Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 26

(26)

 

“ஹே… எழுந்துவிட்டாயா?” என்று ஆங்கிலத்தில் குதூகலமாகக் கேட்டவாறு அவளை நோக்கி விரைந்து வந்த விக்டோரியா, அவசரமாக அவளுடைய இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்.

அதிர்ச்சிக்குப் பிந்தைய நினைவூட்டலாலும், அதீத பதற்ற நிலையாலும் அவளுடைய இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறி நிற்க, உடனடியாக அதைக் குறைப்பதற்கான மருந்தை எடுத்து வந்து அவளது சிரை வழியே ஏற்றவிட்டு, இன்னும் முழுதாகத் தன் நிலைக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தவளை நெருங்கி,

“ஹே… பியூட்டிஃபுள்… யு வில் பி ஓகே… இப்போது எதைப் பற்றியும் சிந்திக்காதே… முதலில் நீ குணமாக வேண்டும்… அதை மட்டும் யோசி…!” என்று அவளுக்குத் திடமூட்டிவிட்டு, ஏற்றமாதிபனைப் பார்த்தார் விக்டோரியா.

“இனி வருந்தத் தேவையில்லை ஆதிபன். விதரணை விழித்துக்கொண்டதை இப்போதே மருத்துவருக்கு அறிவிக்கிறேன். ஆரம்பத்தில் இப்படி அடிக்கடி உறக்கத்தில் பதறுவார்கள்… அப்போது உடலை அசைக்க எத்தனிப்பார்கள். அதனால், காயங்களில் அழுத்தம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது தேவை என்றால் அழைக்கத் தயங்க வேண்டாம்…” என்றவர், மீண்டும் விதரணையின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்.

அது குறைந்து சீரான நிலைக்கு வந்திருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தவராக அவர் வெளியேற, மீண்டும் அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தான் ஏற்றமாதிபன். இன்னும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது நிற்கவில்லை. ஆனாலும் மெதுவாகத் திரும்பி ஏற்றமாதிபனை ஏறிட்டாள் விதரணை. இன்னும் அவளுக்குப் பேசுவதற்குத் தொண்டை ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் சிரமப் பட்டுத் தன் குரலை ஒன்றுதிரட்டியவள்,

“வி… விதுரனுக்கு என்னாச்சு? அவன்… அவனாவது உயிரோடு…” என்று முடிப்பதற்குள், சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்தினான் ஏற்றமாதிபன்.

“நன்றாக இருக்கிறான் விது… அவனும் நடந்த அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால், உடல் ரீதியாக அவனுக்கு எந்தச் சிக்கலும் இல்லை… நம்பு!” அவன் உறுதியாகச் சொல்ல, அந்த நம்பிக்கையில் மெல்ல விழிகளை மூடித் திறந்தாள். அந்த நிலையிலும் தாய், தந்தையின் நினைவு வதைக்க, திரும்பி அவனைப் பார்த்தாள்.

“ஏற்றன்…”

“என்னடா…” என்றவாறு அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுக்க,

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வலித்திருக்காது தானே…” என்றாள் கம்மிய குரலில். அவள் கேட்ட விதத்தில் அவன் ஆன்மாவே துடித்துப்போனது என்று சொன்னால் அது மிகையில்லை. உமிழ்நீர் கூட்டி விழுங்கியவன்,

“இல்லைமா… வ… வலித்திருக்காது…. அதை உணர முதலே மூளை தன் செயற்பாட்டை நிறுத்தி இருக்கும்…” என்றான் பொய்யாக. பிராணவாயு இல்லாமல் மூளை எந்தளவு துடித்திருக்கும் என்பது காவல்துறையைச் சேர்ந்த அவனுக்குத் தெரியாதா? நிம்மதியுடன் விழிகளை மூடியவள், அப்படியே தன்னையும் அறியாமல் மருந்தின் வீரியத்தில் உறங்கியும் போனாள்.

ஐந்து நாட்கள் அதன் போக்கில் சென்றிருந்தது. விதரணை விழித்துவிட்டாலும் பெரும்பாண்மையான நேரம் உறக்கத்தில்தான் இருந்தாள். விழித்திருக்கும் நேரம் முழுவதும் தாய், தந்தையின் மரணத்தை மட்டும்தான் அவன் யோசித்தாளேயன்றி, அவள் நினைவுக்கு வேறு எதுவும் வருவதாயில்லை. விழிகளை மூடினாலே பெற்றவர்களின் மரணம் அவளை உயிரோடு கொன்றது. விழிகளைத் திறந்தால் விதுரனுக்காக மனது ஏங்கியது. அதைத் தவிர அவளால் எதையுமே தெளிவாகச் சிந்திக்க முடியாமல் புத்தி மரத்துப்போயிருந்தது.

அவளுடைய மௌனத்தையும், இறுகிய உடல் மொழியையும் கண்ட ஏற்றமாதிபனுக்கு, விதுரனை அழைத்து வந்து காட்டினால் அவள் கொஞ்சம் அமைதியாவாளோ, அவன் நன்றாக இருக்கிறான் என்பது தெரிந்தால் தன் கூட்டைவிட்டு வெளியே வருவாளோ என்று எண்ணியவனாக அவனை அழைத்து வந்து காட்ட முடிவு செய்தான்.

ஆனால் தன் தம்பியைக் கண்ட அந்த நொடி முழுதாக உடைந்துபோனாள் விதரணை. கடவுள் அவளையும் தம்பியையும் மட்டும் அநாதையாக விட்டுவிட்டு, ஏன் பெற்றவர்களை அழைத்துக் கொண்டான்? ஐயோ, அவளால் அவர்கள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? தாயின் மடியில் உறங்காமல், தாயின் கையால் தேநீர் வார்த்துக் கொடுக்காமல், தந்தையின் தோளில் தலைசாய்க்காமல் அவளால் எப்படி மூச்செடுக்க முடியும்? இதோ, இவனுக்கு அன்னை தலை கோதிக்கொடுக்காவிட்டால் தூக்கமே வராதே! அவர் மடியில் ஒரு பொழுதாவது தலை சாய்த்துப் படுக்க வேண்டும், தாயின் கையால் பால் வாங்கிக்குடித்துத்தானே உறங்கப் போவான்; இவனால் எப்படி அன்னையின் இழப்பைத் தாங்க முடியும்?

அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் தன் தம்பியை நோக்கி ஒற்றைக் கரத்தை நீட்டி, காயங்கள் வலிக்கக் கதறிவிட்டாள் விதரணை. அவள் விம்மி அழும் ஒவ்வொரு முறையும், அவளது மார்பிலும் முதுகிலும் இருந்த தையல்கள் இழுபட்டுப் பேரலையாய் வலி அவளைக் கொல்ல, அதை அவள் ஒரு துளியளவும் கருத்தில் கொள்ள வில்லை. அவளுடைய தம்பி உயிரோடு கண் முன்னே இருக்கிறான் என்ற மகிழ்ச்சியிலும், இப்படி அநாதரவாக விட்டுச் சென்ற பெற்றவர்களை நினைத்தும் துடித்துக் கதறிவிட்டாள் அந்தப் பேதை.

அதே நேரம் ஒருவித மரத்த நிலையிலிருந்த விதுரணும், தன் சகோதரியின் அலறல் ஒலி கேட்டு, மெதுவாக விழிகளை அசைத்துப் பார்த்தான். அங்கே எப்போதும் அவனை வம்புக்கு இழுத்துப் போட்டி போடும் சகோதரி, உயிரோடு, அதுவும் அசையக் கூட முடியாத நிலையில் இருப்பதைக் கண்டு, அதுவரையிருந்த மந்த நிலை மறந்து உடைந்து போனவனாய், கழுத்தை அறுக்கும் கோழியின் தீனக் குரலோடு அக்காளை நோக்கிப் பாய்ந்து வர, விதரணையும் தன் நிலை மறந்து ஓடிவந்த தம்பியை எழுந்து அணைக்க முயன்றாள்.

ஆனால், ஏற்றமாதிபன் கண்ணிமைக்கும் நொடி யில் இருவருக்கும் இடையில் புகுந்து இருவரின் அணைப்பையும் தடுத்துவிட்டான். இல்லையென்றால் விதுரன் ஓடிவந்த வேகத்திற்கும், விதரணை எழ முயன்ற வேகத்திற்கும், இருவரும் இறுக அணைத்துக்கொண்டால் நிச்சயமாக விதரணையின் உடலில் உள்ள தையல்களில் ஒன்றிரண்டாவது அறுந்திருக்கும். அதற்குப் பிறகு இன்னும் புதிய சிக்கலை அவள் உருவாக்கியிருப்பாள்.

அவளை நோக்கிப் பாய்ந்த விதுரனைத் தன் பலத்தால் தடுத்து நிறுத்தியவன், திரும்பி விதரணையைப் பார்க்க, அவளோ பாய்ந்து வந்த தம்பியைத் தன் பக்கம் இழுப்பதற்காகக் கரத்தை நீட்டித் துடித்துக் கொண்டிருந்தாள். அவளின் நிலையைக் கண்டு ஏற்றமாதிபனின் இதயம் குலுங்கவே செய்தது. ஆனாலும் ஒரு கரத்தால் விதுரனை அணைத்துப் பிடித்தவாறே, மறுகரத்தை விதரணையின் வலது நெஞ்சில் பதித்துக் கட்டிலில் அவளை மெல்லப் படுக்கச் செய்தான். தமக்கையிடம் செல்லத் துடித்த விதுரனை இழுத்துத் தன்னோடு இறுக்கி அணைத்துக்கொள்ள, அவனோ சகோதரியிடம் செல்லத் திமிறினான்.

“ஷ்… ஷ்… விதுரா… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்… உன் அக்கா உன் பலத்தைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. புரிந்துகொள்…” என்று அவனுடைய முதுகைத் தட்டியும் வருடியும், குரலைச் சற்று உயர்த்தியும் சொல்ல, அவனோ ஏற்றமாதிபனிடமிருந்து திமிறிக்கொண்டிருந்தான். மீண்டும் அந்த இளவலின் உடலைத் தன்னோடு இறுக்கியவன்,

“விதுரன்… பிளீஸ்… காம் யுவர் செல்ஃப். ஷ்… இட்ஸ் ஓகே…” என்று இக்கட்டான நிலையில் எதிரிகளின் கொடிய மனநிலையைக் கரைக்கும் மென்குரலைத் தேர்வு செய்து, இதமாய் அவனது முதுகைத் தட்டி ஆசுவாசப்படுத்தியவாறு இதமாய் பேச, அந்தக் குரலில் கொஞ்சமாய் விதுரனின் துடிப்பு அடங்கியது.

ஆனால் விதரணையோ, தீயாய்த் தன்னைத் தகிக்கும் தாகத்திற்குத் தண்ணீரை அள்ளி முகந்து குடிப்பவள் போலத் தன் ஒற்றைக் கரத்தை நீட்டித் தன் தம்பியைப் பற்ற முயன்றாள். அவளது கையில் பொருத்தப்பட்டிருந்த அந்தச் சிரை வழி ஊசி (மிக்ஷி லிவீஸீமீ) ஆடிய ஆட்டத்தில், எங்கே அது கழன்று வந்துவிடுமோ என்று அஞ்சியவனாக, ஒரு கரத்தினால் விதுரனை இறுக அணைத்தவாறு மறுகரத்தால் அவளுடைய கரத்தைப் பற்றித் தடுக்க முயன்றான். அவளோ ஆவேசம் கொண்டவளாக, அவன் பிடியிலிருந்து தன் கரத்தை இழுக்க முயன்றாள். ஆனால், அவனுடைய இறுகிய பிடியில் அவள் கரங்கள் கட்டுப்பட, அதற்கு மேல் போராட முடியாமல் சோர்ந்துபோய் படுக்கையில் விழுந்தாள் விதரணை. அவள் படுக்கையில் சாய்ந்து விம்மி அழத் தொடங்கிய பிறகுதான், மெதுவாக அவளுடைய கரத்தைப் படுக்கையில் வைத்துவிட்டு, விதுரனிடம் தன் கவனத்தைச் செலுத்தினான் ஏற்றமாதிபன்.

விதுரனோ, ஏற்றமாதிபனின் இறுக்கமான அணைப்பில் இருந்தவாறே விசும்பலோடு தன் சகோதரியை ஏறிட்டான்.

இப்போது விதரணைக்குப் பக்கத்தில் இருக்கையை இழுத்துப் போட்ட ஏற்றமாதிபன், அதில் விதுரனை அமர வைத்தான். விதரணையோ, தன் வலது கரத்தை உயர்த்தித் தம்பியின் கரத்தைப் பற்ற முயல, விதுரனும் அவள் கரத்தைப் பற்றி அதில் தன் முகத்தைப் புதைத்துக் கதறிவிட்டான்.

விதரணை தன் வேதனையை மறந்து, உயிரைக் கொல்லும் வலியையும் ஒதுக்கி, எழ மறுத்து நடுங்கிய தன் இடது கரத்தைச் சிரமப்பட்டுத் தூக்கி அவன் தலையில் வைத்து, ஒரு தாயைப் போலத் தம்பியின் தலையை மென்மையாகக் கோதிவிட்டாள். அந்த அறையின் அமைதியில் அவர்களின் விம்மல் சத்தம் மட்டும் எதிரொலித்துக்கொண்டிருக்க, அந்தக் காட்சியைக் காண முடியாமல் தன் விழிகளை அழுந்த மூடிக்கொண்டான் ஏற்றமாதிபன்.

அவனுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்துச் சென்றுவிடத்தான் நினைத்தான். ஆனால், இவள் ஏதாவது முட்டாள்தனமாகச் செய்து தொலைத்தால்? தம்பியை அணைக்கிறேன், இழுக்கிறேன் என்று எழுந்துவிட்டால் என்ன செய்வது? அவர்களைக் கண்காணிக்க அவன் தேவையே. அதனால் மௌனமாக ஒரு ஓரமாக மார்பில் கரங்களைக் கட்டிச் சுவரில் சாய்ந்தவாறு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் ஏற்றமாதிபன்.

சற்று நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்ட விதரணைக்கு, தன் தம்பி அழுவதைத் தாங்கும் சக்தி இருக்கவில்லை. அவளுக்கு நினைவு தெரிந்து அவள் தம்பி இப்படி அழுது தெரியாது. சிரமப்பட்டுத் தன் வலியையும் வேதனையையும் மறைத்தவள்,

“ஷ்… விதுரா… அழாதேடா… நீ அழுவதைப் பார்த்தால் என்னால் தாங்கவே முடியவில்லை” என்றாள், ஆறாகக் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரோடு.

“அக்கா… அம்மா… அப்பா இருவரும்…” முடிக்க முடியாமல் அவன் துடிக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் விதரணை எழ முயல, ஓரெட்டில் விதரணையின் தோள்களைப் பற்றியவன், அவளைப் படுக்கையில் அழுத்திவிட்டு,

“விதரணை… உன்னைக் கொஞ்சம் கட்டுப் படுத்திக்கொள்… பிளீஸ்…” என்று சற்றுக் கோபமும் உறுதியுமாகச் சொன்னவன், பின்னர் திரும்பி இருவரையும் பார்த்து, கடைசியாக விதுரனிடம் தன் கவனத்தைச் செலுத்தி, “இதற்கு மேல் நீங்கள் இருவரும் அழுதால், அடுத்து இவள் பூரண குணமடைந்த பிறகுதான் உன்னால் அக்காவைப் பார்க்க முடியும்…” என்று கொஞ்சம் மிரட்டல் தொனியில் சொல்ல, அந்தச் சத்தத்தில் விதுரன் சட்டென்று தன் அழுகையை நிறுத்த முயன்றான். ஆனால், கேவலும் விம்மலும் மட்டும் நிற்கவில்லை.

அப்போதுதான் ஏற்றமாதிபன் அதைக் கண்டான்; விதரணையின் மேலாடையில் இடதுபுறத்தில் புள்ளியாக இரத்தம் கசிவதை! அதைக் கண்டவனின் முகம் இறுகிப்போக, பற்களைக் கடித்தவன், தன் தொண்டையைச் செருமிவிட்டு,

“சரி… நேரமாகிவிட்டது. அதிக நேரம் இங்கே இருக்க விடமாட்டார்கள்” என்று சொல்லும்போதே வருண் உள்ளே வந்தான். வந்தவனை நன்றியோடு பார்த்த ஏற்றமாதிபன்,

“விதுரனை அழைத்துப் போய் வீட்டில் விட்டு விடுகிறாயா வருண்?” என்று கேட்க, “சரி” என்றவாறு விதுரனை நெருங்கினான் வருண்.

வந்தவன் விதரணையைப் பார்த்தான். அழுது முகம் சிவந்து வீங்கியிருந்த நிலையிலிருப்பவளிடம் எப்படியிருக்கிறாய் என்று எப்படிக் கேட்பது? நிமிர்த்து ஏற்றமாதிபனைப் பார்க்க, அவனோ விழிகளை மூடித் திறந்து தான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சமிக்ஞை கொடுத்தான். சரி என்று தலையாட்டி விட்டு விதுரனை நோக்கித் தன் கரத்தை நீட்ட, அவனோ மறுப்பாகத் தலையசைத்துவிட்டு,

“நான்… நான்… அக்கா கூடவே இருக்கிறேனே…” என்றான் மீண்டும் அழும் குரலில்.

விதரணையும், “அவன் என் கூடவே இருக்கட்டும்” என்றாள் ஏற்றமாதிபனிடம்.

அதைக் கேட்டு கோபமாக இருவரையும் பார்த்தவன்,

“எதற்கு? அழுது இன்னும் வலியை அதிகமாக்கிக்கொள்ளவா? அது ஒன்றும் வேண்டாம்… மருத்துவர்களும் சம்மதிக்கமாட்டார்கள்” என்றான் அழுத்தமாக.

ஆனால் விதரணையோ தன் தம்பியை நினைத்துக் கலங்கியவளாக, “அவன் தனியாக… எப்படி?” என்றாள் துடித்தவளாக.

அதைக் கேட்ட வருண்,

“தனியாகவா? ஏற்றமாதிபன், விதுரனைத் தனியாக இருக்க விட்டுவைப்பான் என்று நினைக்கிறீர்களா விதரணை…?” என்றவன், விதுரனை நெருங்கி அவன் கரத்தைப் பற்றி, “இவனைப் பற்றிய கவலையை விடுங்கள்… இவன் இப்போது ஏற்றமாதிபன் வீட்டில், அங்கிள், ஆன்டியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறான். அவர்கள் இவனை மிக நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்… முதலில் நலமாகி வீடு வந்து சேருங்கள்… நீங்கள் இப்படியே அழுதுகொண்டிருந்தால் விதுரன் பயப்படுவான் பாருங்கள்… விதுரன்… உனக்கும் தான் சொல்கிறேன். உனக்கு அக்கா நலமாக வீடு வந்து சேர வேண்டுமா வேண்டாமா? இப்படி நீ அழுதால் அவள் மனநிலை எப்படி அமைதியாகும்? முதலில் கண்ணைத் துடைத்துக்கொள்…” என்று கடிந்து கொள்ள, அதன் நியாயத்தைப் புரிந்து கொண்ட விதுரன், தன் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டான்.

“நா… நான் இனி அழவில்லை வருண் அண்ணா…” என்றவன் தன் சகோதரியைப் பார்த்தான். பின் என்ன நினைத்தானோ, வருணின் பிடியிலிருந்த தன் கரத்தை விடுவித்துவிட்டுச் சகோதரியை நெருங்கி, குனிந்து ‘பசக்’ என்று அவளுடைய ஒற்றைக் கன்னத்தில் முத்தம் வைக்க, விதரணையின் முகம் அவளையும் அறியாமல் ஆச்சரியத்தில் விரிந்தது. வியப்போடு தன் தம்பியைப் பார்க்க, அவனோ தன் சகோதரியை வலிக்காமல் அணைத்து விடுவித்து,

“நான் நன்றாக இருக்கிறேன்கா… மதிவதனி ஆன்டியும், வித்யாதர் அங்கிளும் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள். என்னைப் பற்றிக் கவலைப் படாதே… சீக்கிரம் நலமாகி வீட்டுக்கு வா…” என்றவனின் குரல் மீண்டும் உடைய ஆரம்பிக்க, விதரணையின் கண்களும் திரும்பவும் கலங்கத் தொடங்கியது.

அதைக் கண்ட வருண், வேகமாக விதுரனை நெருங்கி, “சரி… வா விதுரா… கிளம்பலாம்… நேரமாகிவிட்டது…” என்று அவன் திரும்பவும் விம்மி வெடிப்பதற்குள் வெளியே அழைத்துச் சென்றுவிட, அவனை வருணோடு அனுப்பிவிட்டு, விரைந்து விதரணையின் அருகே வந்தான் ஏற்றமாதிபன்.

அவளோ தம்பியை நினைத்து, அவன் சென்றதை நினைத்து விசும்பிக்கொண்டிருந்தாள். மனதில் ஏற்பட்ட வலிக்கு முன்பாக உடல் காயத்தின் வலி ஒன்றும் பெரிதாகத் தெரியவேயில்லை.

ஆனால், விதரணையை நெருங்கிய ஏற்றமாதிபன்,

அவளுடைய பின்னங்கழுத்திலிருந்த மருத்துவ ஆடையின் முடிச்சை அவிழ்த்து, அதைக் கரத்தின் வழியாக இழுத்து அவளுடைய மார்பைப் பரிசோதித்தான். அவளுடைய அசுர அசைவால், காயத்தில் இருந்து இரத்தம் கட்டைத் தாண்டிப் பரவத் தொடங்கியிருந்தது. அதைக் கண்டு பற்களைக் கடித்தவன், மீண்டும் ஆடையைச் சரிசெய்துவிட்டு அங்கிருந்த அழைப்பு மணியை அழுத்த, அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு செவிலியர் உள்ளே வந்தார்.

“காயத்தில் இரத்தம் கசிகிறது…” அவன் சுருக்கமாகச் சொல்ல, தலையாட்டிவிட்டு வெளியேறியவர், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஏற்றமாதிபனின் உதவியோடு காயத்திற்குத் திரும்பவும் கட்டுப்போட்டார்.

“நல்லவேளை தையல் எதுவும் அறவில்லை” என்றவர், விதரணையைப் பார்த்து,

“இரத்தம் கசியும் அளவுக்கு என்ன நடந்தது?” என்றார் சற்றுக் கோபமாக. அவன் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்ல,

“இவர்கள் சரியாகும் வரைக்கும் எந்த உறவினர்களையும் அழைத்து வராதீர்கள். அது பாதுகாப்பானதுமல்ல; தொற்று வந்தால் இன்னும் சிக்கலாகிவிடும். கொஞ்சம் புரிந்துணர்வோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அழுத்தமாக எச்சரித்துவிட்டு அவளுடைய இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார். எதிர்பார்த்தது போலவே அதிகமாக இருக்க, உடனே அதற்கான மருந்தைக் கொடுத்துவிட்டுக் கூடவே வலி நிவாரணியையும் கொடுத்துவிட்டு வெளியேற? மீண்டும் விதரணைக்கு முன்பாக வந்தமர்ந்தான்.

விதரணையோ, இது எதுவும் உறைக்காத நிலையில் மேலும் இறுகிப்போனவளாகக் கிடந்தாள். அவளுடைய வலியும் வேதனையும் அவனுக்குப் புரியவே செய்தது. அவர்களின் இழப்பு சாதாரண இழப்பில்லை, பயங்கர இழப்புதான். இது சாகும் வரை மாறப்போவதில்லை என்பதும் உண்மையே. அதற்காக வாழாமல் இருந்துவிட முடியுமா? எத்தனை தடைகளைத் தாண்டியும் ஆறு தன் ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடுவது போல, அவர்களும் ஓடித்தானே ஆக வேண்டும்! அதுதானே இயற்கையின் நியதி.

மீண்டும் இரு பொட்டுக் கண்ணீர் கண்களில் இருந்து வெளியேறி அவள் மூக்கின் வழியே கடந்து செல்ல, அவளை நோக்கிக் குனிந்தவன், அவள் மூக்கில் வழிந்த கண்ணீரைப் பெருவிரலால் துடைக்க, மெதுவாகத் தன் நீண்ட பெரிய சிவந்த விழிகளைத் திறந்தாள் விதரணை.

அங்கே முகத்தில் கவலையைத் தேக்கி அமர்ந்து இருந்தவனைக் கண்டதும் தொண்டை அடைக்க, சட்டென்று அவன் கரத்தைத் தட்டிவிட்டாள். ஒரு காலத்தில் அவன் மீது பைத்தியமாக இருந்ததும் அவனுடைய சிறு தீண்டலுக்காக ஏங்கியதும் நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று, அதே கரங்கள் தொடுவது பிடிக்கவில்லை. அவன் யார் அவளுக்கு? சொந்தமா, பந்தமா? அவளுக்கென்று இருப்பது விதுரன் மட்டும்தானே! மீண்டும் வழிய முயன்ற கண்ணீரை நிறுத்திப் பிடிக்க முயன்று விழிகளை மூட, அந்தப் பிடிவாதமான கண்ணீரே திரும்பவும் வழியத் தொடங்கியது.

“ஷ்… இனி அழுதது போதும் விதரணை… கொஞ்சம் தூங்கு…” என்றான் கனிவாக. அவளோ கோபத்தோடு விழிகளைத் திறந்து அவனை எரிச்சலுடன் பார்த்தாள். அவளது தன்மானத்தைச் சீண்டும் அந்தப் பரிதாபப் பார்வை அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அழுவதற்குக் கூட உரிமையில்லை என்றால் இது என்ன வாழ்க்கை? பற்களைக் கடித்தவள்,

“உங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா? அந்த ஜாஸ்மின் உங்களைக் கைகழுவி விட்டாளா… எப்போதும் இங்கேயே இருக்கிறீர்களே… அவள் தேடமாட்டாளா… தயவுசெய்து என்னைத் தனியாக விட்டுப் போய்த் தொலையுங்களேன்…” இயலாமையில் ஏற்பட்ட கோபத்தோடு அவள் சீற, அதைக் கேட்டு மென் புன்னகை ஒன்றைச் சிந்தினான் ஏற்றமாதிபன்.

அந்தப் புன்னகையோடு அவள் முகத்தை மறைத்த கூந்தலை இழுத்துக் காதோரம் செருக அவன் முயன்ற நேரம், தன் வலது கரத்தால் அவன் கரத்தைத் தட்டிவிட முயன்றாள் விதரணை. ஆனால் அவனோ, ஒரு கரத்தால் அவளுடைய வலது கரத்தை அழுந்தப் பற்றித் தடுத்தவாறு, தான் செய்ய நினைத்ததைச் செய்து முடித்துவிட்டு, அவளிடமிருந்து நழுவிச் சென்ற போர்வையை இழுத்துத் தோள்வரை போர்த்திவிட்டு, “தூங்கு…” என்றான் மென்மையாக.

விதரணைக்கு அந்த நிலையிலும் ஆத்திரம் வந்தது. அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. மனதில் சொல்ல முடியாத வலி, வேதனை அவளை வியாபிக்க, உடல் பலவீனமானதாகத் தெரிந்தது. எதிலும் தெளிவில்லை, குழப்பம். அவனிடம் சண்டை பிடிக்கத் தோன்றுகிறது, ஆனால் முடியவில்லை. அவனை வெறுத்து ஒதுக்க நினைக்கிறாள், அதற்குச் சக்தி இல்லாதது போன்ற உணர்வு. இப்படியான குழப்ப மனநிலையில் அனைத்தும் வெறுப்பாகத் தோன்ற, அதற்கு மேல் அவனோடு வாதிடாமல் விழிகளை மூடினாள் விதரணை.

ஆனால் மனதோ, பெற்றோர்கள் விட்டுச் சென்ற அந்த வெற்றுடலை எண்ணித் துடித்தது. மார்ச்சுவரி குளிரில் கிடக்கும் பெற்றோரைப் போலத் தன் எதிர்காலமும் உறைந்துபோகுமோ என்கிற அச்சமும், ‘நாளை என்ன?’ என்கிற கேள்வியும் அவளைப் பூதாகரமாகத் தாக்க, அதையும் மீறி, மருந்து வேலை செய்யத் தொடங்க, அவளது பிடிவாதம் மெல்லத் தளர்ந்து உறக்கத்திற்குள் சரிந்தாள் விதரணை.

What’s your Reaction?
+1
15
+1
0
+1
6
+1
0
+1
8
+1
1
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-3/4

(3) “வாட்?” என்று கிட்டத்தட்ட சத்தமாகக் கத்திவிட்டான் வருண். “ஆனால் எப்படி...? நான்தான் விசாரித்தேனே... நான் விசாரித்த வரைக்கும் அந்த…

5 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-1

(1) துப்பாக்கி வெடித்த சத்தம் குடோனின் கூரையை அதிரவைக்க, சென்-வாங்கின் உயிர் பிரிந்த அதே விநாடியில் ஏற்றமாதிபனின் உடல் எதிர்வினையாற்றியது.…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 28

(28) மேலும் இரு நாட்கள் கழிய திரும்ப விதுரனைப் பார்க்கவேண்டும் என்று தொடங்கி விட்டாள் விதரணை. அதைக் கேட்டவனின் முகம்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 27

(27)   இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன. காயங்கள் ஆறியிருக்க, கட்டுகள் அவிழ்க்கப் பட்டிருந்தன. சத்திரசிகிச்சையால் வெளியேறும் இரத்தம் வடிந்து…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 25

(25)   மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும்…

2 weeks ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 24

(24)   முதலில் ஊபரை அழைத்து விதரணையின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தான். அங்கே இன்னும் காவலர்கள் யார் யாரையோ அழைத்து விசாரணை…

2 weeks ago