சேதி- 4
*********
காலைப்பொழுதில், வழக்கம்போல் வனராஜனின் சன்னிதியில் கண் மூடி கரம் கூப்பி நின்றாள் செல்லக்கிளி. யாரோ வரும் அரவம் கேட்டு புன்னகையுடன் நிமிர்ந்தவளின் புன்னகை உதட்டில் உறைந்து , பின் மறைந்தது.
அவளின் எதிரில் அவளையே பார்த்தவாறு கைகளை மார்பில் கட்டியவாறு நின்று கொண்டிருந்தான் அவன்…..பூங்காவனம். செல்லக்கிளியின் தோழி ஈஸ்வரியின் அண்ணனான பூங்காவனம்.
சற்றே அதிர்ந்தாலும் காட்டிக்கொள்ளமல், திருநீறு எடுத்து இட்டுக்கொண்டு ஸ்வாமியை வலம் வந்து, அவனை சுற்றிக்கொண்டு போக முயன்றவளைத் தடுத்தது அவனின் குரல், ” உன்கிட்ட ஒரு நிமிஷம் பேசணும் செல்லக்கிளி. அதுக்கு தான் வந்தேன். நா இன்னிக்கு சென்னைக்கு கிளம்புறேன். அங்க ப்ரொஜெக்ட் ஒர்க் முடிக்கணும். அப்புறம் அங்கயே வேலையும் கிடைச்சிருக்கு. அங்கேயே தங்கிருவேன். நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல!!!”
நிதானமாக உயர்ந்தன அவள் விழிகள். அவன் முகத்தைப் பார்த்தவள், பின் மீண்டும் விழிகளைத் தாழ்த்திக்கொண்டு, ” எனக்கு எப்பவும் அப்படி ஒரு அபிப்ராயம் உங்க மேல ஏற்பட்டதும் இல்ல… இனியும் ஏற்படாது… எனக்கு என் படிப்பு, என் குடும்பம், அம்மா அப்பா தான் முக்கியம். நான் என்னைக்காவது உங்களை நிமிர்ந்து பார்த்துருக்கேனா? உங்க கவனத்தை என் மேல திருப்பற மாதிரி நடந்துருக்கேனா?”
“அதுனால தான் உன்மேல எனக்கு காதல் வந்துச்சு செல்லக்கிளி“ என அவசரமாக சொன்னவனைப் பார்த்தவள், “ப்ச்” என்றவாறு தாண்டி நடக்க முயன்றாள்.
கைகளை அவள் முன் நீட்டித் தடுத்ததும், அவளின் இளம் முகத்தில் சற்று கோபம், அதை மிஞ்சிய பயம் குடியேறியது. அடி வயிறு சுருள, கால்முட்டிகள், கால் ஆடுசதைகள் நடுங்க ஆரம்பித்தன. மேலுதட்டிலும் மூக்கிலும் வியர்வை பூக்கதொடங்கியது. அனிச்சையாக, இரண்டடி தள்ளிச் சென்றவளாய்,
“எனக்கு இந்த வார்த்தையே பிடிக்கலை.. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க.. எப்பவும் இந்த வார்த்தை சொல்லிட்டு என் முன்னாடி வராதீங்க..” என்றவாறு சற்று நடுக்கத்துடன், தன் பள்ளிப்பையை எடுத்து தோளில் மாட்டியவளைத் தேக்கியது அவன் குரல், “என்னை பார்த்து பயப்படாதே..அது என்ன ரொம்பவும் காயப்படுத்துது. நான்..நான் உன்னை விரும்புறேன்..உலகத்துல ….”…அவன் சொல்ல வருவதை கேட்க விரும்பாதவளாய், செவியற்றவள் போல் விரைந்து திரும்பி நடந்தாள்.
சற்றே உயர்ந்த பார்வையில், மணிகள் தொங்கும் நுழைவாயிலில் யாரோ நிற்பதைக்கண்டவள், அன்று இரண்டாம் முறையாக அதிர்ந்தாள். வனராஜனும், வேதநாயகியும் அங்கே தங்கள் காலனிகளை கழற்றிக்கொண்டு இருந்தனர். வேதநாயகியின் கூரிய ஆராய்ச்சிப்பார்வை அவளையும், அவளை தாண்டி சன்னதி அருகே வாயிலை நோக்கியவாறு நின்று கொண்டிருந்த பூங்காவனத்தையும் நோட்டமிட்டது.
செல்லக்கிளி தன் அதிர்ச்சியை மறைத்தவளாய் தலைகுனிந்தபடி தன் காலணிகளை அணிந்து கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். பூங்காவனமும் ஏதும் நடவாதது போல் தன் வேதனையோடிய முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டு சுவாமியை வலம்வந்துவிட்டு, அவர்களைக் கடந்து வெளியேறினான்.
வேதநாயகி மெதுவாய் உள்ளே நடந்தவராய், “ஏன் ராசு? இப்போ போனது உன் மாமன் மக தானே? பார்த்தா பெரியவுகளுக்கு வணக்கம் சொல்லனுன்னு தோணுச்சா அந்த குட்டிக்கு? இந்த காலத்துல பள்ளிக்கூடத்துல படிக்கையிலேயே….பாயிபிரண்டு…லவ்வுன்னு சொல்லிக்கிட்டு திரியுதுக. அங்க இருந்துபேசிக்கிட்டு இருந்த பய யாருன்னு தெரியலையே!!!!!” என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற தோரணையில் பேசிக்கொண்டே சென்றவரை வனராஜனின் கோபமுகம் தேக்கியது.
“ க்ராண்ட்மா..அவன் யாராயிருந்தா என்ன?….அவ சாமிகும்பிட வந்துட்டு கிளம்புறா..அவன் உள்ள சாமி கும்பிடுறான்..என்னவோ…’ரெண்டு பேரும் பேசுனாகனு’ பக்கத்துல உக்கார்ந்து பார்த்து, கேட்ட மாதிரி பேசறீங்க ..இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்.” என்று கூறினாலும் அவனின் மனதிற்குள்ளும் கோபம் கனன்றது..
“க்கும்…மாமன்மகளை விட்டுக்குடுக்காம பேசுறியாக்கும்…என்ன பேசுனானு கேட்கலைதா….ஆன ஏதோ பேசிட்டு தான் அந்த குட்டி வெரசா வெளிய வந்தா..அதை பார்த்தேன் நானு.” என்று வழக்காடியவரிடம்..,” அவ அப்படி பட்டவ இல்ல..சின்ன வயசுல இருந்து நான் பார்த்து வளர்ந்தவ. நீங்க வரீங்களா ” என்றுவாறு முன்னே நடந்தான்.
செல்லக்கிளியின் பின்னே ஓடத் துடித்த கால்களை அடக்க முடிந்தவனால், மனதில் அலையடித்த உணர்வுகளின் கொந்தளிப்பை அடக்க இயலவில்லை.. வரையறுக்கவும் இயலவில்லை…அது கோபமா, பொறாமையா, ஆதங்கமா…அவனுக்குப் புரியவில்லை.
********************
மாலைமயங்கி இரவு வரும் நேரம். அன்றுடன் திருப்புதல் தேர்வுகள் முடிவடைந்து இருந்ததால், செல்லக்கிளியும், சரவணனும் காரம்போர்ட் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்..
காணொளி விளையாட்டுக்கள், நேரக் கணக்கின்றி தொலைக்காட்சியில் ஆழ்ந்து கிடத்தல் போன்றவை, அந்த வீட்டில் நடைமுறையில் கிடையாது. கற்பகவள்ளி அதுவரை அவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தவர் இரவு உணவு தயாரிக்க எழுந்தார்.
அப்போது உள்ளே நுழைந்த வனராஜனைக் கண்டு அதிசயித்தவராய், “வாய்யா, வா வா.. என்ன ஆச்சரியம்? எம்பூட்டு நாளாச்சு நீ இங்க வந்து? ஒரே ஊருக்குள்ள இருக்கோமின்னுதான் பேரு.. விசேஷங்கள்ல பாத்துகிட்டா தான் உண்டு. நீ சின்னதுலயே ஆஸ்டல் போனதிலருந்து அது தானுமில்ல.. என்ன சாப்பிடுற?” என்று கேட்டவாறு அவன் அருகே சென்றவர், “ஒன்னும் வேணாம் அத்தை. நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன், அதான் உங்களை பார்த்துட்டு போலாம் னு வந்தேன்.“ என்றவரிடம், “ சரிதான்பா. உட்காரு, கொஞ்சமாவது சாப்பிட்டு தான் போகணும்” என்று உபசரித்து விட்டு பலகாரம் எடுத்துவர சென்றார்..
கேரம்போர்டில் அடுத்தஆட்டத்திற்கு தயாராகி, காய்களை அடுக்கிக் கொண்டிருந்த செல்லக்கிளியும், சரவணனும் எதிரெதிரே அமர்ந்திருக்க இருவருகிடையே இருந்த இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்தவனைக் கண்டு சரவணனுக்கு ஒரே கொண்டாட்டம்.,” அத்தான். முதலில் இருந்து ஆடுவோமா? எப்ப பார்த்தாலும் இவளே ஜெயிக்குறா! நீங்க ஆடுங்க. நீங்க ஸ்டேட்லெவல் சாம்பியன் னு கேள்வி பட்டுருக்கேன். உங்ககிட்ட இவை பாச்சா பலிக்குதான்னு பார்ப்போம்.” என்று குதூகலித்தான்.
அவனைக்கண்டு முறுவலித்த வனராஜன், ”டேய் மாப்பிள்ள!!!.என்ன பார்த்தா பொழுது போகாம விளையாட வந்த மாதிரியா இருக்கு? நாளைக்கு ஊருக்கு போறேன். அதை சொல்லிட்டு போலாம்னு வந்தேன் “ என,
“நீங்க விளாடுங்க..எனக்கு எழுதுற வேல இருக்கு “ என்று கிளம்பியவளை, கை பிடித்துநிறுத்திய சரவணன்,
“எங்க ஓட பார்க்குற..நில்லு. தோத்துருவன்னு பயமா? அத்தான்… அத்தான், ஒரே ஒரு ஆட்டம்…யாரு ஜெயிக்குறாங்கன்னு நான் பார்க்கணும்…ஓவரா பந்தா பண்ணிட்டு இருக்குறா இவ. அம்மாவால் கூட அவள ஜெயிக்கமுடியலனு.”
“அப்படியா..என்கூட ஆட அவளுக்கு தைரியமிருக்கா? இருந்தா…வர சொல்லு…ஒரே ஒரு ஆட்டம்…ஆடிருவோம்.” என முறுவலித்தவரே அவன் சொன்னதும்,
அங்கிருந்து எழுந்திருக்க போனவள், அவனின் வார்த்தைகளில் சீண்டப்பட்டவளாய், உதட்டின் இடஓரம் இடக்காய் இழுபட, ‘பெரிய இவிரு இவரு’ என்ற கன்னித்திமிர் தலை தூக்க, நக்கல் புன்னகை சிந்தியவளாய், மீண்டும் தன் இடத்தில் அமர்ந்தாள்.
ஆட்டம் தொடங்கியது. இருவரும் சளைக்காமல் ஆடினர். வனராஜனின் கைக்கு வந்த அடிப்பான்(striker) அவள் கைக்கு போவதற்குள் மளமளவென காய்கள் அடிக்கப்பட்டு குழிக்குள் வீழ்ந்தன. அவள் காய்களை குறிவைத்தால்…அவன் நிறத்தை, அவற்றின் புள்ளிகளை கணக்கில் வைத்து ஆடினான். இறுதியில் சிவப்பும் ஒரு கருப்பும் மிஞ்சியது. இருவருக்கும் 5 புள்ளிகளில் தான் வித்தியாசம்..சிவப்பை அடித்தவரே வெல்லும் நிலை.
செல்லக்கிளி கையில் அடிப்பான்…சிவப்பை நேராக குழிக்குள் தள்ளியது…தொடர்ந்து விழ வேண்டிய கருப்பு சற்றே வேகமாக அடித்த காரணத்தால் போர்டின் முனை தட்டி..விழாமல் போக்கு காட்டி அங்கேயே நின்றது. முகம் சிறியதாய் சுருங்கிட, சிவப்பை மீண்டும் நடுவில் வைத்தாள். அவளுக்கு அடிக்க வாகாக இருந்த கருப்பு…அவனுக்கு இடது பக்கத்தில் பேக் ஷாட்டில் தொட முடியாத இடத்தில், குழியை ஒட்டி நின்றது.
எனவே அவன் அதை அடிக்க மாட்டான் என்ற சிறுநம்பிக்கையுடன் அடிப்பானை அவனிடம் தந்துவிட்டு, சிறு பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லக்கிளி. சிவப்பை நேராக குழியில் அடித்து வீழ்த்தியவன், backshot அடிக்காமல், தன் இடது பக்கத்தில் இருக்கும் போர்டின் தடுப்புக் கட்டையை நோக்கி வேகமாக அடிக்க..அது எதிர்பக்கத்தில் zigzak ஆக சென்று..காயைத் தட்ட…மந்திரத்தில் விழுந்தது போல் கருப்புக் காய் குழிக்குள் விழுந்தது.
“ஹே..ஏஏஏஏஏஏஏஏ..” என்று சரவணன் ஆர்ப்பரிக்க, அவன் செய்த மாயாஜாலத்தில் மிரண்டவளாய், அதிர்ச்சியுடன் விழிவிரித்து, என்ன நடந்தது என்ற பிரமிப்புடன், விளங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் செல்லக்கிளி.
போர்ட் ஐ யும் வனராஜனின் முகத்தையும் மாறி, மாறி பார்த்தவளின் முகத்தின் முன் சொடக்கிட்டவன், புன்னகையுடன் கருப்பு காயினை அவள் கண் முன் ஆட்டினான்.
“இது என்ன அடி? நீங்க ஏதோ கள்ளாட்டம் ஆடுறீங்க.” என்று சொல்லியவாறு கோபத்துடன் இடத்தை விட்டு எழுந்தவளை,
”விதிப்படி தான் நான் ஆடி இருக்கேன். என்ன கள்ளாட்டம் ஆடிருக்கேன்னு சொல்லு பார்ப்போம்..?” என்று சவால் குரலில் கூற, வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், “யார் அது?” என்ற அவனின் கேள்வியில் திடுக்கிட்டு கூர்ந்து பார்த்தாள்.
“யாரை கேக்குறீங்க?” என்று விட்டு சற்று பதட்டத்துடன் திரும்பி தம்பி அமர்ந்திருந்த பக்கமாய் பார்த்தவள், சரவணன் அங்கு இல்லாததைக் கண்டு நிம்மதி அடைந்தாள்.
“அவன் போனதும் தான் கேட்டேன்.” என்று மெதுவாக கூறியவனை சற்று கோபத்தோடு பார்த்தவள், “கோவில்ல பார்த்ததை வச்சு கேக்குறீங்களா? என் தோழியின் அண்ணன். சாமி கும்பிட வந்தார் அவ்ளோ தான்.” என
“ ஏதும் பிரச்சனையா? உண்மைய சொல்லு.” என சிறு அழுத்தத்துடன் கேட்டான்.
அதை விட அழுத்தத்துடன், “அதான் சொன்னேனே. என் ப்ரெண்ட் அண்ணன்.. அதை தாண்டி ஏதும் சொல்ல இல்லை.” என
“ நீ கோவமா பேசினது பாத்தே செல்லம். அதான் கேக்குறேன்..ஏதாவது தொந்தரவு பண்றான்னா முதல்ல அம்மாட்ட சொல்லணும், சொல்லலை போல தெரியுது, இல்ல.. தேடி வந்து கேக்குற ஏன்ட்டயாவது சொல்லனும்.. நீ இப்படி மறைக்கறது நாளைக்கு உனக்கே ஆபத்தாய் ஆகலாம்னு புரிஞ்சுக்கோ.” என்றான் சற்றே சினந்த குரலில்.
“ மறைகவெல்லா நினைக்கலை..அதெல்லாம் ஒண்ணும் இல்ல சொல்றேனே.” என்றாள் தலை கவிழ்ந்தவாறு.
“எங்கே? அத என் முகத்த பார்த்து, கண்ண பார்த்து சொல்லு..” என… நிமிர்ந்து அவனை நேராக நோக்கி விட்டு…
“இதை பெரிசா நினைக்காதீங்க.” என்றவள், முன்னால் இருந்த போர்டை நோக்கிய படி, “அவுங்க விரும்புறதா சொன்னாங்கதா… எனக்கு படிக்கணும்…ம்ம்ம்…இந்த…மாதிரி வார்த்தையே பிடிக்காதுனு சொல்லிட்டேன். அவுங்க என் நெருங்குன தோழியோட அண்ணன்…அவுங்க குடும்பத்துக்குன்னு இந்த ஊர்ல நல்ல பேரு, மரியாதை இருக்கு….இது நாளைப்பின்ன பிரச்னையாகிட கூடாது, இதோட விடுங்க…அவுங்களும் இனி இந்த ஊர்ல இருக்க மாட்டாங்க. சென்னைக்கு போறாங்க. திரும்ப பேசுனா…ஏதாவது தொந்தரவு பண்ணா அம்மாட்ட சொல்லிடுறேன்…இப்போ…இதோட விடுங்க.” என தவிப்புடன் கூறியவளை கூர்ந்து பார்த்தவன்…தட்டுகளுடன் கற்பகம் வருவதைப் பார்த்து அமைதியானான்.
“ அத்தான் உங்க வெற்றியை, இந்த கேசரி சாப்பிட்டு கொண்டாடுவோமா ?” என்று கிண்ணங்களுடன் வந்த சரவணனைப் பார்த்து சிரித்தவன், “உங்க அக்கா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா…எனக்கு தெரியாதே…சரி வா, கொண்டாடிருவோம்.” என…
இருவரையும் முறைத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்….
“ செல்லம்…போய் அத்தானுக்கு தண்ணி எடுத்துட்டு வா…நீயும் தட்டு எடுத்துட்டு வா…சேர்ந்து சாப்பிடுங்க.” என்ற அன்னையின் குரலில் அடுக்களை நோக்கிச் சென்றவள், தண்ணீர் செம்புடன் திரும்பினாள்.
“ நான் அய்யா கூட சாப்பிடுறேன்”, என்றவளிடம், “அந்த தோசைய எடுத்து வை.“ என்று ஏவினார்.
“அத்தை ! செல்லக்கிளிய என்ன படிக்க வைக்க போறீங்க?” என் கேட்டவனிடம், சிரித்தவாறே ,
“ இங்கன பக்கத்துல இருக்க காலேஜில என்ன இருக்கோ அதான் படிக்கணும்” என கற்பகம் கூற,
சரவணன், “ம்மா, அக்கா டாக்டர் ஆகப் போறாளாம் “ என,
அதற்கு கற்பகம்,” அவ சொல்லுவா ஆயிரம்…. அதெல்லாம் இப்ப ரொம்ப கஷ்டம்.. ஏதோ நீட்டு பரீட்சை எழுதனுமாமே…ஏற்கனவே ஒரு புள்ளை, அப்படி ஆசை பட்டு….அது முடியாம என்னென்னவோ ஆகிப்போகிச்சு….அது ஏன் இவளுக்கு?” என,
கண்களில் சற்று வலியுடன் அன்னையை செல்லக்கிளி பார்க்க..அதை கவனித்தவனாய்,
சாப்பிட்டு கொண்டிருந்த வனராஜன், “அத்த, அவளுக்கு உண்மையாவே ஆர்வமிருந்தா…இப்பத்துல இருந்தே படிக்க ஆரம்பிக்கலா…அந்த பரீச்சைக்கு தயாராகுறதுக்கு நிறைய வழிகள் இருக்கு, ஆர்வதோட படிச்சா ஜெயிக்கமுடியும்,பதினொன்னாவது படிக்கும்போதே அதததுக்கு கோச்சிங் கொடுக்குற பள்ளிகள் இப்போ நிறைய வந்துருச்சு “ என,
“ அதெல்லாம சென்ன மாதிரி இருக்குற ஊர்ல இருகவுங்களுக்கு தான் சரியா வரும் ராசா…பொட்டபுள்ளிய ஹாஸ்டலுக்கு அனுப்புறது, தனியா, தொலைவா, அனுப்புறது எல்லாம் நம்ம குடும்பத்துல வழக்கமில்ல…இந்த பேச்சு வேணாம்…மாமாவும் செல்லத்தை விட்டு இருக்க மாட்டாக,” என..
செல்லக்கிளியின் வாடிய முகத்தைப் பார்த்தவன், ஏதும் செய்யவோ, பெற்றவரின் கருத்துக்கு மறுத்துக் கூறவோ வழியற்றவனாய், யோசனையுடன் அமைதியானான் வனராஜன்.
******************
தன் அலைபேசியில் பாடல் கேட்டவாறு படுத்திருந்த பூங்காவனத்தை நெருங்கினாள் அவனின் தங்கையும் செல்லக்கிளியின் நெருங்கிய தோழியுமான ஈஸ்வரி..
அவள் வந்தது தெரிந்ததும் கண்களை மூடிக்கொண்டான்.. அதில் எரிச்சலுற்றவளாக அவன் தோளில் ஓங்கி ஒரு தட்டு தட்டியவள், “டேய் அண்ணே, நா உங்கிட்ட பேசணும், ரொம்ப நடிக்காம கண்ணைத் தொற.” என்றாள், குரலில் கோபம் மின்ன..
மெதுவாக கண் திறந்தவன், “ ஏன்?? பேசு..காது திறந்து தான இருக்கு.“ என்று எகத்தாளம் பேசியவனை முறைத்தவாறு, ஒற்றை விரலை அவன் முன் நீட்டி,”நீ என் பிரன்ட் கிட்ட என்ன சொன்ன?”
“ஏன்?…உன் பிரன்ட் அதை சொல்லலையா?” என எதிர் கேள்வி எழுப்பி விட்டு நிதானமாக எழுந்து அமர்ந்தான். காதில் இருந்து இயர்போன்ஸ் ஐக் கழற்றிவிட்டு ‘சொல்லு’ என்பது போல் தங்கையின் முகம் பார்த்தான்.
ஈஸ்வரி, “ அவ படிக்க ஆசை படுறவ…டாக்டருக்கு படிக்கணும்னு இலக்கு வச்சு படிக்குறா…நீ போய் லூசு மாதிரி காதல்…கத்தரிக்காய்ன்னு பேசிட்டு வந்துருக்க…அவளை பத்தி என்ன தெரியும் உனக்கு….இல்ல…நான் தெரியாம தான் கேக்குறேன். என்கிட்ட எவனாவது இப்படி பேசுனா நீ சந்தோஷ படுவியா? நான் சரின்னு சொல்லிட்டு வந்தா தலைல தூக்கி வச்சு கொண்டாடுவியோ?” எனக்குரல் உயர்த்த,
“ஏன் கத்துற? என்கிட்ட தானே பேசணும்…சித்தி, ஆச்சி எல்லோரையும், கத்தி இங்க வரவைச்சு பேச போறியா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல…கூப்பிடு எல்லோர்ட்டையும் சொல்றேன்” என்று மெதுவாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் கூறினான் பூங்காவனம்.
அதிர்ந்து வெகுண்டவளாய்,” என்ன சொல்லபோற? என் வயசு தான் அவளுக்கு..அவள தொந்தரவு பண்ணிருக்குறோம்னு கொஞ்சமாவது உறுத்தலிருக்கா உனக்கு?” என,
பதிலுக்கு பூங்காவனம,“நான் அவளை விரும்புறது உண்மை. இப்போ ஊருக்கு போய்ட்டா அடுத்து அவள பார்க்குறது கஷ்டம். எப்போ விடுப்பு கிடைக்குமோ? போறதுக்கு முன்ன என் மனச அவட்ட சொல்லிரலாம்னு சொன்னேன். நா ஒன்னும் அவ பின்னாடியே போய் தொந்தரவு பண்ணலை. பண்ணவு மாட்டே…அவளுக்கு நான் விரும்புறது தெரியணும்..அதுக்கு தான் சொன்னேன். அவ படிச்சு முடிக்கும் வரை நான் காத்துட்டு இருப்பேன்னு அவட்ட சொல்லு.”
“டேய் டேய்..என்னையே தூது அனுப்ப பாக்குறியா..கொன்றுவேன் உன்ன. அண்ணனா நீ எருமமாடு…..” என்றவாறு அங்கிருந்த தலையனையால் மொத்தினாள் ஈஸ்வரி..
அவள் கையில் இருந்த தலையணையை பிடுங்கி எறிந்தவன்..,” நான் சொல்லணும் னு நினைச்சேன் சொல்லிட்டேன்..அவ மனசுல நா சொன்னது இருந்தா போதும்..எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல..அவ படிச்சு முடிக்கவும் நானும்வேலை கிடைச்சு என் வாழ்வை தொடங்கவும் சரியா இருக்கும் நீ ஒன்னும் கவலை படாத , அதெல்லா நா பார்த்துக்குறே” என்றான் உறுதியாக.
“ ம்ம்..கழுதை நினைச்சுதாம் கத்தலும் கதக்கலும்…நீ கனவு கண்டிட்டே இரு…அவ எந்த காலத்துலயும் உன்னை காதலிக்க போறதில்லை. அவளுக்கு காதல்னா பிடிக்காது. சும்மா நாங்க ஏதாச்சும் சினிமா பத்தி…ஹீரோ பத்தி.ஏன் கூட படிக்குற பசங்க பத்தி விளையாட்டா பேசுனாகூட மூஞ்ச தூக்கி வச்சுக்குவா. அவள போய் அப்படி நினைக்குறியே…உன்னை நினைச்சா…எனக்கு… பாவமா இருக்கு.” என, வடிவேல் தொனியில்…நக்கல் குரலில் கூறியவளை கூர்ந்து பார்த்து, “நாளைக்கு நடக்கிறது பத்தி யாருக்கும் தெரியாது..என் மனசுல தோணுனது..அவ மனசிலயும் தோணலாம். நீ ஒன்னும் பாவப்படாம போய் உன் வேலைய பார் “ என்றவன்..தன் உடமைகளை எடுத்து அடுக்க தொடங்கினான்.
*****************
காதலெனும் வலைவிரித்து
கன்னிமானை கவரவந்தவனோ!!
காதலுக்கு மரியாதை கேட்பவன்..
கள்ளமில்லா பிள்ளைமனக்
கவலைகளை அறிவானா..
ஊமையின் மனக்குரலாய்
உரத்து ஒலிக்கும்,
கனவுகளை அறிவானா…
கிளி பேசும்!!!!!!
சேதி 21 ********* சென்னையின், போக்குவரத்து…
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…