அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது மருத்துவ வண்டி.
அதற்கிடையில் இவன் காயத்திற்கு மருந்திடப்பட்டது. எப்படியும் தையல் போடவேண்டும்… கத்தி உள்ளே கிழித்துக் கொண்டு போனதால், ஊடுகதிர் எடுத்து, உள் தையல் வேண்டுமா என்றெல்லாம் பார்க்கவேண்டும். எப்படியும் இரவுக்கு மேல்தான் வீட்டிற்குப் போக முடியும். எண்ணும் போதே ஆயாசமாக வந்தது.
கூடவே தாக்க வந்தது யார் என்கிற கேள்வியும் எழுந்தது.
கடந்த ஒரு வருடங்களாக மிளிர்மிருதையைச் சுற்றி ஏதோ ஒரு மர்ம வலை சுற்றப்பட்டுத்தான் இருக்கிறது. முதன் முதலாக அவளை ஒருவன் ரோளர் ப்ளேட்ஸில் வந்து இடித்தபோது அதைச் சாதாரணமாகத்தான் நினைத்தான். ஆனால், அங்கிருந்த கண்காணிப்புக் கருவிக்களில் பதிவாகியிருந்த ஒளிப்பதிவு வேறு கூறியது. முதலில் சாதாரணமாக நடந்து வந்தவன், பாலத்தினருகே வந்ததும், ரோளர் ப்ளேட்சை அணிந்து, வேண்டுமென்றே மிளிர்மிருதையை நோக்கிப் பாய்வதும் அவளைக் கரங்களால் பாலத்தில் தள்ளி விட முயன்றதும் வெட்ட வெளிச்சமானபோதுதான் உசாரானான் அபயவிதுலன். இடித்தவன் யார் என்று தெரியவில்லை. தெரியாதவனை எங்கே என்று சென்று விசாரிப்பது. அடியும் தெரியாது நுனியும் புரியாது குழம்பிப்போனான் அபயவிதுலன்.
அதன் பின், சிறிய ஆபத்தையும் விலைகொடுத்து வாங்க அபயவிதுலன் தயாராக இல்லை. மிளிர்மிருதையை வீட்டிற்குள் வைத்திருக்கவும் அவன் விரும்பவில்லை. அதனால் அதிகப் பாதுகாப்புடன்தான் அவளை எங்கும் அனுப்ப முடிவு செய்தான். அவளுடைய ஒவ்வொரு நிமிடங்களும், மணித்துளிகளும் எவ்வாறு செலவழிக்கப் படுகின்றன என்பது அவனுக்கு அத்துப்படி. அதில் சிறிது தாமதமானாலும் இவனுக்கு வியர்த்துக் கொட்டும். அன்றும் ஒரு வாகனம் அவளை முட்டிவிட்டுச் சென்றதற்குப் பின்னால் சதிவலை உள்ளது என்பதில் அவனுக்கு நிச்சயமே.
இதோ இன்று கத்தியால் தாக்கப்பட இருந்தது கூட எதிர்பாராமல்தான். ஆனால் நிச்சயம், அவளுக்குப் பின்னால் பெரும் சதிவலை இருக்கிறது என்பது மட்டும் உறுதியாயிற்று. யார் அவர்கள்… அவனுக்கு விரித்த வலையில், மிருதா சிக்கவைக்கப்படுகிறாளா… இல்லை அவளுக்கான எதிரிகள் எங்காவது உருவாகியிருக்கிறார்களா? என்று எண்ணியவள் உடனே அந்த எண்ணத்தை அழித்துக் கொண்டான்.
மிளிருக்காக எதிரிகள் உருவாக வாய்ப்பில்லை. அப்படியால் அவனுக்கான எதிரிகள்தான் அவர்கள்… இவனுக்குத் தன் மனைவிமீது உயிர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கையில் இவனைப் பழிவாங்க, வலிமையற்ற மிளர்ம்ருதையைப் பயன்படுத்த பார்க்கிறார்கள்… அது யாராக இருக்கும்? யார்… யார்… யார்… குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு மருத்துவமனை வந்ததோ, மிளிர்மிருதையுடன் ஒரே அறையில் அனுமதிக்கப்பட்டதோ எதுவும் நினைவில் இல்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அந்த எதிரி யார் என்று அறிவதிலேயே இருந்தது.
குழப்பத்துடன் நின்றிருந்தவனை விக்டரின் சப்பாத்துக் கால் ஓசை நினைவுலகுக்குக் கொண்டு வர, மெதுவாகத் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
அவரைக் கண்டு அபயவிதுலன் எழ,
“சிட் டவுன் மான்…” என்று அவனை அமர்த்திவிட்டு, நடந்ததைக் கேட்க, இவன் ஒன்று விடாது சொன்னான். கூடவே, முன்தினம் நடந்த விபத்திற்கும், இன்று நடந்த விபத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று தான் சந்தேகப் படுவதைப் பற்றியும் கூறிவிட்டு,
“அவனிடம் விசாரித்தீர்களா… இதற்குக் காரணம் யார் என்று சொன்னானா?” என்று கடித்த பற்களுக்கிடையில் கேட்க, சற்று நேரம் அமைதி காத்தார் விக்டர். பின்,
“ஹி இஸ் டெட்…” என்றதும் சற்று அதிர்ந்துபோய் விக்டரைப் பார்த்தான் அபயவிதுலன்.
“வட்… இறந்து விட்டானா…? நான்… மெதுவாகத்தானே…” என்று கூறியவனுக்குத் தன் மீதே ஆத்திரம் வந்தது. மிளிர்மிருதையைத் தாக்க வந்தான் என்பது தெரிந்ததும், சற்றும் யோசிக்காமல் தன்னிலை கெட்டு அடித்துவிட்டான். அந்த அடி உயிரைக் குடிக்கும் என்று அவன் சற்றும் எண்ணவில்லை.
“ஓ காட்…” என்றவாறு குனிந்தவன், காயம் படாத கரத்தால் நெற்றியை வருடிக் கொடுக்க,
“ஹேய்.. இதில் உன் தப்பு எதுவும் இல்லை… உன் மனைவியைக் காக்கத்தானே முயன்றாய்… கவலைப் படாதே… இங்கே வரும் வரைக்கும் அவன் உயிரோடுதான் இருந்தான்… கொஞ்சம் முன்னர்தான் இறந்தான்… கொஞ்சம் பொருத்து அவனுடைய மருத்துவ அறிக்கை வரும்… பார்க்கலாம்… அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தால், உன்னை வெளியே எடுக்க உன் நண்பன், அநேகாத்மன் இருக்கிறான்… பிறகு என்ன?” என்று கேட்க, சற்று நேரம் அமைதி காத்தவன்,
“நான் உள்ளே போவதைப் பற்றியோ, தண்டனை அனுபவிப்பது பற்றியோ வருந்தவில்லை விக்டர்… ஆனால் அவர்கள் யார் என்பதை அறிய முதலே இறந்துவிட்டான் என்பதுதான் என் கவலை. இவனை வைத்து மறைந்திருந்து தாக்குபவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்… ஆனால் இப்போது அதற்கும் வழியில்லை… என் மனைவியை எதற்காக அவர்கள் தாக்க வேண்டும்… இதற்குப் பின்னால் என்ன சதி இருக்கிறது… அதற்குப் பின்னால் இருப்பது யார்…? இதைப் பற்றித்தான் நான் யோசிக்கிறேன்…” என்று கூற,
“உன் மனைவிக்கு யாரும் எதிரிகள் இருக்கிறார்களா அபயன்…” என்று கேட்டார் விக்டர்.
நின்ற வாக்கிலேயே தலையை மட்டும் திருப்பி விக்டரைப் பார்த்தவன்,
“எறும்பைக் கூடக் கொல்லத் துணியாதவள் விக்டர்… அவளுக்கு எதிரிகள் எப்படி இருக்க முடியும்… ஈழத்திலும் சரி, இங்கும் சரி தான் உண்டு தன் வாழ்க்கை உண்டு என்று இருப்பவள்… நிச்சயமாக அவளுக்கான எதிரிகளாக இருக்க முடியாது?” என்று அவன் உறுதியாகக் கூற,
“அப்படியென்றால்…” என்று விக்டர் இழுக்க,
“இது எனக்காக வைத்த குறியாகவே நான் நினைக்கிறேன்… என்னைப் பழிவாங்குவதாக நினைத்து, எனக்கு வலிக்கச் செய்வதாக நினைத்து இவளைக் காயப்படுத்த முயல்கிறார்கள். உனக்குக் கூடத் தெரியும்தானே… நான் மிருதையை எந்தளவு விரும்புகிறேன் என்று… இவளுக்கு அடித்தால் எனக்கு வலிக்கும் என்பதைத் தெரிந்து வைத்த யாரோ ஒருவர் அவளை வைத்து விளையாட முயல்கிறார்கள்…” என்று யோசனையுடன் புருவம் சுருங்கக் கூறியவனுக்கு யோசித்து யோசித்துத் தலை வலித்ததுதான் மிச்சம்.
ஏற்கெனவே மனம் தவித்துக்கொண்டிருந்த நிலையில், எதுவும் அவன் புத்திக்குள் நுழையும்போலில்லை.
அபயவிதுலனின் நிலையைப் புரிந்துகொண்டவராக, அவனை நெருங்கிய விக்டர், அவனுடைய தோளில் கரத்தைப் பதித்து,
“பார்க்கலாம் அபயன்… எப்போதும் உன்னுடைய நண்பனாக நான் உன் கூடவே இருப்பேன்… இப்போது ரெஸ்ட் எடு… நாளை இதைப் பற்றி யோசிக்கலாம்… நாளை உன் மருமகளுக்குத் திருமண நிச்சயதார்த்தம் அல்லவா… அதில் கவனம் செலுத்து…” என்றதும் இவன் குழப்பமாகப் பார்த்தான்.
“பட்… என் பக்கம் தவறில்லை என்றாலும்… இது கொலைதானே… என்னை எப்படி வெளியே…” அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனை நோக்கி தாதி ஒருவர் வந்தார்.
அவனுடைய காயத்தைப் பரிசோதிக்கவேண்டும் என்று அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் வெள்ளை அங்கி அணிந்த வைத்தியர் ஒருவர் கனிந்த புன்னகையுடன் அவனை நெருங்கி, “ஹாய்… ஐ ஆம் டாக்டர் மைக்கேல்…” என்றவாறு, “கான் ஐ சீ யுவர் ஹான்ட்…” என்றார்.
அவன் தன் கரத்தை நீட்ட, அதை இரு கரங்களாலும் பற்றிக் கவனமாக எதையோ பரிசோதித்தார். சில இடங்களை அழுத்திப் பார்த்தார். எங்காவது இரத்தச் சுற்றோட்டம் தடைப்பட்டிருக்கிறதா என்று பார்த்தார்… எல்லாம் சீராக இருக்க,
“தாங் காட் உங்கள் கையிலும் அதிகப் பாதிப்பு இல்லை. ஊடுகதிர் எல்லாம் பார்த்தேன்… நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. கத்தி சின்னது என்கிறதாலும், குறுக்காக இறங்காமல் நேராக இறங்கியதாலும், உள்ளே முக்கிய நரம்புகள் எதுவும் வெட்டப்படவில்லை. அது வெட்டியிருந்தால், விரல்களின் உணர்ச்சிகளை நீங்கள் இழந்திருப்பீர்கள்… கடவுள் உங்க பக்கம் இருந்திருக்கிறார்.. கூடவே உள்ளேயும் வெளியேயும் தையல் போடவேண்டும்… வெளிக்காயம் ஆறிவிடும்… ஆனால் உள்காயம் ஆற, எப்படியும் மூன்று மாதங்கள் எடுக்கும்… கொஞ்சம் அவதானம் தேவை…” என்றவர், விட்டு நிமிர்ந்து அங்கிருந்த தாதியைப் பார்க்க, அடுத்த விநாடி அவர் தையலுக்கு வேண்டிய பொருட்களுடன் அவர்களை நெருங்கினார்.
“ஹாய் ஐ ஆம் யுவர் நேர்ஸ்… விக்டோரியா…” என்றவாறு விறைப்பதற்காக மருந்து போட ஊசியை எடுக்கத் தன் கரத்தை நீட்டி, தடுத்தவன்,
“வலியைத் தாங்கிக் கொள்வேன்… இப்படியே வைத்துத் தையுங்கள்…” என்றான். விக்கேடாரியா அதிர்ந்து போனார்.
“நோ… மிஸ்டர் அபயவிதுலன்… வி ஹாவ் டு… ஏன் என்றால் இந்த வலியை உங்களால் தாங்க முடியாது…” என்று அவர் மேலும் முன்னேற, அவனோ
“வலிக்குமா?” என்றாவறு மெல்லியதாக நகைத்தான். பின் அவரை ஏறிட்டுப் பார்த்து,
“அதை நான் கூற வேண்டும்… ப்ளீஸ்… இப்படியே தையுங்கள்… எனக்கு வலிக்காது… ஐ நீட் டு ஃபீல் த பெய்ன்…” என்று உறுதியாகக் கூற, தயக்கத்துடன் அங்கிருந்த வைத்தியரைப் பார்த்தார் அந்தத் தாதி.
அவரும் சம்மதம் என்பது போலத் தலையை ஆட்டிவிட்டு அபயவிதுலனின் பக்கமாக வந்து அமர்ந்தார். அடுத்து அவன் பிளந்த காயங்கள் உள்ளேயும் வெளியேயும் இணைக்கப் பட்டன.
ஊசி குத்தும்போதே அலறுவான், முனங்குவான் என்று எதிர்பார்த்த விக்டோரியாவிற்குப் பெரும் ஏமாற்றமே ஏற்பட்டது.
அவனிடத்திலிருந்து மெல்லிய முனங்கல் கூட வரவில்லை. மாறாக அவனுடைய மறு கரம் மூஷ்டியாக இறுகிக் கொண்டதே அன்றி, வேறு எந்த வித்தியாசமும் அவனிடத்தே தெரியவில்லை.
இவன் மனிதனா இல்லை… ராட்சஷனா என்று அதிர்ந்தே போனார் விக்டோரியா.
அவனோ, பல்லைக் கடித்தவாறு மிளிர்மிருதையைக் குத்த வந்தவனின் உருவத்தையே நினைத்துக்கொண்டிருந்தான். மனம் மட்டும் யார்… யார் என்று அதிலேயே நின்றது.
தையல் முடிந்து, இரத்தத்தால் தேய்ந்த கையுறையைக் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு, எழுந்த மைக்கலுக்கும், அவருக்கு உதவியாக இருந்த விக்டோரியாவிற்கு வியர்த்துக் கொட்டியது.
அதுவும் விக்டோரியா அபயவிதுலனை ஒரு வேற்றுக் கிரக வாசி என்பது போலவே பார்த்தார். நிச்சயமாக ஒரு மனிதனால் இத்தனை வலியைத் தாங்கியிருக்க முடியாது. ஆனால் இவன்,’ என்று எண்ணியவர், அச்சம் எழ, அவசரமாக அவன் கரத்தைச் சுற்றிக் கட்டைப் போட்டுவிட்டு, அங்கிருந்த பொருட்களை ஒருங்கிணைத்து, விட்டால் போதும் என்கிற நிலையில் வெளியேற, அபயவிதுலன், அதைக் கண்டு மெல்லியதாக நகைத்தான்.
பாவம் அவருக்கென்ன தெரியப்போகிறது, அவன் இதைவிடப் பல வலிகளுக்குள் சென்று வந்தவன் என்பது.
ஒரு பெருமூச்சுடன் படுக்கையை விட்டு எழுந்தவன், மைக்கலை நோக்கி வலது கரத்தை நீட்ட, அவரும் அதைப் பற்றிக் குலுக்கிவிட்டு,
“டே கெயர் ஒஃப் யுவர் செல்ஃப் அபயவிதுலன்…” என்று விட்டு விடைபெற, எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது, விக்டர் இவனுக்காகத்தான் காத்திருந்தார். இவனைக் கண்டதும் நெருங்கியவர், அவன் தோளில் கரத்தைப் போட்டு,
“உன் கூடச் சற்றுப் பேசவேண்டும்…” என்று தனியாக அழைத்துச் சென்றவன்,
“விதுலன் அவன் யார் என்று எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை… அவனிடம் ஐடி எதுவும் இல்லை. கனடியனா, அமரிக்கனா, அஃப்ரிகனா… எதுவும் தெரியவில்லை… பட் அவன் உயிரைக் குடிக்கக் கூடிய பயங்கரமான போதைப்பொருள் உட்கொண்டிருக்கிறான்… அதனால் இந்தக் கேசை அந்தக் கோணத்தில் கொண்டுசெல்ல முயல்கிறேன்… பட் நாட் ஹன்ட்ரட் பேர்சன் ஸூர்… ஏதுவாக இருந்தாலும் உனக்கு இப்போதைக்குச் சிக்கலில்லை. தவிர, நேரம் கிடைக்கும் போது, அநேகாத்மனோடு பேசி வைத்துக் கொள்…” என்று எச்சரிக்க, மெல்லியதாகச் சிரித்த அபயவிதுலன்,
“எதுவாக இருந்தாலும் அதை என்னால் சுலபமாகக் கையாளமுடியும் விக்டர்…” என்றவனின் விழிகளில் தெரிந்த தீவிரத்தைக் கண்டு விக்டர்கூட ஒரு கணம் திகைத்துப்போனான்.
“பட் அபயவிதுலன்… எதையும் உன் கையில் எடுக்காதே… நான் பார்த்துக்கொள்கிறேன்… புரிந்ததா?” என்று எச்சரிக்க, சற்று நேரம் விக்டரை உற்றுப் பார்த்தான் அபயவிதுலன்.
மனமோ, அதற்கு மாறாக, ‘விடமாட்டேன்… நிச்சயமாக விடமாட்டேன்.. என்னவளை நெருங்க நினைத்தாலே பொசுக்கிவிடுவேன். அவளை அழிக்க நினைத்தவன் யாராக இருந்தாலும்… நான் மன்னிக்க மாட்டேன்… அவனைக் கண்டு பிடிப்பேன்… கொல்லுவேன்…’ என்று தனக்குள் ஆக்ரோஷத்துடன் எண்ணியவன், அதை மறைத்துப் புன்னகைத்தான்.
“ஆஸ் யுவர் விஷ்…” என்று தன் தோளைக் குலுக்கிச் சொன்னவன், அடுத்துத் தன் மனைவியிருந்த அறை நோக்கி விரைந்தான்.
பயத்தில் உடல் நடுங்க, கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தவள், அபயவிதுலன் உள்ளே வருவதைக் கண்டதும், படுக்கையை விட்டுப் பாய்ந்து இறங்கிப் புயலெனச் சென்று அவனை இறுக அணைத்துக்கொண்டாள் மிளிர்மிருதை.
எங்கே விட்டால் தொலைந்துபோவானோ என்று அஞ்சியவள் போலத் தன் கரங்களால் கிடைத்த இடமெல்லாம் வருடிக் கொடுத்தவாறு,
“ஓ… விதுலா…! விதுலா…!” என்றாளன்றி அவளால் வேறு எதுவுமே பேச முடியவில்லை.
அவனும் தன்னவளை இறுக அணைத்துத் தன்னோடு நெரித்துக்கொண்டானன்றி எதுவும் சொல்லவில்லை. சற்று நேரம் அப்படியே நின்றவன், பின் இரண்டு கரங்களாலும், அவளுடைய முகத்தைப் பற்றி நிமிர்த்தியவன்,
“ஓ பேபி… ஓ மை ஸ்வீட் ஹார்ட்…” என்றவன், அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாதவனாக அவளுடைய முகத்தில் கிடைத்த இடமெல்லாம் முத்தத்தால் அபிஷேகம் செய்யத் தொடங்கினான்.
இறுதியில் களைத்து ஓய்ந்தவன் போலத், தவிப்புடன் துடித்துக்கொண்டிருந்த அவளுடைய உதடுகளில் அடைக்கலமாகியவனுக்கு அனைத்தும் மறந்து போயின. நீண்ட தூரம் வெயிலில் பயணம் செய்த பின் நிழில் கிடைத்த பேரானந்தம். பல நாள் தண்ணீர் கிடைக்காது துடித்தவனுக்கு அருவியே கிடைத்த மகிழ்ச்சி. அவள் உதடுகளில் நுழைந்து தொலைந்து போனவனுக்கு அங்கிருந்து வெளியே வரும் எண்ணமே இருக்கவில்லை. அப்படியே, அந்த உதடுகளுக்குள் புகுந்து குடித்தனம் நடத்த முயல்பவன் போல மீண்டும் மீண்டும் அவற்றைத் தனதாக்கிக்கொண்டிருந்தான் அபயவிதுலன்.
இருவரின் மூச்சுக் காற்றுகளும், அசுர வேகத்துடன் ஒன்றுடன் ஒன்று கலந்து சண்டித்தனம் செய்தன. நான்கு உதடுகளும் சுவாசக் காற்றிற்குப் போட்டியாக ஒன்றுடன் ஒன்று யுத்தம் புரிந்தன. கோள் மூட்டின… எகிறிக் காய்ந்தன… குற்றம் சொல்லின… பின் மெதுவாகத் தண்டித்தன… ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்வது போலச் சமாதானப் செய்தன… நிம்மதி அடைந்தன, அவர்களின் வலியைப் போக்க முயல்வன போல வருடிக் கொடுத்தன. ஒத்தடம் கொடுத்தன… மொழியின்றி ஆறுதல் படுத்தின… இறுதியில் ஒன்றுடன் ஒன்று அடைக்கலமாயின.
அதுவரை மாபெரும் அச்சத்தில் படுபயங்கரமாகத் துடித்துக்கொண்டிருந்தவளின் உள்ளம், அவர்களின் முத்த ஆலிங்கனத்தில் மெல்ல மெல்லத் தன் துடிப்பைக் குறைக்கத் தொடங்கியது. பயம் மெதுவாக அவளை விட்டுத் துறந்து சென்றது. அவனுடைய உதடுகள் வரைந்த கவியில் திளைத்து அமைதியடைந்தது. ஒருபோதும் உணராத அந்த முத்த சங்கமத்தில் முதன் முதலாகப் பெண்மையை உணர்ந்தவளாக, அவனுடன் இரண்டறக் கலக்கும் வேகத்துடன் அவன் முகத்தைப் பற்றிக்கொண்டவளுக்குக் கரங்களையும் விலக்க முடியவில்லை. அவன் உதடுகளையும் விடுவிக்க முடியவில்லை.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ, அவர்கள் காலத்தை மறந்தாலும், காலம் அவர்களை மறக்காதே.
மெல்ல மெல்ல அபயவிதுலன் சுயநினைவுக்கு வந்தவனாக அவளுடைய உதடுகளிலிருந்து பிரிய மனமில்லாமல் விலக முயல, அவளால், அத்தனை சுலபத்தில் அந்த உதடுகளை விட்டு விலக முடியவில்லை.
அது பிரிந்தால், ஆவியும் பிரிந்திடும் என்று நினைத்தாளோ, அவன் தலை நிமிர முயல, எக்கி, எட்டி, பெருவிரலில் நின்று அந்த உதடுகளின் தொடுகையை விடாது பற்றிக்கொள்ள, அதற்கு மேல் அபயவிதுலனாலும் அவளை விலக்க முடியவில்லை.
“ஓ மை பேபி…” என்றவன், அவள் இடையைச் சுற்றித் தன் கரத்தை எடுத்துச் சென்று தன் உயரத்திற்கு ஏற்பத் தூக்கியவன், காயம் படாத கரத்தால் அவளைத் தாங்கிக்கொண்டு, மறு கரத்தால், அவளுடைய தலையைப் பற்றி மேலும் தன் உதடுகளோடு அழுத்திக்கொண்டான்.
மீண்டும் அழகிய அசுரத்தனமான இதழ் யுத்தம்… விருப்புடனே அதில் கரைந்தவனாக, அவளை அங்கிருந்த படுக்கை நோக்கித் தூக்கிச் செல்ல, அடுத்து என்ன நடந்திருக்குமோ… அவர்களுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
முதல் அவர்களுக்கு அது கேட்கவில்லை. பின் கதவு திறக்கவும்தான் இருவருமே சுயநினைவுக்கு வந்தார்கள்.
உள்ளே வந்த விக்டோரியா, அவர்களின் நிலையைக் கண்டு அதிர்ந்து, அவசரமாகத் திரும்பி நின்றவராக,
“மிஸ்டர் அபயவிதுலன்… இது ஹாஸ்பிடல்…” என்றார் அதிர்ச்சியும் நகைப்பும் போட்டிப்போட.
அபயவிதுலனுக்கு மட்டுமல்ல, மிளிர்மிருதைக்கும் அப்போதுதான் தாங்கள் நின்றிருந்த நிலையே புரிந்தது. வெட்கத்தில் முகம் சிவக்கச் சங்கடத்துடன் தன் காலை உதறி அவனிடமிருந்து குதித்து விலகியவள், அங்கு நின்றிருந்த விக்டோரியாவைப் பார்த்து, பெரும் சங்கடமும் வெட்கமும் தோன்ற, தன் கணவனின் மார்பில் விழுந்து முகத்தை மறைத்துக் கொள்ள, பெரும் சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டவன், நிமிர்ந்து விக்டோரியாவைப் பார்த்து,
“சொல்லுங்கள் விக்டோரியா?” என்றான் ஆங்கிலத்தில், நகைப்பு மாறாமல்.
“நான் திரும்பலாமா?” என்றார் விக்டோரியா.
“அதுதான் பார்க்கக் கூடாததைப் பார்த்துவிட்டீர்களே… பிறகு எதற்குத் திரும்பி நிற்கிறீர்கள்… தாராளமாகத் திரும்பலாம்…” என்று தன் மனைவியின் இடையை இறுகப் பற்றியவாறு கூற, மெல்லிய வெட்கத்துடன் திரும்பிய விக்டோரியா, அவர்கள் நிலை கண்டு மேலும் சிரித்தவர்களாக,
“ஹே… அபயவிதுலன்… இது மருத்துவமனை… நினைவில் இருக்கட்டும்…” என்று கூற, அதைக் கேட்ட மிளிர்மிருதைக்கு மேலும் வெட்கம் பொங்கிக்கொண்டு வந்தது.
வாழ்வில் முதன் முறையாக அவளாக அவனுக்கு முத்தம் கொடுத்திருக்கிறாள்… ஆனால் இப்படி நான்கு பேர் பார்க்கும் நிலையில் கொடுத்துவிட்டாளே…” தாங்க முடியாத வெட்கத்துடன் மேலும் அவன் மார்பில் தன் முகத்தைப் புதைக்க, அதைக் கண்டு நகைத்த விக்டோரியா, அபயவிதுலனிடம் மருத்துவ அறிக்கையை நீட்டியவாறு,
“இது உங்களுடைய அறிக்கை, ஒவ்வொரு முறையும் இங்கே வரும் போது கொண்டு வாருங்கள்… நவ் யு ஃப்ரீ டு கோ…” என்று கூறிவிட்டுத் திரும்பியவர், பின் நின்று திரும்பி,
“நாட் ஹியர்…” என்று குறிப்பாகக் கூறிவிட்டு வெளியேற மிளிர்மிருதைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மெல்லிய நகைப்புடன், அவனைத் தன்னுள் புதைத்துவிடும் வெறியில் இறுக அணைத்துக் கொண்டவளின் முகத்தைப் பற்றித் தூக்கியவன், அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்து,
“யு… ஓக்கே…” என்றான். அவள் ஆம் என்று தலையாட்டியபோதுதான், அவனுடைய கட்டுப்போட்டிருந்த கரம், அவளுடைய கவனத்தைத் திசை திருப்பியது. அதுவரையிருந்த வெட்கம் மாயமாக மறைந்துபோக, அவன் கரத்தைப் பற்றித் தூக்கிப் பார்த்தவள், அதில் தன் உதடுகளைப் பொருத்தி, விழிகளில் கண்ணீர் முட்ட,
“ரொம்ப வலிக்கிறதா விதுலா?” என்றாள் குரல் கம்ம.
“இல்லடா… நான் வலிகளை உணர்வதில்லை என்று உனக்குத் தெரியுமல்லவா…?” என்று கனிவுடன் கேட்க, கட்டை மெதுவாக வருடிக் கொடுத்தவள் தலை நிமிர்ந்து,
“யார் அவர்கள்… எதற்காக என்னைக் கொல்ல வந்தார்கள்?” என்றாள். அவள் விழிகளில் தெரிந்த மெல்லிய பயத்தைக் கண்டு, தாங்க முடியா வேதனையுடன், இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
“தெரியவில்லையே கண்ணம்மா… ஆனால் கண்டு பிடித்துவிடுவேன்… நிச்சயமாகக் கண்டு பிடித்து விடுவேன்… யாராக இருந்தாலும், அதற்குப் பதில் கூறியே ஆக வேண்டும்… நீ பயப்படாதே… நான்தான் இருக்கிறேன் அல்லவா…?” என்று சமாதானம் செய்ய முயல, அவனுடைய அணைப்பை விடாமலே தலை நிமிர்ந்து பார்த்தவள், மறுப்பாகத் தலையை ஆட்டி,
“பயமா…? எனக்கா? அதுவும் நீங்கள் அருகே இருக்கும்போது… இல்லை… நிச்சமாக என்னை நினைத்துப் பயமில்லை… என்றவள் பின் வலியுடன் அவன் மார்பில் தலை சாய்த்து,
“என்னைக் காப்பாற்றப்போய் உங்களுக்கு ஏதாவது நடந்திருந்தால்…” என்றவளின் உடல் நடுங்கியது. விழிகள் நிறைந்த கண்ணீருடன், குரல் கம்ம,
“இப்போதும் அதை நினைத்தால்…” என்றவள், அவனிடமிருந்து விலகி, காயம் பட்ட கரத்தைப் பற்றி அதில் தன் உதடுகளை அழுந்த பதிக்க இரு துளி கண்ணீர் அக் காயத்தின் மீது பட்டுத் தெறித்தது. அதைக் கண்டு பதறியவன்,
“மிருதா… ப்ளீஸ்… என்ன இது…” என்று அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட, அவளோ காயம் பட்ட உள்ளங்கையைத் தூக்கித் தன் கன்னத்தில் பதித்து
“விதுலா…!” என்றாள் உதடுகள் நடுங்க. அதைக் கண்டு உருகிப்போனவன்,
“என்னடா…” என்றான் மறு கரத்தை அவள் தலையில் வைத்து. கன்னத்தில் பதித்த அவன் உள்ளங்கையை மீண்டும் ஒரு முறை முத்தமிட்டவள்,
“ஐ லவ் யு விது…” என்று உள்ளம் பொங்க, உடல் உருகக் கூற, அந்த வார்த்தைகளில் மெய்மறந்து போனவன், அவளை இழுத்து அணைத்து தலை உச்சியில் அழுத்தமாகத் தன் உதடுகளைப் பொருத்தியவன்,
“ஐ நோ கண்ணம்மா… ஐ… நோ… அன்ட் ஐ லவ் யு டூ பேபி…” என்றான் விழிகளை மூடி அவளை உணர முயன்றவாறு.
சேதி 21 ********* சென்னையின், போக்குவரத்து…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…
(15) அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…