Wed. Jan 15th, 2025

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 6

(6)

மாலை தன் வேலையை முடித்துக்கொண்டு வீடு நோக்கி வந்துகொண்டிருந்த ஏகவாமனுக்கு, ஆலமரத்தில் சாய்வாக அமர்ந்திருந்த அலரந்திரி தெரியத், தன் புருவத்தைச் சுருக்கினான்.

‘இவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக இங்கேயே இருக்கிறாளே… இவளுக்கு அறிவில்லையா?’ என்று சினத்துடன் எண்ணியவன்,

“மணி… வண்டியை நிறுத்து…” என்றான். வண்டி சரியாக அலரந்திரிக்கு அருகாமையில் கிறீச் என்று நின்றதும், அதுவரை ஏதோ மோன நிலையில் அமர்ந்திருந்த அலரந்திரி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். மறைந்துகொண்டிருந்த சூரியனை மறைத்துக்கொண்டு ஜீப்பிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் தன்னையும் மறந்து எழுந்து நின்றாள்.

அவனோ இறங்கியதும், காலைப் பின்புறமாக மடித்து வேட்டியின் நுனியை வலது கரத்தால் பற்றியவாறு அவளை நோக்கி வர, அவனுடைய உயரமும், அதற்கேற்ற அகன்ற திரண்ட திடகாத்திரமான உடலும் ஏதோ கயிற்றை அறுத்துவிட்டுப் பாய்ந்த காங்கேயன் காளைபோல அவளுக்குத் தோன்றியது. அதுவேறு அவளுடைய இதயத்தை மேலும் தடதடக்க வைக்க, அவசரமாகத் தன் முந்தானையைத் துணைக்கழைத்து அதைப் பற்றிக் கசக்கத் தொடங்கினாள்.

அவளை நெருங்கிய ஏகவாமன், சற்று நேரம் அமைதியாக அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். பின்,

“இன்னும் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன்னைப் போகச் சொன்னேன்…” என்று கடினக் குரலில் கேட்க, ஒரு கணம் அச்சத்தில் தன் எச்சியைக் கூட்டி விழுங்கிய அலரந்திரி, சிரமப்பட்டுத் தன்னைத் திடப்படுத்தியவாறு,

“நா… நான் உங்களுடன் பேச வேண்டும்…” என்றாள். என்னதான் முயன்றும் நடுங்கிய குரலை அவளால் சற்றும் மறைக்க முடியவில்லை.

“ஏன் காலையில் பேசியது போதவில்லையா உனக்கு…? இல்லை உன் கூட வந்தானே கூட்டாளி அவனுக்கு நடந்ததுதான் பற்றாதா…?” என்று எரிச்சலுடன் கேட்க வேகமாக மறுப்பாகத் தலையாட்டிய அலரந்திரி,

“இ… இல்லை…” என்றவள், மேலும் தன் முந்தானையை முறுக்கியவாறு,

“அந்த… அவன்… உங்களைக் கொல்ல வந்தவனுக்கும்… எனக்கும் சம்பந்தமில்லை…” என்றாள் தவிப்புடன். அவனோ அவளைக் கீழ்க்கண்ணால் ‘இதை நம்பச் சொல்கிறாயா?’ என்பது போலப் பார்க்க, அவன் தன்னை நம்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டவளாக,

“உ… உண்மையைத்தான் சொல்கிறேன்… அவன்… அவன் யார்… அவன் யார் என்றும் எனக்குத் தெரியாது…” என்று அச்சத்துடன் திக்கித் திணறிக் கூற, அதே அலட்சியத்துடன் பார்த்தவாறு கரடு முரடாக வளர்ந்திருந்த தாடிக்கூடாகக் கன்னத்தை மெதுவாகச் சொரிந்தவன் பின்

“சரி… சொல்… என்னிடம் பேச என்ன இருக்கிறது?” என்றான் பொறுமையற்ற குரலில்.

ஏனோ அந்தக் குரலுக்குச் சட்டென்று அவளால் பதில் கூற முடியவில்லை. நாக்கு அண்ணாக்குடன் ஒட்டிக்கொண்டது. என்னவென்று கூறுவாள்… எப்படிக் கூறுவாள்… கூறினாலும் நம்புவானா…? மாலை வேளையிலும் வியர்த்துக் கொட்ட, சேலைத் தலைப்பால் கழுத்தை அழுந்த துடைத்தவாறு அவனைப் பரிதாபமாகப் பார்க்க, அவனோ,

“உன்னுடன் சாவகாசமாக நின்று பேசுவதற்கு நேரமும் கிடையாது, பொறுமையும் இல்லை. நீ எப்போது பேசுவாய், உன் வாயிலிருந்து எப்போது முத்துக்கள் உதிரும் அவற்றை எப்போது பொறுக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் அளவுக்கு நான் ஒன்றும் வேலைவெட்டி இல்லாதவனும் அல்ல…” என்றவன், பொறுமையற்ற மூச்சுடன், தன் இடையில் கரங்களைப் பதித்து,

“இதோ பார்… உனக்கு இன்னும் அரை மணி நேரம் தருகிறேன். மரியாதையாக என் கண்களுக்குத் தென்படாத இடமாகப் பார்த்துப் போய்விடு… என்னுடைய பொறுமைக்கான அளவு மிகச் சொற்பமே… இதுவரை எந்தப் பெண்ணையும் நான் தாக்கியதில்லை… தாக்க வைத்துவிடாதே.. இதற்கு மேலும் பிடிவாதமாக இங்கேயே நிற்கப்போகிறேன் என்றால்… உன் இஷ்டம்….” என்று எச்சரித்தவன் வேகமாகத் திரும்பி ஜீப் நோக்கிப் போனவன் என்ன நினைத்தானோ நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

முகம் களைத்து வாடியிருந்தது. சாப்பிட்டாளா இல்லையா? ஏனோ உடனேயே அவளுடைய பசியை ஆற்றவேண்டும் என்கிற வேகம் எழ,

“சாப்பிட்டாயா?” என்றான். அவளோ புரியாமல் விழிக்க,

“இன்று மதியம் சாப்பிட்டாயா என்று கேட்டேன்…” அவள் மறுப்பாகத் தலையை ஆட்ட, வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன், திரும்பி மணியைப் பார்த்து,

“மணி… சாப்பிட ஏதாச்சும் எடுத்து வா…” என்று கட்டளையிட்டுவிட்டுத் திரும்பி அலரந்திரியைப் பார்த்து,

“சொல்… உனக்கு இன்னும் ஐந்து நிமிடம் தருகிறேன். அதற்குள் சொல்லவேண்டியதைச் சொல்லு…” என்றவன் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டி அவளைப் பார்த்தபடி நின்றான்.

அவன் நின்ற தோரணையே வயிற்றைக் கலக்கியது. இந்த நிலையில் எப்படிப் பேசுவது.

“நா… நான்… என்னுடைய பெயர் அலரந்திரி…” என்று கூற,

“ம்… தெரியும்…” என்று அலட்சியமாகக் கூற, இவளோ எப்படித் தெரியும் என்பதுபோல அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? காவல் நிலையத்தில் என்னைப் பற்றிப் புகார்  கொடுத்தாயல்லவா… அப்போது தெரிந்துகொண்டேன்…” என்றதும்,

“ஓ…” என்றவள் சற்று நேரம் தலையைக் குனிந்து அமைதி காக்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்,

“உன்னுடைய பெயரைச் செல்லத்தான் இத்தனை நேரம் காத்திருந்தாய் என்றால், சொல்லிவிட்டாய் அல்லவா… சரி… சாப்பாடு வரும்… சாப்பிட்டுவிட்டு இடத்தைக் காலி பண்ணு…” என்றுவிட்டுத் திரும்ப, இவளோ,

“நான்… காருண்யனின் மனைவி…” என்றாள் பட் என்று. இவனோ அப்படியே நின்றவன் புருவங்கள் சுருங்க இவளைத் திரும்பிப் பார்த்து,

“காருண்யனா? யார் அவன்…?” என்றான். ஏனோ முகம் இறுகிக் கறுத்துப் போனது. நிச்சயமாக அந்தக் காருண்யனை இவனுக்குப் பிடிக்கப்போவதில்லை.

‘காருண்யன் யாரா?’ சினத்துடன் அவனை முறைத்தவள், அப்போதுதான் காருண்யனுடைய உண்மையான பெயர் ஜெயவாமன் என்பது நினைவிற்கு வந்தது.

“உங்கள் தம்பி… ஜெயவாமன்; தான்… என்னுடைய கணவர்…” என்றதும் அவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன். அதுவரை ஒரு வித இறுகிய தன்மையுடனிருந்தவனின் முகத்தில் இப்போது அப்பட்டமாக அருவெறுப்புத் தெரிய, அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தான். பின் எதையோ காரமாகச் சொல்லவந்தவன் சற்று நிதானித்துப் பின் கடும் சீற்றத்துடன் சுத்தவரப் பார்த்தான். ஓரிருவர் அவர்களைக் குறுகுறுவென்று பார்ப்பது தெரிய, என்ன நினைத்தானோ,

“உள்ளே வா…” என்று ஒற்றைச் சொல்லுடன் தன் வீடு நோக்கிப் போக இவளோ என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் நின்றாள்.

அவனோ, அவள் தன்னை தொடர்ந்து வருகிறாளா, இல்லையா என்பதைக்கூடக் கவனிக்கவில்லை.

அவனுடன் போவதா? இல்லை இங்கேயே இருந்து சத்தியாகிரகம் செய்வதா? குழப்பத்துடன் அசையாது நிற்க, அவளை நோக்கிப் பணியாள் ஒருவன் வேகமாக வந்தான். அவன் கரத்தில் சாப்பாட்டுத் தட்டிருக்க, அதை அவளிடம் நீட்டி,

“ஐயா உங்களைச் சாப்பிட்டுவிட்டு உள்ளே வரச்சொன்னார்…” என்றுவிட்டு தரையிலேயே தட்டை வைத்திவிட்டுக் கரங்களைக் கட்டியவாறு அருகேயே நிற்க, அவளோ சாப்பாட்டுத் தட்டையும் அவனையும் சற்று நேரம் மாறி மாறிப் பார்த்தாள்.

அந்த உணவை நிச்சயமாக அவளால் சாப்பிடமுடியாது. உடனே மறுப்பாகத் தலையை ஆட்டி,

“இல்லை… எனக்குச் சாப்பாடு வேண்டாம்…” என்று மறுக்க, சரிதான் என்று மீண்டும் தட்டைக் கரத்தில் எடுத்தவன், அவளைப் பார்த்து முறைத்தவாறே,

“சரி உள்ளே வாருங்கள்…” என்றவாறு உள்ளே செல்ல, அந்த வேலையாளின் விறைப்பைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் பற்றியது.

‘முதலாளி முதல் தொழிலாளி வரை இப்படி விறைப்பாகத்தான் இருப்பார்களோ?’ என்றவாறு அந்த வேலையாளைப் பின்பற்றத் தொடங்கினாள் அலரந்திரி.

வாசலில் நின்றவளை உள்ளே வருமாறு ஒரு பணியாள் வேண்ட, மறுக்காமல் உள்ளே நுழைந்தாள் அலரந்தரி.

உள்ளே நுழைந்தவளுக்கு அந்த வீட்டின் உட்புறத்தைப் பார்த்ததும் வியப்புத் தாங்க முடியவில்லை. ஏதோ பதினெட்டாம் நூற்றாண்டு அரண்மனை ஒன்றிற்குள் நுழைந்துவிட்ட உணர்வை அவன் வீட்டின் உட்புறம் கொடுத்தது.

ஒவ்வொரு அலங்காரத்திலும் பணத்தின் செழுமை நன்கு தெரிந்தது. கனவிலும் கற்பனையிலும் மட்டுமே கண்டுகழிக்கக் கூடிய தோற்றம் அது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதுர அடிகள் கொண்ட முன்னறை. அதற்குத் தோதாகத் தளபாடங்கள் ஒவ்வொன்றும் இருக்க வேண்டிய இடத்தில் கச்சிதமாக இருந்தது. அதுவும் ஒவ்வொரு தளபாடங்களும் பல லட்சங்களைச் சாதாரணமாக விழுங்கியிருக்கும் என்பது அதன் கனத்திலும், வடிவமைப்பிலும் தௌ;ளத் தெளிவாகத் தெரிந்தது. பொன்னிறமும், சிவப்பும் கலந்த நீளிருக்கையின் அலங்கரிப்பே பெரும் அரசர்களின் அரியனை போலக் காட்சி கொடுக்க, அந்த நீளிருக்கைகளின் கைப்பிடிகள் அனைத்தும் கர்ஜிக்கும் சிங்கங்கள் இருபக்கமும் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும்போது, ஏகவாமனுக்கு அந்த இருக்கைகள் படு பொருத்தமாகத் தோன்றியது. தவிர அந்த இருக்கையில் அமர்வதற்கு நெஞ்சில் உரம் இருக்கவேண்டும் இல்லையென்றால் நிம்மதியாக அதில் அமர முடியாது…

அதற்கு முன்பாகவும் அருகாமையிலும் வைத்திருந்த தேநீர் மேசைகளில் கூட அழகிய கைவண்ணத்தில் சிங்கங்களின் உருவத்தைச் செதுக்கியிருந்தார்கள். அதற்குக் கீழே செந்நிற காஷ்மீர் கம்பளம். தரை முழுவதும் கிரனைட் பளிச்சிட்டது. சீலிங்கில் ராஜ தோரணையை மேலும் எடுத்துக் காட்டும் தொங்கும் விளக்குகள். முன்னறை அலங்காரத்திற்குப் பொருத்தமாகச் சிவப்பும் பொன்னிறமும் வெண்மையும் கலந்த திரைச்சீலைகள். இத்தனை அழகையும் ஒரே இடத்தில் மொத்தமாகக் கொட்ட முடியுமா? தன்னையும் மறந்து வியப்புடன் அந்த அரண்மனையின் அலங்காரத்தைச் சுத்திவரப் பார்த்தவளுக்கு ஒரு கட்டத்தில் உதடுகள் ஏளனமாக வளைந்த.

மானம் காக்க ஆடைகள் இல்லாத  மனிதர்கள் வாழும் உலகில் வெறும் ஜன்னல்களுக்கு ஆடைகள் அதுவும் விலை உயர்ந்த ஆடைகள் போடப்பட்டிருக்கிறதே… ஜடத்துக்கு இருக்கும் மரியாதையை மனிதர்களுக்கு இல்லையே… பணமிருந்தால் எதுவும் செய்யலாம் போல…’ என்று ஏளனத்துடன் எண்ணியவளின் விழிகள் ஒரு இடத்தில் நிலைத்து நின்றன.

படிக்கட்டு சென்று முடியுமிடத்தில் பிரமாண்டமான படம் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதில் ஐம்பது வயது மதிக்கத்தக்கக் கம்பீரமான மனிதர் கோட் சூட்டுன் அழுத்தம் நிறைந்த பார்வையுடன் கம்பீரமாக நின்றிருக்க அவருக்கருகே, இருக்கை ஒன்றில் அழகே உருவாய் கருனையே வடிவாய் பொறுமை கலந்த புன்னகையுடன் ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயதுடைய பெண்மணி அமர்ந்திருந்தார். பார்க்கும்போதே அது காருண்யன், ஏகவாமனின் தாய் தந்தை என்பது புரிந்தது. அதுவும் அந்தப் பெண்மணியின் புன்னகை ததும்பும் முகத்தைப் பார்க்கும் போது, இவளுடைய நெஞ்சுக்குள் எதுவோ பிசைந்தது. கூடவே தன்னையும் அறியாமல் இரு கரங்களையும் கூப்பித் தொழுதவளுக்கு ஏனோ அந்தப் படத்திலிருந்து தன் விழிகளை விலக்க முடியவில்லை.

ஏகவாமனும் சரி, காருண்யனும் சரி அப்படியே தந்தையைக் கொண்டு பிறந்திருந்தாலும், காருண்யன் தாயுடைய கருனையைக் கொண்டிருந்தான். அவர் முகத்தில் தெரிந்த அன்பும் கருனையும் காருண்யனுக்கு உரியது. ஆனால் ஏகவாமன் அப்படியே தந்தையைக் கொண்டிருந்தான். அதே கம்பீரம், துளைக்கும் பார்வை. மீண்டும் தன் விழிகளை ஓட விட்டவளுக்குக் காருண்யனை நினைத்துப் பெரும் குழப்பமாக இருந்தது.

இத்தனை மேல்தட்டிலிருந்தவன் எதற்கு யாரும் இல்லையென்று பொய் சொல்லி என்னை மணக்கவேண்டும்? இத்தனை பெரிய பின்புலம் கொண்டவன் எதற்காக அநாதையென்று பொய் சொன்னான்? இதற்குப் பின்னால் இருந்த மர்மம்தான் என்ன? அவனுக்கு என்ன தேவை இருந்தது…? எதுவுமே புரியவில்லையே…’ என்று யோசனையுடன் நிற்கும்போதே ஒரு பணியாள் அவளருகே வந்து தலை வணங்கி,

“சார் உங்களை இந்தப் பக்கம் வரச்சொன்னார்கள்…” என்றதும் மறுக்காமல் அவன் பின்னே சென்றாள். சற்றுத் தூரம் சென்றதும், தேக்கு மரத்தில் அழகுறச் சித்திரங்கள் செதுக்கிய பெரிய கதவின் முன்னால் வந்து நின்ற வேலையாள்,

“இதுதான் அறை…” என்று விட்டுச் செல்ல, மெல்லிய தயக்கத்துடன் மூடிக்கிடந்த அந்த அறைக்கதவைப் பார்த்தாள். திறக்க வேண்டுமா? தட்ட வேண்டுமா? தயக்கத்துடன் திறப்பதற்குக் குமிழில் கரத்தை வைக்கப் போனவள், என்ன நினைத்தாளோ, உடனே கரத்தை விலக்கி கதவைத் தட்ட,

“கம் இன்…” என்கிற கம்பீரக் குரல் கேட்க, மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்த அந்த அலுவலக அறையே பிரமாண்டமாக இருந்தது. அந்த அறையின் ஒரு பக்கம் முழுவதும் பலம் பொருந்திய கருங்காலியால் வடிவமைக்கப்பட்ட புத்தக அலமாரிகள் அருகருகே வைக்கப்பட்டு அதில் நிறையப் புத்தகங்கள் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் அருகே மூடிய கபேர்ட். ஒரு சோஃபா செட். அனைத்தும் கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டவையே. விழிகளைத் திருப்ப அதே மரத்தினால் செதுக்கிய அலுவலக மேசை. அதன் பின்னால் சாய்வாக அமர்ந்திருந்தான் ஏகவாமன். அதுவும் அவனுடைய விழிகள் கூர்மையுடன்தான் இவளைப் பார்த்துக்கொண்டிருந்தன.

இவளின் வியந்த பார்வையை அலட்சியமாக ஏறிட்டவன், மேசைக்கு மறுபுறமிருந்த இருக்கையைக் காட்டி,

“உட்கார்…” என்று கூற, மறுக்காமல் அமர்ந்துகொண்டாள். ஏற்கெனவே எப்போதடா இருப்போம் என்று காத்துக்கொண்டிருந்தாள் போலும். ஏனோ அவளையும் மீறி கைகால்கள் நடுங்க, அதை அடக்கும் வழிதெரியாது, தன் மடியில், ஒரு கரத்துடன் மறு கரத்தைக் கோர்த்தவாறு, இருக்க ஒரு முழு விநாடி அவளை ஏறிட்டுப் பார்த்தான் ஏகவாமன்.

பின் வாகாகத் தன் சுழல் நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவாறு, இடது காலுக்குமேல் வலது காலைப் போட்டு வலது கரத்தை வலது கைச்சட்டத்தில் அழுத்தி வைத்து, மறு கைப்பிடியில் இடது கரத்தை மடித்து வைத்து, பெரு விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையில் தன் கன்னத்தைப் பதித்துக் கூரிய விழிகளால் அவளை அளந்து கதிரையை அங்கும் இங்கும் திரும்பியவாறு,

“இப்போது சொல்… யார் நீ…” என்றான் அதிகாரமாக.

““அதுதான் சொன்னேனே… உங்கள் தம்பி கா… ஜெயவாமனின் மனைவி என்று…” என்றாள் அவளும் அழுத்தமாக.

இப்போது அந்த இலகுத்தன்மை தொலைந்து போகத் தன் கரத்தை விலக்கி அவளை அழுத்தமாகப் பார்த்தவாறு, முன்புறமாகச் சரிந்து மேசையில் இரு கரங்களையும் மடித்தாற்போல் வைத்து அவளை இமைக்காமல் பார்த்தவன்,

“பிறகு…” என்றான். அவளோ புரியாமல் விழிக்க,

“அதுதான்… என் தம்பியின் மனைவி… பிளா பிளா பிளா… அதற்குப் பிறகு…” என்றவன் மீண்டும் சாய்ந்தமர்ந்து,

“எவ்வளவு வேண்டும்?” என்றான் அடுத்து. அப்போதும் அவன் என்ன கேட்கிறான் என்று இவளுக்குப் புரியவில்லை. இவள் குழப்பத்துடன் பார்க்க,

“என்னம்மா… நான் சொல்வது புரியவில்லையா… இல்லை… புரியாதது போல நடிக்கிறாயா… அடுத்தது இதைத்தானே சொல்லப்போகிறாய்… என் தம்பியின் மனைவி நீ… அவனுடைய சொத்து உனக்குத்தான் வரவேண்டும்… அவனுடைய பணமும் உனக்குத்தான் வரவேண்டும்… அதைக் கொடுத்துவிட்டால் நான் போய்விடுவேன்… இல்லையென்றால்… உலகத்தைக் கூட்டி நியாயம் கேட்பேன்… இதுதானே… சொல்ல வருகிறாய்… புரிந்துகொண்டேன்… இனி வெளியே போ…” என்று அவன் கிண்டலுடன் கூற அலரந்திரிதான் அதிர்ந்து போனாள்.

அவள் என்ன கேட்க வந்தாள்… இவன் என்ன கற்பனை செய்கிறான்…

“சொத்து… பணமா… என்ன உளறுகிறீர்கள்…” என்று சற்று ஆவேசத்துடன் கெட்டவள், தன் மார்பில் வலது கரத்தை அழுந்த பதித்து,

“உளறுகிறேனா…நான் சொல்வது உளறுவது போலவா இருக்கிறது… நான்… உன்மையாகவே காருண்யனின் மனைவி… அதாவது உங்கள் தம்பி ஜெயவாமனின் மனைவி…” என்று கடித்த பற்களுக்குள்ளாக அவள் கூற, அவனோ அதே கிண்டலுடன்தான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்  ஏளனத்துடன் நகைத்தவன்,

“தெளிவாய் உளறுகிறாய் பெண்ணே… உன் கணவனின் பெயர் காருண்யன் என்கிறாய். பிறகு ஜெயவாமன் என்கிறாய்… இதில் நீ யாருடைய மனைவி… நீயும் குழம்பி என்னையும் குழப்புகிறாய் முதலில் உன் கணவன் யார் என்கிற தெளிவுக்கு வா? உன் கணவன் காருநாயனா, இல்லை ஜெயவாமனா?” என்றவன், அவளை சீற்றத்துடன் பார்த்து,

“உனக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது? இளிச்சவாயன் போலத் தெரிகிறதா?  கேனயன் போலத் தோன்றுகிறதா? இல்லை…” என்றவன் தன் தலையை சுட்டிக்காட்டி”இங்கே எதுவும் இல்லாத முட்டாள் போலத் தோன்றுகிறதா…” என்றவனின் குரலில் அடக்கிய சீற்றம் தெரிய, அலரந்திரிக்கும் தன் பேச்சு உளறலாகத்தான் தெரிந்தது.

அவளுக்கு மட்டுமல்ல. அவள் உளறியதைக் கேட்டால் யாருக்கும் அப்படித்தான் தோன்றும். அவனை வேதனையுடன் பார்த்தவள்

“சார் நான் பொய் சொல்லவில்லை… நான் ஜெயவாமனுடைய மனைவி…” என்றவள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இதுதான் நடந்தது சார்… மருத்துவர் சொல்லித்தான் காருன்யனின் நிஜப்பெயரே ஜெயவாமன் என்பது எனக்குத் தெரியவந்தது. அப்போது கூட நான் நம்பவில்லை. ஒரு வேளை ஆள் மாறாட்டமாக வேறு ஒருவரை மருத்துவர் என் கணவனாக நினைத்துச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். ஆனால்… ஆனால்… அவர் சொன்னது உண்மை என்பதை உங்களைப் பார்த்த உடனேயே புரிந்துகொண்டேன்…” என்று உள்ளம் கசங்க கூறியவளை இரக்கமற்றுப் பார்த்தான் ஏகவாமன்.

“அவ்வளவும்தானா… இல்லை இன்னும் இருக்கிறதா?” என்று ஏகதாளமாகக் கேட்க அவனை அடிபட்ட பாவனையுடன் பார்த்தாள் அலரந்திரி.

“சார்…” என்று அவள் தடுமாற,

“உன்னுடைய கதை… அதாவது கற்பனைக் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. நீ எழுதியே அதிகம் சம்பாதிக்கலாம்…” என்று இளக்காரமாகச் சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அலரந்திரி.

“நீங்கள்… நீங்கள் என்னை நம்பவில்லை…”

“நான் யாரையுமே நம்புவதில்லை பெண்ணே… என் நிழலைக் கூட.” என்றவன் அதே வேகத்துடன் எழுந்து தன் உயரத்திற்கேற்ப நிமிர்ந்து நின்றவாறு அவளை வெறித்துப் பார்த்தான்.

“இதோ பார்… நீ வந்திருப்பது ஏகவாமனிடம். உன்னுடைய பொய்யான புணை கதைகளை நம்புவதற்கு நீ யாரும் திறமையான படத் தயாரிப்பாளர்களைத்தான் சந்திக்கவேண்டும். என்னையல்ல… வேண்டுமானால் எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களின் தொடர்பு இலக்கங்களைத் தருகிறேன்… அவர்களுடன் பேசிப்பார்… நிச்சயமாக உனக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள்.” என்று கிண்டலுடன் கூற, அலரந்திரிக்கு ஒரு கணம் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

‘அழிந்து போன வாழ்க்கையைப் பற்றிக் கூறினால், அதை வெறும் கதையென்று ஒதுக்குவது மட்டுமல்லாமல், அவளைத் தயாரிப்பாளர்களைச் சென்று சந்திக்குமாறு கிண்டலுமல்லவா செய்கிறான்… எத்தனை பெரிய திண்ணக்கம் இருக்கவேண்டும்?’ ஆத்திரம் கண்மண் தெரியாமல் பொங்கி வர, இருக்கையை விட்டு எழுந்தவள்,

“இல்லை… இல்லை… நான் சொல்வது உண்மை உண்மை உண்மை. நான் ஏன் பொய் சொல்லவேண்டும்? சொல்லுங்கள்…” என்றாள் உதடுகள் நடுங்க. அவனோ சற்றும் இளகினானில்லை. மாறாக மேலும் ஏளனப் புன்னகையைச் சிந்தியவாறு,

“சிம்பிள்… இந்த சொத்து உன்னை மயக்கி இருக்கலாம். என் தம்பியின் மனைவி என்பதால் இதன் பாதி உனக்குத்தானே உரிமையாகும்…” என்றதும் அவனை நம்ப மாட்டாதவளாகப் பார்த்தாள் அலரந்திரி.

“சொத்துக்காகவா? எல்லோரையும் போலப் பணத்துக்கு மட்டுமே முக்கியம் கொடுப்பவளாக இருந்திருந்தால் இன்று நான் இருக்கும் நிலையே வேறாக இருந்திருக்கும்… என்றவள் தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை இழுத்துக் காட்டி

“இதைக் கட்டியது உங்கள் தம்பி… மூன்று வருடங்களாக அவருக்கொரு தாதியாக இருந்து பாதுகாத்திருக்கிறேன்… நான் அவர் மனைவியில்லை என்றால் இதற்கு என்ன அர்த்தம்?” என்றாள் எரிச்சலுடன். அவனோ அந்த மஞ்சள் கயிற்றைக் கண்டதும் சினம் துளிர்க்க அவளை நோக்கி நெருங்கி வந்தான். அவன் நெருங்க நெருங்க இவளுக்குக் கிலி எடுத்தது.

அச்சத்துடன் பின்னிய கால்களைப் பின் வைத்தவள், அங்கிருந்த புத்தக அலமாரியுடன் முட்டி நின்றாள் அலரந்திரி.

What’s your Reaction?
+1
12
+1
2
+1
0
+1
0
+1
7
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!