(19)
எல்லோரும் குளித்து முடித்ததும்தான் நிரந்தரிக்கு ஒன்ற உறைத்தது. அது மாற்று ஆடைகள் எதுவும் அவள் எடுத்து வரவில்லை.
இப்போது என்ன செய்வது? தவிப்புடன் குழம்பிக்கொண்டிருக்க, ஈரம் சொட்டச் சொட்ட நிரந்தரியை நெருங்கிய தாமரை,
“என்னண்ணடி… என்ன அப்படியே நிற்கிறீர்கள்… வாருங்கள் ஆடை மாற்ற…” என்று அழைக்க, தான் ஆடை எடுத்து வரவில்லை என்பதை எப்படிச் சொல்வது என்று புரியாமல் தயங்கினாள் நிரந்தரி.
தாமரையோ,
“உங்களைத்தனர் அண்ணி… ஆடைகள் மாற்றவில்லையா என்ன? வாருங்கள்…” என்று கரத்தைப் பற்றி இழுக்க, இவளோ தயக்கத்துடன், இழுத்துச் சென்றவளின் கரத்தைத் தட்டி, அவள் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப, நின்று திரும்பிய தாமரை என்ன என்பது போலப் பார்த்தாள்.
சைகையால் தன் பிரச்சனையைக் கூற, நாக்கைக் கடித்தாள் தாமரை.
அப்படியே சர்வாகமன் அவளை; இழுத்து வந்ததால் யாரும் அவளுடையு மாற்றுடையைப் பற்றி யோசிக்கவில்லை. தாமரையோ தனக்கானதை மட்டும்தான் எடுத்து வந்திருந்தாள். இப்போது என்ன செய்வது?” என்று குழம்ப, ஆடை மாற்றி விட்டு வந்த சூரியபிரகாஷ்,
“ஏய்… குரங்கு… இன்னுமா ஆடை மாற்றவில்லை?” என்று தன் தங்கையைக் கடிந்துவிட்டு அதே போல ஈரம் சொட்டச் சொட்ட நின்றிருந்த நிரந்தரியைப் பார்த்து,
“என்னண்ணி… நீங்களுமா மாற்றவில்லை?” என்றான் ஆச்சரியமாக. இவளோ சங்கடத்துடன் நெழிய, தன் அண்ணனை நெருங்கிய தாமரை,
“டேய்… தடியா… என்னைச் சொல்வது இருக்கட்டும், அண்ணி மாற்றுடை எடுத்து வரவில்லை. அது தெரியாமல் நான் தண்ணீரை அவர்கள் மீது ஊற்றவைத்துக் குளிக்க வைத்துவிட்டேன்…” என்று அசடு வழிய, ஓங்கி அவள் நடு மண்டையில் குட்டினான் சூரியபிரகாஷ்.
“பண்ணி… ஒரு காரியம் செய்ய முதல் யோசிக்க மாட்டாயா?” என்று எதிந்து விழும் போதே அவர்க்களை நோக்கி வந்தான் சர்வாகமன்.
“ஹே… இங்கே என்ன பஞ்சாயத்து… என்ன… இன்னும் ஆடை மாற்றவில்லையா…” என்று இவன் கேட்க,
“அண்ணி மாற்றுடை எடுத்துவரவில்லை… அதுதான், என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்…” என்று கூறி முடிக்கவில்லைத் தன் தோளில் இருந்த தன் துவாயை எடுத்து, நிரந்தரியின் தோளைச் சுற்றிப் போட்டவாறு,
“உள்ளே போய் ஈரத்தைத் துடையுங்கள்… ஐந்து நிமிடங்களில் வருகிறோம்…” என்றவன் அவர்களின் பதிலையும் கேட்காது,
“பிரகாஷ் என் கூட வா…” என்றவாறு அவனையும் அழைத்துக் கொண்டு வெளியேற, நிரந்தரிதான் அதிர்ந்துபோய் சிலையென நின்றிருந்தாள்.
அதுவும் அவளுடைய தோளைச் சுற்றிப் போட்டிருந்த அந்தப் பெரிய துவாய், ஏதோ அவளுக்குப் பெரும் பாதுகாப்புக் கவசம் போலத் தோன்றத் தன்னையும் மறந்து அதை இறுகப் பற்றிக்கொண்டாள்.
“அண்ணி வாருங்கள்… முதலில் ஈரத்தையாவது துடைப்போம்… இல்லையென்றால் தடிமல் பிடித்துக் கொள்ளும்… வாருங்கள்…” என்றவாறு அவள் கரத்தைப் பற்றி மறைவாக இழுத்துச் செல்ல, ஏனோ நிரந்தரிக்குத் தன் தோளில் இருக்கும் அந்தமில்லாரியனின் துவாயை எடுக்கவே பிடிக்கவில்லை.
ஏற்கெனவே அவனுடைய உடல் சூட்டிலிருந்ததால் அவளுக்கு மெல்லிய கதகதப்பை ஊட்டியதோ? இல்லை அவனுடையது என்பதால் அத்தகைய இதம் பரவியதோ… எது எப்படியோ, அந்தத் துவாயை மட்டும் இழுத்தெடுக்க அவளால் முடியவில்லை.
கூடவே அவன் தேகத்தை வருடியிருக்கும் தானே அந்தத் துவாய்… அதைக் கொண்டு எப்படி அவள் தன் மேனியைத் துடைப்பாள். அதை எண்ணும் பொதே உள்ளே ஒரு வித குறுகுறுப்பு.
“என்னண்ணி… அப்படியே நிற்கிறீர்கள். தலையைத் துவட்டுங்கள்… ஈரம் இன்னும் கொட்டிக்கொண்டிருக்கிறது. எனக்காவது பறவாயில்லை. அதிக முடி கிடையாது. ஆனால் உங்களுக்கு… இந்த அடர்ந்த முடியைத் துவட்டுவதே சிரமம்…” என்றவள் அவசரமாகத் தன் தலையைத் துடைத்து விட்டு, ஆடையை மாற்றி ஈர ஆடையைக் குவித்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு இன்னும் தயங்கிக்கொண்டிரந்தவளை நெருங்கி, அவள் தேளரில் போட்டிருந்த துவாயை இழுத்து எடுத்து நிரந்தரியின் தலையைத் துவட்ட முயல, ஏனோ நிரந்தரிக்குக் கண்கள் கலங்கிப் போயின.
இத்தகைய கரிசனை கிடைக்கவும் அவள் கொடுத்து வைத்திருக்கிறாளே. அவசரமாகத் தாமரையின் கரத்திலிருந்த துவாயை வாங்கியவள், அவளுடைய கன்னத்தில் தன் வலது உள்ளங்கையைப் பதித்து, விழிகளால் நன்றி கூறிக்கொண்டிருக்கும் போதே இவர்கள் ஆடை மாற்றிய அறையின் கதவு தட்டப்பட்டது.
“யார் அது?” என்று தாமரை கேட்க,
“நான்தான்மா…” என்றான் சர்வாகமன்.
“சொல்லுங்கள் அண்ணா…” என்று தாமரை கதவைத் திறக்காமலே கூற,
“வெளியே ஒரு பை வைத்திருக்கிறேன்… உன் அண்ணியிடம் கொடு…” என்று விட்டு விலக, மெதுவாகக் கதவைத் திறந்தவள், வாசலில் சரிந்திருந்த துனிப்பையை எடுத்துக் கவிழ்த்துப் பார்த்தாள். அதில் எளிமையான பருத்திச் சேலையும், அதற்கேற்ற ரவிக்கையும் கூடவே உள்ளாடைகளும் இருக்க பெரும் நிம்மதியுடன்,
“அப்பாடா… பிரச்சனை தீர்ந்தது. எங்கே துரியோதனன் போல உங்கள் சேலையை உருவி இந்தத் துவாய்க்குள் திணித்துப் பிழிந்து ஈரத்தை எடுக்கவேண்டுமோ என்று நினைத்துப் பயந்திருந்தேன்… பாருங்கள்… ஆகமன் அண்ணா சேலையே வாங்கி வந்துவிட்டார்… பிடியுங்கள் அண்ணி…” என்று நீட்ட, ஏனோ நிரந்தரியின் முகத்தில் பெரும் கூச்சம் வந்து உட்கார்ந்து கொண்டது.
அவளுக்கான சேலை மட்டுமல்ல, உள் பாவாடையுடன் உள்ளாடைகளும் அல்லவா வாங்கி வந்திருக்கிறான். அதை எப்படி அணிவது? தயங்க, அவள் தயக்கத்தைக் கண்டவள்,
“என்ன அண்ணி நேரம் காலம் புரியாமல்… ம்… சீக்கிரம் அணிந்து கொண்டு வாருங்கள். பசிக்கிறது அண்ணி…” என்று வயிற்றை வருடியவாறு கூற, மீண்டும் அறை தட்டப்பட்டது.
“யார்…” என்ற தாமரை கேட்க,
“நான்தான்… தாமரை… உன் அண்ணிக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் கடைக்காரப் பெண்ணிடம் விபரத்தைக் கூறினேன். அவள்தான் வேண்டியதை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொடுத்தாள். நானும் சரி பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன்… அதில் தேவையானவை எல்லாம் இருக்கா இல்லையா தெரியவில்லை… ஏதாவது வேண்டுமானால் சொல்லச் சொல்… இப்போதே வாங்கி வருகிறோம்…” என்று கூறப் பெரும் நிம்மதியாக உணர்ந்தாள் நிரந்தரி.
“இல்லை அண்ணா… எல்லாம் பக்காவாக இருக்கிறது…” என்று கூற,
“ஓக்கே தென்… அப்படியானால் கொஞ்சம் சீக்கிரமாக வர முடியுமா? பசிக்கிறது… நானும் பிரகாஷ_ம் உங்கள் இருவருக்காகவும் காத்திருக்கிறோம்…” என்று கூற, அதற்கு மேல் நிரந்தரி தாமதிக்கவில்லை. உடனே ஈர உடையைக் களைந்து, அந்தமில்லாரியன் வாங்கி வந்த சேலையை உடுத்திவிட்ட நிமிர ஏனோ ராணியாக உணர்ந்தாள் நிரந்தரி.
வாழ்வில் முதன் முறையாகப் புதிய சேலை உடுக்கிறாள் அல்லவா. அது கொடுத்த கர்வமாகக் கூட இருக்கலாம். நல்ல வேளை மிக எளிமையான சேலையே வாங்கி வந்தான். இல்லையென்றால் வள்ளியம்மையிடமிருந்து யார் தப்புவது?
ஏகவாமனும் அதை மனத்தில் வைத்துத்தான் அத்தகைய சேலையை வாங்கி வந்தான். அவனே அவளைப் பிடித்துக் கொடுத்ததாக இருக்கக் கூடாதே.
கடைக்குப் போன பிறகு, சேலை மட்டும் போதாது என்பது புரிய, எப்படி அவளுக்கா பிற உடைகளைத் தேர்வு செய்வது என்று குழம்பினான். கட்டிய மனைவி என்றால் வேறு. அவனுக்கு அவள் காதலியாக இருந்தாலும் அவளும் அவனை ஏற்றுக்கொள்ளவேண்டுமே. தவிர, அவனுக்கு உள்ளாடைகள் வாங்குவது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அவன் வாங்கினான் என்பதற்காகவே அவள் அணிவதற்குத் தயங்கக்க கூடும். என்னதான் இவன் அவளை உரியவள் என்ற எண்ணினாலும், அவளுக்கு அவன் அன்னியன்தானே. தன்னால் அவள் சங்கடப் படக் கூடாது என்பதால்தான், கடையிலிருக்கும் பெண்ணை அழைத்து அவளையே எளிமையான சேலை ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்தவன், செய்தியைக் கூறி, தேவையான பிற ஆடைகளையும் ஒரு பையில் போட்டுக் கொடுக்குமாறு கேட்டான்.
ஆடைகளின் அளவு என்ன என்று கேட்க எப்படிச் சொல்வான் தயக்கத்துடன் அந்தப் பெண்ணின் அளவுக்கே எடுத்துக் கொடுக்குமாறு கேட்க, அவளே அனைத்தையும தேர்வு செய்து பையில் வைத்துக் கொடுக்கப் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டுப் பையோடு வந்துவிட்டான்.
உள்ளே இருக்கும் உள்ளாடைகளைக் கண்டு நிச்சயம் நிரந்தரி தடுமாறுவாள் என்பதை உணர்ந்தவனாகத்தான் இத் தன்னிலை விளக்கத்தைக் கூறினான். அவன் நினைத்ததும் சரியே. அவன் வாங்கிக் கொடுத்ததை அணியத் தயங்கியவள், அதை அவன் தேர்வு செய்யவில்லை என்பது புரிந்ததும் நிம்மதியடைந்தவளாக ஆடைகளை மாற்றிக்கொண்டு தாமரையுடன் வெளியே வந்தாள்.
ஆனாலும் சர்வாகமனைப் பார்க்கக் கூச்சமாகத்தான் இருந்தது. என்னதான் அவன் வாங்கிக் கொடுக்கவில்லை என்றாலும் அவன்தானே பணம் கொடுத்தான். அவன் சொல்லாமலா அந்தப் பெண் ஆடைகளை எடுத்திருப்பாள்.
அதைப் புரிந்துகொண்டவனாக சர்வாகமனும் அவளுக்குச் சிரமம் கொடுக்கும் வகையில் நடந்துகொள்ளவில்லை. கொஞ்ச நேரம் ஒதுங்கி இருப்பது அவள் சங்கடத்தைப் போக்கும் என்பதால் அதிகம் வம்பை அவளோடு வளர்க்கவில்லை.
அதன் பின், அனைவருக்கும் உணவு பரிமாற, எல்லோரும் திருப்தியாக உண்டு சற்றுக் களைப்பாறிவிட்டு மீண்டும் வண்டியில் ஏறி கோணேஸ்வரத்திற்குச் செல்லத் தொடங்கினர். அந்த நேரம், அவர்களுடைய பேருந்தை ஒரு வாகனம் பின்தொடர்ந்து சென்றதை யாருமே கவனிக்கவில்லை.
அரை மணி நேரப் பயணத்தின் பின்பு, வண்டி கோணேஸ்வரத்தை வந்தடைந்தது. பேருந்தை விட்டு இறங்கிய அனைவரும் ஒவ்வொரு பக்கமாகத் தங்களுக்கு ஏற்ற இடத்தைநோக்கிச் செல்ல, இறுதியாகக் குலவேந்தர் குடும்பத்திற்கு வேண்டிய பொருட்களை ஒரு பையில் எடுத்தவாறு, அதைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, நிரந்தரி வண்டியை விட்டு வெளியே வந்தாள்.
அது வரை சற்றுத் தள்ளி அவளுக்காகக் காத்திருந்த சர்வாகமன், அவள் இறங்குவதைக் கண்டதும், விரைந்து அவளருகே சென்றான்.
அவள் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையை, அவளின் அனுமதியையும் பெறாது, தன் கரத்தில் வாங்கிக்கொள்ள, அதை எதிர்பாராத நிரந்தரி, சமநிலை தவறி, முன்புறமாகச் சரிய முயல, அவள் விழப்போவதை, அறிந்த சர்வாகமன், தன் உள்ளங்கையை, அவளுடைய வயிற்றில் பதித்து நிலை நிறுத்திப் பின், அவளுடைய இடையின் இரு பக்கமும் தன் கரங்ளைப் பதித்து, பாவப்பிள்ளை ஒன்றைத் தூக்குவது போலத் தூக்கிக் கீழே இறக்கிவிட்டான்.
நிரந்தரிக்கு அவன் செயலால், தன்னிலை பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. சும்மாவே அவனுடைய அருகாமைக்கு ஏங்கும் மனதை எப்படிக் கடிவாளம் போடுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவளுக்கு, மேலும் மேலும் அவனுடைய தீண்டல், அவளுடைய கட்டுப்பாட்டை உடைத்துவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்த, என்ன செய்வது என்று புரியாத ஒரு வித மன நிலையில் தவித்துப்போனாள்.
அவசரமாக அவன் பிடியிலிருந்து விலகியவள், அவன் கரத்திலிருந்த பையை வாங்குவதற்காகத் தன் கரத்தை நீட்ட, அவனோ இரண்டடி பின் வைத்து,
“நான் கொண்டுவருகிறேன்… எத்தனை நாட்களுக்குத்தான் சுமைதாங்கியாக இருக்கப்போகிறாய்?” என்று கூறிவிட்டு முன்னே செல்லத் தொடங்கத்தான் அது நடந்தது.
நாலு வயதுக் குழந்தையொன்று, விளையாடியவாறே, தெருவோரம் வர, அதைக் கவனிக்காத கார் ஒன்று, அந்தக் குழந்தையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது.
அதைக் கண்ட நிரந்தரி, அந்தக் குழந்தையைப் பார்த்து அலறியவாறு, ஓடத் தொடங்க, திடீர் என்று கேட்ட நிரந்தரியின் அலறலில் பதறிப்போய் திரும்பிய சர்வாகமன், அவள் ரோட்டை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டான்.
அவளுக்கு முன்னும் பின்னுமாக இரண்டு கார்கள் படு வேகமாக வருவதைக் கண்டவன், ஐந்தும் கெட்டு, அறிவும் கெட்டவனாத் தன் தோளிலிருந்த பையைத் தூக்கி வீசிவிட்டு,
“நிரந்தரி… ஸ்டாப்…” என்று கத்தியவாறு அவளை நோக்கி வேகமாக ஓடத் தொடங்குவதற்குள் முன்னால் வந்த கார், அந்தக் குழந்தையை நெருங்கிவிட்டிருந்தது.
அதற்கிடையில், எதைப்பற்றியும் யோசிக்காத நிரந்தரி, சற்றும் தாமதிக்காமல் பாய்ந்து சென்று குழந்தையைத் தன் கரத்தில் ஏந்தியவாறு மறுபக்கம் பாய, வண்டியினை ஓட்டியவரும், அப்போதுதான் அந்தக் குழந்தையைக் கவனித்தார் போலும். தாமதிக்காமல், அதன் தடையை அழுத்தக் கார், ‘க்…..ரீ…..ச்…..’ என்கிற சத்தத்துடன், இழுபட்டு வந்து நிரந்தரியை முட்டித் தள்விட்டு நின்றிருந்தது.
அனைத்தும் சில விநாடிகளுக்குள் நடந்துவிட்டிருந்தது. தன் கரத்தில் பாதுகாப்பாக இருந்த குழந்தையை அணைத்தவாறு நின்றிருந்தவளைத் தன் முட்டி தேயும் அளவிற்குத் தரையில் விழுந்து நெருங்கிய சர்வாகமன்,
“நி… நிரந்தரி… ஆர் யு ஓக்கே…” என்று பெரும் பதட்டத்துடன் எங்காவது காயம் பட்டிருக்கிறதா என்று பரிதவிப்புடன் அவளைத் தொடப் போக, அந்த நிலையிலும் தன் உடலைப் பின்னால் கொண்டு சென்றவள், ஆம் என்பது போலத் தலையை ஆட்டிவிட்டுக் குழந்தையுடன் எழத் தொடங்க, உடனே எழுந்துகொண்ட சர்வாகமன், நிரந்தரியின் கரத்தைப் பற்றித் தூக்கி விட்டுக்கொண்டான்.
அதே நேரம், குழந்தை அடிபடப் போகின்றது என்பதைக் கண்ட தாய் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்து, நிரந்தரியின் கரத்தில் பாதுகாப்பாக இருந்த குழந்தையை வாங்கி முத்தம் பதித்தவாறு கையெடுத்துக் கும்பிட்டு,
“நன்றிம்மா… நீங்கள் மட்டும் சரியான நேரத்தில் வராமல் இருந்திருந்தால், என் மகளின் நிலை… அந்தக் கடவுளே வந்ததுபோலப் பார்க்கிறேன்மா” என்று பதறி அழ, புன்னகையுடன் அந்தத் தாயின் தோளிலே கரம் பதித்து தட்டிக்கொடுத்த நிரந்தரியைப் பார்த்த சர்வாகமனின் நரம்புகள் ஒவ்வொன்றும் கோபத்தில் புடைத்தன. அதே நேரம்,
“ஏய் அறிவிருக்கா உனக்கு… புத்தியில்லை… இப்படித்தான் குழந்தையை நடுத்தெருவில் விட்டுவிட்டு அலட்டிக்கொண்டிருப்பார்களா? இன்றுதான் இந்த வண்டியை முதல் முதலில் வாங்கினேன். இந்தக் குழந்தையில் முட்டியிருந்தால் என் வண்டியின் நிலை என்னவாகியிருக்கும்…” எனக் காரை விட்டு இறங்கிய ஒரு இளம் பெண் உக்கிர தாண்டவம் ஆட அந்தத் தாயும், ஏன் சர்வாகமனும் கூட வாயடைத்துப்போய் பேச்சிழந்து நின்றிருந்தனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக, அந்தப் பெண்ணின் முன்னால் வந்து நின்றிருந்த நிரந்தரி, அவளுடைய உதாசீனத்தில் கொதித்தவளாக, ஓங்கி அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்துவிட்டிருந்தாள்.
இதை சத்தியமாக சர்வாகமன் கூட எதிர்பார்க்கவில்லை. நிரந்தரிக்கு இத்தனை கோபம் வருமா என்று ஆச்சரியப்பட்டுப்போனான். கூடவே எழுந்த குதூகலத்துடன், தன்னவளைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண்ணின் முன்னால் தன் சுண்டுவிரலை உயர்த்திக் காட்டிய நிரந்தரி, அந்தத் தாயின் கரத்திலிருந்த குழந்தையைச் சுட்டிக்காட்டி,
“இந்தக் குழந்தைக்கு ஏதாவது ஒன்று ஆகியிருந்தால், நீ அந்த உயிரைத் திருப்பிக் கொடுப்பாயா? உனக்கு ஒரு உயிருடைய பெறுமதி தெரியுமா? வெறும் முப்பது லட்சம் பெறுமதியான காருடன், ஒரு உயிரை ஒப்பிடுகிறாயே… நீயெல்லாம் ஒரு பெண்ணா… சீ வெட்கமாக இல்லை” என்பதைத் தன் விகார ஒலியின் முலம் கூறியவாறு சீற, அது வரை தன்னை அறைந்தது ஒரு ஊமை என்பதைப் புரிந்துகோண்ட அந்தப் பெண்ணுக்குக் கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது.
“ஹெள டெயர் யு… ஹெள டெயர் யு டச் மி… வாய் பேச முடியாத ஊமைக் கழுதை.. நீ என்னை அறைவதா? உன்னை…” என்றவாறு தன் கரத்தை ஓங்கிய கணத்தில், நிரந்தரியை மறைத்தவாறு வந்து நின்றான் சர்வாகமன்.
ஓங்கியவளின் கரத்தைப் பற்றித் தடுத்துத் தன் கூரிய விழிகளால் அப் பெண்ணை உறுத்துப் பார்த்தான்.
அதே நேரம், எங்கே இன்னும் சர்வாகமனைக் காணவில்லையே என்கிற யோசனையுடன் அவர்களைத் தேடிவந்த, குலவேந்தர், அங்கே நடந்த காட்சியைக் கண்டு பதறியவாறு
“சர்வாகமன்… என்னாச்சு…” என்றவாறு ஓடிவந்தார்.
தன் கரத்தைப் பற்றியிருந்த இளைஞனையே வியப்புடன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண், பழகிய குரல் கேட்டதும் திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே பதட்டத்துடன் நின்றிருந்தவரைக் கண்டதும், அந்த இளைஞனின் கரத்தில் பிடிபட்டிருந்த தன் கரத்தை விலக்கியவளாக,
“மாமா… நீங்களா?” என்றாள் வியப்புடன். திரும்பிப் பார்த்த குலவேந்தர்,
“அடடே…. நீயாம்மா….. எப்படி இருக்கிறாய்… ரஞ்சனி… அப்பா அம்மா நலம்தானே….. இப்படித்தான் வண்டியை வேகமாக ஓட்டுவார்களா? பார்த்து வரக்கூடாது? அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பதில் சொல்வது!” என்றார் சிறு கண்டிப்புடன்.
“ஓ…. அதுவா! அதற்கு நான் என்ன செய்வது மாமா? இதில் என் தவறு எங்கே வந்தது. குறுக்கே அந்தக் குழந்தை வரும் என்று நான் கண்டேனா? அத்தோடு அப்படி ஒன்று நடந்திருந்தால் அப்பாவின் பணம் பேசியிருக்கும்… ” என்று அலட்சியமாகக் கூற, அருகே நின்றிருந்த சர்வாகமனுக்கு, மறு கன்னத்தில் ஓங்கி இன்னொன்று கொடுத்தால் என்ன என்று தோன்றியது. சிரமப்பட்டு அடக்கியவன், குலவேந்தரைப் பார்த்து,
“பெரியப்பா… நான் நிரந்தரியை அழைத்துக்கொண்டு உள்ளே போகிறேன்…” என்று கூறிவிட்டு அவளைத் திரும்பிப் பார்க்க,
“பெரியப்பாவா… மாமா… இவர் யார்… உங்களைப் பெரியப்பா என்கிறாரே…” என்றாள்.
“இவனா… இவன் என் தம்பியின் மகன். பெயர் சர்வாகமன். அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் கார்டியோலஜிஸ்டாக இருக்கிறான்… இங்கே வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு உதவுவதற்காக விடுப்பில் வந்திருக்கிறான்… வந்தவனை நம்முடைய கோவிலைக் காட்டலாம் என்று அழைத்துவந்தேன். இன்று அவனுக்கு உன்னால் நல்ல அனுபவம்” என்றதும், திறந்தவாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்த ரஞ்சனியையும் பொருட்படுத்தாது, சர்வாகமனைப் பார்த்த, குலவேந்தர்,
“சர்வாகமன் இது உன் பெரியம்மாவின் ஒன்று விட்ட சகோதரனின் மகள். பெயர் ரஞ்சனி. இங்கே இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் இவள் அப்பாவும் ஒருவர். இவர்கள் இங்கே திருகோணமலையில்தான் இருக்கிறார்கள்.” என்று கூற, அவளைப் பார்த்து வேண்டா வெறுப்பாக,
“ஹாய்…” என்றான். அந்த ஒற்றைச் சொல்லில் மயங்கிப்போனாள் ரஞ்சனி.
“ஏன் மாமா…. உங்களுக்கு இப்படி ஒரு பெறாமகன் இருப்பது பற்றி எங்களிடம் சொல்லவே இல்லையே..” என்றாள் இன்னும் அவன் மீது வைத்த விழிகளை விலக்காமலே.
அவளுடைய பார்வை சர்வாகனிடமிருந்து மீளுவதாகவே இல்லை. ‘வா…வ் எவ்வளவு ஹான்சமாக இருக்கிறான். திருமணம் முடித்தால் இவனைப் போன்ற ஒருவனை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும்.” என்று உள்ளம் ஏங்க, அவசரம் அவசரமாகத் தன் தந்தை தற்போது பேசி வைத்திருந்த கோடீஸ்வரன், கேடீஸ்வரனாகிப் போக, அந்த இடத்தில், சர்வாகமன் ஆர்ப்பாட்டமாக, சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டான்.
“அதுவா அம்மா… எங்களுக்கிடையில் இருந்த தொடர்பு நாட்டுப் பிரச்சனைகளால், விட்டுப் போய்விட்டது… இப்போதுதான் புதுப்பித்திருக்கின்றோம்.”
“என்ன மாமா…. ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் சகோதரரின் மகன் என்கிறீர்கள். எப்படித் தொடர்பு விட்டுப் போயிருக்கும்” என்றாள் புரியாமல்.
“அதுவா ரஞ்சனி… அது பெரிய கதை… அதைப் பிறகு சொல்கிறேன்… உன் அத்தை கோவிலுக்குள்தான் இருக்கிறாள்… உன்னைக் கண்டால், மகிழ்ந்துபோவாள்… வா உள்ளே பொகலாம்…” என்றவாறு, ரஞ்சனியைத் தன்னோடு உள்ளே அழைத்துச் செல்ல, நிரந்தரியை எரிப்பதுபோல பார்த்துவிட்டுத் தன் மாமனின் பின்னால் சென்றாள் ரஞ்சனி.
என்ன பார்வை அது… என்னையா அடித்தாய்? உன்னை சும்மா விடுகிறேனா என்பது போலிருந்த பார்வையைக் கண்டு நடுங்கிப்போனாள் நிரந்தரி.
இவள் அத்தையின் உறவு என்று தெரிந்திருந்தால், ஏழு கட்டைக்கு அப்பால் சென்று நின்றிருப்பாள்… இப்பேது கைநீட்டிவேறு அடித்துவிட்டாள்… இதை அத்தை அறிந்தால்…. நினைக்கும் போதே அவளுடைய நெஞ்சம் பதறியது.
நல்லவவேளை, இவளைத்தான் ஜெயப்பிரகஷிற்குப் பேசி வைத்திருந்தார்கள் என்பதும், திருமணம் நிச்சயமாகும் முன்னே, குலவேந்தர் தன்னை அவனுக்குக் கட்டிவைத்து, வள்ளியம்மையினதும், ரஞ்சனியின் குடும்பத்தினரதும், வைத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டார் என்பதும், இவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. தவிர இப்போது, சர்வாகமனிற்கும், இந்த ரஞ்சனியை மணம் முடித்துக் கொடுக்க, வள்ளியம்மை திட்டம் போட்டிருப்பது கூட, அவளுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால்…
“என்ன, இப்படியே நிற்கும் எண்ணமா… இல்லை…” என்று கோவில் வாசலைக் காட்டியவாறு சர்வாகமன் கேட்க, சுயநினைவுக்கு வந்த நிரந்தரி விடு விடு என்று அவனுக்கு முன்பாகக் கோவிலை நோக்கிப் போகத் தொடங்கக் கோபப்பட்டால், தன்னவளும் பொங்குவாள் என்கிற மகிழ்ச்சியுடன் அவளைப் பின் தொடர்ந்தான் சர்வாகமன்.