Wed. Oct 22nd, 2025

தாமரையின் நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே -6

NPNN 6

 

ஏஏஏஏஏஏ என்ற அதிரும் ஒலியுடன் டமடமவென்ற பறை சத்தமும் தொடர்ந்து குலவை சத்தம் வர.. நீள் இருக்கையில் அமர்ந்தவாறு தன் அலை பேசியில் ஏதோ அவசரமாக தட்டச்சிக் கொண்டிருந்த மஞ்சரி, நெஞ்சில் கை வைத்தவாறு நிமிர்ந்து பார்த்தாள்.

 

 

வாசலில் இருந்த குழாயில் கைகால் அலம்பிக் கொண்டிருந்த மகிழ்வேந்தனின் அலைபேசியில் இருந்துதான் அந்த சத்தம். உள்ளிருந்த வராந்தாவின் இருக்கையின் மீது வைத்து விட்டு கைகால் கழுவுவது அவனின் வழக்கம்..

 

“அம்மன் கோயில் வாசலிலே..ஏ.

வாசலிலே..ஏ.ஏ.ஏ..

தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே..ஏ.

பூங்குயிலே..ஏ.ஏ.ஏ..

 

ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு

இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு

இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு

நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு..”

 

இசையும் குரலும் அந்த சிறு இடத்துக்குள் எதிரொலித்து கிடுகிடுக்க செய்ய,

உடன் சேர்ந்து பாடியவாறு கைகளை துடைத்து வந்தவன்,

 

மூக்கை சுருக்கி முறைத்தவாறு இருந்தவளை பார்த்தவுடன் சிரிப்பு விரிய அலைபேசியை எடுத்தான்.

 

 

“ஏ.. கார்த்தி சொகமா இருக்கியாடே.. அக்கா , பொண்ணுக்குட்டி சொகமா?” என..

 

மறுபுறம் பதில் கூறியவன் என்ன சொன்னானோ.. உரக்க சிரித்தவன்..

” உன்னைய பேர் சொல்லுறேன்.. நாம ஒன்னா வளந்தவக, ஒன் பொண்டாட்டிய அக்கான்னா, அவங்க என்ன விட இரண்டு வருஷம் பெரியவங்க டே.. சரி சரி மரியாதைக் களுதையெல்லா தானா வரணும் கட்டி இழுத்தா வராது கேட்டியாடே.. ” என்றவன்,

 

பெரிய மாமாவா, ஆஸ்பத்திரி போனவங்க இன்னும் வரல. ஆங்.. அத்தைக்கு நல்லாருக்கு. பேத்திய பாக்கப் போற சந்தோசம் வேற, நீ வரங்குள்ள நடமாடிருவாக. ஆங்.. அவட்டையா , நானா… சரி சொல்லிடுறேன். எல்லாம் பாத்துக்கிடலாம்.. வந்ததும் பேசச் சொல்றேன். சரி வீடியோ கால் பண்ணிடலாம். ” என்றான்.

 

 

தன்னை முறைத்து புசுபுசுவென மூச்சுவிடுபவளைக் கண்டவன் இன்னமும் சிரிப்பு விரிய,

 

“என்ன டீச்சரம்மா பாசமா பாக்குறே.. அத்தான் அம்புட்டு அழகாவா இருக்கேன்.. ” என்றவாறு அங்கிருந்த கண்ணாடி பார்த்து மீசை முறுக்க

 

“அய்யே.. முறைக்கிறதுக்கும் பாக்கறதுக்கும் வித்யாசம் தெரியல..? அங்… உங்களுக்குன்னு எங்கேருந்து பாட்டு கெடைக்குது. ரிங் டோன்.. ஒரு நிமிசம் மூச்சு நின்னுட்டது..”

 

 

ஹா ஹா என நகைத்தவன், “இம்புட்டு பயந்தாங்கோழியா இருக்கவ என்னெண்டு அத்தனை ஆம்பள, பொம்பளப் புள்ளைகளை கட்டி மேய்க்கறவேன்னு தெரியலையே.. ” எனக் கிண்டலடித்தவன்..

சுற்றி பார்த்து , ” சரி சரி எங்க நீலூ.. வீட்ல இல்லியா.. இருந்திருந்தா இந்நேரம் ஓடி வந்து அத்தான் சாப்படறீங்களான்னு கேட்ருப்பா.. ”

 

முறைத்தவாறே.. “டவுனுக்கு போயிருக்கா.. அத்தை கூட போயிருக்காங்க.. கம்பஞ்சோறு இருக்கு, சாப்பிடுங்க. நா முக்கியமான வேலையா இருக்கேன்.” என்றவளின் பேச்சைக் கேட்டவாறே உணவு மேசை நோக்கி நடந்திருந்தவன் வழக்கம் போல தானே எடுத்து பரிமாறிக் கொண்டு உண்ணத் தொடங்கினான்.

 

சில நொடிகள் கழித்து நிமிர்ந்து பார்த்தவள் அவன் தொட்டுக் கொள்ள ஏதும் இல்லாமல் உண்பதை கவனித்து நாக்கைக் கடித்துக் கொண்டவளாய் எழுந்து அவசரமாய் சமையலறை சென்று நீலாம்பரி வறுத்து வைத்து விட்டுப் போயிருந்த கருவாட்டினை எடுத்துக் கொண்டு வந்து அவனருகில் வைத்தாள்.

 

 

“ஆங் அதானே.. காணோமேன்னு பாத்தேன். நீலு நீலுதான்.” எனவும்

 

உதட்டைக் கோணி வக்களம் காட்டியவள் கையை நன்கு கழுவி விட்டு மீண்டும் அலைபேசி எடுக்க..

 

டப்பா திறந்து முகர்ந்து பார்த்தவன், “ஹூம்.. பிஸிக்ஸ் டீச்சருக்கு தெரியுமா கருவாடு வாசனை, ரசனை இல்லாத.. ஹூம்.” என்றவாறு சாப்பிட..

 

 

“எதே.. ரசனையா.. நாத்தம்… அத.. ரத்த செவப்புல சட்டை ஸ்கை ப்ளூல பேண்ட் போட்ருக்க நீங்க பேசக் கூடாது.. ” என்று மூக்கு விடைத்தவள்,

 

அவனின் சிரிப்பு அதிகமாவது கண்டு வேகமாக தனது அறைக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டாள்.

 

உணவு உண்டவாறே ஏதோ நினைத்து புன்னகை புரிந்தவன், “ஏ டீச்சரூ.. சீக்கிரம் இந்தி கத்துக்கோ.. என்னா..”

 

அவனின் குரல் கேட்டு புருவம் சுருக்கியவள்.. “ஏது ஹிந்தியா ? ஏன் என்னவாம்.. எனக்கு புடிக்காது.. தேவையே இல்ல.. ”

 

 

“ஆங் இப்படித்தா சொல்லுவ.. ஆரு கண்டா எதிர்காலத்தில இந்திலேயே பொளந்து கட்டுவியா இருக்கும்! ” என்று சொன்னவாறு வேகமாக உண்டு கொண்டிருக்க..

 

இவன் ஏதும் விளையாட்டுக்கு சொல்லும் ஆள் இல்லியே, என்ற நினைப்பில் புருவம் நெரிய அவனைப் பார்த்தவள், அவன் மேலும் சிரிப்பது கண்டு.. என்னவோ ஆகிடுச்சு.. இந்த ராமராஜனுக்கு.. என்று மனதிற்குள் திட்டியவளாய், தனது வேலையைத் தொடர்ந்தாள்.

 

 

அப்போது நெல்லையப்பரின் கை தாங்கிப் பிடித்தபடி சிவகாமி அம்மா உள்ளே வர , அவர்களைத் தொடர்ந்து, வசூலுக்கு சென்றிருந்த சிவந்தியப்பரும் வீட்டினுள் நுழைந்தனர்.

 

 

வரவேற்பாய் தலையசைத்தாவறே எழுந்தவன், “அத்தைக்கு டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.

 

சோகையாய் சிரித்தவர், “ஆங் வழக்கம் போல படுக்கையிலேயே கிடக்க சொல்றாங்க. செக்கப்பு போகனுமாம். எச்சச்ஸ் பண்ணனுமாம் ஆனா எல்லாம் உட்கார்ந்துட்டு படுத்துட்டு பண்ணனுமாம். எவ்வளவு காலம் வண்டி ஓடுது பாப்போம். ” என்றவர் மெதுவாக வந்து அமர்ந்து கொள்ள,

 

அவசரமாய் வந்த தேவ மஞ்சரி பெரியன்னைக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

 

அவளையே வாஞ்சையாய் பார்த்தவர், ந “ஹூம் இந்த பிள்ளைகள் கல்யாணம், அதுங்க பிள்ளை குட்டிகள பாக்கும் வரை நடமாடத் தெம்பு இருந்தா போதும்.. அப்புறம்..” என்றவாறு கையினை மேலும் கீழுமாய் அலைக்க, அவரின் முன்பு அமர்ந்தவன்.. அவரின் மெலிந்த கைகளை அழுத்தி, “அதெல்லாம் பல வருசம் நல்லா திடம்மா இருப்பீங்க அத்தே..” என்றான்.

 

அவனின் கைகளை பற்றிக் கொண்டவர், ” நா இருக்கது இருக்கட்டு. நாலு மாசம் முடிஞ்சப்பறம் தான் கல்யாணம் பற்றிப் பேசனும்னு அத்தை சொன்னாங்களாம். நீ இந்த அத்தைக்காக அதுக்கு மேல நாளு கடத்தாம கல்யாணம் பண்ணிக்கனும் கேட்டியா. அப்பவே அடுத்த முகூர்த்தத்திலேயே சின்ன தங்கத்துக்கும் கல்யாணம் வச்சிடனும் என்ன தம்பி?” என்றார்.

 

அங்கு வந்த சிவந்தியப்பரை பார்த்து , சரிதானே தம்பி எனவும்

அண்ணியின் பேச்சு புரியாமல் அண்ணன் நெல்லையப்பரை பார்க்க, ஆமோதிப்பாய் தலையசைத்தவர்,

“இரு.. முக்கியமான விஷயம், அம்மாவையும் கூட்டியாறனும்.. அம்மச்சிய கூட்டி வா வேந்தா.” எனவும்

 

ஆச்சரியமாக பார்த்தபடி அவர் சொல்படி செய்தான். எழுபதை நெருங்கும்

பாட்டி உலக நாயகி திடமாய் நடந்து வந்து அமர்ந்ததும்,

 

நெல்லையப்பர், “அம்மா தம்பி கேட்டுக்கிடுங்க. நம்ம மஞ்சரிக்கு கார்த்தி ஒரு எடம் கொண்டாந்துருக்கான். அவன் கூட பேங்குல ஆனா அவனை விட பெரிய வேல பாக்க பையனாம். நாங்குநேரிக்காரங்க தானாம். ஆனா பொறப்பு வளர்ப்பு எல்லாம் பம்பாயாம்.. நட்சத்திரம் ஜாதகம் எல்லாம் நல்லா பொருத்தமா இருக்கு.. கார்த்தி இங்கே இருக்க சமயம் பொண்ணு பாக்க வரலாமா கேட்ருக்காங்க.. என்ன சொல்றீங்க..” என்றவர் மகிழ் வேந்தனிடம், “வேந்தா! மாப்பிள்ளை ஃபோட்டோ காட்டு.” எனவும்

 

சிரித்தவாறே தனது அலைபேசி எடுத்துக் காட்டினான்.

 

 

இவர்கள் பக்கம் இல்லாத சற்றே வெளுப்பான நிறத்தில் அழகான நீலமும் வெள்ளையுமாய் இருந்த சட்டை அணிந்து இருந்த கண்ணாடி அணிந்திருந்த வாலிபன் அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

 

“ஏ டீச்சரூ.. மாப்பிள்ளய நல்லா பாத்துக்கிடு. பேரு கிஷோர் தேவ்.. தேவ் , தேவ மஞ்சரி பேர் பொருத்தம் ப்ரமாதம் போ..” என்று அகலமாய் சிரித்த வேந்தனை வெறித்துப் பார்த்தவள், தன் தகப்பன் பெரிய தகப்பனை மாறி மாறி பார்த்தாள்.

 

“ஏ.. ஏன் பெரிப்பா .. திடீர்னு.. என் கல்யாணத்துக்கு என்ன அவசரம். அதும் மும்பையா?” என்று கலங்கிய குரலில் சொல்ல..

 

அவளை கையசைவில் தன் பக்கம் வரவைத்து அமர்த்திய சிவகாமி, ” நான் தான்டா தங்கம் நல்ல இடம் வந்தா பாக்க சொன்னேன். காரணம் தா உங்களுக்கு தெரியுமில்ல. மாப்பிள்ளய பாரு.. நேர்ல வர்றாங்கல்ல.. பேசி பாரு பிடிச்சா செய்வோம் .. என்னா.. என்றவர், அவளின் முகம் தடவி ” அவங்களும் உன் படம் பார்த்தே விரும்பி வர்றாங்க தங்கம்.” எனவும்..

 

 

பதில் ஏதும் கூற மொழி மறந்து போனவளாய் அமைதியாய் அமர்ந்து இருந்தாள் தேவ மஞ்சரி.

 

ஏனோ மனம் கனத்து கண்களும் கனக்கும் உணர்வு.

 

***************

 

கால் நீட்டி கைகட்டி கண்மூடி அமர்ந்து இருந்தவன் கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு கண் திறந்தான்.

 

உள்ளே மெதுவாய் வந்த தந்தையைக் கண்டவன்.. என்ன என்பது போல பார்க்க..

 

“ஏதும் உடல் எரிச்சல், மயக்கம் போல எல்லாம் இல்லைல பாரி? கையில வலி இருக்கா?” என்ற தந்தையின் கேள்விக்கு மறுப்பாய் தலையசைத்தவன்,

 

“அதான் சொன்னேனே. பல்லுதா லேசா பட்ருந்தது. விஷம் கொட்ரதுக்கு முன்னாடி அதை போட்டுத் தள்ளியாச்சே..” எனவும் பெருமையாய் முறுவலித்தவர்,

 

“ஆறு மாசத்துக்குள் போட்ட காசை எடுக்கனும். அந்த மொத்த நிலமும் நம்ம கைக்கு வரனும்னு சொன்னேன் தான் ஆனா, நீ வெரசா போற வழில இப்படி எல்லாம் பிரச்சனை வருதே..” என அங்கலாய்க்க,

 

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. இப்போ எப்படி மொத்த நிலத்தை வாங்கறது தா பிரச்சனை. நீங்க சொன்ன மாதிரி கொடச்சல் கொடுத்தா நெல்லையப்பர், சிவந்தியப்பர் வேணா பயப்படலாம், ஆனா அந்த வேந்தனையும் அவளையும்.. ம்ஹூம்.. ” என்று மறுப்பாய் தலையசைத்தான்.

 

” (வி)சாரிச்ச வர அவங்க ரொம்ப கொணம்மான ஆட்கள். சண்டசச்சரவு பக்கம் போகாதவங்க. எல்லாருக்கும் நல்லது பண்ணனும்னு நெனக்கிற ஆட்கள்.”

 

” அதென்னவோ சரிதான். ஆனா நெஞ்சழுத்தம் சாஸ்திதா. என்ன மெரட்டுனாலும் அப்படிச்சும்மா தட்டி விட்டுட்டு போதுங்க.. ”

 

 

” அடிமேல அடி வச்சா அம்மியே நகரும்.. இவங்கள நகத்த முடியாதா. நாம நினைச்சது போல நடக்க சில மாசமாகலாம் ஏன் வருசங்கள் கூட ஆகலாம்..”

 

 

“ப்ச்.. அம்புட்டு பொறுமை இல்ல.”

 

” ம்.. நெல்லயப்பர் பையன் ஏதோ வடநாட்டுக்காரிய கல்யாணம் பண்ணிட்டான்னு அவங்க ஆயிஅப்பனுக்கு வருத்தம் போல.. ஆனாலும் சேத்துக்கிட்டாங்க. அவனுக்கு ஆரம்பத்திலேருந்தே விவசாயத்தில நாட்டமில்ல. ஒரு விக்கெட்டு அவுட்டா.. அடுத்து வாசுகி.. அவங்க பையன் ஏதாவது பெரிய உத்யோகத்துக்கு போனுமின்னு அவங்க அப்பாரு ஆசை. அதனாலே சீக்கிரமே அந்த விக்கெட் அவுட்டு ஆகிடும். அடுத்தவரு சிவந்தி, ரெண்டும் பொண்ணு.. மூத்தவள வேந்தனுக்கு கல்யாணம் பண்ணனும்னா எப்பவோ முடிச்சுருக்கலாம், தாமசப் படுத்தறது பாத்தா ஏதோ வில்லங்கம் போல இருக்கு. இரண்டாவது பொண்ணு லெக்சரரு. அது விவசாயம் பாக்காது. சீக்கிரமே பாக்க ஆளில்லாத ஆகிடும். ஆனா இதுக்கு

இன்னோரு வழியும் இருக்கு. ” என்றவர் சில நொடிகள் அமைதியாகவே இருக்க,

 

“அதுவாச்சும் கொக்கு தலை மேல வெண்ண வச்சு, அது உருகி கொக்கு கண்ணை மறைச்சப்புறம் புடிக்கறாப் போல இல்லாம, செரியான வழியா சொல்லுங்க பா..” என்று எரிச்சலுடன் சொல்ல,

 

“எதிராளி குடும்பத்த உறவாடிக் கெடுன்னு வழி சொல்லிக் கொடுத்திருக்காங்களே.. அதான். அந்த குடும்பத்தில பொண்ணு எடுக்கறது..”

 

முகம் சுருங்க வாய்க்குள் ஏதோ முணுமுணுக்க,

 

என்ன மகனே! திட்றியா? என்று நகைத்தவாறு கேட்டார் சேதுபதி .

 

பின்ன! இத விட வேர நல்ல ரோசனை கிடைக்கலையா.. இந்த படங்கெல்ல எல்லா வாராப் போல மொத்த குடும்பத்தையும் நம்ம த்ரெட் ஃபேக்டரி குடௌன்ல கட்டி வச்சு , பெரிசு கழுத்தில கத்தி வச்சு கையெழுத்து போடச் சொல்ல சொன்னாக் கூட நா ஓகே சொல்லிருப்பேன். இது என்ன கூறு கெட்ட யோசனை.. என்று சிடுசிடுக்க,

 

 

ஹா ஹா என்று நகைத்தவர், ரெண்டும் ஒன்னு தான். கல்யாணங்கறது அவ்ளோ பவர்ஃபுல். மொத்த குடும்பமும் , அவங்க பொண்ணு வாழ்க்கைக்காக நம்ப சொல்றபடிதா ஆடும்.. உங்க அம்மையோட அப்பன் சாவும் போது கூட என்னைய பாத்து கையெடுத்து கும்புட்டு தா செத்தான் பாத்தீல்ல. அதா பவரு.

 

 

தலையசைத்தவன், அந்த காலம் மலையேறிப் போச்சு.. சும்மா அம்மைய வச்சு தாத்தன வச்சு பெரும பேசாதீங்க. இப்பத்தி பொண்ணுங்க பாத்து நம்மதா பயப்படனும். ஆனா ஊனான்னா.. கதையல்ல நிஜம்னு டெலிவிஷன் சேனல்ல போய் உக்காந்துக்கிடுவாளுங்க. இல்ல கிழி கிழின்னு கிழிச்சு யூடியூப், இன்ஸ்டாக்ராம்னு போட்ருவாளுங்க.. கோர்ட்டுக்கெல்லா போகாமலே , மானம் மருவாதிக்கு சங்கூதிடுவாளுங்க..

 

 

அது.. இன்னும் நம்ம சீமை பக்கம் வரல கேட்டியா..

நீதா பாக்கறியே.. அவியள பாத்தா அப்படி மல்லுக்கு நிக்க ஆட்களப் போலவா இருக்கு!

 

 

இல்லை என்பதாய் தலையசைத்தவன், அதுக்காக பயந்தவங்களும் கிடையாது.. அதும் இல்லாம, எனக்கு அந்த ஆட்களப் பாத்தாலே எரியுது. தலமுற தலமுறயா நம்ம சொத்த வச்சு பகுமானமா இருக்காங்க..

 

 

செரி, அப்படி பாத்தா நாம பல பேரு கூட வம்புக்கு போகனும். எங்கூடப் பொறந்தவன் எப்படி நம்பள த்ராட்ல விட்டு சுத்த விடுறான். நம்ப டையிங் ஃபாக்டரி, நா பாத்து வளத்த சொத்து எல்லாம் அவே கைக்கு போய்டுச்சு. நாய்க்கு எலும்புத் துண்டு போடுதாக்கில இதை வாங்கிக் கொடுத்து ஏமாத்துறான். இதுல நம்ப வம்சாவளி சொத்து நீ நல்லா வந்துடுவேன்னு வாழ்த்து வேற.. ஊருக்குள்ள கேளு, அவேம் தா நீதிமான், நல்லவே அப்படின்னுவாங்க. ஒத்த பொண்ணு வச்சிருக்கான். இவனுக்கு அப்புறம் எல்லாம் அந்த குருவி தா பாக்குமாம். ஆண் வாரிசை கொடுக்க வழியில்ல பேச்ச பாத்தியா..

 

பெரியப்பா, அவரின் பெண் பற்றிய பேச்சு வந்ததும் அமைதியான பாரி, என்னவோ பண்ணுங்க என்றவாறு இறங்கி தலையணையில் தலைவைத்துப் படுக்க,

 

அறை விட்டு வெளியேறினார் சேதுபது.

 

 

******************

 

 

“வெள்ளைக் குதிரையில அய்யனாரே

வேகமாய் வந்தருளும் அய்யனாரே

 

 

 

கோட்டைக் கருப்பசாமி நீங்க

குடியிருந்து காக்க வேணும்

 

மந்தையில மாரியாயி மலைமேல மாயவரே

மழைய எறக்கிவிடு மானுடங்க மனங்குளிர

மழைக்கு வரங்கேட்டு – நாங்க

மருகுகிறோம் சாமி

 

எலந்தை முள்ளால கோட்டைக்காரி எங்களை

ஏறிட்டுப் பாரம்மா சக்கதேவி

 

காட்டைக் காத்தது காளியாத்தா – கம்மாய்க்

கரையக் காத்தது அய்யனாரு”

 

 

ஒலிபெருக்கி உரத்து ஒலித்துக் கொண்டிருக்க, ஊருணி காத்த அய்யனார் கோவிலில் கொடைக்காக கூடியிருந்தனர் மக்கள்.

 

 

கண்மாய்க் கரை சாலை வழியாக பல சிற்றுந்துகள் வந்து நின்று கொண்டிருக்க, சிறிய வாகனங்களில் மகிழ் வேந்தன் அமைத்த பாதை வழியே வந்திருந்தனர் விக்ரமசிங்கபுர மக்கள்.

 

சுற்றுப்பட்டியில் அனைவருக்கும் பூரண பொற்கலை சகித ஊருணிகாத்த அய்யனார் இஷ்ட தெய்வம். மூன்று தலைமுறையாக நெல்லையப்பர் குடும்பத்திற்கும் அவரே குலம் காத்த தெய்வம் ஆகிப் போனார். இவர்களின் வாழ்வாதாரம் கோவில் சுற்றி இருக்கும் நிலங்களும் , அய்யனார் காத்து அருளும் ஊருணியும் என்பதால் அவரை வணங்காமல் ஏதும் நடக்காது.

 

எனவே நெல்லையப்பரின் மகன் வழிப் பேத்தியின் முதல் முடி இறக்கி காதணி அணிவிக்கும் விழா அன்று நடந்து கொண்டிருந்தது.

 

பண்ணையாட்கள் அனைவரும் முகமெல்லாம் சிரிப்புடன் ஒருவருடன் ஒருவர் பேசியபடி இருக்க, கார்த்திக்கின் மனைவிக்கு சகோதரன் யாரும் இல்லாததால் , தாய்மாமா முறை வைத்து மகிழ்வேந்தனின் மடியில் அமர்த்தி மொட்டையிடும் வைபவம் நடக்க, இது பற்றி ஏற்கெனவே அறிந்து இருந்தாலும் கத்தி கதறும் பிள்ளை பார்த்து கண்கலங்க நின்று கொண்டிருந்தாள் கார்த்திக்கின் மனைவி ரோஷிணி.

 

ஒரு புறம் தடபுடலாய் விருந்து தயாராகிக் கொண்டிருக்க, மொட்டை எடுத்து முடித்தவுடன் கோவில் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளுக்கு பலி கொடுக்க ஆடும் கோழியும் கட்டுப்பட்டு இருந்தன.

 

 

எதிரில் இருந்த நிலம் முழுவதும் ஆங்காங்கே மக்கள், குடும்பத்துடன் அடுப்பு மூட்டி சமைத்துக் கொண்டிருந்தனர்.

 

ஆடி அம்மாவாசை என்பதால், சாம்பார் மற்றும் காய்கறிகள் அவிக்கும் மணம் காற்றில் எங்கும் பரவியிருந்தது.

 

 

கோடை வெம்மை தணிக்க ஆடிக்காற்று பலமாய் வீசி மரத்தில் தொட்டில் கட்டி படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை அசைத்து தூங்க வைக்கும் வேலையை அதுவே செம்மையாக செய்து கொண்டிருந்தது.

 

 

கோவிலின் கர்ப்பக் கிரகத்தின் வலப்புறத்தில் இருந்த இடத்தில் பொங்கல் வைக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர் நெல்லையப்பர் குடும்பப் பெண்கள். உடல்நிலை சரியில்லாத சிவகாமி அம்மா அங்கிருந்த திண்டில் அமர்ந்து முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்க , வாசுகி அடுப்பை கவனிக்க, நீலாம்பரியும் தேவமஞ்சரியும் வெல்லம் தட்டுதல் மற்றும் தேங்காய் துருவும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

 

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்ப வர்றாங்களாம் டா?” என்ற பெரியன்னையின் கேள்விக்கு தேங்காய் துருவியவாறே பதிலளித்தாள் நீலாம்பரி,

 

பதினொன்றரைன்னு அண்ணே சொல்லுச்சு பெரிம்மா.. எனவும்

 

வெல்லம் தட்டிக் கொண்டிருந்த தேவ மஞ்சரி , கைகள் நடுங்க வேகமாகத் தட்டினாள்.

 

அப்போது டமடமவென பூஜைப் பறை மற்றும் மணியடிக்கும் ஒலி கேட்க ,

 

சாமிக்கு அலங்காரம் ஆகிடுச்சு போல, குட்டிப்பிள்ள சட்டைத்துணி , நகை சாமி பாதத்தில வச்சு வாங்கிட்டு வா தங்கம்! என்ற பெரியன்னையின் குரலில் , துருவிய தேங்காயை வாழை இலை போட்டு மூடியவள், தட்டை எடுத்துக் கொண்டு சிறு மண்டபம் போன்ற கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்க அங்கே

 

அழகிய பெண்ணொருத்தி பக்கத்தில் நிற்க , பரிவட்டம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாரி வேந்தனைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.

 

நாயகன் ஆடுவான்…

 

 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!