சேதி 2
*******
நாயக் ஃபயர் வொர்க்ஸ் மற்றும் சொர்ணா ப்ரிண்டிங் ப்ரஸ் உரிமையாளரின் வீடு. வீடு என்றால் வாசலில் போடப்பட்டுள்ள சோஃபாவில் அமர்ந்திருக்கும் வேதநாயகி அம்மாள் சண்டைக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதால், உரிமையாளரின் மாளிகை என்றே கூறுவோம் .
உடனே கோபிச்செட்டிப்பாளைய மாளிகை கற்பனையில் வருகிறதா? சரி ….சரி. அதே போல, இரண்டடுக்கில் பிரம்மாண்டமான மாளிகை. சுற்றிலும் மதில் சுவர் பத்தடி உயரத்தில் கற்பாறைகளை அடுக்கி வைக்கப்பட்டது போன்ற பதிகற்கள் பதிக்கப்பட்டு, கோட்டைச் சுவர் போன்று மாயம் காட்டி நின்றது. 11 அடி உயரக்கதவுகள் கோட்டைக்கதவுகள் போலவே வடிவமைக்கப்பட்டு உறுதியாய் நின்றன. வாசலில் இருந்து சென்ற ஓடு பாதை அரைவட்டமாக மாளிகையின் போர்டிகோவை அடைந்து, மீண்டும் அரைவட்டமாக வாயிலை அடையும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருந்தது. வாயிலின் இடது உள்மூலையில் தற்காலிகக் கூரை அமைக்கப்பட்டு 2 கார்கள் நின்று கொண்டிருந்தன. 100 மீட்டர் தூரம் வரை மாளிகையை சுற்றி தோட்டம். பல வகைச் செடிகளும் கொடிகளும் காலைப் பனியில் நடுங்கியவாறு காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. நாங்கள் பல வருடங்களாக இங்கே இருக்கிறோமாக்கும் என்று அறிவிக்கும் வண்ணம் அகன்று தடித்த உயரமான அசோக மரங்கள், மதில் சுவரை ஒட்டி, பச்சைச் சீருடை அணிந்த காவலாளிகள் போல் விரைப்பாய் வரிசையில் நின்றன. அவற்றின் பின்னே நுரையின் வெண்மை ஒத்த வண்ணமடிக்கப்பட்டு இருந்த மாளிகை, காலை வெயிலால் இன்னமும் பளீரென்று அழகாக இருந்தது.
வீட்டினுள் சோபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தார் வேதநாயகி அம்மாள். எழுபதை நெருங்கும் வயது. வயதின் தளர்வோ நடுக்கமோ அவரை தீண்ட அஞ்சித் தள்ளியே நின்றன. பூஜை அறையிலிருந்து கந்தசஷ்டி கவசம், சூலமங்களம் சகோதரிகள் குரலில் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“ அத்த! சத்துமாவு கஞ்சி ” என்று 1 சாண் உயர டம்ளரை நீட்டினார் அவரின் மருமகளான சொர்ணக்கிளி.
“ராசு எழுந்துட்டானா?” என்று கேட்டவாறு வாங்கியவர் அதை அருகிலிருந்த கண்ணாடி மேசை மீது வைத்தார்.
“ அவன் எங்க வந்து படுத்தான்? யோகா செய்றேனுட்டு மொட்ட மாடிக்கு போனவன் இன்னும் இறங்கி வரலை” என்று மெல்லமாக ச் சலித்தவர், வாசலை நோக்க, கையில் பையுடன் உள்ளே நுழைந்தார் நாயக் பட்டாசு ஆலை உரிமையாளரும் வேதநாயகியின் மகனுமான சௌந்தரராஜன்.
மகனின் கையிலிருந்த கறுப்பு நெகிழிப் பையைப் பார்த்த நாயகி , “ வீட்டுல இம்புட்டு வேலக்காரகளை வச்சுட்டு நீ ஏன்யா கறிக்கடைக்கு போனே?” என
“ நாமலே நேர்ல போனா கடக்காரன் நல்லதா கொடுப்பாம்மா, நம்ம பிள்ளகளுக்கு நாமலே பார்த்து வாங்கி கொடுக்குற மாதிரி வருமா? கறி, சொவரொட்டி (ஆட்டின் மண்ணீரல்) ராஜன் பிரியமா சாப்பிடுவான். நா போனதால கடக்காரன் மூணு கொடுத்தான்.” என்றவாறு பையை மனைவியிடம் நீட்டினார்.
“ ராஜன் எங்கே ?” என்ற அவரின் கேள்விக்கு பதிலாக, யாரோ படிகளில் இறங்கி வரும் ஓசை கேட்டது.
ஆறடி மூன்றங்குலத்தை எட்டிய உயரம், தென்னிந்திய கம்பீர உடற்கட்டு மற்றும் முக அமைப்பு, பளீர் கோதுமை நிறம் என அழகனாக இறங்கி வந்தான் வனராஜன். அணிந்திருந்த கருப்பு டீ ஷர்ட், கருப்பு டிராக் பாண்ட் அவனின் உடலின் திண்மையும் நிறத்தையும் எடுத்துக்காட்டுவதாய் இருந்தது. படிகளில் வேகமாக இறங்கியவனின் கேசம் விசாலமான நெற்றியில் துள்ளித் துள்ளி குதித்து, அங்கிருந்த வியர்வையைத் துடைக்க முயற்சி செய்தார் போல் இருந்தது. கூர்மையான விழிகள்…குறும்பையும் கலந்து மின்னின. மென்னகை சிந்தும் உதடுகள், மனத்திண்மையைக் காட்டும் வண்ணமாய் உறுதியாய், அழுத்தமாய்
, அளவான மீசையின் கீழ் மறைந்து நின்றன.
“ ஹாய் கிராண்ட் மா! டாட்!” என்றவன்..சோஃபாவில் வந்து தொப்பென அமர்ந்தான்.
நீண்ட நாட்கள் கழித்து பேரனைப் பார்த்ததில் மலர்ந்த வேத நாயகி, அவனின் அழைப்பில் சற்றே சுணங்கி,
“ அழகா ஐயா, ஐயாம்மா ன்னு கூப்புடுறத விட்டு என்ன ராசு..கரண்டுமா..டாடு ன்னுட்டு” என்று முகம் சுழித்தார்.
“ சென்னைல பாட்டிய, ஆயா னு தான் கூப்பிடுராங்க. அது ok வா ஆ……யா….ம்மா?” என்று கண்சிமிட்டி, இதழ்கள் குறும்பில் வளைய, வேண்டுமென்றே நீட்டி முழங்கியயவனின் பேச்சில் ,
‘நா என்ன பள்ளிக்கூடத்து ஆயாவா ‘ என்று அதிர்ந்தவர், வேகமாக
“அது…. நம்ம ஊர்ல வேற அர்த்தம் ராசு. நீ அழகா ஐயாம்மா னு கூப்பிடு, சின்ன புள்ளல இருந்து அப்படி தானே கூப்பிடுவ “ என்று செல்லக் குரலில் கூற,
முகத்தில் அப்பாவிக்களையைத் தக்கவைத்தவனாய்
“ எனக்கென்னவோ அப்படி கூப்பிட்டா..அந்த மாதிரி தான் தோணுது “ என்று கண்களை சுருக்கி சிரித்தவன்,
“ஐயப்பா எங்க?” என்று கேட்டு அவரை கடுப்பேற்றினான்.
“க்கும்..அவுங்களை மட்டும் அழகா சரியா கூப்பிடு ..‘ என்று எண்ணியவர், சற்றே முகம் சுணக்கிய படி, “தோட்டத்துல வாக்கிங்கு போயிருக்காக.” என்றார்.
மகனின் குறும்புப் பேச்சை ரசித்தவாறு நின்ற அன்னையும், தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி தம், தம் அலுவல்களை கவனிக்க அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
அன்றைய நாளிதழை ப் புரட்டியவன், “அக்கா எப்போ வந்தா? பசங்க எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.
“ நீ பொங்கலப்போ கூட வரலியே. அவ கடைசி நாளு பொங்கலன்னிக்கு குடும்பத்தோட வந்து தல காட்டிட்டு போனா. இந்தாருக்க சிவாசி ல இருந்துட்டு,வர அவ்ளோ பிகு பண்ணிக்குறா” என்று அங்கலாயத்தார்.
“இந்தாருக்க கரிசக்குளத்துக்கு நீங்க அம்மாவை அனுப்பினீங்களா கிராண்ட் மா? ” என்று மனதில் நினைத்தவன், கேலிப்புன்னகை சிந்தியவாறு,
“கல்யாணம் ஆயிட்டா, புருஷன் வீடு தான் சதம் னு சொல்லித்தானே வளர்க்கறீங்க. அப்பொறம் என்ன அங்கலாய்ப்பு?” என்றவன்,
“இன்னிக்கு என்ன விசேஷம்?” என நிதானமாய் ஆங்கில நாளிதழைப் புரட்டியவாறு கேட்டான்.
“என்ன விசேஷம்..!!!” என்று யோசித்த வேதநாயகி “இன்னிக்கு சிவராத்திரி ராசு…..குலதெய்வ பூசைக்கு போவாக… நமக்கு குலதெய்வம் தொலைவா இருக்கதால சாயங்காலத்துல நாம சிவன் கோவிலுக்கும், அப்பொறம்… நம்ம வனராசன் கோவிலுக்கும் போறது வழக்கம். போவமா ராசா?” என ஆர்வமுடன் கேட்டார்.
நாளிதழில் பார்வை பதித்தவாறே,” நான் ஆச்சி வீட்டுக்கு போலாம்னு இருக்கேன்…” என்றான் அறிவிப்பாய்.
வேதநாயகியின் முகம் சற்றே சுருங்கி, சட்டென்று கடுமையை தத்தெடுத்துக்கொண்டது.
செல்லப் பேரனிடம் கடுமையைக் காட்ட வழி இல்லாதவராய், சற்றே அடக்கி,
“ அங்கெல்லாம் போனா பூச முடிய ராவுல நேரமாகிப் போகும்..” என்ற ஆட்சேபனையைக் கூற விழைய,
யோசிக்காமலேயே “ ம்ம்ம்..சாமி கும்பிட்டு முடிய லேட்டாகும்மல…அதான், அங்கையே தங்கிறப் போறேன்” என்று நிதானமாக பதில் வந்தது, வேதநாயகியின் ரத்த அழுத்தத்தை சற்றே ஏற வைத்தது.
“ இப்போ என்ன அவசரமா அங்க போனும்?ஊருல இருந்து வந்த காலோட அங்க போய் நிக்கணும் னு….இல்லியே ராசு..” என்றார், சற்றே கடுமை ஏறிய குரலில்.
“ என்ன வேதா? என்ன அரட்டுற… எங்க போனுங்குறான் ராஜன்?” என்று கேட்டவாறு வந்து அமர்ந்தார் கோவிந்தராஜன்.
பேரனைப் பார்த்து புன்னகை சிந்தியவாறு” எப்போ வந்த? வந்தவுடன் ஐயாம்மா ட்ட என்ன பஞ்சாயத்து?” என்றார்.
“காலைல வந்தேன் ஐயப்பா. சிவராத்திரின்னதும், ஐயா தோட்டத்துல பூச பண்றது ஞாபகம் வந்துச்சு. அந்த பூஜைக்கு, கரிசக்குளம் போறேன்னு சொன்னதுக்கு கிராண்ட் மா சவுண்ட் கூடுது ” என்றான்.
“ உன் கிராண்ட் மா சொல்றது இருக்கட்டும். உன் ஐயாட்ட சொல்லிட்டியா?” என சரியான இடத்தைப் பிடித்தார், அவனின் தாத்தாவான கோவிந்தராஜன்.
சில நொடிகள் அமைதி ஆனாலும் “இனிதான் சொல்லணும்” என்றான் அவரின் முகத்தை உற்று நோக்கியவனாய்.
“ காப்பி குடிக்குறீகளா மாமா ?” என்றவாறு வந்த சொர்ணக் கிளியை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது.
“ ம்ம்..கொண்டா” என்றவாறு நாளிதழை கையில் எடுத்தார் கோவிந்தராஜன்.
“ டாட் எங்க மா?” என்றவனின் விழிகளை உற்று நோக்கியவாறு “குளிக்குறாக” என்று பதிலுரைத்தவரின் விழிகள் அவனிடம் தனி மொழி பேசின.
‘இப்படியே இருங்க’ என்று மனதில் அலுப்புற்றவனாய் “டாட் ட பேசணும், நானும் குளிச்சுட்டு வரேன்” என்றவாறு அந்த இடத்தை விட்டு எழுந்து தன் அறைக்கு செல்ல மாடிப்படி ஏறினான்.
“இன்னிக்கு சிவராத்திரி… கறி எடுக்க சொல்லிருக்கே…வீட்டு வழமை….ஏதாச்சும் தெரியுதா உனக்கு? “ என்று அடக்கிய கோபத்தில் கூறிய மாமியாரை பயத்துடன் ஏறிட்டவர்,
“கண்ணா(வனராஜன்) வந்துருக்கான்னு உங்க பிள்ள தான், அவுகளா வாங்கிட்டு வந்துருக்காக..நா ஏதும் கேட்கலை அத்த” என்றவரிடம்,
“ம்ம்ம்…பிள்ளைக்கு கொடுக்கலாம். கோயிலுக்கு போகுமின்ன தலைக்கு குளிக்க சொல்லு” என உரைத்தவரிடம், ”சரித்த” என மெதுவாய் சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் சொர்ணக்கிளி.
**********
மதிய நேரம் .
சொன்னபடி சாப்பிட வீட்டுக்கு வந்த கணவரை பார்த்து ஆச்சரியம் அடைந்தார் கற்பகவள்ளி.
“ அடா..என்னடா மானம் இருட்டுதேனு பார்த்தேன். நீங்க சரியான நேரத்துக்கு சாப்பிட வந்ததால் தானா?” என்று கேலி செய்தவாறே சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்தார் .
கை கால் சுத்தம் செய்து வந்து அமர்ந்தவர் முன்பு தட்டை வைத்து பரிமாற ஆரம்பித்தார் .
“ பசங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டுடியா?” என்று கேட்டவாறு சாதத்தைப் பிசைந்தவர் சாப்பிட துவங்கினார்.
“ம்..கொடுத்தாச்சு” என்றவரை கேள்வியாய் பார்த்தவர்,
“காலைல அம்மா கூப்பிட்டாங்க னு ஏதோ சொல்லவந்த?”
“ இன்னிக்கு ஊருக்கு சிவராத்திரி பூசைக்கு போகணுமே. சாமானெல்லாம் வாங்கணும்”
“ அதெல்லாம் வாங்கியாச்சு..இப்ப கடைப்பையன் கொண்டு வந்துருவான். போகையில பூவு, மாலை மட்டும் வாங்கிட்டு, அப்படியே எடுத்துட்டு போக வேண்டியது தா”
“இல்ல..அத்த, மதினிய கூப்பிடனும் னு நினைக்குராக போல, மதினிக்கு வேண்டுதல் இருக்காம்,”
“ம்ம்ம்ம்”
“போனுல கூப்பிட்டா மரியாதையா இருக்காதுன்னு நினைக்குறங்க..”
“ – – – – – – – – “
“ நீங்க ஒரு எட்டு போய் கூப்பிடுறீங்களா? ராசனும் வந்துருக்காப்புல போல”
நிமிர்ந்து அவர் பார்த்த பார்வையில் கற்பக வள்ளியின் பேச்சு நின்றது..
“போய் கூப்பிடானாப்புல வந்துருவாகளா? அக்காவ தா அனுப்பிச்சுருவாகளா?” என்று கேட்டவரின் தட்டை கவனித்து இன்னும் கொஞ்சம் சோறு வைத்தவர், “ அதுகில்லங்க…நாம கூப்பிடனும்னு ஒரு முறை இருக்குல்ல? ரெண்டு நா முன்ன அத்த போனுல கூப்பிடாகளாம்.” என்றவரை இடைமறித்து ,
“ அக்காவுக்கு கலியாணம் முடிச்சு எத்தனை வருசம் ஆச்சு. அவளே சம்பந்தம் பண்ணிட்டா. இன்னும் சாமி கும்பிட கூப்பிடனும்..வெத்தலைப்பாக்கு வச்சு அழைக்கணும் னு என்ன? பாதைல பாத்தா கூட முகங் காட்டாம திருப்பிக்குற அளவு நா என்ன செஞ்சேன்? எங்க அய்யா தா என்ன செஞ்சாக? இவுக செய்யறதை எல்லாம் தட்டிக் கேக்காம கையக்கட்டி நிக்கது தா தப்பு போல… அவுங்க பணக்காரகனா அவுங்களோட..ஆசைப்பட்டு கேட்டாகனுதா அக்காள கட்டி கொடுத்தோம். கட்டிக்கிட்டு போனதோட சரி….அப்போறோம்ம்…..நம்ம எங்க கூப்பிட்டாலும் வாரது இல்லை..நம்ம பக்கத்து மனுசங்களை மதிக்குறது இல்லை…இந்தஊர்ல நாமளும்தான் கவுரவமா இருக்கோம்…ஏதோ சண்டைக்காரவுங்களை பாக்குற மாதிரி முக திருப்பிக்குறவுங்க வாசலுக்கு நாம ஏன் போகணுங்குறே? அவுக செய்த எல்லாத்துக்கும் ஏ அக்கா பொறுத்துதான் போராக, என்னையவும் அங்கன போய் கைகட்டி நிக்க சொல்லுதியா?”
குரலை உயர்த்தாமலே பொறுமியவரிடம், அமைதிப்படுத்தும் விதமாக அவர் கையைப் பற்றி அழுத்திய கற்பகத்தின் கையை விலக்கியவர், ”மோர ஊத்து” என்றவரின் முகத்தைப் பார்க்காமலே, “பல வருசமா சௌந்தர் அண்ணே தா தொழிலதிபருங்க சங்கத் தலைவர். ரெண்டு வருசம் முன்ன உங்கள தேர்ந்தெடுத்தப்புறமா தான்…ரொம்ப விலகிப்போன மாதிரி இருக்கு”
“ நானா தலைவர் ஆகுரேனு சொன்னே? அது சங்கத்துல இருக்குறவுங்க, ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கது. மச்சான் எந்த சங்கப் பிரசனையும் கவனிக்க மாட்டேங்காக..அவுங்க புதுத் தொழில்ல ரொம்ப வேலை னு சங்க வேலைகள அவுங்க பாக்க முடியாதுன்னு சொன்னதால் தான் என்னை தேர்ந்துடுத்தாக. அப்புறமென்ன கோவப்படுறது?”
“இல்லீங்க..உங்களுக்கு தா தெரியுமே. அந்த சித்தி(வேத நாயகி) ரொம்ப கவுரவம் பாப்பாக. இப்போ நாம மில்லு தொடங்குனத்துக்கு அப்புறமாவே அவுங்க ஒரு மாதிரி சாடை பேசிட்டு இருந்தாக. இப்போ தலைவர் பதவி உங்களுக்கு கொடுத்தது அவுங்களுக்குத் தன்மானப் பிரச்சனையா போச்சுது. உங்களுக்கு இடையில மதினி மாட்டிட்டு முழிக்காக, பாவம் ”
தன் அக்காவைப் பற்றி பேசியதும் அமைதியான வேல்ராஜன், “ம்ம்ம்…இப்போ போகையில போய் அழைச்சிட்டே போறேன்” என்றுவிட்டு தட்டை எடுத்து கொண்டு எழுந்தார்.
தட்டைக் கைப்பற்றியவாறு ,”எடுத்துட்டு போய்ட்டா, நா எதுல சாப்பிடுறதாம்?” என்று மையலுடன் வினவிய மனைவியைப் பார்த்தவரின் பார்வையில் அழுத்தம் மட்டுப்பட்டு காதல் வழிந்தது.
“என்னய சொல்றே.நீ இவ்ளோ நேரமா சாப்பிடாமையா இருந்த?”
“எல்லா வழக்கமா நா சாப்புடுற நேரந்தான்”
“ நா வேணுன்னா சோறு போடவா?” என்று குறும்பு பேசியவரிடம்
“ வேணாம் சாமி. நீங்க அள்ளி அள்ளி வச்சுபுடுவீங்க. நான் நீங்க கிளம்பினதும் சாப்பிட்டுகிடுறேன்” என்றவாறு எழுந்தார்.
*************
தன் அக்காவின் வீட்டிற்குள் செல்லும் பாதையில் தன் இருசக்கர வாகனத்தை திருப்பினார் வேல்ராஜன். காவலாளி அவரைக் கண்டு வணக்கம் வைத்தவாறு கதவைத்திறக்க கம்பீரமாக வண்டியை உள்ளே செலுத்தினார். போர்டிகோ வரை சென்றவரின் வண்டி சத்தத்தில் நிமிர்ந்த வேதநாயகி அம்மையாரின்முகம், அவரைக் கண்டதும் வேண்டாத விருந்தாளியைப் பார்க்கும் பாவனையைக் காட்டியது.
வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த வேல்ராஜன், “வணக்கம் அத்தை !” எனக்கரம் குவிக்க, சோஃபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு, “அட, வாப்பா, வராதவன் வந்துருக்க,என்ன விசயம்?” என்றார் கண்களை எட்டாத முறுவல் உதட்டின் ஓரத்தில் மட்டும் இருக்க.
“ இன்னிக்கு சிவராத்திரி. குலதெய்வம் கும்பிட நம்ம ஊருக்கு அக்காவையும், மச்சானையும், உங்களையும் அழைக்க வந்தேன்”.
“நல்ல நாளும் பொழுதும் இங்கயும் விளக்கேத்தி பூசைபண்ணிட்டு கோயிலுக்கு போணும்ல. அங்க வந்துட்டா, அதை யாரு செய்ய?” என்றவரின் கணீர் குரல் சமையலறையில் இருந்த சொர்ணத்தையும், தன் அறையில் படித்துக்கொண்டு இருந்த வனராஜனையும் இழுத்துவந்து நிறுத்தியது.
“வா தம்பி” என்று அழைத்த சொர்ணக்கிளி, கண்ணில் பாசத்தை தேக்கி முகம் மலர்ந்தவராயினும், தன் உடன் பிறந்தவனை உட்கார, சாப்பிட சொல்ல உரிமையில்லாதவராய் தன் மாமியாரின் முகம் பார்த்தார்.
அன்னையின் தயக்கத்தைப் புரிந்தவனாய் வனராஜன், “ வாங்க மாமா, உட்காருங்க” என்றான்.
‘என் முன்னாடி உக்கார்ந்துருவானா’ என்று மிதப்பாய் பார்த்த படி,” ஊரே உங்க மாமன் பேச்சைக் கேட்டு வேலை செய்யக் காத்துட்டு இருக்கு, உக்காருறதுக்கெல்லாம் பொழுது இருக்கா… என்ன?” என்றார் வேத நாயகி.
மருமகனின் பக்கம் பார்வையைத் திரும்பிய வேல்ராஜன்,
“நீ எப்ப ஊர்ல இருந்து வந்தப்பா?”
“காலைல வந்தேன் மாமா, இப்போ ஸ்டடி ஹாலிடே”
“இன்னிக்கு சிவராத்திரி. குலதெய்வ பூஜைக்கு எல்லோரையும் அழைக்க வந்தேன். நீங்களெல்லாம் வந்து ரொம்ப நாள் ஆகிப்போச்சுது. ஏதோ வேண்டுதல் போல, எல்லோரும் வந்தா நல்லா இருக்கும்” என்று மருமகனைப் பார்த்தவாறே சொல்லி முடித்தார்.
“ அவசியம் வரோம் மாமா. எனக்கும் ஆச்சி, அய்யாவைப் பார்க்கணும்” என்று தானாகவே சம்மதம் வழங்கிய பேரனைப் பார்த்து வேதநாயகியின் முகம் சுருங்கியது.
“பிள்ளைக பள்ளிக்கோடம் விட்டு வந்ததும் மூணு மணிக்கெல்லாம் கிளம்பலாம்னு இருக்கோம். அப்படியே இங்க கார் எடுத்துட்டு வந்துரவா அத்த?” என்று நயமாய்க் கேட்டவரிடம்
“ அதெல்லாம் வசதி படாது. இங்க நாங்களும் கோயிலுக்கு போகணும். வாரதானா… எங்க கார்லயே வந்துக்கிடுவாங்க” என்று கடுப்புடன் மொழிந்தார் வேத நாயகி.
மகனின் தயவில், தாய் வீடு செல்லக் கிடைத்த அதிர்ஷ்டத்தை நம்ப இயலாதவராய், முகத்தில் மகிழ்ச்சியை வெளிக்காட்டினால் கூட, அதற்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதால், அமைதிக்காத்து நின்றார் சொர்ணக்கிளி.
கூடப்பிறந்தவளின் விழிகளில் மின்னிய மகழ்ச்சியைப் படித்தவராய் வேல்ராஜன், சிறுமூச்சு ஒன்றை வெளியேற்றி, ”அப்போ நான் கிளம்புறேன் அத்த. மாமா மச்சான்ட்டையும் சொல்லுங்க, அழைச்சேன்னு. வணக்கம்” என்றுவிட்டு தமக்கை முகம் பார்த்து தலை அசைத்து விட்டு வெளியேறினார்.
வெளியே வந்தவரின் மனதில் எதிலோ போராடிய களைப்பு தோன்ற, எத்தனையோ தொழில்பேச்சுக்களை அனாயாசமாக செய்து முடிப்பவர், பாசத்தின் முன், உறவின் முன் கைகட்டி நிற்க நேரும் நிலையை உணர்ந்தவராய், பெருமூச்சு விட்டவர், தன் வாகனத்தில் ஏறி அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
**********
ஆண்டுகள் பல ஆனால் என்ன
ஆணவம் ஆட்சிசெய்யும் உலகில்..
எளியோரை ஏமாளியாக்கி
ஏறிநிற்கவே எண்ணும் மனங்கள்…
வனராஜன் என
அழகனாய் நிற்பவன்..
ஆணவமே ஆண்மை என்பானா!
மனத்தை, குணத்தை புரிந்து
மன்னன் என மாசறு நீதி உரைப்பனா!!
கிளி பேசும்……
சேதி 21 ********* சென்னையின், போக்குவரத்து…
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…