Thu. Jan 23rd, 2025

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 30

(30)

அன்று மாலை ஐந்து மணிக்கே, ஏகவாமன் தாத்தா பாட்டியிடம் விடைபெற்று அலரந்திரியிடம் வந்தான்.

“போக முதல் உனக்குச் சிலதைக் காட்டிவிட்டுச் செல்லவேண்டும்… என் கூட வா…” என்றுவிட்டு முன்னே நடக்க, மறுக்காது அவள் பின்னே சென்றாள் அலரந்திரி.

இப்போது மனம் முழுவதும் தைரியம் நிறைந்திருந்தது. அதுவும் அவன் அழைத்து வந்து சேர்த்த இடம், அற்புதமான இடமாயிற்றே. இதைவிட ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா என்ன?

கொஞ்சத் தூரம் சென்றதும், நின்று திரும்பியவன், அவளை ஏறிட்டாள். அவள் முகம் அமைதியாக இருந்தாலும், விழிகள் ஆவலுடன் சுத்தவரப் பார்த்துக்கொண்டு வந்தன. அதை உணர்ந்தவனுக்கு அந்த இடம் அவளுக்குப் பிடித்துக் கொண்டது என்பது புரிந்தது.

“அலர்…” என்று மென்மையாக அழைக்க, அந்த அழைப்பில் ஏனோ இவளுடைய உள்ளம் குழைந்து போனது. தன்னை மறந்து அவனை நிமிர்ந்து பார்த்தவாறு அடுத்த அடியை எடுத்து வைக்க, அவள் கால் வைக்க இருந்த இடத்தைக் கண்டு,

“ஹே… பார்த்து…” என்ற பதறியவனாக அவளுடைய கரம்பற்றி இழுக்க, முதலில் தடுமாறியவள், புரியாமல் அவன் பார்த்த திசை நோக்கி ஏறிட, அப்போதுதான் புரிந்தது சற்று எம்பியிருந்த பாறையின் மீது கால் தடுக்க இருந்தாள் என்று.

இப்போது கவனமாகத் தாண்டி நடக்க, அவளுடைய கரத்தை விட்டவன், பான்ட் பாக்கட்டில் கரங்களைச் செலுத்தியவாறு, மேலும் முன்னேற, இவளும் அவனைப் பின் பற்றி நடக்கத் தொடங்கினாள்.

அடிக்கடி மழை பெய்யும் போலும், தரை முழுவதும் ஈரமாக இருந்தது. தவிரக் கணுக்கால் வரைக்கும் வளர்ந்திருந்த புற்களிலிருந்த ஈரம் இவள் பாதத்தை நனைக்க, கணுக்கால் தெரியச் சற்று சேலையை ஒற்றைக் கரத்தால் பற்றி மேலே தூக்கியவாறு பின்தொடர்ந்தாள்.

மிகப் பிரமாண்டமான ஏரியா அது… அந்தக் கோட்டைக்குத் தோதாகப் பின் புறம் பெரிய தோட்டமே உருவாக்கியிருந்தார்கள். மலைப்பிரதேசம், தோட்டம் போடுவது அத்தனை சுலபமல்லத்தான். ஆனால் அதற்கேற்ப மேடாகக் கட்டி, மண் போட்டு உருவாக்கியிருந்தார்கள். அதன் பின்னே படிப்படியாகக் கீழிறங்கிச் செல்லும் தரை.

குறிப்பிட்ட இடம் வந்ததும் நின்றவன், தன் பின்னால் வந்துகொண்டிருந்தவளைத் திரும்பிப் பார்த்து,

“இந்த இடத்தில் அதிகாலையில் தேநீர் குடித்தவாறு குளிருக்குத் தோதாக, புகாரின் மத்தியில் உதிக்கும் சூரியனைப் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்… அன்றைய நாளே… அழகாய் விடிவது போலத் தோன்றும்…” என்று மென்மையாகக் கூற, ஏனோ அவன் கூறியது போலவே செய்து பார்க்கவேண்டும் என்கிற ஆவல் தோன்றியது.

அவன் மேலும் ஓரிடத்தில் நிற்க, இவளும் ஏன் நிற்கிறான் என்பது போலச் சற்று எட்டிப் பார்த்தாள். அங்கே, தரை படிப்படியாக இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. இறங்கிச் சென்ற தரையைப் பார்க்கும் போதுதான் தாம் நின்ற உயரத்தின் அளவே அவளுக்குப் புரிந்தது. அந்த ஊரே அவர்களின் கைப்பிடிக்குள் இருப்பது போன்ற ஒரு மாயைத் தோற்றுவிக்க வியந்துபோனாள் அலரந்திரி.

அவனும் சற்றுக் குனிந்து பார்த்துவிட்டு, “இங்கே நின்றால், இந்த இடத்திற்கு நாம்தான் ராஜா என்று தோன்றும் அலர்…” என்று அவன் கூறிக்கொண்டே, ஓரடி உயரத்திற்குச் செங்குத்தாக விழுந்து சென்ற தரையில் குதித்து இறங்கியவன், அவளை நோக்கித் தன் கரத்தை நீட்ட, அவளோ அக்கரத்தைப் பற்றி அக்கறை கொள்ளாது சேலையை மேலும் சற்றுத் தூக்கிக் குதித்திறங்கியதும், ஒரு வித ஏமாற்றத்துடன் தன் கரத்தைச் சுருக்கி இழுத்துக்கொண்டான் ஏகவாமன்.

சற்றுத் தூரம் அப்படியே நடப்பதும், பின் இறங்குவதும், நடப்பதும் பின் இறங்குவதுமாகச் செல்ல, ஒவ்வொரு முறையும் அவன் நீட்டிய கரத்தைத் தவிர்த்துவிட்டே இறங்கத் தொடங்கினாள் அலரந்திரி. கடைசியாக அவன் பாய்ந்து இறங்கிவிட்டு, இப்போதும் கைகொடுக்க மாட்டாள் என்று எண்ணியவனாக உதவிசெய்யும் எண்ணமில்லாமல், கரங்களைப் பான்ட் பாக்கட்டிற்குள் வைத்தவாறு அவள் இறங்கும் நேரத்திற்காகக் காத்திருக்க, அவளோ இப்போதும் சேலையை அழுந்தப் பற்றியவாறு, கீழே இறங்குவதற்காக முன்னால் காலை வைத்தாள். அவள் போதாத நேரம், ஏற்கெனவே ஈரமாகிவிட்டிருந்த தரை அவள் இறங்கும் போதே வழுக்கிவிடத் தன்னைச் சமப்படுத்த முயன்றவள், முடியாமல் பின்னால் சரிய, அந்தக் கணம், கண்ணிமைக்கும் நொடியில்

“ஹே… பாத்து…” என்று பதறியவனாக அவளை நெருங்கித் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான் அந்தக் கந்தர்வன்.

ஒரு கணம்தான்… ஒரே கணம்தான் இருவருக்குமே அண்ட சராசரங்கள் அனைத்தும் நின்றுபோன உணர்வு. வானும் மண்ணும் முட்டிக்கொண்ட அதிர்வு. தீயும் பனியும் இரண்டறக் கலந்த சுகிப்பு.

அந்த ஆண் மகனின் ஒரு கரம் இடையையும், மறு கரம் தொடைகளையும் சுற்றி வளைத்திருந்த தருணம், எங்கே கீழே தன்னைத் தவற விட்டுவிடுவானோ என்று அஞ்சி அவன் கழுத்துப் பட்டியை இறுகப் பிடித்து அச்சத்துடன் தடுமாறியவாறு அவன் விழிகளுக்குள் தன் விழிகளைச் செலுத்திய அந்த நொடி, அவன் செம்புலமானான்… அவளோ பெயல் நீரானாள். செம்மண்ணில் நீர் கலந்தபின் அதைப் பிரித்தெடுப்பது ஏது? பிரித்தெடுக்கும் திறமைதான் யாருக்குண்டு.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ, திடீரென்று, புதராய் மண்டிக்கிடந்த இடத்தில் ஒரு சலசலப்புக் கேட்க அதுவரை தேவ சுகத்தில் வீழ்ந்திருந்த ஏகவாமன் சுய நினைவுக்கு வந்தான்.

அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருப்பது புரிய. சிறு தடுமாற்றத்துடன், அவளைக் கீழே இறக்கிவிட்டபோது, அவனுக்குள் மிகப்பெரும் பூகம்பம்.

அவளும்தான் என்ன செய்வாள், தன்னிலை கெட்டு உதடுகள் கடித்து மாயவனின் ஸ்பரிசத்தின் உணர்வில் விக்கித்து நிற்க மீண்டும் அந்தச் சலசலப்பு.

சடார் என்று அந்தப் புதரிற்குள்ளிருந்து எதுவோ துள்ளிப் பாய்ந்து ஓட, முதலில் அதிர்ந்து தன்னை மறந்து துள்ளியவள் ஏகவாமனின் மேல் கரத்தைப் பற்றியவாறு அச்சத்துடன் புதரைப் பார்க்க, அந்த ஆண் மகனோ, தன் மேல் கரத்தைப் பற்றியிருந்த அந்தப் பிஞ்சு விரல்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சுவாதீனமாகப் பற்றியிருந்தன அந்தக் கரங்கள். அதன் மென்மையில் உருகத் தொடங்கிய வேளை, அந்தப் புதருக்குள்ளிருந்து காட்டு முயலோன்று இவர்களைத் திரும்பிப் பார்த்துத் தன் பிட்டத்தை அங்கும் இங்கும் அசைத்துவிட்டு மேலும் துள்ளி ஓட அலரந்திரியின் முகம் புன்னகையில் மலர்ந்து போனது.

“ஐயோ… முயல்…” என்று குதுகலித்தவள், அவன் கரத்தை விடுத்து, அதன் பின்னே ஓட முயல, சடார் என்று அவளுடைய கைத்தலத்தைப் பற்றித் தடுத்தான் ஏகவாமன். இவளோ புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்டுப் பார்க்க,

“ஹே… ஒரு போதும் பாதையை விட்டு விலகாதே அலர். புதர்களுக்குள் நஞ்சுள்ள பாம்புகள் இருக்கும்…” என்று அவன் எச்சரிக்க, உடனே பாய்ந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட்டவளாக, அச்சத்துடன் புதரைப் பார்த்தாள்.

“இந்தப் பாதையில் வேலையாட்களின் நடமாட்டங்கள் இருக்கும் அதனால் பயமில்லை. ஆனால் புதர்களுக்குள் மட்டும் சென்று விடாதே…” என்று எச்சரித்தவாறு மேலும் முன்னேற அவனைத் தொடர்ந்தாள் அலரந்திரி.

சற்றுத் தூரம் போக, போக, எங்குப் பார்த்தாலும் பெயர் தெரியாத காட்டு மலர்கள் பல வர்ணத்தில் அவர்களைப் பார்த்து வரவேற்க அந்த அழகில் மெய்மறந்து போனாள் அலரந்திரி. கூடவே பட்டாம் பூச்சிகளும் அங்கும் இங்கும் ஓடித் திரிய, ஏதோ புது உலகுக்குள் காலடி எடுத்து வைத்த உணர்வு. கூடவே அருவியின் ஓசையும் கேட்க, தன்னை மறந்து சத்தம் வந்த திசை நோக்கி நடந்தவள், அங்கே கண்ட காட்சியில் வாய் பிளந்தாள். அதை மறைக்கும் முயற்சியாய் கரங்களால் வாயை மூடியவாறு தெறித்துவிடும் விழிகளுடன் அந்த இடத்தையே பார்த்தாள் அலரந்திரி.

அந்த இடத்தைப் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது… ஏன் ஆயிரம் கண்கள் இருந்தாலும் தெவிட்டாது… அந்த இடத்தைத் தரிசிக்கவே முற்பிறப்பில் புண்ணியம் செய்திருக்கவேண்டுமோ என்னவோ… இரண்டு குன்றுகளுக்கு இடையில் யாரோ கிடாரத்திலிருந்த பாலை ஊற்றி விட்டனரோ, ஆர்ப்பாட்டம் இல்லாது விட்டாலும் அளவாய் பொங்கி விழுந்த அருவியிலிருந்து தெளிந்த நீர் கிட்டத்தட்ட பன்னிரண்டடி அகலத்தில் அப்போதுதான் நடை பயிலத் தொடங்கிய பாலகனின் வேகத்தில் ஆறாக ஓடிக்கொண்டிருக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த பாறைகளில் பட்டுத் தெறித்து விலகிக் கூடி இணைந்து பிணைந்து காதல் ரசம் கொட்டச் சதிராடிச் சலசலத்துச் செல்ல, அதன் அழகில் மொத்தமாய்த் தொலைந்துபோனாள் அலரந்திரி.

சுத்தவரக் செழித்து வளர்ந்த மரங்களைச் சுற்றி கொடிகள் படர்ந்திருக்க, அதில் மலர்ந்த மலர்களின் சுகந்தம் நாசியை இதமாய்த் தீண்டிச் செல்ல, தரையிலே காட்டு மலர்கள் நந்தவனமாய்ப் பூத்துக் குலுங்க, ஆற்றுக்கு ஒரு பக்கம் சுவர் கட்டி எழுப்பியது போலப் பதினைந்தடிக்கும் உயரமாகப் பாறையாலான அரண் நிமிர்ந்து செல்ல, ஆங்காங்கே குருவிகளின் ஓசையுடன், அருவியின் ஓசையும் கலந்து இசைக்க, சொர்க்கம் கூட இந்தளவுக்குத் தித்திக்குமா என்பது சந்தேகம்தான்.

அம்மாடியோவ்… எத்தனை அழகு… அந்தக் கணம் அலரந்திரி தன் பின்னால் நின்றிருந்த ஏகவாமனை மறந்து போனாள், உலகை மறந்து போனாள், தன் இறந்த காலத்தைத் தொலைத்தாள், புதியவளாய், புத்தம் பொழிவுடன் பிறந்தவள் அந்த இயற்கை அன்னையின் குழந்தையாய் மாறிப் போனாள்.

அவளுடைய குதூகலத்தைக் கண்ட ஏகவாமனும் கிறங்கித்தான் போனான்.

அவளோ அங்கு அழகாய் மலர்ந்த மலர்களை ஓடிப்போய்க் கொத்தாய் பறிந்து முகர்ந்து பார்க்க, அந்த மலர்களாய் அவன் மாறிப்போனான்.

தன்னை மறந்து கிளுகிளுத்த சிரிப்புடன் ஓடிப்போய்ப் பட்டாம்பூச்சியைப் பிடிக்கப் போனாள்… தோற்றுப் போன கணத்தில் வாடியவளாய் மற்றொன்றைப் பிடிக்கப் போனாள், எங்கோ கேட்ட குருவிகளின் இசையில் சங்கீதம் கற்றவளாய்த் துள்ளினாள்…

சலசலத்த ஆற்றைக் கண்டு ரகசியம் பேசும் தோழியாய்ப் பாய்ந்து சென்றவள், சேலையைச் சற்றுத் தூக்கி வெண்ணிறப் பாதத்தைத் தண்ணீரில் வைத்துக் குதித்தாள். இப்போது இருப்பவள் அலரந்திரி அல்ல… இவள் பட்டாம்பூச்சி… சுதந்திரமாய்த் துள்ளித் திரியும் மாண் குட்டி… எந்தக் கசடும் அண்டா குழந்தை… நிஜ உலகை விடுத்துக் கற்பனா உலகில் காலடி எடுத்து வைக்கும் இளங்குருத்து…

இப்படி வேற்றாளாய், வேற்றுக் கிரக வாசியாய் மாறியிருந்தவளை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தவனின் உள்ளத்தில் பெரும் புயல் வந்து மையம்கொண்டது. அவளுடைய கணுக்காலில் வெண்மையில் பித்தம் கொண்டவனாய், மலரோடு மலராய்க் கொஞ்சி பேசுகையில் கவிஞனாய், செதுக்கிய உடலைத் தரிசிக்கையில் கலைஞனாய்… தன்னை மறந்து சிரிக்கும் ஒலியைக் கேட்கும்போது, நல்ல இசைஞனாய் மொத்தமாய்த் தன்னைத் தொலைத்தவனுக்கு மூச்செடுக்கவே மறந்து போனது.

காதல் பித்தம் தலைக்கேற, உடல் தளர்ந்தவனாய் அங்கிருந்த மரத்தில் சடார் என்று சாய்ந்துகொண்டவனின் விழிகளோ தேக்கிவைத்த அவளின் அழகை முழுதாக அனுபவிக்க, எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று தாமாக மூடிக்கொண்டன.

காதல்… காதல்… காதல் மட்டுமே இப்போது அவனிடத்தே… காதல் அவன் சுவாசமானது. காதல் மட்டுமே உயிரானது… காதல் ஒன்றே உலகானது… காதல் மட்டுமே கடவுளானது… கற்பனைக்கேது வேலி? கற்பனைக்கேது பூட்டு? தடையுடைத்து அவளுள் சங்கமமாகச் சித்தப்பட்டான் அந்தக் காதல் மன்னன்.

அந்த விநாடி, அவனுடைய ஆன்மா அக்காதலை ருசித்துப் பருக அவன் உடலை விட்டுப் பிரிந்து வேகமாய்த் தன்னவளை நெருங்கியது. அவளைப் பின்னால் நின்று அனைத்துக் கொண்டது… உதடுகளைக் கழுத்து வளைவில் புதைத்துக்கொண்டு ஓய்வெடுத்தது. அடர் முடியில் நுழைந்து சுகமாய்த் தூங்கியது.

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே

என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே

வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே

உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே

காணாமல் நான் போனேனே

கரங்களுக்கு அது போதவில்லையோ… தாகம் தீரவில்லையோ, அவள் முன்னால் வந்து நின்று இழுத்து அணைத்தான்… அவளை இழுத்து அணைக்கும் சக்தி ஆண்மாவுக்கு ஏது…? அதனால் தானாகவே முன்னேறி அவளை அணைத்துக் கொண்டது… நெஞ்சாங் கூட்டில் குடி புகுந்து குளிர் காய்ந்தது.

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க

எந்த மூடிபோட்டு நான் என்னை மறைக்க

தொடட்டுமா தொல்லை நீக்க

இளைப்பாறியது போதுமென்று நினைத்த ஆன்மா வெளியே வந்து அவளைத் தாபத்துடன் பார்த்தது. ஆவேசத்துடன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டது. அத்துமீறி வீணை மீட்டத் தொடங்கியது… அப்படியே அவள் பாதத்தில் சரணாகதி அடைந்தது…

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்

கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்

பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்

பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்

பிணைத்து வைக்கும் கார்காலம்

தண்ணீருக்குள் கலந்து பாதங்களையும், தண்டைக் கால்களையும் வருடி அணைத்து முத்தமிட்டு மேலெழுந்து இடையின் வளைவில் தழுவி நின்றது. மனத்தில் தன்னிலை கெட்டு, இன்பத்தின் எல்லையைத் தொட, ஆன்மாவின் விரல்களின் வேகத்தில் அவள் அங்கங்கள் சிவந்து போனதோ,

நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை

நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை

நெருக்கமே காதல் பாஷை

ஆஹா இன்பம்… பேரின்பம்… மனதிர்க்கினியாள் கரங்களில் தவழ்ந்துவிட்டால் வாழ்வில் இல்லாத பேறுதான் ஏது… அவன் மேனி அவளைத் தொடவில்லை… நகம் நுனி கூடத் தீண்டவில்லை… நாசி நுகரவில்லை… விழிகள் கூட வருடவில்லை… ஆனாலும் ஆத்மார்த்தமான ஆன்மாவின் பிணைப்பில் மொத்தமாய்த் தொலைந்து போனவனாய், அனைத்தையும் உணர்ந்தவனாய், கிறங்கிப்போனவன், அவளுடைய சிவந்த அதரங்களைக் கண்டு தன் உதடுகள் கொண்டு, ஒத்தடம் கொடுத்துச் சமாதானப்படுத்த விளைந்த நேரம்,

“ஆ..! அம்மா…!” என்று அலறிய அலரந்தரி தண்ணீரை விட்டுத் துள்ளிக் குதித்துப் பின்னால் வந்தாள்.

அதுவரை எங்கோ எட்டா தொலைவிலிருந்து காமத்தின் வச்சத்தில் மொத்தமாய் வீழ்ந்திருந்தவன், அவளுடைய கிறீச்சிடும் சத்தம் கேட்டுப் பதறி அடித்துச் சுயினைவு பெற்றவனாய் விழிகளைத் திறந்து நிமிர்ந்து பார்த்தான் ஏகவாமன். அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது தான் அந்த உலகைவிட்டு வேறு தொலைவுக்குச் சென்றிருந்தது. நிஜமாய்த் தெரிந்ததெல்லாம் கற்பனை என்று புரிந்தபோது எதோ பெரும் ஏமாற்றம் அவனுக்குள்.

இன்னும் அவனால், அது கனவு என்று எண்ணவே முடியவில்லை. ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தவன் போலத் தன் தலையைக் குலுக்கியவன், அலறியவளை நோக்கிப் பதட்டமாக நெருங்கினான்.

“ஹே… என்னாச்சு…” என்று அவளை ஒரு கணம் மேலும் கீழும் பார்த்தவாறு கேட்க, அவளோ சுட்டுவிரலால் ஆற்றுத் தண்ணீரைக் காட்டி,

“சின்ன மீன்கள்… கடிக்கின்றன…” என்றாள் சிறுத்துப்போன குரலில். அதைக் கேட்டுத் தன்னை மறந்து வெண்பற்கள் தெரியச் சிரிக்க அந்தச் சிரிப்பில் மெய்மறந்தாள் அலரந்திரி. அவனோ தன் சப்பாத்துகளையும், காலுறைகளையும் கழற்றி, ஓரமாக வைத்துவிட்டுப் பான்டை மடித்து ஆற்றிற்குள் இறங்கியவன், ஒற்றைக் கால் மடித்து அமர்ந்து, தன் கரத்தைத் தண்ணீரில் வைக்க, எங்கிருந்தோ குடுகுடு என்று நீந்தி வந்து அவனுடைய கரத்தைச் சூழ்ந்து கொண்டன அந்தச் சிறிய கறுப்பு நிற மீன்கள். அதைச் சுட்டிக் காட்டியவன்,

“காரா ரூஃபா…” என்றான். இவள் புரியாமல்,

“ஆ?” என்று குழம்ப,

“அந்த மீன்களுடைய பெயர்… காரா ரூஃபா… காலில் உள்ள தேவையற்ற தோல்களை அவை உண்ணும்… அது ஆரோக்கியமானதுதான் அலர்…” என்று மென்மையாகக் கூற,

“ஓ…” என்றவள் மெதுவாக அவனை நெருங்கினாலும் தண்ணீருக்குள் இறங்கினாளில்லை. சற்றுத் தள்ளி நின்றவாறே எட்டிப் பார்த்து,

“திடீர் என்று காலைக் கடித்ததும் பயந்து விட்டேன்…” என்று கூற, ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், மீண்டும் சப்பாத்தை அணிந்தவாறு, அவளை நெருங்கி,

“சரி… வா… போகலாம்…” என்றவாறு மீண்டும் மேலேறி நடக்கத் தொடங்க அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாது ஏக்கத்துடன் அந்த ஆற்றையே பார்த்தாள். அதைக் கண்டு

“இந்த இடம் எங்கும் ஓடிவிடாது அலர்… இது நம் கோட்டைக்கு உட்பட்டதுதான்… எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம்… பார்த்தாயல்லவா… இயற்கை அரண் இருப்பதை… இதைத்தாண்டி எந்த விலங்குகளும் உள்ளே வராது… விருப்பமானபோது வந்து குளித்துவிட்டே போகலாம்… தாத்தா அதிகம் இங்கே வந்துதான் குளிப்பார்…” என்று நடக்கத் தொடங்க பின்னே சென்றாள் அலரந்திரி.

மீண்டும் மேலேறி காரடிக்கு வந்தவன், திரும்பி அலரந்திரியை ஏறிட்டான். அவளை நெருங்கி, அவளுடைய கரங்களைத் தன் கரங்களில் எடுத்து அழுத்திக் கொடுக்க, அவனுடைய பரந்த அழுத்தமான கரங்களை ஒரு கணம் வெறித்துப் பார்த்தாள் அலரந்திரி.

அவனோ அவளுடைய முகத்தை ஒரு கணம் ஆழமாகப் பார்த்துவிட்டு,

“உன் குடிசை எரிந்ததற்கு நான்தான் காரணம் என்று நினைத்தாய் அல்லவா… நான் அடித்ததால்தான், அரசியல்வாதிகள் தீ வைத்தார்கள் என்று எண்ணினாய் அல்லவா…?” என்று கேட்க, அந்த நினைவு கொடுத்த தாக்கத்தில் அவசரமாகத் தன் கரத்தை அவன் கரத்திலிருந்து உருவ முயல, அக்கரத்தை அழுத்தப் பிடித்தவன்,

“ஆனால் அது உண்மையல்ல அலர்…” என்றான் அவள் விழிகளையே பார்த்தவாறு. இவளோ புரியாமல் அவனைப் பார்க்க, தன் கரத்திலிருந்த அவளுடைய புறங்கையைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,

“உண்மையாக அதற்குக் காரணம் கருந்தேவன்…” என்றதும் அதிர்ச்சியுடன் ஏகவாமனைப் பார்த்து,

“எ… என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் குழப்பத்துடன். இப்போது அவளுடைய கரத்தை விடுவித்துத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு,

“அவர்கள்தான்… உன்னைக் கொல்வதற்காகத் தீ வைத்திருக்கிறார்கள்… அதனால்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன்… முன்னமே சொல்லியிருந்தால், இந்த இடத்தைப் பார்க்காமலே, வர மறுத்திருப்பாய். அதுதான் எதுவும் சொல்லாமல் அழைத்து வந்தேன்… அலர்… இந்த இடம்தான் தற்போதைக்கு உனக்குப் பாதுகாப்பு… எக்காரணம் கொண்டும் இதன் எல்லையைத் தாண்டிவிடாதே அலர்… செய்வாயல்லவா?” என்று அவன் மென்மையாகக் கேட்க, அவளோ பாதில் கூறாது அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பாண்ட் பாக்கட்டிலிருந்து கரத்தை விடுவித்தவன், அவளுடைய மேல் காரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்து,

“இதோ பார்… உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… நீயும் இப்போது நம் குடும்பத்தில் ஒருத்தி… உன்னைக் காக்கும் கடமை எனக்கு இருக்கிறது… சொல்லப்போனால் எனக்கு மட்டும்தான் இருக்கிறது… தவிர… ஜெயவாமனுக்கும் உன்னைக் காத்துக்கொள்வேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன்… அட் எனி கோஸ்ட்… அந்த வாக்கை என் உயிருள்ள வரைக்கும் காப்பேன்… நான் சொல்வது உனக்குப் புரிகிறது அல்லவா…?” என்று மென்மையாகக் கேட்க, இப்போது அவள் ஆம் என்பது போலத் தலையாட்டினாள். அதைக் கண்டதும், நிம்மதிப் பெருமூச்சொன்றை விட்டவன், தன் கரத்தை விலக்கிச் சுற்றிவரப் பரந்து விரிந்திருந்த காட்டுப் பகுதியைக் காட்டி,

“இப்போது போனோமே இந்த ஆற்றங்கரைதான் நமக்கான எல்லை அலர். இதற்கு அப்பால் இருக்கும் காடு பயங்கரமானது. சிறுத்தைகள் இங்கே சர்வசாதாரணமாக நடமாடும். இயற்கையாகவே பாறைகள் அரணாக இருப்பதால், அதைத் தாண்டி எந்த வன விலங்குகளும் உள்ளே வரமாட்டா… எப்போதாவது மான்கள் மட்டும் தண்ணீர் குடிக்க இந்தப் பக்கமாக வரும்… தவிரக் காட்டிற்குள்ளே பயங்கரமான பள்ளத்தாக்குகள் எல்லாம் இருக்கின்றன. எக்காரணம் கொண்டும். இந்த எல்லையைத் தாண்டிப் போகாதே… புரிந்ததா?” என்று கூற, அங்கே சிறுத்தை இருக்கிறது என்று தெரிந்தபின், அதற்குள் நுழைய அவளுக்கு என்ன பைத்தியமா.

வேகமாகச் சம்மதம் என்பது போலத் தலையை ஆட்ட, அவளைக் குனிந்து பார்த்து,

“இங்கே சற்று சிரமம்தான்… பொழுது போக்கென்று பெரிதாக எதுவும் கிடையாது… ஆனால் இதைப் போலப் பாதுகாப்பான இடத்தை என்னால் உனக்குக் கொடுக்க முடியாது. இங்கே இருந்தாயானால் வெளியே அதிகம் செல்ல வேண்டிய தேவையிருக்காது… காய் கறித்தோட்டம் முதல், பால் முட்டைகள் எல்லாம் இங்கேயே இருக்கிறது… அது மட்டுமில்லாமல் இந்தப் பயங்கரக் காட்டை மீறி யாரும் உள்ளே நுழையமாட்டார்கள்…” என்றவன்,

“அலர்… என் குடும்பத்தில் எல்லோரையும் இழந்துவிட்டேன்… இப்போது எஞ்சியிருப்பது, தாத்தா, பாட்டி… நீ… மட்டுமே… உங்கள் மூவரில் ஒருவரைத் தன்னும் இழக்கும் நிலையில் நானில்லை… நான் திரும்ப வரும் வரைக்கும் உன்னைக் காத்துக் கோள்வாயல்லவா…?” என்று மென்மையாகக் கேட்க, அலரந்திரியின் முகம் அவளையும் அறியாமல் மேலும் கீழும் ஆட, தன்னை மறந்து தன் வலது கரத்தின் விரல்களை அவளுடைய கன்னத்தில் பதித்தவன், ஏதோ மின்சாரத்தைத் தொட்ட உணர்வில் அவசரமாக இழுத்துக்கொண்டான்.

“அல்லும் பகலும் உன்னைக் காக்க வேண்டி வந்தாலும், உன்னுடன் இருந்து காப்பேன் அலர்… அதற்கு உன்னுடைய ஒத்துழைப்பும் வேண்டும்… தருவாய்தானே…?” என்றான் மீண்டும். ஏனோ அவளைத் தனியாக அங்கே விட்டுவிட்டுச் செல்ல அவன் நெஞ்சம் பிசைந்தது. பிரிய முடியா பெரும் தாக்கம் அவனைப் பாடாகப் படுத்தியது. ஆனாலும் அவனுக்கு வேறு வழியுமில்லை… போய்த்தானே ஆகவேண்டும். பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி வாகனத்தின் அருகே வந்தவன், கதவைத் திறந்தவாறு ஏதோ நினைவு வந்தவனாக அவளைத் திரும்பிப் பார்த்து,

“அலர்… தாத்தாவிற்கும் பாட்டிக்கும் ஜெயவாமன் உயிரோடு இருந்தது தெரியாது… மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஜெயவாமன் இறந்ததாகவே இருக்கட்டும்… எக்காரணம் கொண்டும், அவன் உயிரோடு இருந்ததோ, சில நாட்களுக்கு முன்புதான் இறந்தான் என்பதையோ… கூறிவிடாதே… முக்கியமாக… நீ அவனுடைய… உனக்கும் அவனுக்கும் உள்ள உறவு எதையுமே அவர்களிடம் சொல்லிவிடாதே… இப்போதுதான் ஓரளவு தங்களைத் தேற்றியிருக்கிறார்கள்… மீண்டும் ஒரு வலியைத் தாங்க அவர்களிடம் தெம்புமில்லை, சக்தியுமில்லை…” என்று மெல்லிய வலியுடன் கூற, அவன் கூறியதின் நியாயம் புரிந்தவளாகச் சம்மதத்துடன் தலையை ஆட்டியவள்,

“அப்படியானால் நான் யார் என்று கேட்டால் என்ன சொல்லட்டும்?” என்றாள் தயக்கத்துடன்.

“தாத்தாவிடம், நீ என்னிடம் வேலை செய்தாய் என்றும், அந்த அரசியல்வாதி உறவினரோடு ஏற்பட்ட பிரச்சினையில், உன்னைக் காக்க இங்கே அழைத்து வந்தேன் என்றும் சொல்லியிருக்கிறேன்… முற்று முழுதாக உண்மை இல்லை என்றாலும் அதில் பொய்யும் இல்லை… நீயும் இதையே பின் பற்று… என்ன புரிந்ததா?” என்று கேட்க, இவள் அதற்கும் ஆம் என்று தலையாட்டினாள்.

“நன்றி அலரந்திரி… நான் புறப்படுகிறேன்… உன் உடம்பைக் கவனித்துக்கொள்… அதிகம் அலட்டிக் கொள்ளாதே… எப்போதும், உன் கூட நானும் இருப்பேன் என்பதை மறந்துவிடாதே… அப்புறம்… இங்கே அதிகம் குளிரும்… அதனால் வெளியே போகும்போது தடித்த ஆடைகளை எடுத்துச் செல்…” என்றவன், சற்றுத் தயங்கி,

“நான் இங்கே இருக்க முடியாமல்தான் ஊருக்குப் போகிறேன். எப்படியும் உன்னை நீ காத்துக் கொள்வாய் என்கிற நம்பிக்கையில் விட்டுவிட்டுப் போகிறேன்…” என்றவனுக்குக் குரல் அடைத்ததோ. எதையோ விழுங்க, அதற்காகவா ஓடுகிறாய்? அவளைப் பார்த்துக்கொண்டிருந்தால், கட்டுப்பாட்டை இழந்து உன் காதலைச் சொல்லிவிடுவாய் என்றுதானே ஓடுகிறாய்? என்று இடித்துரைக்க, அவசரமாக அந்த நினைவுகளை ஓரம்கட்டியவன்,

“பி கெயர்ஃபுள்… எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை அழை… நானும் அழைத்துப் பேசுகிறேன்… சிலவேளை சிக்னல் பிரச்சனை கொடுக்கும்… அந்த நேரம் லான்ட் லைனில் எனக்கு எடு… அத்தோடு… நான் அழைத்தால் உடனே கைப்பேசியை எடு… ஒரு விநாடி நீ எடுக்கவில்லை என்றாலும் என்னால் அங்கே நிம்மதியாக இருக்க முடியாது… புரிகிறது அல்லவா?” என்று கேட்க, அதற்கும் பதில் கூறாது தலையை ஆட்டினாள் அலரந்திரி.

“சரி… நான் கிளம்புகிறேன்…” என்றுவிட்டு மனமில்லாதவனாகவே தன் வாகனத்தில் ஏறி அமர்ந்து இயக்கியவன், அவளை ஏறிட்டுப்பார்த்து,

“என்னை நீ ஏகன் என்று அழைத்தால், இன்னும் சந்தோஷப்படுவேன்…” என்றவன், கியரை மாற்ற அடுத்த கணம் வாகனம் பறந்து சென்றதும். இவளோ வாகனம் சென்ற மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

What’s your Reaction?
+1
21
+1
1
+1
7
+1
0
+1
1
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!