(16)
என்னதான் சேதுபதி தன் மகனைக் கடிந்துகொண்டாலும், அவன்தான் அவருக்கு வலக்கை இடக்கை எல்லாமே. அவனுடைய புத்திசாதுர்யமும், வீரமும், திறமையும், தன்னிகரில்லா பாசமும் எப்போதும் அவரை வியக்க வைக்கும். அதனால் அவரைப் பொறுத்தவரைக்கும் ஏகவாமனே அவலுடைய தகப்பன் சாமி. இவர்தான் அந்த ஊரின் ஆட்சியை நடத்துபவராக இருந்தாலும், பின்னால் ஏகவாமன் நின்று கொள்ளுவான்… அதனால் அவர் எதிலும் தயங்காமல் இறங்கிவிடுவார்… அவருக்கு மட்டுமல்ல, அந்த ஊருக்கே அவன்தான் தெய்வம்போல.
என்ன பிரச்சனையாக இருந்தாலும் அஞ்சாமல் முன்னால் நிற்கும் ஏகவாமனுக்கு நேர் எதிர் ஜெயவாமன். அவனுக்கு எப்போதும் சமாதானம், அமைதி மகிழ்ச்சி மட்டுமே. ஆனாலும் அண்ணனிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டவன். பாசம் என்பதை விடப் பக்தி என்றே சொல்லாம். அண்ணன் எள் என்றால் இவன் எண்ணெய்யாக இருப்பான். அண்ணனுக்காகவே மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தான்.
இராமாயணத்தில் இராமன் இலக்குவன் அந்தளவு பாசமாக இருந்தார்களா என்றால், இவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் ஒரு படி கீழேதான். அதற்கு உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், ராமனுக்குத் துiயாக லக்ஷ்மணனை அழைத்துச் செல்லுமாறு சொன்னபோது மறுக்காமல் தம்பியை அழைத்துச் சென்றான் இராமன். ஆனால் இவன்… உயிரை விட்டாலும் விடுவானே தவிர, தம்பியின் மீது ஒரு தூசி பட விடமாட்டான். தம்பிக்கே அப்படியென்றால் அவனுடைய ஒரே ஒரு தங்கை சௌந்தர்யாவிற்கு… தன் உள்ளங்கையில் வைத்தே தாங்கினான் என்று சொல்லலாம். அனைவரிடமும் கடுமையாக இருப்பவன், தங்கையிடம் மட்டும் இளகிக் குழைந்து போவான். சொல்லப்போனால், அவள் தங்கை என்பதை விட, அவனுடைய குழந்தை என்றே சொல்லாம். அவள் மட்டுமல்ல, அந்தக் கிராமத்தில் உள்ள அத்தனை பெண்களும் அவனுக்குச் சகோதரிகள் போலவே. அதே போல அந்தக் கிராமத்தில் உள்ள அத்தனை பெண்களுக்கும் அவன் ஒரு அண்ணனே…
இந்நிலையில்தான் அந்த ஊர்க் கோவில் திருவிழா நடப்பதற்கான நேரம் நெருங்கிவர, மனதை அரித்த பழையதுகளை ஓரம் கட்டிவிட்டு, அதற்குத் தயாராகத் தொடங்கினார் சேதுபதி.
அந்த ஊர்த்திருவிழா மிகக் கோலாகலமாக நடப்பது. அவர்களின் குலசாமி முருகன் என்றதால், அக்கோவிலுக்குக் காவடி எடுப்பது வழமை. அக்காவடி எடுப்பதில் ஏகவாமனும் ஒருவன்.
அவன் எடுப்பது சும்மா காவடியுமில்லை… செடில் காவடி… அதுவும் நெற்றி, நாக்கு, கன்னம் மார்பு, கைகள், முதுகு தொடைகள் வயிறு இடை என்று இடம் விடாது தோல்களுக்குள் வெள்ளிகளால் ஆன ஊசிகளும், கொளுக்கிகளும் குத்தப்படும். குறிப்பாக முதுகில் முள்ளந்தண்டிற்கு இருபக்கமும் உள்ளங்கை அளவு இடைவெளி விட்டுச் சற்று பெரிய கொழுக்கிகள் குத்தப்படும். கொளுக்கிகளிலிருந்து இணைக்கப்பட்ட கயிறுகளைப் பற்றி இழுக்க, பின்னால் ஒருவர் நின்றிருக்க, தோள்களில் கனமான காவடியைச் சுமந்தவாறு எட்டுக் கிலோமீட்டர்கள் ஆடியவாறு வரவேண்டும்.
அதுவும் உடலில் வரிசைகளாகக் கொளுக்கிகளும், கூரான பாகங்களும் குத்தும்போது வலியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் திடமும் இருந்தாலன்றி, செடில் காவடி சுமப்பது சாத்தியப்படாது.
செடில் குத்திக் காவடி எடுத்தால் தங்கள் குடும்பத்தை மட்டுமல்ல, தங்களை நம்பியிருக்கும் அந்த ஊரையும் அது காக்கும் என்பது சேதுபதி குடும்பத்தின் ஐதீகம். அதனால் ஒவ்வொரு வருடமும் அந்தத் தலைமுறையின் மூத்த மகன் காவடி எடுப்பதால், இருபத்தொரு வயத்தைக் கடந்தபின் ஏகவாமனே தந்தைக்குப் பிறகு காவடி எடுக்கத் தொடங்கினான். வயது கடந்த நற்குணசேகரம், சேதுபதி, மற்றும் ஜயவாமன் ஆகிய மூவரும் அலகு குத்தி, பூக்காவடி எடுக்கப் பெண்கள் பால்காவடி மற்றும் தீச்சட்டி ஏந்துவார்கள்.
அன்று ஏகவாமன் காவடி எடுக்கும் நாள், ஊரே கூடியிருக்கும். தங்கள் ஊரைக் காக்க அத்தனை வலியையும் தாங்கும் வீரனல்லவா அவன்… வீட்டின் அருகாமையிலிருந்த சன்னிதானத்தில் காவடியாட்டத்திற்குத் தயார் என்பது போல இடையில் கைவைத்தவாறு, வீறுகொண்ட வேங்கையென முதுகுத் தசைகள் சுழன்று எழத் தலை நிமிர்ந்து நின்றிருந்த ஏகவாமன்.
நெற்றி நிறையத் திருநீறு. பரந்த இறுகிய முடியடர்ந்த மார்பிலும் திருநீற்றின் அபிஷேகம். இரண்டு சிங்கங்கள் கவிழ்ந்து படுத்தது போலத் திரண்ட புஜங்களில் வெடித்துவிடும் எனத் திருகி நின்ற நரம்புகள். முடியடர்ந்த வயிற்றுக்குள் மறைந்து போன சிக்ஸ் பாக் வியிறு. வி வடிவ இடைக்குக் கீழே தொடை தெரிய மடித்துக் கட்டிய வேட்டி. உருண்டு திரண்டு தசைகள் தினவெடுத்த தொடைகள்… ஒரு உதையில் எதிரிகளைப் பத்துக் குத்துக்கரணம் போட வைக்கும் இறுகிய பலம் பொருந்திய கால்கள். இதுவரை அழுக்கைச் சந்திக்காத சுத்தமான பாதங்கள். ஐயனாரைக் கண்களால் காணாதவர்கள், அவனைக் கண்டால் போதும். இப்படித்தான் இருப்பார் என்று மனம் தானாகத் திருப்திப்பட்டுக்கொள்ளும். மொத்தத்தில் பார்ப்பவர்களுக்கு அவன் காக்கும் கடவுளே…
“மானாட மயிலாட கணநாதன் தான் ஆட மங்கை சிவகாமி ஆட அரோஹரா
மீனாளின் கண்ணாட கூத்தனும் தானாட மாயோனும் பிரம்மனும் ஆட அரோஹரா
இந்திரந்தானாட இமையோர்கள் வானாட எழும் முனிவர் அந்தரம் ஆட அரோஹரா
சுந்தரம் முருகனும் கனங்களும் தானாட இடும்பன் கடம்பன் ஆட அரோஹரா
என்கிற பாடலுடன், அடுத்துக் காவடி பூஜை முடிய, வேல் போன்ற அலகு அவன் புருவ மத்தியில் குத்தப்பட்டது. தொடர்ந்து கரங்கள், மார்புகள், தொடைகள் இடை என்று வரிசையாகக் கூறிய முனைகொண்ட சிறிய வேல்கள் தோல்களுக்குள்ளாகக் குத்தப்பட்டன. முள்ளந்தண்டிற்கு இரு புறமும் சற்றுப் பெரிய பதினாறு கொளுவிகள் தோள்களுக்கு உள்ளாகக் குத்தப்பட்டுக் கயிறுகள் அந்தக் கொளுவியில் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் கொளுவிகள் அவன் தோல்களுக்கூடாக இறக்கியபோதும் அவன் சற்றும் அசைந்தானில்லை. பின் பத்துக் கிலோ எடையுள்ள வளைவான காவடி அவன் தோள்களில் ஏற்றியபின் புறப்பட்டது தயாரானான் ஏகவாமன்.
சாதாரணமாகச் செதில் காவடிக்குச் சிறிய கொளுக்கிகளே பயன்படுத்துவர். ஆனால், ஏகவாமனின் அசுர ஆட்டத்திற்கு அவை நின்று பிடிக்காது என்பதால், சற்று பெரிய அளவிலான கொளுக்கிகளே அவனுக்குக் குத்தப்படும். தவிர, அவனுடைய செடில் கயிற்றைப் பிடிப்பதற்கென்றே பல திடகாத்திரமான ஆண்கள் காத்திருப்பார்கள். காரணம் அவன் வேக ஆட்டத்திற்கும், பலத்திற்கும் முன்னால் பிறரால் நின்று பிடிப்பது மிகக்கடினம். அவனைப் பிடித்து நிறுத்தி வழிநடத்தும் பக்தர்களே களைத்து ஓய்ந்து போவார்கள். அதனால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒருவர் வீதம் ஏகவமனின் செடில் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்கள்.
இப்போதும், ஏகவாமன் புறப்படத் தயாரானதும், அவனுடைய செடில் கயிற்றை ஒருவர் பிடித்துக்கொள்ள, அவருக்கும் திருநீறு பூசப்பட்டது. அடுத்து குரவை ஒலி எழுப்ப, இப்போது ஏகவாமனுக்கு அலகு குத்தப்பட்டது. தொடர்ந்து உடுக்கையும் தம்பட்டமும் பறையும் அடிக்கத் தொடங்க, ஏகவாமனின் உடலில் மெல்லிய அசைவு.
ஒரு பக்கம் பறை பலமாக அடித்தது. மறு பக்கம் உடுக்கையின் வீச்சுடன் தாரைத் தப்பட்டாவின் ஒலியும் சேர, அவை கொடுத்த ஓசையில் சும்மா இருப்பவர்களுக்கே ஒரு வித நடுக்கம் தோன்றும். அந்த ஓசை காது வழியாகச் சென்று புத்தியில் பதிந்து அது இரத்தத்தோடு கலக்க, அத்தனை செல்களும் அதிர்ந்து ஆடத் தொடங்கும்போது, சாதாரண மனிதன் கூட ஒரு கணம் அசைய முயல்வான்.
அந்தச் சத்தங்கள் இணைந்து ஏகவாமனையும் உசுப்பிவிட, அடுத்து ஆடுவதற்குத் தயார் என்பது போல, வீறுகொண்டு புறப்படத் தயாராக,
“சாமி புறப்பட்டு விட்டது…” என்று ஒருவர் கத்த, உடனே குழுமியிருந்த அனைவரும் வழி விட, அவனைத் தொடர்ந்து ஜெயவாமனுடைய கரங்கள், தொடைகள், நெற்றி என்று சிறிய கூர் வேல்கள் ஏற்றப்பட்டன. கூடவே அலகு குத்தப்பட்டது தோள்களில் காவடி ஏற்றப்பட்டது. சேதுபதி, நற்குணசேகரம் இருவருக்கும் அலகு குத்திக் காவடிகளை எடுத்துக் கழுத்தில் வைக்க அதைப் பற்றியவாறு முன்னேறத் தொடங்கினர். பெண்கள் தீச்சட்டியை ஏந்தியவாறு அவர்களோடு நடக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் ஏகவாமனின் சுழல் ஆட்டத்திற்கும் அவனுடைய அசுர வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாது செடில் கயிற்றைப் பற்றியவர் மட்டுமல்ல, அவனோடு பயணித்த அனைவரும் சற்றுத் திணறித்தான் போனார்கள். அந்த எட்டுக் கிலோமீட்டர் தூரமும், அந்தப் பாரமான காவடியைச் சுமந்தவாறு, செடில் கயிற்றின் துணையுடன், அசுரத்தனமாக ஆடியவாறு எப்படி வந்தான் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஒரு இடம் தன்னும் அவன் தயங்கவுமில்லை களைக்கவுமில்லை, நிற்கவுமில்லை.
கூடவே உருவேற்றும் பாடல்கள் பக்தர்களுக்கு மேலும் வேகம் கொடுக்க, காட்டிலிருந்த காளி கோவிலைச் சுற்றிக்கொண்டு, பெரிய கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினர். அதுவரை தங்குதடையின்றி நடந்து வந்தவனின் நடை திடீர் என்று தடைப்பட்டது. அதுவரை ஆடி வந்தவன், எதற்காகத் திடீர் என்று நின்றானெனப் புரியாமல், அனைவரும் அவன் பார்த்த திசையைப் பார்க்க, அங்கே வெறும் மரங்களும், முட் புதர்களும்தான் தெரிந்தன,
“சாமி… களைக்கிறதா…. அமர்ந்துவிட்டுப் போவோமா…? என்று பின்னால் நின்றிருந்தவன் கேட்க, மறுப்பாகத் தலையை ஆட்டியவன், மீண்டும் கோவிலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
இறுதியாக்கக் கோவிலின் வாசலில் நின்று ஒரு ஆட்டம் ஆடுவார்கள். அதில் புஷ்பக் காவடியை வைத்துப் பல வித்தைகள் காட்டுவார்கள்.
அதற்கேற்ப பூக்காவடி சுமந்திருந்த ஜெயவாமனும் வாசலில் ஆடும் பொருட்டுக் காவடியைத் தன் கரம் கொண்டு பற்றாமலே குனிந்து ஒரு எத்து எத்த, அவனுடைய ஒற்றைத் தோளில் நழுவி இறங்கியது காவடி. அண்ணனுக்கு முன்பாக வந்தவன், ஆடத் தொடங்க, அதைக் கண்டு மெல்லிய புன்னகை சிந்திய ஏகவாமன், அவனுக்குப் போட்டியாகச் சுழன்று எழுந்து, இருந்து பாய்ந்து, முன்னே போவதும் பின்னே வருவதும், என்று உருவந்தவன் போல ஆடித் தன் திறமையைக் காட்ட, சற்று நேரத்தில் அந்த இடமே அல்லோலகல்லோல பட்டது. இருவரின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே அந்த ஊர் மக்கள் ஒன்று கூட, யாருக்கும் அவர்களின் மேலிலிருந்த விழிகளை அகற்ற முடியவில்லை. இதற்கிடையில் ஏகவமனைன் செதில் கயிற்றைப் பற்றியிருந்தவர் தரையில் விழுந்து எழுந்து, திணறித் தவித்து ஒரு வழியாகிவிட்டார்.
உச்சக்கட்டமாக மேளமும் பறையும், பலமாக அடிக்க, ஜெயவர்மனும், ஏகவாமனும் அதற்கேற்ப தாண்டவம் ஆடி முடிக்க, பக்கவாத்தியங்களும் நிறைவு என்பது போல, ஒவ்வொரு அடியுடன் நிறுத்திக்கொண்டன. இறுதியாக, எல்லாம் முடிந்தது என்பதுபோல அனைவரும் கோவிலுக்குள் செல்லத் தொடங்கினர்.
கோவிலின் உள்ளே நுழைந்து காவடி அகற்றப்பட்டதும், ஏகவமனின் செடிலை கழற்றுவதற்காகக் கைவைக்கப் போன நேரம்,
“ஐயையோ… மோசம் போய்விட்டேனே… என் கண்ணே…” என்கிற அலறல் வெளியே இருந்து வர, சன்னிதானத்தின் உள்ளே அமர்ந்திருந்த ஏகவாமன் சிலிர்த்துக்கொண்டு எழுந்தான்.
அவன் ஊரில் அவலக் குரலா…? கொளுக்கிகளைக் கழற்றாமலே வெளியே வர முயல,
“சாமி… கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்… இவற்றைக் கழற்றி விட்டுவிடுகிறோம்…” என்று தடுக்கத் திரும்பி அவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு தந்தை தாத்தாவை ஏறிட, அவர்களும் அவனைப்போலத்தான் யோசனையுடன் வெளியே பார்த்துக்கொண்டிருந்தனர். அன்னையும் பாட்டியும் சௌந்தர்யாவும் இன்னும் தீச்சட்டியைக் கீழே வைக்காமல் நின்றிருந்தனர். அவனுடைய செடில் கழற்றாமல் அவர்கள் தீச்சட்டியைக் கீழே வைக்க முடியாது.
பின்னால் நின்றிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்து,
“ம்…” சீக்கிரம் கழற்றுங்கள்…” என்று மீசையை முறுக்கியவாறு கர்ஜிக்க அடுத்த ஐந்தாவது நிமிடம் கொளுவிகள் களையப்பட, தன் வீட்டுப் பெண்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு உடலின் காயத்திற்குத் திருநீறு அடிக்காமலே வெளியே வந்தான்.
அங்கே சற்றுத் தொலைவில் பெரிய கூட்டம் ஒன்று நின்றிருக்க அவர்களை நோக்கி நெருங்கினான் ஏகவாமன்.
அங்கே ஒரு பெண் தரையில் விழுந்து புழுதி பட அலறிக்கொண்டிருக்க அதை ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அருகே நின்றிருந்த ஒருவரின் தோளைத் தொடத் திரும்பியவர் ஏகவாமனைக் கண்டதும் ஏதோ சாமியே தன்னைத் தொட்ட உணர்வில் இரண்டாகக் குனிந்து,
“சாமி…” என்றார் பெரும் பயபக்தியுடன்.
“என்ன நடந்தது?”
“தெரியவில்லை சாமி… இவர்கள் வெளியூர்… கோவில் திருவிழாவிற்கு மகளோடு வந்திருக்கிறார்கள்… திடீர் என்று பக்கத்திலிருந்த மகளைக் காணவில்லையாம்… கூட்டத்திற்குள் தொலைந்துபோய்விட்டது போல… அந்தப் பெண்ணை ஒலிபெருக்கியிலும் அழைத்தாகிவிட்டது… இன்னும் பதிலில்லை…” என்று கூற, வேகமாகத் தரையில் புரண்டு அழுதுகொண்டிருந்த பெண்ணை நெருங்கினான் ஏகவாமன்.
அந்தத் தாய்க்கு ஏகவாமனைக் கண்டதும் ஏதோ கடவுளைக் கண்டதுபோல இருந்திருக்க வேண்டும். இரு கரம் கூப்பித் தொழுது,
“ஐயா… என் குழந்தையை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் சாமி… அதுக்குப் புத்தி சுவாதீனமில்லை… இந்தச் சாமி அவளை நலமாக்கிக் கொடுக்கும் என்று நம்பி வந்தேன்… ஆனால்… இங்கேயே தொலைத்துவிட்டேனே… நான் என்ன பண்ணுவேன்… ஐயோ… எங்கேயென்று தேடுவேன்…” என்று பெரிதாக அழ, அவரை இழுத்துத் தன் மார்போடு அணைத்தவன், தலைமுடியை வருடிக் கொடுத்து,
“இதோ பாருங்கள்… உங்கள் மகளுக்கு எதுவும்… எதுவுமே ஆகாது… நான் வாக்குக் கொடுக்கிறேன்… இங்கே எங்காச்சும்தான் இருப்பார்கள்… எங்கள் ஊருக்கு வந்து கலங்க நாங்கள் விடமாட்டோம்… நம்புங்கள்…” என்று கூறியவன்,
“உங்கள் பெண்ணிற்கு எத்தனை வயது?” என்றான்.
“பதின் மூன்று வயது சாமி…” என்றதும் சடார் என்று தன் விழிகளை மூடினான் ஏகவாமன்.
விழிகளுக்குள் ஆயிரம் படங்கள் ஓடின. வீட்டிலிருந்து கோவில் வரும் காலம்வரைக்கும் நினைவுகள் பின்னோக்கிப் பயணிக்க, கோவிலுக்கு வரும் வழியில் காளி கோவிலின் அருகே சிலர் காட்டுக்குள் போனது இவன் நினைவுக்கு வரச் சடார் என்று தன் விழிகளைத் திறந்தான்.
உடனே திரும்பிய அங்கிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து,
“இவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்… குடிக்க ஏதாவது கொடுங்கள்…” என்றவன் அவிழ்ந்த வேட்டியை மடித்துக் கட்டியவாறு பாய்ந்தவன் வேப்பமரத்தின் அடியில் நட்டிருந்த துர்க்கையின் திரிசூலத்தை இழுத்து எடுத்தவாறு வேகமாக நடக்கத் தொடங்கினான்.
(17)
ஏகவாமன் காட்டிற்குள் போவதைக் கண்ட சேதுபதி, வேகமாக அவன் பின்னே நடக்கத் தொடங்க, ஊர் மக்களும் எதுவும் புரியாமல் அவனுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது ஓடிச் சென்றனர். அங்கும் இங்கும் தேடி அலைந்தவன், இறுதியாகக் குறிப்பிட்ட இடத்தில் சிரிப்பொலி கேட்க, தன் திரிசூலத்தை இறுகப் பற்றியவாறு சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அங்கே கண்ட காட்சியில் அண்ட சராசரமும் நடுங்கியது அவனுக்கு.
சின்னப்பெண் தரையில் கிடந்தாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று கூடத் தெரியவில்லை. ஒரு கரத்தில் லாலிப்பாப் இருந்தது. தன் உடலிலிருந்து துணிகள் அகற்றப்பட்டிருப்பது கூடப் புரியாமல் நெருங்க முயன்றவனை மறு கரத்தால் தள்ளிவிட முயன்றவாறு அடிக்கடி லாலிபாப்பை சுவைத்துக்கொண்டிருந்தாள்…
அருள்தேவனோ தன் நினைவே இல்லாதவனாக, அவள் தள்ளத் தள்ள அவள்மீது படர முயன்றுகொண்டிருந்தான். அவனுடைய மேலாடை நீக்கப்பட்டிருந்தது. பான்ட் கீழே இறங்கியிருந்தது…. இதற்குக் காவலுக்கு நான்கு பேர்… அதைக் கண்ட ஏகவாமனுக்கு இரத்தம் கொதித்தெழுந்தது. வேகமாக அவனை நெருங்கியவன், தன் காலால் எட்டி உதைக்கத் தள்ளிப்போய் விழுந்தான் அருள்தேவன். விழுந்தபிறகும் அவன் எழுந்துகொள்ளவில்லை. அந்தளவுக்கு அவன் உட்கொண்ட போதை அவனைச் செயலிழக்க வைத்திருந்தது.
அதே நேரம் சத்தம் கேட்டு அதிர்வுடன் திரும்பிப் பார்த்த நால்வரையும் வெறித்துப் பார்த்த ஏகவாமன் பின் குனிந்து தரையில் லாலிப்பாப்பை சுவைத்துக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான். எதுவும் புரியாமல் இவனைப் பார்த்துத் திருதிரு என்று விழித்துக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அதைக் கண்டதும் அவனுக்கு இதயத்தில் இரத்தமே கசிந்தது. வேகமாகத் தன் வேட்டியைக் கழற்றி அந்தச் சிறுமியின் மீது போர்த்தியவாறு ஒற்றைக் கால் மடித்து அமர்ந்தவன், அவள் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு,
“ஹே…. இட்ஸ் ஓக்கேமா… நான் உனக்கு அண்ணன்போல… பயப்படாதே…” என்றவாறு உடலைச் சுற்றி வேட்டியைக் கட்டும் போதே ஊர் மக்கள் கூடிவிட்டிருந்தனர்.
அதே நேரம் அந்தப் பெண்ணின் தாய்,
“ஐயோ… வனஜா…” என்று அலறியவாறு தன் மகளை அணைத்துக் கொள்ள, அப்போதும் அந்தச் சிறுமிக்கு எதற்காக இப்படி அழுகிறார்கள் என்றே தெரியவில்லை. அதைக் கண்டதும் ஏகவாமனின் உள்ளத்தில் பெரும் அக்கினிப் பிரளயமே பொங்க, ஐவரையும் வெறித்துப் பார்த்தான். பின் தன் தலையைத் திருப்பாமலே,
“வேங்கையா… இவர்களைக் கம்பத்தில் கட்டித் தூக்கு…” என்று கர்ஜிக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் கோவிலின் முன்னால், ஐந்து கம்பங்கள் நடப்பட்டு, அதில் ஐவரும் தூக்கப்பட்டனர்.
இதற்கிடையில் நடந்த செய்தியறிந்து பதறியடித்தவாறு கருந்தேவனும், அவன் மனைவியும் கூடவே நாகதேவனும் உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடி வந்து சேதுபதியின் காலில் விழுந்து, அவனை மன்னித்து விடுமாறு கெஞ்ச எப்போதும் இளகிப்போகும் சேதுபதி கூட அந்த நேரத்தில் திடமாக நின்றிருந்தார்.
“மன்னித்துவிடு கருந்தேவா… எதையும் மன்னிப்பேன்… ஆனால் ஒரு குழந்தையைப் போய்…, சே… உன் மகன் மனிதனேயல்ல… அவன் இந்தப் பூமிக்கே பாரம்… அவன் இறப்பதுதான் இந்த நாட்டுக்கே நன்மை… ஒதுங்கிவிடு…” என்று திடமாகக் கூற,
“ஐயோ… அவன் இல்லாமல் யாரும் உயிரோடு இருக்கமாட்டோம்… தயவு செய்து அவனை விட்டுவிடு…” என்று கதறினார்கள்.
“அவன் இறந்தால் நீங்கள் கொஞ்சப்பேர்தான் இறப்பீர்கள்… அவன் இருந்தால் எத்தனையோ பெண்கள் இறப்பார்கள்… இந்தப் பெண் ஒருத்திதான்… சாட்சியோடு பிடிபட்டிருக்கிறான்… பிடிபடாமல் எத்தனை என்று யாருக்குத் தெரியும்…” என்றவர் அங்கே இரைக்காகக் காத்திருக்கும் சிங்கம்போல வெறிகொண்டவனாக, மூசியவாறு நின்றிருந்த தன் மகனைக் காட்டி,
“பிடித்தது அவன்தான்… சிறிய தவறு செய்தாலே பெரிதாகத் தண்டிப்பவன்… உன் மகன் செய்தது…” என்று அருவெறுப்புடன் கூறியவர் பின், திரும்பி
“வேண்டுமானால் என் மகனிடம் கேட்டுப்பார்… அவன் மன்னித்தால்… அழைத்துச் செல்…” என்று தன் மகனைக் கைகாட்ட, கருந்தேவனும், நாகதேவனும் ஏகவாமனின் காலில் விழுந்து அருள்தேவனை விடுமாறு கெஞ்ச, எகவாமனோ, அவர்களைக் கணக்கில் சற்றும் எடுத்தானில்லை.
ஐவரும் கட்டித் தூக்கியதும், வேங்கையனைப் பார்த்து,
“அவிழுங்கள் அவர்கள் ஆடையை…” என்றான் கட்டளையாய். மறு கணம் ஐவரும் நிர்வாணமாய் ஊர் மக்களின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டனர்.
அவமானமும் வேதனையும் போட்டிப்போட, நால்வர் கதற, அருள்தேவன் மட்டும் இன்னும் விழிக்காமல் தலை கவிழ்ந்திருந்தான்.
அதைக் கண்ட கருந்தேவனும், நாகதேவனும் எதுவும் செய்ய முடியாத கையாலாகத் தனத்துடன் அதிர்ச்சி மேலோங்க அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அழைத்து வந்த அடியாட்கள் ஏகவாமனின் ஊர் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டதால், எவராலும் அந்த ஐவரையும் காப்பாற்ற முடியவில்லை. சீற்றம் சற்றும் குறையாமல் திரும்பிக் கருந்தேவனைப் பார்த்த ஏகவாமன்,
“பெண்களைச் சீரழிப்பது அத்தனை சுலபமானதாக இருக்கிறது அல்லவா… இந்த மண்ணில் பிறந்துவிட்டுப் பெண்களைப் போதைப்பொருளாகப் பயன்படுத்த எப்படி மனசு வந்தது… அதுவும் ஒரு குழந்தையைப் போய்… சீ… இப்படிப்பட்ட மகனைப் பெற்றதுக்காகவும், அவனை வளர்த்தற்காகவும் உன்னைத்தான் கழுவில் ஏற்றவேண்டும்…” என்றவன், அருள்தேவன் விழிக்கும் வரைக்கும் காத்திருந்தான். சற்று நேரம் பொறுத்து, மெதுவாக அவனிடம் அசைவு வர,
“அரசு… முகத்துக்குத் தண்ணீர் அடி…” என்று ஏகவாமன் கூற, அடுத்துத் தண்ணீர் ஊற்றப்பட்டது. மெதுவாகப் போதை தெளிந்து விழிகளைத் திறக்க,
“வேங்கையா… எடுத்து வா கொள்ளிக்கட்டையை…” என்றதும் அடுத்தக் கணம், அவன் முன்னால் தீப்பந்தம் நீட்டப்பட்டது. அதை வாங்கியவன் திரும்பிப் பார்த்தான். அங்கே அந்தச் சிறுமி முடிந்த லாலிப்பாப்பின் குச்சியை இன்னும் சுவைத்துக்கொண்டிருக்க, அவளை நெருங்கியவன், அவள் கரம்பற்றி இழுத்து வந்தான்.
அவன் சொன்னால் அவளுக்குப் புரியுமா இல்லையா என்று தெரியாது. அதனால் அவள் கரங்களில் தீப்பந்தத்தை வைத்தவன், அவளை இழுத்துக்கொண்டு அருள்தேவனின் அருகே சென்றான்.
அருள்தேவனைக் கண்டதும் அந்தக் குழந்தையின் முகம் மலர்ந்தது. அவன்தானே லாலிபப் கொடுத்தான். உடனே அவன் முன்னால் தன் வலக்கரத்தை நீட்டி லாலிபாக் கேட்க, அருள்தேவனோ இப்போதுதான் போதையிலிருந்து சற்றுத் தெளிந்திருந்தான். தான் இருக்கும் நிலை புரிய, பதறியவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். கதறித் துடித்துக்கொண்டிருந்த தந்தை தாயைப் பார்த்து,
“அப்பா என்னப்பா நடக்கிறது… என்னையேன் கட்டிவைத்திருக்கிறார்கள்…?” என்று அலற,
“ம்… விரதம்பா… உன்னை இப்படி நிர்வாணமாகப் பார்க்கவேண்டும் என்று எங்களுக்கு விரதம்…” என்று ஏகவாமன் கிண்டலுடன் கூற, அப்போதுதான் தான் நிர்வாணமாக இருப்பதே அவனுக்கு உறைத்தது.
“ஏய்… உன்னைச் சும்மா விடமாட்டேன்டா… சத்தியமாகச் சும்மா விடமாட்டேன்…” என்று அலற, பற்கள் தெரிய நகைத்த ஏகவான்,
“அதற்கு நீ உயிரோடு இருக்கவேண்டுமே… வேண்டுமானால் செத்து ஆவியாக வா…” என்றுவிட்டு
“இன்றிலிருந்து எந்த ஆணும் பெண்களைத் தவறாகத் தொட்டால்… தொட்டால் என்ன, பார்த்தாலே இந்தத் தண்டனைதான் நினைவுக்கு வரவேண்டும்…” என்றவன் வனஜாவைக் கொண்டே அவனுடைய ஆண்மையின் கீழ் தீப்பந்தத்தைப் பிடிக்க, கருகிய ஆண்மை கொடுத்த வலியில் கதறித் துடித்தவனை இரசனையுடன் பார்த்தான் ஏகவாமன்.
சற்று நேரம் துடித்துக்கொண்டிருந்தவனை வேடிக்கை பார்த்துவிட்டு, திரும்பி அனைவரையும் பார்த்து,
“இது சேதுபதி கிராமம்… இந்தக் கிராமத்தில் எவனாவது பெண்ணின் மீது தப்பான நோக்கத்தில் கைவைத்தால்… அவனுக்கும் இந்த நிலைதான்… ஜாக்கிரதை…” என்று கர்ஜித்தவன் கீழே அடுக்கியிருந்த விறகின் மீது தீப்பந்தத்தைப் போட, அடுத்து அது திகுதிகு என்று எரியத் தொடங்கியது. ஐவரும் அதில் கதறிக் கருகிச் சாம்பலான அந்தக் கணம், நாகதேவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிய, கருந்தேவன் சிதையில் துடித்தவாறு எரியும் தன் மகனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
பெரும் திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு விலகிய ஏகவாமன், நேராக வனஜாவின் தாயினருகே சென்று அவர் கரங்களில் வனஜாவை ஒப்படைத்துவிட்டு,
“கடவுள் நம்பிக்கை இருக்கலாம்… ஆனால் கடவுளே இறங்கிவந்து குழந்தையைக் காப்பாற்றும் என்று நம்பி, இத்தனை தூரம் வந்து ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது முட்டாள்தனமல்லவா? நல்ல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லலாமே…” என்று கடிய, தன் மகளை இறுக அணைத்துக் கொண்ட அந்தத் தாய், கண்கள் கலங்க,
“அதுக்குப் பணத்திற்கு எங்கே போவேன் தம்பி…” என்றார் குரல் கமற.
ஒரு வித எதிர்பார்ப்புடன் தன் தந்தையைத் திரும்பிப் பார்த்தான் ஏகவாமன். அவரோ மெல்லியதாகப் புன்னகைத்தவாறு தலையை ஆட்ட, மலர்ந்தவன், மீண்டும் அந்தத் தாயைப் பார்த்து,
“நாங்கள் படிப்பிக்கிறோம்… குறைந்தது ஒரு தவறான சூழ்நிலையிலிருந்து, தன்னைக் காத்துக்கொள்ளவாவது பயிற்சி கொடுக்கலாம்… சரியா…” என்று சமாதானம் கூற மலர்ந்து சிரித்த அந்த அன்னை,
“தம்பி சொன்னீர்களே… கடவுளே இறங்கிவந்து காப்பாற்றும் என்று நம்புவது முட்டாள்தனம் என்று… கடவுள் ஒருபோதும் தன் சொரூபம் எடுத்து வருவதில்லை… இப்படி நல்லவர்களை அனுப்பிவைக்கும்… நான் கடவுள்மீது நம்பிக்கை வைத்தேன்… அவன் உங்களை அனுப்பியிருக்கிறான்… என் கண்களுக்கு நீங்கள்தான் கடவுள் சாமி… இதோ என் பிள்ளைக்கு வேண்டிய கல்வியறிவைக் கொடுக்கிறேன் என்றீர்களே… இதைவிட வேறு என்ன வேண்டும்…” என்று கலங்கிய அன்னைத் தன் இரு கரங்களையும் எடுத்துக் கூப்ப, பதறியவாறு அக்கரத்தைப் பற்றிக்கொண்ட ஏகவாமன்,
“ஷ்… என்னம்மா இது… இந்த ஊரை நம்பி, இந்த ஊர் தெய்வத்தை நம்பி வந்திருக்கிறீர்கள்… ஒரு போதும் அந்த நம்பிக்கை குலைந்து போகாது…” என்று தைரியம் கொடுத்துவிட்டு விலகிய தன் மகனைச் சேதுபதி பெருமையுடன் நெஞ்சு நிமிரப் பார்த்திருக்க, நற்குனசேகரமும் தன் பேரனை உவகையுடனேயே பார்த்துக்கொண்டிருந்தார்.