Wed. Jan 15th, 2025

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23)

இரண்டு நாட்கள் கழிய,

அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு ஏனோ தான் புறப்படும்போது தன்னை ஏக்கத்துடன் பார்த்த ஏகவாமன்தான் நினைவுக்கு வந்தான். அவனை நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சம் பிளந்தது.

அதுவும் அவன் தம்பி மரணித்த செய்தி அறிந்தபோது அவள் வயிற்றில் முகம் புதைத்து அழுதானே… அந்தச் சம்பவம் நினைவுக்கு வரத் தன்னையும் அறியாமல் வலக்கரத்தை வயிற்றில் பதித்து விழிகளை மூட, உள்ளத்தின் கொந்தளிப்பு கண்ணீராய் கரையோரம் வடிந்து செல்ல அவளையும் மீறி மெல்லிய விம்மல் வெடித்தது.

அவனை நினைக்கும் போதே அடிநெஞ்சு விம்மித் துடிக்க, அவளால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அவனை எண்ணினால் எதற்காகக் கண்கள் கலங்க வேண்டும்? விம்மி வெடிக்கவேண்டும். அதுவும் அவனுடைய கலங்கி வாடிய முகம் நினைவுக்கு வந்தால் உறக்கம் தொலைந்து போகிறதே… கடவுளே என்ன கொடுமையிது…

கூடவே அவன் தன்னைத் தேடி வராததும் ஒரு வித ஏமாற்றத்தைக் கொடுக்கிறதே… அது ஏன்? உலகில் தனித்து விடப்பட்டது போலத் தோன்றுகிறதே… அதற்கான காரணம் என்ன? என்று எண்ணித் தவித்தவளுக்குத் தன்னை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. தன்னை மறந்து உணர்வுகள் கொடுத்த வலியுடன் சுருண்டு திரும்பிப் படுத்தவளுக்கு உடலின் தகிப்பை அடக்கவே முடியவில்லை.

என்ன கொடுமையிது… எதற்காக அவள் எதையோ இழந்ததுபோலத் துடிக்க வேண்டும்? தவிக்க வேண்டும்? இந்த ஒவ்வாத உணர்வுகளின் பிடியில் சிக்கி மருக வேண்டும்… என்ற எண்ணியவளுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. ஏதோ ஒரு வகையில் ஏகவாமன் அவளைப் பாதிக்கிறான். அதை நினைத்தபோதே நெஞ்சம் திடுக்கிட்டது.

‘சீ… சீ… என்ன சிந்தனை இது… அத்தனை மன அடக்கம் இல்லாதவளா நான்… இல்லை… ஒரு போதும் இல்லை… ஏகவாமன் என்னைப் பாதிக்கவில்லை… நிச்சயமாகப் பாதிக்கவில்லை. அவனுடைய எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தும் அவள் கட்டுக்குள்தான் இருக்கின்றன…’ என்று பிடிவாதமாகத் தன்னைச் சமாதானப் படுத்தியவளுக்கு அன்று காருண்யன் தன் கரத்தைப் பற்றி ஏகவாமனின் கரத்தில் வைத்தது நினைவுக்கு வந்தது. இப்போதும் உள்ளங்கையில் அவனுடைய வெம்மை மிச்சமிருப்பது போலத் தோன்றக் கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். அவனுடைய கரங்கள் பட்டபோதே, மனதில் எழுந்த பேரமைதி… அதை என்னும் போதே, விதிர் விதிர்த்துப் போனாள்.

‘சே… எத்தகைய சிந்தனைகள் இவை… அவள் போய்… சீ… சீ… தவறல்லவா…’ என்று தன்னையே கடிந்து கொள்ள, இன்னொரு மனமோ,

‘நீ நினைப்பதில் என்ன தவறிருக்கிறது… கணவன் என்கிற பெயரில் வெறும் மூன்று வருடங்களாக அவளுடன் பயணித்தவன் காருண்யன்… இப்போது அவனுடைய அதிகாரம் முடிந்துவிட்டது… அதிகாரம் முடிந்தால் கதையே முடிந்ததென்று அர்த்தமாகுமா என்ன? அடுத்த அதிகாரம் தொடங்கக் கூடாதா? முற்றுப் பெற்ற கதை தொடரக் கூடாதா? முற்றுப்புள்ளி காற்புள்ளியாக மாறக் கூடாதா? என்று எண்ணியவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

இத்தனை வீரமாகத் தெளிவாகத் தனக்குள் மட்டும்தான் பேசிக்கொள்ளலாம்… இதோ இந்த நான்கு சுவருக்குள் மட்டும்தான் வாதாட முடியும்… வெளியே அல்ல… பிற மனிதர்களுக்கு முன்னால் அல்ல… சமூகம்… பரந்து விரிந்த சிலந்திக் கூடு… சற்றுத் தடுமாறினாலும், அங்கேயிருக்கும் சிலந்தி முழுதாக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். மறு மணம்… ஆண்களாக இருந்தால் அது சமூகத்தின் தேவை… பெண்களாக இருந்தால் அது அசிங்கம்… உடல் தேவை என்று கொச்சைப்படுத்தும். அப்படியே மீறினாலும் வெறும் ஜந்துபோலப் பார்க்கும்… யாருக்காக இல்லாவிட்டாலும் சமூகத் தேவைக்காக அவள் நடிக்கத்தான் வேண்டும். விதவை என்கிற பரிதாபத்தைச் சுமக்கத்தான் வேண்டும்… வேறு வழியில்லை…

மீண்டும் அவள் மனக்கண்ணில் ஏகவாமன் வந்து நிற்க, எப்போதம் போல மனம் தளர்ந்து போனது. அதை அடக்கத்தெரியாத இயலாமையுடன் அவனுடைய ஒவ்வொரு அசைவையும் நினைத்தவாறு உறங்கிப்போனாள் அலரந்திரி.

ஆழ்ந்த உறக்கம்… அனுமதியையும் வேண்டாது தழுவிச் சென்ற ஏகவாமனின் கரங்கள்… அவளுடைய இடையைத் தழுவிச் செல்ல அவனுடைய அழுத்தமான முகம் அவனுடைய வயிற்றில் பதிந்து பின் மார்பில் பொருந்தின. பெரும் போராட்டத்துடன் அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்ற தருணம்… உடலெல்லாம் ஒரு வித தகிப்பு. அங்கமெல்லாம் தீப்பற்றியது போன்ற அவஸ்தை.

மேலும் தன்னைப் பற்றியவனை உதற முயன்று, தோற்றவள், தூக்கம் கலையாமலே தன்னைப் போர்த்தியிருந்த போர்வையைக் காலால் இழுத்துத் தள்ளிவிட்டுத் திரும்பி மறுபக்கம் சரிந்து படுத்தாலும், அவன் ஸ்பரிசம் கொடுத்த உணர்வை அடக்க அவளால் முடிந்திருக்கவில்லை. கூடவே அவனுடைய அணைப்பும் விலகவில்லை, அவளை எரிக்க முயன்ற தீயும் அணையவில்லை.

மெல்ல மெல்ல அவனுடைய அணைப்பில் இரங்கிக் கிறங்கி உருக முயன்ற நேரம், எங்கோ ஒரு தொலைவில் சிறிய சிறிய வெடிப்புச் சத்தம் கேட்க, சிரமப்பட்டு விழிகளைத் திறக்க முயன்றாள். முடியவில்லை. திடீர் என்று அவளுடைய மேல் கையில் சுளீர் என்று ஒரு எரிவு. பதறியவளாக விழிகளைத் திறந்தவளின் முன்னால் செந்தீயின் தரிசனம். முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

சூரியன் எதற்குக் குடிசையின் முன்னால் இத்தனை பிரகாசமாக எரிகிறான்? என்றுதான் யோசித்தாள். தன் விழிகளை அழுந்த மூடித் திறந்து, புத்தியை விழிப்படையச் செய்த பின்புதான் அவளுக்கு நிலைமையே புரிந்தது. உடனே பதறியடித்து எழுந்தமர்ந்தாள் அலரந்திரி. அச்சத்துடன் சுத்தவரப் பார்த்தாள். தீயின் நாக்கு குடிசையை வேகமாக நக்கத் தொடங்கியிருந்தது. அதைக் கண்டு பதறித் துடித்தவளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.

அவள் ஏதாவது பயங்கரக் கனவு காண்கிறாளா என்ன? நம்பமுடியாதவளாகச் சுற்றும் முற்றும் பார்க்க, இல்லை என்றது தீயாய் தகித்த வெப்பமும், பறந்து வந்த நெருப்புப் பொறியும்.

அவளுடைய குடிசையில் தீப்பற்றியிருக்க வேண்டும் முன்புறத்தில் ஆரம்பித்த தீயின் நாக்குப் படிப்படியாக மேலே மேலே ஏறிக் கூரையைத் தொட முயல, அலறிப்போனாள் அலரந்திரி.

இது கல் வீடில்லை. குடிசை. கண்ணிமைக்கும் நொடியில் தீப்பற்றிப் பரவிக்கொள்ளும். தாமதிக்கக் கூட நேரம் கொடுக்காது…

உடனேயே அங்கிருந்து தப்பிவிடு என்று மனம் எச்சரிக்கை விடுத்தாலும், அதற்கேற்ப உடல் செயற்படவேண்டுமே. எதிர்பாராத அதிர்ச்சியில் கால்களோ நகர மறுத்தன. உடலோ தீயின் வெப்பத்தில் எரிந்துபோய்விடும் போலத் தகிக்க, எரிந்த குடிசையின் முன் புறம் கடகடவென்று கீழே சரியத் தொடங்கியது.

அதைக் கண்டதும்தான் முழு உணர்வும் பெற்றாள் அலரந்திரி. தப்பவேண்டும்… தப்பியே ஆகவேண்டும்… எப்படி… எப்படி… பதறித் துடித்த போதே மேலிருந்து எரிந்த கட்டை ஒன்று கீழே விழப் பதறியடித்து அமர்ந்த வாக்கிலேயே பின்னால் நகர்ந்து சென்றவள், சுத்தவரப் பார்க்க முன்தினம் அவள் எடுத்துவைத்த தண்ணீர் நிறைத்த இரண்டு குடங்கள் கண்ணில் பட்டன.

அவசரமாகத் தன் போர்வையை எடுத்துக்கொண்டு குடங்களை இரண்டெட்டில் நெருங்கி, போர்வைக்கு மேல் நின்றவாறு, குடத்தைத் தூக்கித் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றத் தொடங்கினாள்.

உடல் முழுதாக நனைந்ததும், ஈரம் பட்ட போர்வையை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போர்த்தியவாறு எந்தப் பக்கத்தால் தப்புவது என்று பார்த்தாள்.

இப்போது குடிசை எல்லாப் பக்கமும் எரியத் தொடங்கியிருந்தது. சரி இன்றோடு அவளுடைய கதை முடிந்தது… என்று தைரியத்தை இழக்கத் தொடங்க, குடிசையும் தன் சக்தியை இழந்து கீழே விழத் தொடங்கிய நேரம், வாசலைக் கிழித்துக்கொண்டு பெரிய அகலமான பலகையொன்று வந்து விழுந்தது.

நிமிர்ந்து பார்க்க, அங்கே ஏகவாமன் புயல் என அவளை நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தான்.

அதுவரை என்ன செய்வது என்று தெரியாது தவித்துக்கொண்டிருந்த அலரந்திரிக்கு அவனை அங்கே கண்டதும், கடவுளே தன்னை நோக்கி வந்ததுபோல உணர்ந்தவளாய், சற்றும் யோசிக்காது அவனை நோக்கிப் பாய்ந்தாள்.

அவனும், யோசிக்கக் கூட இடம் கொடுக்காது தன்னை நோக்கி வந்தவளின் தோள்களைச் சுற்றிக் கரத்தைப் போட்டவாறு இழுத்துக்கொண்டு நெருப்பின் மீது போட்ட பலகையை நோக்கி ஓடத் தொடங்கினான்.

அப்போது பார்த்துப் பெரிய எரியும் கட்டையொன்று அவர்களை நோக்கி விழ, எங்கே அவளுக்கு அடி பட்டுவிடுமோ என்று அஞ்சியவனாக, கரங்களை அவளுடைய இடையினூடாகக் கொண்டு சென்று வயிற்றில் பதித்துத் தனக்கு முன்னால் கொண்டு வந்தவன், தன் முழு உடலாலும் அவளை மறைத்து அணைத்தவாறு குனிய, அவனுடைய தோளில் பலமாக வந்து விழுந்த கட்டையை ஒரு எத்து எத்திவிட்டு, அவளைத் தன் கை வளைவிலிருந்து விலக்காமலே வெளியே இழுத்து வந்த ஏகவாமனின் இதயம். முதன் முறையாகத் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கியது.

வெளியே எரிக்கும் தீயும், உள்ளத்திலே கனன்றுகொண்டிருந்த செந்தீயும் அவனுடைய உயிர் மெய்யை எரித்துச் சாம்பலாக்க முயல, அத்தீயிலிருந்து அவள் பொசுங்கிவிடாதவாறு தன்னுள் புதைத்த வேகத்தில், அந்த நிலையிலும் அவனுடைய உடலிலே ஒரு நடுக்கம்… அவள் மேனியின் ஸ்பரிசம்… கொடுத்த உணர்வு புதுவிதமானது… எதிலிருந்தும் மீள முடியாத உணர்வு… யாரிடமும் அறிந்திராத தெரிந்திராத உணர்வு… ஆனால் சொந்தமில்லா உணர்வு… தாளாத தவிப்புடன் அவளை அணைத்தவாறே வெளியே வந்து சேர்ந்திருந்தான் ஏகவாமன்.

அவன் வெளியே வரவும், அவளுடைய குடிசை படபடவென்று வெடித்தவாறு அப்படியே தரையில் சரியவும் நேரம் சரியாக இருந்தது.

அதே நேரம் இருபது நிமிடங்களுக்கு முன்பாக, உறக்கம் வராமல் தொழிற்சாலைக்கு அருகாமையிலிருந்த அந்தச் சிறிய வீட்டில் ஆர்ம் கட் பெனியனும், தொளதொள பான்டும் அணிந்து, இருக்கையில் சாய்வாக அமர்ந்தவாறு புத்தகம் படித்துக்கொண்டிருந்த ஏகவாமனுக்குக் கவனம் என்னவோ அதில் இல்லை.

நினைவு முழுவதும், அவனை விட்டு விலகிச் சென்ற அலரந்திரியிடமே சென்று நிலைத்திருந்தது. அவளை முதன் முதலாகக் கண்டது, அவளைத் தவறாக நினைத்தது, தம்பியின் தவிப்பு, உன்மை தெரிந்ததும் அவன் பட்ட தவிப்பு, இறுதியாக அவன் உதவி வேண்டாம் என்றுவிட்டு விலகிச் சென்றது, என்று ஒவ்வொன்றாக அவனுடைய மனத்தில் படமாக ஓட, ஏனோ அப்போதே, அந்தக் கணமே அவளிடம் சென்று தன் காதலைக் கூறிவிடவேண்டும் என்கிற வேகம் எழுந்தது.

அப்படியே தன் காதலாகக் கூறினாலும் அவள் அதை ஏற்றுக்கொள்வாளா என்கிற எண்ணமும் அவனை வலிக்கச் செய்தது. தன் முடிவைத் தெளிவாகக் கூறிவிட்டுச் சென்றவளை எப்படி அணுகுவது என்றுகூட அவனுக்குத் தெரியவில்லை. இது அவனுக்குப் புதிது. நினைத்ததை மறுகணமே அடைந்து பழக்கப்பட்டவனுக்கு, இதை மட்டும் விருப்பம்போலச் செய்ய முடியாத தன் கையாலாகத்தனத்தை எண்ணி அறவே வெறுத்தான் ஏகவாமன்.

போதாததற்கு அவன் தம்பிக்கு வாக்குக் கொடுத்திருக்கிறான்… அவளைக் காப்பேன் என்று. ஆனால் எப்படிக் காக்கப்போகிறான்…? அதற்கு அவள் ஒப்புக்கொள்ள வேண்டுமே? அருகே நெருங்கினாலே துஷ்டனைக் கண்டது போலத் தூரச் செல்கிறாள்… இதில் எப்படி அவளை நெருங்குவது? புரியாத எரிச்சலுடன் தன் கரத்திலிருந்த புத்தகத்தை மூடி ஒரு ஓரமாகப் போட்டவன், தன் கரங்களை மடித்துத் தலைக்கு அணையாக வைத்தவாறு விழிகளை மூட, அவனிடம் இறுதியாக விடைபெற்ற அலரந்திரிதான் மனக் கண் முன்னால் வந்து நின்றாள். மீண்டும் அவள் நினைவு கொடுத்த தகிப்புடன்,

“ஓ… காட்…” என்று முனங்கியவன், எழுந்தமர்ந்து தன் கரங்களால் முகத்தை முடி, முழங்கைகளைத் தொடையில் பதித்தவாறு நின்றவனுக்கு, எப்படி அவளுடைய நினைவிலிருந்து வெளியே வருவதென்றும் தெரியவில்லை.

எத்தனையோ பெண்களை அவன் பார்த்திருக்கிறான்… பழகியிருக்கிறான்… ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இந்தளவு ஆழமாக அவன் உள்ளத்தைத் தொட்டதுமில்லை, அவனுடைய நினைவை இப்படிப் பயங்கரமாகச் சூறையாடியதும் இல்லை… முதன் முறையாக ஒரு பெண் அவனை இப்படிப் பித்துப் பிடித்தவன் போல வதைக்கிறாள்… நினைவில் நின்று சுழல்கிறாள்… அதுவும் அவனுடைய தம்பியின் விதவை மனைவி… அதை நினைக்கும்போதே நெஞ்சம் கலங்கித் தவித்தது.

இந்த வதையிலிருந்து எப்படி வெளியே வருவது என்கிற குழப்பத்துடன் எழுந்தவன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து தண்ணீர் போத்தலை எடுத்துக் குளிரக் குளிர வாயில் கொட்டியபோதும் உள்ளத்தின் எரிவு மட்டுப்படவேயில்லை.

அந்த நேரம் அவனுடைய கைப்பேசி அலற, திரும்பிப் பார்த்தான். கைக்கெட்டும் தூரத்தில்தான் கைப்பேசி இருந்தது.

இந்த நேரத்தில் யார்… அதுவும் நடுச்சாமம் ஒன்று முப்பதிற்கு? சிறு பதட்டத்துடன், சரிந்து கைப்பேசியை எடுத்துக் காதில் வைக்க, மறுபக்கமிருந்து கேட்ட செய்தியில் சர்வமும் நடுங்கிப்போனான் ஏகவாமன்.

தன் கரத்திலிருந்த தண்ணீர் போத்தல் நிலத்தில் விழுவதும், உறைக்காமல், தன் அறைக்குள் நுழைந்தவன், கிடைத்த ஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்தவாறு பொத்தான்கள் அணிந்தும் அணியாமலும் காரை நோக்கிப் பாய்ந்தான்.

மனதை யாரோ பிழிவது போன்ற உணர்வில் பரிதவித்தவனாகத் தன் வாகனத்தை அசுர வேகத்துடன் ஓட்டத் தொடங்கியவனின் மனமோ அலறத் தொடங்கியது.

“ஒன்றுமாகாது… அவளுக்கு ஒன்றுமாகாது… ஒன்றுமே ஆகாது” என்று மந்திரம்போல உச்சரித்துக்கொண்டு குடிசையை நெருங்கியபோது, கிட்டத்தட்ட தீ அவளுடைய குடிசை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்த பல குடிசைகளைப் பற்றி விழுங்கத் தொடங்கியிருந்தது.

அங்கே வசித்தவர்கள் கதறித் துடித்தவாறு குடிசையின் தீயை அணைக்க முயன்றுகொண்டிருக்க, இவளுடைய குடிசை மட்டும் கேட்பாரற்று மேலும் எரிந்துகொண்டிருந்தது.

இதயமே வெடித்துவிடும் போலத் துடிக்க, அவளுடைய குடிசையை நோக்கிப் பாய்ந்தான் ஏகவாமன். குடிசையை நெருங்க, அவனையும் பற்றுவது பொலப் பாய்ந்து சீறியது தீ.

எப்படி உள்ளே போவது? நாலா பக்கமும் எரியும் குடிசைக்குள் எப்படி நுழைவது? இந்த நெருப்பில் அவளுக்கேதாவது ஆகியிருந்தால்…? நினைக்கும் போதே பாதி உயிர் அவனை விட்டு நீங்கியிருந்தது.

‘அலர்… ப்ளீஸ்… ஸ்டே எலைவ்… இன்னொரு இழப்பை என் கண்முன்னே காட்டிவிடாதே… அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை…” என்று தன்னை மறந்து வேண்டியவனுக்கு ஏனோ அவளுடைய உயிரில்தான் தன் உயிர் தங்கியிருப்பது போன்ற பிரமையில் அவளுடைய குடிசையை நோக்கி மீண்டும் பாயத் தலைப்பட்டான்.

தீயோ, நெருங்கிப்பார் என்றது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தவனுடைய பார்வையில் ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த அகன்ற நீண்ட பலகை தட்டுப்பட, ஓடிச் சென்று அதை எடுத்து வந்தவன், அவளுடைய வாசலை நோக்கி எறிய, அது பொறியைக் கிளப்பியவாறு கச்சிதமாகப் பாதையை ஏற்படுத்திச் சென்று விழுந்தது.

ஆவேசமாக இரு கரங்களையும் நீட்டி இவனை வரவேற்ற தீயை அலட்சியம் செய்தவனாகத் தன் கரங்களை முகத்துக்குக் குறுக்காக அணைபோலப் பிடித்துக்கொண்டவன், அதன் மீதேறி உள்ளே போக முயல, இவனுடைய மேலாடையில் தீப்பற்றிக் கொண்டது. ஒரு இழுவையில் ஷேர்ட் பொத்தான்கள் தெறித்து விழ இழுத்தெடுத்து வீசியவன், உள்ளே பாய்ந்தான். பாய்ந்தவனின் விழிகளில் விழுந்தாள் அலரந்திரி.

உடலை நனைத்தவாறு, ஈரமாகிவிட்டிருந்த போர்வையால் தன்னைப் போர்த்தி முடிந்தவரைத் தன்னைப் பாதுகாத்து நின்றிருந்தவளைக் கண்டதும், அதுவரையிருந்த இறுக்கமும் அச்சமும் மாயமாக மறைந்து போகச் சற்றும் தாமதிக்காது அவளுடைய இடை பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன், அவளை அணைத்தவாறு வெளியே வந்தபின்தான் தன் கை வளைவிலிருந்து அவளை விடுவித்தான்.

கண்ணிமைக்கும் நொடியில் தப்பிவிட்டாள் அலரந்திரி. நம்ப முடியாமல் எரிந்து வீழ்ந்திருந்த குடிசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அவளை இன்னொரு கரம் இறுக அணைத்துக் கொண்டது. திரும்பிப் பார்க்க, சுமதிதான் விழிகளில் கண்ணீர் மல்க அவளை அணைத்துக்கொண்டிருந்தாள்.

“சுமதி…” என்று உடல் நடுங்க அவளுடைய கரத்தைப் பற்றிக்கொண்ட அலரந்தரி கலக்கத்துடன் சுத்தவரப் பார்த்தாள். அவளுடைய வீட்டைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள குடிசைகளும் எரியத் தொடங்கியதைக் கண்டு பதறும்போதே,

“ஐயையோ… என் பேரக் குழந்தை…” என்கிற அலறல் பின்புறமிருந்து வரத் துடித்துப் பதைத்துத் திரும்பிப் பார்த்தாள் அலரந்திரி.

அங்கே அந்த எதிர்வீட்டுப் பெண்மணி, எப்போது பார்த்தாலும் இவளைக் கரித்துக் கொட்டுபவள் குடிசையைப் பார்த்து

“ஐயோ என் பேத்திமா… அவசரம் என்று வெளியே போய்விட்டு வருவதற்குள் தீப்பற்றி விட்டதே… என் பேத்தி உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாளே… நான் என்ன… செய்…” அவர் முடிக்கவில்லை, கண்ணிமைக்கும் நொடியில் குடிசைக்குள் பாய்ந்துவிட்டிருந்தாள் அலரந்திரி.

(24)

யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஏன் ஏகவாமன் கூட இதை எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அஞ்சிப் பதைத்து அவளைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தால், யாரும் கேட்காமலே, தானாக மீண்டும் போய் ஆபத்தில் விழும் அவளை என்னவென்று சொல்வது.

அவன் பதறித் துடித்தது ஒரு சில விநாடிகளே… அவளைத் தொடர்ந்து இவனும் அந்தக் குடிசைக்குள் பாய முயன்ற வினாடி, அந்தக் குழந்தையைச் சுற்றிப் போர்வையைப் போட்டுத் தன் மார்போடு இறுக அணைத்தவாறு பாய்ந்து வெளியே வந்துவிட்டிருந்தாள் அலரந்திரி.

தன் கரத்திலிருந்த குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பியபோதுதான் ஏகவாமன் பார்த்தான். அவளுடைய போர்வையிலும், காலடிச் சேலையிலும், கீழே தொங்கிக்கொண்டிருந்த முந்தானையிலும் தீப்பற்றத் தொடங்கியிருந்ததை.

பதறியவனாக அவளை நோக்கிச் சென்றவன், அவளைச் சுற்றியிருந்த போர்வையை இழுத்தெறிந்து, இருந்த பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்பது கூட உரைக்காமல் தன் கரத்தாலேயே எரிந்த தீயை அணைக்க முயன்றான். ஆனால் தீயோ சேலையைப் பற்றி மேலேறத் தொடங்க, இனி தீயைக் கரங்கள் கொண்டு அணைக்க முடியாது என்பது புரிய, யாரோ ஒருவர் வாளியில் தண்ணீர் கொண்டு செல்வதைக் கண்டு அதைப் பறித்து இழுத்து அலரந்திரியின் மீது ஊற்ற, அவளைப் பற்றத் தொடங்கியிருந்த நெருப்பு உடனே அணைந்து போனது.

நெருப்பு அணைந்துவிட்டது, ஆனால் அவன் மனத்தில் எழுந்த பூகம்பத்தை எப்படி அணைப்பது. தன் கரத்திலிருந்த வாளியை ஓங்கி விசிறி அடித்தவன், இடையில் உள்ளங்கைகளைப் பதித்து,

“xxx xxx” என்று அத்தனை ஆத்திரத்தையும் மொத்தமாய்த் தேக்கிச் சீறிவிட்டு, கண் மண் தெரியாமல் கொதித்தெழுந்த ஆத்திரத்தை அடக்கும் வழி புரியாமல் ஆவேசத்துடன் அலரந்திரியை நெருங்க, அவன் வேகத்தைக் கண்டு அலரந்திரி ஒரு கணம் அரண்டுதான் போனாள்.

அடங்கும் ஆத்திரமா அவனுடையது… ‘எத்தகைய பெரிய ஆபத்தில் சிக்க இருந்தாள்… சிக்கியிருந்தாலும், மீளும் ஆபத்தா அது? உடலில் தீப்பற்றியிருந்தால்…’ நினைக்கும் போதே ஈரக்குலையே நடுங்கியது… தீக்காயத்தின் வேதனைபற்றி இந்த முட்டாளுக்கு என்ன தெரியும்? அந்த வேதனையை அவளால் தாங்கிக்கொள்ள முடியுமா? முட்டாள்! முட்டாள்…’ என்று எண்ணியவன், அவளைத் திட்ட வாயைத் திறந்தான். ஆனால் வார்த்தைகளோ வெளிவராது தடுமாற, வாயைத் திறப்பதும், பின் மூடுவதுமாகத் திணறியவன், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாதவனாக,

“முட்டாள்…. முட்டாள்… அறிவிருக்கிறதா உனக்கு… யாராவது இத்தகைய பெரிய ஆபத்தில் தெரிந்தே போய் விழுவார்களா…? தீ உடலில் பட்டிருந்தால் என்வாயிருக்கும்… அறிவில்லை… அப்படி என்ன அவசரம்… தீக்குளிக்க…” என்று அவன் கர்ஜிக்க, அவனுடைய கர்ஜனையில் அந்த இடமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.

ஆனால் அலரந்திரியின் தடுமாற்றமோ சொற்ப நேரம்தான் நீடித்தது. விழிகள் எரிந்து முடிந்த தீயை வெறுமையாகப் பார்த்துவிட்டுப்பின் இவனை ஏறிட்டன.

‘இவனால்தான்… எல்லாம் இவனால்தான்… அந்த ரோட்டோர ரோமியோக்களை இவன் தட்டிக் கேட்டதால்தான் இவளுக்கு அந்த நிலை… அவர்களைத் தவிர, வேறு யாரும் இத்தகைய ஈனச் செயலைச் செய்திருக்க மாட்டார்கள்…. அவள் ஒருத்திக்காக, இத்தனை பேரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிட்டானே… இனி இப்படியொரு குடிசையைப் போட அவர்களால் முடியுமா? அதற்கு எத்தனை சிரமப்படவேண்டும்?’ அதை எண்ணும்போதே அவளுடைய அத்திரம் பன்மடங்காகப் பெருகியது.

ஆத்திரத்துடன் அவனை நெருங்கியவள், இரண்டு கரங்களாலும் அவன் மார்பில் அடித்துத் தள்ளிவிட, அதை எதிர்பார்க்காத ஏகவாமன் ஓரடி பின்னால் சென்று தன்னைச் சமப்படுத்தி நின்றவனாக அவளை ஏறிட்டான். ஆனால் அவளோ, மீண்டும் அவனுடைய மார்பில் அடித்துத் தள்ளிவிட்டவாறு,

“நீதான்… உன்னால்தான்… இங்கிருப்பவர்களுக்கு இந்த நிலை… உன்னால்தான்… இன்று இவர்கள் எல்லோரும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்…” என்று சீற, இவனோ புரியாமல் விழித்தான்.

“வட்… நானா… நானா காரணம்…. என்ன உளறுகிறாய்?’ என்று அவன் தன் சுருதியைச் சற்றுக் கூட்ட, இவளோ அவனை எரிப்பது போலப் பார்த்து, கன்னத்தில் வடிந்த கண்ணீரை ஆவேசமாகத் துடைத்துவிட்டவாறு,

“நீதான்…! நீதான் காரணம்… பாவி…” என்றவள் தன் வலது சுட்டுவிரலைத் தூக்கி இடது தோளுக்கு மேலாகக் காட்டி,

“அன்று அந்த நான்கு பேரையும் சும்மா விட்டிருந்தால்… இன்று இந்த நிலை நமக்கு வந்திருக்காது… தெரியுமா… உனக்கென்ன… ராஜ வாழ்க்கை வாழ்பவன் நீ… ஆனால் இவர்கள்… நாளாந்தம் ஐந்துக்கோ பத்துக்கோ உடலை உருக்கி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் ஒரு வேளை உணவைக் கூடக் கணக்குப் பார்த்துச் சாப்பிடுவார்கள்… அவர்களுக்கென்று இருப்பதே இந்தக் குடிசைதான்… அதுவே நாசமாகிவிட்டதே… இதற்கெல்லாம் காரம் நீதான்… நீ மட்டும்தான்… இப்போதே… இந்தக் கணமே அவர்களின் நட்டத்தை உன்னால் ஈடு கட்ட முடியுமா” என்று சீற, ஏகவாமனோ எதுவும் பேசாமல் அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளோ அடங்காதவளாக,

“மிஞ்சி மிஞ்சிப் போனால் என்னை மட்டும்தான் சிதைத்திருப்பார்கள்… இப்போது…” என்றவள் திரும்பிப் புகை கிளம்பிக்கொண்டிருந்த அந்த இடத்தை வேதனையுடன் பார்த்தாள்.

கூடவே கலங்கியிருந்த சுற்றத்தையும் ஏறிட்டாள். அவர்களின் கையறு நிலையைக் கண்டபோது பெரும் குற்ற உணர்ச்சியே எழுந்தது. வேதனை மாறாமல் அவனை நிமிர்ந்து பார்த்துக் குரல் கம்ம,

“இவர்களின் வாழ்க்கையே சிதைந்துவிட்டதே…” என்றாள். பின் மீண்டும் ஆவேசம் கொண்டவளாக,

“அப்பா… சாமி… உன்னைக் கும்பிட்டுக் கேட்கிறேன்… தயவு செய்து இடத்தைக் காலி செய்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏகவாமனுக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவன்,

“என்னம்மா… நிறையத்தான் பேசிக்கொண்டிருக்கிறாய்… தம்பி…” என்று எதையோ சொல்ல வர, சடார் என்று திரும்பிய ஏகவாமன், சொல்லவந்தவரை ஒரு பார்வை பார்க்கக் கப்பென்று தன் பேச்சை அடக்கிக்கொண்டார் அவர்.

“அதில்லை தம்பி… இந்தப் பெண்… புரியாமல்…” என்று கூற வரத் தன் கரத்தைத் தூக்கி அவர் பேச்சைத் தடுத்தவன்,

“அவர்கள் பேசட்டும் ஆனந்தன்” என்றவன், பின்

“பொலிசுக்கும், அம்புலன்சுக்கும் சொல்லிவிட்டீர்களா…” என்றான் பொறுமையற்றவனாக.

“ஆமாம் தம்பி…” என்று அவர் முடிக்கவில்லை அலரந்திரி அந்த அந்த ஆனந்தனைச் சந்தேகத்துடன் பார்த்தாள்.

‘இவன்… இவனும்தானே இவள் எங்கே போனாலும் பின் தொடர்வதும், இவளைப் பார்த்ததும் இளிப்பதுமாக இருந்த இன்னொரு ரோமியோ… இவன் எப்படி ஏகவாமனுடன்’ என்று குழப்பத்துடன் பார்க்க,

“உனக்குப் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டவர் அலர்…” என்று அவன் முடிக்கவில்லை, அவனைக் கொல்லும் ஆத்திரத்துடன் பார்த்தாள் அலரந்திரி.

அவளுக்குக் காவலா? யாரைக் கேட்டு வைத்தான்? எத்தனை தைரியம் அவனுக்கு…? பெரும் கொதிப்புடன் அவனிடம் எதையோ கூற வர, அந்த நேரம் பெரும் சத்தத்துடன் காவல்துறை வண்டிகளும், அம்புலன்சும், தீயணைக்கும் வண்டிகளும் வந்து சேர்ந்தன. அடுத்துக் காட்சிகள் மாறின.

காயம் பட்டவர்கள் அம்புலன்சில் ஏற்றப்பட்டனர். அதில் நால்வர் இறந்திருக்க, இறந்தவர்களின் உடல் இன்னொரு வண்டியில் ஏற்றப்பட்டது.

இன்னும் ஏகவாமனின் மீது அதிக ஆத்திரத்திலிருந்தவளின் அருகே நிழல் ஆடத் திரும்பிப் பார்த்தாள். எப்போதும் அலரந்திரியைக் கரித்துக்கொட்டும் அந்த அம்மாதான் இவளுடன் எப்படிப் பேசுவது என்று புரியாமல், தயக்கத்துடன் நின்றிருந்தார்.

அவரைக் கண்டதும் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்று அஞ்சியவள் போலப் பார்த்தவள், பின் தன்னைச் சமாளித்தவளாக,

“உங்கள் பேத்திக்கு ஒன்றுமில்லையே…” என்றாள் தயக்கத்துடன். உடனே தன் இரு கரங்களையும் கூப்பி,

“என்னை மன்னித்துவிடு தாயி… ஒவ்வொரு நாளும் உன்னை அதிர்ஷ்டமில்லாதவள் என்று இந்த வாயால் கரித்துக் கொட்டியிருக்கிறேன்… ஆனால் நீ… அதை எல்லாம் மனதில் வைத்திருக்காது உன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் என் வம்சத்தையோ காத்துக் கொடுத்துவிட்டாய்மா… நான் கூட உள்ளே போகத் தயங்கினேன்… ஆனால் நீ… இதை ஆயுசுக்கும் மறக்கமாட்டேன்… இவளை என் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு என் மகனும் மருமகளும் இரவு காவலுக்கென்று சென்றுவிட்டார்கள்… இந்த நிலையில்… இந்தக் குழந்தைக்கு ஏதாவது நடந்திருந்தால்…” என்று தாளமுடியாத வேதனையில் கதற, அவரைக் கண்டு பதறிய அலரந்திரி,

“என்னம்மா… இது… உங்களைவிடச் சிறியவள் நான்… என்னைப் போய்க் கும்பிடலாமா… நீங்கள் எல்லாரும் எனக்கு உறவுகள்போல, உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் பார்த்துக்கொண்டிருப்பேனா… தயவு செய்து இதைப் பெரிதாக எடுக்காதீர்கள்…” என்று கூப்பிய அவருடைய கரத்தைப் பற்றி இறக்கியவாறு கூறத் தன் கண்களைத் துடைத்த அந்தப் பெண்,

“நீ என்ன சொன்னாலும் மனது அடங்கமாட்டேன் என்கிறது தாயி… மனது குற்ற உணர்வில் தவிக்கிறது…” என்று தழுதழுக்க

“ஷ்… உங்கள் பெண் என்றால் திட்டியிருக்க மாட்டீர்களா… அப்படி நினைத்துக்கொள்ளுங்கள்…” என்று சொல்லும்போதே மறுப்பாக அவர் எதையோ சொல்லவர, உடனே அவர் கரங்களைப் பற்றித் தடுத்தவள்,

“அங்கே பாருங்கள்… உங்கள் பேத்தி அழுகிறாள்… போய் அவளைக் கவனியுங்கள்…” என்று இன்முகத்துடனேயே அனுப்பிவிட்டு வேறு யாருக்கும் உதவி தேவைப்படலாம் என்கிற எண்ணத்தில் திரும்ப, அவளுடைய கரத்தை ஒரு அழுத்தமான கரம் பற்றிக்கொண்டது.

அந்தக் கரத்தின் ஸ்பரிசமே அது யார் என்பதைக் கூற, திரும்பி ஆத்திரத்துடன் பற்றிய அவன் கரத்தை வெறித்தாள்.

“எடுடா கையை…” என்றாள் கடும் சீற்றத்துடன். ஒருவர் சொல்லி அதைச் செய்தால் அது ஏகவாமன் அல்லவே.

அவள் தனக்குக் கொடுத்த மரியாதையைப் பொருட்டாகவே மதிக்காதவனாகப் பற்றிய கரத்தை விடாமலே இழுத்துச் சென்று அம்புலன்சுக்கு முன்னாடி நிறுத்தி அங்கிருந்த தாதியைப் பார்த்து,

“இவளுடைய காயத்தைக் கொஞ்சம் பாருங்கள்…” என்று ஒப்படைத்து விட்டுத் திரும்ப,

“சார்… கொஞ்சம் பொறுங்கள்… உங்கள் தோளிலும் அடிபட்டிருக்கிறது…” என்றார் அவர்.

அதைக் கேட்டதும் அலரந்திரியும் ஒரு வித பதட்டத்துடன் திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் அவளும் கவனித்தாள்.

அவன் ஆம் கட் பெனியன் அணிந்திருந்ததால், அவனுடைய வலது புறத்துத் தோளில் இரண்டு உள்ளங்கை அளவிற்கு எரிகாயம் ஏற்பட்டிருந்தது.

இடது கரத்தைத் தூக்கிக் காயத்தைத் தொட்டுப் பார்த்தவன், திரும்பி அந்தத் தாதியைப் பார்த்து,

“ஐ ஆம் ஓக்கே… நீங்கள் அவர்களைக் கவனியுங்கள்…” என்று விட்டுத் திரும்ப முயல,

“பட் சார்…” என்று தாதி மீண்டும் தடுக்க முயன்ற விநாடி, திரும்பியவன் அந்தத் தாதியை ஒரு பார்வை பார்த்தான்.

அந்தப் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று, தாதியின் வாயை மூட வைத்தது.

அதன்பின் அலரந்திரியை அழைத்துக் காயத்தைப் பரிசோதிக்கத் தொடங்க, ஏகவாமன் கைப்பேசியை எடுப்பதற்காகப் பான்ட் பாக்கட்டில் கை வைத்தான். உள்ளங்கை எரிந்தது. எடுத்துப் பார்த்தான். தீ பட்டுச் சில இடங்களில் கொப்பளம் தோன்றி இருந்தது. அலரந்திரியின் சேலையில் பற்றிய தீயை அணைத்தபோது ஏற்பட்டிருக்கவேண்டும் என்பது புரிந்தது.

சலிப்புடன், வலியை ஓரம்கட்டிவிட்டுக் கைப்பேசியை எடுத்துச் சேதுவை அழைத்தான். உடனேயே இவன் அழைப்பை ஏற்றுக்கொண்டான் சேது. நடந்ததைச் சுருக்கமாகக் கூறி,

“இவர்கள் எல்லாரும் தற்காலிகமாகத் தங்குவதற்கு நம்முடைய தொழிற்சாலையுடைய ஒரு பக்கத்தை ஒதுக்கச் சொல்லு சேது… அவர்களுக்குரிய குடிசையைக் கட்டி வரும் வரைக்கும் அவர்கள் அங்கேயே தங்கட்டும். சாப்பாடு, தண்ணீர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்…” என்று உத்தரவிட்டுவிட்டு அலரந்திரியை விழிகளால் தேடினான்.

கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அவளுடைய சேலையைச் சற்றுத் தூக்கி, மருந்திட்டுக்கொண்டிருந்தார் தாதி. அவர்களை நெருங்கியவன்,

“ஹெள இஸ் ஷி…” என்றான். அவனுடைய குரலைக் கேட்டுப் பதற்றத்துடன் தன் சேலையைக் கீழே இறக்க, தாதியோ,

“பெரிய அடி ஒன்றுமில்லை சார்… காலில் மட்டும் தீக்காயம் பட்டிருக்கிறது… மற்றைய காயங்களெல்லாம் சிறியவைதான்… பயப்பட ஒன்றுமில்லை…” என்றதும்தான் இவனுக்குப் பெரும் நிம்மதியானது.

பின் மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு நிமிர்ந்தபோது, அவனுடைய கைப்பேசி அலறியது எடுத்துப் பார்த்தான். அன் நோன் என்று வந்திருந்தது.

“யாரிது… அன் நோன்…?” என்று குழம்பியவனாக எடுத்துக் காதில் வைக்க,

“அடடே! என்ன… உன் தம்பி மனைவியைக் காப்பாற்றிவிட்டாய் போலிருக்கே…” என்கிற கரகரத்த குரல் மறுபக்கமிருந்து வர, அந்தக் குரலுக்கு உரியவன் யார் என்று புரிபட்டுப் போக உடலுடன் உள்ளமும் பற்றியெரிய, அதற்கேற்ப உடல் நடுங்கக் கண்கள் சிவக்க, சீறும் வேங்கையென நின்றான் ஏகவாமன்.

What’s your Reaction?
+1
16
+1
2
+1
1
+1
0
+1
0
+1
4

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!