Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 19

(19)

முதலில் பாய்ந்து உள்ளே வந்த காவலர்கள், அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு பெண்ணின் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்த ஏற்றமாதிபனைக் கண்டு ஒரு வினாடி அதிர்ந்தனர். பின் பதற்றத்துடன் தங்கள் துப்பாக்கிகளை அவனை நோக்கி நீட்டி,

“அசையாதே… கைகளை மேலே தூக்கு…!” என்று குரலை உயர்த்தி எச்சரிக்க, அவர்களின் அந்தக் குரலில் பற்களைக் கடித்தான் ஏற்றமாதிபன்.

எப்போதும் மற்றவர்களை அடிபணிய வைத்துத் தான் அவனுக்குப் பழக்கம்; ஆனால், சூழ்நிலை இப்போது அவனை அடிபணியச் சொல்கிறது! அவனால் அந்தச் சூழ்நிலையில் எதையும் நிதானமாகக் கூடச் சிந்திக்க முடியவில்லை. எந்த நிலைமையாக இருந்தாலும் கண்ணிமைக்கும் நொடியில் அதற்குத் தீர்வு காணக்கூடியவன்தான் அவன்; ஆனால், இப்போது அவனது மூளை கூர்மையாக இயங்க மறுத்தது. இரத்தத்தின் வேகம் மந்தமாக இருந்தது. விழிகளோ குற்றுயிராக இருக்கும் விதரணையிடமிருந்து விலக மறுத்தன. இதில் தெளிவாக எங்கனம் யோசிப்பது…?

“உன்னைத்தான்… கையை மேலே தூக்கு… இல்லையென்றால் உன்னைச் சுடக்கூடத் தயங்க மாட்டோம்…!” என்று சொன்ன காவலர், எட்டி அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க முயன்றார். ஆனால், அவனுடைய பெரிய உருவம் அந்தப் பெண்ணின் மேற்பகுதியை முழுமையாக மறைத்துக் கொண்டிருந்ததால், அவரால் தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை.

“இப்போது கைகளை உயர்த்தப் போகிறாயா இல்லையா…?” – சீறிய காவலர் தன் துப்பாக்கியின் சேஃப்டி லாக்கை நீக்க, அதன் ‘கிளிக்’ சத்தம் கேட்ட ஏற்றமாதிபனுக்கு அப்போதுதான் ஓரளவு சூழ்நிலை உறைத்தது.

அவன் மட்டும் காவலனில்லை; வந்திருப்பவர்களும் காவலர்கள்! அவர்களுக்கான தார்மீக மரியாதையை அவன் கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு மேல் எதைப் பற்றியும் சிந்திக்காமல், இரத்தம் தோய்ந்த தனது ஒரு கரத்தை மட்டும் மெல்ல மேலே உயர்த்தி,

“சுடாதீர்கள்! நான் ஆர்.சி.எம்.பி அதிகாரி. என்னுடைய பதிவு எண் (ஸிமீரீவீனீமீஸீtணீறீ ழிuனீதீமீக்ஷீ) 65432. இப்போதே உங்கள் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.. 911-க்கு அழைத்து ‘அபாயத்தில் இருக்கும் அதிகாரி’ (ளியீயீவீநீமீக்ஷீ வீஸீ பீவீstக்ஷீமீss) என்று தகவல் கொடுத்தது நான்தான்…!” என்று தன் கணீர் குரலில் அழுத்தமாகச் சொல்ல, அவன் குரலில் இருந்த அந்த அதிகாரத் தொனியும் உறுதியும், வந்திருந்த காவலர்களைச் சற்றே யோசிக்க வைத்தன!

இருப்பினும் நம்பிக்கையில்லாமல் அவனை நெருங்கிய காவலர், துப்பாக்கியைத் தாழ்த்தாமலேயே,

“உன் அடையாள அட்டை எங்கே?” என்றார் சந்தேகமாக.

“வெளியே நிற்கும் ஆடி (கிuபீவீ) என்னுடைய வண்டிதான். அதில் உள்ள டாஷ்போடில் இருக்கிறது. அதை பிறகு எடுத்துக் கொடுக்கிறேன். முதலில் இவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்… உதவி மருத்துவர்கள் எங்கே…?” என்று அவன் ஆவேசமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, பின்னால் நின்றிருந்த இன்னொரு காவலர் தனது தோள்பட்டையில் தொங்கிய ரேடியோ மூலம் ஏற்றமாதிபன் சொன்ன தகவல்களைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்து, கனடியக் காவல் தரவுத்தளத்தில் (சிறிமிசி) சரிபார்த்தார்.

அடுத்த முப்பது விநாடிகளில், ரேடியோவின் மறுமுனையிலிருந்து, “ஆர்.சி.எம்.பி (ஸிசிவிறி) சிறப்பு அதிரடிப்படை கமாண்டர் ஏற்றமாதிபன், பதிவு எண் 65432 உறுதி செய்யப்படுகிறது. கார் அவனுடையதே…” என்கிற அதிகாரப்பூர்வத் தகவல் மறுபக்கமிருந்து வர, அதைக் கேட்ட பிறகுதான், முன்னால் நின்றிருந்த காவலரின் துப்பாக்கி முனை மெல்லத் தரை நோக்கித் தாழ்ந்தது. இருப்பினும் தன் சக காவலர் ஒருவரை வெளியே அனுப்பி, ஆதிபனின் காரில் இருக்கும் அடையாள அட்டையை நேரில் பார்த்துச் சரிபார்க்குமாறு அவர் சைகை செய்ய, அவரும் தாமதிக்காமல் வெளியேறியிருந்தார்.

அந்த நேரம், மருத்துவ உதவியாளர்கள் தள்ளுவண்டிகளை ஏந்தியவாறு நிலவறை நோக்கி வர, அதில் ஒரு உதவி மருத்துவர் ஏற்றமாதிபனின் அருகே விரைந்து வந்தார். அவரிடம் விதரணையை ஒப்படைத்துவிட்டு எழுந்த ஏற்றமாதிபனை நோக்கி வந்த முதன்மைக் காவலர், தரையில் கிடந்த அவனது துப்பாக்கியை விரைந்து எடுத்து, விபத்தாகக் கூட அந்தத் துப்பாக்கி வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் முனையை கீழ்நோக்கி வைத்து, சேஃப்டி லாக்கை உறுதி செய்துவிட்டு, இப்போது துப்பாக்கியைத் தொட்டுப் பரிசோதித்தார்.

அதில் மிச்சமிருந்த சூடு, அந்தத் துப்பாக்கி சற்றுமுன் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்ய,

“ஆஃபிசர்… எத்தனை தோட்டாக்கள் பாவித்தீர்கள்…?” என்றார் விசாரணையாக.

ஆதிபனுக்குச் சரியாக நினைவில் இல்லை. ஒரு விநாடி விழிகளை மூடி, “ஐந்து… இல்லை ஆறு” என்றான் குழப்பமாக. அவனுக்குத்தான் விதரணையின் நிலையைக் கண்டதும் அனைத்தும் மரத்துப்போனதே. இதில் எப்படி அதையெல்லாம் நினைவில் வைத்திருப்பான்.

அதனை உறுதி செய்யும் விதமாக, சுடப்பட்டு அங்குக் கிடந்தவர்கள் யார் என்கிற கணக்கைக் காவலர் தன் விழிகளால் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அந்தத் துப்பாக்கியை உதவியாளர் நீட்டிய ‘எவிடன்ஸ் பேக்’கில் போட்டுவிட்டு,

“ஆபீசர்… உங்கள் அடையாளத்தை நாங்கள் ரேடியோவில் உறுதி செய்தாலும், இப்போதைக்குத் துப்பாக்கியை உங்களிடம் திரும்பக் கொடுக்க முடியாது. இது குற்றம் நடந்த இடம் என்பதால், உங்கள் துப்பாக்கி தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. அது முடிந்ததும், உங்கள் துறையிடம் இது குறித்து முறைப்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுத் துப்பாக்கியும் ஒப்படைக்கிறோம்” என்று அவர் சொல்ல, அதைக் கேட்டவனின் மனது சுணங்கவே செய்தது.

அவனுக்குத் துப்பாக்கி என்பது ஆறாம் விரல் போல! அதுவும் காவல் அதிகாரியிடம் கொடுக்கப் பட்ட தன் துப்பாக்கியின் மீது அவனுக்கு ஒரு தனித் காதலே உண்டு. அவனிடம் பலவகைத் துப்பாக்கிகள் இருந்தாலும், இந்தத் துப்பாக்கி அவனது தொழில் சார்ந்தது என்பதால் மிகப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வான். இன்று அது தன் கையை விட்டுப் போவதில் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும், சட்டதிட்டங்களை அவனால் மாற்ற முடியாதே! ஒரு காவலனாக இருந்துகொண்டு அதை மதிக்காமல் இருக்கவும் முடியாது.

“புரிகிறது… நடைமுறை எனக்கும் தெரியும். இப்போது என் கவலை எல்லாம் அந்தப் பெண் மட்டும்தான். விசாரணை முடிந்ததும் துப்பாக்கியை முறைப்படி என் டிபார்ட்மென்ட்டிலிருந்து பெற்றுக் கொள்கிறேன்” என்று அவன் சொல்லும்போது, ஏற்றமாதிபனின் அடையாள அட்டையை விசாரித்துக் கொண்டிருந்த காவலரிடம் நீட்டப்பட்டது.

அதை வாங்கி, அவனையும், அடையாள அட்டையில் இருக்கும் முகத்தையும் ஒப்பிட்டுச் சரிபார்த்தவருக்குள், அடுத்த விநாடியே தானாக ஒரு மரியாதை வந்து சேர்ந்துகொண்டது. அதை ஏற்றமாதிபனிடம் கொடுத்துவிட்டுத் தன் கரத்தில் இருந்த துப்பாக்கி அடங்கிய பையை அங்கே நின்றிருந்த இன்னொரு காவலரிடம் கொடுத்து, சேகரிக்கும் இதர ஆதாரங்களுடன் அதையும்

சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டுவிட்டு ஏற்றமாதிபனிடம் தன் கவனத்தைச் செலுத்தி,

“வெளியே போய் பேசலாம் வாருங்கள்…” என்று சொன்னவாறு மேலே நடக்க, அங்கே சுவருக்குள் மாட்டிக்கொண்டிருந்தவனை ஒருவாறு விடுவித்து, ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றுகொண்டிருந்தார்கள் இரு உதவிமருத்துவர்கள்.

அதைக் கண்ட ஏற்றமாதிபன், முன்னே சென்று கொண்டிருந்த காவலரிடம்,

“அவன் உயிரோடு இருக்கிறான்தானே…?” என்றான் மெல்லிய கவலையோடு.

அவர்களில் ஒருத்தனாவது உயிரோடு இருந்தால்

தான் விசாரிக்க முடியும்; அவர்கள் யார், எதற்காக இங்கே வந்தார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிற தீராக்கவலை அவனுக்கு. அதை அந்த அதிகாரியும் உணர்ந்துகொண்டார் போல. திரும்பி ஏற்றமாதிபனைப் பார்த்து,

“ம்… மயங்கிக் கிடக்கிறான்… இவனைச் சுவருக்குள் மாட்டியது நீங்களா…?” என்றார் சிறு கோபமாக. அதற்கு ஆம் என்பது போலத் தலையை ஆட்டிவிட்டு,

“விசாரிப்பதற்கு ஒருத்தனாவது உயிரோடு இருக்கவேண்டுமே…” என்றான் அழுத்தமாக. நல்லவேளை அவன் அகோரக் காட்சியைப் பார்க்க முதல் இவனைப் பார்த்தான். இல்லை என்றால், அவனையும் கொன்றிருப்பான்.

தலையை மட்டும் அசைத்துவிட்டு முன்னேற… இருவரும் வீட்டிற்கு வெளியே வந்தார்கள்.

வெளியே வந்ததும், ஏற்றமாதிபனை ஏறிட்ட காவலதிகாரி தன் செஸ்ட் வெஸ்ட்டின் பாக்கெட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு, கால்களைச் சற்றே அகட்டி வைத்துத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு,

“இப்போது சொல்லுங்கள், அங்கே என்ன நடந்தது?” என்றார் அதிகாரப்பூர்வமாக.

அவசர ஊர்தியில் விதரணையின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக ஏற்றப்படுவதைத் பார்த்தவாறே, உள்ளே நடந்த அத்தனை விஷயங்களையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறினான் ஏற்றமாதிபன். அவனுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு காவலர், அவன் சொன்னவை அனைத்தையும் தன் குறிப்பேட்டில் துரிதமாகக் குறித்துக்கொண்டிருந்தார்.

அவன் சொல்லி முடித்ததும், குறிப்பெடுத்துக் கொண்டிருந்த காவலர் சில குறுக்குக் கேள்விகளைக் கேட்க, தகுந்த முறையில் அவர்களுக்கு வேண்டிய பதில்களைத் தெளிவாகவும் நிதானமாகவும் சொன்னான் ஏற்றமாதிபன்.

“ஏன் ஆபிசர், இவர்கள் யார்? எதற்காக அவர்களைக் கொன்றார்கள்? உங்களுக்கு ஏதேனும் பின்னணி தெரியுமா?” என்று கேட்க, தன் உதடுகளைப் பிதுக்கி, ‘இல்லை’ என்பது போலத் தலையை ஆட்டியவன்,

“இவர்கள் யார் என்று தெரியாது, ஆனால், இது வெறும் திருட்டுக்கான கொலையல்ல என்பது மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றான் அழுத்தமாக.

“எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?”

“அங்கிருந்தவர்களுக்கு கத்தி வீசும் பயிற்சி இருந்தது… கூடவே போர்பயிற்சியும் கொஞ்சம் தெரிந்திருக்கிறது. பொதுவாக திருடர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை…” என்றான் இவன் உறுதியாக.

“ஒருவேளை ஏதேனும் குடும்பப் பகைக்காக இவர்களை யாராவது அனுப்பியிருக்கலாமா?” என்று முதன்மைக் காவலர் கேட்க, அதற்கும் மறுப்பாகத் தலையசைத்தான் ஏற்றமாதிபன்.

“எனக்கு இந்தக் குடும்பத்தைப் பற்றி மிக நன்றாகத் தெரியும்… எந்த வம்புத் தும்புக்கும் போகாத மனிதர்கள்! நிச்சயமாக இது தனிப்பட்ட பகை சார்ந்ததாக இருக்க வாய்ப்பேயில்லை…” என்று ஏற்றமாதிபன் உறுதியாகச் சொல்ல, “அப்படியென்றால் வந்தவர்களின் மோட்டிவ் தான் என்ன…?” என்றார் காவலர் யோசனையாக.

“அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்… ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைக் கட்டி வைத்துக் கொடூரமாகக் கொல்வதற்கான அவசியம் என்ன…? அவர்களுக்கான தேவை என்ன? இதன் பின்னணி என்ன? இவை அனைத்தையும் அங்கே மயங்கிக் கிடப்பவன் எழுந்து சொன்னால்தான் தெரியும்…” என்று ஏற்றமாதிபன் சொல்ல அவனை ஒரு மாதிரிப் பார்த்தவர்,

“நல்லவேளை அவனையாவது விட்டு வைத்தீர்கள்…” என்றார் தன்னை மீறிய கிண்டலுடன். அதைக் கேட்டதும் சிரிக்காமல் அவரை ஏறிட்டவன்,

“அவன் அதிர்ஷ்டசாலி… அதனால்தான் முதலாவதாக என் கையில் சிக்கினான். இல்லை என்றால்…” அவன் இழுக்க, அவன் தோளில் தட்டிக்கொடுத்த காவலர், அவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் உள்ள உறவு என்ன என்று கேட்டார். அதையும் அவன் கூறினான். அதன் பின், தன் தாடையை அழுந்தத் தேய்த்தவாறு யோசித்த காவலர்,

“ஒருவேளை, வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய கொலையாளிகள், முகவரியைக் குழப்பிக் கொண்டு தவறுதலாக இந்த வீட்டிற்குள் நுழைந்து இருப்பார்களோ…?” என்று கேட்க, அவரது அந்தக் கேள்வியில் சற்று யோசித்தவன்…

“இருக்கலாம்… ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது…” என்று அவன் சொல்ல, அதையெல்லாம் குறிப்பு எடுத்துக்கொண்டார் அடுத்த காவலதிகாரி.

அந்த நேரம், இரண்டு உதவி மருத்துவர்கள் விதரணையை ஏந்தி வந்து அவளை வண்டியில் ஏற்றத் தொடங்கினார்கள். உடனே காவலர்களை ஏறிட்ட ஏற்றமாதிபன்,

“ஆஃபிசர்… நீங்கள் என்ன கேட்டாலும் அதற்கான ஒத்துழைப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.. இப்போது நான் அந்தப் பெண்ணோடு போக வேண்டும்.. நீங்கள் எப்போது அழைத்தாலும் மறுக்காமல் வருவேன்…” என்று உறுதியோடு கூறியவன், அவசரப் பதற்றத்தில் அவர்களின் பதிலையும் எதிர்பாராமல், விதரணையை ஏற்றிய அவசர ஊர்தியை நோக்கி வேகமாகச் செல்ல, அந்தக் காவலரும் அவனைத் தடுக்கவில்லை. அவனது அடையாள அட்டையைக் கண்டு உறுதிசெய்த பின் அவனைத் தடுக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கவில்லை.

வேக நடையோடு அவசர வண்டியை நெருங்கியவன், அவர்கள் கதவை மூட முற்படும் முன், ஒற்றைக் கரத்தால் அவர்களின் முயற்சியைத் தடுத்துவிட்டு, மின்னலாய் உள்ளே நுழைந்து விதரணையின் அருகே அமர்ந்துகொண்டான் ஏற்றமாதிபன். உள்ளே அமர்ந்திருந்த அவசர மருத்துவரிடம்,

“எப்படி இருக்கிறாள்?” என்றான் அவள் முகத்தையே வெறித்துப் பார்த்தவாறு.

அவனைப் பரிதாபமாகப் பார்த்த அந்த மருத்துவர்,

“அபாயகரமான நிலையில்தான் இருக்கிறாள். இவள் பிழைப்பாளா என்பது…” என்று அவர் முடிக்கவில்லை; நிமிர்ந்து அந்த மருத்துவரை ஒரு பார்வை பார்த்தான் ஏற்றமாதிபன். அந்தப் பார்வையில் எதைக் கண்டாரோ, சட்டென்று தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் அவர்.

இப்போது ஏற்றமாதிபன் திரும்பி விதரணையை ஏறிட்டான். வெறும் இருபத்து மூன்று வயது குருத்து அவள்! அவள் எப்படி… நோ… தன் தலையை உலுப்பியவன், முகம் கசங்க அந்த மருத்துவரைப் பார்த்துவிட்டு, மீண்டும் விதரணையை ஏறிட்டவாறே,

“இவளுக்கு ஒன்றும் ஆகாது. ஒன்றுமே ஆகாது… இவள் நன்றாகிவிடுவாள்… நன்றாகியே ஆக வேண்டும்… நிச்சயமாக உயிரோடு எழுந்து வருவாள். வந்தே ஆக வேண்டும்…” என்று தன்னை மறந்து அழுத்தமான குரலில் சொன்னவன், நம்பிக்கையும் உறுதியுமாக அவள் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்ட நேரம், அவசர ஊர்தி சைரன் ஒலியோடு டொரண்டோ சாலைகளில் மின்னல் வேகத்தில் சீறிப் பாயத் தொடங்கியது.

அதற்குள் மருத்துவ உதவியாளர் விதரணையின் உடலில் பல கருவிகளை இணைத்து, அவளது இதயத்துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்திருந்தார். அவளருகே அமர்ந்திருந்த ஏற்றமாதிபன், அவசரச் சிகிச்சை பெற்றுக்கொண்ட நிலையிலும், எந்த உணர்வுமின்றி முகத்தில் உயிர்க்காற்றைச் செலுத்தும் கவசத்தோடு படுத்துக் கிடந்தவளைக் கண்டு உள்ளூரத் துடித்துக்கொண்டிருந்தான். நெஞ்சம் பிசைந்தது அவனுக்கு! தன் கரத்திலிருந்த அவளுடைய கரத்தை மென்மையாக பற்றித் தன் உதட்டில் பதித்தவனுக்கு, மீண்டும் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

எத்தனை துடிப்பாகத் திருமணத்தில் உலாவித் திரிந்தாள்! அவளை விட்டு அவன் விழிகள் இம்மியும் அசையவில்லையே. அதுவும் அவனைக் கண்ட அதிர்ச்சியில் அவள் முகம் சிவந்ததை இப்போது நினைத்தாலும், உள்ளூற என்னவோ செய்கிறதே! அவன் இந்தத் திருமணத்திற்கு வருவதாகவே இருக்கவில்லை. ஆனால், அபி பேசியபோது விதரணை வருகிறாள் என்று சொன்னதும், எந்தப் பேய் உள்ளே ஏறி அமர்ந்ததோ… கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் வேலைகளை ஒதுக்கிவிட்டு, இரண்டு நாட்கள் விடுப்பை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

ஆனால், இதைப் பார்ப்பதற்கா அவன் இத்தனை தூரம் வந்தான்…?

உள்ளூறத் துடித்தவனாக, இரத்தம் தோய்ந்த தன் வலது கரத்துப் புறங்கை விரல்களால் அவளுடைய கன்னத்தை மென்மையாக வருடிக் கொடுத்தான். அப்போதுதான் அவனுக்குத் தன் கரங்களில் அப்பியிருந்த இரத்தத்தின் பாரமே தெரிந்தது. அந்தக் கரத்தைத் தூக்கிப் பார்த்தான்; ஒருபோதும் இல்லாததாக அன்று நடுங்கிக் கொண்டிருந்தன அவனது விரல்கள். இந்தக் கரங்கள் இனபேதமில்லாமல் பலவகையான இரத்த வாடையைக் கண்டிருக்கிறது. அத்தனையும் அவனுடைய வெற்றிக்குத் தெளித்த பன்னீர்த் துளிகளாகப் பெருமைப்பட்டிருக்கிறான்; ஆனால், இந்த இரத்தம்… வறண்ட தொண்டையை நனைக்க உமிழ்நீர் கூட்டி விழுங்கினான் ஏற்றமாதிபன்.

அவனுடைய கரங்களில் படிந்திருந்த ஒவ்வொரு துளி இரத்தமும் அவனைத் தீயாக எரித்தது; ஊசியாகக் குத்தி அவனை வதைத்தது. இப்போதும் இரத்த வெள்ளத்தில் அவள் கிடந்த காட்சியைக் அவனால் மறக்கவே முடியவில்லை. இதயம் தகித்தது; புத்தி பேதலிக்கிறது; தேகத்தின் ஒவ்வொரு அணுவும் வலித்தது. அந்த வலியோடு அவள் கரத்தைப் பற்றியிருந்த மறு கரத்தோடு தன் கரத்தை இணைத்தவன், அதில் தன் நெற்றியைப் பதித்து,

‘விதரணை, ப்ளீஸ்… என்னை விட்டுப்போகாதே, நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும்… என் மனதில் உள்ள தவிப்பு, ஏக்கம்… அனைத்தையும் உன்னிடம் கொட்ட வேண்டும்… உன்னை எதற்காக மறுத்தேன் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். இப்படியே நீ சென்றுவிட்டால், காலம் முழுக்க அந்த குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லும்… என்னை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதே… எழுந்து வந்துவிடு…’ என்று அவனுடைய அடிமனது தாள முடியாத வலியில் ஓலமிட்டது.

ஆனால், அவனுடைய அந்த வேண்டுதலை அவள் ஏற்க வேண்டுமே…? காலம் இருவருக்குமாக எதை வைத்திருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?

அவன் வேண்டுதலைப் பொய்யாக்குவது போல, திடீரென்று அவளுக்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியிலிருந்து ஒரு சீரற்ற ஓசை அலறலாய் எழ… திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்திப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

அங்கே அந்தச் சத்தம் எழுந்த நொடி, விதரணையின் உடல் ஒருமுறை வில்லைப் போல வளைந்து தூக்கிப் போட்டது! சட்டென்று திறந்த விழிகள் மேல்நோக்கிச் சொருகின!

அதைக் கண்டவனின் உயிர்மெய் ஆடிப்போக, இருக்கையை விட்டு எழுந்தவன், “என்னாச்சு….? விதரணை…? ஏன் இப்படிச் செய்கிறாள்?” – ஏற்றமாதிபனின் குரலில் முதன்முறையாகக் கிலி நிறைந்த ஓசை தெறித்தது.

முன் எப்போதும் இல்லாத நடுக்கம் அவனை ஆட்டுவிக்க, ஒரு தேர்ந்த அதிகாரிக்குரிய நிதானமும் கட்டுப்பாடும் எங்கோ தொலைந்து போக… பித்துப் பிடித்தவன் போல முகத்தில் பயத்தோடு பக்கத்தில் நின்றிருந்த உதவி மருத்துவரை வெறித்தான் ஏற்றமாதிபன்.

உதவி மருத்துவரும் விதரணையின் நிலை கண்டு பதறி எழுந்துவிட்டார்.

“இவர்களின் இரத்த அழுத்தம் மிக வேகமாகச் குறைந்துகொண்டு வருகிறது! உள் உறுப்புகளில் ஏற்பட்ட கத்திக்குத்தினால் உள்ளே இரத்தப்போக்கு அதிகமாகிவிட்டது… இவர்கள் அபாய கட்டத்திற்குப் போய்க்கொண்டிருக்கிரர்..” என்று பதறிய மருத்துவர், உடனே அதற்கான முதலுதவியைச் செய்யத் தொடங்க… ஏற்றமாதிபனுக்குத் தன் உடலிலிருந்து இரத்தம் அனைத்தும் வடிந்து சென்ற உணர்வு !

“யு மீன்… ஷி இஸ் கோயிங் டூ ஷாக் (you mean… she is going into shock?”  – கேட்கும் போதே அவன் இதயம் நடுங்குவது அவனுக்கே தெரிந்தது. உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்குத் தேவையான உயிர்க்காற்றுக் கலந்த இரத்த ஓட்டம் கிடைக்காமல் போவதால் அடுத்து என்னாகும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? அவள் மரணத்தின் விளிம்பில் இருக்கிறாள்! நினைக்கும் போதே அவனது உடல் உதறியது. நடக்க இருக்கும் விபரீதம் அறிந்து ஆடிப்போனான் ஏற்றமாதிபன்.

ஆனால், மருத்துவர் பதில் சொல்லாமல் ஏதேதோ செய்யத் தொடங்க, பதற்றத்தோடு விதரணையை நோக்கிக் குனிந்தான் ஏற்றமாதிபன்.

“விதரணை! விதரணை! என்னைப் பார்… கண்ணைத் திற!” – ஏற்றமாதிபன் அவளது கன்னத்தில் மென்மையாகத் தட்டி அவளை விழிப்படையச் செய்ய முயன்றான்.

வழிந்த அவனது கண்ணீர் பொட்டாய் அவள் முகத்தில் தெறிக்க, அவளோ எந்த உணர்வுமற்று அப்படியே தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலுலகத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தாள்.

உடனே அவள் கரங்களைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்து, கண்ணீர் ஈரத்தை அவள் உணரச் செய்தவன்,

“விதரணை… என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது… உனக்காக வழிகிறது விதரணை… அது ஏன் என்று உனக்குப் புரிகிறதா… இங்கே பார்…” என்று அவள் கரங்களால் தன் கண்ணீரைத் தொட்டுக் காட்டியவன், தன் மூக்கை உறிஞ்சிய வாறே,

“பேபி…, எனக்கு உன்னிடம் சொல்ல ஆயிரம் கதைகள் உண்டு… நீ இப்படி கண்ணை மூடிக் கிடந்தால் எப்படிச் சொல்ல முடியும்…? எழுந்து வா கண்ணம்மா…. நீ பிழைக்க வேண்டும்… எனக்காகப் போராடு!” என்று அவளது மூளைக்குப் புரியும்படி கத்தினான். அவளுக்கு முதலுதவி செய்யும் மருத்துவரைப் பதற்றமாகப் பார்த்தவாறே மீண்டும் விதரணையை ஏறிட்டான்.

தனது இரத்தம் படிந்த கரங்களால் அவளது முகத்தைப் பொத்தினாற்போலப் பற்றி உலுப்பி, “ப்ளீஸ்… டோன்ட் கிவ் அப்…!” என்றபோது, அந்த அவசர ஊர்தி ஒரு திருப்பத்தில் திரும்பியது. அது வேகமாகத் திரும்பியதில் விதரணையின் உடல் சற்று சரிய, அவளது தேகத்தைச் சட்டென்று அழுந்தப் பற்றி உடல் அசையாமல் காத்த நேரம், விதரணையின் இதயத்துடிப்பு காட்டும் திரையில் இருந்து அந்தச் சத்தம் கேட்டது!

நீண்ட ‘பீப்…’ ஒலி! திரையில் இருந்த வளைந்த கோடுகள் அனைத்தும் அப்படியே நேர்க்கோடாக மாறின!

அந்தச் சத்தத்தில் திரையைப் பார்த்த ஏற்றமாதிபனுக்கு, உள்ளே சென்ற சுவாசம் வெளியே வர மறுத்தது. அவளுடைய இதயம் நின்ற அந்த நொடி, ஏற்றமாதிபனின் இதயமும் மொத்தமாய் உறைந்து போனது! இதுவரை வாழ்க்கையில் உணராத ஒரு வலி, அவனது அடிவயிற்றிலிருந்து கடிய உருண்டையாய்த் திரண்டு நெஞ்சை அடைப்பது போல உருண்டு வந்து நிற்க… அவனது உலகமே அந்த ஒரு நொடியில் இருண்டுபோனது போலத் தோன்றியது.

“இல்லை! இல்லை… அவளுக்கு ஒன்றுமில்லை.. ஒன்றுமேயில்லை..” என்று அவனது ஆன்மா கதறினாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மந்த நிலையில், தன்செயலிழந்து விறைத்துப் போய் நின்றிருந்தான் அவன்.

அவளுக்குச் செயற்கை முறையில் இதயத்தைத் துடிக்க வைக்கவும் (சிறிஸி) முடியாது. மார்பில் கத்துக்குத்து விழுந்திருப்பதால், நெஞ்சை அழுத்தி இதயத்தைத் துடிக்க வைப்பது மிகப் பெரும் ஆபத்தில் முடியும். அப்படி அழுத்தும்போது, உட்புற இரத்தப்போக்கை அதிகமாக்குவதோடு, இதயம் அல்லது நுரையீரலை இன்னும் மோசமாகத் தாக்கக்கூடும்; அதுவே அவளைக் கொன்றுவிடும்! இதை விடுத்து வேறு வழியில்தான் அவளுடைய இதயத்தைத் துடிக்க வைக்க வேண்டும். ஆனால், அது எந்தளவு பயனளிக்கும் என்று தெரியாது.

ஏற்றமாதிபனுக்குக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போலானது!

அவளைத் தொலைத்து விடுவோமோ என்று அஞ்சியவனாக உதவி மருத்துவரைப் பார்க்க, அவரோ விதரணைக்கு அட்ரினலின் (Adrenaline) ஏற்றிக்கொண்டிருந்தார். அது அவளது இரத்த ஓட்டத்தைத் தூண்டி, இதயத்தை மீட்டெடுக்க முயலும்.

அதன் பின், விதரணையின் தலைப்பகுதியில் அமர்ந்துகொண்டவர், சிறிய கருவியால் (Laryngoscope ) அவளது தாடையை உயர்த்தி வாயைத் திறக்கச் செய்து மூச்சுக்குழாயின் நுழைவாயிலைக் கண்டறிந்து, மின்னல் வேகத்தில் மெல்லிய ஆக்சிஜன் குழாய் ஒன்றை உள்ளே செலுத்தி விட்டு, அதன் மறுமுனையை அங்கே தொங்கிக் கொண்டிருந்த சுவாசப் பையோடு இணைத்தார். அவர் அந்தப் பையை வேகமாக அழுத்தத் தொடங்கியபோது, விதரணையின் மார்புக்கூடு செயற்கையாக மேலெழும்பித் தாழத் தொடங்கியது.

எல்லாம் சில நொடிகளில் நடந்தேறின. ஏற்றமாதிபன் இதற்கான பயிற்சிகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவன் என்பதால், கண்முன்னால் விரிந்த உயிரைக் கொல்லும் அந்தக் காட்சி தற்போதைய நிலைமையை அப்பட்டமாக எடுத்துக் காட்ட… அவனால் சரியாகச் சுவாசிக்கக் கூட முடியவில்லை. தொப்பென்று இருக்கையில் அமர்ந்தவன், தன் ஆவியே பிரிந்த உணர்வோடு, செயற்கையாகச் சுவாசித்துக் கொண்டிருந்தவளைக் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான். இதற்கு மேல் அவனால் என்னதான் செய்ய முடியும்…? அவன் என்ன கடவுளா, அருள் கொடுத்து அவளை மீட்கச் செய்ய…?

அடுத்து என்ன என்பது போல அந்த உதவி மருத்துவரைப் பார்க்க, அவரோ முகத்தில் பெரும் இறுக்கத்தோடு விதரணையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மௌனம் ஏற்றமாதிபனுக்குப் பல அச்சமூட்டும் உண்மைகளைச் சொல்லாமல் சொல்ல… குனிந்து விதரணையைப் பார்த்தான்.

இல்லை… அவனால் முடியாது… சத்தியமாக அவளை இழக்கும் சக்தி அவனுக்கு இல்லை! அவள் வேண்டும்… அவளுக்கு ஏதும் நடந்தால் இத்தனை வருடங்களாக எதற்காகப் பயந்து ஒதுங்கியிருந்தானோ, அதற்கு அர்த்தமேயில்லாமல் போய்விடும்.

“விதரணை… ஐ பெக் யூ…. டோன்ட் கிவ் அப்… பிளீஸ்… டோன்ட் கிவ் அப்… வேக்கப்… இதோ பார்… உன்னிடம் ஒரு இரகசியம் சொல்லவா… நான் சொல்வதைக் கேட்கிறாயா…” என்றவனுக்குத் தொண்டை அடைத்தது. குரல் வெளி வர மறுத்தது. நெஞ்சம் விண்டுவிடும் பொல வலித்தது. இருந்தும், தன்னைத் திடப்படுத்த முயன்று தோற்றவனாக,

பேபி… ஐ.. ஐ லவ் யூ… ரியலி ரியலி லவ் யூ…” என்றான் கதறலுடன்.

காதல்… அதைச் சொல்லும் இடமும், நேரமும் இதுவல்லதான். ஆனால் ஒருவேளை இது அவளுடைய கடைசி நேரமாக இருந்தால்? ஒருவேளை இதுதான் அவளிடம் அவன் பேசும் இறதி நேரமாக இருந்தால்… இதயம் பிளந்த வலியோடு தன் காதலைச் சொன்னவனுக்கு சரியாக மூச்சுக்கூட எடுக்க முடியவில்லை. அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு நிலை வரும் என்று கனவிலும் நினைத்தது இல்லையே. பேச முடியாமல் திணறியவன், உமிழ் நீரைக் கூட்டி விழுங்கிவிட்டு,

“உனக்கு… உனக்கு ஒன்று தெரியுமா பேபி.. இது இன்று நேற்று பிறந்த காதலில்லை… இது… எப்போதோ… எப்போதோ பிறந்த காதல்… என்று என்னிடம் விழிகளை விரித்து என் முன்னே வந்து குறுகுறு என்று பார்த்தாய், நினைவிருக்கிறதா…? அந்த நொடி என் இதயத்தில் விழுந்தாய் விதரணை… அந்த நொடியிலிருந்து என் மனது உன்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டது… யெஸ்… ஐ லவ் யூ… இதோ.. இப்போது… இந்த விநாடி வரை… நான் உன்னைக் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இறக்கும் தருவாயிலும் நான் உன்னைக் காதலிப்பேன்…” என்றவன் அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தான்.

விழிகள் மூடியிருந்தன. பிளந்த வாயில் செருகப்பட்ட குழாயுடன், இரத்தத்தில் தோய்ந்து கிடந்தவளைக் காணக் காண அவனால் தாளவே முடியவில்லை.

“விதரணை… என் கண்ணம்மா… இந்தத் திருமணத்திற்கு ஏன் வந்தேன் தெரியுமா…? அது… உன்னைப் பார்க்கத்தான். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு உன் உருவத்தை இதயம் முழுக்க நிரப்பிக் கொண்டு சென்றுவிடத்தான் நினைத்தேன்… ஆனால்… இப்படி ஒரு காட்சியைக் காண்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை… கடைசிவரை உன்னுடைய இழப்பைச் சுமந்துகொண்டு வாழும் வாழ்க்கையை மட்டும் எனக்குக் கொடுத்துவிடாதே… எழுந்து வந்துவிடு பம்கின்… என்னிடம் வா…” என்று கண்ணீர் குரலில் சொன்னவன், தன் கரத்திலிருந்த அவளுடைய கரத்தைத் தூக்கித் தன் இடது மார்பில் வைத்து, அவள் காதுகளுக்குள் குனிந்து,

“யாருக்கு நீ தேவையில்லை என்றாலும் எனக்கு நீ வேண்டும்… உன்னை அணைக்க, முத்தமிட, என் ஆண்மையை நானே கண்டறிய, உனக்குள் இரண்டறக் கலக்க… நீ வேண்டும் விதரணை… நீ மட்டும்தான் வேண்டும்…” என்றபோதே அவனுக்கப் பேச்சத் தடைப்பட்டது. அவனால் பேச முடியவுமில்லை. அந்தளவுக்கு அவன் நெஞ்சம் வலியில் கதறியது. மூக்கிலும் கண்ணிலும் ஒன்றாகத் தண்ணீர் வடிய.

“இந்த இதயம் துடிப்பது உனக்குப் புரிகிறதா…? அதன் வேகம் உனக்குத் தெரிகிறதா…? அதன் தவிப்பையும் கலக்கத்தையும் உன்னால் உணர முடிகிறதா…? இது ஏன் இப்படித் துடிக்கிறது என்று தெரிகிறதா… எல்லாம் உனக்காக! உன்னை இப்படி இந்த நிலையில் பார்க்க முடியாமல் நொறுங்கிப் போகிறேன் விதரணை… எழுந்து என்னிடம் வந்துவிடு விதரணை. உனக்குக் கொடுக்க மறுத்த காதலைத் திகட்டத் திகட்டக் கொடுக்கிறேன்… நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறேன்… எழுந்து வா… நாம் மகிழ்ச்சியாக… நிறைவாக… ஒன்றாக.. வாழலாம்..” என்றவனுக்கு, அதற்கு மேல் பேச முடியவில்லை.

வாழ்வில் முதன்முறையாக, அவன் வாய்விட்டழ, அந்தக் காட்சியைக் கண்ட உதவி மருத்துவரின் விழிகளும் கலங்கித்தான் போனது.

What’s your Reaction?
+1
10
+1
0
+1
5
+1
0
+1
18
+1
2
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-3/4

(3) “வாட்?” என்று கிட்டத்தட்ட சத்தமாகக் கத்திவிட்டான் வருண். “ஆனால் எப்படி...? நான்தான் விசாரித்தேனே... நான் விசாரித்த வரைக்கும் அந்த…

5 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-1

(1) துப்பாக்கி வெடித்த சத்தம் குடோனின் கூரையை அதிரவைக்க, சென்-வாங்கின் உயிர் பிரிந்த அதே விநாடியில் ஏற்றமாதிபனின் உடல் எதிர்வினையாற்றியது.…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 28

(28) மேலும் இரு நாட்கள் கழிய திரும்ப விதுரனைப் பார்க்கவேண்டும் என்று தொடங்கி விட்டாள் விதரணை. அதைக் கேட்டவனின் முகம்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 27

(27)   இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன. காயங்கள் ஆறியிருக்க, கட்டுகள் அவிழ்க்கப் பட்டிருந்தன. சத்திரசிகிச்சையால் வெளியேறும் இரத்தம் வடிந்து…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 26

(26)   “ஹே... எழுந்துவிட்டாயா?” என்று ஆங்கிலத்தில் குதூகலமாகக் கேட்டவாறு அவளை நோக்கி விரைந்து வந்த விக்டோரியா, அவசரமாக அவளுடைய…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 25

(25)   மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும்…

2 weeks ago