Fri. Nov 22nd, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5)

ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து,

“சாரி… என்னால் உங்களுக்கு நிறையத் தொல்லை…” என்றாள் மெய்யான வருத்தத்துடன். அவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“என்னால்தான் உனக்கு இந்த நிலை… அதனால் இந்த மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை” என்றவாறு, “பசிக்கிறது ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போவோமா?” என்றான். இவளுக்கும் சற்றுப் பசித்ததுதான். மறுக்காமல் சரி என்று தலையை ஆட்ட, அங்கிருந்த மிஸ்டர் சப் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு,

“நீ மாமிசம் சாப்பிடுவாய் தானே…?” என்றான். இவள் ‘இல்லை’ என்பது போலத் தலையாட்டி,

“மரக்கறி” என்றாள் சோர்வுடன். விடிகளோ மூடி மூடித் திறந்தன.

‘இதோ வருகிறேன்…’ என்று விட்டுக் கடைக்குள் போனவன், திரும்பி வந்தபோது விதற்பரை உறங்கிவிட்டிருந்தாள்.

ஏனோ அவளை எழுப்பிச் சாப்பிடு என்று பணிக்க இவனுக்கு மனம் விளையவில்லை. என்ன செய்வது என்று குழம்பியவன், மீண்டும் வண்டியில் ஏறி அமர்ந்து அவளைத் திரும்பிப் பார்த்தான்.

இவன் பக்கமாகத்தான் தலை சாய்ந்திருந்தது.

அவனுக்கு அத்தளிர் வதனத்திலிருந்து பார்வையை அத்தனை சுலபத்தில் மீட்டெடுக்க முடிந்திருக்கவில்லை.

நீண்ட மூடிய விழிகளிலும், அதற்குத் தோதாக வளைந்திருந்த புருவங்களையும் கண்டு வியந்தவனுக்கு எந்தப் பூச்சுமில்லாத அந்தப் பால் முகம் சிக்கிமுக்காமல் பச்சென்று மனதில் ஒட்டிக்கொண்டது.

அவன் ஒன்றும் அழகிகளைப் பார்க்காதவன் அல்ல. ஆனால் இது… எப்படிச் சொல்வான்? எப்படி வர்ணிப்பான்?

அந்தப் பால்வடியும் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளே என்னவோ செய்து தொலைக்கிறதே. எப்போதும் நிலையில்லாது தாறுமாறாகக் கொதித்தோடும் குருதியின் வேகம் குறைந்து குளிர்ந்து அமைதியாகப் பயணிப்பது போல அல்லவா இதம் பரப்புகிறது, உஷ்ண மூச்சுக் கூடச் சீற்றத்தைத் தணித்துவிட்டது. இவள் முகத்தைப் பார்க்கும்போது உடல் தளர்ந்தது. எப்போதும் ஆட்டிப்படைக்கும் அலைப்புறுதல் தணிந்து தவிப்பு மந்தமாகிப் பரிதவிப்புக் குறைந்து… ஐயோ…! அந்த இதத்தை எப்படி வார்த்தைகளால் கூறுவான்.

இதுவரை யாரிடமும் இத்தகைய உணர்வுக்குள் ஆட்பட்டதில்லையே. இதோ இப்போது கூட அவள் உடலிலிருந்து வெளிவரும் அந்த மெல்லிய சுகந்தமான வாசனை இவன் நாசியைத் தோட்டு நுரையீரலை நிரப்பும் இந்தத் தருணம், ஏதோ போதை உட்கொண்டது போல அல்லவா புத்தி மிதக்கிறது. இதுவரை நேர்கோட்டில் பயணிக்காது தாறுமாறாக அங்கும் இங்கும் அலக்கழியும் புத்தியும் மனமும் உடலும் முதன் முறையாக ஒன்றாகப் பயணிக்கிறதே. இது என்ன விந்தை? ஒரே நாளில் ஒரு பெண்ணைக் கண்டால் இப்படி மாற்றங்கள் ஏற்படுமா என்ன? புரியவில்லை… ஆனாலும் அவள் அருகே இருக்கவேண்டும் என்று மூளையில் எங்கோ ஓரிடத்தில் மணி அடித்துக்கொண்டிருப்பது மட்டும் உண்மை.

அதுவும் சற்றுப் பிளந்து செழித்திருந்த அந்த உதடுகளைக் கண்டவனுக்கு உடலில் யாரோ மின்சாரத்தைச் செலுத்திய அவஸ்தை. புத்தியோ தாரு மாறாகச் சுழியோட தொடங்கியது. அவள் உதட்டுக்குச் சாயம் போட்டிருக்கிறாளா, இல்லை நிஜமாகவே இவளுக்குச் சிவந்த உதடுகள்தானா? விழிகளோ உதடுகளை விட்டுப் பிரியமாட்டேன் என்று அடம் பிடித்தன. அதுவும் குளிராலோ, இல்லை வலியின் ஆதிக்கத்தாலோ சிவந்துபோன அந்தக் கன்னக் கதுப்புகளைக் கண்டவனுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை.

அந்தக் கன்னத்தின் மென்மையை எப்படியாவது உணர்ந்துவிட வேண்டும் என்று வேகம் கொண்டவனாய், அதை வருடிப்பார்த்து அறிந்துகொள்ளத் தன் கரத்தைத் தூக்கிவிட்டும் இருந்தான்.

அவனுடைய கரம் அவள் கன்னக் கதுப்பை நோக்கி நெருங்க நெருங்க, உறக்கத்தின் வசமிருந்தவளின் உள்ளுணர்வு விழித்துக் கொண்டதோ. மெதுவாக அசைந்தவாறு தன் விழிகளைப் பட்டும் படாமலும் திறந்து மூட, அவளுடைய அசைவு அவனுடைய அறிவைப் பலமாகத் தட்டியெழுப்பியது.

அதிர்ந்து போனான் அவன். எத்தனை நேரமாக அவன் உலகத்தை விட்டு வேறு உலகிற்குச் சென்றான்…? தெரியவில்லை. ஆனால் தனக்குள் ஏதோ பாரிய மாற்றம் என்பது மட்டும் நன்கு புரிந்தது.

நம்ப முடியாமல் அவள் கன்னத்தை நெருங்க முயன்ற தன் கரத்தையும், அவளுடைய கன்னத்தையும் மாறி மாறிப் பார்த்தவனுக்கு வியர்த்துக் கொண்டு வந்தது. என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டான். அதுவும் யாரைப் பற்றிக் கற்பனையில் திளைக்கிறான். இவள் சமர்த்தியின் உறவினளாயிற்றே… இவளை இப்படி நினைப்பது சரியா? இது தெரிந்தால் இவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? சமர்த்திதான் என்ன எண்ணுவாள். தன்னிலை கெட்டு அலையும் உணர்வுகளிடமிருந்து எப்படி வெளியே வருவது? எப்படி ஜெயிப்பது? அவனையும் மீறி, அவனுடைய அனுமதியையும் வேண்டாது, விழிகள் மீண்டும் அவளிடமே தஞ்சம் புகுந்திருந்தன.

கூந்தல் சற்றுக் கலைந்திருந்ததால், ஒரு சில முடிகள் அவளுடைய விழிகளில் மீது ஊர்ந்து நாசியின் மீது விழுந்திருந்ததால், அவள் சுவாசித்தபோது, அவை ஊஞ்சலாட, அவற்றை விலக்கிவிடவேண்டும் என்கிற வேகத்தில் அனைத்தையும் மறந்து அவள் பக்கமாகச் சரிந்தவனுக்கு மீண்டும் தடுமாற்றம். அவளுடைய உடல் வெம்மையை அவன் உணர்ந்து கொள்ள, இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. போதாததற்கு அந்தச் சிவந்த உதடுகள் வேறு அவனை இம்சிக்க, இவனுடைய உதடுகள் வறண்டு போயின. அதை ஈரப்படுத்தும் நோக்கில் நாவால் வருடி, மெல்லியதாய் மேல் பற்களால் கீழ் உதடுகளைக் கடித்து விடுவித்தான். தொண்டை வேறு வறண்டு போனது.

அவனுடைய நெருக்கம், அவளுடைய உள்ளுணர்வுக்குப் புரிந்ததோ? ஏதோ ஒரு வித ஒவ்வாமை அவளுடைய தூக்கத்தைக் கலைக்க, மெதுவாக விழிகளைத் திறந்தவளுக்குத் தன் முகத்திற்கு நேராகத் தெரிந்த உத்தியுக்தனின் அந்தக் கம்பீர முகத்தைக் கண்டதும், முதலில் புரியாமல் குழம்பிப் பின், அதிர்ந்து, பின் வெறித்துப் பதட்டத்தோடு தலையைப் பின்னிழுத்து, இரும்பிழுத்தக் காந்தமாகப் பாய்ந்து கதவோடு ஒட்டிக்கொண்டவாறு இவனை அச்சத்தோடு பார்க்க, அதுவரை இருந்த மாய வலை பட்டென்று அறுந்துபோனது அவனுக்கு.

இப்போது அவனும் குழம்பிப்போனான். எதற்காக அவளை நோக்கிக் குனிந்தான்? சுத்தமாக மூளை வேலை செய்ய மறுத்தது. அது முகத்திலேயே அப்பட்டமாகத் தெரியப் புருவங்கள் சுருங்கியவாறு மீண்டும் தன் இருக்கையில் நேராக அமர்ந்தவனுக்குக் கொஞ்ச நேரம் எடுத்தது நிதானத்திற்கு வர.

எதையோ சொல்ல வாய் எடுப்பதும், பின் மூடுவதுமாகத் தவித்தவனின் விழிகள், கரத்திலிருந்த மிஸ்டர் சப்பில் நிலைக்க, பெரும் ஆசுவாச மூச்சு விட்டவாறு அதை அவளிடம் நீட்டியவாறு,

“உ… உனக்கு இதை வாங்கி வந்தேன்…” என்றான் மெல்லிய சங்கடப் புன்னகையுடன். இப்போது அவள் குழப்பம் தெளிந்தவளாய் அவன் நீட்டியதை வாங்கினாலும், மனதின் ஓரத்தில் எட்டிப்பார்த்த அந்த மெல்லிய குழப்பம் அவளை விட்டு நீங்கவேயில்லை.

இவனோ வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக்கொண்டு மீண்டும் வண்டியை உருட்டத் தொடங்க, விதற்பரையின் கைப்பேசி அடித்தது.

அவன் வாங்கிக் கொடுத்த ‘சப்பை’ பக்கத்தில் வைத்துவிட்டுத் தன் கைப்பையிலிருந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். கதரின்தான் அழைத்திருந்தாள். அவசரமாக அதை உயிர்ப்பித்துக் காதில் பொருத்த,

“ஹே எங்கே இருக்கிறாய். பல முறை உன்னை அழைத்தும் பதில் இல்லை என்றதும் பயந்துபோனேன் தெரியுமா…” என்று உரிமை கலந்த கோபத்துடன் இவளைத் திட்ட, இவளோ,

நீ என்னைக் கேட்கிறாயே… நீ எங்கே போனாய்… எத்தனை முறை உன்னை அழைத்துப் பார்த்தேன் தெரியுமா?” என்று சிடுசிடுக்க பின்னணியில் நகுலனின் விகார முகம் வந்து இவளுடைய கடுப்பை மேலும் அதிகமாக்கியது.

உடனே மலையிறங்கிய கதரின்,

“சாரிமா… நான் இப்போது ஒட்டாவாவில் இல்லை… நயகராவில் இருக்கிறேன்…” என்று ஒரு குண்டைப் போட பதறிப் போனாள் விதற்பரை.

“என்ன சொல்கிறாய்? என்ன நடந்தது…?”

“அப்பாக்கு விபத்து விது… செய்தி அறிந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் கிளம்பிவிட்டேன். இங்கே வந்ததும்தான் உன்னோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற நினைப்பே வந்தது. அதுதான் உன்னை அழைத்துப் பார்த்தேன். பதில் வரவில்லை என்றதும் கொஞ்சம் பயந்து விட்டேன்…” என்று கூற,

“ஓ… ஐ ஆம் சாரி… அப்பாவுக்கு இப்போது எப்படி இருக்கிறது?”

“இன்னும் எதுவும் தெளிவாகச் சொல்லவில்லை விது… பயத்தோடுதான் காத்திருக்கிறோம்…” என்றவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைக்கும் போது மனம் கனத்துப் போனது. ஆயாசத்துடன் விழிகளை மூடும்போதே,

“யார் அது?” என்றான் பக்கத்தில் அமர்ந்திருந்தவன்.

இவளோ விழிகளைத் திறந்து ஒட்டுக் கேட்டாயா என்பது போல, மெல்லிய எரிச்சலுடன் இவனைப் பார்க்க, இவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“இல்லை… நீ பேசியது காதில் விழுந்தது… அதுதான் கேட்டேன். சொல்லப் பிரியப்படவில்லை என்றால் சொல்லாதே…” என்றான் தன் பாதையில் கவனமாக.

இவளோ மீண்டும் சோர்வுடன் தன் விழிகளை மூடியவாறு,

“என்னுடைய தோழி… நானும் அவளும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பொதுவாக அவள்தான் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். இப்போது அவளுடைய அப்பாவிற்கு விபத்து என்பதால் சொந்த ஊருக்குப் போய்விட்டாளாம்…” என்று கூறிவிட்டு விழிகளை மூடியவளுக்கு மெல்லிய பயம் எட்டிப் பார்த்தது.

இந்தக் காலோடு கதரினின் உதவி கொஞ்சமாவது கிடைக்கும் சமாளித்து விடலாம் என்று நினைத்திருக்க, இப்போது அவளும் ஊருக்குச் சென்று விட்டாள். இந்த நேரத்தில் தனியாக எப்படிச் சமாளிப்பது…? ஒருவரின் உதவியில்லாமல் அவளால் சமாளிக்க முடியுமா? குறைந்தது இரண்டு வேளை சாப்பாட்டையாவது வாங்கிக் கொடுக்க ஒருவர் வேண்டுமே… தனியாக இருந்துகொண்டு யாரையும் உள்ளே வர அனுமதிக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வது?” குழப்பத்துடனேயே இருக்க, தூக்கம் மீண்டும் அவளை அழைப்பதுபோலத் தோன்றியது.

அது அவள் குடித்த டைலனோலின் பின் விளைவு என்பது புரிந்தது. அதில் உள்ள வேதிப்பொருள் இவளுக்குத் தூக்கத்தை வரவழைத்து விடும். அதன் விளைவாக, விழிகளை மூட முயன்றாள் விதற்பரை.

அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“ஆர் யு ஓக்கே…” என்றான் அவள் சோர்ந்த நிலை கண்டு. அவன் கேள்விக்கு ஆம் என்பது போலத் தலையை ஆட்டியவள்,

“டைலனோல் மேக் மி ட்ரௌசி…” என்று புன்னகைக்க முயல, அவனோ, அவள் கரத்திலிருந்த உணவுப் பையை ஒற்றைக் கரத்தால் வாங்கி, அதைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்து அவளிடம் நீட்டியவாறு,

“இரண்டு வாய் சாப்பிடு… சோர்வு போய்விடும்… வெறும் வயிற்றோடு மருந்து எடுத்ததால் அப்படியிருக்கலாம்…” என்று கூற, மறுக்காமல் வாங்கி இரண்டு வாய் சாப்பிட்டவளுக்கு ஏனோ அதற்கு மேல் உண்ண முடியவில்லை.

ஆனாலும் கொறித்தவாறு, வெளியே வெறித்துக்கொண்டு வர, அந்த நேரம் பார்த்து ஒரு மோட்டார் வண்டி பெரும் சத்தத்தோடு இவர்களின் வாகனத்தைக் கடந்து சென்றது. அது போட்ட சத்தத்தில் இவளுடைய காதுகள் இரண்டும் அடைத்துப்போனது.

ஒற்றைக் கரத்தால் வலது காதைப் பொத்தியவள்,

“அப்பா… என்ன சத்தம்… இதெல்லாம் சூழல் மாசடைதல் என்பதை ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்… காது சவ்வு கிழித்து விட்டது…” என்றாள் எரிச்சலுடன்.

“உனக்கு மோட்டார் வண்டி பிடிக்காதா என்ன?” என்றான் ஆச்சரியத்தோடு. இப்போது இவளுடைய உதடுகளிலும் மெல்லிய புன்னகை. இழுத்து மூட முயன்ற விழிகளைச் சிரமப்பட்டுத் திறந்தவாறு அவனைத் திரும்பிப் பார்த்தவள்,

“ரொம்பப் பிடிக்கும்… அதில் ஏறி நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்று ஆசையிருக்கிறது… ஆனால் அது போடும் சத்தம்தான் சுத்தமாகப் பிடிப்பதில்லை..” என்று கூற, இவளைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தெருவில் கவனத்தைச் செலுத்தி,

“அவர்களுக்கு அந்தச் சத்தம் பிடித்திருக்கிறது… பிறரின் கவனத்தைத் தம் பக்கம் திருப்புவதற்காகவே இப்படிச் செய்வார்கள்…” என்றான்.

எரிச்சலுடன் எதையோ முணுமுணுத்துவிட்டு,

“அதற்காக இப்படியா…” என்றவள், ஆவலுடன் அவனைப் பார்த்து,

“மாமா நீங்கள் எப்படி… மோட்டார் வண்டி ஓடுவீர்களா?” அவளை மீறிக் குரலில் ஆவல் தெறித்தது.

“ம்… அனுமதிப்பத்திரம் வைத்திருக்கிறேன்…” என்றவனுக்கு அப்போதுதான் அவள் தன்னை மாமா என்ற அழைப்பதே உறுத்தியது மருத்துவமனையிலும் அவனை மாமா என்றுதான் அழைத்தாள். முதன் முறையாகப் பார்த்தபோதும் அப்படித்தான் அழைத்தாள். ஏன் அப்படி அழைத்தாள்? குழப்பத்துடன் அவளைப் பார்த்து,

“அப்போதிலிருந்து நானும் கவனிக்கிறேன்… என்னை எதற்காக மாமா என்று அழைக்கிறாய்?’ என்றான். இவளோ அழகாய் புன்னகைத்து?

“உங்களை மாமா என்றுதான் அழைக்கவேண்டும் என்று அம்மா சொல்லியிருக்கிறார்கள்.” என்றாள்.

“ஓ… ரியலி…” என்று வியந்தவன், பின் அவளைப் பார்த்து, “ஏன்…?” என்றான்.

“ஏனா…? அத்தையின் கணவரை மாமா என்றுதான் அழைக்க வேண்டுமாம். அம்மா உத்தரவு” என்றாள். இவனோ புரியாத புதிருடன் என்ன உளறுகிறாய் என்பதுபோல அவளைப் பார்த்து,

“அட்டையா? அப்படியென்றால்…? நான் எப்படி அட்டையின் கணவராவேன்…?” குழப்பத்துடன் கேட்டான் அவன்.

அதைக் கேட்டதும் கோபத்துடன் அவனை வெறித்தாள்.

“மாமா… அத்தை செய்தது தவறுதான் ஒத்துக்கொள்கிறேன். அதற்காக அத்தையின் கணவரில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லாம். என்னதான் நீங்கள் பிரிந்திருந்தாலும் அவரை மணந்தது இல்லையென்றாகிவிடுமா…? நீங்கள் பிரிந்து வாழ்கிறீர்கள் என்பதற்காக மாமா என்கிற முறைதான் இல்லாது போகுமா?” என்றதும் அதிர்ச்சியுடன் அவளை வெறித்தான் அவன்.

“என்ன உளறல் இது? நீ ஏதோ தவறாகப் புரிந்திருக்கிறாய்… ஐ நெவர் மரிட் அன்ட் ஐ வில் நெவர் மரி…” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் விதற்பரை. ‘என்ன உளறுகிறான் இவன்… திருமணம் முடித்ததில்லையாமா…? அப்படியானால் அத்தை இவனுக்கு யாராம்?’ ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டவள்,

“இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை மாமா. திருமணம் என்கிறது கேலிக்கூத்தா என்ன? கொஞ்சக்காலமானாலும் அவர்கள் உங்களோடு வாழ்ந்தது பொய்யாகிவிடுமா… எப்படி இப்படி மனசாட்சியே இல்லாமல் அத்தைக்கும் உங்களுக்கும் இடையே சம்பந்தம் இல்லாதது போலப் பேசுகிறீர்கள்?” என்று தன்னை மறந்து சீற, அதிர்ச்சியுடன் தன்னருகே அமர்ந்திருந்தவளை வெறித்தான்

அவள் சொல்வதை முதலில் கேட்டுக் குழம்பியவனுக்குப் பின் எதுவோ புரிந்து போக,

“நீ… நீ… அட்டை என்று யாரைச் சொல்கிறாய்” என்றான் அழுத்தமாக.

“நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குப் புரியவில்லையா… நான் பேசுவது உங்கள் மனைவி சமர்த்தியைப் பற்றி. என் அத்தையைப் பற்றிப் பேசுகிறேன்…” அவள் முடிக்கவில்லை, அவனுடைய வாகனம் பெரும் கிறீச் என்கிற சத்தத்தோடு ஓரமாக ஒதுங்கி நின்றது. அது நின்ற வேகத்தில் டாஷ் போர்டில் பலமாக மோத இருந்தவளின் மார்பில் தன் கரத்தைக் கொடுத்துத் தடுத்தவாறு அவளை நம்பமாட்டாதவனாகத் திரும்பிப் பார்த்தான் அவன்.

“சமர்த்தி என் மனைவியா?” என்று கேட்டவனுக்குக் குழப்பம் மறைந்து தெளிவு பிறந்தது. கூடவே உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று வந்து தங்கியது. இன்னும் சரியாக எழுந்திராமல் அவனுடைய கரத்தில் பலத்தில் முன்பக்கம் சாய்ந்து நின்றிருந்தவள், திரும்பி அவனைப் பார்க்க, அவனோ, அதுவரை அவள் மீது பதிந்திருந்த கரத்தை இழுத்தெடுத்தவாறு,

“நீ என்னை யார் என்று நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்றான் நிஜம் தெரிந்த சிரிப்புடன். இவளோ ஆத்திரத்துடன் சரியாக அமர்ந்தவாறு, அவனை முறைத்து,

“இது என்ன கேள்வி… நீங்கள் என் மாமா… என் அத்தையின்” என்று சொல்லிக்கொண்டு வந்தவளுக்கு அப்போதுதான் அடித்தாற்போல அந்த நிஜம் உறைத்தது. அதிர்ந்து போய்த் தன் அருகே அமர்ந்திருந்தவனை உற்றுப் பார்த்தவளுக்கு உடலிலிருந்து இரத்தம் வடிந்து செல்வது போலாயிற்று.

உத்தியுக்தனுக்குச் சிரிக்கத் தெரியாது. ஆனால் இவனிடம் சர்வசாதாரணமாக நெளியும் புன்னகை. உத்தியுக்தனிடம் சதா ஒரு வித இறுக்கம் இருக்கும். அது எதிராளியைப் பல மைல்களுக்கு அப்பால் தள்ளி நிற்க வைக்கும். இவனோ அதற்கு நேர் மாறு. இலகுவாகவே எதிராளியை நெருங்கிவிடுகிறான். உத்தியுக்தன் மற்றவர்களுக்காக இத்தனை மினக்கட மாட்டான். ஆனால் இவன் தானாக உதவி செய்ய முன்வருகிறான்… உத்தியுக்தன் அத்தனை சுலபத்தில் பெண்களை ஏறிட்டுப் பார்க்கான். இவன் சுலபமாகக் கனிந்து போகிறான். தவிர அவன் இப்படித் தலைமுடிக்குள் முகத்தை மறைத்திருக்க மாட்டான். இவனுடைய முகம் தாடி மீசைக்குள் மறைந்திருந்ததால்தான் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இல்லை என்றாலும் வித்தியாசம் காண்பது சிரமம்தான். அதுவும் ஒரே ஒரு முறைதான் உத்தியுக்தனின் தம்பியை இவள் கண்டிருக்கிறாள். அதுவும் அத்தையின் திருமணத்தின் போது. இந்த நிலையில் இருவருக்குமான வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்லதான்.

கூடவே காலின் வலி அவளைச் சரியாகச் சிந்திக்க விடவில்லை. அதற்குப் பின் குடித்த டைலனோல் அவள் புத்தியை மழுங்கடித்து விட்டது. இல்லையென்றால் கொஞ்சமாவது சந்தேகப்பட்டிருப்பாள். அதுவும் அடர்ந்த தாடி மீசையும், குவித்துக் கட்டிய கொண்டையும் அவளை எச்சரித்திருக்கும். ஆனாலும் அத்தையைப் பிரிந்ததால் வந்த விரக்தியில் இப்படி தன்னில் கவனமில்லாமல் அலைகிறான் என்றுதான் நினைத்திருப்பாளே தவிர, இவன் உத்தியுக்தனின் தம்பி என்று நிச்சயமாக யூகித்திருக்க மாட்டாள்.

இவள் என்ன கனவா கண்டாள் இப்படி உத்தியுக்தனின் தம்பியின் வலையில் சிக்குவோம் என்று. எங்கோ உலகின் ஒரு முலையில் இருப்பவன். இவள் சிந்தையிலிருந்து சுத்தமாகக் காணாமல் போனவன். இப்படிக் கண்முன்னால் வந்து நிற்பான் என்று ஆரூடமா பார்த்தாள்?

கடவுளே சின்னப் பொறி…! சின்னப் பொறி இவளுக்குள் தோன்றியிருந்தாலும் சுதாரித்திருந்திருப்பாள். அவனை விட்டுக் காத தூரம் ஓடியிருப்பாளே… இப்படி ஒரே வாகனத்தில் அவனுக்கு மிக அருகாமையில்…. மெல்ல மெல்ல உண்மை புரிய இவளுடைய விழிகள் அதிர்ச்சியுடன் விரிந்தன. அதுவரையிருந்த பாதுகாப்பு உணர்வு வடிந்து போகப் பெரும் கிலி சூழ்ந்து கொண்டது. தேகம் அவளையும் மீறி பயத்தில் நடுங்கத் தொடங்கியது.

‘காலம் கெட்டபின் சூரிய நமஸ்காரமா…? ஐயையையோ… இவ்வளவு நேரமாகப் பெண்பொருக்கி கூடவா சுற்றிக்கொண்டிருந்தோம்… இவனோடு நேரத்தைச் செலவிட்டது மட்டும் அம்மாவிற்குத் தெரிந்தது தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார்களே… நினைக்கும் போதே இதயத்தின் வேகம் பல மடங்கு அதிகமானது.

“நீ… நீங்கள்… என் மாமா… உத்தியு…” என்றவள் அதற்கு மேல் வார்த்தை வராது சண்டித்தனம் செய்ய, இப்போது அவனுடைய புன்னகை சற்றுப் பலமாக விரிந்தது. மறுப்பாக தலையை அசைத்தவன்,

“நீ என்னை உத்தியுக்தன் என்று நினைத்தாயா…? என்றான் கனிவாய். இவளோ அவசரமாகத் தலையை ஆம் என்பது போல ஆட்டினாலும், யாரின் நிழலை நெருங்கக் கூடாது என்று நினைத்தாளோ அவன் கூடவே அமர்ந்திருப்பதை நினைக்க இவளுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. அதுவரையிருந்த கால் வலி கூட மரத்துப் போனது.

அந்தக் கணமே அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் என்று உடலும் மனமும் ஒருங்கே பரபரத்தன. ஆனால் முடியாதே. அதுவும் இந்தக் கால்களை வைத்துக்கொண்டு நிச்சயமாக அவளால் முடியாது.

கடவுளே எத்தனை பெரிய இக்கட்டில் சிக்கிக்கொண்டாள். இப்போது இவளை என்னைச் செய்யப்போகிறான். ஒரு வேளை இவளோடு தவறாக நடந்துகொண்டால் எப்படித் தப்புவாள்? அதுவும் இந்த நேரத்தில்? எதையும் தெளிவாக கூடச் சிந்திக்க முடியவில்லையே… இதயம் சில்லிட ஏனோ அழுகை வந்தது. மனதின் பலவீனம் உடலில் தெரிய, விழிகளில் கண்ணீர் முட்ட, அழுகையில் உதடுகள் நடுங்க,

“நா… நான் வீட்டிற்குப் போகவேண்டும்…” என்றாள் குழந்தை போல. அவனோ அவளை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தான். அதுவும் கண்ணீர் நிறைந்த விழிகளைக் கண்டவன், என்ன நினைத்தானோ, வண்டியை மீண்டும் இயக்கியவாறு,

“போகலாம்…” என்று விட்டு, வாகனத்தின் வேகத்தைக் கூட்ட, ஏதோ முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்ற அவஸ்தையோடு அவனுடைய காற்றுப் பட்டாலே தீட்டு என்பது போலக் கதவோடு நெருங்கி ஒடுங்கி அமர்ந்து கொண்டாள். தொண்டையோ வறண்டு போனது. அதை எப்படிச் சமப்படுத்துவது என்று புரியாமல் குழம்பியவளாக வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் விதற்பரை.

சற்று முன் மருந்தின் வீரியத்தால் மூட முயன்ற விழிகள் இப்போது அச்சத்தில் திறந்தவாறு நின்றன. எங்கே அவன் தன் மீது பாய்ந்துவிடுவானோ என்பது போலத் தேகம் நடுங்கி வியர்த்தது.

ஆனால் அவளுடைய அச்சத்துக்கு அர்த்தமில்லை என்பதைக் காட்டும் வகையில், அவளுடைய குடியிருப்பை நெருங்கத் தொடங்கியது வாகனம்.

அதுவரை அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம் வடிந்துபோகப் பெரும் நிம்மதியோடு, ஒரு பெருமூச்சை விட்டவள்,

“இதோ இங்கேதான்… அப்படியே வலது பக்கம் திருப்புங்கள்…” என்று கூறியவாறு, அவனுடைய வாகனம் வலப்பக்கம் திரும்பும் நேரத்திற்காகக் காத்திருக்க, அந்தோ பரிதாபம். அது சடார் என்று அவள் குறிப்பிட்ட இடத்தைக் கடந்து நேராக மிக வேகமாகச் சென்றது.

What’s your Reaction?
+1
18
+1
9
+1
0
+1
4
+1
0
+1
1

Related Post

4 thoughts on “தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5”
  1. அருமையான பதிவு 😍😍😍😍😍😍.
    ஹப்பாடா நம்மாளுக்கு இவன் யாருன்னு தெரிஞ்சு போச்சு.
    அடேய் வண்டிய எதுக்குடா வூட்டுக்கு வுடாம வேற பக்கம் கொண்டு போறே😱😱😱😱😱

    1. அவன்தான் பொம்பளை பொருக்கின்னு தெரியுதில்ல. அப்புறம் எதுக்கு ஏறி உக்காந்திருக்கா. இறங்கி ஓடச் சொல்லுங்க

      1. அதான் 😔😔😔😔😔😔😞😞😞😞😞ஓட முடியாதே கால்ல அத்தாம் பெரிரிய்ய்ய்ய கட்டு போட்டாச்சே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!