(15)
“அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பிறகுதான் அபராசிதன் கொஞ்சம் மூச்சே எடுத்தான். அவள் அருகே இருக்கும் போது அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடிய வில்லை. செயற் பட முடியவில்லை. எதுவோ அழுத்துவது போல, எதுவோ அவனைச் சிந்திக்க விடாது செய்வது போலத் தவித்துப் போகிறான்.
வெளியே வந்து இயற்கை காற்றினைச் சுவாசித்த பின்புதான் அவனால் இலகுவாக எதையும் சிந்திக்க முடிந்தது.
அவளிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அது மட்டும் உறுதி. நெருங்கினாலே அறிதுயில் (Hypnosis) நிலைக்குத் தள்ளப் படுவது போல எதுவும் புரியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். புத்தி சரியான வழியில் செயல்பட மறுக்கிறது. இவள் மிகவும் பயங்கரமானவள். மிகக் கவனமாகத்தான் இவளைக் கையாள வேண்டும்.
யோசனையோடு தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தான் அபராசிதன். ஏனோ உடலும் மனதும் களைத்துப் போயிருந்தது. தொடர்ந்து ஒரு கிழமையாக இருக்க முடியாத அளவுக்கு அலைச்சல். முதலில் நல்ல குளியல் போடவேண்டும். அதற்குப் பிறகுதான் சிந்திக்க வேண்டும்.
தன் விடுதி அறையைத் திறந்து கொண்டு உள்ளே வர, அங்கே அவனுடைய அறையில் ஒரு பெண் அமர்ந்திருந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க, கட்டிலில் ஆராவமுதன் உறங்கிக் கொண்டிருந்தான்.
இவனைக் கண்டதும், அந்தப் பெண் விடை பெற்றுச் சென்றுவிட, அவருக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டுக் கதவைச் சாற்றிவிட்டு உள்ளே வந்தவன், சத்தம் எழுப்பாமல் தன் பெறாமகனின் அருகே வந்தான்.
அவனைப் பார்க்கும் போதே, கண்கள் கலங்கின அவனுக்கு. அந்தக் குழந்தையை இரசிக்க அவன் அண்ணனுக்குக் கொடுத்து வைக்கவில்லையே. வேதனையுடன் எண்ணியவன், குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
மன அழுத்தம் போகக் குளித்தவன், இரவாடைக்கு மாறிவிட்டு, ஆராவின் பக்கமாக அவனை அணைத்த வாக்கில் கட்டிலில் விழுந்து விழிகளை மூட, மனதோ அவனுடைய அனுமதியின்றித் திகழ்வஞ்சியிடம் சென்றது.
அவள் நடந்ததைச் சொன்ன போது தவித்த மனமும், அவள் அழுத போது தவித்ததும் நினைவுக்கு வரக் கீழ் உதட்டைக் கடித்தான் அபராசிதன். ம்கூம் இது சரியில்லை. முடிந்தவரை அவளை விட்டுத் தள்ளித்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், பைத்தியம் பிடித்துவிடும். நினைத்தாலும், குரங்கை நினைக்காது மருந்து குடித்தவன் நிலைதான் அவனுடையதாகிப் போனது.
மறு நாள் ஆராவமுதனின் அழுகுரலில்தான் அபராசிதன் உறக்கம் கலைந்து எழுந்தான்.
அந்த அழு குரல் தன் பெறாமகனிடமிருந்து வருகிறது என்றதும், பதறி எழுந்தவன், அவனைத் தேட, அவனோ தரையில் அமர்ந்தவாறு கண்ணீர் கன்னத்தில் ஆறாகப் பொழிய, விம்மி வெடித்து அழுதுகொண்டிருந்தான். அதைக் கண்டவனின் நெஞ்சம் துடித்துப் போக,
“ஆரா…” என்றவாறு பாய்ந்து அவனை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, அவனுடைய கண்ணீரைத் துடைத்துவிட, அவனோ, தன் சித்தப்பாவைப்ப பார்த்து,
“இம்மா.. ம்மா… மாமா…ம்மா.” என்றான்.
அதைக் கேட்டவனுக்குப் புரிந்தது குழந்தை தாயைத் தேடுகிறான் என்று. குழந்தை எதற்குத் தாயைத் தேடும். பசிப்பதால்தானே.
“என்னடா பசிக்கிறதா?” என்றவன் குழந்தையை ஏந்திக்கொண்டு முன்னறைக்கு வந்தான். அங்கே குழந்தையின் பையிருக்க அதை நோக்கிச் சென்றவன் ஒற்றைக் கரத்தால் அந்தப் பையைத் திறந்தான்.
குழந்தையைக் கொடுக்கும் போதே, ஈவா குழந்தைக்குரிய பையையும் சேர்த்துக் கொடுத்து இருந்தாள். அதைத் திறந்து பார்க்க, பால் போத்தல், குழந்தைக்கான சீரியல், மாற்றுடை, டயப்பர், என்று அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இருக்க, அப்போதுதான் குழந்தையின் டயப்பரை மாற்றவேண்டும் என்பதே அவனுக்கு உறைத்தது. உடனே டயப்பரை எடுத்தவன், ஆராவமுதனைக் குளியலறைக்கு எடுத்துச் சென்றான்.
பழைய டயப்பரைக் கழற்றி, குப்பைத் தொட்டியில் போட்டவன், இதமான சூட்டில் குழந்தையைக் குளிப்பாட்டி, சுத்தமாகத் துடைத்து புதிய டயப்பர் அணிவித்துத் திரும்பவும் குழந்தையை ஏந்திக்கொண்டு முன்னறைக்கு வந்தான்.
குழந்தையின் பையிலிருந்த பால் போத்தலை எடுத்துச் சென்று அதில் இதமான சூட்டில் பசும்பாலைக் காய்ச்சி ஊற்றி எடுத்து வந்து, குழந்தையைப் படுக்கையில் கிடத்திப் பால் போத்தலைக் கொடுக்க, உடனே அவனிடமிருந்து பறித்துத் தன் வாயில் வைத்துக் கொண்டது குழந்தை.
நல்ல பசி போல, மூச்சுவிடாமல் குடிக்கத் தொடங்க, துவாய் ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் அபராசிதன். குளித்து முடித்ததும், ஈரத்தைத் துடைக்காமலே, இடையில் துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தவன், ஈரமாகி விட்ட கரிய மயிர்கற்றையைப் பின்னோக்கி இழுத்து விட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கே அந்த அறை இருந்த இருப்பைக் கண்டு இதயம் வெடிக்காத குறை அவனுக்கு.
அவன் பாலைக் கொடுத்துவிட்டுக் குளிக்கச் சென்றதும், அந்தச் சின்னக் கண்ணனோ, அவன் கொடுத்த பாலை மொத்தமாகக் குடித்து விட்டு எழுந்து அமர்ந்து அறையைச் சுற்று முற்றும் பார்த்தான்.
ஒரு வயதுப் பாலகன் என்றாலே அறியும் வயசுதானே. அதனுடைய குட்டி மூளைக்கு என்ன சிந்தனை தோன்றியதோ, கட்டிலை விட்டு இறங்கித் தவழ்வதும், ஒன்றைப் பிடித்து எழுந்து நின்றும், தத்தக்கா பித்தக்கா என்று ஓடியும் கைக்குக் கிடைத்த அத்தனை பொருட்களையும் இழுத்துத் தரையில் போட்டது. அது விழும் விதத்தையும், அது விழும் போது ஏற்படும் ஓசையையும் கேட்டு நான்கு பற்கள் காட்டி சிரித்தது. பின் தூக்க முடிந்ததைத் தூக்கி வாயில் வைத்துச் சுவைப்பதும், கடிக்க முடிந்தவற்றைக் கடிப்பதும், பிடிக்கவில்லை என்றால் அதைத் தூர எறிவதும் என்று பதினைந்து நிமிடங்களில் அந்த அறையை, சுழல் காற்று அடித்துச் சென்ற கிராமம் போல ஆக்கிவிட்டிருந்தான்.
கைக்கு எட்டிய பொருட்கள் அனைத்தையும் இழுத்துப் போட்டாயிற்று. இனி எதைக் கீழே போட்டு உடைக்கலாம் என்கிற தீவிர சிந்தனையில் தரையில் அமர்ந்தவாறு வாய்க்குள் சுட்டுவிரலை வைத்து எச்சில் வடிய அங்கும் இங்கும் பார்த்தது.
அதன் குட்டிக் கண்களுக்குச் சோபாவுக்குப் பக்கத்திலிருந்த குட்டை மேசையில், அழகுக்காக வைத்திருந்த மேசை விளக்குத் தெரியக் குதுகலமானது. உசைன் போல்ட்டுக்குப் போட்டியாகத் தவழ்ந்து சென்று அங்கிருந்த மேசை விளக்கில் தொங்கிக் கொண்டிருந்த வயரைப் பற்றி இழுக்கப் போன நேரம்தான் குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வந்திருந்தான் அபராசிதன்.
அவனுக்கு அனைத்தும் வைத்தது வைத்த இடத்தில் இருக்கவேண்டும். சுத்தம் அதிகம் பார்ப்பான். சின்னத் துரும்பு தரையில் தேவையற்றுக் கிடந்தாலும், அதைச் சுத்தம் செய்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். அப்படிப்பட்டவனுக்கு அறை இப்படிக் கிடந்தால் எப்படியிருக்கும்.
கோபத்தோடு குழந்தையைத் தேட, அவனோ மேசைவிளக்கின் மீது கைவைத்திருந்தான். அந்த விளக்கு கண்ணாடியாலானது. உடைந்தால் அவ்வளவுதான். பதறிப்போனான் குழந்தையின் நிலை எண்ணி.
“டேய்…! அது கண்ணாடி… கையை எடு…!” என்று பதறிக் கொண்டு தன் கரத்திலிருந்த துவாயைத் தூர எறிந்தவிட்டு ஆராவமுதனை நோக்கிப் பாய்ந்தான் அபராசிதன். ஆனால் அவனுடைய வேகத்திற்கு இரண்டு மடங்கு அதிக வேகம் குழந்தையிடம் இருந்தது.
அவன் ஆராவை நோக்கி ஓடுவதற்குள் மேசை விளக்குத் தரையில் விழுந்து அதன் கண்ணாடி நாலா பக்கமும் தெறித்துச் சிதறியது. அடுத்து கண்ணாடித் துண்டுகளின் மீது தவழப் போகிறான் என்பதை ஊகித்தவனாகப் பாய்ந்து மகனைப் பற்றுவதற்குள் அவன் ஓடிய ஓட்டத்தில் இடையில் கட்டிய துண்டு கழன்றுவிட, அதைப் பிடிப்பதா, இல்லை ஆபத்தில் இருக்கும் மகனைப் பற்றுவதா என்கிற பட்டிமன்றத்தில், ஒரு விநாடி தயங்கி நிற்க, அந்த நேரம் குழந்தை உடைந்த கண்ணாடித் துண்டின் மீது கரத்தைப் பதிக்க முயல, துண்டாவது மண்ணாவது என்று ஒற்றைக் கரத்தால் அதைப் பற்றியவாறு மறு கரத்தால் மகனைப் பற்றி வாரி எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள, குழந்தையோ ஏதோ சாகசம் செய்த பெருமையில் கெக்கே பிக்கே என்று சிரித்தவாறு கால்களை உதறி அவனிடமிருந்து விலக முயன்றது.
அவனுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஏனோ தானோ என்று துண்டை சொருகி விட்டு குழந்தையை அணைத்துப் பிடிக்க, அந்தச் சின்னச் சுனாமியோ, இதய அறுவைச் சிகிச்சை நிபுணனான சித்தப்பாக்காரணுக்கே இதயத்தை நிற்க வைத்துவிட்டோம் என்கிற பெருமையில் “ஹவ் இஸ் தட்…?” என்பது போலப் பார்த்து ஈ. என்றது.
“டேய்… ஒரு விநாடியில் என் உயிரையே உலையில் போட்டுவிட்டாயே… உன்னை..” என்று கோபத்தில் சொன்னாலும், அந்த மேசை விளக்கு தன் பெறாமகனின் தலையில் விழவில்லை என்பதில் அளவிட முடியாத நிம்மதி அவனுக்கு.
கூடவே இவனை எல்லாம் திகழ்வஞ்சி எப்படித் தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறாளோ என்கிற வியப்பும் எழவே செய்தது.
“டேய்… எப்படிடா உன் அம்மா உன்னை வைத்துப் பார்த்துக் கொள்கிறாள்… ஐந்து நிமிடம் கூடத் தனியாக விட முடியவில்லையே…” கேட்டவன், அவனைத் தன் முகத்திற்கு நேராகத் தூக்கி அவன் வயிற்றில் முத்தமிட, சிற்றப்பாவின் மீசையும் தாடியும் குத்திய வேகத்தில் கிளுகிளுத்துச் சிரித்தது குழந்தை.
அந்த நேரம், அவனுடைய அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்க, யார் என்று புருவங்களை சுருக்கியவனுக்கு, அந்த நேரம் அறைகளைச் சுத்தம் செய்பவர்கள் வரும் நேரம் என்பதை உணர்ந்தவனுக்குப் பெரும் நிம்மதி எழுந்தது.
முதலில் அந்தக் கண்ணாடித் துண்டுகளை சுத்தம் செய்யவேண்டும்.
“யேஸ்… கம் இன்…” அவன் குரல் கொடுக்க, அறையைச் சுத்தம் செய்ய வந்த, அந்த வேலையாள், கதவைத் திறந்து உள்ளே வரவும், ஆராவமுதனின் குட்டிக்கால், ஏனோ தானோ என்று சொருகியிருந்த அபராசிதனின் இடைத் துண்டை ஒரு தள்ளுத் தள்ளி அவிழ்த்து விடவும் நேரம் சரியாக இருந்தது.
அதுவரை கீழே விழுந்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த, துண்டு வெற்றிகரமாகத் தரையில் சுருண்டு விழுந்தது.
அதிர்ந்து போனான் அபராசிதன். சட்டென்று கையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கரத்தைப் பற்றித் தொங்கவிட்டு, ஏற்கெனவே காற்றில் பறக்கவிட்ட தன் மானத்தைக் காக்க முயல, அவனுடைய கரத்திலிருந்த ஆராமுதனோ தன் சித்தப்பாவின் மிச்சம் மீதியிருக்கும் மானம் மரியாதையைக் காற்றி ஏற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன் என்பது போலப் பெரிய சத்தமாகக் கிறீச்சிட்டுத் தன் கால்களை மேலே தூக்க, இவனுக்கோ, இப்படியாகிவிட்டதே என்கிற சங்கடத்தில், வேலையாளைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிந்தினான்.
“கொ… கொஞ்சம் வெளியே இருக்கிறீர்களா… நான் உங்களைத் திரும்ப அழைக்கிறேன்…” என்றதும், அதுவரை அதிர்வோடு நின்றிருந்த அந்தத் துப்பரவாளர் பல்லைக் காட்டி இளித்தான்.
இவன் குழப்பத்துடன் பார்க்க, உதடுகளைக் கடித்து விடுவித்த அந்த வேலையாள்,
“ஐ ஆம் வில்லியம்… இஃப் யு நீட் மீ… கால் மீ…” என்று உடலை ஒரு மாதிரி நெளித்து வளைத்துக் கூற, அபராசிதனுக்குத் தலையைச் சுவரில் மோதவேண்டும் போலத் தோன்றியது. பொறுமை இழந்தவன்,
“நோ தங்க் யு… கெட் அவுட்” என்றதும் அந்த வேலையாளின் முகம் வாடிப் போனது.
“ஓகே…” என்றவன் ஏக்கத்துடன் அபராசிதனைப் பார்த்துவிட்டு வெளியேறக் கதவு தானாகச் சாற்றிக் கொண்டது.
அதுவரை தன் சித்தப்பிவின் கரங்களில் குரங்கு போலத் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை,
“பபா… ப்பா… பூ… பபா. ப்பா… பூ…” என்று தன் பாஷையில் தன் சாகசத்தைக் கூற, கரத்தில் இருந்த குழந்தையைக் கிட்டத்தட்டப் படுக்கையில் எறிந்தவன், தரையில் விழுந்து கிடந்த துவாயை எடுத்துத் திரும்பவும் தன் மானத்தை மறைத்துக் கொள்ள, குழந்தையோ மீண்டும் படுக்கையிலிருந்து இறங்கத் தொடங்கியது.
கீழே அவன் சிந்திச் சிதறிப் போட்ட பொருட்கள் எல்லாம் அப்படியே கிடக்க, எங்கே குழந்தைக்குக் காயம் பட்டு விடுமோ என்று அஞ்சியவனாக,
“ஆரா… நோ..” என்றவாறு அவனைத் தூக்கித் திரும்பவும் படுக்கையில் போட்டுவிட, மீண்டும் கீழே இறங்கியே தீருவேன் என்று துள்ளிக் கொண்டிருந்தான் குழந்தை.
“ஆரா… ஷ்… நோ…” சொன்னவன் குழந்தையைத் தூக்கிக் கொள்ள, அவனோ, மிச்ச மீதியையும் போட்டு உடைத்துவிட்டுத்தான் மறு வேலை என்கிற உறுதியோடு அவன் கரத்திலிருந்து இறங்கத் துடித்துக் கொண்டிருந்தது.
“அம்மாடி அம்மோ… டேய்… உன் அம்மா உன்னைப் பெற்றாளா…? இல்லை செய்தாளா…? இத்தனை துருதுரு என்று இருக்கிறாயே… நீ உன் அப்பனைக் கொண்டு பிறக்காமல், என்னைக் கொண்டு பிறந்துவிட்டாய்…” சொன்னவன் குழந்தையின் வயிற்றில் முகத்தைப் புதைத்து கிச்சு கிச்சு மூட்ட, குழந்தை பலமாகச் சிரிக்கத் தொடங்கியது.
எப்படியோ, குழந்தையைக் கீழே இறங்க விடாமல் கையில் வைத்தவாறே தானும் தயாராகி, குழந்தையையும் தயாராக்கி நிமிர்வதற்குள் மரதன் ஓடிய வீரன் போல வியர்த்து விறுவிறுத்துப் போனான்.
குழந்தையை அழைத்துச் சென்று ஈவாவிடம் கொடுத்துவிட்டுப் பத்துமுறை பத்திரம் கூறித் திரும்பவும் வண்டியை உயிர்ப்பித்து திகழ்வஞ்சியின் மருத்துவமனை நோக்கிவிட, இவனுடைய கைப்பேசி அழைத்தது.
அதை உயிர்ப்பித்துக் காதில் வைக்க, காவல் நிலையத்திலிருந்து அழைத்திருந்தார்கள்.
“சொல்லுங்கள் சார்…”
“அந்தக் கிறிஸ்டீனைப் பிடித்துவிட்டோம்..” சொன்னதுதான் தாமதம், உடனே காவல் நிலையத்தை நோக்கி வண்டியை விட்டான் அபராசிதன்.
(16)
பதினைந்தாவது நிமிடம் காவல்நிலையத்தில் வண்டியைத் தரிப்பிடத்தில் விட்டவன், ஒரு வித வெறியோடு உள்ளே சென்றான்.
அங்கே கையில் விலங்கோடு இருக்கை ஒன்றில் கிறிஸ்டீன் அமரவைக்கப்பட்டு இருந்தான்.
அவனைக் கண்டதுதான் தாமதம், எங்கிருந்து அவனுக்கு அத்தனை சீற்றம் வந்ததோ. தான் ஒரு மருத்துவன் என்பதையும் மறந்தவனாக, ஆவேசத்தோடு கிறிஸ்டீனை நெருங்கி, கண் இமைக்கும் நொடியில் அவனுடைய முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் அபராசிதன்.
அதைக் காவல் துறையினரும் எதிர்பார்க்க வில்லை.
அவன் குத்திய குத்தில் கிறிஸ்டீனின் மூக்கு உடைந்து இரத்தம் கொட்ட, அதைத் தொடர்ந்து இன்னொரு குத்து விட்டான் அபராசிதன்.
கிறிஸ்டீனின் முன்னிரு பற்களும் தரையில் கொட்டின. ஆனாலும் அபராசிதன் அடங்கினானில்லை. காவலதிகாரி கோன்வே மட்டும் அங்கே இல்லாமலிருந்திருந்தால், அபராசிதன் கிறிஸ்டீனின் உயிரை எடுத்திருப்பான். அந்தளவு ஆக்ரோஷத்தோடு திரும்பவும் கிறிஸ்டீனை நோக்கி முன்னேற,
“அபராசிதன்… என்ன காரியம் செய்கிறீர்கள்…” என்று பதறிய கோன்வே, அவனை இழுத்துச் சென்று தள்ளி விட, பின்னால் சென்று, அங்கிருந்த மேசை ஒன்றில் பலமாக மோதி நின்றான் அபராசிதன். ஆனாலும் தன் வெறிகொண்ட பார்வையைக் கிறிஸ்டீனிடமிருந்து இறக்கினானில்லை.
மூக்கு உடைபட்டு இரத்தம் கொட்ட நின்றிருந்த கிறிஸ்டீனையே இமைக்காது பார்த்தவனுக்குத் திரும்பவும் கோபம் சுனாமிப் பேரலையாகப் பொங்கி வந்தது.
“XXXXXX XXXX XXXX” சீறியவன் தீரும்ப அவனை நோக்கிப் பாய குறுக்கு வந்து நின்றார் கோன்வே.
“டாக்டர் அபராசிதன்… இப்படித்தான் நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று தெரிந்திருந்தால், உங்களுக்கு இவன் பிடிபட்டிருந்த செய்தியை சொல்லியிருக்கவே மாட்டேன். இது குற்றம்… இதற்காகவே உங்களைக் கைதுசெய்ய என்னால் முடியும்…” என்று கோபத்துடன் சொல்ல, கோன்வேயை ஆத்திரத்தோடு வெறித்தான் அபராசிதன்.
“தயவு செய்து என்னைக் கைதி செய்து, அவனை அடைக்கும் அதே சிறையில் அடைத்து விடுங்கள்… ஒரு பெண்ணிடம் தன் வீரத்தைக் காட்டிய இவனுக்கு, ஒரு ஆணுடைய பலம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறேன்…” சொன்னவனின் நிலையைப் புரிந்து கொண்ட கோன்வே அவனைச் சமாதானப் படுத்த முயன்றார்.
“பிளீஸ் அபராசிதன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்…”
“பொறுமையாக இருப்பதா…? எப்படி…? எப்படிப் பொறுமையாக இருக்கச் சொல்கிறீர்கள்?” என்றவன் இரண்டு விரல்களைத் தூக்கிக் காட்டி,
“இரண்டு அங்குலம் ஆஃபிசர்… இரண்டு அங்குலம்… மேலே ஏற்றிக் குத்தியிருந்தால், ஒரு குழந்தை தன் தாயை இழந்திருக்கும்… இதில் உடலில் எல்லா இடங்களிலும் காயம்… அவள் படும் வலி, வேதனைக்கு யார் பதில் சொல்வார்கள்…? இவனா?” என்று சீறியவன், திரும்பவும் கிறிஸ்டீன் மீது பாய முயல, திரும்பவும் அவனைப் பிடித்துத் தடுத்தார் காவலதிகாரி.
“உங்களுடைய கோபம் எனக்குப் புரிகிறது அபராசிதன். மனதுக்குப் பிடித்தவர்களை யாராவது காயம் படுத்தினால், இப்படிக் கோபம் வரத்தான் செய்யும். ஆனால்… கிறிஸ்டீன் இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறான். அவனைத் தாக்குவதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை.” என்றவர் அவனுடைய தோளைத் தட்டிக் கொடுத்து,
“கவலைப் படாதீர்கள் டாக்டர். இவனுக்கு நாங்கள் பொறுப்பு.” என்று அவர் சொல்ல, அபராசிதனோ அவர் கடைசியாகச் சொன்ன எதையும் மண்டைக்குள் ஏற்றாமல், அவர் சொன்ன ‘மனதுக்குப் பிடித்தவர்களை யாராவது காயப் படுத்தினால் இப்படிக் கோபம் வரத்தான் செய்யும்…’ என்பதிலேயே ஆணியடித்தாற்போல நின்றிருந்தான் அவன்.
மனதுக்குப் பிடித்தவளா? பார்த்து வெறும் மூன்று நாட்களே ஆன அவள் மனதுக்குப் பிடித்தவளா? சீ சீ… அவளைப் போய்.. வாயிருந்தால் எதுவும் பேசலாம் போல.
அதுசரி…? நான் ஏன் இந்தளவு கோபப் படுகிறேன்? எதற்குக் கிறிஸ்டீனைக் கொல்லத் துடிக்கிறேன்? சொல்லப்போனால் கிறிஸ்டீனின் கையைப் பற்றிக் குலுக்கி நன்றியல்லவா சொல்ல வேண்டும்? எந்தச் சிக்கலும் இன்றிக் குழந்தையை அவன் கூட அழைத்துச் சென்றுவிடுவானே? என் அண்ணனின் வாழ்க்கையை அழித்தவள், தொலைத்தாள் என்றல்லவா மகிழ்ந்திருக்க வேண்டும்? ஆனால் அப்படி எந்த மகிழ்ச்சியும் தோன்றவில்லையே? மாறாக உள்ளே எதுவோ கிடந்து தவிக்கிறதே. இதற்கெல்லாம் காரணம், அவர் சொல்வது போல அந்தப் பெண் என் மனதிற்குள் புகுந்துவிட்டாளா?” அமலனைப் போல நானும், அவளுடைய வலையில் விழுந்து விட்டேனா… நினைத்தவன் விதிர் விதிர்த்துப் போனான்.
‘நோ… நோ.. நான் அபராசிதன். அத்தனை சுலபத்தில் என்னை மயக்க யாராலும் முடியாது. அவன் இத்தனை பதறுவதற்குக் காரணம்… காரணம்…” என்று எண்ணியவன் அதற்கான காரணம் புரியாமல் குழம்பினான். அவனுக்கே அவனைப் புரியாது போகக் குழம்பிப்போய் நின்றான்.
திடீர் என்று அவன் அமைதியாகிப் போனதைக் கண்ட கோன்வே அவனுடைய தோளில் கரம் பதித்து,
“டாக்டர் அபராசிதன்…!” என்று அழைக்கத் திடுக்கிட்டு விழித்தான் அவன். சூழ்நிலை உறைக்க.
“சா.. சாரி ஆபீசர்…” என்றவன், அந்த கிறிஸ்டீனை முறைத்துப் பார்த்துவிட்டு,
“இவனைப் பிடித்ததற்கு நன்றி. என்னை மன்னித்து விடுங்கள். கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்…” என்றதும் அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்தவர்,
“புரிகிறது… இதை நான் பார்த்துக் கொள்கிறேன். கனடிய சட்டத்தில், குற்றத்திற்கு இடமில்லை… பயப்படாமல் போய் வாருங்கள். ஏதாவது தேவை என்றால் உங்களை அழைக்கிறேன்…” அவர் சொல்ல, நன்றியுடன் விடைபெற்றான் அபராசிதன்.
அவன் ஆத்திரத்தோடு கிறிஸ்டீனைக் காயப் படுத்தியிருந்தாலும் அதில் அவனுக்குச் சுத்தமாகத் திருப்தியில்லை. இன்னும் இரண்டு குத்துக் கொடுத்திருந்தால், மனது சமாதானப் பட்டிருக்கும்.
எப்படியோ மருத்துவமனை வந்து சேர்ந்தவன், நேராக அவளுடைய அறைக்குப் போவதற்கு முதல், தாதியையும், வைத்தியரையும் பார்த்துப் பேசினான். அவளுடைய அறிக்கையைக் கொடுக்க முடியுமா என்று கேட்க, மறுக்காமல் அவனிடம் கொடுக்க, நிதானமாகப் படித்தான்.
அவர்கள் சொன்னது போல, எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. பயப்படும்படி எதுவும் இல்லை. கொடுக்கப்பட்ட மாத்திரைகளும் நல்லனவே. நிம்மதி மூச்சொன்றை விட்டவன், திகழ்வஞ்சியின் அறைக்குள் நுழைந்தான்.
கதவு தட்டும் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள் திகழ்வஞ்சி. அழுதிருக்கிறாள் போல, கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது.
வாசலில் நின்றிருந்த அபராசிதனைக் கண்டவள், அவனுடைய கரத்தை ஆவலாகப் பார்த்தாள். குழந்தையை அவன் அழைத்து வரவில்லை. உடனே முகம் வாடியவள்,
“ஆரா எங்கே? அவனை ஏன் அழைத்து வரவில்லையா?” என்றாள் ஏக்கமாக.
“எதற்கு? உன்னை இந்த நிலையில் பார்த்து அவன் பயப்படவா? முதலில் காயத்தின் வலி கொஞ்சமாவது மட்டுப்படட்டும்… அதற்குப் பிறகு அவனை அழைத்து வருகிறேன்..” அவன் சொல்ல, முகம் வேதனையில் கசங்கியது அவளுக்கு.
“ஆரா என்னைத் தேடவில்லையா?” கேட்டவளின் கண்கள் சட்டென்று கலங்கிப் போக,
“காலை எழுந்ததும் அழுதான். பசிக்குப் பால் கொடுத்தேன். குடித்துவிட்டு விளையாடத் தொடங்கி விட்டான். அவள் சொல்லப் பெரும் ஏமாற்றமாக உணர்ந்தாள் திகழ்வஞ்சி.
அப்படியென்றால், அவளுடைய மகன், அவள் இல்லாமலும் இருப்பானா? நெஞ்சம் துடித்தது அவளுக்கு. அவன் அழைத்து வராதபோதே இத்தனை ஏமாற்றமாக இருக்கிறதே. அப்படியிருக்கையில் நிரந்தரமாக என் குழந்தையை நீயே வைத்துக் கொள் என்று எப்படிச் சொல்லப்போகிறாள்?
ஆம் திகழ்வஞ்சி குழந்தையை அவனிடமே ஒப்படைத்துவிட முடிவுசெய்திருந்தாள். அந்த முடிவு தான் இப்போது அவளைக் கொல்லாமல் கொன்று தின்கிறது.
முன்னிரவு அவள் உறக்கத்திலிருந்த போது, திடீர் என்று அந்தக் கிறிஸ்டீன் ஜன்னலின் வழியாகக் கீழே குதித்து அவளை மீண்டும் கத்தியால் குத்துவது போலக் கனவு வரத் திடுக்கிட்டு எழுந்து விட்டாள். துல்லியமான அந்தக் கனவில் ஆடிப் போனவளுக்கு உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டியது. அதற்குப் பிறகு தூக்கம் சுத்தமாக வரவில்லை. ஆனால் நிறைய யோசித்தாள்.
இரவு பிசாசுகளின் நேரம் என்பார்கள். அதே போல முன்தினம் இரவு அவளுடைய மனதிலும் பெரிய பிசாசு வந்து ஒட்டிக் கொண்டது போல. எதை எதையோ யோசிக்க வைத்தன.
தப்பியோடிய கிறிஸ்டீன் திரும்ப வந்து விட்டால்? அவளைப் பழிவாங்குவதாக நினைத்து, குழந்தையைப் பழிவாங்கி விட்டால்? ஐயோ…! அதற்குப் பிறகு அவள் எப்படி உயிரோடு இருப்பாள்? இவள் வேறு பிடிவாதமாக குழந்தை வேண்டுமானால் இவளையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டாள். அந்தக் கிறிஸ்டீன் இவள் பின்னால் போகும் இடத்திற்கெல்லாம் வந்து விட்டால்? அவளுக்கு மட்டும் அபத்தில்லையே, அவளைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் அல்லவா சிக்கலாகிப் போகும்! அவளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால் ஆராவுக்கு ஒன்று நடந்தால்? நினைக்கும் போதே தேகம் நடுங்கியது திகழ்வஞ்சிக்கு.
கூடவே அவளுடைய வரலாறும் அவள் அன்பு மகனின் வாழ்க்கையை அழிக்கும். அது சாகும் வரைக்கும் அவனைப் பின்தொடர்ந்து வதைக்கும். ஒரு நாள் இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் அவனுடைய தாய் பணத்துக்காக ஒருத்தன் கூடப் படுத்து எழுந்துதான் தன்னைச் சுமந்து பெற்றாள் என்று தெரிந்தால், இவளை வெறுத்து ஒதுக்கிவிட மாட்டானா? இவளைப் புழுப்போலப் பார்க்க மாட்டானா? நீயெல்லாம் ஒரு பெண்தானா என்று கேட்க மாட்டானா? அந்த நினைப்பு இவளைத் துடிக்க வைக்க, உள்ளூர உடைந்து போனாள் திகழ்வஞ்சி.
பேதலித்த மனம் எதை எதையோ கற்பனை செய்து தவித்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் திகழ்வஞ்சி.
அது, அபராசிதன் கேட்டது போலக் குழந்தையை மட்டும் அவனிடம் கொடுத்துவிடுவது என்று. அவள்தான் சீரழிகிறாள். அவளுடைய குழந்தை ஏன் வருந்த வேண்டும். இத்தனைக்கும் வளமான எதிர்காலம் அவனுக்குக் காத்திருக்கிற போது, அதைத் தட்டிப்பறிக்க இவளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவன் போகும் இடம் ஒன்றும் சாதாரண இடமில்லையே. அவன் தந்தை வழி சொத்து நிச்சயமாக அவனை நன்றாக வைத்திருக்கும்… இப்படி ஏதேதோ யோசித்தவள், கடைசியாக ஆராவமுதனை அவனிடம் ஒப்படைத்து விட்டு விலகி விடுவது என்று தீர்மானித்தாள். விடிந்ததுமே அபராசிதனின் வருகைக்காக இதயத்தில் இரத்தம் கசியக் காத்திருந்தாள் திகழ்வஞ்சி.
இதோ வந்துவிட்டான். ஆனால் அவள் எடுத்த முடிவைச் சொல்ல முடியாது நெஞ்சம் வேதனையில் கசங்கித் தவித்தது.
முடிவைச் சுலபமாக எடுத்துவிட்டாள். ஆனால் அதை எப்படிச் சொல்வாள். சொல்ல அவளுடைய நா எப்படி அசையும்?
இதோ குழந்தையை அவன் அழைத்து வராத போதே அவனைக் காண முடியாமல் நெஞ்சம் இப்படிக் கசங்கித் துடிக்கிறதே, அப்படி இருக்கையில், நிரந்தரமாகக் குழந்தையைக் கொடுத்து விட்டு உயிர்வாழ்வது சாத்தியமா?
சாத்தியமில்லைதான்! ஆனால் வேறு வழி? ஆராவின் வளமான எதிர்காலத்திற்காக அவள் இந்தத் தியாகத்தைச் செய்துதான் ஆகவேண்டும். விழிகளை மூடி ஆழ மூச்செடுத்துத் தன் வலியை விழுங்கிய நேரம், அவளையே பார்த்திருந்த அபராசிதனுக்கும் மனது சுட்டது. பெற்ற தாயிடம் இருந்து குழந்தையைப் பிரிப்பது எத்தனை பெரிய பாவம் என்பதைப் புரிந்து கொள்ளாதவனா அவன். ஆனால் அவனுக்கும் வேறு வழியில்லையே.
“குழந்தையைப் பார்க்காமல் உனக்கு அதிகம் சிரமமாகத்தான் இருக்கும் என்று எனக்குப் புரிகிறது. ஆனால், அவனை மருத்துவமனைக்கு அழைத்து வருவது அத்தனை புத்திசாலித்தனம் இல்லை. நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்…” அவன் சொல்ல, சிரமப்பட்டுத் தன் வலியை மறைத்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இல்லை… ஆரா வராததும் ஒரு வகையில் நல்லதுதான்…” என்றாள் பெரும் வலியோடு. அவனோ பதில் சொல்லாது அவளைப் பார்க்க, திகழ்வஞ்சி சிரமப்பட்டு எழுந்து சாய்வாகப் படுக்கையில் அமர்ந்தவள், அவனைப் பார்த்து,
“யு ஆர் ரைட்…” என்றாள் முனங்கலாக.
அவனோ புரியாமல் அவளைப் பார்க்க,
“நான்… இரவு முழுவதும் யோசித்தேன்… நேற்றைய சம்பவத்திற்குப் பிறகு, நான்… நான் வந்து… ஆரா… அது வந்து…” தடுமாறியவளுக்குக் குழந்தையை மட்டும் அழைத்துச் செல்ல சம்மதிக்கிறேன் என்று சொல்ல வாய் வர மறுத்தது. நெஞ்சு வரை வந்துவிட்ட வார்த்தைகள் அதீத தவிப்பில் தொண்டையை விட்டு நகர மறுத்தன. திக்கினாள் திணறினாள். அவளுடைய நிலை அவனை அசைத்துப் பார்த்ததோ, நடந்து சென்றவன், அங்கிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவளிடம் நீட்டி,
“தண்ணீரைக் குடி…” அவன் சொல்ல, நடுங்கும் கரங்களால் தண்ணீர் போத்தலை வாங்கியவள் அதன் மூடியைத் திறக்க முயன்றாள். சின்ன அசைவும் காயத்தில் பெரும் வலியைக் கொடுக்க,
“ஷ்… ஆ…” என்றவாறு மூடியைத் திறக்க முயன்ற கரத்தால் காயத்தை அழுத்த, உடனே அவளுடைய கரத்திலிருந்த போத்தலை வாங்கியவன், தானே திறந்து நீட்ட வாங்கியவள், உதட்டோரம் தண்ணீர் வழிவதைக் கூடப் பொருட்படுத்தாமல் வாயில் ஊற்றிவிட்டு மீண்டும் அமைதியானாள்.
“திகழ் உனக்கு எப்படியோ, எனக்கு ஆயிரம் வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. இங்கிருந்து நீ என்ன பேசப்போகிறாய் என்று கேட்டுத் தெளியும் வரைக்கும் சும்மா இங்கேயே உட்கார்ந்து இருக்க முடியாது. தயவு செய்து எதுவாக இருந்தாலும், தெளிவாகச் சொன்னால், அடுத்து செய்ய வேண்டியதைச் செய்யக் கிளம்பிவிடுவேன்…” என்றவனை வலியோடு பார்த்தவள், ஆழ மூச்செடுத்து,
“நீங்கள் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்” என்றாள் இறுக்கமாக.
“இதை நீ சம்மதித்தாலும் சம்மதிக்கவில்லை என்றாலும் அதைத்தான் செய்யப் போகிறேன்…” கறாராகச் சொன்னவனை மறுப்பாகப் பார்த்தவள்,
“இல்லை… ஆராவை அழைத்துச் செல்வதாக இருந்தால், நானும் வருவதாகச் சொன்னேன்…” என்றவள் உமிழ் நீர் கூட்டி விழுங்கிவிட்டு, “இப்போது யோசிக்கிற போது, அவன் உங்கள் கூட வருவதுதான் சரி என்று படுகிறது. நீங்கள் குழந்தையை அழைத்துச் செல்ல நான் சம்… சம்மதிக்கிறேன்” என்றவளைப் புருவங்கள் சுருங்கப் பார்த்தான் அபராசிதன்.
“என்ன திடீர் ஞானோதயம்…” அவனுடைய குரலில் மெல்லிய கிண்டல் தொனித்ததோ, அவனுடைய அந்தக் கிண்டல் இவளை வலிக்க வைக்க, முகம் கசங்கினாள் திகழ்வஞ்சி.
“ம்… ஞானோதயம்தான்… பட்டுத் தெளிந்ததால் வந்த ஞானோதயம்…! ஆராவின் இறந்த காலம் தான் சரியில்லை. நிகழ்காலமாவது நல்லதாக அமையட்டும்…” என்றவள், கண்களில் கண்ணீர் குளம் கட்ட. “முழுச் சம்மதத்தோடு சொல்கிறேன்… அவனை உங்கள் கூடவே கூட்டிப் போங்கள்…” என்றபோதே அவளுடைய குரல் கரகரக்கத் தொடங்கி விட்டது. அதை இருமிச் சமப்படுத்தியவள், “நா.. நான் குறுக்கே வரமாட்டேன்…” என்றாள் திக்கித் திணறி.
அவள் சொல்லி முடித்ததும், முழு நிமிடங்கள் அவளைப் பார்த்தவன், பின் என்ன நினைத்தானோ,
“இரவு நீ தூங்கவில்லையா?” கேட்டான் சம்பந்தமில்லாமல்.
நான் என்ன சொல்கிறேன், நீ என்ன கேட்கிறாய்? என்பது போல அவனை வெறிக்க,
“நீ இப்போது உன் நிலையில் இல்லை திகழ்… உடல் வலியோடு உள வலியும் சேர்ந்து உன்னைத் தூங்கவிடாமல் செய்து எதை எதையோ யோசிக்க வைக்கிறது. இந்த நேரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்காது. எதுவாக இருந்தாலும், பிறகு யோசித்து முடிவு எடுக்கலாம்… இப்போது படுத்துக் கொஞ்சம் ஓய்வெடு…” சொன்னவனை மறுப்பாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“இல்லை… அபராசிதன். நான் தெளிவாக நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தேன். அவனுடைய தாயின் இறந்த காலம் பின்னாளில் அவனை அசிங்கமாகத் துரத்தலாம்… எள்ளி நகையாடலாம். அதுவே அவனுடைய மனத் தைரியத்தைக் குறைக்க ஏதுவாகலாம். குழந்தையின் பிறப்புச் சரியாக இருந்தால் மட்டும்தான், அந்தக் குழந்தையை ஒரு சமுகம் நிலையாகத் தூக்கி நிறுத்தும். இல்லையா காலில் போட்டு மிதிக்கும். என் அரா அத்தகைய ஒரு இழிநிலைக்குத் தள்ளப்பட வேண்டாம். அது பின்னாளில் அவனைத் திருடனாகவோ, இல்லை சமுகத்திற்கு ஒவ்வாத செயலைச் செய்யும் சமூக விரோதியாகவோ மாற்றிவிடும். என் பிள்ளை நன்றாக இருக்கட்டும்… என்னால் அவனுடைய எதிர்காலம் நாசமாகவேண்டாம்…! என்னுடைய பிடிவாதம், அவனுடைய எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க வேண்டாம்…” சொன்னவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான் அபராசிதன்.
அவள் குழந்தையை அழைத்துச் செல் என்று சொன்னபோது இவனுக்கு ஏன் அது பெரிதாகச் சுவைக்கவில்லை? சொல்லப்போனால் மகிழ்ச்சி தானே தோன்றவேண்டும்? ஆனால் அது பிடிக்க வில்லையே? தவிர ஆராவை கொடுத்துவிட்டு இவள் தனியாக இங்கேயிருந்து என்ன செய்வாள்? திரும்ப அந்தக் கிறிஸ்டீனாலோ, இல்லை அவனுடைய நண்பர்களாலோ இவளுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் எப்படிச் சமாளிப்பாள்? அவசரமாக எண்ணித் தவித்தது மனது.
“நல்ல யோசனைதான்… பட்… ஆராவமுதனை என்னுடன் அனுப்பிவிட்டு நீ எப்படி இருப்பாய்?”
“அதே மாற்றமில்லாத கேள்வி. இந்தக் கேள்வியை அவளே அவளிடம் பலமுறை கேட்டு விட்டாள். ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை. அவனில்லாத வாழ்க்கை பாலைவனம் என்பது நன்கு புரிந்தாலும், ஆராவமுதனின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமானால், சில தியாகங்கள் செய்யத்தானே வேண்டும்…
“நான்… நான்…” அதற்குமேல் வார்ததை வராது உதடு நடுங்க, அவனைப் பார்த்தவள் அவனது உருவத்தை மறைத்துக் கண்ணீர் பொங்க, தன் பலவீனத்தை அவன் பார்க்கக்கூடாது என்கிற எண்ணத்தில், தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“சொல் திகழ்வஞ்சி…! உன் மகனை என்னுடன் அனுப்பிவிட்டு நீ என்ன செய்யப்போகிறாய்? அமலன் போல இன்னொருத்தனின் வாழ்க்கையைக் கெடுக்கப் போகிறாயா? திரும்ப இதே நாடகமா? இல்லை அவனை என்னோடு அனுப்புவது போல அனுப்பிவிட்டு, அமலனின் சொத்துக்கள் அவனுக்கு வந்ததும், திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளும் நோக்கமா?” என்று எகத்தாளமாகக் கேட்க விரக்தியுடன் சிரித்தாள் அவள்.
அவன் வார்த்தைகள் அனைத்தும் இதயத்தைச் சுடத்தான் செய்கிறது. எரித்துச் சாம்பலாக்கத்தான் முயல்கிறது. ஆனால் அது பயனற்றது என்று தெரியாமல் பேசுகிறான். பாவம். வலியோடு அவனைப் பார்த்தவள்,
“நான் செத்த பாம்பு என்று தெரியாமல் வார்த்தைகளால் அடிக்கிறீர்கள் அபராசிதன். சத்தியமாக வலிக்கவில்லை…” என்றவள் அவனைச் சோர்வோடு பார்த்தாள்.
“இனி இங்கே வராதீர்கள்… குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றுவிடுங்கள்… யார் கேட்டாலும் தாயும் தந்தையும் விபத்தில் இறந்து விட்டதாகச் சொல்லுங்கள்…” என்றவள் வெடித்துச் சிதறும் இதயத்தை அவனுக்கு மறைத்தவாறு படுக்கையில் சரிந்து படுத்து, தன் அழுகையை அவனுக்குக் காட்டாது போர்வையால் முகத்தை மூடி விசும்பத் தொடங்க, அவளையே சற்று நேரம் பார்த்திருந்தவன், அதற்கு மேல் எதையும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
😭😭😭😭
என்றாளை அழவக்கிறானே🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
ஆராக்குட்டி இப்பவே உன்ற சொத்தப்பனோட மானத்தை எங்கோ மனம் பறக்குதுங்கிற மாதிரி செஞ்சியே அதேமாதிரி என்ற அம்மாகிட்ட இருந்து எப்படி என்னையப் பிரிக்கலாம் ன்னு கேட்டு சொத்தப்பங்காரனோட மண்டை முடிய ஆய்ஞ்சு எடுத்துரு😤😤😤😤😤😤😤😤😤😤
🤣🤣🤣🤣🤣பலமா சிரிச்சிட்டேன்யா. நாங்க சித்தபனோட மானத்தை வாங்கிறது போல அம்மா மானத்தையும் வாங்குவோம். பாருங்க.
Very painful decision.wow awesome
நன்றி நன்றி. நிச்சயமா அவளுக்கு சிரமமாதான் இருக்கும்.
பாவம் திகழ்
ரொம்ப பாவம்பா