Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 4/5

(4)

அன்று விதரணையின் வீடு இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே? இன்றுதான் அபிநயாவின் நிச்சயதார்த்தம்!

இன்றைக்கென்று அறிவழகனுக்கு அவளோடு விழாவுக்கு வர முடியாத நிலை. ஏதோ முக்கிய வேலை அலுவலகத்தில் இருந்ததால் வீட்டிற்கு வரத் தாமதமாகும் என்று அவர் சொன்னதும், விதரணைக்குக் கோபம்தான் வந்தது.

“முன்னமே சொல்வதற்கு என்ன?” – தந்தையிடம் போர்க்கொடி தூக்க, அவரோ ஏதேதோ சொல்லி அவளைச் சமாதானம் செய்துவிட்டு, மாலை ஒன்பது மணியளவில் அவர்களை மண்டபத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதாக உறுதியளித்துக் கைபேசியை வைத்து விட்டார்.

வேலை நாள் என்பதால் சட்டென்று வேலையை விட்டு வர முடியாத நிலை. அதுவும் தந்தையின் வேலைக்கு அது சாத்தியமும் அல்ல. இருந்தாலும் அவள் மட்டும் தனியே எப்படிப் போவது? அவர் வரவில்லை என்றால் தாயும் வரமாட்டார். அது என்னவோ, அந்தப் பழைய காலத்துப் பழக்கம் போல, நல்ல காரியங்களுக்குக் கணவன் இல்லாமல் அமுதா போகவே மாட்டார்.

இப்போது என்ன செய்வது? யோசனையில் இருந்தவளின் முன்னால் வந்து நின்றான் அவளுடைய ‘பலியாடு’.

“விதுரா குட்டி…” என்றவள், அவன் மறுக்க மறுக்க நிச்சயதார்த்தத்திற்கு அழைத்துச் செல்ல அவனைத் தயாராக்கிவிட்டாள் விதரணை.

“ஏய்… என்னை விடு! நான் வரவில்லை… அம்மா, அக்காவிடம் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கே இருக்க மாட்டார்கள்; போர் அடிக்கும். நான் போக மாட்டேன்!” – தம்பி மறுக்க மறுக்க, அவனுக்கான ‘குர்தா  – பைஜாமா’வைப் போட்டுவிட்டாள் விதரணை. அமுதாவோ முகத்தில் கெஞ்சலோடு மகனைப் பார்த்தார்.

“டேய் பிளீஸ்டா… அக்கா பாவம். தனியே எப்படிடா? அதுவும் நிச்சயதார்த்தம் முடியவே நேரம் எடுக்கும். இரவு நேரம், அவள் மட்டும் எப்படித் தனியே போய் வருவாள்?” என்று அமுதா கெஞ்ச,

“அவள் எங்கே தனியே வரப்போகிறாள். அப்பா அழைத்து வருவார்தானே…” அவன் எரிச்சலுடன் சொல்ல,

“அது சரிடா… நீ துணைக்குப் போனால் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் கண்ணா…” தாய் கெஞ்ச, வேறு வழியில்லாமல் தாயையும் தமக்கையையும் முறைத்தான் விதுரன்.

“இந்தக் குடும்பத்தில் பிறப்பதற்குப் பதிலாக வேறெங்காவது பிறந்திருக்கலாம்… சே! குடும்பமா இது…?” முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு முறைத்தபடி அவன் வெளியேற, அதைக் கண்டு பக்கென்று நகைத்துவிட்டாள் விதரணை. கூடவே அமுதாவும்தான்.

“பாவம்டி… இப்போது அவனை ஏன் இப்படி வற்புறுத்தி அழைத்துச் செல்கிறாய்? நீ மட்டும் போய் வாவேன்…” என்றார் அமுதா, தன் மகனுக்காகப் பரிதாபப்பட்டவராக. இவளோ தாயைப் பார்த்து முறைத்தாள்.

“இங்கே இருந்தால் என்ன செய்வான்? சும்மா ஐ-பாடிலும் டிவியிலும் நேரத்தைச் செலவு செய்வான். அங்கே வந்தாலாவது நாலு பேரோடு பேசுவான். புதிய நண்பர்களைச் சேர்த்துக்கொள்வான். என்னோடு வரட்டும் அம்மா…” என்றவள், தானும் தயாராகிக் கண்ணாடியில் பார்க்க, அவளுக்கே தன் அழகில் ஒரு பெருமை வந்தது.

நீண்ட விழிகளுக்கு இட்ட கண்மை, அந்த விழிகளைக் கவர்ச்சியாக மட்டுமல்லாமல் மேலும் பெரிதாகக் காட்டின. அதற்கு மேலே திருத்தப்பட்ட வில் புருவங்கள். காதில் பெரிய குடைத் தொங்கட்டான்; அழகிய கூர் நாசியில் மினுமினுக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தி. இயற்கையாய் சிவந்த செம்பவள உதடுகளுக்கு அதே நிறத்தில் உதட்டுச்சாயம். கழுத்தில் கெட்டியாய்ப் பிடித்திருந்த கெட்டிப்பூரான் அட்டியல்.

இளம் சிவப்பு நிறத்திற்குப் பச்சைக்கரையிட்ட பட்டுச் சேலை, அவளது பொன்வண்ண மேனியைச் சிக்கெனச் சுற்றியிருக்க, அதற்குத் தோதாக ஜாக்கெட். கரங்களில் அதே நிறத்தில் வளையல்கள்; இடையில் இடையாரம். அம்மாடி… இத்தனை அழகியைக் காண இரண்டு கண்கள் போதாதே! போதாததற்கு முன்தினம் வாங்கி வந்த மல்லிகைச் சரம் சற்று வாசனையைத் தொலைத்திருக்க, அதற்குச் செயற்கையாக மல்லிகைப்பூ வாசனைத் திரவியத்தைப் பூசி, வாசனையைத் தூக்கலாக்கி அதைத் தலை நிறையச் சூடிக்கொண்டாள். அப்பப்பா… உலக அழகிகளே அவளிடம் தோற்றுத் தான் போவார்கள்!

தன்னை மறந்து கண்ணாடியில் தன் அழகை ரசித்திருக்க, புயலென உள்ளே வந்தான் அவள் தம்பி விதுரன். நேரம் போவது தெரியாமல் தன்னையே ரசித்துக்கொண்டிருந்த சகோதரியைப் பார்த்து முறைத்தவன்,

“இந்தப் பெண்களால் இதுதான் தொல்லை… எத்தனை நேரம்தான் இப்படிக் கண்ணாடியில் குடித்தனம் நடத்தப் போகிறாய்? அங்கே எல்லாம் முடிந்த பிறகா போகப்போகிறாய்?” என்று ஆங்கிலத்தில் எரிச்சலோடு கேட்டான்.

அப்போதுதான் சுயம் வந்தவளாக, மீண்டும் சற்று விலகித் தன் பட்டிடையையும், ஆலையிலை வயிற்றையும் வெளிக்காட்டிய சேலையைச் சரியாக்கியவாறு,

“டேய்… ஏன்டா பரபரக்கிறாய்? இதோ எல்லாம் முடிந்துவிட்டது.. வருகிறேன்… பொறு…” என்றாள் விதரணை. பெண்களுக்கே உரிய அந்த நிதானத்தோடு அவள் திரும்பவும் தன்னை ஒருமுறை சரிபார்க்க, விதுரனோ தன் தலையில் அடித்துக் கொண்டான்.

“கடவுளே! இதற்குத்தான் உன்னோடு எந்த இடத்திற்கும் வருவதில்லை. ஒரு இடத்திற்குப் போவதாக இருந்தால் நேரத்திற்குப் போக வேண்டாமா?” என்று எரிந்து விழுந்தவன், அங்கே உதட்டில் சற்று விலகிப் பட்டிருந்த உதட்டுச் சாயத்தை அவள் துடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு முகம் சுளித்தான்.

“இந்தச் செயற்கை அழகு சாதனங்கள் இல்லாவிட்டால் உன் முகத்தை யாரும் பார்க்க மாட்டார்களா? முதலில் சீக்கிரமாக வந்து தொலை… நேரம் போகிறது. விட்டால் நீ அபி அக்காவின் பேரன், பேத்திகளின் திருமணத்திற்குத்தான் போவாய் போல! சீக்கிரமாக வா அக்கா…” என்ற தம்பியின் தலையில் சின்னதாக ஒரு குட்டு வைத்தாள்.

“வந்திட்டேன்டா… கொஞ்சம் பொறு… அப்பப்பா! இந்த வீட்டில் நிம்மதியாகத் தயாராக முடிகிறதா?” எனச் சலித்துக்கொள்ள, தம்பி அவளை முறைத்தான்.

“ஒரு ஆணுக்குத் தயாராகக் குறைந்தது பத்து நிமிடங்கள் போதும்; பெண்களுக்கு ஒரு மணிநேரம் போதும். ஆனால் நீயோ இரண்டு மணி நேரமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறாய். இன்னும் முடியவில்லை என்றால் எப்படி? பேசாமல் நீ மட்டும் தனியே போயிருக்கலாம்…” எனச் சிடுசிடுக்க, தம்பியின் குண்டுக் கன்னத்தைக் கிள்ளிவிட்டாள் விதரணை.

“கோபிக்காதே என் செல்லத் தங்கத் தம்பி… அங்கே போனதும் எனக்குக் கிடைக்கும் இனிப்பு வகையறாக்கள் முழுவதையும் உனக்கே கொடுக்கிறேன், சரியா?” எனப் பேரம் பேச, தம்பி மீண்டும் முறைத்தான்.

“ரொம்ப முக்கியம்… முதலில் கிளம்பு!” என்று விட்டுப் பெரிய மனிதனைப் போலத் தத்தக்கா பிதக்கா என்று உருண்டவாறு அவன் நடக்க, அவனது நடையைக் கண்டு உள்ளூற நகைத்தவள், கடைசியாக ஒருமுறை கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துவிட்டு அவன் பின்னே வேகமாக நடந்தாள்.

வாசலை அடைந்ததும், “அம்மா… போய்விட்டு வருகிறோம். கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள்!” என்றுவிட்டு வெளியேறினாள்.

வெறுமையாக இருந்த முன்பாதையைப் பார்த்த விதுரன், “அக்கா… நாம் எப்படிப் போகப் போகிறோம்? அப்பாவும் அழைத்துச் செல்ல வர மாட்டார். அப்படியிருக்க, நாம் எப்படி மண்டபத்திற்குப் போவது?” என்று யோசனையுடன் கேட்டான்.

“ம்… மயூரதி வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறாள்…” என்ற விதரணை, கை பேசியை எடுத்துப் பார்த்தாள். மயூரதியிடமிருந்து ‘ஆன் மை வே’ என்கிற செய்தியைக் கண்டதும், “வந்துகொண்டிருக்கிறாள் விதுரா…” என்றாள் தெருவை எட்டிப் பார்த்தவாறு. மயூரதி வருகிறாள் என்பதைக் கேட்டதும் மீண்டும் தலையில் அடித்துக் கொண்டான் விதுரன்.

“சுத்தம்… இன்று நிச்சயதார்த்தத்திற்குப் போனது போலத்தான்! வா அக்கா… திரும்ப வீட்டுக்குப் போய் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்…” என்றவனை அவள் புரியாமல் பார்க்க, தன் சகோதரியை எரிச்சலுடன் பார்த்தான் விதுரன்.

“ம்… உனக்கே இரண்டு மணிநேரம் எடுத்தது. மயூரா அக்காவுக்கு ஒரு நாள் கூடப் போதாது கிளம்புவதற்கு. அவர்களுக்கு முகத்திற்கு ‘கிரீம்’

பூசவே நாலு மணிநேரம் தேவைப்படும். அதற்குப் பிறகு உதட்டுச்சாயம், நகப்பூச்சு, தலை அலங்காரம்…” சொல்லும்போதே களைத்தவன், “ம்கூம்… இன்று நிச்சயதார்த்தத்திற்குப் போக வாய்ப்பேயில்லை… நான் வீட்டிற்கே போகிறேன்…” என்று திரும்பிய தம்பியை இழுத்துப் பிடித்தாள் விதரணை.

“டேய்… பிளீஸ்டா… சத்தியமாக மயூரா கிளம்பி விட்டாள். இங்கே பார், செய்தி கூட அனுப்பி இருக்கிறாள்!” எனச் சொல்ல, சகோதரியை முறைத்தவன்,

“எது? குளித்து முடித்து வெளியே வந்தபோது செய்தி அனுப்பியிருப்பார்… இருந்து பாரும், இன்னும் இரண்டு மணிநேரம் கழித்துத் தான் வருவார்… வேண்டுமானால் பந்தயம்!”  – அவன் முடிப்பதற்குள் அவர்களின் வாசலில் டொயோட்டா வண்டி ஒன்று வழுக்கிக்கொண்டு வந்து நின்றது.

அதிலிருந்த மயூரதி எட்டிப் பார்த்துக் கையை அசைக்க, தன் தம்பியைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தாள் விதரணை. “நான் சொல்லவில்லை? பார், வந்துவிட்டாள்!” என்றதும் விதுரனோ வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

“என்னடா பார்க்கிறாய்?”

“இல்லை… இன்று மழை என்று வானிலை அறிக்கையில் எதுவும் சொல்லவில்லையே? ஆனால் நிச்சயமாக மழை பெய்யப் போகிறது…” என்றவன், சற்றுத் தள்ளி வானம் கறுத்து வருவதைக் கண்டு முகம் மலர்ந்தான். “அங்கே பார்… நான் சொல்ல வில்லை? வானம் கறுத்துக்கொண்டு வருகிறது… நிச்சயமாக மழை பெய்யப் போகிறது!” – தம்பி ஏன் அப்படிச் சொல்கிறான் என்று புரிய, ‘கிளுக்’ என்று சிரித்துவிட்டாள் விதரணை.

“டேய் உனக்கு நிறையத்தான் கொழுப்பு! இதை மட்டும் மயூரதி கேட்க வேண்டும்…” சிரித்தவாறே வண்டியை நோக்கிச் செல்ல, விதுரனும் பின்னால் சென்றவாறே கதவைத் திறந்து பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டான். விதரணை தன் தோழியின் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.

மயூரதி தன் தோழியின் அழகைக் கண்டு இரசித்துவிட்டு,

“வாவ்… விதரணை! எத்தனை அழகாக இருக்கிறாய்! பார்ப்பதற்கே ஆசையாக இருக்கிறது. நான் மட்டும் ஆணாக இருந்திருந்தால்…” என்று விதரணையைப் பார்த்து இழுக்க, தன் தோழியின் நடு மண்டையில் மெல்லியதாக ஒரு கொட்டு வைத்தாள் விதரணை.

“ஏய்… போதும்… வண்டியை எடு!” என்றாள், சிவந்து போன முகத்தைத் தன் தோழிக்கு மறைத்தவாறு.

ஆனால் மயூரதியோ வண்டியை எடுக்காமல் தன் தோழியைப் பார்த்து முறைக்க,

“என்னடி… அப்படி முறைக்கிறாய்?” என்றாள் குழப்பத்தோடு.

“உன்னிடம் என்ன சொன்னேன்?”  – இன்னும் தோழியின் முகத்தில் கோபம் மறையவில்லை.

“எ… என்ன சொன்னாய்?” – சத்தியமாகப் புரிய வில்லை இவளுக்கு.

“இப்போ… கொஞ்ச நேரத்திற்கு முன்பு என்ன சொன்னேன்?”

“என்ன சொன்னாய்? நான் அழகாக இருப்பதாகச் சொன்னாய்…” – குழப்பத்துடன் சொல்ல, மேலும் தன் தோழியை முறைத்த மயூரதி,

“பதிலுக்கு நீ என்ன சொல்ல வேண்டும்?” என்றாள் அடுத்ததாக.

அதற்கு அவள் என்ன சொல்ல வேண்டும்? குழம்பியவள் பின் முகம் மலர,

“சாரிடி… நன்றி!” என்றாள் விதரணை. இப்போது மயூரதிக்கு நெருப்பு மூச்சே வெளிவந்தது.

“உன்னுடைய நன்றி யாருக்குத் தேவை?”  சீறியவள் வண்டியை உசுப்ப, விதரணைக்கோ குழப்பம்.

“ஏய்… இப்போது எதற்கு இப்படிக் கோபிக்கிறாய்? நீ சொன்னதற்கு நன்றிதானே சொல்ல வேண்டும்…” இவள் சொல்ல, இப்போது இருவருக்கும் நடுவே தன் முகத்தைக் கொண்டு வந்தான் விதுரன்.

“ஹே… லூசு சிஸ்டர்! உன்னை அழகு என்று அவர்கள் சொன்னார்கள் என்றால், பதிலுக்கு நீயும் அவர்களைப் பார்த்து ‘அழகு’ என்று சொல்ல வேண்டாமா? அதுதான் மயூ அக்கா கோபமாகப் பார்க்கிறாள்…” என்று அவன் சொல்ல, அசடு வழிந்தவாறு தன் தலையில் தட்டிக்கொண்டாள் விதரணை.

“ஹீ… ஹீ… சாரிடி! நீயும் மிக மிக…” முடிக்க வில்லை, தன் தோழியின் முன்னால் கையை நீட்டி அவள் பேச்சைத் தடுத்தாள் மயூரதி.

“உன்னுடைய ஆலாபனை எனக்கு வேண்டாம் போ!” – சீறிவிட்டுத் திரும்பி விதுரனைப் பார்த்து, “நீயாவது சொல்லுடா… நான் எப்படி இருக்கிறேன்? அழகாக இருக்கிறேனா?” எனக் கேட்க, விதுரனோ மயூரதியை ஒரு மாதிரிப் பார்த்தான்.

மயூரதியும் அழகுதான். என்ன, நவநாகரிக உலகத்திற்குப் பொருத்தமாகக் குட்டையாக வெட்டிய முடி; அதில் ஆங்காங்கே மஞ்சளாக முடி நிறம் மாறியிருந்தது. காதில் இனி குத்த இடமில்லாத வகையில் தோடுகள் குத்தப்பட்டிருந்தன. மயூரதியின் இயற்கை நிறம் என்ன என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் முகம் முழுவதும் முகப்பூச்சு; கிலோ கணக்கில் உதட்டுச்சாயம். சின்னக் கண்களைப் பெரிதாகக் காட்டுவதற்கு நிறையவே முயற்சி செய்து கண்மை அப்பிப் போட்டிருந்தாள். கவர்ச்சியாகச் சேலை அணிந்திருந்தாள். மயூரதி அழகிதான், ஆனால் அவளுடைய அலங்காரம் அவள் அழகை ஏனோ கட்டுப்படுத்துவது போல இருக்க, உதடுகளைச் சுழித்த விதுரன்,

“ப்ச்… சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை…” என்றான் அலட்சியமாக.

அதைக் கேட்ட மயூரதியின் முகம் வாடிப்போக, விதரணை திரும்பித் தன் தம்பியைப் பார்த்து முறைத்தாள். பின் தோழியைப் பார்த்து,

“அவன் ஒரு ஆள் என்று அவனிடம் கேட்கிறாயே! உலக அழகி ஐஸ்வர்யா ராய் முன்னால் வந்தால் கூட அவனுக்கு அவர்கள் ‘பரவாயில்லை’ என்பது போலத்தான் தெரியும். அவனுக்கு ஒரே ஒருத்தர்தான் அழகு, அது அம்மா! மற்றபடி நான் கூட அவனுக்கு ‘ஓகே’ தான் மயூரதி. உனக்கு அவனைப் பற்றித் தெரிந்தும் அவனிடம் போய்க் கேட்கிறாயே…” எனச் சமாதானமும் தம்பியிடம் முறைப்புமாகச் சொல்ல, கொஞ்சம் மயூரதியின் முகம் தெளிந்தது.

ஆனால் அந்தத் தம்பியோ, “நான் எங்கே ஐஸ்வர்யா ராய் அழகில்லை என்று சொன்னேன்? உலகத்திலேயே உலக அழகியாக வரத் தகுதியான ஒரே பெண் என்றால் அது ஐஸ்வர்யாதான் தெரியுமா… ஆனால் நீங்கள் இருவரும்…” அவன் முடிக்கவில்லை, விதரணை திரும்பி எட்டித் தன் தம்பியின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து,

“போடா… நீயும் உன்னுடைய விமர்சனமும்!” எனச் சீற, அங்கே வண்டிக்குள் வைத்தே குட்டியாக உலகப்போர் ஒன்று ஆரம்பித்திருந்தது.

அதைக் கண்டு கலகலவென்று சிரித்த மயூரதி,

“அம்மாடி… ஏய்… போதும் நிறுத்துங்கள்!” என்று எப்படியோ இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் அவர்களின் சண்டை நின்ற பாடில்லை; மண்டபம் வந்து சேரும் வரைக்கும் வாய்ப்போர் தொடர்ந்தது. நல்லவேளை, காரில் உருண்டு புரண்டு சண்டை பிடிக்கும் வசதியில்லை. இருந்திருந்தால்…?

“ஏய்… மண்டபம் வந்துவிட்டது! இனியாவது சண்டையை நிறுத்துங்கள்!” மயூரதி குரலை உயர்த்திச் சொன்ன பிறகுதான் இருவரின் சண்டையும் நின்றது.

“அப்பப்பா… எப்படித்தான் ஆன்டியும் அங்கிளும் உங்களை வைத்துச் சமாளிக்கிறார்களோ? இங்கே பார்… வியர்த்து விறுவிறுத்துவிட்டது. என் ‘மேக்கப்’ வேறு கலைந்துவிட்டது…” என உச்சுக்கொட்டிய மயூரதி, வண்டியைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டுத் தன் கைப்பையிலிருந்து கண்ணாடி ஒன்றை எடுத்து அழிந்துபோன தன் மேக்கப்பைச் சரிபார்க்க, முன் பக்கமிருந்த இருக்கையில் தலையைப் பலமாக முட்டிக்கொண்டான் விதுரன்.

“மயூ அக்கா… இவ்வளவு அள்ளிக்கொட்டாமல் ‘சிம்பிளாக’ ஒப்பனை செய்யுங்கள். அழகாக இருப்பீர்கள்…” அவன் நேரடியாகவே சொல்ல, நாகரிகம் இல்லாமல் பேசும் தன் தம்பியை மீண்டும் முறைத்தாள் விதரணை. ஆனால், அவனோ அதைக் கண்டுகொண்டால்தானே? அவனுக்குத் தான் எதையும் யோசித்து வடிகட்டிப் பேசத் தெரியாதே!

“ஏய்… எதற்கு அவனை முறைக்கிறாய்? அவன் தன் கருத்தைத்தானே சொல்கிறான், விடேன்…” – தன் தோழியை அதட்டிவிட்டு விதுரனை ஏறிட்டுப் பார்த்தாள் மயூரதி.

“அப்படியா சொல்கிறாய்? சரிடா… அடுத்த முறை நீ சொன்னது போலவே முயற்சி செய்கிறேன். சரியா? இப்போ…” என்றவள், மீண்டும் முகத்திற்குக் கொஞ்சம் அரிதாரத்தைப் போட்டு, சற்று அழிந்து போன உதட்டுச்சாயத்தையும் பூசிக் கொண்டு, “இப்போது நன்றாக இருக்கிறது… சரி… வாருங்கள் போகலாம்!” என்று அவள் கூற, மூவரும் இறங்கி மண்டபம் நோக்கிச் சென்றார்கள். போகும் வழியில்,

“ஏன் விது… நிகழ்ச்சி முடிய எப்படியும் இரவு ஒன்பது மணியாகிவிடும். வீட்டிற்கு எப்படிப் போகப் போகிறீர்கள்? நானே வீட்டிற்கு அழைத்துச் செல்லவா?” என மயூரதி கேட்டாள்.

“இல்லை மயூ… அப்பா வருவதாகச் சொன்னார். நீ இப்போது அழைத்து வந்ததே பெரிய காரியம்…” என விதரணை நன்றியுணர்வோடு சொல்ல, தோழியை முறைத்தாள் மயூரதி.

“ஆமாம், ஆமாம்… பெரிய காரியம்தான்! ஏனென்றால் நான்தான் உன்னையும் உன் தம்பியையும் தோளில் சுமந்துகொண்டு வந்தேன் பார்..” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, முன்னேற, அங்கே வாசலில் அவர்களோடு படித்த தோழிகள் சிலர் நின்று, ஆரவாரமாகக் கைகளை அசைத்து இவர்களை வரவேற்றனர்.

 

(5)

நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழிகளைக் கண்டதும், குதுகலம் பொங்க, “ஹே…” என்று கையாட்டியவாறு அவர்களை நோக்கி நடக்க,

“வாவ்… லுக் அட் யு காய்ஸ்!” என்றவாறு துணிக்கடை பொம்மைக்குச் சேலை உடுத்திய கணக்காகத் துள்ளிக்கொண்டு ஓடிவந்தாள் எலிசபத். அவளைக் கண்டதும் ஒரு பக்கம் சிரிப்பு பீறிட்டாலும், அதை அடக்கிக்கொண்டவளாக,

“எலிசபத் நீயா..! மிகவும் அழகாக இருக்கிறாய்..” என்று விதரணை சொல்ல, அதைக் கேட்டுத் துள்ளிய எலிசபத், “ரியலி?” என்று மகிழ்வோடு சுற்றித் தான் உடுத்திய சேலையை அவர்களுக்குக் காட்ட, அதன் பின் இருவரும் அணைத்துத் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து பின்னால் வந்த மற்றத் தோழிகளும் ஆளாளுக்குப் புகழ்ந்து சம்பிரதாய விசாரிப்புகளை முடித்துக்கொண்டு திரும்ப, இவர்களை முறைத்துக்கொண்டு, பாவற்காய் தின்றது போல முகம் கறுத்து நின்றிருந்தாள் அவர்களோடு படித்த ஜெயா.

ஜெயாவுக்குப் படிக்கும் காலத்திலேயே விதரணையைப் பிடிப்பதில்லை. அவளுடைய அழகா, குறும்புத்தனமா, இல்லை அத்தனை பேரும் அவளோடு சட்டென்று ஒட்டி உறவாடுவதா எது என்று தெரியவில்லை; அவளைப் பிடிக்காது ஜெயானந்திக்கு. ஒரு சிலருக்கு இருக்கும் அதீத பொறாமை அவளிடமும் இருந்ததால், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் விதரணையைப் பற்றித் தப்புத் தப்பாகப் பேசுவாள். அதில் அவளுக்கு ஒரு ஆனந்தம். படித்து முடித்துப் பல்கலைக்கழகம் என்று போன பின்பு, விதரணையின் முகத்தைப் பார்க்காமல் நிம்மதியாக இருந்தாள். அவளுடைய போதாத நேரம், இந்த நிச்சயதார்த்தத்தில் நேருக்கு நேர் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இத்தனை வருடத்தில் அவள் மீதிருந்த பொறாமை மறைந்திருக்கும் என்று நினைத்த விதரணை, தன் பழைய கோபங்களை ஓரம் கட்டி விட்டு இனிய புன்னகையுடனேயே,

“ஹாய் ஜெயா! எப்படி இருக்கிறாய்? நலம் தானே?” என்று கேட்க, சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள் ஜெயா.

“என்னடி… இவள் இன்னும் மாறவே இல்லையா?”  விதரணை வியந்து கேட்க, “ப்ச்… நாயின் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். இவளையும் சரி செய்ய முடியாதுடி!” என்றாள் மயூரதி.

அதைச் சொன்ன தோழியைக் கிண்டலுடன் பார்த்தவள், “ஜெர்மன் ஷெப்பர்ட், டச் ஷெப்பர்ட் என எதுக்குமே வால் சுருண்டு இருக்காது. இங்கே இருக்கிற எந்த நாய்க்கும் வால் வளைந்து இருக்காது; அதனால் இந்தப் பழமொழி இங்கே செல்லாது என் தோழி!” என விதரணை கிண்டலுடன் சொல்ல, அவளை முறைத்தாள் மயூரதி.

“ரொம்ப முக்கியம்… வா! முதலில் அபிநயாவைப் போய்ப் பார்க்கலாம்…” என்றவாறு மணமகள் அமர்ந்திருந்த அறைக்கு விரைய இவர்களும் அவள் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்றார்கள்.

மணமகள் அறைக்குள் ‘லெஹெங்கா’ அணிந்து, மிக அழகாக முகம் பொலிவுற, மணப் பெண்ணுக்கே உரித்தான மலர்வுடன் அபிநயா அமர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்த தோழிகளைக் கண்டதும் அபிநயாவின் முகத்தில் மேலும் பொலிவு அதிகரிக்க, இருக்கையை விட்டு எழுந்து தோழிகளை அன்போடு ஓடி வந்து அணைத்துக்கொண்டாள்.

“உங்களை எல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சி… எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன நாம் இப்படி ஒன்றாகச் சேர்ந்து!” என்று கூச்சலிட்டவள், ஒரு கையில் விதரணையின் கரத்தையும், மறு கையில் மயூரதியின் கரத்தையும் பற்றிக்கொண்டாள். பின் விதரணையைப் பார்த்து,

“நீ மட்டுமா வந்தாய். அங்கிள் ஆன்டி வரவில்லையா?” கோபமும் எதிர்பார்ப்புமாகக் கேட்க, தயக்கத்தோடு விஷயத்தைச் சொன்னாள் விதரணை. அதைக் கேட்டதும், முகம் வாடியவள் மறு கணம்,

“அதனால் என்ன, திருமணத்தின் போது வந்துட்டால் போச்சு…” என்றவள், “உன் தம்பியாவது வந்தானா? இல்லை அவனும் டிமிக்கி கொடுத்துவிட்டானா?” என்றாள் அங்கும் இங்கும் பார்த்தவாறு. அதைக் கேட்டு சிரித்த விதரணை,

“ப்ச்… அவன் வாசலில் யாராவது தெரிந்தவர்களோடு பேசிக்கொண்டிருப்பான் அபி… அவனுக்கு இந்த பெண்கள் கூட்டம் சரி வராதே…” சொல்ல, “ம்… அதுவும் சரிதான். அவனை நான் பிறகு

பார்த்துக் கொள்கிறேன்… நீங்கள் என்னோடு வாருங்கள், அவரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்…” என்றவள், கையில் சிக்கியிருந்தவர்களையும் மற்றைய பெண்களையும் இழுத்துச் செல்ல, அத்தனை பேரும் தங்கள் அன்புத் தோழியின் வருங்காலக் கணவனைப் பார்க்க மகிழ்ச்சியோடு சென்றார்கள்.

அங்கே அவளுடைய வருங்காலக் கணவன் அமலன், யாருடனோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“அமலன்…” என்று அழத்தவாறு அவனை நெருங்க, திரும்பிப் பார்த்தான் அமலன்.

பார்க்க மிக அழகாகக் கம்பீருமாகவே இருந்தான். அபிநயாவுக்கு பக்கா பொருத்தமாக இருந்தான் அமலன்.

தன் வருங்கால மனைவியைப் பார்த்துப் புன்னகைத்த அமலன், கைபேசியை அணைத்து விட்டு ‘என்ன?’ என்பது போல ஏறிட, அவனை நெருங்கிய அபிநயா, தன் தோழிகளைக் காட்டி,

“நான் சொல்வேனே, இவர்கள்தான் என் தோழிகள்…” என்றவள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவிட்டு, கடைசியாக விதரணையைச் சுட்டிக் காட்டி, “இவள்தான் விதரணை… உங்களுக்குச் சொல்லியிருந்தேனே!” என்று முகம் பளபளக்க மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டுப் பின் தோழிகளிடம் தன் கவனத்தைச் செலுத்தியவள், “கேர்ள்ஸ்… இவர்தான் என்… என்…” என்று அதற்கு மேல் முடிக்க முடியாமல் வெட்கத்தில் திணற, அபிநயாவின் அந்த மாற்றத்தைக் கண்ட விதரணையின் முகத்தில் சட்டென்று குறும்புப் புன்னகை ஒன்று தோன்றியது.

“ஐயையோ! அமலன்… என் தோழியை என்ன செய்துவிட்டீர்கள்? இத்தனை நாட்களாக நன்றாகத்தானே இருந்தாள்! இருங்கள், இப்போதே காவல்துறையை அழைத்து உங்களைக் கம்பி எண்ண வைக்கிறேன். உங்களுக்கு எத்தனை தைரியம்!” என்று பயமும் பதற்றமும் கோபமுமாகச் சொன்னவள், உடனே கைபேசியை எடுத்து 911 ஐ அழுத்தத் தொடங்க அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் குழம்பிப் போனார்கள்.

இதில் அமலனோ பயத்துடன் அவளைப் பார்த்தான். அவனுக்குச் சத்தியமாக எதுவும் புரிய வில்லை. அவன் அப்படி என்ன அபிநயாவைச் செய்துவிட்டான்? இதுவரை அவளது கரங்களை மட்டும்தான் பிடித்திருக்கிறான்; அதைத் தாண்டி அவன் எதுவும் செய்யவில்லை! இவ்வளவு ஏன் முத்தம் கூடக் கொடுத்ததில்லை. இந்த நிலையில் என்னையேன் குற்றவாளி போலப் பார்க்கிறாள். குழப்பத்தோடு திரும்பித் தன்னவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். அவளும் எதுவும் புரியாதவளாக விதரணையை ஏறிட்டுவிட்டு அமலனைப் பார்க்க, இவனோ என்ன என்பது போல விழிகளால் கேட்டான். அபிநயாவும் உதடுகளைப் பிதுக்க, இப்போது திரும்பி விதரணையை ஏறிட்ட அமலன்,

“நான்… அப்படி என்ன செய்துவிட்டேன்…” என்றான் பயத்தோடு.

இவளோ அவனை முறைத்துப் பார்த்து,

“என்ன செய்தீர்களா? எப்படி உங்களால் இப்படியெல்லாம் மனசாட்சியே இல்லாமல் பேச முடிகிறது? அபிக்கு வெட்கம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் நீங்கள்… அவளை வெட்கப்பட வைத்திருக்கிறீர்கள்! இது எத்தனை பெரிய குற்றம் தெரியுமா? இதைக் காவல்துறை வரவழைத்துதான் விசாரணைக்கு எடுக்க வேண்டும்…” என உறுதியாகச் சொல்லிவிட்டுப் பின் குறும்பாகக் கண்ளைச் சிமிட்ட, அதுவரை ஒருவித அழுத்தத்தோடு இருந்த அமலன், விதரணை சொன்னதைக் கேட்டதும், முதலில் அவளைப் பார்த்து முறைத்துவிட்டுப் பின் வாய்விட்டுச் சிரித்தே விட்டான்.

“காட்… ஒரு நிமிடம் என்னைப் பயப்படுத்தி விட்டீர்கள் விதரணை!” – அவன் சொல்ல, இப்போது தன் அழகிய வெண்பற்கள் தெரியச் சிரித்தாள் விதரணை.

“ஹா ஹா… ஜஸ்ட் கிடிங்!” என்றவள், பின் தன் தோழியை இழுத்து அணைத்து, “ஆனால்… என் தோழியை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவள் கண்ணில் கண்ணீர் வந்தால்… அப்புறம்…” என அவள் இழுக்க,

“கண்ணீர் வந்தால் என்ன செய்வீர்களாம்?” எனக் கிண்டலாகக் கேட்டான் அமலன்.

“வந்தால் அதைப் படம் எடுத்துச் சமூக வலை தளங்களில் போட்டு கொஞ்சம் பணம் பார்ப்பேன், அவ்வளவுதான்!” – அவள் முடிப்பதற்குள், தன் தோழியின் முதுகில் ‘பளார்’ என்று ஒன்று கொடுத்தாள் அபிநயா.

“நான் அழுதால் உனக்கு மகிழ்ச்சியா?” எனச் சீற,

“ஏய்… உன்னை அழ வைக்க எவனாலும் முடியாது என்று எனக்குத் தெரியும். நீ அவரை அழ வைக்காமல் இருந்தால் சரி… பாவம் மனுஷன்!” என்று சொல்ல, தன் தோழியை முறைத்த அபிநயா,

“விதரணை… வேண்டாம்! நீ என் காலை வாரத் தொடங்கிவிட்டாய். இத்தோடு நிறுத்திவிடு… இதற்கு மேல் தாங்காது… பிளீஸ்!” என்றாள் சிணுங்கலாக.

அதைக் கேட்டதும் திரும்பி அமலனைப் பார்த்து, “அமலன்… இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நிஜமாகவே இவளைத் திருமணம் செய்ய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் தெரியுமா? இவள் சகலகலாவல்லி! நன்றாகச் சமைப்பாள். துணியையெல்லாம் இயந்திரத்தில் போட மாட்டாள் தெரியுமா? எல்லாம் கையால்தான் துவைப்பாள்! வீட்டுத் தரையெல்லாம் முகம் பார்த்தால் பிம்பம் தெரியும் அளவுக்குப் பளபளக்கும். மொத்தத்தில் இவள் ஒரு அருமையான குடும்பத்தலைவி. இவளை மனைவியாக அடைய நீங்கள் பல ஜென்மம் தவம் இருந்திருக்க வேண்டும்.” என்று அவள் உருக்கமாகச் சொல்ல, அமலனோ ஆச்சரியத்துடன் அபிநயாவைப் பார்த்தான்.

அவளோ அவனைப் பார்த்து ‘ஈ’ என்று இளித்து விட்டுத் தன் தோழியை முறைக்க, இப்போது அமலன் விதரணையை நகைப்பு மாறாமல் ஏறிட்டான்.

“நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இவளைச் சின்ன வயதிலிருந்தே எனக்குத் தெரியும்… இவளுக்குச் சாப்பிடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது!” என்று அவன் சொல்ல, திரும்பித் தன் வருங்காலக் கணவரை முறைத்தாள் அபிநயா.

“அமலன்…” அவள் செல்லமாகக் கோபித்து குரலை உயர்த்த இப்போது பற்கள் தெரியச் சிரித்தான் அமலன்.

சட்டென்று அவள் தோளைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டு அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டவன்,

“ஏய்… அதெல்லாம் பிடித்துத்தானே உன்னை மணந்துகொள்கிறேன்? பிறகு என்ன?” என்று அவன் சொன்ன விதத்தில் கொட்டிய காதலைக் கண்டு விதரணை நிஜமாகவே உள்ளம் குளிர்ந்து போனாள். தன் தோழிக்கு நல்ல வாழ்க்கை கிடைத்ததையிட்டு அவளுக்குப் பெரும் மகிழ்ச்சிதான். அதை முகத்தில் மறைக்காமல் காட்டியவள்,

“நிஜமாக மகிழ்ச்சியாக இருக்கிறது அமலன். என் தோழிக்கு அவளுக்குப் பிடித்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது…” என்றவள், அமலனின் அணைப்பிலிருந்த தோழியின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு, “நீ அதிர்ஷ்டசாலி அபி…” என்றாள், தன் இதயத்தின் ஆழத்தில் மெல்லியதாக எழுந்து அடங்கிய வலியை உணர்ந்தபடி.

அதற்குப் பிறகு மற்ற தோழிகளும் சேர்ந்து வாழ்த்துவதும் கலாய்ப்பதுமாக நேரம் கடக்க, விதுரனோ சற்றுத் தள்ளித், தனக்கான ஒரு நண்பனைக் கண்டு அவனோடு பேசிக்கொண்டு அமர்ந்திருந்தான். சிறிது நேரம் மணமக்களோடு பேச்சும் சிரிப்புமாக அவர்கள் நின்றிருக்க, அவர்களைத் தேடி வந்தார் அபிநயாவின் தாய் வசந்தா.

“ஏய்… அபி! நீ இங்கே என்ன செய்கிறாய்? ஆட்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். போ… போய் உன் அறையில் இரு!” – அதட்டிவிட்டுப் பெண்களைப் பார்த்தார். அத்தனை பேரும் அழகாக இருக்க, அவருடைய கண்கள் கனிந்தன.

தன்னை மறந்து அவர்களைச் சுற்றிக் கரங்களால் திருஷ்டி கழித்தவர், “என் கண்ணே பட்டு விடும் போல அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்!” என்றவரின் விழிகள் விதரணையிடம் இன்னும் ஆழமாகப் பதிந்தன.

அம்மாடி எத்தனை அழகாக வளர்ந்துவிட்டாள்… கண்களை இமைதட்டக் கூட முடியவில்லையே… வியந்தவர், அவளை நெருங்கி அவள் கன்னத்தைக் கிள்ளித் தன் உதட்டில் வைத்து முத்தமிட்டவர்,

“எத்தனை காலமாச்சுமா உன்னைப் பார்த்து… எப்படி இருக்கிறாய்? நன்றாக இருக்கிறாய் தானே…” குசலம் விசாரிக்க இவளும் புன்னகையோடு பதில் சொன்ன நேரம், பின்னால் நின்றிருந்த ஜெயாவோ உதடுகளைச் சுழித்துவிட்டு,

‘இந்தம்மாவுக்கு நம்மையெல்லாம் கண்ணில் தெரியவில்லையா? அது என்ன, விதரணையிடம் மட்டும் விசாகரிக்கிறார்கள்?” என்றாள் பக்கத்தில் இருந்த தோழியிடம் முணுமுணுப்பாக.

“ஏய்… மெதுவாகப் பேசு… சின்ன வயதிலிருந்து அபிநயாவும் விதரணையும் நெருங்கிய தோழிகள். உயர்தரப் பாடசாலையில் படிக்கும்போதே, விதரணை அவர்கள் வீட்டில்தான் அதிகம் இருப்பாள்… அந்த அன்பு அவர்களுக்கு இருக்காதா. இதில் போய் குறை கண்டுபிடிக்கிறாயே…” என்று அதட்ட, எரிச்சலோடு உதடுகளைச் சுழித்துத் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள் ஜெயா.

அதே நேரம் விதரணையிடம் குசலம் விசாரித்து முடித்த வசந்தா, சட்டென்று அந்த எண்ணம் புத்தியில் பளிச்சிட அத்தனை பெண்களையும் ஆசையோடு பார்த்து அவர்களிடமும் விசாரித்து விட்டு,

“பெண்களா… உங்களுடைய முகத்தைத் தரிசித்துவிட்டு உறவினர்கள் உள்ளே நுழைந்தால், அவர்களின் கசப்பான எண்ணங்கள் அனைத்தும் நீங்கிவிடும்! நீங்கள் அனைவரும் என்ன செய்கிறீர்கள்…, வெளியே போய் வாசலில் நின்று வருபவர்களுக்குச் சந்தனம், குங்குமம் தந்து, பன்னீர் தெளித்து வரவேற்பு செய்யுங்கள்…” என்று சொல்லி அனுப்பிவிட, மகிழ்ச்சியாகவே அந்தப் பெண்கள் கூட்டம் முன்பக்கமாக நகர்ந்தது.

மூன்னால் சென்ற மூவர் ஆளுக்கு ஒன்றாகக் கரங்களில் எடுத்துக்கொள்ள, விதரணையின் கையில் பன்னீர்ச் செம்பு சிக்கிக்கொண்டது. தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஒரு நகைச்சுவையைக் கூறிச் சிரித்தவாறே, கிண்டலும் கேலியுமாக வந்த உறவினர்களுக்குப் பூத் தூவி, சந்தனம் குங்குமம் கொடுத்துப் பன்னீர் தெளித்து வரவேற்றனர்.

வசந்தா நினைத்தது போலவே, மனதில் சங்கடமும், ஏதோ ஒரு கோபமும், பொறாமையும் என்று பல்வேறு மனநிலையில் வந்த உறவினர்கள், உயிரோவியமாக அழகிய பெண்கள் வாசலில் நின்று வரவேற்பதைக் கண்டு தங்கள் கசட்டு எண்ணங்களை மறந்து சற்று மனம் குளிர்ந்துதான் போனார்கள்.

அதுமட்டுமல்லாமல், வந்தவர்களின் விழிகள் அங்கே நின்றிருந்த கன்னிப்பெண்களின் மீது தங்கள் பார்வையைச் சற்று ஆழமாகப் பதித்துவிட்டுத்தான் உள்ளே நுழைந்தன. எங்கே தங்கள் மகனுக்குப் பொருத்தமாக இருக்குமோ, தங்கள் அண்ணன் மகனுக்கு அல்லது ஒன்றவிட்ட உறவினர்களின் மகன்களுக்குப் பொருத்தமாக இருக்குமோ என்கிற கணக்கு அவர்களின் மனதில் உதிக்க, ஆராய்ச்சிப் பார்வையோடு அவர்களின் மரியாதையை ஏற்று உள்ளே நுழைந்தனர்.

இங்கே இவர்கள் சந்தனம் குங்குமம் நீட்டுவதைக் கண்ட எலிசபத், அதை வேடிக்கையுடன் பார்த்து ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டிருந்தாள். ஜெயாவோ ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்பது போலத் தள்ளி நின்றவாறு வந்தவர்களைப் பார்ப்பதும், ஏனோதானோ என்று பூவைத் தூவுவதுமாக நின்றிருந்தாள்.

அந்த நேரம் தன் கடிகாரத்தைப் பார்த்த விதரணை,

“ஏன்பா… எப்போது தட்டு மாற்றப் போகிறார்களாம்? ஐந்து மணிக்கு நிச்சயதார்த்தம் என்று சொன்னார்களே? அதைத் தொடர்ந்து எழுத்தும் இருக்கிறதே.. இப்போதே நேரம் நான்கு ஐம்பதைத் தாண்டிவிட்டது…” என்று உள்ளே எட்டிப்பார்த்து ஆயத்தங்கள் நடக்கிறதா என நோட்டம் விட்டாள்.

“அதுதானே…!” என்ற மயூரதி, வருவது குறைந்து விட்ட உறவினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்து, “உறவினர்களும் வந்துவிட்டார்கள் போல… பேசாமல் உள்ளே போய்விடலாமா?” என்றாள் தன் தோழியின் நிச்சயதார்த்தத்தைக் கண்ணாரக் கண்டுவிடும் ஆவலில்.

“இல்லை… யாரோ முக்கியமான உறவினர் வர வேண்டுமாம். மாப்பிள்ளை வீட்டுக்கு நெருங்கிய சொந்தமாம். அவர்கள் வந்துதான் தட்டை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். அவர்களுக்காகத் தான் காத்திருக்கிறார்கள் போல…” என்றாள் ஜெயந்தி விட்டேத்தியாக.

“ஓ… உனக்கு எப்படித் தெரியும்?” – கேட்டாள் எலிசபத்.

“அவர்கள் பேசியது காதில் விழுந்தது; அதை வைத்துத்தான் சொல்கிறேன். ‘நேரத்திற்கு வந்து விடுவார்கள்’ என்று வசந்தா ஆன்டி சொன்னார்கள். அதுமட்டுமல்ல, நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பது ஐந்து மணிக்கு. தட்டு சற்றுத் தாமதமாகத்தான் மாற்றுவார்கள்” என்றவள் வேறு பக்கம் வேடிக்கை பார்க்கத் தொடங்க, விதரணையின் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாகத் தெரிந்தது.

“இது என்ன அநியாயமாக இருக்கிறது! இவர்கள் வருகிறார்கள் என்பதற்காக நல்ல காரியம் தள்ளிப்போக வேண்டுமா என்ன? ஏன்… அவர்கள் வந்து எடுத்துக் கொடுத்தால்தான் தட்டு ‘அசைவேன்’ என்குமா? வேடிக்கைதான்!” – சலிப்புடன் சொல்ல, அதே எரிச்சல் மற்றத் தோழிகளின் முகத்திலும் பிரதிபலிக்கவே செய்தது.

“அடேங்கப்பா… ஒருவேளை அவர்களால் வர முடியாமல் போனால் நிச்சயதார்த்தத்தை இன்னும் ஒரு நாளைக்கு தள்ளி வைப்பார்களாமா?” என்று கிண்டலுடன் பின்னால் நின்றிருந்த இன்னொரு தோழி கேட்க,

“யாருக்குத் தெரியும்?” என்று முணுமுணுத்த மயூரதி, அப்போது வந்த உறவினர்களின் முன்னால் தன் கரத்திலிருந்த குங்குமத்தை நீட்டினாள். அதை வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டு நகர்ந்த அந்தக் கூட்டம், விதரணையை நெருங்கியதும் ஒரு கணம் தங்கள் நடையைக் குறைத்து அவளை விழியகலப் பார்த்துவிட்டு நகர்ந்தது. அங்கே வந்த அத்தனை பேரும் அப்படித்தான் செய்தார்கள்.

ஜெயா தூவிய மலரைத் தலைகுனிந்து வாங்கிக்கொண்டார்கள்; குங்குமத்தை நீட்டிய எலிசபத்தை ஒரு புன்னகையும் வியப்புமாகப் பார்த்தார்கள்; சந்தனத்தை நீட்டிய மயூரதியை இதமாகப் பார்த்தார்கள். ஆனால், பன்னீர் தெளித்த விதரணையைக் கண்டதும் தங்கள் நடையைத் தளர்த்தி, முகத்தில் மலர்வைக் கொண்டு வந்தார்கள். குறிப்பாக, ஆண்களின் பார்வை அவளிடம் ஒரு வினாடிக்கும் அதிகமாக நிலைத்து, அவளைக் கண்டு இரசித்து மலர்ந்த பின்பே தெளிந்தது.

அனைவரிடமும் நட்பாகப் பார்த்துச் சிரித்த ஆண்கள், இவளிடம் மட்டும் குழைந்த பார்வையை வீசுவதைக் கண்ட ஜெயாவின் உள்ளம் பொறாமையால் கொதிக்கவே செய்தது. ‘அது என்ன அவளிடம் மட்டும் அத்தனை ஆண்களும் வழிகிறார்கள்?’ என்கிற கோபமும் எரிச்சலும் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, பற்களைக் கடித்தவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆனால், விதரணையோ இது எதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. அவள் பாட்டுக்குத் தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, பக்கத்திலிருந்த மயூரதிதான் தோழியின் தோளில் இடித்து,

“ஏய்… வழியும் அசடைத் துடைக்கச் சொல்லு! இல்லையென்றால் அதில் கப்பல் ஓட்டித்தான் மண்டபத்திற்குள் நுழைய வேண்டியிருக்கும்…” என்று கிசுகிசுக்க, இவளோ புரியாமல் மயூரதியைப் பார்த்தாள்.

மயூரதியோ கிண்டலோடு, அப்போதுதான் அவள் தெளித்த பன்னீரைத் தலைகுனிந்து வாங்கிக் கொண்டிருந்த இளைஞனைச் சுட்டிக்காட்ட நிமிர்ந்து பார்த்தாள் விதரணை. அவன் இன்னும் நகராமல் அவளையே இமைக்காமல் பார்த்திருக்க,

“பார்… அசடு லிட்டர் கணக்காகக் கொட்டுகிறது! துடைக்கச் சொல்லுடி… நடக்கும்போது தரை வழுக்கிவிடப் போகிறது…” என்று அந்த இளைஞனிடம் ஒரு கண்ணும் தன் தோழியின் காதில் வாயும் என்று சொல்ல, அதைக் கேட்டதும் ஒரு பக்கம் கோபமும் மறுபக்கம் சிரிப்பும் வரவே செய்தது. அதைக் காட்டமுடியாமலம் சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவளாக, அந்த இளைஞனிடம் ஒரு தலையசைப்புடன் அனுப்பிவைக்க முயல, அந்த இளைஞனோ போகும் எண்ணமே இல்லாமல்,

“உங்களை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே… உங்கள் பெயர் என்ன?” என்றான் விதரணையின் பெயரை அறியும் ஆவலுடன்.

“நாற்பத்தொன்பது…” என்றாள் மயூரதி கிண்டலாக. அந்த இளைஞன் புரியாமல் அவளைப் பார்த்து,

“நாற்பத்தொன்பதா? இது என்ன பெயர்?” என்றான் வியந்து. அதைக் கேட்டதும் விதரணைக்குச் சிரிப்பு பொங்கிக்கொண்டுதான் வந்தது; ஆனாலும் அடக்கிக் கொண்டாள்.

மயூரதியோ, “அ… அது அவளுடைய பெயரில்லை! உங்களைப் போலவே அவளைப் பார்த்து ஜொள்ளு விட்டு இதே கேள்வியைக் கேட்ட நாற்பத்தொன்பதாவது நபர் நீங்கள்தான். இன்னும் ஒருத்தர் வந்துவிட்டால் ஐம்பதாகிப் பொன்விழா கொண்டாடிவிடுவோம்…” என்று சுத்தத் தமிழில் சொல்ல, அது புரியாமல் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான் அவன்.

இங்கே கனடாவில் இது ஒரு வசதி. அங்கேயே பிறந்து வளர்ந்த நிறையக் குழந்தைகளுக்குத் தாய் மொழி தெரிவதில்லை. அவர்களுக்குப் புரியாமல் பேச வேண்டும் என்றால், விதரணையின் குழு தமிழை ஆயுதமாக எடுத்துக்கொள்ளும். இதோ, இப்போதும் அவனுக்குப் புரியக் கூடாது என்று தமிழில் சொல்ல, அவனோ திருதிருவென்று விழித்தான்.

“சாரி, நீங்கள் சொன்னது புரியவில்லை…” என்றவன் தோளைக் குலுக்கிவிட்டுத் திரும்பி விதரணையைப் பார்த்து, “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்…” என்றான் அடுத்ததாக.

அதற்குப் பதிலடி கொடுக்க மயூரதி வாயைத் திறக்க, உடனே தன் தோழியின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவாறு அந்த இளைஞனைப் பார்த்து,

“நன்றிங்க…” என்றவள் அவசரமாக உள்ளே பார்த்து, “உங்களை யாரோ அழைக்கிறார்கள் போல.. அங்கே பாருங்கள்!” என்று சொல்ல, திரும்பிப் பார்த்தான் அந்த இளைஞன். அவன் தாய்தான் அழைத்திருந்தார். உடனே பதற்றமானவன்,

“நான் பிறகு உங்களுடன் பேசுகிறேன்…” என்றுவிட்டு உள்ளே செல்ல, மயூரதி கலகலவென்று சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.

“தாய்மொழி தெரியாமல் இருப்பதும் நல்லது தான்; நாம் எவ்வளவு திட்டினாலும் புரியாது!” என்று அவள் சொல்ல, அவள் தோளில் ஒரு அடி வைத்து,

“இப்படியா பேசுவாய்? ஒருவேளை அவருக்குத் தமிழ் தெரிந்திருந்தால் என்ன நினைத்திருப்பார்?” என்று விதரணை முறைக்க, சிரித்தாள் மயூரதி.

“அதுதான் சுத்தமாகத் தமிழ் தெரியாது என்று மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே! பிறகு என்ன… ஆனாலும், நாம் கிண்டல் செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காகவாவது தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பாரேன்… அவனை எள்ளி நகையாடுகிறோம் என்பது கூடத் தெரியாமல் ‘ஈ’ என்று இளித்துவிட்டுப் போகிறான்…” என்று மயூரதி சொல்ல, தன்னை மறந்து சிரித்தாள் விதரணை.

அந்த நேரம் இன்னொரு கூட்டம் உள்ளே நுழைய, அவர்களுக்கு மரியாதை செலுத்தி உள்ளே அனுப்பினர்.

“ப்ச்… இன்னும் ஒன்றுதான் பாக்கி… ஆனால் காணோம்…” என்றாள் யாராவது வருகிறார்களா என்று ஆவலாகப் பார்த்தவாறு மயூரதி.

“என்ன ஒன்றுதான் பாக்கி?” – விதரணை கேட்க,

“அதுதான்… ‘உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே… மிகவும் அழகாக இருக்கிறீர்கள்’ என்று ஜொள்ளு விடும் ஐம்பதாவது ஆண்மகன்! இன்னும் ஒருத்தன் சொல்லிவிட்டால் போதும், பொன்விழா கண்டுவிடலாம்…” என்று தன் தோழியின் காலை வாரிவிட, அவளை முறைத்தாள் விதரணை.

“உன்னை…” என்று ஏதோ திட்ட வர, அந்த நேரம் அபிநயாவின் தந்தை ஆனந்தகுமார் வேகமாக வெளியே வந்தார்.

“பிள்ளைகளா.. தயாராக இருங்கள்! முக்கியமான உறவினர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். வருபவர்களுக்குக் குறை வைக்காமல் சந்தனம், குங்குமம் கொடுத்துப் பன்னீர் தெளித்து அனுப்புங்கள்…” என்று பரபரப்புடன் சொல்லி விட்டு வாசலை நோக்கி ஓட, இவர்களும் அந்த முக்கியமான ‘வி.ஐ.பி’யைப் பார்க்கும் ஆவலில் வாசலை எட்டிப் பார்த்தனர்.

முதலில் கருப்பு நிற ‘பென்ஸ்’ வண்டி ஒன்று வாசலில் சத்தமில்லாமல் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. அதிலிருந்து அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் முதலில் இறங்கினார். வயது அறுபதாக இருந்தாலும், ஓர் இளைஞரைப் போல அத்தனை கம்பீரமாக இருந்தார் அவர். அவரைக் கண்டதும் விதரணையின் முகத்தில் பல்வேறுபட்ட உணர்வு. சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவளாக, உதட்டில் புன்னகை தேக்கி நின்றிருக்க, அவரைத் தொடர்ந்து ஓர் அழகான மங்களகரமான பெண்மணி இறங்கினார். அவருடைய முகத்தில் அன்பு, கருணை, பாசம் அத்தனையும் ஒட்டுமொத்தமாகக் குடிகொண்டிருந்தன. அவர்களைக் கண்டதும் ஏனோ நெஞ்சம் தவித்தது அவளுக்கு.

எப்படியோ தன்னை சமாதானப்படுத்தியவளாகப் பன்னீரைத் தயாராகப் பிடித்திருந்த நேரம், முன் பக்கமிருந்து திறந்த கதவிலிருந்து இறங்கினான் அவன்… அவனைக் கண்ட விதரணைக்கு அதிர்ச்சியில் சர்வமும் அடங்கிப்போக, இதயமோ தன் இயக்கத்தை நிறுத்த முயன்று தோற்றது! உடல் ஒருமுறை நடுங்கி அடங்கியது; அதன் விளைவால் சட்டென்று உடல் சூடேறி வியர்த்துக்கொட்டியது. அதற்கு மேல் எதுவும் புத்திக்கு உறைக்காமல், மலங்க மலங்க விழித்தவாறு செய்வதறியாது அப்படியே நின்றிருந்தாள் விதரணை.

What’s your Reaction?
+1
12
+1
6
+1
2
+1
1
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 7

(7)   அது அக்டோபர் மாதம் இருபத்தி நான்காம் திகதி. அப்போது அவளுக்கு வயது வெறும் பதினாறுதான்; இல்லை இல்லை...…

3 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 6

(6) வண்டியிலிருந்து வந்து இறங்கியவனைக் கண்டதும், விதரணையின் இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. அவளையும் மீறிக் கால்கள் வலுவிழந்தது போலத்…

2 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2/3

(2)   அன்று அதிகாலை எழுந்த விதரணைக்கு, அன்றைய நாள் மிக அழகாக மலர்ந்திருப்பது போலத் தோன்றியது. இருக்காதா பின்னே?…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 1

(1) மே மாதத்தின் இறுதி நாட்கள். அதிகாலை ஐந்து மணிக்கே பகலவன் கனடாவை எட்டிப்பார்க்கச் சுறுசுறுப்போடு தயாராகிவிட்டான். அனல் கக்கும்…

1 week ago

உயிர் நீ மெய் நான்…! – 7/8

(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய…

2 months ago

உயிர் நீ மெய் நான்…! – 1

(1) அலுவலக மேசையின் முன் அமர்ந்தவாறு ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான், ஆதிபன். வாரி விட்டும் சரியாக நிற்க…

3 months ago