Sat. Apr 19th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 6/7

(6)

அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால் இவள் பிணமாகிப் போவாளே.

இல்லை… நிச்சயமாக முடியாது. என்ன நடந்தாலும், என் குழந்தையை அவர்களிடம் கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். விழிகளைத் திறந்தவள், அவனை அழுத்தமாகப் பார்த்து, மறுப்பாகத் தலையசைத்தாள்.

“இந்த உலகமே அழியப் போகிறது என்றாலும் என் மகனை யாருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க மாட்டேன்… தயவு செய்து வெளியே போங்கள்… இனி திரும்பவும் உங்களை நான் பார்க்கக் கூடாது…” அழுகையில் குரல் கமறினாலும், தெளிவாக அவள் கூற,

“கமான்… பெரிய உத்தமி போல நாடகம் ஆடாதே. அப்படி ஆடினாலும் அதை நம்பிவிட நான் ஒன்றும் முட்டாள் இல்லை. வேண்டும் என்றால் நீ எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே கொடுக்கிறேன்…”

“கெட் அவுட்…!” இப்போது அவளுடைய உடலோ ஆத்திரத்தில் நடுங்கியது. தேகமோ எரிந்ததது. மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தவளைப் பொறுமையிழந்து பார்த்தான் அபராசிதன்.

என்ன ஆனாலும் சரி, குழந்தையை அழைத்துச் செல்வது என்கிற முடிவில் அவன் இருந்தான். இவளோ கொடுப்பதில்லை என்கிற முடிவில் இருந்தாள்.

“இதோ பாருங்கள்… அப்போது நான் முட்டாள் தனமாக உங்கள் அண்ணாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன்தான். அதில் கூட குழந்தையை வளர்ப்பதற்குத்தான் பணம் கேட்டேனே தவிர, குழந்தையை கொடுப்பதற்காகப் பணம் கேட்க வில்லை…” என்றாள் முடிந்த வரை பொறுமையை இழுத்துப் பிடித்துக் குரலில்.

“சரி பணத்தை விடு… கொஞ்சம் ஆராவமுதனின் எதிர்காலத்தை மனதில் வைத்து யோசித்துப் பார். அவன் வளர வளர அவனுடைய செலவுகளை உன்னால் நிறைவு செய்ய முடியுமா? அவனுக்கான நல்ல எதிர்காலத்தை எங்களால் மட்டும்தான் கொடுக்க முடியும். அவனுக்கு வளமான வாழ்க்கை அங்கே காத்திருக்கிற போது, அதைத் தட்டிப் பறிப்பது நியாயமில்லை. ஐந்துக்கும் பத்துக்குமாக வேலைக்குப் போகும் நீ, நாளை ஆராவமுதனின் எதிர்காலத்தை எப்படிச் சீராக அமைத்துக் கொடுப்பாய்? இப்போதே இந்தத் திணறு திணறுகிறாய். அவன் வளர்ந்த பிறகு உன்னால் முடியுமா… புரிந்து கொள்…” என்றவன் அதுவரை இருந்த இறுக்கத்தைத் தளர்த்தி இப்போது குரலைச் சற்று மென்மையாக்கினான்.

“உன்னுடைய இடத்திலிருந்து யோசிக்காமல், கொஞ்சம் ஆராவின் இடத்திலிருந்து யோசி. அவனுடைய எதிர்கால நன்மையை மட்டும் கருத்தில் எடுத்து யோசி… அவன் கோடிக்கு அதிபதியாக வேண்டியவன்… அவனுக்குக் கிடைக்கவேண்டிய அந்த வசதியான வாழ்க்கையை உன் சுயநலத்தால் கெடுத்துவிடாதே…” அவன் சொல்ல, அவனைப் பார்த்து முறைத்தாள் திகழ்வஞ்சி.

“அதை எதற்காக நான் கெடுக்கவேண்டும்? அவனுடைய சொத்தை அவனிடம் கொடுக்க வேண்டியதுதானே…” என்றாள் எரிச்சலோடு.

“ஆராவமுதன் குழந்தை. அவனால் எப்படி அவனுடைய தந்தையின் சொத்தைப் பராமரிக்க முடியும்…?” கேட்டவனை எரிச்சலோடு பார்த்தவள்,

“அதுதான் அவனைப் பெற்ற தாய் நான் இருக்கிறேனே… நான் பார்த்துக் கொள்கிறேன்…” அவள் சொல்ல, இப்போது ஏளனமாகச் சிரித்தான் அபராசிதன்.

“அதுதானே பார்த்தேன். பணம் வேண்டாம் என்றதும், உண்மையாகவே நீ மாறிவிட்டாயோ என்று நினைத்தேன். இல்லை. கோடிகளுக்கு ஆசைப்படும் நீ வெறும் இலட்சங்களை எப்படி ஏற்றுக்கொள்வாய்?” என்று எகத்தாளமாகக் கேட்டவன்,

“அண்ணாவின் சொத்துக்களை அப்படி எல்லாம் ஏனோ தானோ என்று தாரைவார்த்துக் கொடுத்துவிட முடியாது. அது அவன் போராடி உழைத்த சொத்துக்கள். அதை அம்போ என்று யார் கையிலும் கொடுத்துவிட முடியாது. முக்கியமாக உன் கையில்… நீதான் பணந்தின்னிக் கழுகாயிற்றே. உன்னை நம்பி அவன் பெயரில் எப்படிச் சொத்துக்களை எழுதி வைப்பது? ம்கூ… அதற்கு வாய்ப்பே இல்லை.” அவன் சொல்ல, கோபத்தில் முகம் சிவந்து போனாள் திகழ்வஞ்சி.

“போதும் நிறுத்துங்கள்… என்ன விட்டால் அதிகம் பேசுகிறீர்கள்? இவன் அப்பா சம்பாதித்தது இவனுக்குத்தானே வந்து சேரவேண்டும்…? அது அவனுடைய உரிமை. அதைக் கொடுக்கமாட்டேன் என்று சொல்ல நீங்கள் யார்?” கேட்டவளை எள்ளலாகப் பார்த்தான் அபராசிதன்.

“நான் நினைத்ததை விட நீ பயங்கரமான ஆளாகத்தான் இருக்கிறாய்” ஏளனத்துடன் சிரித்தவன், “அமலனின் சொத்து முழுக்க இப்போது என் பொறுப்பில் இருக்கிறது. சொல்லப் போனால் நான் நினைத்தால் மட்டும்தான் ஆராவமுதனுக்கே கொடுக்க முடியும்… என்ன அப்படிப் பார்க்கிறாய்? அண்ணாவும் நானும் பங்குதாரர்கள். இருவரில் யாருக்காவது ஒருவருக்கு ஏதாவது நடந்தால், அந்தச் சொத்து முழுக்கப் பங்குதாரருக்குத்தான் போகும். அப்படித்தான் உயில் எழுதி வைத்திருக்கிறோம். அமலன் இறந்து விட்டான். இப்போது அவனுடைய சொத்து முழுக்க என் பெயருக்கு வந்து விட்டது… அதிலிருந்து ஒரு டாலரைக் கூட உன்னால் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாது. நீ வழக்குத் தொடுத்தாலும் சல்லிக் காசு உனக்குக் கிடைக்காது. நானாக ஏதாவது கொடுத்தால்தான் உண்டு… ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. இதோபார் அவன் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் தொண்டு நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுக்கத்தான் நினைத்திருந்தேன். பிறகுதான் அவனுக்கு ஒரு பையன் இருப்பதே எனக்குத் தெரிய வந்தது. நியாயப்படி அவனுக்குத்தான் போய் சேரவேண்டும். அதனால்தான் அவனைத் தேடி இவ்வளவு தூரம் வந்தேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வெளிப்பக்கமாக சரசரப்புச் சத்தம் கேட்டது. வாசலில் நின்றவாறு திரும்பிப் பார்த்த திகழ்வஞ்சிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அங்கே ஈவா ஆராவமுதனை ஏந்தியவாறு வந்து கொண்டிருந்தாள்.

ஐயோ ஈவா வருகிறாளே. இப்போது ஏன் வருகிறாள்… இவன் சென்ற பிறகு வந்திருக்கக் கூடாதா? பதட்டத்துடன் அபராசிதனை ஏறிட அவனும் எட்டி வாசலைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

ஈவா இவர்களை நெருங்கியதும், ஆராவமுதன் தாயைக் கண்ட குதுகலத்தில் கால்களையும் கரங்களையும் அசைத்து தன் நான்கு பற்களையும் காட்டிச் சிரித்தவாறு அவளை நோக்கிச் சரிய, அவளோ தன்னை நோக்கிப் பாய்ந்த மகனை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள். விழிகளோ அவளையும் மீறிக் கலங்கிப் போயின.

அவளுடைய அந்த நிலை, ஈவாவிற்குப் சந்தேகத்தைக் கிளப்பியதோ

“ஏய்… திகழ்… வாட் ஹப்பன்ட்… ஆர் யூ ஓக்கே…” என்று கேட்டவாறு திகழ்வஞ்சியின் தோளில் கரங்களைப் பதித்தவாறு உள்ளே பார்க்க, அங்கே குழந்தையையே வெறிக்கப் பார்த்தவாறு பாறையாக நின்றிருந்தான் அபராசிதன்.

“இஸ் எவ்ரிதிங் ஓகே? இது யார்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் தயக்கமாகக் கேட்க, அவசரமாக ஒரு புன்னகையைச் சிந்தி,

“இவர்… வந்து.. ஆராவமுதனுடைய சித்தப்பா அபராசிதன்…” என்று திக்கித் திணறியவள் திரும்பி அபராசிதனைப் பார்த்து,

“இவள் ஈவா… வேலைக்குச் செல்லும்போது இவள்தான் என் குழந்தையைப் பார்த்துக் கொள்வாள்…” என்று அறிமுகப் படுத்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நட்பாக ஹாய் என்றார்கள்.

இருவரும் நட்பாக ஹாய் என்றாலும், ஈவாவின் விழிகள், யோசனையோடு அபராசிதன் மீது படிந்தது.

என்னதான் அவனை ஆராவமுதனின் சித்தப்பா என்று சொன்னாலும் அவன் நின்றிருந்த கோலமும், அழுதுவடிந்த திகழ்வஞ்சியின் நிலையும் ஈவாவை சற்று யோசிக்க வைக்கத் திவழ்வஞ்சிக்கு மட்டும் கேட்கும் குரலில்,

“ஒன்றும் இல்லை என்றால் எதற்காக நீ அழுதிருக்கிறாய். உன் கண்கள் சிவந்து முகம் வெளிறி… வேண்டுமானால் ஜார்ஜை வரச் சொல்லவா?” என்றாள் கிசுகிசுப்பாக. பொதுவாகவே ஈவா இவளுடைய விஷயங்களில் மூக்கை நுழைப்பதில்லை. அதே நேரம் அவளுக்கு ஒரு தேவை என்றால் முதல் ஆளாக வந்துவிடுவாள். இப்போதும் கூடத் திகழ்வஞ்சியின் கலங்கிய முகமும், அதைத்துப் போன முகமும்தான் ஈவாவை தயங்க வைத்தது. அதைப் புரிந்து கொண்டவளாக,

“ஓ… நோ… அது… அவர் ஒரு மரணச் செய்தியுடன் வந்திருக்கிறார்… அதுதான்…” என்று கூறிச் சமாளித்தவளின் உதடுகள் மீண்டும் நடுங்க, உடனே அவளை அணைத்துக் கொண்டாள் ஈவா.

“ஓ.. பேபி.. ஐ ஆம் சோ… சாரி…” என்று அவளும் சேர்ந்து வருத்தப்பட, சற்று நேரம் ஈவாவின் அணைப்பிலிருந்தவள், மெதுவாகத் தன்னை விடுவித்துவிட்டு,

“நன்றி ஈவா…” என்றாள் மென்மையாக. உடனே மென் புன்னகை சிந்திய ஈவா,

“டேக் கெயர் பேபி…” என்றுவிட்டு

“சரி… நான் போய்வருகிறேன். ஆனால் என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னை அழை..” என்றவாறு, நிமிர்ந்து அபராசிதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேற, அதுவரை சொகுசாக அவளுடைய மார்பில் முகத்தைப் புதைத்திருந்த மகனை அணைத்தவாறே அவனை நோக்கித் திரும்பினாள் திகழ்வஞ்சி.

திரும்பியவளின் விழிகளிலும் கண்ணீர் குளம் கட்டி நின்றிருக்க அதை அடக்க முயன்றவளின் முகம் சிவந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அவளுடைய மனதோ, பெரும் போராட்டத்தில் தவித்தது. மகனைக் காக்கும் போராட்டத்தில் இனி என்னவெல்லாம் சந்திக்கப் போகிறாளோ. நினைக்கும் போதே ஆயாசமானது அவளுக்கு.

அவளால் சாப்பிடாமல் கூட இருக்க முடியும். ஆனால் அவள் மகனைக் கொஞ்சாமல் அவன் கூடப் பேசாமல், அவனோடு விளையாடாமல் எப்படி இருக்கமுடியும்? ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது என்பார்கள். இதில் இவனுடைய பணம் வானம் வரை செல்லுமே. அவனோடு இவளால் போராடிக் குழந்தையைத் தனதாக்கிவிட முடியுமா? நினைக்கும் போதே தலை சுற்றியது அவளுக்கு.

அதே நேரம் இன்னொரு மனமோ, இல்லை… இவன் என் மகன். நான் சுமக்கும் மகன். அந்தக் கடவுளே வந்து கேட்டாலும் இவனை விட்டுக் கொடுக்க முடியாது. நிச்சயமாக யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டேன்… உறுதியுடன் தன் மகனை இறுக அணைத்தவள், தன் முன்னால் இரும்பென நின்றிருந்தவனை ஏறிட்டாள்.

அவனோ அவளுடைய கரங்களில் பாதுகாப்பாக மார்பில் சாய்ந்து கிடந்த குழந்தையிடம்தான் இருந்தது. குண்டுக் குண்டு கை கால்களுடன், பெரிய விழிகளை உருட்டி அடர்ந்த இமைகளோடு, கூரிய நாசியுமாக அண்ணனைக் கொண்டு பிறந்திருந்த அந்தக் குழந்தையைக் கண்டவனின் முகம் ஒரு கணம் கசங்கியது. தன்னையும் மறந்து,

“எ… என்னிடம் வருவானா?” கேட்டவன் தன் கரத்தை நீட்ட, அதுவரை தாயின் உடல் சூட்டில் சுகமாகக் கிடந்த குழந்தை கரம் நீட்டியவனை நிமிர்ந்து பார்த்தது. அடுத்து என்ன நினைத்ததோ தன் கைகால்களை உதறி வாய் திறந்து சிரித்தது.

அந்தச் சிரிப்பில் மொத்தமாய்த் தொலைந்து போனான் அபராசிதன். அந்தக் குழந்தையின் முகத்தில் தன் அண்ணனைக் கண்டானோ? பொட்டென அவன் விழிகளில் மெல்லியதாய் கண்ணீர்த் துளி பூக்க, ‘வா’ என்று தலையை அசைத்தான்.

தன்னை வா என்று அழைப்பவன், தன் தந்தையின் இரத்தத்தைப் பகிர்ந்து பிறந்தவன் என்று குழந்தை உணர்ந்து கொண்டது போல, தாயை விட்டு அவனிடம் கரத்தை உயர்த்தியவாறு தாவ, அவள் மேனியில் தன் கை படுவது கூட உறைக்காமல் குழந்தையை இறுகப் பற்றித் தூக்கித் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் அபராசிதன்.

குழந்தை அவன் கரங்களுக்கு வந்ததுதான் தாமதம், இவனின் உடலில் சொல்லமுடியாத மாற்றம். தேகம் சிலிர்த்துப் போக, இதயமோ வேகமாகத் துடித்தது. அதுவரை திடமாய் நிமிர்ந்து நின்ற அவனுடைய கம்பீர உடல் குழந்தைக்கு முன்னால், உருகி வழிந்து கரைந்து போவது போல உணர்ந்தவன், தன் பெரிய கரங்களால் அந்தக் குழந்தையை ஆர அணைத்துத் தன் உதடுகளைக் குழந்தையின் உச்சியில் பதிக்க, அவன் விழிகளில் உதித்த கண்ணீரோ அவனுடைய அனுமதியையும் வேண்டாது உருண்டு குழந்தையின் தலையில் பொட்பொட் என்று விழுந்தது. அதைக் கண்ட திகழ்வஞ்சியின் இதயத்தில் காரணமின்றியே இரத்தம் கசிந்தது.

அவனுடைய அன்பு பொய்யில்லை. அவனுடைய அரவணைப்பில் நடிப்பில்லை. குழந்தையை வாங்கியதும் சிலிர்த்த அவனுடைய தேகத்தின் தவிப்பில் ஏமாற்றில்லை. அவனுடைய அந்த வலியும் வேதனையும் அவன் இழந்துவிட்ட அண்ணனை நினைத்து வந்தது என்பதைப் புரிந்துகொண்ட திகழ்வஞ்சிக்கு, அவளையும் மீறி அவன் மீது இனம்புரியாத பரிதாபம் எழுந்தது.

இழப்பைப் பற்றி அறியாதவள் அல்லவே அவள். உயிருக்கு உயிராகப் போற்றிப் பாதுகாத்த அன்னையை இழந்தபோதும், அவள் கூடப் பிறந்தவள் அவளை விட்டுப் பிரிந்தபோதும் ஏற்பட்ட வலி எத்தனை கொடுமையானது என்பதைத்தான் அவள் அறிவாளே.

ஏனோ அவனை நெருங்கி அவன் தோள்களில் தட்டி கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்ல மனசு துடிக்க, தன் புத்தி போகும் திசையை அறிந்து திடுக்கிட்டாள் திகழ்வஞ்சி.

அவளுக்குப் பைத்தியமா என்ன? அவளுடைய மகனையே அவளிடமிருந்து பிரித்தெடுத்துச் செல்ல வந்த எமன் அவன். சொல்லப்போனால் அவளுடைய எதிரி. அவன் மீதா பரிதாபப் படுகிறேன். அவளுடைய தலையில் குட்டியது மனசாட்சி.

திடுக்கிட்டு விழித்தவள், மறு கணம் அவனை நெருங்கி அவனுடைய அணைப்பிலிருந்த தன் மகனையே சட்டென்று பிரித்து எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ள, அவனோ அவளைக் கோபமாகப் பார்த்தான்.

கால காலத்துக்கும் அவன் அண்ணனின் மகனை இப்படியே அணைத்துப் பொத்திப் பாதுகாக்கத் தயாராகத்தான் இருந்தான். ஆனால் அதற்குத் தடங்கலாக இடையில் இவள் வந்து நிற்கிறாளே. இவளிடமிருந்து எப்படிக் குழந்தையை பிரித்துச் செல்வது? சத்தியமாக அவனுக்குப் புரியவில்லை.

அந்தக் கணமே குழந்தையைப் பறித்து இழுத்துச் செல்ல உந்திய உணர்வை அடக்கியவனுக்கு இதைப் பொறுமையாகக் கையாள வேண்டும் என்று நன்கு புரிந்தது. அதிக அழுத்தம் கொடுத்தால், கிடைப்பதும் கிடைக்காது போய் விடும். என்னதான் ஆவணங்கள், ஆதாரங்களை காட்டினாலும். பெற்றவள் அவள். சட்டம் அவள் பக்கமும் யோசிக்கும். அடுத்து என்ன செய்வது என்று அவன் யோசிக்கும்போதே,

“இதோ பாருங்கள்… நிறைய வேலைகள் இருக்கிறது. ஆராவைக் குளிக்க வைக்கவேண்டும். உணவு ஊட்டவேண்டும். நேரத்திற்கு அவன் தூங்க வில்லை என்றால், சிணுங்குவான்… தயவு செய்து” என்றவள் வாசலைப் பார்க்க, ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான் அபராசிதன்.

இப்போதுதான் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறான். அவளுக்குக் கொஞ்சம் யோசிக்க அவகாசம் கொடுக்கவேண்டும் என்பதும் புரிந்தது.

“ஓகே… இப்போதைக்கு போகிறேன். நிதானமாக யோசி. உன் பக்கத்திலிருந்து யோசிக்காதே. ஆராவமுதனின் இடத்திலிருந்து யோசி…” என்றவன் வாசலை நோக்கி நகர்ந்தான். கதவின் குமிழில் கை வைத்தவன், எதையோ நினைத்தவன் போல நின்று அவளைப் பார்த்தான். பார்த்த பார்வையில் இறுக்கம் தெரிய,

“கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எங்காவது தப்பி ஓடலாம் என்று மட்டும் நினைக்காதே அது உன்னால் முடியவும் முடியாது. ஏதாவது முட்டாள் தனமாக யோசித்துக் குழந்தைக்கு ஆபத்தைத் தேடிக் கொடுக்காதே…” என்றவன், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அதற்கு மேல் அங்கிருக்காது தன் வண்டியில் ஏறிச் சென்றுவிட்டிருந்தான்.

அவன் வெளியே சென்றதும் கதவை அறைந்து சாற்றியவளுக்குக் கால் நடுக்கமும் கை நடுக்கமும் நின்ற பாடில்லை.

கால்கள் அவளுடைய சுமையைத் தாங்க மறுத்துச் சரிய, சுவரோடு சாய்ந்து நின்றிருந்தவளுக்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அதே நேரம் அவளுடைய கரங்களிலிருந்த குழந்தை நெளிந்து வளைந்து கீழே இறங்கிச் செல்ல முயல, அதைக் கூட உணராமல், குழந்தையை அணைத்தவாறு தொப்பென்று தரையில் அமர, தாயின் கையிலிருந்து விடுபட்ட குழந்தை, ஓரமாக வைக்கப்பட்டிருந்த தன் விளையாட்டுப் பொருட்களை நோக்கிப் போக, அதைக் கூட உணராமல், தன் கரங்களில் தலையைப் பற்றியவாறு அமர்ந்திருந்தாள் அவள்.

இன்னும் அவள் என்னவெல்லாம் பார்க்கப் போகிறாள்? கேட்கப் போகிறாள்? சந்திக்கப் போகிறாள்? வந்தவனுக்கு எதிராக அவளால் செயல் பட முடியுமா? இவளால், அவர்களோடு மோதி ஜெயிக்க முடியுமா? எப்படி முடியும். அதற்கு அவளிடம் எங்கே பணம் இருக்கிறது.

கலங்கித் தவித்தவள் அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு வித மந்த நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

(7)

எத்தனை நேரமாக அப்படியே தரையில் கிடந்தாளோ,

“மாமா… பாபா…பு” குழந்தையின் அழைப்பில் விழிகளைத் திறந்து பார்த்தாள் திகழ்வஞ்சி. இரண்டு விழிகளும் எரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலித்தது.

அதையும் மீறிக் குழந்தையின் நிலைமை அவளை நினைவுலகிற்கு அழைத்து வர, எழுந்தவள், குழந்தையைக் கவனிக்கத் தலைப்பட்டாள். மேல் கழுவி, ஆடை மாற்றி, உணவைக் கொடுத்து படுக்கைக்கு எடுத்து வந்து, படுக்கையில் கிடத்த, கொஞ்ச நேரம் அவளோடு விளையாடியவாறே குழந்தை உறங்கிப் போனது.

உறங்கும் குழந்தையின் அழகில் தன்னை மறந்தவள் குனிந்து அதன் நெற்றியில் முத்தமிட, இரண்டு பொட்டுக் கண்ணீர் குழந்தையின் நெற்றியில் விழுந்தது..

எப்படி அவளுடைய குழந்தையை இன்னொருத்தன் கரங்களில் ஒப்படைப்பாள். இவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியுமா? அது நடக்கும் காரியமா? நெஞ்சை அரிக்க எழுந்தவள் நடந்து சென்று அந்த அறையிலிருந்த கபேர்டைத் திறந்தாள். அங்கே அவளுடைய ஆடைகளுக்கு மத்தியில் அநாதையாகக் கிடந்த இலதர் அட்டையால் போடப்பட்ட குறிப்பேட்டை கண்டதும், அதைக் கரத்தில் எடுத்துப் பார்த்தாள்.

வலது கரம் அதை ஆசையுடன் வருடிக் கொடுக்க, வலி நிறைந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது. இப்போது மட்டும் அவளுடைய சகோதரி அருகாமையிலிருந்திருந்தால், இன்று அவள் எதற்கும் பயந்திருக்க மாட்டாள். ஆனால் இப்போது, யாருமற்ற அநாதையாகத் தனித்திருக்கும் போது நெஞ்சு விண்டு போகிறது அவளுக்கு.

“நோ… அவள் இனியும் இங்கிருக்க முடியாது. எங்காவது போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். ஆனால் எங்கேதான் போவது? வாடகைக்கு இடம், செய்வதற்கு வேலை என்று எதுவுமில்லாமல் யாரை நம்பிப் போவது. சந்திரா அத்தையிடம் போக முடியாது. உறவு என்று சொல்ல யாருமில்லை. இந்த நிலையில் அவளுக்கு யார் கை கொடுப்பார்கள்? குழந்தையை வைத்துக் கொண்டு பிச்சையா எடுக்க முடியும்? இந்தச் சிக்கலிலிருந்து எப்படி வெளியே வருவது என்று யோசித்து யோசித்துத் தலைவலி அதிகரித்ததுதான் மிச்சம்.

கூடவே இருமலும், மூக்கடைப்பும் என்று அன்றைய இரவு முழுவதும் பொட்டுத் தூக்கம் இல்லாமல் கிடந்தாள் திகழ்வஞ்சி. எப்படியோ அவளையும் மீறி விழிகள் மூடிய போது, நேரம் நான்கு மணியையும் கடந்துவிட்டிருந்தது.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளின் தலையில் யாரோ ஓங்கித் தட்டும் சத்தத்தில், சிரமப்பட்டு விழிகளைத் திறந்தாள் திகழ்வஞ்சி. தலைவலி மண்டையைப் பிளந்தது. முன்னிரவு உறங்க முடியாமல், யோசனையும், இருமலும், மூக்கடைப்புமாக இருந்தவளுக்கு இப்போது தொண்டை வேறு வலித்தது. மனது பலவீனப் பட்டதாலோ என்னவோ, உடலும் சோர்ந்து போனது. இருபத்து நான்கு மணி நேரத்தில் அவளுடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த இரண்டு சம்பவங்களிலிருந்தும் அவளால் சுதாரித்து எழ முடிந்திருக்கவில்லை.

ஏற்கெனவே உடல் நிலை அந்தளவு நன்றாக இல்லை. இதில் இந்தச் சம்பவங்களும் சேர்த்து அவளுடைய மனநிலையைச் சோர்வடையச் செய்ய, சின்ன உபாதை கூடப் பெரிய உபாதையாக அவளுக்குத் தோன்றியது போல. எழப் பிடிக்காது விழிகளை மூடியவாறு அப்படியே கிடந்தாள் திகழ்வஞ்சி.

ஆனால் அவளுடைய நிலையைப் புரிந்து கொள்ளாமல் கதவில் மீண்டும் தட்டும் சத்தம் கேட்க, சட்டென்ற மனக்கண்ணில் வந்து நின்றான் அபராசிதன். விருக்கென்று எழுந்து அமர்ந்து விட்டாள் திகழ்வஞ்சி.

ஒரு வேளை வந்திருப்பது அவனாக இருக்குமோ? இரத்தம் வடிந்து சென்ற உணர்வில் கடிகாரத்தைப் பார்த்தாள். முதலில் மங்கலாகத் தெரிந்த கடிகாரம், இப்போது தெளிவாகத் தெரிய, நேரம் எட்டு மணி.

இத்தனை காலையிலேயே வந்துவிட்டானா என்ன? வாய்க்குள் கெட்டவார்த்தைகளால் திட்டி முணங்கியவாறு முகத்தைக் கரங்களில் தாங்கி அமர்ந்திருக்க மீண்டும் கதவு மணி அடிக்கும் சத்தம். ஒரு வேளை அந்த சிறுவர்களோ? காட்… திரும்பவுமா? எரிச்சல்தான் வந்தது அவளுக்கு.

போய் நறுக்கென்று நான்கு வார்த்தை பேசி விட எழுந்தவளுக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.

“XXXX” முனங்கியவள் ஆழ மூச்செடுத்தவாறு படுக்கையில் மீண்டும் அமர்ந்தவள் தலையைப் பற்றிக் கொண்டாள்.

ஓரளவு உடல் சமப்பட்டதும் எழுந்தவள், நடந்து சென்று கதவைத் திறக்க, ஈவா நின்றிருந்தாள். அவளைக் கண்டதும்தான் மனது ஓரளவு நிம்மதி அடைந்தது.

“ஹாய் ஈவா…” என்றவளின் நிலையைக் கண்டு அதிர்ந்தாள் ஈவா.

“திகழ்… ஆர் யூ ஓக்கே…?” என்று பதட்டமாகக் கேட்க, இவளோ புருவங்களைச் சுருக்கினாள்.

“யேஸ்.. ஐ ஆம்… ஏன் கேட்கிறாய்?” சோர்வுடன் கேட்டவளைப் பரிதாபமாகப் பார்த்தாள் ஈவா.

“உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை திகழ்.. பல நாட்கள் நோயில் விழுந்து கிடப்பவள் போல இருக்கிறாய்… முகம் சிவந்து கண்கள் வீங்கி… ஏன் என்னாச்சு.” என்று கவலையுடன் கேட்க, மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள் திகழ்வஞ்சி.

நாய் தன் காயத்தை வலிக்க வலிக்க நக்குவது போலப் பழைய நினைவுகளை நினைத்தவாறே கிடந்தோம் என்று எப்படிச் சொல்வது? சிரமப்பட்டு முகத்தில் புன்னகையைத் தேக்கியவள்,

“ப்ச்… நேற்று இரவு சுத்தமாக உறக்கம் வரவில்லை. பழைய நினைவுகள். கூடவே காலநிலை மாற்றத்தால் தடிமன்… அதுதான் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது…” என்று தளர்வாகச் சொன்னாள் அவள்.

“ஒ… புரிகிறது… உனக்குச் சாப்பிட ஏதாவது எடுத்து வரவா?” உண்மையான கரிசனையுடன் கேட்டவளை விழிகள் கலங்கப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

இப்படித் தோளோடு தோள் நின்று அவள் வலிகளைப் பரிமாறிக் கொள்ள அவள் சகோதரி இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும். மீண்டும் கண்ணீர் வரவா என்று அவளிடம் அனுமதி கேட்க, சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டவள்,

“அதெல்லாம் தேவையில்லை ஈவா… ஆனால் ஆராவை மட்டும் கொஞ்சம் உன்கூட வைத்துக் கொள்கிறாயா?” என்றாள் சோர்வோடு. ஆராவை வைத்துக் கொண்டு அவளால் எதுவும் செய்ய முடியாது. அதுவும் அவள் இருக்கும் நிலையில்.

“இது என்ன கேள்வி…? எங்கே ஆரா? எப்போதும் ஏழு முப்பதிற்கு வீட்டிற்கு வந்துவிடுவான். இன்று காணவில்லை என்றதும்தான் தேடி வந்தேன்…” என்று ஈவா அங்கும் இங்கும் பார்க்க, சோர்வோடு புன்னகைத்தாள் திகழ்வஞ்சி.

முன்னர்தான் வேலைக்குப் போகவேண்டும் என்கிற அவசரத்தில் குழந்தையை ஈவாவிடம் தள்ளிவிட்டு ஓடிவிடுவாள். இனித்தான் அது தேவையில்லையே! அடுத்த வேலையைத் தேடும் வரைக்கும் குழந்தையை அவளே பார்த்துக் கொள்வாள். ஆனால் இன்று உடல் நிலை ஒத்துழைக்க மறுக்கிறது. கொஞ்சம் தனியாக இருந்து யோசிக்கவேண்டும். முக்கியமாக ஓய்வு எடுக்கவேண்டும். அப்போதுதான் மனதும் புத்தியும் ஒரு நிலையில் செயல்படும்.

“அவன் இன்னும் எழுந்துகொள்ளவில்லை… கொஞ்சம் காத்திரு… இதோ வந்துவிடுகிறேன்..” என்றவள், அப்போதுதான் யோசனை வந்தவளாக,

“முதலில் உள்ளே வந்து உட்கார் ஈவா…” என்று பணித்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தாள் திகழ்வஞ்சி.

அவளுடைய மகன் பால் குடிக்கும் கற்பனையில் நாக்கை கொஞ்சமாக வெளியே விட்டு சத்தமாகச் சப்புக்கொட்டியவாறு நல்ல உறக்கத்திலிருந்தான்.

வழமையாக வேலைக்குப் போகவேண்டும் என்கிற அவசரத்தில், அவனுடைய நிம்மதியான உறக்கத்தை குலைத்து இழுத்துச் செல்வாள். இன்று தாய் உறங்குவதற்கு அனுமதி கொடுத்துவிட்டாள் என்று நினைத்தான் போல. நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டவளின் நெஞ்சம் உருகிப் போனது. கடவுள் மனமிறங்கி அவளுக்காகக் கொடுத்த பொக்கிஷம் அந்தக் குழந்தை. அவன் இல்லை என்றால் அவளும் இல்லை. இதைப்போய் கொடு என்கிறானே. அவளால் எப்படி முடியும்? கோபம்தான் வந்தது அவளுக்கு.

உறங்கிய குழந்தையின் கன்னத்தில் மெதுவாக வருடிக் கொடுத்தாள் திகழ்வஞ்சி. அதுவரை நல்ல தூக்கத்திலிருந்த குழந்தை உடலை நெளிக்க அதன் அழகில் சொக்கித்தான் போனாள் திகழ்வஞ்சி.

“ஹே… லிட்டில் பம்கின்… கெட் அப்…” என்று மென்மையாக அழைக்க, மயிலிறகால் வருடும் தாயின் அந்த இனிமையான குரலில், அந்த உறக்கத்திலும் உதட்டை அழகாய் நெளித்துச் சிரித்தது குழந்தை. அந்தச் சிரிப்பில் மொத்தமாகத் தன்னைத் தொலைத்தாள் திகழ்வஞ்சி. அப்படியே மகனை வாரி எடுத்துத் தேகம் எங்கும் அழகிய முத்தங்களால் பூச்சூடியவள்,

“கள்ளக் குட்டி எழுந்து கொள்ளுங்கள் என்றாள் மூக்கோடு மூக்கை உரசியவாறு.

இப்போது தன் மணி விழிகளைக் கொஞ்சமாகத் திறந்தான் குழந்தை. அங்கே புன்னகை சிந்தும் அன்னையின் முகம் கண்டதும் நான்கு பற்களும் தெரியும் வண்ணம் சிரிக்க உயிர் குழைந்தாள் அவள்.

குழந்தையின் முகத்தைப் பார்த்த கணமே அவளுடைய தலைவலி எங்கே போனது என்று தெரியாமல் போய்விட்டிருந்தது.

மகனை ஏந்திச் சென்று, ஈரமாகிவிட்டிருந்த டயப்பரைக் கழற்றி எறிந்துவிட்டு, குழந்தையைக் குளியலறைக்குள் ஏந்திச் சென்றவள் அவனைக் குளிக்க வைத்து துடைத்து, டயப்பர் மாற்றி, துவைத்த சுத்தமான ஆடைகளை அணிவித்து வெளியே வரும் போதே பசியில் உதடுகளைப் பிதுக்கத் தயாராக இருந்தான் ஆராவமுதன்.

“இதோடா கண்ணா…! ஐந்து நிமிடம்… என் செல்லம்…” என்று கொஞ்சியவள் குழந்தையை இடையில் தூக்கி வைத்துக்கொண்டு சமையலறை நோக்கிச் செல்ல,

“குழந்தையை என்னிடம் கொடு திகழ்… நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்ற ஈவாவிடம் இதமாக மறுத்துவிட்டு, சமைறலறைக்குள் சென்றவள், குழந்தையின் கழுத்தைச் சுற்றி ‘விப்’ கட்டிவிட்டு, ஒரு வயது குழந்தைக்குரிய உணவுப் பெட்டியை எடுத்துத் திறக்க, உணவு அடிமட்டம் வரை சென்றிருந்தது.

ஐயோ இதைக் கூடக் கவனிக்காமல் இருந்து இருக்கிறேனே.’ தன்னையே திட்டியவள், இருந்ததை ஒரு பாத்திரத்தில் கொட்டிப் பாலை சூடாக்கி அதில் இட்டுக் கலந்து குழந்தைக்கு ஊட்ட, குழந்தை பசியில் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டது. கொஞ்ச நேரத்தில் அதனுடைய குட்டி வயிறு நிறைந்து விட்டது போல, வேண்டாம் என்று தலையை அங்கும் இங்கும் ஆட்ட, எப்படியோ தாஜா செய்து, கெஞ்சிக் கூத்தாடி, எஞ்சிய உணவையும் குழந்தைக்கு ஊட்டிவிட்டு, வாயைத் துடைக்க எதையோ சாதித்த மகிழ்ச்சி அவளுக்கு.

அப்படியே பால் காய்ச்சி, பால் போத்தலில் ஊற்றியவள் அதையும் பையில் வைத்து, குழந்தையின் மதியத்திற்குக் கொடுக்கும் உணவு வகையறாவையும் கட்டிப் பையில் போட்டு ஈவாவை நோக்கி வந்தாள்.

ஈவாவைக் கண்டதும் ஆராவமுதனின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி பெரிய சிரிப்புப் பிறந்தாலும், எங்கே அவள் தன் தாயிடமிருந்து தன்னைப் பிரித்துவிடுவாளோ என்று அஞ்சியவனாகத் தாயின் மார்பில் விழுந்து முகத்தைப் புதைத்துக் கொள்ள அதைக் கண்ட ஈவா சிரித்தாள்.

“டேய்… அம்மாவோடு கொஞ்சியது போதும்… வா…” என்று கரத்தை நீட்ட, அவனோ மறுப்பாகத் தலையை ஆட்டிவிட்டு, து..பு..பு..மமா.. என்றவாறு அன்னையிடமே சாய்ந்தான்.

திகழ்வஞ்சிக்கும் மகனைக் கொடுக்கப் பிரியமில்லைதான். ஆனால் இவனை வைத்துக் கொண்டு அவளால் சமாளிக்க முடியாது. முதலில் அவளைக் கொல்லும் தலைவலிக்கு ஏதாவது வைத்தியம் செய்யவேண்டும். அடுத்து அடி வரை தொட்டுவிட்ட ஆராவின் உணவை வாங்கி வரவேண்டும். அடுத்து, வேறு வேலைகளுக்கு மனுப்போட வேண்டும். இவை அனைத்தையும் தாண்டி, அந்த அபராசிதனை எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்கவேண்டும்… இவன் இருந்தால் சிரமம்.

வேறு வழியில்லாமல் தன்னிடமிருந்து குழந்தையைப் பிரித்து ஈவாவிடம் கொடுக்க, அவனோ போகமாட்டேன் என்று அடம்பிடித்தான்.

அன்னையாய் தன் மகன் போகாததில் அவளுக்குப் பெருமைதான். ஆனால் அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தனவே.

“பிளீஸ்டா… ஈவாவிடம் போ… என் செல்லம்…” என்று கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக ஈவாவிடம் கொடுக்க, அள்ளி எடுத்துக் கொண்ட ஈவா, அவனுடைய பையை மறு கரத்தில் ஏந்தியவாறு இனிமையாகக் குழந்தையிடம் ஏதேதோ கதை சொல்லியவாறு திகழ்வஞ்சியிடம் விடைபெற்றுச் சென்றுவிட, தற்காலிக நிம்மதியோடு கதவை மூடிவிட்டு அதன் மீது சாய்ந்து நின்றாள் திகழ்வஞ்சி.

 

What’s your Reaction?
+1
28
+1
11
+1
1
+1
0
+1
1
+1
1

Related Post

2 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 6/7”
  1. அருமையான பதிவு 😍😍😍😍😍
    அடக்கடவுளே ஆராவோட பிறப்புக்கு காரணமான ஆள் உலகத்துலையே இல்லை யா?😔😔😔😔
    அப்ப இவுனுக்கு தாயையும் புள்ளயையும் பிரிக்க ரைட்ஸே கிடையாது.
    சொத்துக்களை வேணா பாதுகாத்து ஆரா மேஜர் ஆனதும் ஒப்படைச்சிட வேண்டியதுதானே. ஆராவோட படிப்பு வளர்ப்பு மொதக்கொண்டு ஆகும் செலவுகளை இவன் செய்யலாமே. அதான் சொத்து இருக்குதானே. அதுக்காக ஏன் பிரிச்சு கூட்டி போக நெனைக்கிறான்🙄🙄🙄🙄🙄
    திகழோட முடிவு என்னவா இருக்கும்????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!