Categories: Ongoing Novel

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே..” 3ஆம் அத்தியாயம்

சேதி 3

********

“ஐயம்மாஆ…….” என்று கத்தியவாறு நுழைந்த பேரன் சரவணனை, ஆவலுடனும், வாய்க்கொள்ளாச் சிரிப்புடனும் எதிர்கொண்டார், தந்தைவழிப் பாட்டியான முத்துநாச்சியார்.

 

பேரனைக் கட்டி அணைத்து, முன்நெற்றியில் இதழொற்றியவரின் பார்வை, தன் மகனைத் தேடியது.

 

கையில் பூஜைக்கு தேவையான சாமான்கள் அடங்கிய கூடையுடன் உள்ளே நுழைந்தார் வேல்ராஜன்.

 

“ அத்தே!” என்று அழைத்தவாறு உள்ளே நுழைந்த கற்பக வள்ளியைப் பார்த்து, ” வாம்மா கற்பகம்!” என்று அன்போடு அழைத்தவர், உள்பக்கமாக நோக்கி,” பாலா, அய்யா ட்ட போய், பிள்ளங்க வந்துட்டாங்கன்னு சொல்லு, மொதல்ல போய், காருல இருக்குற சாமானுங்கள எடுத்துட்டு வா” என்று குரல் கொடுத்தார்.

 

“எல்லா எடுத்தாச்சு மா, தோட்டவேலை பாக்கற முனியன் வந்ததாப்புல, பூச சாமானுங்களை மட்டும் நா எடுத்துட்டு வந்துட்டேன். செல்லம் பூக்கூட எடுத்துட்டு வரா, மத்த எல்லாம் முனியன் எடுத்துட்டு வந்து அங்க கீழவீட்டு (கிழக்கு பக்கம் இருக்கும் வீடு)ல வச்சாச்சு”. என்றவாறு பூஜை அறை நோக்கி நடந்தார்.

 

பூக்கூடையை எடுத்து வந்து கொண்டிருந்த தன் பேத்தியின் உருவில் தன் மகளின் சிறு வயது உருவம் தெரிந்ததோ!!! பேத்தி செல்லயக்கிளியைப் பார்த்தவரின் கண்கள் சற்றே கலங்கின.

 

“ வாடா ராசாத்தி, எப்படி தாயீ இருக்க..ஏன் வரவர மெலிஞ்சுகிட்டே போற? நல்லா சாப்பிடுதியா இல்லியா?” என்று கேட்டவரிடம், சரவணன்,

 

“ அவ தானே. சினிமா ஹீரோயின் மாதிரி ஒல்லியா இருக்கணும் னு சாப்பாட, கண்ணுல மட்டும் பார்ப்பா, வாய்ல போட மாட்டா” என்று இடையில் புகுந்த தம்பி சரவணனின் தலையில் செல்லமாய் கொட்டிய செல்லக்கிளி,” அதெல்லாம் நா நல்லாதா சாப்பிடுறேன் ஐயாம்மா. அவே சும்மா சொல்லுதா” என்று சரவணனை முறைத்தவாறே பதிலளித்தவள், கையிலிருந்த பூக்கூடையை திரும்பி வந்த தந்தையின் கையில் கொடுத்தாள்.

 

“ படிக்கே, படிக்கேனு ராத்திரியெல்லாம் கண்ணுமுழிக்கா…சாப்பிடுறது எப்படி உடம்புல நிக்கும்? நீங்கதா கேளுங்க அத்தே.” என்று அங்கலாய்த்தார் கற்பகம்.

 

மருமகளைப் பார்த்து சமாதானமாய் முறுவலித்துவிட்டு பேத்தியைப் பார்த்து,

“உடம்பை கெடுத்துகிட்டு ஏதும் செய்ய கூடாது ராசாத்தி !” என்று செல்லக்கண்டிப்புக் குரலில் கூறியவர், “இந்த சாமானுங்களை தோட்டத்துக்கு கொண்டு போயிரலாமா? இருட்ட ஆரம்பிச்சுரும் இன்னும் சித்த நேரத்துல !” என்றதும் குதூகலம் மிக…அக்காவும், தம்பியும் தோட்டத்தில் வேலை செய்யும் பாலன் தாத்தவுடன் கிளம்பி விட்டனர்.

 

பூக்கூடையை வைத்துவிட்டுந்திரும்பிய மகனிடம் ,”அக்கா வரேன்னு சொன்னாளா ராசு? ராசனும் வரேன்னு சொன்னா..” என்று நயமாய் வினவினார்.

 

“நா போய் கூப்பிட்டதுக்கு அந்த அத்த ஆயரம் நுரநாட்டியம்(குதர்க்கமாக பேசுதல்) பேசுனாக..அனுப்புவாகளான்னு தெரிலம்மா” என்றார் வேல்ராஜன்.

 

“ம்ஹும்..” என்று பெருமூச்சு விட்ட முத்துநாச்சி, ”ஆதி காலத்துலய அனுப்ப மாட்டாக. அவுக பண்ணதுக்கெல்லாம் எம் மக பொறுத்து போறா….ஆனாலும் அவளுக்கும் மனசுன்னிருக்கும்.. ஆசை இருக்கும் னு நினைக்க மாட்டேங்காக. சொந்த பந்தமிருக்குன்னு ஒட்டக்கூடவிட மாட்டீங்குராக.. “ என்று புலம்பியவரை,

 

“அவுக கொணம் தெரிஞ்சது தானே அத்த. இப்போ விசனப்பட்டு மனச வருத்தாதீக” என் தேறுதல் சொன்ன மருமகளை ப் பார்த்தவர்,” ம்ம்ம்ம்..போன வருஷம் அவளுக்கு மேலுக்கு சொகமில்லாம போனப்போ குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட வேண்டிக்கிட்டேன்….அது நிறைவேத்த அவ வந்தா நல்லாருக்குமின்னு பார்த்தேன்……”, பெருமூச்சுவிட்ட படி, “என்னிக்கு எம்மவ தாய்வீடு வந்து போகனிருப்பாளோ ?”

 

“உங்க பேரன் இருக்கைல இப்படி வருத்தப்படலாமா ஆச்சி? சொன்ன மாதிரி வந்துட்டேன் பாருங்க..உங்க மகளையும் கூட்டிகிட்டு” என்றவாறு உள்ளே நுழைந்த பேரன் வனராஜனையும் மகள் சொர்ணக்கிளியையும் கண்டு முத்துநாச்சியாரின் கண்கள் விரிந்தனவா….?கண்ணீரில் நிறைந்தனவா ….!அவருக்கே வெளிச்சம்.

 

சிறுபெண்போல் ஓடி வந்து,கட்டி அணைத்த மகளைத் தழுவி உச்சி முகர்ந்தவர் கண்டு அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து நின்றனர்.

 

“சொர்ணம்!!!!!.நல்லாருக்கியா ? உன்னைத் தனியா அனுப்பிச்சுட்டாங்களா? உங்க வீட்டுல ஒன்னும் சொல்லையே? மாப்பிள்ளை கூட வரலையா?? ” என்று லேசான அச்சத்துடன் பலவாறு வினவியத் தாயை வாஞ்சையுடன் பார்த்த சொர்ணக்கிளி ,

 

”கோயில் வேண்டுதல்னு சொன்னதால அனுப்பிட்டாக மா. அவுங்க இன்னிக்கு ஒரு வேலையா மதுர வர போயிருக்காக. அத்த மாமா அங்க சிவன் கோயில் போவாங்க…. உங்க பேரன் கேட்டதால அவுக சரினுட்டாக….இந்த பெரிய மனுசர் கேட்டு, இது நடக்கணும்னு இருந்து இருக்கு.” என்று புன்னகைத்தவாறே சொன்னவரை கண்களில் அன்பு வழியப்பார்த்தவாறு நின்றனர் வேல்ராஜனும் கற்பகவள்ளியும் …..

 

காலர் ஐ தூக்கிவிட்டு கெத்தாய் சிரித்த பேரனைக் கண்டு கண்களில் மகிழ்ச்சி பொங்க நெட்டி முறித்தார் முத்து நாச்சியார்.

 

குசல விசாரிப்புகளுக்கு பின் சொர்ணக்கிளி, தன் தம்பி மனைவி கற்பகத்திடம் ,”எங்க? என் மருமகனையும் மருமகளையும்? காணோம்!” என கேட்க,

 

கற்பகவள்ளி, “மாமா தோட்டத்துல இருக்காகன்னதும்….அங்க போய்ட்டாங்க மதினி. ,நாமும் கிளம்புவமா?” என கேட்க,

 

“தனியா ஏன் அனுப்புன கற்பகம்?” என, “நம்ம பாலா கூட போயிருக்கார். ரெண்டு பேருக்கும் தாத்தாவை பார்க்கணும் னு நிலைகொள்ளல.”

 

“ சரி வாங்க நாமளும் நடப்போம்.“ என்று அனைவரும் ஆளுக்கொரு சாமானை எடுத்த படி கிளம்பினர்.

 

************************

ஊரை விட்டு சற்றே தள்ளி இருந்த புன்செய் நிலம். பல ஏக்கர் கணக்கில் விரிந்து இருந்தது. அருகில் இருந்த கண்மாயின் புண்ணியத்தில சிறு கிராமமான கரிசல்குளத்தின் கிணறுகள், சிறு குளம் வற்றாமல் இருந்தன. கரிசல் மண் மிகுந்த வளம் வாய்ந்தது. சோளம், கேழ்வரகு, பருத்தி விளைய ஏற்ற நிலம். கரிசல் மண் பூமி அங்கிருந்த குளத்தால் வளமடைந்த காரணத்தால் அவ்வூருக்கு ‘கரிசல்குளம்’ என்று பெயர்.

 

மாலைக்கதிர் ஒளியில் வயலில் முளைத்து சிரித்தச்சோள நாற்றுக்கள், விரித்த பச்சைப்பட்டென மின்னி அசைந்து ஆடின. பட்டின் கரையென அழகூட்டி நின்றன வரப்பு வழிகள்.அவற்றின் அருகில் சலலசத்து ஓடிய வாய்க்கால்களில் வெள்ளைக்கொக்குகளும் சிறு பறவைகளும் இரைதேடி நடந்தன. பெயர்த்தெரியாச்செடிகளும் அதில் மலர்ந்து கிடந்த வண்ண மலர்களும் அசைந்தாடி வரவேற்றன, நடந்து வந்த செல்லக்கிளியையும், சரவணனையும்.

 

செல்லக்கிளியும், சரவணனும் பசுமை அழகில் மயங்கியவர்களாய் இருந்தாலும், வழியின் மீது கவனம் வைத்துக் கொண்டு நடந்து சென்றனர். வழித்துணையாக வந்த வேலையாளான பாலன், “தடம் (வழி)பாத்து நடங்க தம்பி.”என்று கவனப்படுத்தியும், தரையில் குச்சியால் தட்டியவாறு கண்காணிப்பாகவும் அழைத்து சென்றார். மாலை நேரங்களில் ஊர்ந்துவரும் சிறு உயிரினங்களைக் கண்டு அவருக்கு பயமில்லை எனினும். சிறு நகரத்தில் வசித்து வரும் பிள்ளைகள் பயந்து விடுவார்கள் என்று மிக கவனத்துடன் அழைத்துச்சென்றார்.

 

“ அடடடடே வாங்க வாங்க. குட்டி ராசவும், சின்னத்தாயியும் எப்ப வந்தீங்க?” என்று ஆனந்தமாய் ஆர்ப்பாட்டமான குரலில் வரவேற்றார் மயில்வாகனன்.

 

மெல்லியதாய் இருந்தாலும் உழைப்பால் இறுகிய உடல். காடு, கரை என சுற்றி திரிவதால் கருத்த சருமம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தோளில் துண்டு என கிராமத்து விவசாயியின் அனைத்து அம்சங்களும் கொண்டவராய் வந்த தங்களின் தந்தைவழி தாத்தாவைப் பார்த்து முறுவலித்தவாறே, ஆளுக்கொரு கரம் பற்றி கொண்டனர் இருவரும்.

 

‘இப்ப தா வந்தோம் ஐயாப்பா”என்ற பேரனை வாஞ்சையுடன் அணைத்து,

 

“நம்ம தோட்டத்து இளநீ பிடிக்கும்ல சரவணா. நீங்க வருவீங்கங்கன்னு மரத்துல இருந்து இறக்கி வச்சுருக்கு” என்று அன்புவழிய உபசரித்தவரை,

 

“ஐயாப்பா!!!! செம்பு ஏதும் இல்லயா ??அதுல ஊத்திக் கொடுக்க சொல்லுங்க….நல்ல ட்ரெஸ்… இளநீ தண்ணி பட்டா கறையாகிடும்”, என

 

“சொம்புல பூசைக்கு நிறைதண்ணி பிடிச்சு வச்சுருக்கு குட்டி ராசா.” என்றவர், ”ஏலே அந்த பப்பாளி எல நாலு இளசா பறிச்சுட்டு வா” , என்று சொல்லி, அது வந்ததும் இலையின் தண்டை மட்டும் உடைத்து உறிஞ்சுகுழல் போல் செய்தவர், அதைப் பயன்படுத்தி இளநீர் பருக வைத்தார்.

 

“ என்ன ஓரவஞ்சனை!!! மகன் பிள்ளைகளுக்கு மட்டும் இளநீ உபசாரம் நடக்குது. மகபிள்ள….உங்கள பார்க்ணும்னு… வந்ததும் வராததுமா வேம்பகோட்டைல இருந்து… பறந்து…. ஓடி வந்திருக்கேன். எனக்கில்லையா இளநீ?” என்றவன், செல்லக்கிளி கையில் இருந்த இளநீரைப் பறித்துக்கொண்டான் வனராஜன்.

 

குடித்துக் கொண்டிருந்த இளநீர் வனராஜனின் கைக்கு போய்விட, பப்பாளி இலைத் தண்டு மட்டும் வாயில் நீட்டிக்கொண்டு இருக்க, கைகளை விரித்தவாறு வைத்துக்கொண்டு, பேந்த விழித்தவளைப் பார்த்து அடக்கமாட்டாமல் சரவணன் சிரிக்க தம்பியைப் பார்த்து முறைத்து விட்டு வாயில் இருந்த தண்டை எடுத்தவள் ,”உங்களுக்கு வேணும் னா குலைகுலையா அந்தாருக்கு, வெட்டிக் குடிங்க. என் இளநீய ஏன் பிடிங்குரீங்க ?”, என்றவாறு வனராஜனின் கையிலிருந்து திரும்ப பறிக்க முயன்றாள்.

 

அவளையோ, “உனக்கு வேற வெட்டி தர சொல்றேன்யா”, என்று சமாதானத்தில் இறங்கிய பெரிய மனுஷனையோ மதித்தானில்லை.

 

பறிக்க வந்த செல்லக்கிளிக்குப் போக்கு காட்டி, மேலும் கீழும் இளநீரை தூக்கிப் பிடித்தவன், அங்கிருந்த இன்னொரு பப்பாளி இலைய எடுத்து, “ஒன்னு என்ன, ரெண்டு வெட்டி உங்க பேத்திக்கு கொடுங்க. நடந்து வந்தது…தாகமா இருக்கு…நான் இதை முதல்ல குடிக்குறேன்“ என்றவன் முறைத்துக்கொண்டிருந்த மாமன்மகளை சற்றும் கண்டுகொள்ளாமல், தண்டை ஒடித்து, அந்த இளநீரை பருக ஆரம்பித்தான்.

 

“வந்ததும், வராததுமா ஏண்டா அவ கூட வம்புக்கு போற, பாலா! பிள்ளைக்கு இளநீ வெட்டு” என்று ஏவிய தன் பாசமான அத்தையைப் பார்த்து ,” எப்போ வந்தீங்க அத்த? நல்லாருக்கீங்களா?” என்றவளை,

 

“அட.. என் மருமக, பெரிய மனுசி மாதிரி நலமெல்லாம் விசாரிக்காளே !!! நல்லருக்கேன் டா…நீ நல்லா படிக்கிறியா? எப்போ பரீட்சை? “

 

“ எல்லா பாடத்துலயும் பாஸாகுறாளா னு முதல்ல கேளுங்கம்மா.” என்று வம்பிழுத்தவனை திரும்பியும் பாராது,

 

“ அடுத்த மாசத்துல இருக்கும் அத்த. இன்னும் அட்டவணை வரல. நான் நல்லா படிப்பேன், எப்பவும் நா தான் முத எங்க கிளாஸ் ல”

 

“ஆமா, ஆமா. முதல்ல போனாத் தானே..கிளாஸ கூட்டிபெருக்க, தூசி தட்ட சரியா இருக்கும்” என்றவனைப் பார்த்து பல்லைக்கடித்தவள்,

 

“எந்த ஸ்கூல் ல யும் பசங்கள சுத்தம் செய்ய சொல்ல மாட்டாங்க”

 

“நீ தான் ஒட்டடைக்குச்சி மாதிரி இருக்கியே..அதா, உன்ன வச்சு…. எல்ல்ல்….லாம் செய்வங்களோன்னு கேட்டேன்” என்று அசராமல் அடித்தவனிடம்,

 

“ஏன்? உங்க காலேஜ் ல உங்கள வச்சு தான் எல்லாம் செய்வங்களா? நீங்க என்னை விட உயரம், குருவிக்குடு மாதிரி முடியும் வச்சுறுக்கீங்களே..ஒட்டடை அடிக்க வசதியா இருக்கும்” என்று கடுப்பாக மொழிந்தவளைக் கண்டு சிரித்தவாறே இளநீரைப் பருகி முடித்தவன், ஏதும் இடக்காக பதில் பேசும் முன், ” ராசா! நீயும், குட்டி ராசாவும் கிணத்துக்குள்ள இருந்து பிடிமண் எடுத்துட்டு வரீங்களா?” என்றார் பெரியவர்.

 

சரவணன், வனராஜன் இருவரும் களத்துக்கு பக்கத்தில் இருந்த மோட்டார் ரூமின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் இறங்கி கிணற்றை அடைந்தனர்..

 

கடைசி படிக்கட்டில் சிறுவனை நிற்கவைத்து விட்டு கால்ச்சட்டையை முழங்கால் வரை மடித்துவிட்டுக்கொண்டு, நான்கு பேர் நிற்கும் அளவு பாறையால் அமைக்கப்பட்டிருந்த இடத்தில், நீருக்குள் இறங்கிய வனராஜன் அங்கிருந்த மண்ணை இருகை நிறைய அள்ளிக்கொண்டு மேலேறி வந்தான்.

 

பேரன்கள் பிடிமண்ணை எடுத்து வந்ததும், அதை பயபக்தியோடு அனைவரும் வணங்க, அந்த மண் கொண்டு பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்து அங்கே பூஜைக்கென சுத்தம் செய்யப்பட்டு சாணம் மொழுகிய இடத்தில் விரிக்கப்பட்டு வைத்திருந்த இலை மீது வைத்தார், மயில்வாகனன். மங்கலக் குலவையிட்டார் முத்துநாச்சியார்.

 

சொர்ணக்கிளி மாவிளக்கு பிடிக்க அங்கு தயாராக கூட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று கற்கள் அடுப்பில் பொங்கல் வைக்க ஆரம்பித்தார் முத்து நாச்சியார். கற்பகம், செல்லக்கிளி அவருக்கு பொங்கல் வைக்க உதவ, வேல்ராஜன் துணையுடன் கரும்புகளால் குடில் போல் அமைத்து பிடிமண்ணை மஞ்சள், குங்குமம், பூ வைத்து அலங்கரித்து வாழை இலையின் மீது வைத்துவிட்டு, பொரி, கடலை, வெல்லத்தை பாத்திரத்தில் கலந்துவைத்தல், படைக்கத் தேவையானபழங்கள், பத்தி, சாம்பிராணி எடுத்துவைத்தல் என பூஜைக்கான வேலைகளில் இறங்கினார் மயில்வாகனன்.

 

பேரன்களுக்கு வெல்லம் உடைத்தல் மற்றும் தேங்காய் கீறும் பணி தரப்பட்டது. சிறியவனான சரவணன் தன் ஆசை அத்தானுடன் அமர்ந்து கதைபேசியவாறே வெல்லத்தை தட்டிக்கொண்டிருந்தான்.

 

வனராஜன் தேங்காய் உடைத்துக் கீறிக் கொடுக்க அதைப் பொடியாக நறுக்கி கொண்டுஇருந்தாள் செல்லக்கிளி.

 

“ஏன் ஐயப்பா? இங்க தான் இவ்ளோ மண்ணு இருக்கே! ஏன் கிணத்துக்குள்ள இருந்து மண்ணு எடுத்துட்டு வர சொல்றீங்க ?” என்று கேட்டான் சரவணன்.

அவனின் கேள்வியில் அனைவருக்கும் சிரிப்பு வர, புன்முறுவலுடன் மயில்வாகனத்தைப் பார்த்தனர். அவரும் சிரித்தபடி,

 

“ அதுல ஒரு கத இருக்கு குட்டி ராசா! இப்போ போல காரு வசதி எல்லாம் இல்லாத காலத்துல, குலதெய்வக் கோயிலுக்கு போறது ரொம்ப சிரமம் குட்டி ராசா. முப்பாட்டன் அது மாதிரி போய் குலதெய்வக் கோவிலுக்கு போய்ட்டு வரைல அங்க இருந்து 1 கைப்பிடி மண்ணு எடுத்துட்டு வந்து வீட்டுல வச்சு கும்பிட்டுகிட்டு இருந்திருக்காக. அது பிடிக்காத அவுக அய்யா, இது என்ன பயித்தியக்கார பய மாதிரி மண்ணை எடுத்துட்டு வந்து கும்பிட்டுகிட்டு இருக்கான்னு கோவப்பட்டு, அந்த மண்ணை எடுத்து இந்த கிணத்துக்குள்ள போட்டுட்டாகளாம். அதுக்கு என் முப்பாட்டன் விசனப்பட்டு(கவலைப்பட்டு) அழுதுகிட்டு கோவில்ல படுத்து இருந்தாகளாம்.அப்போ அவுங்க கனவுல கிணத்து தண்ணிக்குள்ள ஒரு சின்னபொன்னு சிரிக்கிற மாதிரி உருவம் தெரிஞ்சதாம். நாம்ம குலதெய்வம் எங்கயும் போகலை. இங்க கிணத்துக்குள்ள தான் இருக்கான்னு, அதுல இருந்து இந்த கிணத்தை தெய்வமா கும்பிட ஆரம்பிச்சாங்க. சிவராத்திரி அன்னிக்கு பிடிமண்ணை எடுத்து வச்சு கும்பிட்டு, மறுநாள் திரும்ப கிணத்துல போட்டுடுறது ஒரு வழக்கமா ஆகி போச்சு. நம்ம குலதெய்வம் வந்ததுல இருந்து, இந்த கிணறு வத்துனதே இல்லியாம். அதா நாமும் வழி வழியா இங்கன வந்து சாமி கும்பிடுரோமய்யா.” எனக் கூற, சுவாரஸ்யமாக கதைக்கேட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.

 

சற்று தள்ளி விரிக்கப்பட்டு இருந்த தார்ப்பாய்(விளைச்சல்களில் நீர் படாமல் காக்க மூடப்படும் பெரிய, நீர்ப்புகாத துணி) மீது அமர்ந்து ,தேங்காய் நறுக்கும் வேலையில் இணைந்து இருந்தனர் வனராஜனும், செல்லக்கிளியும்.

 

அமைதியாய் வேலை செய்து கொண்டிருந்தவளிடம், “பிளஸ் ஒன்னுல, என்ன குரூப் எடுக்க போற?” என்ற வனராஜனின் கேள்விக்கு, செல்லக்கிளியின் பதில், மௌனமாக இருக்கவே, “ஏன்? பத்தாவது பாஸ் ஆவேன்னு நம்பிக்கை இல்லியா?” என்று மீண்டும் சீண்ட ஆரம்பித்தான்.

 

“ ஏதோ படிக்குறேன்..உங்களுக்கு என்ன?” என காய்ந்தவளிடம், ” ஒரு இளநீய குடிச்சதுக்கு, இப்படியா முகத்தை தூக்கி வச்சுக்குவ? பார்க்க சகிக்கலை.” என கேலியாய் முகம் சுழித்தவனைப் பார்த்து, இன்னும் கடுப்பாகியவள், “உங்களை யார் பார்க்க சொன்னா? ” முறைப்பாய் கேட்க, “என் மாமன் மகளே!!!!! நானே உன்னை பாக்கலைனா யார் உன்னை பாக்க ” என்று மெல்லிய குரலில்சீண்டலாய்க் கூறியவனை கொலைவெறியுடன் பார்த்தவள், “என்னை பார்க்குறதுக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க…. இல்லாம போறாங்க….அதை பற்றி எல்லாம் நீங்க கவலை படாதீங்க.” என்று பற்களைக் கடித்தபடி கூறியவள், சட்டென்று திரும்பி அமர்ந்து கொண்டாள், எதிர்திசையை நோக்கியவாறு.

 

சிறுபிள்ளை போல் முறுக்கி கொண்டு அமர்பவளைப் பார்த்து நகைத்தவனின் பார்வை ரசனையாய் மாறியது.

 

சூரியன் இறங்கிய அந்திமாலை வானம். ஆரஞ்சு நிறத்தை பூசிக் கொண்டு மனம் மயக்க, ஆரஞ்சுபின்னணியில் சிவப்பு பட்டுப்பாவாடையும் சிவப்புச்சட்டை அணிந்து, மின்னும் பட்டுசரிகைபோல் நிறத்தில் தாவணி அணிந்து, ஒற்றை பின்னலில் மல்லிகைச் சரம் அலங்கரிக்க அமர்ந்திருந்தவள், தரையில் இறங்கிய சூரியன் போல் ஜொலித்தாளோ.!!!

 

மெல்லிய சீழ்கை ஒலியில் ஏதோ பாடல் போல் அவன் விசிலடிப்பதைக் கேட்டு அங்கே வந்த சரவணன், “அத்தான்! சூப்பர் ஆ விசில்லயே பாட்டு பாடுறீங்க. எனக்கும் சொல்லி கொடுங்க” என, ”டேய்! அதெல்லாம் உனக்கு எதுக்கு? நம்ம அய்யாக்கு அதெல்லாம் பிடிக்காது. விசிலடிச்சுட்டு..நல்லா அடிவாங்கி கட்டிக்காத.” என்று மிரட்டிய தமக்கையை ப் பார்த்து, ”களவும் கற்று மறன்னு சொல்லிருக்காங்க… நா விசில் எனும் இசைய கத்துக்கப் போறேன்.” என்று கெத்தாய்க் கூறியவனை முறைத்துப் பார்த்துவிட்டு, ஓரப்பார்வையாய் வனராஜனை நோக்கியவள், ”விசில் எல்லாம் பொறுக்கிப்பசங்க தான் அடிப்பாங்க” என்றவளைப்பார்த்து, ’அடிப்பாவி..சந்தடி சாக்குல என்னைய பொறுக்கிங்குறியா?’ என்று மனதில் எண்ணியவன், “அது விசிலடிக்க வராதவுங்க, பொறாமைல சொல்றது..கண்டுக்காத மாப்பிள.” என்று கூறியவாறு அருகில் அமர்த்தி, விசிலடிப்பதன் நெளிவுசுழிவுகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தவனைப் பார்த்து, தலையில் அடிக்காத குறைக்கு, நெற்றியில் இரண்டு விரல்களால் தட்டி கொண்டவளாய், நறுக்கிய தேங்காய் துண்டுகளை எடுத்துக்கொண்டு பொங்கல் வைத்துக்கொண்டிருந்த இடம் நோக்கி நகர்ந்தாள்.

 

அங்கு பொங்கல் தயாராகி இருக்க, தேங்காய்த்துண்டுகள் போட்டு கிளறி, இறுதியாய் போட வேண்டிய முந்திரி, ஏலம், திராட்சை சேர்த்து நெய் ஊற்றி மூடி வைத்தார் முத்துநாச்சியார்.

 

பொங்கலை, இலையில் தழுவை (படையல் போடுதல்) போட்டவர்,

சொர்ணக்கிளி பிடித்த மாவிளக்கில் (பச்சரிசிமாவில் தண்ணீர், வெல்லத்தூள் கலந்து, நன்கு பிசைந்து பக்குவமாக உருட்டி, அந்த மாவில் விளக்கு போல செய்வது) எண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி சாமி அருகில் வைத்தார். சொர்ணக்கிளியை படுக்க வைத்து வாழை இலையில் அந்த மாவிளக்கை வைத்து, தலை,நெஞ்சு,வயிறு,முட்டி,பாதம் என வைத்து வைத்து எடுத்தார் முத்துநாச்சியார்.

 

ஏதேனும் நோய் வந்தால், அவ்வாறு மாவிளக்கு எடுப்பதாக வேண்டிக்கொள்வது கிராமத்து வழக்கம். இவ்வாறு உடலை தொட்டு எடுத்து சுற்றி..அதை கடவுள் அருகில் எரிய வைத்தால்..எண்ணெய் தீர்ந்து போகும் போது நோயும் தீர்ந்து, மீண்டும் அண்டாது ஓடிப்போகும் என்பது ஐதீகம்.

 

நிறைவாய் பூஜை முடித்தவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த கார்களில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.

 

இரவு உணவிற்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற சொல்லப்படாத கட்டளைப்படி, விடைபெற்று, முதலில் கிளம்பினர் சொர்ணக்கிளியும், வனராஜனும்.

 

கட்டியணைத்து முத்தமிட்டு, “வாரே. உடம்ப கவனிச்சுக்கோ.” என்று விட்டு அனைவரிடமும் விடைப்பெற்றுக் கிளம்பிய அத்தையைப் பார்த்தவள், தலையசைத்து விடைபெற்ற அத்தை மகனைப் பார்க்காதவள் போல் தலைகுனிந்து கொள்ள…. தன் ஆச்சி, தாத்தா அருகில் சென்று காலைத் தொட்டு திரும்பியவன், யாரும் கவனிக்காத வகையில், நீண்டு தொங்கிய அவளின் பின்னலின் நுனி பற்றி இழுத்தான். கோபமாக முறைத்தவளிடம், கண்களில் குறும்பு மின்ன, புன்னகையில் உதட்டோரம் துடிக்க, மீண்டும் தலைஅசைத்தவனைப் பார்த்தவளின் தலை, அவளின் அனுமதி இன்றியே தானாக அசைந்து அவனுக்கு விடை கொடுத்தது.

 

 

*********

 

 

 

பதின்வயதுப் பதுமையாய்

செல்லக் கிள்ளையவள்…

இருபதில் ஏறு போல

எவருக்கும் அஞ்சா ராசனவன்,

இடையில் தோன்றுவது

ஈர்ப்பா!!! பாசமா!!

பெயரிடப்படாத,

இலக்கணத்தில் அடங்கா

நட்பா!!!!!

காலம் பதில் சொல்லுமோ!!

 

 

 

 

கிளி பேசும்………

 

What’s your Reaction?
+1
3
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
தாமரை

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

10 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

13 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

4 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago