொண்டு இறுகக் கட்ட, அவனை அந்த நிலையிலும் சிறு வியப்போடு பார்த்தாள் இதங்கனை.
அந்த இராட்சத குணத்திலும் கொஞ்சமே கொஞ்சமாய் மனித குணம் இருக்கிறதோ? என்று அவள் எண்ணி முடிக்கவில்லை, அவள் எண்ணத்தைப் பொய்யாக்கினான் அந்த அரவன்.
அவளுடைய காயத்தை இறுகக் கட்டிய பின், ஒரு கரத்தைப் பின்னால் எடுத்துச் சென்று ஷேர்ட்டை சற்று மேலே தூக்கிப் பான்டில் செருகியிருந்த துப்பாக்கியை வெளியே எடுக்க, இப்போது திக்கென்றானது அவளுக்கு.
ஐயோ, பலிகொடுக்கும் ஆட்டிற்கு முன்பே உணவு பரிமாறுவது போல, கொலை செய்ய முதலே இவளுடைய காயத்திற்குக் கட்டுப்போட்டுக் கொல்லப் போகிறானோ. விதிர் விதிர்த்தவளாக, அவனை வெறிக்க, அவனோ, அவளை அலட்சியம் செய்தவனாக, அவளுடைய மேல் கரத்தைப் பற்றியவாறு இழுத்துச் சென்றான்.
வெளியே வந்ததும் பயங்கரமாகக் குளிர் காற்று அவளை மொய்க்க, அந்தக் குளிர் கூட இவளுக்கு உறைக்கவில்லை. சற்றுத் தூரம் இழுபட்டுச் சென்றதும், அங்கே ஒரு கரிய நிறப் பெரிய வண்டி ஒன்று இவர்களுக்காகக் காத்திருந்தது. பின்பக்கம் முழுவதும் அடைத்திருந்தது. நெருங்கியவன், அந்த வண்டியை ஓங்கித் தட்ட, அடுத்த கணம், அதன் கதவு திறந்தது. உள்ளே அந்த வாகனத்தின் இருபக்க இருக்கைகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமர்வது போல அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கெனவே இரண்டு மல்லர்கள் ஒருபக்க இருக்கையை நிறைத்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் இவளுடைய இதயத்தின் துடிப்பு இன்னும் அதிகரித்தது.
பதறியவளாக உள்ளே ஏறமாட்டேன் என்பது போல விலக முயல, எங்கே…? அந்த இந்த இராட்சதனின் பிடியிலிருந்து இம்மியும் இவளால் விலக முடியவில்லை.
உள்ளே இருந்தவர்களையும் இவனையும் மாறி மாறிப் பார்த்தவள், பரிதாபமாக அரவனைப் பார்த்து மறுப்பாகத் தலையை அசைக்க,
“கெட் இன்…” என்றான் இவன்.
ம்கூம்… அந்த யமன்களோடு போவதை விடச் சாவதே மேல். இவளை உள்ளே தள்ளியதும் என்ன செய்வார்களோ. கற்பழிப்பார்களா. கற்பழித்தபின் கொலைசெய்வார்களா. கொலை செய்தபின் அவள் உடலை எங்கே போடுவார்களோ. அவளுடைய உடலை எப்போது கண்டுபிடிப்பார்களோ. இல்லை அடையாளம் தெரியாதவாறு துண்டு துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே குழிதோண்டிப் புதைத்துவிடுவார்களோ. எத்தனை செய்திகள் அவள் படித்திருக்கிறாள். எத்தனை செய்திகளை இது சார்ந்து எழுதியிருக்கிறாள். ம்கூம்… முடியாது. இவள் மேலும் திமிற. மறு கணம் அவளுடைய இடையைப் பற்றித் தூக்கியவன் ஒரு பாவப்பிள்ளையைத் எறிவது போல உள்ளே எறிய, அந்த இருவரின் கால்களுக்கும் அருகாமையில் தொப்பென்று விழுந்தாள் இதங்கனை.
அவள் உள்ளே விழுந்த கையோடு, பாய்ந்து உள்ளே ஏறி வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, உள்ளே அமர்ந்திருந்த ஒருவன் சரிந்து பின் கதவை மூட, உள்ளே மெல்லிய மின்விளக்குத் தானாக எரிந்து உள்ளே வெளிச்சத்தைப் பரப்பியது. அடுத்து ஒருவன் பலமாக வண்டியை இரு முறை தட்ட, அடுத்து அந்த வண்டி வேகம் எடுக்கத் தொடங்கியது.
இவர்களுடைய வாகனம் கண்ணுக்கு மறைந்த ஐந்தாவது நிமிடம் மகிந்தனின் ஜீப் அந்த இடத்தை வந்து சேர்ந்தது.
பரந்து வறண்ட இடத்தின் மத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சாவடியைக் கண்டதும், தன் துப்பாக்கியைத் தயாராக வைத்துக்கொண்டு தன் நண்பர்களோடு அந்த இடத்தைச் சுற்றி வளைத்த மகிந்தன் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கதவை நெருங்கினான்.
திரும்பி தன் சகாக்களைப் பார்த்துத் தலையசைத்து விட்டுக் காலால் சடார் என்று கதவைத் தள்ளி விட்டுத் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தவாறு உள்ளே பாய, அந்தோ பரிதாபம் வெறும் காற்றுதான் அவர்களை வரவேற்றது.
நீண்ட அந்த சாவடியில் மறைந்து கொள்வதற்கு எதுவுமே இல்லாமல் எல்லாம் வெட்ட வெளியாகத்தான் இருந்தது. ஒற்றைக் கட்டில். குட்டியாய் ஒரு சமையலறை. சற்றுத் தள்ளி ஒரு மேசை. சின்னதாக மென்னிருக்கை. முன்னால் ஒரு தொலைக்காட்சி.
அதைக் கண்டதும் மகிந்தனுக்குத் தலையை வலித்தது. இத்தனை முயற்சி செய்தும் அவர்களைப் பிடிக்க முடியவில்லையே. ஆத்திரமும் அவமானமும் அவனைக் கொல்லாமல் கொல்லக் காலைத் தரையில் உதைத்தவனுக்கு ஆத்திரத்தைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் சமாளித்தவனாக, தலையையும் முகத்தையும் ஒற்றைக் கரத்தால் அழுந்தத் தேய்த்துவிட்டவன், சோர்வோடு தன் நண்பர்களைப் பார்க்க, அவர்கள் ஏதாவது தடையம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவன் இரத்தத்தால் தோய்ந்திருந்த பஞ்சைக் கண்டதும்,
“மகிந்தன்… இதைப் பார்….” என்று அழைக்கச் சோர்வுடன் வந்து பார்த்தான் மகிந்தன். அங்கேயிருந்த இரத்தத்தாலான பஞ்சைக் கண்டதும் நெஞ்சை அடைத்தது அவனுக்கு.
இதங்கனையின் கரத்தில் செலுத்தியிருந்த ஜிபிஎஸ் ஐ அரவன் கண்டுபிடித்துவிட்டது புரிந்தது. இல்லையென்றால் ஒரு வாட்டி சமிக்ஞை செய்த ஜிபிஎஸ் அதன் பின் செயற்படவேயில்லை. இவ்வளவு இரத்தம் வரும் அளவுக்கு அவளைக் காயப்படுத்தியிருக்கிறானா. ஆத்திரம் வர, பிடரியை கரத்தால் அழுத்திக் கொடுத்த மகிந்தனுக்கு அவனையும் மீறிக் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.
எத்தனை வலியை அனுபவித்தாளோ. அவளை என்ன கொடுமை செய்தானோ. தவித்துப்போனான் அவள் காதலனாய். அதே வேளை அவன் நண்பன் ஒருவன், அந்தப் பாதாள அறையையும் கண்டுபிடிக்க, உள்ளே சென்று சுத்தவரப் பார்த்தான் மகிந்தன். என்னதான் சுத்தியும் எந்தத் தடையங்களும் கிடைக்கவில்லை அந்த இரத்தக்கறை படிந்த பஞ்சைத் தவிர.
ஏமாற்றமும் தோல்வியும் அவனைச் சூழ, சோர்வுடன் அந்த இடத்தை விட்டு வெளியே வந்த மகிந்தன், வாசலிலேயே தொப்பென்று அமர்ந்தான். ஏனோ அத்தனை இடங்களும் அடைத்து விட்டாற் போன்ற உணர்வில் அலமலந்துபோய் இருந்தான்.
அதே நேரம் இங்கே அந்த மூன்று மல்லர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்த இதங்கனை திருதிரு என்று விழித்துக்கொண்டிருந்தாள்.
அவள் ஒரு பெண். மூன்று ஆண்கள். அதுவும் மல்லர்கள். அவளோடு தப்பாக நடந்து கொண்டால்… அச்சத்தில் பிடரி மயிர் சிலிர்த்தது. நடுக்கத்தோடு கூனிக் குறுகி கால்களை மடித்து முழங்கால்களை அணைத்தவாறு அமர்ந்திருக்க, உயிரோ இப்போது போகவா? அல்லது சற்றுப் பெறுத்துப் போகவா? என்று அவளிடமே விசாரித்துக்கொண்டிருந்தது. குளிர் வேறு ஊசியாகக் குத்தியது. அந்த அரை குறை ஆடையோடு எப்படிக் குளிரிடமிருந்து தப்பிப்பது. ஒரு கட்டத்தில் அவளையும் மீறி உடல் தளர்ந்து போக, விழிகள் மூடிக்கொள்ள. உறங்கினாளா, மயங்கினாளா என்று அவளுக்கே தெரியாமல் ஒரு பக்கமாகச் சரிய, சரிந்தவளின் தலை, அமர்ந்திருந்த அரவனின் முழங்காலின் மீது முட்டி நின்றது.
தன் காலில் தலை சரிந்தவளை விழிகளை மட்டும் இறக்கிப் பார்த்தான் அவன். பின் என்ன நினைத்தானோ, தன் முன்னால் அமர்ந்திருந்த சகாக்களிடம்,
“போர்வை எடு…” என்றதும், அவன் உடனே இருக்கைக்கு அடியில் இறுக்கமாகக் கட்டியிருந்த ஒரு பாலிதின் பையை எடுப்பதற்காகக் குனிந்த நேரம், கூனிக் குறுகிப் அமர்ந்திருந்தவளின் கால்களைப் பற்றி நேராக்கி ஒரு இழுவை இழுத்தான் அரவன். மறு கணம் மல்லாக்காகத் தலை அடிபடச் சரிந்தவளின் தலை வாகனத்தின் தளத்தில் விழாது ஒற்றைக் கரம் கொண்டு தாங்கி மெதுவாகக் கீழே வைத்தவன், தன் முன்னால் நீட்டப்பட்ட போர்வை அடங்கிய பையை வாங்கி, அதைத் திறந்தான்.
அது வரை காற்றை வெளியேற்றி இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த பை, காற்றை உள்வாங்கியதும் வீங்கத் தொடங்கியது. போர்வையை வெளியே எடுத்து, குளிருக்கு இதமாக அவள் உடலைப் போர்த்து விட, அவன் முன்னால் அமர்ந்திருந்த சகாக்களோ அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
இவன் நிமிர்ந்த போது, சகாக்களின் வியந்த பார்வைதான் வரவேற்றது. தன்னை ஒரு மாதிரி பார்த்தவர்களை ஏறிட்டு,
“வட்…” என்றான் எரிச்சலுடன்.
உடனே தங்கள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டவர்கள், எந்த உணர்ச்சியும் இல்லாமல் மறுப்பாகத் தலையை அசைத்து விட்டு எங்கோ பார்க்க, அவர்களைக் குறுகுறு என்று பார்த்தவன், பின், தன் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூடிக்கொண்டான். அந்த நிலையிலும் நித்திரை சுகமாக அவனை ஆட்கொண்டது.
அவனுடைய சகாக்களோ, அவன் தூக்கியதும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தமாகப் பார்த்து விட்டு உடனே பார்வையை மாற்றிக்கொண்டனர்.
எத்தனை நேரப் பயணமோ இதங்கனை அறியாள். மீண்டும் விழிகளை விரித்த போது, கடும் இருட்டாக இருந்தது. விழிகளை மூடி மூடித் திறந்து பார்த்தும் புத்திக்கு எதுவும் புலப்படவில்லை.
எழுந்தமர, அதுவரை குளிர் தெரியாமல் அவளை அணைத்திருந்த அந்தப் போர்வை வழிந்து விழ, அதைக் கரம்பற்றித் தூக்கிப் பார்த்தாள். பெரும் அக்கறைதான்… எரிச்சலுடன் அந்தப் போர்வையை உதறித் தள்ளி விட்டு எழ முயன்றவளின் காலைப் போர்வை இழுத்துப் பிடிக்க, பிடிமானம் இல்லாமல் பின்புறமாகச் சரிந்தாள் இதங்கனை. சரிந்தவளின், தலை நங்கென்று வாகனத்தின் தடுப்போடு முட்டுப்பட்டதும் பயங்கரமாக வலித்தது.
“ம்மா…” என்று முனங்கியவாறு மீண்டும் சரிந்து கீழே அமர்ந்தவள், தலையை வருடிக் கொடுப்பதற்காகக் கரத்தைத் தூக்க அதுவும் பயங்கரமாக வலித்தது. சலிப்புடன் கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். கட்டையும் மீறிக் கசிந்த இரத்தம் காய்ந்துபோய் இருந்தது. ஆனானும் வலி பிறாண்டியது. தலையை அழுத்திக் கொடுப்பதா, இல்லை கரத்திலிருந்த காயத்தை வருடிக் கொடுப்பதா என்று தடுமாறியவள், இறுதியில் தலையின் வலியே அதிகமாகத் தெரிய, அதை அழுத்திக் கொடுத்தாள். நன்றாகவே தலை வீங்கியிருந்தது.
“ம்மா…” என்று முனங்கியவாறு எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் சுத்தவரப் பார்த்தாள். அவளோடு வந்தவர்களைக் காணவில்லை… எங்கே போனார்கள்? அவர்களை நினைத்ததும் மீண்டும் அடிவயிற்றைக் கலக்கியது. பேசாமல் உறக்கம் விட்டு எழாமலே இருந்திருக்கலாமோ என்று ஏக்கம் வேறு பிறந்தது.
இப்போது வண்டியில் அசைவில்லை என்பதால் அது எங்கோ தரித்து நிற்கிறது என்று புரிந்தது. உடனே தன் வலியை மறந்தவளாகத் தவழ்ந்து வந்து மூடியிருந்த கதவைத் தள்ளிப் பார்த்தாள். மெதுவாகத் திறந்தது கதவு. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னக் கடும் இருட்டுதான் அவளை வரவேற்றது.
அதுவரை இருந்த அழுத்தம் மங்க உற்சாகம் பிறந்தது. சத்தப் போடாமல் மெதுவாக எட்டிப் பார்த்தாள். சற்றுத் தொலைவில் அந்தக் கடும் குளிரைப் போக்குவதற்காக நெருப்பு ஏற்றப்பட்டிருந்தது. அங்கே ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தான். அவனின் முதுகுதான் தெரிந்தது. மற்றவர்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே போயிருப்பார்கள்? அங்கும் இங்கும் பார்த்தாள். இருண்ட பிரதேசமும், அதில் அடர்ந்திருந்த மரங்களும்தான் தெரிந்தன.
இப்போது ஒருவன் மட்டும்தானே இருக்கிறான்… இதைவிடத் தப்பிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. மற்ற இராட்சதர்கள் வர முதல் தப்பித்துவிடவேண்டும். முடிவு செய்தவளாக, சத்தம் போடாமல் ஜீப்பை விட்டுக் கீழே குதிக்க வெறுங்கால் தரையில் பட்டதும் குளிர் சுள்ளென்று உச்சியைச் சென்று அடித்தது. அது கொடுத்த அதிர்ச்சியில் தன்னை மறந்து சத்தம் எழுப்பத் தொடங்கியவள், உடனே வாயை மூடிக்கொண்டாள்.
அவளே அவளைப் பிடித்துக்கொடுத்துவிடுவாள் போலயே. இப்போது மிகக் கவனமாகச் சத்தம் போடாமல் இரண்டடி நடக்கத் தொடங்கியவள், அடுத்து வேகம் பிடிக்க, இருபதடி கூட ஓடியிருக்க மாட்டாள். ஒரு பரந்த மரத்தோடு இல்லை இல்லை ஒரு மனிதனோடு மோதுப்பட்டு நின்றாள்.
ஐயோ…! அவ்வளவுதானா… அத்தனை முயற்சியும் வீணாகிவிட்டதா? கண் மண் தெரியாத ஆத்திரமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. இருந்தாலும் தன் முயற்சியைக் கை விடாமல், மோதுப்பட்டவனைத் தள்ளி விட்டு ஓட முயல அசைகிற உருவமா அது.
தளர்ந்தவளுக்கு அழுகை வேறு வந்தது. கண்களில் கண்ணீர் பொங்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள். வேறு யார்? அந்த அரவன் இராட்சசன்தான் அவளைக் கிண்டலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன, தப்பியோடும் முயற்சியா…” என்று கேட்க,
“ஆமாம்…” என்றாள் எரிச்சலோடு. அதைக் கேட்டு அழகாய் சிரிப்பது அந்த மங்கிய வெளிச்சத்திலும் நன்கு தெரிய, இருந்த ஆத்திரத்தில், சிரிக்கும் அந்த வாயைப் பிய்த்துப் போட்டால் என்ன என்று கூடத் தோன்றியது. ஆனால் முடியாதே… எரிச்சலோடு பற்களைக் கடிக்க அவனோ அவளுடைய மேல் கரத்தைப் பற்றினான்.
உடனே அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றவாறு,
“என்னால் வர முடியும்… விடு கையை…” என்று சீற, அவனோ நிதானமாக சுத்தவரப் பார்த்தான். பின் அவளை ஏறிட்டு,
“இந்த இருண்ட இடத்தில் உன்னோடு சடுகுடு விளையாட எனக்கு நேரமில்லை இதங்கனை… அதை விடச் செய்யவேண்டிய முக்கிய வேலைகள் எனக்கு உண்டு… வேண்டுமானால் ஒன்று செய்… வந்து என்னோடு உட்கார். உட்கார்ந்து வேறு எந்த வழியில் எங்களிடமிருந்து தப்பிக்கலாம் என்று யோசி…” என்றவாறு இவளை இழுத்துக்கொண்டு செல்ல, வேறு வழியில்லாமல் அவனோடு இழுபட்டு நடக்கத் தொடங்கினாள்.
வேறு வழி? அவள் என்னதான் வேகமாக ஓடினாலும் சுலபமாக அவனால் பிடித்துவிட முடியுமே. வெறும் ஐந்து பாகை வெப்பநிலையில் இந்த ஆடையோடு பாதணிகளும் இல்லாமல் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவும் முடியாது.. அதுவும் இந்தக் காட்டுப் பகுதிக்குள் ம்கூம் வாய்ப்பேயில்லை… இப்போெது வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால் என்ன? தப்பியோடும் வழி கிடைக்காமலா போகும். நிச்சயம் கிடைக்கும்… அந்த நேரம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். முடிவுசெய்தவளாக அவனோடு இழுபட்டவாறு நடந்தாள் இதங்கனை.