சேதி 6
அருவியை விட்டு வெளியேறிய செல்லகிளியை காணாமல் திகைத்தவனாய் வனராஜன், வேகமாக குளத்தை விட்டு வெளியேறி, வெளியே நோக்கி செல்லும் ஒற்றையடி பாதையின் வழியே சென்றான். அந்த பாதை நேராக இல்லாமல் திரும்பி, வளைந்து, பின் திரும்பி எனச் சென்ற அமைப்பினால், யாரையும் கண்களுக்கு காட்டாமல் அவனை பதட்டத்தில் ஆழ்த்தியது.
அருவி விழும் இடம் சுற்றி சில மீட்டர் தூரம் வரை வானளாவிய மரங்கள். அதைக் கடந்ததும் பழ தோட்டங்கள் வேலியிடப்பட்டு இருந்தன. அவ்விடமும் மரங்களும் அரசாங்கத்துக்கு சொந்தமானது. அங்கே செல்ல எல்லோராலும் முடியாது. எனவே ஆள் நடமாட்டமும் குறைவு. வனராஜனின் இதயம் சற்றே உரத்து ஒலிக்க ஆரம்பித்தது. அவனின் நடை, ஓட்டமாக மாற “செல்லக்கிளி….” என்று அழைத்தவனின் குரலுக்கு பதிலாக, ஒரு திருப்பத்திலிருந்து வேகமாக வந்தாள் செல்லக்கிளி. முகம் அந்த குளிரிலும் வியர்த்து இருக்க, அருவியில் நனைந்த உடை சற்றே காய்ந்து இருக்க, தோளில் அவள் எப்போதும் அணிந்திருந்திருக்கும் மேல்துணி இன்றி அவள் வருவது கண்டு அவனின் விழிகள் ரௌத்திரம் கொண்டன.. விரைந்து நெருங்கியவன்,
“என்ன ஆச்சு?” என்ற அவனின் குரலுக்கு பதில் சொல்ல இயலாதவளாய் மூச்சு வாங்க பின்புறம் கையை நீட்டி ஒற்றை விரலை சுட்டியவளாய் அவனைத் தாண்டி ஓடினாள்.
அவள் சுட்டி காட்டிய இடத்தை நோக்கி போனவன் கண்டது, சிறு பாறை மீது கண்களை கசக்கிவாறு அமர்ந்து இருந்த, அவளை தொடர்ந்து சென்ற அந்த புதியவனை.
அருகில் இருந்த சிறு செடியின் கிளையில் மாட்டி தரையில் கிடந்தது செல்லகிளியின் மேல்துணி. பார்த்ததும் உடல் முழுதும் ரத்தம் சூடாகப் பாய,
“ஏய்… யாருடா நீ? என்ன பண்ண எங்க வீட்டு பொண்ணை?” என்று கேட்டவாறு அவனருகில் ஆத்திரத்தோடு நெருங்கியவனை, கை உயர்த்தி தடுத்தவன்,
“சர்! ஏற்கனவே உதவி செய்ய போனதுக்கு அந்த பொண்ணு கண்ணுல மண்ணை அடிச்சு விட்டுட்டு போயிடுச்சு. நீங்க வேற ஏதாவது தப்பா நினைச்சு ஏதாச்சும் செஞ்சுராதீங்க சர்…” என்றான் கெஞ்சும் அழுகை குரலில்.
“என்ன? உதவியா? தனியா வந்த பொண்ணு பின்னாடி ஏன்டா நீ வந்த?” என்று கோபத்தில் மூச்சு வாங்க கேட்டவனை, பார்க்க இயலாவிடினும், அந்தக் குரலில் தெரிந்த ஆத்திரத்தில் சற்றே நடுங்கியவனாய்,
“சர் சர் நான் எந்த தப்பான நோக்கத் தோடயும் வரலை, இந்த பொண்ணத் தொடர்ந்தும் வரலை. எனக்கு பதினோரு மணிக்கு முக்கியமான கால் வரவேண்டியது. அதுனால மொபைலை எடுக்க வந்தேன். இந்த பொண்ண இங்க மரத்துகிட்ட பார்த்தேன். நேத்து அந்த பொண்ணு பாடுனது கேட்டேன். ரொம்ப நல்லா பாடுச்சு. எங்க படத்துல ஒரு பாட்டு. சின்ன வயசு ஹீரோயின் பாடுற மாதிரி, அது பாடுமான்னு கேக்கனும்னு அப்போதே ஆசை. ஆனாலும் அதுக்காக அது பின்னாடி வரல. சும்மா அது பேரு, ஊரு, அவுங்க அப்பா பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் சர் வந்தேன். அந்த பொண்ணு முந்திரி மரத்தை பார்த்துட்டு இருந்துச்சு. பழம் பறிக்கனுமான்னு தான் ஸர் கேட்டேன். கண்ணை விரிச்சு பார்த்துச்சு, என்ன நினைச்சதோ… சட்டுனு மண் அள்ளி மூஞ்சில வீசிருச்சு… கொஞ்சம் தண்ணி எடுத்து தறீங்களா? கண்ணு ரொம்ப உறுத்துது.” என
“ நீ சினிமா ஆளா! இது என்ன சென்னைன்னு நினைச்சியா? வந்த இடத்துல யாரு எவருன்னு தெரியாம ஊரு பொண்ணுட்ட பேச நினைச்சது தப்பு. அதுக்கு இந்த தண்டனை உனக்கு தேவை தான்.” என்றவன், கைப் பற்றி எழுப்பி,
“வா குளத்துகிட்ட கொண்டு விடுறேன். அவட்ட கேப்பேன், ஏதாவது தப்புனு தெரிஞ்சது, மகனே… அங்கியே உனக்கு தண்ணிலேயே சமாதி தான்…” என்ற உக்கிரமான குரலில் அதிர்ந்து மிரண்டவனாய்,
“சர் அங்கே, அந்த பொண்ணு இருக்குற பங்களாக்கு அடுத்து இருக்குற காட்டேஜ்ல தான் சர் தங்கி இருக்கோம், நீங்க வந்து விசாரிச்சு பாருங்க. நான் இண்ட்ஸ்ட்ரில நல்ல பேரோட இருக்குறவன் சர். உங்களுக்கே தெரியும் இங்க அனுமதி வாங்கித் தான் உள்ள வர முடியும், விஐபி பாஸ்ல வந்துருக்கோம் சர்.” என்றவன் பிரபல இயக்குனர் பெயர் கூறி “அவரோட அசிஸ்டண்ட்…” என்றான்.
அவனின் அலைபேசியை பறித்து தன் எண்ணிற்கு அழைப்பு கொடுத்து நிறுத்தியவன், அவனின் பெயர், இருப்பிடம் அனைத்து விவரங்களையும் வாங்கிக் கொண்டான்.
குளத்தை நோக்கி செல்லும் பாதையில் அவனை கைப்பற்றி அழைத்துச் சென்றவன், அங்கே அருவியின் அருகில் மிரண்ட விழிகளோடு தன் அன்னையின் சேலை நுனி பற்றியவாறு நின்ற செல்லகிளியைப் பார்த்து, புதியவனை பார்த்து பின் அவளை நோக்கி ‘இவனால் ஏதும் தொந்தரவா?’ என பொருள்படும் படி தலை அசைத்து, கண்களால் வினவினான்.
‘இல்லை’ என தலை அசைத்து மறுத்ததும், உறுத்து விழித்தான் ’நிஜம் தானே’ என்று கேட்பது போல். அவள் இப்போது உறுதியாக தலை அசைத்தாள். பின்பே அந்த புதியவனின் கைகளை விட்டான் வனராஜன்.
இவர்களின் பத்து நொடி ஓரங்க நாடகம், குழந்தைகளின் கும்மாள கூச்சலில், குதூகலத்தினால் யார் கண்ணிலும் படாதது… ஆச்சர்யம் தான்.
“ இங்க எல்லார் முன்னாடியும் அவ காட்சிப் பொருளா ஆகிடக்கூடாது என்பதால் இதோட விடுறேன், இனி இது மாதிரி வேலை பண்ணாதே.” என்றவன், அவளின் மேல்துணியை அவர்களின் பொருட்களோடு சேர்த்து வைத்தவன்,
சில நிமிட தவிப்பை தந்தவளை, மீண்டும் ஒரு முறை முறைத்துவிட்டு ஆண்கள் குளிக்கும் இடம் நோக்கி சென்றான் வனராஜன்.
******************
முன் மாலைப் பொழுது. மதிய உணவு உண்ட மயக்கமும், குளித்த அலுப்பும் சேர பெரியவர்களில் பெரும்பாலானோர் உறக்கத்தில் இருக்க, சிறியவர்கள் வற்றாத உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை வேடிக்கை பார்த்தவாறு அத்தைகள் மாமாக்கள் ஈரத் துணிகளை காயவைத்த படி, பிள்ளைகளை கண்காணித்த படி இருந்தனர்.
ஈரக் கூந்தலை காய வைத்தபடி தூணில் சாய்ந்து அமர்ந்து, ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தவள், தன்னருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். வனராஜனைக் கண்டதும் தன் தலை தாழ்த்தி, விளையாடும் பிள்ளைகளை பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள்.
அவளுக்கருகில் அமர்ந்து கால்களை தொங்க விட்டு அமர்ந்ததும், தன் கால்களை மடக்கியவளாய் பயத்துடன் ஏறிட்டாள்.
“நிஜமாவே அவன் உன்கிட்ட தப்பா நடக்கல தானே?” என்றதும், ‘இல்லை’ என தலை அசைத்ததும்,
“வாயில என்ன கொளுக்கட்டையா வச்சுருக்க…! வாயத் தொறந்து சொல்லு…” என்றான் எரிச்சல் மிக…
அவனின் அரட்டலில் கோபம் எழ,
“அதான் இல்லனு சொல்றேனே. ஒன்னும் பண்ணலை. நான் நின்னுட்டு இருந்தேன். திடீர்னு வந்தான். நான் பயந்துட்டேன்.”
“ முன்ன பின்ன பார்க்காம தான் புது இடத்துல நடந்து போறதா? திடீர்னு ஒரு தெரியாத ஆள் வந்தா சட்டுனு அந்த இடத்தை விட்டு வரணும். முதல்ல ஏன் தனியா போன சொல்லு…? ” என்றான் வேகமாய்..
“தனியா போல… மாமா பொண்ணு இனியா, என் பின்னாடி தான் வந்தா, எப்போ திரும்பி போனானு தெரியலை… அவ பின்னாடி வர்றானு நான் நினைக்க, அந்த ஆள் என் பின்னாடி வந்துருக்கான். அங்கன மரத்துல முந்திரிப் பழம் கொட்டயோட இருந்துச்சு. பழம் தனியா இங்கன குற்றாலத்துல பார்த்துருக்கேன். கொட்டையோட சேத்து பார்த்தது இதா முதல் தடவை. அதான் பறிச்சுட்டு போய் என் ஃப்ரன்ட் கிட்ட காட்டலாம்னு பறிக்கப் போனேன், அம்மாட்ட சொல்லிட்டு தா போனேன்.”
“என்ன…! அது அரசாங்கத்துக்கு சொந்தமானது பறிக்க கூடாது. தெரியாதா…?” என்றான் கடுப்புடன்,
“ம்ம் ஒண்ணே ஒன்னு பறிச்சா என்ன குறைஞ்சு போகுதாம்…” என்றாள் சின்னதாகிப் போன குரலில்,
“அதை விடு…. அந்த ஆள் வந்து ‘உதவி செய்யவானு தானே கேட்டானாம்… ஏண்டி மண்ணள்ளி போட்ட?” என்றதும்,
அவன் ‘டி’ என்றதில் சற்றே விதிர்த்தவளாய்,
“என்னது ‘டி’ யா?” என்றாள் கொஞ்சம் கோபமும் கொஞ்சம் அதிர்ச்சியுமாய்.
“…ம்ம் ஸாரி, ஃப்ரன்ட்ஸ் கூட பேசுறது அப்படியே வந்துருச்சு… அதுவா இப்போ முக்கியம்!” என,
இன்னமும் முறைப்புடன்,
“என்னது.. கூட படிக்க பொம்பளை பிள்ளைகளை ‘டி’ போட்டு பேசுவீங்களா?” என கேட்டவளைப் பார்த்து,
“ஏன் மண்ணள்ளி போட்டேன்னு கேட்டதுக்கு பதிலைக் காணோம்… என்னயக் கேள்வி கேளு… நல்ல வேளை.. திரும்பி வரும் போது முன்னாடி வந்த என்னைக் கண்ணை தொறந்து பார்த்துட்ட போல… இல்லாட்டி எனக்கும் கண்ணுல மண்ணோ! கராத்தே அடியோ!” என்றான் சிறு சிரிப்புடன்,
“அதும் தெரியுமே… தேவைப்பட்டா அதும் செஞ்சுருப்பேன்.” என்று சிறு மிதப்புடன் கண்ணை மேலும் கீழுமாக உருட்டினாள் செல்லக்கிளி.
“ஏண்டி, உதவி செய்ய வந்தா மண்ணள்ளிப் போட்டு கராத்தே அது அடிக்குறது தான் கரிசக் குளத்துகாரக பழக்கமா?” என்றான் விரிந்த சிரிப்புடன்…
சற்று கடுப்புடன்,
“இப்போ ஏன் ஊர இழுக்கீங்க… அவன்… அவன்…” என்று சற்று திணறியவள்… தலை குனிந்து தன் மேலாடை நுனியை திருகியவள்… அதன் மேல் பார்வை பதித்து,
“அவனை பார்த்தாலே பிடிக்கலை…, அதான் மண்ணள்ளி அவன் கண்ணுல போட்டேன். அவன் கண்ணும் மூஞ்சும் பார்த்ததும்… எனக்கு அவன் ஞாபகம் வந்துருச்சு.” என்றாள் மெலிதாகிப் போன குரலில்…
“எவன்…! கோவில்ல உன்கிட்ட வம்பு பண்ணானே அவனா…?” என்றான் லேசாய் ரௌத்திரம் ஏறிய குரலில் வனராஜன்,
“சு… இல்ல… ”
“ம்ம்ம்… சொல்லு… அவன் இல்லைனா எவன்? இன்னும் எத்தனை பேர் உன்னை பாலோ பன்றாங்க…? எவனெவன் வம்பு பண்ண ரெடியா இருக்கானுங்க… அந்த ஊரில்…?” என்றான் நக்கலும் கடுப்பும் கலந்த குரலில்,
அவனை விடக் கடுப்புடன்,
“பொம்பளை பிள்ளனா ஆம்பளை பசங்களுக்கு அப்படி தானே தோணுது. காதல், கல்யாணம், கருமாந்திரமுனுட்டு பின்னாடியே துரத்தறது. உடம்பு மேல தான் கவனம்… அவுங்களுக்கும் மனசு இருக்கும் ஆசைகள் கனவு இருக்கும்னு யாரு நினைக்குறா?” என்று எங்கோ பார்த்த வண்ணம் குமுறியவளை…
விசித்திரமாகப் பார்த்தவன்…
“என்ன ஆச்சு? வேற ஏதும் ப்ரச்சனையா? என்கிட்ட சொல்லக் கூடியதுனா சொல்லு…!” என்றான் மெதுவாக,
“ம்ப்ப்ச்…” என்றவள்,
“இப்போ இல்ல… சின்ன வயசுல நானும் ஈஸ்வரியும் ஒரு வீட்டிற்கு விளையாட போனோம். பின்னாடி பெரிய தோட்டம்… அங்க பெரிய மரம், பூச்செடி எல்லாம் இருக்கும். அந்த வீட்டு அத்தை அம்மாவோட தோழி. அவுங்க ரொம்ப பாசமா பேசுவாங்க. அதுனால ஒரு நாள் லீவு சமயம் அங்க விளையாடப் போனோம். அந்த அத்தைக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன். அந்த அக்காக்கள் எங்களோட விளையாட வருவாங்க. அந்த அண்ணன்… த்தூ… அந்த நாசமா போன பய… நாங்க விளையாடும் போது எதுனா எடுத்து கொடுப்பான். சோறு சமைச்சு விளையாடுவோம் நிஜமாவே குட்டி அடுப்பு வச்சு சோறு சமைச்சுனு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு.
சாமான் எடுத்து வர எல்லோரும் உள்ள போயிருக்க சமயம் …” என்றவள்… அடைத்த தொண்டையை செருமி சீர் செய்தவளாய்,
“அந்தப் பரதேசிப் பய முத்தம் கொடுத்துட்டான். நான் அப்போ ரெண்டாவது படிக்குறேன். அவன் பதினொண்ணோ பன்னெண்டோ… அந்த வயசுல…” என்று பொறுமியவள்… காரி உமிழ்ந்தாள். இன்னமும் அந்த முத்தத்தின் எச்சம் ஒட்டி இருப்பது போன்ற அருவருத்த நினைவில்…
“அவனை புடிச்சு தள்ளி விட்டுட்டு ஓட பார்த்துக்கு, அந்த பொறுக்கி பய, இங்க நடந்தது வெளிய சொன்னே உங்க அம்மா அப்பாவை கொன்னுடுவேன் அப்படின்னு எல்லாம் மிரட்டுனான். அந்த வயசுல அதை நினைச்சு எவ்ளோ பயந்தேன் தெரியுமா? அந்த வீட்டு மாமாவுக்கு, வேலை மாத்தம் வந்ததும் அவுங்க வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க… ஆனாலும் எனக்கு அந்த வீட்டை பார்த்தாலே பயம். அந்த தெருக்கே போக மாட்டேன்.”
மனதை வேதனையோ கோபமோ… ஏதோ ஒன்று கசக்கி பிழிய,
“நீ அத்தட்டயோ மாமாட்டையோ அதை உடனே சொல்லலையா?” என்று தவிப்புடன் இடை மறித்தவனை,
“எனக்கு அவன் என்ன செய்தான்னு கூட அப்போ புரியலை, ஏதோ தப்பா தொடுறான்னு தோணுனது அந்த வயசுக்கு, இப்போ தான் அந்த பொறுக்கி பய செஞ்ச காரியம் என்னனு புரியுது.” என்றாள், கோப மூச்சுக்களுடன்.
“நான் ஒம்பதாம் கிளாஸ்ல படிக்குற போது, எட்டாங் கிளாஸ்ல மூனு வருஷமா இருக்குறான் ஒருத்தன்… அவன் எனக்கு லெட்டர் கொடுத்து அனுப்புறான் அவன் தங்கச்சிட்ட… பிரிச்சு கூட பார்க்காம கிழிச்சுப் போட்டுட்டேன். அடுத்தடுத்து விடாம லெட்டர் கொடுத்து அனுப்புனான். ஒரு நாள் அதை ஈஸ்வரி பார்த்துட்டு அவ அண்ணன் கிட்ட சொன்னதும், அவுங்க கூப்பிட்டு மிரட்டுனாக… அப்புறம் தான் அவன் நிறுத்தினான்.”
“அதுக்கப்புறம் அந்த நொண்ணன் பாலோ பண்ண ஆரம்பிச்சு விட்டாராக்கும்…” என்ற அவனின் நக்கல் குரலில் முகம் சுளித்தவள்,
“அதெல்லாம் இல்ல… ஆமா… நா தெரியாமதா கேக்குறேன் இந்த ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்களை தொந்தரவு பண்றது தான் வேலையா? பொண்ணுங்கன்னா இவனுங்க சொன்னா காதலிச்சு… கலியாணம் பண்ணி… குடும்பம் நடத்தனுமா? எங்களுக்குன்னு மனசுல ஏதும் இருக்க கூடாதா…? எனக்கு இந்த வார்த்தைகளைக் கேட்டாலே எரியுது. ஆம்பளைங்கள பார்த்தாலே ஒன்னு பயம் வருது. இல்ல வெறுப்பு வருது.” என்றாள் வேக மூச்சுடன்.
“அம்மா தாயே… கொஞ்சம் பாயிலேர் அடுப்பை ஆப் பண்ணுறியா…? உங்க அப்பா, தாத்தா, மாமாக்கள், தம்பி ஏன் உன் அயித்த மவன் நான் எல்லோரும் ஆம்பளைங்க தான். இன்னும் பெண்களை மதிக்குற தோழியா நினைக்குற எவ்வளவோ ஆண்கள் இருக்குறாங்க. வெளி உலகம் பார்க்காம வேம்பகோட்டை தான் உலகம்னு நினைக்காதே. இங்க இருக்குற ஆண்களைத் தான் ஆண்களின் பிரதிநிதிகள்னும் நினைக்காதே. கவனமா இரு…! அதே நேரம் தோழமையுணர்வோட இரு…! உன் படிப்புக்கு, கனவுக்கு என்னால ஆன உதவி கண்டிப்பா செய்யுறேன். உன் கிளி மூக்குல கோபத்தை வச்சு கொத்திப் புடாதே… பயமா இருக்கு…” எனக் கேலி பேச…
“ம்ப்ப்ச்…” என்றாள்.
லேசான முறுவல் உதட்டில் தவழ,
“சரித்தான்னு சொல்லுறியா…” என்றான் கவிழ்ந்து குனிந்து இருந்த அவள் முகத்தை பார்த்து
“ சரிஈஈஈ…”
“ஐயோ பயந்துட்டேன்…” என்று இரண்டடி பின்னால் நகர்ந்தவன்… நகைத்தான்.
அவன் கையில் இருந்த அலைபேசி லேசான அதிர்வுடன் ஒளிர்ந்தது…
“ டாட் காலிங்…”
*****************
உறவாக வந்தவன்…
உற்ற தோழனாய் கரம் நீட்டியவன்…
கனவுகளை நனவாக்குவானா?
வெறும் பார்வையாளராய் கடந்து செல்வானா…?
*********************
கிளி பேசும்…!
சேதி 21 ********* சென்னையின், போக்குவரத்து…
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…