Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 21/22

(21)

 

அதிகாலை எட்டு மணியையும் கடந்து விட்டிருந்தது. இரண்டு மணி நேரமளவில் உறங்கி இருப்பான் ஏற்றமாதிபன். அது கூட அரைகுறை உறக்கம்தான். ஒவ்வொது தடவையும் கதவு திறந்து மூட, யாராவது விதரணை பற்றிச் சொல்ல வருகிறார்களா என்று பதறி எழுவதும், இல்லை என்றதும் மீண்டும் சாய்ந்து அமருவதுமாக சிலமணி நேரங்களைக் கடத்தியவனுக்கு பொறுமை மேல்ல மெல்லக் காற்றில் பறக்கலாயிற்று.

விதரணையை உள்ளே அழைத்துச் சென்ற இத்தனை மணி நேரமாக, அவளது நிலை பற்றித் தெரிவிக்க மருத்துவர்கள் யாரும் வெளியே வர வில்லை. இடையில் அதிகாலை ஐந்து மணி அளவில் ஒரு மருத்துவர் வந்து, சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் தங்களால் ஒரு

முடிவுக்கு வர முடியவில்லை என்றும், விதரணை இன்னும் அபாயக் கட்டத்தில்தான் இருக்கிறாள் என்றும் தெரிவித்துவிட்டுச் செல்ல, ஏற்றமாதிபனின் மனம் தவித்தது. அவன் கடந்த ஒவ்வொரு விநாடியும் அங்கே விதரணை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தபோது, அவனது இதயம் சுக்குநூறானது.

அவளுக்குப் பக்கத்தில் இருக்க முடியாத தன் நிலையை வெறுத்தவனாக, இருக்கையில் அமர்வதும், பொறுமையை இழந்து அங்குமிங்கும் நடப்பதுமாக இருந்தான். யாராவது மருத்துவர்கள் வருகிறார்களா என்று விதரணையை அழைத்துச் சென்ற கதவின் பக்கமாக வந்து பார்ப்பதும், மீண்டும் அமர்ந்து விழிகளை அழுந்த மூடி நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்ப்பதுமாக நேரம் நகர்ந்தது.

பதற்றத்தோடு இருக்கையில் அமர்ந்து தலையைப் பின்னால் சாய்த்து, நெற்றியை வருடிக் கொடுத்தவன்,

“பிளீஸ் வேக் அப்… பிளீஸ் பீ ஆல்ரைட்… பிளீஸ் கம் டு மீ… டோன்ட் கிவ் அப்… பம்கின்… யூ கேன் டூ இட்… யூ ஆர் ஸ்ட்ராங்… ஐ நோ யு ஆர் ஸ்ட்ராங் என்னை ஏமாற்றிவிடாதே… தயவுசெய்து எழுந்து வா…” என்று மனதுக்குள் அவளிடம் பிரார்த்தித்தபடி நேரத்தைக் கடத்தினான்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, அந்த அறுவைச் சிகிச்சைக் கதவு திறக்கப்பட்டது. இப்போதும் நம்பிக்கையில்லாமல் அவன் நிமிர்ந்து பார்க்க, அவனை நோக்கி மூன்று மருத்துவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதுமே அவனுடைய நெஞ்சம் படபடக்கத் தொடங்கியது. இதயம் வாய்க்குள் வந்து துடிப்பது போல இருக்க, ‘தயவுசெய்து எந்தத் தவறான செய்தியையும் சொல்லிவிடாதீர்கள், அதைக் கேட்கும் சக்தி எனக்கில்லை…’ என்று மனதிற்குள் மன்றாடியவாறு எழுந்து நின்றான் ஏற்றமாதிபன். அவனை நெருங்கிய மருத்துவர்களில் ஒருவர்,

“நீங்கள்தான் ஏற்றமாதிபனா?” என்றார்.

இவனோ முகம் வெளுக்க, தயக்கமாக “ஆம்” என்றான்.

“குட்.. பிளீஸ் டேக் யுவர் சீட்…” என்ற அந்த மருத்துவர், அவனுக்குப் பக்கமாக அமர்ந்தவாறு, மற்ற மருத்துவர்களையும் ஏறிட்டுவிட்டு மீண்டும் ஏற்றமாதிபனிடம் தன் கவனத்தைத் திருப்பினார்.

“நான் அதிர்ச்சி அறுவை சிகிச்சை நிபுணர் (Trauma Surgeon) டாக்டர் ஃபுருட்மன். இவர் இதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் (Cardiothoracic Surgeon) டாக்டர் ஷங்கர், இவர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Neurosurgeon) டாக்டர் அப்துல் ரஹீம்…” என்று அவர் அறிமுகப்படுத்த, அவர்களைப் பார்த்துத் தலையசைத்துத் தன் வணக்கத்தைச் சொன்னவன், அவர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய மருத்துவரான டாக்டர் ஃபுருட்மனை ஏறிட்டான்.

“வி… விதரணைக்கு இப்போது எப்படி இருக்கிறது?” அச்சமும் தவிப்புமாக அவன் கேட்க, ஒரு மென்புன்னகையைச் சிந்தினார் டாக்டர் ஃபுருட்மன்.

“அவர்களோடு போராடி மீட்டு வந்துவிட்டோம்” என்று அவர் மென்புன்னகையுடன் சொல்ல, அதைக் கேட்ட ஏற்றமாதிபனின் உடலில் இருந்த அழுத்தமும், பாரமும், மனச்சிதைவும் மெதுவாய் வடிந்து சென்றன. அதுவரை அவனிடமிருந்த இறுக்கம் மறைந்து முகத்தில் மெல்ல மெல்ல இதம் பரவத் தொடங்கியது. அவனையும் மீறிக் கண்களில் கண்ணீர் கோடு வரைய, சட்டென்று அவர்களின் முன்னால் கரம் கூப்பித் தொழுதான் ஏற்றமாதிபன். அதற்கு மேல் அவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை.

“டாக்டர்… நான்… இதுவரை என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தேன்… எனக்கு… என்ன சொல்வது என்று தெரியவில்லை…! இப்போது நீங்கள் எனக்குக் கடவுளாகத் தெரிகிறீர்கள்…” அவன் சொல்ல, சட்டென்று அவன் கரங்களைப் பற்றிக் கீழே இறக்கினார் ஃபுருட்மன்.

“நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம் ஏற்றமாதிபன்… உங்கள் மனைவியைக் காப்பாற்றுவது எங்களுக்குப் பெரிய சவாலாகத்தான் இருந்தது. ஆனால் அவள் வாழ வேண்டும் என்று விதி இருக்கும்போது யார் என்ன செய்ய முடியும்?” என்றவர் சற்று அமைதி காத்தார்.

“இடது மார்பில் விழுந்த குத்து நுரையீரலைச் சேதப்படுத்தியிருந்தது. இதயத்தைச் சுற்றியுள்ள உறைக்குள் ரத்தம் கசிந்து, இதயம் துடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது (Cardiac Tamponade). டாக்டர் ஷங்கர்தான் இந்தச் சிகிச்சையைக் கையாண்டார். சொல்லப்போனால் இவரால்தான் உங்கள் மனைவி இப்போது உயிரோடு இருக்கிறார்கள்…” என்று அவர் சொல்ல, சட்டென்று எழுந்தவன் அவர் கரங்களைப் பற்றிக் குலுக்கி,

“டாக்டர் என் நன்றியை எப்படி உங்களுக்குத் தெரிவிப்பது என்று தெரியவில்லை… நீங்கள் என் வாழ்க்கையை மட்டுமில்லை, என் குற்ற உணர்ச்சியையும் போக்கியிருக்கிறீர்கள்…” தன்னை மறந்து தளர்ந்த குரலில் அவன் சொல்ல, அவன் கரங்களை அழுந்தப் பற்றித் தட்டிக்கொடுத்த டாக்டர் ஷங்கர்,

“இது எல்லாம் எங்கள் கடமை… எங்கள் திறமை ஒரு உயிரைக் காப்பாற்றும் என்றால், அது எங்களுக்கு மகிழ்ச்சிதான்…” தன்னடக்கமாக அவர் சொல்ல, மீண்டும் ஃபுருட்மனை ஏறிட்டான் ஏற்றமாதிபன்.

“அவளுக்கு… முதுகில் கத்தி குத்து விழுந்து இருந்ததே… அதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?” என்றான் வடுவாகிப்போன நெஞ்சோடு.

“அந்தக் காயம்தான், கொஞ்சம் சிக்கலாக இருந்தது. கத்தி தண்டுவடத்தின் மிக அருகில் பாய்ந்திருந்தது. நரம்புகள் துண்டிக்கப்படும் அபாயம் இருந்ததால், டாக்டர் அப்துல் ரஹீம் பல மணி நேரம் போராடி சரிசெய்திருக்கிறார். கடவுளுக்கு நன்றி, நல்லவேளை நரம்புகளில் பெரிய பாதிப்பு எதுவுமில்லை. அப்படியிருந்திருந்தால், அவருடைய காலம் சக்கரநாற்காலியிலேயே முடங்கியிருக்கும். சொல்லப்போனால், உடல் முழுவதுமே செயலிழந்து தாவரம் போல வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பார்” என்று அவர் சொல்ல, ஏற்றமாதிபனின் உடல் ஒரு கணம் இறுகியது. அந்த நினைவே அவனைக் கொல்லாமல் கொல்ல, ஒரு விநாடி விழிகளை இறுக மூடி அவள் சென்றுவந்த ஆபத்தை நினைத்துத் துடித்துப்போனான்.

“இது தவிர, அறுவை சிகிச்சையின் போது ரத்த அழுத்தம் பலமுறை சரிந்தது. எப்படியோ இத்தனை நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் பிழைத்துவிட்டார்கள். அதுதான் முக்கியம். இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறோம். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் தலைமையிலான குழு 24 மணிநேரமும் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும். அடுத்த 48 மணிநேரம் அவளுக்கு முழுமையான ஓய்வு தேவை,” என்று அவர் சொல்ல… நிம்மதிப் பெருமூச்சு விட்டவன்,

“நான்… அவளைப் பார்க்க வேண்டும்… அனுமதிப்பீர்களா?” என்றான் கலக்கமும், ஆவலும் ஒன்றிணைய.

“இப்போதில்லை. அவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதும் சொல்கிறோம், நீங்கள் சென்று பாருங்கள்… அதற்கு எப்படியும் மூன்று மணி நேரங்கள் தேவைப்படும்” என்று கூறிவிட்டு அவர் எழ,

“டாக்டர்…” என்று தவிப்போடு அழைத்தான் ஏற்றமாதிபன். அவர் நின்று என்ன என்பதுபோலப் பார்க்க,

“அவளுக்கு… பாலியல் வன்புணர்வு ஏதும்…?” என்றான் நெஞ்சடைக்க.

“இல்லை ஏற்றமாதிபன்… நீங்கள் அஞ்சுவது போல் அவளுக்குப் பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை. அவரின் கன்னித்திரை சிதையவில்லை. பிறப்புறுப்புப் பகுதியில் பாலியல் வன்புணர்வு நடந்ததற்கான எந்தவிதமான காயங்களோ அல்லது அந்நிய நபர்களின் டி.என்.ஏ (DNA) மாதிரிகளோ கண்டறியப் படவில்லை. அவள் இன்னும் கன்னிதான் என்பதில் ஐயமில்லை. ஆனால்…” என்று இழுத்த மருத்துவரின் முகம் இருண்டது.

இவனோ பதற்றத்தோடு மருத்துவரைப் பார்க்க, “அவளை வதைத்தவர்கள் மிகக் கொடூரமானவர்களாக இருக்க வேண்டும். அவளது மார்புப் பகுதியில் காயம் ஏற்படும் அளவுக்குத் தங்கள் கரங்களால் மிக அழுத்தமாகப் பிடித்திருக்கிறார்கள். அதன் விளைவாக, விரல்களின் தழும்புகள் அங்கே மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் பதிந்திருக்கின்றன. நெஞ்சின் நடுவில் கத்தி கிழித்திருக்கிறது. மூன்று தையல் போடவேண்டியிருந்தது… சொல்லப் போனால்,

அவளைப் பாலியல் ரீதியாக வதைப்பதை விடவும், ஒரு பெண்ணின் மனதைச் சிதைக்கவும், அவளைக் கூனிக்குறுகச் செய்யவும் மேற்கொண்ட ஒரு குரூரச் செயலாகவே தெரிகிறது. இதையெல்லாம் அறிக்கையாகத் தயாரித்துக் காவல் நிலையத்திற்கு விரைவாக அனுப்பி வைப்போம்…” என்று மருத்துவர் சொல்ல, விதரணைக்கு நடந்த சம்பவத்தைக் கற்பனையில் கண்ட ஏற்றமாதிபனின் கைகள் ஆத்திரத்தில் இறுகின. பற்களோ நறநறத்தன.

சே… கால காலமாக ஒரு பெண்ணை வீழ்த்த ஆண்கள் கையாளும் முறை இதுதானே. தகாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவதும், இத்தகைய அவமானப்படுத்தும் செயல்களைச் செய்வதும் தானே ஆண்கள் கையாண்டுவரும் வக்கிரகமான செயல். ஒரு பெண்ணை முடங்கவைக்க இத்தகைய செயல் போதுமா… எத்தனை கேவலமான ஆண் புத்தி? தன்னை விட பலவீனம் குறைந்தவளிடம் பலத்தைக் காட்டுவதுதான் ஆண்மையா? சே… இதை விட ஆணாகப் பிறக்காமலே இருந்திருக்கலாம். அந்த நிலையிலும் அப்படி நினைக்காமல் அவனால் இருக்கவே முடியவில்லை.

பற்களைக் கடித்து, ஆத்திரத்தில் உடல் இறுக நின்றிருந்த நேரம்,

“முக்கியமான ஒரு விஷயம் ஏற்றமாதிபன்… நாங்கள் அவளுடைய உயிரைக் காப்பாற்றி விட்டோம். ஆனால் நடந்த சம்பவங்கள் நிச்சயமாக அவருடைய மனநிலையையும் பாதிக்கும். இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்குப் ‘பேனிக் அட்டாக்’ வரலாம். அது மட்டுமல்ல தற்கொலை எண்ணங்கள் கூடத் தோன்றலாம். அதனால் ஓரளவு குணமடைந்ததும் அவளுக்கு உளநல ஆலோசனை வழங்குவது அவசியம். முக்கியமாக அவளின் பக்கத்தில் 24/7 யாராவது இருக்க வேண்டும். அவர்களின் மூளை அந்தக் கோரச் சம்பவத்தை கண்முன் கொண்டு வரும்போது தன்னிலை இழக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் தான் தனியாக இல்லை, பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்த யாராவது ஒருவர் எப்போதும் அருகிலேயே இருக்க வேண்டும். இது பற்றிய விவரங்களைச் சமூகப் பணியாளர் (ஷிஷீநீவீணீறீ கீஷீக்ஷீளீமீக்ஷீ) வந்து பேசுவார். மறக்காமல் அதைப் பின்பற்றுங்கள்…” என்றவர் அவனுடைய கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு, “பெஸ்ட் ஆஃப் லக்…” என்று கூறி விடைபெற்றுச் செல்ல, அதுவரை இறுகியிருந்த ஏற்றமாதிபனின் உடல் தளர்ந்து, தொப்பென்று இருக்கையில் விழந்தான்.

முழங்கைகளை முழங்காலில் ஊன்றி, உள்ளங் கைகளில் முகத்தைப் பதித்துச் சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு, நீண்ட நேரத்திற்குப் பிறகு மூச்சுச் சீராக வரத் தொடங்கியது. அதன் பிறகு தான் அவன் புத்தி கொஞ்சம் கொஞ்சமாக செயல் பட ஆரம்பித்தது.

அதன் முதல் கட்டமாகத் தன் கைப்பேசியை எடுத்தவன், ஒரு சில இலக்கங்களைத் தட்டிவிட்டுக் காத்திருக்க, மறு பக்கத்தில் அழைப்பை ஏற்று வந்தான் அவன்.

“சொல்லு ஏற்றமாதிபன். என்ன ஆளையே காணோம்… எங்கே போனாய்…” மறு பக்கம் குதுகலமாய் வர,

“வருண்… எனக்கு உன் உதவி தேவை…” என்றான் அழுத்தமாக. அதே நேரம் தெளிவாக.

(22)

தொற்றுப் புகாத மஞ்சள் நிறத்து மேலங்கியும், முகத்திற்கு முகக்கவசமும் அணிந்தவாறு, தளர்ந்த நடையோடு வந்த ஏற்றமாதிபன், அந்தத் தீவிரச் சிகிச்சைப் பிரிவின் கதவைத் தள்ளுவதற்காகக் கரத்தை வைக்கும்போதே… அவனுடைய இதயத்தின் துடிப்பு அவனது காதுகளுக்குக் கேட்டது! தன்னையும் மீறி வறண்டுபோன உதடுகளைத் தன் நாவினால் தொட்டு ஈரமாக்கியவனுக்கு எப்படி அவளை அந்த இயலாத நிலையில் பார்க்கப்போகிறோம் என்கிற பதட்டம்தான் பயங்கரமாகத் தொற்றிக் கொண்டது.

இனி, அடுத்து அவன் காணப்போகும் காட்சி அவனை உயிரோடு வதைக்கப்போகிறது என்பதை அவனது உள்ளுணர்வு சொன்னாலும், எதார்த்தமாக யோசிக்கும் புத்தியோ அவனைத் திட்டியது.

“டேய்… எத்தனை எதிரிகளை அசால்ட்டாகப் பந்தாடி ஜெயித்தவன் நீ! இதற்குப் போய் பயப்படுகிறாயே… வெட்கமாக இல்லை…?” என்று அவனை எள்ளி நகையாட, காதலில் வீங்கிப்போன இதயத்திற்கு அது தெரியவா போகிறது…? அது முட்டாள்தனமாகத் தன்னையே வருத்தித் தொலைக்கிறதே, என்ன செய்வது!

ஏற்றமாதிபன் அந்தத் தனி அறையின் கதவைத் தள்ளியபோது, மருத்துவ உபகரணங்களின் சீரான ‘பீப்… பீப்…’ ஓசையைத் தவிர, வேறு எந்த ஒலியும் கேட்காத அந்தப் பேரமைதி அவனுடைய நெஞ்சை ஒரு கணம் உலுப்பவே செய்தது.

அவன் வாழ்வில் இத்தகைய ஒரு அவல நிலை வந்ததேயில்லை. எப்போதும் கம்பீரமாக, திடமாக, தெளிவாக எதிர்த்து நிற்கும் அவனால்… ஏன் ஒரு பெண்ணின் இந்த பலவீன நிலையைக் காண்பதற்கு அச்சமாக இருக்கிறது..? காதல் இத்தனை பலவீனமானதா என்ன…? ஐயோ…! ஏன் என் கால்கள் நகர மறுக்கின்றன…? காதுகள் அடைக்கிறதே… இதயத்தில் ஒருவித நடுக்கம் ஊடுருவுகிறதே… இரத்தம் வடிந்து செல்கிறதே!

கலக்கத்தோடு நிமிர்ந்தவனின் பார்வை படுக்கையில் நிலைக்க, அங்கே அவள் இருந்த நிலையைக் கண்டவனுக்குத் தொண்டையில் எதுவோ வந்து சிக்கிக்கொண்டது. வலி நிறைந்த அவனது மூச்சுக்காற்று அந்தக் குளிரறையையே சூடாக்கப் போதுமானதாக இருக்க, அவளை விட்டு விழிகளை அசைக்காமல் அவளை நோக்கி நகர்ந்தவனுக்கு மூச்சடைப்பது போலத் தோன்றியது. இதயம் பிளந்து இரத்தம் வடிவது போன்ற உணர்வில், தன் இடது மார்பின் மீது வலது கரத்தை வைத்து அழுத்தியவன், ஆழ மூச்செடுத்து உதடுகளைக் குவித்துக் காற்றை வெளியிட்டான். அப்போதும் இதயம் சமநிலை அடைய மறுக்க, தன் கரங்களால் இதயத்தின் மீது பலமாகக் குத்தியவன்,

“அடங்கு இதயமே.. அடங்கு… அதுதான் அவள் பிழைத்துக்கொண்டாளே… அது போதாதா உனக்கு…?” – புத்தி இதயத்தைச் சமாதானம் செய்தது. ஆனாலும், அதையும் மீறிய காதல் வலியை எங்ஙனம்தான் அடக்குவது…? அந்தத் தவிப்போடு அவளை நெருங்கினான் ஏற்றமாதிபன்.

ஆங்காங்கே மருத்துவ உபகரணங்களின் குழாய்கள் தாறுமாறாக ஓடியிருக்க, உயிர் மூச்சைக் கொடுக்கும் முகமூடி அவளது மலர் முகத்தை மறைத்துச் சிறைப்பிடித்திருக்க… நெற்றியிலும், கழுத்திலும் காயங்களுக்கு மருந்திட்ட அடையாளங்களோடு அவள் சரிந்து கிடந்த கோலம், அவன் உயிரை வதைக்கப் போதுமானதாக இருந்தது.

முதுகில் விழுந்த காயத்தால் நேராகப் படுக்க வைக்காமல், ஒரு பக்கமாகச் சரிந்த நிலையில் மெல்லிய தலையணைகளின் பிடிமானத்தில் அவள் ஒருக்களித்துப் படுத்திருந்த விதம்… வேட்டையாடப் பட்ட மான்குட்டியொன்று யாருமற்ற அநாதரவாக, தன் காயங்களை மறைத்துச் சுருண்டு கிடப்பதைப் போலத் தோன்ற, அவளின் இந்த நிலையைக் கண்டானல் இரும்பு கூட உருகிப்போகும்! அப்படி இருக்கும் போது இவன்மட்டும் எம்மாத்திரம்…?

இதயம் துடிக்க மேலும் அவளை நெருங்கினான் ஏற்றமாதிபன். அந்த ஆக்சிஜன் மாஸ்க்கில் அவளுடைய உயிர் மூச்சுப் பட்டுத் தெறிக்கும் போது ஏற்படும் அந்த வெள்ளைப் புகை மட்டும் இல்லை என்றால், அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்கிற சந்தேகம் நிச்சயமாகத் தோன்றி இருக்கும்.

இப்போது அவனுடைய பார்வை அவளுடைய முகத்தில் நிலைத்தது. அவளைப் பார்த்தவாறே படுக்கையோரம் மண்டியிட்டு அமர்ந்தவன், ஊசிகள் எதுவும் ஏற்றப்படாத அவளுடைய குளிர்ந்து போன மென்கரத்தைத் தனது பெரிய கரங்களால் பொத்திப் பற்றிக்கொண்டான்; அதைத் தூக்கித் தன் உதட்டில் ஒற்றிக்கொண்டான். பின், தன் பாறையை ஒத்த கரங்களில் அவள் கரங்களைச் சிட்டுக்குருவி ஒன்றைத் தாங்குவது போலத் தாங்கியவன், மறு கரத்தால் மிக மிக மென்மையாகப் பட்டும் படாமலும் அக்கரத்தின் மேற்புறத்தை வருடிக் கொடுத்தான்.

எத்தனை மென்மை அவளிடம்! தொட்டாலே உடைந்து போவது போல அத்தனை மெதுமையாக இருந்தது அவள் கரம்… முட்டையின் ஓட்டை உடைத்து வெளியே வந்த கோழிக்குஞ்சொன்றை மென்மையாகப் பற்றித் தூக்குவது போலத் தூக்கி மீண்டும் உதட்டில் வைத்து, மென்மையான ஒரு முத்தத்தை வைத்தவனுக்கு அது போதவில்லை. தொடர்ந்து நான்கைந்து தடவை அவளுடைய மேற்கரங்களின் மீது முத்தமிட்டு, மனதார உயிரோடு திரும்பி வந்ததற்காக அவளுக்கு நன்றி சொன்னான்.

மீண்டும் அக்கரங்களைப் பொக்கிஷம் போலப் பற்றியவாறு பெருவிரலால் வருடிக் கொடுத்தான். கூடவே தன் கரத்திற்குள் மறைந்து போன அவள் குட்டிக் கரத்தைக் கண்டு, தன் கீழ் உதட்டை அழுத்தமாக மேல் பற்களால் அழுந்தக் கடித்து விடுவித்தான். அவளை விட்டு விலக அவளுடைய இந்த மென்மையும் ஒரு காரணமாயிற்றே… ஆனால் இந்தப் பட்டுத் துணி, இந்த முட்செடிதான் வேண்டும் என்று அதன் மீது படரத் துடித்தால் அவனும் என்னதான் செய்வது. வலியோடு அவள் முகத்தைப் பார்த்து

“பேபி கேர்ள்…” என்றான் மயிலிறகால் வருடும் குரலில். அந்த ஆண்மை மிக்க குரலில் இத்தனை மென்மை ஒளிந்திருக்கிறதா என்ன? எத்தனை ஆச்சரியம்..?

ஆனால் அவளோ இன்னும் விழிக்காமல் அப்படியேதான் கிடந்தாள். அவளுடைய மனதுக்கு நெருக்கமானவன், இப்படி அருகே அமர்ந்து அவளுக்காகத் தவிப்பதும், அவள் கரங்களைப் பற்றிச் சக்தியை இழந்தவன் போல இருப்பதும் அவளுடைய உணர்வுக்கு புரியுமா? அவன் இப்போது மிக நெருக்கமாக அவளுடைய விழிகளின் அசைவுக்காகக் காத்திருப்பதை அவள் அறிவாளா?

ஏக்கத்தோடு தன் கரத்தில் பொத்தினாற்போலப் பிடித்திருந்த அவளுடைய கரத்தைப் படுக்கையில் வைத்தவன், அவள் தலையில் உள்ளங்கையை வைத்து, மாஸ்க் மறைக்காத நெற்றியோரம் பெருவிரலால் வருடிக் கொடுத்து,

“மை டால்… தேங்க்ஸ்மா… திரும்ப உயிரோடு என்னிடம் வந்ததற்கு மிக மிக நன்றி… எங்கே உன்னை இழந்துவிடுவேனோ என்று… பயந்து போனேன். உனக்கு ஒன்றுமில்லை என்று மருத்துவர் வந்து சொல்லும் வரை என் உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்தேன்… தெரியுமா…” என்று மென்மையாக முனகியவன், இப்போது மெல்லிய சிரிப்பொன்றைக் கண்ணீரோடு சிந்தினான்.

“என் வாழ்க்கையில் இந்த அளவு பயப்படுவேன், பதறுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை பம்கின்… நீ.. நீ இல்லை என்றால் எனக்கு எதுவுமே இல்லை என்று அந்த நொடியே புரியவைத்துவிட்டாய் தெரியுமா… என் உயிரடி நீ… என் உலகமும் நீ… என் மொத்தமும் நீதான்டி… கடவுளே… விதரணை… எப்படிச் சொல்வேன் உனக்கு.. உன்னை அந்த நிலையில் வைத்துப் பார்த்தபோது என் உயிரே ஆடிப்போனது என்று சொன்னால் நீ நம்புவாயா?” அவளிடமே மென்மையாகக் கேட்டவன், “நீ நம்பித் தான் ஆகவேண்டும்… இந்தக் கணம் வரை என் இதயம் தன் துடிப்பை விட்டுவிட்டுத்தான் துடிக்கிறது. ஏன் தெரியுமா… உன்னை இப்படிப் பார்க்க அதனால் முடியவில்லை… என் புத்தி மந்தமாகி இருக்கிறது. எதையும் என்னால் தெளிவாக யோசிக்கவே முடியவில்லை ஏஞ்சல்… ஒரு வேளை உனக்கு ஏதாவது நடந்திருந்தால்… கடவுளே… அதை நினைத்துக்கூடப் பார்க்கும் சக்தி எனக்கில்லை…” என்று முனங்கியவன், இப்போது தன் கரத்தை விலக்கி மீண்டும் அவள் கையைப் பற்றி உதட்டில் பதித்துவிட்டு, அவளை அழுத்தமாகப் பார்த்தான்.

இப்போது அவன் முகத்தில் இருந்த இளக்கமும் கனிவும் தவிப்பும் சுத்தமாக மறைந்துபோக, அதில் என்றுமில்லாத அழுத்தம் குடிகொண்டது.

“நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது… நீ விரைவில் குணமாக வேண்டும்… அப்போதுதான் அந்தக் கயவர்களை நான் பந்தாடுவதை நீ கண்டு ரசிக்க முடியும்… புரிகிறதுதானே உனக்கு? சீக்கிரமாக விழித்துக் கொள்…” என்றான் அழுத்தமான குரலில். ஆனால் அவளோ பதில் சொல்லாமல் அப்படியே அமைதியாக விழிமூடியிருக்க, அதைகண் கண்டவனுக்கு நெஞ்சில் பெரிய பாரம் ஒன்றை அழுத்தியது போலத் தோன்றியது. தொண்டை வேறு கமறியது.. அவளுடைய உடலில் ஓடும் ஒவ்வொரு குழாயும், அவளது இதயத் துடிப்பைக் காட்டும் அந்தத் திரையின் ஓசையும் அவனது ஆன்மாவைக் கீறிச் சிதைக்க, அதுவரை அடங்கியிருந்த கண்ணீர் மீண்டும் விழிகளில் துளித்தது. அதை உணர்ந்து மறுகரத்தால் அவசரமாகத் துடைத்துவிட்டவன், அந்த கலக்கத்தோடே அவளைப் பார்த்து,

“அழாத என்னையும் அழவைத்துவிட்டாய்… அதுவும் தொடர்ந்து அழ வைத்துவிட்டாய். இதற்கு தண்டனை என்ன தெரியுமா?” கோபமாகக் கேட்டவன், அவளை நோக்கிக் குனிந்து,

“நீ என்னை மணந்து கொள்ள வேண்டும்… நீ விழித்து எழுந்ததும் நாம் இருவரும் திருமணம் செய்கிறோம்… நீ ஆசைப்பட்டது போல நாம் ஒன்றாகச் சேர்ந்து வாழப்போகிறோம்… ஆனால் அதற்குப் பிறகு நீ என்னைத் திட்டக் கூடாது… முறடாக நடந்துகொள்கிறேன் என்று வையக் கூடாது… மென்மையாகக் கையாள மறுக்கிறேன் என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கக் கூடாது… புரிந்ததா உனக்கு…?” என்று கறாராக முடித்தவனின் முகம் இப்போது இளகிப் போனது.

“விரைவாக குணமாகி வா கண்ணம்மா….” முனகும்போதே உள்ளே வெள்ளையினத்துச் செவிலியர் ஒருத்தர் கையில் மருந்துகள் அடங்கிய வண்டில் ஒன்றைத் தள்ளிக்கொண்டு வந்தார்.

அங்கே அமர்ந்து விதரணையையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு,

“நீங்கள் இங்கே அதிக நேரம் நிற்க முடியாது…” என்று அவர் எச்சரிக்க, தலையை அசைத்துச் சரி என்றவன், மீண்டும் ஒரு முறை விதரணையை ஆசை தீரப்பார்த்தான். தீரும் ஆசையா அது. அடங்காத ஆசையாயிற்றே. ஆனாலும் அவன் அங்கே நிற்க முடியாது என்பதால், அவளுடைய கரத்தை அழுந்தப் பற்றி விடுவித்து விலக்க முயன்ற நேரம்… சட்டென்று விதரணையின் பிஞ்சு விரல்கள் ஏற்றமாதிபனின் மூன்று விரல்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன.

அதை உணர்ந்த ஏற்றமாதிபனின் தேகம் ஒரு விநாடி சிலிர்த்து அடங்கியது. நம்ப முடியாத அதிசயத்தைக் கண்டது போலக் குனிந்து பார்க்க, அவன் ஒன்றும் கற்பனையில் உணரவில்லை; நிஜமாகவே விதரணை அவனுடைய விரல்களைத் தன் சிறிய கரத்தால் அழுந்தப் பற்றியிருந்தாள். அதைக் கண்டவனுக்கு இதயத்தில் பாலாபிஷேகம் செய்தது போலக் குளிர்ந்து போனது. அதுவரை வலியில் கதறிய நெஞ்சுக்குப் புணுகு தடவியது போல இதயம் அமைதியைக் கண்டது. இதை விட அவனுக்கு வேறு என்ன வேண்டும்..?

“பம்கின்…” தன்னை மறந்து முனகியவன், தன் கரத்தைப் பற்றிய அவள் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்தபோது… நீண்ட நேரத்திற்குப் பிறகு அவனுடைய உதட்டில் நிம்மதிப் புன்னகை ஒன்று மலர்ந்தது.

அவள் அவனை நம்புகிறாள்; அவனைப் பக்கத்தில் இருக்குமாறு கேட்கிறாள்; அவளுக்கு அவன் பாதுகாப்பாகத் தெரிகிறான். அதனால் தானே அவன் கரத்தை விலக்க முயன்ற நேரம் சட்டென்று பற்றிக்கொண்டாள்? மீண்டும் கண்களில் கண்ணீர் பொங்க, குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகி, “மை பேபி டால்… நான் எங்கும் போகவில்லை கண்ணம்மா… இங்கே உன் பக்கத்தில்தான் இருக்கப்போகிறேன்… எங்கும் போக மாட்டேன்… சத்தியம்.. நம்பு…” அவன் அவளுக்கு ஓத, இப்போது கொஞ்சமாக அவளுடைய பிடி தளர்ந்தது. ஆனாலும் அவன் கரத்தை அவள் விடவில்லை.

அவளுக்கு உணர்வில்லை, சுயமில்லை, மயக்க நிலையில் இருக்கிறாள்; ஆனாலும் அந்த நிலையில் கூட அவனை அறிந்து அவன் கரத்தைப் பற்றியிருக்கிறாளே… இதை என்னவென்று சொல்வது?

அந்த நேரம், விதரணையை நோக்கி வந்த செவிலியர் ஏற்றமாதிபனை ஒருவித இறுக்கத்தோடு பார்த்தார். “நீங்கள் வெளியே போக வேண்டும்…” என்று அழுத்தமாகச் சொல்ல… ஏற்றமாதிபன் தவிப்போடு தன் கரத்தைப் அவரின் கன்னித்திரை சிதையவில்லை. கரத்தைப் பார்த்துவிட்டுப் பரிதாபமாகச் செவிலியரை ஏறிட்டான். அவன் கரத்தைப் பற்றி இருந்த விதரணையின் கரத்தைக் கண்ட செவிலியர் என்ன நினைத்தாரோ, “நீ இவர்களுக்கு யார்?” என்றார் அழுத்தமாக.

“நான்…”என்றவன் திரும்பி விதரணையைப் பார்த்துவிட்டு அந்தச் செவிலியரை ஏறிட்டு, “அவளுடைய கணவன்…” என்றான் அழுத்தம் திருத்தமாக. அவன் சொன்னதை அவளுடைய உள்ளுணர்வு சத்தியமாகக் கேட்டிருக்கும், மகிழ்ந்திருக்கும். அந்த நம்பிக்கையில் செவிலியரைப் பார்க்க,

“சரி… நான் இவர்களின் காயத்தைப் பரிசோதிக்க வேண்டும். உங்களின் உதவி தேவை…” என்று அவர் சொல்ல, மறுக்காமல் தலையசைத்தான் ஏற்றமாதிபன்.

அடுத்து அந்தத் தாதி விதரணையின் நிலையைத் திரையில் சரிபார்த்தார். பின் அவளுடைய இரத்த அழுத்தத்தையும், காய்ச்சல் இருக்கிறதா என்றும் பரிசோதித்தார். அதனைத் தொடர்ந்து விதரணையை நெருங்கி, அவளுடைய முதுகிலிருந்த காயத்தைப் பரிசோதித்தார். அவளுக்குப் போடப்பட்டிருந்த மருத்துவ அங்கியைக் கொஞ்சம் விலக்கி முன்பக்கம் இருந்த காயங்களைப் பரிசோதித்தார். மார்பிலிருந்த காயத்தில் இரத்தம் படர்ந்திருப்பதைக் கண்டவர் விலகி, அதற்கான உபகரணங்களை எடுத்தவாறே, “உங்கள் பெயர் என்ன?” என்றார்.

இவன் தன் பெயரைச் சொல்ல, அவர் அதை உச்சரிக்கச் சற்றுத் தடுமாறிய நேரம், “கால் மி ஆதிபன்…” என்றான். அதற்கு நன்றி உரைத்துவிட்டு,

“ஆதிபன், பின்னால் வந்து அவர்களின் முதுகைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். மார்பில் உள்ள காயத்தில் இரத்தம் கசிந்திருக்கிறது. ஏதாவது தையல் விடுபட்டிருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்” என்றவாறு, கையில் எடுத்த பொருட்களோடு விதரணையை நெருங்கினார்.

செவிலியர் சொன்னதைக் கேட்டதும், விதரணையின் கரத்திலிருந்த தன் கரத்தை மெதுவாக விடுவித்தவன், அவளது கரத்தைப் பக்குவமாகக் கட்டிலில் வைத்துவிட்டு அவளுக்குப் பின்புறமாகச் சென்றநேரம், அவளுடைய போர்வையை மெதுவாக விலக்கினார் தாதி.

அங்கே அவளுடைய முதுகைக் கண்டவன் ஆடிப்போனான்! மருத்துவ அங்கி பின்புறத்தில் கட்டப்படாமல் திறந்து வைக்கப்பட்டிருக்க, பின் முதுகில் இருந்த கண்டல்களும் காயங்களும் அவனுடைய மூச்சை ஒரு விநாடி நிறுத்திவைக்கப் போதுமானதாக இருந்தது. அதுவும் வலது பக்கத்துத் தோள் புறத்தில், முள்ளந்தண்டிற்கு அருகாமையில் ஆறு தையல்கள் போடப்பட்டிருந்தன. கூடவே எங்கோ மோதியதற்கான அடையாளமாக, அரைவாசி முதுகு முழுவதும் சிவந்த நிறத்தில் கண்டலாகி, அவளுடைய வெண்நிறத் தோலில் அப்பட்டமாகப் பல்லிழித்துக் கிடந்தது.

அதைக் கண்ட ஏற்றமாதிபனின் கைமுஷ்டிகள் இறுகின. ஆத்திரத்தோடு பற்களைக் கடித்த நேரம், கைக்கு புதிய உறை மாற்றியவாறு, விதரணையை நெருங்கிய தாதி, “தோள்களைப் பற்றிக்கொள்ளுங்கள். பின்னால் இருக்கும் காயம் படுக்கையில் படாதவாறு சரித்துப் பிடித்துக் கொள்ளுங்கள்…” என்றவர், முடிச்சிடப்படாத விதரணையின் ஒரு பக்கத்து மருத்துவ ஆடையைப் பற்றி இழுக்க… அது சுலபமாவே அவளது தோளிலிருந்து வழுக்கி விழுந்தது.

இப்போது மார்பை மூடியிருந்த அந்தப் பிளாஸ்திரியை மெதுவாகக் கழற்றி இழுக்க… ஐந்து அங்குலம் அளவிலான அந்தக் காயம் பார்ப்பதற்கே அகோரமாக இருந்தது! விதரணையைப் பற்றி இருந்த ஏற்றமாதிபனுக்கு, மார்பில் தெரிந்த அந்தக் காயங்களையும் கண்டல்களையும் கண்டு துடித்துப்போனான் அந்த ஆண்மகன்.

ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் காயத்தைப் பார்க்க முடியாமல் விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், எல்லையில்லா ஆத்திரத்தோடு தலையைத் திருப்பிக் கொள்ள… விதரணையின் காயத்தை அவதானமாகப் பரிசோதித்த செவிலியர், மெதுவாக அழுத்தி இரத்தக் கசிவு இருக்கிறதா என்று பார்த்தார்.

பயப்படும்படி எதுவுமில்லை என்று நிம்மதி கொண்டவராக மீண்டும் மருந்திட்டுக் கட்டுப் போட்டு முடித்து நிமிர, அந்தச் செவிலியரைப் பார்த்தவன்,

“அவளுக்கு ஒன்றுமில்லையே…?” என்றான் கவலையாக.

“இல்லை… பழைய இரத்தம்தான் கசிந்திருக்கிறது… பயப்பட ஒன்றுமில்லை…” – சொன்னவர், அவளைப் பற்றி மீண்டும் சரிந்த வாக்கில் படுக்க வைத்துவிட்டு, முதுகின் பக்கமாகத் தலையணையைச் சரியாக்கிவிட்டு, “நன்றி ஆதிபன், இனி நீங்கள் போகலாம்…” என்றுவிட்டு, கட்டிலில் வைத்த குப்பைகளை அள்ளி எடுக்கத் தொடங்க… மறுகணம் அங்கிருந்து ஆவேசமாக வெளியே வந்தான் ஏற்றமாதிபன்.

நடக்கும்போதே தலையிலிருந்த தொப்பியையும், முகத்தை மறைத்திருந்த முகக்கவசத்தையும், அந்த மஞ்சள் நிற மேலங்கியையும் இழுத்துப் பிய்த்துக் கழற்றியவன்… போகிற போக்கில் அதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வெளியே வந்தான்.

ஏதோ ஒருவித ஆவேசம் அவனை மனிதனாக இருக்கவிடாமல் வதைத்தது! உள்ளே எரிமலையாக வெடிக்க முயலும் அந்தச் சீற்றத்திற்கு அவனுக்கு ஒரு வடிகால் வேண்டும்; இல்லையென்றால் நிச்சயமாக அந்தக் கோபத்தை வேறு எதிலும் காட்டிவிடுவான். நினைத்தவாறு நடந்தவன், தன் வேகத்தைக் கூட்டினான்; இன்னும் கூட்டினான்ஞ் மேலும் கூட்டினான். இப்போது ஓடத் தொடங்கினான்! அவனைப் பிறர் விசித்திரமாகப் பார்ப்பது கூட அவனுக்கு உறைக்கவில்லை.

ஆத்திரம்.. ஆத்திரம்… அடக்க முடியாத ஆத்திரம்…

ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. சீறிப்பாயும் வேங்கையென அவன் வேகம் இன்னும் அதிகரித்தது. அவனுடைய இரத்தம் முழுவதும் நாடி நரம்புக்குள் சீறிப்பாய, அத்தனை ஆத்திரத்தையும் மொத்த சக்தியாக மாற்றி, கடும் வேகமாக ஓடியவன் அங்கே அடர்ந்து வளர்ந்த காட்டுப் பகுதியைக் கண்டு அதற்குள் நுழைந்தான்.

அடர்ந்த மரம் செடிகளுக்கு நடுவே அவன் ஓடிய வேகத்தில், பாதையில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை அவனது நெஞ்சில் பலமாக மோதியது. அதை எதிர்பாராதவன். நிலைதடுமாறி- தரையில் இருந்த வேர் ஒன்றில் கால் தட்டி, உருண்டு விழுந்தான். மீண்டும் எழுந்து ஓடினான். அடிபட்டு விழுந்ததால் ஏற்பட்ட வலி எதுவும் அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவளுடைய உடலில் தெரிந்த காயத்தோடு ஒப்பிடுகையில் அவனது வலி ஒன்றும் பெரிதாகவே தெரியவில்லை அவனுக்கு.

அத்தனை சக்தியையும் மொத்தமாகக் கூட்டி ஓடியவனுக்கு நுரையீரல் உயிர்க்காற்றுக்காகக் கெஞ்சியது. இதயம் பயங்கரமாகத் துடித்தது. அந்தத் துடிப்போடு இன்னும் வேகமெடுத்தவன், கடைசியாக சீராய் ஓடிய ஒரு ஆற்றின் முன்பாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து நின்றான். மறுகணம் கரங்கள் இரண்டையும் விரித்து,

“ஆஆஆஆஆஆ…” என்று பயங்கரமாக அலறத் தொடங்க, அவனுடைய அந்த அலறலில் அந்தக் காடே ஒரு கணம் கிடுகிடுத்து அடங்கியது.

What’s your Reaction?
+1
12
+1
1
+1
4
+1
0
+1
14
+1
1
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-3/4

(3) “வாட்?” என்று கிட்டத்தட்ட சத்தமாகக் கத்திவிட்டான் வருண். “ஆனால் எப்படி...? நான்தான் விசாரித்தேனே... நான் விசாரித்த வரைக்கும் அந்த…

5 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-1

(1) துப்பாக்கி வெடித்த சத்தம் குடோனின் கூரையை அதிரவைக்க, சென்-வாங்கின் உயிர் பிரிந்த அதே விநாடியில் ஏற்றமாதிபனின் உடல் எதிர்வினையாற்றியது.…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 28

(28) மேலும் இரு நாட்கள் கழிய திரும்ப விதுரனைப் பார்க்கவேண்டும் என்று தொடங்கி விட்டாள் விதரணை. அதைக் கேட்டவனின் முகம்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 27

(27)   இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன. காயங்கள் ஆறியிருக்க, கட்டுகள் அவிழ்க்கப் பட்டிருந்தன. சத்திரசிகிச்சையால் வெளியேறும் இரத்தம் வடிந்து…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 26

(26)   “ஹே... எழுந்துவிட்டாயா?” என்று ஆங்கிலத்தில் குதூகலமாகக் கேட்டவாறு அவளை நோக்கி விரைந்து வந்த விக்டோரியா, அவசரமாக அவளுடைய…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 25

(25)   மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும்…

2 weeks ago