அன்று வேலை முடித்து இருவரும் வீட்டிற்கு வந்தபோது, தந்தையின் குரலைக் கேட்டு, எங்கிருந்தோ கூவியடித்தவாறு ஓடிவந்தனர் ஆத்வீகனும் சாத்வீகனும்.
அவர்களின் குரலைக் கேட்டதும், அது வரை மனத்தை அரித்த பழு காணாமல் போக, முகம் மலர எப்போதும் போலப் பாய்ந்து முன்னேறியவன் புயலென வந்தவர்களை வாரியணைத்துத் தன் கரங்களில் ஏந்தி இரு முறை சுழற்ற, அதற்கேற்ப இருவரும் பெரும் ஓசையுடன் கிறீச்சிட்டுக் கூவி அந்த வீட்டை அதிர வைத்தனர். அபயவிதுலனும், பொங்கிச் சிரித்தவாறு அவர்களைக் கீழே இறக்கிவிட்டதும் தந்தையின் கால்களை ஆளுக்கொருவராக இறுகப் பற்றிக்கொண்டனர். உள்ளம் உருகிப் போக, அவர்களுக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்தவன், இருவரின் சிறிய நாசியைப் பற்றி ஆட்டிவிட்டு,
“ஹாய்… மை ஹீரோஸ்… இன்று பள்ளிக்கூடம் எப்படிச் சென்றது?” என்று விசாரித்துக்கொண்டிருக்கும் போதே தம்பியின் சத்தம் கேட்டு முகம் மலர, முன்னறைக்கு வந்தார் காந்திமதி.
அதே நேரம் குழந்தைகளையும், அபயவிதுலனையும் ரசித்தவாறு சற்று விந்தி உள்ளே வந்துகொண்டிருந்த மிளிர்மிருதையைக் கண்டு பதறியவாறு, தம்பியை மறந்து,
“என்னம்மா… என்னவாகிவிட்டது…” என்றவாறு மிளிர்மிருதையை நெருங்கினார்.
“ஒன்றுமில்லைம்மா… சும்மா சின்ன விபத்து…” என்று முடிக்கவில்லை,
“விபத்தா… என்ன விபத்து… எப்படியாச்சு…?” என்று பதற, அவரைச் சமப்படுத்துவதற்குள் மிளிர்மிருதைக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.
“ஏன்மா… இறங்கிச் சென்றாய்… அபயவிதுலன்தான் பல முறை உனக்கு எச்சரித்திருக்கிறான் அல்லவா தனியே போகவேண்டாம் என்று… நம்மைச் சுற்றி என்னென்வோ நடக்கிறது… இந்த நிலையில் நாமே போய் விலைகொடுத்துத் துன்பத்தை வாங்கலாமா?” என்று கண்டித்தவர், அவளுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் சென்று அங்கிருந்த நீளிருக்கையில் அமர்த்த, அவரைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது மிளிர்மிருதைக்கு.
எப்படியோ அவரைச் சமாதானப் படுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தால் அபயவிதுலன், ஒற்றைச் சொஃபாவில் குழந்தைகளை இருத்திவிட்டு அவர்களுக்கு முன்பாகத் தரையில் சப்பாணிகட்டி அமர்ந்து, அவர்களின் பிஞ்சுக் கால்களைப் பற்றித் தன் மடியில் வைத்து, அவற்றை மென்மையாக அழுத்திக் கொடுத்தவாறு, அவர்கள் சொன்ன உண்மை, பொய், கட்டுக் கதைகளைக் கன அக்கறையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அதைக் கண்டதும் மிளிர்மிருதைக்கு, ஒருபக்கம் சிரிப்பாக இருந்தாலும், மறு பக்கம் பொறாமை எழவும் செய்தது.
இங்கே ஒருத்தி காயப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்படுகிறேன்… கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா பார்… ஏதோ பல வருடம் குழந்தைகளைப் பிரிந்து அதன் பின் சேர்ந்த எஃபக்ட் கொடுக்கிறார்… இவரை…” என்று முணுமுணுத்தவள், கோபத்துடன் நீட்டியிருந்த காலை மடிக்க, அது மடிபட்ட வேகத்தில் சுளீர் என்றது.
அவளுக்குத் தன்னை எண்ணியும் கோபமாக இருந்தது. சும்மா இருக்க முடியாது, பழம் வாங்குகிறேன் என்று பழுக்க அடி வாங்கிவந்ததுதான் மிச்சம். எரிச்சலுடன் பல்லைக் கடித்தவள், தன்னை மறந்து முழங்காலை வருடிக் கொடுத்தவாறு தன் மக்களைப் பார்த்து முறைத்தாள். கூடவே ஓடிச் சென்று அவர்களுக்கு மத்தியில் உட்காரவேண்டும் என்கிற வேகம் எழுந்தது.
எரிச்சலுடன் தன் நிலையை எண்ணிப் புலம்பிக்கொண்டிருக்கும் போதே ஆராதனா தேநீர் கோப்பையுடன் முன்னறைக்கு வந்தாள். அவள் பின்னால், காந்திமதியும் மிளிர்மிருதையின் காயத்திற்குப் பூசுவதற்காக, மஞ்சளும் நல்லெண்ணெய்யும் காய்ச்சி எடுத்துக்கொண்டு பின்னால் வந்தார்.
குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தவனை நெருங்கிய காந்திமதி, தன் கரத்திலிருந்ததை அவனிடம் நீட்டியவாறு,
“கண்ணா… இதைப் படுக்கப் போகும் முன் மிளிரின் காயத்திற்குப் பூசிவிடு… அதற்குள் சூடு ஆறிவிடும்… அப்படியே கட்டும் போட்டுவிடு… இல்லையென்றால் மெத்தை விரிப்பெல்லாம் கறையாகிவிடும்…” என்று எச்சரிக்க,
“சரிக்கா…” என்றவாறு அதை வாங்கி அழகுக்காக வைத்திருந்த மேசையில் வைத்துவிட்டு எழுந்து சகோதரியின் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்று அருகேயிருந்த இருக்கையில் அமரச் செய்துவிட்டு, ஆராதனா நீட்டிய தேனீரை வாங்கியவாறே, தன் சகோதரியைப் பார்த்து,
“அக்கா…!” என்றான் மெல்லிய தயக்கத்துடன். அவரும் மகள் நீட்டிய தேநீரை வாங்கியவாறே,
“சொல்லு கண்ணா…” என்றவாறு தேநீரை உறிஞ்சிக் குடிக்க,
“இன்று காலை ஆராதனாவின் திருமணம் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா…” என்றவன் திரும்பி ஆராதனாவைப் பார்க்க, அவளோ எங்கே தன் மாமன் மறுக்கப்போகிறானோ என்கிற கலக்கத்துடன் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். மீண்டும் காந்திமதியைப் பார்த்து,
“நீங்கள் கேட்டபோது உடனேயே என்னால் சம்மதம் கூற முடியவில்லை… ஏன் என்றால்…” என்று சற்றுத் தயங்கியவன், பின் உதட்டைக் கடித்துச் சற்று நேரம் நின்றான் பின், நிமிர்ந்து இருவரையும் பார்த்து,
“சித்தார்த் அமெரிக்காவில் புதிய தொழில் தொடங்குகிறான் என்று சொல்லியிருந்தேன் அல்லவா… அந்த வேலை முடிந்துவிட்டதாம்… அதனால் அங்கே கொஞ்சக் காலம் தங்கியிருந்து வியாபாரத்தை ஒழுங்காக நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்… திருமணம் முடிந்தால் அம்முக்குட்டியும் அவனுடன் அமெரிக்கா போகவேண்டியதாக இருக்கும்…” என்று தயக்கத்துடன் சொன்னவன், பின் கலங்கியவனாக,
“அருகேயிருந்தால், அவளுக்கு ஏதாவது தேவையென்றால், உடனே போய்விடலாம்… இது… லாஸ் வேஜஸ்… அவசரத்திற்கு உடனே போக முடியாது…?” என்றான் உள்ளம் கசங்க.
நிச்சயமாக ஆராதனாவைத் தொலைவில் அனுப்பிவிட்டு அவனால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதைக் காந்திமதி நன்றாகவே அறிவார். ஆனாலும் காலம் கனியும் போது, காரியத்தை முடித்து விடவேண்டுமே. அவனுடைய பாசம் கலங்க வைத்தாலும் காரியம் நடந்தாகவேண்டுமே.
“புரிகிறது விதுலா…! ஆனால்… காலங்கள் யாருக்காகவும் காத்திருக்காதேடா… ஆருவை எப்போதும் நம் கைகளுக்குள் பொத்தி வைத்திருக்க முடியாதே. அவளுக்கான வாழ்க்கையைத் தக்க நேரத்தில் அமைத்துக் கொடுப்பது நம் கடமையில்லையா…? சித்தார்த் உன்னைப் போலத்தான் ஆராதனா மீது உயிரையே வைத்திருக்கிறான்… நிச்சயமாக உன்னை விட அவளை நன்றாக வைத்திருப்பான்… தூரம் அதிகம் என்றாலும், ஃப்ளைட்டில் போனால் நான்கு மணி நேரங்கள்தானே… அவளும் தன் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா… எத்தனை நாட்களுக்கு உன் சிறகுக்குள்ளேயே அவளைப் பதுக்கி வைப்பாய்… அவளும் வெளியுலகம் காண வேண்டுமே கண்ணா…” என்று காந்திமதி கூற, சற்று அமைதி காத்தவன், ஆராதனா இல்லாத வீட்டை எண்ணிப் பார்த்தான்.
நினைப்பே வலித்தது. ஆனாலும் அவள் செல்ல வேண்டிய தூரம் அதிகமாயிற்றே… அவளுக்கென்றொரு வாழ்க்கை, மகிழ்ச்சி, குடும்பம்… வேண்டுமே… அதற்குத் தடையாக இருப்பது சரியா? இது பற்றி நிறையவே யோசித்து விட்டான். புத்தி அவளுக்காக யோசித்தது. அன்பு மனம் அவனுக்காக யோசித்தது. இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தவித்தவன், கடைசியாகத் தன் தலையை ஆட்டி,
“புரிகிறதுக்கா…” என்றவாறு எழுந்து ஆராதனாவை நோக்கிச் சென்று, அவள் தலையில் கைவைத்து,
“நீ சொல்லுமா… உனக்கு ஓக்கேவா…?” என்றான் மென்மையாக.
தன் மாமனின் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தவள்,
“உங்களுக்குச் சம்மதம் என்றால் எனக்குச் சம்மதம்தான் மாமா… உங்களுக்கு வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம்…” என்று உறுதியாகக் கூற உருகிப் போனான் அந்தத் தாய்மாமன். இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டவன், திரும்பி சகோதரியைப் பார்த்து,
“அப்படியானால் வேண்டாம் என்று சொல்லிவிடுவோமா அக்கா…” என்றான் சகோதரியைப்ப பார்த்து ஒற்றைக்கண் அடித்து.
அதைக் கேட்டு ஆராதனாவின் முகம் ஒரு கணம் வாடிப்போனது. ஆனாலும் பதில் சொன்னாளில்லை.
மெல்லியதாகக் குலுங்கிச் சிரித்த அபயவிதுலன்,
“என்ன முகம் வாடிப்போய்விட்டது… அப்போ நாள் பார்க்கச் சொல்லலாமா?” என்று கிண்டலாகக் கேட்கத் தன் மாமன் விளையாடுவது புரிய, முதலில் முறைத்தவள், பின் முகம் சிவக்க,
“மாமா… நீங்கள் எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள்… எப்போதாவது உங்கள் முடிவுக்கு மறுப்பு சொல்லியிருக்கிறேனா… இல்லையல்லவா… உங்கள் இஷ்டம்..” என்று புன்னகையுடன் சொன்னவள், அதற்கு மேல் அங்கிருக்க வெட்கம் இடம் கொடுக்காததால் நெளிந்தவாறு மாமனிடமிருந்து விடுபட்டு அந்த இடத்தை விட்டு ஓடினாள்.
அதைக் கண்ட ஆத்வீகனும் சாத்வீகனும், “ஐ… சின்னம்மாவுக்குக் கல்யாணமா?” என்று குதூகலித்துக்கொண்டிருக்கும் போதே காந்திமதி விரைந்து சென்று பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்தவர், யோசனையுடன் தன் தம்பியைப் பார்த்து,
“கண்ணா… நாளை மறுதினம் மிக நல்ல நாளாக இருக்கிறது… அன்றே நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ளலாம்பா… ஆனால்…” என்று சற்று கவளையுடன் இழுக்க,
“சொல்லுங்கள் அக்கா…” என்றான் அபயவிதுலன்.
“இல்லை கண்ணா… நாளை மறு நாளை விட்டு இரண்டு நாள் கழித்து அற்புதமான முகூர்த்த தேதி வருகிறது… ஆராதனாவின் நட்சத்திரத்திற்கும், சித்தார்த்தின் நட்சத்திரத்திற்கும் அற்புதமாகப் பொருந்துகிறது… அன்று திருமணம் வைத்தால் சிறப்பாக இருக்கும்… ஆனால்… அத்தனை விரைவாகத் திருமணத்தை வைக்க முடியுமா… அதை விடுத்தால் இன்னும் மூன்று மாதங்கள் கழித்துத்தான் முகூர்த்தம் இருக்கிறது…” என்றார்.
“இதில் யோசிக்க என்ன இருக்கிறதுக்கா… நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு கோவிலில் வைத்துத் திருமணத்தை முடிக்கலாம். மணமக்களை வாழ்த்தக்கூடிய நான்குபேர் திருமணத்திற்கு வந்தால் போதும்கா…” என்று அவன் கூற,
“ஆனால் இத்தனை சீக்கிரமாக… ஏற்பாடுகள் எல்லாம் எப்படிச் செய்ய முடியும்” என்று தயங்கிய சகோதரியிடம்,
“அதை நான் பார்க்கிறேன்… ஆட்களை அழைக்கும் வேலைகளை மட்டும் நீங்கள் பாருங்கள் இதைப் பற்றி இப்போதே சித்தார்த்தோடு பேசுகிறேன்…” என்று தன் கைப்பேசியை எடுத்தவாறு வெளியேறத் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர்களின் பொது அறைக்கு நுழைந்தாள் மிளிர்மிருதை.
குளியலறைக்குச் சென்றவள், மேல் கழுவிவிட்டு வெளியே வந்தபோது, ஆத்வீகனும் சாத்வீகனும் கட்டிலில் துள்ளிக்கொண்டிருந்தனர்.
‘எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. அப்படித் துள்ளுவதில் என்னதான் சந்தோஷமிருக்கிறதோ’ என்று முணுமுணுத்தவாறு, நெருங்கியவள், அவர்களைத் தூக்கிக் கீழே இறக்கி,
“வாருங்கள் சாப்பிட…” என்றாள் கறாராய்.
“பசிக்கவில்லைம்மா…” என்றவாறு ஆத்விகன் வெளியே ஓட சாத்வீகனும் அவனைப் பின்பற்றி ஓடத் தொடங்கினான்.
‘கடவுளே… அடுத்த ஓட்டமா… முடியவில்லையடா சாமி…” என்று வாய்விட்டுப் புலம்பியவள், வலித்த முழங்காலையும் பொருட்படுத்தாது வேகமாக வெளியே வர, அபயவிதுலன் சித்தார்த்தோடு பேசிவிட்டு அப்போதுதான் மிளிர்மிருதையைத் தேடி வந்துகொண்டிருந்தான்.
தந்தை வருவதைக் கவனிக்காது, ஓடிய குழந்தைகள், அவன் மீது பூம்பந்தாக மோதி நிற்க, அவர்களைப் பற்றி நிறுத்தியவன்,
“டேய் எங்கேடா ஓடுகிறீர்கள்…” என்றான்.
“தோட்டத்திற்குப்பா…” என்றான் சாத்விகன்.
“இப்பவா… நேரம் ஏழு மணியாகிறதே… சாப்பிடவில்லை…?” என்றான் அபயவிதுலன்.
“அதுக்குத்தான்பா தப்பி ஓடுகிறோம்…” என்று விளக்கம் சொன்னான் ஆத்விகன். இவனோ குழப்பத்துடன் புருவம் சுருக்கியவாறு
“ஏன்டா…” என்றான்.
“பின்னே என்னப்பா… எப்ப பார்த்தாலும் ஏதாவது பச்சை இலை வகை, ஒரே மரக்கறி… உவ்வே… எங்கள் ஃபிரன்ட்ஸ் எல்லாரும் ‘பேகர்’ ‘பீட்சா’ என்று சாப்பிடுகிறார்கள்பா… எங்களுக்கும் சாப்பிட ஆசையா இருக்கிறதுப்பா…” என்று தன் ஏக்கத்தைக் கூறிய மகனை நகைப்புடன் பார்த்தான் அபயவிதுலன்.
“டேய் அவற்றை எப்போதாவது சாப்பிட்டால் பரவாயில்லை… தினமும் சாப்பிட்டால்…” என்றவன் சற்று நிமிர்ந்து பார்க்க, ஆராதனா வாடிய முகத்துடன் வந்துகொண்டிருந்தாள். கூடவே சிவந்த கண்களைக் கண்டதும், அவள் அழுதிருப்பது புரிந்தது.
தங்களுக்கு மட்டுமல்ல, அவளுக்கும் தங்களைப் பிரிவது வலியைக் கொடுக்கும் என்பது புரிய, மனம் கனத்துப் போனது. கூடவே அவளைப் பழைய ஆராதனாவாகப் பார்க்கவேண்டும் என்கிற ஆவலும் உந்த, சற்றும் தாமதிக்காது, அங்கே வந்திருந்த ஆராதனாவைக் காட்டி,
“உங்கள் சின்னம்மா போலக் குண்டாகிவிடுவீர்கள்டா…” என்றதும் பிரேக் அடித்ததுபோல நின்றாள் ஆராதனா.
எப்போதும் மாமனுக்காகப் பணிந்து போபவள், இதைச் சொன்னால் மட்டும் பத்ரகாளியாகிவிடுவாள். இத்தனைக்கும் அவள் அதிகக் குண்டுமில்லை. பூசினால் போல, மிக அழகாகப் பார்ப்பவர்கள் திரும்பிப் பார்க்க வைக்கும் உடற்கட்டுடன்தான் இருந்தாள்.
ஒரு முறை அவள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, அவளுடன் படித்த ஒருத்தி இவள் மீது பொறாமைப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் குண்டு பூசணிக்காய் என்று சொல்லிவிட்டாள்.. அன்று வீட்டுக்கு வந்து ஓ என்று அழுது புலம்பிவிட்டாள். அபயவிதுலன்தான் அவளைச் சமாதானப் படுத்தித் தேற்றி நேராக்கினான். அதன் பின்பு இவன் பள்ளிக்கூடத்திற்குச் சென்று ஆடிய ருத்ரதாண்டவத்தில் அந்தப் பெண் வேறு பாடசாலைக்குச் சென்றது வேறுகதை.
அதற்க்கு பிறகு அவளை வம்புக்குக் இழுக்கவேண்டும் என்றால், இந்தப் பூசணிக்காய் பேச்சை எடுப்பான்… தன் மாமன் அதைக் கூறினால் மட்டும் ஆராதனாவால் பொறுக்க முடியாது… பொங்கி விடுவாள்.
அடிக்கடி இதைச் சொல்லி அவளிடம் மொத்து வாங்குவது அபயவிதுலனின் பிடித்தமான பொழுதுபோக்கு. மிளிர்மிருதையை அந்த வீட்டிற்கு அழைத்து வந்த பின் ஏதோ ஒரு சங்கடத்தால், அவளுடன் இப்படி விளையாடுவது தடைப்பட்டிருந்தது.
ஆனால் அவளுக்கு விரைவில் திருமணம் நடந்துவிடும் என்கிற எண்ணம், இனி எப்போது அவளுடன் இப்படி விளையாடப் போகிறோம் என்கிற ஏக்கம் அவனை உந்தித் தள்ள, வாயை விட்டுவிட்டான். இது போதாதா ஆராதனாவிற்கு, மூச்சுக் காற்று வேகமாகச் சீறிப் பாய, கண்கள் சிவக்க,
“மாமா…” என்று கர்ஜித்தவளைக் கண்டு இவனுக்குச் சிரிப்பு அடக்க மாட்டாது வந்தது. ஆனாலும் சிரமப்பட்டு எழுந்த சிரிப்பை அடக்க முயன்றவனாக,
“நான் உன்னைச் சொல்லவில்லை கண்ணம்மா… நீ என்ன குண்டா… இல்லையே… நான் பக்கத்துவீட்டில் இருக்கிறார்களே லொஸ்லியா ஆன்டியைப் பற்றிச் சொன்னேன்…” என்று நமட்டுச்சிரிப்புடன் கூற, வேகமாகத் தன் மாமனை நெருங்கினாள் ஆராதனா.
அடுத்தது தனக்கு அடி விழப் போகிறது என்பதைப் புரிந்துகொண்ட அபயவிதுலன்,
“சத்தியமாடி… மதர் ப்ரமிஸ்…” என்றவன் இரண்டடி முன்வைத்தவாறு,
“சத்தியமா அம்முக்குட்டி… ஹா… ஹா… ஹா… உன்னைத்தான் சொன்னேன்” என்றவாறு ஓட,
“மாமா….” என்று சீறியவாறு அங்கும் இங்கும் திரும்ப, ஒரு ஓரமாக ஆத்வீகனும் சாத்வீகனும் விளையாடிய பேஸ் பால் பேட் இருந்தது. அதை ஓடிச் சென்று கரத்தில் எடுத்தவள், அபயவிதுலனைத் துரத்த,
“அக்கா… ஹெல்ப் மீ… பிசாசு என்னை அடிக்க வருகிறது…” என்றவாறு சோஃபாவைச் சுத்தி ஓடத் தொடங்கினான். ஆனால் அவனுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது. சீக்கிரமாக அவள் வேறு வீட்டிற்குப் போய்விடுவாள் என்கிற ஏக்கம் அவனை அரித்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாது, ஓடியவனை இவள் துரத்த, இவனுடைய அலறல் சத்தம் கேட்டு காந்திமதி பதறியடித்தவாறு வெளியே வந்தார்.
அங்கே கண்ட காட்சியில், அதிர்ந்து போய் நின்றார்.
சேதி 21 ********* சென்னையின், போக்குவரத்து…
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…