(28)
அன்று அவனைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டுத் தன் கணவனிடம் கேட்டிருக்க, அவனாகவே அவர்களைத் தேடி வருவான் என்று மீனாட்சிப்பாட்டி கனவிலும் நினைத்திருக்கவில்லை.
“கண்ணா… உனக்கு ஆயுசு நூறு தெரியுமா… இப்போது… கொஞ்சத்திற்கு முன்னம்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்… கண் முன்னாலேயே வந்துவிட்டாய்…” என்று பேரானந்தத்துடன் அவனுடைய நெற்றி கன்னம் என்று முத்தமிட்ட பாட்டி மீண்டும் தன்னோடு அனைத்துக் கொள்ள, அவர் உயரத்திற்கு ஏற்பக் குனிந்து இறுக அணைத்துக்கொண்ட ஏகவாமன் அவர் முதுகைத் தட்டியும் வருடியும் கொடுத்து ஆசுவாசப் படுத்த,
“ஏனப்பா… இந்தக் கிழவர்களைப் பார்க்க உனக்கு இப்போதுதான் நேரம் கிடைத்ததா?” என்று அருகே கேட்ட தாத்தாவின் குரலில் புன்னகை மாறாமலே நிமிர்ந்து பார்த்தான் ஏகவாமன். அங்கே விழிகள் கலங்க நின்றிருந்த தாத்தாவைக் கண்டு,
“ஓ… தாத்தா…” என்றவாறு பாட்டியை விடுவித்து அவரைச் சென்று இறுக அணைத்து விடுவித்தவன்
“ரிலாக்ஸ்… தாத்தா… என் நிலைமை தெரியும்தானே… ம்…?” என்றவன் பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு விலக, அவன் கன்னத்தில் தன் தளர்ந்த கரத்தைப் பதித்த மீனாட்சிப் பாட்டி,
“கண்ணா… எப்படிடா இருக்கிறாய்… நன்றாக இளைத்துவிட்டாயே… நேரத்துக்கு நேரம் சாப்பிடுவதில்லையா? அதற்குத்தான் சொன்னேன்… காலா காலத்தில் திருமணத்தை முடித்துக்கொள் என்று… எங்கே கேட்கிறாய்…?” என்று குறைபட, அவர் கரங்களைத் தன் பெரிய கரங்களால் பற்றி உதட்டில் பொருத்தி விடுவித்தவன், மெல்லியதாகச் சிரித்து,
“அது சரி… பாசமான கண்களுக்கு அப்படித்தான் இருக்கும் பாட்டி… சொல்லப்போனால் ஐந்து கிலோ கூடியிருக்கிறேன் தெரியுமா” என்று நகைத்த ஏகவாமன் மெதுவாக அவரிடமிருந்து விலக, மேகம் விலகியதும் பளிச்சென்று தெரியும் வான்மதி போல வாசலில் நின்றிருந்தவளின் மீது அந்தப் பாட்டியின் விழிகள் சென்று நிலைத்தன.
அவளைக் கண்டதுமே முகம் மலர, மலர்ச்சியில் உதடுகள் விரிய ஏகவாமனை எதிர்பார்ப்புடன் பார்த்து,
“யாருப்பா அது… உன்னுடைய மனைவியா? நம்மிடம் சொல்லாமலே மணந்து கொண்டாயா…?” என்றவரின் குரலில் குதூகலமும், குறையும் கலந்து தெறிக்க, அதைக் கேட்ட அலரந்திரி, ஏகவாமன் துப்பாக்கியை நீட்டியபோது ஏற்பட்ட அதிர்வைவிடப் பலமடங்கு அதிகமாக அதிர்ந்துபோய் நின்றாள்.
ஒருவித உணர்வுடன் திரும்பி அலரந்திரியைப் பார்த்த ஏகவாமன், அவள் முகத்தில் தெரிந்த ஒவ்வாமையைக் கண்டு, மெல்லிய புன்னகையுடன், மறுப்பாகத் தலையை ஆட்டி,
“நோ… நோ… நோ… நீங்கள் நினைப்பதுபோல அப்படி ஒன்றுமில்லை… உங்கள் இஷ்டத்திற்குத் தப்புத் தப்பாகக் கற்பனை செய்யாதீர்கள்…” என்று கூறியதும், பாட்டியின் முகம் வாடிப்போனது. கூடவே மெல்லிய வலியும் அதில் தெரிய, அவரை நெருங்கி, அவர் முகத்தைத் தன் கரங்களால் பற்றித் தூக்கி,
“ஷ்… என்ன பாட்டி இது… இவளை உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்றுதான் அழைத்துவந்தேன். மற்றும் படி நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் இல்லை… தவிர எனது திருமணம் உங்களுக்குத் தெரியாமல் நடக்குமா சொல்லுங்கள்… எனக்கிருக்கும் ஒரே உறவு நீங்கள்தானே பாட்டி…” என்று கூறியபோது அவனுடைய குரல் கனத்து ஒலித்தது.
அதைப் புரிந்துகொண்டவராகத் தன் கன்னத்தில் பதித்த அவனுடைய அழுத்தமான கரத்தைப் பற்றிக்கொண்ட பாட்டி,
“அப்போ… எப்போதடா நமக்கு நல்ல செய்தி கூறப்போகிறாய்?” என்றார் வேண்டுதலாய். மெல்லிய வலியுடன் சிரித்த ஏகவாமன்,
“தெரியவில்லையே பாட்டி… எனக்குப் பிடித்தவளாக எவளைக் காண்கிறேனோ, அவள் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் அவளைத்தான் மணப்பேன்… ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா…” என்று மென்மையாக் கூறியவனின் விழிகள், அவனையும் மீறி ஒரு கணம் தன் முன்னால் நின்றிருந்தவளின் மீது நிலைத்துப் பின் பாட்டியிடம் செல்ல, ஏகவாமனை நெருங்கி, அவன் தோளில் ஒரு அடியைப் போட்ட தாத்தா,
“டேய்… ஒரு வேளை உனக்குப் பிடித்த அந்த அவள் திருமணம் முடித்திருந்தால்…?” என்று கிண்டலுடன் வினவிய தாத்தாவின் பார்வை ஒரு கணம் அலரந்திரியிடம் சென்று பேரனிடம் நிலைக்க, சற்று அமைதி காத்தவன், நிமிர்ந்து,
“ஒரு வேளை எனக்குப் பிடித்தவள் மணமானவளாக இருந்தால், இந்த ஜென்மத்தில் எனக்குத் திருமணம் கிடையாது தாத்தா…” என்று எல்லையில்லா வலியுடன் கூறிவிட்டு, ஒரு வித சங்கடத்துடன், தன் வலியை மறைத்தவனாக, அவரிடமிருந்து விலகி நிற்க, அவனைக் கூர்மையாகப் பார்த்த தாத்தா, எதையோ தன் மனதிற்குள் எண்ணி நகைத்துக் கொண்டர். பாட்டியோ,
“போடா… வடுவா… எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்… ஏதோ நாங்கள் கண் மூடுவதற்குள்ளாக உன்னுடைய திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்… கடவுள் கருணையிருந்தால் உனக்குப் பிடித்தவளை உன் கண்முன்னால் கொண்டு வரட்டும்…” என்று பெருமூச்சுடன் கூற,
“ஓ… ஸ்டாப் திஸ் டாபிக் பாட்டி…” என்று அழுத்தமாகக் கூறியவன், பின் வியந்துபோய் நின்றிருந்த அலரந்திரியைப் பார்த்து,
“இவர்கள் என் தாத்தா நற்குணசேகரம்… இது பாட்டி… மீனாட்சி…” என்றதும்
“தெரியுமே… உங்கள் வீட்டிலிருந்த படத்தில் இவர்களைப் பார்த்தேன்…” என்று சற்றுத் தயக்கத்துடன் கூறியவள் கையெடுத்துக் கும்பிட, அவளைக் கண்ட பாட்டிக்கு அந்தக் கணமே அவளைப் பிடித்துப் போனது. அவளை அன்போடு நெருங்கிய மீனாட்சிப் பாட்டியின் பார்வை, ஒரு வித ஆர்வத்துடன் அவள் அணிந்திருந்த சேலையில் படர்ந்தது.
‘அது கமலாதேவியின் சேலை அல்லவா அது… எப்போதும் தாயின் நினைவாகத் தன் கூடவே வைத்திருப்பவன் ஆயிற்றே… எங்கே பயணப்பட்டாலும் அந்தச் சேலையையும், தந்தையின் அங்கவஸ்திரத்தையும் எடுத்துச் செல்வது அவன் வழக்கம்… அந்தச் சேலையையே அணிவதற்காகக் கொடுத்திருக்கிறான் என்றால்… அந்தப் பெண், அவனுக்கு எத்தனை முக்கியமானவளாக இருக்கவேண்டும்…” குறுகுறுப்புடன் தன் பேரனைப் பார்த்தார் பாட்டி. அவர் விழிகள் சொன்ன செய்தியைக் கண்டு கொண்ட பேரன்,
“ஸ்டாப் இட் பாட்டி… நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை…” என்ற கோபம் போலக் கூறினாலும், அவன் குரலிலிருந்த ஒருவித தவிப்பைப் புரிந்துகொண்ட பாட்டிக்கு உள்ளம் குதூகலத்தில் துடித்தது. அவசரமாக அந்தப் பெண்ணைத் தலை முதல் கால்வரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு,
“மிகவும் அழகாக இருக்கிறாய் கண்ணு…” என்று மென்மையாகக் கூற, ஏனோ சற்றை முகம் சிவந்துபோனாள் அலரந்திரி. தன்னையும் மறந்து ஏகவாமனைப் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான், ஒரு வித தேடலுடன்.
சங்கடத்துடன் உதடுகளைக் கடிக்க அவசரமாக அவள் முகத்திலிருந்து தன் பார்வையை விலக்கியவன்,
தன் வயிற்றை வருடிக் கெடுத்து அதன் மீது தாளம் போட்டவாறு,
“பாட்டி என்ன இருக்கிறது சாப்பிட… பசிக்கிறது…” என்றதும் உருகிப்போனார் பாட்டி.
“என் கண்ணே… இன்னும் சாப்பிடாமலா இருக்கிறாய்… ஐந்து நிமிடங்கள்… ஐந்தே நிமிடங்கள் தா… வாய்க்கு ருசியாகச் சமைத்து போடுகிறேன்…” என்றவர் பத்துவயது குறைந்தவராக, சமையலறை நோக்கி ஓடினார்.
தன் மனைவியின் ஓட்டத்தைக் கண்டு நகைத்த தாத்தா, திரும்பி வாசலிலேயே நின்றிருந்த அலரந்திரியை ஏறிட்டார்.
“என்னம்மா அங்கேயே இருக்கிறாய்… நீ உள்ளே போம்மா… பாட்டிக்குக் கொஞ்சம் உதவி செய்… நாங்களும் பின்னால் வருகிறோம்…” என்று கூற, அவருடைய கட்டளைக்குப் பணிந்தவளாக உள்ளே சென்றாள் அலரந்திரி.
அவள் சென்று மறையும் வரை அமைதியாக இருந்த தாத்தா, இப்போது பேரனைப் பார்த்து,
“சரிப்பா… இப்போது சொல்… என்ன பிரச்சனை…?” என்று நேரடியாகக் கேட்க ஏகவாமன் சற்று அமைதி காத்தான். அவர் பிரச்சனை என்று அலரந்திரியைத்தான் குறிப்பிடுகிறார் என்பதைப் புரியாத அளவுக்கு ஒன்றும் அவன் முட்டாள் அல்லவே.
“ஏன் தாத்தா… பிரச்சனை என்றால்தான் இவளை இங்கே அழைத்து வரவேண்டுமா?” என்று மெல்லிய கிண்டலுடன் கேட்க, நகைத்த நற்குனசேகரம்,
“நிச்சயமாக… உன் அன்னையின் சேலையையே அணியக் கொடுத்து, அழைத்து வந்திருக்கிறாய் என்றால்… அது சற்று யோசிக்க வேண்டிய ஒன்றுதான்… சொல்லு… யார் இவள்…” என்று அவர் அழுத்தமாகக் கேட்க, ஒரு கணம் தடுமாறியவனாக நின்றான் ஏகவாமன்.
அவரிடம் நடந்த முழுக் கதையையும் கூற முடியாதே… அதனால் சற்று அமைதி காத்தவன், பின் நிமிர்ந்து,
“இவள் அலரந்திரி… என்னுடைய ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்கிறாள்…” என்றதும்,
“ரியலி… இருக்கிற வியாபாரத்தைப் பார்க்கவே உனக்கு நேரமில்லை… இதில் ஆடைத் தொழிற்சாலை எதற்கு?” என்று தாத்தா கூர்மையாக வினவ, அவருடைய விழிகளைப் பார்க்காது தவிர்த்தவன்,
“அது… அவர்களால்… சரியாக அந்தத் தொழிற்சாலையை நடத்த முடியவில்லையாம் தாத்தா… கொஞ்சம் மலிவாகவும் கிடைத்தது. எதற்கு விடுவான் என்று…” என அவன் முடிக்காமல் தயங்க.
“சரி… அப்புறம்…” என்ற தாத்தாவின் குரலில் என்ன இருந்தது? குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்க்க, அவனுக்குத் தாத்தன் அல்லவா அவர்… உணர்ச்சி துடைத்த முகத்துடன் தன் பேரனைப் பார்க்க,
“அவளுக்குத் தைக்கும்போது சின்ன விபத்து நடந்தது… அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு விசாரிக்கலாம் என்று போனேன்…’ என்று அவன் கூற,
“ஓ… நீ விசாரிக்க்ப போனாய்… சரி சரி… அப்புறம்…”
“அதன் பிறகு யாரோ இளைஞர்கள் இவளோடு தப்பாக நடக்க முயன்றிருக்கிறார்கள்… இவள் பொறுக்காமல் அடித்துவிட்டாள். அடி வாங்கியவன் நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினன்… சும்மா இருப்பார்களா… அவளைக் கொலை செய்யவும் முயன்றார்கள்… அவளுடைய குடிசையைக் கூட எரித்து விட்டார்கள் தாத்தா…” என்று கூற,
“ஆஹா… அப்புறம்…” என்று பிசிர் தட்டிய அவர் குரலை உணர்ந்து கொண்டவன் சடார் என்று தாத்தாவின் முகத்தைப் பார்த்தான். ஆனால் அவரோ, முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு பேரனைப் பார்க்க, ஒரு கணம் தான் சொல்வதை அவர் நம்புகிறாரா இல்லையா என்கிற சந்தேகமே வந்தது. பின் சற்று சமாளித்தவனாக,
“பார்க்க வேறு பாவமாக இருந்ததா… அவளுக்குத் தன்னைக் காக்கும் திறன் இருக்கிறதா என்று கூடப் புரியவில்லை… அதுதான் அவளை இங்கே தற்காலிகமாக அழைத்து வந்தேன்… அங்கே எல்லாச் சிக்கலும் தீர்ந்த பிறகு, அவள் இடத்திற்கே சென்றுவிடுவாள்… இதைவிடப் பாதுகாப்பான இடம் அவளுக்குக் கிடைக்குமா தெரியவில்லை…” என்று கூற,
“நீ சொல்வது சரிதான்… ஆனால் இவள் இங்கே இருப்பது அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவர் ஆட்களுக்கும் தெரிந்துவிட்டால்” என்று கேட்க, மறுப்பாகத் தலையை ஆட்டிய ஏகவாமன்,
“தெரிய வாய்ப்பிருக்காது தாத்தா… அப்படியே தெரிந்தாலும், இந்தக் கோட்டையைச் சுலபத்தில் நெருங்க முடியாது. நன்கு பழக்கப்பட்டவர்களாலேயே இந்தக் காட்டைத் தாண்டி வர முடியாது. வரும் பாதையோரத்தில் நம்முடைய ஆட்களைத்தான் குடி வைத்திருக்கிறேன். அவர்களைத் தாண்டி நெருங்குவது அத்தனை சுலபமல்ல… நாம் நமது எல்லையை மீறாமல் இருக்கும்வரைக்கும் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை” என்று உறுதியாகக்கூற,
“ஆனாலும்… இளம் பெண்… இங்கே எந்தப் பொழுது போக்குமில்லாமல்… அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா வாமன்… அவளுடைய நிலையையும் நாம் யோசிக்க வேண்டுமல்லவா…” என்று கேட்ட நற்குணசேகரனிடம்,
“வேறு வழியில்லை தாத்தா… இதைவிட்டால் வேறு பாதுகாப்பு அவளுக்கு இருக்கப் போவதில்லை… எனக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் தாத்தா… அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது… வாழ்க்கையில் நிறைய அடிபட்டுவிட்டாள்… இனி வரும் காலங்களாவது சந்தோஷமாக இருக்கட்டும்…” என்று பெரும் வேதனையுடன் கூற முதன் முறையாக ஒரு பெண்ணுக்காக… அவளுடைய பாதுகாப்பிற்காக அச்சப்படும் தன் பேரனையே குறுகுறு என்று பார்த்தார் பெரியவர்.
பின் தன் பேரனை நெருங்கி, அவனுடைய தோள்களில் கரங்களைப் பதித்து,
“நீ சொல்வதால் நம்புகிறேன் வாமன்… உன் அன்னையின் சேலையையே அவளுக்குக் கொடுத்திருக்கிறாய் என்றால்… அவள் எத்தனை முக்கியமானவள் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்… தவிர… எதையும் யோசிக்காதே… எல்லாம் நன்மையாகவே நடக்கும்” என்று முடிக்கவில்லை,
“பெரியவரே… சாப்பிட வருகிறீர்களா?” என்கிற மனைவியின் குரல் கேட்க இப்போது அவர் முகத்தில் அழுத்தம் மறைந்து போனது. தன் பேரனைப் பார்த்தவர்,
“உன் பாட்டி ஆரம்பித்துவிட்டாள்… இப்போது போகவில்லை என்றால், நீயும் காலி… நானும் காலி…” என்றவாறு சமையலறை நோக்கி ஓடிய தாத்தாவைப் புன்னகையுடனேயே பின்தொடர்ந்தான் ஏகவாமன்.
(29)
அங்கே அலரந்திரியும் மீனாட்சிப் பாட்டியுடன் சேர்ந்து சாப்பாட்டு மேசையில் உணவை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.
நீண்ட கொசுவத்தை இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காகச் சுற்றி இடையில் செருகியிருந்ததால், வெண்மையான இடை பளிச் என்று தெரிந்தது. அதுவும் அந்தக் குறுகிய இடை… எந்த ஆணையும் பித்தம் கொள்ளச் செய்யும்… தவமிருக்கும் முனிவரையும் மயங்கச் செய்யும்… இந்த நிலையில் ஏகவாமன் எந்த மூலைக்கு? தன்னையும் மறந்து குறுகி விழுந்து எழுந்த இடையினை விழிகள் தைக்கப் பார்த்தவனின் உடலில் அவனையும் மீறிய சிலிர்ப்பு எழுந்தது. தாம் தவறு செய்கிறோம் என்பது புரிய அவசரமாக விழிகளை உயர்த்தினால், துடைத்து வைத்த குத்துவிளக்காக இருந்தவளின் எழில் முகம்தான் அவன் மனதில் பதிந்தது.
நகையில்லாத எந்தப் பெண்ணும் அழகாக இருப்பாளா தெரியாது. ஆனால் இவள் அழகாக இருந்தாள்… ரசனையாய் அவளை ருசிக்க முயலும்போது, ஜெயவாமன் வந்து அண்ணா…! என்று அழைக்கப் பதறிப்போனான் ஏகவாமன். என்ன காரியம் செய்கிறான்… நெஞ்சம் தவித்து விம்மியது.
புருவம் சுருங்கச் சாப்பாட்டு மேசையில் அமராமல் எங்கோ வெறித்துக்கொண்டிருந்த பேரனிடம் வந்த பாட்டி,
“சாரிப்பா… இப்போதுதான் சமைக்கவே ஆரம்பித்தேன்… அதற்குள் வந்துவிட்டாயா… சுலபமாகச் செய்யக்கூடிய உணவைத்தான் இப்போது சமைத்திருக்கிறேன் சாப்பிடு…” என்று கூற அவனோ வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்னப்பா… அப்படி எதை வெறித்துப்பார்க்கிறாய்?” என்றவாறு அவனுடைய தோளைப் பற்ற, சுயநினைவுக்கு வந்தவனாக,
“நத்திங்…” என்று கூறியவாறு அவசரமாகத் தட்டைப் பார்க்க, மெல்லிய வெண்ணிறக் கரம் சாதத்தைப் பரிமாறியது.
மீண்டும் உள்ளம் தறிகெட்டது. அந்தக் கரங்களுக்குள் தன் கரங்களைக் கோர்த்துக் கண்ணுக்கெட்டாத தொலைவுவரை நடக்கவேண்டும் என்று நெஞ்சம் ஏங்கியது… ஆனால் அது நடக்கும் காரியமா? எண்ணும் போதே பெரும் வலி அவனிடத்தே. அதற்கு மேல் பசி மரத்துப் போக, சாதத்தைப் பிசைந்துகொண்டிருந்தவனைப் பாட்டி வருத்தத்துடன் பார்க்க, அதைக் கண்ட தாத்தா,
“வாமனா… உனக்கு என்ன பிரச்சனை…? அதுதான் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டோமே… இன்னும் என்ன. உன் பாட்டியைப் பார், நீ ருசித்துச் சாப்பிடுவாய்க் காண ஆவலாகக் காத்திருக்கிறாள்… அதற்காகவாவது மதிப்புக்கொடு” என்று கடிய,
“சாரி தாத்தா…” என்று சமாளித்தவன், எப்படியோ உண்டு முடித்துவிட்டு எழுந்து,
“கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுப் புறப்படவேண்டும் தாத்தா…” என்றான்.
“என்னப்பா… அதற்குள் கிளம்பிவிட்டாய்…? ஒரு நாள் தங்கிவிட்டுப் போகலாமே? நாலரை மணி நேர ஓட்டம்…! மிகவும் களைத்திருக்கிறாய்…” என்று குறைபட்ட தன் பாட்டியை நகைப்புடன் பார்த்தவன்,
“பாட்டி… நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் எதிரிக்குச் சொர்க்கவாசல் திறந்ததுபோல இருக்கும்…?” என்றவன்,
“ஐ நீட் பாத்…” என்றவன் சிரமப்பட்டு அலரந்திரி மீது பாய முயன்ற மனதையும் விழிகளையும் ஒரு கட்டிற்குள் கொண்டுவந்தவனாகத் தன் அறை நோக்கி ஓடினான் ஏகவாமன். தாத்தாவும் எழுந்து கைகழுவிவிட்டு வெளியே செல்ல, தன் பேரன் இப்படிச் சிரமப்படுகிறானே என்று வருந்திய பாட்டியோ,
“ப்ச்… இப்படி ஓடி என்னத்தைச் சாதிக்கப்போகிறான் என்று தெரியவில்லை…” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, நிமிர்ந்து அலரந்திரியைப் பார்த்தார்.
“வாம்மா… சாப்பிடலாம்… சாப்பிட்டபின் உன் அறையைக் காட்டுகிறேன்…” என்று பணிக்க, அடுத்து இரு பெண்களும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.
சாப்பிடும் போதே, அலரந்திரியிடம் அவளைப் பற்றி விசாரிக்க வாய் எடுத்த பாட்டி, சோர்ந்த அவள் முகத்தைக் கண்டு இரங்கியவராக, வேறு கதை பேசத் தொடங்கினார். பத்து நிமிடம்தான் இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர். ஆனால் ஏகவாமனைப் பற்றிப் பத்தாயிரம் செய்திகளைக் கூறிவிட்டிருந்தார் பாட்டி. அலரந்திரிக்கு சாப்பிட மட்டும்தான் வாய் திறக்கவேண்டியிருந்தது. ஆனாலும் அவள் கேட்பது ஏகவாமன் பற்றிய செய்திகள் அல்லவா, அதனால் காதுகள் படு கூர்மையாக அவர் சொல்வதை உள்வாங்கத் தொடங்கின.
ஒரு கட்டத்தில் வெற்றுக் கோப்பையுடன் அவள் அமர்ந்திருப்பதைக் கண்ட பாட்டி,
“ப்ச்… நான் ஒரு மடச்சி… நீ இங்கேதானே இருக்கப்போகிறாய்… அதை மறந்து எல்லாவற்றையும் மொத்தமாய்க் கொட்ட நினைக்கிறேன்… நீ எழுந்திரும்மா… கைகழுவிவிட்டு வா, உன்னுடைய அறையைக் காட்டுகிறேன்…” என்று விட்டுத் தானும் உண்டு முடித்து எழுந்தார்.
பாத்திரங்களைக் கழுவி அந்த அந்த இடத்தில் வைத்துவிட்டு, அலரந்திரியை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்றார்.
“இதுதான் உன்னுடைய அறை…” என்று கூற, அந்த அறையைப் பார்த்தவள் வாய் பிளந்தாள்.
ஏதோ படங்களில் வரும் இளவரசிகளின் அறைபோலக் காட்சியளித்தது அந்த அறை. இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்து, ஏதோ சொர்க்கபுரிக்குள் தவறி நுழைந்த உணர்வு. அந்த அறையின் ஒவ்வொரு இடத்திலும் ரசனை மிதமிஞ்சித் தெரிய, ஒரு வித அச்சமே தோன்றியது. நாய்க்கு முழுத் தேங்காய் ஒட்டுமா? வெறும் குடிசையிலிருந்துவிட்டு, இந்த ராஜ வாழ்க்கை வாழும் அறை அவளுக்கு ஒட்டுமா? தயக்கத்துடன் பாட்டியை ஏறிட்டவள்,
“பாட்டி…. இது… இந்த அறை… எனக்கு அதீதம் பாட்டி… இதைவிடச் சின்ன அறைகள் கிடையாதா?” என்று கேட்க, மெல்லியதாகச் சிரித்த பாட்டி,
“இங்கே மொத்தம் எட்டு அறைகள் இருக்கின்றன கண்ணம்மா… எல்லா அறைகளும் இதே அளவித்தான் இருக்கும். இந்த அறை சௌந்தர்யாவுடையது. அவளுடைய இரசனைக்கு ஏற்ப அலங்கரித்தோம்…” என்றவரின் கண்கள் கலங்கப் பதறியவளாகப் பாட்டியை நெருங்கிய அலரந்திரி,
“ஓ… பாட்டி… இதற்கு நான் எப்படி ஆறுதல் சொல்வது…” என்றாள் பெரும் கலக்கத்துடன். உடனே சிரித்த பாட்டி,
“ப்ச்…. அதை விடும்மா… நடந்து முடிந்ததை எண்ணி வருந்துவதில் என்ன பயன் இருக்கிறது…? இப்படிக் கலங்கினாலே தாத்தாவுக்குக் கோவம் வரும்…. என் வலியை மறைத்து நானும், அவர் வலியை மறைத்து அவருமாக எதோ நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறோம்… நமக்குக் கிடைத்த பிடிமானம் வாமன் மட்டும்தான் தங்கம்… அவனுடைய வாழ்வும் செழித்துவிட்டால்… அவனும் குழந்தை குட்டி என்று வாழ்ந்துவிட்டால் போதும்… அதைத்தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்… என்று தன்னை மறந்து புலம்பியவர், பின் தன்னைத் தேற்றியவராக,
“ப்ச்… எதோ புலம்பிக்கொண்டே இருக்கிறேன்… வயது போகிறது அல்லவா…?” என்று சிரித்துவிட்டு, அங்கிருந்த ஒரு கதவைச் சுட்டி காட்டி,
“அதோ அதுதான் குளியலறை… அந்த அலமாரியில் என் பேத்தியின் ஆடைகள் அப்படியே இருக்கின்றன… நீ வேறு ஏதும் எடுத்து வந்தது போலத் தெரியவில்லை… அதனால் அதையே எடுத்து அணிந்து கொள்… என் மனதும் அவளைப் பார்ப்பது போலக் கொஞ்சம் சாந்தப் படும்…” என்று மென்மையாகக் கூறியவர்,
“நீ வந்தது எத்தனை பெரிய மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கிறது தெரியுமாமா… தனிமையில் தவித்த எங்களுக்குக் கிடைத்த சொர்க்கம் நீ… பயப்படாமல் இதை உன் வீடாகவே நினைத்துக்கொள்… இங்கே எல்லாம் ஒரே தளத்தில்தான் இருக்கிறது…. மேலே மொட்டை மாடி மட்டும்தான். அதிகாலையில் அங்கே நின்று தூரத்தைப் பார்த்தால் மிக அழகாக இருக்கும்… அப்புறம் வலப்புறம் முதலாவதாக இருப்பது எங்கள் அறை… எப்போது என்ன வேண்டுமானாலும் தயங்காமல் வந்து கதவைத் தட்டு… இடப்புறம் இருப்பது வாமனுடைய அறை…” என்றவர், “கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா… நான்கு மணி நேரக் களைப்பு போய் விடும்…” என்று விட்டு வெளியேறத் தன்னை மறந்து அந்த அறையையே சுற்றிப் பார்த்தாள். அதுவும் படுக்கை இளவரசிகளுக்குரிய படுக்கைபோல நான்கு தூண்களுக்குள் வலை போடப்பட்டுப் பார்க்கவே அழகாக இருந்தது.
தன்னை மறந்து படுக்கையில் அமர, அதன் மென்மையை உணர விடாது வயிற்றில் எதுவோ உறுத்தியது. தொட்டுப் பார்த்தால் துப்பாக்கி.
பதறி அடித்து எழுந்தவள், கையை விட்டு வெளியே எடுத்தாள். அதை அவன் செருகிய விதமும் நினைவுக்கு வர, அவளையும் மீறி நெஞ்சம் படபடத்தது. கூடவே அவனை அடிக்கக் கரத்தை ஓங்கியபோது அவன் கொண்ட கோபத்தை எண்ணியதும், உள்ளம் உதறவும் செய்தது.
பக்கத்து அறைதானே ஏகவாமனுடையது… இதை அவனிடமே கொடுத்துவிட்டால் என்ன… அவளுக்கு இது தேவைப்படாதே… மடியில் கட்டிக்கொண்டு நடுங்குவதை விட, அவனிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.
உடனே எழுந்தவள், துப்பாக்கியைச் சேலைத் தலைப்பால் மறைத்துக்கொண்டு கதவின் அருகே வந்தவள், யாராவது நிற்கிறார்களா என்று இரண்டு பக்கமும் எட்டிப் பார்த்தாள். யாரையும் காணவில்லை.
உடனே ஏகவாமனின் அறைக்கு முன்னால் வந்து நின்று கதவைத் தட்ட, மறு கணம் கதவு திறந்து கொண்டது. அவனிடம் துப்பாக்கியைப் பற்றிக் கூறியவாறு தலையை நிமிர்த்தியவள், அவன் நின்ற கோலத்தில் விதிர் விதிர்த்துப் போனாள்.
இப்படி இடையில் வெறும் துவாயுடன் தலையிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட, மேனியை நன்கு துடைக்காத நிலையில் நின்றிருப்பான் என்று அலரந்திரி கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதுவும் அழுந்த வாரிய முடியுடன் பார்ப்பதற்கே வில்லன்போல இருந்தவனின் முடியிலிருந்து தண்ணீர் வேறு கொட்டிக்கொண்டிருக்க, அந்தத் தண்ணீர் துளிகளுடன் சேர்ந்து அவளுடைய மனம் துளித் துளியாக விழாத தொடங்கியது. முதன் முறையாக இப்படித் திடகாத்திரமான ஆண்மகனை அவள் பார்க்கிறாள்.
அகன்ற தோள்கள்… இருபக்கமும் கர்ஜிக்கும் சிங்கங்கள் படுத்திருப்பது போன்ற புஜத் திரட்சிகள்… அடர்ந்த முடிகளுக்குள் இறுகிப்போயிருந்த மார்பு… ஒட்டிய வயிறு… அதையும் மீறித் தெரிந்த சிக்ஸ்பாக் வயிறு… அகன்ற தோளிலிருந்து குறுகிச் சென்ற இடை ‘வி’ என்கிற வடிவத்தைக் கொடுக்க, அதற்குக் கீழே துவாய் மறைத்திருந்தாலும், வலுவான இரு கால்களும், அவனுடைய பலத்தையும், அவன் உடலின் திடத்தையும் அவளுக்கு அறிவுறுத்தின. அதுவும் அவனுடைய கரங்கள்… கரங்களா அவை… அவனுடைய மெல்லிய அடியே பெரும் இடியென விழும் என்று சொல்லாமல் சொல்லும் தசைகள் திரண்ட ஆண்மை நிறைந்த கரங்கள்… இவை அத்தனையும் அவள் மனதில் பதிந்துபோக, விழிகளை எப்படி விலக்குவது என்பது கூட மறந்தவளாய் கண்சிமிட்ட மறந்து விறைத்துப்போய் நின்றிருந்தாள் அலரந்திரி.
இப்படி உடம்பு இவனுக்கு மட்டும்தான் இருக்கிறதா? இல்லை எல்லா ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்குமா… அவளையும் மீறி ஜெயவர்மனுடன் அவனை ஒப்பிட்டுப்பார்த்தாள் அலரந்திரி. மெலிந்த கருத்த ஒடுங்கிய தேகம்தான் நினைவுக்கு வந்தது.
ஏகவாமனும் அவளை அங்கே எதிர்பார்க்கவில்லைதான். புருவங்கள் சுருங்க,
“என்னாச்சு… ஏதாவது வேண்டுமா?” என்று மென்மையாகக் கேட்க, அதுவரை ஒரு வித அவஸ்தையிலிருந்தவள் அவசரமாகத் தன் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். இப்போது விழிகள் கச்சிதமாக அவன் முகத்தில் நிலைத்தன.
கடவுளே… இந்த விழிகளைப் பார்த்து அவள் எப்படிப் பேசுவாள்… விழிகளா அவை? குத்தீட்டிகளாக, அவளைக் குடைந்து வெளியேற முயல்கின்றனவே. அவற்றின் வீச்சில் என்ன சொல்ல வந்தோம் என்பதைக் கூட மறந்து போகிறதே? தடுமாற்றத்துடன் நின்றவள், பின் எப்படியோ சுயம் பெற்றவளாய், அவசரமாக அவன் மேலிருந்து பார்வையை விலக்கித் தரையைப் பார்த்தவாறு, முந்தானையில் மறைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து அவனை நோக்கி நீட்டி,
“து… துப்பாக்கி…” என்றாள் தடுமாற்றமாய்.
உடனே அவள் கரத்திலிருந்த துப்பாக்கியை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்தவன்,
“எனிதிங் எல்ஸ்…” என்றான். மீண்டும் அவனை நோக்கிப் பாய முயன்ற விழிகளைச் சிரமப்பட்டுக் கட்டுக்குள் கொண்டு வந்தவள்,
“இ… இல்லை…” என்று விட்டுத் திரும்ப,
“ஒரு நிமிஷம்…” என்றான். திரும்பாமலே அவள் நிற்க,
உள்ளே சென்றவன், திரும்பி வந்தபோது, மேலே ஒரு டீ ஷேர்ட் அணிந்திருந்தான். கூடவே கரத்தில் ஒரு கைபேசியும் இருந்தது. இன்னும் திரும்பி நின்றிருந்தவளைப் பார்த்து,
“அலர்…” என்றான். இவளோ திரும்பாமல் அப்படியே நிற்க,
“பயப்படாமல் திரும்பலாம்…” என்றான் மெல்லிய புன்னகையுடன். சந்தேகத்துடன் சற்றுத் திரும்பிக் கடைக்கண்ணால் பார்த்தவள், அவன் மேலே டீ ஷேர்ட் போட்டிருப்பது தெரிய நிம்மதியுடன் திரும்பி நிற்க,
தன் கரத்திலிருந்த கைபேசியை அவளிடம் நீட்டி,
“இது என்னுடைய பேர்சனல் செல். என்னுடைய மற்றைய தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்திருக்கிறேன்… வைத்துக்கொள். தேவைப்பட்டால் என்னை அழைக்க வசதியாக இருக்கும்…” என்றான்.
இவளோ அதை வாங்க மறுப்பவளாகத் தலையை அங்கும் இங்கும் ஆட்டி,
“இ… இதெல்லாம் எதற்கு… வேண்டாம்…” என்றாள்.
“மறுக்காதே… இந்த இடம் நீ நினைப்பது போலச் சாதாரணமான இடமில்லை. காடுகள் நிறைந்த இடம்… தொலைந்தாலும் கண்டு பிடிக்க முடியாது… வாங்கிக் கொள்…” என்று நீட்டியவாறே இருக்க, அவளோ இன்னும் தயக்கத்துடனேயே நின்றிருந்தாள்.
“ஒரு முறை சொன்னால் கேட்கமாட்டாய்?” என்று அதட்டியவன் அவளுடைய கரத்தைப் பற்றி அதில் செல்லைத் திணிக்க, அந்தக் குரலில் மறுக்க முடியாதவளாக வாங்கிக்கொண்டாள். அதே நேரம்,
“இ… இதை என்னிடம் தந்துவிட்டு… நீ… நீங்கள் என்ன செய்வீர்கள்…” என்று கேட்க,
“என்னிடம் இருக்கும் கைபேசிகளில் இதுவும் ஒன்று…” என்றவன், பின் எதையோ யோசித்தவனாக, இதை எப்படிப் பாவிப்பது என்று தெரியுமல்லவா…” என்று கேட்டான்.
அவளுக்கு எப்படித் தெரியும். செல்லைத் தொடுவதே இதுதான் முதன் முறை. தயக்கத்துடன் அதை முன்னும் பின்னும் திருப்பிப் பார்க்க, மீண்டும் செல்லை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டவனாக அவளை நெருங்க, அவளோ சடார் என்று தள்ளி நின்று கொண்டாள்.
தள்ளி நின்றவளை, ஒரு விதக் கூர்மையுடன் பார்த்த ஏகவாமன், முகத்தில் வேறு எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவள் புறமாகக் கைபேசியை உயர்த்திப் பிடித்தவன், அதை எப்படி உயிர்ப்பிப்பது எப்படி உள்ளே செல்வது, எப்படிப் பாதுகாக்கப்பட்ட இலக்கங்களைப் பார்ப்பது என்று எல்லாவற்றையும் கற்பித்தான். அலரந்திரியும் அவன் கூறியவை அனைத்தையும் மிகக் கவனமாக மனதில் இருத்திக்கொண்டாள்.
ஒரு முறை சொல்லிக்கொடுத்தவன், மீண்டும் அவளையே உபயோகித்துக் காட்டச் சொல்லிக் கேட்டான். அவள் முயற்சி செய்து தவறிய இடங்களில் திருத்திக் கூற, உடனே பிடித்துக்கொண்டாள் அலரந்திரி. அந்த நிலையிலும் இருவரும் ஒருவரை ஒருவர் ஸ்பரிசிப்பதை மிகக்கவனமாகத் தவிர்த்துக்கொண்டனர்.
“குட்… என்ன அவசரமாக இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட இலக்கத்திற்கு அழை… எப்போது வேண்டுமானாலும்… எந்த நேரமாக இருந்தாலும்… தயங்காமல் கூப்பிடு…” என்று கூறியவன், இன்னும் சற்று நெருங்கி,
“கூப்பிடுவாய் தானே…” என்றான் கரகரத்த குரலில். அந்தக் குரலுக்கு மறுக்க முடியாது தலையாட்டியவள், விட்டால் போதும் என்று தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றியபோது இதயம் படு வேகமாகத் துடித்தது.
மூடிய கதவோடு சாய்ந்து நின்றவள், நடுங்கும் கரங்களால் தன் கரத்திலிருந்த கைப்பேசியைத் தூக்கிப் பார்த்தாள். ஏதோ ஏகவாமனே கரத்திலிருப்பது போலத் தோன்ற, பதற்றத்துடன் அதை அங்கிருந்த மேசையில் எறிய, இப்போது அந்த அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அச்சத்துடன் சென்று பார்த்தாள்.
“ஏகன்…” என்று திரையில் தெரிய, ‘ஏகனா? வாமன் என்றுதானே தாத்தா பாட்டி அழைப்பார்கள்?’ என்று எண்ணியவளாக, அவன் சொன்னது போலவே அழைப்பை எடுக்க,
“குட்… அழைத்தால் எடுக்கிறாயா என்று பரிசோதித்தேன்…” என்று விட்டு அவளுடைய பதிலையும் எதிர்பாராமல் கைப்பேசியை அணைக்க, இவள்தான் அந்தக் கைப்பேசியை வெறித்துப் பார்க்க வேண்டியதாயிற்று.