Categories: Ongoing Novel

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே.. அத்தியாயம் 5

சேதி 5**

 

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. நாட்கள் தம்போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன. செல்லக்கிளியின் மனதில் உதித்த வெளியூர் சென்று மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வு (NEET) எழுத பயிற்றுவிக்கும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசை நெஞ்சின் ஓர் ஓரத்தில் வளர்ந்து கொண்டே இருந்தது. தன் அய்யாவிடம் சொல்ல தக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். 96% மதிப்பெண்களுடன் அவள் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி அடைந்ததும் குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தது.

 

தன் ஆசையை சொன்ன செல்லக்கிளிக்கு ‘வெளியூரில் தங்கி படிக்க வேண்டாம்’ என்று ஐயம்மாவிலிருந்து அரைக்கீரை விற்கும் பாட்டி வரை எல்லோரும் அறிவுரை சொல்ல, கடுப்புடனும், அரை மனதாகவும் அருகில் இருந்த பள்ளியிலேயே ஆங்கில வழி, அறிவியல் பாடதிட்டத்தில் சேர்ந்தாள்.

 

ஜூன் மாதம். கேரளாவில் தென்மேற்கு பருவ மழைப் பொழிவு தொடங்கும் நேரம். விருதுநகர் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குற்றால சீசன் ஆரம்பமாகிவிடும். சாரல் மழையில் நனைந்த படி அருவி அருவியாக தேடி போய் குளிக்கும் சுகமே அலாதி. சீசன் இல்லாத நாட்களில் காய்ந்து போய் வெறும் பாறைகளாகவும் குத்து செடிகள் நிறைந்த மலைகளாகவும் தோற்றமளிக்கும் இடம். பருவ மழை ஆரம்பித்ததும் ஆர்ப்பரிக்கும் அருவிகள் தழுவி நிற்க.. காற்றில் குளுமையும், மூலிகை மணமும் கலந்து, கை தட்டி அழைக்க ஆரம்பித்து விடும்.

 

எவ்வளவு நேரம் குளிர் நீரில் குளித்தாலும் சளி அண்டாது என்பது அந்த அருவி நீரின் அதிசயம். மலையை கடந்து வரும் போது மூலிகைகள் பல கலந்து வருவதால் என்றும், அங்கிருக்கும் குற்றால நாதர் எல்லோரின் ஜலதோஷம் வாங்கி கொள்ளுவதால் என்றும் பல ஐதீகங்கள்.

 

ஒவ்வொரு வருடமும் குற்றாலச் சாரல் விழா ஆரம்பித்துவிட்டால் வேல்ராஜன் குடும்பத்துடன் கிளம்பி வார இறுதி மூன்று நாட்கள் அங்கு தங்கி இருந்து மகிழ்வது வழக்கம். குடும்ப ஒருங்கிணைவு (Family Get-together) போன்று கற்பக வள்ளியின் தாய் வீட்டினர்க்கும் அவர் அழைப்பு அனுப்புவது வழக்கம். கற்பக வள்ளியின் உடன்பிறந்தோர் இருவர். தமையன் மற்றும் தம்பி. இருவரும் இணைந்து மதுரையில் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களின் குடும்பத்தோடு வந்து இணைந்து கொள்வார்கள். பள்ளி செல்லும் வயதில் இருக்கும் ஒத்த வயது பிள்ளைகள் இணைந்து விளையாடி மகிழ்வதற்கு தோதான தங்கும் இடமாக வேல் ராஜன் தேர்ந்தெடுப்பார். சமையலுக்கு, உதவிக்கு என தனியாக ஆட்கள் ஏற்பாடு செய்து விடுவார்.

 

வாடகைக்குக் குடில்கள் (Cottages) குற்றாலத்தில் நிறைய கிடைக்கும். வேல்ராஜன் எப்பொழுதும் தேர்ந்தெடுப்பது குட்டி பங்களா போன்ற தங்குமிடம். அங்கு சமைத்து சாப்பிடவும் வசதி உண்டு. சிறிய அரண்மனை போன்ற தோற்றத்தில் இருந்த அந்த விருந்தினர் இல்லம், நடுவில் காலி இடமும் சுற்றி ‘U’ வடிவில் இரு தளங்களில் 6 தங்கும் அறைகள், குளியலறை வசதிகளுடன் இருந்தது. குடும்பம் குடும்பமாக தங்கி கொள்ள வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து இருந்தார் வேல்ராஜன்.

 

சொர்ணக்கிளி குடும்பத்தினரை அழைத்தற்கு, வழக்கம் போல் சாக்கு போக்குகள் சொல்லி தட்டி கழித்துவிட்டனர். வயலில் அடுத்த நடவு வேலைகள் இருந்ததால் வர மறுத்த முத்துநாச்சியாரையும் மயில்வாகனத்தையும் கூட குண்டுகட்டாக தூக்காத குறையாக அழைத்து கொண்டு வியாழன் இரவே குற்றாலம் வந்து விட்டார் வேல்ராஜன்.

 

குற்றால சீசனை ஒட்டி விருதுநகர், மதுரை மாவட்டப் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து இருந்ததால் கற்பக வள்ளியின் அம்மா வீட்டு மக்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

 

அருவிகளில் குளியல்… அருமையான சாப்பாடு.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டியது அந்த விருந்தினர் இல்லம்.

 

செல்லக்கிளியின் மாமாக்களின் பிள்ளைகள் ஐவர். பதின்வயதில் உள்ள பெண்கள் ஆரம்பித்து.. நடைபயிலும் சிறு குழந்தை வரை. மாமாக்கள் மிகுந்த பாசம் உள்ளவர்கள். குழந்தைகளுக்கு ஈடு கொடுத்து விளையாடுபவர்களும் கூட. எனவே உற்சாகமாக பல உள் விளையாட்டுக்கள், வெளிவிளையாட்டுகள் என அங்கே விடுமுறை உல்லாசம் களை கட்டியது.

 

தன் வயதை ஒத்த மாமா பெண்ணுடன் இறகுப் பந்து ஆடிக்கொண்டிருந்த செல்லக்கிளியின் கவனம்.. பழகிய குரல் கேட்டு திரும்பியது. அங்கு சரவணனின் தோளை அணைத்து சிரித்துப் பேசியவாறு வந்து கொண்டிருந்தான், வனராஜன். ‘இவுக எங்க இங்க?!?’ என செல்லக்கிளியின் விழிகள் விரிந்தன ஆச்சர்யத்தில்.

 

அங்கு அமர்ந்திருந்து பிள்ளைகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாமாக்கள் அத்தைகள் அனைவரும் வரவேற்பாக எழுந்தனர். அவர்களுக்கு வனராஜனை அடையாளம் தெரியவில்லை. பல வருடங்களுக்கு பிறகு பார்ப்பது மட்டுமல்லாமல் எந்த விழாக்களிலும் சந்திக்காத காரணத்தால்.

 

“வாப்பா ராசா ..” என்று வந்த தாத்தா மயில் வாகனத்தின் கைகளைப் பற்றியவன், “அட! தாத்தா, உங்க காடு, கரை.. மாடு, கன்னு.. எல்லாம் உங்களை கரிசகுளத்தவிட்டு போக விட்ருச்சா!?!” என்று கேட்டு சிரித்தவனிடம்,

 

சற்றே சோகமாக“ எங்க!! , திங்க கிளமை நடவு இருக்கு.. சொன்ன உன் மாமன் எங்க கேட்டான்?” என்றார்.

 

“அதானே! புலம்பலையே னு யோசிச்சேன் ரெண்டு நாள்ல எதும் ஆகிடாது.. குத்தாலத்தை என்ஜாய் பண்ணுங்க தாத்தா. ஆமா!. ஆச்சி எங்க.?”

 

“நீ வாரது தெரியாதுல. காலப்பொழுதுக்கு சமைக்க சாமானுக வாங்க, டவுனுக்குல இருக்க கடைக்கு உன் மாமன் கூட போனா…. நீ வாரது உன் அம்மை கூட சொல்லலியா. நேத்து அவளையும் மாப்பிள்ளையும் கூப்பிட்டோம் அப்போ கூட ஏதும் சொல்லலியே!!.”,

 

”நான், என் கூட காலேஜ் படிக்குற பசங்களை கூட்டிட்டு வந்தேன் தாத்தா.. சென்னைல இருந்து நேரா இங்க வந்துட்டேன். அம்மாட்ட கூட இப்போ தான் சொன்னேன்.. அப்போ தான் நீங்க எல்லாரும் இங்க இருக்குறது சொன்னாங்க.. நாங்க ஐந்தருவி பக்கத்துல ஒரு காட்டேஜ் Online ல புக் பண்ணோம்“ என்,

 

“ஏன் ராசா இங்க தங்கலாமே எங்க கூட” ,

 

“இல்லை தாத்தா என் கூட 5 பேர் இருக்கானுங்க.. நாங்க தங்குறது சாப்பிடுறது அங்கனையே பார்த்துக்குறோம். குளிக்க போகையில், வெளிய போகைல உங்க கூட சேர்ந்துக்கறோம். பசங்க மலை ஏற ஆசைப்பட்டு தேனருவி போகணும் னு கேட்டாங்க. அதான் தேனருவி, பழத்தோட்ட அருவி போகல்லா Permission வாங்கி வச்சுருக்கோம்..” என்றான் வன ராஜன்.

 

“அத்தான் சாப்பிட வாங்க” என்று கை பற்றி இழுத்த சரவணனை சிரித்தவாறே தன் பக்கமாக சுண்டி இழுத்தவன்,”இப்போ தான் சாப்பிட்டோம் டா மாப்பிள! ! நீ சாப்பிடு” என,

 

”நான் சாப்டேன்.. அப்போ வாங்க எல்லோரும் விளையாடலாம். முன்பு நாம திருவிழா சமயம் ஆடுவோமே.. அந்தாக்ஷரி, டம் ஷரட் (மௌனமொழி பேசி திரை படங்களின் பெயர் கண்டுபிடிப்பது), கார்ட்ஸ்… ஏதாவது விளையாடலாம்”, என்று இழுக்க

 

“பழைய குற்றாலம், மெயின் ஃபால்ஸ் எல்லாம் நைட் ல போலாம்னு இருக்கோம், அந்த நேரம் தான் கூட்டம் கம்மியா இருக்கும், ஆச்சி வந்ததும் பார்த்துட்டு கிளம்பனும் சரவணா” என,

 

“அதெல்லாம் தெரியாது, வந்ததற்கு கொஞ்ச நேரம் வெளாடிட்டு தான் போகணும்” என அவன் அடம்பிடிக்க

 

அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்த வேல்ராஜன், முத்துநாச்சி, கற்பக வள்ளி ஆகியோரின் உபசரனைகளில் மாட்டி கொண்டு சுகமாய் விழிபிதுங்கினான் வனராஜன்.

 

அவ்வளவு நேரம் இருந்த இலகு சூழல் மாறியதில் சற்றே எரிச்சலடைந்த செல்லக்கிளி,”இப்போ விளையாட வரீங்களா இல்ல தூங்க போலாமா” என கேட்க, சரவணன்

 

“ஒன்பது மணிக்கு உனக்கு என்ன தூக்கம் வருது! இரு, அத்தான் வரட்டும். அந்தாக்ஷரி விளாடலாம். அத்தான் சூப்பரா பாடுவங்க.. நாம, மாமாக்கள், அத்தை எல்லோரும் சேர்ந்து விளையாடுறதுன்னா அதான் சரிவரும்” என,

 

ஆண்கள் தனி பெண்கள் தனி என 2 அணிகளாக பிரிந்தனர்.

 

தன் நண்பர்களுக்கு அலைபேசி மூலம் விவரம் தெரிவித்தவன், “அந்தாக்ஷரி மாதிரியே, வேற மாரி விளையாடலாம்.. ஒரு அணி ஒரு பாட்டு பாடனும், எதிரணியில் அந்த பாடலில் இருந்து ஏதேனும் ஒரு வார்த்தை எடுத்து கொண்டு பாடலாம். ஒரு அணி பாடுன வார்த்தைய திரும்ப உடனே அடுத்த அணி எடுத்து பாட கூடாது. ஒரு முறை பாடிய பாடல் திரும்ப பாடக்கூடாது.” என

 

“அட! வித்தியாசமா இருக்கே. அப்படியே பாடுவோம்.” என் பெரிய மாமா ஆமோதிக்க,

 

‘ட’ வடிவில் நீளமாக இருந்த படிக்கட்டுகளில் இரு அணியினரும் எதிரெதிரே பார்க்கும் வண்ணம் அமர்ந்தனர். பெரியவர்களுக்கு சாப்பிடும் இடத்திலிருந்து இருக்கைகள் எடுத்துப் போடப்பட்டு வசதியாக அமர வைக்கப்பட்டனர்.

 

ஆரம்பமானது பாட்டுகச்சேரி.

 

முதலில் சற்றே தடுமாறினாலும் அடுத்து விளையாட்டின் தொனி புரிபட, அனைவரும் ஆர்வமும் உற்சாகமுமாக கலகலக்க ஆரம்பித்தனர்.

 

சிறியவர்கள் புதிய பாடல்களாக பாட, பெரியவர்கள் 70 களில் 80 களில் வந்த பாடல்களைப் பாட, அங்கு பழமையும் புதுமையும் கலந்து ஒரு குதூகல சூழல் உருவாகியது.

 

மாமா பையன் பாடிய பாடலில் இருந்து ‘ஏலா’ எனும் வார்த்தை எடுத்த செல்லக்கிளி “ஏலா ஏலா ஏலா ஏலம்மா… அண்டங்காக்கா கொண்டகாரி… அச்சு வெல்ல தொண்டைகாரி.. ஐ ஆர் 8 பல்லுக்காரி அயிரமீனு கண்ணுக்காரி” என பாட…

 

அதிலிருந்து வார்த்தை எடுக்க அனைவரும் தடுமாறிய நேரத்தில், சட்டென்று பாட ஆரம்பித்தார் தாத்தா மயில் வாகனம்,”கொண்டையில் தாழம்பூ… நெஞ்சிலே வாழைப்பூ.. கூடையில் என்ன பூ??…” எனக் கைகளை MGR ஸ்டைலில் கைகளை ஆட்டியவாறு பாட, அனைவரும் ஆச்சரியமும் சந்தோஷமுமாய் அவரைப் பார்க்க,

 

வனராஜன், “ஆகா!! தாத்தா நீங்க குஷ்பூ ரசிகரரா” என அதிரடியாய் சிரித்தபடி கேட்ட வனராஜனைப் பார்த்து வெட்கமாக அவர் சிரிக்க.. வனராஜன் சிரித்துக் கொண்டே தன் ஆச்சியை திரும்பி பார்க்க. வாயை பொத்தி கொண்டு நகைத்தவரே.. தலை அசைத்து ஆமோதித்தார் முத்து நாச்சியார்.

 

கற்பக வள்ளி உடனே,”தாழம்பூவே வாசம் வீசு” எனப் பாட… ரஜினி ரசிகராக சின்ன மாமா,” கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட “என்று பாடினார்.

 

பெரிய அத்தை, “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல… திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ” என்று பாட..

 

வனராஜன் தன் கம்பீர குரலை சற்றே குழைத்து இனிமையாக்கி, “மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே… நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே… மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே.. உந்தன் வாசனை வானவில் காட்டுதே..”

 

அவன் குரலில் மயங்கி அனைவரும் சற்று தேங்க,

 

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி” என் கற்பகம் பாட ஆரம்பிக்க,

 

“மம்ம்ம்ஆஆ… காத்தும் காத்துருக்குறதும் ஒண்ணா மா?” எனக் கேட்டு நகைத்தான் சரவணன்.

 

குழந்தைகள் அதை கேட்டு சிரித்து.. ஹே ஹே தோத்துடீங்களை என்று கேட்டவாறு ஜிங்கு ஜக்கு என்று குதிக்க, மின்சாரம் தடைபட்டு இருள் சூழ்ந்தது.

 

அனைவரும் அலைபேசி எடுத்து டார்ச் ஐ இயக்க,

 

கணீரென்று ஒலித்தது செல்லக்கிளியின் குரல். “காற்றில் வரும் கீதமே… என் கண்ணனை அறிவாயோ… அவன் வாய் குழலில் அழகாக ஆ… அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய.. நடந்தாய்… அலை போல் மிதந்து… காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ…”

 

லயித்துப் பாடியவள்…

 

8 வரிகள் பாடிய பின்பும் யாரும் பாடாததை உணர்ந்து கண்களை திறந்து பார்த்தாள் செல்லக்கிளி.

 

அனைவரும் அலைபேசி ஒளியை அவள் மேல் பாய்ச்சியபடி உறைந்து நிற்பதைக் கண்டு, கண்களை சற்று விரித்தவள், பின் வெட்கமுற்றவளாய் சிறுசிரிப்புடன் தலை குனிந்தாள்.

 

சின்ன அத்தை,”செல்லம் ரொம்ப நல்லருக்குடா. முழுசா தெரியுமா? பாடேன்!” என்,

 

“போங்க அத்தை, முழுசாவெல்லாம் தெரியாது” என

 

“அக்கா மரியாதையா பாடு, இல்ல, அதே பாட்ட நா பாடினா என்ன ஆகும்னு தெரியும்ல..”என மிரட்டினான் சரவணன்.

 

“குற்றாலத்துல கழுதை இருக்க தெரில டா. ஆனா இருக்குற கொரங்கேல்லாம் மிரண்டு ஓடிரும்” என்றான் சின்ன மாமா பெத்த செல்ல வாண்டு.

 

“அத்தாச்சி (அத்தை மகள்), பாடு.. ரொம்ப நாளாச்சுது நீ பாடி கேட்டு“ என அனைவரும் வற்புறுத்த,

 

சற்றே நாணத்தில் முகம் கனிந்தாலும், மறுக்க வழியின்றி, மேலாடையின் அடிநுனியை பற்றி முறுக்கி கைகளின் நடுக்கத்தை குறைத்தவளாய், சமன படுத்திக் கொண்டு, கண்களை மூடி பாடினாள்.

 

“காற்றில் வரும் கீதமே…!”

 

அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்த அந்த பாடலின் இசையாலோ, என்னவோ, லேசான சாரல் மழை பெய்யத்தொடங்க, மெலிதான மலையமாருதம் அனைவரின் உடல் வருட, ஏகந்தமான இரவில், இரவுக்கோழி (ஒரு வகையான பூச்சி)களின் சப்தம் தம்பூரா ஒலியாய் ஸ்ருதி சேர்க்க பாடினாள் செல்லக்கிளி.

 

> பசு அறியும் அந்த சிசு அறியும்

> பாலை மறந்து அந்த பாம்பறியும்

> வருந்தும் உயிருக்கு ஆ…

> வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

> இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்

> இசையின் பயனே இறைவன் தானே..

> காற்றில் வரும் கீதமே

> என் கண்ணனை அறிவாயோ…

 

‘எவ்ளோ படத்துல பார்த்துருப்ப. இது மாதிரி ஸீன்… மயங்கதேடா’ என்று முதலில் உரத்து ஒலித்த வனராஜனின் மனதின் குரல், நிலவொளியில் மின்னும் தேவதையாய் மிளிர்ந்த அவளின் தேவகானத்தின் முன் தோற்றுப் போய் அமைதியானது.

 

> “ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்

> அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

> ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

> உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

> திறந்த கதவு என்றும் மூடாது

> இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

> இது போல் இல்லம் ஏது சொல் தோழி

> காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

> காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

> அவன் வாய் குழலில் அழகாக ஆ…

> அமுதம் ததும்பும் இசையாக

> மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து…..”

 

அனைவரின் உள்ளமும் இசையில் மிதந்து தேங்கி நின்றன.

 

கண்களை மூடி பாடலில் லயித்து இருந்த வனராஜன், தொடர்ந்த ஸ்வரம் சங்கதிகளையும் பாடவும், விழிகளைத் திறந்தவன், மூச்சு விடவும் மறந்தவனாய் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் வனராஜன்.

 

இப்போது தான் நடை பயிலும் சின்ன மாமாவின் புத்ரி, தன் அத்தை கற்பகத்தின் மடியில், கானத்தின் இனிமையில் உறங்கியே போனது.

 

சற்றே தொண்டையை செருமி விட்டு வனராஜன் “பாட்டு கத்துகிட்டாளா அத்தை, ஸ்வரம் எல்லாம் பாடுறா!!” எனக் கேட்டான்.

 

“ஆமா ராசா, அவுக ஸகூல் ல சிறப்பு வகுப்பா இருந்துச்சு. சீலுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) ல இருந்து ஒரு அய்யங்கார் மாமி வந்து கத்துக்கொடுத்தாக. ஏழு வயசுல இருந்து கத்துகிட்டு இருந்தா. இப்போ பத்தாவது வந்ததும் தான் போகலை. லேசுக்குள்ள ஆர் மின்னாடியும் பாட மாட்டா. இனிக்கு என்னவோ வாயத் திறந்துட்டா” என சொல்லிக் கொண்டே இருக்கும் போது தடைபட்டு இருந்த மின்சாரம் வந்து விளக்குகள் பளீரென்று ஒளிர்ந்தன.

 

அனைவருக்கும் கண்கள் கூச .. விழிகளை தேய்த்துக் கொண்டவராய் அலைபேசியின் டார்ச்சை நிறுத்த சென்ற போது மணியைப் பார்த்து,

 

“அடடா மணி 11 ஆகி போச்சுதே, நீ எப்படி போவ ராசா ?” எனக்கேட்டார் வேலராஜன்.

 

“சென்னைல இருந்து ஃப்ரன்ட் வண்டில தான் வந்தோம். வெளிய நிறுத்திருக்கேன் மாமா. அதுல போயிருவேன். போய் ஐந்தருவி, மெயின் ஃபால்ஸ் போறோம். நீங்க வரீங்களா யாராச்சும்?” என்று கேட்க

 

“இல்லை ராசா. நாங்க காலைல வந்துட்டோமில்ல. குளிச்சாச்சுது” என,

 

“நாளைக்கு பழத்தோட்ட அருவில குளிக்க அனுமதி இருக்கு மாமா எல்லோரும் வாங்களேன் “ என்றவனை இடைமறித்தவர் ,”அது அரசாங்கத்துக்கு சொந்தமானதாச்சே.. VIP கு மட்டும் தான் அனுமதி தருவாங்க.. ரொம்ப நல்லாருக்கும் னு கேள்வி”

 

வனராஜன்,”ம்ம் என் ஃப்ரண்டோட அப்பா மத்திய அமைச்சர்” என அவரின் பெயரை சொல்ல

 

“ஓ, நல்லது. எல்லோரும் காலைல போலாம்“ என்றார் வேல்ராஜன்.

 

“8 மணிக்கெல்லாம் கிளம்பலாம்”, என சொல்லி விட்டு அனைவரிடமும் விடை பெற்றவன் செல்லக்கிளியைத் தேட, சரவணன் தவிர அனைத்து சிறுவர்களும் படுக்க சென்று விட்டதை கவனித்துவிட்டு தனக்குள் ஓடும் தேடலை எண்ணி சற்றே மலைத்தவனாய் அங்கிருந்து கிளம்பினான்.

 

**பழத்தோட்ட அருவி.**

 

பெயருக்கு ஏற்றார் போல் பழமரங்கள் நிறைந்து இருந்த தோட்டத்தை கடந்து அருவி இருக்கும் இடத்தை அடைந்தவர்கள் மலைத்து நின்றனர். மற்றைய அருவிகள் போல் பிரம்மாண்டமாய் இல்லாமல் சிறு செடிகள் நிறைந்த பசுங்குன்று, அதில 15 அடி உயரத்தில் இருந்து விரிந்து கொட்டிய அருவி நூறடி அகலத்திற்கு குளம் போல் தேங்கி ஒரு ஓரத்தில் சிறு ஓடையாக வழிந்து வெளியேறியது.

 

பெரியவர்களுக்கு முழங்கால் வரை இருந்த நீர்மட்டம், சிறியவர்களுக்கு இடுப்பளவாய்… மார்பளவாய் இருக்க குதூகலத்துடன், நீச்சல் அடிக்கவும், ஆங்கங்கே இருந்த பாறைகளில் ஏறி தொப்பென குதித்து கும்மாளமிட ஆரம்பித்தனர்.

 

சிறியவர்கள் உற்சாக கூச்சல் அவ்விடத்தை அதிர வைத்தது. ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக என் குளித்து மகிழ தோதாய் இருந்த இடம் இன்னமும் மகிழ்ச்சியைக் கூட்ட அனைவரும் அருவியில் தலை கொடுத்து குளத்தில் நீரை துளைந்து நீச்சல் அடித்து நீராடி மகிழ்ந்தனர்.

 

தன் நண்பர்களுடன் சென்ற வன ராஜன் குளித்து முடித்து பார்க்கையில் செல்லக்கிளி வெளியேறுவதையும் அவள் பின்னே, அங்கு குளித்து கொண்டிருந்த ஒருவன் அவளைத் தொடர்வதைக் கண்டு அவசரமாக மற்றவர்களை நோக்கினான். அனைவரும் ஆறு பிள்ளைகளை கவனிப்பதில் இவளை பார்க்கவில்லை போலும் என்று எண்ணியவன் வேகமாக அருவியை விட்டு வெளி வந்தான்.

 

அதற்குள் செல்லக்கிளியும் அவளைத் தொடர்ந்தவனும் கண்ணுக்கு புலப்படத்தால் அஞ்சி… வேகமாக குளத்தை தாண்டி பாதையில் ஏறினான்…

 

> கிளியாய் பேசிக் குயிலாய் பாடி

> கண்களைக் கருத்தைக் கொள்ளையிட்டவளே…

> உறவென்று பதைக்கிறேனா…

> உயிரென்று நினைக்கிறேனா….

> என்னை எனக்கு புதிதாய் தோன்ற செய்கிறாயே…

> மயக்கும் முழு நிலவே…..மாயக்கிளியே……

 

**கிளி பேசும்…..**

 

What’s your Reaction?
+1
4
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
தாமரை

Recent Posts

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

40 minutes ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

3 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

(15)   அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…

6 days ago