சேதி 13
*********
மதியவேளை கொஞ்சம் கொஞ்சமாக மாலை வேளையாக மாறத் தொடங்க , வெளியில் காயும் வெய்யோனே உள்வந்து இறங்கியது போல தலைக்குள் சூடு பரவ, திகைத்து அமர்ந்ருந்த வனராஜனை தாய் மாமனின் கண்ணீர் , தான் கேட்டுக் கொண்டிருந்ததெல்லாம் கனவில் அல்ல நனவில்.. என்று உணர வைத்தது.
உறையத் தொடங்கிய உணர்வுகளை மூளையின் வெம்மை தாக்க, “ இதெல்லாம் உண்மையா மாமா! நீங்க விசாரிச்சு தெரிஞ்சுக்கிடீங்களா…நேர்ல பார்த்தீங்களா!!” என அடைத்த தொண்டையை செருமிச் சீர் செய்தவனாய் கேட்டான்.
” இது கிராமம் ராஜா!!!! இங்க உள்ளவுகளுக்கு தெரியாம காக்கா குருவி கூட ஊருக்குள்ள பறக்க முடியாது..அதும் இப்படி பட்ட விஷயமெல்லாம் காது மூக்கு வச்சு வேகமா பரவும்..
கண்ணால காம்பது பொய்… காதால கேப்பதும் பொய்யின்னு தான், தீர விசாரிக்க போன இடத்துல கிடைச்ச தகவல்களை வச்சு பதறி போய் கேட்டதுக்குதா உங்க அய்யாவும் ஐயம்மாவும் என்னை அவமான படுத்துனாக.”
பெருமூச்சு விட்டவர், “ உங்க அய்யாக்கு முரட்டு பிடிவாதம்.. தா செய்தது சரி மாதிரியும் நா கேட்டது தான் தப்புங்குற மாதிரியும் பேசுன போது கூட தாங்கிட்டேன்,….. ஊரு உலகத்துல செய்யாததையா என் பிள்ளை செஞ்சுட்டான் . பணக்கார பசங்க ன இதெல்லாம் சகசம்.வந்தவதா புருஷனை அங்கிட்டு இங்கிட்டு நகராம பார்த்துகிடனு….தராதரம் தெரியாம பொன்னெடுத்தது தன் தப்புன்னு உங்க ஐயாம்மா பேசனதும் ,நிசம்மா சொல்றேன் ராசா… அம்புட்டு பேரையும் வனராசன் கோவிலுள்ள இருக்க அருவாளத் தூக்கிட்டு வந்து வெட்டனும் போல ஆத்திரம் வந்துச்சு…
எங்க அய்யா அம்மா வளர்ப்பு வீண் போய்ட கூடாது..என் கூட பிறந்தவ வாழ்வை …என் கையாலேயே சிதச்சுர கூடாதுன்னு தா அன்னைக்கு உங்க வீட்டை விட்டு வெளியே போனேன்….
அவள..அவ பெத்த தங்கங்களை பார்த்துக்க எங்களுக்கு தெம்பிருக்கு..யாரும் தேடி வர வேணமின்னு சொல்லிட்டு தான் அங்க இருந்து கிளம்புனேன்..
அதுக்கு அப்புறம் மறுநாளே அந்த பொண்ணு குடும்பத்தொட ஊர விட்டே போயிட்டாக னு கேள்வி பட்டே…..விசாரிச்ச போது உங்க அய்யா தான் கூட இருந்து அந்த பொண்ண வழியனுப்பி வச்சதா.. பாத்தவுக சொன்னக…… வயித்துல பிள்ளையோட போன அவ என்ன ஆனனே தெரியலை…அடுத்து அவுங்களை பத்தி எந்த தாக்கலும்(செய்தியும்) இல்ல…
ஒரு வாரம் கழிச்சு.. உங்க அய்யப்பா தான்..கரிசகுளத்துக்கு வந்து…பேசி…எங்கய்யா அம்மாள ..சமாதானப் படுத்திட்டு …கூட்டிட்டு போனாக…எங்க அக்காவை எவ்வளவோ தடுத்து பாத்தேன்…தன் வாழ்க்கை முடிஞ்சுட்டதாவும்..இனி பச்சபிள்ளைக வாழ்க்கை தான் முக்கியமின்னுட்டு உங்க அக்காளையும் உன்னையும் தூக்கிட்டு கிளம்பிட்டா..”,
அதுக்கப்புறம்..நாங்கனா உங்க ஐயாம்மா, அய்யாக்கு ஆகாம போச்சு.. தாய் வீட்டுக்கு அனுப்புறதில்ல…எந்த விசேசத்துக்கும் வாறதுமில்ல … எங்க கூட பேச கூடாதுன்னு ஆயிரம் கட்டுப்பாடு அவளுக்கு…தப்பு செய்தவுக தல நிமிந்து நடக்க…. இவளை கைதியாக்கி அடைச்சு வச்சுக்கிட்டாக…
வருஷத்துக்கு ஒரு முறை…. அதும் அக்கா, விரதமிருந்து, காப்பு கட்டி, பால் கொடமெடுப்பா பெத்தநாச்சி அம்மனுக்கு..அதுக்கு மட்டும் சாமி குத்தமாகிப்புட கூடாதுன்னு அனுப்பி வைப்பாக…கோயிலுல.. பொதுவான விசேச வீடுகள்ள பார்த்துகிடுறதுன்னு…. இப்படியே இருவத்திமூணு வருசமும் ஓடி போச்சு…உங்க அக்கா கல்யாணத்துல தாய்மாமன நடத்துற மாதிரியா நடத்துனாக… கூடுன கோடி சனத்துல ரெண்டு சனமா நானும் உன் அத்தையும் வந்துட்டு வந்தோம்…ம்ம்ம்
இங்கிருந்து போனவளுக்கும் இருவத்துரெண்டு வயசுல பொண்ணோ புள்ளயோ இருக்கும்ன்னு நினைச்சாலே அடி மனசுல அருவா பட்ட மாதிரி வலிக்குது.. என் கூட பிறந்தவ இந்த நினைப்புல தான் மறுகிக்கிட்டு இருக்கா….வயசென்ன திரும்புதா…..அந்த கவல அவ மனசு பாதிக்கு… உடம்ப உருக்குது….
நகநட்டு வாங்கி கொடுக்கிறது…உடம்புக்கு ஒண்ணுனா கருத்தா பாத்துகிடறதுல எல்லா உங்க அய்யாவைக் குற சொல்லமுடியாது……ஆனா….. அவ மனசு.. அதுல இருக்க மறுகல் ……யாரு தீக்க!!!!!” என்று பெருமூச்சு விட்டவர், “எப்படியோ வைராக்கியமா உங்களை வளர்த்து… உங்கள வாழ்க்கைல செயிக்க வச்சுட்டா….ஏன் அக்கா… சாமியா… மௌனமா நின்னு!!!!” என்று சொல்லி முடித்தவர்…..மீண்டும்😘😜 கலங்கத்தொடங்கிய கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டார்…
சற்று நேரம் அமைதியாக இருந்த வனராஜனுக்கு…இதனை எல்லாம் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….காலையில் தன் தந்தை சொன்னதிற்கும் இப்போது மாமா சொல்வதற்கும் இடையில்…ஏதோ தொடர்பு விடுபடுவதாக தோன்றுவது… தனது தந்தை பாசத்தின் காரணமாகவா???? நிஜமாகவே குழப்பமிருக்கிறதா!!!! என்று ஆழ்ந்து யோசித்தான்….யோசிக்க யோசிக்க வெறுமையாக உணர்ந்தவன்…
தன் தந்தை சௌந்தரராஜன் தன் அக்காவிடமும் தன்னிடமும் காட்டும் அன்பையும் அக்கறையையும் நினைத்து பார்த்தான்.. இதே அன்பை அவர் வேறு இடத்திலும் காட்டி இருக்கலாம் ,காட்டிக் கொண்டு இருக்கலாம் என்பதை அவனால் ஜீரணிக்க இயலவில்லை.. தன்னாலேயே முடியாத போது..தாயிற்கு!!!????… தாயின் நேற்றைய கண்ணீரின் அர்த்தம் முழுதாய் புரிந்தது..
சொத்து..வாரிசு…என்பதெல்லாம் பற்றி அவன் கவலை படவில்லை…ஆனால் தந்தையின் அன்பை, தாயின் உரிமையை பங்கு போட அவனும் தயாராக இல்லை…தன்னை கொஞ்சம் சமப்படுத்திக் கொண்டவனாய்,
“அந்த…..அந்த பொண்ணை பத்தி..ஊரு பேரு ஏதாவது தெரியுமா மாமா????”
அந்த அறையில் இருந்த பீரோவின் பாதுகாப்பு பெட்டகத்தை த் திறந்து, அதில் மறைவாக இருந்த ரகசிய பகுதியை திறந்து, அதில் இருந்த ஒரு பழுப்பேறிய காகித உறையைக் கொண்டு வந்து கொடுத்தார் வேல் ராஜன்.
“எல்லாம் இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தினது..அந்த பொண்ணு படம் ..வட நாட்டு விலாசம்..இதுல இருக்கு ராஜா…. இங்க இருந்து போனதுக்கு அப்புறம் எங்க போனாக னு ரயிலேத்தி அனுப்பிச்ச உங்க அய்யாக்கே தெரியாது னு சொல்லிட்டாக…நாமலும் நம்பிக்கிட வேண்டியது தா..அந்த பொண்ணு படிச்ச காலேசு, உங்க பயர் ஒர்க்கஸ் ல வேலை செய்தப்ப கொடுத்திருந்த இந்த விலாசத்துல. ..இருக்க ஊர்ல எல்லாம் தேடியாச்சு…. விசாரிச்சாச்சுது..பலவருசத்துக்கு முன்னே தமிழ் நாட்டுக்கு வந்துட்ட அவுக குடும்பத்தை…அங்கன யாருக்கும் தெரியவும் இல்ல..மொழிபிரச்சன வேற……அங்க அவுங்க சொந்தம்னு யாராவது வந்தாக்கூட தகவல் சொல்ல சொல்லி ஏற்பாடு செய்துட்டு தா வந்தே..இப்பவும் ஒரு கண்ணு வச்சுட்டு தா இருக்கே…நாள பின்ன உங்க வாழ்க்கைல எந்த குருக்கீடும் வந்திரப்படாதுன்னு…”
என்றவரின் அன்பும் அக்கறையும் கண்டு மனம் நெகிழ்ந்தது வனராஜனுக்கு..
குளிர் பானம் எடுத்து கொண்டு வந்த அத்தையை நிமிர்ந்து பார்க்க கூட திராணி இல்லாதவனாய்…காய்ந்து இருந்த மனதையும் தொண்டையையும் குளிர்விக்க , வாங்கி அருந்தியவன்..தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்
தன் வெளிநாட்டுப் பயணம் பற்றிய தகவல்களை மாமனிடம் தெரிவித்தவன் , “ உங்ககிட்ட சொல்ல தேவையில்லை மாமா… ஆனாலும்..மாம் அ பார்த்துக்கோங்க…. நான் அங்க போனதும் உங்களுக்கு பேசுறேன்….பேக்டரி ல செய்ய வேண்டியதும் அய்யாப்பாட்ட சொல்லி நான் பாலோ பண்ணிக்குறேன்.. இது எதுல இருந்தோ தப்பிச்சு ஓடுற மாதிரி இருக்கு..ஆனா இது முன்னமே பிளான் பன்னது..ஒரு வாரத்துல இல்லை பதினஞ்சு நாள்ல பெங்களூரு ல இருந்து கிளம்பிருற மாதிரி இருக்கும்…” என்றவன் சற்றே நிறுத்திவிட்டு ..” முடிஞ்சா அந்த பொண்ணை கொஞ்சம் தீவிரமா தேட சொல்லுங்க…இப்போ இன்டர்நெட் காலம்…தேடுறது எளிது…நானும் முயற்சிக்குறேன் என் நட்பு வட்டாரத்தின் மூலமா….வரேன் மாமா…அத்தை…… பிள்ளைக கிட்ட சொல்லிருங்க…” என்று அறை விட்டு வெளியேறியவனின் மனம் புயலிடை பட்ட சிறுபடகாய் தவித்தாலும், சற்றே செம்மையேறின விழிகள் …தேடல் தவிப்பு அனைத்தையும் தொலைத்து வெறுமையாய் இருந்தன..
சரியாக அதே நேரத்தில் வரவேற்பு அறையில் இருந்த தொலைக்காட்சியில் இசையருவி நிகழ்ச்சியில் பாடல் மாறி ஒலித்தது…
“ காற்றில் வரும் கீதமே……
என் கண்ணனை அறிவாயா…. “
கடந்து செல்ல இருந்தவனின் கால்கள் சற்றே தயங்கின அந்த இசையில்…..கொலுசொலி கேட்டு நிமிர்ந்தவனிற்கு நேர் எதிரே, முன் இருந்த அறைக்குள்ளிருந்து அவனின் நிலவு வெளியே வந்தது..
பிடித்த பாடலின் ஒலி கேட்டு வேகமாக வந்தவள் பாதையை நெடுமாலாய் அடைத்து நின்றவனைக் கண்டு, தயங்கி நிற்க….அவளின் விரிந்த விழிகளின் பார்வையே , குழம்பித் தவித்த தன் மனதை அமைதி படுத்துவதை உணர்ந்தவனுக்கு…ஏனோ அவளை கட்டி அணைத்து அந்த சிறு தோளில் முகம் புதைத்து அழவேண்டும் போல் தோன்ற ..தன் எண்ணம் செல்லும் அனர்த்த வழியைக் கண்டு திகைத்தவன்…..தனது பாண்ட் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்து மன கொந்தளிப்பை கட்டு படுத்தியவனாய் …கண்களை இறுக மூடியவன்…அடுத்து ஒரு கணமும் நிற்கவில்லை.. விறுவிறுவென்று நடந்து தன் மாமன் வீட்டை விட்டு வெளியேறினான்…
தன் வாகனத்தில் ஏறி நேராக தன் மாளிகையை அடைந்தவனின் விழிகள் தன் அன்னையைத் தேடின.
வழக்கம் போல் வரவேற்பில் அமர்ந்து தொலைக்காட்சியை நோக்கியவாறு இருந்த வேதநாயகி பேரனைக் கண்டதும் ,” மத்தியானம் சாப்பிட்டு போனவன்..இப்போ தான் வார.. வெளிநாடு வேற போறியாம்… வரவர பெரியவுக கிட்ட கேட்டு செய்யுறது அப்படின்னு எல்லாம் இல்லாம… பேச்சுக்கு மட்டுமருவாதியில்லாம போய்க்கிட்டு இருக்கு இந்த வீட்டில…” என்றவரை , அவன் பார்த்த பார்வையில் , அவரின் பேச்சு தானாக நின்றது.
“டாட் எங்க?”
“ நீ வெளிநாடு போறேன்னு கேட்டதும், உன் அக்கா கவுரிக்கு உன்னை பாக்கணும்னு தோணி ப் போச்சுது.அவ வரேணுன்னு சொன்னதும் காரை எடுத்துட்டு கூப்பிட போயிருக்கா..”
அன்னையைத் தேடிய அவனின் பார்வையை புரிந்தவராய்,”சாப்பாடு வேல முடிஞ்சா தூங்குறது தானே வேல உன் அம்மைக்கு..” என்றார் நக்கல் தொனிக்கும் குரலில்.
அவனின் வெறித்த பார்வையில் வேதநாயகி யின் முகம் மாறியது. மூச்சுக்கு முன்னூறு ‘க்ராண்ட்மா ‘ எனும் அவன் அழைப்பு , சரிக்கு சரியாக வாயாடும் அவனின் பேச்சு நின்று போயிருந்ததை அப்போது தான் உணர்ந்தவர் , ‘உச்சி வெயிலில் வெளியே போனவனை பேய்க்கீய் அடிச்சுருச்சோ!!முகமே சரியில்லையே ‘ என்று யோசனையில் ஆழ்ந்தார்.
வனராஜனின் கால்கள் அன்னையின் அறையை நோக்கி ச் சென்றன. ஒற்றைப் படுக்கையில் மெல்லியவிரிப்பின் மேல், நிர்மலமான முகத்துடன் துயிலும் அன்னையின் அற்பாயுள் கொண்ட தூக்க சுகத்தை கூட கலைக்க விரும்பாதவானாய் ஆழ்ந்து நோக்கியவாறு சிறிது நேரம் நின்றவன், சிறுமூச்சுடன் அந்த அறையை சுற்றி பார்த்தான்.
அன்னைத்தந்தைக்கு பொதுவான அறை என்று எண்ணியிருந்த அதன் அமைப்பில், தெரிந்த வித்தியாசங்கள்….தன் அன்னை வாழும் வாழ்வின் நெறி புரிந்தவனாய்..கனத்த இதயத்தோடு வெளியேறினான்.
தன் அறைக்கு சென்றவன் படபடக்கும் இதயத்தோடு மாமா தந்த காகித உறையை பிரித்து அதிலிருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தான். பதினெட்டு வயது பெண்ணின் படம்..அழகிதான்.. வனராஜனின் உதடுகள் ஏளனமாக வளைந்தன.
புகைப் படத்தை உள்ளே வைத்தவன் , முகவரி எழுதி இருந்த தாளைப் பிரித்தவன்…அந்த பெண்ணின் பேரைப் பார்த்து அதிர்ந்தான்…கௌரி கோபிசந்த்…
“டாட் இதிலுமா உங்களின் விளையாட்டு…’ என்று பாரமேறிய மனதை என்ன செய்து சமநிலை படுத்துவது என்று அவனுக்கு புரியவில்லை..
முகத்தை மூடியவாறு அமந்திருந்தவன் கீழே கார் வந்து நிற்கும் ஒலி கேட்டு, எழுந்து தன் அறைவிட்டு வெளியே வந்தான்.
அவனின் அக்கா வேதகௌரி தன் கணவர் குழந்தைகளோடு உள்ளே வருவதைப் பார்த்தவன்.. வேகமாக கீழே இறங்கினான்.
அவனுக்கு குறையாத பாசத்தோடு அவனை நோக்கி விரைந்து வந்தாள் வனராஜனின் அக்கா வேதகௌரி… தன் சகோதரனை நெருங்கியவள், பாசத்துடன் கைகளை பற்றிக்கொண்டு ,” எப்படி இருக்க தம்பி? “ அவ்வளவு நேரமிருந்த இறுக்கம் சற்றே தளர, சிறு முறுவலுடன் தலை அசைத்தான்.
“நீ???”
என்றவன் அவளுக்குப் பின்னே தோளில் குழந்தையை சுமந்தவாறு வந்து கொண்டிருந்த தன் மச்சான் சிவபிரசாதைப் பார்த்தவுடன் மரியாதையுடன் சிரித்தவாறு,”வாங்க மச்சான்” என்றான்.
தன் தமக்கையின் பற்றிய கையை விடாமல் இடது கையால் தோளை சுற்றி அணைத்தவன், தன் தந்தை சௌந்தர ராஜனின் கையைப் பற்றியவாறு வந்து கொண்டிருந்த அக்காவின் மூத்த மகனை பார்த்து மேலும் மலர்ந்தான்..
என்றோ ஒரு முறை பார்க்கும் மாமனைக் கண்டு சற்றே மிரண்டாலும் சிரித்தவாறே வந்து , தனக்கு சொந்தமான அன்னையை அணைத்து நிற்கும் அவனின் முன்பு தன் உரிமையை நிலைநாட்ட நினைத்தவனாய் , அவளின் கால்களை கட்டிக் கொண்டான் சிறுவன்.
அவனின் செய்கையில் வனராஜனுக்கு சிரிப்பு வர….அவனின் இரு கைகளுக்கு அடியில் பற்றித் தூக்கியவன்… தலைக்கு மேலே உயரே தூக்கி போட்டு பிடித்து அங்கிருந்தவரகளை அலற வைத்தான்..
தரையிலிருந்து எட்டடி தூரத்திற்கு மேல் பறந்து சென்று விட்டு திரும்பவும்..மாமனின் கைகளில் வந்து அடைக்கலமான மருமகன் உற்சாகம் தாங்க இயலாமல் “ ஹீய்யய் “என்று கத்தி சிரித்தான்.
அரவம் கேட்டு வெளியே வந்த சொர்ணக்கிளி , வெகு நாட்களுக்கு பின் கண்களும் உதடுகளும் இணைந்து மலர்ந்த சிரிப்புடன், கால்கள் மகளை நோக்கி இழுத்து வந்தாலும், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மருமகனை மரியாதையுடன் நோக்கிக் கரம் கூப்பி ,” வாங்க மாப்பிள்ளை!!!” என்றார்.
“மாமா மாமா இன்னொரு முறை!!!” என்று வேண்டுகோள் வைத்த மகனின் முதுகில் செல்லமாய் ஒரு அடி போட்ட வேதகௌரி,”அடேய்!!!!!! எனக்கு நெஞ்சே 1 நிமிஷம் நின்னு போச்சு” என்றவள்…சற்று எம்பி சகோதரனின் தலையில் குட்டினாள்..
இந்த களேபரத்தில் முழித்த வேதகௌரியின் சின்ன மகன், புது இடம் புது ஆட்களைக் கண்டு சிணுங்கத் தொடங்கினான்.
அவனின் அருகில் சென்ற வனராஜன்,” ஹா ஹா என்னைத்தான் தெரியாதுன்னு பார்த்தா யாரையுமே தெரியாதா இவனுக்கு..” என்று சிரித்தவன், தன் பாக்கெட்டில் இருந்த இருசக்கர வாகனச் சாவியின் இணைப்பாக இருந்த வண்ணமயமான சிறு பொம்மையை ஆட்டிக் காட்டியதும், அதை பற்றிக் கொள்ள கை நீட்டினான் ..நீட்டிய கையை பற்றி லாவகமாக இழுத்து அவனையும் தூக்கிக் கொண்டான் வனராஜன்.
இரு கைகளில் இரு மருமகன்களைத் தாங்கியவாறு நின்ற வனராஜனைக் கண்டவர்கள் அனைவரின் மனமும் நிறைந்தது.
“ வந்தவுகளுக்கு காப்பி பலகாரம் எடுத்து வையுங்க “ என்று ஏவிய மாமியாரைப்பார்த்த சொர்ணக்கிளி நகர தொடங்க, அவரின் கைப்பற்றி தடுத்த வேதகௌரி,” வரும் போது தான் குடிச்சுட்டு வந்தோம்ம்மா..பிள்ளைகளுக்கு மட்டும் பால் ஆத்தனும்.. நீங்க உங்க பேரபிள்ளைகளோட இருங்க நான் செய்யறேன் “ என்றவள் சமையலறை நோக்கி சென்றாள்.
பிள்ளைகளை இறக்கி விட்டவன் , தன் சகோதரியின் பின்னே சென்றான். தன் வேலையில் கவனமாய் இருந்தவளை பாசத்துடன் நோக்கி, “ சந்தோஷமா இருக்கியா அக்கா?” என,
சிரிப்புடன் ,” என்ன பெரிய ஆள் ஆகிட்டியா விசாரிக்கவெல்லாம் செய்யுற?”, என்று கிண்டலடித்தவள்,” ம்ம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..நீ சிவாசி தாண்டி தான் வர்ர.. போற ..ஒரு முறையாவது வந்து எட்டி பாக்குறவனில்லை..வந்திருந்த தெரியும்.நா எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு…” எனவும்,
நெற்றியை ஒருவிரலால் கீறியபடி சங்கடமான சிரிப்பை சிந்தியவன்,” இவ்ளோ நாள் தோணலை..இனி வரேன் “ என்றான்.
“ ம்க்கும் ..இந்தியால இருந்தப்ப வர்லையாம் இனி ஜெர்மன் போனதுகாப்புறம் வருவியாமா!!! நம்பிட்டேன் “ என்றவள்…” ஏன் முகம் டல்லடிக்குது… நாட்டை விட்டுப் போறோமின்னா…உன் பெண் தோழிகளை விட்டு போறோமின்னா!!” எனவும் தலையை பின்னிக்குத் தள்ளி சிரித்தவன்,
“ கண்டுபிடிச்சுட்டியே புத்திசாலி தான்” எனவும் மிதப்பாய் பார்த்தவாறு தன்கழுத்துப் பக்கம் கையைக் கொண்டு சென்றவள் காலர் இல்லாத குறைக்கு, கழுத்தில் இருந்த சங்கிலியை தூக்கி விட்டுக் கொண்டாள்.
வனராஜனின் அலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தவன் பேசியவாறே தன் அறை நோக்கி சென்றான்.. வெளிநாடு செல்லும் விவரங்களை தாங்கிய முக்கிய உரையாடலில் ஈடுபட்டு இருந்தவனின் அறைக்குள், கையில் காப்பிக் கோப்பையுடன் அவனின் அக்கா வேதகௌரி உள்ளே நுழைந்தாள். கோப்பையை அங்கிருந்த சிறு மேஜையில் வைத்தவள், படுக்கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து கையில் எடுத்தாள்…
**********************************
புயலாய் தாக்கும் காற்று…
மரங்களை சாய்ப்பது உண்டு…
மழையும் தருவது உண்டு…
சாய்ந்த மரம் பார்த்து கண்ணீர் விடவா!!!
மழையால் மலர்ந்த புதுப்பூக்கள் கண்டு மகிழவா!!
சீறும் நதி கண்டு குதித்து ஓடவா…
நிறைந்த குளங்கள் கண்டு மகிழவா!!!
ஆர்ப்பரிக்கும் அலைகள் கண்டு மிரளவா.. அடித்துச்செல்லும் கசடுகள் கண்டு அமைதியுறவா!!
வாழ்வெனும் அதிசயம்…
வண்ணம் மாற்றிக் காட்டும் ..
விழிகளை நிறைக்கும்…
விழிகளை விரிக்கும்…
நித்தமொரு பாடம்
கற்பித்துச் செல்லும்…….
*******************
கிளி பேசும்………