Categories: Ongoing Novel

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

 

 

சேதி 18

*********

 

                 நள்ளிரவை நெருங்கப் போகும் நேரத்தில் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்து வீட்டுக்குள் வந்த மணிச்சந்த் , வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு இருந்தவரைப் பார்த்து திகைத்தார். கையைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தவர் ,” இன்னுமா நீ தூங்கலை!!” என்று கேட்க,

 

சத்தம் மிக குறைத்து வைக்கப்பட்டிருந்த

 தொலைக்காட்சியை பார்த்தவாறு இருந்த கௌரி, 

“ ம்ம் யோசிக்க சொன்னீங்களே…அதான் யோசிச்சுட்டு இருந்தேன்…”,என மெதுவாக சொல்ல.

 

முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் கௌரியின் எதிரே இருந்த சிறு சோபாவில் வந்து அமர்ந்தார்.

 

“ ஒன்னு புரிஞ்சுக்கோங்க..எனக்கு அந்த ஊருக்கு போக பிடிக்கலை .” சற்று நிறுத்தி எங்கோ பார்த்தவர்,.” யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்திரக்கூடாதுன்னு தான் நான் பார்க்கிறேன்..முக்கியமா நம்ம பசங்க மனசுல எந்த குழப்பமும் வந்திர கூடாது..அது ரொம்ப முக்கியம்…எடுத்தேன் கவிழ்த்தேன்னு ஏதும் செய்ய முடியாது..எவ்ளோ தண்ணி ஊத்தினாலும் பூக்குற நேரம் தான் செடி பூக்கும் …அது மாதிரி தான் ..வியாபாரமும்….அந்த சொத்து ….நான் அதை நித்யா மேல் படிப்புக்குன்னு நினைச்சு வச்சுருக்கேன்…..நீங்க கடைக்குன்னு கேட்டதும் வேணாம்னு தோணுச்சு..அவ்ளோ தான்…” என்று நிறுத்தியவர்… ஆழமும் அழுத்தமுமான குரலில்…,”.மற்றபடி அங்க எனக்கு எந்த பிடிப்பும் இல்லை…” என்றதும் அமைதியாக கௌரியைப் பார்த்த மணிச்சந்த், 

 

“இவ்ளோ நாள் சொத்தை இப்படி வைக்க கூடாது…நிலம் யாராவது ஆக்கிரமிப்பு பண்ணிருப்பாங்க….வீடு எந்த பராமரிப்பும் இல்லாம பூட்டி இருந்தா இந்நேரம் ஒன்னுத்துக்கும் உபயோகம் இல்லாம அழிஞ்சு போயிருக்கும்..” என்றதும் கௌரி சரேலென்று நிமிர்ந்து பார்த்தார்.

 

அந்த பார்வையில் எரிச்சலுற்றவராய் மணிச்சந்த்,”இப்போ…. எதற்கானாலும் அதை விக்க ஏற்பாடு பண்ண தான் போறேன்..எனக்கும் பிள்ளைங்க மேல அக்கறை இருக்கு…..சம்ஜெ….. அதை வித்துட்டு இங்கேயே ஏதாவது முதலீடு பண்ணிக்கலாம்…இது தான் என் முடிவு….” என்று விட்டு சற்று நேரம் அமைதி ஆனவர்….

“..ஒரு சொத்து இப்படி கண்ணுக்கு தெரியாம, கேப்பார் இல்லாம எப்படியோ போகட்டும் னு விட…. நாம ஒன்னும் பெரிய பணக்காரங்க இல்ல….அதுனால..நான் அதை விற்க ஏற்பாடு செய்ய போறேன்..”

 

யோசனையில் ஆழ்ந்த கௌரி , உறுதியான குரலில்,

 

“…..சரி….ஆனா…..நான் அந்த ஊருக்கு வர மாட்டேன்…வர முடியாது…அந்த சொத்தை விக்கிறதுக்கு பவர் மாதிரி..உங்க பேருக்கே மாத்தி எழுதுற மாதிரி ஏதாவது இருந்தா…. அதை பண்ணுங்க…நான் எழுதி கொடுத்துடறேன் .நீங்களே பார்த்துக்கோங்க…” என்று விட்டு எழுந்தார்.

 

கூடவே தானும் எழுந்த மணிச்சந்த,”நீ சொன்ன மாதிரியே செய்யலாம்…இனி நான் பின்வாங்கபோறது இல்லை….ஆனா….யோசி..இன்னும் எவ்ளோ நாள் இப்படி ஒதுங்கியே இருக்குறது??”

 

சொல்லிவிட்டு மணிச்சந்த் எழுந்து போய்விட்டார்.

 

கௌரி கண்களை மூடி பழைய நினைவுகளில் ஆழ்ந்தார். 

 

தன் இளமை பருவம்….எவ்வளவு துள்ளல்…..இனிமையான கல்லூரி பருவம்….அன்பான நட்புகள். பண்பான காதல்….அனைத்தையும் திருப்பிய நிகழ்வுகள்….. திருமணம்… .நட்பும் காதலுமான வாழ்வு…..எதிர்பாராத பிரிவு…..மாறிய வாழ்வு.. மன்யுவின் பிறப்பு….

 

இப்படி ஏதோதோ எண்ணியவரின் எண்ணங்களில் முகத்தில் உணர்வற்று, கண்களில் மட்டும் காதல் புலப்பட, உறைந்து போன முறுவலுடன் சிலையாய் நின்றான்.. ஹர்ஷா…..ஹர்ஷா அகர்வால்…..

 

*************************

மருத்துவ கல்லூரியின் விளையாட்டு மைதானம்….நினைவு வந்து விட்டதா!!!!…..முதலாம் ஆண்டு மாணவர்கள் பரிதாபமாய்… இல்லாத கோழியை பிடிக்க ஓடி அலைந்த இடம்….இப்போது வேறு முகம் கொண்டு அனைத்து மாணவ மாணவிகள் கொண்டு தன்னை நிறைத்து இருந்தது…

 

தங்களது SB களின் அன்புக்கட்டளையை ஏற்று அனைத்து JB களும் ஒன்று கூடி இருந்தனர். கல்லூரி முதல்வரின் சொல் படி ஒருங்கிணைவு விழா மற்றும் புதியவர்கள் வரவேற்பு விழா நிகழ்ச்சிகள் பற்றி பேச கலந்துரையாடி நிகழ்ச்சிநிரல் தயாரிக்கும் மகத்தான பணியில் அனைவரும் ஈடுபட்டு இருந்தனர்.

 

மருத்துவ கல்லூரி பாட திட்டம் கடினமானது. எனவே கலைநிகழ்ச்சிகள் பயிற்சிக்கென ஒன்று கூடுவதோ,கூட்டு நடனம் போன்றவைக்கு நேரம் ஒதுக்குவதோ மிகக் கடினம் . ஞாயிறு அன்று கூட செய்வதற்கு படிப்பதற்கு என ஏதாவது இருந்து கொண்டே இருக்கும்.எனவே புதிதாக ஏதும் பயிற்சி யில் ஈடுபடாமல், ஏற்கனவே தெரிந்த பாடலோ, நடனமோ, இசைக்கருவிகள் வாசிப்பதோ ,சிறு சிறு உள்ளரங்க விளையாட்டுக்கள் செய்யலாம் என்று மாணவ தலைவியான நித்யகௌரியின் கருத்து சரியென ஒத்துக்கொண்ட அனைவரும் கலந்து உரையாடினர்.

 

இளம் விரிவுரையாளர்கள் சிலரும், சீனியர் நான்காம் ஆண்டு மாணவர்கள் மாணவிகளும் கூட நிகழ்ச்சி அமைப்பிற்கு உதவுவதற்காக வந்து இருந்தது, அனைவரும் கலந்து பேச பழக நல்ல சந்தர்ப்பமாக இருந்தது. நட்புணர்வுடன் கூடிய இந்த சந்திப்பு சிறியவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் பெரியவர்களுக்கு பொறுப்பு ஊட்டுவதாகவும் இருந்தது.

 

செல்லகிளியின் இசை ஆர்வத்தை,திறமையைப் பற்றி திவ்யபாரதி மூலமாக அறிந்து கொண்ட நித்யா அவளை ஒரு பாடல் பாடியே ஆகவேண்டும் என்று சொல்லிவிட தப்ப வழியின்றி திவ்யாவை முறைத்தபடியே, சரி என்று தலை அசைத்தாள் செல்லக்கிளி..

 

இது போல் பாடல் ஆடல் என்று… ஒவ்வொருவருக்கும் ஒன்று ஒதுக்கப்பட்டு,அதில் பங்குபெறாத அனைவரும் கண்டிப்பாக விளையாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்குதகுந்த விளையாட்டுகள் கலந்து ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்டன.மறுநாளே விழா நடத்திவிடலாம் என முடிவு செய்யப்பட்டது.

 

           அனைவரிடமும் கலந்து பேசி பழகியதில் உற்சாகம் மிக..சலசலத்தவாறே அறைக்கு வந்த செல்லக்கிளியும் திவ்யபாரதியும் நாளைக்கு என்ன செய்யலாம் , எந்த உடை உடுக்கலாம் என்று மிக பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.திவ்யாவும் செல்லகிளியைப் போல் சிறு நகரத்திலிருந்து வந்தவள். நித்யாவிடம் கேட்டதற்கு ,”கிளாசிக் பாடல் என்பதால் லெஹெங்கா, காஷ்மீரி சில்க், புடிதார் டைப் சுடி போடு” என்று ஏதேதோ சொல்ல இருவரும் குழம்பிப் போய் இருந்தனர்.  

 

இது வரை இவ்வாறான விஷயங்களில் எல்லாம் அம்மா அப்பா விருப்பப்படியே அணிந்து பழகிய செல்லக்கிளிக்கு யாரிடமாவது கேட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்ற தன் தோழி ஈஸ்வரிக்கு அழைத்தாள்.

 

அன்னையிடம் கேட்டால் பச்சைப் பட்டுப் பாவாடை தாவணி தான் போட சொல்வார் என்று பயத்தில் அவரிடம் கேட்கவே இல்லை செல்லக்கிளி.

 

      ஈஸ்வரிக்கு CA பயிற்ச்சி வகுப்பு முடிந்து திரும்பி கொண்டிருந்த சமயம் ஆதலால் அவளால் அழைப்பை ஏற்க முடியவில்லை..  

 

  இந்த அத்தானாவது பேசினால் தேவலாம் என்று ஏனோ எண்ணம் ஓடியது அவள் மனதில்.நேற்று ஞாயிறு. விடுமுறை தானே, ஏன் அழைக்கவில்லை என், ஏதோ அவன் தினமும் அவளிடம் பேசி, இப்போது தான் பேசாதது போல வெறுமையாக தோன்ற ….ஏதேதோ எண்ணி குழப்பிக் கொண்டாள்.

 

 சும்மா இருக்கிற குருவிக்கு சோளத்தை போடுவானேன் ……அது கொண்டையை ஆட்டி கொண்டு கொத்த வருவனேன் என்று எண்ணிய வனராஜன், அவளுடன் பேசினால் தானே தன் மனதை ,எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை….எனவே இனி பேச்சோ குறுஞ்செய்திகளோ வேண்டாம். அவள் மனதை , படிப்பை பாதிக்கும் வேலை செய்யவேண்டாம்..இனி அவளை தொடர்பு கொள்ள கூடாது என முடிவு செய்து இருப்பதை அறியாதவளாய் அவனிடம் இருந்து ஏதேனும் அழைப்பு வரும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தவள், அவனிடம் இருந்து எந்த செய்தியும் வராமல் இருக்க …..நேரம் ஆக ஆக கோபம் வர தொடங்கியது செல்லக்கிளிக்கு. தன் தோழி ஈஸ்வரிக்கும் அழைத்துவிட்டு அவளும் எடுக்கவில்லை எனவும் மொத்தமாக அனைத்தும் சேர தன் உடைகள் வைத்திருந்த பெட்டியை உருட்ட தொடங்கினாள்.

எந்த ஆடையைப் பார்த்தாலும் அது மேடையில் குறைவாக தோன்றும் போலும், இங்குள்ளவர்கள் அதைக் கேலி செய்யக்கூடும் என்று தோன்ற… கோபமும் பதட்டமும் இணைந்து நின்றது..சிறுநகரத்திலிருந்து மாநகரத்திற்கு வரும் அனைவரையும் படுத்தி எடுக்கும் தாழ்வுமனப்பான்மை அவளையும் படுத்தி எடுத்தது.

 

  பொறுத்து பொறுத்து பார்த்தவள், “வேலையா இருக்கீங்களா!!!” என்று அனுப்பி விட்டு ,அலைபேசி திரையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பார்த்து விட்டதற்கான அறிகுறி இரு நீல டிக் களில் தெரிந்தது, பதில் ஏதேனும் வரும் என்று ஆவலாய் பார்க்க,ஒரு நிமிடம் ஆன பின்பும் பதில் ஏதும் வரவில்லை.

 

செல்லகிளியின் கோபம் கரை கடந்தது. கோப எமோஜியை அனுப்பியவள் அலைபேசியை முறைத்தவாறு இருக்க, அவளை ஏமாற்றாமல் அழைப்பு வந்தது வனராஜனிடமிருந்து..

 

சற்றுநேரம் அதனை எடுக்காமல் இருந்தவள் பின் உதட்டை சுழித்தவாறு இணைப்பு கொடுத்து விட்டு காதில் வைத்துக் கொண்டு பேசாமலே இருந்தாள்.

 

“சொல்லு செல்லம் …” எனவும்

 

“நேத்திக்கு ஏன் கூப்பிடவே இல்ல நீங்க !!” எனவும் , சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை வனராஜனுக்கு..

 

‘என்ன கேட்கிறாள்!!!! இவளும் தன்னைத் தேடினாளோ!! ‘ என்று எண்ணியவனின் மனப்பறவை றெக்கை கட்டிக் கொள்ள….அடக்கியவனாய்.. சிரித்தவாறே,”வெளிய போய்ட்டேன் செல்லம்….வந்த பிறகு பார்த்தால் நீ தூங்கும் நேரம்..அதான் கூப்பிடல….எதுக்கு தேடுற?.ஏதும் பிரச்சனையா?”

 

“ஆமா ரொம்ப பெரிய பிரச்சன…நாளைக்கு கலச்சுரல்ஸ்.. நா பாட்டு பாடுறே..ஏங்கிட்ட இருக்குற ட்ரெஸ் ஏதும் ஸ்டேஜ் கு போடுறதுக்கு தகுந்த மாரி இல்ல..அதைப் போடன்னே தெரிலை” என்று குழந்தையாய் குறை சொன்னவளிடம்,

 

“அவ்ளோ தானே காலைல போய் ஒரு புதுசு எடுத்துக்கோ..” என்று எளிமையான தீர்வு சொன்னவனை முறைக்க முடியாமல், அலைபேசியை முறைத்தாள்.

 

“எனக்கு தனியா வெளிய போய் பழக்கம் இல்லை..” என்றாள்.

 

“ இனி பழகிக்க வேண்டியது தான்..” என்றான் துளியும் விளையாட்டுத்தனம் அற்ற குரலில்,” டாக்டர் கு படிக்க வந்தாச்சு , சிட்டிக்கு வந்தாச்சு…இனி பாதுகாப்பா வெளிய போய் வரவும் கத்துக்கணும்..பழகனும் செல்லம்..”

 

“………….”

 

“ உன் தோழியை கூட கூட்டிட்டு போ….சென்னை பொண்ணுங்க யாராச்சும் நட்பா பழகினா..அவுங்க கிட்ட..எங்க ….என்ன மாதிரினு கேட்டுகிட்டு போய்ட்டு வா…உன்னால முடியும் செல்லம் ..” 

என்றான் மென்மையாய்.

 

‘இதை கேக்கத்தான் தேடினோமா…’ என்று வெறுத்து போனவள்,’பிறகு எதற்கு இவுகளுக்கு பேச நினைத்தோம் …பட்டணத்துல படிச்சவுக..ஏதாவது வழி காட்டுவாகனு கேட்டா… நல்லா காட்டுராக சாமி… வழி ‘என்று கடுப்பானவள்… ‘ நமக்கு பச்சை பாவாடை தாவணி தான் சரி வரும் என்று எண்ணியவளாய், “ சரி.. நான் பாவாடை தாவணியே போட்டுக்குறேன்…குட் நைட்” என்றுவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாள்…

 

‘ஓ…கோபமாகிட்டாளோ….’ என்று நேரம் கழித்து பிரகாசமாக எரிந்தது வனராஜனின் குழல்விளக்கு.

 

 காலையில் எழுந்து அமைதியாக குளித்து விழாவிற்கு செல்ல தயாரான செல்லகிளியை தேடி யாரோ வந்திருப்பதாக அழைப்பு வந்திருந்தது. 

 

போய் பார்த்த போது அழகான இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். தெரியாத பெண்ணைக் கண்டு விழித்த செல்லகிளியை,” ஹாய் ஐ ஆம் ரேஷ்மா..பிரின்ட் ஆப் ராஜ்…இ ஹவ் ப்ராட் சம்திங் பார் யூ” என்றவள் ஒரு நெகிழிப்பையைத் தந்தாள்.

 

   அப்பெண்ணின் தோற்றத்தையும், பையின் மீது இருந்த பெயரையும் பார்த்து மலைத்து போன செல்லக்கிளி நன்றி சொல்ல கூட தோன்றாமல் அதைக் கை நீட்டி வாங்கி கொண்டாள்.

 

சிறிது நேரம் அவள் ஏதேனும் சொல்வாளோ என்று பார்த்த ரேஷமாவும், அவளின் பிரமிக்க தோற்றத்தப் பார்த்து, சிரித்தவாறே

“சீ யூ டியர்…. “ என்று விட்டு கிளம்பி விட்டாள்.

 

அறைக்கு சென்று பிரித்து பார்த்த செல்லக்கிளிக்கு அந்த ஆடை விட்டுக் கண்களை எடுக்கவே முடியவில்லை. இளம் சிவப்பு வண்ணத்தில் துப்பட்டா.. பட்டு வண்ணத்தில் சுடிதார் …சுடிதார் என்றாலும் அதன் அமைப்பு மிக அழகாய் இருந்தது..பார்த்த செல்லக்கிளி மலைத்துப் போனாள்.

 

‘ஆத்தி….ரொம்ப விலையா இருக்கும் போலவே..இவுக யாரு…..எப்படி என் அளவுக்கு சரியா இவ்வளவு காலைல வாங்கிட்டு வந்து கொடுத்துட்டாக…’ என்று குழம்பியவள்,’இது மட்டும் அய்யாக்கு அம்மாக்கு தெரியணும்..அம்புட்டு தான்…’ என்று பீதி அடைந்தாள். 

 

சரியாய் அலைபேசி ஒலித்தது, வெளிநாட்டு எண் தாங்கி…

 

நடுக்கத்துடன்,”என்னது இது!!” என்றாள் எடுத்தவுடன்.

 

“ அளவு சரியா இருக்குமா போட்டு பார்த்துக்கோ.ஏதும் நா உடனே சொல்லு “ என்றவனின் குரலில் அவசரம்,”ரேஷ்மா அங்க தான் இருக்கா..நீ சரியா இருக்குனு சொன்ன பிறகுதான் கிளம்ப சொல்லணும்”

 

எனவும் வெட்கமுற்றவளாய்,” அளவு என் அளவு தான்..ஆனா இது வேணா ரொம்ப விலையாய் இருக்கும் போல அய்யா திட்டுவாங்க..”

 

“மாமாட்ட நா சொல்லிக்கிடுறேன்..உனக்கு பிடிச்சுரு கில்ல??சரி நீ நல்லா பண்ணு..நீ பாடுறது வீடியோ எடுக்க சொல்லு..நிறைய போட்டோஸ் எடு.. எனக்கு நேரமாச்சு ஆஃபீஸ் கிளம்பனும்…” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

‘அம்மாவிடம் கேட்கலாமா அப்பாவிடம் சொல்லலாமா’ என்று சில நிமிடங்கள் குழம்பினாள். ‘அன்று ஒரு புத்தகம் வாங்க அவ்வளவு தயக்கமாக இருந்தது. இன்று இவ்வளவு விலையில் ஆடை, அன்னை தந்தை அனுமதி இன்றி இவ்வாறு செய்வது சரியாகுமா..இப்போது அதைப் போடாவிட்டால் அவ்வளவு அக்கறை எடுத்தவனின் செயல்களை அவமதித்தது போல் ஆகிவிடுமே’ என்று அவளின் சிறுமனது தவித்தது…

 

அதனை மட்டும் மனதில் நிறுத்தி, அந்த ஆடையை அணிந்து கொண்டாள்.. விடுதியின் ரசம் போன கண்ணாடியில் பார்த்த போதே அவ்வளவு அழகுடன் மிளிர்ந்தது அந்த ஆடை.

 

காலை வெயில் பட்டு தெறித்ததும், ஆடையின் பட்டு நிறம் , பொன்னிறம் கொண்டு மின்னி, வானிலிருந்து வந்த தேவதையோ இவள் என மயங்கும் வண்ணம் இருந்தது அந்த ஆடை..தன்னை பார்த்து தானே வியந்து, சிவந்த அவளின் முகசிவப்போடு போட்டியிட்டது அவளின் தோளைத்தழுவி நின்ற இளம்சிவப்பு மேல்துணி….

 

தளரப் பின்னியிருந்த சடையை பிரித்து விரித்து விட்டவள், மாநகரின் நாகரீகத்தைப் பின்பற்றியவளாய் அங்கங்கே கிளிப்கள் மூலம் பரந்த குழல் கற்றைகளை அடக்கி, சுருள் சுருளாக படர்ந்து தொங்கும் வண்ணம், பிரித்து சீவி, அலை அலையாய் நெளியவிட்டாள். கழுவி துடைத்த முகத்தில் சிறு செந்நிற சந்து, அவளின் ரோஜாவண்ண முகபோலிவைக் கூட்டியதாய் இருந்தது.

 

எந்த ஒப்பனையும் இன்றி மிளிர்ந்த அவளின் அழகினைப் பார்த்து தினமும் பார்க்கும் திவ்யாபாரதியே திகைத்தால் மற்றவர் நிலை சொல்லவும் வேண்டுமோ!!

 

      விழா நடக்கும் கலையரங்கத்தை சென்று அடைந்த அவளை பார்த்த நித்யாவிற்கும் பெருமை பிடிபடவில்லை..,” வாவ்……தோத்தி..நீ எவ்ளோ கூப்சூரத்.. லட்க்கி னு…இப்போ தான் தெரியுது…எத்தனை பேர் இன்னிக்கு கவுந்தடிச்சு விழப்போறாங்கன்னு தெரியலையே…” எனவும் அதை ரசிக்காத செல்லகிளியின் முகம் போன அழகைப் பார்த்து…நித்ய கௌரி பெரும் குரலில் சிரித்தவாறு,அவளின் தோளை பற்றி இழுத்து அணைத்தவள், தன் தோழிகளுடன் இருக்குமாறு பணித்துவிட்டு விழா ஏற்பாடுகளை கவனிக்க சென்றாள்..

 

விழாவினை ப்ரீத்தி அழகிய ஆங்கிலத்தில் மற்றும் மழலையான தமிழில் தொகுத்து வழங்க கல்லூரி முதல்வர் தலைமையில் அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

வரவேற்பு நடனமாக தேசீய ஒருமைப்பாட்டை விளக்கும் பாடல் வரிகளைக் கொண்ட ‘பானா’ ஹிந்தி படத்தின் ‘தேஷ் ரங்கீலா ‘ பாடலுக்கு நித்யாவும் அவளின் நான்கு தோழிகளும் நடனம் ஆடினர்.மிக அழகான அசைவுகளோடு ஆடிய நதானம் அனைவரையும் மயங்க வைத்தது.

 

தன் தோழியுடன் அமர்ந்திருந்த செல்லக்கிளி எல்லோரும் அலைபேசியில் எடுப்பதைப் பார்த்து, தன் அத்தான் சொன்னது நினைவு வர, தன் கவனம் ஈர்ப்புபவற்றை படங்களவும் ஒலிஒளிப் படங்களாகவும் தன் அலைபேசியில் எடுக்க தொடங்கினாள். திவ்யாவும் அவள் பங்கிற்கு தன் அலைபேசியில் அனைத்து நிகழ்வுகளையும் சுருட்ட தொடங்கினாள்.

         செல்லகிளியின் பெயர் மேடையில் அழைக்கப்பட்டதும் அலைபேசியை திவ்யாவிடம் தந்துவிட்டு சிறு நடுக்கத்துடன் மேடை ஏறினாள், அவளை பற்றிய அறிமுகம் ப்ரீத்தி கொடுத்ததும் என்றும் இனிக்கும் பாடல, செல்லகிளியின் குரலில் ஒலிக்க ஆரம்பித்ததும் அரங்கம் நிசப்தம் ஆகியது.

 

 

‘யமுனை ஆற்றிலே 

ஈரகாற்றிலே

 கண்ணனோடு நான் ஆட

பார்வை பூத்திட

பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட…….

 

இரவும் போனது.. பகலும் போனது..

மன்னன் இல்லியே கூட..

இளைய கன்னியின்

 இமைத்திடாத கண்

இங்கும் அங்குமே தேட..

 

ஆயர்பாடியில் கண்ணன் இல்லியோ…….

 

ஆசைவைப்பதே அன்பு தொல்லையோ……..

 

ஆயர்பாடியில் கண்ணன் இல்லியோ..

ஆசைவைப்பதே அன்பு தொல்லையோ…

 

பாவம்…..ராதா……(யமுனை ஆற்றிலே)

 

அரங்கம் முழுவதும் அலையலையாய் பரவியது அவளின் தேமதுரக் குரல்…அனைவரையும் கண்மூடி ரசிக்க வைத்து… யமுனை ஆற்றின் கரைக்கே இழுத்து சென்றது அப்பாடலின் சொல்லாக்காதலைக் குழைத்துக் கட்டிய வரிகள். 

 

பாடி முடித்து ஐந்து நொடிகள் கழித்து கண்கள் திறந்து பார்த்தாள் செல்லக்கிளி.. நித்யா கட்டை விரல் உயர்த்தி சூப்பர் என்பது போல் செய்கை செய்ய..அரங்கம்கைதட்டலில் அதிர்ந்தது..

 

திவ்யா வெற்றிப்புன்னகை சிந்தியவாறே அவளின் அலைபேசியை அவளிடம் கொடுத்தாள். 

 

அப்பாடி கொடுத்தவேலையை சரியாய் செய்துவிட்டோம் என்ற நிம்மதி மட்டுமே செல்லகிளியின் மனதில் நிறைந்து இருந்தது.

 

 

சற்று நேரத்திற்குள்,” புதுசு தானே போட்ட… போட்டோ அனுப்பு “ என்ற செய்தியை தாங்கிய மணியோசை அலைபேசியில் வர ,’ஒன்னு புடிச்சா விட மாட்டாக போலவே ‘ என்று செல்லமாய் அலுத்துக் கொண்டவள்,இதழ்களுக்குள் புன்னகையை அடக்கியவளாய், விடுதியில் எடுத்த ஒரு படத்தை அனுப்பிவிட்டு, அலைபேசியை சத்தமற்ற நிலைக்கு மாற்றி விட்டு அமைதியாய் நிகழ்ச்சிகளைக் கவனித்தாள். 

 

உணவு இடைவேளை போது , அலைபேசியில் கண்களில் இதயக்குறி தாங்கி நின்ற எமோஜியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவள், ‘என்ன ப்ரோக்ராம் கொடுத்த!! பாட்டா டான்ஸா…வீடியோ அனுப்பு “ என்றதைப் பார்த்ததும் வெட்கம் மிக..அலைபேசியை அணைத்து வைத்தாள். 

 

விடுதிக்கு வந்த பிறகு மிகவும் தயக்கத்துடன் அந்த பாடல் ஒளிஒலிப் பதிவை அனுப்பினாள்.

 

‘என்ன கேலி செய்யப் போகிறானோ ‘ என்று பயத்துடன் காத்து இருக்க, பதிலே வரவில்லை. 

 

‘ம்க்கும்..அனுப்பு அனுப்புன்னு அனத்துனாக.. நல்லாருக்குன்னு ஒரு பொம்மையை அனுப்பின்னா குறைஞ்சுருவாகலமா..இல்ல இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தின பாட்ட பாடுறா னு கிண்டல் பண்ணுவாகலோ’ என்ற முணுமுணுப்புக்களுடன் தன் போக்கில் இருந்தாள். 

 

பார்ப்பவர்கள் அனைவரும் பாராட்ட..முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் கைப்பற்றி வாழ்த்து கூற..அவனின் ஒற்றை வாழ்த்துக்குப் பாராட்டிற்கு ஏங்கி நின்றது அந்தக் கிள்ளை மனம்……

 

******************************

 

ஏன் இந்த தவிப்பு….

ஏன் இந்த துடிப்பு…

 

 

தோன்றா துணையாய்

துயரம் நீக்கியவனை…

கண்ணுக்கே தெரியாமல்

காத்து நிற்பவனை..

கணநேரத்தில் 

குழப்பம் தீர்ர்ப்பவனை..

 

கண்ணனென மன்னனென

கண்டு கொண்டாளா…

 

மனதைக் கோவில் என சொன்னவள்..

மன்னவனை குடியேற்றிவிட்டாளா…

 

*************************

 

 

 

சேதி 19

*********

           ஜெர்மனியின் தொழில் நகரமான டோர்ட்முன்ட் நகரத்தின் நதியான எம்ஸ்சேர் அமைதியாக ஓடிக் கொண்டிருக்க, பொழியும் பனியைப் பொருட்படுத்தாது பாலத்தின் மீது நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தான் வனராஜன்.

 

       தொழிற்புரட்சியின் போது பெருகிய நிலக்கரி தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டப் பட்டு முற்றிலும் மாசடைந்த அந்த நதி ,மெல்ல மெல்ல சீரடந்து வருவதை நீரின் நிறம் சொல்ல உற்று நோக்கிய படி இருந்தான் வனராஜன்.

 

     செப்டம்பர் மாத மாலை நேரம் இரவு போல தோற்றமளிக்க, உறையவைக்கும் ஐந்து டிகிரி செல்சியஸ் குளிர் கூட அவனை தாக்க முடியாமல், அமைதியாய் வேடிக்கை பார்த்தது. 

       

           எம்ஸ்சேர் நதி யமுனை ஆறாக மாற ,நதியின் ஒலி தாள லயமாக மாற, காதுக்குள் ஒலித்தது அவனின் செல்லகிளியின் குரல். மனதில் வெம்மை மூட்டிய அந்த குரலில் இருந்து தப்பவே தன் வீட்டை விட்டு வெளி வந்தவன் , துரத்தும் உணர்வுகளை கட்டுப்படுத்த எங்கு செல்வது என்று புரியவில்லை.

 

அவன் தேர்ந்தெடுத்த ஆடை அணிந்து அழகு ஓவியப்பாவையாய் நின்றவளை பார்த்த போது கூட துள்ளாத மனம், அவளின் ஏக்கம் இழையோடிய பாவம் கலந்த பாடலைக் கேட்டதும், துள்ளி குதித்து ,குட்டி கரணம் அடித்து , வெண்பஞ்சுப் பாதங்களை சரணடைந்து விட்டது. 

 

‘செல்லம்மா…..நீ என்ன செய்யறேன்னு உனக்கு புரியுதாடி ,ஏண்டி மனுசனை கிறுக்காக்குற ‘ என்று நூற்றி பதினேழாவது முறையாக அவளிடம் கேட்டு புலம்பிக் கொண்டு இருந்தான் அவன்.

 

அதிலும் ‘கண்ணனோடு தான் ஆட ‘ என்று பாடிய போது அவளின் கண்களில் வந்த மின்னலிலும் , முகத்தில் வந்து சென்ற நாணத்தையும் கண்டவனால் , பறக்க தொடங்கிய மனதை பிடித்து இழுக்க முடியவில்லை. 

 

காதல் கடலில் விழுந்து தத்தளிக்க ஆரம்பித்தவனாய், மூச்சுக்கு தவிக்கும் உணர்வில் வீட்டைவிட்டு கிளம்பி வந்துவிட்டான். 

 

தனது பதிலுக்காக பாராட்டிற்க்காக அவள் காத்துக்கொண்டு இருப்பாள் என்று அவனுக்கு புரியவே செய்தது…. சிறு பெண்…ஏதாவது சொல்லி தன் அடக்க முடியா உணர்வுகளை அவள் மீது கொட்டி விட்டால் அவள் தாங்குவாளா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 ‘வேண்டாம்’ என்று அவனின் முதிர்ச்சியுற்ற அறிவு சொல்ல ‘மாட்டேன்’ என்று புதிதாய் காதல் செய்யும் மனம் சண்டித்தனம் செய்தது. 

அறிவை மனம் வெல்ல, அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான் .  

 

   “ ட்ரெஸ் பிடிச்சிருந்ததா?” என்றான் எடுத்தவுடன்,

 

“ ம்ம் நல்லாருக்கு.. அய்யாட்ட சொல்லாம இதை வாங்கியது தான் பயமா இருக்கு”

 

“ஏன் என்ன பயம்? திருவிழாக்கு அம்மா உனக்கு கொடுத்த ட்ரெஸ் எல்லாம் நான் எடுத்து கொடுத்தது தான். அப்போ எல்லாம் ஒன்னும் சொல்லாதவர் இப்போ சொல்லிட போறாரா !” என்றான் தன்மையாய்..

 

“ம்ம் அது வேற..திருவிழாக்குன்னு அத்தை கையால கொடுப்பாங்க..இது ஒரு காலேஜ் விழாக்குன்னு இவ்ளோ ரூபாய்க்கு எடுத்தா அய்யாக்கு பிடிக்காது..ம்ம்ம்ம்…எவ்ளோ னு சொல்றீங்களா…. அய்யா ட்ட சொல்லி உங்க அக்கோவுண்ட் கு பணம் மாத்த சொல்றேன்…”

 

அவ்வளவு நேரம் இருந்த இனிமையான உணர்வு கலைக்கப்பட்டதில் கோபமானவன்,” பணமெல்லாம் பத்தி நீ ஏன் பேசுற!! விடு …”என்று இழுத்துப் பிடித்த பொறுமையுடன் சொன்னான்.

 

“ நீங்க உங்க அப்பாக்கு கணக்கு கொடுக்கணுமில்ல, என்ன செலவு பண்றீங்க னு..மாட்டிக்கப்போறீங்க” என்றாள் அக்கறையாய்.

 

இதை கேட்டதும் வனராஜனுக்கு சிரிப்பு வந்தது,”ஆமா.. கணக்கு கேட்டு… சரியா சொல்லலைன்னு பெஞ்சு மேல நிறுத்துவாங்க ….. அப்படினு கவலைப் படு”

 

“ச்சு….எதுகெடுத்தாலும் கேலி பேசிட்டு..நீங்க உங்க அப்பாட்ட.. நான் என் அய்யட்ட ஏதும் மறைக்க கூடாதுன்னு தான் சொன்னேன்…..எல்லோரும் பாட்டு நல்லாருக்கு னு சொன்னாங்க..உங்களுக்கு என்ன தோணுச்சு..கேட்டதும்…ரொம்ப பழசா ..காலத்துக்கு பொருந்தாத மாதிரி பாடுன மாதிரி தோணிச்சா…”

 

‘எனக்கு என்னென்ன்வோ தோணுச்சு..அதை எல்லாம் சொன்ன நீ மிரண்டுடுவடி என் செல்லம் ..’ என்று எண்ணியவன், பதில் சொன்னான் பொறுப்பாக,

 

“ ம்ம்ம்..இதெல்லாம் எவர் க்ரீன் சாங்… இத அப்படி சொல்வேனா.ஆமா..உனக்கு ரொம்ப பிடிக்குமா இந்த பாட்டு…ரொம்ப ரசிச்சு பாடின!!!! நல்லாருந்தது”

 

“ம்ம் ரொம்ப பிடிக்கும்..மித்தாலி பானர்ஜி னு ..தமிழ் தெரியாதவுங்க பாடினது..இவ்ளோ அழகா உணர்வோடு பாடிருக்காங்கன்னு தோணும்..இதும் கல்யாணி ராகம் தான். நான் குற்றாலத்துல பாடினேன்னே காற்றில் வரும் கீதமே அதும் கல்யாணி தான்…”

 

“ஹா ஹா அதெல்லாம் …எனக்கு தெரியாது…” என்று நகைப்புக் குரலில் ஆரம்பித்தவன், சற்று மூச்செடுத்து, ஆழமான குரலில் நிறுத்தி நிதானமாக சொன்னான்,” எனக்கு தெரிஞ்ச ஒற்றுமை…. ரெண்டு பாட்டிலும் என் பேர் வருது” என்றதும்…

 

“ஹாங்…….” என்று குரல் எழுப்பியவளாய் திகைத்தாள் .

 

“ஆமா…எங்கம்மா கூப்பிடுற பெயர்..நீ.. தூக்கத்தில மட்டும் சொன்ன பெயர்..!”

 

எனவும் உதடு கடித்து அமைதி ஆனாள்.

 

“இந்த பாட்டெல்லாம் ராகத்தினால பிடிச்சதா…என் பேர் வரதால பிடிக்குதா!!!” என்று குழைந்து வந்த குரல், மனதை ஏதோ செய்வதை உணர்ந்தவளாய்…. பதில் பேச மொழி இல்லாதது போல் திகைத்து விழித்தவாறு நின்றாள் .

 

புத்திசாலியான செல்லக்கிளி இந்த பாடத்தில் மட்டும் கொஞ்சம் மக்கு தானே என்று புரிந்தவனாய் சிரித்தவன் ,என்னை படுத்தி வைத்ததற்கு உனக்கு புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துருச்சு, ஆனால் இன்று இவ்வளவு போதும் என்று எண்ணியவன்,”சரி நேரம் ஆகிடுச்சு..நீ தூங்கு ..குட் நைட்”

 

 

 

“குட் நைட்” என்று அவளுக்கே கேட்காத குரலில் சொன்னவள் அழைப்பு துண்டிக்கப்படுவதை பார்த்து விட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

 விதையாய் விழுந்த கேள்வி முளைத்து பல கேள்விகளைக் கேட்க , தடதடத்த மனதை கையால் அழுத்திய படி யோசித்தாள். பல கேள்விகளுக்கு ஆம் என்ற விடை வரவும் திடுக்கிட்டவள், மனக்கதவை தட்டியவன், எப்போது அனுமதியின்றி கள்வன் போல் உள்நுழைந்தான் என்று பதறிப்போனாள். 

தன் அய்யா மற்றும் அத்தை வீட்டினரை நினைத்து கவலை வந்தது அவளுக்கு. 

 

யோசனையைக் கலைக்கும் வண்ணம் ஈஸ்வரியின் அழைப்பு வந்தது. நேற்று பேச முடியாத சூழ்நிலை என்று கூறியவள் தன் அன்னைக்கு அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்ததை சொன்னவள் , அடுத்த வாரத்தில் சென்னை வந்தாலும் வருவேன் என்று கூறினாள். சற்று தயங்கியவாறு அண்ணனுக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அனைவரும் சொல்வதாகவும் அம்மாவின் அறுவைசிகிச்சைக்கு அப்புறம் அதை பற்றி பேச்சு ஆரம்பிக்க போவதாக பேசிக் கொள்வதாக சொன்னாள். 

 

‘இதை ஏன் என்னிடம் சொல்கிறாள் ‘ என்று புரியாமலே, அன்னை பற்றிய ஈஸ்வரியின் கவலைகளுக்கு ஆறுதல் கூறிய செல்லக்கிளி , படுக்கையில் படித்து கண்களை மூடிக் கொள்ள, எட்டிபார்த்த எண்ணங்களை முயன்று துரத்தி வெற்றியும் கண்டவளாய் உறங்கிப் போனாள்.

*****************

அதேநேரம் தான் கனவு தொழிற்சாலையின் நிர்மாணம்,இயந்திரங்கள் சம்பந்தமான அலுவல்களில் ஆழ்ந்து இருந்த வனராஜனை அலைபேசியின் இன்னிசை கலைத்தது..

 

தந்தை அழைப்பதாக வந்ததைப் பார்த்ததும் அவசரமாக எடுத்து பேசினான்.

 

“ராஜன்! நேத்து கூப்பிட்டுருந்தியா! அலர்ட் ல வந்துருந்தது. காலைல பார்த்தேன், நீ கிளம்பிய நேரம் தொந்தரவு பண்ணவேண்டாம்னு ,பிரீ ஆனதும் கூப்பிடுன்னு செய்தி அனுப்பினேன்..நீ பார்க்கலையா …” என்று கேட்டவரிடம்,

 

‘ நான் என்னவளுக்கு ஆடை தேர்வில் பிசியாக இருந்தேன்..அடுத்து அவள் கிளப்பிய புயலில் அலமலந்து போயிருந்தேன்’ என்று சொல்ல முடியாமல் மனதிற்குள் சிரித்தவன், வழமை போல

 

“எப்படி இருக்கீங்க டாட். சென்னை ல இருக்கீங்களா!” என்று கேட்டான்.

 

“ ம்ம்…நல்லாருக்கேன். இப்போ ரயிலில் இருக்கேன்..சென்னை போய்ட்டு , வேலை முடிஞ்சு திரும்பிட்டு இருக்கேன் . சொல்லு” என்றார்.

 

“ ஓ..ரயிலில் ஆ.. காஸ்(gaaz) பாக்டரி கு இடம் பார்த்தா சொன்னீங்களே! நம்ம பெயருக்கு மாத்தி எழுதிட்டீங்களா!!!”

 

“அது உன் பேர்ல தான் பத்திரம் ரெஜிஸ்டர் பண்ணனும் ராஜன்.. நீ எப்போ வருவதாக இருக்குற? நீ ஊருக்கு போய் ரெண்டு வருஷம் ஆச்சு! வோகேஷன் …. ஏதும் இல்லியா! அப்படி ஏதும் இல்லைனா கூட நீ விடுமுறை எடுத்துட்டு வா..அந்த வேலை முடிச்சுரலாம். …”

எனவும் யோசனையில் ஆழ்ந்தான் வனராஜன். அவனுக்கும் அது சரி என்றே பட்டது. 

 

“எனக்கு பதினைந்து நாள்தான் லீவு கிடைக்கும் டாட். நான் லீவ் அப்ளை பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன் .அந்த நேரம் ரெஜிஸ்ட்ரேஷன் இருக்குற மாதிரி பார்த்துக்கலாம்.”

 

“ சரி ..நான் நாளைக்கு பேசுறேன்.ட்ராவல் ல இருக்குறதல சத்தம் சரியா கேக்கலை”

 

என்று பேசிக் கொண்டிருக்கையிலேயே…தொடர்பு நின்று போனது.

 

 

‘சரி தான் ,ரயிலில் இருக்கும் போது இதற்கு மேல் பேச வேண்டாம் ‘என்று எண்ணியவனாய் அலைபேசியை வைத்தவன், 

 

  இந்தியா செல்வதால் என்ன சாதகங்கள் என்று யோசிக்க ஆரம்பிக்க ,அவற்றை எல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டுக் கொண்டு ,மனதில் குதூகலம் பொங்கியது. மனதுக்கு இனியாள் இருக்கும் இடம் போகிறோம் என்று தளும்பத் தொடங்கிய மனதைத் கடிவாளம் இட்டு அடக்கியவன்,

 

தான் கொஞ்சம் கொஞ்சமாக அவள் நினைவில் தன்னை இழக்கிறோம் என்று எண்ணியவனாய் வலது கையால் தலையைக் கோதிக் கொடுத்தவன் கழுத்தில் கைவைத்து கண்களை மூடி சுகமாய் கண்களுக்குள் தன்னவளின் பிம்பத்தை நிறுத்திக்கொண்டான்… அவளின் முகத்தின் வெட்கம், கண்களின் மின்னல், சிறுக்குழந்தையாய் மலரும் பார்வை எல்லாம் ஸ்லைடு ஷோ போல மனதில் ஊர்வலம் போனது.

 

இந்த மாதிரியான தவிப்பும் உணர்வும் இதுவரை எந்த பெண்ணிடமும் உணர்ந்ததில்லை, அறிந்ததில்லை என்று அவன் மனம் தெளிவாக உணர்த்தியது.. 

 

  அவள் தானா…தன் உயிரின் மறு பாதி இவளே தானா!!! இந்த உணர்வின் எதிரொலி, துடிப்பு அவளுக்கும் இருக்குமா! இருப்பது போல் தான் தோன்றுகிறது.. அப்படி இருந்தால்….அதை அவளும் உணர்ந்து விட்டால்….யாரை பற்றியும்… எதை பற்றியும் கவலை பட போவதில்லை.

 

ஒரு மகனாக செய்ய வேண்டியதை செய்யத்தான் போகிறேன்..அதற்காக எதை விட்டு கொடுத்தாலும்… காதலை…அவள் மீதான உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று எண்ணிக்கொண்டவனின் மனம் ஏனோ புத்துணர்ச்சியுடன் சிலிர்த்து சிரித்தது..

 

ஆழாக்கு சைஸ் ல இருந்துட்டு

மனுஷனை என்னமா ஆட்டி வைக்குறா… வரேன்.. வரேன் என் மாமன் மகளே…என் குட்டி செல்லம்மா…

என்று கொஞ்சிக் கொண்டான் தன்னவளை…

 

  உணர்ந்து விட்ட பூரிப்பில் அவனும், உணர்த்தி சென்ற உண்மையின் தவிப்பில் அவளும் இருக்க நாட்கள் வேகமாக உருண்டு ஓடின.

 

********************** 

               அன்றைய வகுப்பு முடிந்து வெளியே வந்த செல்லக்கிளியும் திவ்யாவும் இன்று கொடுக்கப்பட்ட செய்முறைப் பயிற்சியை எப்படி பண்ணப்போகிறோம் என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

 

       இந்த செய்முறையின் மாதிரிகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு அது உள்ளீட்டு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும் என்று விரிவுரையாளர் சொன்னதும் கவலையோடு கல்லூரி வளாகம் தாண்டி வந்தனர். 

      எழுதுவது, வரைவது என்றால் பரவாயில்லை. உடலின் பல பாகங்களின் மாதிரி அமைப்பு செய்வது தான் கொடுக்கப்பட்ட வேலை. அதற்கு தேவையான பொருட்களை எங்கு வாங்குவது எவ்வாறு செய்வது என்று ஒரே குழப்பம். 

       அவரவர் SB உதவியை தான் நாடியாக வேண்டும் என்று தெளிந்தவராய், நித்ய கௌரி மற்றும் ராஜலக்ஷ்மி யின் வகுப்பறையை நாடி சென்றனர். அங்கு போய் பார்த்ததும் தான் தெரிந்தது, அனைவரும் ப்ரீத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவளின் வீட்டிற்கு போக தயாராகி க் கொண்டிருந்தது. 

         பரிதாபமாக விழித்த இவர்களைக் கண்டு நித்யா, வலைதளத்தில் திரட்ட வேண்டிய தகவல்கள் எடுத்துக் கொண்டு இருக்குமாறும், தான் ஒரு மணிநேரத்தில் வந்து செல்லகிளியை அழைத்துக்கொண்டு சென்று அனைத்தும் வாங்க உதவுவதாக உறுதி அளித்தாள். 

        அதே போல செல்லக்கிளியும் திவ்யா பாரதியும் தகவல்களைத் திரட்டி குறிப்பெடுத்து கொண்டிருக்க , வானம் கருக்க தொடங்கியது. இன்றிலிருந்து வடகிழக்கு பருவ மழை ஆரம்பம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் சொன்ன தகவல் அதிசயமாக நிஜமாகி நடந்து கொண்டிருந்தது.

 

      அப்போது அங்கு வந்த நித்யா,

 “ தோத்தி! வனம் ரொம்ப இருட்ட இருக்கு..காற்று வேற ரொம்ப வீசுது , நாளைக்கு வாங்கிக்கலாமா? மழை வந்துட்டா ப்ராபிளம் ஆகிரும்” என்று சொல்ல, சரி என்று பாவமாய் தலை அசைத்தனர் செல்லமும் திவ்யாவும்.

 

பின் என்ன நினைத்தாளோ, “ சரி வா சீக்கிரம் போய்விட்டு வந்து விடுவோம் “ என்று செல்லக்கிளி யை அழைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள்.

 

வாங்க வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டு இருக்கும் போது, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு ப் பிறகு வனராஜனின் எண்ணிலிருந்து செய்தி வந்ததை பார்த்தாள் செல்லக்கிளி. 

“எங்க இருக்குற?” என்று கேட்ட செய்திக்கு பதிலாக, தன் இருக்கும் இடத்தை பகிரும் வசதியை தேர்ந்தெடுத்தது location share கொடுத்தாள்.

 

 “ இந்நேரத்தில் ஹாஸ்டல் ல இருக்காம , இங்க என்ன பண்ற ! “ என்ற கேள்விக்கு, சுருக்கமாக,”ப்ரொஜெக்ட் கு சாமான் வாங்க” என்று அனுப்பினாள்.

 

  விட்டு திரும்பும் போது காற்று வேகமாக வீச தொடங்கியது. மழைத்துளி கள் லேசாக விழ ஆரம்பித்தன. போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி பத்து நிமிடங்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தனர். நித்யாவின் அலைபேசி வேறு மின்சாரம் இன்றி உயிர்விட்டு இருக்க, செல்லகிளியிடம் கூகிள் மேப் ஐ திறக்க சொல்லி ஹாஸ்டல் செல்ல வேறு வழி இருக்கா என்று பாரு என்று சொல்ல அருகில் இருந்த தெருவின் வழியாக பாதை காண்பித்தது. சரி என்று உள்ளே நுழைந்து செல்ல செல்ல அது சிறு தெரு,சந்து வழியாக எல்லாம் போக சொல்லியது. அதன் படி போய்க்கொண்டே இருந்த போது வண்டி திடீரென நின்று விட்டது. திரும்ப திரும்ப அதை உயிர்ப்பிக்க முயன்றதை விரும்பாதது சற்று நேரம் உறுமியது, பின் மொத்தமாக அமைதி காத்தது.

 

      காற்று வேறு வேகமாக வீசத் தொடங்க இரு பெண்களும் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர். மீண்டும் வனராஜனிடம் இருந்து செய்தி வந்தது,”ஹாஸ்டல் வந்துட்டியா !” என்று.

 

 ஒரு வினாடி தயங்கியவள்,மீண்டும் லொகேஷன் share கொடுத்துவிட்டு, “நோ..வண்டி ரிப்பேர்.”.என்று செய்தி அனுப்பி முடிக்கவும் தூறல் விழ ஆரம்பித்தது. 

 

ஹையோ என்று தலையில் கைவைத்த நித்யா, செல்லக்கிளி அலைபேசியில் இருந்து மன்யுவிற்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை என்றதும் ஏதோ யோசித்தவளாய் தன் டைடன் கடிகாரத்தில் உள்ள ட்ராக்கர் ஐ ஆன் செய்து விட்டு ,செல்லகிளியின் அலைபேசி மேப் பார்த்தவாறு, “வா வேகமா நடந்தா பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்துரும். நாம அங்கே ஆட்டோ பிடிச்சுக்கலாம் “என்றவாறு அவள் கை பற்றி வேகமாக நடக்க தொடங்கினாள்.

 

காற்று அதிகமாகி ,மழையும் கொஞ்சம் பெரிதாக தூற ஆரம்பித்ததும் ஆள் அரவமற்று இருந்த சிறு சந்தில் இருவரும் ஓட தொடங்கினர். அப்போது நித்யா மனதிற்குள் பயந்தது போல் மின்சாரம் போய்விட்டது.

 

இருவரும்..எந்த வழியில் செல்வது என் திகைத்து நிற்க, எதிரே பாதி கட்டிய நிலையில் இருந்த ஒரு கட்டிடத்தில் இருந்த நால்வர் இவர்களை வெறித்து பார்த்தனர்….

 

 

****************

 

 

சேதி 20

*********

அன்று ப்ரஹம்மமுஹூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 3.30 போது தான் விமானத்தில் சென்னை வந்து இறங்கி இருந்தான் வனராஜன். ஜெர்மனியின் டோர்ட்முண்ட நகரிலிருந்து பதினாறு மணிநேரம் பயணம் செய்து சென்னை வானூர்தி நிலையம் வந்தவன், அங்கிருந்த வாடகை வாகனத்தில் எழும்பூர் வந்து சேர்ந்தான். ரயில் நிலைய த்திற்கு அருகில் இருந்த தங்கும் விடுதியில் முன்பதிவு செய்து இருந்ததால், அந்த அறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தான். வேம்பகோட்டை செல்ல, இரவு ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்ததால், இதுவே வசதி. செல்லக்கிளி யின் விடுதி அங்கிருந்து பத்து நிமிட தூர பயணத்தில் இருந்ததும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

 

அன்று பேசிவிட்டு வைத்தது தான், இரு வாரங்கள் ஆகியும் எந்த செய்தியும் கிடையாது,அழைப்பும் கிடையாது. அதிர்ச்சியில் இருந்து வெளிவரட்டும் என்று எண்ணிய வனராஜனுக்கும், அடுத்து இந்தியா செல்லவேண்டிய பயண ஏற்பாடுகளில், முடிக்க வேண்டிய அலுவல்களில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

 

இரவின் தனிமையில் , அவளின் நினைப்பு வரும். அது தான் நேரிலேயே பார்க்க போகிறோமே என்று சமாதானப் படுத்தி வைத்திருந்தான் , தளும்பி தவித்த மனதை. இரவு நேர தாலாட்டாக மாறிப் போய் இருந்தது, அவளின் ‘யமுனை ஆற்றிலே’ பாடல்.

 

ஜெர்மனிக்கு இந்தியாவிற்கும் நாலரை மணிநேர வித்தியாசம். பொதுவாக இந்த ஜெட்லாக் எனப்படும் விண்பயண அலுப்பு, நேர குழப்ப மாற்றம் அவனை பாதிப்பதில்லை. ஆயினும் நாலரை மணிக்கு படுத்தவன் பதினோரு மணிவரை நன்கு தூங்கி எழுந்தான். அன்னை,தந்தை,ஐயாம்மா அய்யப்பா, அக்கா வேதகௌரி,மச்சான், மாமா வீட்டினர் எல்லோரிடமும் நிதானமாக பேசி முடித்தான், செல்லகிளியைத் தவிர.

சென்னை யில் உடன் படித்த நண்பர்களும் நண்பிகளும் ,மதிய உணவு நேரத்தில் வந்து ஒன்று கூடினர். இரு வருடங்கள் கழித்த பார்த்த மகிழ்ச்சியுடன், அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்த போது, வனராஜன், அமைச்சரின் மகனான நெருங்கிய தோழனிடம் நன்றி தெரிவிக்க,”ஹே! உன்னால டாட் கு மினிஸ்ட்ரில நல்ல பேர் தெரியுமா .ராகிங் கு எதிரா சரியான நேரத்துல நடவடிக்கை எடுத்ததா பொதுமக்கள்ட்ட இருந்து நிறைய பாராட்டு லெட்டர்ஸ் வந்திருந்தது. பிரஸ் ல கூட புகழ்ந்து தள்ளிட்டாங்க… டாட் உனக்கு தாங்க்ஸ் சொல்லணும் னு சொல்லிட்டு இருந்தாருடா மச்சான்..” என,

 

அவர்களின் பேச்சை கவனித்த தோழியான பூஜா,” என்ன ராகிங்?” என்று கேட்க,

 

“ஹே, காலேஜ்ஸ் ல ராகிங் கூடாதுன்னு போன மாசம் ஒரு ஜீ ஓ வந்து எல்லோரும் அதையே பத்தி பேசி வைரல் ஆச்சே அது…” என்றான் அமைச்சர் மகனான தினேஷ்.

 

அருகில் இருந்த ரேஷமா,” இவன் மாமா பொண்ண காப்பாத்த போய், எல்லா பிரேஷர்ஸ் யும் காப்பத்தி ஓவர் நயிட் ல உங்க டாடி ஓபாமாவா ஆன கதை தானே” என்று கலாய்த்தாள்.

 

 

அனைவரும் சிரிக்க வனராஜன்,

ரேஷ்மாவிற்கும் நன்றி சொன்னான், அவனின் தொழில் தட்டியவள் ,” நமக்குள்ள என்ன தங்க்ஸ் சாரி எல்லாம் ….ஏன் ராஜ், நீ அந்த பொண்ண டாவடிக்குரியா? செம அழகு அவ… ஓகே சொல்லிட்டாளா உனக்கு!!” என்று குறும்பாய் கேட்க ,அனைவரும் அதை பிடித்து கொண்டு அவனை கேலி செய்ய தொடங்கினர். அனைத்து கேலி,கேள்விகளை ஒற்றை புன்னைகையில் சமாளித்து நிறுத்தியவன், அலைபேசியில் வந்த செய்தியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

 

“ என்ன மச்சா..ரொம்ப ஹாப்பி ஆகுரான்.. உன் ஆளுட்ட இருந்தா!!” என்று விடாமல் நோண்டியவர்களை, “ ஒரு முக்கியமான ஆளை சந்திக்க முயற்சி செஞ்சுட்டு இருந்தேன்..அவுங்க அட்ரஸ் கிடைச்சிருக்கு..அவுங்களை பார்க்க போகணும் “ என்றவனிடம்..அனைவரும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

 

துப்பறியும் நிறுவனித்தினர் பலநாட்களுக்கு முன்பே சொல்லி இருந்தபடி சென்னை பல்கலைக்கழக த்தில் படித்த கௌரி அகர்வாலைத் தேடி, அவரின் கல்வித்தகுதி கொண்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேட, சென்னை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆன அவரின் அலுவலகம் மற்றும் வீடு முகவரியை கண்டுபிடித்து இருந்தனர்.அவன் ஜெர்மனியில் இருக்கும் போதே அந்த விவரங்களை மின்னஞ்சல் செய்தவர்கள், இப்போது வாட்ஸப் செய்தியாக அனுப்பி, கூகுள் மேப் மூலமாக வழி காட்டி இருந்தனர்.

 

அவரின் வீடு சௌகார்ப்பேட்டையில் என்றதும் கடிகாரத்தில் மணி பார்த்த வனராஜன்..இப்போது போனால் சரியாக இருக்கும் என்று எண்ணி கிளம்பி வெளியே வந்தான். கல்லூரி விடும் நேரத்திற்கு சரியாக சென்று செல்லகிளியை அதிர்ச்சியில் ஆழ்த்தி அவளின் வாயில் இருந்து முடியாவிட்டாலும்,கண்களில் ஆவது அவள் காதலைப் பார்த்து விடுவது என்ற அவனின் திட்டம் மாறிப் போனது. கௌரியை சந்தித்து விட்டு விடுதியில் கூட சென்று பார்த்து கொள்ளலாம் என்று எண்ணியவனாய் கௌரி மேத்தா@ கௌரி அகர்வாலை சந்திக்க கிளம்பினான்.

 

சென்னையில் தற்போது பிரபலமாக இருக்கும் ஓலா கால் டாக்ஸி எனப்படும் வாடகை வண்டியை பேசி எடுத்துக்கொண்டு சௌகார்பேட்டை நோக்கி சென்றான்.

 

கால் டாக்ஸி உள்ளெ நுழைய முடியாத சந்து ஆக இருந்ததால், பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகனத்தை நிறுத்த சொல்லி விட்டு, நடக்க ஆரம்பித்தான்.

அவன் சென்ற போது மணி ஐந்து ஆகி இருக்க வீடு பூட்டி இருந்தது. வானம் வேறு இருட்டிக் கொண்டு மழை வருவது போல் இருந்தது. வழக்கமாக ஐந்தரைக்கு வந்து விடுவார் என்று அருகில் உள்ளவர்கள் கூறியதால் அங்கேயே மெதுவாக நடந்தவாறு காத்து கொண்டு இருந்தான். மணி ஆறை த் தாண்டி ஏழு ஆக ஆரம்பித்ததும், வனராஜனின் மனதிற்குள் இப்போது விட்டால் செல்லகிளியை பார்க்க முடியாது என்று தோன்ற, அவளுக்கு செய்தி அனுப்பினான். “எங்க இருக்குற?” என்று கேட்டதற்கு பதிலாக மேப்ஸ் லொகேஷன் வந்தது. பார்த்த போது இங்கிருந்து பத்தி நிமிடம் நடந்தால் அடைந்து விட கூடிய ஒரு தெருவைக் காட்டியது. குழம்பியவனாய்,”ஹாஸ்டல் ல இல்ல யா?..இங்க என்ன பண்ற? “ என்று கேட்க, “ப்ரொஜெக்ட்… சாமான் வாங்க…” என்று வந்ததும் , இப்போது கிளம்பினால் அவளை பார்த்து விட முடியுமா என்று யோசித்தான்.

 

அப்போது அங்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்து நிற்க , வட இந்திய சாயல் கொண்ட ஆறரை அடி ஆணழகன் அதிலிருந்து இறங்கி, கௌரி அகர்வால் வீடு என்று அடையாளம் காட்டப்பட்டிருந்த வீட்டின் கதவைத் திறந்தான்.

 

வனராஜன், அவனருகில் சென்று ,”ஐ ம் வனராஜன். வான்ட் டூ மீட் மிஸ்ஸர்ஸ் கௌரி அகர்வால் “எனவும் ,

அறிமுக புன்னகை கூட தராதவனாய்,”பார் வாட்?” என்கேள்வி வந்து விழுந்தது,சற்று நிதானித்தவன்,

 

“ஐ அம் பரம் வேம்பகோட்டை, சிவகாசி “ எனவும்,

 

நெற்றி சுருக்கி யோசித்தவன், ஏற்கனவே கேட்டிருந்த ஊர் பெயர், சொத்து விஷயமாக அம்மா சொல்லிக் கொண்டு இருந்த பெயர் என்று தோன்ற,”ஆவ்….(வாங்க)” , என்று சொல்லிவிட்டு உள்ளே அழைத்து சென்றான்.

 

வரவேற்பறையில் அமர்ந்தவன் கண்களை சுழற்றி பார்க்க, அவசியமான அலங்கரங்களுடன், சுத்தமாகவும் நேர்த்தியாக வும் இருந்தது வீடு. மருந்துக்குக் கூட ஏதும் புகைப்படங்கள் இல்லை.கடவுளர் படங்களும் இல்லை. ஒரு ஜைன துறவியின் படம் மட்டும் மாலை மாட்டப் பட்டு இருந்தது.

 

தன் அலைபேசியை எடுத்த அந்த இளைஞன், ,” ஹா மா…..” என்று அழைத்து பேசுவதை கவனித்தான் வனராஜன். பள்ளியில் மற்றும் பெங்களூருவில் இருந்த போது ஹிந்தி பரிச்சயம் என்பதால் அவனுக்கு அந்த இளைஞன் பேசுவது புரிந்தது.அவன் தாயுடன் பேசுகிறான் என்று அனுமானித்தவனின் இதயத்துடிப்பு அதிகரித்தது.

 

பேசி முடித்து வந்தவன்,” மா க்கு மீட்டிங் இருக்காம், இன்னும் ஒன் ஹவர் ஆகுமாம் வர…” என்றுவிட்டு உள்ளே சென்று விட்டான்.

 

சற்று பொறுத்து வந்தவனின் கைகளில் ஏதோ பானம் இருக்க ,வனராஜன் வேண்டாமென்று மறுக்கவும் தோளை க் குலுக்கியவாறு அவன் எதிரே அமர்ந்தான்.

 

“ எதற்கு வந்துருக்கீங்க னு தெரிஞ்சுக்கலாமா? “ என்று கேட்டவனிடம் ,என்ன சொல்ல என்று யோசித்தவன்,” நான் சௌந்தர ராஜன் பையன் “ என்று விட்டு அவன் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

 

அதற்கும் அவனின் முகத்தில் எந்த பாவனையும் இல்லை..தன் போக்கில் பானத்தை அருந்தியவன்,” ம்ம் அம்மாக்கு தெரிஞ்சவங்களா…லேண்ட் விஷயமான்னா நீங்க மாமாஜி ட்ட தான் பேசணும்” எனவும், வனராஜன் இல்லை என்று தலை அசைத்தான்.

 

“ ஓகே உக்கார்ந்து இருங்க நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.

வெளியே காற்று வேகமாக வீசுவதும் சாரல் மழை பெய்வதும் கண்ணில் பட, அலைபேசியில் செல்லக்கிளிக்கு ,”ஹாஸ்டல் போய்ட்டியா?” என்று அனுப்ப,”நோ..வண்டி ரிப்பேர்..” என்று விட்டு திரும்ப லொகேஷன் வரவும், அதைப் பார்த்தவன் , அதிர்ந்தான். அது காட்டிய இடம் மெயின் ரோடு ஆக இல்லாமல், ஏதோ சிறு சந்தாக இருக்க அதுக்குள்ள ஏன் போனாள்.. ஏதோ விபரீதம் என்று தோன்றியது.

அப்போது அருகில் இருந்த அந்த இளைஞனின் அலைபேசி ஒலித்தது.

 

அடுத்தவரின் அலைபேசியை பார்ப்பது அநாகரீகம் என்று இருக்கும் மேலைநாட்டு நாகரீகம் கடைபிடிக்கும் ஊரில் இருந்து வந்தவன் ஆதலால் அதில் ஒளிர்ந்த செல்லக்கிளியின் எண்னை, வனராஜன் கூர்ந்து கவனிக்கவில்லை.

 

ஒலி கேட்டு டீ ஷர்ட் ஐ மாட்டியவறு வெளியே வந்தவனிடம் அவன் அலைபேசியில் அழைப்பு வந்ததை சொன்னதும்,எடுத்துப் பார்த்தவன், sms ல நித்யாவின் ட்ராக்கர் ஆன் செய்ய பட்ட மெஸ்ஸேஜ் வர, நெற்றியை சுருக்கி யோசித்தான்.

 

வனராஜனக்கும் உடனே செல்லக்கிளி இருக்கும் இடம் சென்று விடலாம் என்று தோன்ற, தான் வந்த வாகன ஓட்டியை அழைத்தவன் ஒரு குறிப்பிட்ட இடம் சொல்லி அங்கு நிற்குமாறு சொன்னான்.

 

அவன் பதட்டத்தைப் பார்த்த இளைஞன் ,” எனித்திங் ராங்!!!”

 

“ எஸ்..ஐ ஹவ் டூ கோ இம்மீடியடலி…பிலீஸ் டெல் யூர் மாம் ,சன் ஆப் சௌந்தரராஜன் கேம் டூ மீட் ஹெர். “ என்றுவிட்டு தன் கார்ட் ஐ க் கொடுத்தான். “

 

“ஓகே வாங்க நான் உங்க கார் இருக்குற இடத்துல ட்ராப் பண்றேன்” என்றவன் வேகமாக பூட்டி விட்டு தன் ராயல் என்பீல்டை கிளப்பினான்.

 

இருவரும் அந்த இயந்திர புரவி ஏறி வேகமாக பயணப்பட்டனர்…இருவரும் செல்வது ஒரே இடத்திற்கு என்பதை அறியாதவராய்….. மழை தூறல் வலுக்க ஆரம்பித்தது.

 

***********************

வேகமாக நடந்து கொண்டிருந்த போது மின்சாரம் தடை பட்டதால் , நித்யா மலைத்து நின்றது ஒரு நொடி நேரம் தான். “தோத்தி உன் மொபைல் ல சார்ஜ் இருக்கு தானே” என்று கேட்டவள் “டார்ச் ஆன் பண்ணு” என்றாள்.

 

செல்லக்கிளி நீட்டிய அலைபேசி காட்டிய ஒளியில் பாதை புலப்படவில்லை. எதிரே பாதி கட்டிய நிலையில் விடப்பட்டிருந்த கட்டிடத்தின் உள்ளே இருந்து பார்த்த நால்வரை பார்த்ததும், செல்லக்கிளி கௌரியின் கைகளை இறுக்கப்பற்றி கொண்டாள்.

 

ஒளியில் தெரிந்த இளம்பெண்களை ப் பார்த்ததும் அந்த நால்வரில் ஒருவன் எழுந்து வர, இருவருக்கும் இதயம் படபடக்கத் தொடங்கியது.

 

வந்தவனின் மேலிருந்து வந்த புகை நாற்றம் அவன் ஏதோ போதை பொருள் எடுத்து இருக்கிறான் என்று அறிவித்தது.

 

“இன்னா!!..சபா அன்பிச்சானா…” எனவும்,

 

செல்லக்கிளி இவன் ஏதோ விபரீதம் பண்ண போகிறான்.. யாரோ என்று தவறாக எண்ணி கொண்டு கேட்கிறான் என்று புரிந்தவளை,” வாங்க ஓடிரலாம் “ என்று நித்யாவின் கை பற்றி இழுத்தாள்.

 

ஓடலாம் என்றால் எந்த பக்கம் செல்வது என்று சுற்றி பார்த்த போது ஆங்காங்கே மெழுகுவர்த்தி ஒளியும், இன்வெர்ட்டர் உதவியால் எரிந்த சில விளக்குகளும் புலப்பட்டன. வீடுகள் இருக்கிறது என்று ஆசுவாசம் அடைந்த செல்லக்கிளி, சென்னை மாநகர் பற்றி தெரியாதவள்.

 

அடுத்த வீட்டில் கொலை நடந்தால் கூட இரண்டு நாள் கழித்து அப்படியாமே என்று விசாரிக்கும் ஊர் இது என்று அறிந்த நித்யாவின் பார்வையில் கூர்மை கூடியது.

 

அப்போது தடை பட்டிருந்த மின்சாரம் வந்தது ஆயினும் காற்றின் காரணமாக வயர் ஏதும் அறுந்து விட்டதோ என்னவோ அரை மின்சாரமாக வந்து ,அழுது வடிந்தது தெரு விளக்கின் ஒளி.

 

 

அவர்களின் முன் நின்றவன் திரைப்படங்களில் வரும் ரௌடிகளின் சர்வ லக்ஷணங்களில் ஒன்று கூட குறையாமல், மதர்த்த உடலுடன் தோள் வரை வழியும் கேசமும் முகம் நிறைய தாடியும் ஆக இருந்தான். போதை ப் பொருள் எடுத்தவனின் கண்கள் போல் மயக்கத்தில் மிதக்காமல், இரை கண்ட வேட்டை புலியின் கண்கள் போல் அந்த அரை வெளிச்சத்தில் மின்னிய விழிகளால், அவரகளை மேலும் கீழும் பார்த்தவன், “டேய் சுரேசு, இந்த சபா பையன் குஜிலிங்கள அனுப்பாம ஏமாத்திக்கினான் போல டா…ஆனா ஷோக்கா…. தொக்கா….. ரெண்டு மாட்டிகிச்சு” எனவும் செல்லக்கிளிக்கு குலை நடுங்க ஆரம்பித்தது.

 

அங்கே அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவாறு ,போதைப் பொருள்களை எடுத்துக்க கொண்டிருந்த மூவரும் நிதானமாக எழுந்து வர தொடங்கினர்.

 

“இங்க பாரு..அமைதியா ஒத்துழைச்சினா துட்டுக்கு துட்டு சோகத்துக்கு சொகம்… இல்லாங்காட்டி உன் உடம்பு தான் புண்ணா போகும் பாத்தத்துக்கோ.

 

செல்லக்கிளியும் நித்யாவும் சுற்றி பார்த்து இடது கை பக்கமாக பாதை திரும்புவதை பார்த்தனர்.

 

அவர்களின் பார்வை செல்லும் வழியில் வேகமாக சென்று இருவர் மறைத்து கொண்டனர்.

 

வீல் என்று அறிய செல்லக்கிளி யாராவது வாங்க காப்பதுங்க என்று கத்தவும் , வழியை மறைத்து நின்றவர்களில் ஒருவன்,”இது சல்பேட்டா மணி ஏரியா மே கண்ணு..எவனுக்கும் தில்லு கிடையாது மணி பசங்களுக்கு எதிரா விரல் தூக்க “ எனவும் ,

 

நித்யா செல்லகிளியின் கையை எடுத்து விட்டு தன் சட்டையின் கைகளை மடக்கி விட்டவளாய் நிமிர்ந்து நின்றாள்.

“அட குட்டி பைட் பண்ண போறியா….தோ பார்ரா…..அது கூட குஜால தா இருக்கும் “ என்று இளித்தவன் , அருகே வந்து அவள் கரத்தைப் பிடிக்க முயல, முந்திக் கொண்டு அவனின் மணிக்கட்டை இறுக்கி பற்றியவள் ,சட்டென்று அவனை நோக்கி அவன் கரத்தை மடக்கி தன் முழங்காலைக் கொண்டு அவன் உயிர் நிலையில் வேகமாக தாக்கினாள்.. அவளால் தாக்கப்பட்டவன் அலறிய படி கீழே விழுந்ததும் , கட்டடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தவன் வேகமாக வந்து

பின்னால் இருந்து நித்யாவின் கைகளோடு சேர்த்து வயிற்றை சுற்றி அழுத்தி பிடித்து தூக்கி முயன்றான்.

 

கால்களை அழுத்தி ஊன்றிய நித்யா தன் வலது முழங்கையால் அவனின் வலது பக்க இடுப்பையும் இடது கையால் அவன் தொடையிலும் ஓங்கி ஓங்கி அடித்தாள். வலியில் கைகளை விலக்கியவனின் புறம் வேகமாக திரும்பியவள் பாய்ந்து வலது கை விரல் நகங்களால் கண்களை குறி வைத்துக் குத்தினாள்..

 

“ஊ…..” என்று அலறியவாறு அவனும் மண்ணில் விழுந்து புரண்டான்.

 

மிரண்டு பார்த்துக்கொண்டிருந்த செல்லக்கிளி, நித்யா முதலில் தாக்கியவன் எழுந்து கொள்ள முயற்சிப்பது பார்த்து வேகமாக ஓடி, கீழே இருந்த மண்ணை வாரி அவன் முகத்தில், கண்களில் அடித்தாள்.

 

இவ்வளவு நேரம தூறலாக பெய்து கொண்டிருந்த துளிகள் கனத்து மழையாக பொழிய ஆரம்பித்தது..

 

வழியை மறைத்து நின்று கொண்டிருந்த இருவரும் வேட்டை நாய் போன்று வெறியுடன் அடி மேல் அடி வைத்து முன்னால் நகர்ந்து வந்தனர். தன் மேல் பாய வந்தவனின் ந்தோளை இறுக்கப்பற்றிய நித்யா வேகமாக முழங்காலை அவனின் உயர்நிலையை தாக்க மடக்கி நீட்ட, கைகளால் அதை தடுத்தவன் சுதாரிக்கும் முன் இன்னொரு முழங்கால் முட்டி கொண்டு தாக்கினாள். “ஆவ் …….”என்று அலறியவன் அவள் கழுத்தை பிடிக்க முயல அவனின் கையைப் பற்றி முறுக்கியவாறு அவனின் பின்புறமாக சென்றவள் இடது கையால் அவனின் முடியைப் பற்றி பின்புறமாக வேகமாக இழுத்து தரையில் தள்ளினாள்.

 

நித்யாவின் புத்திசாலித்தனமான தாக்குதல்களால்,தான் கராத்தே வகுப்பில் கற்ற வித்தைகளை நினைவில் கொண்டு வந்திருந்த செல்லக்கிளியும் தைரியம் வர பெற்று தன் முன் வேகமாக வந்தவனை பார்த்தவாறு இருந்தாள். அவன் வெறியுடன் வேகமாக பாய்ந்து செல்லகிளியின் தலைமுடியை பிடிக்க, பற்றிய கையைப்பிடித்தவாறே சுழன்று திரும்பிய செல்லக் கிளி முழங்கையை மடக்கி கொண்டு அவனின் முதுகில் தாக்கினாள்.

 

அவன் அலறிக்கொண்டே குப்புற விழுந்தான். இடமும் வலமும் பார்த்தவள் அங்கு கிடந்த ஒரு சவுக்கு கட்டையை எடுத்து அவனின் பின் மண்டையில் நச்சென்று ஒரு போடு போட்டாள்.

 

செல்லகிளியின் வேகத்தையும் விவேகத்தையும் பார்த்த நித்யா அசந்து போய், “குட் ஜாப் தோத்தி “ என குரல் கொடுத்தவாறே தான் தரையில் தள்ளி இருந்தவனை காலால் எட்டி உதைத்தவள், அவனின் முதுகில் ஏறி குதித்தாள்.

 

அப்போது அங்கு திடீரென ஒளி வெள்ளமென பாய்ந்தது.

 

மன்யு தன் வண்டியின் மீது இருந்தவாறே குதித்துக் கொண்டிருந்த நித்தியாவை பார்த்ததும் , அப்படியே நிறுத்திவிட்டு வேகமாக அவர்கள் அருகில் வந்தான். வந்தவன் சுற்றி பார்த்து விட்டு ஹிந்தியில்,” ஏதாவது மிச்சம் வச்சுறுகியா??” என் கேட்க ,

முழங்கால்களில் கைகளை வைத்து குனிந்து மூச்சு வாங்கியவள், கிடந்தவர்களை வலது கையால் காட்டியவளாய்,

“வேணும்னா கீழ கிடக்கிற எல்லாரையும் எழுப்பி நிக்க வச்சு அடி…. நான் வீட்டுக்கு போறேன் ..” என்று விட்டு அவனின் பைக் அருகில் சென்றாள்.

 

அப்போது வேகமாக ஓடியவாறு அங்கே வந்தான் வனராஜன்.

 

கீழே விழுந்து கிடந்த நால்வரையும் நின்று கொண்டிருந்த அனைவரையும் வேகமாக பதட்டத்துடன் பார்வையால் அளவிட்டவன் பார்வை அவனின் செல்லகிளியின் மேல் நிலை குத்தி நின்றது.

 

அவனை அந்த நேரத்தில் அந்த இடத்தில் எதிர் பாராத செல்லக்கிளி மலைத்து நின்றது சில கணங்களே..

 

அடுத்த நொடி பாய்ந்து வந்து அவன் இடையை தன் கரங்களால் வளைத்து… இறுகக் கட்டி கொண்டு மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

 

வனராஜனும் தவிப்புடன் அவளை இறுக அணைத்து க் கொண்டான். மழையாலும் பயத்தாலும் சில்லிட்டுப் போயிருந்தவளுக்கு,..அவனின் அணைப்பு மிகவும் தேவைப் பட்டதாகவே இருந்தது.

 

அதிசயமாக அவர்களைப் பார்த்து நின்று கொண்டிருந்த மன்யுவும் நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து விட்டு,” கிளம்பலாம்..மழை ஜாஸ்தி ஆகும் போல..இது இவனுங்க ஏரியா..எவனாவது தலைவன்…அடிபொடின்னு வந்து சேருங்குள்ள கிளம்பலாம்..” என மன்யு சொல்லவும் யோசித்த வனராஜன்,” நான் வந்த கார் இங்க தான் தெரு முனைல தான் இருக்கு …நான் இவுங்களை கூட்டிட்டு வரேன் எனவும்,

“ நடக்க வேணாம் …நான் இவுங்க ரெண்டு பேரையும் கொண்டுவந்து காரில் ஏத்தி விடுறேன்” என்று தன் வண்டி அருகில் சென்றான் மன்யு.

 

செல்லக்கிளி வனராஜனை விட்டு விலகாமல் அணைத்தவாறு நிற்க ,குனிந்து அவளின் காதில்,” வண்டில ஏறு செல்லம்மா…போலாம் “ எனக் கூறவும் மறுப்பாய் தலை அசைத்தவள் ,பின் புரிந்து கொண்டவளாய், விலகி நித்யாவின் பின் செல்ல போனவள் நினைவு வந்தவளாய் நித்யாவின் வண்டி அருகே சென்று கீழே விழுந்து கிடந்த பையை எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறினாள்.

 

“ப்ரோ ,வாங்க கொஞ்ச தூரம் தான் அட்ஜஸ்ட் பண்ணி உக்கார்ந்துகொங்க. உங்க கார் வரை போயிடலாம்.” எனவும் யோசிக்காமல் சட்டென்று செல்லகிளியின் பின்னால் ஏறி அமர்ந்தான்.

 

கார் அருகே சென்றதும் இறங்கியவன், “ நீ இப்டியேவா ஹாஸ்டல் போப்போற …என் கூட வரியா ட்ரெஸ் மாத்திகலாம் “ என, “ இல்ல வார்டன் ட ஒன்பதுக்குள்ள வந்துருவேன் னு பர்மிஷன் வாங்கிருந்தேன். என்னை அங்கேயே விட்ருங்க ..” என் மிக மெல்லிய குரலில் சொல்லவும்,

 

சேற்றில் விழுந்து புரண்டது போல் இருந்த ஆடையையும், கலைந்த முடியும்,கசங்கிய முகமும் நடுங்கி கொண்டிருந்த இதழ்களையும் கண்டவனின் மனதில் சுரேலென வலி எழுந்தது. இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை க் கொல்லும் வெறி வந்தது. முகம் இறுக சரி என்று தலை அசைத்தவன், அலைபேசி எடுத்து கடகடவென்று தட்டி மெஸ்ஸேஜ் அனுப்பி விட்டு நிமிர்ந்தான் . சாலை யின் பெருவிளக்கின் வெளிச்சத்தில் நித்யாவை பார்த்து அதிர்ந்தவனின் வாய் தானே உச்சரித்தது,”கௌரி மேத்தா….”

அதைப் பார்த்து மன்யு சிரித்தவாறு,”இவள் என் மாமா மகள் நித்ய கௌரி மேத்தா.

நீங்க பார்க்க வந்தது தான் என் அம்மா கௌரி மேத்தா இல்ல இப்போ அவுங்க கௌரி அகர்வால்.. கௌரி ஹர்ஷா அகர்வால் .பை தி பை நான் மன்யு அகர்வால்…”

 

என்று கை நீட்டினான்…….

 

************************

 

கிளி பேசும்……….

 

 

 

 

 

 

 

 

 

   

       

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
தாமரை

Recent Posts

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

24 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

1 day ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

5 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

(15)   அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…

5 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே! அத்தியாயம் 15

சேதி - 15 “கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும், அவளின்…

6 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

(13)   அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய…

6 days ago