Categories: Ongoing Novel

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே! அத்தியாயம் 15

சேதி – 15

“கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும்,

அவளின் ஆளுமையான குரல் கேட்டு… இன்னமும் மிரட்சி கூடியது பெண்களுக்கு.

எச்சில் விழுங்கியபடி, சரி என்பது போல் தலையசைத்தவர்கள், தலையை சற்றே உயர்த்தி அவள் பார்த்த கீழ்க்கண் பார்வையில் மிரண்டு…

“சரி சீனியர்.” என சேர்த்துச் சொல்லவும்,

‘அது….’ என்பது போல் தலையை மேலும், கீழும் அசைத்தவள்,

“ ‘எம்பிபிஎஸ்’ மட்டும் நில்லு. மத்தவங்க போகலாம்.” எனவும்…

“நாங்க ஹாஸ்டல் சீனியர்… சேர்ந்தே போறோம்” என ஒத்த குரலில் இருப்பை அறிவித்துக் கொண்டனர்.

“ஓ… நீ ரெண்டு பேரும் இந்த பக்கம் வா… பேரு… ஊரு… டிப்பார்ட்மெண்ட்… சொல்லுங்க…!” என்று விட்டு, மார்பின் குறுக்கே கையைக் காட்டியவாறு மீண்டும் ராயல் என்ஃபீல்டு மீது ஏறி அமர்ந்து கொண்டாள்.

“செல்லக்கிளி… வேம்பகோட்டை.” எனவும்,

“அது எங்கே இருக்குது?” என்று சந்தேகத்தைக் கிளம்பினாள் நித்யா பக்கத்தில் தளபதி போல் விறைப்பாக நின்று கொண்டிருந்தவள்.

“விருதுநகர் மாவட்டம் சீனியர்.” என்றாள் செல்லக்கிளி மரியாதையான குரலில்,

நித்யா மீண்டும் தன் கூலர்ஸ்’ஐ அணிந்து கொண்டவளாய்,

“இனி உன்ன நீம் கிலே கி தோத்தி! (ஹிந்தியில் பெண் கிளி) னு தா கூப்பிடுவேன். தோத்தினு கூப்பிட்டா திரும்பி பாக்கணும் சம்ஜெ….” என்று விட்டு அடுத்தவளைப் பார்த்தாள்.

செல்லகிளியின் அருகில் நின்றவள், “நான் திவ்யபாரதி. சேலம்.” எனவும்,

“ சேலம்…. மேங்கோக்கு ஃபேமஸ் தானே… ஓகே இனிமே நீ ‘மாங்கோ’..”

மற்றவர்கள் தம்மை அறிமுகப்படுத்தி கொள்ள தொடங்கவும் பெயர்களை பொறுமையாகக் கேட்டவள் தலையையும் கையையும் அலை போல் அசைத்தவள்,

“உங்களை உங்க சீனியர்ஸ் வந்து கவனிச்சுப்பாங்க!” என்று பெருந்தன்மையாய் சொன்னாள். துள்ளி இறங்கி இடுப்பில் கை வைத்தவாறு நின்றவள், தன் அருகில் கருப்பு பூனை படை போல் முறைத்தவாறு சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டிருந்த தன் தோழிகளை அறிமுகப்படுத்தினாள்.

“இது ப்ரீத்தி, அனுப்ரியா, ராஜலக்ஷ்மி, ஸ்ம்ருதி, மிருதுளா….”

“ தோத்தி அண்ட் மாங்கோ இனி டெய்லி எங்கள்ல யாரைப் பார்த்தாலும் கைலையோ பேப்பர்லயோ ‘சீனியர் ஐ லவ் யூ’ அப்படின்னு எழுதிக் கொண்டுட்டு வந்து காட்ணும். பக்கத்துல லெக்சரர்ஸ் யாரும் இல்லனா. வாய்லயும் சொல்லணும்… ஒரு வாரம் இது செய்யணும். அதை செய்யாட்டி அதுக்கு தனியா பனிஷ்மெண்ட் கொடுப்போம். நெக்ஸ்ட் வீக் வேற டாஸ்க். சம்ஜெ…!” என்றாள் ஆழ்ந்த குரலில், பின் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தவள்,

“இதென்ன மேரேஜ்க்கு போக போறா மாதிரி சில்க் எல்லாம் கட்டிட்டு வந்துருக்கீங்க?”

“அது… சீனியர்…… இன்னிக்கு வெள்ளிக்கிழமை …” என்றாள் மாங்கோ என நாமகரணம் பண்ணப்பட்ட திவ்யபாரதி எச்சில் விழுங்கியபடி.

“ம்ம்… வெள்ளிக்கிழமை… கோவிலுக்கு போய் கூழூத்த போறீங்களா?” எனவும் மிரண்டு வேகமாக இல்லை என்று தலை அசைத்தனர் இருவரும்.

“ட்ரடிஷனல் ட்ரெஸ் ஏதாவது ஃபங்ஷன் நடக்கும் போது போடலாம். மத்த நேரம் ட்ரெஸ் கோட் இருக்கு, சல்வார் கமீஸ், குர்தி தான் போடணும். டிப்பார்ட்மெண்ட் பேரைக் கெடுக்காதீங்க…!” என்றாள் கறாரான குரலில்.

மஞ்சத் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகளாய் உதறலோடு தலை ஆட்டினர் இருவரும்.

மாங்கோ என்று அழைக்கப்பட்ட திவ்யபாரதியின் சற்று புஷ்டியான உடலை ஏற இறங்கப் பார்த்தவள்,

“டாக்டர்ஸ்னா நீ முதல்ல பிட் ஆ இருக்கணும். ம்ம் டூ ஹண்ட்ரேட் சிட் அப்ஸ் நவ்…” என்றாள்.

கேட்ட திவ்யாவிற்கு முழி பிதுங்கியது, வகுப்பு முடிந்து எப்போதடா அறைக்கு சென்று ஓய்வெடுப்போம் என்று இருந்தவளுக்கு இதை கேட்டதும் மயக்கம் வராத குறை.

“சீனியர் இன்றைக்கு இருபது பண்றேன். அடுத்த முறை ஐம்பது பண்றேன், அடுத்த முறை…” எனவும் நித்ய கௌரியின் பால் போன்ற முகம் ரோஸ் மில்க் எஸ்ஸென்ஸ் விட்டார் போல் சிவந்தது.

செல்லக்கிளி தோழியின் கையை லேசாகக் கிள்ளியவள், கையை நீட்டி கொண்டு அமர்ந்து எழ ஆரம்பித்தாள். திவ்யா முகம் சுருக்கியவாறே தானும் செய்ய ஆரம்பித்தாள்.

‘ம்ம்ம்ம்’ என்று உறுமியவளாய்,

தன் அருகில் இருந்த ப்ரீத்தியின் தோள் மேல் கை வைத்தவாறு இருவரும் அமர்ந்து எழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள், வண்டி ஒன்று வந்து நிற்கும் ஒலி கேட்டுத் திரும்பினாள்.

வண்டியின் ஒலியிலேயே வந்தது யாரென்று அறிந்தவளாய், ஸ்கூட்டி பெப் பிளஸ் இல் வந்து இறங்கியவனை அலட்சியமாகப் பார்த்தாள் நித்யா.

அவள் அலட்சியமாகப் பார்த்தாள் என்றால் அருகில் நின்ற ப்ரீத்தி ஆவலே வடிவானவள் போல விழி விரித்துப் பார்த்தாள். அவளின் உடல் இறுகி நகர முற்படுவதை உணர்ந்தாற் போல் தோளின் மீதிருந்த கையால் அழுத்தியவாறு அவளைத் தடுத்து நிறுத்தினாள் நித்யா.

ஆறரை அடி உயரத்தில் பாதாம் அல்வாவின் நிறத்தில் அசாத்திய அழகுடன் வந்தவனின், முறுக்கேறிய தசைகளுடன் கூடிய புஜங்களும்… ஆறு பேக்கோ எட்டு பேக்கோ வைத்த வயிறும் கபில நிற டீ ஷர்ட்டுக்குள் மறைந்து கிடக்க… ஒடுங்கிய இடுப்பைப் பற்றி நிற்கும் முரட்டு ஜீன்ஸ்சும் மூன்று நாள் மீசை தாடியும் பிடரி வரை வழிந்து கிடந்த கேசமும் அவனுக்கு தனியான கவர்ச்சியூட்டுவதை உணராதவன் போல் வந்து நின்றவனைக் கண்டு அங்கிருந்த அனைவரும் விழி விரித்து நின்றனர்.

“சுட்கி… து க்யா கார் ரஹி ஹே? மேரி காடி க்யோ லே கர் ஆயி!” (சுட்கி! நீ என்ன பண்ணிட்டு இருக்குற? என் வண்டியை ஏன் எடுத்துட்டு வந்த?)

(இதற்கு மேல் ஹிந்தியில் இருந்த உரையாடல்கள் நமக்காக தமிழில்)

 

 

என்று… வந்து நிறுத்திய வேகத்திலேயே, முறைத்தவாறு சுள்ளென்ற ஆத்திரம் தெறிக்கும் குரலில் கேட்டவனை பதிலுக்கு முறைத்தவள்,

“அதான் ஸ்கூட்டி இருக்குல்ல! அதுல போ வேண்டியது தானே…! நீ எதுக்கு என் காலேஜ்கு வந்த!” என்றாள்.

அவளை முறைத்தவாறே… மேலும் கீழும் தலை அசைத்து,

“ம்ம் ஃபிகர் பாக்க… என் உயரத்துக்கு உன் வண்டிய ஓட்டுனா மூஞ்சுறு மேல கணபதி பப்பா ஊர்வலம் போற மாதிரி இருக்கும். மரியாதையா என் வண்டியக் கொடு!” என்றவனின் பார்வை வட்டத்தில், இந்த சல சலப்பிற்கெல்லாம் அஞ்சாமல், கருமமே கண்ணாயினராய் ( புடவை அணிந்தபடி) சிட் அப்ஸ் செய்து கொண்டிருந்த இருவர் விழுந்தனர். யோசனையில் நெற்றி சுருக்கியவன், தெளிந்து…

“என்ன பண்ற நீ? ராகிங்கா…? யூ ஜி சி 2009 ஆக்ட்ஸ் படி இது தப்பு. ஒரு கம்பலைன்ட் போதும். லைஃப் தல கீழா மாறிடும். நிறுத்தச் சொல்லு” என்றான் எச்சரிக்கும் குரலில்…

 

“100 டைம்ஸ் ஆனதும் அவுங்களே நிறுத்திடுவாங்க… நீ கிளம்பு!” என்றாள் நித்ய கௌரி வேறு திசை நோக்கியபடி…

அலட்டாமல் சொன்னவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன்,

“உன்னை… வீட்டுக்கு வா பார்த்துக்குறேன்… நானே கம்ப்லைன்ட் பண்ணி உள்ள தள்ளுறேன். அப்போது தான் நீ சரி படுவ!” என்று உறுமியபடி மணி பார்த்தான். அவசரமாய் கிளம்பச் சொல்லி மூளை அலாரம் அடித்தது.

அவனைத் திரும்பிப் பார்தத்து,

“நீ இப்போ தான் ‘ஐஏஎஸ்’, ‘ஐபிஎஸ்’க்கு தயார் பண்ணிட்டு இருக்குற. அதுக்குள்ள ரொம்ப அலட்டிக்காத! கிளம்பு.. ” என்றவள்… அவன் நெருங்கி வந்து அவளது பேண்ட் பாக்கெட்டில் தொங்கிக் கொண்டிருந்த சாவியை இழுத்து பட்டென்று எடுத்ததும் துள்ளி எழுந்தாள். திரும்ப சாவியை பறிக்கப் பார்த்தவளை, காகிதத்தைத் தள்ளுவது போல அவளை லேசாக விலக்கி நிறுத்தியவன்,

“மிச்ச ஃபைட் வீட்டுக்கு வந்து போட்டுக்கலாம்… பை சுட்கி…” என்று விட்டு, வண்டியைக் கிளப்பி அக்ஸிலேட்டரை திருக்கி உறுமச் செய்தவன்.. தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரீதியை நோக்கி ஒரு பார்வை செலுத்தி விட்டு, ராயல் என்பீல்டின் முன் சக்கரத்தை தூக்கிச் சீற விட்டு கிளம்பினான்.

புரவி வீரன் போல் ஆரோகணித்து புறப்பட்டு செல்லும் அவனையே… அனைவரும் ‘ஆ’ வென்று பார்ப்பதை உணர்ந்து எரிச்சலடைந்தாள் நித்ய கௌரி.

அதுவும் அவளருகில் நின்று கொண்டிருந்த ப்ரீத்தியின் உடல் மட்டும் இங்கிருக்க, மனது அவனது வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்துக் கொண்டு.. கனவு பாடலுக்குப் போய் இருக்கும் என்று உணர்ந்தவளாய்… தோழியின் தலையைத் தட்டி நினைவுக்கு கொண்டு வந்தாள்.

“ஓகே தோத்தி, மாங்கோ… நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். நாளைக்கு பார்க்கலாம். நாளைல இருந்து கிளாஸ் முடிஞ்சதும் ப்ளே கிரௌண்ட் கேலரிக்கு உங்க கிளாஸ்மேட்ஸ் கேர்ள்ஸ் எல்லோரையும் கூட்டிட்டு வரணும். ஒருத்தர் வரலைனாலும் மறுநாள் வரைக்கும் அங்கேயே இருக்க வேண்டியது தான் நீங்க எல்லோரும்…” என்று அமைதியான குரலில் எச்சரிக்கை தொனிக்க கூறியவள், தன் ஸ்கூட்டியில் ஏறினாள். அவளின் ஒற்றைப் பார்வையில் ப்ரீத்தி வந்து அவளின் பின்இருக்கையில் ஏறிக் கொள்ள மற்றவர்கள் தத்தம் வாகனத்தில் ஏறினர்.

விட்டால் போதும் என்று முதலாமாண்டு பெண்கள் அனைவரும் விடுதி நோக்கி விரைந்தனர்.

வண்டி நிறுத்துமிடத்திலிருந்து செல்லும் வழியில் தென்பட்ட ப்ளே கிரௌண்ட் கேலரி பக்கமாய் பார்வையைத் திருப்பிப் பார்த்தவர்கள், அங்கே முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்களின் சீனியர்கள் முன்பு வரிசையில் நின்றவாறு நட்சத்திர உணவகங்களில் கதவு திறப்பவர் போன்று.. ஸலாம் வைத்து பின் வலக்கையை வயிறு நோக்கி மடித்து இடக்கையை நீட்டி உடம்பை வளைத்து வணக்கம் வைப்பது போல் திருப்பி திருப்பி செய்வதையும்… ஒரு பக்கமாக நான்கு மாணவர்கள்… இல்லாத கோழியை பிடிப்பவர்கள் போல அங்கும் இங்கும் ஓடுவதையும் பார்த்து ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறு பக்கம் பயமாகவும் உணர்ந்தனர்.

செல்லக்கிளி, “இங்கனயே இவ்ளோ பாடாயிருக்கு… இன்னும் ஹாஸ்டல் சீனியர்சும் ராக்கிங் பண்ணுவங்களோ…?” எனவும்

“ கோர்ஸ் முடிக்க இவுங்க உதவி கைடன்ஸ் நமக்கு தேவை கிளி.. பார்ப்போம். அளவுக்கு மீறினா கம்பலைன்ட் கொடுப்போம்.” என்று மெதுவாக சொன்ன திவ்யா தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதை உணர்ந்து திரும்பிப் பார்க்க ‘ராஜலக்ஷ்மி’ என்று அறிமுகம் செய்யப் பட்டவள் அலைபேசியில் பேசியவாறே அவர்கள் பின்னே வருவதைக் கண்டாள்.

‘ஆத்தீ… இவுங்களும் ஹாஸ்டல் போல.’ என்று எண்ணியவள் செல்லகிளியின் இடுப்பை முழங்கையால் இடித்து பார்வையால் சுட்டிக் காட்டினாள். வாயை அழுந்த மூடிக் கொண்டவர்கள், தொடரும் தொல்லையை எண்ணி நொந்தவாறே அமைதியாய் நடையைக் கட்டினர். ‘ஹாஸ்டலில் இன்னும் என்னென்ன காத்திருக்கோ’ என்று எண்ணியவாறு….

***************

 

 

வேம்பகோட்டை..

தனது பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டுக்குள் நுழைந்த ஈஸ்வரி தன் அன்னையைத் தேடினாள். சற்று உடல்நலமின்றி அப்போது தான் டாக்டரை பார்த்துவிட்டு திரும்பியவர் மெதுவாக நடந்து சமையலறை நோக்கி மெதுவாக செல்வதைக் கண்டவளாய்,

 

“என்னமா வேணும்?” என்று கேட்டாள்.

‘தண்ணீர்’ என்று சைகை செய்தவரை, அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து விட்டு, உள்ளே சென்று ஆறிய வெந்நீரை எடுத்து வந்து கொடுத்தாள்.

தன் அறைக்குள் அரவம் கேட்டு சென்று பார்த்தவள், அங்கே அன்னையின் மருத்துவ அறிக்கையை அலமாரியில் வைத்துக் கொண்டிருந்த பூங்காவனத்தைப் பார்த்து,

“என்ன சொன்னாங்க டாக்டர்?”

“ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க… இங்க விட மதுரைலயோ சென்னைலையோ பண்ணா நல்லதுன்னு சொல்றாங்க. சென்னைனா எனக்கு வசதி. நான் இப்போ வீடு எடுத்து தான் தங்கி இருக்கேன். அதே அப்பார்ட்மெண்ட்ல ரெண்டு படுக்கை அறை இருக்குற வீடு கூட ஒன்னு காலியா இருக்கு, நீ போற சார்ட்டெட் அக்கோண்டன்ட் பயிற்சி வகுப்பு சென்னைல இன்னும் நல்லா இருக்கும். தம்பியை அடுத்த வருஷம் அங்க மாத்திக்குவோம்.” என்று வரிசையாகச் சொன்னவனை இடைமறித்த ஈஸ்வரி,

“இல்லண்ணே.. இங்கனனா ஆச்சி, சித்தி இருக்காங்க… அங்கன நானும் நீயும் தான் தனியா இருக்கணும்… எனக்கென்னவோ அது சரியாபடும்னு தோணலை…” என்றாள்.

ஈஸ்வரியும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி பள்ளி மேனிலை தேர்ச்சி அடைந்திருந்தாள். அவளின் விருப்பம் பட்டய கணக்காளர் (சார்ட்டெட் அக்கவுண்டண்ட்) ஆவதாக இருக்க, அதற்கான பயிற்சி வகுப்பு சிவகாசியில் நடை பெறுவதால் அங்கே பெண்கள் கல்லூரியில் பி.காம். சேர்ந்தவள், தினமும் கல்லூரி முடிந்ததும் பயிற்சி வகுப்பிற்கு சென்று விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தாள். நினைவு தெரிந்ததில் இருந்து சேர்ந்தே இருந்த தோழியைப் பிரிந்து மனம் சோர்வுற்று இருந்தவள், அன்னைக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட இன்னமும் மனம் கலங்கினாள். அன்னையின் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கி அதனை சோதனை செய்தால் தான் அது புற்றுநோயா சாதாரண கட்டியா என்பது தெரிய வரும் என்று குடும்ப மருத்துவர் கூறியதும், உடல், மனம் இரண்டும் சோர்ந்தார் போல் உணர்ந்தாள்.

தந்தைக்கு அலுவலகத்தில் தணிக்கை(ஆடிட்) நேரமாதலால் விடுமுறை எடுக்க முடியாத சூழல். அதனை அறிந்து கொண்டதும், பொறுப்பான மகனாக பூங்காவனம் தன் பணிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து சோதனைகள் செய்வதற்கு துணை சென்றான்.

ஆச்சி, சித்தி அனைவரும் அருகே இருந்ததால், அவர்களும் தம்மால் இயன்ற உதவிகளை செய்து, மன தைரியம் கொடுத்தார்கள். சொந்தங்களின் மதிப்பு உணருவது இம்மாதிரி நேரங்களில் தானே.

பூங்காவனத்திற்கு…, தான் இருக்கும் இடம் அழைத்துச் சென்று விட்டால் தானும் அன்னைக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் சொன்னவன், தங்கை சொன்ன விஷயங்களும் யோசிக்க வேண்டியதாக இருந்ததால், குழப்பமாய்,

“இங்கனாலும் மதுரைக்குத் தானே போகணும்.” என்று சற்றே மனத்தாங்கலுடன் சொன்னான்.

“இல்லண்ணே! ஆபரேஷன் மதுரைல செய்யலாம். பெரியவுங்க துணை இருக்கும். சென்னைனா யாருக்கும் வர தோது படாது. அதுக்கப்புறம் ஸ்கேன், டெஸ்ட் எல்லாம் சிவாசில கூட பார்த்துகிடலாம்.” என, யோசனையுடன் தலை அசைத்தான் பூங்காவனம்.

“ஈஸ்வரி” என்று யாரோ அழைக்கும் ஒலி கேட்டு வாசலைப் பார்த்த இருவரும் செல்லகிளியின் அம்மா கற்பகவள்ளியைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். சாதாரணமாக யார் வீட்டிற்கும் செல்லாதவர் அவர். உடல் நலமின்றி இருந்த ஈஸ்வரியின் அன்னையை பார்க்க வந்திருந்தார்.

“அம்மா எப்படி இருக்காங்க?” என்றவாறே உள்ளே வந்தவரை வரவேற்று அமர வைத்தவர்கள், தாயை சென்று பார்க்க அவர் அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

“தூங்குறாங்கம்மா…” என்ற ஈஸ்வரியிடம்,

“தொந்தரவு பண்ண வேண்டாம்.” என்று விட்டு அவரின் நலம் விசாரித்து கொண்டார். என்ன உதவி என்றாலும் தயங்காமல் கேட்குமாறு கூறியவர்,

கைகட்டியவாறு நின்ற கொண்டிருந்த பூங்காவனத்தை நோக்கி,

“நீ சென்னைல தானே பா வேலை செய்யுற, செல்லம் படிக்குற காலெசு உனக்கு தங்கிருக்குற இடத்துக்கு பக்கத்துலயா?” என்று கேட்டவர், லேசாக முகம் வாடி,

“அவ ஊருக்கு போய் ரெண்டு வாரமாகிடுச்சு, இந்த புள்ள மாதிரி இங்கனையே படிக்கட்டும்னு சொன்னா அப்பாவும் பொண்ணும் கேக்கலை…” என்று அங்கலாய்த்தவர்,

“நீ சென்னைக்கு போறியா தம்பி? போனா ஒரு எட்டு போய் பார்க்குரியா? எம்மவள விட்டு இருந்ததே இல்ல… என்னவோ ரெண்டு நாளா மனசு அடிச்சுக்குது. அவ சோட்டு பொண்ணான… ஈஸ்வரிய பார்த்தா ஆறுமோன்னு தான் இங்கன வந்தே, இங்கன உன்ன பாத்ததும் நல்லதுதா. போ முடியுமா?” என்றார்.

அவரின் பாசத்தில் நெகிழ்ந்தாலும், கோரிக்கையில் அதிர்ந்தவளாய் ஈஸ்வரி மானசீகமாக தலையில் கை வைத்துக் கொள்ள, பூங்காவனத்தின் கண்ணில் மின்னல் வெட்டியது. சரி என்பது போல் தலை அசைத்தான்.

தன் மகளின் நெருங்கிய தோழியின் அண்ணன் என்று எதார்த்தமாக அவர் கேட்க, உள்நிலவரம் அறிந்த ஈஸ்வரி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“போறீனா சொல்லு தம்பி. கொஞ்சம் சாமானுக கொடுத்து விடுறேன்.” என்றதும்,

பூங்காவனத்தின் மனதில், ‘பூக்கள் பூக்கும் தருணம்’ என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. ரத்தம் நாளங்களில் குதூகலத்துடன் வேகமாக ஓடியது. இதயம் மத்தளம் கொட்டி ஆர்ப்பரித்தது. முகத்தில் ஏதும் காட்டாதவனாய், சாதாரண குரலில்,

“அதுனால என்ன? நான் சனிக்கிழமை இல்லாட்டி ஞாயிற்றுக்கிழமை நேர்ல போய் பார்த்து கொடுத்துட்டு வந்துருறேன். உங்களுக்கும் அங்க இருந்தே பேசுறேன்.” என்றான்.

முறைத்த ஈஸ்வரியை திரும்பி பார்ப்பானா அவன்!

 

*****************

 

 

 

ஜெர்மனியில்….

வெள்ளிக்கிழமை மாலை ஆதலால், உடன் பணிபுரியும் ஒரு இந்திய தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக, அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து மாலை சிற்றுண்டி தேனீர் விருந்தில் அமர்ந்திருந்த வனராஜனின் உள்ளத்தில் மதியத்திலிருந்தே மனதின் ஓரத்தில் கிளி கொத்தும் உணர்வு. (இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கு நாலரை மணி நேர வித்யாசம்)

இப்போது அங்கு இரவு எட்டு மணி என்று எண்ணியவனாய், தேநீரைக் கையில் வைத்து கண்மூடி அமர்ந்திருந்தவன்,

“செல்லம்….” என்ற குரலில் திடுக்கிட்டு கண்விழித்தான். இரு தமிழ் நண்பர்கள் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்ணுற்றவன், அவர்கள் பேச்சின் இடையில் அந்த அழைப்பு வந்திருக்க கூடும் என்று எண்ணியவனாய் அமைதியானான். அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சினேகாவின் அலைபேசி ஒலித்தது,

’காற்றில் வரும் கீதமே… என் கண்ணனை அறிவாயோ!” என்று பாடலே அழைப்பின் ஒலியாக கேட்க… பல மாதங்கள் கழித்து கேட்ட அந்த பாடல் ஏதேதோ நினைவுகளைத் தட்டி எழுப்பியது வனராஜனிற்கு. சினேகா தன் வீட்டிலிருந்து வரும் தனிப்பட்ட அழைப்பிற்கு அந்தப் பாடலை வைத்திருப்பாள் போலும்.

‘ஏன்… இன்று இவ்வளவு தவிப்பு! அவள் நினைவு… இதோ இந்தப் பாட்டு கூட ஏனோ மனதை பிசைகிறதே…’ என்று ஆச்சரியம் அடைந்தவன், வழக்கமான… அவள் நினைவுகளைத் தணிக்கச் செய்யும் முயற்சிகள் எல்லாம் செய்தும், ஏதும் இப்போது பயனளிக்காமல் போக, நண்பர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான். தான் தங்கி இருக்கும் வீட்டை அடைந்ததும் அலைபேசி எடுத்து… மாமாவிடம் இருந்து வாங்கி, இது வரை அழைக்க தைரியம் வராத… செல்லகிளியின் அலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

முழுவதும் மணி ஒலித்து நின்ற பின்னரும் அவள் எடுக்கவில்லை என்றதும், ‘இப்போ இரவு ஒன்பதரை. அதற்குள்ளாக வா தூங்கி விட்டாள்…’ என்று எண்ணியவன் குழப்பத்துடன் இரு கைகளையும் தலைக்கு அடியில் கொடுத்து, படுக்கையின் குறுக்காக சாய்ந்து படுத்தான்.

விடுதியில் தானே இருப்பாள். கல்லூரி… இடமாற்றம்… என்று ஏதேதோ சம்பந்தமில்லாமல் எண்ணியவனுக்கு சட்டென்று பொறி தட்டியது.

தனியார் துப்பறியும் நிறுவனத்தினரின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தவன், இந்நேரத்தில் அழைத்து தொந்தரவு பண்ணி விடவில்லையே என்று கேட்டுக் கொண்டு, கௌரி மேத்தா அவரின் பெயர் கோபிசந்த் மேத்தா தந்தை பெயர். அவர் வேம்பகோட்டையில் இருந்து கிளம்பிய பின்னர் விபத்து ஏற்பட்டதாக சொந்த ஊரில் தெரிவித்தார்கள். அப்போது அவரின் உடமைகளுக்கு ஏதேனும் சேதமாகி இருந்தால் கௌரி தன் மதிப்பெண் பட்டியலுக்காகவோ பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவோ, இடமாறுதல், கல்லூரி மாறுதலுக்காகவோ தனது பல்கலைக் கழகத்தை அணுகி இருக்கலாம் என்று தோன்றியதாய் சொல்லி அந்த கோணத்தில் முயற்சி செய்து பார்க்கும் படி கூறினான்.

இது ஏன் முதலிலேயே தனக்கு தோன்றவில்லை என்று தலையில் தட்டிக் கொண்டவன். இந்த முயற்சிக்கு பலன் இருக்கும் என்று ஏனோ அடி மனது சொல்ல, அதை விடுத்து… வேறொரு நினைவு இழுக்க…

மீண்டும் செல்லக்கிளிக்கு முயற்சித்தான். அவனழைத்த நேரம் அவனின் செல்லக்கிளி தண்ணீரே இல்லாமல், தரையில் நீச்சலடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தாள்.

ஹாஸ்டலில் ராகிங் கும்பலிடம் மாட்டிக் கொண்டு அவரவர் சீனியர்கள் சொன்னவற்றை.. கடனே என்று செய்து கொண்டிருந்தார்கள் ஜூனியர் மாணவ மாணவிகள் அனைவரும்.

எதிர்ப்பதற்கு யாருக்கும் துணிவில்லை. ராக்கிங் என்றாலும் கண்ணியமாகவே இருந்தது. பெண்கள் நிலை பரவாயில்லை. ஆண்கள் நிலை தான் சற்று பரிதாபம்… அதுவும் சற்று சிரிப்பை வரவழைப்பதாக, இருக்கவே சிரித்தவாறே செய்து கொண்டிருந்தார்கள். எதிர்த்தாலோ முறைத்தாலோ தான் சிரமமாகும் என்று டிரெக்ட் சீனியர்ஸ் என்று சொல்லப்படும் இரண்டமாண்டு மாணவர்கள் சொல்வதை பற்றுக்கோலாக பிடித்து கொண்டு, சொன்னதைச் செய்யும் மந்திகளாக மாறிப் போனார்கள் முதலாமாண்டு மாணவ மாணவியர்.

இரவு பத்து மணி வரை தரையில் நீச்சலடித்ததில் களைத்த செல்லக்கிளியும் திவ்யாவும்… சாப்பிட்ட உணவெல்லாம் ஜீரணமாகி இருக்க, அலுப்பாக வந்து படுத்தார்கள். காலை அலாரம் வைக்க எடுத்த அலைபேசியில் நான்கு தவறிய அழைப்புகள். ஒன்று அன்னையிடம் இருந்தும் மற்ற மூன்றும் தெரியாத ஒரே அலைபேசி எண்ணிலிருந்து. கையில் எடுத்த நொடியில் மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர… எடுக்கவா வேண்டாமா என்ற யோசனையுடன்… ஐந்து நொடிகள் வெறித்தவள்.. பின் பச்சை நிறத்தை வலப்பக்கமாய் நிரடியவளாய், மெதுவாய் காதில் வைத்து கவனித்தாள் சத்தமின்றி.

அவள் எடுத்ததையும்… பின் அமைதியாய் இருப்பதையும்… மூச்சு விடும் ஓசையில் உணர்ந்தவன்… பேசினான்.

“செல்லம்…. நான் வனராஜன் பேசுறேன்!”

ஒரு நிமிடத்துளி திகைத்தவள்… சொன்னாள்…

“சொல்லுங்க கண்ணத்தான்…!”

 

அன்னைக்கு மடி தாங்கியதால்

வந்தது தவிப்பு…!

உனக்கு மனம் தாங்கியதால்

வந்தது துடிப்பு…!

உணர்வாயா… கண்ணா…?

 

அன்னை சொல்மிக்க

மந்திரமில்லை என்று இருந்தவன்…

தந்தை சொல்மிக்க

வேதமில்லை என்று இருந்தவள்….

காதலெனும் மாயத்தால்

கட்டுண்ட பின்பு…

மயங்குவார்களா…? தயங்குவார்களா…?

**********

கிளி பேசும்…!

 

 

What’s your Reaction?
+1
2
+1
3
+1
2
+1
1
+1
0
+1
0
தாமரை

Recent Posts

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

24 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

1 day ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

    சேதி 18 *********                    நள்ளிரவை…

2 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

5 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

(15)   அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…

5 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

(13)   அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய…

6 days ago