Categories: Ongoing Novel

தாமரையின் ” சேதி என்ன வனக்கிளியே!!” அத்தியாயம் 1

அன்பான வாசகத் தோழமைகளுக்கு வணக்கம், இது எனது முதல் புதினம். தினமும் பதிவேற்றப்டும்.

 

 

சேதி 1

 

கிராமமும் அல்லாத நகரமும் இல்லாத வேம்பக்கோட்டை சிற்றூர். விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பிடத்தகுந்த ஊர். வேம்பக்கோட்டையின் அணைக்கட்டு, சுற்றுவட்டார மக்களின் நீராதாரம். பட்டாசுத் தொழிலும்,விவசாயமும் ஒன்றாய் நடக்கும் அதிசய பூமி. கரிசல் மண்ணும், காயும் வெயிலும் அதற்கு உதவி புரிகின்றன. செல்போனும்,இன்டர்நெட்டும் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் மக்கள். ஆடம்பரம், அலட்டல் இல்லாத மக்கள்.

 

மாசி மாதம்,பின்பனிக்காலம் முடிந்து,கோடையை துவக்கப்போகும் பங்குனி பிறக்கும் நேரம். கடிகார முட்கள் 8 மணியை நெருங்கிக் கொண்டு இருந்தன.காலை வெயிலும்,கண்ணில் புலப்படாமல் காற்றில் கரைந்து இருந்த பனியும் ஒரே நேரத்தில் அவ்வூரை வருடித் தொட்டு இதமளித்துக் கொண்டிருந்தது.

 

வேம்பக்கோட்டையின் தொழிலதிபர்களில் ஒருவரான வேல்ராஜன்,தனது அரிசி ஆலைக்குச் செல்ல ஆயத்தமாகி வெளியே வந்தார். நாற்பதுகளில் இருந்தாலும், அவரின் கட்டுக்கோப்பானஉடல், நெறிப்படுத்தப்பட்ட வாழ்வின் காரணமாக முன் முப்பதுகளில் இருப்பதாக அவரைக் காட்டியது.

 

வெள்ளை வேட்டி, இளநீல வண்ணச்சட்டை, அவரின் மனதையும், குணத்தையும் பிரதிபலித்தது. இடது கையில் கடிகாரமும், வலது கையில் செந்தூர் முருகனின் உருவம் பதிக்கப்பட்ட செம்புக்காப்பும், குலதெய்வத்தின் சிவப்பு கயிறும் தவிர ஏதும் அணியாத, அந்த எளிமையான தோற்றமே, அவரின் கம்பீரத்தைக் கூட்டுவதாக இருந்தது.

 

அவரைத் தொடர்ந்து வந்தார் அவரது மனைவி கற்பகவள்ளி. கணவரால் வள்ளி என அழைக்கப்படும் அவருக்கு, மதுரை மீனாக்ஷி அம்மனை போன்று கருணையும் அமைதியும் நிரம்பிய முகம். குணமும் கூட.

 

சரிகைக் கரையிடப்பட்ட மதுரைச் சுங்கிடிச் சேலை, காலைநேர வேலைகளின் காரணத்தால் சற்றே நலுங்கி இருந்தாலும், முகப்பொலிவு அதை ஈடுகட்டி அழகாய் தோற்றமளிக்கச் செய்தது. கனத்த தாலி சங்கிலியும், உடன் கிடந்த V.K கல்முகப்பு வைக்கப்பட்ட தடித்த சங்கிலியும், கை நிறைத்த வளையல்களும், அவரின் கணவரின் செல்வநிலையைப் பறை சாற்றுவதாய் இருந்தது.

 

வெளியே செல்லும் போது அழைத்து ,நிறுத்தக் கூடாது என்பதால்,

 

“ மதியம் சாப்பாடு மில்லுக்கு கொடுத்தனுப்பவா ?”, என்று மெதுவாகக் கேட்டார்.

 

வேல்ராஜன், அவரின் முயற்சியை இனங்கண்டுகொண்டவராக சிரித்தபடி திரும்பியவர்,

 

” ஏன்?வீட்டில வந்து சாப்பிட்டா ஆகாதோ?” என்றார்.

 

அவரின் சிரிப்பு கண்ட வள்ளி சற்றே முகம் சிவக்க,புன்முறுவல் உதட்டில் தவழ, தலையை நொடித்தபடி கிண்டலாக ,”க்கும்..வந்துட்டாலும்…? இப்படி தான் சொல்லுவீங்க..அங்க போனா வேலைல மறந்துருவீங்க…நேரா நேரத்துக்கு சாப்பிட்டா தானே நல்லது! “ என்றவர் தொடர்ந்து,

 

“காலைல அத்த(அத்தை) பேசுனாக. இன்னைக்கு சிவராத்திரி ல , குலதெய்வ பூசைக்கு தேவையானது செய்ய எப்போ வருவீங்க னு கேட்டாக…அப்புறம்…. “ என்று இழுக்க,

 

கையைத் திருப்பி மணி பார்த்த வேல்ராஜன்,

 

” மதியம் 2 மணிக்கெல்லாம் வந்துருறேன்.அப்ப பேசிக்கலாம்.”

 

 

என்றபடி தன் இருசக்கரவாகனத்தில் ஏறி அமர்ந்தவர்.. வாசலில் மலர்ந்து சிரித்த கோலத்தில் தன் மகளின் நினைவு வந்தவராக, ”செல்லம் எங்கே?” என்று கேட்டார்.

 

“இன்னைக்கு ஏதோ பரீட்ச்சையாம் .காலைலயே கிளம்பிப் போய்ட்டா”.

 

“சின்னவன் எங்க?”

 

“அவன் இப்போ தான் குளிக்குறான்”

 

“9மணிக்கு ஸ்கூல்..இப்போ தான் குளிக்க போயிருக்கானா?” என்று உறுமியவர். தன் மனைவி ஏதோ சொல்ல வருவதை , பொருட்படுத்தி, நின்று கேட்க முடியாமல் அடுத்தடுத்த வேலைகள் மனதினுள் அணிவகுத்து ஓட, வண்டியை உறுமவிட்டு , “ அவனைச் சீக்கிரம் கிளப்பி அனுப்பு.” என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.

 

“ ஏலே.. நாம் பெத்த மவனே..காலை ல எனக்கு உங்க அய்யாட்ட வசவு வாங்கி கொடுத்துட்டியா? கிளம்பிட்டியா..? இன்னும் ஸ்கூல் உடுப்பு போடலியா ?” என்று கேட்டவாறே உள்ளே வந்தவரை குளிர்விக்கும் வண்ணமாய்

 

“மம்மி..வொய் டென்ஷன்? “ என்றவாறு ஆங்கிலக்குட்டியாக அளந்தபடி வந்தான் ஏழாம் வகுப்பு படிக்கும் சரவணன்.

 

அன்னைக்கு நிம்மதி அளிக்கும் வண்ணமாக கிளம்பி ஆயத்தமாகி வந்தவனைக் கண்டு சிறு நிம்மதிப் பெருமூச்சு வெளியிட்டவராய்,

 

“அம்மாவ மம்மி னு கூப்பிட கூடாது னு எத்தனை முறை சொல்றது. படிக்குற பாடம் அறிவு வளர்த்துக்குறதுக்கு. மத்த நேரங்கள்ல நம்ம மொழில பேசுறது தான் அழகு “ என்றவரை நோக்கி,

 

“ எம்மா ..இங்க பேசி பழகினா தான் எனக்கு இங்லீஷும் பேச வரும். எங்க மிஸ்ஸும் அப்படி தான் சொல்ராங்க. வீட்டிலையும் பேசுனாத் தான் வெளிய , ஸ்கூல்ல சரளமா பேச முடியுமாம்”.

 

“ சரி சரி…படிக்கிற பொழுதுல, அக்காட்ட இங்லீஷ் ல பேசு. என்கிட்ட, அய்யாட்ட தமிழ் தான் பேசணும், பொறவு தமிழே பேச மறந்துரும் உனக்கு,செரியா? நேரமாச்சு , சாப்பிட்டியா? “.

 

“இட்லி ஏமா வச்சீங்க? எனக்கு வேணாம்”

 

“ தோசை வேணும்னா நீ வெரசா க் கிளம்பிருக்கணும். காலைல ..ஓட்டப் பயிற்சிக்குப் போய்ட்டு வந்தா நேரத்தொட வரணும், இன்னிக்கு ரொம்ப நேரஞ்சென்னு வந்த.“ என்று செல்லமாய் முறைத்தவரை சரிகட்டும் விதமாய்,

 

“ ரெண்டு மட்டும் சாப்பிடுறேன்மா” என்று தட்டை எடுத்தவன் சுற்றுமுற்றும் பார்த்தவாறே, “அத்தான் வந்துருக்காங்கமா, வழில பார்த்தேன். என்னைப்பார்த்ததும் ஆட்டோவ நிறுத்திப்புட்டு இறங்கி வந்து பேசுனாக. அதான், நின்னு நாலு வார்த்தை பேசிட்டு வருங்குள்ள நேரமாகிடுச்சு.“ என்றவனை ஆழ்ந்து பார்த்தவர்,

 

“ சரி சரி.. சீக்கிரம் சாப்பிட்டுட்டு கிளம்பு” என்றார்.

 

*******

வேம்பகோட்டை மக்களின் இஷ்ட தெய்வமான வனராஜனின் சந்நிதியில் பக்திப்பழமாய் நின்று கொண்டிருந்தாள், வேல்ராஜன், கற்பகத்தின் தலைமகளும் செல்ல மகளுமான செல்லக்கிளி.

 

அந்த வட்டார மக்களின் காவல் தெய்வம் வனராஜன். சந்நிதி என்றால் கோவில், கோபுரம், சுற்றுப்ரகாரம் என்பதெல்லாம் கிடையாது. வன்னிமரமும், அரசமரமும் இணைந்து குடை பிடிக்க ஒரு கையில் வாளுடனும் மறுகையில் கேடயமுமாய் போர் புரியும் கோலத்தில் நின்றார். ‘மழையும், வெயிலும் என்னை என்ன செய்யும்?’, என்று சிரித்தபடி, வீரம் ததும்பும் முகத்தில் புன்னகைக்கும் இதழ்களுடன் நின்றார் வனராஜன்.

 

இடையை தார்ப்பாய்ச்சியாக கட்டப்பட்ட சிவப்பு வண்ண பட்டுத்துணி அலங்கரிக்க, கழுத்தில் சம்பங்கி, மருவு, ரோஜாக்கள் சேர்த்துகட்டிய மாலை சற்றே வாடலாய் தொங்கிக் கொண்டு இருந்தது. அதிகாலையில் மேடை கழுவப்பட்டு இருந்ததால் ஈரமண்ணில் இருந்து கிளம்பிய மண்வாசனையும், பூவாசனையும் சேர்ந்து ஒரு தெய்வீக உணர்வை அவ்விடத்தில் பரவச் செய்துகொண்டிருந்தது. சுற்றிலும் நந்தவனம். பூச்செடிகளும், சிறு புதர்ச்செடிகளும் அடர்ந்து நின்று அந்த இடத்தை ஒரு ஏகந்தமான சூழலுக்கு உட்படுத்தி இருந்தன.

 

செல்லக்கிளி, சாமி மேடை மீது இருந்த மாடத்து விளக்கை ஏற்றினாள். கையோடு பறித்து எடுத்து வந்திருந்த செம்பருத்திப் பூக்களைச் சாற்றிவிட்டு, பேப்பரில் மடித்து கொண்டுவந்திருந்த கல்கண்டை கடவுள் முன் வைத்தவள் கை கூப்பி, கண்மூடி நின்றாள்.

 

மெல்லிய மேனியில் இளம்பச்சை வண்ண மேலாடை, ஆழ்ந்த பச்சை வண்ணக் கீழாடை அணிந்து அதே வண்ண மேல்துணியை மடித்து V வடிவில் உடுத்தி, பின் குத்தி இருந்தாள்.

 

கழுத்தில் இருக்கிறதா, இல்லையா? என ஐயம் கொள்ளும் வண்ணம் மெல்லிய தங்கச் சங்கிலி.

 

செவிகளில் சிறு தங்கக்கம்மலில் சிறிய தங்கக்குண்டு ஊஞ்சலாடி, தங்க நிறத்தை செழுமையான கன்னத்தில் தெறிக்க வைத்து அழகூட்டியது.

 

மூங்கில் போல் நீண்டு மெலிந்த கைகளில், இடது கையில் டைட்டன் கடிகாரமும் வலது கையில் மெல்லிய கைச் சங்கிலியும் அலங்கரித்து நின்றன.

 

மடித்து கட்டிய இரட்டை ஜடைகள் ,கருப்பு ரிப்பனில் கருப்பு ரோஜாக்களாய் முடிச்சிடப்பட்டு, கொடிபோல் வளைந்து தோளில் இறங்கி மார்பைத் தொட்டு நின்றன. மாநிறத்திற்கும் சற்று கூடிய நிறம். கருவண்டாய் படபடக்கும் விழிகள், அடர்ந்த முடிகளால் கரைகட்டப்பட்ட இமைகளுக்குள் மெலிதாய் உருண்டன. அழகிய கூர்மையான நாசி. இளம்சிவப்பில் ஈரமான இதழ்கள். காலைக்குளிரில் செம்மையான சின்னங்கள். அனைத்தும், ‘இவள் அழகி’, என பறைசாற்றி நின்றன.

 

வில்லென வளைந்த புருவங்களுக்கு நடுவே கரும்சிவப்புநிற சிறு பொட்டு முகத்திற்கு தனிப்பொலிவு கூட்டியது. .வனராஜனின் விபூதியும் குங்குமமும் அப்பொட்டிற்குக் காவல் நின்றன.

 

யாரோ வரும் அரவம் கேட்டதும் மென்னகையில் சற்றே இதழ்கள் விரியக் கண்களைத் திறந்தாள்.

 

மூசு மூசென்று மூச்சு விட்ட படி வேகமாக வந்தாள், செல்லக்கிளியின் தோழி ஈஸ்வரி. புருவங்களை சுழித்து முறைத்தவள், பக்கத்தில் வந்து நின்று தானும் வனராஜனுக்கு வணக்கம் வைத்து கன்னத்தில் நான்கு விரல்களால் தப்பியபடி ,”ஏ பிள்ள! நாந்தான் உன்கூட வரேன் னு சொன்னேன் ல! ஏன் சத்தம் கூட கொடுக்காம முந்தி வந்துட்ட?” என கோபம் முகம் காட தன் புன்சிரிப்பால் அவளை குளிர்விக்க முயன்றவளாய், மெதுவாக சிரித்தபடி,

 

“இல்ல பிள்ள.. நான் வந்த போது உங்க அண்ணே வாசல்ல இருந்தாக. அதான் நிக்காம வந்துட்டேன்” என்றாள்.

 

“அவனுக்கு வேற வேலை என்ன? ஸ்கூல் ஆரம்பிக்கிற நேரமாச்சுன்னா முன் ரூம்புல ,வாசல்ல நிக்கிற வேலை தான். அதுக்கு…என்ன விட்டுட்டு வந்துருவியா.?” என்று வெடு வெடுத்தாள்.

 

“ சரி விடு. நீ வந்துருவன்னு தான் காத்துகிட்டு இங்கயே நிக்குறேன்.” என்றவள் அவளின் கோபத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியாக, “அந்த 5 மார்க்கு பெரிய கேள்வி கண்டிப்பா வரும்னு மிஸ் சொன்னாங்களே, அதை நல்லா படிச்சுட்டியா?” என்று கேட்டாள்.

 

“ம்ம்ம்ம்ம. நேத்துல இருந்து அதா படிக்கேன். ஆனா.. அது எவ்ளோ படிச்சாலும் மண்டேலயே நிக்கமாட்டிக்குது” என்று சலித்தவாறே தனது புத்தகப்பையை சற்று மேலே தோளில் ஏற்றினாள்.

 

“வா வா போலாம். கிளாஸ் போனதும் நான் ஒரு தடவ சொல்லி தரேன்” என்ற செல்லக்கிளி ஓரமாக வைத்திருந்த தன் புத்தகப்பையை எடுத்து தோள்களில் மாட்டிக் கொண்டாள். வாசலை கடக்கையில் அங்கு தொங்கிக்கொண்டிருந்த வெண்கல மணிகளை அசைத்து ஒலிக்கச்செய்துட்டு வெளியே வந்தவர்கள், சற்று தள்ளி கழற்றிவிடப்பட்டு இருந்த தமது காலணிகளை அணிந்து கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

 

செல்லக்கிளி, ஈஸ்வரி இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள். இருவருக்கும் வீடு அருகருகே இருந்ததால் சிறுவயது முதலே நல்ல தோழிகள்.

 

ஈஸ்வரியின் அன்னை செவிலியாக அரசு மருத்துவமனையில் வேலை செய்பவர். தந்தை அரசு வங்கியில் தலைமை கணக்கர். மூன்று பிள்ளைகள். ஈஸ்வரிக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. அண்ணன் பூங்காவனம் வேம்பகோட்டை யில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கிறார். தம்பி மணிமாறன் சரவணனை விட ஒரு ஆண்டு இளையவன். சரவணனின் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அடிக்கடி இடமாறுதலுக்கு உள்ளாகும் வேலைகள். ஆதலால், பிள்ளைகள் அம்மாவழித் தாத்தா பாட்டியுடன் இருந்தனர். அன்னையும், தந்தையும் அவர்களின் வேலை இடங்கள் வேம்பகோட்டைக்கு அருகில் என்றால், பிள்ளைகள் கூடவே இருப்பதும், தூரமான இடங்கள் என்றால் அங்கே வீடு எடுத்து தங்கி கொண்டு, வார இறுதிகளில் இங்கே வருவதும் ஆக இருப்பார்கள். மாமா, அத்தை சித்தி, சித்தப்பா என கூட்டுக் குடும்பமாக அருகருகே வீடுகளில் இருப்பதால் பிள்ளைகள் பெரிதாக ஏக்கம் ஏதுமின்றி அனைவரின் கவனிப்பில் நன்றாகவே வளர்ந்தார்கள்.

 

ஐந்து வயதில் சிற்றில் கட்டி, கல், மண்ணை சோறு என்று சொல்லி சமைத்து விளையாண்ட காலம் தொட்டுத் தொடங்கிய செல்லக்கிளி, ஈஸ்வரியின் நட்பானது, ஒரே பள்ளியில் பயில ஆரம்பித்த பிறகு, இணைந்து பள்ளிக்கு சென்று வருவது, படிப்பது என இறுகி, புரிதலுடன் கூடிய தோழமையினால் அனைவரும் வியக்கும் வண்ணம் பல வருடங்கள் தாண்டித் தொடர்கிறது.

 

நேரமாவதை உணர்ந்து இருவரும் பள்ளி செல்லும் வழியில் வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

 

தெருவைக் கடந்து பெரிய வீதியான, கடைவீதி வந்த போது அங்கே சற்றே ஒதுங்கி தனித்து நின்ற ஒரு கடையை பார்த்த ஈஸ்வரி,

 

“ஆமா, என்ன காலைலயே உங்க அத்த வீட்டுக்காரர், கோழிக்கடை வாசல்ல நிக்காரு”.

 

என்றதும், இன்னும் தலையைக் குனிந்து கொண்டவளாய் செல்லக்கிளி, அடிக்குரலில் பற்களை கடித்து கொண்டு உதடுகள் அசையாமல் குரல் கொடுத்தாள்,

 

“அங்க ஏன் பார்க்குற? அவர் எதுக்கு நின்னா உனக்கென்ன? பேசாம தலையக் கவுந்துட்டு வா“ என்று சொன்னவள், கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்காமல் விடுவிடு வென வேகமாக நடந்தாள். அவளின் நடைக்கேற்ப கூடவே ஓடி வந்தவளாய் ஈஸ்வரி,

 

“அதுக்கில்ல பிள்ள, விடியகார்த்தால உங்க அத்த மகன், ட்ரெயின் ல ஊர்ல இருந்து வந்தாக போல. பெரிய பையோட ஆட்டோல நம்ம தெரு தாண்டிதா போனாக. நான் வாசத்தொளிக்கேல பார்த்தேன் “என,

 

“ ………. ,” செல்லக்கிளி முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

 

ஈஸ்வரி ,“மெட்ராஸ் ல படிக்குறவுக இப்போ ஏன் வராக. இப்போ பரீட்சை நேரமாச்சே” என்று அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டவளைப் பார்க்காமலே, தன் வேக நடையைத் தொடர்ந்தவள், சற்றே தயங்கி விட்டு,

 

“லூசு..காலேஜ் ல படிக்குறவுகளுக்கு இப்போ படிக்குறதுக்கு லீவு விடுவாக. ஸ்டடி ஹாலிடேஸ் அது பேரு. பொதுவாக, பரீட்சை மே மாசந்தான் இருக்குமாம்.”

 

“அடி கள்ளி..இவ்ளோ விவரம் தெரிஞ்சு வச்சுருக்க.காலேசு பத்தி..படிப்பு பத்தி…உன் அத்தை மகனை பத்தி” என கண்ணில் குறும்பும் உதட்டில் கோணலுமாய், வலது கண்ணை மட்டும் சுருக்கியவாறு வம்புக்கு இழுத்தாள் ஈஸ்வரி.

 

மின்னல்வெட்டுப் போல் ஒரு முறைப்புப் பார்வையைத் தன் தோழி மீது வீசியவள், “ பரீட்சைக்கு போகும் போது கண்டதை பேசினா, படிச்சதெல்லா மறந்து போகும். பேசாம வரியா.”என்றபடி நடையில் வேகத்தைக் கூட்டினாள் செல்லக்கிளி.

 

கூட்டில் வளர்ந்த கிளி…

 

குறும்பு செய்யும் கிளி…

 

கொஞ்சி பேசும் கிளி…

 

கொத்தவும் தெரிந்த கிளி…

 

 

 

கிளி பேசும்…..

உங்களது கருத்துகளை தெரிவிக்குமறு கேட்டுக் கொள்கிறேன்.

What’s your Reaction?
+1
3
+1
4
+1
2
+1
2
+1
0
+1
0
தாமரை

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

30 minutes ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

3 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

3 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago