Fri. Oct 18th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 4

(4)

 

‘உள்ளே வந்துகொண்டிருந்தவன் தன்னை நோக்கி யசோதா வருவதைக் கண்டு, பெரும் புன்னகையுடன், தன் கரத்திலிருந்த பெட்டியைக் கீழே வைத்தவாறு தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த அத்தையை இறுக அணைத்துக் கொண்டான்.

யசோதாவிற்குக் கண்ணீர் பொலபொல என்று ஊற்றத் தொடங்கியது. இத்தனை காலம் நெருங்கிய உறவுகள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுத் தனியாக ஒரு தீவில் வாழ்வது போல வாழ்ந்தவருக்குத் தன் அண்ணனின் மகனைக் கண்டதும் தாள முடியவில்லை.

அது மட்டுமா, அவருடைய கையால் வளர்ந்த பிள்ளையாயிற்றே. அவன் மீது உயிராக இருந்தவருக்கு, நீண்ட வருடங்களின் பிறகு கண்டதும், பாசத்தால் உருகிப் போனார்.

கந்தழிதரனும் அப்படித்தான். அந்தச் சின்ன உருவத்தைத் தனக்குள் புதைத்தவனாக இறுக அணைத்துக் கொண்டவன், அவருடைய உச்சந் தலையில் தன் கன்னத்தைப் பதித்து, மார்பில் விழுந்து விம்மிக் கொண்டிருந்தவரின் முதுகை வருடி விட்டவாறு,

“ஷ்… அத்தை…” என்று தேற்ற முயன்றுகொண்டிருந்தான்.

மெதுவாக அவனை விட்டுப் பிரிந்தவர், இன்னும் நம்ப முடியாதவராகத் தன்னை விட உயரமாக இருந்தவனின் தலைமுடியைத் தொட்டுக் கன்னத்தை வருடி இவன் கந்தழிதரன்தான் என்று உறுதிப்படுத்திக் கொள்பவர் போலத் தடுமாறி நின்றவர், புன்னகையும் கண்ணீருமாக,

“என் கண்ணே…! எப்படி இருக்கிறாய்…? கடவுளே…! எப்படி மாறிவிட்டாய்…? அந்த ஒடிசல் உடல் எங்கே போயிற்று…? என்னடா… உடம்பை இப்படி வைத்திருக்கிறாய்…? எங்காவது ஆணழகன் போட்டிக்குப் போகிறாயா என்ன? ஐயோ… என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறதே…!” என்று தடுமாற, சற்றுக் குலுங்கி நகைத்தவன், அவருடைய கரங்களைப் பற்றி அழுத்திக் கொடுத்து,

“அத்தை…! அத்தை…! நம்புங்கள்…! இது நானேதான்…! வேண்டுமானால் பரம்பரைப் பாட்டைப் பாடி நான்தான் உங்கள் மருமகன் என்று உறுதிப்படுத்தவா? கொஞ்சம் பொறுங்கள்…!” வேண்டும் என்றே தன் தொண்டையைச் செருமி,

“நாளை நமதே… இந்த நாளும் நமதே… தாய்வழி வந்த…” என்று கிண்டலாகப் பாடத் தொடங்க, மெல்லியதாக நகைத்த யசோதா,

“டேய் குறும்பா… உடல் மாறிய அளவுக்கு உன் குணம் மாறவேயில்லை… உன்னை…!” என்று அவனுடைய காதை முறுக்க, மேலும் நகைத்தவனாகத் தன் விழிகளை உயர்த்தியவனின் பார்வையில் பட்டாள், கதவின் பின்னால் நின்று இவனையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த அம்மேதினி.

அவளைக் கண்டதும் இவனுடைய புருவங்கள் சற்று உயர்ந்து இறங்கின.

அவன் கணிப்புச் சரிதான். தெருவில் சண்டை பிடித்தவள்தான் அம்மேதினியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்… ஆனாலும் அதிகம் ஆராய முடியாது கிளம்ப வேண்டிய அவசியம். இப்போது அவள்தான் அம்மேதினி என்று உறுதிப் படுத்திய பின் இவனால் நம்பவே முடியவில்லை. இப்போதும் அந்தப் பதினொரு வயது சிறுமியின் உருவத்தையே எண்ணிக் கொண்டு வந்தவனுக்கு முற்றும் மாறுபட்டிருந்த அந்தப் பெண்ணவளைக் கண்டு சற்று அதிர்ந்துதான் போனான்.

முன்னை விட வளர்ந்திருந்தாள். உருண்டு திரண்ட அந்தக் குழந்தை உருவம் முற்றாகத் தொலைந்து போயிருந்தது. ஆனாலும், பூசிய தேகம் அப்படியேதான் இருந்தது. அதுவும், குறுகவேண்டிய இடங்கள் குறுகி, விரிய வேண்டிய இடங்கள் விரிந்து ஒடுங்கவேண்டிய இடங்கள் ஒடுங்கி என்று கோவில் சிற்பத்தில் செதுக்கிய உருவம் போலப் பெரிய விழிகளும், கலைந்த கார் குழலும், சிற்றிடையும், அளவான நெளிவு சுழிவுகள் என்று பிரம்மன் வடித்த பெண் காவியமாகக் கச்சிதமாக அழகாகவே இருந்தாள். இன்னும் நம்ப மாட்டாதவன் போலத் தன் விழிகளைச் சிமிட்டி விட்டுப் பார்த்தான்.

ஒரு பக்கம் அவளுடைய மாற்றம் பிரமிப்பைக் கொடுத்தாலும், அந்தப் பழைய குழந்தைத்தனமாக உருவத்தைக் காணாது சற்று மனம் சுணங்கித்தான் போனான். அந்தக் குழந்தை உருவம் அவனுக்குள் பாசத்தை விதைக்கும். காணும்போது உள்ளம் கரைந்து உருகும்.. இது என்னது என்கிற உரிமையைக் கொடுக்கும்… ஆனால் இந்த உருவம், அதையும் தாண்டி ஒரு வித தவிப்பைக் கொடுத்தது. சற்றுத் தள்ளி நிற்கச் செய்கிறது. கூடவே ஓடிச்சென்று இழுத்து அணைக்கவும் சொன்னது.

இப்படிப் பல்வேறு பட்ட உணர்ச்சியில் சிக்கித் தவித்தவன், தன்னையும் மறந்து “அம்மணி…” என்று முணுமுணுக்க, சற்றுத் தள்ளியிருந்த அம்மேதினிக்கோ தன் முன்னால் நின்றிருந்தவனை நம்ப முடியாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ உலகம் தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு.

‘கடவுளே… இது என்னுடைய தரன் தானா… என்ன இப்படி மாறிவிட்டான்…!’ முன்பு அடிமட்டம் போல நேராக நிற்பவனின் மார்புகள் தினவெடுத்துப் பரந்து விரிந்தல்லவா இருக்கின்றன. அரைக் கை சட்டை அணிந்திருந்தாலும் அதைப் புடைத்துக் கொண்டு எழுந்திருந்த கரங்களின் தசை ஒவ்வொன்றும் கம்பீரமாக எழுந்து உருண்டு திரண்டு நிற்கின்றனவே. எப்போதும் அலட்சியமாக இழுக்கப்படும் சுருள் குழல் இப்போது கன்ன உச்சி எடுத்து ஒட்ட வெட்டி, வாரி இழுக்கப் பட்டிருக்கிறதே. அதற்குப் பொருத்தமாகத் தாடி அழகாக வெட்டப் பட்டுப் பார்ப்பதற்கே படத்தில் நடிக்கும் நாயகன் போல அல்லவா இருக்கிறான். அந்த விழிகள்… அது மட்டும்தான் மாறாமல் அதே கூர்மையுடன் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தன.

‘யாரைக் கையில் கிடைத்தால், கொலையே செய்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ, எவனைக் கண்டால் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன் என்று எகிறிக் குதித்தாளோ அவன் இப்போது முன்னால் நிற்கிறான். ஆனால் சொன்னதைச் செய்ய முடியாமல் கைக்கட்டி வாய் பொத்தி அவள்தான் நிற்கிறாள்.

அதுவும் தன்னைத் தொட்டதற்காகவே யாரை ஓங்கி அறைந்தாளோ, அவனே, அவளுடைய கந்தழிதரன் என்று வந்து நிற்பான் என்று கனவா கண்டாள்? அப்போதே அந்த விழிகளை எங்கோ பார்த்தது போல நினைத்தாளே. அது கந்தழிதரனுடைய விழிகள் அல்லவா. எப்படி அதை மறந்தோம். அந்தக் குரல் வேறு சலனப்படுத்தியதே… கடவுளே… இவன்தான் கந்து என்று தெரியாமல் அடிக்க வேறு செய்து விட்டோமே… சும்மாவே செய்வான்… இப்போது வைத்துச் செய்யப் போகிறானே… கிணற்றில் போடுவானோ? மரத்தில் தொங்க விடுவானோ…? தலைகீழாகத் தூக்கி பிடிப்பானோ…? இல்லை மரத்தோடு கட்டிவைத்து பாவக்காய் தின்னவைப்பானோ? என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்… ஆனால் பாவக்காய் மட்டும் வேண்டாம்… ஐயோ… கண்களால் பார்த்தே புலம்ப வைத்துவிட்டானே நல்லூர் முருகா… ஏதாச்சும் மறதி நோயைக் கொடுத்து  நான் அடித்ததை மட்டும் மறக்க செய்துவிட்டேன்… ப்ளீஸ் ப்ளீஸ்… நான் என்ன செய்வேன்…’ எனத் தனக்குள் நடுங்கி புலம்பிக் கொண்டிருக்க, இருவரின் தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் உணர்ந்துகொள்ளாத யசோதா,

“எப்படிப்பா இருக்கிறாய்? அண்ணா அண்ணி எல்லோரும் நலம்தானே?” என்று கனிவுடன் கேட்க, தன்னிலை கெட்டிருந்த கந்தழிதரன், சுயநினைவுக்கு வந்தவனாகத் தலையைக் குலுக்கித் தன்னைச் சமப்படுத்திவிட்டு, மென்மையாகப் புன்னகைத்தவாறு யசோதாவை ஏறிட்டான்.

“அவர்கள் எல்லோரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் அத்தை… நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்றான் கனிவாக.

அவன் கன்னத்தை வருடிக் கொடுத்த யசோதா,

“எனக்கென்ன கண்ணு… நன்றாக இருக்கிறேன்… நீங்கள் இல்லாததுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது தம்பி… பழையது போல இப்போது வாழ்க்கை இல்லை… எந்த நேரம் என்ன நடக்கும் என்பதும் தெரியாது… ஏதோ இயந்திர கதியில் ஓடுகிறது.” என்றவர் திரும்பி,

“மேதினி… என்ன அங்கேயே நின்றுவிட்டாய்… இங்கே வா…” என்றதும் சுயத்திற்கு வந்தவளாகத் தயக்கத்துடன் முன்னால் வந்தாள் அம்மேதினி.

அவளைக் கண்டதும் விழிகள் மின்ன,

“ஹாய்…” என்றான் புன்னகையுடன். அவளோ இன்னும் மாயையிலிருந்து விடுபடாதவளாகத் தன் முன்னால் நின்றிருந்தவனைத்தான் வெறித்துக் கொண்டிருந்தாள். யசோதா அவளுடைய அதிர்ச்சியைப் பொருட்படுத்தாது,

“தம்பி… இதோ… இவளைத் தெரிகிறதுதானே… இவள் நம்முடைய…” அவர் முடிக்கவில்லை,

“அம்மணி…” என்றான் முகம் விகசிக்க.

அந்த அம்மணி என்கிற அழைப்பில் உள்ளம் சிலிர்த்துப் போனது அம்மேதினிக்கு. எத்தனை காலங்கள் ஆகிவிட்டன இந்த அழைப்பைக் கேட்டு… அவன் ஒருவன் மட்டும்தான் அவளை இப்படி அழைப்பான். நெஞ்சம் அவளையும் மீறி உருகிப்போயிற்று. ஆனாலும், தன் இளக்கத்தை வெளிக் காட்டினால் அது அம்மேதினி அல்லவே, தன் உணர்வுகளை அவசரமாகக் குழிதோண்டிப் புதைத்தவள், அவனை நிமிர்ந்து பார்த்து,

“என்னுடைய பெயர் ஒன்றும் அம்மணி அல்ல… அம்மேதினி…” என்றாள் வெடுக்கென்று.

மெல்லியதாகச் சிரித்தவன், அவளை நெருங்கி, அவளுடைய தலையில் மெல்லிய கொட்டு ஒன்று வைத்துவிட்டு, பின் தலையில் தன் உள்ளங்கையைப் பதித்து அங்கும் இங்கும் ஆட்டி, அவள் முகம் நோக்கிக் குனிந்து,

“அப்போதும் சரி, இப்போதும் சரி… என்னுடைய அம்மணி நீ தான்டி… என் வண்டு…” என்றவன் அவளை ரசனையாகப் பார்த்துவிட்டு, எழுந்து நின்று தன்னுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு,

“அன்றிலிருந்து இன்று வரை கை நீட்டும் பழக்கம் மட்டும் மாறவேயில்லை…” என்றான் மெல்லிய நகைப்புடன். ஒருகணம் இவளுடைய முகம் வெளுறிப்போனது. ஆனாலும் சமாளித்தவளாக,

“அது இருப்பதால்தான் நிறையப் பேர் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்…” என்றாள் நெஞ்சை நிமிர்த்தி. இவனோ,

“ம்… வாய் கூட மாறாமல் அப்படியேதான் இருக்கிறது…” என்று கிண்டலுடன் கூற, அவனைப் பார்த்து முறைத்தவள்,

“வாய் இடம் மாறினால் நன்றாகவா இருக்கும்? அசிங்கமாக இருக்காது? அதன் பிறகு நம்மை வேற்றுக் கிரக வாசிகள் என்று நினைத்து ஆராய்ச்சிக் கூடத்திற்குள் அனுப்பி விடமாட்டார்கள்…” என்று கூற, அதைக் கேட்ட யசோதா, வந்த கந்தழிதரனை மதியாது வார்தையாடுவதைக் கண்டு பதறியவராக,

“அம்மேதினி…! என்னம்மா இது…? தம்பியுடன் இப்படித்தான் நடந்துகொள்வதா? இதுதானா நீ அவருக்குக் கொடுக்கும் மரியாதை…? ஐந்து வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறார் என்கிற ஒரு மட்டு மரியாதை வேண்டாம்?” என்று கடிய, தாயைப் பார்த்து முறைத்தவள், பின் முன்னால் நின்றிருந்தவனைப் பார்த்து முப்பத்திரண்டும் தெரியச் சிரித்தாள்.

“மரியாதையா…? இவனுக்கா…?” என்றவாறே சடார் என்று இடைவரை குனிந்து,

“ஹாய்… கந்தழிதரன் அத்தான் அவர்களே…! உங்கள் வரவு நல்வரவாகட்டும்…! உங்கள் பாதம் பட்டு நம்முடைய புண்ணிய பூமி பொன் பூமியாகட்டும்…! திருநிறைச் செல்வரே…! உங்கள் வரவால் வானம் மும்மாரி பொழியட்டும்! விவசாயம் கொழிக்கட்டும், செல்வம் பெருகட்டும்…! ஈழப் போர் ஓயட்டும்! போரில் மடிந்த பல்லாயிரம் மக்களும் உயிர்பெறட்டும்! சிதைந்த கட்டடங்கள் எழுந்து நிற்கட்டும்! கண்டும் காணாமலும் தூங்கும் உலகம் விழிப்படையட்டும்…! தமிழ் ஈழம் கிடைக்கட்டும்…! வருக…! வருக…! வருக…! நல்லாசி தருக…! தருக…! தருக…!” என்று நிமிராமலே உள்ளே செல்லுமாறு வாசல்கதவைக் காட்டிக் கூற, கந்தழிதரனக்குச் சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது. யசோதைக்குத்தான் தன் தலையை எங்கே கொண்டு சென்று வைப்பதென்று தெரியவில்லை.

நெருங்கித் தன் மகளின் கரத்தில் மெல்லியதாகக் கிள்ளியவர்,

“ஹீ… ஹி… தப்பாக நினைக்காதீர்கள் தம்பி…! இவளைப் பற்றித் தெரியாதா? இப்போதும் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறாள்…” என்று சங்கடத்துடன் கூற, அவனோ தன் வாயைப் பிளந்து,

“கொஞ்சமா…” என்றான் விழிகளை விரித்து. பின் “ஆனாலும் அநியாயத்திற்கு உங்கள் மகளுக்காக வரிந்து கட்டுகிறீர்களே அத்தை…” என்று கிண்டலுடன் கூறியவாறு அம்மேதினியைப் பார்த்து,

“உத்தரவு இளவரசியாரே…! உங்கள் பொன்னான அழைப்பை நான் புறந்தள்ளலாமா…? அது அடுக்குமா…? இதோ வந்துவிட்டேன்!” என்றவாறு வந்தவன், அவள் வாசலை அடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு,

“இளவரசியார் எனக்குச் சற்றுப் பின்னேறி இடம் விட்டால் உள்ளே சென்று விடுவேன்… இல்லை வாசலில் வைத்து என்னைத் தரிசிக்கத் தாங்கள் சித்தப்பட்டால், அதற்கும் நான் மனமகிழ்ந்து தங்கிவிடுகிறேன்…” என்று கூற, இடையில் கரங்களைப் பதித்து, அதிகாரத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்து,

“ம்… பின்னேறும் பழக்கம் எங்கள் தமிழ்க் குடிக்கே இல்லை அரசே… வேண்டுமானால் கங்காருபோலப் பாய்ந்து கடந்து செல்லுங்கள்…” என்றாள் சற்றுத் திமிராய்.

“நான் எதற்குத் தங்கம் பாய்ந்து போகவேண்டும்…” என்றவன் சற்றும் தாமதிக்காமல் பழைய நினைவில், அவளுடைய இடையைப் பற்றி ஒரு குழந்தையைத் தூக்குவது போல ஓரடிக்கும் மேலாகத் தூக்கிவிட்டிருந்தான்.

அவனுக்கு எப்படியோ, அவள்தான் அதிர்ந்து போனாள். எப்போதும் அவன் இப்படிச் செய்வதுதான். அப்போது அது விளையாட்டாக இருந்தது. இப்போது, ஏனோ உடல் நடுங்கியது. அவளையும் மீறிய ஒரு வித சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவியது.

அவனோ இத்தகைய உணர்வுக்குச் சற்றும் ஆட்படாதவனாக, அவளைத் தூக்கிய வேகத்திலேயே, மறுபக்கம் இறக்கியவன், உள்ளே நுழைந்தவாறு, கரங்களை விலக்கி,

“இடம் கேட்டேன்… கொடுக்காது மறுத்தாய்… அதுதான் நானே பிடுங்கிக் கொண்டேன் அம்மணி…” என்றவன் அவளுடைய கன்னத்தில் மெல்லியதாகத் தட்டிவிட்டுத் தன் பெட்டியையும் இழுத்துக்கொண்டு உள்ளே வர, ஒரு கணம் ஆட அசைய மறந்துபோய் அப்படியே சிலையாக நின்றிருந்தாள் அம்மேதினி.

முதன் முறையாக அவனுடைய கரம் பட்ட மேனியில் ஒரு வித குறுகுறுப்பு. இன்னும் இடையில் அவனுடைய கரம் பதிந்திருப்பது போன்ற உணர்வில் தவித்தவள், அதைத் தட்டித் தடவி அகற்ற முயன்றாள். அந்தோ பரிதாபம். அந்த இளஞ்சிட்டின் மனதில் அந்த ஆண்மகனின் ஸ்ரிசம் உடலில் மட்டுமல்ல மனதிலும் மிக ஆழமாகப் பதிந்து போனதுதான் பரிதாபம்.

அதுவும் முதன் ஆண்மகனின் தொடுகை, அந்தப் பிஞ்சு உள்ளத்தின் நெஞ்சில் ஒரு வித தடுமாற்றத்தை ஏற்படுத்தியது என்பது மட்டும் நிஜம்.

ஆனால் அவனோ அவள் தேகத்தோடு தொட்டுச் சென்றதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. தன் கரத்திலிருந்த பையை ஓரமாகப் போட்டுவிட்டு இடையில் கரங்களைப் பதித்து அந்த வீட்டையே சுற்றிப் பார்த்தான். ஐந்து வருடங்களில் எந்த மாற்றமும் அந்த வீட்டில் இருக்க வில்லை. அவன் போகும் போது எப்படி இருந்ததோ, மாற்றுக் குறையாமல் அப்படியேதான் இருந்தன. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் உட்பட.

அங்கே நடுவிலிருந்த கண்ணாடி அலமாரியைக் கண்டவன், மெல்லிய புன்னகையுடன் நெருங்கி அதைத் திறந்து பார்த்தான். அவன் வாங்கிய அத்தனை பரிசுகளும் விருதுகளும் அழகாக அடுக்கப்பட்டிருந்தன.

பள்ளிக்கூட வாழ்க்கைதான் எத்தனை அற்புதமானது. தெவிட்டாத சொர்க்க காலங்கள் அல்லவா அவை. இளமை கொடுக்கும் குதூகலத்தில் வயதொத்த பெண்களைத் தெரு ஓரமாக நின்று சைட் அடிப்பதும், அவர்கள் பார்த்துவிட்டால் ஆர்ப்பாட்டம் செய்வதும் என்று எத்தனை இனிய நினைவுகள் நிறைந்தவை அக்காலங்கள். அது மட்டுமா பெண்களை முன்னர் போகவிட்டுப் பின் தொடர்வதில் இருக்கும் சுகமே அலாதிதான். இப்போது நினைத்தாலும் சிரிப்பு பொங்கிக் கொண்டு வரும்.

அதுவும் அப்போது அவனுக்கு விளையாட்டுத் துறையில் பெரும் வெறியென்றே சொல்லலாம். அவன் பங்குபெறாத விளையாட்டுகளே கிடையாது. அப்போது பெற்ற பரிசுகள்தான் அவை. அதுவும் பெண்களுக்குத் தன் திறமையைக் காட்டாவென்று வென்ற பரிசுகள்.

கொழும்பிற்குச் சென்றபோது அனைத்தையும் கட்டிக்காவிக்கொண்டு செல்ல முடியாது என்பதால், அவற்றை மூட்டைகட்டி இங்கே பரனின் மீது போட்டுவிட்டுப் போயிருந்தான். அவை அனைத்தையும் துடைத்து மிக அழகாகக் கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

நெஞ்சம் நிறைந்து போனது அவனுக்கு. மலர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க. அம்மேதினி இன்னும் வாசலில் நின்றவாறு இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒற்றைப் புருவத்தை மேலே தூக்கி, என்ன என்பது போலப் பார்க்க, சுயம் பெற்றவளாகத் தன் தலையைக் குலுக்கியவள்,

“அந்த முச்சக்ககர வண்டி நடந்தா வந்தது? அப்படியே நடந்து வந்திருந்தாலும், எப்போதோ வந்திருப்பீர்களே” என்று தன் சந்தேகத்தைக் கேட்க, அவனோ, புன்னகைத்தவாறு,

“கனடாவில் என் நண்பன் ஒருவன் கொடுத்த பொதியை இங்கே அவன் உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது… அதைக் கொடுத்துவிட்டு வரச் சற்றுத் தமதமாகிவிட்டது…” என்றவன், தன் புருவங்களைச் சுருக்கி மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி,

“ம்… விசாரிப்பதைப் பார்த்தால் எனக்காக, அதிகம் காத்திருந்தாய் போல இருக்கிறதே…” என்று வினவ, அவன் தன்னைக் கண்டுகொண்டானே என்கிற ஆத்திரத்தில் சிலிர்த்துக் கொண்டவள்,

“யாரை…? உங்களையா…? இதோடா…! ஐந்து வருடங்களாக நீங்கள் யாரும் இல்லாமல் தனியாகத்தான் இங்கே இருக்கிறோம்… அப்போதெல்லாம் உங்களைத் தேடாத நாங்கள், இப்போதுதான் தேடப்போகிறோமாக்கும்…! எண்ணம்தான் பிழைப்பைக் கெடுப்பது…!” என்று அலட்சியமாகக் கூறியவள், இன்னும் நின்றால் தன்னைக் கண்டு கொள்வானோ என்று அஞ்சி, அவசரமாகத் தன் அறை நோக்கிச் செல்லத் தொடங்க, அதை உணர்ந்தவன் போலப் பற்கள் தெரிய நகைத்தான் கந்தழிதரன். கூடவே அவள் நொண்டி நடப்பதைக் கண்டு,

“என்ன நொண்டுகிறாய்? எங்காவது முட்டிவிட்டு வந்தாயா என்ன?” என்றான் கிண்டல் தொனிக்க. அதைக் கேட்டதும், அம்மேதினி தன் நெற்றிக்கண்ணைத் திறந்தாள்.

முட்டுவது கழுதைதானே. அவன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்பதைப் புரிந்துகொண்டவளாக, அவனைப் பார்த்து முறைத்த முறைப்பில் அவன் எரிந்து சாம்பலாகாதது அவன் தாய் தந்தை செய்த புண்ணியமே. பற்களை நற நற என்று கடித்தவள்,

“ஒன்றும் இல்லை… வரும் வழியில் ஒரு கழுதை… என் மேல் முட்டிவிட்டது…” என்றாள் கொதிப்புடன். அவனோ விழிகள் மின்ன,

“ஓ… அடப்பாவமே… ஒருவேளை கழுதை உன்னைக் குட்டிச்சுவர் என்று நினைத்துவிட்டதோ… அதன் மீது தப்பில்லை அம்மணி…” என்று அவளுடைய ஐந்தடி மூன்றங்குல உருவத்தை மேலிருந்து கீழ் பார்த்தவாறு இவன் கூற, முள்ளம்பன்றி கோபத்தில் முற்களை விரிக்குமே அது போலச் சிலிர்த்துப்போய் அவனைப் பார்த்தாள் அக்காரிகை.

“உண்மைதான்… ஐந்தறிவு கொண்ட கழுதைக்குத் தெரியுமா எங்கே முட்டவேண்டும், எங்கே முட்டக் கூடாதென்று… அதற்குச் சுவரும் ஒன்றுதான்… தென்னை மரமும் ஒன்றுதான்… நாம்தான் பார்த்து நடந்திருக்க வேண்டும்…” என்று சுடச் சுடப் பதில் கொடுத்தவள், அதற்கு மேல் அவனோடு மல்லுக் கட்டப் பிடிக்காமல், விருக்கென்று தன் அறைக்குச் செல்ல மேலும் இவனுடைய புன்னகை விரிந்தது.

எப்போதும் அவளோடு மல்லுக்கட்டுவதென்றால் அலாதி சுகமாயிற்றே. ஐந்து வருடங்களாக இதைத் தவறவிட்டிருந்தான். இப்போது மீண்டும் அந்த இருபத்தொரு வயது இளமைக்குத் திரும்பிய ஒரு திருப்தி. மகிழ்ச்சி.

அவன் வம்புக்குப் போவதும், வம்புக்கு இழுப்பதும் அம்மேதினியை மட்டும்தான். அதுவும் தொட்டால் சிணுங்கியான அவளை வம்புக்கு இழுப்பது என்றால் இவனுக்கு அல்வா சாப்பிடுவது போல. பிறகென்ன, அவனுடைய கிண்டலுக்குத் தீனியாகிப்போவாள் அம்மேதினி. அவன் வேண்டும் என்றே தன்னை வம்புக்கு இழுக்கிறான் என்று தெரியாமலே அவனுக்கு நன்றாக வாய்ப்புக் கொடுப்பாள். இப்போதும், அந்த வாய்ப்பைத் தாராளமாகவே வழங்கினாள் அம்மேதினி. அதைப் புரிந்து மெல்லியதாகப் புன்னகைத்தவன்,

‘இன்னும் நாக்கு மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன. என்ன, இன்றைய நாக்கின் கூர்மை சற்று அதிகமாகி இருக்கிறது… கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்யவேண்டும்…’ என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே யசோதா அம்மேதினியை அழைப்பது கேட்டது.

அப்போதுதான் அறைக்குள் நுழைந்தவளுக்குத் தாய் எதற்கு அழைக்கிறாள் என்பது தெரிந்து போயிற்று.

கந்தழிதரனுக்குத் தேநீர் வார்த்துக் கொடுக்க வேண்டும்…

“ஆமாம்… இவர் பெரிய மகராசா… இந்தாளுக்குத் தேநீர் ஒன்றுதான் இல்லாத குறை…” என்று சினந்தவள், முகத்தை ‘உம்…’ என்று வைத்துக்கொண்டு வெளியே வர, கந்தழிதரன் இன்னும் அதே இடத்தில் நின்றவாறு தான் பெற்ற பரிசுப் பொருட்களைப் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தான்.

“பெரிய ஆஸ்கார் விருது… கண்ணிமைக்காமல் பார்க்கிறாராக்கும்…” என்று எரிச்சலுடன் நினைக்கும்போதே,

“எனக்கு இது ஆஸ்கார் விருதுதான் அம்மணி…” என்கிற புன்னகையுடன் திரும்பிப் பார்த்து,

“பெண்களின் பாராட்டுக்காகவே வாங்கிய விருதுகள்… எனக்கு ஆஸ்கார் விருதுதானே…” என்று கூற, இவளுக்குள் திகுதிகு என்று எதுவோ எரிந்தது.

எத்தனை தைரியமிருந்தால் பெண்களுக்காக வாங்கிய விருது என்று சொல்வான்… அதுவும் அவளிடமே… ஆத்திரத்துடன் அவனை முறைத்தாலும், கூடவே எப்போதும் போலத் தான் நினைத்ததைச் சடுதியில் புரிந்துகொண்ட அவன் மீது கோபம் வர,

“நான் என்ன நினைத்தேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் இடையில் கைகளைப் பதித்தவாறு. இவனோ தன் வரிசைப் பற்கள் வெளியே தெரிய,

“உன்னைச் சிறுவயது முதலே கண்டு வளர்ந்தவன் நான்… எந்த நேரம் என்ன நினைப்பாய் என்று எனக்குத் தெரியாதா என்ன? இப்போது கூட அத்தை உன்னை அழைத்தார்கள்தானே… தேநீர் வார்த்துக் கொடுக்கவேண்டும் என்று உனக்குத் தெரிந்திருக்கும்… என்னைத் திட்டிக்கொண்டுதானே வெளியே வந்தாய்…! அதுவும் எப்படித் திட்டினாய் என்று சொல்லவா…? ம்… இவர் பெரிய மகாராஜா… இவருக்குத் தேநீர் வார்த்துக்கொடுக்க நான் என்ன அவர் வைத்துவிட்டுப் போன சேடிப்பெண்ணா?” என்று அவள் போலவே முகத்தை உர் என்று வைத்தவாறு கூறியவன், பின் நகைத்து, “இப்படித்தானே நினைத்தாய்?” என்றான் கிண்டலாக.

அவன் தன்னைப் போலக் கூறியது ஒரு பக்கம் சிரிப்பாக வந்தாலும், அதை மறைத்தவளாக முகத்தைக் கடுமையாக வைத்து மறுப்பாகத் தலையை ஆட்டி,

“இல்லை… ‘இவர் பெரிய மகாராஜா… இருந்தாளுக்குத் தேநீர் ஒன்றுதான் குறை…’ அப்படித்தான் நினைத்தேன்…” என்றாள் கெத்தாக.

“ஆமாமாம்… நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் மகாராஜாதான் கண்ணு… அத்தையிடம் கேள் சொல்வார்கள்… உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்குப் பிறகுதான்டி நீ…” என்று கூற அதுவரை இளகியிருந்தவளுக்கு இப்போது எரிச்சல் வந்தது.

“ஆமாமாம் பெரிய மகாராஜா… யானை படுத்தால் பாகன் மட்டமாகத்தான் தெரிவான்…” கூறிவிட்டு உள்ளே செல்ல, அவனுடைய சிரிப்பு மேலும் விரிந்தது. கூடவே அவன் விழிகள் பெரும் ரசனையுடன் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்தன..

‘இதோ இவளுடைய இந்தக் குறும்பையும், குழந்தைப் பிள்ளைகளுக்கான கோபத்தையும்தான் நிறையத் தவறவிட்டுவிட்டான். அடிக்கடி தனக்குள் அவள் செய்த குறும்புச்சேட்டைகளை எண்ணிச் சிரித்தும் கொள்வான். இத்தனை சிக்கலான சூழ்நிலையிலும் இங்கே வந்ததற்கு அவளும் முக்கியக் காரணமாயிற்றே.’ எண்ணிக் கனிந்தவனுக்கு ஏனோ உள்ளம் வாடிப்போனது.

அவன் கனடா போன பின், ‘எப்போது இவளைப் பார்க்க வரப்போகிறானோ. இன்னும் ஐந்து வருடங்களில் அவளுக்கான புதிய வாழ்க்கையை அத்தை அமைத்துக் கொடுத்த பின் அவளுடைய பாதை வேறாகிப் போகும். குழந்தை குட்டியென்ற ஆனபின், சற்று அந்நியப்பட்டுப் போவாள். அதன் பின்பு எப்போது அவளைச் சந்திப்பானோ… இல்லை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போகுமோ… எது எப்படியாக இருந்தாலும், அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் அவனுக்கு.’

அந்தச் சிந்தனையில் தன்னை மறந்திருக்க, கால் சலங்கையின் மெல்லிய ஓசையில் சுயத்திற்கு வந்தான் கந்தழிதரன்.

சற்று விலகி நிமிர்ந்து பார்க்க, அம்மேதினி அவன் முகத்திற்கு நேராகத் தேநீர் குவளையை நீட்ட,

மெல்லிய புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டவனின் பார்வை ஏனோ அவளை விட்டு விலகவில்லை.

இன்னும் அவனால் அது அம்மேதினியென்று நம்பவே முடியவில்லை. இப்போது அவளுக்கு வயது பதினாறாக இருந்தாலும், குழந்தைத்தனம் முற்றிலும் மாறி, அங்கே பெண்மையின் எழில் நிறைவாகவே இருந்தது அவளிடம்.

அதே போல அவனுடைய மனமும் நிறைந்துபோனது. அது ஒரு ஆணுக்குப் பருவப்பெண்ணைக் கண்டதும் தோன்றும் நிறைவல்ல. அதையும் தாண்டி ஒரு அன்னையின் பரவசம் அவனிடத்தே.

அவள் கொடுத்த தேநீரை வாங்கியவன், உதட்டிற்குக் கொண்டு போக முயன்று பின் என்ன நினைத்தானோ, தேநீரை முகர்ந்து பார்த்துவிட்டு,

“நம்பிக் குடிக்கலாமா?” என்றான் யோசனையுடன். இவளோ நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைக்க,

“இல்லை… ஏற்கெனவே என் மீது அதிகக் கடுப்பில் இருக்கிறாய்? இருக்கிற கோபத்தில் இனிப்புக்குப் பதிலாகக் காரத்தை அள்ளிப் போட்டிருந்தால்… அதுதான் யோசிக்கிறேன்…” என்று அவன் புருவம் சுருங்கக் கூற, இவளோ அவனை வெட்டுவது போலப் பார்த்துவிட்டு,

“தேநீரை நான் வார்க்கவில்லை… அம்மா வார்த்தார்கள்…” என்றாள் எங்கோ பார்த்தவாறு… ஆனாலும் கடைக்கண்ணால் அவனைப் பார்ப்பதை மட்டும் விடவில்லை.

நிம்மதிப் பெரு மூச்சு விட்டவாறு ஆவலுடன் ஒரு வாய் வைத்தவன், மறு கணம் வாய்க்குள் விட்டதை அப்படியே வெளியே துப்பிவிட்டிருந்தான்.

தன் உதடுகளை அழுத்தமாகப் புறங்கையால் துடைத்துவிட்டவாறு, அவளைக் கடுப்புடன் பார்க்க,

“எப்படி… இருக்கிறது தே…நீர்…” என்று கெத்தாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவன் சாப்பிடுவதற்காகச் சிற்றுண்டியோடு யசோதா வெளியே வர, அதைக் கண்டதும் முகத்தில் மெல்லிய பய ரேகை வந்து போனது. ஆனாலும் அவனை நிமிர்ந்து பார்த்து,

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை… பழைய யுக்திதான்… ஆனால் பரிதாபமாகத் தோற்றுவிட்டாயே கந்து…” என்று இழுத்தவள், இன்னும் அங்கே நின்றால், தேநீருக்கு உப்பிட்டுக் கொடுத்ததை அன்னை அறிந்து இவளை உண்டு இல்லை என்றாக்கிவிடுவார் அன்னை என்கிற அச்சத்தில், சிட்டாக அங்கிருந்து பறந்து போக, இவன்தான் திருத் திரு என்று விழிக்க வேண்டியதாயிற்று.

அவன் தேநீர் குடிக்காது நிற்பதைக் கண்டதும்,

“என்னப்பா… தேநீர் குடிக்காமல் வைத்திருக்கிறாய். ஆறிவிடப்போகிறது… குடி…” என்று கூற,

“ஹீ… ஹீ… இதோ அத்தை…” என்று சமாளித்தவனுக்கு ஏனோ அம்மேதினியையும் காட்டிக் கொடுக்க முடியவில்லை.

பேச்சு வாக்கில் ஜன்னலோரம் சென்றவன், யசோதா மறுபக்கம் திரும்பிய நேரம் அப்படியே குவளையில் இருந்த தேநீரை வெளியே ஊற்ற, அப்போதுதான் அந்தப் பக்கம் வந்த அம்மெதினியின் மீது முழுவதுமாகத் தெறித்தது தேநீர்.

தன் மீது சுடு தேநீர் கொட்டியதும் அதிர்ந்து போய்த் தடை போட்டவளாக நின்றவள், தேநீர் பறந்து வந்த திசைக்கேற்பத் திரும்பிப் பார்க்க, அங்கே கந்தழிதரன் நின்றிருப்பதைக் கண்டு, இவளுடைய இரத்தம் கொதிநிலைக்குச் சென்றது.

வேண்டுமென்றுதான் அவன் தன் மீது ஊற்றியதாக நினைத்தவளுக்கு, அவன் மீது ஆத்திரம் கொப்பளித்தது.

‘எத்தனை தைரியம் இவனுக்கு?’ தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவாறு அவனை நிமிர்ந்து பார்க்க இப்போது தெரிந்தது அவனுடைய முதுகுதான்.

“திமிர்… அத்தனையும் திமிர்… கிராதகன்… டேய்… கந்தழி… உனக்கு என் கையால்தான்டா முடிவே…” என்று தனக்குள் சீறிக்கொண்டிருக்கும் போதே திரும்பி நின்றிருந்தவனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

சத்தியமாக அவன் தேநீரை வெளியே ஊற்றும்போது அம்மேதினி குறுக்காக வருவாள் என்று நினைத்திருக்கவேயில்லை. உயிரைக் கொடுத்தாவது அந்தத் தேநீரிலிருந்து தப்பவேண்டும் என்று நினைத்தவன் அம்மேதினி வருவதைக் கவனிக்காமலேயே வெளியே ஊற்றி விட்டிருந்தான். அவளுடைய போதாத காலம், அது அப்படியே அவள் முகத்தில் கச்சிதமாகப் போய்த் தெறித்திருந்தது.

தேநீர் முகத்தில் வழிய, அவனைப் பார்த்துக் கோபமாக முறைத்த முறைப்பில்,

“அடடே… இப்படியாகிவிட்டதே” என்கிற அதிர்ச்சி மறைந்து,

“எனக்கா உப்பிட்ட தேநீர் கொடுத்தாய்… உள்ளளவும் மறவேன் என் குட்டிப்பிசாசு” என்று எண்ணி நகைத்தவனின் நகைப்பை, நல்லவேளை அவள் கண்டிருக்கவில்லை. கண்டிருந்தால், அவனுடைய குடலை மாலையாக்கிக் கழுத்தில் போட்டிருப்பாள்.

What’s your Reaction?
+1
19
+1
7
+1
2
+1
4
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!