Fri. Nov 22nd, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 6/7

(6)

 

நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிணற்றுத் தண்ணீரின் குளியலில் உலகையே மறந்து போனான் கந்தழிதரன்.

ஆகா… கிணற்றுத் தண்ணீரின் குளிர்மை தான் எத்தனை சுகந்தம். அதுவும் ஊற்றெடுக்கும் நீரல்லவா… அதில் குளிப்பதில் உள்ள இன்பம் எதிலும் வந்து விடுவதில்லையே.

அதனால் ஆர அமரக் குளித்து முடித்து, இடையில் துவாயைக் கட்டியவாறு அணிந்திருந்த அரைக்கால் சட்டையைப் பிழிந்து, அங்கிருந்த கொடியில் காயப்போட்டுவிட்டு, உள்ளே வந்த போது வீடே அமைதியாக இருந்தது.

ஈரம் சொட்டிய தலையைக் கலைத்து உதறி ஈரத்தைத் தெறிக்க விட்டவன், பின் கரங்களால் மேவி இழுத்தவாறு அறைக் கதவைத் திறக்க, அங்கே படுக்கையில் அமர்ந்தவாறு இதழ் கடித்திருந்த அம்மேதினிதான் வரவேற்றாள். அவளைக் கண்டதும் இவன் புருவங்களைச் சுருக்க, இவளோ இவனைக் கண்டதும் சடார் என்று பதட்டத்துடன் எழுந்து நின்றாள்.

அப்போதுதான் அவளுக்கு, அந்த அறையைத் தற்காலிகமாக அவனுக்குக் கொடுத்ததே நினைவுக்கு வந்தது.

ஏதோ சிந்தனையில் அவனுடைய அறைக்குள் வந்து பதுங்கிக் கொண்டாளே…  இப்போது மீண்டும் அவன் முன்னால் வந்து நிற்கிறான்… அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவனுடைய மார்போடு மோதி நின்றதுதான் நினைவுக்கு வந்தது. மீண்டும் முகம் சிவந்துபோனாள் அம்மேதினி. மனம் வேறு எங்கெங்கோ எல்லாம் அலைந்து திரிந்தது. அதை நினைத்து மனசாரத் தனக்குக் கொட்டு வைத்தவள், ‘அம்மேதினி… அடங்கு.. அடங்கு…’ என்று தன்னைத் தானே கடிந்தவாறு எழ, அவள் எழுந்த வேகத்தில் முழங்கால் வலி, அவளை முழுதாகச் சுயத்திற்குக் கொண்டு வந்தது. தன்னை மறந்து

“ஷ்…” என்றவாறு சற்றுக் குனிந்து காயத்தைப் பற்றிக் கொள்ள,

“அம்மணி…” என்று பதறியவனாக இரண்டெட்டில் அவளை நெருங்கியவன்,

“என்னாச்சு…” என்றவாறு அவள் மேல் கரங்களைப் பற்றிப் படுக்கையில் அமர்த்தியவன் அவள் முன்னால் ஒற்றைக்கால் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவளோ தன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஈரத்தோடு படிய வாரிய தலை முடியும், தோள்களிலே துளித்திருந்த ஈரத்தின் சுவடுகளும் அவளை என்னவோ செய்ய, தன்னை மீறி அவற்றைத் தொடுவதற்காகத் தன் கரங்களைத் தூக்கியிருந்தாள்.

அப்போதுதான் தான் செய்ய விளைந்த காரியம் புரிய, அவசரமாகத் தன் விரல்களைச் சுருட்டிக் கொண்டவளுக்கு, எங்கே இதயம் துடிக்கும் துடிப்பில் நெஞ்சைப் பிளந்துகொண்டு வந்துவிடுமோ என்கிற அச்சம் தோன்றியது. பதட்டத்துடன் கரத்தை இழுத்துக் கொள்ள…

அவனோ, அவளுடைய வலது பாதத்தைப் பற்றித் தன் கரத்தில் ஏந்தி மடித்திருந்த தொடையின் மீது வைத்துவிட்டு, முழங்கால் காயத்தைப் பார்க்கவேண்டி, அவள் அணிந்திருந்த சட்டையைச் சற்று மேலே தூக்க, அந்த நேரம் அவனுடைய விரல்கள் கணுக்காலில் பட்டும் படாமலும் உரசிச் செல்ல, அதற்கு மேல் அந்தப் பருவ நங்கையால் அவன் தொடுகையைத் தாங்க முடியவில்லை.

அவன் விரல்கள் தீண்டிய இடத்திலிருந்து பாய்ந்த இரத்தம் நேராகச் சென்று அவளுடைய தலை உச்சியை அடிக்க, பதறி அடித்து அவனுடைய பிடியை உதறியவள், பாதத்தை இழுத்து எடுத்தவாறு எழுந்தாள். அப்போது ஏற்பட்ட வலி கூட அவளுக்கு மறந்து போனது.

அதற்கு மேல் அங்கிருக்க முடியாதவளாக, விட்டால் போதும் என்பது போல வேகமாக அவ்விடத்தை விட்டு ஓட, இவனோ முகம் வாடிப்போனான்.

தன் மீதிருந்த கோபத்தால்தான் அப்படி நடந்துகொள்கிறாள் என்று தவறாக நினைத்தவனுக்குத் தன் மேலிருக்கும் கசப்பை எப்படிப் போக்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு எழுந்தவன், ஆடை மாற்றிவிட்டு வெளியே வந்தபோது, விறாந்தையின் வாசல் படியில் யசோதா அம்மேதினியுடன் எதற்காகவோ மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

“சொன்னால் கேட்கமாட்டாய்… இதென்ன குழந்தைப் பிள்ளை போல இப்படி அடம் பிடிக்கிறாய்…” என்று யசோதா கடிய,

“வேண்டாம்மா… விடுங்கள்… ஐயோ… விடுங்களேன்…” என்று அவள் அரற்ற, நெருங்க நெருங்கத்தான் அது எதற்கென்பது அவனுக்குப் புரிந்தது.

“மேதினி… தடி எடுத்தேன் என்றால் தெரியும்… காட்டுக் காயத்தை… மருந்து போட்டு விடுகிறேன்… இது என்ன பிடிவாதம்…” என்று அன்னை கடிந்து கொண்டிருக்க,

“வேண்டாம்மா… காயம் சின்னதுதான்… இது போட்டால் வலிக்கும்… எரியும்… பெற்ற குழந்தையைச் சித்திரவதை செய்த பாவம் உங்களுக்கு வேண்டாம்மா… ஆ… விடுங்கள்…” என்று சத்தம் வெளியே வராதவாறு அரற்றிச் சிணுங்கிக் கொண்டிருந்தாள் அம்மேதினி.

இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறாள். என்ன முன்பு சிறிய காயம் என்றாலே ஊரைக் கூட்டுவாள்… இப்போது சற்று அடக்கி வாசிக்கிறாள். எண்ணியவனுக்கு அன்று ஒரு நாள் துவிச்சக்கர வண்டியிலிருந்து விழுந்து காயம்பட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டு அவனிடம் வந்தது நினைவுக்கு வந்தது. அவனையும் மீறி உதட்டில் புன்னகை மலர,

“என்ன அத்தை…” என்றவாறு அவர்களை நோக்கிச் சென்றான் கந்தழிதரன்.

இவனுடைய குரல் கேட்டதும் அவசரமாக முழங்கால் வரை தூக்கி வைத்துக் கொண்டிருந்த சட்டையைச் சடார் என்று இழுத்துவிட்டு அவஸ்தையுடன் அம்மேதினி நெளிய, அது வரை அவளுடைய முழங்காலுக்கு மருந்திட முயன்று கொண்டிருந்தவர், கந்தழிதரனின் குரல் கேட்டதும் தன் கவனம் சிதைந்தவராகப் புன்னகை மலர,

“அதுவா கந்து… நேற்று இவள் கடைக்குப் போய்விட்டு வரும்போது முச்சக்கர வண்டியோடு மோதிக் கீழே விழுந்துவிட்டாள். கைகளிலும், முழங்கால்களிலும் காயம் பட்டிருக்கிறது. மருந்து போடு என்றால் முடியாது என்று அடம் பிடிக்கிறாள். அதுதான் இழுத்து வைத்துப் போட முயன்று கொண்டிருக்கிறேன்…” என்று யசோதா சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

“நான் ஒன்றும் மோதவில்லை, அந்தக் கடன்கார ஆட்டோ தான் என் மீது மோதியது…” என்றாள் அந்த நிலையிலும்.

“அது சரி… சீலை முள்ளில் பட்டாலும், முள் சேலையில் பட்டாலும் பாதிப்பென்னவோ சேலைக்குத்தான்…” என்றான் கந்தழிதரன் மெல்லிய கிண்டலுடன். அதைக் கேட்டதும் அவனைப் பார்த்து முறைத்தவள்,

“அடடே…! வந்துட்டார்யா நாட்டாமை செம்பைத் தூக்கிக்கொண்டு… அடுத்தச் சந்தியில் ஆலமரம் ஒன்றிருக்கிறது… போங்கள்…! போய் அங்கே குந்துங்கள்…” என்று கடுப்படிக்கும் போதே,

“அம்மா… செல்வி அறுத்துக்கொண்டு போகிறாள்…” என்று சற்றுத் தொலைவிலிருந்து கத்தியவாறு வேலன் ஓடி வந்தான்.

அதைக் கேட்டதும், யசோதா அம்மேதினியை மறந்தவராக, சடார் என்று எழுந்தவர், அவிழ்ந்த கொண்டையைக் கட்டியவாறே,

“வேலா… விரைவாகப் பிடி… இதோ வருகிறேன்…” என்று கத்தியவாறு குரல் வந்த திசை நோக்கி ஓடத் தொடங்கினார்.

செல்வி அவர்கள் வீட்டுப் பசுமாடு. கயிற்றை அறுத்துக்கொண்டு சென்றாள் என்றால் அவளைப் பிடிப்பது மிகச் சிரமம். அது மட்டுமன்றி வயல்களுக்குள் நுழைந்து ஒரு கை பார்த்துவிடுவாள். பிறகு தோட்டக்காரருடன் மல்லுக்கு நிற்பதற்குள் யசோதாவிற்குப் போதும் போதுமென்றாகிவிடும். அதை விட, கைமீறும்முன் அவளைப் பிடித்துவிடவேண்டும்.

அன்னை ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவள், மெல்லிய சிரிப்புடன் அவருக்கு உதவுதற்காகப் படியிலிருந்த எழத் தொடங்க, கந்தழிதரனோ

“ஹே… எங்கே கிளம்பிவிட்டாய்… உட்கார்… நான் மருந்து போட்டுவிடுகிறேன்…” என்று கூறியவாறு, யசோதா அமர்ந்த இடத்தில் அமர்ந்து கொள்ளப் பதட்டத்துடன் எழுந்து நின்றாள் அம்மேதினி.

சும்மா அவன் மீது மோதுப்பட்டதிற்கே இப்போது வரை நெஞ்சம் கிடந்து அடிக்கிறது. இதில் அவன் தொட்டு மருந்து போட்டால்… நினைக்கும் போதே உடல் சிலிர்க்க, மறுப்பாகத் தலையை ஆட்டியவள்,

“இல்லை… எனக்கு வேண்டாம்… காயம்… காயம் ஒன்றும் பெரிதல்ல…” என்று கூறிவிட்டு, அவசரமாக அவனை விட்டு விலக முயல, அவனோ சடார் என்று அவளுடைய பட்டுக் கரத்தைப் பற்றிக்கொண்டான்.

இவள் அதிர்ச்சியுடன் திரும்பி கந்தழிதரனைப் பார்க்க, அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“உட்கார் அம்மணி…” என்றான். அந்தக் குரலின் அழுத்தத்திலும், அம்மணி என்னும் அழைப்பிலும் ஒரு கணம் தடுமாறியவள், அதற்கு மறுப்புக் கூற முடியாது மகுடிக்கு இசைந்த பாம்புபோல அவனுக்கு அருகாமையில் அமர, காயத்திற்குப் பூசும் எண்ணெய்யில் பஞ்சைத் தோய்த்தவாறு

“காயத்தைக் காட்டு…” என்றான். இவளோ உதடுகள் கடித்துத் தலை குனிந்தவாறு நின்றிருக்க, இவனோ பொறுமை இழந்தவனாக,

“பச்… காயத்தைக் காட்டு அம்மணி…” என்றதும்,

“வே… வேண்டாம்… எனக்கு ஒன்றும் இல்லை…” என்று திக்கித் திணறப் பொறுமையற்ற பெருமூச்சுடன்,

“இது என்ன பிடிவாதம் அம்மேதினி…” என்று எரிச்சலுடன் கேட்டவன், தன் கரத்திலிருந்த மருந்துக் குடுவையைத் தரையில் வைத்துவிட்டு அவளுடைய கரத்தைப் பற்றி ஒரு திருப்புத் திருப்ப, முழங்கைக்குக் கீழ் பலமான சிராய்ப்பு இரத்தம் காய்ந்துபோய்க் கண்டியிருந்தது.

அதைக் கண்டதும், தன் உதடுகள் குவித்துக் காயத்தை ஊதிவிட்டு எங்கே வலித்துவிடுமோ என்பது போல மருந்து தோய்த்த பஞ்சால் அவள் காயத்தை மெதுவாகத் தொட்டு எடுக்க, அந்த மருந்து கொடுத்த எரிச்சலில் தன் கரத்தை இழுக்க முயல, அவளுடைய கைத்தலத்தை இறுகப் பற்றியவாறு தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தவாறு,

“முன்னம் நான்தானே காயத்திற்கு மருந்துபோடுவேன். இப்போது மட்டும் என்ன வந்துவிட்டது…” என்று கேட்டவாறே, அவளை நிமிர்ந்து பார்த்து,

“நீ நிறையவே மாறிவிட்டாய் அம்மணி…” என்றான் பெரும் குறைபோல. பின் அவளை நிமிர்ந்து பார்த்து,

“முன்பு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், தெருவில் வண்டி எடுக்கும்போது கவனமாக எடு என்று… இன்று வரைக்கும் அதைப் பின் பற்றுவது போலவே தெரியவில்லையே… பார் எப்படிக் கீறி வைத்திருக்கிறாய் என்று?” எனக் கடிய, அதுவரை அவனுடைய கரங்களின் பிடியில் சொக்கிப்போய் நின்றிருந்தவள், தன்னையே அவன் சாடுவது தெரிய, அதுவரையிருந்த மாயை அறுந்து போனவளாக, சடார் என்று அவன் கரத்திலிருந்து தன் கரத்தை உதறி விடுவித்து அவனைப் பார்த்து முறைத்தாள்.

“நானா கவனமில்லாமல் வந்தேன்… நானா வந்தேன்… நீங்கள் வந்த வண்டிக் காரன்தான் கவனமில்லாமல் என் மீது மோதினான்… அப்படி இருக்க என்னை எதற்குச் சொல்கிறீர்கள்…” என்று அவள் எகிற,

“சரிமா… அவன்தான் கவனமில்லாமல் வந்தான்… நீயாவது நின்று நிதானமாகத் தெருவில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு வண்டியை எடுத்திருக்கலாம் தானே… பார்… இப்போது காயம் பட்டிருப்பது நீயா இல்லை அந்த வண்டிக்காரனா?” என்று மீண்டும் அவள் கரத்தைப் பற்றியவாறு அவன் கேட்க, இவனை எரிச்சலுடன் பார்த்தவள்,

“நான் எதற்குப் பார்த்துப் போகவேண்டும்? மோட்டார் வண்டிதான் கவனமாகப் போயிருக்க வேண்டும்…” என்ற தலையைச் சிலுப்ப, அதைக் கண்டு தலையை ஆட்டிச் சிரித்தவன், சற்றும் யோசிக்காமல் அவளுடைய காலைப் பற்றித் தூக்கித் தன் மடியில் வைத்தான்.

இவளோ அவசரமாகத் தன் காலை விலக்க முயல, கந்தழிதரன், அவளுடைய கணுக்காலில் தன் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்து,

“ஷ்… சும்மா இரு… உனக்கு முழங்காலிலும் அடி பட்டிருக்கிறது அல்லவா?” என்றவன், மீண்டும் பஞ்சை எண்ணெய்யில் தோய்த்து அவளுடைய ஆடையை மெதுவாக முழங்கால் வரைக்கும் இழுத்துச் செல்ல, அந்தப் பெண்மைக்கோ ஆண்மையின் அந்த வருடல் பெரும் பிரளயத்தையே கொடுத்தது.

அவசரமாக அவன் கரத்தைத் தட்டிவிட்டுக் காலை விலக்க முயல, அந்தப் பிடிவாதக் காரனோ,

“ப்ச்… இதென்ன குழந்தைப் பிள்ளைகள் போல, சும்மா இருக்கப் போகிறாயா இல்லையா?” என்று கடிந்தவாறு அவளுடைய முழங்கால்களைப் பார்த்தவன் மெய்யாலுமே அதிர்ந்து போனான்.

“என்னடி… இப்படிச் சிதைத்து வைத்திருக்கிறாய்… முழங்கால் காயம் சுலபத்தில் ஆறாதே…” என்றவன் எங்கே வலித்து விடுமோ என்று அஞ்சியவன் போல மெதுவாகக் காயத்திற்கு மருந்திட, அதுவரை அவனிடமிருந்து தன் கால்களை விடுவிக்க முயன்றவள், அவனுடைய அந்தக் கனிவில் தன் முயற்சியைக் கைவிட்டவளாக நிமிர்ந்து பார்த்தாள்.

‘அவனுடைய செயலில் பரிதாபத்துடன் கூடிய கவலைதான் இருந்ததன்றி வேறு எதுவுமே தெரியவில்லை. அவள் ஒரு பெண்… இப்படி ஒரு பெண்ணின் கால்களைத் தொட்டுக்கொண்டு இருக்கிறோமே என்று… கொஞ்சமாவது இவன் சலனப்படவில்லையா? இவள் மீது வேறு எந்த அபிப்பிராயமும் தோன்றவில்லையா? மீண்டும் அவனை ஆழமாகப் பார்க்க அவனுடைய விழிகள் அவளுடைய காயத்தில்தான் தங்கியிருந்தனவேயன்றி எள்ளளவும் எங்கும் திசைமாறவில்லை.’ கட்டுப் போட்டு முடிந்ததும்,

“குட்… கட்டுப் போட்டாகிவிட்டது… இனி போ…” என்றவாறு அவளுடைய கால்களைப் பற்றிப் படியின் இறக்கத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்து இவனைப் பார்க்க அம்மேதினியோ அவனுடைய விழிகளை உற்றுப் பார்த்தாள்.

அந்த விழிகளில் கனிவு இருந்ததேயன்றி வேறு எதுவும் தெரியவில்லை. அதைத் கண்டதும் பெரும் ஏமாற்றம் அவளுக்குள்.

‘நாம் மட்டும் ஏன் பதறுகிறோம்? ஏன் தவிக்கிறோம். இவன் முன்பு என்னைத் தொடவில்லையா? இப்போது தொட்டதும் ஏன் நெஞ்சம் தவிக்கிறது? துடிக்கிறது? தவறு செய்தது போல நடுங்குகிறது? இது என்ன பருவக் கோளாறா? பருவக் கோளாறு என்றால் இவனைப் பார்த்ததும் ஏன் தடுமாற வேண்டும்? அவள் ஆண்களை அறியாதவளா என்ன? அவள் கற்பதே கலவன் பாடசாலையில். அங்கே ஆண்களும் பெண்களும் சரிசமமாகப் படிக்கிறார்கள். அவர்கள் யாரிடமும் இது போன்ற உணர்வு வந்ததில்லையே. ஆனால் இவனிடம் மட்டும் ஏன் இப்படியான ஒரு வித தடுமாற்றம் தோன்றுகின்றன. அதற்கு என்ன காரணம்?’ தவிப்புடன் எழுந்தவளுக்கு அவனைப் பார்க்க முடியாத ஒரு தயக்கம் தோன்றியது. அதனால் விழிகளைத் தரை நோக்கிக் கொண்டு சென்றவள், அவனைத் தாண்டிச் செல்ல, கந்தழிதரனோ அவளுடைய கோபத்தை எப்படிப் போக்குவது என்கிற குழப்பத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.

(7)

 

கந்தழிதரன் வந்த, இந்த மூன்று நாட்களில், அவன் வந்த செய்தி அறிந்து அவன் உறவினர்கள், பழைய நண்பர்கள் என்று பெரிய பட்டாளமே படையெடுக்க அந்த வீடே அல்லோல கல்லோலப் பட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்றவன் இப்போது வந்திருக்கிறான் என்பதாலும், விரைவில் அவன் வெளிநாடு செல்லப் போகிறான் என்கிறதனாலும் முடிந்த வரை அனைவரும் அவனை வந்து பார்த்துவிட்டுச் செல்ல ஆர்வம் காட்டினார்கள்..

‘பக்கத்தில் இருக்கிறோம் என்றுதான் பெயர், எப்போதாவது வந்து நலம் விசாரித்திருப்பார்களா? இவன் வந்ததும், வந்துவிட்டார்கள் ஈ மொய்ப்பது போல… ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல அல்லவா ஆவென்று வாய் பிளக்கப் பார்க்கிறார்கள். சரி வந்ததுதான் வந்தார்கள், ஒரு நாகரீகத்திற்காகவாவது, மேதினி எப்படி இருக்கிறாய், நன்றாகப் படிக்கிறாயா? என்று ஒரு கேள்வி கூடவா கேட்கக் கூடாது? அது சரி, வந்தவர்கள் அவனை விசாரிக்க வந்தால் பரவாயில்லை, தங்கள் மகள்களுக்கும் ஒன்றவிட்ட மகள்களுக்கும் நான்குவிட்ட மகள்களுக்கும் மாப்பிள்ளை தேடிக்கொண்டு வந்தால் இவள் எப்படிக் கண்ணுக்குத் தெரியும்.

அதுவும் தங்கள் மகள்களின் அல்லது ஒன்று விட்ட மகள்களின் வீர சாகசங்களைக் கூறிச் சாடை மாடையாகத் தங்கள் எண்ணத்தைக் கூறும்போதெல்லாம் இவளுக்குள் காந்தியது. சிலரோ நேரடியாக அவனுடைய ஜாதகத்தைக் கேட்டு இவளுடைய அடிவயிற்றில் அமிலத்தைக் கரைத்தார்கள்.

வந்தோமா படைத்ததைத் தின்றோமா போனோமா என்றில்லாமல் இது என்னது… தூண்டில் போடும் பழக்கம்… சீ… சீ… அவர்களுக்கு வேறு மாப்பிள்ளைகளே கிடைக்கவில்லையா… இவன்தான் கிடைத்தானா?’ என்று தீ விழுந்த பாறையாகக் கொதித்துப்போனாள் அம்மேதினி. போதாததற்கு யசோதாவைத் தள்ளிச் சென்று தங்கள் விருப்பத்தைக் கூறிச் சாதகத்தை அவர் கையில் திணித்த கதையும் அரங்கேறியது. அதைக் காணக் காண இவளுக்கு உடலெல்லாம் பற்றி எரிந்தது.

‘இது போதாதென்று இந்தக் கந்தழி வேறு, வந்தவர்களைக் கண்டு பல்லிளிக்க வேறு செய்கிறான். அது மட்டுமா, அன்னையர் அழைத்துக்கொண்டு வரும் இளம் பெண்களுடன் சகஜமாகப் பேசி, இவளுடைய இரத்த அழுத்தத்தை நன்றாகவே அதிகரிக்கச் செய்தான்.

ஏனோ அவன் தங்கள் வீட்டிற்கு உரியவன் போலவும், அதைக் கண்டவர்கள் நின்றவர்கள் அனைவரும் உரிமை கொண்டாட முயல்வது போலவும் ஒரு மாயத் தோற்றம் அந்தப் பேதையின் உள்ளத்தில் உருவாகிப்போக, எங்கே அவன் உண்மையாகவே அவர்களின் வலையில் விழுந்துவிடுவானோ என்கிற அச்சமும் தோன்ற’ நன்றாகவே தவித்துப்போனாள் அம்மேதினி. அதுவும் இதுவரை வேலியைக் கூட எட்டிப்பார்க்காதவர்கள் பல்லிளித்துக் கொண்டு வந்ததைத்தான் இவளால் தாங்க முடியவில்லை.

‘இனி வருகிறேன் என்பவர்களை வராதே என்று சொல்லிவிட முடியுமா என்ன?

போதாததற்கு அவனுடைய நண்பர்கள் வேறு… சும்மா அக்காடாவென்று நிம்மதியாக இருக்க விடுகிறார்களா… அவனை அங்கே இங்கே என்று அழைத்துச் செல்ல, கடந்த இரண்டு நாட்களாக அவன் பெரும்பாலும் வீட்டிலேயே இல்லை. அது வேறு இவளுக்குக் கோபத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறான். இன்னும் ஒரு மாதத்தில் கொழும்பு சென்றுவிடுவான். அவனைக் கண்ணாரக் காணும் வாய்ப்பு கொஞ்ச நாட்களுக்குத்தான். அதற்குள் அவனைப் பிரித்துச் செல்கிறார்களே… காலை என்றால் நண்பர்கள் தொல்லை, மாலை என்றால் உறவினர்கள் தொல்லை…’ வெறுத்துப்போனாள் அம்மேதினி.

அன்றும் அதிகாலையே நண்பர்கள் பட்டாளம் அவனை அழைத்துக்கொண்டு சென்றிருக்க, வீடே மயான அமைதியானது. முன்பே அமைதியான வீடுதான். ஆனால் கந்தழிதரன் வந்த இந்த மூன்று நாட்களில் ஏதோ வீடே நிறைந்திருப்பது போலத் தோன்றும். அவன் இல்லாத போது ஒன்றுமே இல்லாதது போல வெறுமையாக இருக்கும்.

இப்போதும் அந்த அமைதியை வெறுத்தவளாக, வீட்டு முற்றத்தைக் பெருக்கியாவது மனதை ஆறவைக்கலாம் என்கிற நோக்கத்தில் விளக்குமாற்றை எடுத்து வந்து கூட்டத் தொடங்க, வாளி ஒன்றில் பசுமாட்டிலிருந்து பால்கறந்துகொண்டிருந்த யசோதா, கறந்து முடித்ததும், அதைப் பத்திரமாக அங்கிருந்த பெரிய கல்லொன்றின் மீது வைத்துவிட்டு எழுந்து, முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருக்கும் தன் மகளைக் கண்டு,

“கண்ணு… இன்று பவானி அக்கா குடும்பம் கந்தழியைப் பார்ப்பதற்காக வருகிறதாம்…” என்றதும் அதுவரை கூட்டிக்கொண்டிருந்தவள் அதிர்ச்சியுடன் அன்னையைப் பார்த்து,

“ஐயோ…!” என்றாள் தன்னை மறந்து. யசோதாவோ அதைக் கவனத்தில் கொள்ளாது,

“அதனால் முன்புறம் சற்று நன்றாகப் பெருக்கு மகள்… அப்படியே மல்லிகைச் செடிக்கும் தண்ணீர் ஊற்றிவிடு… வாடிப்போயிருக்கிறது…” என்கிற உத்தரவுடன் கன்றினருகே சென்று அதன் கயிற்றை அவிழ்த்துவிட, அது பாய்ந்தோடிச் சென்று தாயின் மடி தேட, யசோதாவோ அருகே கட்டியிருந்த ஆட்டுக்கு முள்முருங்கை மரத்திலிருந்து குலையை ஒடித்துப் போட்டுவிட்டுக் கையேடு பசுமாட்டுக்கு வைக்கோல் எடுத்து வருவதற்காகத் தன் முந்தானையை உதறி இடையில் செருகியவாறு நடந்து செல்ல, தன் அன்னையின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக தண்ணீர் எடுக்கச் சென்ற அம்மேதினியின் நினைவு முழுவதும் பவானியிடம்தான் இருந்தது.

அவளைப் பொறுத்தவரை, ஜெர்மனிக்கு ஒரு ஹிட்லர் என்றால், அவளுடைய குடும்பத்திற்கு இந்தப் பவானி அம்மாள் மிகப் பெரிய ஹிட்லர். யசோதாவின் ஒன்றுவிட்ட சகோதரிதான். ஆனால் சொந்த சகோதரியை விட ஒரு படி மேலிருக்கும் அவருடைய கெடுபிடி. அதைச் சமாளிப்பதற்குள் இவளுடைய விழிகள் இரண்டும் வெளியே வந்து தெறித்துவிடும்.

இப்போது கந்தழிதரனைப் பார்க்கப் பவானிப் பெரியம்மா வருகிறார் என்றதும் இவளுக்கு வயிற்றைக் கலக்கியது. ‘அவர்கள் என்ன குண்டைக் கொண்டு வருகிறாளோ… அதுவும் அவளுடைய மகள் ரோகிணி வேறு கொசுறாக அன்னையின் வாலைப் பிடித்துக்கொண்டு வருவாளே… அன்னை ஹிட்லர் என்றால் ரோகணி இலங்கை அரசியல்வாதி ஆயிற்றே… கடவுளே… அந்த ஹிட்லருக்காக, வீடு அடுக்க வேண்டும் பலகாரம் செய்ய வேண்டும்’ நினைக்கும் போதே ஆயாசமானது அவளுக்கு.

தன்னை மறந்து வானத்தைப் பார்த்து, “நல்லூர் கந்தா, கடம்பா… ஏன்பா… ஏன்… ஒரு நல்லவளைச் சோதிக்கலாம்… தப்பில்லை… ஆனால் ஹிட்லரை அனுப்பியா சோதிக்க வேண்டும்? ஒரு நியாயம் வேண்டாமா?” என்று புலம்பியவாறே தண்ணீர் ஊற்ற, அதே நேரம் இவளைக் காணாது தேடி வந்த யசோதா, தன் மகள் செய்து கொண்டிருந்த காரியத்தைக் கண்டு அதிர்ந்து போனார்.

“ஏய்… முட்டாள்… என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்?” என்று அலற, அதுவரை ஏதோ நினைவிலிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்து என்ன என்பது போலப் புருவத்தைச் சுருக்கியவாறு அன்னையைப் பார்த்தாள். அவரோ இடையில் கரங்களை வைத்தவாறு இவளைத்தான் கொலை வெறியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவள் புரியாமல் ‘எதற்கு அம்மா சி.கே. சரஸ்வதி பார்வை பார்க்கிறாள்?’ என்று குழம்பியவளாக, அன்னை பார்த்த திசைக்குக் குனிந்து பார்க்க, அவளுமே அதிர்ந்து போனாள்.

அங்கே தண்ணீர் என்று நினைத்து அன்னை கறந்துவைத்தப் பசும்பாலை பூங்கண்டுகளுக்கு ஊற்றிக் கொண்டிருக்க, அவர்களின் வீட்டு நாய் பப்பியோ ஊற்றிக்கொண்டிருந்த பாலைக் குதூகலமாக நாவால் நக்கி நக்கிக்  குடித்துக்கொண்டிருந்தது.

“அடி ஆத்தி… குடி கெட்டது… அம்மா கறந்து வைத்த பசும்பாலையா பூங்கன்றுகளுக்கு விட்டேன்… ஐயையோ… அம்மா சாமி ஆடிவிடுவார்களே… இப்போது நான் எப்படிச் சமாளிப்பது…?’ அசடு வழிந்தவள், நிமிர்ந்து தாயைப் பார்த்து, முப்பத்திரண்டு பற்களையும் காட்டி,

“ஹீ… ஹீ… பாலில் கால்சியம் இருக்கிறதா… அது பூங்கன்றுகளுக்கு… நல்லது என்று…” எனத் திக்கித் திணற, அன்னையோ, சுத்தவரப் பார்த்தார். பூவரசம் மரம் இருக்க, எக்கி அதிலிருந்து ஒரு கிளையை அநயாசமாக இழுத்து எடுத்து அதிலிருந்து பதமாக ஒரு தடியை முறித்து எடுக்க,

“ஐயையோ… ஆத்தா மலை ஏறிவிட்டாளே… மேதினி… செத்தாய் இன்று…! உனக்கு, இன்று சங்குதான்…!” என்று அலறியவள், பால் பாத்திரத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓட,

“ஏய்…! நில்லடி… கொல்லையில் போகிறவளே…! எத்தனை தைரியமிருந்தால் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பாய்…! இன்று பவானி அக்கா வேறு வருகிறார்கள்… அவர்களுக்காகக் கறந்த பாலை இப்படி அநியாயமாக்கி விட்டாயே. அருமந்த பால்…! உன்னை…” என்றதும் ஓடிக்கொண்டிருந்தவள் சடார் என்று நின்று திரும்பித் தாயைப் பார்த்தாள்.

“அட… இந்தப் பால் பவானி பெரியம்மாவுக்கா…? அவர்களுக்குக் கொட்டுவதை விட இந்தச் செடிக்குக் கொட்டினால் ஒரு பிடி பூவாவது கொடுக்கும்… அந்தமாவுக்குக் கொட்டினால், இனிப்பில் உப்பில்லை என்று குறைதான் சொல்லும்… அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் இது எவ்வளவோ பரவாயில்லை…” என்று ஓடிய ஓட்டத்தில் தொலைவில் நின்றவாறே கத்த,

“ஏய்… பேசத் தைரியம் இருக்கிறவ, நின்று பேசடி…! எதற்கு ஓடுகிறாய்? வாய் மட்டும் வக்கணையாக ஒரு முழத்திற்கு நீளுகிறதே… அவர்களுக்குப் பலகாரம் செய்யப் பாலுக்கு எங்கே போவேன்… அதைப் போய்ப் பூங்கன்றுகளுக்கு ஊற்றி விட்டாயே…” என்று அவள் முன்னால் தடியை ஆட்டியவாறு கோபத்துடன் எகிற, இவளோ இடையில் கைவைத்தவாறு,

“அந்தம்மா பசும்பால் பலகாரம் மட்டும்தான் தின்னுவார்களாமா… வேறு பலகாரங்கள் சாப்பிட மாட்டார்களாமா… ஏற்கெனவே தின்று தின்றுதான்… உடல்… இத்தனை பெரிதாக வளர்த்திருக்கிறார்களே… போதாதா? உண்டி சுருங்குதல் பெண்ணிற்கு அழகு… சீ… கிழவிக்கு அழகு… முதலில் இந்தப் பலகாரங்கள் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லுங்கள்… எப்படிக் கஷ்டப்பட்டுச் செய்து வைத்தாலும் வக்கணையாகத் தின்றுவிட்டுக் குறைதானே சொல்லப்போகிறார்கள்…. அதற்குக் கொடுக்காமலே இருக்கலாம்” என்று கிண்டலும் ஏளனமுமாகக் கூற,

“அடியே… எதுவாக இருந்தாலும் என் முன்னால் வந்து நின்று பேசு. அதற்குத் தைரியமில்லை… என் அக்காவைப் பற்றிப் பேசுகிறாயா… மவளே… உன்னை இன்று பாடையில் ஏற்றிவிட்டுத்தான் மறு வேலை…” என்று அவர் ஆத்திரத்துடன் கூற,

“கோழி மிதித்துக் குஞ்சு முடமாவதில்லை அன்னையே… அந்தம்மாவுக்கு நாள் பட்ட பால்மா இருக்கிறது. அதில் கலக்கிக் கொடுங்கள்… வயிறும் சேர்ந்து கலங்கட்டும்… அப்படியாவது இளைக்கிறார்களா பார்க்கலாம்” என்று மேலும் அன்னையை வம்புக்கு இழுக்க,

“செய்வதையும் செய்துவிட்டு நக்கல் வேறா… உன்னை…” என்றவாறு அவளை நோக்கி வரத் தொடங்க, அதற்கு மேல் அங்கிருக்க அவளுக்கென்ன பைத்தியமா? மின்னலென அந்த இடத்தை விட்டு வீட்டிற்குள் பாய்ந்தாள்.

அதே நேரம் கீழே விழுந்திருந்த தேங்காய்களைப் பொறுக்கிக்கொண்டு வந்த வேலன், யசோதா சாமியாடுவதைக் கண்டு, கோபம் கொண்டவனாக,

“அட… எதற்குப் பெண் குழந்தைக்கு முன்னால் தடியைக் காட்டுகிறாய்… இறக்கு இறக்கு…! அதுக்கென்ன தெரியும்… குழந்தை…! ஏதோ தெரியாமல் செய்து விட்டாள்… இப்போது உனக்குப் பால்தானே வேண்டும்… நான் போய் வாங்கி வருகிறேன்… அதை விட்டுவிட்டுத் தடி காட்டும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதே…” என்று முதலாளியம்மாவிற்கு முன்பாகவே எதிர்த்து நிற்க, இப்போது யசோதாவின் கோபம் வேலனின் பக்கம் சென்றது.

“என்னது… குழந்தையா? என்ன இன்னும் எட்டு வயது என்று உனக்கு நினைப்பா… எல்லாம் நீ கொடுக்கிற இடம்தான் வேலா… இங்கே பார்… அநியாயமாக அத்தனை பாலையும் ஊற்றிவிட்டாளே …” என்று கவலைப் பட,

“இத விடு தங்கச்சி… பசுத் தட்டிச் சிந்தினால் சும்மா இருக்க மாட்டாயா… அப்படி நினைத்துக்கொள்…” என்றவன், தன் சாரத்தை மடித்துக் கட்டியவாறு,

“கொஞ்சம் பொறுத்துக் கொள்… சரசிடமிருந்து ஒரு போத்தல் பால் வாங்கி வருகிறேன்…” என்றவாறு நடக்கத் தொடங்க, யசோதாவோ தலையில் அடித்தவாறு,

“முதலில் உன்னை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும்… அப்போதுதான் இவள் உருப்படுவாள்…” என்று திட்ட,

“முதலில் அதைச் செய்… எத்தனையோ வருடங்களாக, இதைத்தான் சொல்கிறாய்… ஆனால் செய்வதாகத் தெரியவில்லை…” என்று பதிலுக்கு கத்தியவாறு நடந்து செல்ல,

“இரு இரு… இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் உன்னைத் துரத்திவிட்டுத்தான் மறுவேலை…” என்று புறுபுறுத்தவாறு நடந்து சென்றாலும், அதை இன்று வரை அவரால் செய்ய முடிந்ததில்லை.

வேலன், இவர்கள் சண்டிலிப்பாய்க்கு வந்த நாளிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டவன். இன்றைக்கு வரைக்கும் அவனை வேலையாளாக யசோதா பார்த்ததுமில்லை, யசோதாவைத் தன் முதலாளியம்மா என்று வேலனும் நினைத்ததுமில்லை. அத்தனை பிணைப்பு அவர்களுக்குள்.

வேலனுக்கு அம்மேதினி மீதும், கந்தழிதரன் மீதும் அலாதிப் பிரியம். அதுவும் அம்மேதினி மீதிருக்கும் அன்பு கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள அன்பு. அவளுக்காக எதையும் செய்வான். திருமணம் முடித்த ஒரு வருடத்திற்குள் மனைவி இறந்துவிட, வேறு திருமணம் செய்யாது, இந்த வீட்டிற்குச் சேவகம் செய்வதும், உழைத்த பணத்தைத் தன் தாய் சகோதரர்களுக்குக் கொடுப்பதும் என்று காலத்தை ஓட்டிவிட்டான். ஐம்பத்தைந்து வயதானாலும், இன்றைக்கு வரை உடலில் வலுக் குறையாதவன்.

வேலன் சென்றதும், அம்மேதினியைத் திட்டியவாறே, ஆத்திரத்துடன் கரத்திலிருந்த தடியைப் போட்டுவிட்டுப் பால் பாத்திரத்தில் கொஞ்சமாவது மிச்சமிருக்கிறதா என்று எடுத்துப் பார்ப்பதற்காக யசோதா செல்ல, அன்னையோடு மல்லுக்கட்டிவிட்டுப் வீட்டிற்குள் பாய்ந்த அம்மேதினி, எதிரே வந்த கந்தழிதரனோடு பலமாக மோதுப்பட்டு நின்றாள்.

இருவருமே அதை எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத வகையில் அம்மேதினி மோதுப்பட சமநிலை தவறியவன், எவ்வளவுதான் முடிந்தும் தன்னை நிலைப்படுத்த முடியாமல் அவளோடே பின்புறமாகச் சரிய, அந்த நேரத்திலும்   அவளுக்கு அடிபட்டுவிடுமோ என்கிற பயத்தில், அவளைத் தன் கரங்களால் முழுவதுமாக அணைத்தவாறு தரைதொட்டான்.

இவளோ மேல்மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, அதிர்ச்சியுடன் இவனைக் குனிந்து பார்க்க, அவனோ விழிகளை இறுக மூடியவாறு பற்களைக் கடித்து வலியை அடக்குவது போல நின்றிருந்தான்.

பின் மெதுவாக விழிகளைத் திறக்க, தன் முகத்திற்கு நேராக அஞ்சிய பார்வையுடன் நின்றிருந்தவளைக் கண்டு, அவளுடைய முகத்தில் மறைத்திருந்த கூந்தலைச் சுட்டுவிரலால் ஒதுக்கியவாறு,

“பூசணிக்காய்… என்னாச்சு… பார்த்து வரமாட்டாயா? இப்படித்தான் எதிரே வருபவர்களை இடித்துத் தள்ளுவாயா? கேட்டால் பக்கத்தில் வந்தவர் குற்றம் என்பாய்?” என்று சிடுசிடுத்தவன், இன்னும் திகைப்பு மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் மெல்லியதாக ஒரு அடி கொடுத்துச் சுயத்திற்கு வரப்பண்ணியவனாக,

“கேட்கிறேன்… எங்கே பராக்குப் பார்க்கிறாய்… எதற்காக இப்படி ஓடி வருகிறாய்?” என்று கோபமாகக் கேட்டாலும், எதற்காக இப்படி ஓடிவருகிறாள் என்று அறியும் மெய்யான அக்கறை அங்கே தொக்கி நின்றது.

கன்னத்தில் அவன் கொடுத்த மெல்லிய அடியிலேயே சுயத்திற்கு வந்தவள், அவன் மீது முழுவதுமாக விழுந்திருக்கிறோம் என்கிற புரிதல் கூட இல்லாதவளாக, வலித்த கன்னத்தை மெதுவாக வருடிக் கொடுத்தவாறு, அவனைக் கோபத்துடன் பார்த்தாள். பின் அந்த நிலையிலும் பதட்டமாகத் திரும்பி அன்னை வருகிறாளா என்று பார்த்துவிட்டு, இல்லை யென்றதும் நிம்மதியுடன் கந்தழிதரனை ஏறிட்டு,

“ம்… பொழுது போகவில்லையா… அதுதான் நானும் அம்மாவும் ஓடிப்பிடித்து விளையாடுகிறோம்… நான் முன்னாடியே ஓடிவந்தேனா… அவர்கள் பின்னாடி ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள்… வேண்டுமானால் நீயும் சேர்ந்துகொள்ளேன்…” என்று கூற, இவனுடைய உதடுகள் புன்னகையில் நெளிந்தன.

ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாள். நன்றாகச் சாத்துவதற்கு அத்தைக்காரி துரத்தியிருக்கிறாள் என்பதை நொடியில் புரிந்தவனாக, உடனே தன் இரு கரங்களையும் அவளைச் சுற்றி எடுத்துச் சென்று,

“அப்படி அத்தை துரத்தும் அளவுக்கு என்ன தவறு செய்தாய்?” என்றவாறே அவளை அணைத்துத் தன்னோடு இறுக்கினான். அப்போதுதான் தான் இருக்கும் நிலை புரிந்தவளாக, அவசரமாக அவனிடமிருந்து பிரிய முயல, அவனோ மேலும் தன்னோடு இறுக்கியவாறு,

“இருடி… வந்த அன்றே என்னுடைய படுக்கையில் நெருஞ்சி முள்ளா பரப்பி வைத்தாய்…! அத்தை வரட்டும்… உன்னைப் பிடித்துக் கொடுக்கிறேன்… முதுகில் நாலு சாத்து சாத்தட்டும்” என்று கூறப் பதட்டமாக, அவனுடைய மார்பில் கரத்தைப் பதித்து எழு முயன்று தோற்றவளாக மிண்டும் அவன் மீது விழ,

“விடு… விடுங்கள்… தரன்…” என்று திமிறினாலும் அவன் விட்டானில்லை. அவனுக்கோ தான் ஒரு பதினாறு வயது பாவையை அணைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் சுத்தமாக இருக்கவில்லை. அவனுடையது கள்ளம் புகாத உள்ளம் அல்லவா… அப்போதும் எட்டுவயது குழந்தையை வளைத்துப் பிடித்திருக்கிறோம் என்கிற எண்ணம்தான் அவனுக்குள்.

இவளுக்கோ கள்ளம் புகுந்துகொண்டதால், அவனுடைய உடல் ஸ்பரிசம் ஏதேதோ கதைகளையும் கற்பனைகளையும் பட்டாம்பூச்சிகளாக விசிறி அடிக்க, அது கொடுத்த தகிப்பில் எங்கே எரிந்துவிடுவோமோ என்று அஞ்சியவள் போல,

“விடு கந்து… அம்மா… வரப்போகிறார்கள்…” என்றபோது, அந்த ஆண்மை கொடுத்த தகிப்பில் கண்ணீர் முட்டிப்போனது.

எதையும் தாங்குவான், அவளுடைய கண்ணீரை மட்டும் தாங்கான் என்பது அவளுக்குமே நன்கு தெரியும். அதைக் கண்டதும் வேகமாகத் தன் கரத்தை விலக்க, அவசரமாக அவனை விட்டுப் பிரிந்து எழுந்தவள், அங்கிருந்து சிட்டாக மறைந்து போக, எப்போதும் போல அவளை ரசித்தவாறே எழுந்தவனுக்கு அப்போதுதான் இடது நாரியில் ஏற்பட்ட வலி சுளீர் என்று உச்சந்தலையில் அடித்தது.

“அவுச்…” என்று முனங்கியவன், எழுந்த வாக்கில் இடது பக்கம் சரிந்து, இடையைப் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு எழ முயல வலியில் உயிர் போனது. அவன் விழுந்தபோது இடதுபக்கமாகத்தான் விழுந்தான். அதுவும் எதிர்பாராமல் விழுந்ததால் சுளுக்கிவிட்டது போலும்.

பற்களைக் கடித்துக்கொண்டு சிரமப்பட்டு எழுந்தவனுக்குச் சரியாக நிற்கக் கூட முடியவில்லை.

“குண்டுப் பிசாசு… இப்படி அடிபட வைத்துவிட்டு ஓடிவிட்டாளே… அம்மா…” என்று முனங்கியவன், இடது புறத்தைப் பற்றியவாறு யசோதாவைத் தேடி நடக்கத் தொடங்கினான்.

What’s your Reaction?
+1
20
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!