Categories: Ongoing Novel

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3/1

(1)

 

டிடிடிடி டிடிடிடி

தன் தனியறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த ஆண்மகனின் தூக்கத்தைக் கலைக்க முயன்றது எழுப்பொலி. மல்லாந்து படுத்திருந்தவன், உறக்கம் கலையாமலே, தனது வலது கரத்தைத் தூக்கி, அதன் சத்தத்தை நிறைத்திவிட்டு, மெதுவாகத் திரும்பிப் படுக்க முயல, அது முடியாதவாறு மார்பிலும் வயிற்றிலும் அதீத கனம் அவனைக் கவர்ந்தது.

தூக்கக் கலக்கத்துடனேயே தன் விழிகளை மெதுவாக விரித்துச் சற்றுத் தலையைத் தூக்கிக் குனிந்து பார்த்தான். பார்த்தவனின் உதடுகள் மென்மையாக மலர்ந்தன. மீண்டும் தலையணையில் தன் தலையைத் தொப்பென்று போட்டவன், உறக்கத்தில் இழுத்த விழிகளை மூடியவாறு தன் இடது மார்பில் படர்ந்திருந்த முடிக்கற்றையை ஒதூக்கி அதில் முகம் தேடி வருடிக் கொடுத்தவனின் முகத்தில் ஏகாந்தமான உணர்வு வந்து உட்கார்ந்து கொண்டது.

“ஓ மை ஏஞ்சல்…” என்று முணுமுணுத்தவனின் கரங்கள் சற்றுக் கீழிறங்கி வெற்றுக் கழுத்தில் படர, மெதுவாக அழுத்திக் கொடுத்து இன்னும் சற்றே தன் கரத்தைக் கீழிறக்க, மூங்கில் தோள்கள் கரங்களில் தட்டுப்பட்டன. மெதுவாக அவள் உறக்கம் கலையாதவாறு அங்கும் இங்குமாக வருடிப் பின் முதுகில் படரவிட்டு அங்கே வருடிக்கொண்டிருக்கும் போதே, வலது புறத்து மார்புக்குக் கீழே ஒரு உருவம் அசைந்தது.

அது அசைந்த வேகத்தில், மறுபக்கம் விழ முயலப் பதற்றத்துடன் தன் நீண்ட வலிய வலது கரத்தைக் கொண்டு அந்த உருவம் விழாதவாறு பற்றித் தன் மேல் சாய்த்துக்கொண்டு நிம்மதியாக மீண்டும் உறங்கும் சமயம். இன்னொரு உருவம் அவன் வயிற்றின் மீது விழுந்துப் புழுபோல நெளிந்தது.

உயிரானவளின் வருடலை விடுத்து அதே கரத்தால், அவசரமாக நெளிந்த உருவத்தின் தூக்கம் கலையாதவாறு தட்டிக்கொடுக்க, அந்த மூன்று உருவங்களும் அவன் உடலை மறைத்தவாறு சொகுசாக உறங்கிக்கொண்டிருந்தன.

மீண்டும் எழுப்பொலி ஐந்து மணி என்று அடிக்க, தன் மன்னவனின் மார்பில் விழுந்திருந்தவள் விழிகளைத் திறக்காமலே இடது கரத்தை நீட்டி எழுப்பொலியை அணைத்துவிட்டுத் தன்னவனின் கழுத்தைச் சுற்றித் தன் கரத்தைக் கொண்டு சென்று இறுக அணைத்தவாறு அவன் கழுத்தில் தன் மூச்சு உரசும் வகையில் அழுத்தியவாறு, மீண்டும் உறக்கத்தின் வசப்பட,

இவனோ விழிகளைத் திறக்காமல் அந்தச் சுகத்தில் சற்று நேரம் மெய்மறந்து நின்றான். பின், நேரம் போவது புரிய,

“ஏய்… நேரம் ஆகிவிட்டதடி… எழுந்துகொள்ள வேண்டும்…” என்று முணுமுணுக்க,

இவளோ பேசிய அவன் உதடுகளை மறைத்தாற் பேல தன் இடது கரத்தைக் கொண்டு சென்று வாயை மூடியவாறு, மீண்டும் ஆழ்ந்த உறக்கத்தின் வசம் சென்றிருந்தாள். மெல்லிய புன்னகை உதட்டில் பரவத் தன் பற்களால் அவள் உள்ளங்கையைக் கடிக்க, வேகமாகத் தன் கரத்தை விலக்கியவள், கடித்த வாய்க்கு அதே கரத்தால் நல்ல அடியொன்று கொடுத்துவிட்டு, இப்போது தலையைச் சற்றுக் கீழிறக்கி அவன் மார்பில் பதித்து உறங்கத் தொடங்க, அவள் தலையை வருடிக் கொடுத்தவன்,

“ஏய்… பட்டும்மா… எந்திரிடி… இன்று முக்கியக் கூட்டம் இருக்கிறது… நேரத்திற்கு அலுவலகத்தில் இருக்கவேண்டும்… இப்போது கிளம்பினால்தான் சாத்தியம்…” என்று மீண்டும் கெஞ்ச, இவளோ தன் கரத்தைத் தூக்கி ஐந்து நிமிடம் என்பது போலக் காட்டிவிட்டு அவனுக்குள் புதைந்தாள்.

“ஐந்து நிமிடமா… அப்படிச் சொல்லி அரை மணி நேரமாகிவிட்டது… எந்திரிடா…” என்று அவளுடைய முதுகை வருடிக் கொடுத்தவாறு கேட்க, சற்று விலகி இடது புறமாக அவன் முகம் நோக்கித் திரும்பி மல்லாக்காக அவன் மார்பில் படுத்தவள், விழிகளை மூடியவாறு தன் கரங்களை விலக்கி அவன் கரங்களைத் தேடிப் பிடித்துத் தன் வயிற்றோடு அணைத்து வைத்தவாறு, வசதியாக அவன் கழுத்திற்குள் தன் தலையைப் புதைத்து,

“தூக்கம் வருகிறது விதுலா…!” என்றாள் அவள். இல்லை இல்லை சிணுங்கினாள் அன் நங்கை.

“அப்போ… தூங்குமா… யார் தடுத்தா… நான் எழுந்து கொள்ளவா” என்று அவள் வயிற்றை வருடியவாறு இவன் கேட்க,

“நான் தூங்கினால் உங்களுக்கு யார் தேநீர் வார்த்துக் கொடுப்பா” என்று சோம்பல் முறித்தவாறு தன் கரங்களை விலக்கி மேலே தூக்கியவாறு கேட்டபோது, அவன் தாடையில் பலமாக அவளது முழங்கை இடித்துக் கொண்டது.

“ஊப்ஸ்…” என்றவள் பதறியவாறு தலையைத் திருப்பி அவன் தாடையை வருடிக் கொடுக்க, அவனோ அதைச் சற்றும் பொருட்படுத்தியதாக இல்லை. மாறாக அவள் கூறியதைக் கேட்டு, நகைப்பில் அவனுடைய உடல் சற்றுக் குலுங்கியது.

அவள் தேநீர் வார்க்கும் லட்சணம் அவனுக்குத் தெரியாதா என்ன?

“இட்ஸ் ஓக்கே… நானே எனக்கு வார்த்துக்கொள்கிறேன்… நீ தூங்கு…” என்றவாறு அவளை விலத்த முயல, அவளோ அடாவடியாக அவன் மீது படுத்தவாறு,

“இல்லை இல்லை… நானும் எழுந்துவிட்டேன்…” என்றவாறு அப்படியே கிடந்தாள். சற்று நேரம் அந்தச் சுகத்தில் தன்னை மறந்திருந்தவனுக்கு ஒரு பக்கம் மெல்லிய அவஸ்தையும் ஏற்பட்டது.

உயிருக்கும் மேலானவள். காதலில் கனிந்து உருகிக் கசிந்து இரண்டறக் கலந்தவள்… ஆன்மாவால் ஒன்றானவள். ஆனால்… தன்னையும் மீறி எங்கெங்கோ பயணிக்க முயன்ற கரங்களைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவனின் நாசியிலிருந்து சற்று சூடான மூச்சு வெளியேறியது.

அதை உணர்ந்தவளாக,

“விதுலா…! ஆர் யு ஓக்கே… எதற்கு இப்படி மூச்சு வாங்குகிறது?” என்று சிறு பதட்டத்தோடு, எழுந்து அவன் முகம் நோக்கிக் குனிய, அவசரமாகத் தன் முகத்தில் எழுந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டவன்,

“ஒ… ஒன்றுமில்லை… எழுந்து கொள்ளவேண்டும்…” என்று அவசரமாக அவளைத் தன்னிடமிருந்து பிரிக்கத் தன் தோளைக் குலுக்கியவாறு எழுந்தவள் அப்போதுதான் பார்த்தாள் ஆத்வீகனும் சாத்வீகனும் ஆளுக்கொருவராக அவன் மீது படுத்திருப்பதை.

“டேய்…! இவர்கள் எப்போது வந்தார்கள்…” என்று விழிக்க,

“எப்போதும் போல நடுச் சாமமே வந்துவிட்டார்கள்…” என்று சற்று முன் எழுந்த அவஸ்தை மறந்து இளநகையுடன் கூறியவாறு எழுந்தான் அபயவிதுலன்.

அப்படியே குழந்தைகளின் தூக்கம் கலையாதவாறு பக்குவமாகத் தூக்கி கட்டிலில் கிடத்த, இவளோ இவனைப் பார்த்து முறைத்தாள்.

அவன் குழந்தைகளைக் கிடத்தி முடிந்ததும், மீண்டும் அவன் மார்பில் கைவைத்துக் கட்டிலில் தள்ளியவள், சொகுசாக அவன் மார்பில் தன் தலையைப் பதித்து, விழிகளை மூடியவாறு,

“அவர்களுக்குத்தான் தனி அறை கொடுத்திருக்கிறோம் அல்லவா… அங்கே படுப்பதுதானே… எப்போது பார்… இரவு என்றால் தூங்குவதற்கு உங்களிடம் வந்துவிடுகிறார்கள்… இது சரியல்ல விதுலா…! இது என்னிடம்…” என்று அவன் மார்பைத் தட்டியவாறு குறை பட, இவனுடைய விழிகள் கனிந்து உருகிப் போயிற்று.

“ஏய் பொண்டாட்டி… அவர்களைச் சொல்கிறாயே… நீ என்னவாம்… பொது அறையில் கிங் சைஸ் கட்டில் இருக்கும்போதே, இந்த டபில் பெட்டில் என் மேல் ஏறிப் படுத்திருக்கிறாயே… நியாயமா?” என்று கிண்டலுடன் கேக்க, அவளோ விழிகளைக் கூடத் திறக்காது, தலையைத் தூக்கி அவன் பக்கமாகத் திரும்பி,

“நீங்கள்தான் அங்கே படுக்க மாட்டேன் என்கிறீர்களே…” என்றுவிட்டுப் பொத்தென்று தன் தலையை அவன் மார்பில் போட்டு உறக்கத்தைத் தொடங்க இவனோ திண்டாடிப்போனான்.

அவள் சொல்வது உண்மைதான். என்னதான் இருவருக்குள்ளும் கசப்புகள் நீங்கியிருந்தாலும், அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முடியாத நிலையில், அவனால் அவர்களுக்கான பொது அறையில் உறங்க முடியவில்லை.

உறங்கினால், அவனுடைய உணர்வுகள் ஒரே போல இருக்காது. சிலிர்க்கும். அவளைத் தீண்டத் துடிக்கும். அவளுள் புதைய மனம் ஏங்கும்… இதோ இப்போது கூட உடலும் கரங்களும் பரபரக்கின்றன. அவளை அள்ளி எடுத்து, அணைக்க ஏங்குகின்றன. அவளுக்குள் புதைந்து முக்குளிக்க ஏக்கம் பிறக்கிறது… ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாது.

அவள் கூறிது போல, தான் செய்த கொடுமைகளை அவள் மறந்துவிடும் நாள்வரை, அவள் உடல் அவன் உடலை முழுதாக ஏற்கும் வரை, அவளை வேறு நோக்கத்தில் அவனால் தீண்ட முடியாது… அந்த நாள் வரும் வரை அவளும் அவனுக்கொரு குழந்தைதானே… என்னதான் தன்னைத் தடுக்க முயன்றாலும் சண்டித்தனம் செய்யும் உடலையும், மனதையும் எப்படிக் கட்டுப்படுத்துவான்? அது முடியும் காரியமா. இளமையின் துடிப்பை, அதன் தாபத்தை எங்கனம் அணைப்பான்.

அந்த நேர வேகத்தில் ஒரு ஆணாய், காவலனாய், காதலனாய், அவள் தன்னவளாகவேண்டும் என்கிற வேகத்தில், அவள் மனமாற்றத்திற்காகக் காத்திருப்பதாக உறுதியளித்தான் தான். ஆனால்… அதைச் செயற்படுத்த அவன் படும் பாடு அவனுக்குத்தான் தெரியும்.

அவனை மன்னித்தவள், எந்த வித வஞ்சனையும் இல்லாது, அவனைத் தழுவித் தொட்டு முத்தமிட்டு என்று தன் உணர்ச்சிகளை அப்பழுக்கில்லாது காட்டும்போதெல்லாம் இவன் உள்ளுக்குள் பெரிதும் தவித்துப் போவான். அந்தக் கணமே அவளை இழுத்து அணைத்துத் தன் தாபத்தைத் தீர்த்துக் கொள்ளக் காமம் கொண்ட மனம் ஏங்கும். ஆனால் அவள் நிலையையறிந்து அந்தத் தாபத்தை அவள் மீது கொண்ட காதல் தணித்து அடக்கும். எத்தனை நாள்தான் அவனும் இந்த ஏக்கத்துடன் காத்திருப்பான்.

அது அவனுக்குப் பெரும் சித்திரவதைதான். அதுவும், கரங்களில் சிக்கும் நெளிவு சுழிவுகளைக் கணவன் பார்க்கக் கூடாது, அனுபவிக்கக் கூடாது என்றால் அதைப் போல ஒரு கொடுமை எங்காவது இருக்குமா என்ன… ஒவ்வொரு நொடியும் தவித்துத் தகிக்கும் அவனுடைய தாபமென்னும் தீயைக் காதல் என்னும் நீரால் அணைக்கத்தான் முயல்கிறான்… சில வேளைகளில் இலகுவாக அதில் வென்றுவிடும் அவனால், பல முறை அது முடியாமல் பெரும் தோல்வியிலேயே முடியும்… அந்த நேரம் அவள் அருகே இருக்காமல் எங்காவது ஓடிவிடுவான்.

கடந்த இரண்டு வருடங்களாக எப்படியோ தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டான். இதோ இப்போது கூட உடலோடு உடல் முட்ட அவனை அணைத்தவாறு தூங்கும் மனைவியை வளைத்து அணைத்தாலும், அங்கும் இங்கும் அலையத் துடிக்கும் கரங்களுக்குக் கடிவாளமிட அவன் மனதிற்குள் நடத்தும் போராட்டம் அவனுக்கு மட்டுமே தெரியும்.

அந்த அவஸ்தையிலிருந்து தப்பத்தான் இன்றுவரை தன் தனியறையில் படுக்கத் தொடங்கினான் அபயவிதுலன். ஆனால் அடிக்கடி இப்படித்தான் அவனுடைய கட்டுப்பாட்டை, திடத்தைத் தவிடுபொடியாக்கிவிடுவாள் மிளிர்மிருதை.

ஏதாவது சங்கடம் தரும் கனவு கண்டாலோ, அன்று அவளுக்குப் பிடிக்காத ஏதாவது நடந்தாலோ, இரவு நடுச்சாமம் கடக்க அவனை நாடி வந்துவிடுவாள். அதன் பின் அவன் உறக்கம்தான் தொலைந்து போகும். அதன் பின் அவளுக்குப் போட்டியாக ஆத்வீகனும் சாத்வீகனும் வந்து அவன் மீது விழுந்து உறங்கும்போதுதான் பெரும் நிம்மதி எழும். எதிலிருந்தோ தப்பியது போன்ற உணர்வு.

சற்று நேரம் மனையாளின் மென்மையில் தன்னைத் தொலைத்து, ஏங்கியவாறு அப்படியே இருந்தவன், தன்னையும் மீறி அவள் கூந்தலை வருடிக் கொடுத்துச் சிரமப்பட்டுத் தன் தாபத்தை அடக்கியவனாக,

“பாவம்டி… நம்முடைய குழந்தைகளுடன் போட்டிக்குப் போகிறாயே… ம்…” என்று கேட்டுவிட்டு அவளை விலக்கி எழ முயன்றவனை விழி விரித்துக் கோபத்துடன் முறைத்தாள் மிளிர்மிருதை.

“எனக்கு வில்லர்களே அவர்கள்தான் விதுலா…! உங்களுடன் தனியாக நேரம் செலவழிக்க முடிகிறதா… எப்போதும் பார்… உங்களைச் சுற்றிக்கொண்டு… நீங்களும் படு மோசம். கிடைக்கும் நேரங்களில் அவர்களுடன்தான் செலவு செய்கிறீர்கள். கராத்தே சொல்லிக் கொடுக்கிறேன், ஜூடோ சொல்லிக் கொடுக்கிறேன் என்று கிளம்பிவிடுகிறீர்கள்… என்னோடு செலவு செய்யும் நேரம் மிகவும் குறைவு தெரியுமா” என்று பொரிய, அவனோ,

“அடிக்கடி யார் குழந்தைகள் என்பதே உனக்கு மறந்துபோகிறது பேபி… வேலைத் தளத்தில் மதியத்திற்குப் பிறகு என்னோடுதானே செலவு செய்கிறாய்… பிறகு என்ன? கிடைக்கும் நேரத்தில் நான் எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்… இதற்குப் போய்க் குறைபடுகிறாயே…” என்றவாறு அவன் எழுவதற்காகக் கால்களைக் கீழே போட்டுப் படுக்கையில் அமர, அது வரை தள்ளி அமர்ந்திருந்தவள், அவன் படுக்கையில் அமர்வதைக் கண்டதும், இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் பின்பு கிடைக்காது என்பது புரிந்தவளாக அன்று சாத்விகன் ஆத்விகன் செய்தது போலவே அவன் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

அதைப் புரிந்தவனாக, நகைத்தவன் எழ, அவனுடைய முதுகில் சந்தோஷமாகவே தொங்கியவள் அவன் இடுப்பைச் சுற்றிக் கால்களைப் போட்டு அவன் கழுத்தில் தன் முகத்தைப் பதிக்க, அவள் தலையோடு தன் தலையை முட்டிய அபயவிதுலன்,

“ஏய் கழிவறை போகவேண்டும்… அவசரம்…” என்றான் சற்று நெளிந்தவாறு. ஆனால் அவள் அதைக் கருத்தில் கொண்டால் அல்லவோ. மறுப்பாகத் தலையை ஆட்டியவள்,

“பிறகு போகலாம்… இப்போது விட்டால் நீங்கள் என்னைத் தூக்கிச் செல்ல மாட்டீர்கள். பிறகு உங்கள் வானரங்கள் எழுந்துவிட்டார்கள் என்றால் இதற்கும் வாய்ப்பிருக்காது… டீ வார்க்கவேண்டும்… சமையலறை அழைத்துச் செல்லுங்கள்…” என்று மொத்த உடலும் சுத்தமாய் அவன் உடலில் ஒட்டுமாறு கூறத் தன் தலையை ஆட்டி நகைத்தவாறு, ‘வால்…’ எனச் செல்லமாய்க் கடிந்தவன் மகிழ்வுடனே, அவளைத் தூக்கிக்கொண்டு சமையலறை நோக்கிச் சென்றான் அபயவிதுலன்.

ஆம்… கடந்த இரண்டு வருடங்களில், மிளிர்மிருதை தன் கூட்டை விட்டு மெல்ல மெல்ல வெளியேறி இப்போது அபயனுக்காகக் குழந்தைகளுடன் போட்டிப்போடும் அளவுக்கு மாறிவிட்டிருந்தாள். அபயவிதுலனுக்கும் வேலைக்குப் போய்விட்டு வீட்டிற்கு வந்தால், குழந்தைகளுடன் சேர்ந்து அவளுடன் மல்லுக்கட்டுவதே வேலையாகிப் போயிற்று.

இதோ இப்போது போலக் கிடைக்கும் நேரத்தில் அபயவிதுலனை நன்றாக ஆட்டிப் படைத்தாள். அவனும் பெரும் உவகையுடனே அவள் ஆட்டிய திசையெல்லாம் ஆடினான். சொல்லப்போனால், குழந்தைகளை விட மிளிர்மிருதையைச் சற்றுக் கெடுத்துவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும். போதாததற்குக் காந்திமதி வேறு. அவளுக்குப் பிறகே மற்றவை எல்லாம் என்றாகிவிட்டது.

அதனால் அவள் வைத்ததே சட்டமாகிவிட்டது. சற்று முகம் சுணங்கினாலும் தாங்கிக்கொள்ளாதவன், அவளுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றாமல் விடுவானா என்ன?

இருக்காதா பின்னே, கிடைக்காதோ கிடைக்காதோ என்று ஏங்கித் தவித்துத் துடித்த பின் கிடைத்த சொர்க்கமல்லவா அது… கடவுளால் கொடுத்த பொக்கிஷம் அல்லவா அவள்… எப்படி அவள் விருப்பத்தை நிறைவேற்றாமல் விடுவான். அவள் அவன் உயிரைக் கேட்டாலும் இந்தா வைத்துக்கொள் என்று தூக்கிக் கொடுத்துவிடும் நிலையிலிருந்தான் அபயவிதுலன்.

மெதுவாகச் சமையலறைக்கு முதுகில் தூக்கியவாறு வந்தவன், சமையல் மேடையில் அவளை அமர்த்திவிட்டு அவசரமாகக் கழிவரை போவதற்காகத் திரும்ப முயல, இந்தக் கிராதகியோ, அவன் இடையைச் சுற்றித் தன் கால்களைப் போட்டுத் தன்னை நோக்கி இழுக்க, அந்த மெல்லிய உருவம் இழுத்த வேகத்தில் விருப்புடனே அவளை நோக்கி விழுந்தான் அந்த ஆண்மகன், அவள் மீது மோதாதவாறு அவளுக்கு இரு பக்கமும் கரத்தைப் போட்டு, அவஸ்தையுடன் அவளைப் பார்த்தான்.

அவளோ, அவன் டீ ஷேர்ட்டைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுக்க, சிவந்த அந்த இதழ்களைக் கண்டவனுக்குக் கழிவறை போகவேண்டும் என்னும் எண்ணமே மறந்து போனது.

தன்னை மறந்து அவள் உதடுகளை நோக்கிக் குனிய, அவன் உதடுகள் நெருங்கும் தருணத்தில் தன் விரல்களை இரு உதடுகளுக்கும் இடையில் வைத்துத் தடுத்து,

‘என்ன’ என்பது போலத் தன் இமைகளை மேலே ஏற்றி இறக்கியவாறு கேட்க,

“ஏய் நீ தானே கேட்டாய்… இப்போது தடுக்கிறாயே…” என்று குறைபட்டவன், இலகுவாகவே அவள் கரத்தைப் பற்றி விலக்கி, தன் முத்திரையை அழுத்தமாக அவ் உதடுகளில் பதிக்கச் சென்றான். ஆனால் கதிர் முனையளவில் தாமதித்தவன், பின் என்ன நினைத்தானோ, தன் தலையால் அவள் நெற்றியை முட்டிவிட்டு, அவசரமாக அவளை விட்டு விலகிக் கழிவறை நோக்கி ஓடினான். அதைக் கண்டு உடல் குலுங்க நகைத்தாள் மிளிர்மிருதை.

கூடவே அவனை எண்ணி விழிகள் பணிக்கவும் செய்தன. அவளுக்காய், அவள் மன்னிப்பை வேண்டுவதற்காய் எந்த எல்லையெல்லாம் சென்று வந்தான். அவள் மனம் மாறும் வரைக்கும் கடந்த இரண்டு வருடங்களாகக் காத்திருக்கிறானே… அது சாதாரண ஆண்மகனால் முடியுமா என்ன? ஆனால் அவனால் அது முடிந்திருந்தது. அந்தக் காத்திருப்பின் போது, அவனுடைய பார்வையோ, செயலோ ஒரு போதும் கண்ணியம் தப்பியதில்லை. அப்படியே கண்ணியம் தப்பானாலும் உடனேயே தன்னை மாற்றிக்கொள்வான். முடியவில்லையா, அந்த இடத்தை விட்டே விலகிச் சென்று விடுவான். இல்லை பேச மாட்டான். அதே நேரம் அவள் எள் என்றால் அவன் எண்ணெய்யாய் இருப்பான்…

அவனுடைய ஒவ்வொரு செயலும் அவளுடைய மனதை மெல்ல மெல்ல மாற்றத் தொடங்கியது. அவனுடைய அன்பான செயல்கள், அவளுடைய கடந்த கசப்பான நினைவுகளை மெல்ல மெல்ல மறக்கடிக்கத் தொடங்க, அவனை மன்னித்தவள், மெது மெதுவாக அவன் செய்ததை மறக்கவும் ஆரம்பித்தாள்.

ஆமாம்… முன்பு நினைத்தாலே நடுங்கும் உடம்பு, இப்போது அந்த நினைவைச் சற்றுச் சாதாரணமாக எண்ணத் தொடங்கியிருந்தது. அன்பிருந்தால் எதையும் மறக்கும் என்று சொல்வது எத்தனை பெரிய உண்மை. இப்போது காதல் கொண்ட மனம், அவன் செய்த தவறுகளை மெல்ல மெல்ல நியாயப் படுத்தத் தொடங்கியது. அதில் அவளுடைய வலி சற்றுக் காணாமல் போனது.

இதோ, அவனுடைய உதட்டு முத்தத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருந்தாள் மிளிர்மிருதை.

தன் மனமாற்றத்தை அவனிடம் கூறி, அது நாள்வரை தவத்திலிருந்தவனுக்கு விமோஷனம் கொடுக்கவேண்டும் என்று பல முறை எண்ணியதுண்டு. ஆனாலும் ஒரு தயக்கம். ஒரு தடுமாற்றம். கூடவே கூச்சமும் சேர்ந்திருந்ததால், தன் மாற்றத்தைச் சொல்லச் சற்றுத் தயங்கினாள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனாலும் அவனுடைய ஏங்கும் விழிகள் அவளுடைய எழில் மேனியிலும், அங்கங்களிலும் பயணிக்கும் போது ஒருவித தவிப்பை உணர்கிறாள் என்பதுதான் உண்மை. கூடவே, அவள் நெருங்கும்போதே சற்றுத் தவிப்புடன் நடுங்கும் அவனுடைய உடல், அவன் தாபத்தைப் பறை சாற்ற அவனை எண்ணிப் பெரிதும் பரிதாபமாக இருக்கும். அப்போதே, தன் தயக்கத்தை உதறிவிட்டு அவனிடம் அடைக்கலம் புக மனம் பெரிதும் ஏங்கும்… ஆனாலும் தானாய் சென்று அவனிடம் அடைக்கலம் புக அவளால் முடியவில்லை. அதற்கு ஏதோ ஒன்று தடுத்தது.

அவனாய் புரிந்துகொள்வான் என்று பார்த்தால், ம்ஹூம்… சீமான் சற்றும் அசைந்து கொடுப்பதாய் இல்லை. முடிந்த வரையில் குறிப்பும் கொடுத்தாகிவிட்டது… அதை அவன் புரிந்துகொள்வது போலவே இல்லை. அவளுடைய வாய் வார்த்தைக்காகக் காத்திருப்பவனிடம் எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை… அதனால் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் மிளிர்மிருதை.

வரவிருக்கும் அபயவிதுலனின் பிறந்தநாள் பரிசாக, அவன் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த பரிசொன்றைக் கொடுப்பதென்று. அன்று தன் மனமாற்றத்தைக் கூறித் தனக்காய் வாழ்பவனின் ஏக்கத்தைப் போக்கி, அவனுடன் மனதால் மட்டுமல்ல, உடலாலும் இரண்டறக் கலந்து, அவனை மகிழ்ச்சியின் எல்லைக்குக் கொண்டு செல்வதாக.

அது அவளுக்குக் கடினம்தான். சிரமம்தான். சிந்தித்தும் பார்க்க முடியாத தவிப்புதான். ஆனால் அவனுக்காய், அவற்றை ஒதூக்கி வைக்க முடிவு செய்திருந்தாள் அந்தக் காதலி. அவன் பட்ட வலிகள் போதும். வேதனை போதும். காத்திருப்புப் போதும்… அவன் வாழ்வில் இனி மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருக்க வேண்டும்… அது மட்டுமே இப்போது அவள் மனதின் ஆழத்தில் உறுதியாக நிலைத்திருந்தது.

எல்லையில்லா காதலுடன், கழிவறை சென்றவனின் வரவிற்காகப் பெருமூச்சொன்றை விட்டவாறு அவன் சென்ற பாதையை ஆவலுடன் பார்த்திருந்தாள் மிளிர்மிருதை.

 

 

What’s your Reaction?
+1
26
+1
2
+1
7
+1
2
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

10 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

13 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

4 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago