(21)
மறுநாள் திகழ்வஞ்சி கண்விழித்தபோது, இருட்டு விலகியிருக்கவில்லை. தன் கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். ஐந்துமணி.
நித்திராதேவிக்கு அவள் மீது அப்படி என்ன கோபமோ. அணைத்த வேகத்தில் விட்டு விலகியும் போனாள். எழுந்து கழிவறை சென்றுவிட்டு மீண்டும் படுக்கையில் சரிந்தவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. வாழ்வில் நடந்தவை ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. கூடவே அபராசிதனும். அவனை நினைத்த மாத்திரத்தில் படுக்கையை விட்டு விருக்கென்று அவள் அமர்ந்து கொள்ள, அவள் எழுந்த வேகத்தில் காயம் நான் இருக்கிறேன் மறந்து விடாதே என்றது.
உதடுகளைச் சுழித்தவள், காயத்தை வருடிக் கொடுத்து விட்டுத் திரும்பித் தன் மகனைப் பார்த்தாள். அவனோ குப்புறப் படுத்து பெருவிரலை வாய்க்குள் வைத்தவாறு உறங்கிக் கொண்டு இருந்தான். அதைக் கண்டதும் உதடுகளில் புன்னகை மலர, அந்த விரலை எடுத்து விட்டுக் குனிந்து மகனின் தலையில் மெல்லிய முத்தம் ஒன்றை வைத்துவிட்டு விலகியவள், முன்னிரவு அறைக்குள் வைத்துவிட்டுச் சென்ற பெட்டியைத் திறந்து, அதிலிருந்த ஆடைகளை இழுத்தெடுத்துக் கொண்டு, குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். குளித்து முடித்து, காயங்களைச் சரிபார்த்து வெளியே வந்த போதும் ஆராவமுதன் இன்னும் எழுந்திருக்கவில்லை.
விடியும் வரை செய்வதற்கு எதுவுமில்லை என்பதால் ஜன்னல் புறமாக வந்து, வெளியே ஆராய்ந்தாள். அபராசிதனின் வீட்டைப் போலவே சற்றுத் தள்ளிப் பல வீடுகள் ஒன்றுக்குப் பக்கத்தில் இருந்தன. பார்க்கும் போதே அந்த இடம் அதிக வசதியானவர்களுக்கான இடம் என்பது தெரிந்தது. இதுவரை இத்தனை பெரிய வீடுகளைப் பார்த்ததும் இல்லை, உள்ளே நுழைந்ததுமில்லை. எல்லாமே பிரமாண்டமாகப் பெரிதாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்ப வெறுமையும் இருக்கிறது. ஒருத்தனுக்கு எதற்கு இத்தனை பெரிய வீடு? நினைத்தவள், அப்படியே பகல் பொழுதின் இருட்டையே கொஞ்ச நேரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் அவளுடைய அறைக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.
தன் நினைவு கலைந்து திரும்பிப் பார்த்தவள், விரைந்து சென்று கதவைத் திறக்க வெளியே ஒரு தமிழ் பெண், கையில் ஒரு தட்டும் அதில் பால் போத்தலுமாக நின்றிருந்தாள்.
அதற்குள் ஆறுமணியாகிவிட்டதா என்ன? வியப்போடு நேரத்தைப் பார்க்க, ஆம் ஆறு மணி என்றது கடிகாரம்.
பொதுவாக ஆராவமுதன் ஆறுமணிக்கெல்லாம் பால் குடிக்க எழுந்து விடுவான். இது எப்படி இவளுக்குத் தெரியும்? வியப்புடன் ஏறிட, அந்தப் புதிய பெண் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“குட்மார்ணிங்…” என்று கூறியவள், “என் பெயர் கமலா… இங்கேதான் டாக்டருக்குச் சமைப்பதும், வீடு பராமரிக்கும் வேலையும் செய்கிறேன். நேற்று இரவு டாக்டர் என்னை அழைத்து உங்கள் பையனுக்கு ஆறு மணி அளவில் பசிக்கும், பசும்பால் சுத்தமாகக் காய்ச்சி கொடுக்கச் சொன்னார். அதுதான் எடுத்து வந்தேன்…” என்று புன்னகையுடன் கூற, ஓ இவள்தான் கமலாவா? என்று ஏறிட்டாள். முப்பது முப்பத்தைந்து வயதிருக்கும். பார்க்க நட்புப் பாராட்டும் அளவுக்கு நன்றாகவே இருந்தாள். நன்றியோடு அந்தப் பால் போத்தலைக் எடுத்துக் கொண்டவள்,
“நன்றி… கமலா.. என் பெயர் திகழ்வஞ்சி.. ”
“தெரியும்… டாக்டர் சொன்னார்” என்று வெகுளியாகவும் கூடவே மரியாதையுமாகச் சொன்னவள், “டாக்டர் உங்களுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுக்கச் சொன்னார்… உங்களுக்குக் காலை என்ன சமைக்கட்டும்?” கேட்க,
“எனக்கு இதுதான் என்று எதுவும் வேண்டாம் கமலா. இருப்பதைச் சாப்பிடுவேன்…”
“உங்களுக்குக் குடிக்க என்ன எடுத்து வரட்டும்? காப்பி? தேநீர்?”
“அதிகாலை என்றால் தேநீர்தான்… நானே வார்த்துக் கொள்கிறேன்… நீங்கள் சிரமப் படாதீர்கள்…” அவள் தயங்க,
“கமலாவுக்கு எந்தச் சிரமமும் இருக்காது…” என்கிற அழுத்தமான ஆழமான குரல் பின்னால் இருந்து வர இரு பெண்களும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அபராசிதன்தான். ஜிம்மில் தன்னுடைய உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க வந்துகொண்டிருந்தான்.
அரைக்கால் சட்டை அணிந்திருந்தான். கையில்லாத பெனியன் வேறு. அது அவனுடைய உடலின் பலத்தையும், திடத்தையும், உறுதியையும் அப்பட்டமாக வெளியே காட்ட, அவனைக் கண்டவளுக்கு மூச்சு அடைத்துக் கொண்டது.
இதுவரை அவனை ஷேர்ட்டும் பான்டுடனும் தான் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்படி வியர்க்க விறுவிறுக்க, உடலின் தசைகள் திரண்டிருக்க, ஒரு ஆண் அழகனாகப் பார்த்ததில்லை. ஹாலிவூட் நடிகர்களுக்கே போட்டியாக வந்துவிடுவான் போல அத்தனை கச்சிதமான உடலமைப்போடு நின்று இருந்தான் அவன்.
தன்னை மீறி உமிழ்நீர் கூட்டி விழுங்கியவளுக்கு ஏனோ அவனிடமிருந்து தன் பார்வையை விலக்கவே முடிந்திருக்கவில்லை.
“கமலா… நீங்கள் போய் இவளுக்கு ஒரு தேநீர் எடுத்து வாருங்கள்…” கட்டளையாகச் சொல்ல,
“இதோ டாக்டர்…” என்று அங்கிருந்து சென்று விட்டாள் கமலா. அவள் சென்றதும் நின்று நிதானமாக அவளைப் பார்த்தவன்,
“நேற்று இரவு தூங்கினாயா?” என்றதும் ஏனோ அவனுடைய அந்த அக்கறையான கேள்வியில் அவளையும் மீறி மனது குழைந்து போயிற்று.
“ம்… கொஞ்சம் தூங்கினேன்…”
“ஆரா…” கேட்டவன், அவளைத் தாண்டி அறைக்குள் நுழைய, அவனுடைய வியர்வையின் வாசனை அவளுடைய நாசியைத் தீண்டக் காரணம் இன்றியே மயிர்க்கால்கள் அனைத்தும் எழுந்து கொண்டன. பெண்மைச் சுரப்பிகள் அவசரமாக உயிர்த்து அவளைச் சிலிர்க்க வைக்க, பெண் தேகமோ இளகி உருகத் தயாரானது. அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாகச் சிறகடித்தது போல ஒருவித சிலிர்ப்பு. இதுவரை யாரிடமும் உணராத அந்தப் புதுவித உணர்வில் ஆடித்தான் போனாள் திகழ்வஞ்சி.
‘ஐயோ… இவளுக்கு என்ன ஆயிற்று. ஏன் இதயம் இப்படிப் படபடக்கிறது. ஏன் நாடி நரம்புகள் அனைத்தும் குழைந்து போகிறது. எனக்கு என்ன ஆயிற்று?’ அதிர்ந்து நிற்கையில் உள்ளே வந்தவனோ குழந்தையை ஆசையாக ஒரு கணம் பார்த்தான்.
“இவனைத் தொட்டிலில் கிடத்தியிருந்தேனே…” சொன்னவன் பின் கோபமாகத் திரும்பி திகழ்வஞ்சியைப் பார்த்து,
“நீயா அவனைத் தூக்கி உன் பக்கத்தில் படுக்க வைத்தாய்?” என்றான்.
“இல்லை… அவன் பக்கத்தில் படுக்காமல் உறக்கம் வரவில்லை… அதுதான்…” அவள் தடுமாற,
“ப்ச்… காயம் ஆறும் வரைக்கும் அவனைத் தூக்காதே என்று எச்சரித்திருந்தேனே… அதைக் கேட்கும் எண்ணமே உனக்கில்லையா?” எரிச்சலோடு கேட்டவன், “காயம் எப்படி இருக்கிறது? ஏதாவது தொற்று இருப்பது போலத் தோன்றுகிறதா?” கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள் திகழ்வஞ்சி.
“இ… இல்லை… காயம் காய்திருக்கிறது…” என்றாள் முணுமுணுப்பாக.
“குட்..” என்றவன் குழந்தையைப் பார்த்து,
“இத்தனைக்கும் பசிக்கிறது என்று எழுந்து விடுவானே. இன்னும் ஏன் எழவில்லை?” அவன் சந்தேகம் கொண்டு கேட்க,
“நேற்றைய பயணக் களைப்பு. தாமதமாகத் தானே உறங்கினான். அதனால் இருக்கலாம்…” அவள் சொல்ல, இருந்தும் குழந்தையின் உச்சந் தலையில் கை வைத்து, அவனுடைய உடல் சூட்டின் அளவை உள்வாங்கிக் கொண்டவன், கவலைப்படும்படி எதுவுமில்லை என்று திருப்தி கொண்டவனாக எழுந்து திகழ்வஞ்சியைப் பார்த்தான்.
“நான் எழு மணிக்கெல்லாம் மருத்துவ மனைக்குச் சென்றுவிட வேண்டும். அதற்குள் தயாராகிச் சாப்பிட வந்துவிடு…” சொன்னவன் அவளைத் தாண்டி வெளியேற, திரும்பவும் அவனுடைய உடல் வாசனையில் தாக்கப்பட்டு விழிகளை மூடி அதை உணர்ந்து நின்றாள் திகழ்வஞ்சி.
பிடித்திருந்தது. அவனுக்கு அருகே இருக்கப் பிடித்திருக்கிறது. அந்த வாசனையை நுகரும் புத்தி பித்தம் கொள்கிறது. அதை அவள் மறுக்கப் போவதில்லை. அவன் பக்கத்தே நின்றால் தைரியம் தானாக வருகிறது. உடல் திடமாகிறது. புத்தி பலம் கொள்கிறது. மனது உருகிப் போகிறது. மொத்தத்தில் அவளே அவளுக்குப் புதிதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? வெறும் சொற்ப நாட்களில் பழகிய ஒருத்தனை இப்படி இரசிக்க முடியுமா? இப்படிச் சிந்திக்க முடியுமா? அவளைக் குப்புற விழச் செய்ய முடியுமா? குழம்பி நிற்கையில் நல்ல வேளை ஆராவமுதன் எழுந்து அவளை இந்த உலகத்திற்கு மீட்டு வந்தான். இல்லை என்றால், அப்படியே சிந்தனையில் சிலையாக நின்றிருப்பாள்.
எழும் போதே ஆராவமுதன் உதட்டைப் பிதுக்கியவாறுதான் எழுந்தான்.
உடனே குழந்தையை நோக்கிப் பாய்ந்தவள், கையில் வைத்திருந்த பால் போத்தலை அவனுடைய வாயில் திணிக்க, விழிகளைத் திறக்காமலே பாலை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினான் ஆராவமுதன். குழந்தை குடிக்க ஏதுவாகப் பால் போத்தலுக்குக் கீழே தலையணையை வைத்துவிட்டு விலகிய நேரம் அவளுக்குத் தேநீர் வந்திருந்தது. அதையும் குடித்து முடித்துவிட்டு, தேநீர் வந்த குவளையை ஓரமாக வைத்துவிட்டு, வெற்றுப் போத்தலைச் சப்பிக்கொண்டிருந்த ஆராவமுதனை எழுப்பி, குளிக்கவைத்து, உடைமாற்றி முடித்தபோது நேரம் ஆறு முப்பது. ஆராமுதனுக்குத் தலையை வாரிவிடத் தொடங்கிய போது கமலா அவள் அறைக் கதவைத் தட்டினாள்.
குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வந்து கதவைத் திறக்க,
“வந்து… டாக்டர் உங்களுக்காகக் காத்து இருக்கிறார்.” என்றதும் அவளையும் மீறிப் பரபரப்பானாள் திகழ்வஞ்சி.
“இதோ வருகிறேன் கமலா… நீங்கள் போங்கள்…” என்று அவளை அனுப்ப முயல,
“அதில்லை… குழந்தையை நீங்கள் தூக்க வேண்டாம் என்றார். அதுதான் நான் வந்தேன்..” கமலா சொல்ல ஒரு கணம் அவனுடைய அக்கறையில் மனத்தில் இதம் படந்தது நிஜம்.
என்னதான் அவள் மீது வெறுப்பிருந்தாலும், கோபம் இருந்தாலும், அவளுக்காகவும் பார்க்கிறான். மனதார அவனுக்கு நன்றி சொன்னவள்,
“இல்லை… அவன் உங்களிடம் சேர்வானா தெரியாது. நீங்கள் போங்கள். நானே அவனை அழைத்து வருகிறேன்…” என்றவள் கமலாவை அனுப்பிவிட்டு மகனிடம் வந்தாள். மகனின் தலை முடியைச் சரியாக வாரிவிட்டு, குழந்தையைத் தூக்க காயத்தின் வலி பெருமளவு மட்டுப்பட்டிருந்தது. அவனைத் தூக்கி இடையில் செருகியவள், கீழே வர, தன் தட்டில் சான்ட்விச் வைத்து உண்டு கொண்டிருந்தவன், அவள் குழந்தையை ஏந்தியவாறு படிகளிலிருந்து இறங்கி வருவதைக் கண்டு, தன் உணவை அப்படியே விட்டுவிட்டு வேக நடையுடன் அவளை நெருங்கிக் குழந்தையைக் கிட்டத்தட்டப் பறித்துத் தன்னோடு தூக்கிக் கொண்டான் அபராசிதன்.
பின் அவளைக் கோபமாக முறைத்தவன்,
“அதுதான் கமலாவை அனுப்பி வைத்தேனே குழந்தையைத் தூக்கிவர. நீ எதற்குத் தூக்கி வந்தாய்? ஒரு வைத்தியனாக அதட்ட,
“இப்போது பெரிதாகக் காயம் ஒன்றும் வலிக்க வில்லை… தவிர அவன் புது ஆட்களிடம் சட்டென்று சேர மாட்டான்..” என்று கூற, அபராசிதன், ஆராவமுதனை ஏந்தி வந்து குழந்தைகளை அமர்த்தும் இருக்கையில் அமர்த்தினான்.
“மின்தூக்கியைப் பயன்படுத்தியிருக்கலாமே..?”
“இல்லை… உடலுக்கும் கொஞ்சப் பயிற்சி வேண்டுமே…” சொன்னவள், குழந்தையிடம் கவனத்தைச் செலுத்த, அவனோ சித்தப்பாவைக் கண்ட மகிழ்ச்சியில் அவனிடம் ஏதோ கதை பேசி பொன்மொழி சொல்ல, அதை இரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான் அபராசிதன்.
பின் குனிந்து குழந்தையின் உச்சியில் முத்தமிட்டவன், விலகித் தன் இருக்கையில் அமர, கமலா குழந்தைக்குரிய உணவை எடுத்து வந்து அதன் இருக்கையின் முன்னால் வைக்க, ஆராவமுதன் அதிலிருந்ததை ஆர்வமாகப் பார்த்தான்.
கண்ணுக்கு அழகாகத் தெரிந்த காரட் துண்டைத் தன் பிஞ்சுக் கரத்தில் எடுத்து வாயில் வைத்து மென்று சுவைக்க, அவனுடைய உணவில் இருந்த மிச்ச காய்கறிகளை எடுத்துக் கொடுக்கத் தலைப்பட்டாள் திகழ்வஞ்சி.
“அவன் தன் பாட்டில் சாப்பிடுவான்.. நீ சாப்பிடு…” அவன் கட்டளையாகச் சொல்ல, அந்தக் கட்டளைக்குச் சட்டென்று அடிபணிந்தது மனது. ஏனோ மறுக்க முடியவில்லை அவளால்.
ஆம்லட்டும், டோஸ்டும் காலை உணவாக இருக்க, தனக்கானதை எடுத்து வைத்தவள் சாப்பிடத் தொடங்க, அவனும் தன் சான்ட்விச்சை ஒரு கடி கடித்து மென்று விழுங்கிவிட்டு,
“இன்று மாலை அக்காவும் அத்தானும் அராமுதனைப் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னேனே, நினைவிருக்கிறது தானே…”
“ம்…” என்றவள் தயக்கமாக அவனைப் பார்த்து,
“நீ… நீங்களும் வந்துவிடுவீர்கள்தானே…?” கேட்டபோதே அவனும் அவளோடு நிற்கவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது.
அவன் கூட இருந்தால் கொஞ்சம் தைரியம் அதிகமாக இருக்கும். அவள் தனியாக என்றால், நினைக்கும் போதே உடல் உதறியது.
அவர்களுக்கும் அவளுடைய பின்புலம் அனைத்தும் தெரிந்திருக்கும்தானே. பணத்திற்காகத் தம்பியின் வாழ்க்கையை அழித்தவளை இரண்டு கரம் நீட்டியா வரவேற்பார்கள். ஜந்துவை விடக் கேவலமாகத்தான் பார்ப்பார்கள். திட்டுவார்கள். அசிங்கமாக முறைப்பார்கள். இதையெல்லாம் தனி ஒருத்தியாக அவளால் கையாள முடியுமா? ஏதோ அபராசிதன் என்பதால் கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொண்டான். என்னதான் கோபம் வெறுப்பு இருந்தாலும், அது எல்லை தாண்டாமல் பார்த்துக் கொண்டான். வருபவர்களும் அப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதானே.
அவளுடைய பயத்திற்கான காரணம் அவனுக்குப் புரிந்து போக எதையோ சொல்ல வாய் எடுத்தான். உடனே மூடியும் கொண்டான். பின் என்ன நினைத்தானோ,
“சரி வர முயல்கிறேன்…” என்றுவிட்டு எழுந்தவன் கை கழுவிவிட்டு அங்கிருந்து சென்று விட, இவளோ தன் உணவுத்தட்டை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள். பசி சுத்தமாக இல்லை.
அவன் வருகிறேன் என்று உறுதியாகச் சொல்லவில்லையே. ஒரு வேளை வராமல் காலை வாரிவிட்டால்? இவளால் தனியாக சமாளிக்க முடியுமா?
கடவுளே எதுவாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை மட்டும் எனக்குக் கொடு. மனதார வேண்டியவளுக்கு, விரக்தியில் உதடுகள் நெளிந்தன. இதுநாள் வரை உதவாத தெய்வம் இனியா உதவப்போகிறது? வேதனையோடு நினைத்தவள், வேறு வழியில்லாமல், அந்த விருந்தினர்களின் வருகைக்காக மனம் நிறைந்த அச்சத்தோடு காத்திருக்கத் தொடங்கினாள்.
(22)
மாலையானதும், திகழ்வஞ்சி ஆராவமுதனைக் குளிக்கவைத்துத் தானும் குளித்து, உடைமாற்றி வரப்போகும் விருந்தினர்களுக்காக ஒரு வித படபடப்போடு தயாராகக் காத்திருந்தாள். நேரம் போகப் போக மனமோ ஒருவித பயத்தோடு அபராசிதனைத்தான் தேடியது.
அவன் ஒருவனால்தான் இவளைக் காப்பாற்ற முடியும் என்று மனது அடித்துக் கொண்டது. அவன் திட்டினாலும், காரமாகப் பேசினாலும், இளக்காரமாகப் பார்த்ததாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடிகிறது அவளால். அதையே வேறு யாரும் செய்வதை நினைக்கும் போது தீக்கங்குகளுக்குள் குளிக்கும் உணர்வைக் கொடுக்கிறது. வரும் அவனுடைய அக்கா எப்படி அவளை நடத்தப் போகிறாளோ. மனம் கிடந்து தவித்தது.
“பிளீஸ்… வந்துவிடுங்கள். நீங்கள் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை. பக்கத்தில் நின்று கொள்ளுங்கள் போதும். அவளையும் மீறி மனது வேண்டிக் கொண்டது.
மாலை ஆறு மணி அளவில் அபராசிதன், மருத்துவமனையிலிருந்து வந்து சேர்ந்திருந்தான். அவனைக் கண்டதும்தான் திகழ்வஞ்சியின் இதயத் துடிப்பு ஓரளவு சமநிலைக்கு வந்தது. அவளையும் மீறி அடைத்து வைத்திருந்த மூச்சு விடுபட்டு உதட்டில் நிம்மதியாக ஒரு புன்னகை மலர்ந்தது.
ஆராமுதனும் அபராசிதனைக் கண்டதும் வாய் கொள்ளா சிரிப்புடன் தனக்குரியதான கீச் மூச் என்கிற மொழியுடன் அவனிடம் தாவ, அதுவரை களைப்பும், சோர்வுமாக வந்திருந்தவன், ஆர்ப்பாட்டமாகத் தன்னிடம் தாவிய பெறாமகனைக் கண்டதும், அத்தனை சோர்வும் பறந்து போக, வாரி அள்ளி எடுத்துக் கொண்டவன், அவன் வயிற்றில் முத்தமிட்டு மார்போடு அணைத்து,
“ஹே… படி… ஹவ் இஸ் யுவர் டே…” என்றான் அன்பு பெருக்கெடுத்து ஓட.
அவனுடைய அந்த இதமான குரலைக் கேட்ட திகழ்வஞ்சி சிலிர்த்துப் போனாள். இவனால் இத்தனை மென்மையாகப் பேசமுடியுமா என்ன? ஏனோ அந்தக் குரல் அவளுடைய உடலின் ஒவ்வொரு நாளத்திலும் சென்று அடைக்கலமாவது போன்ற உணர்வில் இமைக்க மறந்து அவனையே பார்த்திருக்க, அவனோ புன்னகையுடன் மொழியற்ற அர்த்தம் நிறைந்த குழந்தையின் பேச்சினை ஆசையோடு கேட்டுக்கொண்டிருந்தான்.
சற்று நேரம் பொறுமையாகக் குழந்தையின் பேச்சைக் கேட்டவன். பின் அவனை ஒரு கணம் இறுக அணைத்து விடுவித்து,
“கொஞ்ச நேரம் விளையாடு கண்ணா… நான் ஓடிப்போய் மேல் கழுவி விட்டு வருகிறேன்…” என்றவன் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, நிமிர்ந்து திகழ்வஞ்சியிடம் ஒரு தலையசைப்போடு மாடியேறிப் போக, அது மேலும் அவளுக்குள் இதம் சேர்த்தது.
அவன் கண்டுகொள்ளாமல் போயிருந்தால் நிச்சயமாக வருந்தியிருப்பாள். அப்படியல்லாமல், அவளையும் மதித்துத் தலையசைத்தது அவளுக்குப் பெரும் இதத்தைக் கொடுத்தது.
அபராசிதன் குளித்து உடை மாற்றிவிட்டுக் கீழே வரவும், கதவு மணி அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது. ஈரமாகிவிட்ட சுருள் குழலை ஒற்றைக் கையால் மேவி இழுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவன், கதவை நோக்கி நகரத் தொடங்க, திகழ்வஞ்சியோ ஒரு வித பதட்டத்தோடு அவனருகே வந்து நின்றுகொண்டாள்.
என்னதான் திடமாக நிற்கவேண்டும் என்று மனதுக்குக் கட்டளையிட்டிருந்தாலும், பாழாய் போன மனம் பயத்தில் அலறவே செய்தது. கை கால்கள் நடுங்கின. உமிழ் நீர் கூட்டித் தன்னை சமப்படுத்த முயன்றவள், திறந்த கதவினூடாக வர இருக்கும் பூதத்தைச் சந்திக்கத் தயாராக நின்றிருந்த நேரம், முந்திரிக்கொட்டையாக, குடுகுடு என்று ஓடிவந்த ஆராவமுதன், தாயின் மீது பலமாக மோத, எங்கே குழந்தைக்கு அடிபட்டுவிமோ என்கிற அச்சத்தில் சட்டென்று குழந்தையைப் பற்றப் போனவளின் கால், சரியாக அவனுடைய விளையாட்டுக் காரின் மீது பதிய, என்ன ஏது என்பதை அவள் உணர்வதற்குள்ளாக, சமநிலை தவறிச் சுழன்று விழத் தொடங்கிய நேரம், கதவைத் திறந்து கொண்டிருந்த அபராசிதனின் மற்றைய கரம், சட்டென்று அவளுடைய இடைதாங்கிக் காத்துக் கொண்டது.
அங்கே திறந்த கதவின் வழியே திரை விலக்கியதும் தெரிந்த காதல் சிற்பமாக இருவரும் காட்சிகொடுத்து நின்றிருந்தார்கள். அதனைக் கண்ட விருந்தினர்களின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தன.
அங்கே நவீனக் கிருஷ்ணாக அவனும், நவீன ராதையாக அவளும், அவனுடைய வலது கரத்தில் மாலையாக விழுந்திருந்திருக்க, வந்திருந்த விருந்தினருக்கோ அந்தக் காட்சி இம்மிகூடச் சுவைக்கவில்லை. அது பெரும் அபத்தக் காட்சியாகத் தோன்ற,
“அபரா…!” என்கிற ஆத்திரம் நிறைந்த கடுமையான குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் அபராசிதன்.
அங்கே அவனுடைய தாய்க்கும் நிகரான சகோதரி அவனை முறைத்து நிற்க அதைக் கண்டு புருவங்களை நெரித்தான். எதற்காக இத்தனை கோபமாகத் தன்னைப் பார்க்கிறார் என்று குழம்பியவன், அப்போதுதான் தன் கரத்தின் கனம் தெரியக் குனிந்து பார்த்தான்.
அங்கே ஒற்றைக் கரத்தால் அவனுடைய ஷேர்ட்டைப் பற்றியிருந்தவளின் இடையைத் தன் கரம் வளைத்துப் பிடித்திருப்பதையும், அக்கரத்தில் அவள் தொங்கிக் கொண்டிருப்பதையும் கண்டதும், சகோதரியின் கோபத்திற்கான காரணம் புரிந்தது.
பதறியவனாக அவளை விலக்கிவிட்டுக் கரத்தை இழுத்துக் கொண்டவன், திரும்பி சகோதரியை ஏறிட்டான். அவனுடைய விழிகளில் எதைக் கண்டாரோ,
“நாங்கள் உள்ளே வரலாமா இல்லை…” என்று அழுத்தமாகக் கேட்க, உடனே வழி விட்டு நின்றான் அபராசிதன்.
“சாரிக்கா… உள்ளே வாருங்கள்…” என்றவன் விலகிக் கொள்ள, உள்ளே வந்தார் ஈஷ்வரி.
வந்தவரை ஒரு வித தயக்கத்தோடு நிமிர்ந்து பார்த்த திகழ்வஞ்சிக்கு அவர் முகத்தில் தெரிந்த வெறுப்பையும், அருவெறுப்பையும், கசப்பையும் கண்டதும் இதயம் ஒரு முறை குலுங்கி அடங்கியது. அவரிடம், மதிப்பையும் மரியாதையையும் எதிர் பார்க்க முடியாதுதான். ஆனாலும் பார்த்த உடனே இத்தனை கசப்பையும் காட்டவேண்டுமா என்று மனது கசங்கிப் போக, எதிலிருந்தோ தப்பிப்பவள் போல அபராசிதனின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றாள்.
இதோ இதற்காகத்தானே பயந்தாள். இதற்காகத் தானே தயங்கினாள். அவள் நினைத்தது போலவே ஒட்டு மொத்தக் கசப்பையும் ஒற்றைப் பார்வையில் காட்டிவிட்டாரே. நெஞ்சம் விண்டு போனது அவளுக்கு.
அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது தானே. திகழ்வஞ்சி செய்த குற்றம் அப்படிப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரைக்கும் அவள் ஒரு சாபக்கேடு. அசிங்கம். கறுத்தப் புள்ளி. சொல்லப் போனால் அவர்களின் குடியைக் கெடுக்க வந்த நாசக்காரி. எப்படி அவளை இன்முகத்துடன் வரவேற்பார்கள்?
நெஞ்சம் முழுக்க வலி வியாபிக்க, அவன் பின்னால் மறைந்து கொண்ட நேரம், “மாமா…” என்கிற கிள்ளை மொழியில் தலை நிமிர்ந்து பார்த்தாள்.
பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது இருக்கும். டைட் பான்ட், டீ ஷேர்ட் அணிந்த அழகிய பெண் ஒருத்தி அவனை இடையோடு அணைத்துத் தன் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
பார்க்கும் போதே தெரிந்தது, அவனுடைய அக்காவின் மகள் என்று. தன் மாமனை அணைத்து விடுவித்தவள் திரும்பி திகழ்வஞ்சியைப் பார்த்துப் பளிச் என்று சிரிக்க அந்த வெள்ளைச் சிரிப்பு வலித்த அவள் இதயத்திற்கு மருந்து தடவியது போல இதமாக இருந்தது.
பதிலுக்கு அவளும் சிரிக்க, கொஞ்சம் வெட்கம் வந்தது போல, ஒதுங்கி தாயின் அருகே நின்றுகொள்ளத் திரும்பி ஈஷ்வரியைப் பார்த்தாள் திகழ்வஞ்சி. இன்னும் அவளைப் பார்த்து முறைப்பதை அவர் விடவில்லை.
ஏனோ அவருடைய விழிகளைப் பார்க்கத் தைரியமின்றித் தலை குனிந்து கொள்ள, மீண்டும் வாசலில் நிழலாடியது.
இப்போது யார்? யோசனையோடு நிமிர்ந்து பார்த்த திகழ்வஞ்சியின் விழிகளில் முதலில் தெரிந்தது குழப்பம். பின் வியப்பு. அதிர்ச்சி. கடைசியில் அதீத வெறுப்பு.
உள்ளே வந்த அந்த மனிதரைக் கண்டவளின் இரண்டு கால்களும், பலமிழந்து துவள, அடுத்து மயங்கிச் சரியப் போகிறோம் என்று அவள் எண்ணிய நேரத்தில், அவளுக்கு முன்னால் நின்றிருந்த அபராசிதன் அவளுடைய நிலையை, எப்படி உணர்ந்து கொண்டானோ, புருவங்கள் சுருங்கத் திரும்பிப் பார்த்தான்.
அவள் நின்றிருந்த கோலத்தைக் கண்டு பதறியவனாக அவளை நெருங்கி அவளுடைய தோள்களில் தன் கரத்தைப் பதிக்க, சட்டென்று தோள் தொட்ட அவனுடைய மேல் கரத்தைத் தன் கரங்களால் அழுந்த பற்றிக்கொண்டாள் திகழ்வஞ்சி. ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றவள், தோற்றவளாக,
“நான்… ஒரு இருக்கையில் அமரவேண்டும்…” என்றாள் பலவீனக் குரலில்
கொஞ்சம் கூடத் தாமதிக்கவில்லை அவன். அவளைத் தன் கரங்களில் ஏந்தியவன், பக்கத்தில் இருந்த நீளிருக்கையில் அவளை அமர்த்திவிட்டு, “கமலா…” என்றான் சத்தமாக.
கமலா ஓடி வருவதற்குள், அவள் முகத்தை மறைத்திருந்த முடிக் கற்றைகளை ஒதுக்கி விட்டவன், வெளுறிப் போன அவளுடைய முகத்தை யோசனையாகப் பார்த்து அவளுடைய கன்னத்தைத் தட்டி,
“திகழ்…” என்றான் மெல்லிய தவிப்போடு. மயங்க முயன்ற விழிகளை விரித்து அவனைப் பார்த்து,
“ஐ… ஐ ஆம் ஓகே…” அவள் திணறலாகச் சொல்லும்போதே கமலா வந்துவிட்டிருந்தாள். அவளைப் பார்த்ததும்,
“ஒரு குவளை குளிர் நீர் எடுத்து வாருங்கள்…” உத்தரவிட்டபின் தன் கவனத்தை திகழ்வஞ்சியிடம் செலுத்த அவளுடைய முகமோ வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.
பக்கத்திலிருந்த தேநீர் மேசையில் வைத்திருந்த கை துடைக்கும் மென் தாள் இரண்டு மூன்றை உருவி எடுத்தவன், மென்மையாக அவளுடைய முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்து எடுக்கும் போதே அவனிடம் குளிர் நீர் நீட்டப்பட்டது.
உடனே வாங்கி, அதை அவளுடைய உதட்டில் வைத்தவன்,
“தண்ணீர் குடி…” என்றான்.
மறுக்காமல் நடுங்கும் கரம் கொண்டு அவனுடைய கரத்தைப் பற்றியவள், தண்ணீரைக் குடிக்க, பதட்டம் ஓரளவு குறைந்தது. ஆனாலும் நடுக்கம் நிற்கவில்லை. ஏற்கெனவே அவர்களின் வரவை நினைத்து அச்சத்திலிருந்தவளுக்குப் பேரதிர்ச்சியாக ஈஷ்வரியின் கணவன் வந்து நிற்பார் என்று அவள் இம்மியும் நினைத்திருக்கவில்லை.
அதே நேரம் அங்கே நடப்பதை முகத்தில் எந்த வித சிரிப்பும் இன்றி முறைப்போடு பார்த்திருந்த ஈஷ்வரிக்கும் இரத்த அழுத்தம் எகிறுவது போலத் தோன்ற, அவருடைய கணவர் விஜயராகவனோ ஒரு வித வியப்போடு திகழ்வஞ்சியைத்தான் இமைக்காமல் பார்த்திருந்தார்.
“என்னாச்சு திகழ்…?” தன்னை மீறிய கனிவோடு அவன் கேட்க, சிரிக்க முயன்று தோற்றவள்,
“பா… பானிக் அட்டாக் போல… இப்போது சரியாகிவிட்டது. சா… சாரி… நான் வேண்டும் என்று…” சொல்லும் போதே குரல் தந்தியடித்தது.
“என்னப்பா…? இவள்தான் ஆராவமுதனைப் பெற்றவளா…?” கேட்ட ஈஷ்வரியின் அந்தக் கம்பீரக் குரலில் திரும்பவும் பானிக் அட்டாக் வந்துவிடும் போலத் தோன்ற, குவளையை ஏந்தியிருந்த அவனுடைய கரத்தைப் பலமாகப் பற்றிக் கொண்டாள் திகழ்வஞ்சி.
குளிர்ந்த கரமும், அதன் நடுக்கத்தையும் உணர்ந்து கொண்டவன், அவளை ஒரு விநாடி உற்றுப் பார்த்தான். பின் திரும்பி தன் சகோதரியைப் பார்த்து,
“சாரிக்கா… சொல்லியிருந்தேனே. இவளுக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்று…” அவன் கூறி முடிக்கவில்லை,
“உடல் நலமில்லாதவளை எதற்காக இங்கே அழைத்து வந்தாய்? அங்கேயே விட்டு விட்டு வரவேண்டியதுதானே…? இந்த நாட்டில்தான் மருத்துவத்திற்கு எந்தச் செலவும் செய்யவேண்டிய அவசியம் இல்லையே…?” குரலில் எகத்தாளமும், எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிய, சுருக் என்றது இவளுக்கு.
என்னதான் முயன்றும் அடக்க முயன்ற கண்ணீர் எட்டிப் பார்க்க, அவசரமாகத் தலை கவிழ்ந்தவள், அதுவரை பற்றியிருந்த அவனுயை கரத்தை விடுவித்து விட்டு,
“சா… சாரி… நா… நான் என் அறைக்குப் போகிறேன்… நீங்கள் பேசுங்கள்…” என்றவளுக்கு நெஞ்சைப் பிளக்கும் விம்மலை அடக்கும் வழி தெரியாமல் அவர்களின் அனுமதியையும் வேண்டாது, எழுந்தவள் திரும்பவும் நடுங்கும் கால்களையும் கைகளையும் தன் கட்டுக்குக் கொண்டுவரச் சிரமப் பட்டவாறே படிகளில் ஏறித் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிக்கொள்ள, அவளுடைய அந்த மாற்றத்தில் தாக்கப் பட்டவனாகத் திரும்பி தன் சகோதரியைப் பார்த்தான் அபராசிதன்.
“அக்கா… என்ன இது…? வந்த உடனேயே ஆரம்பிக்கவேண்டுமா?” கூடப் பிறந்தவளைக் கடிய, தன் தம்பியை எரிப்பது போலப் பார்த்தார் பெரியவர்.
“என்னடா…? எனக்கே பாடம் நடத்தும் அளவுக்கு நீ வளர்ந்து விட்டாயோ? என் தம்பியின் வாழ்க்கை நாசமாக்கியவளை நடுவீட்டில் கொண்டுவந்து வைத்திருக்கிறாயே…? அதுவும் அவளைக் கட்டிப் பிடித்து.. சீ.. சீ… உனக்குப் புத்தியில்லை…? இதில் அவளை வேறு நான் மரியாதையாக நடத்தவேண்டுமோ…?” என்று சீறியவர் சற்று முன் அவன் கரங்களில் தொங்கிக்கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வர அவருடைய முகம் மேலும் அருவெறுப்பில் சுருங்கிப் போனது.
“சதிகாரி… அண்ணனை மயக்கி முடிந்து இப்போது உன்னையும் மயக்க வந்துவிட்டாள்…” ஆங்காரமாக ஈஷ்வரி சொல்ல, முகம் இறுகிப் போனது அவனுக்கு. ஆனாலும் தன் பொறுமையை இழக்காதவனாக,
“அக்கா… பிளீஸ்…!” அவன் எதையோ சொல்ல வர,
“ஈஷ்வரி… என்னம்மா இது…? முதன் முறையாகப் பார்க்கும் ஒரு பெண்ணிடம் இப்படித்தான் பேசுவார்களா?” என்றவாறு வந்த தன் கணவனை முறைத்தார் ஈஷ்வரி.
“என்ன ராகவன் நடந்தவை அனைத்தையும் மறந்துவிட்டீர்களா? நான் மறக்கவில்லை. இன்று என் தம்பி எனக்கு இல்லாமல் போனதற்குக் காரணம் இவள்தான்… அவனை மயக்கி கையில் போட்டுக் கொண்டதால்தானே அவன் எங்களை எல்லாம் விட்டுத் தனியே போனான். இவளை நான் மதிப்பதா? இப்போது கூடப் பார்த்தீர்கள்தானே. கதவு திறக்கும் போது இருவரும் நின்ற கோலத்தை…” ஈஷ்வரி எகிற, பற்களைக் கடித்தான் அபராசிதன். ஆனாலும் தன் கோபத்தை அடக்கியவனாக,
“அக்கா…! அவள் தடுமாறி விழப் போனாள். நான் அவளைப் பிடித்தேன். அதற்குப் போய் இந்தளவு பேசவேண்டுமா?” மெல்லிய கண்டிப்புடன் கேட்க, தன் தம்பியை முறைத்தார் ஈஷ்வரி.
“அப்போ எந்தளவு பேசவேண்டும் என்கிறாய்? இன்னும் உள்ளே இருக்கும் இரணம் ஆறவில்லை தெரியுமா உனக்கு…? எப்படிடா… எப்படி உன்னால் இவள் கூட நின்று பேச முடிகிறது? எனக்குப் பார்க்கும் போதே… சே… இப்போது எதற்காக இவளை இங்கே அழைத்து வந்தாய்? இவளை அங்கேயே தலை முழுகிவிட்டு வரவேண்டியது தானே…?” ஈஷ்வரி ஆங்காரமாகக் கேட்க, ஒரு விநாடி மௌனம் காத்தான் அபராசிதன்.
“அவளை அங்கேயே தலை முழுக வேண்டும் என்றால், எங்கள் வாரிசு ஆராவமுதனையும் தலை முழுகிவிட்டுத்தான் வந்திருக்கவேண்டும். சட்டத்தில் கூடப் பெற்ற தாயைப் பிரிப்பதற்கு அனுமதி இல்லை. அதுவும் எங்களால் முடியவே முடியாது. அவளாக ஆராவமுதனை எங்களிடம் ஒப்படைக்கும் வரைக்கும், அவள் இங்கேதான் இருக்கவேண்டும். புரிந்து கொள்ளுங்கள். அக்கா..! ஆராவமுதனுக்காக நாம் ஒரு சிலதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதில் ஒன்று அவனுடைய தாய்… நாம் மறுத்தாலும், வெறுத்தாலும் அதை மாற்ற முடியாதுக்கா…!” அவன் அழுத்தமாகச் சொல்ல, அவருடைய கண்களிலிருந்து பொலப்பொல என்று கண்ணீர் பொங்கத் தொடங்கியது.
“என்னால் முடியவில்லையேடா… அவளைப் பார்க்கும் போது நெஞ்சமெல்லாம் காந்துகிறதே. நான் என்ன செய்ய… நாங்கள் அமலனை இழக்க இவள்தானே காரணம். இவள் மட்டும் அவன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், அமலன் எங்களை விட்டுப் போயிருக்க மாட்டான். அவன் மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்திருப்பான். எத்தனை ஒழுக்கமாக இருந்தான் என் தம்பி. அவனை மயக்கிக் கைக்குள் போட்டுக்கொண்டாளே. பாதகத்தி…” அவர் வேதனையில் வெடிக்கும் போது, அவருடைய கால்களில் பூம்பந்து ஒன்று வந்து மோதியது. சிந்தனை கலைந்தவராகக் குனிந்து பார்த்தவர், அங்கே தன் தம்பியின் பிரதிபிம்பமாக அவரை அண்ணாந்து பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டதும், உள்ளம் கசிந்துருக அவனை வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டார் ஈஷ்வரி.
“கண்ணா… அமலா…” என்று வாய் முணு முணுக்க, குழந்தையின் முகத்தை வருடியும் தடவியும் கொடுத்தவர், இறுதியில் விம்மி வெடித்து விட, ஓரெட்டில் சகோதரியை நெருங்கியவன், அவரையும் குழந்தையையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“ஷ்… அக்கா… பிளீஸ்… அழாதீர்கள்…” கெஞ்சியவனின் கண்களும் கலங்கித்தான் போயின.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இதைத்தானோ.
விம்மிய சகோதரியை அணைத்தவாறு அங்கிருந்த இருக்கையில் அமர்த்தியவன், அவர் கரங்களில் நசிபட்ட குழந்தையைப் பிரித்துத் தன் கரத்தில் எடுத்துக்கொண்டு,
“பிளீஸ் அக்கா… உங்களைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்…” என்றான் சகோதரி அழுவது பிடிக்காது.
“எப்படிடா… என் அமலனே என்னிடம் வந்தது போல… அப்படியே இருக்கிறான்டா… என்னால்… என் கண்களையே நம்பமுடியவில்லையே… நம் அமலன் நம்மை விட்டுப் போகவில்லை அபரா… இதோ… இங்கேதான் இருக்கிறான்…” விம்மியவர் திரும்ப அவன் கரத்திலிருந்த குழந்தையை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தவாறு சற்று நேரம் அப்படியே கிடந்தார்.
“ஈஷ்… அழாதேடி…” சொன்ன கணவனிடம், சிரிப்பும் அழுகையுமாகப் பார்த்தவர்,
“அப்படியே நம்முடைய அமலனைப் போலவே இருக்கிறான் இல்லையா?” என்று கேட்டார் ஈஷ்வரி. தன் மனைவியின் மடியில் அமர்ந்திருந்த குழந்தையை ஒரு கணம் உற்றுப் பார்த்தார் விஜயராகவன். அந்தக் குழந்தையின் முகத்தில் அன்னையின் சாயலைத் தேடினாரோ? அது கிடைக்காமல்,
“உன்னுடைய பேச்சுக்கு எதிர் பேச்சு ஏதாவது இருக்கமுடியுமா?” என்றவருக்கு ஏனோ இதயம் படபடவென்று வந்தது. அங்கே இருக்க மூச்சு முட்டுவது போலத் தோன்ற,
“ஈஷ்… நான் காலார நடந்து விட்டு வருகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்.” என்றவாறு எழ, தன் கணவனை முறைத்தார் ஈஷ்வரி. எதற்காக என்று அவருக்குத் தெரியாதா என்ன?
“சரி… சரி போய்விட்டு விரைவாக வாருங்கள். ஒன்றிற்குமேல் எடுக்காதீர்கள்..” என்று எச்சரித்து அனுப்ப, சம்மதம் என்றவாறு, தன் சட்டைப் பையிலிருந்து, சிகரட் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய விஜயராகவனை வியப்புடன் பார்த்தான் அபராசிதன்.
“அக்கா… அத்தானுக்கு என்னவாகிவிட்டது? திடீர் என்று ஒரு மாதிரித் தெரிகிறார்?” என்ற தம்பியிடம் பெருமையாகப் பார்த்தவர்,
“நான் அழுதேன் இல்லையா. அதுதான் அவர் மனதுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது… வேறு ஒன்றும் இல்லை…” என்றவர் தன் மருமகனை இறுக அணைத்தவாறு,
“இதுவரைக்கும் ஆராவமுதன் நம்முடைய அமலனின் மகனாக இருப்பானா என்கிற சந்தேகம் இருந்தது. இப்போது அவனைப் பார்த்தபிறகு அந்தச் சந்தேகம் சுத்தமாகப் போய்விட்டது அபரா…” என்றவர் எதையோ சற்று நேரம் யோசித்தார். பின் தன் மகளை ஏறிட்டு,
“மதிமா தம்பியை உன் அறைக்கு அழைத்துச் சென்று விளையாடு போ…” என்று அனுப்பிவிட்டு நிமிர்ந்து தன் தம்பியைப் பார்த்தார்.
“அபரா…! ஆராவை இனி நான் வளர்த்துக் கொள்கிறேன்… அந்தப் பெண்ணுக்கு ஏதாவது கொஞ்சப் பணத்தைக் கொடுத்து, அனுப்பிவிடு… ” என்றார் அழுத்தமாக. அதைக் கேட்டுப் பெருமூச்சு விட்டவன், தன் சகோதரிக்கு அருகாமையில் அமர்ந்தவாறு,
“நான் அதற்கு முயற்சி செய்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறீர்களா அக்கா… ஆனால் அவள் பணத்திற்கு மசிவது போலத் தெரியவில்லை. நான் அதிகப் பணம் கொடுப்பதாகக் கூடச் சொன்னேன். மறுத்துவிட்டாள்…” அவன் சொல்ல வியப்போடு தம்பியைப் பார்த்தார் ஈஷ்வரி.
“அது எப்படிடா…? பணத்தைக் கொடு என்று அவள்தானே அமலனிடம் கேட்டாள்? இப்போது எதற்கு மாட்டேன் என்கிறாள்…?”
“இதைத்தான் நானும் கேட்டேன். குழந்தை பிறந்ததும், தன் எண்ணத்தை மாற்றி விட்டதாகச் சொன்னாள்…”
“சிறுத்தைகள் தன் புள்ளிகளை மாற்றாது அபரா… ஒரு வேளை சொத்தில் பங்கு எதிர் பார்க்கிறாளோ என்னவோ?” ஈஷ்வரி இகழ்ச்சியாகச் சொல்ல மெல்லியதாகச் சிரித்தான் அபராசிதன்.
“நானும் அதைப் பற்றி யோசித்தேன்தான். பார்க்கலாம்… எது எப்படியாக இருந்தாலும் ஆரா நம்மோடு நன்றாகப் பழகும் காலம் வரைக்குமாவது அவள் இங்கே இருப்பது அவசியம்…” அவன் சொல்ல அபராசிதனை ஒரு மாதிரிப் பார்த்தார் ஈஷ்வரி.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவர் கண்ட காட்சிகள் அவரை எச்சரித்து விட்டதே.
“இல்லை அபரா… எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து அனுப்புகிற வழியைப் பார். அதுதான் அத்தனை பேருக்கும் நல்லது. கலம் தாழ்த்தாதே. எனக்கு ஏனோ அந்தப் பெண்ணைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எங்கே அமலனைப் போல உன்னையும் அவள்…”
“பிளீஸ் அக்கா…! ஸ்டாப் திஸ் நான்சன்ஸ். என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது? அப்படி ஒரு பெண்ணால் என்னை மயக்க முடியும் என்றால், இப்போது எனக்கு ஏழு எட்டுக் காதலிகள் இருந்திருப்பார்கள்… அதுவும் அவளைப் போய்… சீ… சீ…?” கண்டிப்புடன் சொல்ல,
“நீ என்னதான் சொன்னாலும், அவள் பார்வை… அதுவும் உன்னைப் பார்க்கும் விதம்… எனக்கு எதுவும் சரியாகப் படவில்லை… நான் அவளைப் பார்த்தபோது சட்டென்று உன் பின்னால் மறைந்து கொண்டாள் பார்… அது என்னவோ உறுத்துகிறது. அவள் உன்னிடம் பாதுகாப்பை எதிர்பார்க்கிறாளோ என்று தோன்றுகிறது. அவள் இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிடா… அமலனை ஒட்டியிருந்து அவன் இரத்தத்தை உறிஞ்சினாள். இனி நீ… ம்கூம்… எதுவோ சரியில்லைடா…” மறுப்பாகச் சகோதரி சொல்ல, மெல்லியதாகச் சிரித்தான் அபராசிதன்.
“கமோன் அக்கா… இதோ பாருங்கள் நான் குழந்தையில்லை. எனக்கும் சரி தவறு எல்லாம் தெரியும். அத்தனை சுலபத்தில் என்னை ஏமாற்ற முடியாதுக்கா. அதுவும் இவளால் நிச்சயமாக முடியாது…” சொன்ன தம்பியை முறைத்தவர்,
“சரி… இப்போது எதற்காக இவளை உன் கூட அழைத்து வந்திருக்கிறாய்? எங்காவது ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்துத் தங்க வை… அவள் உன்னுடன் தனியாக இருப்பது எனக்குப் பிடிக்க வில்லை…” சொன்ன சகோதரியை மறுப்பாகப் பார்த்தான் அபராசிதன்.
“எந்த யுகத்தில் இருக்கிறீர்கள். இது இப்போது இருபத்தோராம் நூற்றாண்டு. ஒரு ஆணும், பெண்ணும் தனியாக வாழ்ந்து விட்டுப் பிடிக்க வில்லை என்றால் பிரிந்து சென்றுவிடும் காலம். இப்போது போய் இதைப்பற்றிப் பேசுகிறீர்களே…” சொன்ன தம்பியை முறைத்தார் ஈஷ்வரி.
“அது நம்முடைய கலாச்சாரமில்லை அபராசிதன். நீ இப்போது திருமணம் முடித்து மனைவியுடன் இருக்கிறாய் என்றால், அவள் இங்கே இருப்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்… ஆனால்…” அவர் இழுக்க,
“இப்போது என்ன சொல்லவருகிறீர்கள்…? அவள் என்னுடன் இருக்கக்கூடாது என்றால், யாருடன் தங்க வைப்பது? நீங்கள் அழைத்துச் செல்கிறீர்களா…” கேட்டவனை அருவெறுப்போடு பார்த்தார் இஷ்வரி.
“என்னடா விளையாடுகிறாயா…? நானும் ஒரு பெண்பிள்ளையை வைத்திருக்கிறேன்… இப்படிக் கேடுகெட்டதுகளை, என் வீட்டில் வைத்திருந்தால், என் பிள்ளையல்லவா கெட்டுப்போவாள்…” என்று கூற, ஏனோ முதன் முறையாக அபராசிதனுக்குக் கோபம் வந்தது. திரும்பத் திரும்ப அவளை அவதூராகப் பேசும் போது காரணமின்றியே நெஞ்சின் ஓரம் வலித்தது. அவள் அப்படியல்ல என்று நிறுவவேண்டும் என்கிற வேகம் வருகிறது.
என்னதான் திகழ்வஞ்சியின் குணம் தவறானதாக இருந்தாலும், அதை ஈஷ்வரியின் வாயால் கேட்கும்போது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளைத் தவறாகப் பேசுபவர்களை அவனால் மன்னிக்க இயலாது என்பதுபோலத் தோன்றியது. இருந்தாலும், சொன்னது அவனுடைய சகோதரியாயிற்றே. தவிரச் சகோதரியின் இடத்திலிருந்து பார்க்கும் போது அவருடைய பரிதவிப்பு நியாயமானதுதான். அதே நேரம், திகழ்வஞ்சியையும் வேண்டாத பொருளாக நினைப்பதும் பிடிக்கவில்லை.
“இதோ பாருங்கள் அக்கா… நான் எப்போதாவது ஏதாவது ஒன்றை யோசிக்காமல் செய்திருக்கிறேனா…? ஆராவை நம்கூட வைத்திருக்கவேண்டும் என்றால், அவள் நம்கூட இருந்தே ஆகவேண்டும். ஆராவுக்கு இப்போதுதான் ஒரு வயது. இந்த வயதில் தாய் எந்தளவு முக்கியம் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியே அவளைத் தனிவீட்டில் வைப்பதாக இருந்தால், ஆராவும் அவள் கூடப் போகவேண்டி இருக்கும். அதற்குப் பிறகு நாங்கள் என்ன செய்வது? அவளிருக்கும் இடத்திற்கு அடிக்கடி நம்மால் போக முடியுமா? யோசித்துப் பாருங்கள்” என்றவனை முறைத்தவர், என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கினார். அந்த நேரம், புகைபிடித்து முடித்து உள்ளே வந்தார் ராகவன்.
“என்னப்பா… இருவரும் இன்னும் பேசி முடிக்க வில்லையா?” கேட்க கணவனையும் தம்பியையும் முறைத்தார் ஈஷ்வரி.
“பேசி முடிக்க என்ன இருக்கிறது? ஆராவை நம்கூட வைத்துக் கொண்டு இவளுக்குப் பணம் கொடுத்து அனுப்பச் சொன்னால் அவள் பணம் வேண்டாம் என்கிறாளாம். எனக்கு அந்தப் பெண் இவன் கூடத் தனியாக இந்த வீட்டில் இருப்பது பிடிக்கவேயில்லை தெரியுமா. அவள் பெரிய கைகாரி… அமலனை மயக்கியது போல?” அவர் முடிக்கவில்லை,
“ஈஷ்வரி…” என்றார் விஜயராகவன் அழுத்தமாக. தன் கணவன் குரல் உயர்த்திப் பேச என்ன என்பது போலப் பார்த்தார் அவர்.
“ஈஷ்… நமக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது… இன்னொரு பெண்ணை அபத்தமாகப் பேசுவது தப்பு…” என்று கண்டித்து விட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“நமக்கு ஆரா முக்கியம்… அதில் உங்கள் இருவருக்கும் மாற்றுக் கருத்து இல்லைதானே…”
“என்ன பேசுகிறீர்கள் ராகவ்…? எங்களுக்கு அவன் மட்டும்தான் முக்கியம்…”
“அப்படியென்றால் நான் சொல்வதை இருவரும் குறுக்கிடாமல் தெளிவாகக் கேளுங்கள்…” என்றவர் ஒரு இருக்கையை அவர்களுக்கு முன்பாகப் போட்டு அமர்ந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“நமக்காக அமலன் விட்டுப் போன ஒரே ஒரு சொத்து ஆராவமுதன் மட்டும்தான் அவனை இழக்க நம்மால் முடியாது… நான் சொல்வது சரிதானே”
“ஆமாம்…”
“அதே நேரம், திகழ்வஞ்சி அராமுதனைப் பெற்றவள். நம்மைவிட அவளுக்குத்தான் ஆராவமுதனின் மீது அதிக உரிமையிருக்கிறது. அவள் ஆராவமுதனை அழைத்துச் செல்கிறேன் என்றால் அதை மறுக்கும் சக்தி நம் யாருக்கும் கிடையாது. இவ்வளவு ஏன் அவள் நீதிமன்றத்திற்குப் போனால் கூடத் தீர்ப்பு அவள்பக்கமாகத்தாக் சாயும். இது உங்களுக்கும் தெரியும்…” அவர் சொல்ல இருவரும் பதில் சொல்லாமல் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருக்க,
“ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன், அந்த பெண் ஆராவமுதனை அழைத்துக் கொண்டு கிளம்புகிறேன் என்று சொல்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்…”
“ராகவ்… என்ன சொல்கிறீர்கள்… இதற்கா அபரன் இத்தனை பாடுபட்டான்?”
“ப்ச்… ஈஷ்… நான் சொல்வதை முதலில் முழுதாகக் கேள். அதற்குப் பிறகு பேசு…” கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, திரும்பி அபராசிதனைப் பார்த்தார். பின் ஈஷ்வரியைப் பார்த்தார்.
“அப்படி அந்தப் பெண் கிளம்பினால் நம்மால் என்ன செய்ய முடியும்?”
“அது… அது வந்து…” ஈஷ்வரி இழுக்க,
“நம்மால் எதுவும் செய்ய முடியாது அத்தான்…” என்றான் அபராசிதன்.
“ம்… தட்ஸ் ரைட்… அதை விடு. ஒரு வேளை அந்தப் பெண் இன்னொருத்தனைத் திருமணம் முடிக்கிறாள் என்று வைத்துக் கொள்…” இராகவன் சொல்ல, ஏனோ அந்தப் பேச்சு அபராசிதனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பற்களைக் கடித்து,
“ப்ச்… அத்தான்… இப்போது எதற்கு அந்தப் பேச்சு?” எரிச்சலுடன் கேட்க,
“இந்தப் பேச்சுதான் அவசியமானது அபரா… அவளை மணந்து கொள்ளும் அந்த சோ அன்ட் சோ, நம் ஆராவை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்பதற்கு என்ன உத்தரவாதம். அந்தப் பெண் ஆராவை அழைத்துச் சென்றதும் நாம் சும்மா விடப்போவதில்லை… நம்முடைய அமலனின் சொத்து எப்படியா இருந்தாலும் அவனுக்குத்தான் போகவேண்டும். அது அந்தப் பெண்ணுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்த சோ அன்ட் சோ, நம் ஆராவைப் பகடைக் காயாக வைத்து அத்தனை சொத்துக்களையும் அபகரிக்க முயன்றால் நம்மால் என்ன செய்ய முடியும்? அந்த சொத்துக்காக நம் ஆராவைக் கொடுமை செய்யலாம், அடிமையாகக் கூட வைத்திருக்கலாம்…” அவர் முடிக்கவில்லை, அந்தப் பேச்சே பிடிக்காதவராகக் காதுகளைப் பொத்தினார் ஈஷ்வரி.
“ஐயோ… போதும் நிப்பாட்டுங்கள்… என்ன உளறல் இது…? நம் ஆராவுக்கு இப்படி எதுவும் ஆகாது… ஆகவும் கூடாது” என்றார் கோபமாக.
“உளறவில்லை ஈஷ், என்ன நடக்கலாம் என்பதை முன்கூட்டியே சொல்கிறேன்… ஆரா நம்முடைய கையில் இருக்கும் வரைக்கும்தான், அவனுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். இதோ பார் ஈஷ், நாங்கள் என்னதான் பணத்தை விட்டெறிந்தாலும், நியாயம் என்று ஒன்றிருக்கிறது அல்லவா… சோ… நமக்கு ஆராவமுதன் வேண்டும், அதுவும் நமக்கே நமக்காக வேண்டும். அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது” என்று நிறுத்தியவர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்டதும் அபராசிதன் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தான் என்றால், ஈஷ்வரியோ,
“உங்களுக்குப் பைத்தியமா என்ன?” என்கிற சீறலோடு எழுந்தே விட்டார்.
அருமையான பதிவு 😍😍😍😍.
ஈஸூ எதுக்கு இம்பூட்டு வெறுப்பு உங்களுக்கு.
பாக்கப்போனா உன்ற மூத்த தொம்பி மேலயும் பாதி வெறுப்பை கொட்ட வேண்டிய தானே 😬😬😬😬.
ஆமா ஏன் திகழு ராகவ்வை பாத்துட்டு ஒரு மாதிரி மயக்கம் ஆகறா?🙄🙄🙄 சம்திங் ராங்?!!!
ஆமா அப்புடி யென்ன ஐடியா குடுத்தாப்புல?🙄🙄🙄 ஒருவேளை 😱😱😱😱😱 ஆத்தீஇ திகழை போட்டு தள்ளச் சொல்லி இருப்பானோ??? கேள்வி கேக்க ஆளுகிடையாது தானே திகழுக்கு 🤧🤧🤧🤧.
இல்லை திருவிழாவுல புள்ளைய தொலைக்கிற மாதிரி திகழையும் நாடுகடத்தி தொலைக்க சொல்லி இருப்பானோ😱😱😱?
😵💫😵💫😵💫😵💫😵💫 ஆ ஆ நயணிம்மா வேற சஸ்பென்ஸா தொடரும் போட்டுட்டாங்களே
ஹா ஹா ஹா. இப்ப சொன்னீங்க பாருங்க அது பேச்சு. இந்த ஈசுவரியோட தம்பி செஞ்சது தப்பில்லயாம், ஆனா அவளை திட்டு வாங்கலாம். எந்த ஊரு நியாயம். நல்லா கேளுங்க டாலு. இப்படி தொடரும்னு போட்டாதானே நமக்கும் குளுக்குழுநநு இருக்கும்.
Wow awesome.May be Raghavan is Thigalvanjis father.he might gave the idea of thigal marrying abara.
அப்படீங்கிறீங்க அடுத்த எபியில ஓரளவு புரிஞ்சிரும் பா
திகழை அபராசிதனுக்கு திருமணம் செய்ய சொல்லியிருப்பாறோ
ஒரு வேளை அப்படி இருக்குமோ. அதுத்த எபியில தெறிஞ்சிரும்யா.