Fri. Oct 18th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 9/10

(9)

 

மாலை ஐந்து மணியளவில் பெரும் ஆர்ப்பாட்டத்தோடு வந்து சேர்ந்தார் பவானி. யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்றால் என்ன என்கிற அர்த்தத்தைப் பவானியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

“என்னப்பா தெரு இது… ஒரே குண்டும் குழியுமாக… சே சே… இங்கே வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

‘அதற்கு நாங்கள் என்ன செய்வது? அரசாங்கம் அல்லவா அதைச் சரிப்படுத்த வேண்டும். எந்தக் காலத்தில் எங்கிருந்து குண்டு வரும் என்று அஞ்சி நடுங்கும் இந்த நேரத்தில் தெருவைப் பற்றியா கவலைப் படுவார்கள்?’

“ஏன்பா… ஷெல் விழுந்து மதில் உடைந்திருக்கிறதே… சரிப்படுத்துவதற்கு என்ன?”

“பணம் நீங்களா கொடுக்கப் போகிறீர்கள்?”

“வாசலில் மாடு சாணம் போட்டிருக்கிறதே… நாங்கள் வருகிறோம் என்று தெரியும்தானே… சுத்தப்படுத்துவதற்கு என்ன?”

“முழுவியலத்திற்கு நல்லமாம்… அதாவது எங்கள் முழுவியலத்திற்கு… அதுதான் வாசலில் போட்டிருக்கிறோம்…”

“என்ன இது… ‘வாங்கு’ (மரத்தாலான நீளிருக்கை) இத்தனை அழுக்காக இருக்கிறது… ஒரு துணி கொண்டு வாம்மா துடைக்க…”

“அதில் உட்கார்ந்து இரண்டு தேய் தேயுங்கள் தானாகத் துடைபட்டுக் கொள்ளும்…” இத்தனை கேள்விக்கும் மனதிற்குள் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உதடுகள் என்னவோ ‘ஈ’ என்று இழித்துக்கொண்டுதான் இருந்தன அம்மேதினிக்கு.

அம்மேதினிக்கு பொதுவாகவே பவானி அம்மாளைப் பிடிக்காது. அவரின் இரண்டு மகன்கள், வெளிநாட்டில் இருப்பதால், வசதிக்கு எப்போதுமே குறைவிருந்ததில்லை. அதுவும் அவர்களுடையது இரண்டு அடுக்குகள் கொண்ட மாடி வீடு. பிறகு சொல்லவும் வேண்டுமா? அதனால் அந்த அம்மா கொஞ்சம் என்ன தாராளமாகவே வாயைக் கொடுப்பார். ஆனால் பிடுங்க மாட்டார். ஏன் எனில் பிடுங்குவதற்கு மற்றவர்கள் வாய் திறக்கவே முடியாது.

இரண்டு ஆண்பிள்ளைகளுக்குப் பின் பிறந்தவள்தான் ரோகிணி. அவளின் மீது பவானிக்கு அளவு கடந்த பாசம். உலகிலேயே அவள் மகள் மட்டும்தான் வடிவானவள், புத்திசாலி, படித்தவள், வல்லவள், நல்லவள், நாலும் தெரிந்தவள், இத்தியாதி எல்லாம். அதனால் இருபத்து மூன்று வயதான ரோகிணிக்கு மாப்பிள்ளைகளின் பட்டியலில் வைத்தியர், பொறியியலாளன் இவை இல்லையென்றால் போனால் போகிறது என்று கணக்காளர்களுக்கு மட்டுமே இடமுண்டு.

இத்தனை பிரச்சனையான காலத்திலும் மாப்பிள்ளைகளின் வியாபாரம் என்னவோ நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதுவும் வைத்தியர், பொறியியலாளர்கள் என்றால் அதன் பெறுமதியே வேறு. பல லட்சங்கள். அது சரி, வெறும் லிகிதராக வேலை செய்பவருக்கே ஐந்து லட்சம் பணம், நகை என்று கொடுக்கவேண்டும். இதில் வைத்தியர் பொறியியலாளர் என்றால் அதன் விலையைப் பற்றிச் செல்லவும் வேண்டுமா என்ன? இவர்களுக்கு வசதி இருந்தது. லட்சம் என்ன கோடியும் கொடுப்பார்கள். சாமானியபட்டவர்களுக்கு முடியுமா என்ன?

இரண்டு சகோதரர்களுக்குப் பிறகு பிறந்த பெண் என்பதாலும் நிறையச் செல்லம் கொடுத்தாலும் ரோகிணி சற்றுத் தான் தோன்றி வகையறாதான். சொன்னது நடக்கவில்லை என்றால் விட்டை மட்டுமல்ல உலகத்தையே கிடுகிடுக்க வைத்துவிடுவாள். அதற்காகவே அவள் ‘ம்’ என்றால் அன்னையும் தந்தையும் எண்ணெய்யாக இருப்பார்கள்.

இதனாலேயே அம்மேதினி துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல அவளைக் கண்டாலே அந்த இடத்தை விட்டு ஓடி விடுவாள். அதுவும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பறந்துவிடுவாள்.

அதற்காக ரோகிணியின் மீது பயம் என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. இவளுடைய வாயோ உலகம் வரைக்கும் நீளும். அவளுடைய வாயோ அண்ட சராசரம் வரைக்கும் அகலும். பிறகு என்ன? அங்கே இருப்பவர்களின் கதி? அதனால் சுற்ற உள்ளோர் நலன் கருதித் தானாகவே விலகிக் கொள்வாள் அம்மேதினி. இப்போது வாசலில் அவர்களை வரவேற்க நின்றதற்குக் காரணம் கூட அன்னைதான். இல்லை என்றால் திட்டுவாளே. எப்போதும் போல எதுகை மோனை வசனங்கள் உதவும் என்று சொல்ல முடியாது அல்லவா.

பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வீட்டிற்கு வந்தவர்களை யசோ உள்ளே வருமாறு அழைக்க, அவர்களோ நாசுக்காகவே முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டனர். உள்ளே வந்து அமர்வதற்கு யசோவின் தகுதி போதாது போலும்… உதட்டைச் சுழித்த அம்மேதினிக்கு ஏனோ மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.

இந்தம்மா தகுதி கருதி வீட்டிற்கு வெளியே உட்காருகிறார்கள்… வீட்டிற்கு வரும் பிச்சைக் காரரைக் கூட உள்ளே விடுவதில்லைதானே. அதை எண்ணியதும் இவளையும் மீறி உதடுகள் பிளந்து சிரிப்பை வெளி விட, அதைக் கண்ட பவானியின் விழிகள் சுருங்கின.

“என்ன குமர்ப் பிள்ளைக்குச் சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது…?” என்று கடுமையாகக் கேட்க, எதையோ சொல்ல வாய் எடுத்தவள் அன்னை பார்த்த பார்வையில் கப்பென்று மூடிக் கொண்டவளாக,

“ஹீ… ஹீ…” என்றாள் பதிலுக்கு.

பவானியோ கோபத்துடன் அவளைப் பார்த்துவிட்டு, “இதற்குமா சிரிப்பு… நன்றாகத்தான் பிள்ளை வளர்த்திருக்கிறாய்…” என்று யசோதாவைப் பார்த்துக் கூறிவிட்டு உர்ர் என்றிருந்த தன் மகளைப் பெருமையாகப் பார்க்க, அம்மேதினியின் முகம் கறுத்துப் போனது.

‘சிரிப்பது குற்றமென்றால், அந்தச் சிரிப்பை மனிதனுக்குள் வைத்த இறைவனும் குற்றவாளியாயிற்றே.’ ஆத்திரத்துடன் எதையோ சொல்ல வாயெடுக்க,

“எங்கே கந்தழிதரன் தம்பி…? அவனைப் பார்த்து எத்தனை காலங்கள் ஆகிவிட்டன… எப்படி இருக்கிறான்…” என்று அவர்கள் கேட்டதும், யசோ அம்மேதினியைப் பார்த்தாள். ‘தம்பியை அழைத்து வாம்மா…’ எனக் கண்களால் கேட்க,

‘இவர்கள் என்ன பெண் பார்க்க வந்திருக்கிறார்களா? அவனை அழைத்து வர?’ என்று எண்ணியவாறு அன்னையைப் பார்த்து முறைத்தாலும், அவளையும் மீறிக் கந்தழிதரன் சேலை உடுத்திப் பொட்டிட்டுப் பூ வைத்து நாணி கோணி நிற்க, இவள் அழைத்து வருவது போலக் காட்சி மனக் கண் முன் வர, அதற்கு மேல் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அங்கே நின்றால் நிச்சயமாகச் சிரித்துவிடுவோம் என்பதைப் புரிந்தவளாக, உள்ளே நுழைந்தவளுக்குப் பீறிட்டு எழுந்த சிரிப்பில் உடல் குலுங்கியது.

பொங்கிய சிரிப்பு மாறாமலே அவனுடைய அறைக்கு முன்னால் வந்தவள், கதவைத் திறப்பதற்காகக் கரத்தை உயர்த்த, ஏனோ சிறு தயக்கம் எட்டிப் பார்த்தது. கூடவே புன்னகையும் வற்றிப் போயிற்று.

அந்த அறை என்னதான் அவளுடையதாக இருந்தாலும், சுயமாக உள்ளே நுழைய முடியவில்லை. முன்பென்றால் அவன் மீது துள்ளிக் குதித்தே எழுப்பியிருப்பாள். பல முறை அப்படித்தான் அவனை எழுப்பியிருக்கிறாள். அதை எண்ணியதும் தன் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி ஒரு பக்கம் கோபமாக இருந்தாலும், மறுபக்கம் மெல்லிய நகைப்பும் தோன்றவே செய்தது.

தன் தயக்கத்தை உதறிவிட்டு மெதுவாகக் கதவை இரண்டு முறை தட்டிப் பார்த்தாள். உள்ளிருந்து பதில் வராததால், கதவைத் திறந்து உள்ளே நுழைய, அங்கே கந்தழிதான் கட்டிலில் குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். தலை இவள் பக்கம் திரும்பியிருந்தது.

மெதுவாக அவனை நெருங்கியவள், சற்று நேரம் தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம்தான் எத்தனை மாற்றங்கள். முகம் கூடச் சற்று அகன்று இருந்தது. முகத்திலிருந்த தாடி மீசை அவனுக்கு மேலும் கம்பீரத்தைக் கொடுக்க, முதன் முறையாக அவனை அடையாளம் காண முடியாமல் போனதற்குக் காரணம் அந்தத் தாடி மீசைதான் என்பது புரிந்தது. பாவம் கைநீட்டி வேறு அடித்துவிட்டாளே.

ஏனோ மீண்டும் அவள் எட்டு வயது சிறுமியாகவும், அவன் பதினெட்டு வயது இளையவனாகவும் மாறிவிடமாட்டோமா என்கிற ஏக்கம் பிறந்தது. அப்போது போல விகல்பமில்லாது, வெள்ளை மனதோடு அவனோடு கூடிக்குழாவ மனம் ஏங்கியது. இனி அது எப்போதுமே முடியாத ஒன்றாயிற்றே. ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவளுக்குப் பவானி அம்மாவின் நினைவு வந்தது.

இப்போது ஏக்கம் போய் அங்கே கோபம் எட்டிப் பார்த்தது. ‘அங்கே யானைக் குட்டியை இருத்தி வைத்துக்கொண்டு இங்கே இவனுக்குத் தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது…’ மெதுவாக அவன் அருகே சென்று அவனைத் தட்டி எழுப்புவதற்காகக் கரத்தை நீட்டியவள், என்ன நினைத்தாளோ அவசரமாகக் கரத்தை இழுத்துக் கொண்டவளாகக் கனைத்துப் பார்த்தாள்.

அசைந்தானா அவன்? ‘கும்பகர்ணன்…’ என்று முணுமுணுத்தவாறு உதடுகளைச் சுழித்தவள் என்ன செய்யலாம்’ என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அருகே செம்பு தெரியக் கண்களில் மின்னலுடன் அதை நெருங்கினாள்.

எடுத்துப் பார்க்க அரைவாசிக்குத் தண்ணீர் இருந்தது. குதுகலத்துடன் அதைக் கரங்களில் எடுத்தவளின் உதடுகளில் மெல்லிய நகைப்பு ஒன்று படர்ந்தது.

‘மாட்டினாயா மகனே…’ வந்த அன்று என் மீது சுடு தேநீர் ஊற்றினாய் அல்லவா… அதற்குப் பதிலுக்குப் பதில்… தண்ணீர் அபிஷேகமே செய்கிறேன்…’ என்று உள்ளுக்குள் கறுவியவள், வேகமாக அவனை நெருங்கி யோசிக்கச் சற்றும் அவகாசம் எடுக்காமல் அப்படியே அவன் முகத்தில் கவிழ்க்க, அத்தனை தண்ணீரும் மொத்தமாய் அவனுடைய முகத்தில் கொட்டியது.

ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவன், தண்ணீர் விழுந்ததும் பதறி அடித்து விழிகள் சிவக்க எழுந்தமர, சற்று நேரம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மலங்க மலங்க விழித்தவன், அருகே அம்மேதினி தண்ணீர்ச் செம்புடன் இருப்பதைக் கண்டதும், அவனுக்குச் சுறு சுறு என்று கோபம் தலைக்கேறியது.

“என்ன காரியம் செய்தாய்?” என்று சீறியவாறு எழுந்தவன், அவளை நோக்கி இரண்டடி வைக்க, அவனுடைய இந்தச் சீற்றத்தை எதிர்பார்க்காதவள் பயத்தோடு, அந்த இடத்தை விட்டு ஓடும் நோக்கில் கதவை நோக்கி ஓட, மறு விநாடி கந்தழிதரனுடைய பெரிய உருவம் கதவை மறைத்தவாறு நின்றிருந்தது.

ஒரு கணம் ஒரே கணம் அச்சத்தில் தடுமாறியவள் பின் அவனை முறைத்துப் பார்த்து,

“என் மீது… தேநீர் ஊற்றினீர்கள் அல்லவா… அதற்குப் பதிலுக்கு… ப… பதில்…” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, கந்தழிதரன் அவளை நோக்கி ஓரடி வைத்திருந்தான்.

இப்போது அவனுடைய உருவம் அவளை நெருங்கியிருக்க, இவளோ பதட்டத்துடன் ஈரடி பின்னால் வைத்து,

“அது… உங்களைப் பார்க்க…” என்று அவள் முடிக்கவில்லை, கந்தழிதரனின் வலது கரம் அவளுடைய இடது கரத்தை இறுகப் பற்றிக்கொண்டது.

இவளோ பதற்றத்துடன் தன் கரத்தை விடுவிக்க முயல, அவனோ அவளைத் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்போடு மோதி நின்றவளை அசைய விடாது பற்றிய கரத்தைப் பின் பக்கமாக வளைத்துக் கீழ் முள்ளந்தண்டில் பதித்துத் தன்னை நோக்கி இறுக்கியவாறு, ஆத்திரத்துடன் முறைத்து,

“என்னடி… போனால் போகிறது பாவம் சின்னப்பிள்ளை என்று பார்த்தால் உன் ஆட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது… இப்போது எதற்காக என் மீது தண்ணீரை ஊற்றினாய்? தூங்கிக்கொண்டிருப்பது தெரியவில்லை… யார் சொல்லித் தந்த பழக்கம் இது…? எங்கே கற்றுக்கொண்டாய்” என்று அவன் கர்ஜிக்க, அவளோ முதன் முறையாக அவனுடைய கடுமையில் உள்ளம் நடுங்க, நெஞ்சம் பதற அவனைப் பார்த்தாள். அவனோ இன்னும் தன் பிடியை அழுத்தி,

“யு ஹாவ் டு லேர்ன் சம்திங் மை டியர் பேபி கேர்ள்…” என்றவன் அவளைப் படுக்கையை நோக்கித் தள்ள, அதைச் சற்றும் எதிர்பாராதவள். தொபீர் என்று மல்லாக்காக விழுந்தாள்.

அதிர்ந்தவள், பதட்டத்துடன் எழ முயல, அவனோ சடார் என்று அவள் எழா வண்ணம் குறுக்காகத் தன் இரு கரங்களையும் பதித்து அந்தக் கரங்களின் பலத்தில் தன் உடலைத் தாங்கி நின்றவாறு அவளைக் குறுகுறு என்று பார்த்தவன்,

“உனக்குத் திமிர் சற்றுக் கூடித்தான் போய்விட்டது. நானும் போனால் போகிறது என்று பார்த்தால் ஏகத்திற்குத்தான் எகிறுகிறாய்… உனக்கு அத்தை நிறையச் செல்லம் கொடுத்து விட்டார்கள். அதுதான் இப்படித் தான்தோன்றியாக ஆடுகிறாய். இப்படியே விட்டால் சரி வராது… உன்னுடைய திமிரை அடக்கியே ஆகவேண்டும்…” என்றவன், சுற்றும் முற்றும் பார்க்க, அம்மேதினி வெலவெலத்துப் போனாள்.

நடுக்கத்தோடு அவன் மார்பில் கரங்களை வைத்துத் தள்ள முயன்றவாறு,

“தள்ளுங்கள்…. வீட்டுப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாதா? மரியாதையாக விடுங்கள் என்னை…” என்று திமிறியவாறு மூச்சிரைக்கச் சொன்னவளை ஆழ்ந்து பார்த்தான் கந்தழிதரன்.

“வீட்டிற்கு விருந்தினராக வந்திருப்பவர்களிடம் எப்படி நடக்கவேண்டும் என்று உனக்குத் தெரியாது. தேநீரில் உப்புக் கலப்பது, படுக்கையில் நெரிஞ்சி முற்களைப் பரப்புவது, இதோ இப்படித் தண்ணீரை முகத்தில் ஊற்றுவது, இது எல்லாம் எந்த நாட்டு நாகரீகம்… எங்கே கற்றுக்கொண்டாய்? உனக்கெல்லாம் லதர் பெல்ட் தான் சரி வரும்…” என்று சொன்னவனின் முகம் கோபத்தால் ஜொலிக்க, அதைக் கண்ட அம்மேதினியின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டியது.

லதர் பெல்ட்டா…? ஒரு வேளை அதனால் இவளை அடிக்கப் போகிறானோ… அச்சத்தில் உடல் நடுங்க,

“ப்ளீஸ் கந்து… அது… அது வந்து… உன்னைப் பார்க்க ஆட்கள் வந்திருக்கிறார்களா… உன்னை எப்படி எழுப்புவது என்று எனக்குத் தெரியவில்லை… அதுதான் அப்படி… கொஞ்சம் தண்ணீர் எடுத்துத் தெளிக்கத்தான் நினைத்தேன்… கந்து… ஆனால் பார்… கை வழுக்கி… செ… செம்… செம்பு தவறிக் கவிழ்ந்துவிட்டது…” என்றபோதே தான் செய்த தவற்றின் உறுத்தலாலும், பொய் சொன்னதால் வந்த தயக்கத்தாலும், குரல் மெல்லியதாக நலிந்து போயிற்று.

கூடவே அவள் விழுந்திருந்த படுக்கை அவளுடைய படுக்கையாக இருந்தாலும், அவன் படுத்திருந்ததால் ஏற்பட்ட வெம்மையும் அவனுக்கே உரித்தான அந்தப் பிரத்தியேக மணமும் அப்படியே அவள் உடலுக்குள் பரவுவது போலத் தோன்ற ஒரு வித அவஸ்தையில் நெளியவும் செய்தாள். நெளியும் போது இரு பக்கமும் அணையாக அமைத்திருந்த அவனுடைய கரத்தின் ஸ்பரிசம் வேறு அவளுடைய உடலுக்குள் புதுவித மாற்றத்தைக் கொடுக்க, அது என்ன என்று புரியாத தவிப்பில்,

“நா… நான் போகவேண்டும்… வி… விடுங்களேன்…” என்று கேட்டபோது அவளையும் மீறி விழிகளில் கண்ணீர் எழும்பத்தான் செய்தது. ஆனாலும் அவன் முன்னால் அழுது தன் பலவீனத்தைக் காட்டவும் விரும்பவில்லை. அதன் காரணமாக விழிகளை இறுக மூடி,

“தயவு செய்து… விடுங்கள்…” என்றவாறு கீழ் உதட்டைத் தன் பற்களால் அழுந்த பற்றி முகம் சிவக்க நின்றிருக்க, அந்த ஆண்மகனின் ஈரம் படிந்த முகமோ கலங்கிய அவளுடைய முகத்திற்கு நேராக வந்து நின்றது.

அவனையும் மீறி விழிகள் சிறைப்பட்ட உதடுகளில் நிலைத்திருக்க, ஏனோ அவற்றிற்கு வலிக்குமே என்று சிரத்தை கொண்டவன் போல வலது கரத்தைத் தூக்கி அந்த உதடுகளை விடுவிக்க, சற்று அழுந்த கடித்திருந்தாள் போலும். இளம் சிவந்த உதடுகள் இப்போது செந்நிறத்தைப் பூசிக்கொண்டிருந்தன. அந்தச் செழித்த உதடுகளில் கவரப்பட்டவனாக அவற்றை ரசனையோடு ஏறிட, ஏனோ குனிந்து அந்த உதடுகளை வசமாக்கவேண்டும் என்கிற ஒரு அவதி அவனுக்குத் தோன்ற விதிர் விதிர்த்துப் போனான் கந்தழிதரன்.

கடவுளே… என்ன சிந்தனை இது… அவனுடைய அம்மணியையா தப்பாகப் பார்க்கிறான்… நம்ப மாட்டாதவனாகத் தன் தலையைக் குலுக்கியவன், பெரும் பதட்டத்துடன் அவளை விட்டு விலகி எழுந்து தவிப்புடன் ஈரமாகிப்போன தன் தலை முடியைக் கரத்தால் மேவி இழுத்துக் கொள்ள, இவளோ விட்டால் போதும் என்று அவசரமாகப் படுக்கையிலிருந்து கீழே இறங்கி அவ்விடத்தை விட்டு ஓட முயல, அவனோ, அவளுடைய கரத்தை மீண்டும் அழுந்தப் பற்றினான். அம்மேதினி பயமும் படபடப்பும் போட்டிப்போட, திரும்பி நிமிர்ந்து பார்க்க,

“எப்போதும்… எந்தச் சந்தர்ப்பத்திலும், ஆண் மகன் தனியாக இருக்கும் அறைக்குள் நுழையாதே… புரிந்ததா?” என்றான் சற்று அழுத்தமாக. இவளோ பயத்துடன் அவனை ஏறிட்டு ஆம் என்பது போலத் தலையாட்டிவிட்டு ஓட, இவனோ செய்வதறியாது படுக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

‘இன்னும் அவனால் நம்பவே முடியவில்லை. அவளுடைய முகத்தை எதற்காக ரசனையாகப் பார்த்தோம். அதுவும் அவளுடைய உதடுகளை முத்தமிட வேண்டும் என்று ஏன் நினைத்தோம்… எனக்கு என்னவாகிவிட்டது’ என்று பலவாறாக எண்ணியவனுக்குப் பதில் மட்டும் கிடைக்கவில்லை.

‘தூக்கக் கலக்கம், அதனால் வந்த தடுமாற்றம்… அதுதான் அப்படித் தவறாக எண்ணிக்கொண்டோம், மற்றும்படி எதுவுமில்லை…’ என்று தன்னைச் சமப்படுத்திக் கொண்டவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர..

இன்னும் கந்தழிதரன் வரவில்லை என்பதை உணர்ந்த யசோதா, அவன் அறை நோக்கிச் சென்று,

“கந்தழி… பவானி அத்தை வந்திருக்கிறார்களப்பா… வருகிறாயா?” என்று அறை வாசலில் நின்று கேட்க, ஒருவாறு தன்னைச் சமாளித்தவனாக,

“இதோ… ஐந்து நிமிடங்கள் தாருங்கள்… முகம் கழுவிவிட்டு வருகிறேன்…” என்று கூறிவிட்டு, எழ, சரிதான் என்று விலகிச்சென்றார் யசோதா.

 

(10)

 

முகம் கழுவும்போதே கந்தழிதரனின் எண்ணங்களும் பழையது போலவே திரும்பி விட்டிருந்தன. ‘அவன் நிச்சயமாகத் தப்பாக எண்ணவில்லை. அந்த இடத்தில் அம்மேதினி வேறு ஒருத்தியாகத் தெரிந்திருக்கிறாள். அதனால்தான் அவ்வாறு நினைத்திருக்கிறான். மற்றும்படி ஒன்றுமில்லை… ஒன்றுமேயில்லை…’ என்று சமாதானப்படுத்திவிட்டு நிமிர்ந்த போது, மனம் சுத்தமாகியிருந்தது.

விருந்தினர்களைப் பார்ப்பதற்குத் தோதாக ஆடையணிந்து கந்தழிதரன் வெளியே வந்தபோது, அவனுக்கு வரவேற்பு மிகப் பலமாக இருந்தது. அவனைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக்கொண்ட பவானி,

“கந்தழிதரன்… எப்படியப்பா இருக்கிறாய். நிறைய மாறிவிட்டாயே…” என்று உருக, அவருடைய அணைப்பில் அதுவரை குறைந்திருந்த இடுப்புவலி சற்று அதிகரிக்க, ஒரு கணம் திணறியவன், மெதுவாக அவரிடமிருந்து தன்னை விடுவித்தவனாக,

“எனக்கென்ன அத்தை… நான் நன்றாகத்தான் இருக்கிறேன்… நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் பெரியத்தை…” என்றான் உண்மையான மகிழ்ச்சியுடன்.

“ஐயோ பார்த்தீர்களா… என்னுடைய மருமகன் இன்னும் என்னை மறக்கவில்லையே…” என்று பவானி ஆர்ப்பணிக்க, இவனோ புரியாமல் விழித்தவனாக,

“அத்தை நான் என்ன சந்திரமண்டலத்திற்கா போனேன் உங்களை மறந்து போக… இதே உலகத்திலிருக்கிற கனடாவிற்குத்தானே. அப்படியே அங்குப் போனாலும் என் உறவுகளை எப்படி மறப்பேன்… அதுவும் வெறும் ஐந்து வருடங்களுக்குள்.” என்று கேட்டவனைப் பெருமையோடு பார்த்த பவானி, தன் முன்னால் திணாவெட்டுடன் அமர்ந்திருந்த ரோகிணியைக் காட்டி,

“இவளைத் தெரிகிறதா?” என்றார். அவளைக் கண்டதும் முகம் பளிச்சிட,

“அட… ரோகிணி… எப்படி இருக்கிறாய்?” என்று அவன் கேட்க அது வரை இதுதான் கந்தழிதரனா என்று நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்த ரோகிணிக்கு வினாடிக்குள் உள்ளத்தில் தாமரைப் பூ மலர்ந்தது.

விழிகள் படபடக்க,

“ஹாய்… அத்தான்… எப்படி இருக்கிறீர்கள்…” என்று எழுந்து தன் வலக்கரத்தை நீட்ட, அவனும் மறுக்காமல் அக்கரத்தைப் பற்றிக் குலுக்கியவாறு,

“எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்…” என்றான்.

“கனடா எப்படி இருக்கிறது… பிடித்திருக்கிறதா அத்தான்…” என்று ரோகிணி கேட்க,

“ம்… சொந்த ஊர் போல வராது… ஆனால் மிகப் பாதுகாப்பான இடம் ரோகிணி…. சண்டையில்லை, சச்சரவில்லை… எப்போது குண்டு விழும் என்கிற அச்சமில்லை…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அம்மேதினி அங்கே இருப்பவர்களுக்குத் தேநீர் குவளைகளை ஒரு தட்டில் வைத்தவாறு வந்து கொண்டிருந்தாள்.

வந்தவளின் பார்வை, இணைந்திருந்த இரு கரங்களையும் கண்டு வாய் ஆ எனப் பிளக்க, விழிகளோ தெறித்துவிடும் போல விரிந்த நிலையில், பற்றிக் குலுக்கிக்கொண்டிருந்த இரு கரங்களையுமே வெறித்துப் பார்த்தன. ஏனோ சிவு சிவு என்று கோபம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எகிறத் தொடங்கியது. மூக்காலும் காதுகளாலும் கண்ணுக்குத் தெரியாத புகை வேறு பறக்கத் தொடங்க, அடிவயிறோ பொறாமையில் சுண்டி இழுக்கத் தொடங்கியது.

‘டேய்… டேய்… கை குலுக்கியது போதும்… இறக்குடா?’ என்று தனக்குள் சீறியவள், அசைய மறந்தவளாக அவர்களையே இமைக்காது பார்த்தாள்.

இவளுடைய நிலையைப் புரிந்துகொள்ளாத இருவருக்குமே கரங்களை இறக்கும் எண்ணம் சிறிதும் இருக்கவில்லை.

“சோ நீ என்ன செய்கிறாய் ரோகிணி…” என்று அவன் அன்பாகக் கேட்க,

‘ம்… கோவிலில் பிச்சை எடுக்கிறாள்…’

“நானா… பி ஏ இந்த வருடம்தான் முடிக்கிறேன் அத்தான்…” என்றதும் அவளுடைய அத்தானில் இவளுடைய கரத்திலிருந்த தேநீர் தட்டம் ஒரு முறை ஆடி அடங்க, மனமோ, ‘என்னாது… அத்தானா… அவன் இனி செத்தான்…’ என்று எண்ணினாள் பெரும் கடுப்புடன்.

“ரியலி… என்ன பாடம் எடுக்கிறாய்…”

‘ம்… எப்படி மொக்கை போடுவது என்று…’

“புவியியல்…”

“ம்… படிப்பு முடிந்ததும் என்ன செய்வதாக உத்தேசம்…”

‘தெருக் கூட்ட உத்தேசம்…’ என்று கந்தழிதரன் கேள்விகள் கேட்கக் கேட்க இவள் மனதிற்குள் பொறாமைத் தீயில் வெந்தவாறு பதில் கொடுக்க, ரோகிணியோ, சரியான பதிலைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கடைசியாக அவன் கேட்ட கேள்விக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிய பவானி,

“என்ன கேள்வி தம்பி… உங்களைப் போல நல்ல வரன் கிடைத்தால் மணம் முடித்து அனுப்பத்தான் யோசிக்கிறேன்…” என்றதும், அம்மேதினிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

அதே நேரம், கையில் தேநீரோடு நின்றிருக்கும் மகளைக் கண்ட யசோதா,

“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய், தேநீரைக் கொடேன்…” என்று அனுப்பி வைத்தவாறு, சுண்டிப்போயிருந்த அவள் முகத்தைப் பார்த்து, அவளுடைய காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு,

“ஏண்டி முகத்தை இப்படி இஞ்சி தின்ற குரங்காக வைத்திருக்கிறாய்? விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்… கொஞ்சமாவது சிரி…” என்று கடுப்படிக்க, இவளோ தாயை பார்த்துப் பற்களைக் கடித்தவாறு?

“குமரிப் பிள்ளைக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு… ஊர் உலகம் என்ன நினைக்கும்? கண்டபடி சிரிக்காது? மானம் கப்பல் ஏறி விடாது? அப்படி ஏறினால், கடலில் நீந்திப்போய் அதை மீட்பது யார்? எனக்கு வேறு நீச்சல் தெரியாது…” என்று கடுப்படித்தவள், சற்றும் முகத்தை மாற்றாது வேண்டா வெறுப்பாக, பவானியின் கரத்தில் ஒன்றைக் கொடுத்து விட்டு, பவானியின் கணவர் ‘டம்மிபீசான’ நடராஜருக்கும் ஒன்றைக் கொடுத்துவிட்டுத் திரும்ப, இன்னும் இணைந்த கரங்கள் பிரியாது அப்படியேதான் இருந்தன.

‘என்ன, எதாவது பசை போட்டா ஒட்டி வைத்திருக்கிறார்கள்? ஒரு வேளை அலவாங்கு கொண்டுதான் பிரிக்கவேண்டுமோ?’ என்று நெஞ்சம் காந்த எண்ணியவளின் உதடுகள் மறுகணம் மெல்லிய புன்னகையைச் சிந்தின.

இதற்கெல்லாம் எதற்கு அலவாங்கு? என்று எண்ணியவள், உடனே கந்தழிதரனையும் ரோகிணியையும் நெருங்கி தேநீர்க் குவளையை நீட்டுவது போல நீட்டியவாறே, கால் தடுமாறுவது போலக் கந்தழிதரனின் மீது தெனீரை ஊற்றிவிட, சுடு தேநீர் அவன் மீது ஊற்றுப் பட்டதும், அவன் துடித்தானோ இல்லையோ. ரோகிணி துடித்துப்போனாள். போதாததற்குப் பவானி வேறு.

“ஐயையோ…! அத்தான்…!” என்று ரோகிணியும்,

“ஐயையோ…! தம்பி…!” என்று பவானியும், பதறியவாறு அவனை நெருங்க, இவளோ அதிர்ச்சி போல வாயில் கரம் வைத்து நின்றிருந்தாள்.

கந்தழிதரன் தன் ஆடையில் படிந்த ஈரத்தைத் தட்டியவாறே நிமிர்ந்து அம்மெதினியை மேல்க் கண்ணால் பார்த்தான்.

அவள் அதிர்ச்சி போலக் காட்டிக்கொண்டாலும், அவள் விழிகளில் தெரிந்த மெல்லிய மலர்ச்சியைக் கண்டு அவனுக்கும் புரிந்து போனது அவள் வேண்டும் என்றுதான் தன் மீது தேநீரை  ஊற்றியிருக்கிறாள் என்று.

ரோகிணியோ அவன் மார்பில் ஊற்றுப்பட்ட தேநீரைத் தட்டிவிட முயன்றவளாக,

“அதிகம் வலிக்கிறதா அத்தான்…” என்று கலங்க, இதைக் கண்டவளின் விழிகளில் மேலும் சீற்றம் எழுந்தது. அதை எப்படிக் காட்டுவது என்று புரியாமல் கரத்திலிருந்த தட்டை இறுகப் பற்றிக்கொண்டிருக்க, தன் மகளின் அருகே வந்த யசோதா,

“என்ன காரியம் செய்தாய் மேதினி… கொஞ்சமாவது அவதானம் வேண்டாமா?” என்று அடிக் குரலில் சீறிவிட்டுக் கந்தழிதரனை நெருங்கி,

“தம்பி… காயம் பட்டிருக்கப் போகிறது… போய்க் குளிர் நீரால் கழுவிவிட்டு வாருங்கள்…” என்று அனுப்பிவிட்டுத் திரும்பித் தன் மகளைப் பார்த்து முறைத்து,

“போ… போய்த் தம்பிக்குத் தண்ணீர் வார்க்க உதவி செய்…” என்று கடிய,

“ஹே… அத்தை… அதெல்லாம் தேவையில்லை… நானே கழுவிக்கொள்கிறேன்… மன்னிக்கவேண்டும்… கொஞ்சம் பொறுங்கள்… இதோ வருகிறேன்…” என்று விட்டு உள்ளே செல்லத் தொடங்க, பவானி இப்போது அம்மேதினியை மட்டுமல்ல, யசோதாவையும் முறைத்து,

“இந்தச் சின்ன வேலையைக் கூட உன்னுடைய மகளால் சரியாகச் செய்ய முடியவில்லையா… என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறாய்?” என்று காய அம்மேதினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

‘உங்கள் மகளை விட நான் நன்றாகவே வேலை செய்வேன்…’ என்று சொல்வதற்காக வாய் எடுக்கத் தன் பார்வையால் அவள் பேச்சைத் தடுத்த யசோதா, முகத்தில் புன்னகையைத் தேக்கி,

“நீங்கள் சொல்வதும் சரிதான் அக்கா… அடுத்த வாட்டி கொஞ்சம் கவனமாகவே இருந்து கொள்வாள்…” என்று கூறத் தன் தாயை விழிகளால் ஒரு வெட்டு வெட்டி விட்டு உள்ளே சென்றாள் அம்மேதினி. அதன் பிறகு அவர்கள் விடைபெறும் வரைக்கும் அம்மேதினி அவர்களின் முன்னால் வரவுமில்லை, கந்தழிதரனை விட்டு ரோகிணி விலகி இருக்கவும் இல்லை.

அவர்கள் புறப்படும்போது, கந்தழிதரனைப் பார்த்து,

“தம்பி… உங்களுக்கு இங்கே இருக்க இட்டு முட்டாக இருக்குமே… வேண்டுமானால் எங்கள் வீட்டில் தங்கலாம்… அங்கே விட்டு வீதியாக இருக்கும்… இப்படி இடைஞ்சலாக இருக்காது…” என்று கூற இவர்களை வழியனுப்ப வரவேண்டுமே என்கிற ஒரே காரணத்திற்காக வெறியே வந்தவள், இவர்கள் சொல்வதைக் கேட்டதும் எரிச்சல் பொங்கிக் கொண்டு வந்தது.

அவளுக்குத் தெரியாதா அவர்களுடைய வீட்டைப் பற்றி.

வீடு என்னவோ பெரியதுதான். எங்கு பார்த்தாலும் பளிங்கு போலச் சுத்தம்தான். ஆனால் இது வரை சமையலறையில் சமைத்ததில்லை. வீடு அழுக்காகிவிடும் என்பதற்காகப் பின்னால் ஒரு கொட்டில் போலக் கட்டி அதில்தான் சமையலே. அந்த வீட்டில் சுதந்திரமாக எங்கும் சுத்த முடியாது. ஏன் என்றால் அழுக்குப் படிந்து விடுமாம். யாராவது வெளிநாட்டிலிருந்து வந்த புண்ணியம் செய்த ஆத்மாக்கள் மட்டும் அவர்களின் முன்னறையில் அமர்ந்து தேநீர் குடித்துவிட்டுச் செல்லாம். அதுவும் அவர்கள் போன பிறகு அந்த இடமே கழுவி சுத்தம் செய்யப்படும். அவர்கள் வாங்கிப் போட்டக் கம்பளத்தில் யாரும் கால் வைக்க முடியாது. தாண்டித்தான் போகவேண்டும். அப்படியான அந்த வீட்டில் சுதந்திரமாக இருப்பதா…? அதைக் கந்தழிதரனும் உணர்ந்து கொண்டான் போலும்.

“ஐயையோ… பெரியத்தை…! உங்களுக்கு எதற்கு இந்தச் சிரமம்… இந்த வீடே எங்கள் சொந்த வீடுதானே… இதுவே எனக்கு வசதிதான். ஆனால் கட்டாயம் உங்களைப் பார்க்க, உங்கள் வீட்டிற்கு வருகிறேன்… சரியா…” என்று சமாதானப் படுத்திவிட்டு யாரும் அறியாவண்ணம் பெரிய மூச்சொன்றை எடுத்து விட, அதைக் கண்ட அம்மேதினிக்கு மெல்லிய சிரிப்புப் பிறந்தது.

எல்லோரும் புறப்பட்ட பின், இறுதியாகப் பவானி கிளம்பும் போது யசோதாவின் காதில் எதையோ கூறிவிட்டுக் கிளம்ப யசோதாவின் முகமும் அதைக் கேட்டு மலர்ந்து போனது.

அப்படி என்ன அந்தப் பவானி கூறினாள் என்று அவர்கள் போன பின்பே தெரிய வந்தது. அது அம்மெதினியின் உள்ளத்தில் பெரும் பிரளயத்தையே கிளப்பியது.

What’s your Reaction?
+1
11
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!