சேதி 14
*********
வனராஜன் அலைபேசி உரையாடலில் ஆழ்ந்து போய், அவர்கள் கேட்ட விவரங்களை தெரிவிப்பதும், ஒரு சிறு குறிப்பேட்டில் எழுதுவதுமாக இருக்க, உள்ளே நுழைந்த தன் அக்காவை அவன் கவனிக்க வில்லை..
கையில் காப்பிக் கோப்பையுடன் சில நொடிகள் நின்றவள், பின் அதனை அங்கிருந்த சிறு மேசை மீது வைத்து விட்டு, சுற்றிப் பார்த்தாள். நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்த அறை.. சிறு வயதிலிருந்தே விடுதிகளில் தங்கி ,அனைத்தையும் தானே செய்து பழக்கப்பட்ட தம்பியின் அறை , அவனின் மனதின் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்க, மெச்சியவளாய் பார்த்தவளின் பார்வை வட்டத்துக்குள் படுக்கையின் மீதிருந்த பழைய பழுப்பேறிய காகித உறையும், படபடத்த தாளும் வித்யாசமாக பட , அந்த உறையைக் கையில் எடுத்து, அதன் கனத்தைக் கண்டு ,கவிழ்க்க அவள் கையில் வந்து விழுந்தது அந்த புகைப்படம். ஒரு பார்வையிலேயே அது இருபது… இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று புரிந்து விட சிரித்தவாறு தம்பியை நோக்கித் திரும்பவும் வனராஜன் அலைபேசி உரையாடல் முடித்து தொடர்பை துண்டிக்கவும் சரியாக இருந்தது..
தமக்கையின் கையில் புகைப்படத்தக் கண்டவனின் மனம் அதிர்ந்தது.. அவளின் முக உணர்வுகளை படிக்க முயன்றவனாய் இறுகிய முகத்துடன் அவளைப் பார்த்தான்.
வேதகௌரியின் முகத்தில் அந்த படத்தினை அடையாளம் கண்ட பாவனை ஏதும் இல்லாமல் சிரிப்புடன்,
“ யாரு தம்பி இது? பல வருஷத்துக்கு முந்தின படம் மாதிரி இருக்கு..இப்போ இவுங்க ஆன்ட்டி யா இருப்பாங்க..இதை வச்சு சைட் அடிக்குரியா?? உன் நிலை அவ்ளோ மோசமாவா இருக்கு” என்று போலியான வருத்தக்குரலில் கூறியவள் , நிமிர்ந்து பார்த்த போது தம்பின் முகத்தில் தோன்றிய கடுப்பில் மிரண்டு, “ தெரிஞ்சவுங்களா??? தப்பா ஏதும் சொல்லிட்டேனா சாரி …சாரி” என்றாள்.
“இவுங்க….இது வரை தெரியாது…இனிமே கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் “ என்றவன், அக்கா வேதகௌரியின் கையிலிருந்து அந்த புகைப்படத்தை வாங்கி, தன் அலைபேசியின் கேமராவை செயல் படுத்தி பதிந்து கொண்டான். முகவரியையும் அவ்வாறே செய்தவன், தனது மின்அஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வைத்தான். படத்தையும் முகவரியையும் பீரோவில் பத்திரப்படுத்தினான்.
தம்பியின் செய்கைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த வேதகௌரி,”இவ்ளோ பத்திரமா வைக்குற!! யார் அவுங்க?” என்று கேட்க , அக்காவை யோசனையாக பார்த்தவன்,
” இனி தான் கண்டுபிடிக்கணும்!!” எனவும் குழம்பியவளாக ,
” என்ன தம்பி புதிராவே பேசுற!!!” எனவும் ,
’ நான் ஒருத்தன் தவிக்குறது போதும்..இப்போதைக்கு உனக்கு வேணாமக்கா’ என்று எண்ணியவனாய்,
“நம்ம பேக்டரி ல முன்பு வேலை பார்த்தவங்க..அவுங்ககிட்ட சில முக்கிய விவரங்களை வாங்க வேண்டித்திருக்கு” என்றவன் காப்பியைக் கையில் எடுத்துக்கொண்டு மணியைப் பார்த்தான்..
கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவனாய் ,” அம்மாவை அப்பப்போ வந்து பார்த்துக்கோ க்கா! முக்கியமா அம்மா உடல்நிலைய கண்காணிச்சுக்கோ..நான் திரும்பி வர குறைஞ்சது 3 வருஷம் ஆகும். நான் ஜெர்மன் போனதும் உனக்கு பேசுறேன் “ என்றவன் , அவள் சிரித்தவாறு தலை அசைத்ததும், முறுவலித்தவனாய் பயணத்திற்கான உடமைகளைச் சரி பார்க்க ஆரம்பித்தான்.
தற்போதைய சூழ்நிலையில் தந்தையிடம் தனித்து பேசமுடியாததை எண்ணி பெருமூச்சுவிட்டவனாய் தன் குடும்பத்தினர் அனைவரிடமும் பிரியாவிடை பெற்றவன் பெங்களூரு நோக்கிய பயணத்தைத் தொடங்கினான்.
பயணம் முழுவதும் ஆழ்ந்து யோசித்தவன், அடுத்து செய்யவேண்டிய காரியங்களை மனதிற்குள் வரையறுத்துக் கொண்டான்.
***********************
வேல் ராஜனின் வீட்டில் மதிய உணவைக் கூட சாப்பிடாமல் , ஏதோ யோசனையில் மூழ்கி கிடந்தவரை அவரின் மனைவி கற்பகவள்ளி ,”புக்கு கொடுத்ததுக்கு ஏதெனும் சொல்லிடீங்களா.. அந்த புள்ள முகம் வாடி போச்சுது …” என்று கவலைப் படவும்,’என்ன புக்கு யாரை சொன்னேன் ‘ என்று விழித்தவர்,
சரவணனும் தந்தை அருகே வந்து, “ அத்தான் என்கிட்ட கூட சரியா பேசல…உம்முன்னு இருந்தாங்க..போய்ட்டு வரேன்னு கூட சொல்லாம போய்ட்டாங்க..” என சோகம் காட்ட,
மகனின் தலை கோதி சிரித்தவாறு,” அத்தான் பேக்டரி விஷயமா பேசுனான்..அடுத்த வாரத்துல வெளிநாடு…அது…..ம்ம்..ஆ ஜெர்மனி வேற போறான்…நிறைய வேல இருக்குன்னுட்டு, சொல்லிட்டு இருந்தான், அவசரமா போனுல அழைப்பு வரவும் கிளம்பிட்டான்.. வெளிநாடு போய்ட்டு பேசுவான் எனக்கு….அப்போ உன்கிட்ட கொடுக்குறேன் “ என சமாதானப் படுத்தவும்,
“ ஹை ….அத்தான் ஜெர்மனி போறாங்க ளா..பேசினா என்கிட்ட குடுப்பீங்களா.!!!.அவுங்ககிட்ட பேசுனா அந்த மாமா , பாட்டிக்கெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லி இனி என்னை தடை சொல்லமாட்டீங்கதானே..ஜாலி ஜாலி” என்றான் குதூகலமாய். வருத்தத்துடன் கூடிய சிறுமுறுவல் எட்டிப் பார்த்தது வேல் ராஜனின் உதடுகளில்.
தந்தையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த செல்லக்கிளிக்கு அவர் எதையோ மறைப்பதாய் பட்டது..
வீட்டைவிட்டு வெளியேறும் முன் அவனின்..வனராஜனின் முகம்…. உலகத்துத் தவிப்பை எல்லாம் கண்களில் தேக்கி அவன் பார்த்த பார்வை..அவளின் இளமனத்திற்கு புரியவில்லை என்றாலும், எப்போதும் குறும்பு மின்னும் விழிகளும் மலர்ந்து இருக்கும் இதழ்களும் , அவற்றை எங்கோ தொலைத்ததாய் காட்டிய தவிப்பு ,’அப்படி என்ன பிரச்சனையாம் அவுகளுக்கு!!!’ என்று யோசித்தவள், இதற்கான விடை தந்தைக்கு மட்டுமே தெரியும், ஆனால் அவர் சொல்லப்போவதில்லை என்பது புரிந்துவிட அமைதியாய் பார்த்த வண்ணம் இருந்தாள்..
அவன் மேலிருந்த கோபம் சற்றே விலகி செல்ல, அவன் தவிப்பு மனதை ஏதோ செய்ய……’என்னால மட்டும் முடிஞ்சா அவுக சோகத்தை நிச்சியமாத் தீர்ப்பேன்’ என்ற நினைப்பு சட்டென்று மனதில் வந்து விட, அவளுக்கு சிரிப்பு வந்தது.
‘ நீ பெரிய இவ..அவுக பிரச்சனையா தீர்த்துப்புடப்போறியாக்கும்..நாளைக்கு ரெகார்ட் நோட்டு அடுக்கி வைக்கலைனா அந்த பயாலஜி மிஸ்ஸு பாட்டு பாட ஆரம்பிச்சுரும்..ஏழு படம் வரையனும்….முதல்ல அந்த பிரச்சனய தீரு’ என மனசு சொல்ல அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
************************
பெங்களூருவை அடைந்த வனராஜனின் ஜெர்மன் பயணத்திற்கு பத்து நாட்கள் இருந்தன. தன் உடன் படித்த நண்பனின் துணையுடன் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டவன், தனக்கு தெரிந்த விவரங்களை சொல்லிவிட்டு, புகைப்படம், முகவரி போன்றவற்றை கொடுத்துவிட்டு தனது மாமாவின் அலைபேசி எண்ணையும் கொடுத்தான் .. ஏதேனும் விவரம் தேவை என்றால் அவரைத் தொடர்பு கொள்ளும்படி கூறியவன், வெளிநாடு செல்லும் விவரத்தை கூறி தன்னைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தனக்கு மின்னஞ்சல் செய்யுமாறு பணித்தான்.
தந்தையிடம் பேசித் தெளிவு கொள்ள தொலை தூர உரையாடல்கள் சரி வராது என்று தோன்றியதால் அழைத்துப் பேசிய தந்தையிடம் பொதுப்படையான பேச்சுக்கள் தவிர வேறு ஏதும் பேசவில்லை வனராஜன். அவரிடம் ஏதேனும் கேட்டு அவர் கூறினால் கூட நம்பும் மனநிலையிலும் அவன் இல்லாததால், தீர விசாரித்தே முடிவுக்கு வரலாம் என்ற முடிவுடன் தன் வேலைகளில் கவனமானான்.
வனராஜனிடம் இருந்த வேலராஜன் தந்த முகவரி , மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சிறிய கிராமத்தில் இருந்தது. அங்கு பேசப்படும் மராட்டி மொழி தெரிந்த துப்பறியும் நிறுவன பிரதிநிதியின் தீரவிசாரிப்பில் ,கோபிசந்த் மேத்தா பலவருடங்களுக்கு முன்பு வறட்சி காலத்தில் ஒரு செல்வந்தரின் அழைப்பில் வேலைக்காக தமிழ்நாடு சென்றுவிட்டதாகவும் அவரின் பெண்ணின் திருமணத்திற்கு சொல்ல திரும்ப இங்கு வந்ததாகவும், திருமணம் புனேயில் நடை பெற்றது என்றும் ,திருமணம் செய்து கொண்டவன் ஒரு தமிழன் என ஒருவர் கூற…
இல்லையில்லை அவன் ஒரு ராணுவ வீரன் அவர்களின் உறவினன் என்று ஒருவர் கூறினார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் இங்கு வரவில்லை என்றும், ,அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததாகவும் என்ன குழந்தை என்றே தெரியவில்லை என்றும் , தமிழ்நாட்டிற்கு சென்றவர்கள் ஏதோ விபத்தில் மாட்டிக்கொண்டர்கள் , அவர்களின் குடும்பத்தினர் யாரேனும் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை என்றும் பல தகவல்கள் கிடைத்தன.
திருமணம் , விபத்து , ராணுவ வீரன்,தமிழன் என பல புது தகவல்கள் கிடைத்ததை வைத்து விசாரிக்க சொல்லிய வனராஜன் பெரும் குழப்பத்துடன் தனது பயண ஏற்பாடுகளில் கவனமானான்.
அடுத்து மூச்சு விடக் கூட நேரமில்லாதது போல் அவனின் நாட்கள் ஓடத்தொடங்கின. களைத்து உறங்கும் கனவுகளிலும் மின்னலின் ஒளிவீச்சில் கானமிசைத்தவளின் முகம்…ஆரஞ்சுவானப் பின்னணியில் செந்நிற சூரியனாய் சிவந்த முகத்துடன் கூடிய சிறு உருவம்…தோன்றி அவனைத் தவிக்க வைத்து இனம்தெரியா ஏக்கத்தில் ஆழ்த்தியது.
விழித்து எழுந்தவனின் எண்ணங்களை வருங்கால கனவுகள் முன்னோக்கி இழுக்க , இறந்தகாலப் பிழைகள் பின்னுக்கு இழுக்க , அன்னையின் வேண்டுதல் படி செல்வதே அனைவருக்கும் நன்மை என்று பலமுறை தனக்குள் கூறிக்கொண்டவன், அயல்நாடு செல்லும் விமானத்தில் ஏறினான்.
ஜெர்மனியில் சென்று இறங்கியவன் தனது தவிப்பையும் குழப்பங்களையும் மறக்க வேலையில் முனைந்து ஈடுபட்டான். முனைப்பும் வேகமும் அந்த நிறுவனத்தில் அவனின் பதவி முன்னேற்றத்திற்கு பெரிதும் உறுதுணையாய் இருக்க, அடி மனதின் தவிப்பை இந்த வெற்றிகளில் அமிழ்த்திக்கொள்ளப் பழகிக் கொண்டான்.
துப்பறியும் நிறுவனத்தினர் கிடைத்த சிறு தகவல்களையும் பகிர்ந்தபடி இருக்க கோபிச்சந்த் மேத்தா குடும்பத்தினர் உயிரோடு இருக்கின்றனரா ,எங்கே இருக்கிறார்கள் , கௌரி என்ன ஆனார், அவரது குழந்தை என்ன ஆனது எனபதற்கான சரியான விடைகள் கிடைக்கவில்லை.
****************
ஒன்றரை வருடம் காற்றுப்போல் நகர்வதே தெரியாமல் நகர்ந்து கடந்துசெல்ல, செல்லக்கிளி பள்ளி மேனிலையில் மாவட்டத்தில் மூன்றாவது இடத்திலும், மாநில அளவில் பதினான்காவது இடத்தையும் பெற்று அமோகமாகத் தேர்ச்சியடைந்தாள்.
அவளின் பரீட்சை முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் , அவற்றின் மீது கவனம் வைத்திருந்த வனராஜன், உடனே தன் மாமனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு அவளின் விருப்பமான மருத்துவப் படிப்பு சேர்க்கும் படி கூறினான்.
அதற்கு செய்ய வேண்டிய, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல், கல்லூரி முடிவு செய்தல் பற்றிய விபரங்களை அவருக்கு புரியும் வண்ணம் விளக்கிக் கூறி, தேவை என்றால் தொடர்பு கொள்ளும் படி தன் சென்னை நண்பர்களின் தொடர்பு விவரங்களையும் கொடுத்தவன்,
செல்லக்கிளியுடன் பேச விழைந்து, ‘ வாழ்த்தேனும் கூறி விடு’ என்று துடித்த மனதை , அன்னையின் வேண்டுகோளை நினைவூட்டி அடக்கியவனாய் அலைபேசியை அணைத்தான். அவளுடன் பேசினால் உறைந்து போன மன உணர்வுகள் மீண்டும் உயிர்த்தெழுந்த விடும். பூப்பூக்க ஆரம்பித்துவிடும் என்று அஞ்சியவன் அதைச் செய்யத் தயாராக இல்லை.
************
செல்லக்கிளி தேசிய அளவிலான தகுதித் தேர்விலும் (NEET) நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் , வேலராஜன் தான் மகளுக்கு அளித்திருந்த வாக்கின் படி அவளை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க தேவையானவற்றை செய்தார். வனராஜனின் குறிப்புகளும் செல்லகிளியின் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டலும் அவருக்கு மிகத் தேவை பட்டது.
சில நாட்கள் கழித்து நடந்த கலந்தாய்வின்(counselling) மூலமாக சென்னையில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கேயே விடுதியில் அவளுக்கு தங்க அனுமதியும் கிடைத்தது.
கல்லூரிக் காலம்…பலரின் வாழ்க்கைக் கனவுகளுக்கு திறவுகோல். அடுத்து வாழப்போகும் அறுபது , எழுபது வருட வாழ்க்கையை நிர்ணயிக்கும் பிரம்மனின் எழுத்தாணி. இந்த காலத்தை சிறப்பாக பயன் படுத்தியவர்கள் வாழ்வின் நிலை மாற்றத்தையும், எண்ணங்களின் பரிமாண வளர்ச்சியும் அடைகிறார்கள். இவ்வளவு நாள் தனக்கு கற்பிக்கப்பட்ட அனைத்தையும் சரியா தவறா என உரைத்துப் பார்க்கும் உரைகல்லே கல்லூரி. மாணவ வாழ்வின் சோதனைச்சாலையே கல்லூரி வாழ்க்கை.
சுருக்கமாகச் சொன்னால் கூட்டுபுழுவென உறங்கிக் கிடந்த இளமனங்கள் வண்ண வண்ணச் சிறகை விரித்து ,பறந்து, மகரந்தங்களையும் தேனையும் தேடித்தேடி சேகரிக்கும் பட்டாம்பூச்சிப் பருவ காலம்.
செல்லக்கிளி…. பாதுகாப்பான கூட்டிற்குள் அன்னை, தந்தை யின் அரவணைப்பில் தோழியின் அன்புக் காவலில் இருந்தவள். புதிதான இடமும் நகரத்தின் பிரம்மாண்ட தோற்றமும் பலவிதமான மொழிகளும் அவளை பிரமிப்பில் ஆழ்த்தின. தமிழில் இத்தனை வகையுண்டா என திகைக்கும் வண்ணம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழ் பேசி அவளை திணற அடித்தனர்.சென்னைத்தமிழ்,மதுரைத்தமிழ், கோவைத்தமிழ்,நெல்லைதமிழ்,குமரித்தமிழ்…அனைத்தும் நகரில் புழக்கத்தில் இருந்தன. உடன் பயிலக் காத்திருந்த மாணவர்களிடம் இருந்தன. பள்ளியில் ஆங்கில வழியில் படித்திருந்ததால் சென்னையின் ஆங்கிலம் அவளை மருட்டவில்லை.
கலந்தாய்வில் சந்தித்த சில தோழிகளும் அதே கல்லூரியில் , வேறு வேறு பிரிவுகளிலும் சேர்ந்திருந்தால் பெரிதாக தனிமை உணராமல், இந்தப் புதிய வாழ்விற்கு தன்னை பழக்கப் படுத்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி அடைந்தாள் என்று சொல்ல முடியாவிட்டாலும் சமாளித்துக் கொண்டாள் செல்லக்கிளி.
கல்லூரி துவங்கி முதல் ஒரு வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டாவது வாரத்தில் சீனியர்கள் விடுமுறை முடிந்து வந்து சேர ஆரம்பித்தனர் ..ஆரம்பமானது ராகிங்…..
மாணவர்களுக்கிடையே சுமுக உணர்வு உண்டாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் , ஒரு காலகட்டத்தில் உயிரை குடிக்கும் எமனாக மாற ஆரம்பித்ததும், தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன..ஆனாலும் பெரும்பாலான கல்லூரிகளில் ராகிங் என்பது சிறிய அளவினிலேனும் நடை பெறவே செய்கிறது. அதுவும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இருந்தே தீரும். ‘மாணவர்களின் மனநலம் , உடல் நலம் பாதிக்குமாறு ஏதும் செய்யக்கூடாது’ என்ற எச்சரிக்கை விதித்து விட்டு கல்லூரி நிர்வாகம் அமைதி ஆகிவிடும்.
பாட்டு பாட சொல்வது, ஆட சொல்வது, மைதானத்தை சுற்றி வரச் சொல்வது, செந்தமிழில் பேச சொல்வது, அசைன்மெண்ட் எழுத சொல்வது என ஆரம்பித்து யாரிடமாவது பூ கொடுக்க சொல்வது , ஐ லவ் யூசொல்ல சொல்வது , முத்தமிடச் சொலவது என மாட்டும் ஆளைப் பொறுத்து ஆணைகள் மாறும் என்பது பல திரைப்படங்களில் கண்டது நிஜமாக நடப்பதைக் காணலாம்.
அன்றைய வகுப்பு முடிந்து தனது அறைத் தோழிகளுடன் விடுதிக்கு கிளம்பி சென்று கொண்டிருந்த செல்லக்கிளி வழிமறித்த பெண்கள் கூட்டத்தைக் கண்டு மிரண்டு நின்றாள்.
சற்று தள்ளி இருந்த மரத்தின் அடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரோயலென்பீல்டு இருசக்கர வாகனத்தின் மீது சாய்ந்தவாக்கில் அமர்ந்தபடி, பக்கத்தில் இருந்தவளின் தோள் மீது வலதுகையை வைத்துக் கொண்டு தனித்து தெரியும் உயரத்தில் இருந்த பெண், நீல வண்ண ஜீன்ஸ் அணிந்து ஆண்கள் அணியும் சட்டை போன்று கருப்புச் சட்டை அணிந்து இருந்ததில் அவளின் பளீரென்ற பால்நிறம் பார்ப்பவர் கண்ணைக் கூச செய்வதை உணர்ந்தவளாய் முகத்தைப் பாதி மறைக்கும் வண்ணம் கூலர்ஸ் அணிந்து இருந்தாள். அந்தோ பரிதாபம்! அதனால் அவள் யாரைப் பார்க்கிறாள் என்றே புரிபடாத செல்லக்கிளியும் அவளின் தோழியரும் விழித்தவாறு நின்றனர்.
“ என்ன? MBBS ஆ? “ எனவும் செல்லக்கிளியும் இன்னொரு பெண்ணும் மட்டும் சற்று முன்னே வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்க கொண்டு எச்சில் விழுங்கிய படி ,” ஆமாக்கா!!”
எனவும் வலது கையால் கண்ணாடியைக் கழற்றியவள், அதனை அப்படியே நெற்றிக்கு மேலேற்றி, விரித்து விடப்பட்டிருந்த கூந்தலுக்கு அணி சேர்த்து அணைத்தாற் போல் தலையின் உச்சியில் நிறுத்தினாள்….
‘ ப் ப் பாஆஆஆ , ஏன்னா கலரு!!!என்னா அழகு என்று வாய் பிளந்து நின்றனர்’ முதலாமாண்டு மாணவியர் அனைவரும்.
“க்யா!!!!!!!அக்காவா!!! கால் மீ , சீனியர்! ஆர் நித்யா மேம்….ஐ ஆம் நித்யா…….நித்ய கௌரி மேத்தா!!!”
*************************
நில்லென்று சொன்னால் மனம்
நின்றா போகும்..
செல்லென்று சொன்னால் காதல்
சென்றா விடும்….
பின்னிழுக்கப்பட்ட எண்ணங்களும்..
அழுத்திவிடப்பட்ட ஆசைகளும்..
முன்னிலும் வீறுகொண்டு எழும்பி நிற்கும்..
மூச்சுக் திணற வைக்கும்…..
அறிவாயா!!!!
ஆணவனே!!
அன்பானவனே!!!
பிள்ளையாக இருந்தவள்
பின்நின்று தாங்க
ஆளில்லா நிலையில்
எதிர்கொள்ளும் சவால்களில்
நிமிர்வாளா! உடைவாளா!!
விட்டகுறை தொட்ட குறையாக
காலம் கட்டிவைத்த பந்தம்..
விதியாடிய விளையாட்டில்
எட்டிச் சென்ற சொந்தம்…
எதிர்வந்து அருகழைக்க …
புதிர் விளையாட்டில்..
பூட்டப்பட்ட பெட்டியின்..
புதிதான சாவியிது என..
சின்னவளும் அறிவாளோ!
சிறுஅணிலாய் சிறுஅணிலாய் உதவுவாளோ!!!
************************
கிளி பேசும்……..