Thu. Sep 19th, 2024

நீ பேசும் மொழி நானாக – 21

(21)

 

சற்றுத் தூரம் சென்றும் இருவரையும் காணவில்லை. தன்னை மறந்து “நிரந்தரி…” என்று அழைத்துப் பார்த்தான். எங்கும் மயான அமைதி.

 

“தாமரை…” என்று கூப்பிட, எங்கிருந்தோ முனங்கும் குரல் கேட்டது.

 

புதறியடித்துக்கொண்டு அந்த இடம் நோக்கிப் போகத் தரையில் குப்புற விழுந்திருந்தாள் தாமரை. பதறியவாறு அவளை நிமிர்த்தி, அவள் கரங்களில் பதிந்திருந்த குறுங் கற்களைத் தட்டிவிட்டவாறு,

 

“தாமரை… என்னம்மா ஆச்சு… நிரந்தரி எங்கே…” என்றான் பதற்றமாக.

 

“அண்ணா… நாங்கள்… வந்துகொண்டிருந்தோம்… திடீர் என்று நம் மீது மூவர் பாய்ந்து, வாயைப் பொத்தி இழுத்து வந்தனர். பிறகு என்னை இங்கே தள்ளிவிட்டு அண்ணியை மட்டும், அந்தப் பக்கமாகக் கொண்டு செல்கிறார்கள் அண்ணா…” என்று பதறியவாறு உடல் நடுங்கத் தாமரை கூற, இவனுக்கு ஒரு கணம் சப்த நாடியும் ஒடுங்கியது.

 

முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றவன், தன் முன்னால் நிற்பவளைச் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமிருந்ததால்,

 

“ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை… இதோ பார்… நான் அண்ணியைத் தேடிப் போகிறேன்… நீ அண்ணாவிடம் போ…” என்று விட்டுப் பின் எதையோ யோசித்தவனாக,

 

“இதை யாரிடமும் சொல்லாதே தாமரை… ப்ளீஸ்…” என்றான்.

 

தவறு நிரந்தரியின் மீது இல்லை என்றாலும், வள்ளியம்மை, நிரந்தரியின் மீதுதான் பழியைப் போடுவாள்.

 

அது புரிந்தவாறு தலையை அசைத்த தாமரை, தயக்கமாக சர்வாகமனைப் பார்த்து,

 

“அண்ணா… அண்ணி…” என்றாள் அழுகையில் குரல் அடை பட.

 

“உன் அண்ணி என் பொறுப்பு… அவளுக்கு எதுவும் ஆகாது. ஆகவும் விடமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யு…” என்று உறுதியாகக் கூறியவன், பின்,

 

“நீ தனியாகப் போய்க்கொள்வாய் அல்லவா?” என்றான்.

 

“என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் அண்ணா… அண்ணி தான்…” என்று கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு கூற,

 

“நீ போ… நான் பார்த்துக்கொள்கிறேன்…” என்று கூறிவிட்டுத் தாமரை கூறிய இடத்தை நோக்கி. வேகமாக நடக்கத் தொடங்கினான்.

 

அவனுடைய இதயம் தொண்டைவரை வந்து துடித்தது. அவனையும் மீறி உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. அவளால் கத்தக் கூட முடியாதே. இத்தனை நேரத்தில், அவளுக்கேதாவது நடந்திருக்குமா? என்கிற பரிதவிப்புடன் ஓடினான் சர்வாகமன்.

 

அப்போதுதான் எங்கோ, யாரோ முனங்கும் சத்தம் கேட்டது. அந்த இடத்தை நோக்கிப் பாய, அங்கே கண்ட காட்சியில் விதிர் விதிர்த்துப் போனான் சர்வாகமன். அப்படி ஒரு காட்சியை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

முன்பு சர்வாகமனிடம் குத்துவாங்கிய விக்ரம், தரையில் விழுந்திருந்தான். அவனுடைய முகம் சிதைந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. நான்கடி தள்ளி, நிரந்தரி பெரும் ஆவேசத்துடன் கரத்தில் பெரிய கல்லொன்றைத் தூக்கிவைத்திருக்க அவளைப் பிடித்து அடக்க முயன்றுகொண்டிருந்தனர் மற்றைய இருவர். அந்த இரு ஆண்களாலேயே அவளுடைய வேகத்தை அடக்க முடியவில்லை.

 

சீறிப்பாய நினைக்கும், வேங்கையென ஒரு விதமான ஆவேச அலறலுடன் மூச்சு அதுவும் சீற்றமாக வெளிவந்துகொண்டிருக்க, இரு விழிகளிலும். அனல் பறக்க, உரு வந்தவள் போல அவன் மீது மீண்டும் கல்லைப் போடும் நோக்கில் துடித்துக்கொண்டிருந்தாள் நிரந்தரி.

 

அந்தக் காட்சியைக் கண்ட சர்வாகமனுக்குப் பெரும் நிம்மதியாகிப் போனது. அவனுடைய உள்ளம் கவர்ந்தவள் ஒன்றும் கோழையல்ல. தேவைப்பட்டால், எதிரிகளை வெட்டிச் சாய்க்கும் வீரப் பெண்.

 

அது வரை அழுத்தியிருந்த பாரம் அவனை விட்டு மாயமாக மறைய, உடல் இளகப் பெரும் நிம்மதியுடன், குனிந்து தன் முழங்கால்களில் இரு கரங்களையும் பதித்து, ஆழ்ந்த பெரிய மூச்சுக்களை எடுத்துச் சமப்படுத்தினான். ஓரளவு அவனுடைய படப்பு மட்டுப்பட்டது.

ஏனோ விரைந்து சென்று அவளை அடக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவேயில்லை. தப்பாக நெருங்க முயன்றவனுக்கு அவள் கொடுத்த தண்டனை சரியானதே என்று அவனுடை உள்ளம் சொன்னது. சற்று நேரம் அப்படியே நின்றவன், தலையை மட்டும் தூக்கி, அவளைப் பற்றியிருந்த இருவரையும் கொலைப் பார்வை பார்த்து விட்டு எழுந்தான்.

 

எங்கே அவளை விட்டால் மீண்டும் சென்று தங்கள் நண்பனின் முகத்தில் கல்லைப் போட்டுவிடுவாளோ என்று அஞ்சியவர்களாக, அவளை விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் அவர்கள் அல்லாடிக்கொண்டிருக்க, நிதானமாக அவர்களை நெருங்கினான் சர்வாகமன்.

 

தன்னவளை நெருங்கியவன், கொடூரமான கோபத்துடன் மூசியவாறு நின்றிருந்தவளின் முன்னால் போய் நின்று, அவள் கரத்திலிருந்த கல்லை வாங்க முயல, அவளோ தன் முன்னால் விழுந்திருக்கும் விக்ரமின் நண்பன் என்கிற ஆத்திரத்தில் திரும்பி சர்வாகமனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க அவளுடைய கடூரம் சற்றுக் குறைந்து உடல் தளர்ந்தது.

 

மெல்லிய கேவலுடன் அவனைப் பார்க்க, மென் புன்னகையுடன், அவள் கரத்திலிருந்த கல்லைப் பறித்துத் தூர எறிந்து விட்டு, மெதுவாகத் தன் விழிகளை நிமிர்த்தி அவளைப் பற்றியிருந்தவர்களைப் பார்த்தான். அவனுடைய பார்வையின் வீச்சில், தம்மை மறந்து நிரந்தரியைக் கைவிட, அதுவரையிருந்த பலம் வடிந்து போகக் கால் மடித்து விழ இருந்தவளைப் பற்றித் தன்னோடு தாங்கிக்கொண்டான் சர்வாகமன்.

 

“ஹே… டோன்ட் வொரி… ஹனி… யு டிட் எ குட் ஜாப்…” என்று அவளைத் தட்டிக்கொடுத்தவன், பின் தன்னவளை அழைத்துச் சென்று அங்கிருந்த பாறையொன்றில் அமர்த்திவிட்டு,

 

“ஐந்து நிமிடம்… ஜெஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்… இங்கே உட்கார்ந்துகொள்…” என்று வேண்டியவன், அங்கே தங்கள் நண்பனைத் தூக்க முயன்றுகொண்டிருந்தவர்களை நெருங்கினான்.

 

சர்வாகமன் தங்களை நோக்கி நெருங்கியதும், சற்றுப் பயத்துடனேயே நண்பனை விட்டு எழுந்து நின்றவர்களைப் பார்த்து சிரித்துவிட்டுப் பின், திரும்பித் தன்னவளைக் கம்பீரமாகப் பார்த்தான். பின் திரும்பி கீழே முகம் சிதைந்த நிலையிலிருந்தவனைப் பார்த்து,

 

“ச்சு ச்சு ச்சு…” என்று உச்சுக் கொட்டிவிட்டு,

 

“ப்ளாஸ்டிக் சேர்ஜரி செய்தாலும், முகம் திரும்பக் கிடைப்பது சந்தேகம்தான்…” என்று வருந்துவது போலக் கூறிவிட்டுப் பின், முன்னால் நின்றவர்களைப்  பார்த்து,

 

“பெண்தானே… எதையும் செய்யலாம் என்று நம்பிக் களத்தில் இறங்கியிருப்பீர்கள்.. இத்தகைய பதிலடி கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை அல்லவா?” என்றவன் பின் நிமிர்ந்து தன் பான்ட் பாக்கட்டில் கரங்களை விட்டு,

 

“அவள் என்பதால், உயிராவது மிஞ்சியிருக்கிறது… இதுவே நானாக இருந்திருந்தால்… அது கூட மிச்சமிருக்காது…” என்றவன் பின் தன் கரங்களை வெளியே எடுத்து மார்புக்குக் குறுக்காகக் கட்டி,

 

“ஐ ஆம் ரெடி டு ஃபைட் வித் யு… வட் எபவுட் யு…” என்றான் சர்வாகமன் அலட்சியமாக. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டுப் பின் தமது நண்பனைத் தயக்கமாகப் பார்த்தனர். அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது. பின் நிமிர்ந்து சர்வாகமனைப் பார்த்து,

 

“சாரி சார்… இவன்தான் இந்தப் பெண் வேண்டும் என்று எங்களை அழைத்தான்…” என்று கூற,

 

“நண்பன் அழைத்தான் என்பதற்காக வந்தது தப்பில்லை… ஆனால் அவன் செய்த காரியத்திற்கு உடந்தை போக முயன்றீர்கள் பாருங்கள்… அது தப்பு… ஒரு பெண்ணை அனுமதியின்றி தொடுவது எத்தனை பெரிய பாதகச் செயல் என்று தெரியுமா? ஏன் நாளை உங்கள் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு இத்தகைய நிலை வராது என்ற என்ன நிச்சயம்? ஒரு நண்பன் தவறு செய்யும் போது, அதைத் திருத்துபவன்தான் உன்மையான நண்பனாக இருக்க முடியும்… உங்கள் நண்பன் கேட்கிறான் என்று யாரோ ஒரு பெண்ணைக் கடத்த முன் வந்திருக்கிறீர்களே… இதே நண்பன், உங்கள் அம்மாவையோ, அக்கா தங்கையையோ கேட்டால் கடத்திச் சென்று கொடுத்துவிடுவீர்களா” என்றவனின் குரலில் என்னதான் அடக்கியும் வெளிவந்த சீற்றத்தை அவனால் சற்றும் அடக்க முடியவில்லை.

ஆனால் அவர்களோ, கோபத்துடன்,

 

“சார்…” என்று கூற,

 

“வலிக்கிறது அல்லவா? அப்படித்தானே இன்னொரு பெண்ணுக்கும் இருக்கும்… தன் உணர்வே இல்லாத பெண்ணைச் சீரழிப்பது, குழந்தைகளைச் சீரழிப்பது… தான் யார் என்பதே தெரியாத பெண்ணைச் சீரழிப்பது… சே… ஏன்டா.. பெண்கள் என்றால், அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா உங்களுக்கு… மனிதப்பிறவி அதுவும் ஆணாகப் பிறப்பதே கேவலமானது என்று எண்ணும் அளவுக்கு நடந்து கொள்கிறீர்களே… வெட்கமாக இல்லை…” என்ற சர்வாகமனுக்குத் தன்னை அடக்குவதே பெரும் பாடாக இருந்தது. பின் எதையோ யோசித்துத் தன் தலையைக் குலுக்கிக் கொண்டவன்.

 

“உங்களை அடித்து நொறுக்க ஒரு விநாடி கூடத் தேவையில்லை… ஆனால் இப்படிப் பயந்து நிற்கும் போது, என் வீரத்தை உங்களிடம் காட்டுவது… என் ஆண்மைக்கு இழுக்கு…” என்று விட்டுப் பின் திரும்பி அருவெறுப்புடன் விக்ரமைப் பார்த்துவிட்டு, பின் அவர்களை ஏறிட்டு, “ஆனாலும் என்னவளைத் தொட்ட உங்களை சும்மா விடவும் மனசில்லை… என்ன செய்யலாம்?” என்று அவர்களிடமே ஆலோசனை கேட்டான்.

 

அவர்களோ அச்சத்துடன், “சாரி சார்… தெரியாமல் செய்துவிட்டோம், சத்தியமாக இனி ஒரு முறை இப்படிச் செய்யமாட்டோம்… மன்னித்துவிடுங்கள் சார்…” என்று அவர்கள் கெஞ்ச,

 

“சரி… சரி… ஓக்கே… நீங்கள் இப்படிக் கேற்பதால்…” என்றவன், அவர்களை நெருங்கி, ஒருவனின் கரத்தைப் பற்றிப் பின்பக்கமாகக் கெண்டு சென்று, ஒரு திருப்புத் திருப்பி, இழுத்து விட, அவனுடைய கைமூட்டுப் பிசகி இடம் பிறழ்ந்து தொங்கியது. அந்த வலியில் அவன் கத்த முயன்ற விநாடி, மறு கரத்தை எடுத்து அவனுடைய வாயில் வைத்து அழுத்த, அந்த சத்தம் தடைப்பட்டு அப்படியே மயங்கி விழுந்தான் அவன்.

 

இப்போது மற்றவனைப் பார்த்து அவனை நோக்கி நெருங்க, அவனோ விட்டால் போதும் என்று ஓடத் தொடங்கினான். ஓடத்தொடங்கியவனின் முன்னால் பெரிய பள்ளம் தெரிய, திரும்பிச் சர்வாகமனைப் பார்த்தான்.  அவனிடம் சிக்குவதை விட, பள்ளத்திற்குள் விழுவது பரவாயில்லை என்கிற யோசனையில், கண்ணை மூடிக்கொண்டு அங்கிருந்து குதித்தான் அவன். அதைப் பார்த்த சர்வாகமனின் முகத்தில் பரிதாபம் தோன்றியது.

 

“ச்சு ச்சு ச்சு… அவசரப்பட்டுவிட்டாயே…” என்று கூறியவனின் கவனம் அந்தப் பாறையில் அமர்ந்தவாறு இவனையே வியப்பு மாறாமல் பார்த்துக்கொண்டிருந்த நிரந்தரியிடம் சென்றது.

 

“யு ஓக்கே பேபி…” என்றவாறு அவளை நெருங்கி, வேகமாக அவளைத் தன்னோடு இழுத்து அணைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே நின்றான்.

 

“மிகவும் பயந்துவிட்டேன் தெரியுமா?” என்று வலியுடன் கூறியவன், அவள் முகத்தைப் பற்றித் தூக்கி,

 

“நிஜமாக உனக்கொன்றும் இல்லை அல்லவா?” என்று பரிதவிப்புடன் கேட்டான். அவளோ இல்லை என்று மறுப்பாகத் தலையை ஆட்ட,

 

“சரி… வா போகலாம்…” என்றவாறு அவளைப் பற்றித் தூக்க, அப்போதுதான், நிரந்தரியும், தன், காலில் சுழீர் என்று எழுந்த வலியைத் தெரிந்துகொண்டாள். தன்னையும் மறந்து “ஆ…” என்று முனங்க,

 

“வட்…” என்று பதறியவாறு, வேகமாக அவளை நெருங்கினான் சர்வாகமன்.

 

நிற்க முடியாது தடுமாறியவள், தன்னை நிலைப்படுத்த எந்தப் பிடிமானமும் இல்லாது போகத் தனக்கு முன்னால் நின்றிருந்தவனின் சட்டையின் முன் புறத்தை இறுகப் பற்றியவாறு தடுமாற, அவளை நிலைப்படுத்தும் நோக்கில், இடயிலே கரங்களைப் பதித்து,

 

“என்னாச்சுமா?” என்றான் பதட்டத்துடன். அந்தக் குரல்.. ஆழமான, கம்பீரமான குரல் சிறிது குழைந்து வேதனையைச் சுமந்துவர, சற்று உடைந்துதான் போனாள் நிரந்தரி.

 

விழிகளில் கண்ணீர் நிறைய, நடுங்கிய உதடுகளை இறுகப் பற்றிக் கடித்தவாறு அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்க, அந்த நிலையிலும் சிறைப்பட்ட உதடுகளை  அவசரமாகத் தன் பெருவிரல் கொண்டு விடுவித்தவன்,

 

“என்னடா?” என்றான் கனிவுடன்.

 

சுளுக்கிய வலது காலின் தொடையைப் பற்றியவாறு தடுமாறியவளின் நிலையைப், புரிந்துகொண்ட சர்வாகமன், சற்றும் தாமதிக்காது அவளைப் பற்றிப் பாறையில் இருத்திவிட்டு, அவளுக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்தான்.

 

அவளுடைய வலது கால் பாதத்தைத் தன் கரத்தில் ஏந்த முயல, பதறிய நிரந்தரி, அவன் கரத்தைத் தடுத்தாள்.

 

இப்போது கோபத்துடன் நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தவன்,

 

“எதற்குத் தடுக்கிறாய் நிரந்தரி… நான் ஒரு டாக்டர்… உன் காலுக்கு என்னவாகிவிட்டது என்று நான் பார்க்கவேண்டும்… ப்ளீஸ்… என்னைத் தடுக்காதே…” என்று அழுத்தமாகச் சொன்னவன், அவளுடைய கரத்தைத் தள்ளிவிட்டு மீண்டும் காலைத் தன் கரத்தில் ஏந்த முயல, அவளோ தன் காலை மேலும் பின்னுக்கு இழுத்துச் செல்ல முயன்றாள்.

 

“ஸ்டாப் இட்… நிரந்தரி…” என்று கூறியவன் அவள் தடுப்பதையும் பொருட்படுத்தாது, பாதத்தைப் பற்ற, அதில் ஏற்பட்ட வலியில் முகம் சுருங்கக் கத்தக் கூட முடியாமல் இவள் தவிக்க, அவனோ, பாதத்தை மறைத்திருந்த சேலையைத் தூக்கிப் பார்த்தான். பெருவிரல் பக்கம், நகம் கழன்று, இரத்தம் கசிந்துகொண்டிருக்க, வலது கால் பாத மூட்டுச் சற்று விலகியிருந்தது. அதைக் கண்டதும், ஏனோ இவனுக்கு இதயம் கலங்கியது.

 

அவளை இழுத்துச் சென்ற நேரத்தில், இந்தக் காயம் பட்டிருக்கவேண்டும்… தன்னையும் மறந்து அந்தக் காயத்தையும், விலகிய மூட்டையும் மெதுவாக வருடிக்கொடுத்தவனுக்கு விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.

 

எத்தனையோ நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தவன் தான். அதுவும் இருதய அறுவைசிகிச்சை செய்தவன். அத்தனை பேருக்கும் தோன்றாத, பயமும் பதற்றமும், முதன் முதலாகத் தன் முன்னால் நின்றிருந்தவளின் பாத மூட்டு விலகியதற்கு அவனிடம் தோன்றின. இப்போது இந்தப் பாதத்தைத் திருப்பவேண்டும்… ஆனால் வலிக்கும். உயிர்போகும் அளவிற்கு வலிக்கும்… அதை இவள் தாங்குவாளா? இவள் தாங்குவாளோ இல்லையோ… நிச்சயமாகத் தன்னால் தாங்க முடியாது என்பது சர்வாகமனுக்குப் புரிந்தது.

 

உள்ளம் நடுங்க, மெதுவாக நிமிர்ந்து அவளைப் பார்த்து,

 

“கண்ணம்மா… பாத மூட்டு விலகியிருக்கிறது, அதைச் சரியாக்கவேண்டும்… வலிக்கும்… தாங்கிக்கொள்வாயா?” என்றான் வலியுடன். ஏனோ அவனுடைய கசங்கிய முகத்தைக் கண்ட நிரந்தரிக்குத் தன் வலி மறைந்துபோனது.

 

பலமாக ஆம் என்பதுபோலத் தலையை ஆட்ட,

 

“யு ஷ_ர்…?” என்று கேட்க, அவள் மீண்டும் ஆம் என்றாள்.

 

எத்தனை வலிகளைத் தாங்கியிருக்கிறாள்… இதைத் தாங்கமாட்டாளா? மெதுவாகப் பாதத்தைத் திருப்ப, நிரந்தரியின் விழிகள் இறுக மூடிக்கொண்டன. உடல் இறுகி நடுங்கியது. அவளின் பயத்தைப் புரிந்துகொண்ட சர்வாகமன்,

 

“நிரந்தரி… லுக் அட் மை ஐஸ்…” என்றான் மென்மையாக. அவன் கட்டளைக்கு இணங்கத் தன் விழிகளைத் திறந்தவள், அவனுடைய கண்களைப் பார்த்தாள். அந்த விழிகள் என்ன கூறின? அவை கூறவில்லை. அப்படியே அவளை இழுத்துச் சுழற்றிச் சுருட்டித் தன்னுள் இழுப்பது போல அண்ட சராசரங்கள் அப்படியே நின்றது போன்ற உணர்வில் கிறங்கிப் போய்க் கிடந்தாள்.

 

அவளுடைய விழிகளையே ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்த சர்வாகமன், அவள் எதிர்பாராத தருணத்தில், பாதத்தை இழுத்து ஒரு திருப்புத் திருப்ப, அதில் ஏற்பட்ட வலியில் இரத்தமெல்லாம் வடிந்துபோன உணர்வில், அலறக்கூட முடியாத நிலையில், “ஆக்…” என்கிற சத்தத்துடன் அவனுடைய தோளை அழுந்தப் பற்றியவாறு துடிக்க, அதைத் தாங்க முடியாதவனாக, உள்ளம் துடிக்க, அந்த நேரத்திலும் பாதம், அசையாது பாதுகாத்துக்கொண்டான் அந்தக் காவலன்.

 

இப்போது பாதம் பழைய நிலைக்கு வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டவனுக்கு அப்போதுதான், அந்த அழகிய பாதத்தில் எப்போதோ சுடுபட்டுத் தீய்ந்துபோன வடு, கண்ணுக்குப் பட்டது. ஏதோ கொதிக்கக் கொதிக்க ஊற்றுப் பட்டிருக்கவேண்டும்… அதைக் கண்டதும் இதயம் வலிக்கத் தன்னை மறந்து அதை வருடிக் கொடுத்தவன்,

 

“இந்தக் காயம் எப்படியாச்சு?” என்றான் தவிப்புடன்.

 

அவளோ பதில் சொல்லாது, தன் பாதத்தை இழுக்க முயல, அழுந்தப் பற்றிய சர்வாகமன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்த கைக்குட்டையை உருவி எடுத்து, அதை அவள் பெருவிரலில் ஏற்பட்ட காயத்தின் மீது கட்ட, நகக் கண் ஏற்படுத்திய வலியில் மேலும் துடித்துப்போனாள் நிரந்தரி.

 

துடித்தவளின் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தி,

 

“ஷ்…. ஷ்… இட்ஸ் ஓக்கேடா… இட்ஸ் ஓக்கே… எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட்…” என்றவாறு அவளை இழுத்துத் தன் மார்போடு அணைக்க, அவனுடைய சட்டையை இறுகப் பற்றியவாறு கிடந்தவளுக்குப், பழைய நிலைக்கு வரச் சற்று நேரம் எடுத்தது.

 

அது வரை, அவளுடைய முதுகை வருடிக்கொடுத்தவன்,

 

“யு ஆர் ஓக்கேமா… எல்லாம் சரியாகிவிட்டது… நடக்கும் போது சற்று வலிக்கும்… ஆனால் சரியாகிவிடும்…” என்று உறுதி கூற, சற்று நேரம் அப்படியே கிடந்தவள், அப்போதுதான் தான் நிற்கும் நிலை புரிய அவசரமாக, அவனிடமிருந்து விலகி, சிறு சங்கடத்துடன் அவனைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்க முயன்றாள்.

 

“ஹேய்… பார்த்து… மீண்டும் காலைக் காயப்படுத்தப் போகிறாய்…” என்று எச்சரித்து, மெதுவாக அவளை இறக்கி விட, இப்போது சற்று வலி குறைந்திருந்ததாலும், அவளால் சரியாக நடக்க முடியவில்லை.

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், இனி இயலாது என்கிற நிலையில், அவளைத் தன் கரத்தில் பூமாலையென ஏந்திக்கொண்டான். ஏந்தியபோதுதான் அவளுடைய மெலிவு அவனுக்கு உறைத்தது. பஞ்சுப் பொதி கூட அத்தனை கனம் இருக்காது.

 

அதிர்ந்துபோனாள் நிரந்தரி. அவனிடமிருந்து விடுபட முயன்றும், அவளால் முடியவில்லை. இறுதியில், தன்னை ஏந்தியிருந்தவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ பாதையில் கவனமாக நின்றிருந்தான்.

 

அவனுடைய மார்பைத் தட்டி அழைக்க, அவனோ, தன் தலையைக் குனிந்து குழந்தையெனத் தன் கரங்களில் கிடந்தவளைக் காதல் பொங்கப் பார்த்து,

 

“என்னடா?” என்றான். அவனுடைய ‘என்னடாவில்’ உள்ளம் உருகினாலும், கடினப்பட்டுத் தன்னை நிலைப்படுத்தியவள்,

 

“என்னைக் கீழே விடு…” என்று விழிகளால் இறைஞ்சினாள். அந்த மகாக் கள்வனோ,

 

“இதோ நெருங்கிவிட்டோம்… காயத்திற்கு மருந்து போட்டதும் வலி ஆறிவிடும்…” என்றான், அதற்குத்தான் அவள் அழைத்தாள் என்பது போல.

 

“அதில்லை…” என்று தன் தலையை மறுப்பாக ஆட்டியவள், நிலத்தைக் காட்டி இறக்கிவிடு என்னபது போல வாயை அசைக்க, அவனோ,

 

“அதுதான்… வந்துவிட்டோமே… மருந்து போட்டதும் சரியாகிவிடும்…” என்றான் தன் நிலையிலிருந்து சிறிதும் மாறாது.

 

அவனுக்குத் தன்னைக் கீழே இறக்கிவிடும் எண்ணம் சற்றும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பேதைக்கு, அவனைப் பார்த்து முறைக்க மட்டும்தான் முடிந்தது.

 

சர்வாகமன், நிரந்தரியைத் தன் கரங்களில், ஏந்தியவாறு வருவதைக் கண்ட, தாமரை, பெரும் நிம்மதியுடன் அவர்களை நோக்கி, வேகமாக ஓடினாள்.

 

எதற்கு மகள் இப்படி ஓடுகிறாள் என்று வியந்து திரும்பிப் பார்த்த குலவேந்தர், அந்தக் காட்சியைக் கண்டு, பதறியவாறு தாமரையின் பின்னே விரைய,

 

அட, எதற்காக இருவரும் இப்படிப் பதறியவாறு ஓடுகிறார்கள் என்று வியந்த வள்ளியம்மை, திரும்பிப் பார்க்க, அங்கே சர்வாகமன், நிரந்தரியைத் தன் கரங்களில் ஏந்தியவாறு வருவதைக் கண்டார்.

 

படுத்திருந்தவர் சீற்றம் பொங்கப் பெரும் ஆத்திரத்தில் எழுந்தமர்ந்து, அவர்களை நோக்கி ஓட முடியாது அரக்கி நடக்க, அதற்கிடையில் நிரந்தரியுடன் பேருந்திற்குள் ஏறியிருந்தான் சர்வாகமன்.

 

“என்னப்பா நடந்தது?” என்று குலவேந்தர் வருந்தியவாறு கேட்க,

 

“ஒன்றுமில்லை பெரியப்பா… வரும் வழியில் பாறை தடுக்கி விழுந்துவிட்டாள்… பெருவிரல் நகம் பிசகிவிட்டது… இரத்தம் வேறு கசிகிறது. நடக்க முடியாது சிரமப்பட்டாளா… அதுதான்…” என்றவாறு அவளைப் பின் இருக்கையில் வசதியாக அமர்த்தியவன், விரைந்து சென்று தன் பையை எடுத்து வந்தான்.

 

அதில் அவனுடைய மருத்துவப் பொருட்களும், கூடவே முதலுதவிப் பெட்டியும் இருக்க, அதில் தேவையானதை எடுத்துக்கொண்டு, நிரந்தரியின் முன்னால் வந்து இடது முழங்கால், மடித்துத் தரையில் அமர்ந்தான்.

 

கரத்திலிருந்த பொருட்களைத் தரையில் வைத்துவிட்டு, மடித்திருந்த தொடையின் மீது அவளுடைய காயம்பட்ட காலைத் தூக்கி வைத்தான்.

 

வைக்கும் போதே, ஏதோ கிடைத்தற்கரிய பொருள் ஒன்ற கரங்களில் கிடைத்தது போலவும், எங்கே அது விழுந்து நொருங்கிவிடுமோ என்று அஞ்சியவன் போலவும் மிகக் கவனமாகப் பற்றியவன், தன்னையும் மீறிப் பெருவிரலால் அவளுடைய பாதத்தை வருடிக் கொடுத்துவிட்டு, முன்னம் கட்டிய கட்டை அவிழ்க்கத் தொடங்கினான்.

 

அவளுடைய காலின் நடுக்கத்திலிருந்து, அதன் வலியைப் புரிந்துகொண்ட சர்வாகமன்,

 

‘இட்ஸ்… ஓக்கே… இதோ… இப்போ முடிந்துவிடும்…” என்று சமாதானப் படுத்தியவாறு கழற்றி முடிக்க, இப்போது, பிறழ்ந்த நிகத்தைப் பார்க்கும் போதே அனைவருக்கும் அதன் வலி எப்படியிருக்கும் என்பது புரிந்தது.

 

“யு ஓக்கே…” என்று முணுமுணுத்தவாறு அந்த நகத்தைத் தன்னிடமிருந்து கத்தரிக்கோலால் வலிக்காமல் வெட்டிவிட்டவன், பின் மருந்திட்டுக் கட்டுப்போட, இப்போது ஓரளவு வலி மட்டுப்பட்டிருந்தது.

 

அது வரை தனக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனை, வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் எதையும் நம்ப முடியவில்லை.

 

‘எங்கிருந்தோ வந்தான்… இது வரை தூசிபடிந்திருந்த இதயத்தை மெது மெதுவாகத் தட்டி அழகாக மாற்றி உயிர்ப்பிக்க வைக்கிறானே… இவனுடைய அப்பழுக்கில்லா இந்த அன்புக்கு நான் தகுதியானவள் தானா?’ என்று தன்னை மறந்து எண்ணியவள், தன்னைக் காதலுடன் நிமிர்ந்து பார்த்தவனைக் கண்டு இதயம் படபடக்கத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

அவளின் முகத் திருப்பல் சர்வாகமனுக்கு சிறு சினத்தை வரவழைத்தது. ‘என்னிடமே முகம் திருப்புகிறாயா…’ எனக் கோபத்துடன் எண்ணிக்கொண்டவன் திரும்பி பின்னால் நின்றவர்களைப் பார்த்தான்.

 

“ஷி இஸ் ஓக்கே… கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று ஒரு வைத்தியனாக உத்தரவிட, அப்போதுதான் ரஞ்சனியுடன் பேருந்தில் ஏறிய வள்ளியம்மை, நிரந்தரியை எரிப்பதுபோலப் பார்த்து,

 

“ஏய்… எங்கே போய் முட்டிக்கொண்டு வந்தாய்… உனக்கு அறி…” முடிக்கவில்லை, எப்போதும் போல, நிரந்தரியை மறைத்ததுபோல எழுந்து நின்றவன்,

 

“திஸ் இஸ் நாட் த டைம் பெரியம்மா…” என்றான் அழுத்தம் நிறைந்த கடுமையான குரலில்.

 

கப் என்று தன் வாயை மூடிக்கொண்ட வள்ளியம்மை, தன் ஆத்திரம் சற்றும் மட்டுப்படாதவளாக, முன் பக்கம் போய் அமர்ந்து கொள்ள, ரஞ்சனி சூழ்நிலை உணர்ந்து விடைபெற்றுச் சென்றாள். செல்லும் போது, நின்று திரும்பி நிரந்தரியைப் பார்த்து முறைத்துவிட்டுச் செல்ல அவள் தவறவில்லை.

 

அதே நேரம், கருமேகங்கள் சூழத்தொடங்க, “சரி சரி… நாம் பார்க்கவேண்டியவை எல்லாம் பார்த்தாகிவிட்டது… மழைவேறு கொட்டப்போகிறது… நேரம் ஆறு மணிக்கும் மேலாகிவிட்டது… அதனால் இனிக் கிளம்பலாம்…” என்று உத்தரவிட, அனைவரும் கடகடவென்று வண்டியில் ஏறத் தொடங்கினர்.

 

அன்றைய நாள் அனைவரின் உள்ளத்திலும் பெரும் திருப்தியைத் தர எல்லோரும் மகிழ்ச்சியாக அவரவர்கள் கிடைத்த ஏதோ ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். சிறந்த குளியல், நல்ல சாப்பாடு, கோவிலைத் தரிசித்த நிம்மதி, வண்டியின் தாலாட்டு, இவை போதாதென்று, அத்தனை நேரமாகக் கறுத்திருந்த வானம் மழையைப் பொழியத் தொடங்க, அதன் மயக்கமெல்லாம் சேர்ந்து அனைவரையும் வேகமாக உறக்கத்திற்குள் தள்ளியது.

 

வண்டி புறப்படத் தொடங்கியதும், நிரந்தரிக்கு முன்புற இருக்கை காலியாக இருக்க அதில் சென்று அமர்ந்த சர்வாகமன், உடலை நெளித்து நெட்டியை முறித்தான். சற்று நேரம் தன் தலையைப் பின்னால் சாய்த்து வைத்திருந்தவன், ஐந்து நிமிடங்கள் கண்களை மூடியவாறு வர, அவனையும் மீறி உறக்கம் தழுவிக்கொண்டது. அரை மணி நேரம் தூங்கியிருப்பான், பேருந்து ஓரிடத்தில் குலுங்கத் தன் தூக்கம் கலைந்து எழுந்தவன், அனைவரையும் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தான். எல்லோரும், உறக்கத்தில் ஆழ்ந்துபோய் இருக்கத் தூக்கம் கலையாமலே திரும்பி நிரந்தரியின் இருக்கையைப் பார்த்தான்.

 

பேருந்தின் ஜன்னலில் ஓரமாகத் தலையைவைத்து ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அந்தத் தூக்கத்திலும் முகத்தில் தெரிந்த குன்றாத அழகில் மயங்கியவனாக, அந்தக் கணமே அவளருகே சென்று, அவளைத் தன் மடியில் ஏந்த வேண்டும் என்கிற பேராசை எழுந்தது. அவள் இல்லாமல் தன்னால் இனி ஒரு கணமும் இருக்க முடியுமா என்கிற சந்தேகம் வேறு எழுந்தது.

 

‘ஓ காட்… இவள் மறுத்தால், நான் எப்படி வாழப்போகிறேன்… இதுவரை இல்லாத புதுவித உணர்வுகள் எல்லாம் என்னை ஆட்டிப்படைக்கின்றதே… நிரந்தரி… ப்ளீஸ்… எனக்கே எனக்காக என்னை மணக்கச் சம்மதி… ஐ நீட் யு…’ என்று புலம்பியவன், அப்படியே ஜன்னல் பக்கமாகத் தன் முதுகைச் சாய்த்து, தன் இரு கால்களையும் மூவர் இருக்கக் கூடிய அந்த சீட்டில் நீட்டி வைத்தவாறு, தலையைப் பின்னால் வைத்துத் தன்னவளைத் தாகம் தீரும் வரைக்கும் பருகத் தொடங்கினான்.

 

பருகப் பருகத் தீரும் தாகமா அது… பார்க்கப் பார்க்கத் தாகத்தின் வேட்கை கூடியதே அன்றி சற்றும் குறைவதாய் இல்லை. எதையோ யோசித்தவன், தன் கைப்பேசியிலிருந்து தன்னவளைப் படம் எடுத்துப் பத்திரப்படுத்தினான். இன்னும் அவளுக்குத் தெரியாமல் தான் எடுத்த படங்களையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான்.

 

வெறும் இந்தப் படங்கள் மட்டும்தான் அவன் கூட வரப்போகும் சுகந்தமோ? இல்லை உயிருடன், உணர்வும் கொண்ட இந்த தேவதை என் கூட வருவாளா? தெரியவில்லை. அதை எண்ணும் போதே, சர்வாகமனுக்குப் பெரும் வேதனையாக இருந்தது.

 

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் ஏதோ உந்த வேகமாக எழுந்து அவளருகே சென்றான். தன் இடக் கரத்தினை மார்புக்குக் குறுக்காகக் கட்டி, அக் கரத்தின் பிடியில் மடித்த தன் வலது கரத்தின் மேற்புறத்தைப் பதித்து, சுண்டுவிரலாலும் பெரு விரலாலும், தன் மீசையைத் தடவிக் கொடுத்தவாறு தன்னவளைக் கண்வெட்டாது ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வையில் காமமில்லை. வேட்கையில்லை, தாபமில்லை… ஏன் எந்தக் கெட்ட சிந்தையும் இருக்கவில்லை. மாறாக இவள் என்னவள், எனக்கு மட்டுமே உரித்தானவள் என்கிற காதலுடன் கூடிய உரிமை உணர்வு மட்டுமே அக்கிருந்தது.

 

அப்படியே குழந்தையெனத் தூங்கும், அவளை அள்ளி அணைத்து முத்தமிட அவன் உள்ளம் பரபரத்தது. வெளிநாட்டில் வளர்ந்தவனுக்கு அதுவொன்றும் தவறாகவும் தெரியவில்லை. தவிர அவனுடைய குணத்திற்கு தயங்காமல் செய்யக்கூடியவன்தான். ஆனாலும் நிரந்தரியின் நிலையை நினைத்துத் தன்னை நிதானப் படுத்திக்கொண்டான். அவள் இருப்பது அமெரிக்காவல்ல. ஈழம். இங்கே ஒவ்வொன்றிற்கும், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதை மீற முடியாது… அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவதற்கும், அந்தச் சமூகம் ஒத்துக்கொள்ளாது.

 

அவள் நெற்றியில் பட்டுவிளையாடிய முடிக் கற்றைகளைக் கண்டு பொறாமை கொண்டவனாக அவள் புறமாக மேலும் குனிந்து, அக் கூந்தலைப் பட்டும் படாமலும் ஒதுக்கிவிட்டான். உதட்டின் ஓரத்தில் இவனைப் பார்த்துக் கண்ணடித்த அந்த ஒற்றை மச்சத்தைக் கண்டு மேலும் தவித்தவனாகத் தன் இடக் கரத்தைத் தொடையில் பதித்து மேலும் குனிந்து, வலது கரத்துச் சுண்டு விரல் கொண்டு அதைத் தொட முயன்றான்.

 

ஆனால் தன் ஸ்பரிசத்தில் அவள் விழித்துவிடுவாளோ என்று அஞ்சித் தன் விரலைச் சுருட்டிப் பின் அக் கரத்தையும் தொடையில் பதித்து நீண்ட நேரமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

தான் இப்படி நிற்பதை யாராவது கண்டால் அவ்வளவுதான் என்பது புரிய, ஒரு பெருமூச்சுடன், மீண்டும் தன் இருக்கையில் வந்தமர்ந்து கொண்டான்.

 

தன் தலையை இருக்கையில் சாய்த்தான். ‘இவளை எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர்கள் வேதனைப்படுத்த விடக்கூடாது’ என்ற உறுதி அவன் உள்ளத்தில் அழுத்தமாக எழுந்தது. தற்காலிகமாக இருக்கும் இந்த மகிழ்ச்சியை அவளுடைய பெயரைப் போலவே நிரந்தரமாக அவள் முகத்தில் பதியவைக்கவேண்டும் என்கிற உறுதி அவனுள் எழுந்தது. நிரந்தரமாகத் தங்கிய, அவளின் புன்னகை முகத்தைக் கற்பனை செய்தவாறு விழிகளை மூட, நிரந்தரியைப் போல் அல்லாமல், உறக்கம் அவனைக் கருனையுடன் அணைத்துக்கொண்டது.

 

What’s your Reaction?
+1
21
+1
5
+1
2
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!