(27)
நரைத்த முடி, சற்று சுருங்கிய வெண்ணிற முகம். நெற்றியில் பெரிய வட்டப் பொட்டு. அதற்கு மேல் திருநீற்றுக் குறி என்று மங்களகரமாக இருந்தாலும், இழப்புகளின் வேதனைகள் கொடுத்த சுருக்கத்தால் சற்றுத் தளர்ந்து போன, எழுபத்து நான்கு வயதான மீனாட்சிப் பாட்டியின் வளையல் அணிந்த கரங்கள், அன்றைய மதிய சாப்பாட்டிற்காகக் காய்கறிகளைப் பறித்துக்கொண்டிருந்தன. திடீர் என்று அவருக்கு இணையாக இன்னொரு கரம் நீண்டு காய்கறிகளைப் பிடுங்கிக் கூடையில் போட, நிமிர்ந்து பார்த்தார் பாட்டி.
அங்கே எண்பது வயதுகளிலும் கம்பீரமாக நிமிர்ந்து நின்றிருந்த தன் கணவன் நற்குனசேகரனைப் பார்த்து, மெல்லியதாகப் புன்னகைத்து,
“என்ன பெரியவரே… நடை பவனி எல்லாம் முடித்தாகிவிட்டதா?” என்று கேட்க, தன் மனைவிக்கு உதவி செய்தவாறே,
“ஆமாமடி மீனு… அப்படியே ஆற்றில் ஒரு குளியலும் போட்டுவிட்டு வந்தேன்…” என்றார் கத்திரிக்காய்களைப் பிடுங்கி கூடையில் போட்டவாறு.
“அதுதான் இத்தனை நேரம் எடுத்ததா…?” என்ற பாட்டி, பிடுங்கியது போதும் என்பது போலக் கரத்தை நீட்டுத் தடுத்துவிட்டு, விலகி நடந்தவாறு
“வாமனிடமிருந்து எந்தத் தகவல்களும் வரவில்லை… அதனால் ஒரு வாட்டி ஊருக்குப் போய் வரலாமா?” என்று எப்போதும் கேட்கும் கேள்வியை அப்போதும் கேட்க,
“ப்ச்… போகத்தான் வேண்டும்… ஆனால் வாமன் சம்மதிக்கமாட்டானே மீனு… தான் சொல்லும் வரைக்கும் அந்தப் பக்கம் வரக் கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறானே…” என்று பெருமூச்சுடன் சொல்ல, மீனாட்சிப்பாட்டியின் விழிகள் சட்டென்று கலங்கின.
“தனிமை மிகக் கஷ்டமாக இருக்கிறது சேகர்… மூன்று வருடங்கள் ஆகிவிட்டன ஊருக்குப் போய்… நீங்களும் அங்கு இங்கென்று சென்று விடுகிறீர்கள்… நான் என்ன செய்யட்டும்…? முன்னமென்றால், நம்மைச் சுற்றி மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் என்று…” என முடிக்காமல் கண்கள் கலங்க, தன் மனைவியின் கலங்கிய முகத்தைப் பார்க்கப் பிடிக்காத நற்குணசேகரம்,
“அடிப் பைத்தியக் காரி… இதற்கெல்லாம் வருந்தலாமா? நம்மைப் போன்ற வயது போனவர்களுக்குத் தனிமையே கிடைப்பதில்லை… கடவுளாகப் பார்த்து அந்த வரத்தைக் கொடுத்திருக்கிறான்… கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரொமான்ஸ் பண்ணுவியா… அதை விட்டுவிட்டு ஊருக்குப் போய், ஊர் மக்களோடு கும்மியடிக்க நினைக்கிறாயே…” என்று குறும்புடன் கண்ணடித்தவாறு கூற, அவர் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிக்காமல், தன் வேதனை மறந்து திரும்பி அவரை முறைத்துப் பார்த்த பாட்டி,
“பாடையில் போகும் வயதில் என்ன ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கிறது…” என்றார் சுள் என்று. அதைக் கேட்டதும், தன் மனைவியைக் கோபத்துடன் பார்த்த காதல் கிழவன்,
“என்னடி… அப்படிச் சொல்லிவிட்டாய்… இளவயதில் இருக்கும் காதலை விட, முதுமையில் இருக்கும் காதலின் ஆழம் மிக அதிகம்டி…” என்று அவர் கூற, தன் கரத்திலிருந்த கூடையைக் கணவரிடம் நீட்டியவாறு,
“கறுமம்… வெளியே சொல்லாதீர்கள்… இத்தனை வயதில் இப்படிப் பேசுவதைக் கேட்டால் சிரிப்பார்கள்…” என்றுவிட்டு அவிழ்ந்திருந்த முந்தானையை இடையில் செருகிக்கொண்டு வீடு நோக்கி நடையைக் கட்ட, தன் மனைவியிடமிருந்து கூடையை வாங்கிக் கொண்டவர்,
“என்னடி… ரொம்ப அலுத்துக் கொள்கிறாய்… காதல்மா… காதல்… அதற்கெல்லாம் வயது கிடையாது… தெரியுமா? என் கெறகம்… பிடிக்கிறதோ, இல்லையோ… உன்னைத்தான் சைட் அடித்து ஆகவேண்டும்… வேறு வழி?” என்று அவர் கிண்டலுடன் பெருமூச்சு விட்டவாறு நடக்க, நின்று திரும்பிய பாட்டி,
“பெரியவரே… வயதுக்குத் தக்கதாக நடந்துகொள்ள மாட்டீரா… உமக்கு என்பத்தொரு வயது ஆகப்போகிறது… நினைவில் இருக்கட்டும்…” என்றார் எரிச்சல் சற்றும் மாறாமல்.
“யார் சொன்னா… எனக்கு இப்போதுதான்டி இருபத்து நான்கு நடக்கிறது… உனக்கு…” என்றவர் விரைந்து பாட்டியை அணுகி, வெறும் பதினாறு…” என்றார் கண்ணடித்தவாறு. தன் கணவனின் பேச்சில் அந்த வயதிலும் முகம் குப்பென்று சிவக்க, சிரமப்பட்டு அந்த வெட்கத்தை அடக்க முயன்று முடியாமல்,
“நீர் இருக்கிறீரே… உம்மைத் திருத்த முடியாது…” என்று சலித்தவாறு நடையைக் கட்ட,
“ஏய்… ஐம்பத்தேழு வருடங்களாக இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாய்… இன்னும் நீ என்னைத் திருத்தவில்லை… எப்போது திருத்தப்போகிறாய்?” என்றார் கிண்டலுடன் கண்கள் மின்ன.
“ஐம்பத்தேழா? திருமணம் முடித்து ஐம்பத்தைந்து வருடங்கள்தானே ஆகின்றன…?” என்றார் பாட்டி குழப்பத்துடன்.
“என்னடி… கணக்கை மறந்துவிட்டாயா? திருமணம் முடித்து ஐம்பத்தைந்து வருடங்கள்… அதற்கு முன்னால் இரண்டு வருடங்கள்… நம்முடைய வரலாற்றில் பொண்ணேட்டில் பொறிக்கப்பட வேண்டிய அந்த இரண்டு வருடங்களையும் விட்டுவிட்டாயே…” என்று விளக்கிவிட்டுத், தன் மனைவியின் பின்னழகை ரசித்தவாறே,
“ஆனாலும் இந்த வயதிலும் நீ நச்சென்றுதான் இருக்கிறாய் கிழவி…” என்றார்.
தன் வாயைத் திறந்து மூடிய மீனாட்சிப் பாட்டி,
“இத்தனை வருஷமாகியும் உம்முடைய குசும்பு போகவேயில்லை பார்த்தீரா…?” என்று சுள்ளென்று விழ,
“பார்த்தாயா… உன்மை சொன்னதும் கோவிக்கிறாயே கிழவி…” என்று மேலும் ஒரு கிழவி போட,
“உம்மை… என்னையா கிழவி கிழவி என்கிறீர்” என்றவர் அருகிலிருந்த தக்காளிச் செடியிலிருந்து இரண்டு தக்காளிப் பழங்களைப் பறித்து எடுத்துக்கொண்டிருக்கும் போதே,
“ஆமாம்டி!ஆமாம்… இப்போது வேண்டுமானாலும் சொல்லு… பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்… எல்லாம் பக்காவாக வேலை செய்கிறது… ஆனால் நீதான்…” என்று கிண்டலுடன் கூற, அடுத்து அவர் முகத்தை நோக்கித் தக்காளிப்பழமொன்று வந்து விழுந்தது. அடுத்து அவர் மார்பை நோக்கி எறிய, அதைக் கச்சிதமாகக் கைப்பற்றியவர், எப்போதும் போல,
“ஏய்… அங்கே எறியாதே… என் தேவதை இருக்கிறாள்…” என்றதும், அவரை எரிப்பதுபோலப் பார்த்த பாட்டி,
“எவ அவ…” என்றார் சீற்றத்தில்.
“எனக்கு அன்றும் ஒருத்திதான்… இன்றும் ஒருத்திதான்… என் பதினாறு வயது பொண்டாட்டி… அவளுக்குப் பட்டால் வலிக்கும்டி…” என்று மார்பைத் தடவியவாறு கூற,
“கறுமம்… கறுமம்… என் தலையெழுத்து… அப்போதும் என் அப்பா தலைத் தலையா அடித்துக்கொண்டார்… இவன் வேண்டாம்… அந்த நாகதேவனைக் கட்டு என்று… நான்தான்… அதைக் கேட்காமல் மக்கு மாதிரி இவரைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றேன்… இப்போது நன்றாக அவஸ்தைப் படுகிறேன்…” என்று எரிச்சலுடன் கூற, கிழவரோ, கோபத்துடன்,
“கட்டுவாய் கட்டுவாய்… நான் விரல் சூப்பிக்கொண்டு சும்மா இருப்பேன் என்று நினைத்தாயாக்கும்… உன் அப்பனையும் கொன்று, அந்த நாகதேவனையும் வெட்டிச் சாய்த்திருப்பேன்… என்னைப் பற்றித் தெரியுமல்லவா…” என்று மீசையை முறுக்க,
“இதில் ஒன்றும் குறைச்சலில்லை… என்னைச் சொல்லவேண்டும்… ஆளில்லாமல் உங்களைப் போய்க் காதலித்தேன் பாருங்கள்…” என்றவாறு தன் தலையில் அடிக்க,
“ஏய்… ஏன்டி தலையில் அடிக்கிறாய்… எனக்கு வலிக்கப்போகிறது…” என்று பொறாமையை மறந்து குறும்புடன் கூற, லட்சுமிப்பாட்டிக்குத்தான் களைப்பாகப் போனது.
இது இன்று நேற்றல்ல, அவரைக் கண்டு காதலிக்கத் தொடங்கிய நாளிலிருந்து, இந்த ஐம்பத்தேழு வருடங்களாக அவருடைய குறும்பைச் சகித்து வாழ்ந்துகொண்டிருப்பவராயிற்றே. சகித்தார் என்பதை விட, ரசித்து வாழ்ந்து வருபவராயிற்றே. அதுவும் அவர் மெல்லியதாக வருந்தினாலும், உடனே தன் மனைவிக்காய் அந்தச் சூழ்நிலையையே மகிழ்ச்சியாக மாற்றிவிடுவார் பெரியவர். இவ்வளவு ஏன்? குடும்பத்தை மொத்தமாகத் தொலைத்தபின்னும், மீனாட்சி பாட்டிக்காகத் தன் வலியை ஒதுக்கி அவரைத் தேற்றி, தோளோடு தோள் நின்று அவரை மீண்டும் நிமிர வைத்தது நற்குனசேகரன்தானே.
அவரை எண்ணிய மாத்திரத்தில் உள்ளம் பணித்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாது,
“கடவுளே… பூட்டப்பிள்ளையைப் பார்க்கும் வயதுக்கு வந்தபிறகும் இந்தப் பேச்சைக் குறைக்கமாட்டேன் என்கிறாரே… நான் என்ன செய்ய?” என்று முணுமுணுத்த பாட்டி, சமையலறைக்குள் நுழைந்தவாறே,
“ஏன் பெரியவரே… எண்பது வயது ஆன பிறகும் ரொமான்ஸ் மூடில் சுற்றிக்கொண்டிருக்கிறீர்களே… உங்கள் பேரன் ஏகவாமனுக்கு இதோ இந்த வருடம் முடிந்தால் இருபத்தெட்டு முடிந்துவிடும்… அவன் குழந்தை குடும்பம் குட்டி என்று வாழவேண்டும் என்கிற ஆசையே இல்லையா?” என்று கேட்க, அதுவரை குறும்பு மூடில் இருந்தவர் சீரியஸ் மோடுக்கு வந்தவராக, பெரிய மூச்சொன்றை எடுத்துவிட்டார் தாத்தா.
“நான் என்னடி செய்ய? அவன்தான் பிடித்த பெண்ணாகக் கிடைக்கவேண்டும் என்கிறானே…” என்று சலிப்புடன் கூறியவாறு தன் கரத்திலிருந்த பையை மேசையில் வைத்துவிட்டுக் காய்கறிகளை எடுத்து மேசையில் அடுக்கத் தொடங்க,
“ம்… அவனுக்கு ஏற்றப் பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள்… எங்கே இருக்கிறாளோ… என்ன செய்கிறாளே…” என்று பாட்டி வருத்தத்துடன் கூற, மனைவியை உரசியவாறு நெருங்கியவர், எட்டி ஒரு காரட்டை எடுத்துக்கொண்டு கைகழுவும் தொட்டியில் தண்ணீரைத் திறந்து நன்றாகக் கழுவிவிட்டவாறு,
“எனக்கென்னவோ, நம் வாமனுக்கு விரைவாகவே பெண் கிடைத்துவிடுவாள் என்று ஒரு பட்சி சொல்கிறது…” என்றார் கரட்டின் தோலைச் சீவியவாறு.
“எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்…?” என்று பாட்டி வியக்க,
“ப்ச்… அது எதற்கு உனக்கு… ஏதோ உள்ளுணர்வு சொல்கிறது…” என்றவர், “அவன் கொஞ்சம் அழுத்தக்காரன்… தவறு நடந்தால் இலகுவில் மறக்கவும் மாட்டான்… மன்னிக்கவும் மாட்டான்… அவனைப் புரிந்து நடக்கக்கூடிய ஒருத்தியாக இருந்தால் மட்டுமே அவன் குடும்பம் மகிழ்ச்சியாக ஓடும்… அதுவும் அவனுக்கிருக்கும் இறுமாப்பு… மிக அதிகம்… அதை உணரக் கூடியவளாக ஒருத்தி வேண்டுமே…” என்று கிழவர் பெருமூச்சுடன் கூற,
“என்ன இறுமாப்போ… இறுமாப்பா குடும்பம் நடத்தப் போகிறது…? இறுமாப்பா குழந்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது… எது எதற்கு இறுமாப்பு பார்க்கவேண்டுமென்றில்லை…” என்று சலித்துக்கொண்ட பாட்டி கீரைகளைக் கழுவுவதற்காகப் பாத்திரத்தில் போட, காரட்டை வெட்டி ஒன்றைத் தன் வாயிலும், மற்றைய துண்டை மனைவிக்கும் ஊட்டியவாறு,
“ஆண்களுக்கு அது இருக்கவேண்டும்டி… இருந்தால்தான் அழகு… என்ன? இன்றைய பசங்களுக்கு எது எதற்கு இறுமாப்போடு இருக்கவேண்டும் என்று புரிவதில்லை… அதை விடு… எனக்கில்லாத இறுமாப்பா… அதைத் தரைமட்டமாக்கி, இன்று இப்படிக் காமடி பீசாக மாற்றியது நீதானே…?” என்று கிண்டலுடன் கேட்டவாறு இன்னொரு காரட்டை எடுக்கப் போகக் கழுவி முடித்த கீரையை மேசையில் வைக்க வந்த பாட்டி, தன் கணவன் அடுத்தக் காரட்டிற்கும் அடி வைப்பது புரிய, ஓங்கி அவர் கையில் ஒன்று கொடுத்துவிட்டு,
“கிழவா… இந்த இடத்தை விட்டு இப்போதே ஓடிவிடும்… நானே கஷ்டப்பட்டுக் கிண்டி எடுத்து வந்திருக்கிறேன்… முழுக் காரட்டையும் எடுத்துவிட்டால், காரட் வறுவலுக்கு நான் எங்கே போவதாம்?” என்று சினந்தவாறு, மிச்ச காய்கறிகளையும் கழுவத் தொடங்க, வாசலில் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
இருவரும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“என்ன சேகர்… இந்த நேரத்தில் யார்? அதுவும் நம் வீட்டிற்கு?” என்று கேட்ட பாட்டியிடம்,
“ஏன்டி… நான் என்ன கமராவா வைத்திருக்கிறேன் யார் என்று உடனே கண்டு பிடிக்க… உன் கூடத்தானே இருக்கிறேன்… என்றுவிட்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்க, மீனாட்சிப் பாட்டியும் குடுகுடு என்று கணவரின் பின்னால் ஓடத் தொடங்கினார்.
பதினைந்து நிமிடத்திற்கு முன், அலரந்திரியுடன் வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஏகவாமன், எப்போதும் திறந்திருக்கும் பெரிய கேட் அன்று மூடியிருக்க, உடனே தடையைப் போட்டு வாகனத்தை நிறுத்த, அவன் நிறுத்திய வேகத்தில், அவனுடைய திண்ணிய தோளில் பூப்பந்தாய் அலரந்திரியின் தலை வந்து விழுந்தது.
சிலிர்த்துப்போய்த் திரும்பிப் பார்க்க, வாகனம் நின்ற வேகத்தில் தூக்கம் கலையாமலே இவன் புறமாகச் சரிந்துவிட்டாள் போலும்.
விலகினால் எங்கே அவள் நித்திரை குழம்பிவிடுமோ என்று அஞ்சியவனாக, இல்லை இல்லை, அந்த இனிமையான ஸ்பரிசம் விலகிவிடுமோ என்று பயந்தவனாக மீண்டும் சரியாக அமர்ந்து கொள்ள, அப்போதும் உறக்கம் கலையாது அப்படியே கிடந்தாள் அலரந்திரி.
ஏனோ அவளுடைய உடலின் வெம்மை தன் உடலோடு இரண்டறக் கலந்து, கணுக்கால் முதல் உச்சந்தலைவரை வேகமாகப் பயணித்து, நாடி நரம்பெல்லாம் ஒருவித அதிர்வை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரிப்பது போன்ற ஒரு உணர்வில் கிறங்கிப்போய் நின்றான் அந்த ஆண்மகன்.
கிடைக்கமாட்டாள், கிடைக்க முடியா உறவு என்று எண்ணியிருந்த வேளையில், தானாகத் தோள்மீது வந்து விழும்போது தோன்றும் ஒரு வித சிலிர்ப்பு இருக்கிறதே… துடிப்பு இருக்கிறதே… அப்பப்பா… அதனை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியுமா என்ன? அதை அனுபவிப்பவனாக, கண் மூடி ஒரு கணம் ஆழமாக அவளை உள்வாங்கிக் கொண்டவன், மெதுவாக விழிகளைத் திறக்க, தூக்கக் கலக்கத்தில் அண்ணாத்திருந்தவளின் மலர் முகம்தான் அவனைச் சுண்டி இழுத்தது. ஆழ்ந்த உறக்கத்தில் உதடுகள் சற்றுப் பிளந்திருந்ததால் இரண்டு வெண்ணிறப் பற்கள் பிறை நிலவாய் வெளியே தெரிய, ஏனோ இவனுக்குள் பெரிய பூகம்பமே வெடித்தது.
அந்தக் கணம், அந்த விநாடி புதிய உலகில் புகுந்தவனாய், இறந்தகாலம், நிகழ்காலம் அனைத்தையும் தொலைத்தவனாய் தன்னையும் மறந்து வலது கரம் தூக்கி, தோளில் சாய்ந்திருந்தவளின் கன்னத்தில் பதிக்க முயன்றான். உடனே அந்த எண்ணத்தைக் கைவிட்டவனாகக் கரத்தினை விலக்கிக் கொண்டவனுக்கு எங்கே கன்னத்தை வருடப் போக அவள் விழித்து விடுவாளோ என்கிற அச்சம் எழுந்தது. ஆனாலும் அவளுடைய அருகாமையை ரசித்து ருசித்தவனுக்கு அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சற்றும் யோசிக்காமல், எதிர்வினைபற்றி அறியாது, மங்கிப்போன புத்தியுடன், தன்னிலை கெட்டவனாக, உதடுகளை அவளுடைய கூந்தலில் ஒரு வித வேகத்துடன் புதைத்துக்கொண்டான்.
சொர்க்கம் என்றால் எது? இறந்ததும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு உலகத்தை நோக்கிச் செல்வதா? இல்லை… இல்லை… உயிரோடு இருக்கும் போதே மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் எந்தப் போதையும் உட்கொள்ளாத போதே இன்பத்தில் மிதக்க, அது கொடுக்கும் சுகத்தை அனுபவிக்கும் பரிபூரண ஏகாந்த நிலை… அதுதானே சொர்க்கம்…. அதுதானே இன்பம்… அந்த நிலையைத்தான் ஏகவாமனும் அப்போது சுவைத்துக்கொண்டிருந்தான்.
அவளுடைய கூந்தல் மணமும், அவளது உடல் ஸ்பரிசமும் அவனை வேறு உலகுக்கு அவசரமாக அழைத்துச் செல்ல, இப்போது ஏகவாமனின் கரங்கள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
அவனுடைய அணைப்பில் அலரந்திரியின் உள்ளுணர்வு விழித்துக் கொண்டதோ? தூக்கத்திலும் அந்த அணைப்பிலிருந்து விடுபட முயல, அவளுடைய அசைவில் சடார் என்று நிகழ்காலத்திற்கு வந்தான் ஏகவாமன். அப்போதுதான் தான் இருக்கும் நிலை புரிய, பதற்றத்துடன் அவளைச் சுற்றியிருந்த கரத்தை விலக்கியவன், அவசரமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்து மீண்டும் சரியாக அமர வைத்துக்கொண்ட நேரம் உடலில் மெல்லிய நடுக்கம். ஏனோ தவறு செய்த உணர்வில் மலைத்துப்போய் நின்றான் அவன்.
என்ன காரியம் செய்துவிட்டான்…? நினைக்கும் போதே நெஞ்சம் தடுமாறியது. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் ஆனந்தக் கூத்தும் ஆடியது. உதடுகள் உணர்ந்த அவள் கூந்தலின் சுகத்தை மீண்டும் நுகர வேண்டும் என்று உள்மனம் கெஞ்சியது. கூடவே தடுமாறவும் செய்தது. இந்த இரண்டு மன நிலையில் தவித்தவனுக்கு, அத்தனை எளிதில் அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை.
கூடவே அவளை எண்ணிப் பரிதாபமும் தோன்றியது. அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அரை மணி நேரத்திலேயே அலரந்திரி சுருண்டு படுத்துவிட்டாள். அதுவும் உறங்க முயன்ற விழிகளைத் திறப்பதும், பின் மூடுவதும் திறப்பதும் மூடுவதுமாகச் சிறு போராட்டம் நிகழ்த்திய பிறகே உறங்கிப்போனாள்.
இடையில் வண்டி நின்றதோ, ஏகவாமன் இறங்கிக்சென்று முகத்தைக் கழுவிவிட்டு மீண்டும் வண்டி எடுத்ததோ எதுவும் அவளுக்குத் தெரியாது. அவளும்தான் என்ன செய்வாள். சொற்ப நாட்களாக அவளுக்கு உறக்கம் மருந்துக்கும் கிடைக்கவில்லையே. இப்போத அவளையும் மீறிய சோர்வில் உறங்கிவிட்டாள். இல்லை, ஏகவாமன் அருகில் இருக்கிறான் என்கிற தைரியம் அவளை உறங்க வைத்ததோ… தெரியவில்லை.
சற்று நேரம் அப்படியே இருந்தவன், அவள் தலையைப் பற்றி ஜன்னலோரம் சாய்த்துவிட்டுப் பின் பெருமூச்சுடன் காரை விட்டு இறங்கி மூடியிருந்த கேட்டைத் திறந்துவிட்டு, மீண்டும் காரை எடுத்துக்கொண்டு சற்றுத் தூரம் ஓட்டினான். இப்போது வீடு வந்ததும் காரை நிறுத்திவிட்டு, திரும்பி அலரந்திரியை ஏறிட்டான்.
ஏனோ அவள் உறக்கத்தைக் கலைக்கவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அதேவேளை அவளை எழுப்பாமலும் ஏதும் செய்ய முடியாது. அதனால்,
“அலர்…” என்றான் மயிலிறகால் வருடும் மென் குரலில். அவனுடைய அழைப்பு அவள் காதுக்குள் சென்று புத்தியை எட்டியதுபோலத் தெரியவில்லை. மீண்டும் தன்னிலை கெட்டவனாகத் தன் புறங்கையால் அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுக்க, இப்போது அவளிடத்தே மெல்லிய அசைவு. அவசரமாகத் தன் கரத்தை விலக்கியவன்,
அலர் என்றான். இப்போது ஓரளவு விழிப்பை நோக்கி வந்துகொண்டிருந்தவளுக்கு அவனுடைய குரல் கேட்டதும், பதறி அடித்து எழுந்தாள். முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. சிவந்த விழிகளுடன், தூக்கக் கலக்கத்தில் மலங்க மலங்க விழிக்க,
“ஹே… ரிலாக்ஸ்… இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது… வா…” என்றவாறு ஏகவாமன் கீழே இறங்க, இவளுக்குச் சற்று நேரம் எடுத்தது தன்னை நிலைப்படுத்த. மீண்டும் விழிகளை மூடி முழு நிமிடம் நின்று தன்னை ஆசுவாசப் படுத்தியவள், அவன் வாகனத்தை விட்டு இறங்கியதும் தன் பக்கத்துக் கதவைத் திறந்து எழுந்தாள்.
நான்கு மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததாலோ என்னவோ, இரண்டு கால்களும் வீங்கியது போல வலித்தன. சோர்வுடன் கதவை மூடிவிட்டுத் திரும்பியவளின் விழிகள் கண்ட காட்சியில் தூக்கம் மொத்தமாய்க் கலைந்துபோக, மலைத்துப்போய் நின்றாள் அலரந்திரி. ஆம் மலைத்துத்தான் போயிருந்தாள். இத்தகைய அழகான இடத்தை இதுவரை அவள் கண்டதுமில்லை, கேட்டதும் இல்லை. எங்குப் பார்த்தாலும் மலைகள்… அதில் நூல்போல விழுந்த அருவி கூடவே கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் பச்சைப் பசேலென்றிருக்க, ரசனை மாறாமலே மெதுவாக விழிகளைத் திருப்பினாள். அங்கே சற்று உயரத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையொன்று கண்களைக் கவர்ந்தது. சுற்றிப் பெரிய பெரிய மரங்கள் பாதுகாப்பு அரண்போல நிமிர்ந்து நிற்க, ஏதோ மாய லோகத்தில் இருப்பது போலத் தோன்றியது.
அந்த இடத்தின் தட்பவெப்பம் கூட மிக ரம்மியமாக… சொல்லப்போனால் சற்றுக் குளிராயிருக்க, எப்போதும் வெப்பத்துக்குப் பழக்கப்பட்டவளின் உடல் சற்றுச் சில்லிட்டுப் போனது. அதனால், தன் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு மேல் கரங்களைத் தேய்த்துவிட்டவளுக்கு யாரோ ஒருவன் மிகுந்த இரசனையுடன் வரைந்த சித்திரத்திற்குள் நுழைந்து அதற்குள் தானும் ஒருத்தியாய் நிற்பது போன்ற உணர்வில் மலைத்து நின்றாள்.
தன்னை மறந்து சற்றுத் தூரம் நடந்து சென்றவள் பாதை முடியக் கீழே எட்டிப் பார்த்தாள். அவள் நின்றிருந்த இடம் சற்று உயரத்திலிருந்தது. எங்குப் பார்த்தாலும் பச்சை மரங்களின் தலைதான் தெரிந்ததன்றி மருந்துக்கும் வீடுகளில்லை. அது ஏதோ ஒரு வித பயத்தைக் கொடுக்க, தன்னையறியாமல் ஏகவாமனை நெருங்கி நின்றுகொண்டாள் அலரேந்திரி. அவனோ,
“என்னுடன் வா…” என்றவாறு அந்தக் கோட்டையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அந்தக் கோட்டை சற்று உயரத்திலிருந்ததால், கருங்கற் குன்றிலேயே படிகளைச் செதுக்கியிருந்தார்கள். அதில் ஏறும்போதே, அந்தத் தனிமையும், கோட்டையும், மலைகளும் ஒரு வித பயத்தைக் கொடுக்க, இதயம் வாய்க்குள் வந்து துடிக்கத் தொடங்கியது. எங்குப் பார்த்தாலும் ஒரு ஈக்காக்கை கூடத் தெரியவில்லை.
இவன் ஏன் என்னை இங்கே அழைத்துவந்தான்? அதுவும் ஆள் அரவமற்ற காட்டுப் பிரதேசத்திற்கு? இங்கே என்ன நடந்தாலும் கேட்பாரில்லையே. அப்படியிருக்கையில், எப்படித் துணிந்து உள்ளே செல்வது? நெஞ்சம் தடதடக்க,
“இது… என்ன இடம்?” என்றாள் அச்சம் மாறாமல்.
அவனோ, பதில்சொல்லாது, தன் வீடு என்பதுபோல அந்தச் சிறிய கோட்டையின் பலம் பொருந்திய கதவைத் திறக்க, அலரந்திரி ஆணி அடித்தான்போல அங்கேயே நின்றுவிட்டாள். திரும்பிப் பார்த்தவன்,
“இன்னும் என்ன… உள்ளே வா அலர்…” என்றான் அவன். முன்பு போல மறுக்காவிட்டாலும் அவளுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டவனாய், தன் பான்ட் பாக்கட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவளைச் சுடுவது போல நீட்ட, அரண்டு போனாள் அலரந்திரி.
அச்சத்தில் அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்ட, முகம் வெளிற, மெல்லியதாக நடுங்கத் தொடங்கிய கால்களைச் சமப்படுத்த முடியாதவளாக அவனை வெறிக்க, அவனோ அவளை நோக்கித் துப்பாக்கியைப் பற்றியவாறே மெல்ல மெல்ல நெருங்கத் தொடங்கினான்.
தொண்டையில் அடைத்ததை விழுங்கியவளுக்கு, அவன்மேல் வைத்த நம்பிக்கை முற்றிலுமாகக் காணாமல் போல, அவனை நம்பி வந்திருக்கக் கூடாது என்பதைக் காலம் கடந்து புரிந்துகொண்டவளாக, அந்த இடத்தை விட்டு ஓடுவதற்காகத் திரும்பிய வேளையில்,
“டோன்ட் மூவ்…” என்கிற அவனுடைய கர்ஜனைக் குரல் கேட்டது.
அந்தக் குரலை மீறினால் சுட்டுவிடுவானோ என்கிற அச்சம், அவளைத் திக்குமுக்காடச் செய்ய, கண்கள் கலங்க அவனை நோக்கித் திரும்பினாள் அலரந்திரி.
அவன் வந்தவிதத்தில், இன்றோடு தன் கதை முடிந்தது என்று எண்ணியவளாத் தன் விழிகளை இறுக மூடி, தன்னை நோக்கிப் பாயும் தோட்டாவிற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
அவனோ, அவளை நெருங்கியதும், பயத்தில் வெளிறிய முகத்தையும், நடுங்கிய சிவந்த செழித்த உதடுகளையும் கண்டதும், தன் துப்பாக்கியைச் சற்றுக் கீழே இறக்க, உதட்டிலோ குறிஞ்சிமலராய் மெல்லிய கீற்றுப் புன்னகை ஒன்று வந்தமர்ந்து கொண்டது.
புன்னகை மாறாமலே, துப்பாக்கியைக் கவிழ்த்துப் பிடித்தவன், துப்பாக்கிக் கொண்டே அவளுடைய வயிற்றுச் சேலையை மெதுவாக விலக்கினான்.
மேலும் அதிர்ந்துபோனாள் அலரந்திரி. சடார் என்று விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தவள், இரண்டடி பின்னால் எடுத்துவைக்க முயல, அவனோ சற்றும் யோசிக்காமல், இடைநோக்கிக் கரத்தைச் செலுத்தி, முள்ளந்தண்டு முடியும் இடத்தில் உள்ளங்கையைப் பதித்தவன், தன்னை நோக்கி இழுத்துத் தன் மீது போட்டுக்கொள்ள, அலரந்திரியோ பேரதிர்ச்சியுடன் அவனை வெறித்துப் பார்த்தாள்.
அவனுடைய கரங்களின் தீண்டலில் அவளுடைய முழு உடலும் செயல்பட மறுத்தது. சிந்தை சிந்திப்பதை இழந்தது. ஏன் உலகமே சுழல்வதை நிறுத்தியது.
அவனோ அவளுடைய வெற்று வயிற்றில் துப்பாக்கியின் முனையைப் பதிக்கச் சுயம் பெற்றவளாய், அரண்டு போனவளாய்,
“எ… என்ன… என்ன செய்… என்ன செய்கிறீர்கள்…” என்று பதற, அவனோ அவள் விழிகளை விட்டுத் தன் விழிகளைச் சற்றும் விலக்கினானில்லை. ஆனால் துப்பாக்கியைச் சற்றுக் கீழே சரித்து, சேலை மடிப்புக்குள், செருகி ஒரு அழுத்து அழுத்த வயிற்றோடு இணைந்து சேலை மடிப்புக்குள் மறைந்துபோனது அந்தத் துப்பாக்கி. இத்தனைக்கும் அவள் மணிவயிற்றை அவன் நகம் கூடத் தீண்டவில்லை.
அவள் சேலை முந்தானையைச் சரியாக இழுத்துவிட்டபோதும் அவனுடைய பார்வை இம்மியும் தடுமாறவில்லை… சற்று விலகவும் இல்லை. விழிகள் மட்டும் பதறித் துடித்த அவள் முகத்தில்தான் அழுந்தப் பதிந்திருந்தன. கூடவே அவன் கண்மணிகள் அவள் இரண்டு விழிகளையும் மாறி மாறிப் பார்த்தன.
அவள் சேலையைச் சரியாக்கிவிட்டு அவளை விடுவித்து இரண்டடி பின் வைத்தவன்,
“இப்போது உன்னிடம் துப்பாக்கி இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் என்னைச் சுடலாம்… இனியாவது உள்ளே வருகிறாயா?” என்று கரத்தைத் தூக்கி வாசலைக் காட்டியவாறு கேட்க, அலரந்திரிக்குக் காதுகள் அடைத்தன. இன்னும் சற்று முன் நடந்த நிகழ்விலிருந்து அவளால் வெளி வரவே முடியவில்லை. கால்களோ பலமிழந்தவை போலத் தடுமாறத் தொடங்க, உடனே அவளை நெருங்கிப் பற்றிக்கொண்டவன்,
“ஹே… ரிலாக்ஸ்…” என்று முடிக்கவில்லை, வேகமாக அவனை உதறித் தள்ளியவள், அவனை அறைவதற்காகத் தன் கரத்தைத் தூக்கி விசிறி அடிக்க, கண்ணிமைக்கும் நொடியில் அக்கரத்தைப் பற்றிக்கொண்டான் ஏகவாமன்.
அதுவரை மெல்லிய நகைப்பைத் தேங்கியிருந்த விழிகளில் அக்கினியின் தெறிப்பு. அதைப் பிரதிபலிப்பது போல, பிடியின் அழுத்தத்தைக் கூட்ட, கரமே நொறுங்கிவிடுமோ என்று மருண்டுபோனாள் அலரேந்திரி. பதட்டத்துடன் தன் கரத்தை விடுவிக்க முயல, அவனோ, சற்றும் இரங்காது
“எப்போதும் அடிக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பேன் என்று நினைத்தாயா அலர்…” என்றவன் அவளை ஒரு இழுவை இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனை நெருங்கி நின்றவளின் முகத்திற்கு நேராகக் குனிந்தவன்,
“லெட் மி பி க்ளியர்… என்னை நோக்கிக் கையைத் தூக்குவது இதுவே கடைசித் தடவையாக இருக்கட்டும்… இன்னொரு முறை, எனக்கு எதிராக இதைத் தூக்கினாய் என்றால்… அடுத்த முறை தூக்குவதற்கு இந்தக் கரங்கள் இருக்காது… ஆம் ஐ க்ளியர்…” என்று எடுத்த மூச்சின் சீற்றத்தோடு அவன் வார்த்தைகளை வெளியிட, அந்தச் சீற்றத்தில் ஒரு கணம் அரண்டுதான் போனாள் அலரந்திரி.
அவள் திணற,
“ஆம் ஐ க்ளியர்…” என்றான் இப்போது குரலைச் சற்று உயர்த்தி. அவனுடைய கோபத்தில் பொசுங்கிவிடுவோமோ என்று அஞ்சியவளாகக் கண்களில் நீர் முட்ட, தலையைப் பலமாக ஆம் என்பது போல, ஆட்ட, அவளுடைய கரத்தை விடுவித்தவன்,
“உள்ளே வா…” என்றுவிட்டுத் திரும்பிய வினாடி,
“கார் வந்த சத்தம் கேட்டதே… யார் அது…”. என்று ஒரு வயதான பெண்மணியின் குரல் சற்றுத் தள்ளிக் கேட்டது. உடனே கோபம் மறைந்து அங்கே, இனிமை பிறக்க, குரல் வந்த திசை நோக்கி நடந்தான் ஏகவாமன்.
அங்கே வந்துகொண்டிருந்தவனைக் கண்ட மீனாட்சிப் பாட்டி,
“வாமன்… என் ராஜா… நீயா… நிஜமாகவே நீதானாடா…” என்று நம்ப முடியாமல் குரல் கமறக் கேட்க, வேக நடையுடன் அவரை நெருங்கிய ஏகவாமன், அடுத்த கணம் அவரைப் பாய்ந்து கட்டிக்கொண்டான்.