உண்மை இத்தனை கசப்பாகவா இருக்கும். பற்களை கடித்துத் தன்னை சமநிலைக்குக் கொண்டு வர முயன்றவள்,
“போதும்… பிளீஸ்… இதற்கு மேல் எதுவும் சொல்லாதீர்கள்…” என்றாள் நெஞ்சம் வலிக்க.
சற்று நேரம் அப்படியே நின்றிருந்தவள் இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இரும்பை ஒத்த இராட்சதன் போல அவள் முன்னால் நின்று இருந்தவனைத் தளராது பார்த்தவளுக்கு வெறுப்பு தான் வந்தது.
அவனைப் பார்த்து முழுதாக ஐந்து மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளுடைய வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டானே.
“என்ன அமலன் திருமணம் முடித்தது உனக்குத் தெரியாது என்று சொல்லப் போகிறாயாக்கும். அதை நான் நம்பவேண்டும் அதுதானே..?” கேட்டவன் இளக்காரமாக அவளைப் பார்த்துச் சிரித்தான். பின் தன் பான்ட் பாக்கட்டிலிருந்து கைப்பேசியை எடுத்து, அதில் எதையோ தட்டிவிட்டு அவளுக்குத் தன் கைப்பேசியைத் திருப்பிக் காட்டினான். அதில் ஒரு குறுஞ்செய்தியின் நகல் இருந்தது.
“இது என்ன என்று தெரிகிறதா?” என்றான் ஏளனமாக. அவளோ பதில் சொல்லாது அமைதியாக இருக்க,
“உன்னுடையதுதான். நீ என் அண்ணாவுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள்…? என்ன எழுதினாய் என்பது நினைவிருக்கிறதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன்… உன்னுடைய மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு வா, சேர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம்… இல்லை என்றால் இரண்டு மில்லியன் அமரிக்க டாலர்கள் கொடு… என்பாட்டைப் பார்த்துப் போய் விடுகிறேன். இல்லை என்றால்… இதனால் ஏற்படும் விளைவுகளை நீ சந்திக்க நேரிடும்” அதிலிருந்ததை வாசித்தவனின் குரல் உறுமலாகத் தெரிய மேலும் முகம் வெளிறினாள் திகழ்வஞ்சி.
இதற்கு அவள் என்ன பதிலைச் சொல்வாள்? பதில்தான் இருக்கிறதா சொல்வதற்கு? விழிகளை அழுந்த மூடித் தலை குனிய,
“இதை எதற்காக இத்தனை பத்திரமாக எடுத்து வந்திருக்கிறேன் தெரியுமா? ஆராவமுதனை என்னுடைய பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளச் சட்டத்தின் உதவியை நாடும்போது இவை எல்லாம் எனக்குத் ஆதாரங்களாகத் தேவைப் படும், தவிர…” என்றவன், அவளை அழுத்தமாகப் பார்த்து,
“நீ குழந்தையை வளர்ப்பதற்குத் தகுதியே இல்லாதவள் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். ஒட்டாவாவில் உன்னைப் பற்றி விசாரித்தபோது, உனக்குப் போதைப் பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் இருந்ததாமே. இது போதாதா நீ நல்ல தாய் இல்லை என்பதை உறுதி செய்ய…” இரக்கமற்றுச் சொன்னவனை அடிபட்ட பாவனையுடன் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“ஒத்துக் கொள்கிறேன். முன்னம் நான் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். நிறைய தப்பும் செய்திருக்கிறேன். ஆனால் இப்போது திருந்தி ஆராவுக்கு நல்ல ஒரு தாயாக இருக்கிறேன். அவனுக்காக நான் நிறைய மாறியிருக்கிறேன். நான் பழைய திகழ்வஞ்சியில்லை… த..தயவு செய்து என் மகனை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.. அவன் மட்டும்தான் என் உலகம்…” என்றவள் தொண்டை வரை வந்த விம்மலை விழுங்கிவிட்டு,
“இதோ பாருங்கள்… உ… உங்கள் அண்ணா தானாகத்தான் என்னோடு பேசினார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. பேசினேன். பழகினேன்… அவருக்குத் திருமணம் ஆன செய்தியே, பிறகுதான் தெரியும்…” அவள் சொல்ல அவனோ அவளை எரிப்பது போலப் பார்த்தான்.
“பொய்…!” என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக.
அதைக் கேட்டவள் எச்சில் கூட்டி விழுங்கித் தலையைக் குனிய, அவளை ஏளனமாகப் பார்த்தான் அவன்.
“இதுவே நீ எப்படிப்பட்ட ஆள் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறதே… இதில் அண்ணா அவனாக உன்னை நெருங்கினான்… இதை நான் நம்ப வேண்டும்? என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது…?” அவன் கேட்க, உதடுகள் கடித்து நின்றாள் திகழ்வஞ்சி.
ஆம் அவள் சொன்னது பொய்தான். திகழ்வஞ்சியாகத்தான் அமலனை நெருங்கினாள். தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டாள். இதை எப்படி வெளிப்படையாகக் கூறுவது? கழிசடையாக மாறிப்போன இறந்த கால வாழ்க்கைக்கு அவளால் எப்படி நியாயம் கற்பிக்க முடியும்.
“என்ன அமைதியாக இருக்கிறாய்…? என் கேள்விக்கு உன்னிடம் பதில் இல்லை அப்படித் தானே? சீ… நீ எல்லாம் ஒரு பெண்ணா…? எப்படிக் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் இப்படிப் பேச முடிகிறது? பணத்துக்காக ஒரு ஆணிடம், அதுவும் உன்னை விட இருபத்திரண்டு வயது பெரியவனோடு எப்படிப் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது? பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்பது இதுதானா?” என்றவனை இப்போது கோபமாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“ஹலோ… அது என் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை…” அவள் சொல்ல எரிப்பது போலப் பார்த்தான் அபராசிதன்.
“ஆமாம்… உன் வாழ்க்கையில் தலையிட எனக்கு உரிமையில்லைதான். ஆனால் உன் பேராசையில் சிக்கிக் கொண்டவன் என் அண்ணன் ஆயிற்றே…” இவனும் பதிலுக்குச் சீற, அதற்குப் பதில் சொல்ல முடியாது ஒரு கணம் தயங்கினாள் திகழ்வஞ்சி.
“என்ன பதில் இல்லையோ…?” அவன் கேட்க,
“ஆமாம்… உங்கள் அண்ணா திருமணமானவர் என்று தெரிந்துதான் பழகினேன் போதுமா. இப்போது அதற்கு என்ன என்கிறீர்கள்? உங்கள் அண்ணா ஒன்றும் ஐந்து வயதோ பத்து வயதோ குழந்தை இல்லையே. சொன்னீர்களே… என்னை விட இருபத்திரண்டு வயது பெரியவர் என்று…! அப்படிப் பட்டவருக்கு எங்கே போனது புத்தி. குற்றம் சொல்வதாக இருந்தால் நீங்கள் அவரைத்தான் சொல்லவேண்டும்” என்றவளை அதீத வெறுப்புடன் பார்த்தான் அவன்.
“சே… போதும் நிறுத்து. செய்வதையும் செய்து விட்டு, அதற்கு நியாயம் வேறு கற்பிக்கிறாயா? அது எப்படி? கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் ஒருத்தனின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு தப்பே செய்யாதது போல உன்னால் பேச முடிகிறது…?”
“இதை நானும் கேட்கலாமே. கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் திருமணம் ஆகி இருந்தும், குத்துக்கல்லாட்டம் மனைவி இருக்கிற போதே, ஒரு இளம் பெண் நெருங்கி வந்ததும் எப்படிப் பல்லைக் காட்ட முடிகிறது? எனக்குத்தான் பதினெட்டு வயது. முதிர்ச்சி இல்லை. நாற்பத்திரண்டு வயதுடைய உங்கள் அண்ணனுக்குமா அந்த முதிர்ச்சி இல்லை? இளசாக ஒருத்தி கிடைத்ததும், கட்டிய மனைவியை மறந்து படுக்கையை பகிர்ந்தவர்தானே அவர்…! அவர் பெரிய உத்தமன்… நான் கெட்டவளா…? நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்…” அவள் சொல்ல ஒரு கணம் வாயடைத்துப் போனான் அபராசிதன்.
அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. என்னதான் அமலனை, திகழ்வஞ்சி பயன் படுத்திக் கொள்ள முயன்றாலும், நாற்பத்திரண்டு வயதான அவனுக்குப் புத்தி எங்கே போனது? இவள்தான் சின்னப் பெண். அவனாவது அதை யோசித்திருக்க வேண்டாமா? தன் அண்ணன் மீதும் தவறு இருப்பதால்தானே இப்போது இங்கே வந்து அமைதியாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.
“என்ன அமைதியாகி விட்டீர்கள். இப்போது பேச எதுவும் இல்லையோ??” அவள் கேட்டாலும் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கவே செய்தது.
திகழ்வஞ்சி அமலனைச் சந்தித்தது அவளுடைய பதினெட்டாவது வயதில்தான். பகுதி நேர வேலையாக, ஒட்டாவாவில் இருந்த உணவு விடுதி ஒன்றிற்கு வேலையில் சேர்ந்திருந்தாள் திகழ்வஞ்சி. அப்போது அந்த உணவு விடுதியை மேற்பார்வை பார்க்க வந்திருந்தான் அமலன்.
அமலனைக் கண்டதும் திகழ்வஞ்சியிடம் பல மாற்றங்கள். ஆரம்பத்தில் திகழ்வஞ்சி மயங்கியது என்னவோ அமலனின் பணத்திற்காகத்தான். கூடவே வயது நாற்பத்திரண்டாக இருந்தாலும், அவனுடைய கம்பீரமும், அவன் நிற்கும் தோரணையும் அவளைக் கவரவே செய்தது. முட்டாள் தனமாகப் பாசத்துக்கு ஏங்கும் பெண்ணான திகழ்வஞ்சிக்கு அதுவும் தந்தையை இழந்தவளுக்கு அந்த வயது வித்தியாசம் கூட பிடித்தமானதாகவே இருந்தது. அதற்காகவே அவனை அதிகம் நெருங்கினாள் என்று கூடச் சொல்லலாம். கூடவே அவனிடத்தே கொட்டி இருந்த பணம், அவனிடமிருந்த அத்தனை எதிர்மறைகளையும் மறைத்துவிட்டிருந்தது.
அமலனும் ஆரம்பத்தில் தன்னை விடச் சின்னப் பெண்ணான அவளிடம் பாசமாகத்தான் நடந்து கொண்டான். வரும் வாடிக்கையாளர்களை அவள் இன்முகத்துடன் வரவேற்றுக் கவனித்த விதம் அவனுடைய மனதில் பதிந்து போக, அவள் யார் என்று விசாரித்தான். இளம் வயதில் தந்தையை இழந்தவள் என்பதை அறிந்தவனுக்கு அவள் மீது மிகுந்த பரிதாபம் எழுந்தது. அதனால் அவளை ஒரு தந்தையின் நிலையிலிருந்து பாதுகாக்கவும் செய்தான்.
அதுவும் அன்புக்காக ஏங்கிய இந்த முட்டாளின் தலையை வருடி அவன் குட் ஜாப் என்று நிஜமான மகிழ்ச்சியோடு தட்டிக் கொடுத்த போது, உடனே உள்ளம் குளிர்ந்து போய் அவன் மீது பித்தானாள். கூடவே சந்தர்ப்பம் கிடைத்தபோது அவனுடைய இளகிய மனதைப் பயன்படுத்தவும் அவள் தவற வில்லை.
ஆரம்பத்தில் அமலனுக்கு அவள் மீது எந்த விதமான தப்பு அபிப்பிராயங்களும் இருக்க வில்லை. ஆனால் அவளாக நெருங்கவும், உரிமை எடுத்துக்கொள்ளவும், அவனைத் தொட்டு, உடல் உரசிப் பேசவும் தடம் புரண்டுதான் போனான்.
இருவருமே மெல்ல மெல்ல நெருக்கம் காட்டத் தொடங்கினார்கள். ஒரு நாள் இருவரும் கொஞ்சம் எல்லை மீறியபோது சுதாரித்து விலகியதே அமலன் தான். குற்றம் செய்தவன் போல,
“சாரி… சாரி… நான்… இப்படி நடந்திருக்கக் கூடாது… என்னை மன்னித்துவிடு…” என்று சொன்னவன் அதற்குப் பிறகு ஒரு மாதம் அவளைப் பார்ப்பதையே முற்றாகத் தவிர்த்தான்.
இவன் தன்னை விலக்கி வைக்கிறான் என்பது தெரிந்ததும், கோபம் கொண்டவளாக, தான் தற்கொலை செய்யப் போவதாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அடித்துப் பிடித்து இவளிடம் ஓடி வந்துவிட்டான் அமலன்.
வந்தவன், அவள் அப்படி எந்த முட்டாள் தனமும் செய்யவில்லை என்பதைக் கண்டு கொண்டதும்தான் நிம்மதியானான். அடுத்த கணம் அவளை இறுகத் தன்னோடு அணைத்துக்கொள்ள, அவளும் அணைத்துக் கொண்டாள்.
“ஏன் இப்படி மிரட்டுகிறாய் வஞ்சி…? ஏன்…?” அவன் தவிக்க, அவனை விட்டு விலகியவள்,
“ஏன் என்றால் எனக்கு உங்களை பிடித்து இருக்கிறது. நீங்கள் இல்லாமல் வாழ்வது கடினம் என்பது புரிந்து போயிற்று…” என்றவளிடம் தன் நிலையை எப்படிச் சொல்வது என்று புரியாமல் தவித்தான் அமலன்.
“வஞ்சி… நான் திருமணம் ஆனவன்… உனக்கு அது தெரியுமா தெரியாதா?” அவன் கலங்கியவாறு சொல்லத் தோள்களைக் குலுக்கிச் சிரித்தாள் இவள்.
“நாற்பத்திரண்டு வரை திருமணம் ஆகாமல் பிரமசாரியாக இருப்பீர்கள் என்று எண்ணும் அளவுக்கு நான் முட்டாளில்லை. தவிர உங்கள் மீது ஆசை கொண்ட போதே, உங்களைப் பற்றிய அனைத்தையும் விசாரித்து விட்டேன்… திருமணமாகி குழந்தைகள் இல்லையாமே…?” சொன்னவள் அவனை இழுத்துச் சென்று இருக்கையில் அமர்த்தி அவன் மடியில் அமர்ந்து அவனுடைய கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு,
“உங்களுக்குத் திருமணம் ஆனதைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை அமலன்…! எனக்கு நீங்கள் வேண்டும்.. அவ்வளவுதான். உங்கள் அன்பு முழுக்க முழுக்க எனக்கு வேண்டும்…” அவள் உறுதியாகச் சொன்னவாறு பசக் என்று அவனுடைய உதடுகளில் தன் உதடுகளைப் பொருத்திக்கொள்ள, அதற்கு மேலும் அமலனால் கைக்கட்டியிருக்க முடிந்திருக்கவில்லை.
இருந்த கொஞ்ச நஞ்சத் தயக்கத்தையும் உதறிவிட்டு அவளை முழுதாகத் தன்னோடு எடுத்துக்கொண்டான் அவன்.
புத்தியற்ற இளமை, அவளை முட்டாள்தனமாக யோசிக்க வைத்தது. சரி பிழை பற்றி அறியாத அந்த இளமைப் பருவத்துக்கு அப்போது எதுவும் தவறாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளுக்கு முக்கியமாகப் பட்டது, அவன் காட்டிய அன்பும் அவனிடமிருந்த பணமும்தான்.
அதற்குப் பிறகு அமலன் டொரன்டோ வந்த போது, தன் கணவனின் மறுபக்கத்தைத் தெரிந்த கொள்ளாத பார்கவி, காதல் முழுவதையும் அவன் மீது கொட்ட, தன் மனைவியின் அப்பழுக்கற்ற அன்பில் திணறிப்போனான் அமலன்.
குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுத்தது. குன்றியது. அவளுக்குத் தான் செய்தது துரோகம் என்பதை உணர்ந்து தவித்தான். அமலனுக்கும் தன் மனைவி மீது அதீத காதல் இருந்தது உண்மை. இருக்காதா பின்னே. பதினைந்து வருடத் திருமண வாழ்க்கையை உடனே தூக்கியெறிவது என்றால் அது சாத்தியமா என்ன? ஆனாலும் திகழ்வஞ்சியையும் அவனால் ஒதுக்க முடியவில்லை. அவளுடைய இளமையும், வெகுளித்தனமும் அவனை மீள முடியாத புதை குழிக்குள் தள்ள முயன்றயது. ஆனாலும் ஒரு கட்டத்தில் தான் பார்கவிக்குச் செய்வது மிகப் பெரும் அநீதி என்பதைப் புரிந்து கொண்டவன், திகழ்வஞ்சியை விட்டு விலகியிருக்க முடிவு செய்தான். அதை செயலிலும் காட்ட முயன்றான். ஒட்டாவாவில் உள்ள உணவகத்திற்குத் தான் போகாமல் தன் உதவியாளனை அனுப்பி மேற்பார்வை செய்ய வைத்தான்.
அவனுடைய நிராகரிப்பைத் திகழ்வஞ்சியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பலமுறை அவனோடு தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனாள். அந்த நேரத்தில்தான் அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமப்பதே அவளுக்குத் தெரிய வந்தது.
அந்தக் குழந்தை கூட அவளுடைய திட்டம் தான். அவனுக்குக் குழந்தை இல்லை. அவனுடைய குழந்தையைச் சுமந்தால், அவனுடைய அன்பு முழுக்கத் தனக்குக் கிடைக்கும் என்று பைத்தியக் காரத் தனமாக நம்பினாள். கூடவே அவன் பணத்தால் அவளைக் குளிப்பாட்டுவான் என்று கற்பனையும் செய்தாள். விளைவு, மாத்திரை எடுப்பதாகச் சொல்லி, அவனை நம்ப வைத்தாள். ஆனால் இப்படித் திடீர் என்று அவன் விலகிச் செல்வான் என்று எண்ணியிருக்கவில்லை.
எது எப்படியோ, வயிற்றில் உதித்த குழந்தையை வைத்து அமலனை தன்னிடம் ஒரேயடியாக வரவழைக்க முடியும் என்று எண்ணியவள், அமலனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். அதற்குப் பிறகு நடந்தது அனைத்தும் அவளின் கைமீறிப் போன ஒன்று.
இதை எல்லாம் எப்படி அவனிடம் சொல்வது? சொன்னால் காறித் துப்ப மாட்டானா. திகழ்வஞ்சி என்ன பெரிய சாகசமா செய்திருக்கிறாள் கின்னசில் பதிய? செய்தது முழுக்க அநியாயம். ஒரு குடும்பத்தையே குலைத்து விட்டாள். இதில் எங்கிருந்து நியாயம் பேசுவது. சிரமப்பட்டுத் தன் தைரியத்தை மீட்டெடுத்தவளாக.
“இதோ பாருங்கள்… இறந்தகாலத்தைப் பற்றிப் பேசியோ, வாதிட்டோ எந்தப் பயனும் இல்லை. அதை இனித் திருத்தவும் முடியாது. ஆனால் நிதர்சனம் இதுதான். ஆராவமுதன் என் பையன். எனக்குப் பிறந்த குழந்தை. அவனை உரிமை கொண்டாட, என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரமில்லை…” சொன்னவளை இகழ்ச்சியாகப் பார்த்தவன்,
“நீ யார் அதைச் சொல்ல. ஆராவமுதன் என் அண்ணனின் மகன். எங்கள் இரத்தம். அந்தப் பந்தத்தை உன்னால் அழிக்கவும் முடியாது, அதை இல்லை என்று சொல்லவும் முடியாது. இதோ பார்…! இனி என் அண்ணனின் இடத்தில், அவனுடைய மகன் ஆராவமுதன்தான் இருக்க வேண்டும். அவனுடைய பல கோடி சொத்துகளுக்கு அவன் மட்டும்தான் வாரிசு. அவன் எங்களுக்கு வேண்டும்… கொடுத்து விடு… தங்கத் தட்டில் சாப்பிட்டு, வெள்ளித் தொட்டிலில் உறங்க வேண்டியவன். ஆனால் இப்படி… இங்கே… ” என்று அந்த வீட்டை இளக்காரமாகப் பார்த்துச் சொல்ல, அவளோ பதில் சொல்ல முடியாமல் அவனையே வெறித்து நின்றாள்.
“உனக்கு வேண்டியது பணம். உன் விருப்பத்திற்கு வாழ நிறையப் பணம் வேண்டும். அந்தப் பணத்தை நானே கொடுத்து விடுகிறேன்… எங்கள் ஆராவை எங்களிடமே கொடுத்துவிடு. இங்கே பார்… உன்னுடைய பிடிவாதத்தால் அவனுக்குக் கிடைக்க இருக்கும் நல்ல எதிர்காலத்தை அழித்து விடாதே…” சொன்னவனை வெறுப்போடு பார்த்தாள் இவள்.
“நடக்காத ஒன்றிற்காக உங்கள் நேரத்தை விரயமாக்காதீர்கள்… தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள்…” அவள் முடிவாகச் சொல்ல, தன் உயரத்திற்கும் ஏற்ப நிமிர்ந்து நின்றான் அபராசிதன்.
“அப்படி என்றால், எனக்குச் சட்டத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அப்படி நாடுவதால் ஆராவுக்குத்தான் பிரச்சனை என்பதை மறந்து விடாதே. சட்டத்தை நாடினால், நிச்சயமாகக் குழந்தை எங்களின் பொறுப்பில்தான் வரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீ என் அண்ணாவுக்கு எழுதிய குறுஞ்செய்திகளும், உன்னைப் பற்றி அவன் குறிப்பேட்டில் எழுதியுள்ள செய்திகளும், நீ எப்படிப்பட்ட பெண் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். கூடவே நீ குழந்தை வளர்க்கத் தகுதியில்லாதவள் என்பதையும் என்னால் ஆதாரத்தோடு நிறுவ முடியும். அப்படி நிறுவினால், நீ என்னதான் அழுது மன்றாடினாலும் குழந்தை உனக்குச் சொந்தமாகாது. ஆனால் சட்டத்தின் உதவியை நாடுவதால் பாதிக்கப் படுவது நீயோ நானோ இல்லை. ஆராவமுதன். இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லும் வரைக்கும் ஆராவமுதன் நம் இருவருடனும் இல்லாமல், வேறு யாரோ ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருக்க நேரிடலாம். அது மாதக்கணக்காகவும் இருக்கலாம், வருடக் கணக்காகவும் இருக்கலாம். அப்படி ஒரு நிலைமை வந்தால், நீயும் சரி, நானும் சரி, யாரும் குழந்தையைப் பார்க்க முடியாது. அந்த நிலை நம் ஆராவுக்கு வந்துவிடக் கூடாது என்பதால் தான் இத்தனை பொறுமையாக உன் கூடப் பேசிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்.
அவன் சொல்ல, இவளோ முகம் வெளிற ஒரு கணம் விழிகளை அழுந்த மூடி நின்றாள். மனமோ ஏதேதோ சிந்தித்து அவளை மேலும் பலவீனமாக்கியது.
அப்படி ஏதாவது நடந்தால், அவள் நிலை என்ன?
(6) அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால்…
(19) மறுநாள் மீநன்னயா எழுந்தபோது இரண்டு மூக்கும் முற்றாக அடைத்திருந்தது. அவளால் மூச்சே எடுக்க முடியவில்லை. நேற்று அந்தக் குளிரில்…
(17) சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல…
(4) கிறிஸ்டீனிடமிருந்து தப்பிய திகழ்வஞ்சி, ஒழுங்காக மூச்சு விட்டாள் என்றால் அது அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான். ஆனாலும் உடல்…
(15) உள்ளம் குதுகலிக்கக் கைப்பேசியின் திரையையே வெற்றிக் களிப்புடன் பார்த்தவன், சாவதானமாகச் சென்று நீளிருக்கையில் அமர்ந்து அந்த இருக்கைக்கு முன்னிருந்த…
(3) அன்று வழமை போலக் குழந்தையை ஈவாவிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு வந்திருந்தாள் திகழ்வஞ்சி. இப்போது இலையுதிர் காலம் என்பதால்,…
View Comments
அருமையான பதிவு 😍😍😍😍😍.
படுபாவி பய இப்புடி மெரட்டுறானே. அதுவும் பணம் இருந்தா பெரிய பருப்பாடா நீனு😡😡😡😡😡😡.
உன்னையெல்லாம் எண்ணெய் கொப்பரைல போட்டு பொறிக்கோனும்.
ஊசிய வச்சு நகக்கண்ணுல குத்தோனும். தாயையும் புள்ளையையும் பிரிக்கற உன்னைய மாதிரி கொடும்பாவிகளை புளியமரவிளாறால அதே புளிய மரத்துல தலைகீழா கட்டி தொங்க வுட்டு வெளுக்கோனும்😤😤😤😤😤😤😤
டேய் போயி புள்ளக்கு அப்பனா இருக்கானே அவனைய வரச்சொல்லு. அவங்கிட்டயே பேசிக்கிறோம்.😎😎😎😎😎😎😎 எதுவா இருந்தாலும்
நாட்டாமை டூ பங்காளி
பங்காளி டூ நாட்டாமை
கிளம்பு கிளம்பு காத்துவரட்டும் ஹல்க் மாதிரி இருந்துகிட்டு இடத்தை அடைச்சுகிட்டு 😏😏😏😏😏😏
ஹா ஹா ஹா வைஷூ பலமா சிரிச்சிட்டேன்யா அதுவும் நாட்டாமை டு பங்காளி பங்காளி டு நாட்டாமை செம.
ஆமா உங்க ஆளு பெரிய நீதி நேர்மையானவ. நியாயமா பேசிக்க. பண்றது பூரா பிராடு தனம். இதில அவளுக்கு சப்போர்ட் வேற. பிச்சுபோடுவேன் பிச்சு.
Wow awesome
நன்றனி நன்றி நன்றி
Nice epi
மிக மிக நன்றி