முதலில் ஊபரை அழைத்து விதரணையின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தான். அங்கே இன்னும் காவலர்கள் யார் யாரையோ அழைத்து விசாரணை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கித் தன்னைப் பற்றிய அறிமுகத்துடன், கையிலிருந்த இரத்தம் தோய்ந்த பேன்ட் அடங்கிய பையைக் கொடுத்துவிட்டு, விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று கேட்க… அவர்களும் தங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள். அதுவும் தெரு விளக்குகளின் வயர்களை வேண்டும் என்றே வெட்டி இருக்கிறார்கள் என்று அவனது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்த… உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்டான். அவன் யார் என்று தெரியும் என்பதால் மறுக்கவில்லை அவர்கள்.
அவனை அழைத்துச் சென்று காட்ட, ஏற்றமாதிபன் அந்த வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். எல்லாமே கலைந்திருந்தது; யாருடைய அறையும் மிச்சமில்லை. இன்னும் நிலவறையில் காய்ந்த இரத்தம் கிடந்தது. அவர்கள் எதையோ தேடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை? இதில் நிலவறையின் ஒரு பக்கத்தில் நிறைய பேப்பர்கள் தரையில் சிதறடிக்கப் பட்டிருந்தன. ஒன்றை எடுத்துப் பார்த்தான்; ஏதோ மருந்துகள், அறிக்கைகள், அவர் பரிசோதித்த மருந்து மாத்திரைகளின் விபரங்கள், நன்மைகள், தீமைகள் என இப்படி நிறைய எழுதப்பட்டிருந்தன. கடைசியில் விடைபெற்று வெளியே வந்தவன், தன் வண்டியில் ஏறி மருத்துவமனைக்கு வந்தான்.
வண்டியைத் தரிப்பிடத்தில் விடும்போதே அவனுடைய கைப்பேசி அலறியது; எடுத்துப் பார்த்தான், வருண்தான்.
“என்னடா… நான் சொன்னது போலக் கொலை தானா…?” என்று கேட்க,
“அது தெரியவில்லை… ஆனால்… நீ சொன்னது போல இறப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, ஒரு தாதி, முகத்தில் கவசம் அணிந்து அறைக்குள் நுழைந்து ஏதோ ஒரு மருந்தை ஏற்றிவிட்டு வெளியேறியிருப்பது பதிவாகியிருக்கு. அவர் சென்ற அடுத்த அரை மணி நேரத்தில் அந்தக் குற்றவாளியின் உடல் எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறது…” என்றான் வருண்.
“அந்தத் தாதி பற்றி விசாரித்தாயா?”
“ம்… விசாரித்தேன்… இங்கே வேலை செய்தவர்களுக்குக் கூட அவரை அடையாளம் காண முடியவில்லை. இதில் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த அந்தச் செவிலியரை இடையில் காணோம்… எல்லா ஒளிப்பதிவுகளையும் பரிசோதித்துவிட்டேன், எங்கே போனாள் என்று தெரியவில்லை. வெறும் மூன்று இடங்களில் மட்டும்தான் அவளுடைய உருவம் சிக்கியிருக்கிறது…” அவன் சொல்ல, அதைக் கேட்டவாறே வேக நடையோடு மருத்துவ மனைக்குள் நுழைந்திருந்தான் ஏற்றமாதிபன்.
“அந்தச் செவிலியர் நடந்து வந்த பாதையில் எங்காவது கழிவறை அல்லது ஒரு ‘பிளைண்ட் ஸ்பாட்’ இருந்திருக்கிறதா என்று பார்த்தாயா?” என்று கேட்க,
“ம்கூம்.. இல்லைடா… இப்பவே அதைப் பார்க்கிறேன்…” வருண் சொல்ல,
“நான் மருத்துவமனை வந்துவிட்டேன் வருண்… இந்த ஒளிப்பதிவைத் தரவிறக்கம் செய்து எடுத்துக் கொண்டு விதரணை இருக்கும் தளத்திற்கு வா…” என்றதும்,
“இன்னும் பத்து நிமிடங்களில் அங்கிருப்பேன்…” என்று வருண் சொல்லி முடிக்கக் கைப்பேசியை அணைத்தவன், வேகமாக விதரணை இருந்த தளத்தை நோக்கிச் சென்றான்.
விதரணை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நெருங்கியதும் விதரணையை எட்டிப் பார்த்தான். அவள் இன்னும் விழிகளைத் திறக்கவில்லை. அங்கே வந்த தாதியிடம் அவளைப் பற்றி விசாரிக்க,
“என்ன சார்… காலை வரை இருந்து பார்த்து விட்டுத்தானே போனீர்கள்… அதற்குள் மாற்றம் வந்து விடுமா? இன்னும் குறைந்தது 24 மணி நேரமாவது கொடுங்கள்…” என்று சொல்லிவிட்டுப் போக… பெருமூச்சோடு வெளியே வந்தவன், அங்கிருந்த பார்வையாளர்களின் இருக்கையில் அமர்ந்தான்.
தொடைகளில் இரண்டு முழங்கைகளையும் வைத்து, இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து, அதில் தலையை வைத்தவாறு ஏதோ யோசனையில் இருந்தான். அடுத்த எட்டாவது நிமிடம் அவனருகே ஒரு நிழல் ஆடியது. தன் நிலை கலைந்து நிமிர்ந்து பார்த்தான்; வருண்தான் நின்று இருந்தான்.
“தேங்க் காட்… கொடு வருண்…” என்று கரத்தை நீட்ட, தன் சிறிய மடிக்கணினியை எடுத்து ஏற்றமாதிபனிடம் கொடுத்தான் வருண்.. வாங்கிக் கொண்டவன் அதைத் திறக்க… இவனோ விதரணையின் அறை நோக்கிப் போக முயன்றான். அதைக் கண்டுகொண்ட ஏற்றமாதிபன், “எங்கே போகிறாய்?” என்றான் கறாராக.
“பார்த்தால் தெரியவில்லை… விதரணையைப் பார்க்கப்போகிறேன்.” என்றவாறு மேலும் முன்னேறத் தொடங்க,
“அவளை ஒன்றும் நீ பார்க்கத் தேவை இல்லை… இங்கே வந்து உட்கார்…” என்றான் ஏற்றமாதிபன் கடுப்பாக. அதைக் கேட்டு கிண்டலாகச் சிரித்த வருண்…
“சரிதான் போடா…” என்றுவிட்டு நடந்து சென்று அறையை எட்டிப் பார்த்தான். அங்கே அறுந்த கொடியாகப் படுக்கையில் விழுந்து கிடப்பவளைக் கண்டு, அவனுடைய மனதும் கொஞ்சம் கனத்துத் தான் போனது. ஒரு பெருமூச்சோடு திரும்ப, அங்கே நின்ற ஒரு பாறையோடு பலமாக மோதி நின்றான் வருண். அவனுடைய மூக்கு சரியாக ஏற்றமாதிபனின் நெஞ்சில் மோதிவிட, வலியோடு மூக்கை அழுத்திக் கொடுத்தவன், நிமிர்ந்து தன் நண்பனைப் பார்த்து முறைத்தான்.
“டேய்.. ஏன்டா இப்படிப் பயமுறுத்துகிறாய்?” என்று எரிச்சலுடன் கேட்க, தன் நண்பனை அழுத்தமாக ஏறிட்டான் ஏற்றமாதிபன்.
“உனக்கு இங்கே என்ன வேலை…? வா.. வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து என் சந்தேகத்தைப் போக்கு…” என்றான் கறாராக.
விதரணைக்கு அருகே வருண் இருப்பது அவனுக்குப் பிடிக்காமல்தான் தன்னை வரச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட வருண், இடையில் கை வைத்துத் தன் நண்பனைக் கோபமாகப் பார்த்து,
“யாரோ ஒரு காலத்தில் இந்தப் பெண் வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கியதாக நினைவு…” என்று கிண்டலும் கொஞ்சம் எரிச்சலுமாகச் சொல்ல… நண்பனை விழிகளால் எரித்தவன்,
“சீ… வந்து தொலை… நண்பனின் காதலி என்று தெரிந்தும் சைட் அடிக்கிறாய் பார்… உன்னை…” என்றவன், கையோடு வருணையை அழைத்துக் கொண்டு மடிக்கணினி இருந்த இடத்திற்கு வந்து அதன் முன்னால் அமர்ந்து கொள்ள, வருணும் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு,
“நண்பனின் காதலியா… அதுதான் இல்லை என்று உறுதியாகச் சொன்னாயே…” என்றான் வருண், இன்னும் அதையே பிடித்துத் தொங்கியவாறு.
வருணைக் கடைக்கண்ணால் பார்த்து முறைத்தவன்,
“அது அப்போது… இது இப்போது…” என்று விட்டுத் திரையில் தன் கவனத்தைச் செலுத்த முகம் பளிச்சிடத் தன் நண்பனைப் பார்த்த வருண்,
“அப்படியென்றால், என்னுடையதும் அபியுடையதும் திட்டம் வேலை செய்திருக்கிறது என்று சொல்..” என்றான் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிய.
இவனோ ஒரு விநாடி வருணப் பார்த்துவிட்டு,
“என்ன திட்டம்? என்னைப் பொறாமைப்பட வைத்து, விதரணையை ஏற்கவைப்பதுதானே…?” என்று கேட்க, சிரித்த வருண்,
“எக்சாக்ட்லி…” என்றான். பின் காலுக்கு மேல் கால் போட்டவாறு, “எவ்வளவு திட்டம் போட்டோம் தெரியுமா? அபிநயா தன் நிச்சயதார்த்தத்தை ஏன் டொரன்டோவில் வைத்தாள் என்று நினைத்தாய்? உங்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்கத் தான். எப்படியும் விதரணையைப் பார்க்க நீ டொரன்டோ வருவாய் என்று அபிநயாவுக்குத் தெரியும். உன் பிடிவாதத்தை விட்டு, விதரணையை ஏற்றுக்கொள்ள ஒரே வழி உன் பொறாமையைத் தூண்டுவதுதான். அபிநயா என் உதவியைக் கேட்டாள். கரும்பு தின்னக் கூலியா…? சரி என்றேன். ஆனாலும் விதரணை இத்தனை அழகாக இருப்பாள் என்று நினைக்கவில்லைடா…” என்றான் வருண் இரசனையோடு.
அவன் சொல்லி முடிக்கவும், விறுக் என்று நிமிர்ந்து வருணப் பார்த்து முறைத்தான் ஏற்றமாதிபன்.
ஆனால் வருணோ, “ப்ச்… அதிகம் முறைக்காதே… ஒருவேளை உனக்கு நிஜமாகவே அவள் வேண்டாம் என்றால், நான் முயற்சி செய்யலாம் என்கிற எண்ணம் தோன்றியது மட்டும் நிஜம்…” என்று என்று சொல்லி நண்பனின் தீயான முறைப்பைப் பரிசாக வாங்கிக்கொண்டான் வருண். அதுவும் ஏற்றமாதிபனின் கரங்களின் முஷ்டி இறுகுவைதக் கண்டதும்,
“டேய்… வைக்கோல் பட்டறை நாய் போல ரொம்பத்தான் முறுக்கிக் கொள்ளாதே… நினைத்தேன் என்றுதான் சொன்னேன், ஆனால் முயற்சி எதுவும் செய்யவில்லை. அதற்குள்தான் என்னைக் கழிவறையில் வைத்துச் செய்தாயே… என்ன வலி தெரியுமா… சாப்பிட்டது மொத்தமும் கொட்டி விட்டது… அதன் பிறகும் யோசிப்பேனா நான்?” என்று கிண்டலுடன் கேட்க…
ஏற்றமாதிபனோ விசைப்பலகையில் எதையோ தட்டிக்கொண்டே, திரையைப் பார்த்தவாறு,
“மொக்கையான திட்டம்… என்னதான் என் பொறாமையைத் தூண்டி அவளோடு என்னை இணைத்து வைக்கத் திட்டம் போட்டிருந்தாலும், விதரணைக்கு இப்படி ஒன்று நடக்காமல் இருந்து இருந்தால், அவள் வாழ்க்கையின் நன்மை கருதி விலகித்தான் போயிருப்பேன். என்னை மாற்றுவது அத்தனை சுலபமில்லை வருண்…” என்றான் உறுதியாக.
“ம்… அப்படி விலகியிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்… நானாவது முயற்சி செய்து இருப்பேன்…” என்று வருண் சொல்ல, அவனைக் கொலை வெறியோடு பார்த்தான் ஏற்றமாதிபன்.
“நீ முயன்றாலும் அவள் உனக்குக் கிடைத்திருக்க மாட்டாள். ஏனென்றால், ஒன்று அவள் உன்னை ஏற்றிருக்க மாட்டாள்; இரண்டு, நான் உன்னை அவள் பக்கம் போக விட்டிருக்க மாட்டேன்…” என்றான் உறுதியாக.
“என்னங்கடா இது… அவளும் மறுத்து, நீயும் தடுத்தால் அவள் காலம் முழுக்க அப்படியே இருக்க வேண்டுமா? இது என்னடா நியாயம்?” என்று கோபமாக வருண் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தான் ஏற்றமாதிபன்.
“அப்படி இல்லை வருண்… என் விதரணைக்கு என்னை விட உயர்ந்தவனாக, சிறந்தவனாக ஒருவன் கிடைத்து, என் மனதுக்கு அவன் திருப்தியாக இருந்தால், நிச்சயமாக எந்தத் தொல்லையும் செய்யாமல் விலகியிருப்பேன்…” என்றான் அவன் அழுத்தமாக.
“அப்போ… நான் சிறந்தவன் இல்லை என்கிறாயா?” வருண் கோபமாகக் கேட்க, தன் நண்பனை ஆழமாகப் பார்த்தவன்,
“நிச்சயமாக என்னை விட நீ சிறந்தவன் இல்லை… அதை முதல்ல ஏத்துக்கோ…” என்றான்.
“ம்கும்… இவர் பெரிய நல்லவர்…” என்று எரிச்சலுடன் வருண் சொல்ல, இப்போது மென் புன்னகை ஒன்றைச் சிந்திய ஏற்றமாதிபன்,
“நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் உத்தமன் தான் வருண்… உன்னைப் போல ஆண்டுக்கு ஒருத்தியோடு திரிபவன் அல்ல…” என்று சொல்ல, தன் நண்பனைப் பார்த்து முறைத்தான் வருண்.
“எது எடுத்தாலும் இதைச் சொல்லு…” என்று சலித்துக்கொண்டவன், “சரி… இத்தனை நேரமாகத் திரையில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கிறாயே… ஏதாச்சும் கிடைத்ததா?” என எரிச்சலுடன் கேட்டான்.
“ப்ச்… அதற்கு நீ விட்டால்தானே… கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்கிறாயா…?” என்று நண்பனிடம் எரிச்சலுடன் சொன்னவன், மீண்டும் கூர்மையாகத் திரையைப் பார்க்கத் தொடங்கினான்.
சற்று நேரம் அந்தத் திரையை மீண்டும் மீண்டும் ஓடவிட்டுப் பார்த்தவனின் முகத்தில் மெல்லிய நகைப்பு.
“என்னடா சிரிக்கிறாய்…? குற்றவாளி யார் என்று தெரிந்துவிட்டதா உனக்கு?” என்று வருண் பரபரப்போடு நண்பனின் அருகே அமர்ந்து திரையைப் பார்த்தான்.
நான்காவது ஒளிப்பதிவில், யாரோ சில செவிலியர்களும், முன்னும் பின்னும் பக்கமுமாக எவர் எவரோ நடந்து செல்ல… நடுவில் ஒரு சீன இனத்தைச் சேர்ந்த இளைஞன், தலையில் தொப்பியும் கையில் ‘டோட்’ பையுமாக அவர்களின் நடுவில் சாவதானமாக நடந்து சென்றுகொண்டிருந்தான். அந்த இளைஞனைச் சுட்டிக்காட்டி,
“இவன்தான் குற்றவாளி…” என்றான் ஏற்றமாதிபன் மிக உறுதியாக.
அதைக் கண்டு குழப்பத்தோடு ஏற்றமாதிபனை ஏறிட்டுப் பார்த்த வருண்,
“டேய் என்னடா சொல்கிறாய்…? அவனைக் கொன்றது ஒரு பெண் செவிலியர். இது ஆண்…” என்று வருண் சொல்ல… இப்போது முதலாவது சிசிடிவி கேமராவை உயிர்ப்பித்துக் காட்டினான் ஏற்றமாதிபன். அந்தத் தாதி உள்ளே நுழைவதும் மருந்து போடுவதும் தெளிவாகத் தெரிந்தது.
“இதில் என்ன இருக்கு என்று என்னிடம் காட்டுகிறாய்?” என்றான் வருண் பொறுமையிழந்து.
“இந்தப் பெண்ணின் நடையைப் பார். கொஞ்சம் காலை அகட்டி வைத்து நடப்பது போல இல்லை?” என்று கேட்க… உற்றுப் பார்த்த வருணுக்கும் அந்தச் செவிலிப் பெண் கால்களைச் சற்று அகற்றினாற் போல நடப்பது போலத்தான் இருந்தது. “ம்…” என்ற வருணின் விழிகள் ஆச்சரியத்தில் மலர்ந்தன.
“பொதுவாகப் பெண்கள் நடக்கும் போது கால்கள் நேர்க்கோட்டில், ஒடுக்கமாக இருக்கும். ஒரு ஆணால், அல்லது ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஒருத்தனால் அப்படிப் பெண் போல நடக்க முடியாது. அதற்கான உடற்கூறியல் காரணம் என்னவென்று உனக்குத் தெரியும்…” என்று ஆதிபன் சொல்ல, வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் “ஆம்” என்றான் வருண்.
அடுத்த மூன்றாவது சிசிடிவி கேமராவிலும் பிடிபட்ட அந்தச் செவிலிப் பெண், நாலாவது கேமராவில் பிடிபடவில்லை.
“ம்…. இந்த இடத்தைப் போய் பார்த்தேன்… பிளைண்ட் ஸ்பாட்டில் நோயாளிகளுக்கான கழிவறை இருக்கிறது…” என்று வருண் சொல்ல,
“ம்.. யூகித்தேன்…” என்றான் ஏற்றமாதிபன்.
“சரி… இவன்தான் அந்தச் செவிலியர் என்று எப்படிச் சொல்கிறாய்…?” என்று புரியாமல் கேட்க… நிமிர்ந்து நண்பனைப் பார்த்த ஏற்றமாதிபன், அவன் கையிலிருந்த மணிகளால் ஆன காப்பொன்றைச் சுட்டிக்காட்டி,
“இது சீன இனத்தவர்கள் கையில் அணியும் காப்பு. அனைத்தையும் மாற்றிய இவன், இதைக் கழற்ற மறந்துவிட்டான்…” என்றான்.
நம்ப முடியாமல் முதல் சிசிடிவி கேமராவில் அந்தச் செவிலிப் பெண்ணின் ஒளிப்பதிவைப் பார்த்தான் வருண். ஆதிபன் சொன்னது சரியே! அதே கரத்தில் அதே காப்பு அணிந்திருந்த அந்தச் செவிலியர், நாலாவது சிசிடிவி கேமராவில் ஆண் உருவத்தில் அதே காப்பு அணிந்திருந்தான்!
“மை காட்! இதை இப்படி கவனிக்காமல் விட்டேனே…?” என்ற வருணுக்கு ஏற்றமாதிபனை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. குறுகிய நேரத்தில் எத்தனை சுலபமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டான்! அதனால்தான் உயர்மட்டமே அவனுடைய சேவையைப் பாராட்டி மதிப்பளிக்கிறது போல!
“சிம்பிள்… நீ குற்றவாளியைத் தேடினாய், நான் அவனது தவறுகளைத் தேடினேன். இல்லை யென்றால் பக்கத்தில் இருக்கும் குற்றவாளியைக் கூட நாங்கள் கண்டுபிடிக்கத் தவறிவிடுவோம்,” என்றவன், அந்தச் சீன முகத்தை நோக்கிச் சுட்டு விரலால் ஒரு வட்டமிட்டு, “இவனைத்தான் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்” என்றான் ஏற்றமாதிபன் அந்தத் திரையை உற்றுப் பார்த்தவாறே.
பார்த்தவனின் விழிகளில் சட்டென்று கூர்மை ஏறியது. ஏதோ உந்த, சட்டென்று திரையில் அந்த இளைஞன் கையில் கட்டியிருந்த காப்பைப் பெரிதாக்கிப் பார்த்தான். அவனுடைய புருவங்கள் சுருங்கின; மறுகணம் குழப்பத்தோடு விரிந்தன. அடுத்து,
“மை காட்…” என்றான் தன்னை மறந்து.
“என்னாச்சு ஆதிபன்?” வருண் திகைப்புடன் கேட்க… ஏற்றமாதிபன் அவன் அணிந்திருந்த அந்தப் படத்தைக் காட்டி,
“வருண், இந்தக் காப்பைப் பார்…” என்றதும்… வருணும் அந்தக் காப்பை உற்றுப் பார்த்தான். பார்த்தவனின் விழிகளில் மெல்லிய அதிர்ச்சி!
“காட்… இது… இந்தக் காப்பு…” வருண் திகைக்க,
“ம்…, ‘லாவோ-ஹு’ (Lao-hu). அதுவும் இந்தக் காப்பு சர்வதேசக் குற்றக் கும்பலான டிரையட்டினர்களுக்கான (Triads) அடையாளம்!” என்றான், இன்னும் அந்தக் காப்பைத் தெளிவாகப் பார்க்க வேண்டியபடி பெரிதாக்கியவாறு.
(*சீனத்தின் இரகசியக் குற்றக் கும்பல்களில் ஒன்றான ‘டிரையட்ஸ்’ (Triads), நிஜமாகவே உலகம் முழுவதும் பரவியுள்ள மிக ஆபத்தான சர்வதேசக் குற்றக் கும்பலாகும். இதைப் பொதுப் பெயராகக் கொண்டு, 14K Triad, Sun Yee On, Wo Shing Wo என்று பல பிரிவுகள் உலகளவில் இயங்கி வருகின்றன. இந்தக் கும்பல்கள், சர்வதேச நாடுகளின் பட்டியலில் தேடப்பட்டு வரும் நிஜமான நிழல் உலகக் கூட்டமைப்பாகும்.)
“இவர்களின் பட்டியல் எங்கள் புலனாய்வுத் துறையில் இருக்கிறது வருண்; இவர்களைப் பற்றிய விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. சொல்லப்போனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ‘14ரி’ கும்பலைச் சேர்ந்தவர்களை நான் நேரில் கைது செய்திருக்கிறேன்; அவர்களைக் கனடிய அரசு நாடு கடத்தியிருந்தது… அதனால் இந்தக் கும்பல் பற்றி எனக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும்.
இந்த ‘டிரையட்’ உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளக் குறிப்பிட்ட நிறம் அல்லது எண்ணிக்கை கொண்ட மணிகள் கோர்த்த காப்புகளைப் பயன்படுத்துவார்கள் என்கிற தகவலும் எனக்குக் கிடைத்திருந்தது. அதை வைத்துத்தான் அன்று அவர்களை இனம் கண்டு கைது செய்தேன்; இன்றும் அதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறேன். சாதாரணச் சீனர்கள் பலர் இந்த மணிக்காப்பைத் தங்கள் கரங்களில் அணிந்தாலும், அந்த ‘லாவோ-ஹு’ கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்தக் காப்பு ஒரு தனிப்பட்ட இரகசியக் குறியீடாக இருக்கும்; அவர்களின் காப்பை வைத்துத்தான் அவர்கள் எந்த வகையான குழுவைச் சேர்ந்தவர்கள் என்றே கண்டுபிடிக்க முடியும்” என்றான் ஆதிபன்.
“உண்மை… நிறம் அல்லது அவர்கள் அணியும் மணிகளின் எண்ணிக்கையை வைத்து அவர்கள் எந்தக் கும்பலைச் சார்ந்தவர்கள் என்று அடையாளப் படுத்த முடியும்…” வருண் சொல்ல… தலையை ஆம் என்பது போல ஆட்டியவன்,
“எக்ஸாக்ட்லி” என்றவாறு பெரிதாக்கிய அந்தக்காப்பினை ஆராய்ந்தான்.
“இவன் அணிந்திருப்பது பதினெட்டு மணிகள் போல இருக்கு; சிவப்பும் கறுப்பும் கலந்திருக்கிறது. இந்த மணிகளுக்கு மத்தியில் கத்தி போன்ற ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் இவன் கொல்வதற்காக மட்டுமே நியமிக்கப்பட்டவன். முதலில் இவனைக் கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை பேர் கனடாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும்…” என்று ஏற்றமாதிபன் சொல்ல, நெற்றியை வருடினான் வருண்.
“பிடிபட்டாலும் இவன் உண்மையைச் சொல்வானா என்று தெரியவில்லையே…? இவர்கள் மிகவும் கடுமையானவர்கள். பிடிபட்டாலும் இரகசியத்தைச் சொல்லக் கூடாது என்பது அவர்களின் அடிப்படை விதிகளில் ஒன்று,” என்றான்.
“அவன் வாயிலிருந்து உண்மையை வரவழைப்பது என் பொறுப்பு வருண். முதலில் இவர்களால் நம் நாட்டுக்கு ஏதாவது ஆபத்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும்…” என்றவனின் இதயம் பல மடங்கு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
“ஏன் ஆதிபன், இரண்டு வருடங்களுக்கு முன்பு நீ கைது செய்த சம்பவத்திற்கும் இப்போது வந்திருக்கும் இவர்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்குமா?” என்று வருண் கேட்க… மறுப்பாகத் தலையசைத்தான் ஏற்றமாதிபன்.
“இல்லை… நான் கைது செய்தது 14K. அதுவும் ஆயுதங்களைச் சட்டவிரோதமாகக் கனடா- வினூடாகக் கடத்திச் செல்ல முயன்றார்கள். ஆனால், இது வேறு கும்பல்… இவர்களின் காப்பைப் பார்த்தால் ‘Sun Yee On’ போல இருக்கிறது. இவர்கள் அதிகம் கொலை, கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்களில்தான் சம்பந்தப்படுவார்கள்…” என்றான் ஏற்றமாதிபன்.
“டேய்… சர்வதேசக் கும்பலுக்கு இங்கே என்னடா வேலை? அவர்களே இறங்கியிருக்கிறார்கள் என்றால், பிரச்சனை நாம் நினைத்தது போல அத்தனை சிறியதில்லை. இதில் விதரணையும் அவள் குடும்பமும் எங்கே வந்தார்கள்…? கடவுளே… தலையே சுற்றுது…” என்று குழம்பிய வருண், “ஆதிபா.. இப்போது என்ன செய்யப்போகிறாய்…? இவர்களால் விதரணைக்கு ஏதாவது…” என்று அவன் முடிக்கவில்லை; கோபமாக வருணைக் கூர்மையாகப் பார்த்தான் ஏற்றமாதிபன்.
“விதரணைக்கு எதுவும் ஆகாது வருண். நான் இருக்கும் வரைக்கும் எதுவும் ஆகவிடமாட்டேன்…” என்றான் சீற்றமாக.
“அது புரிகிறதுடா… ஆனால் இந்தச் சர்வதேசக் குற்றப் பிரிவே இதில் இறங்கி இருக்கிறது என்றால் பிரச்சனை நிச்சயமாகச் சிறிதல்ல. இதில் நமக்கு அடியும் தெரியவில்லை, நுனியும் புரியவில்லை… இதற்கான காரணத்தை எங்கே என்று கண்டுபிடிப்பது, எங்கே என்று தேடுவது…?” புலம்பினான் வருண்.
“எனக்கென்னவோ முக்கிய புள்ளியைத் தொட்டு விட்டது போலத்தான் தோன்றுகிறது வருண். இவன் சிக்கியதே பெரிய விஷயம். உடனே இவன் உருவத்தை நம் ஐடி சிஸ்டத்திற்கு அனுப்பி விசாரிக்கச் சொல். நம்முடைய குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் யாருடைய முகத்திற்காவது பொருந்துகிறதா என்று பார்க்கச் சொல். இவன் சிக்கினால் போதும், இந்தப் பிரச்சனையின் வேர் எது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்…” என்று உறுதியாகச் சொல்ல… தலையாட்டிவிட்டு அந்த மடிக்கணினியை வாங்கிக்கொண்டு வருண் வெளியேறினான்.
ஏற்றமாதிபனோ புருவங்களை நீவியவாறு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அவனுக்கு ஆயாசமாக இருந்தது. அவன் சத்தியமாக இத்த கைய திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. சர்வதேசக் குற்றவியலாளர்களுக்கும், விதரணையின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை சந்தேகித்தது போல, அறிவழகன் அங்கிளின் வேலைத்தளத்தில் ஏதாவது சிக்கல் இருக்குமோ…? முதலில் அவர் வேலைத்தளத்தைப் பற்றிய விசாரணையில் இறங்க வேண்டும்.
அது சுலபமில்லைதான். தன்னிச்சையாக அந்த வேலைத்தளத்திற்குள் இறங்கி விசாரிக்க முடியாது; அப்படி விசாரிப்பது சட்டப்படிக் குற்றம். அதுவும் இப்போது அவன் அதிகாரப்பூர்வமான விடுப்பில் இருக்கிறான். நீதிமன்றத்தின் வாரண்ட் இல்லாமல் திருட்டுத்தனமாக எடுக்கும் எந்தவொரு ஆதாரமும் சட்டத்தின் முன்னிலையில் செல்லுபடியாகாது.
அதுமட்டுமன்றி, கனடியச் சட்டத்தின்படி ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து தரவுகளைத் திருட முயன்றது தெரிந்தால், அந்த ‘ஜெனரிஸ் பயோ-பார்மா’ நிர்வாகம் அவனுக்கு எதிராகவும், அவனது துறையின் மீதும் பல மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். அது அவனது பதவியைப் பறிப்பதோடு, ஒட்டுமொத்தத் துறையையுமே தலை குனிய வைத்துவிடும். அதனால் அவன் எடுத்து வைக்கும் அடியை மிக மிக அவதானமாக, யாருக்கும் சந்தேகம் வராதவாறுதான் எடுத்து வைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் அவ்வளவுதான்!
அதற்கு முதல், விதரணை விழிக்க வேண்டும்; அவள் விழித்தெழாமல் இவனால் எதையும் தெளிவாக யோசிக்கவும் முடியாது, செயற்படுத்தவும் முடியாது.
குழம்பிய மனதோடு சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், பெருமூச்சுடன் எழுந்து விதரணையின் அறை நோக்கிச் சென்றான்.
(3) “வாட்?” என்று கிட்டத்தட்ட சத்தமாகக் கத்திவிட்டான் வருண். “ஆனால் எப்படி...? நான்தான் விசாரித்தேனே... நான் விசாரித்த வரைக்கும் அந்த…
(1) துப்பாக்கி வெடித்த சத்தம் குடோனின் கூரையை அதிரவைக்க, சென்-வாங்கின் உயிர் பிரிந்த அதே விநாடியில் ஏற்றமாதிபனின் உடல் எதிர்வினையாற்றியது.…
(28) மேலும் இரு நாட்கள் கழிய திரும்ப விதுரனைப் பார்க்கவேண்டும் என்று தொடங்கி விட்டாள் விதரணை. அதைக் கேட்டவனின் முகம்…
(27) இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன. காயங்கள் ஆறியிருக்க, கட்டுகள் அவிழ்க்கப் பட்டிருந்தன. சத்திரசிகிச்சையால் வெளியேறும் இரத்தம் வடிந்து…
(26) “ஹே... எழுந்துவிட்டாயா?” என்று ஆங்கிலத்தில் குதூகலமாகக் கேட்டவாறு அவளை நோக்கி விரைந்து வந்த விக்டோரியா, அவசரமாக அவளுடைய…
(25) மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும்…