வண்டியிலிருந்து வந்து இறங்கியவனைக் கண்டதும், விதரணையின் இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. அவளையும் மீறிக் கால்கள் வலுவிழந்தது போலத் துவளத் தொடங்க, சட்டென்று அங்கிருந்த மேசையை அழுந்தப் பற்றிக்கொண்டாள். ஆனால், அவளது விழிகள் மட்டும் அவனை விட்டு இம்மியும் எத்திசைக்கும் அசைவதாக இல்லை.
‘ஏற்றன்…! ஏற்றமாதிபன்…’ – அவளையும் அறியாமல் உதடுகள் முணுமுணுக்க, விழிகளோ இமைக்க மறந்திருந்தன.
உயரமாக… மிக மிக உயரமாக இருந்தான் அவன். ஆறடி நான்கங்குல உயரத்தில், தினவெடுத்த, இரும்பென இறுகிய உடலோடு, இவர்களை நோக்கி நிதானமாக வந்துகொண்டிருந்தான். அவன் நடந்து வரும் அழகைப் பார்ப்பதற்கு இந்த இரு விழிகளும் போதாதே… எத்தனை கம்பீரமாக இருக்கிறான். அதுவும் நீண்ட கால்களை வீசி அவன் கம்பீரமாக நடந்தபோது, அவனது கால்சட்டை கூட அவனைப் போலவே இறுக்கமாக அவன் கால்களைக் கவ்விப் பிடித்திருக்க, அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்பத் தடித்த திடகாத்திரமான தொடைகளின் பலமும் இறுக்கமும், ஆணுக்கே உரிய அசாத்திய வலிமையை அப்பட்டமாகப் பறை சாற்றியதை என்னவென்று சொல்வது?
சுருண்டிருந்தாலும் நேர்த்தியாக வாரிவிடப்பட்ட அடர்ந்த தலைமுடி, மெல்லிய தென்றலுக்கும் அசைய மறுத்து அவனைப் போலவே இறுகிக் கிடக்க, அதற்குக் கீழே அடர்ந்த நீண்ட புருவங்கள் அவனுடைய கம்பீரத்திற்குத் தனி அழகு சேர்த்தது. செதுக்கியது போன்ற கூரிய நாசி. முன்பு தாடிமீசை இல்லாமல் சிறுவனாய் தெரிந்த அவன் முகத்தில், இப்போது வளர்த்து அளவாக வெட்டப்பட்டிருந்த தாடியும் மீசையும் அவன் கம்பீரத்தைப் பலமடங்கு உயர்த்திக் காட்டியிருந்தது. அதற்குள் நிறைந்த அழுத்தமான உதடுகள், அகன்ற கழுத்தும், திரண்ட தோள்களும், அணிந்து இருந்த கோட்டினை மீறித் தெரிந்த திமிறிய புஜங்கள். இறுக்கமாய் அணிந்திருந்த வெள்ளை ஷேர்ட்டையும் மீறித் தினவெடுத்த பரந்த மார்பும், எட்டடுக்கு வயிறுடனான இறுகிய தேகமும் என்று, ஆண்மைக்கு இலக்கணம் கற்றுக் கொடுக்கும் இந்த ஆடம்பர ஆண்மகனை என்னவென்று விபரிப்பது?
முன்பே அவன் தன் உடலை அத்தனை கவனமாகப் பராமரிப்பான்; ஆனால் கொஞ்சம் மெலிந்த தேகமாக இருப்பான். இப்போது அந்த மெலிந்த உடலைக் காணவில்லை; மாறாக, தலை முடி முதல் கால் வரை ஆண்மை ததும்பி வழிந்துகொண்டிருந்தது. அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் ஒருவித ஆளுமை, அதிகாரம் நிறைந்திருந்தது. இவன் இப்படியிருந்தால், எந்தப் பெண்தான் இவனை சும்மா விட்டுவைப்பார்கள். இதோ இப்போது கூட அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், இதயத்தில் ஒருவித பிரளையத்தை ஏற்படுத்துகிறதே. அடிவயிற்றில் மின்னலாய்த் தோன்றும் சிலிர்ப்புடனான வலிக்கு உவமையாக எதைச் சொல்வது.
தன்னை மறந்து அவனையே பார்த்திருந்தவளுக்கு, கல்கரியில் இருப்பவன் இங்கே ஏன் வந்தான்? என்கிற கேள்வி நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் தோன்றியது.
இவன் வரமாட்டான் என்றுதானே அபிநயா சொன்னாள்! அதை நம்பித்தானே இந்தத் திருமணத்திற்கே வந்தாள். ஆனால், இப்படி முழுதாய், ஆண்மை ததும்பக் கண் முன்னால் வந்து நிற்கிறானே! அவளையும் மீறி இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள, கால்களோ நடுங்கின. உடல் வியர்த்துக் கொட்டியது; கரங்கள் சில்லிட்டன.
இதில், அவனைத் தழுவிய காற்றுக் கூட மெதுவாய் அவள் நாசியை வந்தடைய, அவன் கால்கள் பதிக்கும் ஓசை அவள் காதுகளில் உரசிச் செல்ல, நிதானமாக நெருங்கி வருபவனை அதற்கு மேல் பார்க்கும் சக்தியின்றி அங்கிருந்து சென்றுவிடும் நோக்கத்தில் திரும்ப, அவள் வலி வேதனை பக்கத்திலிருப்பவளுக்குப் புரிந்தால் தானே. விலகியவளின் கரத்தைச் சட்டென்று பற்றி நிறுத்திவிட்டாள் மயூரதி.
“ஏய்… எங்கே போகிறாய்? அவர்கள் வந்து விட்டார்கள் தெரியவில்லையா?” என்று கடிந்து விட்டு, முன்னேறி வந்திருந்த மனிதரைப் பார்த்துப் புன்னகைத்தபடி, “நல்வரவு சார்…” என்றவாறு தன் தட்டிலிருந்த திருநீறை நீட்டினாள் மயூரதி. புன்னகையுடன் அதை வாங்கி நெற்றியில் இட்டவர், அருகே எலிசபத் நீட்டிய சந்தனத்தையும் வாங்கி இட்டுக் கொண்டு விதரணையருகே வர, இவளோ அவர்களை நிமிர்ந்தும் பார்க்காமல், தட்டுத் தடுமாறி நடுங்கும் கரங்களால் பன்னீர் தெளித்து வரவேற்றாள்.
அதைத் தலை குனிந்து வாங்கிக்கொண்டு நிமிர்ந்தவரின் முகத்தில் பெரும் வியப்பு. அவளை ஒரு விநாடி உற்றுப் பார்த்தவர்,
“ஏன்மா… நீ அறிவழகனின் மகள்தானே?” என்று அவர் வியந்து கேட்க, தயக்கத்தோடு அவரைப் பார்த்தவள் மெதுவாக ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
அதைக் கேட்டுப் பளிச்சென்று சிரித்தவர், “அடடே… எப்படிமா இருக்கிறாய்? அப்பா, அம்மா இருவரும் நலம்தானே? உனக்கு ஒரு தம்பி இருக்கிறான் அல்லவா… அவன் பெயர் கூட…” என்று அவர் இழுக்க,
“விதுரன் அங்கிள்…” என்றாள் தயக்கமாக.
“ஆமாம்… விதுரன்! அவனும் நலம்தானே? உன்னைப் பார்த்து எத்தனை காலமாயிற்று! கடைசியாக ஆனந்தன் வீட்டில் வைத்துப் பார்த்தது” என்று நிஜமான மகிழ்வுடன் கூறியவர், பின்னால் வந்த தன் மனைவியைப் பார்த்து, “இது யார் என்று தெரிகிறதா?” என்றார்.
அவர் மனைவி மதிவதனியும் விதரணையை ஒரு விநாடி யோசனையுடன் பார்த்தார். “தெரிய வில்லையே…” என்று அவர் இழுக்க,
“ப்ச்… முன்பு அடிக்கடி ஆனந்தன் வீட்டில் சந்தித்தோமே அறிவழகன்… நாம் கூட அடிக்கடி மாத்திரை மருந்து பற்றிய விவாதத்தில் ஈடுபடுவோமே… ப்ச்…. அதுதான் இயற்கையான வைத்தியம் தான் நல்லது என்பாரே… அவருடைய மகள்! நம் அபியின் நெருங்கிய தோழி; அடிக்கடி அபியைப் பார்க்க ஆனந்தன் வீட்டிற்கு வருவாள், நினைவில்லையா உனக்கு?” என்றதும் அவர் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. அடுத்த விநாடி விழிகள் மகிழ்ச்சியில் விரிய, நகர்ந்து எட்டி அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்த மதிவதனி,
“அடடே… விதரணையா நீ? பாரேன்… ஐந்து வருடங்கள் இருக்குமா உன்னைப் பார்த்து…? எத்தனை அழகாக இருக்கிறாய்! அப்படியே இளவரசி போல அத்தனை அம்சமாக இருக்கிறாய் தங்கம்!” என்று அவளுடைய கரத்தை அழுத்திக் கொடுத்து விடுவிக்க, இவளோ பதில் சொல்லவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் தவித்தபடி நெளிந்தவாறு நின்றாள். அவளால் வேறு என்னதான் செய்ய முடியும்?
அதே நேரம் சற்றுத் தள்ளி யாருடனோ பேசிக்கொண்டிருந்த ஏற்றமாதிபன், அவரிடமிருந்து விடைபெறுவது தெரிய மேலும் கலங்கிப்போனாள் அவள்.
இன்னும் சொற்பநேரத்தில் அவர்களை நோக்கி வந்துவிடுவான். இவளைக் கண்டதும் என்ன செய்வான்? பதறியது உள்ளம். கூடவே அவளை நினைவிருக்குமா என்கிற கேள்வியும் எழுந்தது. அவனைப் பார்த்தே ஐந்து வருடங்கள் ஆகின்றன. நிச்சயமாக மதிவதனி ஆன்டி மறந்தது போல அவனும் மறந்திருப்பான். நினைக்கும் போதே நெஞ்சம் வெடித்தது அவளுக்கு. அவன் மறந்து இருப்பான். ஆனால் அவள்தான்… நொடிப் பொழுது கூட மறக்க முடியாமல் தவிக்கிறாள்.
மூச்சில் ஒருவித நடுக்கம் பிறக்க, தன் கவனத்தை மீண்டும் முன்னால் நின்றிருந்தவர்களிடம் செலுத்தி, சிரமப்பட்டு ஒரு புன்னகையைச் சிந்தி சமாளிக்க முயல, மதிவதனியோ, ஆசையோடு எட்டி அவள் கன்னத்தை வருடிக் கொடுத்துக் கிள்ளியவர்,
“ஏன்மா உன் அப்பா, அம்மா வரவில்லையா?” என்றார் அங்கும் இங்கும் பார்த்தவாறு.
“இ… இல்லை ஆன்டி… அப்பாவுக்கு இன்று ஏதோ முக்கியக் கூட்டம் இருப்பதால் வருவதற்குத் தாமதமாகும் என்று சொன்னார். அப்பா இல்லாமல் பெரிதாக அம்மா எங்கும் போக மாட்டார்கள்; அதனால் நாங்கள் மட்டும்தான் வந்திருக்கிறோம்…” இவள் சொன்னாலும், விழிகள், அவளையும் மீறிப் பின்னால்தான் சென்று வந்தது.
அவன் வர முதல் அங்கிருந்து ஓடிவிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. ஆனால் அவரோ விட்டு விலகாமல் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருக்கிறாரே. இதில் எப்படித் தப்பித்து ஓடுவது? கையிலிருந்த பன்னீர்செம்பை மேசையில் வைத்துவிட்டுக் கரங்களைப் பிசைந்தவாறு, அந்த ஆறடி நான்கங்குல மனிதனிடம் தன் கவனத்தைச் செலுத்துவதும் பின் மீளப்பெறுவதுமாக இருக்க, அவள் அவஸ்தை புரியாமல்,
“ஓ… மறக்காமல் அப்பாவிடமும், அம்மாவிடமும் நாங்கள் நலம் விசாரித்ததாகச் சொல்ல வேண்டும், சரியா? நேரம் கிடைத்தால் உன் வீட்டிற்கும் வருகிறோம்…” என்றவர், அவளுடைய கன்னத்தை மீண்டும் ஆசையோடு கிள்ளிவிட்டுத் தன் கணவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
இவளோ நிம்மதியோடு, ‘இனி ஓடிவிடலாம்’ என்று நினைத்துத் திரும்பும் வேளையில், அவள் பாதையை மறைத்து நின்றவாறு அந்த ஏற்றமாதிபனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயந்தி. விதரணைக்கு எரிச்சல்தான் வந்தது.
‘நேரம் கெட்ட நேரத்தில் இவள் வேறு…!’ – அவளை விலக்கிப் போக நினைக்கையில்,
“ஹே… விதரணை! ஒருத்தன் வருகிறான்டி… வாவ்… செம ஹேண்ட்ஸமா இருக்கிறாரே!” என்று ஆர்வத்தோடு விதரணையின் பக்கமாகத் திரும்ப, அங்கே அவள் நின்றிருந்த இடம் வெற்றிடமாக இருந்தது.
‘இங்கே தானே இருந்தாள்…? அதற்கிடையில் எங்கே போனாள்?’ என்கிற கேள்வியோடு திரும்பிப் பார்க்க, அங்கே விதரணை குறுக்கே நின்றிருந்த, ஜெயாவைத் தாண்டிச் செல்ல முயல்வதைக் கண்டதும், சட்டென்று பாய்ந்து அவள் கரத்தைப் பற்றிய மயூரதி,
“ஏய்… ஐம்பதாவது ஆடு சிக்கிடுச்சு…” என்றவாறு அவளைத் தன்னை நோக்கி இழுக்க, அவள் இழுத்த வேகத்தில் ஜெயாவோடு மோதி அவளைக் தள்ளியவாறு மேசையருகே வந்து நின்றாள் விதரணை. ஜெயாவும் இதை எதிர்பார்க்க வில்லை. இவள் திரும்பிய வேகத்தில் இவள் தேகம் ஜெயாவோடு மோதியதில் அவள் மேசையோடு மோதி நிற்க, இவள் கஷ்டகாலமோ என்னவோ, இவள் மேசையில் மோதிய வேகத்தில், மேசையின் முனை நச்சென்று ஜெயாவின் தொடையைப் பலமாகப் பதம்பார்த்துவிட்டிருந்தது.
அது கொடுத்த வலியில், ஆஆஆ என்று அலற வாய் திறந்தவள், அந்த அழகிய ஆண்மகன் நெருங்கி வருவதைக் கண்டதும் சிரமப்பட்டுத் தன் அலறலை நிறுத்திவிட்டுத் திரும்பி விதரணையைப் பார்த்து முறைத்தாள். இவளோ அசடு வழிந்தவாறு திரும்பி ஜெயாவைப் பார்த்து விழிகளால் மன்னிப்புக் கேட்க, மன்னிப்புக் கொடுக்கும் நிலையில் ஜெயந்தி இருக்கவில்லை.
‘இருடி… வாய்ப்புக் கிடைக்காமலா போகும். அப்போது பார்த்துக் கொள்கிறேன்..’ என்று மனதில் கறுவியவளாகத் திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க, விதரணையோ மயூரதியை எரிச்சலுடன் பார்த்தாள்.
“எதுக்கடி என்னை இழுத்தாய்?” – கொதிப்போடு தோழியிடம் சத்தம் வெளி வராமல் சீற, அவளோ,
“அங்கே பார்…. ஐம்பவதாவது ஆள் வருகிறது. ஆனாலும் இத்தனை பேரில் இவன் வேறு இரகமாக இருக்கிறான்டி… எத்தனை அழகு! எத்தனை கம்பீரம்…! ம்… பேசாமல் நான் நீயாக இருந்திருக்கலாம்…” மயூரதி பெருமூச்சு விட, நறுக்கென்று அவள் கரத்தைக் கிள்ளிவிட்டிருந்தாள் விதரணை.
“அவுச்… ஏன்டி கிள்ளினாய்?” என்றவாறு திட்ட வாயெடுத்தவள், அந்த இளைஞனின் நிழல் இவர்களின் மீது படவும், சட்டென்று வாயை மூடி விட்டு வாயெல்லாம் பல்லாக,
“நல்வரவு சார்…” என்றவாறு திருநீறை நீட்டினாள். எந்த உணர்வும் இல்லாத முகத்தோடு அவள் நீட்டிய திருநீறை, சுட்டுவிரலால் நசுக்காக வாங்கி நெற்றியில் பூசாமல் கழுத்தில் மட்டும் பூசிவிட்டு நகர, அதுவரை எலிசபத் கொடுத்துக்கொண்டிருந்த சந்தனத்தை, ஜெயந்தி நீட்டிக்கொண்டிருந்தாள். அது எப்படி ஜெயந்தியின் கைக்குப் போனது, எப்போது எலிசபத் பின்வாங்கினாள் என்பதெல்லாம் கடவுளுக்கே தெரிந்த இரகசியம்.
ஜெயந்தி நீட்டிய கிண்ணத்திலிருந்து நடு விரலால் பட்டும் படாமலும் எள் அளவேயான சந்தனத்தை, நன்றியோடு நடுவிரலால் தொட்டு எடுத்தவன், அதையும் கழுத்தில் பூசிவிட்டு விதரணை நோக்கி நகர, இவளையும் அறியாமல் இதயத்தின் படபடப்பு பன்மடங்கு அதிகமாகிவிட்டிருந்தது,
‘இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கவே கூடாது. இவன் வரமாட்டான் என்று சொன்னதை நம்பி வந்தது தவறாகப் போயிற்று; இப்போது என்ன செய்வது!’ என்று நூறாவது முறையாக நினைத்தவளுக்கு அவளையும் மீறிக் கண்கள் கலங்கித்தான் போயின. அவளுடைய ஏமாற்றமும் வலியும் அத்தனை சிறிதல்லவே.
இத்தனை காலமாய் இவனை மறக்க முயன்றும் முடியாமல் தோற்று, உள்ளுக்குள்ளேயே கசங்கிப்போகும் அவளுக்குத்தானே தெரியும் அந்த வலியின் வேதனை! தன் மனத்தில் எழும் தாங்கொனா வலியை வெளியே காட்ட முடியாமல், உள்ளுக்குள்ளேயே மறைத்து, வெளியே சிரிக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது. அதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா?
இதோ வந்துவிட்டான்… இவள் தேகம் பலமிழந்தது போல நடுங்கத் தொடங்கியது.
விதரணையின் பன்னீர் செம்பைத் தாங்கிய கரங்கள் நடுங்குவது வெளிப்படையாகவே தெரிந்தது. எங்கே அது விழுந்துவிடுமோ என்று அஞ்சி இறுக்கமாகப் பற்றியிருப்பது கூட வெளுறிய அவள் கரங்களில் தெரிந்தது. சீற்றமான மூச்சு வேறு நடுக்கமாய் தெறித்து வெளியே வந்தது. அவனைப் பார்க்க முடியாமல், குடைகவிழ்ந்தன விழிகள்.
அவளுக்கு முன்பாக நின்றிருந்தவனின் விழிகளில் என்ன மின்னலா உற்பத்தியாகிறது? அவளைப் பார்க்கும் ஒவ்வொரு விநாடிக்கும் அதிலிருந்து எதுவோ பாய்ந்து அவளை மேலும் அதிர வைக்கிறதே. தவித்து நிற்கையில் அவள் தோளை இடித்தாள் மயூரதி.
இவளோ எரிச்சலோடு தோழியைப் பார்க்க, அவளோ விழிகளால், இவளுக்கு முன்பாக நின்றிருந்தவனைச் சுட்டிக்காட்ட, சிரமப்பட்டு குடைகவிழ்ந்த விழிகளை உயர்த்திப் பார்த்தாள் விதரணை.
தொலைதூரம் சென்றாலும்…
தொடுவானம் என்றாலும் நீ…
விழியோரம்தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய்…!
இதழ் என்னும் மலர்கொண்டு..
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய் ..!
பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்..
எழில்கோலம் !
இனிமேல்..
மழை காலம்..!!
மிகப் பொருத்தமாக உள்ளேயிருந்து வந்த பாடலில் திடுக்கிட்டவளுக்கு ஏனோ அவனது அழுத்தமான பார்வையை ஒரு விநாடி கூட எதிர்கொள்ள முடியவில்லை. அவனிடமிருந்து வந்த அந்த உயர்தர வாசனைத் திரவியத்தையும் மீறி, அவனுக்கே உரித்தான அந்த கம்பீர வாசனை நாசியைத் தீண்ட, அதுவரை ஏமாற்றத்திலும் வலியிலும் கசங்கியிருந்த மனது இப்போது சொல்லனா தித்திப்பில் சிலிர்த்தது.
அவனும் அவளைத்தான் இமைக்காது பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள, அந்த உலகம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்ட உணர்வு அவளுக்கு.
எத்தனை நேரம் அப்படியே நின்றார்களோ,
“ஆதிபா…” உள்ளேயிருந்து தாயின் குரல் கேட்க, அதுவரை அவளையே பார்த்திருந்தவன், நிதானமாகத் திரும்பித் தாயைப் பார்த்துவிட்டு மீண்டும் இவளிடம் தன் கவனத்தைக் கொண்டு வர, விதரணைதான் ஏதோ தப்பு செய்தவள் போலக் குன்றிப் போனாள்.
இவ்வளவு நடந்த பிறகும் வெட்கம் கெட்டு அவன் விழிப் பார்வையில் சிலிர்த்து நிற்கிறாளே. சே… தன்னையே திட்டியவள் சிரமப்பட்டுத் தன் உணர்ச்சிகளை ஒரு கட்டுக்குக் கொண்டு வந்து அவனுக்குப் பன்னீர் தெளிக்கக் கரங்களை உயர்த்துகையில்,
“நோ நீட்.. தாங்க் யு..” என்று தன் ஆழமான அழுத்தமான கம்பீரக் கூரலில் சொல்லிவிட்டு மீண்டும் அவளை இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல, அதுவரை இறுக்கிப்பிடித்திருந்த உணர்வுகள் அனைத்தும் வடிந்து சென்ற உணர்வில், தளர்ந்து போனாள் விதரணை. உடல் வெடவெடத்தது. காரணமின்றியே வியர்த்துக்கொட்ட, முகம் வெளுறிப் போனது.
“கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பார்கள்; அவளோ அவனைக் கண்டதும் கடன் பெறாமலே கலங்கிப் போய் நின்றிருந்தாள்.
அங்கே நிற்கும் ஒவ்வொரு நொடியும் மூச்சு முட்டுவது போல் தோன்ற, எங்காவது சென்று தனியாக ஒரு ஐந்து நிமிடம் இருந்தால்தான் பழையபடி மனது அமைதியடையும் என்பது அவளுக்குப் புரிய, இனி வருவதற்கு யாருமில்லை என்பதால், சிரமப்பட்டுத் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்ட விதரணை, முகத்தில் புன்னகையைத் தேக்கித் தோழிகளைப் பார்த்தாள்.
“ஹே… கேர்ள்ஸ்! ஒரு ஐந்து நிமிடம் கொடுங்கள், வந்துவிடுகிறேன்…” என்றவாறு சிறு விரலை மட்டும் உயர்த்திக் காட்டிவிட்டு, அவர்களின் பதிலையும் கேட்காமல் எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல, வேகமாக அங்கிருந்து அந்த மண்டபத்தின் ஓரமாக இருந்த கழிவறை நோக்கி ஓடினாள் விதரணை.
உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டு, அந்தக் கதவின் மீதே சாய்ந்து நின்றிருந்தவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. மூச்சோ சூடாய் சீற்றத்தோடு வெளி வந்தது. உதடுகள் நடுங்கின. இமைகள் துடித்தன. அந்தக் கழிவறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றி அதன் மீது சாய்ந்து நின்றவாறு தவிப்போடு விழிகளை மூடியவளின் கண் முன்னால் அழகிய சிரிப்போடு வந்து நின்றான் அவன். அது ஏழுவருடப் பழமையான கதை… இப்பொது நினைத்தாலும் நெஞ்சை அறுக்கும் கதை அது..
(7) அது அக்டோபர் மாதம் இருபத்தி நான்காம் திகதி. அப்போது அவளுக்கு வயது வெறும் பதினாறுதான்; இல்லை இல்லை...…
(4) அன்று விதரணையின் வீடு இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே? இன்றுதான் அபிநயாவின் நிச்சயதார்த்தம்! இன்றைக்கென்று அறிவழகனுக்கு அவளோடு விழாவுக்கு…
(2) அன்று அதிகாலை எழுந்த விதரணைக்கு, அன்றைய நாள் மிக அழகாக மலர்ந்திருப்பது போலத் தோன்றியது. இருக்காதா பின்னே?…
(1) மே மாதத்தின் இறுதி நாட்கள். அதிகாலை ஐந்து மணிக்கே பகலவன் கனடாவை எட்டிப்பார்க்கச் சுறுசுறுப்போடு தயாராகிவிட்டான். அனல் கக்கும்…
(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய…
(1) அலுவலக மேசையின் முன் அமர்ந்தவாறு ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான், ஆதிபன். வாரி விட்டும் சரியாக நிற்க…