Fri. Nov 15th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 18

(18)

 

அதன் பின் அம்மேதினி கந்தழிதரனைப் பெருமளவில் தவிர்க்கவே செய்தாள். எங்கே தன்னையும் மீறி, அவனிடம் சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவோமோ என்று அஞ்சுபவள் போல அவன் நிற்கும் திசைக்கு எதிரப்பக்கம் நிற்கத் தலைப்பட்டாள் அம்மேதினி…? ஆனால் அதற்கு அவள் எத்தனை சிரமப்பட்டாள் என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

உணவு அருந்துவதைக் கூட, தான் படித்துக்கொண்டு உண்பதாகச் சொல்லி விட்டு, அறைக்குள் முடங்கிக்கொண்டாள். கந்தழிதரனும் இதைப் பெரிதாக எடுக்கவில்லை. சொல்லப்போனால் அவளுடைய ஒதுக்கம் அவனுக்குப் பெரும் நிம்மதியைத்தான் கொடுத்தது.

‘இல்லை என்றால் அவளைக் காணும்போதெல்லாம் மனம் குற்றம் செய்த குறுகுறுப்பில் நின்று தள்ளாடும். தவறு செய்தவன் போலக் குன்றிப் போவான். இது பொருந்தாக் காதல் என்பது அவனுக்கு நன்கு புரியத்தான் செய்தது. அதையும் மீறிக் கலங்கும் அவளுக்காக மனம் தவிக்கவும் செய்தது.

அதன் விளைவாகக் கந்தழிதரன் யாழ்ப்பாணத்தை விட்டு மீண்டும் கொழும்புக்குச் செல்ல முடிவெடுத்தான். அவன் அங்கே இருப்பதால்தானே இத்தனை பிரச்சனையும். அவளை விட்டுத் தொலைவுக்குச் சென்றுவிட்டால், அவன் நினைவு மெல்ல மெல்ல அவளை விட்டு நீங்கிச் செல்லாதா?’

அவளுடைய மனம் மாறவேண்டுமானால் அவள் கண்களுக்குப் படாத தொலைவுக்கு அவன் செல்லவேண்டும். அதற்கு ஒரே வழி மீண்டும் கொழும்புக்குச் செல்வதுதான். ஆனால் அது முடியாதே… சற்று நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வீச்சில் பாதைகள் முழுவதும் அடைபட்டுப் போயினவே… இந்த நிலையில் எப்படிக் கொழும்புக்குச் செல்வது? தவித்தவனுக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. இதைத்தான் ஆப்பிழுத்த குரங்கின் நிலை என்பார்களோ?

இந்த நிலையில்தான் யசோதா கந்தழிதரனைத் தேடி வந்தார்.

இவன் கிணற்றடிக் கட்டில் அமர்ந்தவாறு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க அவனைத் தேடி வந்த யசோதா,

“கந்தழி… மன்னித்துவிடுப்பா… உன்னிடம் சற்றுப் பேசவேண்டுமே…” என்று மெல்லிய தயக்கத்துடன் கூற, இவனோ அத்தைக்கான மரியாதையைக் கொடுத்து எழுந்து நிற்க, அப்போது குளிக்கலாம் என்று ஆடைகளை எடுத்துக்கொண்டு வந்த அம்மேதினி, அன்னையும் கந்தழிதரனும் பேசுவதைக் கண்டதும், நெஞ்சம் படபடக்க மரம் ஒன்றின் பின்னால் மறைந்து நின்று கொண்டாள். அவளையும் மீறி மனது கடிவாளம் அறுத்த குதிரையாக அவனை நோக்கிப் பாய்ந்தவண்ணம் இருக்க. அதை எப்படி அடக்குவது என்று தெரியாது திணறிப்போனாள் அந்த மடந்தை.

கந்தழிதரனோ சற்றுத் தொலைவில் தெரிந்த அசைவை வைத்து அம்மேதினிதான் என்பதைப் புரிந்துகொண்டவனாக, சற்றுத் தலையைச் சரித்து எட்டிப் பார்த்தான். அவன் யூகம் சரிதான். சற்றுத் தள்ளியிருந்த பலாமரத்தின் பின்னே அவளுடைய ஆடையின் ஒரு பகுதி வெளியே தெரிந்தது. திரும்பி அத்தையைப் பார்த்து,

“சொல்லுங்கள் அத்தை… ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்க அவசரமாக மறுத்துத் தலையை ஆட்டியவர்,

“அதெல்லாம் இல்லையப்பா… வந்து… உன் சம்மதத்தைப் பவானி அக்காவிடம் கூறியிருந்தேன் அல்லவா… அவர்கள் பதிவுத் திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் போல வைக்கலாமா என்ற கேட்கிறார்கள். ஏன் என்றால், பதிவுத் திருமணத்திற்கு உன் அப்பா அம்மா இல்லாமல் செய்ய முடியாது. அவர்கள் வருவதாக இருந்தால் பாதை திறக்கவேண்டும். பாதை எப்போது திறப்பார்கள் என்றும் தெரியாது. அதுதான் நிச்சயதார்த்தம் போலத் திருமணத்தை உறுதிப்படுத்துதல் நல்லது என்று யோசிக்கிறார்கள்.… நீ என்ன நினைக்கிறாய்? உனக்கு வேண்டாம் என்றால் யாரும் வற்புறுத்த மாட்டார்கள்…” என்று மென்மையாகக் கேட்க, ஒரு கணம் அம்மேதினியுடையது மட்டுமல்ல. கந்தழிதரனின் உடலும் விறைத்துப் பின் இளகியது.

ஒரு கணம் ஆழ மூச்செடுத்தவனுக்குத் தன் மறுப்பை மட்டுமல்ல, தன் நிலைப்பாட்டைக் கூறவும் இதை விட நல்ல சந்தர்ப்பம் வராது என்பதைப் புரிந்துகொண்டவனாகத் தன் விழிகளை மூடி ஒரு கணம் அமைதியாக இருந்தான்.

அம்மேதினி வேறு பக்கத்தில்தான் இருக்கிறாள். இப்போது அவன் சம்மதம் சொன்னால் அவள் புரிந்துகொள்வாள். மனதில் தேக்கிவைத்த அசட்டு நம்பிக்கையைத் தகர்த்துவிட்டுத் தன் வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கிவிடுவாள். எப்படி அவளுக்கு விளங்கப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தவனுக்குக் கடவுளே வந்து வழி காட்டுவது போலத் தோன்ற, அதை இறுகப் பற்றிக்கொண்டான் கந்தழிதரன். அம்மேதினியின் முட்டாள்தனமான நினைவுகளிலிருந்து தன் நினைவுகளைப் பிரித்தெடுக்க இதை விட வேறு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்போவதில்லை. முடிவெடுத்தவன், முகத்தில் மலர்ச்சியைத் தேக்கி,

“தாராளமாக அத்தை… அதுவும் நல்ல யோசனைதான். நிச்சயதார்த்தத்தை வைத்துவிடலாம். காலமும் சூழ்நிலையும் கைகூடியபின் பதிவுத் திருமணத்தை வைக்கலாம்.” என்று உறுதியுடன் கூற, அம்மேதினிக்குத்தான் தன் உள்ளமே நொறுங்கிப்போன உணர்வு. தன்னையும் மறந்து மறைவிலிருந்து வெளிப் பட்டவள், அவனையே வெறித்துப் பார்க்க, இவனும் சற்றுத் தொலைவில் நின்றவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லையில்லாத பெரும் ஏமாற்றத்துடன் ‘ஏன் சம்மதித்தாய்?’ என்பது போலத் தலையைச் சற்றுச் சரித்துக் கலங்கிய விழிகளை மறைக்க முயன்றும் முடியாதவளாக விழிகளால் இவனிடமே கேள்வி கேட்க, இவனோ ‘சொன்னால் கேட்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் உன்னை நம்ப வைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை…’ என்பது போலப் பதிலுக்குப் பார்த்தான்.

அதை உணர்ந்து கொண்டது போல, இவளுடைய உதடுகளில் விரக்திப் புன்னகை. ‘அவளுடைய காதலை இன்னும் குழந்தைத்தனமானது என்றா நினைத்துக் கொண்டிருக்கிறான்? அத்தகைய சிறுபிள்ளைத் தனமானது அல்ல என்று எப்படிப் புரியவைப்பாள்? ஏதாவது கிறுக்குத்தனமாகத் திரைப்படங்களில் வருவதுபோல காதலில் தோல்வியை சந்தித்தவர்கள் செய்வது போல, கைகளை வெட்டி நிரூபிப்பத? இல்லை கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து நிரூபிப்பத? எதுவாக இருந்தாலும் அவனிடமிருந்து நிரந்தரமாக அவளைப் பிரிக்கும் வழிகளல்லவா அவை. அவற்றை எப்படிச் செய்வாள்.

போகட்டும், அவளுடைய காதலை நம்பாதவன் போகட்டும். ஆனால் இவள் சளைக்க மாட்டாள். காத்திருப்பாள். நிச்சயமாகக் காத்திருப்பாள். அவளுடைய காதல் ஒன்றும் சிறுபிள்ளைத் தனமானது அல்ல என்று அவன் புரிந்து கொள்ளும் காலம் வரும். அப்போது தெரியும் இந்த அம்மேதினியைப் பற்றி.’

அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றவளுக்கு யாரோ தன் உயிரையே பலவந்தமாகப் பறித்து இழுத்து எடுப்பது போலத் தோன்றத் துடித்துப் போனாள். மனமோ பெரும் ஏமாற்றத்தில் கலங்கித் தவித்தது. என்னதான் சமாதானம் சொன்னாலும், என்னதான் திடப்படுத்தினாலும், அவன் இன்னொருத்திக்கு உரிமையாகப் போகிறான் என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

‘அவனுக்குக் கொஞ்சமாவது அவள் மீது அன்பு பிறக்கவில்லையா என்ன? அம்மணி அம்மணி என்று வாய் நிறைய அழைப்பதற்குப் பின்னால் எதுவுமே கிடையாதா?’ எண்ண எண்ண அவளால் தாள முடியவில்லை. ஆனால் எல்லாமே தன் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவளுக்கு நன்கு புரிந்தது.

இதோ இன்னும் இரண்டு தினங்களில் அவனுக்கு நிச்சயதார்த்தம். ஏனோ நிலையில்லாது தவித்தாள் அம்மேதினி. அதன் விளைவு கந்தழிதரனை முழுதாகத் தவிர்க்கத் தொடங்கினாள். அவளுடைய கலகலப் பேச்சு முற்றாக அடங்கிப் போனது. குழந்தைத்தனமான சீற்றமும் கோபமும் எங்கோ தொலைந்து போனது. யசோதா கூட அவளுடைய இந்த மாற்றத்தில் குழம்பிப் போனார்.

“இவளுக்கு என்னதான் ஆயிற்று?” என்று தன்னை மறந்து வாய்விட்டுப் புலம்பவும் செய்தார்.

‘என்ன ஆயிற்று என்று கந்தழிதரனுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் அவள் விலக விலக இவனுக்குள்ளும் ஒரு விதத் தடுமாற்றம். அவனையும் மீறி விழிகள் அவளைத் தேடத்தான் செய்தன. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நிச்சயமாக இந்த நிச்சயதார்த்தம் இருவருக்குமே சுவைக்கப் போவதில்லை என்று.’

இத்தனை யோசித்துத் தடுமாறி அவளை ஒதுக்க நினைக்கும் கந்தழிதரனுக்குக் கூட ஒன்று புரியவில்லை. ‘அது அம்மேதினியின் மெய்க் காதல். அவனைத் தவிர்த்து வேறு யாரையும் அவனால் மனதாரக் காதலிக்க மாட்டாள் என்பதை மட்டும் அவன் அறியத் தவறிவிட்டான். அந்தப் பதினாறு வயதில் அவள் தெளிவாகத்தான் இருந்தாள். இவன்தான் இருபத்தேழில் குழம்பிப் போயிருக்கிறான் என்பதைச் சரிவர இவன் தெரிந்து வைத்திருக்கவில்லை. கூடவே அம்மேதினியைத் தவிர, எந்தப் பெண்ணோடும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்பதையும் இவன் அறியத் தவறிவிட்டான். அதைச் சற்று ஆழ யோசித்திருந்தாலே அவனுடைய மனம் அவனுக்குப் புரிந்திருக்கும். ஆனால் எதார்த்த வாழ்வில் அவளைச் சிறுமியாகப் பார்த்துப் பழகிக் கொண்டவனுக்கு அத்தனை சுலபத்தில் அந்த உணர்விலிருந்து வெளியே வர முடியாமல் போனதன் அவலம், இருவர் வாழ்க்கையையும் சுழட்டிப் போட்டது.’

இந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு வேண்டிய உடுப்பு புடவைகளை வாங்குவதற்காக அனைவரும் சண்டிலிப்பாயில் உள்ள பெரிய கடை ஒன்றிக்குச் செல்ல முடிவு செய்தனர். அதற்குப் பவானியும், நடேசனும் அவனை அழைத்துப்போவதாகச் சொல்லி, தங்கள் வாகனத்தில் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் ரோகிணியும் வந்திருந்தாள்.

கந்தழிதரன் யசோவையும் வருமாறு வற்புறுத்த, நல்ல காரியத்திற்குத் தான் வருவது சரியில்லை என்று மறுத்துவிட, எப்போதும் போல அம்மேதினிதான் அவர்களுடன் போகவேண்டியதாயிற்று.

ஆரம்பத்திலேயே அவள் செல்வதற்கு மறுத்துவிட்டாள். ‘அவர்களின் நிச்சய தார்த்தத்திற்கு அவள் எப்படிப் போவாள். அதுவும் சேலை எடுக்கும் போது இவள் வயிறெரிவாளே.. தவிப்பாளே. அந்தக் கொடுமை எதற்கு. அது அவனுடைய வாழ்வையே சீரழித்துவிடாதா?’

“என்னால் அங்கெல்லாம் வரமுடியாது… மன்னித்துவிடுங்கள்… எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முக்கியமாக என் தோழி பிரபா வீட்டிற்குப் போகவேண்டும்…” என்று கூற,

“அதுதான் அவளுக்கு வேலை இருக்கிறதாமே… நாம் போய்விட்டு வரலாம், என்று ரோகிணி கூற, அக் குரலில் தெரிந்த அலட்சியத்தைக் கண்டு அம்மேதினியின் உடல் எரியத் தொடங்கியது. ஆனால் யசோதாவோ,

“உன் தோழி பிரபாவதியின் வீடு எங்கும் ஓடிவிடாது… இவர்களுடன் போய்விட்டு வா…” என்றார் கறாராக.

“இல்லையம்மா… இன்று முக்கிய ஒப்படையைப் (ஒப்படை – project) பிரபாவிடம் கொடுக்க வேண்டும்… நான் அவள் வீட்டிற்கே போகிறேன்…” என்று அழுத்தமாகக் கூற, அவளுடைய போதாத நேரம் பிரபாவே இவள் வீடு தேடி வந்திருந்தாள்.

வந்தவளைக் கொல்லும் வெறியுடன் அம்மேதினி பார்க்க, பிரபாவோ எதுவும் புரியாதவளாக விழித்தவாறு,

“என்னடி… அப்படிப் பார்க்கிறாய்?” என்றாள் வியப்புடன்.

“ஹீ… ஹீ… என்னை அழைத்துப் போகத்தானே வந்தாய்… இதோ தயாராகத்தான் இருக்கிறேன் வா புறப்படலாம்…” என்று அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்தவாறு போக முற்பட,

“ஏய்… என்னடி செய்கிறாய்… நான் வந்ததே சேலைக் கடைக்குப் போகவேண்டும் என் கூட வருகிறாயா என்று கேட்கத்தான். நீ என்னவென்றால் என்னை வேறு எங்கோ இழுத்துச் செல்கிறாய்?” என்று கோபத்துடன் கேட்க, இதைக் கேட்ட அம்மேதினிக்கு ஐயோ என்று வந்தது. ஆத்திரத்துடன் தன் தோழியை உறுத்து விழிக்க, பிரபா சொன்னதைக் கேட்ட யசோதாவின் முகம் மலர்ந்தது.

“அடடே… நீயும் அங்கேதான் போகிறாயா பிரபா… வசதியாகப் போயிற்று… இதோ இவருக்கு நிச்சயதார்த்தம். புடவை எடுக்கத்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள்… இவளைக் கேட்டால், உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று மறுத்துவிட்டாள்… இப்போது பார் நீயும் அங்கேதான் போகிறேன் என்கிறாய்…” என்று யசோதா கூற, இவளோ பிரபாவைக் கொலை வெறியுடன் பார்த்தாள்.

பிரபாவோ, “அப்படியா ஆண்டி… வசதியாகப் போயிற்று… அப்படியானால் நானும் இவர்கள் கூட வாகனத்தில் போகலாமா?” என்று குதூகலத்தில் வாய் பிளக்க, நங் என்று நடு மண்டையில் பலமாக ஒரு கொட்டு விழுந்தது. துடித்துப் போனாள் பிரபா.

“ஆ…” என்று அலறியவாறு திரும்பிப் பார்க்க, அவசரமாகத் தன் கரத்தை விலக்கி, ‘ஹி… ஹி… ஹி…” என்றவாறு விழிகளால் தோழியை உறுத்துப் பார்க்க, அப்போதுதான் அதிகப்பிரசங்கி தனமாக ஏதோ உளறியதே பிரபாவிற்குப் புரிந்தது.

“ஹி… ஹி… அது வந்து… என்னுடைய அக்காவுக்கு… திருமணம் நிச்சயமாகி இருக்கிறது… அதற்குப் பொருட்கள்…” என்றவள் அம்மேதினியின் விழிகள் போன போக்கைப் பார்த்து,

“அதற்கு… ஒப்படை… கொ… கொடுக்க வேண்டி… இவளும் நா… நானும் கடைக்கும்… போகலாம் என்று…. நினை… நினைத்தோம்…” என்று உளறிக் கொட்டிய பிரபாவிற்கே தான் என்ன சொல்கிறோம் என்று புரியவில்லை.

“என்னம்மா சொல்கிறாய்… உன்னுடைய அக்காவுக்கா நிச்சயதார்த்தத்திற்கும். ஒப்படை கொடுப்பதற்கும், கடைக்குப் போவதற்கும் என்ன சம்பந்தம்?” என்று குழம்ப,

“அதுதானே… என்ன சம்பந்தம்?” என்று பிரபா தலையைச் சொரிய, பாய்ந்து அவளுடைய கழுத்தைத் தன் கை வளைவில் பற்றிக்கொண்டவாறு அருகே வந்தவள், அவளுடைய கழுத்தை நெரித்தவாறு, அங்கும் இங்கும் ஆட்டி,

“ஹீ… ஹீ… அதுவாம்மா… இவளுடைய அக்காவிற்குத் திருமணம் நடக்கப்போகிறதா… அதற்குப் பொருட்கள் வாங்கவேண்டுமா… கையோடு ஒப்படை வேறு இருக்கிறதா… அதற்கும் பொருட்கள் வாங்கவேண்டுமா… அதற்குத்தான் கடைக்குப் போகலாமா என்று கேட்கவந்தாள்… என் ஓட்டவாயி கோகிலா…” என்று இழித்தவாறு பற்களைக் கடித்து மறைமுகமாகத் தன் தோழியைத் திட்ட, அன்னையோ,

“என்ன அலட்டுகிறாய் என்று ஒன்றுமாகப் புரியவில்லை. எது எப்படியோ இருவரும் கடைக்குத்தானே போகவேண்டும்… சரி ஒன்றாகவே சண்டிலிப்பாய் கடைக்குப் போங்கள். இவர்களும் அங்கேதான் போகிறார்கள்…” என்று முடிக்க, உடனே சிரித்த பிரபா, வாகனத்தில் போகும் குதுகலிப்பில்,

“அப்படியா ஆண்டி… அப்போ சரி ஆன்டி…” என்று தலையை ஆட்டி முப்பத்திரண்டு பற்களையும் வெளிக்காட்ட, யாரும் அறியாவண்ணம் தோழியின் காலை ஒரு நசுக்கு நசுக்கினாள் அம்மேதினி.

பதறிப்போனாள் பிரபா. துடித்தவாறு தன் கால்களைப் பற்றியவாறு துள்ள,

“என்னம்மா… என்னாச்சு…” என்று யசோதா பதற,

“ஒன்றுமில்லை ஆண்டி… அது… வந்து… பழாய் போன கட்டெறும்பு கடித்துவிட்டது போல…” என்ற பிரபா திரும்பி அம்மேதினியைப் பார்த்து முறைத்துவிட்டு,

“நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை…” என்றாள் சிலிர்த்தவாறு. பின், யசோதாவைப் பார்த்து,

“ஆண்டி… ஒப்படைக்குப் பொருட்கள் பிறகும் வாங்கலாம்… இவளை அவர்கள் கூடவே அனுப்பி வையுங்கள்…” என்றவாறு மூக்கைச் சுருக்கித் தன் தோழியைப் பார்த்து முறைத்து விட்டுக் கம்பீரமாக வெளியே செல்ல, அம்மேதினிதான் தன் தலையில் கைவைக்க வேண்டியதாயிற்று.

இனி மறுத்தும் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டவளாகத் தன் தலையைக் கவிழ்த்தவாறு வண்டியின் அருகே வந்து நின்றாள் அம்மேதினி.

“தம்பி… நீங்கள் முன்னால் வந்தமர்ந்து கொள்ளுங்கள்…” என்று பவானி உபசாரமாகச் சொல்ல மறுக்காது முன்னால் ஏறி அமர்ந்துகொண்டான் கந்தழிதரன்.

ரோகினிக்கும் பவானிக்கும் இடையே இவள் அமரவேண்டிப் போக, செக்கில் அகப்பட்ட எள்ளாக நசுங்கிப்போனாள் அம்மேதினி. அம்மேதினியின் வருகை யாருக்குமே பிடிக்கவில்லை என்பதால், யாருமே அவளோடு பேச விழையவில்லை. ஏதோ தாழ்த்தப்பட்டவளின் அருகே அமர்ந்துவிட்டோம் என்பது போல் முகத்தை உர் என்ற வைத்தவாறு பயணத்தைத் தொடங்க, குன்றும் குழியுமான தெருவில் விழுந்தெழும்பிச் செல்ல, முடியவே முடியாதோ என்று சலித்துக் களைத்துப் போன வேளையில் வண்டி வந்து நின்றது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டவாறு, அனைவரும் வெளியே வந்தபோது அம்மேதினியின் நாரியை யாரோ தனியாகப் பிரித்து வைத்தது போலத் திணறிப்போனாள்.

இடையைப் பற்றியவாறு சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குப் பயங்கரத் தாகம் எடுத்தது. தன்னை மறந்து வறண்ட இதழ்களை நாவால் ஈரப்படுத்தியாவறு தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தாள். அந்த நேரம் அவள் முன்னால் தண்ணீர் போத்தல் நீட்டப்பட, யார் நீட்டியது என்று பார்த்தாள் அம்மேதினி. வேறு யார் கந்தழிதரன்தான் எங்கோ பார்த்தவாறு தண்ணீர் போத்தலை நீட்டியிருந்தான்.

‘இதில் ஒன்றும் குறைச்சலில்லை. உன் அக்கறை யாருக்கு வேண்டும்…’ என்பது போல அவனைப் பார்த்துவிட்டு, அவன் நீட்டிய போத்தலைத் தொடாது நடந்து சென்றவள், அங்கிருந்த பெட்டிக் கடைக்கு முன்னாலிருந்த தண்ணீர் பானையைக் கண்டு நிம்மதி உற்றவளாக அதை நோக்கி நடந்து சென்றாள்.

பானையின் மூடியை விலக்கிவிட்டுத் அருகேயிருந்த குவளையில் தண்ணீர் அள்ளி வாய்க்குள் ஊற்ற, அந்தக் குளிர் நீர் தொண்டைக்கு அமிர்தமாய் இருந்தது.

இருந்த தண்ணீர் விடாய்க்கு ஒரு குவளை போதாது. குடிக்கும் அவசரத்தில் தண்ணீர் மார்பில் ஊற்றுப்படுவதைக் கூட உணராது அள்ளி அள்ளிக் குடித்தவள் அறியவில்லை சற்றுத் தள்ளி, சில காவாலிகள் அவள் தண்ணீர் குடிக்கும் அழகையே பார்த்துக் கொண்டிருப்பதை.

 

ஒருவாறு தாகம் அடங்கியதும், ஈர உதடுகளைத் தன் புறங்கையால் துடைத்தவாறு திரும்பியவள் அப்போது தான் கண்டாள் நான்கு இளைஞர்கள் ஈரம் பட்ட இடத்தை ஈ என்றவாறு பார்த்துக்கொண்டிருப்பதை.

எரிச்சல் வர, அவர்களை முறைத்துப் பார்த்தவாறு ஈரத்தைத் தட்டி விட்டுக் கொண்டவளாக நடையைக் கட்ட, அவர்களோ இவள் பின்னால் நடந்தவாறு,

“டேய்… அதிகக் கனமாக இருக்குமோடா…” என்றான் ஒருவன்.

“எனக்கெப்படியடா தெரியும்… பிடித்தா பார்த்தேன்… வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாமா…” என்று இன்னொருவன் கேட்க,

“இது என்ன ஜாதி மாங்காய் என்றுதான் தெரியவில்லை… கறுத்தக் கொளும்பானா, வெள்ளைக்கொளும்பானா இல்லை… விலாட்டா தெரிய வில்லையே…”

“டேய் இது அம்பலவிடா…. இல்லை இல்லை செம்பாட்டான் என்று நினைக்கிறேன்…” என்று கூற உடனே மற்றொருவன்,

மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா

மார்க்கெட் போகாத குண்டு மாங்கா

ஹேய் கட்டழகு மாங்காயோ கண்ண பறிக்குதடி

கட்டழகு மாங்காயோ கண்ண பறிக்குதடி

ஊறுகாயப் பார்த்ததுபோல்

உள் நாக்கு ஊறுதடி

மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா

மார்க்கெட் போகாத குண்டு மாங்காய்

என்று பாடத் தொடங்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அது முடியாமல் சடார் என்று நின்றாள். திரும்பி அவள் பின்னால் பாடிக்கொண்டு வந்த மந்தைகளைப் பார்த்து, இதழ்களை இழித்து முப்பத்திரண்டையும் காட்டியவள் மெதுவாக அவர்களை நெருங்க, அந்தக் கழுதைகளோ அவள் திரும்பித் தங்களை நோக்கி வருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அதிர்ந்து நிற்க, இவளோ அவர்களை நெருங்கி,

“அண்ணன்களா… இது என்ன மாங்காய் என்று தெரியவேண்டும்… அவ்வளவுதானே…” என்று தன் மார்பைச் சுட்டிக் காட்டிக் கேட்டவள்,

“அதற்கு எதற்கு இப்படிக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலப் பாட்டுப் பாடி, சுத்தவர இருக்கிற எல்லோரையும் கொல்லவேண்டும்… நமக்குத்தான் தலையெழுத்து… இவர்களுக்குமா?” என்றவள், கீழே குனிந்து பார்த்தாள். சற்றுத் தொலைவில் எப்போதோ குண்டு போட்டபோது சிதைந்த கட்டடத்திலிருந்து சிதறிய கற்களைக் கண்டு, அதை நோக்கிச் சென்றவள், அவற்றில் அளவான கற்களைக் கரங்களில் எடுத்து எடை பார்க்க, அதைக் கண்டதும் அந்தக் காவாலிகளோ ஓடுவதற்குத் தயாராக நின்றிருந்தனர். குரைக்கிற நாய் கடிக்காது என்பது எத்தனை பெரிய உண்மை.

“அண்ணாத்தே… எதற்கு ஓடப் பார்க்கிறீர்கள்… நான் எல்லாம் அடிக்கமாட்டேன்… நீங்கள்தான் என்ன அளவு என்று தெரிய ஆசைப்பட்டீர்கள் அல்லவா… அதுதான்…” தன் இரு கரங்களிலுமிருந்து கற்களைப் பார்த்தவாறு, அதை அவர்களுக்குக் காட்டி, இந்தக் கிரனைட் குண்டு இருக்கிறது இல்லையா கிரனைட் குண்டு… அதன் அளவு தெரியுமா? அதை விடுங்கள்…” என்றவள் தன் கரங்களிலிருந்த கற்களைத் தூக்கிக் காட்டி,

“இதோ… இதனுடைய அளவுதான் அண்ணன்களா…” என்றவள் சற்றும் தாமதிக்காமல் அவர்களை நோக்கி விசிறி அடிக்க எப்போதும் போலக் குறி தப்பி ஒருவனுக்குப் படவேண்டியது இன்னொருவனுக்குப் பட, மற்றவனுக்குப் படவேண்டியது பின்னால் இருந்தவனுக்குச் சென்று பட்டது.

‘கடவுளே… இன்னும் குறி வைத்து எறிய முடியவில்லையே…’ என்று பெரிதாக முணுமுணுத்தவள், பின் ‘நீ எல்லாம் விரயத்துக்கு இருக்கிறாய் மேதினி…’ என்றவாறு மீண்டும் அவர்கள் ஓட முதல் குனிந்து கற்களை எடுத்து, யாருக்கு எறியவேண்டுமோ அவனைத் தவிர்த்து மற்றவனுக்கு எறிய அவள் எதிர்பார்த்தது போலவே கச்சிதமாக எறிய வேண்டிய ஆளின் நெற்றியைப் பலமாகப் பதம் பார்த்தது கல். அதனால்…கொட கொட என்று இரத்தம் கொட்டத் தொடங்கத் தன் கரங்களைத் தூக்கிக் காட்டியவள்,

“ஷ்… சாரி அண்ணா… என்னுடைய ‘அது…’ இத்தனை கல்லாக இருக்கும் என்று நானே நினைகக்வில்லையண்ணா… கொஞ்சம் பொறுங்கள்… இன்னும் ஒரு முறை என்னுடைய ‘இதை’ எறிந்து பார்க்கிறேன்… ம்…” என்றவாறு குனிந்து கற்களைச் சேகரிக்கத் தொடங்க, அதுவரை அதிர்ச்சியிலிருந்த காவலிகள், சுதாரித்தவாறு,

“ஏய்… பிசாசு… நீதானே அடிக்கமாட்டேன் என்றாய்… பிறகு எதற்குக் கற்களை வீசுகிறாய்?” என்று அழுதவாறு கேட்க, இவளோ,

“டேய் நான் எல்லாம் அரிச்சந்திர வம்சம்டா… சொன்ன சொல் தவறமாட்டேன்… நான் அடிக்கத்தான் மாட்டேன் என்றேன்… ஏன் என்றால் உங்களை அடிக்க எனக்குப் பயம்… ஆனால் கற்களை வீசமாட்டேன் என்று சொல்லவே இல்லையே…” என்றவள் மீண்டும் குறி தவறி ஆள் மாற்றி ஆளுக்கு எறிய, அதில் மூவருக்கு நன்றாகவே காயம்பட்டு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.

இவளோ இன்னும் அடங்காதவளாக, “உங்களை எல்லாம் போராளிகளிடம் பிடித்துக் கொடுக்கவேண்டும். அப்போதான் மற்றவர்கள் திருந்துவார்கள். பெண்களை இப்படிக்கு கேவலமாகக் கிண்டல் அடித்தது தெரிந்தாலே சந்தியில் தொங்க விட்டிருப்பார்கள்…” என்று அவள் முடிக்கவில்லை, அந்தப் போராளிகள் என்கிற சொல், என்ன மாயம் மந்திரத்தை செய்ததோ, மறுகணம் அத்தனை பெரும் மாயமாக மறைந்துவிட்டிருந்தனர்.

எரிச்சலுடன், கரங்களில் எடுத்த கற்களைத் தரையில் போட்டுவிட்டுக் கரங்களைத் தட்டிய அம்மேதினிக்கு மனதில் பெரும் திருப்தி. அதுவரை அலைக்கழித்த ஆத்திரம் கோபம் மாயமாகிவிட்ட நிம்மதி. அப்போது,

“நல்ல காரியம் செய்தாய் தங்கச்சி… காவாலிப் பசங்கள்… எப்போது பார்த்தாலும் இதே வேலையாகப் போய்விட்டது…” என்று அங்கிருந்த ஒருவர் எரிச்சலுடன் கூற, ஆத்திரத்துடன் குனிந்தவள் விழுத்திய கல்லை எடுத்து அவரை நோக்கி வீச அது குறி தப்பி உடைந்துபோயிருந்த சுவரில் பட்டுக் கீழே விழுந்தது. இவரோ அதிர்ச்சியுடன் பார்க்க,

“ஒரு பெண்ணைக் கிண்டல் அடிக்கிறார்கள், ஏன் என்று கேட்க வக்கில்லை, வக்கணையாகப் பேச வந்துவிட்டீர்களோ…” என்று சீறியவள், ‘ஏற்கெனவே அந்த வளர்ந்து கெட்டவனால் உள்ளே கொதித்துப்போயிருக்கிறேன்… இதில் இவர்கள் வேறு…” என்று முணுமுணுத்தவாறு திரும்ப, அங்கே கரங்களைக் கட்டியவாறு நின்றுகொண்டிருந்தான் கந்தழிதரன்.

அவனைக் கண்டதும் இவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இங்கே ஒருத்தியை வைத்துச் செய்கிறார்கள். காப்பாற்றவேண்டும் என்று தோன்றுகிறதா பார்… ராட்சசன். எறிந்த கல்லு குறி தப்பி இவன் மீது விழுந்திருக்க வேண்டும்…’ என்று மனதிற்குள் எண்ணிச் சினக்கக் அவனோ அந்தக் காவாலிகளை அவள் கையாண்ட விதத்தைக் கண்டு உள்ளுக்குள் இரசித்துக் கொண்டிருந்தான்.

இவள் தண்ணீரை மறுத்துவிட்டுக் கடைப்பக்கம் சென்றதும் கோபம் கொண்டவனாக எக்கேடும் கெட்டு ஒழி என்பது போல ரோகினியின் பின்னால் சென்றவன் இவளைக் காணாமல் சற்றுக் குழம்பினான்.

‘இன்னுமா தண்ணீர் குடிக்கிறாள்?’ என்கிற யோசனை எழ, அவசரமாக அவளைத் தேடிக்கொண்டு சென்றபோதுதான், அவர்கள் அம்மேதினியைத் தப்பும் தவறுமாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். இரத்தம் பொங்கி எழ ஆத்திரத்துடன் அவர்களை நெருங்குவதற்குள்ளாக, அம்மேதினி பதில்கொடுக்க ஆரம்பித்திருந்தாள். அதைக் கண்டதும் அதைத் தடுக்க எண்ணம் கொள்ளாது ஒரு வித சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, எப்போதும் போல அவள் தவறாகவே கல்லை எறியவும், அத்தனை அழுத்தமும் மறைந்து போகத் தன்னை மறந்து சிரித்துவிட்டான்.

‘இன்னும் குறிபார்த்து எறியத் தெரியவில்லையே…’ என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே புத்திசாலித்தனமாகக் குறியைத் தப்பாக வீச அது கச்சிதமாகச் சரியாகச் சென்று தாக்க கிளர்ந்த சிரிப்பை அடக்கச் சற்றுச் சிரமப்படவேண்டித்தான் இருந்தது.

எப்படியோ தன் வீர தீரச் செயல்களை முடித்துக்கொண்டு வந்தவளிடம், எதுவும் பேசாமல் முன்னால் நடக்க,

‘என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை கேட்டானா பார்… பாவி… படுபாவி… இதுவே அந்த ரோகிணி என்றால் துடித்திருப்பான் அல்லவா?’ என்று மருகியவள், தன் கந்தழிதரன் இப்படி மாறிவிட்டானே என்கிற வேதனையில் விழிகள் பொங்க, அதை ஆத்திரத்துடன் துடைத்துவிட்டுத் தன்னுடைய வேதனையை அடக்கியவாறு அவன் பின்னே சென்றாள் அம்மேதினி.

What’s your Reaction?
+1
20
+1
2
+1
3
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!