Fri. Oct 18th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 13/14

(13)

 

அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம் ஒரு மணியையும் தாண்டிவிட்டிருந்தது. எத்தனை நேரம் ஆழ்ந்து உறங்கியிருப்பாளோ தெரியாது, யாரோ அவளைத் தூக்குவது போலத் தோன்ற, அது கனவு என்று எண்ணியவள் போல விழிகளைத் திறக்காமலே எதையோ முணுமுணுத்தவாறு தன் முகத்தைத் திருப்ப, அவள் நாசி சென்றிருந்த இடத்தை உணர்ந்து தன்னை மறந்து ஆழ மூச்செடுத்து விட்டாள் அம்மேதினி.

இது என்ன… இந்த வாசனை… அவள் உள்ளத்தை ஆழச் சென்று நிறைக்கிறதே… நம்ப மாட்டாமல் தன் முகத்தை மேலும் கீழும் தேய்க்க, உடல் மீண்டும் சிலிர்த்தது.

அதே நேரம்,

“விரைந்து வாருங்கள் தம்பி… மேதினி… எழுந்துகொள்…” என்கிற தாயின் பதட்டமான குரலில் ஓரளவு தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தபோது சிக்கியது நட்சத்திரங்களுடனான பால் நிலவே.

இதென்ன வீட்டிற்குள் நட்சத்திரங்களும் நிலவும் தெரிகின்றன… அவள் அறைக்குள்தானே உறங்கினாள்… நம்பமாட்டாமல் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்தாள். காட்சி மாறவில்லை. அப்போதுதான் உணர்ந்துகொண்டாள் அவள் அசைந்துகொண்டிருப்பதை.

அட… கனவு காண்கிறாளா என்ன? கனவு இத்தனை தத்ரூபமாகத் தெரிகிறதே… நம்ப மாட்டாமல் தன் தலையைச் சற்றுத் திருப்பப் பதட்டமான முகத்துடன் நின்றிருந்த கந்தழிதரன்தான் தெரிந்தான்.

“ஐ… கந்து… அவனும் என் கனவில் வருகிறானே… தினம் தினம் கனவில் வருபவன்தான். ஆனால் இப்போது சற்றுப் பதட்டமாக அல்லவா இருக்கிறான். என்னவாகிவிட்டது இவனுக்கு? நம்ப மாட்டாமல் தன் கரத்தைத் தூக்கி அவனுடைய கன்னத்தில் வைக்க,

“டமார்…. டமார்… டமார்…” என்று எங்கோ பலமாகக் குண்டு விழும் சத்தம் கேட்க, திடுக்கிட்டுச் சுயத்திற்கு வந்தாள் அம்மேதினி. இதென்ன… குண்டுகள் விழும் சத்தம் கேட்கிறன…. என்று அவள் குழம்பும்போதே, ஆகாயத்தில் பொம்மரின் சத்தம் கேட்க இப்போது கனவுலகம் சுத்தமாக மறைந்து போனது.  நிதர்சனம் உரைக்கத் தான் அசைந்ததற்கான காரணம் புரிந்தது.

குண்டு மழை பொழிய, தூக்கத்தை விட்டு விழிக்காத அவளைக் கந்தழிதரன் ஏந்திக்கொண்டு வெளியே ஓடிக்கொண்டிருந்தான்..

பயத்துடன் தாய் எங்கே என்று தேட, அவரோ ஒரு கரத்தில் லாந்தருடனும், மறு கரத்தில் சுருட்டிய பாயுடனும் முன்னால் ஓடிக்கொண்டிருந்தார்.

“எ… என்ன… என்னவாகிவிட்டது?” என்று அம்மேதினி பதறுவதற்குள்ளாக, கந்தழிதரன் அம்மேதினியுடன் பதுங்கு குழியின் அருகே வந்துவிட்டிருந்தான்.

“ஒன்றுமில்லை பேபிகேர்ள்…” என்றவன் தன் கரங்களில் இருந்தவளைத் தரையிறக்கி,

“உள்ளே போ…” என்று கட்டளையிட, உடனே அன்னையின் பின்னால் பதுங்கு குழிக்குள் நுழைந்தாள் அம்மேதினி. அவளைத் தொடர்ந்து கந்தழிதரனும் நுழைய, கரத்திலிருந்த பாயைத் தரையில் விரித்த யசோதா, தன் பின்னால் நின்றிருந்த மகளை உள்ளே அனுப்பிவிட, அவளைத் தொடர்ந்து கந்தழிதரனும் யசோதாவைக் கடந்து சென்று தரையில் சாய்ந்தமர்ந்தான்.

அவனுக்கு அருகே யசோதாவும் அமர, அந்த மூன்று பேருக்கும் அந்தப் பதுங்குகுழி தாராளமாகவே போதுமானதாக இருந்தது. ஆனாலும் நிலத்துக்குக் கீழ் இருந்ததாலும், மேலே தென்னை மரங்களை வெட்டி வரிசையாக அடுக்கி அதன் மேல் மண் மூட்டைகளை அடுக்கியிருந்ததாலும் காற்றுச் சுத்தமாக இருக்கவில்லை. அதனால் மூச்சு முட்டியதோடு, வியர்த்தும் கொட்டியது. போதாததற்கு அடிமண் மணமும், அடைத்த மணமும் சேர்ந்த ஒரு புதுவித மணம் பதுங்குகுழியை நிறைத்திருந்தது.

இது இவர்களுக்குப் பழக்கமானதுதான். ஆனால் ஐந்து வருடங்களாக அந்த மணத்தை மறந்திருந்த கந்தழிதரனுக்குச் சுவாசிக்கச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது,

அம்மேதினியோ தாயின் கரங்களைப் பற்றியவாறு,

“என்னம்மா நடந்தது…?” என்று குழம்ப,

“தெரியவில்லை கண்ணு… திடீர் என்று இரண்டு மூன்று பொம்மர்கள் பறக்கத் தொடங்கவும் நான் எழுந்துவிட்டேன். கந்துவும் எழுந்துவிட்டான். இங்கே பொம்மர் பறந்தாலே ஏதோ சிக்கல் என்று நமக்குத் தெரியும்தானே. உன்னை வந்து எழுப்பிப் பார்த்தோம். எழும்பினால் அல்லவோ… அதுதான் தம்பி உன்னைத் தூக்கிக்கொண்டே இறங்கிவிட்டார்… எங்கே குண்டு போடுவார்கள் என்று தெரியாது… அதுதான்… எதற்கும் பதுங்குகுழிக்குள் இறங்கிவிட்டால் பயமில்லை…” என்று கூறி முடிக்கவில்லை, சற்றுத் தொலைவில் பலமாகக் குண்டு விழும் சத்தம் கேட்க இவர்களின் பதுங்குகுழியே நடுங்கியது. அதோடு சேர்த்து அம்மேதினியும் நடுங்கிப்போனாள். தன் இரு காதுகளையும் பொத்தியவாறு,

“கடவுளே… எத்தனை உயிர்ச் சேதங்களோ தெரியவில்லையே…” என்று பதறியவாறு அழத் தொடங்க, அவளுடைய பதற்றத்தைப் புரிந்துகொண்டவன் போல வேகமாக அவளருகே சென்ற அமர்ந்த கந்தழிதரன், அவளை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டவனாக,

“ஷ்… ஷ்… என் பேபி கேர்ள் கெட்டிக்காரி ஆயிற்றே… இப்படியெல்லாம் கலங்கலாமா… ம்… அதுதான் நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் அல்லவா… பிறகு என்ன?” என்று அந்தப் பத்துவயது சிறுமி அம்மேதினியைச் சமாதானப் படுத்துவது போல இவளைச் சமாதானப் படுத்த அந்தக் கணம் அம்மேதினியும் பத்துவயது குழந்தையாகவே மாறிப்போகக் கந்தழிதரனின் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டவளாக அவனுடைய மார்பில் முகத்தைப் புதைத்துக்கொள்ள அவனோ அவளை இறுக அணைத்தவாறு,

“ஒன்றுமில்லைமா… ஒன்றுமேயில்லை… இதோ… இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்…” என்று சமாதானப்படுத்திக்கொண்டிருக்கும் போதே, மீண்டும்” டொம்.. டொம்… டொம்…” என்று அந்த உலகமே நடுங்கியது.

யசோதாவோ வெடிக்க முயன்ற இதயத்தை இறுகப் பற்றுபவர் போல மார்பை அழுத்திக் கொடுத்தவாறு ‘கடவுளே… இழந்த உயிர்கள் போதும்… இன்னும் உயிர்ப்பலி எடுத்துவிடாதே… மக்களைக் காத்துக்கொள்… காத்துக்கொள்… தாய் வீட்டுக்குப் போயிருக்கும் வேலனுக்கும், அவன் குடும்பத்திற்கும் எதுவும் ஆகக் கூடாது… தெய்வமே…” என்று மனதார வேண்ட, மீண்டும் குண்டு பொழியும் சத்தம் கேட்டது.

அதுவரை கந்தழிதரன் அம்மேதினியின் அணைப்பையும் விட்டானில்லை, அவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாளும் இல்லை.

எத்தனை நேரமாக அப்படியே இருந்தனரோ, இப்போது குண்டு விழுவது நின்றிருக்க, யசோதா மெதுவாக அசைந்தார். திரும்பிக் கந்தழிதரனைப் பார்க்க, அவனோ ஒரு காலை மடித்து மறு காலை நீட்டி வைத்தவாறு மார்பில் விழுந்திருந்த அம்மேதினியை அணைத்தவாறு அவள் தலை முடியை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும் இவருடைய உள்ளம் இளகிப்போனது.

ஆரம்பம் முதலே குண்டு விழும்போதெல்லாம் அம்மேதினியைத் தன் கை வளைவில் வைத்துக்கெர்ணடு ஆறுதல் படுத்துவது கந்தழிதரனின் வேலையாக இருந்தது. அவன் சென்ற இந்த ஐந்து வருடங்களில், இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது அம்மேதினி படும் பாட்டைக் கண்டு, இவர் அவளை அணைத்து ஆறுதல் படுத்தித் தோற்றுப்போவார். ஒவ்வொரு முறையும் குண்டு விழும்போதும் சின்னவளின் உடல் உதறி அடங்கும்.

“அம்மா… குண்டில் நாம் சிக்கி இறந்துபோவோமா? அப்படி இறந்துபோனால் நம்மை அடக்கம் செய்ய யார் வருவார்கள்… யாராவது தப்பிப் பிழைப்பார்களா… இல்லை யாருமே கண்டு பிடிக்காத வகையில் நம் பிணங்கள் நாறி நாய்களும் காக்கைகளும் கொத்தித் தின்னுமா… ஐயோ… அப்பாவிற்கும் ராமிற்கும் இப்படித்தான் ஏதாவது நடந்ததா…” என்று ஒவ்வொரு முறையும் இதைக் கூறித் துடிப்பாள். தாயோ எது நடந்தாலும், அவளை எப்படியாவது காத்துவிடவேண்டுமே என்று உள்ளம் கதறுவார்.

இப்போது கந்தழிதரனின் அணைப்பில் அந்த அலட்டல் இல்லாமல், நடுக்கம் இல்லாமல் பாதுகாப்பைக் கண்ட குழந்தையாக நிம்மதியாக விழிகளை மூடி அமர்ந்திருக்கிறாள். அந்தக் காட்சியைக் கண்டதும் அன்னையின் நெஞ்சம் கலங்கிப்போனது. இன்னும் எத்தனை காலத்திற்கு இத்தகைய அவல வாழ்க்கை… தெரியவில்லையே. பெரும் பயத்துடன் அமர்ந்திருக்க

“நாசமா போகிறவர்கள்… குண்டுபோட நேரம் காலமில்லையா… இந்த இராத்திரியில் இப்படிச் செய்கிறார்களே… ஐயோ… இதில் எத்தனை உயிர்களைக் காவுவாங்கப் போகிறார்களோ… தெய்வமே…” என்று அரற்ற, கந்தழிதரனோ தன் மார்பில் விழுந்திருந்தவளை இறுக அணைத்தவாறு,

“அத்தை… இது என்ன புதிதா நமக்கு… நாம் எல்லாம் அவர்களுக்கு வெறும் கிள்ளுக்கீரை அத்தை… இலங்கைக் குடிகள் தமிழர்கள் என்பதைச் சரித்திரத்திலிருந்து நீக்கவேண்டும்… அதற்கு ஒரே வழி தமிழர்களை அழிப்பது… அதைச் செய்துகொண்டும் இருக்கிறார்கள், உலகப்பிரசித்தி பெற்ற யாழ்ப்பாண நூல்நிலையத்தை அழித்ததற்குப் பின்னாலும் தமிழர்களின் வரலாற்று அழிப்புதானே முக்கியக் காரணமாக இருந்தது… இப்போது தமிழர்களை அழிக்கத் தொடங்கி விட்டார்கள்…” என்று அவன் மன வருத்தத்துடன் கூற,

“இதை உலக நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கிறதே தம்பி… அதுதான்பா வேதனையே…” என்று தன் கண்ணீரைத் துடைத்த யசோதாவைப் பார்த்துச் சிரித்தவன்,

“அவர்களைப் பொறுத்தவரைக்கும் இது உள்ளுர் போர்… இங்கே செத்து மடியும் மனிதர்களுக்குக் கணக்குக் கிடையாது. இதுவே நாட்டுக்கு நாடு மோதுப்பட்டு இறக்கும் போது அந்த உயிர்கள் வெல்லக்கட்டிகள்… அதற்காகக் குரல் கொடுக்க உலகமே திரண்டு நிற்கும்… தெளிவாகச் சொல்லவேண்டுமானால், உள்நாட்டுக்குள் உயிர்கள் கொத்துக் கொத்தாக மடிந்தால் அது தக்காளிச்சட்டினி, இதுவே நாட்டுக்கு நாடு போர் நடந்து அதில் மக்கள் இறந்தால் இரத்தம்… விடுங்கள் அத்தை… இந்திய இராணுவம் உள்ளே நுழைந்து கொன்று குவித்தபோதே இந்த உலகநாடுகள் கண்களைக் கருப்புத் துனியால் கட்டித்தானே நின்றிருந்தது. இதற்கா கொந்தளித்துவிடப் போகிறார்கள்….. ஒரு வருடமா இரண்டு வருடங்களா… 1956 ஆம் ஆண்டு இலங்கை பிரதமமந்திரியாக வந்த பண்டாரநாயக்கா இலங்கையை இருபத்துநான்கு மணி நேரத்தில் சிங்கள நாடாக மாற்றுவேன் என்று சொன்ன அன்று தொடங்கிய யுத்தம் அத்தை… அதற்குப் பிறகு 26 ஜூலை என்பத்தி மூன்றாம் ஆண்டில் இலங்கை முழுவதும் தமிழர்களை அடித்துத் துரத்தினார்கள். அப்போது தோன்றிய கலவரம்… அன்று தொடங்கிய உரிமைப் போர்… இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை யாரும் தமிழனுக்காகக் குரல் கொடுக்கவுமில்லை, அவனைக் காக்க வரவுமில்லை. இனியா வரப்போகிறார்கள்…” என்று வேதனையுடன் சொன்னவன், ஒரு பெருமூச்சுடன்,

“இங்கே நாமே நம்மைக் காத்துக்கொண்டால்தான் உண்டு… ஆனால் ஒன்று அத்தை… இன்று நடந்த சம்பவம், இன்னும் மூன்று நாட்களில் மறந்து வெறும் செய்தியாகிவிடுவது போல ஈழத்தமிழர் பட்ட துன்பங்கள் இன்னும் பத்து வருடங்களிலோ, இல்லை இருபது வருடங்களிலோ முற்றாக மறந்துபோகும்… இறந்த மக்களுக்கான நியாயமே தெரியாது போகும்… யார் கண்டா… எங்கள் பேரக்குழந்தைகள் கூட, அப்படி ஒரு போர் நடந்ததா என்று நம்மிடம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… இத்தனை சிரமப்பட்டு நடத்திய போருக்கு அர்த்தமே இல்லாது போகும் அத்தை… இதெல்லாம் நாம் வாங்கிவந்த சாபம்…” என்று வலியுடன் கூற, கலங்கிய யசோதாவோ,

“ஆமாம்பா… நரகம் பிடித்த வாழ்க்கை… எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு அவல வாழ்க்கை… நமக்கெல்லாம் இப்போது நடக்கும் நிகழ்காலம் மட்டும்தான் நிதர்சனம்… நாளை என்று ஒன்றிருக்கிறதா என்பதைத் துயில் எழுந்தபின்தான் கண்டுகொள்ள முடியும்… இதோ இந்த நாள் நமக்குக் கடவுள் கொடுத்த போனஸ் தம்பி… அதை எண்ணிச் சந்தோசப்பட மட்டும்தான் முடியும்… ஆனால் ஒன்று கந்தழி… ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் எந்தச் சிரமம் வந்தாலும் சமாளித்துவிடுவார்கள்… ஏன் என்றால் இப்போது அவர்கள் படும் வலியை விடப் பெரிய வலிகளும் வேதனைகளும் இந்த ஜென்மத்தில் வந்துவிடப் போவதில்லை…” என்று கூற, தலையை ஆட்டியவன்,

“உண்மைதான்… எதுவுமே நம்முடைய கையில் இல்லை… நம்முடைய வாழ்க்கையே புயலில் அடிபட்ட சருகுகள் போலத்தான். எங்கே அடிபட்டு மிதி பட்டு சுழல் பட்டுத் தங்கி நிற்கிறதோ, அங்கே தங்கி நிற்கவேண்டியதுதான். வேறு வழியில்லை…” என்றான் பெரும் வலியுடன்.

“ப்ச்… விடு கந்தழி… எல்லா பாரத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு வாழ வேண்டியது தான்…” என்று பெருமூச்சுடன் கூறியவாறு மண்தரையில் விரித்திருந்த பாயில் சரிந்து படுக்க, மெல்லியதாகச் சிரித்தவன்,

“கடவுள் இருக்கிறானா என்ன?” என்றான் பெரும் விரக்தியுடன். தலையைத் தூக்கி கந்தழிதரனைப் பார்த்து,

“நாம் உயிரோடு இருக்கிறோம் அல்லவா… அப்படியானால் நமக்குக் கடவுள் இருக்கிறான் தம்பி…” என்றார் அழுத்தமாக.

“ம்… இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்…” என்றவன் தலையை மண் சுவரில் சாய்த்தவாறு விழிகளை மெதுவாக மூட, எங்கோ ஷெல் விழும் சத்தம் கேட்டது.

“கடவுளே நீ இருக்கிறாயா இல்லையா எனக்குத் தெரியாது… அப்படி இருந்தாயானால், தமிழர்களுக்கு ஒரு விடிவைக் கொடு… போதும் இதுவரை பட்ட வலிகள். போதும் இதுவரை துடித்த துடிப்புகள். போதும் இழந்த உறவுகள். இதற்க்கு மேலும் ஒரு இழப்பைத் தாங்கும் சக்தி நமக்கில்லை…” என்று மனதார வேண்டியவாறு விழிகளை மூட, மெதுவாக உறக்கம் அவனைத் தழுவிக்கொண்டது.

(14)

 

பொழுது மெல்ல மெல்ல விடியத் தொடங்கியது.

மறுநாள், முன்னிரவு நடந்தது பொய்யோ என்று எண்ணும் வகையில் சூரியன் உதித்திருந்தான். அதுவரை சாய்ந்து விழிகளை மூடியிருந்த கந்தழிதரன், மெதுவாக விழிகளைத் திறக்க, பதுங்கு குழியில் தோன்றிய மெல்லிய வெளிச்சத்தைக் கண்டே விடிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவனாகக் குனிந்து பார்த்தான் கந்தழிதரன்.

அம்மேதி தரையில் அமர்ந்தவாறு இவன் கை வளைவில் சரிந்து படுத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தாள். அவனுடைய இடது கரத்தின் முழங்கை மடிப்பில் அவளுடைய கழுத்துத் தங்கியிருக்க, அவனுடைய வலது கரமோ அவுளடைய வயிற்றைச் சுற்றி விழுந்துவிடாதவாறு இறுகப் பற்றியிருந்தது. கூடவே அவளுடைய மேனியின் வியர்வையை உணர்ந்து கொண்டவனாக உதடுகளைக் குவித்து ஈரமாகிவிட்டிருந்த கழுத்தில் ஊதியவன், அவளுடைய தலையை வருடிக் கொடுத்தவன்,

“பேபி கேர்ள்…” என்றான் மென்மையாக. அவளோ அசைவில்லாமல் கடைவாயில் வீணீர் வடிவது கூட உறைக்காது கந்தழிதரனின் அணைப்பில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் விழிகளைத் திறந்த யசோதாவும் விடிந்தது புரிய,

“மேதினி… விடிந்துவிட்டது எழுந்துகொள்…” என்று கடிந்துவிட்டு மெதுவாகத் தலையைப் பதுங்குகுழிக்கு வெளியாக நீட்டி எட்டிப் பார்த்தார்.

எங்கும் சேதம் அடைந்ததுபோலத் தெரியவில்லை. நிம்மதியுடன், வெளியே வந்தவர்,

“கந்தழி… இந்தப் பக்கம் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை…” என்றுவிட்டு வீடு நோக்கிப் போனவர், ஒரு இடத்தைக் கண்டதும், பதறித் துடித்தவராக,

“கந்தழி… இங்கே ஓடிவாப்பா…” என்று அலறினார்.

அவருடைய அலறலில் அம்மேதினியைத் தரையில் கிடத்திவிட்டு வெளியே பாய்ந்து வர, அவன் கீழே இறக்கியதும் துயில் கலைந்தவளாக எழுந்தவள் விழிகளைக் கசக்கியவாறு வெளியே வந்தாள்.

இவனோ யசோதாவின் அருகே விரைந்தவனாக,

“என்ன அத்தை…” என்றான். யசோதாவோ ஒரு குறிப்பிட்ட இடத்தையே அச்சத்தோடு பார்த்திருக்க, இவனும் அத்திசைக்குத் திரும்பினான். அங்கே நேற்றைய இரவு இராணுவத்தால் போடப்பட்ட இரண்டடி அகலமும் மூன்றடி நீளமுமான குண்டு ஒன்று வெடிக்காமல் தரையில் ஓரடிக்குப் புதைந்திருந்தது.

அவர்கள் கும்பிட்ட தெய்வம்தான் துணையிருந்து அந்தக் குண்டை வெடிக்கவிடாது செய்ததோ? அச்சத்துடன் கந்தழிதரனை யசோதா திரும்பிப் பார்க்க அம்மேதினியோ கடவாயோரம் வழிந்த வீநீரைக் கரங்களால் தேய்த்துத் துடைத்தவாறு தள்ளாட்ட நடையுடன் அவர்களை நோக்கி வந்தாள்.

அங்க வெடித்துச் சிதறாது இருந்த குண்டைக் கண்டதும் விழிகள் பிதுங்க,

“ஐயையோ… குண்டு…” என்று அலறியவாறு கந்தழிதரனின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தவாறு எட்டிக் குண்டைப் பார்த்தாள்.

“இப்போது என்ன தம்பி செய்வது?” என்று யசோதா பதற

“இதைத் தொடவேண்டாம் அத்தை… விடுதலைப் போராளிகளிடம் சொன்னால் அவர்கள் எடுத்துச் சென்றுவிடுவார்கள்… அது வரை பசுக்களை இந்தப் பக்கம் கொண்டு வராதீர்கள்…” என்று எச்சரித்தவன், அவசரமாக முகத்தைத் தண்ணீரில் கழுவிவிட்டுத் தன் துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே பறந்தான்.

அடுத்தப் பத்தாவது நிமிடங்களில் அவர்களின் வீட்டிற்கு முன்னால் பெரிய வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஆயுதம் தரித்த போராளிகள் ஐவர் கடகடவென்று உள்ளே வந்தார்கள். தரையில் அமிழ்ந்திருந்த குண்டைக் கண்டதும் தங்கள் வாக்கிடாக்கியில் செய்தியைப் பரிமாறிவிட்டு அத்தனை பேரையும் பதுங்குகுழிக்குள் போகுமாறு பனித்துவிட்டு, மிக அவதானமாகக் கிடங்கைச் சுற்றிக் கிண்டி, அந்தக் குண்டை மீட்டு எடுத்துக்கொண்டு செல்ல, ஒருவர் மட்டும் இவர்களிடம் வந்து இனி வெளிவரலாம் என்கிற செய்தியைக் கூறிவிட்டு விடைபெற்றுச் செல்ல, வெளியேவந்ததன் பிறகுதான் யசோதாவிற்கும் அம்மேதினிக்கும் நிம்மதி மூச்சே வந்தது.

இதற்கிடையில் இவர்களின் ஊருக்குப் பக்கத்து ஊரான பண்டைத்தரிப்பில் போராளிகளின் முகாமிற்குக் குண்டு போட்டதாகத் தெரியவந்தது. அதில் இருபது பொது மக்களும், பத்துப் போராளிகளும் மரணித்த செய்தி கேட்டு ஆடிப்போனார்கள் அனைவரும்.

அங்கே குண்டுபோடும்போதுதான் இங்கே ஒரு குண்டைத் தவறாகப் போட்டுவிட்டுச் சென்றிருப்பது தெரிந்தது.

அதை அறிந்த அம்மேதினி குமுறினாள். “இது என்ன மாங்காயா தவறிப்போட? குண்டு…! வெடித்தால் அந்த இடமே சுடுகாடுதான்…”  என்று சீரியவளுக்கு நெஞ்சே நடுங்கிப்போனது. விழிகளோ எல்லையில்லா வலியுடன் அருகேயிருந்த பசுமாட்டையும், ஆட்டையும் கட்டியிருந்த கொட்டிலைப் பார்த்தாள். அவர்கள் வீட்டுக் குழந்தை அல்லவா அவர்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால்… நினைக்கும்போதே உடல் அதிர்ந்தது. ஆத்திரம் தீப்பொறியாய் கிளம்பியது.

“எத்தனை தைரியம் இலங்கை இராணுவத்திற்கு. இதைக் கேட்க யாருமே இல்லையா…” என்று எகிற, அவளுக்கு அருகே நின்றிருந்த கந்தழிதரனோ நிதானமாக அவளைப் பார்த்து,

“கேட்கத்தான் போனேன்… விட்டீர்களா என்னை? இதில் சிலபேர் அதற்காகவே என் மீது வெறுப்பை வளர்த்து வைத்திருக்கிறார்களே… இப்படியிருந்தால் எத்தனை பேர்தான் எதிர்த்துச் செல்வார்கள்?” என்று சந்தர்ப்பம் பார்த்து தன் எரிச்சலைக் கூற, வாயடைத்துப் போனாள் அம்மேதினி.

உண்மையும் அதுதானே. அவன் போராட்டத்திற்குப் போனதே ஈழ மக்களின் நலன் கருதித்தானே. ஆனால் அவள் அதைத் தப்பாகப் புரிந்ததோடு, இன்றுவரை அதைக் கரும்புள்ளியாக மனத்தில் தேக்கி வைத்திருக்கிறாளே… ஆனால்… அவன் அன்று போராட்டத்தில் இணைந்திருந்தால் அவனுடைய படத்திற்கு இப்போது மாலை போட்டிருப்பார்களே… அதை நினைக்கும்போதே உடல் நடுங்கியது.

போராட்டம் பெரிதா, கந்தழிதரன் பெரிதா என்று கேட்டால், சாதாரணப் பெண்ணான அவள், எப்படிப் போராட்டம் பெரிது என்பாள்? அவளைப் பொறுத்தவரைக்கும் கந்தழிதரன்தானே பெரிது. போரில் மடிந்த கணவன், மார்பில் அம்பு தைத்து இறந்தானா இல்லை, முதுகில் அம்பு தைத்து இறந்தானா என்பதை அறிந்து மார்பில் வாங்கியே இறந்தான் என்று பெருமைப்பட்டு உயிர் நீக்க அவள் ஒன்றும் சங்ககாலப் பெண்ணுமல்ல, அத்தனை தைரியம் பெற்ற வீர மகளும் அல்ல. சாதாரண ஆசாபாசங்கள் கொண்ட பெண். வேண்டுமானால் அவனுக்காகத் தன் உயிரை நீத்தாலும் நீப்பாளே தவிர, அவன் உயிருக்கு ஆபத்து வர ஒருபோதும் அனுமதிக்கமாட்டாள்.

உறுதியாக அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“போராட ஆயிரம் லட்சம் பேர் இருப்பார்கள். ஆனால் எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு கந்தழிதரன்தான்… எங்களை உதறிவிட்டுப் போனது தவறுதான்…” என்று அவன் விழிகளைப் பார்த்துக் கூறியவள், வேகமாக உள்ளே சென்றவளுக்கு முன்னிரவு முழுவதும் தன்னை அணைத்துத் தாங்கிக்கொண்ட கந்தழிதரன்தான் நிலைத்திருந்தான்.

அதைத் தொடர்ந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்குமான போக்குவரத்துத் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட, இப்போதைக்குக் கந்தழிதரனால் கொழும்பு போக முடியாத நிலை. இல்லையென்றால் யசோதா ஒரே பிடியாக அவனை மூட்டை கட்டி அனுப்பி வைத்திருப்பார்.

“ஐயோ… இப்படியாகிவிட்டதே தம்பி…! இப்படி இடையில் வந்து சிக்கிக் கொண்டீர்களே… கடவுளே… அங்கப்பிரதிஷ்டை செய்கிறேன்… கந்தழியைக் கொழும்புக்கு அழைத்துச் செல்ல ஆவன செய்… தெய்வமே…’ என்று மனமுருக வேண்டிக் கொள்ளத்தான் முடிந்தது. ஆனால் கந்தழிதரனனோ இதையெல்லாம் பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

இப்படித் திடீர் என்று சூழ்நிலை மாறும் என்று அவர்கள் கனவா கண்டார்கள்?

இதற்கிடையில் கந்தழிதரன் சொன்னதுபோல ஒரு கிழமைக்குள் நடந்த குண்டுவெடிப்பு ஒன்றுமே இல்லாததுபோல வாழ்க்கை நகரத் தொடங்கியது. ஈழத்தமிழர்களின் வாழ்வில் அது சர்வசாதாரணம் என்பதாலோ என்னவோ அந்தக் குண்டுவெடிப்பெல்லாம் அவர்களுக்குப் பெரிய விடயமாகவே தெரியவில்லை.

இந்நிலையில் கந்தழிதரனைச் சாப்பிட வருமாறு பவானியும் நடேசனும் கேட்டுக் கொண்டதன் பெயரில், கந்தழிதரன் அவர்களின் வீட்டிற்குப் போக வேண்டி வந்தது.

ஆனால் ஏனோ தனியாகச் செல்ல அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் யசோதாவையும் வருமாறு அழைக்க, யசோதா சற்றுத் தயங்கினார். அழைப்புக் கந்தழிதரனுக்கு மட்டும்தான். இந்த நிலையில் அவனோடு தொத்திக்கொண்டு எப்படிப் போவார்? அதனால் மென்மையாகவே மறுத்துவிட, தாயின் வேண்டுதலுக்கு இணங்க வேறு வழியில்லாமல் அம்மேதினிதான் அவனுடன் செல்ல வேண்டியதாயிற்று.

அவளுக்குச் சுத்தமாக அந்த வீட்டிற்குப் போகப் பிடிக்காது. அங்கே போனால் முள்ளின் மீது நிற்பது போலத் தோன்றும். அங்கே கைவைக்காதே, இங்கே கால் வைக்காதே… அதைத் தொடாதே… இதைத் தொடாதே என்று சுதந்திரமாக இருக்க முடியாது. ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு தவிப்புடன் அலையவேண்டும். இது தேவையா? முதலில் மறுக்கத்தான் முயன்றாள். ஆனால் தாய் வேண்டிக் கேட்கவும் வேறு வழியில்லாமல் கந்தழிதரனோடு புறப்பட்டாள் அம்மேதினி.

இருவரும் ஆளுக்கொரு துவிச்சக்கர வண்டியை எடுத்து மிதிக்கத் தொடங்க, மருதனார்மடத்தை நோக்கி வண்டி ஓடத் தொடங்கியது. அவர்களின் வீட்டிலிருந்து மருதனார் மடத்திலிருக்கிற பவானியின் வீடுவரை கிட்டத்தட்ட எட்டுக் கிலோமீட்டர் இருக்கும். அத்தனை தூரமும் வண்டியை மிதித்தவர்களுக்கு அந்தப் பயணம் சலிப்பைக் கொடுக்கவில்லை. குறிப்பாக அம்மேதினிக்கு.

அதற்குக் கந்தழிதரன் கூடவே வந்தது காரணமாக இருக்கலாம். துவிச்சக்கர வண்டியை ஒவ்வொரு முறை மிதிக்கும் போதும், வாழ்க்கையின் மகிழ்ச்சியான பாதையை நோக்கிச் செல்வது போல ஒரு வித மாயைத் தோற்றம் அவளுக்குள். எப்போதும் பயணப்படுகின்ற பாதைதான். ஆனால் அன்று மட்டும் ஏதோ மிக மிக அழகா, புதிதாக அவளுக்குக் காட்சி கொடுத்தது.

ஏன் சிதைந்த வீடுகளில் கூட மலர்கள் மலர்ந்து இனிய வசந்தத்தைப் பரப்பின. குண்டும் குழிகளுமான தரை பஞ்சுப்பொதியானது. வீசாத காற்றுக்கு அசையாத மரங்கள் கூடத் தலையசைத்துத் தென்றல் காற்றை அவள் மேனியில் வீசியது. சுட்டெரிக்கும் வெயில் கூடக் கார்முகிலானது. இப்படியே அவனோடு பயணிப்பதென்றால் நரகம் கூட அவளுக்குச் சொர்க்கம்தான். அவனுடனான அந்தக் கணம் பொக்கிஷமாய் அவள் மனக்கிடங்கில் பதிந்து போனது.

சற்றுத் தூரம் போனதும், மானிப்பாய் சந்தியில் புதிதாய் முளைத்திருந்த உணவுக் கடையைக் கண்டதும் ஏனோ அவன் கூட அமர்ந்து ஒரு வாய் தேநீர் குடிக்கவேண்டும் போலத் தோன்றியது. தன்னை மறந்து துவிச்சக்கர வண்டியின் தடையைப் போட்டு நிறுத்த, அவளுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கந்தழிதரன் வண்டியை நிறுத்தி, ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றியவாறு நின்று என்ன என்பது போலப் பார்த்தான்.

“அது… வந்து… தாகமாக இருக்கிறது… தேநீர் குடித்துவிட்டுப் போகலாமா?” என்று மெல்லிய தயக்கத்துடன் கேட்க, உடனே வண்டியை விட்டு இறங்கியவன், அதற்குப் பூட்டுப் போட்டுவிட்டு,

“வா…” என்கிற அழைப்புடனே கடைக்குள் நுழையக் குதுகலமாகவே அவனோடு உள்ளே சென்றாள் அம்மேதினி. சிறிய தேநீர் கடைதான். நாட்டுப்பிரச்சனை காரணமாகப் பெரிய தேநீர் கடையெல்லாம் வைக்க முடியாது. அதனால் வெளியே இருந்து தனக்கும் அவளுக்குமாக வாங்கிக்கொண்டு வந்தவன் அவளிடம் ஒன்றை நீட்டிவிட்டுத் தானும் அருந்தத் தொடங்க, அம்மேதினி அவனிடமிருந்து பார்வையை விலக்காமலே தேநீரைக் குடிக்கத் தொடங்கினாள்.

‘அவனுடைய பணத்தில் வாங்கிய தேநீர் ஆயிற்றே. சுவைக்கேது குறை? அந்தச் சுவையுடனேயே கந்தழிதரனை விழுங்குவது போலப் பார்த்தவாறு குடித்து முடிக்க,’ இவனோ புரியாத பாவனையுடன் ஏறிட்டு,

“என்ன அம்மணி… இன்று முழுக்க ஒரு மார்க்கமாக என்னைப் பார்க்கிறாய்?” என்றான் மெல்லிய நகைப்புடன்.

அதிர்ந்துபோனாள் அவள். ‘அவன் கவனிக்கும் வகையிலா அவனைப் பார்த்திருக்கிறோம்?’ அசடு வழிந்தவள்,

“ஒ… ஒன்றுமில்லையே…” என்றுவிட்டுக் குடித்த குவளையை அங்கேயே வைத்துவிட்டு வண்டியிலேறி அவன் வருகிறானா இல்லையா என்பதைக் கூடத் திரும்பிப் பார்க்காது மிதிக்கத் தொடங்க, உள்ளமோ அவன் கவனிக்கும் வகையில் நடந்துகொண்டாயே அம்மேதினி…’ என்று கடிந்தது,

அடுத்த அரை மணி நேரத்தில் பவானியின் வீட்டை வந்தடைந்தனர் இருவரும்.

கந்தழிதரனின் வருகைக்காக வாசலில் பவானியும், ரோகிணியும் காத்திருந்தார்கள் போலும், இவனைக் கண்டதும் முகம் மலர, ஏக பரபரப்புடன் ஓடிவந்தார்கள்.

ஆனால், அவனோடு வந்த அம்மேதினியைக் கண்டதும், இருவரின் முகங்களும் கறுத்துப் போனது.

“என்ன தம்பிக்குப் பாதை மறந்து போய்விட்டதா? நீயும் சேர்ந்து வந்திருக்கிறாய்? சொல்லியிருந்தால் பெரியப்பாவை அனுப்பியிருப்பேனே…!” என்று பவானி தன் எரிச்சலை வெளிப்படையாகவே கொட்டக் கொதித்துப் போனாள் அம்மேதினி.

‘அதன் உள்ளர்த்தம், நீ எதற்கு வந்தாய் என்பதுதானே. இவர்களின் வீட்டில் படுத்துக் கிடக்கவேண்டும் என்று அவளுக்குத் தலையெழுத்தா என்ன? எல்லாம் இந்த வீணாய் போன கந்துவட்டிக் காரனால் வந்தது. தனியாக வந்து தொலைத்தால்தான் என்னவாம்? இப்போது அவளல்லவா மூக்கு உடைபட நிற்கிறாள்…! சே…! அவனோடு பயணப்பட்ட மகிழ்ச்சியே மங்கிப்போய் விட்டது…’ என்று மனதிற்குள் பொருமிக்கொண்டிருக்க, பவானியோ, திரும்பி கந்தழிதரனைப் பார்த்து,

“உள்ளே வா கந்தழிதரா…! உள்ளே வா…!” என்று வாயில் உள்ள பற்களின் மொத்தத் தொகையையும் காட்டியவாறு அழைக்கப் புன்னகையுடனேயே அவன் உள்ளே சென்றான்.

இவள்தான் ஆணியடித்தது போல அங்கும் அசைய முடியாது, இங்கும் அசைய முடியாது நடுவில் நிற்கவேண்டியாயிற்று.

‘அவளை உள்ளே வா என்று அழையாமல் எப்படி நுழைவது? மதியாதார் தலைவாசல் மிதியாதே அப்படி என்று ஒளவைக் கிழவி வேறு சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்களே. அப்படி இருக்கையில் எப்படி அந்த வீட்டிற்குள் நுழைவதாம்…?’ என்று குழப்பத்துடன் நிற்க, வீட்டிற்குள் நுழையத் தொடங்கியவன், அப்போதுதான் அம்மேதினியின் நினைவு வந்தவனாக, நின்று திரும்பிப் பார்த்தான்.

“என்ன… அங்கேயே நின்றுவிட்டாய்… உள்ளே வா அம்மணி…!” என்றான் அழுத்தமாக. இவன் அழைத்ததைக் கேட்டதும் மற்றைய இருவரின் முகங்களும் சற்றுச் சுண்டிப்போயிற்று.

வேறு வழியில்லாமல் திரும்பி அம்மேதினியைப் பார்த்து,

“வந்ததுதான் வந்துவிட்டாய்… வா…! வந்து ஒரு குவளை தேநீராவது குடித்துவிட்டுப் போ…!” என்று பவானி வேண்டா வெறுப்பாகக் கூற, இவளுக்குச் சுருசுரு என்று ஏறத் தொடங்கியது.

‘ இப்போது என்ன செய்வது? இவர்களின் அலட்சியத்தை மதிக்காது உள்ளே போவதா இல்லை எக்கேடும் கெட்டுத் தொலை என்று திரும்புவதா?’ தயங்கியவாறு நிற்க, கந்தழதரனோ, பொறுமை இழந்தவனாக அவளை நோக்கிச் சென்று கரத்தை அழுந்த பற்றி இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய, அந்த இழுப்புக்கு மறுப்புக் கூறமுடியாமல், அவனோடு இழுபட்டுச் சென்றாள் அம்மேதினி.

வேறு வழியின்றி இருவருக்கும் வழி விட்டுத் தாயும் மகளும் ஒதுங்கிக் கொண்டனர். என்ன செய்வது இழுத்து வருவது கந்தழிதரனாயிற்றே…

அதன் பிறகு அவர்கள் இருவரின் கவனங்களும் கந்தழிதரனைச் சுற்றித்தான் இருந்ததே தவிர, அம்மேதினியைக் கண்டுகொண்ட மாதிரியே இல்லை.

“ஏன்பா… அன்று பண்டத்தரிப்பில் குண்டு போட்டார்களே… எப்படிச் சமாளித்தாய்? சண்டிலிப்பாய்க்குப் பக்கத்து ஊராயிற்றே… எங்களுக்கே காதைக் கிழித்துக் கொண்டு போனது போல இருந்தது சத்தம்… நீ எப்படிச் சமாளித்தாயோ…! உனக்கேன் இத்தனை சிரமம்… இங்கே வீடு பெரிதாக இருக்கிறது… தாராளமாகத் தங்கிக் கொள்ளலாம்…” என்று கூற மெல்லியதாகச் சிரித்த கந்தழிதரன்,

“அத்தை, அங்கும் இங்கும் ஏழு அல்லது எட்டுக் கிலோமீட்டர்தான் வித்தியாசம்… அங்கே குண்டு போட்டவர்களுக்கு இங்கே வந்து போட எத்தனை நேரமாகும் என்று நினைக்கிறீர்கள்…? எங்கே இருந்தாலும் ஆபத்தென்றால் அது பொதுதான் அத்தை…!” என்று கூற,

“ஹீ… ஹீ.. அது உண்மைதான்… ஆனால் வசதி…” என்று பவானி இழுக்க,

“அது என் சொந்த வீடு என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்களே அத்தை… எனக்கு அங்கேதான் வசதி…” என்று அழுத்தமாகக் கூற,

“சபாஷ்டா… கந்து…” என்று மனதிற்குள் அவனைத் தட்டிக்கொடுக்க உள்ளமோ டப்பாங்குத்து நடனத்தை ஆடிக் களித்தது. அதன் பின் பேச்சு வேறு திசையில் பயணித்தது.

இத்தனைக்கும் பவானியோ, ரோகிணியோ இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பேசவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களின் அலட்சியத்தைத் தாங்க முடியவில்லை.

‘இதற்குத்தான் அம்மாவிடம் முதலிலேயே சொன்னேன். இங்கு வரமாட்டேன் என்று. கேட்டார்களா? இப்போது, இங்கே இப்படி அவமானப்படவேண்டி இருக்கிறதே..! எல்லாம் என் தலை எழுத்து…!’ என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருக்கும் போதே, ஏனோ தானோ என்று தேநீர் வந்தது. உண்ணப் பலகாரம் வந்தது. அதில் சிறிய துண்டு கூட எடுத்து அவளால் வாய்க்குள் வைக்க முடியவில்லை.

இதமாகவே மறுத்துவிட, அதன் பின் சற்று நேரம் பேச்சில் போனது. இதற்கிடையில் நிமிர்ந்து தன் மகளைப் பார்த்த பவானி விழிகளால் எதையோ கூற, முகம் மலர்ந்த ரோகிணி அவசரமாக எழுந்து உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது, அவளுடைய கரங்களில் சிறிய லதர் பெட்டி ஒன்று இருந்தது.

அதை அன்னையிடம் நீட்ட பவானியோ,

“என்னிடம் எதற்குக் கொடுக்கிறாய்…? தம்பிக்குப் போட்டுவிடு…” என்று முகம் முழுக்கப் புன்னகையுடன் கூற, ரோகிணியோ மறுக்காது அந்தப் பொட்டியைத் திறக்க, அதில் மின்னியது வைரம் பதித்த மோதிரம் ஒன்று.

அதைக் கண்டதும் அம்மேதினி அதிர்ந்து மட்டுமல்ல. கலங்கியும் போனாள். மோதிரம் திருமணம் உறுதியானால் தான் போடுவார்கள். அப்படியானால்… அதிர்ச்சியுடன் எண்ணும்போதே அந்த மோதிரத்தை வெளியே எடுத்த ரோகிணி, கந்தழிரனின் அனுமதியையும் கேட்காது அவனுடைய வலது கரத்தைப் பற்றி அணிவித்துவிட, அதுவரை இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்த அம்மேதினி பார்க்கக் கூடாத சம்பவத்தைப் பார்த்துவிட்டுத் துடிப்புடன் சடார் என்று எழுந்து நின்றாள். ஏனோ உடல் நடுங்கியது. நெஞ்சம் முட்டிக்கொண்டு வந்தது. யாரோ உயிருக்கும் மேலான விளையாட்டுப் பொருளைத் தட்டிப் பறித்துவிட்ட உணர்வில் துடித்துப் போனவளாக மோதிரம் அணிவித்த அவன் விரல்களையே வெறித்துப் பார்த்தாள்.

கந்தழிதரனும் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் பவானியின் கணவர் நடராஜருடன் பேசிக் கொண்டிருந்ததால், பவானியின் உத்தரவிற்காக ரோகிணி உள்ளே சென்றதையோ, இப்படி மோதிரத்தை எடுத்துக்கொண்டு வந்ததையோ அவன் சற்றும் கவனிக்கவில்லை.

அருகே வந்த ரோகிணி அவன் கரத்தைப் பற்றி மோதிரம் போடவும்தான் சுயத்திற்கே வந்தான் கந்தழிதரன். ஒரு கணம் அதிர்ந்து போனவனாக,

“என்ன… என்ன இது?” என்று அவன் கேட்கத் தொடங்கவும்,

“தம்பி… இது எங்களது சின்னப் பரிசு… வைர மோதிரம்… எப்படியும் இவள் உங்கள் மனைவியாகப் போகிறவள் தானே… இவள் மோதிரம் போட்டால் பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் அவளைப் போட சொன்னேன்…” என்று மலர்ச்சியுடன் கூறிக்கொண்டிருக்கும் போதே, நெஞ்சம் வெடிக்க இதயம் துடிக்க, இரத்தம் வடிந்து சென்ற உணர்வில், சிலையென நின்றிருந்தாள் அம்மேதினி.

“அப்பாடா… இப்போதுதான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி… இந்தச் சந்தோஷத்தோடே சாப்பிடச் செல்லலாம்… சரி சரி… வாருங்கள் சாப்பிட…” என்று அழைத்தவாறு உள்ளே செல்ல, இவளோ அது கூட உறைக்காமல் அப்படியே மலைத்து நின்றிருந்தாள்.

பவானியோ அதைக் கண்டு,

“என்ன அப்படியே நிற்கிறாய்? வா.. சாப்பிட…” என்று அலட்சியமாக அழைக்க, இவளோ அவன் கரத்திலிருந்த மோதிரத்தின் மீதிருந்த தன் விழிகளை விலக்காது,

“இ… இல்லை பெரியம்மா…! வந்து… எனக்குக் கொஞ்ச வேலை இருக்கிறது. அதனால் நான்… வந்து… நான் இப்போது போகிறேன்… கந்… தர… அத்தானை அழைத்துப்போக வேண்டும் என்றால் நான் மாலை நான்கு மணிபோல் வருகிறேன்…” என்று கூறிவிட்டுத் விழிகளில் நிறைந்த கண்ணீரைச் சிரமப்பட்டு உள்ளே இழுக்க முயன்று தோற்றவாறு திரும்ப, பவானியோ,

“நீ ஒன்றும் தம்பியை அழைத்துப்போக வரவேண்டாம் அம்மேதினி…! இனி அவன் எங்கள் வீட்டு மாப்பிள்ளை… நாங்களே தம்பியைப் பத்திரமாக அழைத்து வருகிறோம்… நீ வீடு போய்ச் சேர்” என்று கூற யாரோ கன்னத்தில் அறைந்ததுபோலத் துடித்துப்போனாள் அக் கோதை.

அவளையும் மீறிக் கன்னத்தில் வழிந்த கண்ணீரையும் பொருட்படுத்தாது, விட்டால் போதும் என்ற வேகத்தில் திரும்பியவளுக்குக் கந்தழிதரனின் முகத்தைப் பார்க்கும் சக்தியே இருக்கவில்லை.

அவனிடம் கூட விடைபெறாமல், அவன் தடுக்க முதல், வண்டியை நோக்கி ஓடியவள், பதட்டத்தில் தடுமாறிய கால்களை நிலைப்படுத்திப் பெடலை அழுத்தி மிதிக்கத் தொடங்க, அடுத்து அவள் சென்று இறங்கிய இடம் மருதடிப் பிள்ளையார் கோவில்தான்.

What’s your Reaction?
+1
18
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!