Categories: Amazon Kindle

Select வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 41/42

(41)

அன்று காலை எழும் போதே முன்தினம் உறங்காததன் பலன் நன்கு தெரிந்தது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கூடவே வயிற்றைப் புரட்டவும் செய்தது.

முன்தினம் அழுது கரைந்ததால் வந்த வில்லங்கம் என்பதைப் புரிந்துகொண்டவளாகக் குளியலறைக்குள் புகுந்தவள், நன்கு தண்ணீர் அடித்து முகத்தைக் கழுவிவிட்டு நிமிர்ந்த போதுதான் அது உறுத்தியது.

பதட்டத்தோடு விழிகளை மூடி ஏதேதோ கணக்குப் போட்டாள். பதினைந்து நாட்கள் நாள் தள்ளிப்போனது உறுத்தியது. ஆனாலும் தன் தலையை உலுப்பி விழிகளைத் திறந்தவள்,

“இல்லை… இல்லை… இருக்காது… இது மன அழுத்தத்தால் நாள் தள்ளிப் போயிருக்கலாம்… அதைத் தவிர நிச்சயம் வேறு பிரச்சனை எதுவும் இருக்காது…” என்று உறுதியாக நம்பியவளுக்கு உடலின் ஒரு சில மாற்றங்கள் வேறு உறுத்தப் பயத்தில் இரத்தம் முழுவதும் வடிந்து கால்களுக்குச் செல்வது போல நடுங்கத் தொடங்கினாள் மீநன்னயா.

நடுங்கிய தன்னை நிலைப்படுத்தும் முகமாக அறையின் கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு, அவளிட்ட கணக்கினால் வந்த விடைக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றுகூடத் தெரியவில்லை. ஒரு வேளை அவள் சந்தேகப்படுவது போலக் கர்ப்பமாக இருந்தால்… இல்லை… இல்லை… அப்படி எதுவும் இருக்காது… நிச்சயமாக இருக்காது…” என்று தன்னைச் சமாதானப்படுத்த முயன்றவளுக்கு, ‘ஒரு வேளை அவள் சந்தேகப் படுவது சரியாக இருந்தால்…” மீண்டும் இரத்தம் பயத்தில் வடிந்து சென்றது.

அவளுடைய எதிர்காலமே எப்படிப் பயணிக்கும் என்று தெரியவில்லை. அதற்குள் குழந்தை என்றால்… அதை எப்படி வளர்ப்பாள்… எப்படிப் பாதுகாப்பாள்… அவளால் முடியுமா…. கடவுளே… என்ன செய்யப் போகிறாள்… இல்லை… இல்லை… மனமே பதறாதே… நீ நினைப்பது போல எதுவுமில்லை… நிச்சயமாக இல்லை… இந்தக் கணக்குப் பிழையாகக் கூட இருக்கலாம்…’ என்று திரும்பத் திரும்பச் சொன்னவளுக்கு உடனேயே அதைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டிய அவசியமும் புரிந்தது. அதுவும் யாருக்கும் தெரியாமல், சந்தேகப்படாதவாறு.

முடிவு செய்தவளாகக் கடகடவென்று குளித்துத் தயாராகிக் கீழே வர, மாதவி எழுந்து அத்தனை பேருக்கும் தேநீர் வார்த்துக்கொண்டிருந்தார்.

மீநன்னயாவைக் கண்டதும், பதறியவளாக முன் வாசலைப் பார்த்தார்.

அதகனாகரன் வந்திருக்கும் செய்தியை அறிந்தால் என்ன செய்வாள்? கோபிப்பாளோ… நான் இங்கே இருக்கமாட்டேன் என்று கிளம்பிவிடுவாளோ… பயம் நெஞ்சை அடைத்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று தெரியாதவராக உமிழ்நீர் கூட்டி விழுங்கியவர்,

“எ… எழுந்து விட்டாயா மீனா… தே… தேநீர்… குடிக்கிறாயா…” என்று ஒற்றைக் கேள்வி கேட்பதற்குள் பத்து முறை முன்வாசலைப் பார்த்துவிட்டார் மாதவி. சற்றைக்கு முன்தான் வாகனத் தரிப்பிடத்தில் அரையடிக்கு விழுந்திருந்த பனியை அகற்றவென்று சென்றிருந்தான் அதகனாகரன். இவள் எழுந்து வருவதற்குள் அவன் வேலையை முடித்துவிடுவான் என்று நினைத்திருக்க, அதற்குள் இவள் எழுந்து வந்துவிட்டாளே. இவனைக் கண்டால் அவள் என்ன செய்வாறோ… அதற்குள் இவளை அப்புறப்படுத்த வேண்டும். முடிவு செய்தவராக,

“தே… தேநீரை அறைக்கு எடுத்துச் சென்று குடிக்கிறாயா மீனா…” என்று முடிந்த அளவு அமைதியாகக் கேட்க, மெல்லியதாகப் புன்னகைத்தவள்,

“இல்லை அம்மா… நான் இங்கேயே குடிக்கிறேன்…” என்று வாங்கியவாறு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு விழிகள் அவளையும் மீறி அதகனாகரனைத் தேடின. மாதவிக்குத்தான் ஐயோ என்றானது.

இப்போது அவன் வந்தால், இவள் எப்படி நடந்துகொள்வாள் என்று தெரியவில்லையே… கலக்கத்துடன் வாசலையும் இவளையும் பார்த்துக்கொண்டிருக்க, இவளுக்கோ இரண்டு மிடறு தேநீர் குடிக்கும் போதே குமட்டிக்கொண்டு வந்தது. அவசரமாகத் தேநீரை மேசையில் வைத்துவிட்டு, தன் அவஸ்தையை மாதவி பார்க்கக் கூடாது என்பதற்காக வாயை மறைத்தவாறு கரத்தை வைத்து ஆழ மூச்செடுத்துச் சமப்படுத்த முயன்றவளுக்குக் கடைக்குப் போகவேண்டிய அவசியமும் புரிந்தது. நிமிர்ந்து மாதவியைப் பார்த்து,

“அம்மா… சில பொருட்கள் வாங்கவேண்டி இருக்கிறன. கடைக்குப் போய்வரவா…?” என்றாள் மீநன்னயா.

மாதவிக்கும் அதுதானே வேண்டும்.

அதிகாலை எழுந்தபோதே பெரிய அதிர்ச்சி அதகனாகரன் முன் அறை இருக்கையில் சட்டமாக அமர்ந்திருந்ததுதான். தம்பியைக் கண்டதும் உள்ளம் துள்ளிக் குதித்தாலும், மறுபக்கம் மீநன்னயாவின் நினைவு வந்து வயிற்றில் புளியைக் கரைக்கவும் செய்தது. நல்ல வேளை ஜெயராம் அமெரிக்காவில் முக்கியக் கூட்டம் ஒன்று இருந்ததால் முன்தினம்தான் சென்றிருந்தார். இல்லையென்றால் மாதவிதான் திணறியிருப்பார். ஜெயராம் திரும்பி வர எப்படியும் இரண்டு நாட்கள் எடுக்கும். அதற்குள் அவனை எப்படியாவது அனுப்பிவிடவேண்டும். அதுவும் மீநன்னயாவின் கண்களில் படாமல். அது முடியும் காரியமா?

இப்படி மீநன்னயா வெளியே சென்றால் அதகனாகரனை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்காததே. பெரும் நிம்மதியுடன்,

“அதனால்… என்ன… தா… தாராளமாகப் போய்விட்டு வா….” என்றவர் மீண்டும் முன்வாசல் பார்த்தார். மீநன்னயாவும், அப்படி என்ன வெளியே இருக்கிறது அடிக்கடி பார்க்கிறாரே, என்று குழம்பியவளாக எட்டிப் பார்க்க, மாதவியோ,

“ஐயோ வெளியே போனவன் எப்போது உள்ளே வருவான் என்று தெரியவில்லையே… கரங்களைப் பிசைந்து கொண்டிருக்கும் போது, முன் கதவு திறக்கத் திக்கென்றானது மாதவிக்கு.

ஐயோ வந்துவிட்டானா… என்று கலங்கியவராக உயிரைக் கையில் பிடித்தவாறு எட்டிப் பார்க்கப் புகழேந்திதான் பனியில் விளையாடியதற்குச் சாட்சியாக, ஜாக்கட் முழுவதும் பனி நிறைந்திருக்க உள்ளே வந்துகொண்டிருந்தான். பெரும் நிம்மதியுடன் மாதவி ஒரு மூச்செடுத்து விட,

“அட… இன்று காலையே எழுந்துவிட்டாயா புகழ்…” என்றாள் மீநன்னயா. அழகாய் சிரித்தவன்,

“ஆமாம் அக்கா… மாமா பனி அள்ளிக்கொண்டு இருந்தாரா.. அதுதான் அவரோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்..” என்றதும் மாதவியின் முகம் பேயறைந்தது போலானது.

ஐயையோ போட்டு உடைத்து விட்டானே. மீநன்னயா அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லையே. தவிப்பும் பயமும் போட்டிப்போட திரும்பிப் பார்க்க, அவர் நினைத்த மாதிரி, வெறுப்பாக ஒன்றும் மீநன்னயா தன் உணர்ச்சியகளைக் காட்டவில்லை. மாறாக வாடியிருந்த முகத்தில் எல்லையில்லா வேதனை ஒன்று படர்ந்தது. ஆனாலும் அதைச் சுலபமாக மறைத்தவளாக,

“ஓ…” என்றாள் அதற்கும் தனக்கும் சம்மதமில்லை என்பது போல. மாதவிதான் குழம்பிப் போனார். அதகனாகரன் வந்திருக்கிற செய்தி அவளுக்குக் கோபத்தைக் கொடுக்கும், வெறுப்பைக் கொடுக்கும் என்று நினைத்திருக்க, அவள் சாதாரணமாக ஓ என்கிறாளே. ஒரு வேளை அவன் வந்திருப்பது இவளுக்குத் தெரியுமோ? நான்தான் அதீதமாக நினைத்துவிட்டோமோ? குழப்பத்துடன் மீநன்னயாவைப் பார்த்து,

“அது… அது.. ஆகரன் வந்திருக்கிறான்…” என்றார் நைந்துவிட்ட குரலில்.

“தெரியும் அம்மா… நேற்று இரவு அவரைப் பார்த்தேன்…” என்றவள் இருக்கையை விட்டு எழப் பதட்டமாக அவளருகே வந்த மாதவி,

“அது… அவன் ஒரு நாள் இரண்டுநாட்கள்தான் நிற்பான். அதற்குப் பிறகு எப்படியும் அவனை அனுப்பிவிடுவேன். அது வரை உன்னால் அவனைச் சற்றுப் பொருத்துக் கொள்ள முடியுமா…?” என்று ஒருவித பயத்துடன் கேட்க, மீநன்னயாதான் உருகிப் போனாள். இரண்டெட்டில் மாதவியை நெருங்கி, அவருடைய கரங்களை இறுகப் பற்றிக்கொண்டவள்,

“அம்மா… இது என்ன கேள்வி? இது உங்கள் வீடு… அவர் உங்கள் தம்பி… அவர் உங்களோடு இருக்காமல், வேறு எங்கே இருப்பார்… தவிர நான் நேற்று வந்தவள்மா… எனக்காக நீங்கள் உங்கள் சொந்தத் தம்பியையே வெளியேறச் செய்வது எந்த விதத்தில் நியாயம்…” என்று அழுத்தமாகக் கேட்கக் கலங்கிப்போனார் மாதவி.

“நீ நேற்று வந்தாலும், இந்த வீட்டிற்கான முழு உரிமையும் உடையவள்… தவிர, அவனால்தானே உன் வாழ்க்கையே பாழாகி இருக்கிறது… அவனைப் பார்க்கும் போது உன் நிம்மதிதான் கெடும்… ஏற்கெனவே நானும் அவனும் உண் வாழ்க்கையில் நிறையப் பாதிப்பைக் கொடுத்துவிட்டோம்… இனியும் கொடுக்க விரும்பவில்லை மீனா…” என்று கலங்கி நின்றவரின் கரங்களைத் தட்டிக் கொடுத்து,

“யாரும் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்க முடியாதுமா… நாமே நாமாகக் கெடுத்துக்கொண்டால்தான் உண்டு… உங்கள் தம்பி, எனக்குத் துரோகம் செய்ய முயன்றபோது, அவரை நம்பியது என் தவறுதான்… அதனால் முழுத் தவறையும் உங்கள் தம்பி மீது போட முடியாது… ஆனால் ஒன்று… இதிலிருந்து யாரையும் நம்பக் கூடாது என்கிற பாடத்தைக் கற்றுக்கொண்டேன்..” என்றவள், கலங்கிப்போன மாதவியின் முகத்தைக் கண்டு, இரங்கியவளாக,

“நீங்கள் மிக மிக நல்லவர்மா… அதுதான், எனக்காகப் பார்க்கிறீர்கள்… இதோ பாருங்கள்… என் ஒருத்திக்காக உங்கள் பழக்கவழக்கங்கள் எதையும் மாற்றத் தேவையில்லை. புரிந்ததா… உங்கள் தம்பி உங்களுடைய குடும்பத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று நிறைய விடயங்களை ராம்… அப்பா பெருமையாகவே சொல்லியிருக்கிறார்… தவிர, நீங்கள் அவருக்கு அக்கா என்பதையும் மீறி ஒரு தாயாக இருந்திருக்கிறீர்கள். தாயிடமிருந்து பிள்ளையைப் பிரிப்பது மிகப் பெரும் தவறு தெரியுமா… என்னைப் பற்றி யோசிக்காதீர்கள்… உங்கள் தம்பி இங்கே வந்து போவதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை…” என்றவள், பின் கண்கள் கலங்கியவளாக அவரை நிமிர்ந்து பார்த்து,

“எனக்காகப் பெற்ற குழந்தையாக வளர்த்த உங்கள் தம்பியையே வெளியேற்ற நினைத்தீர்கள் பாருங்கள்… அது போதும் எனக்கு…” என்றவளை இறுக இழுத்து அணைத்துக்கொண்டார் மாதவி.

“சாரிமா… சாரி… இத்தனை நல்லவளாக இருக்கிறாயே… உன் வாழ்க்கையைப் போய்… மிகவும் குற்ற உணர்ச்சியாகவே இருக்கிறது தங்கம்…” என்று விம்மியவரிடமிருந்து தன்னைப் பிரித்து எடுத்தவள்,

“ஷ்… என்னம்மா இது… குழந்தைகள் போல… சரி… இன்று நான் வெளியே போகவா…” என்று கேட்டாள் மீநன்னயா. உடனே தன் விழிகளை அழுந்த துடைத்த மாதவி,

“இதெல்லாம் என்னிடம் கேட்கவேண்டுமா தங்கம்… ஆனால் இன்று பனிப் பொழிவு இருக்கே… இப்போதே ஆரம்பித்து விட்டது… நீ எப்படித் தனியாகப் போவாய்…?” என்று கேட்க,

“நான் போவேன்மா… பக்கத்தில்தானே பேருந்து நிறுத்தம் இருக்கிறது… எப்படிப் போவது என்றும் எனக்குத் தெரியும்… தவிர, வீட்டிற்குள்ளும் அடைந்து கிடக்க முடியாது அல்லவா… அப்படியே நூல் நிலையம் போய் ஒரு சில புத்தகங்கள் எடுத்து வருகிறேன்… உங்களுக்கு ஏதாவது புத்தகங்கள் வேண்டுமா…?” என்று கேட்க, புன்னகைத்தவாறு மீநன்னயாவை விட்டு விலகிய மாதவி,

“எனக்கு எங்கே நேரம் புத்தகங்கள் வாசிக்க… வாசிப்பை விட்டு பத்து வருடங்கள் ஆகின்றன…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, பூங்கோதையைத் தன் கரங்களில் பற்றியவாறு உள்ளே வந்தான் அதகனாகரன்.

இருவரின் மீதும் அதிகளவு பனி கொட்டியிருந்தது. பத்து வயது நிரம்பிய தன் மருமகளுக்குச் சப்பாத்துக் கழற்ற உதவி செய்தவன், தடித்த மேல்சட்டையின் ஜிப்பை இழுத்து உதவிவிட்டு,

“நேரமாகிறது… பள்ளிக்குப் போகவேண்டும்… போ… போய்த் தயாராகு…” என்று கூறி அனுப்பிவிட்டுத் தன் பாதணியையும் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு ஜாக்கட்டைக் கழற்றியவாறு நிமிர, அங்கே மீநன்னயா, தன் விழிகளைக் கூட இமைக்க மறந்தவளாக அதகனாகரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அக்கறையாய் தன் மருமக்களைக் கவனித்ததில் இருந்து, அவர்கள் மீது அவன் கொண்ட அன்பின் அளவு அப்பட்டமாகத் தெரிந்தது இவளுக்கு. ஏனோ அந்தக் காட்சியைக் காணக் காணத் தெவிட்டவில்லை.

அவளையும் மீறி் விழிகளும் புத்தியும் அவனை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தன.

அதே நேரம் ஜாக்கட்டைக் கழற்றியவாறு மீநன்னயாவைப் பார்த்தவன், ஏனோ ஒரு கணம் தயங்கினான். அவனையும் மீறி முன்னிரவு நடந்தது நினைவுக்கு வரப் பற்களைக் கடித்தவன், மீநன்னயாவை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், கடகடவென்று மறு திசையில் சென்று மறைந்து போனான்.

தவறு செய்தவன் அவன்… இவள் ஏன் சங்கடப்படவேண்டும். உதடுகளைக் கடித்தவள், திரும்பி மாதவியைப் பார்த்து வில்லங்கமாக ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுத் தன் அறை நோக்கிச் சென்றாள் மீநன்னயா. ஆனாலும் விழிகள் அவன் எங்கே என்று ஆவலுடன் தேடுவதையும் அவளால் தடுக்க முடியவில்லை.

(42)

ஜெயராமனின் வீடு மூன்று அடுக்குகளைக் கொண்டது. கீழ் தளம் தரையோடு, பின் தோட்டத்திற்கு நேராகவே செல்லக்கூடிய வசதியில் கட்டப்பட்டது. அடுத்த தளம் விருந்தினர்கள் அறை, சமையலறை, முன்னறை, குடும்ப அறை, ஓய்வறை, அலுவலக அறை, நூலகம் என்று பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருந்தது. மாடியில், குளியலறையோடு இணைந்து ஆறு படுக்கையறைகள். ஒவ்வொரு அறைகளிலும் பணத்தின் செழுமை கொட்டிக் கிடக்கும். அப்படியே வெளியே செல்ல உப்பரிகை. கோடைக் காலத்தில் விருந்துகள் அங்கேதான் தடபுடலாக நடக்கும் என்று மாதவி சொல்லியிருந்தாள். குளிர் காலங்களில் அத்தனையையும் இழுத்து மூடிவிடுவார்கள்.

அப்படிப் பட்ட அந்தப் பிரமாண்டமான வீட்டில் அவன் எங்கே சென்றான் என்று எப்படிக் கண்டுகொள்வது. அதகனாகரனுக்குச் சொந்தமாக ஒரு வீடு டொரண்டோவில் இருந்தாலும் கூட, அடிக்கடி அவன் சகோதரியோடு வந்து தங்கிவிட்டுப் போவதால், அவனுக்கென்று ஒரு அறை நிரந்தரமாகவே அங்கே ஒதுக்கப்பட்டிருந்தது. அதுவும் ஜெயராமன் வெளித்தேசம் போகும்போது மட்டும் இவனுக்கும் எந்தக் கார்பந்தையமும் இல்லாத பட்சத்தில் சகோதரியோடு வந்து தங்கிவிட்டுப் போவான் என்று ஜெயராம் சொல்லியும் இருக்கிறார். ஜெயராமன் இப்போது இல்லாததால்தான் இவன் வந்திருக்கிறான் போல. ஏனோ அந்த நினைவும் பெரும் வலியைக் கொடுத்தது.

அவளுக்காக அவன் வரவில்லையா… என்கிற கேள்வி அவளைப் பிறாண்டியது. அவன் மீதிருந்த கோபத்தையும் மீறி, மீண்டும் எங்காவது அவன் தென்படுகிறானா என்று விழிகளால் அலசியவாறு மெல்ல மெல்ல மேலே வந்தவள், சோர்வுடன் தன் அறைக்குத் திரும்பிய போதுதான், மேல்த்தளத்தின் திருப்பத்தில் அதகனாகரன் செல்வது தெரிந்தது. ஆறாவது அறை ஒரு திருப்பத்தில் சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும். அங்கேதான் அவனுடைய அறை இருந்தத.

அவன் வரவு தன்னை இந்தளவு பாதிக்கும் என்று அவள் சற்றும் யோசிக்கவில்லையே. எத்தனை நாட்கள் இங்கே இருக்கப்போகிறான்? அதுவரை இவள் என்ன செய்யப் போகிறாள்.. மனம் மேலும் அலைச்சலுற, மீண்டும் வயிற்றைப் பிரட்டி நினைவுலகத்திற்குக் கொண்டு வந்தது.

எழுந்தவள், தயாராகி, ஜெயராம் அவளிடம் கொடுத்திருந்த பணத்திலிருந்து நூறு டாலர்களை எடுத்துக் கைப்பையில் திணித்தவாறு கிளம்பினாள்.

அவள் கடகடவென்று படிகளிலிருந்து கீழே இறங்கித் தரையைத் தொடவும், அதகனாகரன் தன் மருமக்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்வதற்காக அந்தப் படிகளைக் கடக்க முயற்சிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

அவனைக் கண்டதும் பதட்டத்தோடு ஒரு படி மேலே ஏறி நிற்க, அவனும் இவளைக் கண்டு தடைபோட்டது போல நிலைத்து நிற்க, யார் முதலில் கடந்து செல்வது என்கிற தடுமாற்றத்தில் ஒரு நிமிடம் கடந்த சென்றது.

அவளுக்கு வழிவிட்டு அவன் பின்னால் செல்ல முயலவும், இவனுக்கு வழிவிட்டு அவள் பின்னால் செல்லவும், அவள்தான் பின்னால் சென்றுவிட்டாளே, இனி முன்னேறுவோம் என்று அவன் முன்னேற முயலவும், இவன்தான் பின்னேறிவிட்டானே, இனி நாம் முன்னேறுவோம் என்று இவளுமாகப் பின்னும் முன்னும் தடுமாறி நிற்க,

“மாமா… நேரமாகிறது… கிளம்புங்கள்…” என்று புகழேந்தி சத்தம்போட, சுதாரித்தவனாக ஓரடி பின்னால் நின்று அவளுக்கு வழி விட, அவன் முகம் பார்க்காமலே கடந்து சென்றாள் மீநன்னயா.

கடந்து சென்றவளை யோசனையாகப் பார்த்த அதகனாகரனுக்கு அவள் எங்கோ கிளம்பிச் செல்கிறாள் என்கிற கேள்வி பிறக்க, யோசனையில் புருவங்கள் எழுந்தன.

இந்த நேரத்தில் வெளியே போவதும் சாத்தியமில்லையே. பனி கொட்டுகிறதே. என்ன செய்யலாம்? சோனையுடன் நின்றிருக்க, அதற்குள் மாதவியிடம் விடைபெற்றுக் கிளம்பிவிட்டிருந்தாள் மீநன்னயா.

அவள் வெளியேறியதும், தன் சகோதரியிடம் சென்றவன்,

“நன்னயா எங்கே போகிறாள்?” என்று கேட்கத் தன் சகோதரனைப் பரிதாபமாகப் பார்த்த மாதவி,

“கொஞ்சப் பொருட்கள் வாங்கவேண்டும் என்று கடைக்குச் செல்கிறாள்டா…” என்றார்.

“ஓ… இந்த நேரத்திலேயே…. பனி அதிகமாகப் பொழிகிறதே… எப்படிப் போகிறாளாம்…”

“வேறு எப்படி… பேருந்தில்தான்…” என்றதும் இவனுக்குக் கோபம் வந்தது. பேருந்து நிலையத்திற்குச் சற்றுத் தூரம் நடக்கவேண்டும். இன்னும் நடைபாதையில் விழுந்திருக்கும் பனியை அகற்றவும் இல்லை… இந்த நிலையில் வழுக்கி விழுந்தால்… இப்படி விழுந்து பல பேர் கைகால்களை உடைத்து வைத்திருப்பது அவனுக்குத் தெரியுமே.

உடனே வெளியே வந்து பார்க்க நடைபாதையில், மீநன்னயா தாண்டித் தாண்டி நடந்துசென்றுகொண்டிருப்பதைக் கண்டான். இவனுக்காகக் காத்திருந்த புகழேந்தி, பூங்கோதையிடம்,

“வாகனத்தில் போய் அமருங்கள்… இதோ வருகிறேன்…” என்று இரண்டெட்டில் மீநன்னயாவை நெருங்கி, அவளுடைய கைத்தலத்தைப் பற்றப் பதறியவாறு திரும்பிப் பார்த்தாள் மீநன்னயா.

திடீர் என்று ஒருத்தன் கரத்தைப் பற்றியதும், அதிர்ந்து போனவளுக்கு அது அதகனாகரன் என்று தெரிந்ததும் அந்தப் பதட்டம் மறைந்து செல்ல, கோபத்துடன் தன் கரத்தை உதறி விடுவித்தவள், பலமாக அடித்த இதயத்தை அடக்கும் பொருட்டு வலது கரத்தை மார்பில் பதித்து ஆழ மூச்செடுத்து விட்டவள்,

“கொஞ்சமாவது அறிவு வேண்டாம்? இப்படியா பயமுறுத்துவது?” என்று சுள்ளென விழ, அப்போதுதான் தன் தவறு புரிந்தவனாக, இரண்டு கரங்களையும் சற்று மேலே தூக்கி,

“ஐ… ஐ ஆம் சாரி…” என்றான்.

“சாரியும்… பூரியும்தான்.. சே…” என்றவள், அவனை விட்டு விலக முயல, அவனோ அவளுடைய பாதையை மறைத்து நின்றவாறு,

“ரியலி ஐ ஆம் சாரி… சரி வா… நீ எங்கே போகவேண்டுமோ அங்கே உன்னை இறக்கி விடுகிறேன்…” என்றவனை முறைத்துவிட்டு,

“உங்கள் உதவியோடுதான் நான் செல்லவேண்டுமானால், அந்த இடத்திற்குப் போகாமலே இருப்பேன்…” என்று பற்களைக் கடித்தவாறு கூறியவள்,

“தயவு செய்து வழிவிடுங்கள்…” என்றாள் ஆத்திரத்தோடு. அவனோ,

“நன்னயா… இன்று அதிகப் பனிப்பொழிவு நிகழும் என்கிறார்கள்… இந்த நிலையில் உன்னால் நடந்து செல்ல முடியாது… அதுவும் கழுத்துக்கு மஃப்ளர் வேறு இல்லாமல் கிளம்பியிருக்கிறாய்…” என்றவன் தன் கழுத்திலிருந்த மஃப்ளரை எடுத்து அவளுக்குப் போடவர, இரண்டடி தள்ளிச் சென்றவள்,

“என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்… உங்கள் உதவிக்கும் நன்றி, உங்கள் அக்கறைக்கும் நன்றி… ஏற்கெனவே உங்கள் அக்கறை எந்தளவில் கொண்டு சென்று விடும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்துகொண்டவள் நான். அதனால்… உங்கள் நடிப்பை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்…” என்றவள் கடகடவென்று நடக்கத் தொடங்க, அவளுடைய வேகத்திற்குப் பாதை ஏற்புடையதாக இருக்கவில்லை. அடுத்த பாதம் வைப்பதற்குள் அது நன்றாகவே வழுக்கிவிடச் சுதாரிப்பதற்குள்ளாகத் தரையில் விழுந்திருந்தாள் மீநன்னயா.

அவளுக்கே சற்று நேரம் எடுத்தது தான் தரையில் விழுந்துவிட்டோம் என்பதை உணர்வதற்கு.

ஒரு கணம் ஆடித்தான் போனாள் மீநன்னயா. அவளையும் மீறி வலது கரம் வயிற்றைத் தடவிப் பார்த்தது. புத்தியோ எங்காவது வலிக்கிறதா என்று பரிசீலித்தது.

நல்லவேளை… எங்கும் வலிக்கவில்லை. வயிற்றில் எந்த மாற்றமும் இல்லை. விழுந்த அதிர்ச்சியில் இதயம்தான் சற்றுப் பலமாகத் துடித்தது.

ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்துவதற்குள்ளாக, அவளை நோக்கிப் பாய்ந்து வந்த அதகனாகரன் அவளுக்கு முன்பாக மண்டியிட்டமர்ந்து,

“ஆர் யு ஓக்கே பேபி…” என்றான் பதட்டத்துடன்.

அந்தப் பரிதவிப்பிலும், பதட்டத்திலும் மீண்டும் ஆத்திரம் கொந்தளிக்க,

“ஏன்… எனக்கென்ன… சாகாமல் நன்றாகத்தான் இருக்கிறேன்…” என்று சுள்ளென்று விழுந்தவள், எழ முயல, உடனே அவளுடைய கரங்களைப் பற்றி உதவப்போனான் அதகனாரகன்.

ஏதோ தீண்டத் தகாதவன் தொட்டதுபோல உதறி அவன் கரங்களைப் பலமாக அடித்துத் தள்ளிவிட்டவள்,

“உயிருள்ள வரை என்னைத் தொடாதீர்கள்…” என்று தன்னை மறந்து பலமாகக் கத்த, உடனே தன் கரத்தை விலக்கியவன்,

“ஓக்கே… ஓக்கே… நான் தொடவில்லை… உன்னால் எழுந்து கொள்ள முடியுமா…” என்று அப்போதும் ஒரு வித பரிதவிப்போடு கேட்டான் அதகனாகரன்.

“ஏன்.. எனக்கென்ன கேடு… நீங்கள் உயிரோடு புதைத்தபோதே சாகாமல் திவ்வியமாக இருப்பவள்தானே நான்… வழுக்கி விழுந்தா சாகப்போகிறேன்…” என்று கடுமையாகக் கேட்டுவிட்டு, தடுமாற்றத்துடன் எழ முயல மீண்டும் கால் வழுக்கியது.

உடனே அவளுடைய தோள்களைப் பற்றி அவளை நிலைக்க வைக்க, ஒரு கணம் அவனுடைய உதவியைப் பெற்று நிலைத்து நின்றவள், மறு கணம் மீண்டும் அவனை உதறிவிட்டு,

“என்னைத் தொடாதீர்கள் என்றேன்…” என்று சீறிவிட்டு நடக்கத் தொடங்கியவளுக்குப் பாத மூட்டில் வலித்தது. அன்று காட்டில் விழுந்தபோது அடிபட்ட அதே பாதம்… எரிச்சலுடன் நின்று மறுகாலை ஊண்டி, வலித்த காலைச் சற்றுத் தூக்கிப் பாதத்தைச் சுழற்றிப் பார்த்தாள். வலித்தது.

“சுத்தம்…” வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு நடக்கத் தொடங்கியவள் மறு கணம் காற்றில் மிதக்கத் தொடங்கினாள்.

பதறியவாறு என்ன என்று உணர்வதற்குள் அதகனாகரனின் கரங்களில் குழந்தையெனத் தவழ்ந்திருந்தாள் மீநன்னயா. அதை உணர்ந்ததும், உதறித் தன்னை விடுவிக்க முயல, அவனுடைய இறுகிய பிடியில் அவளால் ஓரணுவும் அசைய முடியவில்லை.

ஆத்திரத்துடன் அவனை முறைத்துப் பார்த்து,

“மரியாதையாக என்னைக் கீழே இறக்குங்கள்… இல்லை….” என்று சீற, இவனோ கிண்டலுடன் அவளைப் பார்த்து,

“இல்லை என்றால்…” என்றான் ஒற்றைப் புருவத்தை மேலேற்றி. அதுதானே இல்லையென்றால் அவளால் என்னதான் செய்ய முடியும்? அவனை வெற்றிகொள்ளும் திடமும் சக்தியும் அவளுக்கு இருக்கிறதா என்ன? இல்லையே. கூடவே அந்தத் தடித்த ஆடையையும் மீறி அவனுடைய கரங்களின் சூடு உடலுக்குள் நுழைந்து இதயம் வரை இதம் பரப்புவதை ஒரு இயலாமையுடன் உணர்ந்தவளுக்குக் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன.

இத்தனை வெட்கம் கெட்ட உடலா இது. சீ… இத்தனை அநீதி செய்திருக்கிறான். ஆனால், அவன் தொடுகையை இந்தப் பாழாய்ப் போன இதயம் ஏற்றுக் கொள்கிறதே. இதை விட அவமானம் என்ன இருந்துவிடப் போகிறது. அவளையும் மீறி உதடுகள் நடுங்கத் தொடங்க, அதைக் கண்டவனது முகம் கனிந்து போனது. அவள் விழிகளில் பொங்கிய கண்ணீர் அவன் இதயத்திலும் வழிந்து சென்றது. ஆனாலும் அவளுக்காய் இரக்கப்படும் நிலையில் அவனில்லையே.

விட்டால் எங்காவது விழுந்தடித்து ஆபத்தை விலைகொடுத்து வாங்கிவிடுவாளே. இவள் கனடாவிற்குப் புதிது வேறு. இத்தகைய குளிர் காலத்தை இப்போதுதான் பார்க்கிறாள். அதுவும் பனிப்பொழிவு நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை. இந்த நிலையில் ஏடாகூடமாக எங்காவது விழுந்து வைத்தால்.

ஏற்கெனவே அவளுக்குச் செய்த அநீதியை நினைத்து உறக்கமில்லாமல் தவிப்பவன் அவன். இந்த நிலையில் தெரிந்தே அவள் ஆபத்தை விலைக்கு வாங்கினால், நிச்சயமாக அவனால் அதைத் தாங்க முடியாது.

இதைச் சொன்னாலும் அவள் புரிந்துகொள்ளப் போவதில்லை… அதை விட, இத்தகைய அதிரடிதான் சரி வரும் என்கிற முடிவில், அவளை ஏந்திக்கொண்டு தன் வாகனத்தை நோக்கி வந்தவனின் விழிகள் தன்னவளின் முகத்தை விட்டு இம்மியும் அங்கே இங்கே அசைவதாயில்லை.

அதீத குளிரில் இளஞ்சிவப்பில் மாறிப்போன அவள் முகத்தில், உதடுகள் மட்டும் செரிப்பழத்தின் நிறத்தில் கடுஞ்சிவப்பில் மாறி அவனுக்கு அழைப்பு விடுவது போலிருக்க, அந்த நேரத்திலா ஒரு பனித்துளி அவள் உதடுகளுக்கு மத்தியில் வந்து விழ வேண்டும். அந்தப் பனித்துளியாய் அவன் உதடுகள் இருந்தால் எப்படியிருக்கும். அதை நினைத்த மாத்திரத்திலேயே அதகனாகரனின் உடல் அந்தக் குளிரையும் மீறிச் சூடேறத் தொடங்கியது. கூடவே கரங்கள் வேறு அந்த உடலின் மென்மையை உணர்ந்து கொள்ள, மேலும் இவனுக்குள் பலவித ரசாயன மாற்றம். ஏற்கெனவே அந்த உடலின் சுவை அறிந்தவனாயிற்றே. அல்லும் பகலும் அந்த உடலின் சுகந்தத்தை நுகரவேண்டித் தவம் கிடப்பவனாயிற்றே. அதனால் அத்தனை சுலபத்தில் அவளைத் தரையிறக்க அவனால் முடிந்திருக்கவில்லை.

காலம் முழுவதுக்கும் அவனை ஏந்தியிருக்க அவன் தயாராகத்தான் இருந்தான். அதே வேளை அவன் கரங்களில் கிடந்தவளுக்கும் உலகம் மறந்துதான் போனது. அவன் விழிகளுக்குள் கலந்த தன் விழிகளை மீட்டெடுக்கும் வழி தெரியாது, தன்னை மறந்து இளகிப்போய் அவளையே பார்த்துக்கொண்டிருந்த அந்தக் காந்த முகத்தில் நிலைத்த தன் சிந்தையை அகற்றும் வழி தெரியாது மயங்கிக் கிடக்க, இருவருமே வேறு உலகில் சஞ்சரிக்க, அது மற்றவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டுமே.

ஏற்கெனவே பள்ளிக்குத் தாமதமாகிறது என்கிற கடுப்பிலிருந்த புகழேந்தி, தமது சகோதரியை ஏந்திவந்த மாமா, இன்னும் வாகனத்திற்குள் அமர வைக்காமல் கைகளில் ஏந்தியிருப்பதைக் கண்டதும் கோபம் கொண்டவனாக, சடார் என்று கதவைத் திறந்து,

“மாமா… இந்தக் காட்சிகளைத் திரைப்படத்திலும் சீரியலிலும் காட்டித்தான் கடுப்பேற்றுகிறார்கள் என்றால், இங்கேயுமா… எங்களைப் பள்ளிக்கூடம் அழைத்துப் போகிறீர்களா, இல்லை நானும் இவளுமாக நடந்து போகட்டுமா…” என்று பொறுமையிழந்து கத்த, அப்போதுதான் இருவருக்குமே சுய உணர்வு வந்தது.

ஒரு கணம் அசடு வழிந்த அதகனாகரன், பதறியவாறு இறங்க முயன்றவளைப் பக்குவமாகத் தரையிறக்கி, மீண்டும் அவள் திமிறி ஓட முதல் முன் கதவைத் திறந்து அவளை அமர வைத்து,

“நம் சண்டையைப் பிறகு வைத்துக் கொள்ளலாம். பிள்ளைகள் இருக்கிறார்கள்… அவர்களுக்கு ஒரு காட்சிப்பொருளாகாமல், உட்கார்…” என்று அடிக்குரலில் கூற, திரும்பிப் பார்த்தாள் மீநன்னயா. அவன் சொன்னது சரிதான். புகழேந்தியும், பூங்கோதையும் பொறுமையை இழந்த கோபத்துடன் நின்றிருந்தனர்.

வேறு வழியில்லாமல் பற்களைக் கடித்து இருக்கையில் அமர, மறு கணம் ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்த அதகனாகரன் வண்டியைக் கிளப்ப, விழத்தொடங்கிய பனியை நசித்துக்கொண்டு வாகனம் புறப்படத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
19
+1
5
+1
5
+1
3
+1
0
+1
0
Vijayamalar

View Comments

Share
Published by
Vijayamalar

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…

6 hours ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…

1 day ago

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…

2 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…

3 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…

4 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…

6 days ago