Wed. Jan 15th, 2025

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 20

(20)

நற்குணசேகரத்தின் பூர்வீகக் கோட்டையொன்று கம்பரவாவில் இருந்தது. மலைப்பிரதேசம் என்பதால் இயற்கை வளங்களுக்கு அங்கே குறைவிருந்ததில்லை. மலைகள், ஆறுகள், காடுகள் என்று விழிகளுக்கு விருந்து கொடுக்கும் அழகிய சின்னக் கிராமம் அது. கூடவே பயங்கரமான பள்ளத்தாக்குகளும், சிறுத்தை போன்ற காட்டு மிருகங்களும் இருப்பதால், மிகுந்த ஆபத்தும் நிறைந்த இடமே. ஆனாலும் அங்கே செல்வதென்றால் அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் மானை வேட்டையாடுவது ஜெயவர்மனுக்கு மட்டுமல்ல, சேதுபதிக்கு பிடித்தமான பொழுதுபோக்கே. அதனால் விடுப்பு நாட்களில் அங்கே சென்று தங்கிவிட்டு வருவது சேதுபதி குடும்பத்தின் வழக்கம்.

அன்றும் சேர்ந்தாற்போல அனைவருக்கும் விடுப்புக் கிடைக்க, கம்பரவாவில் உள்ள, கோட்டைக்கு அனைவருமே சென்றிருந்தனர். சேர்ந்தாற் போல ஒரு கிழமை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் கிராமத்திற்குக் கிளம்பும்போது, தாத்தாவும் பாட்டியும் அங்கே சற்று நாட்கள் தங்கிவிட்டு வருவதாகக் கூற இவர்கள் மட்டும் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

அப்போதுதான் அது நடந்தது. திடீர் என்று வண்டியின் டயர் வெடிக்க, வாகனம் தாறுமாறாக நிலை கெட்டு ஓடி ஒரு பாறையோடு மோதி நின்றது.

திடீர் என்று ஏற்பட்ட விபத்தில் அதிர்ந்து போன சேதுபதி, வாகனத்தை விட்டு வெளியே வந்தபோது, சிலரால் சுத்தி வளைக்கப்பட்டார். என்ன ஏது என்பதை உணர்வதற்குள்ளாகவே அடுத்த கணம், வெட்டிச் சாய்க்கப்பட்டார்… சேதுபதியை யாரோ வாளால் வெட்டுவதைக் கண்டு, பதறியவாறு கமலாதேவி இறங்க, மறு கணம் அவரும் தரை சாய்ந்தார்… தாய் தந்தை சாய்வதைக் கண்டு அலறிய சொளந்தர்யா வாகனத்திற்குள்ளேயே அமர்ந்தவாறு அதிர்ந்து போய் நிற்க அவள் புறத்துக் கதவு திறக்கப்பட முயன்ற கணம், மறு பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்த ஜெயவாமன், சௌந்தர்யாவை இழுக்க முயன்றவர்களைத் தள்ளிவிட்டுக் காலால் உதைத்து தங்கையைக் காக்க முயல, முதுகில் பலமான வாள் வெட்டு விழுந்தது.

இயலாமையில் தரை சரிய, வெளியே இழுத்து எடுக்கப்பட்ட சௌந்தர்யாவும் தரை சாய்ந்தாள்.

அவர்களின் அகோர வாள் வீச்சுக்கு இணையாக இவனால் நிற்கவே முடியவில்லை. எந்த ஆயுதங்களும் இல்லாமல், மனதிலிருந்த பலவீனத்துடன், தாய் தந்தை இறந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று புரியாது தத்தளித்தவன், வேறு வழியில்லாமல், தடுமாற்றத்துடன் எழுந்து, ஓடத் தொடங்கினான்.

அவன் ஓடியதைக் கண்ட முகமூடி போட்ட ஒருவன்,

“டேய்… அந்த வம்சமே இருக்கக் கூடாது… கண்டு பிடித்து வெட்டுங்கள்டா… இவர்களின் இறப்பில் வெளிநாடு சென்றவன் கதறி அடித்து ஓடி வரவேண்டும்…” என்று கர்ஜிக்க, அவர்கள் கூறியதைக் கேட்டவாறே ஓடிய ஜெயவாமனின் கால்கள நடுங்கின. முதுகு வேறு வலித்தது. எந்த நேரமும் மரணம் அவனைத் தழுவலாம்… முடிந்த வரை உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடியவன், முடிவில் ஓட முடியாது ஓரிடத்தில் தடுமாறி நின்றான்.

காரணம் கீழே பெரிய பள்ளம்… விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. சக்தியெல்லாம் வடிந்தவனாக, அதற்கு மேல் ஓட முடியாது அப்படியே மடங்கிச் சரிய, வெற்றி நகைப்புடன் ஜெயவாமனை நெருங்கினான் ஒருவன்.

“டேய் அவனைப் பிடித்து வாருங்கள்…” என்று அந்த முகமூடி கொக்கரிக்க, எக்காரணம் கொண்டும், எதிரிகளின் பிடியில் சிக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டவனாக எழுந்த ஜெயவாமன் சற்றும் யோசிக்காமல் அந்தப் பள்ளத்தில் விழ, அந்த ஆழமான பள்ளம் அவனை விழுங்கத் தொடங்கியது.

இரண்டு நாட்கள் கழிய. ஊருக்குச் சென்ற மகனிடமிருந்து தகவல் வராது போக, யோசனையான தாத்தா தெரிந்தவர்களை விசாரித்தபோதுதான் யாரும் ஊருக்கு வராததே தெரிய வந்தது.

பதறி அடித்துத் தெரிந்தவர்களிடம் விசாரித்து முடிவில் காவல் துறையிடம் சொல்லி அவர்கள் விசாரணை என்று இறங்கியபின், இரண்டு கிழமைகளுக்குப் பிறகு அழுகிப்போன மூன்று பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அது தன் மகன் மருமகள், பேத்தி என்று உறுதி சொல்வதற்குள்ளாகத் தாத்தா இரண்டு முறை மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார். பெற்றது ஒன்றே ஒன்று… அதையும் உருத்தெரியாது கண்டுபிடித்தால்… எப்படி அவர் இதயம் நிற்காது துடித்ததோ. அந்தக் காட்சியை மனைவி பார்க்கக்கூடாது என்பதற்காக, ஒருவராகவே நின்று அடக்கம் செய்தார். செய்தியை அறிந்து பாட்டி பட்ட துடிப்பு. எப்போதும் தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்ற தாத்தா அந்த இடத்தில் பயங்கரமாகத் தோற்றுப்போய், தன் மனைவியைத் தேற்றும் வழி தெரியாது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தார்.

அவரை மருத்துவமனையில் சேர்த்துப் பிழைக்க வைப்பதற்குள் மீனாட்சிப் பாட்டிக்கு உயிரே சென்று வந்தது. இதற்கிடையில் ஜெயவாமனின் உடலைத் தேடி அது கிடைக்காது போக, ஏதாவது காட்டு மிருகங்கள் எடுத்துச் சென்றிருக்கும் என்று முடிவு செய்தனர். யார் கொலை செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள், எதுவும் கிடைக்காத காரணத்தால், குற்றவாளிகள் சுதந்திரமாகவே சுற்றினார்.

தாத்தா விழிக்க எடுத்துக்கொண்ட ஒரு கிழமைகளில் பின், இனியும் ஏகவாமனிடம் மறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பாட்டி, அத்தனை தைரியத்தையும் சேர்த்து ஏகவாமனைத் தொலைபேசியில் அழைத்தார்.

கிட்டத்தட்ட மூன்று கிழமைகளாக யாரிடமும் இருந்து தொலைப்பேசி வராத நிலையில் தவித்துப் பதறிப்போய் இருந்தவனுக்கு இந்த இடி போன்ற செய்தி கிடைத்தபோது… அவன் துடித்த துடிப்பு.

அழிந்ததே அவனுடைய உலகமல்லவா… எப்போதும் அவனைக் கனிந்த முகத்துடன் வரவேற்கும் தாய், கம்பீரமாய்ப் பெருமையாய் பார்க்கும் தந்தை, அண்ணா அண்ணா என்று அவனைச் சுற்றி வரும் தங்கை, தமையன் சொல்லே மந்திரமென வாழ்ந்த தம்பி… கடவுளே இத்தனை பேரையும் மொத்தமாகவா இழந்துவிட்டான்… உயிரை உருக்குலைத்த வலியைத் தனக்குள் அமிழ்த்தியவாறு படிப்பை இடை நிறுத்தி ஈழம் வந்தான். வீட்டிற்கு வந்தபோது அவனை வரவேற்றது மாலைகள் போட்ட நான்கு படங்களும்தான்.

அழவும் முடியாமல், கதறவும் முடியாமல், கம்பீரமாக நிற்கவும் முடியாமல் அவன் பட்ட சித்திரவதை…. அப்பப்பா… அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா என்ன?

இனி அவன் இந்த உலகில் தனியாள்… அவனுக்கென்று யாருமில்லை என்பதை உணர்ந்தபோது ஏற்பட்ட தவிப்பை விட, ஒரு அண்ணனாய். உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய தம்பி தங்கைகள் வெட்டப்பட்டு மரணித்தார்கள் என்கிற செய்தியை அறிந்தபோது அவன் ஈரக்குலையே நடுங்கியது.

பிறகென்ன… புதிய ஏகவாமன் பிறந்தான். சும்மாவே அகோரத் தாண்டவம் ஆடுபவன், உருக்கொண்டான். வீரபத்திரனும், நரசிம்மரும் இணைந்தால் எப்படி இருக்கும்… அசுர வேட்டைக்குக் கிளம்பிவிட்டான் ஏகவாமன்.

அவனுக்கு இணையாக அந்த ஊர் மக்களே கையில் அருவாளை எடுத்தனர். இழந்தது அந்த ஊரின் கடவுளையல்லவா…. ஆனால் அவர்களை இவன்தான் தடுத்தான். அவன் ஒருவனுக்காக, அப்பாவி மக்கள் பலியாவதை அவன் விரும்பவில்லை. தவிரத் தந்தை கூட அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். அதனால், தன் குடும்பத்தை அழித்தவர்களைத் தன் கரத்தால் அழிக்கவேண்டும் என்று வேண்டிக் கேட்டு அவர்களை அடக்கி வைத்தான்.

தன் குடும்பத்தை அழித்த கயவர்களைத் தேடித் தேடிக் கொன்றான். ஆனால் யாருக்கும் அந்த முகமூடி அணிந்தவன் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் ஏகவாமன் கருந்தேவனின் கையாட்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. கரங்களில் தூக்கிய வாள் பல இரத்தத்தைக் குடித்தபின்பே சற்று அடங்கியது.

அவனுடைய சீற்றத்தைத் தாங்க முடியாது, கருந்தேவன் மறைந்து கொண்டான். கருந்தேவனின் இளைய மகன் வீரதேவனைத் தேடிக்கொண்டு சென்றான். அவன் கற்ற இடத்தில் விசாரித்தபோது, அவன் படிப்பை விட்டுச் சென்று இரண்டு மாதங்களுக்கும் மேலானது என்று தெரியவர, தன் குடும்பத்தைக் கொன்றதற்கும், வீரதேவனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று எண்ணிய ஏகவாமன், அவனை வேட்டையாடுவதற்காக எல்லா இடங்களிலும் வலைவீசத் தொடங்கினான். ஆனால் வீரதேவன் எப்படி இருப்பான் என்று யாருக்குமே தெரியாததால், அவனைக் கண்டு பிடிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. எது எப்படியோ என்னதான் முயன்றும் கருந்தேவனையும் அவனுடைய இளைய மகன் வீரதேவனையும் அவனால் இன்று வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

இதே நேரத்தில் ஏகவாமனைக் கொல்வதற்குப் பல முறை முயன்றும் படு பயங்கரமாகத் தோற்றுப் போனான் கருந்தேவன். இந்த நிலையில் தாத்தாவும் பாட்டியும் தன்னோடு இருப்பது பாதுகாப்பில்லை என்பதைப் புரிந்துகொண்ட ஏகவாமன் அவர்களைக் கோட்டைக்குப் போகுமாறு கேட்டுக் கொள்ள முதலில் மறுத்துவிட்டார் தாத்தா.

“இப்போது எனக்கிருக்கும் உறவு நீங்கள் மட்டும்தான் தாத்தா… உங்களையும் இழக்க நான் தயாராக இல்லை… தற்போதைக்கு உங்களுக்குரிய பாதுகாப்பு அந்தக் கோட்டைதான்… சுத்தவர மலைகளும் பள்ளத்தாக்குகளும் பயங்கரக் காடும் என்று யாரும் இலகில் உள்ளே நுழைய முடியாது. நீங்கள் அங்கே இருந்தால் எனக்குப் பிரச்சனை குறையும் தாத்தா… ப்ளீஸ்… இங்கே எல்லாவற்றையும் சுத்தப்படுத்தும் வரைக்கும் அங்கே தங்கியிருங்கள்… எனக்கு நீங்களாவது வேண்டும்” என்று கலங்கிய பேரனின் நிலை புரிந்து மனைவியை அழைத்துக் கொண்டு கோட்டைக்குக் கிளம்பினார் பெரியவர்.

இதற்கிடையில் தந்தை, தாய், தங்கை என்று மூவரின் உடல் கிடைக்கப்பெற்ற இடத்தில் தம்பியின் உடல் கிடைக்காதது அவனைச் சற்று யோசிக்க வைத்தது. அதுவும் தேடிய இடத்தில், ஒரு மரத்தில் கிழிந்து தொங்கிய ஒரு ஷேர்ட்டின் பகுதியைக் கண்டவனுக்குத் தன் தம்பி தப்பி ஓடியிருக்க வேண்டும் என்பது புரிந்தது. நூற்றில் ஒரு வீதமாவது அவன் உயிரோடு இருக்கமாட்டானா என்று தேடத் தொடங்கினான்.

ஆனால் எங்கே என்று தேடுவது… எப்படியென்று தேடுவது… மூன்று வருடங்களாக அவன் இடைவிடாது தேடிக்கொண்டேதான் இருந்தான்.

இதற்கிடையில் சேதுதாசன் இவனோடு வந்து இணைந்தான். அவனுடைய தாய் தந்தை சேதுபதியையே தங்கள் கடவுளாக நினைத்து வாழ்ந்ததால், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்குச் சேதுதாஸ் என்று பெயர் வைத்தார்கள். இளம் வயதிலேயே ஒரு விபத்தில் அவர்கள் மரணிக்க, சேதுபதிதான் பணம் கட்டி அவனைப் படிப்பித்தார். அந்த நன்றிக்கடனுக்காக ஏகவாமனுக்கு உதவும் நோக்கோடு தன் படிப்பை இடை நிறுத்தி இவனோடு கைகோர்த்தான் சேது. எப்படியாவது தன்னைக் காத்த சேதுபதியைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற ஆத்திரம் மட்டும் அவனுக்கு அடங்கவே இல்லை. அன்றிலிருந்து ஏகவாமனுக்க வலக்கை, இடக்கை எல்லாக் கையும் அவனானான்.

 

இந்த நிலையில் ஒரு வேலையாகப் போய்க்கொண்டிருந்தபோது, தெருவோரம் ஒரு பெண் விபத்தில் சிக்கியிருப்பது தெரிய, பதறியவனாக அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.

தன்னோடு வந்த சேதுவிடம், அந்தப் பெண்ணை அனுமதிப்பதற்கான வேண்டிய ஆவணங்களைச் செய்யுமாறு பணிந்து விட்டு, இவன் புறப்பட்ட நேரத்தில் மருத்துவமனை சீருடை அணிந்திருந்த ஒருவன், ஸ்ட்ரச்சரில் ஒருவரைப் படுக்க வைத்து இவனுக்குக் குறுக்காகத் தள்ளிவர, அவர்களுக்கு இடம் விட்டு விலகி நின்ற வேளையில், இவனைத் தாண்டிச் செல்லும்போது, அந்த நோயாளியின் கரம் கீழே விழுந்து ஏகவாமனின் தொடையைத் தடவிச் சென்றது. அந்தக் கணம், ஏனோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனுக்கு. திரும்பிப் பார்த்தால் மறுபக்கம் சரிந்திருந்த தலைதான் தெரிந்தது.

தன்னையும் மறந்து திரும்பிப் பார்க்க, ஸ்ட்ரெச்சரை மறைத்துக்கொண்டு யாரோ இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். தன் தோள்களைக் குலுக்கிவிட்டுத் திரும்பிய ஏகவாமனின் புத்தியில் திடீர் என்று ஒரு மின்னல். அவன்மீது வந்து விழுந்த கரத்தின் மணிக்கட்டின் மேல் வரிசையாய் இருந்த காயம். அந்தக் காயம், காவடி எடுக்கும்போது கூரிய வேல்கள் குத்துவதால் வருவது. பதறி அடித்துக்கொண்டு ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடினான். எந்தப் பக்கம் போவதென்று தெரியவில்லை. உடனே அந்த வைத்தியசாலையின் முக்கிய வைத்தியரைத் தேடி விரைந்தான். இவன் யார் என்று வைத்தியர் முதலே அறிந்திருந்ததால் உடனேயே அவனுக்கு வேண்டிய உதவியைச் செய்தார்.

இறுதியாக அது ஜெயவாமன்தான் என்று அறிந்தபோது அவன் பட்ட ஆனந்தம்… ஏதோ உலகமே மீளக் கிடைத்த மகிழ்ச்சியல்லவா அவனுக்கு.

உடனே அவர் கேட்ட பணத்திற்கு அதாவது அவர் சொன்ன பொய்க்குப் பத்து மடங்கு அதிகமாகவே பணத்தைக் கொடுத்து, தன் தம்பி இறந்ததாகவே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டு ஜெயவாமனை அம்புலன்சில் ஏற்றிக்கொண்டு கொழும்பில், அவன் தந்தையின் நண்பரான பாரராஜசிங்கத்தின் பிரசித்திபெற்ற மருத்துவமனைக்கு யாருமறியாமல் கொண்டு வந்து சேர்த்தான்.

என்று தடையில்லாது கூறிக்கொண்டு வந்தவன், பின் திரும்பித் தன் தம்பியை ஏறிட்டுப் பார்த்தான்.

அன்று நான் அந்த வைத்தியசாலைக்கு வராமல் இருந்திருந்தால் உன்னைக் கண்டுபிடித்தே இருந்திருக்க மாட்டேன் ஜெயன்…” என்றவன்,

“நீ மட்டும் எப்படித் தப்பித்தாய் கண்ணா…” என்றான் பெரும் வலியுடன். மெல்லியதாகச் சிரித்தவன்,

“நீ செய்யாததை, செய்யக் கூசும் செயலைச் செய்தேன் அண்ணா… தப்பித்து ஓடினேன்…” என்றவன் அதற்கு மேல் சொல்ல முடியாது திணற, வேகமாகத் தன் தம்பியை நெருங்கிய ஏகவாமன்,

“இல்லைடா… நீ புத்திசாலி… அதனால் தான் தப்பித்தாய்… இல்லையென்றால்…” என்று முடிக்க முடியாமலும் கலங்க, தன் தமையனின் கரத்தைப் பற்றித் தன்னோடு இறுகப் பற்றிக்கொண்ட ஜெயவாமன் ஆழ மூச்செடுத்து விட்டவாறு,

பேசுவதற்குச் சற்று சிரமப்பட்டான். மூக்கிலும் வாயிலும் ஓடிய வயர்கள், அவனுடைய பேச்சைத் தடை செய்ய, அதை எடுக்க முயன்றான். உடனே ஜெயவாமனின் கரத்தைப் பற்றித் தடுத்த ஏகவாமன்,

“என்ன செய்கிறாய்…” என்று பதற,

“வலிக்கிறதுண்ணா… இது இருக்கும்போது, பேசச் சிரமமாக இருக்கிறது…” என்றவன் பின் எப்படியோ தன்னை நிலைப்படுத்தியவனாக,

“ஒரு நிமிடம்… ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்தது… கொல்லும்போது, எங்கள் வம்சத்தின் துரும்பைக்கூட உயிரோடு விட்டுவைக்கமாட்டோம் என்று சபதம் செய்தார்கள்…” என்றவன், “கண்ணிமைக்கும் நொடியில் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது… எனக்கு என்ன செய்வது என்று சத்தியமாகத் தெரியவில்லை… நான் தப்ப வேண்டும்… இந்தச் செய்தியை எப்படியாவது உனக்குச் சொல்லவேண்டும் அது மட்டும்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது… வேறு எதையும் யோசிக்காமல், பள்ளத்தாக்கில் குதித்தேன். அது மட்டும்தான் நினைவிருந்தது. விழித்தபோது, கிளிநொச்சியில் ஒரு சிறிய மருத்துவமனையில். அனுமதிக்கப்பட்டிருந்தேன். யாரோ காட்டுவாசிகள் அழைத்துவந்தார்களாம் என்று பின்னால் தெரிந்துகொண்டேன்… இரண்டு கிழமைகளாகச் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறேனாம். நான் விழுந்தது அடர்ந்த மரங்களுக்குள் என்பதால், பாரிய அடிகள் எதுவுமில்லை. காலில் மட்டும் எலும்பு முறிவு…”

அந்த நேரத்தில் நான் எங்கே இருக்கிறேன்… என்ன செய்கிறேன் எதுவுமே எனக்குப் புரியவில்லை. யாரிடம் உதவி கேட்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை. மீண்டும் ஊருக்குப் போகப் பயமாக இருந்தது. நான் இருந்த இடத்தில் உன்னோடு தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கவில்லை.

எப்படியோ மருத்துவமனையை விட்டு வெளியே வந்து, ஊருக்கு வந்தேன். அங்கே நான் அம்மா அப்பா, சௌந்தர்யா அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள். அப்போதுதான் நம் குடும்பத்தைச் சேர்ந்த பலபேரை கருந்தேவன் காவு வாங்கியது தெரிந்தது. என்னைக் கண்டாலும் உயிரோடு விடமாட்டார்கள் என்பது புரிந்தது. கூடவே உனக்குச் செய்தி கூறி இங்கே அழைக்கவும் நான் விரும்பவில்லை. ஒரு வேளை உனக்கு ஏதாவது நடந்தால்…? தாத்தா பாட்டிக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நம்முடைய உறவினர்கள் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டதால், அவர்களையும் விட்டா வைத்திருக்கப்போகிறார்கள்… தவிர அவர்களைத் தேடித் செல்லவும் பயமாக இருந்தது… அதனால், மீண்டும் கிளிநொச்சி வந்தேன். செத்தவன் செத்தவனாகவே இருக்கட்டும் என்று முடிவு செய்தேன்… அப்போதே நீவந்துவிட்டது தெரிந்திருந்தால், இத்தனை சிக்கல் வந்திருக்காது அல்லவா?” என்று வேதனையுடன் கூறியவன், பின்

“இங்கே வந்தபிறகு… என்னுடைய அடையாளத்தை மாற்றினேன்… எனது பெயரைக் காருண்யன் என்று வைத்துக்கொண்டேன்… கிடைத்த வேலையைச் செய்தேன்…” என்றவாறு சிரித்தவன்,

“கைதட்டி அழைத்தால் ஊரே சேவகம் செய்ய வரும்… ஆனால் என் நிலைமையைப் பார்த்தாயா? கூலி வேலை செய்யும் நிலைக்குக் கடவுள் தள்ளிவிட்டானே… நிறையக் கஷ்டமாக இருந்தது அண்ணா… வேலை செய்து பழக்கமில்லையா… அதுவும் அவர்கள் என்னைத் திட்டும் பொது…” என்றவன் மெல்லியதாக அழுது, “அம்மா கூட என்னைத் திட்டினதில்லை தெரியுமா…” என்றான் உள்ளம் வலிக்க.

“எனக்கு உலகமே வெறுத்துப் போனது… எங்கெங்கோவெல்லாம் அலைந்து திரிந்தேன்… தனிமை ரொம்பப் பயங்கரமானது அண்ணா…” என்றவன் கண்களில் நீர் முட்ட, “அம்மாவின் அரவணைப்புக்காக மிகவும் ஏங்கினேன்… சௌந்தர்யாவோடு சண்டை பிடிக்கவேண்டும் என்று எவ்வளவு துடித்தேன் தெரியுமா… உன்னோடு கம்பீரமாகத் தெருவில் நடக்கவேண்டும்… அப்பாவின் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்… இப்படி நிறைய ஏக்கங்கள் அண்ணா… நடக்க முடியாத ஏக்கங்கள்…” என்றவன் பெருமூச்சொன்றை எடுத்து விட்டு,

“தனிமையில் பைத்தியமே பிடித்துவிடும் போல இந்தநேரத்தில்தான் அலரந்திரியைக் கண்டேன்… ஏதோ வீட்டுக்குப் பொருட்கள் வாங்கிச் சென்றுகொண்டிருந்தாள்… அந்த முகம்…” என்றவன் முகம் கனிய, “அம்மா போலவே இருந்தது அண்ணா… என்னை அறியாமலே அவள் பின்னால் சென்றேன்… அப்போதுதான் அவள் அந்த வீட்டில் படும் துயரம் தெரிந்தது. ஏனோ இவள் துன்பப் படக் கூடாது என்பது மட்டும்தான் எனக்குத் தோன்றியது.” என்றவன் அந்த நினைவில் மெல்லியதாக நகைத்து,

“எனக்கு வேறு இருபத்தொரு வயதுதானே… எது சரி பிழை என்று தெரியவில்லை… இவளை என் கூட அனுப்ப முடியுமா என்று நேராகவே சென்று கேட்டேன்… அதற்கு அந்தம்மா, வேண்டுமானால் திருமணம் முடித்து அழைத்துப்போன… யார் வேண்டாம் என்றார்கள்… என்றார்களா… அப்போதைக்கு நானும் தலையை ஆட்டினேன்… எப்படியோ நான் தனியாக இருக்கக் கூடாது… அது மட்டும்தான் என் மனதிலிருந்தது… எத்தனை பெரிய முட்டாள் நான்…” என்றவன் முகம் கசங்க அண்ணனைப் பார்த்தான்.

“என்னைக் காவு வாங்கத் துடிப்பவர்கள் இவளையும் காவு வாங்க முயல்வார்கள் என்று நான் எண்ணவேயில்லை… இனி என் வாழ்வில் சந்தோஷம் மட்டும் இருக்கும் என்று நினைத்தேன்… ஆனால் அதுவும்… என்றவன், நான் உயிரோடு இருப்பதைக் கண்டுகொண்டார்கள் போலும்… என்னைக் கொல்வதற்காக முயன்றபோது என்னால் இவளுக்கும் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினேன். வாகனத்திலிருந்து தள்ளிவிட்டேன்… இல்லையென்றால் இவளுக்கும் ஏதாவது ஆகியிருக்கும்…” என்று கூற, தன் தம்பியின் கரத்தைத் தன் உதட்டில் பொருத்தி எடுத்த அண்ணனை ஏக்கத்தோடு பார்த்தான் ஜெயவாமன். பின் அலரந்திரியைப் பார்த்தான். தன் கரத்திலிருந்த அவளுடைய கரத்தை அழுத்திக் கொடுத்து,

“சாரிமா… அந்த நேரத்தில் உன்னைப் பற்றி நான் யோசிக்கவில்லை… என்னைப் பற்றி மட்டுமே யோசித்திருந்ததால், எனக்கொரு துணை வேண்டும் என்று நினைத்தேனே தவிர, என்னால் உனக்கும் ஆபத்து வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் உன்னை மணந்தும் இருந்திருக்க மாட்டேன்…” என்றவனுக்குச் சற்று மூச்சு வாங்க, அதைக் கண்ட ஏகவாமன்,

“சரி… ஜெயன்… தட்ஸ் இட்… இனி தூங்கு… எதுவாக இருந்தாலும் பிறகு பேசலாம்… இப்போது படு…” என்றான் கட்டளையாய்.

“தூங்கப் பயமாக இருக்கிறதே அண்ணா… மீண்டும் விழிக்காது போனால்… உன்னை எப்படிப் பார்ப்பேன்…?” என்று கேட்டதும் பாய்ந்து தம்பியை அணைத்துக்கொண்டவனாக,

“ஷ்… ஷ்… அதுதான் அண்ணா இருக்கிறேன் அல்லவா… உனக்கு ஒன்றுமாகதுடா…. நிச்சயமாக ஒன்றுமாகாது… ஐ பராமிஸ் யு…” என்றதும், மீண்டும் சிரித்தவன், அலரந்தியின் கரத்தை விடுத்து, இரண்டு கரங்களாலும் தன் அண்ணனின் கையைப் பற்றி,

“அண்ணா…. நீ… எனக்கொரு… வாக்கு கொடுப்பாயா…” என்றான் உயிரைக் கையில் பிடித்தவாறு.

பதற்றத்துடன் தன் தம்பியின் கரங்களை அழுந்தப் பற்றியவன் ‘ஓ’ என்று கொந்தளித்த உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொண்டவனாக,

“செய்கிறேன்டா… சொல்லு… என்ன செய்யவேண்டும்?” துடிக்க,

“வாக்கு மாறமாட்டாயே…” என்று கேட்க, இல்லை என்பது போலத் தலையைப் பலமாக ஆட்ட,

“எனக்கு ஏதாவது நடந்தால்” என்றவன் திரும்பித் தன் அருகே நின்றிருந்த அலரந்திரியின் கரத்தை மறு கரத்தால் பற்றி,

“உன் உயிருள்ள வரை இவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வாயா? வாழ்க்கையில் நிறைய அடிபட்டுவிட்டாள்… உன்னோடாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்… செய்வாயா…” என்று கேட்டான் கம்மிய அடைபட்ட குரலில். அதைக் கேட்டதும் துடித்துப்போனான் ஏகவாமன்.

“டேய்… முட்டாள்போலப் பேசாதே… உனக்கெதுவும் ஆகாது… நிச்சயமாக ஆகாது… நீ… உன் மனைவி… அல… அ… இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கப்போகிறீர்கள்… இருந்து பார்…” என்று அவசரமாகக் கூற,

“அண்ணா… ப்ளீஸ்… என்னுடைய நிலை எனக்குத் தெரியும்… சத்தியம் செய்யுங்கள்… அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்கிற நிம்மதியுடனேயே என் இறுதி மூச்சை விட்டுவிடுவேன்… இல்லை என்றால் குற்ற உணர்ச்சியே என்னைக் கொல்லும். என் ஆத்மா நிம்மதியாகச் சாந்தி அடையாது… சொல்லுங்கள்… அவளைச் சந்தோஷமாக வைத்திருப்பீர்களா?” என்று கேட்க, பதில் கூறாது உதடுகளை அழுந்த மூடியவன் நிமிர்ந்து அலரந்திரியைப் பார்த்தான்.

அவளும் அதே அதிர்ச்சியுடன்தான் ஏகவாமனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அவன்… நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அழிப்பேன் என்று சபதம் செய்தான்… அம்மா அப்பா… சௌந்தர்யா… நான்… எஞ்சியிருப்பது… நீ… தாத்தா பாட்டி மட்டும்தான்… இப்போது… அலரந்திரி என் மனைவியென்று தெரிந்தால்… அவளையும் அழிப்பார்கள்… அவள்மீது சிறு தூசு கூடப் படக் கூடாது அண்ணா… அவளைக் காத்துக்கொள்வாய் அல்லவா…” என்று அழுகையுனே கேட்க, பலமாக ஆம் என்பது போலத் தன் தலையை ஆட்டியவன்,

“என் உயிர் உள்ளவரை அவளைக் காப்பேன் ஜெயன்… ஐ ப்ராமிஸ் யு…” என்று உறுதி கூற முகம் மலர்ந்தவன்,

“அது மட்டுமல்ல… அவளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையையும் நீ தேர்ந்தெடுக்க வேண்டும் அண்ணா… நம்முடைய பொம்மைக் கல்யாணம் போல அல்லாமல், நிஜமான திருமணம் அவளுக்கு நடக்க வேண்டும்… நீ செய்து வைப்பாய் தானே?” என்று அடுத்த கேள்வியைக் கேட்க அதற்கும் மறுக்காமல் தலையை ஆட்டிய ஏகவாமனுக்குத் தொண்டை அடைத்தது. அதே நேரம் ஜெயவாமனுக்கு மூச்சுத் திணற, அதுவரை அவர்கள் பேசியதையே ஒரு வித அதிர்சசியுடன் கேட்டுக்கொண்டிருந்த அலரந்திரி, தன்னையும் மறந்து பதற்றத்துடன் அவனுடைய மார்பை வருடிக் கொடுத்தவாறு,

“காருண்யன்… ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை…” அவனைச் சமாதானப் படுத்த முயல,

“ஐ ஆம்… ஓக்கே…” என்றவன், “த… தண்ணீர் கிடைக்குமா?” என்றான். உடனே தண்ணீர் எடுத்து வர அவள் வெளியேற அவசரமாகத் தன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தவன்,

“அவளுடைய கணவனாக நீ இருந்தால் இன்னும் மகிழ்வேன் அண்ணா… வில் யு மரி ஹேர்…” என்று கேட்ட தம்பியைப் பேரதிர்ச்சியுடன் பார்த்தான் ஏகவாமன். அவனுக்குப் பேச்சே வரவில்லை.

“ஜெயன்… என்ன உளறுகிறாய்… அவள் உன் மனைவி… நான் எப்படி…” என்று மறுத்தவாறு தடுமாற,

“இல்லை… அவள் என் மனைவியல்ல அண்ணா… அந்த நேரம் அவளைக் காப்பாற்றி என் கூட அழைத்து வரவேண்டும் என்கிற எண்ணத்தில், இருபத்தொரு வயது வாலிபனின் வேகத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி அழைத்து வந்தேன்… ஒரு வேளை எனக்கு விபத்து நடக்காதிருநதால், காலப் போக்கில் அவளை என் மனைவியாக ஏற்றிருப்பேனோ என்னவோ… ஆனால்… அதற்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே…” என்று பெரும் வேதனையுடன் கூற, அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான் ஏகவாமன்.

“இது கட்டாயமல்ல… உனக்கென்று ஒரு விருப்பம் இருக்கும்… அதில் நான் எதையும் திணிக்க விரும்பவில்லை… ஆனால் அலரந்திரி உன்னோடு வாழும் காலம் அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் அண்ணா…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அலரந்திரி சிறிய குவலையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு இவர்களை நோக்கி ஓடி வந்தாள். கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டச் சிரமப்பட்டு விழுங்கியவன், கரத்தை நீட்டிப் போதும் என்று கூறிவிட்டு, மீண்டும் நிமிர்ந்து அண்ணனைப் பார்த்தான்.

“நான் கூறியதை மனதில் இருத்திக் கொள் அண்ணா…” கூற, கண்களில் கண்ணீர் வழியத் தலையை மட்டும் ஆட்டிய அண்ணனைப் பெருமையுடன் பார்த்தான் ஜெயவாமன். என்ன நினைத்தானோ அலரந்திரியின் கரத்தைப் பற்றியவன், மறு கரத்திலிருந்த அண்ணனின் கரத்தில் அவள் கரத்தை வைத்து அழுத்திக் கொடுத்தவன் இணைந்த இரு கரங்களையும் பற்றியவாறு பெரும் நிம்மதியுடன் விழிகளை மூடி,

இது போதும் அண்ணா எனக்கு… இது போதும்…” பற்றிய இணைந்த கரங்களையும் விடாது உறக்கத்தின் வசமானான்.

What’s your Reaction?
+1
14
+1
1
+1
1
+1
0
+1
11
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!